Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்னபூரணி மெஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

''வணக்கம் சார், வாங்க... வாங்க. நான்தான் ராஜாராமன். இதான் கடைசி பந்தி. இதோ இப்ப முடிஞ்சிரும். அதுக்கு அப்புறமா ரூமைப் பார்க்கலாம். பத்து நிமிஷம் அப்படி ஃபேனுக்குக் கீழே காத்தாட உக்காருங்க. நல்ல வெயில்ல வந்திருக்கீங்க. வேர்த்து வேர்த்து ஊத்துதே' எனச் சொன்னவரின் முகத்தைப் பார்த்ததுமே தனக்கு இந்த இடம் உறுதியாகப் பொருந்தும் என்ற நம்பிக்கை, பாலகுருவின் மனதில் பிறந்தது. ஆனால், அவனுக்கு எப்படி அந்த எண்ணம் வந்தது எனத் தெரியவில்லை. ராஜாராமனுடைய குரல் அல்லது உடல்மொழி என ஏதோ ஒன்று அதை விதைத்துவிட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆறு இடங்கள் மாறியதில் கசப்பான பல அனுபவங்கள் ஏற்பட்டுவிட்டன. அனைத்துமே எளிதில் மறக்க முடியாதவை. சில அற்பக் காரணங்களை முன்னிட்டு வீட்டுச் சொந்தக்காரர்களோடு உருவாகும் அதிருப்திகள் அவனை அவமானமுற்றவனாக உணரவைத்து, வெளியேறவைத்துவிட்டன. ஒரு வேகத்தில் தன் சேமிப்புகளை எல்லாம் முன்பணமாகக் கொடுத்து, நேதாஜி நகரில், வளர்ந்துவரும் ஓர் அடுக்ககத்தில், நான்காவது தளத்தில், ஒரு வீட்டைப் பதிவுசெய்துவிட்டான். அது கைக்கு வர, இன்னும் ஒன்று இரண்டு ஆண்டுகளாவது ஆகும். அதற்குப் பிறகு இந்த அலைச்சல்கள், கெஞ்சல்கள், மோதல்கள், ஏமாற்றங்கள்... எதற்குமே அவசியம் இருக்காது என நினைத்தான்.

ராஜாராமன் தட்டு நிறைய அப்பளங்களை எடுத்து வந்து, சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களின் இலைகளில் ஒவ்வொன்றாக வைத்துவிட்டுச் செல்வதைப் பார்த்தான். மற்ற ஆட்கள் சோறும் குழம்பும் பொரியலும் பரிமாறினார்கள். வற்றல்குழம்பின் மணம்; கத்திரிக்காய்ப் பொரியலின் மணம்; சோற்றையும் குழம்பையும் சேர்த்து கூழாகப் பிசைந்து வைத்துக்கொண்டு குனிந்த தலை நிமிராமல் ஒருவர் உருட்டி உருட்டி எடுத்தார். காற்றில் படபடக்கும் அப்பளத்தின் மீது ஒரு கை சோற்றை அள்ளி வைத்துவிட்டு, பொறுமையாகச் சாப்பிட்டார் இன்னொருவர். வேகவேகமாக அள்ளி அள்ளிச் சாப்பிட்டு முடித்த ஓர் அம்மா, இரண்டாவது முறையாக சோறு வாங்கிக்கொள்வதற்காக சோற்றுவாளியை வைத்திருப்பவர் தனக்கு அருகில் வரும் கணத்துக்காகக் காத்திருந்தார். வாய்க்குள் நான்கு பக்கங்களிலும் நாக்கைவிட்டுத் துழாவி பருக்கைகளை இழுத்து கண்கள் மூடிய நிலையில் ஒருவர் அசைபோடுவதை அவன் பார்த்தான். ஒருகணம் அவன் உடல் புல்லரித்தது. ஆட்கள் ஒருசேர உட்கார்ந்து உண்ணுவதை அவன் பலமுறை பார்த்திருக்கிறான். அப்போது எல்லாம் அவன் அவர்களில் ஒருவனாகவே இருந்தான். இப்போதுதான் முதன்முறையாக வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பதற்றமும் பரவசமும் இணைந்த கலவையான உணர்வில் அவன் மனம் அலைபாய்ந்தது.

p90a.jpg

சாப்பிட்டு எழுந்தவர்கள் அனைவரும் கைகளைக் கழுவிக்கொண்டு சுவர் ஓரமாக இருந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்த பெட்டிக்குள் ஒரே ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டுவிட்டுச் சென்றார்கள். அவர்கள் போடுகிறார்களா... இல்லையா என்பதைக்கூட ராஜாராமன் கவனிக்கவில்லை. அவர்கள் செலுத்தும் வணக்கத்துக்கு நெஞ்சுக்கு நேராக கைகளைக் குவித்து தலைகுனிந்து பதில் வணக்கம் செலுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தான்.

சாப்பிட இனி யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு, ராஜாராமன் அவனுக்கு அருகில் வந்தான். அவனிடம் ''அது என்ன, எல்லாரும் ஒரே ஒரு ரூபாய் போட்டுட்டுப் போறாங்க!' என ஆச்சர்யமாகக் கேட்டான் பாலகுரு.

'அதுதான் இந்த மெஸ்ஸோட சம்பிரதாயம். ஆனா, ரூபா போட்டாலும் சரி... போடாட்டாலும் சரி, வயிறு நிறையச் சாப்பாடு போட்டு அனுப்பணும்கிறது எங்க மொதலாளி கட்டளை' என்ற ராஜாராமன் 'வாங்க, மெத்தைக்குப் போகலாம். அங்கதான் ரூம் இருக்குது' என்றபடி அவனை அழைத்துக்கொண்டு பக்கவாட்டில் வளைந்து சென்ற படிக்கட்டுகளில் ஏறினான்.

