Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுக்குடியிருப்பின் வீடுகள் – ஜெரா

Featured Replies

புதுக்குடியிருப்பின் வீடுகள் - ஜெரா

.

வீடு மனிதர்ளுக்கு மட்டுமே சொந்தமானது. ஏனைய உயிரினங்களால் இதுபோன்ற பாதுகாப்பிடத்தை உருவாக்கிக் கொள்ளமுடியாது. அதனால் தான் ஏனைய விலங்குகளில் இருந்து மனித உயிரி வித்தியாசப்பட்டது. வீடு அறியப்பட்ட காலத்திலிருந்து மனிதப் பரிணாமப் பாதையில் வீடுகள் அடிப்படையான தேவையில் ஒன்றாகின. அப்போதிலிருந்து ஒருவர் தேடிய தேட்டங்களுள் வீடு மிக முக்கியமான சொத்தாக மாற்றம் பெற்றது.

அதற்கு அடுத்த நிலையிலேயே பொன், பொருள் முதலான ஆபரணங்கள் அடுக்கமைவு பெற்றன. சொத்துக்குவிப்பும், அதிகாரகுவிப்பும் வீடுகளை தனித்தன்மை மிக்கதாக மாற்றின. ஒருவரிடம் குவிந்திருக்கும் பலம் வீடமைப்பைத் தீர்மானித்தது. அதன்படி அரசர்கள் அரண்மனைகளிலும், ஏழைகள் குடிசைகளிலும், பாதுகாப்புப் பெறும் நிலை உருவானது. ஒரு வகையில் வீடுகள் சமூக அந்தஸ்த்து அடையாளத்தையும் இப்படித்தான் வகுத்தன.

வீட்டையும் பலமே தீர்மானித்தது
உலகம் முழுவதும் வீடுகளின் தோற்றப்பின்னணி இப்படித்தான் அமைந்த எனக் கூற முடியும். வீட்டின் தோற்ற காலம் நாகரீகங்களுக்கிடையில் வேறுபடலாம். ஆனால் அதன் பயணவழி ஒன்று தான். அவரவர்க்கு எட்டிய வழியில், அறிந்திருந்த விஞ்ஞான அறிவின் துணைகொண்டு பல வடிவிலான வீடுகளை அமைத்துக் கொண்டனர். வீடமைப்பில் இயற்கையும், சுற்றுச்சூழலும், காலநிலையும் கூட மிக முக்கியமான பங்கினை ஆற்றின.

கடற் கரையோரம் அமைந்த வீடுகள் ஒரு மாதிரியாகவும், மத்திய நாட்டில் இருக்கின்ற வீடுகள் வேறொரு மாதிரியாகவும் இருக்க இதுவே காரணமாகின்றன. இலங்கையில் இந்த நூற்றாண்டு வரை அறியப்படாதிருந்த வன்னியிலும் வீடுகள் இருந்தன. அந்த வீடுகளுக்கு காலந்தோறும் அரசியல் பெறுமதி கிடைத்தன. இதனால் தான் வன்னி மக்களின் வாழ்வு ஈட்டம் வீட்டுக்கான மட்டுமானதாக அமைந்தது

PKK4

வன்னிக்குள் இப்போது மீண்டும் வீடு கட்டும் திருவிழா களைகட்டியிருக்கின்றது. வங்கிக் கடன், கடன் நிறுவனங்களின் கடன், வட்டிக்குக் கடன், வெளிநாட்டுக் காசு என அத்தனை பண வருவழிகளையும் பயன்படுத்தி வீடு கட்டும் பணிகளை மக்கள் மேற்கொண்டிருக்கின்றனர். உதாரணத்துக்கு வன்னியின் ஒரிடத்தை எடுத்துக்கொள்ளுவோம். தெரிவுசெய்யப்பட்ட இடம் புதுக்குடியிருப்பு. புதுக்குடியிருப்பின் வீடுகள் எப்படி உருவாகின? எப்படி வளர்ச்சியடைந்தன?

புதுக்குடியிருப்பின் வீடுகள்
1948 ஆம் ஆண்டிலும், அதற்கு முன்னரான காலத்திலும் புதுக்குடியிருப்பின் கிராமங்களெங்கும் வட்டவடிவான வீடுகளே அமைக்கப்பட்டிருந்தன. நடுவின் கப்பு எனப்படும் வெட்டப்பட்ட வைர மரம் நட்டு, அதனைச் சூழ வட்டமாக சிறிய கப்புகள் நட்டு, சிறிய கப்பிலிருந்து நடுக் கப்பிற்கு பூட்டு எனப்படும் தடுகளால் இணைப்பர். பூட்டைச் சுற்றி வட்டமாக பாவட்டம் வரிச்சால் நெருக்கமாக வனைவர். வனைவதற்கு ஆலமர விழுதுக் கயிறு, இத்தி மர நார், மான்கொடி போன்றன பயன்படுத்தப்படும். கூரைக்கு மிகவும் நெருக்கமாகப் பனையோலையே வேயப்பட்டது.