'ஒரு ரூபாய்க்கு சாப்பாடா!' - ஆச்சர்யத்துடன் கேட்டான் பாலகுரு.

'என்ன, நம்ப முடியலையா? அதெல்லாம் அப்புறமா சொல்றேன். மொதல்ல ரூமைப் பாருங்க' என்றான் ராஜாராமன்.

மெத்தையில் பாதி இடத்தை அடைத்துக்கொண்டு சின்ன தோட்டம் ஒன்று  இருந்தது. தக்காளிச் செடிகளையும் கத்திரிக்காய்ச் செடிகளையும் அவன் உடனடியாகக் கண்டுபிடித்துவிட்டான். மேலும் புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி இன்னும் ஏதேதோ இருந்தன. நேரிடையாக வெயில் பட்டுவிடாதபடி

ஒரு கூரை காணப்பட்டது. மீதி இடத்தில் எதிரும்புதிருமாக இரண்டு அறைகள். அவற்றில் ஒன்றைத் திறந்தபடி, 'வேலை வேகத்துல உங்க பேரைக் கேட்கவே மறந்துட்டேன்' என்று இழுத்தான்.

'பாலகுரு.'

ஒரு புன்னகையோடு தலையசைத்தபடி, 'சரி, ரூமை நல்லாப் பாருங்க' என்றான் ராஜாராமன்.

சுவர் ஓரமாக ஒரு கட்டில். பக்கத்தில் மேசையும் நாற்காலியும் இருந்தன. கதவுக்கு அருகில் ராமனுக்குப் பழம் வழங்கும் சபரியின் படம். அதற்கு அருகில் ஒருபுறம் லட்சுமணனும் மறுபுறம் சீதையும் நிற்க, ராமனின் கால் பணிந்து அனுமன் சேவை செய்யும் படம். முகம் பார்க்கிற பெரிய கண்ணாடி ஒன்றும் சுவரில் தொங்கியது. ஒரு கணம் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து, கலைந்துகிடந்த தலைமுடியை கைவிரல்களாலேயே அழுத்தியும் ஒதுக்கியும் சரிசெய்யத் தொடங்கினான் பாலகுரு.

''எந்த கம்பெனியில வேலை செய்றீங்க... என்ன வேலை?' என்று ராஜாராமன் கேள்வி கேட்ட பிறகுதான் அவனுக்கு சுயநினைவு திரும்பியது.

புன்னகையுடன் 'சேல்ஸ் சைட்ல இருக்கேன் சார். நாலைஞ்சு கம்பெனி புராடெக்ட்ஸை ஒரே நேரத்துல மார்க்கெட் பண்றேன்' என்றான்.

ராஜாராமன் ஸ்விட்ச்சை அழுத்தி விளக்கையும் மின்விசிறியையும் போட்டபடி, 'அலமாரி இருக்குது. துணிமணி, பெட்டி எது வேணும்னாலும் வெச்சிக்கலாம். பாத்ரூம், டாய்லெட் எல்லாமே பெட்ரூமோட சேர்ந்து இருக்குது' என்றான்.

பாலகுரு எல்லா கதவுகளையும் திறந்து எல்லாவற்றையும் ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு, ''ரொம்பப் பிடிச்சிருக்கு' என்றான்.

'சரி வாங்க, நம்ம ரூமுக்குப் போகலாம்' என்றபடி விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு அந்த அறையைச் சாத்திக்கொண்டு தன் அறைக்கு அழைத்துச் சென்றான்.

''வாடகையைப் பத்தி ஒண்ணும் சொல்லலையே?'

'நாலாயிரம் ரூபா வாடகை. எட்டாயிரம் ரூபா அட்வான்ஸ் சார். இதுக்கு முன்னால இருந்த ஆளு அப்படித்தான் குடுத்தாரு. பெங்களூருல வேற ஏதோ ஒரு கம்பெனியில வேலை கிடைச்சிட்டுதுன்னு காலிபண்ணிட்டுப் போயிட்டாரு. நீங்களும் அப்படியே குடுத்துடுங்க.'

அறையைத் திறந்த ராஜாராமன், ஒரே நிமிடத்தில் மேசை மீது இருந்த எலுமிச்சம்பழத்தை வெட்டி ஜூஸ் தயாரித்து ஒரு டம்ளரில் நிரப்பி, ''மொதமொதல்ல நம்ம ரூமுக்கு வர்றீங்க. இந்தாங்க இதைக் குடிங்க' என்றான். கசகசக்கவைத்த வெப்பத் துக்கு, அந்தச் சாறு இதமாக இருந்தது.

''இப்ப சொல்லுங்க, ஏன்

ஒரு ரூபாய்க்கு சாப்பாடு போடுறீங்க?' என்ற கேள்வியோடு பக்கத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தான் பாலகுரு.

ராஜாராமன் அவனுடைய முகத்தில் தெரிந்த ஆர்வத்தை ஒருகணம் மகிழ்ச்சி ததும்பப் பார்த்த பிறகு புன்னகைத்தான்.

'வாழ்க்கையில ரொம்ப அடிபட்ட ஆளு எங்க மொதலாளி. சின்ன வயசுல கொளுத்துவேலை செய்யற மேஸ்திரியாத்தான் அவர் வாழ்க்கை ஆரம்பிச்சது. அந்தக் காலத்துல யாரோ ஒரு ஏஜென்ட், 'குவைத்துக்குப் போற மேஸ்திரிங்க எல்லாரும் லட்சம் லட்சமா சம்பாதிக்கலாம்’னு ஆசை காட்டியிருக்கான். அப்பா காலத்துல வாங்கின கடன், அக்கா-தங்கச்சிங்களுக்குக் கல்யாணம் செய்யணும்னு அவருக்கும் ஏகப்பட்ட பொறுப்பு. எதை எதையோ வித்து அவன்கிட்ட பணத்தைக் கட்டிட்டு, குவைத்துக்குப் போயிட்டாரு. போன அடுத்த நிமிஷமே, அங்கே இருந்த அரபிக்காரனுங்க இவர் பாஸ்போர்ட்டைப் பிடுங்கிக்கிட்டு பாலைவனத்துல ஒட்டகம் மேய்க்க அனுப்பிட்டானுங்க. மாசம் பத்தாயிரம் ரூபா சம்பளம், தங்கறதுக்கு ஏ.சி ரூம், போக வர வண்டினு ஏஜென்ட் கதைவிட்டது எல்லாம் பொய்னு அப்பவே புரிஞ்சிட்டுது' - ராஜாராமன் அந்தச் சம்பவத்தைச் சொல்லும்போது, தனக்கு ஏற்பட்ட கஷ்டமாகவே உணர்ந்ததுபோல கண்கள் கலங்க ஒருகணம் நிறுத்தினான்.

பிறகு தொடர்ந்து, 'ஒரே ஒரு வேளை சாப்பாடு, பத்தோட பதினொண்ணா ஒண்டிக்கிற மாதிரி ஒரு அறை. வெறும் ஆயிரம் ரூபா சம்பளம். ரெண்டு வருஷத்தை பல்ல கடிச்சுக்கிட்டு ஓட்டின பிறகுதான் பாஸ்போர்ட் கைக்குக் கெடச்சுது. கூட போயிருந்த ஆளுங்க எல்லாம் இந்தியாவுக்கு ஓடியாந்துட்டாங்க. இவர் மட்டும் பிடிவாதமா அங்கேயே இருந்து சரியான ஆள் மூலமா சரியான கம்பெனியைப் பிடிச்சு, சரியான வேலையைத் தேடிக்கிட்டார். அந்த வேலை, அவருடைய தலையெழுத்தையே மாத்திடுச்சு. அவருடைய விசுவாசமான வேலை அந்த கம்பெனி  முதலாளியான அரபிக்காரனுக்கு ரொம்பப் பிடிச்சிட்டுது. ஒரு வருஷத்துக்குப் பிறகு அவரை சூப்பர்வைஸரா மாத்திட்டான். அடுத்த ரெண்டு வருஷத்துலயே மேனேஜர் புரமோஷன். அஞ்சாறு வருஷத்துல கை நிறைய சம்பாதிச்சு எடுத்துக்கிட்டு இங்கே ஊருக்கு வந்துட்டாரு' என்றான்.

p90b.jpg

'அதுக்கு அப்புறம் போகவே இல்லையா?'

'இல்லை. இங்கேயே கன்ஸ்ட்ரக்‌ஷன் வேலையை எடுத்து செய்ய ஆரம்பிச்சாரு. ஒரு நேரத்துல அவருகிட்ட நாப்பது அம்பது பேரு வேலை செஞ்சாங்க. அவங்க எல்லாருக்கும் நல்ல சாப்பாடு தரணும்னுதான் இந்த 'அன்னபூரணி மெஸ்’ஸை ஆரம்பிச்சாரு. அது எல்லாமே இலவசம். மூணு வேளையும் இங்கே இருந்து வேன்ல சாப்பாடு போயிடும். மொதலாளி தொட்டது எல்லாம் பொன்னாச்சு. நாலு பங்களா, ஒரு தென்னந்தோப்பு, பத்து காணி நிலம், கல்யாண கேட்டரிங், நாலு டூரிஸ்ட் பஸ்னு இன்னைக்கும் வளந்துகிட்டே போவுது. 'மெஸ்’னு பேரை வெச்சுப்புட்டு இங்கே வந்து சாப்பாடு கேட்கிறவங்களுக்கு 'இல்லை’னு எப்படிச் சொல்ல முடியும்? அதனாலதான் இந்த சிஸ்டம். ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு. அதையும் குடுக்க சக்தி இல்லாதவங்க சங்கடம் இல்லாம சாப்ட்டுட்டு போவணும்கிறதுக்காக அந்த உண்டி ஏற்பாடு. 'பசி, கோபம், காமம் மூணும் உலகத்துல கட்டுக்கடங்காம எரியுற நெருப்பு’னு சொல்வாரு எங்க மொதலாளி. 'கடைசி ரெண்டு நெருப்பையும் சம்பந்தப்பட்ட ஆளே நினைச்சாத்தான் அடக்கி நிறுத்த முடியும். அது எல்லாம் அவன் பொறுப்பு. ஆனா, 'பசி’ன்ற நெருப்பு ஒண்ணை மட்டும் இன்னொரு ஆளு மனசு வெச்சாத்தான் அணைக்க முடியும்’னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பாரு.'

சில கணங்கள் ஏதோ எண்ணங்களில் உறைந்தவனாக அப்படியே அமர்ந்திருந்தான் ராஜாராமன்.

'அந்த உண்டி பணத்தைக்கூட எங்க மொதலாளி தொட மாட்டாரு. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஆசிரமத்துக்குப் போயிடும். சிறுவர்கள் இல்லம், முதியோர் இல்லம், பார்வையற்றோர் இல்லம், ஊனமுற்றோர் இல்லம்னு தேடிப் பார்த்துச் சேர்த்துடுவாங்க.'