சில இடங்களில் இணுக்குப் புல்லும், வைக்கோலும் வேயப்பட்டுமுள்ளது. சுவரானது வரிச்சுக் கட்டி, அதில் களிமண்ணை சதுரமாக உருட்டி வைத்தே கட்டப்பட்டிருந்தது. சில வீடுகளில் சுவரின் உட்புறமும், வெளிப்புறமும் மண்ணினால் பூசப்பட்டு, வெள்ளைமலையேற்றத்திலிருந்து எடுத்துவரப்படும், வெண்ணிற மண்ணினால் பூசப்பட்டிருந்தது. வீட்டின் நிலம் சாணி, ஆவரசு இலை, முள்முருக்கு இலை போன்றவற்றால் மெழுகப்பட்டிருந்தது. வீட்டுக்கு ஒரே ஒரு வாசல் மட்டுமே இருந்தது. மெல்லிய தடிகள், பனையோல, மரக் கிளைகள் போன்றவற்றினால் வீடுகளுக்குக் கதவு போடப்பட்டடிருந்தது.

PKK3

சமைப்பதற்கும், உறங்குவதற்கும் என தனியறைகள் இருக்கவில்லை. ஒரு வட்டவீட்டுக்குள்ளேயே சமையல், உறங்குவது, தங்குவது என அனைத்து வாழ்க்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. வீட்டின் முன் பகுதியில் திண்ணை எனப்படும் 3 தொடக்கம் 4 அடி உயரமான திண்ணை போடப்பட்டிருந்தது. இதனை விருந்தினர்கள் வந்தால் உபசரிப்பதற்கும், ஓய்வைக் கழிப்பதற்கும், உறங்குவதற்கும் பயன்படுத்தினர். பெரும்பாலான வீடுகளின் முற்றத்தில் கொம்பறை எனப்படும் நெற்சேமிப்புக் கலம் வைக்கப்பட்டிருந்தது.

வீடு கட்டுதலில் சுகம்
ஆரம்பத்தில் வீடு கட்டுதல் தனி குடும்பத்தால் ஆன ஒரு வேலையல்ல. அக்கம்பக்கத்து சனம் எல்லோரும் அந்தத் திருவிழாவில் பங்கெடுப்பர். விடி காலையிலேயே வீடு வேயக் காத்திருக்கும் பகுதி களை கட்டும். ஈர்க்கு நனையவிடல், நார் கிழித்தல், வலம் பார்த்து பிரித்துப் போடல் போன்ற பணிகளில் அக்கம்பக்கத்தார் அனைவருமே பங்கெடுப்பர். வைக்கோல், கிடுகு, பனையோலை எதுவானாலும் கைதேர்ந்த மேய்ச்சல் காரர்கள் வீடுகளுக்கு மேல் ஏறுவர்.

அதில் மூலை மேய்ச்சலும், முகடு கட்டுதலும் மிகவும் திறமையானவர்களாலேயே செய்து முடிக்க கூடியவை. ஆகவே அதற்கு தகைசார்ந்தவர்கள் பொறுப்பெடுக்க வீடு வேய்ச்சல் தீவிரம் பெறும். அந்தக்களத்தை கிராமிய பாடல்களும், நையாண்டிக் கதைகளும் மேலும் சுவாரஸ்யப்படுத்த, காலை பத்து மணிக்கு வேய்ச்சல் நிறைவுறும். உடனே வழங்கப்படும் ஒற்றைப்பனைக் கள்ளும், பசுப்பாலும், தயிரும், மோரும், பச்சையரிசி சோறும், அனைவரது பசியையும் ஆற்றும்.

ஓற்றுமையைக் கற்றுக் கொடுத்த வீடுகள்
இப்படித்தான் புதுக்குடியிருப்பு வீடுகள் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டன. வீடொன்று அமைவுக்குப் பின்னால் பலரின் கூட்டு உழைப்பு இருந்தது. ஒற்றுமையும், ஆளுக்கு ஆள் இருந்த உதவியும், உறவும் வீடமைத்தலின் பின்னணியில் வளர்ந்தது. 1993 ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலம் ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றிலும், சமூக வரலாற்றிலும் பல மாற்றங்களைக் கொண்டுவந்தது.

PKK2

தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் பல்வேறுபட்ட பண்பாடுகள் ஓரிடத்தில் குவிவு பெற காரணமாகியது. 1990 ஆம் ஆண்டிலிருந்து 2000 ஆம் ஆண்டு வரை தமிழர் தாயகம் மீது கிளைபரப்பப்பட்ட போர் புதுக்குடியிருப்பையும், மல்லாவியையும் வன்னியின் முக்கிய வணிக மையங்கள் ஆக்கியது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னியின் பிற பகுதிகளில் இருந்து குடிபெயர்ந்தோர் இங்கு குடியேற குடித்தொகை நெருக்கமடைந்தது.