அடுத்து என்ன கேட்பது எனப் புரியாமல் ராஜாராமன் முகத்தைப் பார்த்து சிரித்தான் பாலகுரு. 'மத்தியானம்

12 மணிக்கு பந்தி ஆரம்பிச்சா, ரெண்டரை மூணு மணி வரைக்கும் ஓடும். எப்படியும் நூறு நூத்தியம்பது பேருக்கு மேல சாப்ட்டுப் போவாங்க.'

இருவரும் வெளியே வந்து தோட்டத்துக்கு அருகில் சிறிது நேரம் நின்றார்கள்.

'நானும் ரெண்டு வருஷத்துக்கு முன்னால உங்களைப்போல இங்கே வாடகைக்கு வந்த ஆளுதான் சார். முத்தியால்பேட்டையில ஒரு இரும்பு கம்பெனியில சூப்பர்வைஸரா இருந்தேன். அப்ப திருஞானம்னு

ஒரு பெரியவர்தான் இந்த மெஸ்ஸைப் பார்த்துக்கிட்டாரு. திடீர்னு ஒருநாள் நெஞ்சுவலியில அவரு செத்துட்டாரு. அப்ப பெரியவரு நெருக்கடியைச் சமாளிக்கிறதுக்காக என்னை இந்த வேலையை ஒரு வாரம் பார்த்துக்கச் சொன்னார் மொதலாளி. சரி, நம்மால முடிஞ்ச சின்ன உதவின்னு நினைச்சு நானும் பார்த்துக்கிட்டேன். அடுத்த வாரம் அவரே இங்கே வந்து, 'மெஸ்ஸை நீயே பார்த்துக்கிறியா தம்பி?’னு கேட்டாரு. எனக்கு ஒண்ணுமே புரியலை. 'எனக்கு வேலை இருக்குதே சார்’னு சொன்னேன். 'உனக்கு அங்கே என்ன சம்பளம் குடுக்கிறாங்க?’னு கேட்டாரு. 'பத்தாயிரம் ரூபா சார்’னு சொன்னேன். 'சரி, நான் உனக்கு பதினஞ்சாயிரம் குடுக்கிறேன்’னு சொல்லி ஒப்புக்க வைச்சிட்டாரு. அன்னையில இருந்து இப்படியே வண்டி ஓடுது.'

இருவரும் படிக்கட்டுகளில் இறங்கி வந்தார்கள். ராஜாராமன் நெகிழ்ந்த குரலில் பேசிக்கொண்டே வந்தான். 'பசிக்கிற ஆளுக்கு சாப்பாடு போடுறதுல எப்படிப்பட்ட சந்தோஷம் இருக்குதுன்னு இந்த ஒரு வருஷத்துல நல்லா புரிஞ்சிட்டுது சார். மனசு அப்படியே பஞ்சு மாதிரி பறக்கும் சார். நம்ம கையில ஒரு கோடி ரூபா இருந்தாலும் இப்படி ஒரு சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது. இந்த சந்தோஷம் எனக்குக் கிடைக்கணும்னே விதி இங்கே கொண்டாந்து சேர்த்திருக்குதுன்னு நினைக்கிறேன்.'

ராஜாராமன் மெஸ்ஸுக்குள் சென்றதும், அவரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினான் பாலகுரு. அன்று மாலையே ஒரு ஆட்டோவில் தன் பொருட்களோடு அந்தப் புதிய இடத்துக்கு வந்துவிட்டான்.

ஒருசில நாட்களிலேயே

பாலகுருவுக்கு அந்த இடத்தோடு நல்ல ஒட்டுதல் உருவாகிவிட்டது. வானத்தைப் பார்த்தபடி இருக்கும் மாடித் தோட்டத்தை ஓய்வு நேரத்தில் யாரும் சொல்லாமலேயே பராமரிக்கத் தொடங்கிவிட்டான். அதிகாலை நேரங்களில் தோட்டத்துக் கூரையின் மேல் உட்கார்ந்து கூவும் குயில்களின் குரலோசை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

தொடக்கத்தில் ராஜாராமன் சொன்ன மெஸ் புராணக் கதைகள் எல்லாம் அவனுக்குச் சுவையாகவே இருந்தன. ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பிறகு எல்லாமே சலிப்பூட்டுபவையாகத் தோன்றத் தொடங்கின. 'வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய வயதில் இப்படி சாமியார் மாதிரி இருக்கானே!’ எனத் தோன்றியது. தன்னைப்போல ஒரு சாதாரண இளைஞனாக அவனை மாற்றவேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாக அவனே நினைத்துக்கொண்டான். அதனால் நேரம் கிட்டும்போது எல்லாம் அவனிடம் பணம், வசதி, பெருமை, சுகபோக வாழ்க்கை என்றெல்லாம் வார்த்தைகளால் சீண்டிப் பார்க்கத் தொடங்கினான். சீண்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தும் சமயங்களில் தன் மனம் அளவற்ற ஆனந்தத்தில் மிதப்பதை அவன் உணர்ந்தான். ராஜாராமனின் மனதைக் கலைத்து, தன் வழியை நோக்கித் திருப்பி அழைத்துவருவதை ஒரு லட்சியமாகவே கருதிக்கொண்டான் அவன். பிறகு, மெள்ளமெள்ள அது ஒரு வெறியாகவே மாறியது.