பணக்காரர்கள் உருவாகினர்
இந்த சன நெருக்கமாதலின் விளைவால் எங்கும் வணிகம் களைகட்டத் தொடங்கியது. சந்திக்கு சந்தி கடைகள் முளைத்தன. ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயத்திலிருந்து வணிகத்துக்கு மாறினார். வன்னி மீது கட்டவிழ்க்கப்பட்ட பொருளாதார தடை வணிகத்தை தளைத்தோங்க வைத்தது. பல உள்ளுர் முதலாளிகள் உதயமாகினர். பணப்பலம் குவிந்தது.

PKK1

அதுவரை அரச உத்தியோகத்தர்களிடம் இருந்த கல்வீடுகளை விட பல மடங்கு உயர்வான வசிகளுடக் கூடிய வீடுகளை புதிய வணிகர்கள் கட்டிக் கொண்டனர். காசு கைசேர பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பும் முறையும் வளர்ச்சி பெற்றது. இதோடு ஆங்காங்கு கல்வீடுகள் முளைத்தன. வைக்கோல், கிடுகு வீடுகள் முன்னேறிவிடப் போராடின.

குட்டி யாழ்ப்பாணம்
2002ஆம் ஆண்டுக்குப் பின்னர் சமாதானம் வந்தது. வவுனியாவிலிருந்து இரும்பும், சிமெந்தும் குறைந்த விலையில் கிடைத்தது. வெளிநாடுகளில் இருந்து புதுக்குடியிருப்பு பிள்ளைகள் அனுப்பிய பணம் மண் வீடுகளை எண்ணி அடையாளம் காணக் கூடிய நிலையை தொடக்கியது.

புதுக்குடியிருப்பின் எல்லா இடங்களையும், கல்வீடுகளும், மதில்களும், மின்சார விளக்குகளும் அலங்கரித்தன. பனையோலை வேலிகள், கதியால் வேலிகள், மண்வீடு, வைக்கோல், கிடுகு வீடுகளைக் காண முடியாத நிலையுருவாகியது.

போர்க்காலத்தில் வீடுகள்
இப்படியே புதுக்குடியிருப்பு வீடுகள் செழித்தோங்கிய காலத்தில் இறுதிப் போர் நெருங்கியது. இரவில் வெளிச்சம் தெரியும் வீடுகள், விடுதலைப்புலிகளின் அடையாளம் காணப்பட்ட இலக்குகளாக இராணுவத்தால் கணிக்கப்பட்டு மறுநாள் காலையே விமானத்தாக்குதலில் அழிக்கும் போரியல் முறை ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் கட்டப்பட்ட பல வீடுகள் சூடு ஆறு முன்னரே அழிக்கப்பட்டன.

போர் நெருங்கி வருகையில் வீடுகளை விட்டு மக்கள் முள்ளிவாய்க்காலுக்கு இடம்பெயர்ந்தனர். இறுதி நேர வீடுகளை இறுதிப் போரில் பங்கெடுத்த போராளிகள் பொறுப்பெடுத்துத் தங்கினர். போரில் காயம் பட்ட, மரணித்த போராளிகளை அந்த வீடுகள் தாங்கியதால் தம் குறுகிய ஆயுளுக்காக பெருமைப்பட்டுக்கொண்டன. மக்களும், புலிகளும் வீடுகளை விட்டு முற்றாக வெளியேறிய காலத்தில், பிணங்களால் நிரம்பிய புதுக்குடியிருப்பை இராணுவம் சிறை பிடித்தது. பிடித்த வேகத்தில் ஏற்கனவே காயப்பட்டிருந்த வீடுகள் மேலும் சூறையாடப்பட்டன.

முஸ்லிம்களும், சிங்களவர்களுக்கும் மட்டுமே திறந்து விடப்பட்ட புதுக்குடியிருப்பு வீடுகளின் கதவுகள் அவர்களுக்கு இன்னொரு பொன்விளையும் நிலத்தை கொடுத்தது. வீடுகளில் இருந்த யன்னல்கள், கதவுகள், தளபாடங்கள், பாவனைப் பொருள்கள் அனைத்தும் தெற்கிற்கு அனுப்பப்பட்ட பின்னர் புதுக்குடியிருப்பு வாசிகள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அப்போது போரால் சேதமடைந்திருந்த வீடுகளின் எண்ணிக்கை 11099.

இப்போது போர் முடிந்து ஏழு ஆண்டுகள். புதுக்குடியிருப்பில் அழிவுக்குள்ளான, எறிகணைகளின் துளைகளுக்குள்ளான, போராளிகளின் குருதி காய்ந்த வீடுகளைப் பார்க்கவே அரிதாக இருக்கின்றது.
உழைப்பு…!
கண்ணயராத உழைப்பு..!
வியர்வை துடைக்க நேரமற்ற உழைப்பு..!
மீளவும் புதிய வீடுகளை மேலெழச் செய்திருக்கிறது புதுக்குடியிருப்பு..!

 

http://thuliyam.com/?p=33025

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.