''இன்னைக்கு ராத்திரி நாம சரக்கு போடலாமா?' என்று ஒரு விடுமுறை நாளில் ஆரம்பித்தான் பாலகுரு.

''ஐயையோ! அந்தப் பழக்கமே எனக்குக் கிடையாதே!' என்றபடி உதட்டைப் பிதுக்கி கைகளை விரித்துப் புன்னகைத்தான் ராஜாராமன். 'வேணும்னா நீங்க அடிங்க. அதுல எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை' என்று தோள்களைக் குலுக்கினான். தொடர்ந்து 'தாராளமா நீங்க எடுத்து வந்து சாப்பிடுங்க. நான் வேணும்னா உங்க பாட்டில் முடியற வரைக்கும் கம்பெனி தரேன்' என்று வழக்கமான புன்னகையைச் சிந்தினான் ராஜாராமன்.

மேசையில் துணிவிரிப்பை விரித்து, அதன் மீது பாட்டிலையும் கோப்பைகளையும் அலமாரியில் இருந்து எடுத்துவந்து வைத்தான். சில மிடறுகள் அருந்திய பிறகு, கைபேசியில் பழைய பாடல்களைத் தேடித்தேடி பாடவைத்தான். இசைக்கோவைகளை அசைபோட அசைபோட அவர்கள் உரையாடல் எப்படியோ மெல்லிசையின் பக்கம் போனது. அப்படியே டி.எம்.எஸ் பற்றியதாக மாறி, அவருடைய பாடல்களைப் பட்டியல் இடுவதில் வந்து நின்றது. அதில் இருந்து உத்வேகம்கொண்ட பாலகுரு, ''காசேதான் கடவுளடா... அந்தக் கடவுளுக்கும் அது தெரியுமடா...’ பாட்டைக் கேட்டிருக்கீங்களா ராஜாராமன்? நான் ஒரு நூறு தரமாச்சும் கேட்டிருக்கிறேன். இன்னைய வாழ்க்கை நிலைக்குப் பொருத்தமான பாட்டு' என்றபடி அந்தப் பாடலை சில கணங்கள் முணுமுணுத்தான். பிறகு, அடங்கிய குரலில் 'பணம் மட்டும் கை நிறைய இருந்தா, எல்லா மரியாதையும் கௌரவமும் தானா தேடி வரும் ராஜாராமன்' என்றான் பாலகுரு.

p90c.jpg'பணத்தால சம்பாதிக்கிற மரியாதை, பணம் இல்லாமப்போனதும் படுத்துடும்; தண்ணி இல்லாத செடி மாதிரி. ஆனா, நம்ம பண்பால சம்பாதிக்கிற மரியாதை எப்பவும் பனைமரம் மாதிரி நெலைச்சு நிக்கும்' என்றான் ராஜாராமன்.

அதைத் தொடர்ந்து உரையாடல் எப்படியோ வேறு திசையில் விலகி வெகுதூரம் சென்று முடிந்துவிட்டது. பிறகு, இருவருமே தூங்கச் சென்றுவிட்டார்கள்.

மற்றொரு நாள் இரவில் மாடியில் நின்றபடி, கீழே சாலையில் நீண்ட வரிசையில் சென்றுகொண்டிருந்த ஒரு திருமண ஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். ஊர்வலத்தின் அலங்காரத்தைப் பற்றிய உரையாடலாகத் தொடங்கிய அவர்களுடைய பேச்சு, எப்படியோ வழக்கமான திசையை நோக்கித் திரும்பிவிட்டது.

'பணத்தை எப்ப நினைக்கணுமோ அப்பதான் நினைக்கணும் பாலகுரு. இருபத்திநாலு மணி நேரமும் பணத்தையே நினைக்கிறவனுக்கு  பைத்தியம்தான் பிடிக்கும்.'

'நீங்க சொல்றது தப்பு ராஜாராமன்.

ஒரு குதிரைப்பந்தயத்துல ஜெயிக்கணும்னு நினைக்கிறவன் இருபத்திநாலு மணி நேரமும் குதிரையையே நினைச்சுட்டுதான் இருந்தாகணும். அவன் மனசுல தடதடனு குதிரை ஓடுற சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கணும். ஜெயிக்கிறவனுக்கு உள்ள விதி அது. அதை மீறவே முடியாது.'

''வாழ்க்கைங்கிறது, ஜெயிச்சுக் காட்டவேண்டிய நீச்சல் குளம் கிடையாது பாலகுரு; குளிச்சு விளையாடி ஆனந்தப்படவேண்டிய சாதாரணக் குளம்.'

பாலகுருவின் மனம் சட்டென சமநிலை இழந்தது. 'இங்கே பாருங்க ராஜாராமன். வயசான காலத்துல பேசவேண்டிய தத்துவங்களை எல்லாம் இப்ப பேசிட்டு இருக்கிங்க நீங்க. வீடு, வாசல், நிலம்னு ஓடி ஓடி சொத்து தேடவேண்டிய பருவம் இது. பத்து பன்னெண்டு முயல்களைத் தேடி ஓடக்கூடிய வேட்டைக்காரன் கையிலதான் நாலஞ்சு முயலுங்களாவது மாட்டும். ஓடவே மாட்டேன்னு நின்னுட்டா, ஓணான்கூடப் பிடிக்க முடியாது. உங்க மொதலாளி இருக்கிறாரே, அவர் என்ன ஓடாத ஆளா...இல்லை ஓடி முடிச்சிட்ட ஆளா? இன்னும் ஓடிக்கிட்டேதானே இருக்காரு... அதை ஏன் நீங்க யோசிக்க மாட்டேங்கிறீங்க? அவருக்கு ஒரு நீதி, உங்களுக்கு ஒரு நீதியா? உங்களுக்குன்னு சொந்தமா ரெண்டு கை, ரெண்டு கால்களை கடவுள் குடுத்திருக்கிறதுக்கு அர்த்தம், சந்தோஷம் சந்தோஷம்னு வெறுமனே நீட்டிக்கிட்டு உட்கார்ற துக்கு இல்லை; எழுந்து ஓடணும்கிறதுக்காகத்தான்.'

பாலகுருவுக்கு மூச்சு வாங்கியது. பிறகு அவனைப் பார்க்காமல் தரையைப் பார்த்தபடி 'புரிஞ்சிக்கணும்னு ஆசை இருந்தா புரிஞ்சிக்கோங்க. இல்லன்னா எல்லாம் இந்தக் காத்தோடு போகட்டும்' என்றான்.

ராஜாராமனுக்கு அன்று இரவு தூக்கம் வரவில்லை. கண்களை மூடினால் ஒரு பிச்சைக்காரனாக, ஒரு நோயாளியாக, ஒரு நாடோடியாக, ஆதரவு இல்லாத அநாதையாக தான் அலைகிற சித்திரங்கள் மாறி மாறி எழுந்து வதைக்கத் தொடங்கின. நிறைவு, நிம்மதி என்றெல்லாம் தோன்றும் உணர்வுகள் அனைத்தும் தன்னை வேறொரு திசையை நோக்கி இழுத்துச் செல்லக்கூடிய கயிறுகளோ என்னும் சந்தேகம் சூறாவளிக் காற்றாக வீசியது. அதன் வேகம், அவனை வேரோடு பிடுங்கி எங்கோ வீசிவிட்டதுபோல இருந்தது.

விடிந்ததும் அறையைவிட்டு வெளியே வந்தபோது, பாலகுரு தோட்டத்துக்கு அருகில் சூரியனைப் பார்த்து நின்றபடி யோகாசனம் செய்துகொண்டிருப்பதைப் பார்த்தான். அருகில் சென்று வணக்கம் சொன்னான். அவனும் பயிற்சியை நிறுத்தி வணங்கினான். அவன் முகம் வெளுத்து இருப்பதைப் பார்த்து அதிர்ந்தவனாக, 'என்ன இது ராஜாராமன்... உங்க முகம் ஏன் இப்படி வீங்கின மாதிரி இருக்குது... சரியா தூங்கலையா?' என்று பரிவோடு கேட்டான்.

'என்னமோ தெரியலை, ஒரே தலைவலி' என்றான் ராஜாராமன்.

'நான் எதை எதையோ குருட்டுத்தனமா சொல்லி உங்களைக் கெடுக்கிறதா நினைச்சுக்க வேணாம். ரெண்டு வருஷத்துக்கு முன்னால வரைக்கும் நானும் உங்களை மாதிரிதான் நான் உண்டு, என் வேலை உண்டு.; அதுவே பெரிய நிம்மதின்னு காலத்தை ஓட்டிக்கிட்டு இருந்தேன். அப்ப நான் இருந்த வீட்டு ஓனரம்மா பேசின பேச்சுதான் என்னை மாத்திச்சு. பழுக்கக் காய்ச்சின இரும்பை எடுத்து சொருவுற மாதிரி பேசும் அந்த அம்மா. எல்லாத்துக்கும் அடங்கிப்போனேன். அப்படிப்பட்ட ஒரு சூழல்ல, 'கூடுதலா ரெண்டாயிரம் ரூபாய் வாடகையா குடுக்க வக்கு இல்லாததாலதானே இந்தப் பேச்சைக் கேட்கிறோம்’னு ஒரு ஆளுக்குத் தோணுமா தோணாதா, நீங்களே சொல்லுங்க?' என்றபடி ஒரு கணம் பேச்சை நிறுத்தினான் பாலகுரு.

'நிச்சயமாத் தோணும்' என்றபடி அவன் முகத்தையே பார்த்தான் ராஜாராமன்.

'அதுதான். அந்த நிமிஷத்துல இருந்து பணம் சம்பாதிக்கிறதை தவிர வேற எந்தச் சிந்தனையும் இல்லாம ஓடுறேன். பணம்கிறது ஒரு பெரிய சக்தி ராஜாராமன். அதுக்கு முன்னால எதுவுமே நிக்காது.'

'எப்படியோ, நேத்து சொன்ன இடத்துக்கே மறுபடியும் வந்துட்டிங்க' என்று புன்னகைத்தான் ராஜாராமன்.

ஒருகணம் அந்தப் புன்னகை தன்னைச் சீண்டிப்பார்ப்பதாக நினைத்தான் பாலகுரு. ''வெறும் புராடெக்ட்ஸ் மார்க்கெட்டிங்ல அந்த அளவுக்குப் பணத்தைப்  புரட்ட முடியாதுன்னு தோணிச்சு. உடனே ஷேர் மார்க்கெட்ல இறங்கினேன். நல்ல பணம். பத்தைப் போட்டு பதினஞ்சா எடுக்கிறது. சூதாடுற மாதிரிதான். ஆனா, ஜெயிச்சிட்டா 'எதுல வந்த பணம்?’னு எவனும் கேட்க மாட்டான்.'

ராஜாராமன், அவன் முகத்தையே உற்றுப் பார்த்தபடி இருந்தான்.

'ரெண்டு மாசத்துக்கு முன்னாலதான் இன்னொரு ஒரு புது வழி கெடச்சுது. இதுவும் ஒரு வகை மார்க்கெட்டிங்தான். ஆனா, ட்ரக்ஸ். மொதல்ல மனசுக்கு உறுத்தலா இருந்துச்சு. அப்புறம், 'எந்தக் கழுதையோ விக்கிறான், எந்தக் கழுதையோ வாங்கிச் சாப்பிடுறான். நமக்கு என்ன?’னு தோணிச்சு. புராடெக்ட்ஸோட புராடெக்ட்ஸா அதுவும் கைக்கு வந்துடும். எங்க தரணும், எத்தனை மணிக்குத் தரணும், எவ்வளவு தரணும்னு எல்லா தகவலும் கிடைச்சிடும். வேலை முடிஞ்சதும் நமக்கு உண்டான பணம் நம்ம கைக்கு வந்துடும். அவுங்க பணம் அப்படியே ஆன்லைன்ல போயிடும்.

ஒரு நாளைக்கு ரெண்டாயிரம். எவ்ளோ பெரிய பணம்? இதுக்கு மேல என்ன வேணும் சொல்லுங்க?'

பாலகுரு ஒரு வேகத்தில் தன் அறைக்குள் சென்று கைப்பெட்டியை எடுத்து வந்து ராஜாராமன் முன்பு திறந்து காட்டினான். உள்மடிப்பில் நான்கைந்து மறைவிடங்களைத் தாண்டி ஒரு ஜிப்பை இழுத்தான். சின்னச்சின்ன பிளாஸ்டிக் பைகள். ''என்னமோ, உன்னைப் பார்த்ததுமே ரொம்பப் பிடிச்சிபோயிட்டுது. உனக்கும் ஒரு வழியைக் காட்டலாம்னுதான் சொன்னேன். பிடிக்கலைன்னா இதோட விட்டுரலாம்' என்று சொல்லிவிட்டு பெருமூச்சோடு அறைக்குத் திரும்பினான் பாலகுரு. அவர்களின் உரையாடலில் பணத்தைப் பற்றிய பேச்சு அதற்குப் பிறகு இடம்பெறவே இல்லை.

அந்த வார இறுதியில் வழக்கம்போல சரக்கு வாங்கிவந்து மேசை மீது வைத்துக்கொண்டு பாலகுரு மட்டும் பருகினான். போதையின் உச்சத்தில் மேசையிலேயே தலைகவிழ்ந்து படுத்துவிட்டான்.

ராஜாராமன் அவனையே சில கணங்கள் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்து இருந்தான். மேசை மீது காலியாகிக்கிடந்த பாட்டிலை இழுத்து மூக்குக்கு அருகில் கொண்டு சென்று முகர்ந்து பார்த்தான். அதன் நெடி மூளை நரம்பைத் தாக்கி முறுக்கியது. நெஞ்சு குமட்டியது. உடனே அதை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டுத் திரும்பினான். ஒன்றிரண்டு கணங்களுக்குப் பிறகு, பாட்டிலை மீண்டும் இழுத்து முகத்தின் அருகே கொண்டுசென்று அதன் மணத்தை மறுபடியும் நுகர்ந்தான். கடுமையான நெடியால் ஒருகணம் மனவிலக்கம் உருவானது. சகித்தபடி மீண்டும் நுகர்ந்துவிட்டு நிமிர்ந்தான். முதன்முறையாக அந்த மணம் ஒருவிதக் கிளர்ச்சியைக் கொடுப்பதை உணர்ந்தான். அவனை அறியாமல் ஒரு புன்னகை அவன் உதடுகளில் விரிந்தது. மறுபடியும் நான்கைந்து முறை நுகர்ந்தான்.

'பாலகுரு..!'

அந்த அழைப்பு அவனைத் தொடவே இல்லை. ராஜாராமன் மெதுவாக பாட்டிலை உயர்த்தி, அடியில் எஞ்சியிருக்கும் ஒன்றிரண்டு சொட்டுகள் தன் நாவில் விழும்படி செய்தான். அவன் உடல் குலுங்கியது. நீண்ட நேரம் பாலகுருவைப் பார்த்தபடியே அமர்ந்து இருந்தான். பின்னிரவில் பாலகுருவின் அறைக்குள் நுழைந்து நிதானமாக அவன் உடுப்புகளில் ஒன்றை எடுத்து அணிந்தான். மேசை மீது வைக்கப்பட்டிருந்த பர்ஸையும் கைபேசியையும் எடுத்து பைக்குள் வைத்துக்கொண்டான். திரும்பி கட்டிலுக்கு அடியில் இருந்த கைப்பெட்டியையும் எடுத்துக்கொண்டு எங்கோ கிளம்பிப் போய்விட்டான்.

காலையில் மெஸ்ஸில் இருந்து சமையல்காரர் மேலே வந்து ''தம்பி இன்னும் கீழயே வரலையே. உடம்புக்கு ஏதாச்சும் முடியலையா?' என்று கேட்டபடி நின்றபோது, பாலகுருவுக்கு என்னமோ அது புதுமையாகத் தோன்றியது. 'நேத்து நல்லாதானே இருந்தாரு' என்று சொல்லிக்கொண்டே ராஜாராமனுடைய அறைக்குள் சென்றான்.

அறை திறந்தே இருந்தது. ஆனால் அவனைக் காணவில்லை. ''காணோமே, எங்கே போனாருன்னு தெரியலை' என்று சொல்லி சமையல்காரரை அனுப்பிவைத்தான்.

''சொல்லாமப் போற அளவுக்கு என்ன அவசரமோ தெரியலை' என்று மனதுக்குள் முணுமுணுத்தபடியே தன் அறைக்குத் திரும்பினான். கட்டில் அடியில் தற்செயலாகப் பார்வையைத் திரும்பிய கணத்தில் தன் பெட்டி காணாமல்போனதை அறிந்துகொண்டான். ஒருகணம் அவன் உடல் அதிர்ந்து அடங்கியது. இனம்புரியாத பீதியில் அவன் மனம் அமிழ்ந்தது. ''ஐயோ!'' என்று தன்னை அறியாமல் அலறினான்.

எங்கேயும் செல்லத் தோன்றவில்லை; யாரிடமும் சொல்லவும் தோன்றவில்லை. அறைக்குள்ளேயே அடைந்துகிடப்பதைத் தவிர வேறு வழியும் தெரியவில்லை. 12 மணி சமயத்தில் சமையல்காரர் மீண்டும் மேலேறி வந்து 'போன ஆளை இன்னும் காணலையே தம்பி. இன்னும் கொஞ்ச நேரத்துல ஏகப்பட்ட ஆளுங்க வந்துடுவாங்க. எங்களால சமாளிக்க முடியாது. நீங்க கொஞ்சம் ஒத்தாசைக்கு வந்தா புண்ணியமாபோவும்' என்று கேட்டுக்கொண்டபோது, தவிர்க்க முடியாத மனநிலையில் அவரோடு இறங்கிச் சென்றான்.

முதல் பந்திக்குப் பிறகு அவன் மனம் இயல்பான நிலைக்குத் திரும்பியது. அடுத்தடுத்த பந்திகளில் அவன் உற்சாகமாகவே பரிமாறினான். அடுத்த இரு நாட்களும்கூட அவனே முன்னின்று பந்திகளைக் கவனித்துக்கொண்டான். சாப்பிட்ட நிறைவுடன் நிமிர்ந்து பார்க்கும் கண்களில் தெரியும் சுடரைப் பார்க்கப் பார்க்க, அவன் மனதுக்கு என்னமோ மாதிரி இருந்தது. தன்னை அறியாமல் ஒருவித நிறைவில் தன் மனம் தளும்புவதை முதன்முதலாக உணர்ந்தான். அதே தருணத்தில் குற்ற உணர்வின் முள் ஆழமாகக் கிழித்துவிட்டுப்போவதையும் உணரமுடிந்தது.

நான்காவது நாள் காலையில் அறைக்குத் தேடி வந்துவிட்டார் முதலாளி. தன் தளர்ந்த கைகளால் பாலகுருவின் தோளைத் தொட்டு 'வயசுக்கு மீறிய பெரிய மனசு தம்பி உங்களுக்கு. எல்லாத்தையும் கேள்விப்பட்டேன். ஆள் இல்லாமத் தவிச்ச சமயத்துல தெய்வம்போல நின்னு உதவியிருக்கீங்களே. உங்களை மறக்கவே முடியாது தம்பி!' என்று சொன்னபடி தட்டிக்கொடுத்தார். மேலும் 'ராஜாராமன் ரொம்ப நல்ல பையன். எங்கேயும் சொல்லாமக் கொள்ளாமப் போக மாட்டான். அவன் ஏன் இப்படி செஞ்சான்னுதான் புரியல' என்றார்.

பாலகுருவுக்கு, பேச்சே எழவில்லை. 'நீங்க ஒண்ணு சார். அது ரொம்பச் சின்ன விஷயம்தான். அதைப் போய் பெரிசா நினைச்சுக்கிட்டு' என்று தொடங்கிய சொற்களை முடிக்கத் தெரியாமல் தவித்தான். முதலாளி புன்னகையுடன் தலையசைத்தபடி அதையும் கேட்டுக்கொண்டார். பிறகு, ''ராஜாராமன் இடத்துல நின்னு நீங்கதான் இந்த மெஸ்ஸைக் கவனிச்சிக்கணும். அவனுக்குக் குடுத்ததைவிட கூடுதலா அஞ்சாயிரம் ரூபா குடுத்துடுறேன்' என்றார்.

பாலகுருவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. ஏதோ ஒன்று சொல்லவேண்டும் என்பதற்காக மெதுவாக, 'அவரு வந்தாலும் வந்துடுவாரு. இன்னும் ரெண்டு நாள் பார்க்கலாமே' என்றான்.

'சரி, உங்க விருப்பம். ரெண்டு நாள் என்ன, நாலு நாள்கூட காத்திருந்து பார்க்கலாம். ஆனா, நீங்க மட்டும் மெஸ்ஸைக் கைவிட்டுடக் கூடாது' என்று சொன்னபடி அவன் கைகளைப் பிடித்து அழுத்திவிட்டுச் சென்றார் முதலாளி.

நான்கு நாள் காத்திருந்தும் ராஜாராமன் வராததால், அந்தப் பொறுப்பை அவனே ஏற்றுக்கொண்டான். அன்று இருநூறுக்கும் மேற்பட்ட ஆட்கள் சாப்பிட்டிருப்பதைச் சொன்ன சமையல்காரர், ''எல்லாம் நீங்க வந்த கைராசிதான்' என்று சந்தோஷமாகப் புன்னகைத்தார். அந்தச் சொற்கள் தன்னை ஒருவித பரவசத்தில் ஆழ்த்துவதை உணர்ந்தான் பாலகுரு. இந்த ஒரு வாரத்தில் ஒருமுறைகூட தன் மனம் பணத்தை நினைத்துப் பதறவில்லை என்பதை ஆச்சர்யத்தோடு அப்போது நினைத்துக்கொண்டான்.

 

http://www.vikatan.com/anandavikatan/2015-oct-07/stories/110976.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.