Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தால் நொந்து போயிருக்கும் எம்மை சிலர் குழப்ப முனைகிறார்கள்! சி.வி. விக்னேஸ்வரன்

Featured Replies

வடபகுதிக்கான பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா ஓமந்தைப் பகுதியில் அமைப்பதற்கு உடனடியாக காணியை கையளிக்க முடியுமென வடமாகாண காணி ஆணையாளர் தனக்கு தெரியப்படுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு 2010 ஆம் ஆண்டிலேயே மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது ஓமந்தையில் அந்தக் காணியை பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு கையகப்படுத்தவேண்டுமென்றால் அதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையின் (யு.டி.ஏ.) அனுமதிவேண்டுமென்று சிலர் கூறினர், இந்த நிலையம் விரைவில் அமைக்கப்படுவதை தட்டிக்கழிக்க முற்படுவது குறித்து முதலமைச்சரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுபற்றி முதலமைச்சர் மேலும் கூறுகையில்,

ஓமந்தையானது ஒரு கிராமமாகும். அது எந்தவொரு நகரத்திற்குள்ளும் அடங்கவில்லை. இதனால் ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதி பெறப்படவேண்டுமென்று கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை.

ஓமந்தையில் இந்த பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கான அனுமதி பெறப்பட்ட வேளையில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக இருந்து தற்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக இருக்கும் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸுடன் எனது செயலாளர் தொடர்பு கொண்டு பேசியிருந்தார்.

ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கான அனைத்து விதமான அனுமதிகளும் எப்போதோ பெறப்பட்டு அந்த இடம் மத்திய நிலையத்தை அமைப்பதற்கு மிக நீண்டகாலமாக தயார் நிலையிலுள்ளது. இதற்கு மேலதிகமாக எந்தவித அனுமதியும் பெறப்படவேண்டிய தேவையில்லையெனக் கூறியுள்ளார்.

இதேநேரம், ஓமந்தைப் பகுதியில் இந்த மத்திய நிலையத்தை அமைப்பது தொடர்பாக வடமாகாண காணி ஆணையாளரிடமிருந்தும் முழுமையான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்தக் காணியை பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்காக எவ்வேளையிலும் கையளிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் இதில் எவ்வித சிக்கல்களும் இல்லையெனவும் அவர் எனக்கு ஏற்கனவே உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த கடிதத்தின் பிரதிகள் வடபகுதியைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கும்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கும் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனால், ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு எந்தவிதமான தடங்கல்களும் இல்லை.

மக்களின் மனதை நோகடிக்கும் விதத்திலும் அவர்களது நம்பிக்கையை வீண்போகச் செய்யும் விதத்திலும் சிலர் நடந்து கொள்வது வேதனைதரும் விடயமாகும். யுத்தத்தால் எல்லாவற்றையும் இழந்து நொந்து போயிருக்கும் எமது மக்களுக்கு கிடைக்கவேண்டியவற்றை அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக சிலர் அரசியலாக்கி சுயலாபம் காண முயல்வது மிகவும் வேதனைதருகிறது.

எமது மக்களின் எதிர்காலத்தை முன்னிட்டாவது எவ்வித தடங்கலுமின்றி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/property/01/110465

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் வாதிகள்  நிலை தன்னை இப்போது பிரபலமாக்கி காட்ட நினைப்பதே மக்களை மறந்து ??

இது  முதலமைச்சருக்கல்ல

Edited by முனிவர் ஜீ

  • தொடங்கியவர்

பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாக கூட்டமைப்பின் கருத்துக் கணிப்பு! ஓமந்தைக்கு பெருமளவு ஆதரவு?

வடக்கு பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைக்கப்பட வேண்டுமென்பது தொடர்பில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ஓமந்தைக்கே அதிகளவானவர்கள் விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் கூட்டமொன்று இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் பங்குபற்றிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஓமந்தையிலா அல்லது தாண்டிக்குளத்திலா இந்த நிலையம் அமைய வேண்டுமென்பது தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைத்தனர். இந்நிலையில் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பிலான அமைவிடம் தொடர்பில் கூட்டமைப்பின் மாகாண சபை மற்றும் வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டதுடன் ஒரு வாரத்துக்குள் முடிவு எடுப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது.

இதனடிப்படையில் தங்கள் விருப்பங்களை அனுப்புமாறு தமிழ் கூட்டமைப்பின் 30 மாகாணசபை உறுப்பினர்களுக்கும் கூட்டமைப்பின் 10 வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வடக்கு முதலமைச்சர் கடிதங்களை அனுப்பியிருந்தார். இதன் பிரகாரம் அதிகூடியவர்கள் ஓமந்தையில் அமைக்கப்பட வேண்டுமென தமது தனிப்பட்ட கருத்தினை அனுப்பியுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தனர்.

வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களில் அதிகமானவர்கள் ஓமந்தையில் இந்த நிலையம் அமைக்கப்பட வேண்டுமெனக் கூறியுள்ளதாக தகவல் தந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன. இதேவேளை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் காணிகளை பார்வையிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை 2010 ஜூன் 5 ஆம் திகதி வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட சுமார் 20 ஏக்கர் வேப்பங்குளம், ஓமந்தையிலுள்ள காணி, ஓமந்தை மாணிக்கவளவு காணி மற்றும் தாண்டிக்குள காணிகள் பார்வையிடப்பட்டன. இவ்வாறான நிலையில் வடக்கு முதலமைச்சரை காணிகளை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இன்று சந்திக்கவுள்ளதாக தகவல் தந்த தரப்பினர் குறிப்பிட்டனர்.

இதேவேளை, தற்போது சிலர் வேறு காரணங்களை கூறி இந்த கருத்துக் கணிப்பை தட்டிக்கழித்து தாண்டிக்குளத்தில் நிறுவ முற்படுவதாக தெரிகிறது.

http://www.tamilwin.com/economy/01/110467

  • தொடங்கியவர்

இது முதலமைச்சருக்கு எதிரான காய்நகர்த்தலா?

வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தித் திட்டங்கள் எப்போதும் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகின்றது. கடந்த அரசாங்கத்தில் மட்டுமன்றி புதிய நல்லாட்சி அரசாங்கத்திலும் இது தொடரவே செய்கின்றது. பொருத்து வீட்டுப் பிரச்சனை, பொருளாதார மத்திய நிலையம் என அவை நீண்டு கொண்டே செல்கின்றது.

போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கான அபிவிருத்தி என்பது தற்போதைய அப்பிரதேச வளங்களையும், தேவைகளையும் அடிப்படையாக கொண்டதாக அமைய வேண்டும்.அதுவே மக்களுக்கு பயன்தரக் கூடியதாகவும் இருக்கும்.

ஆனால் அபிவிருத்தி என்ற போர்வையில் மாகாண மக்களின் விருப்பங்களையும், மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் பெறாது திணிக்க முற்படக் கூடாது. அது நல்லாட்சிக்கு நல்லதும் அல்ல. ஆரம்பத்தில் வவுனியா பொருளாதார மத்திய நிலைய விவகாரம் கூட அவ்வாறே உருவானது.

மத்திய அரசாங்கம் மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளால் தெரிவு செய்த ஓமந்தை என்ற இடத்தை புறக்கணித்து, நகரில் இருந்து 2 கிலோமீற்றர் தூரத்திற்குள் அமைந்துள்ள தாண்டிக்குளம் விவசாய பண்ணை, விவசாய கல்லூரி, விவசாய விதை உற்பத்தி நிலையம் என்பவற்றுடன் இணைந்த காணி தான் பொருத்தமானது என கூறி அதில் விடாப்பிடியாக இருந்தது.

அந்தக் காணியில் இருந்து 3-5 ஏக்கர் காணியை கோரியும் இருந்தது. இந்த விவகாரமே இன்று பூதாகரமாக மாறி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இரு அணிகளை ஏற்படுத்தியுள்ளது.

வன்னியை பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய அமைச்சரும் தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டும் என கூற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு அணியும் அதனை வலுச் சேர்த்து மத்திய அரசாங்கத்துடன் கைகோர்த்து அபிவிருத்தியை தீர்மானிக்கும் பொறுப்பை மத்திய அரசின் அணுசரணையுடன் செய்ய முற்பட்டுள்ளது.

அந்த மத்திய அமைச்சர் அவ்வாறு கோருவதற்கு வேறு பல காரணங்களும் இருக்கிறது. இது உசிதமானது இல்லை. ஏனெனில் மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புக்கள் மட்டுமன்றி வடபகுதி விவசாய அமைப்புக்கள் கூட தாண்டிக்குளத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன. முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்கள் அனைத்தும் எதிர்க்கும் நிலையில் இந்த 200 கோடி ரூபா அபிவிருத்தி யாருக்காக...?

விவசாய மக்கள் விருப்பத்தை தமிழரசுக் கட்சி சார்ந்த அரசியல்வாதிகள் சிலர் குழப்பமுனைவது ஏன் என்ற பெரிய கேள்வி இந்த இடத்தில் எழுகிறது. இது பற்றி மக்களும் தெளிவு படுத்தப்பட வேண்டும்.

தற்போது அபிவிருத்தி, மக்களின் தேவை என்பதற்கு அப்பால் கட்சி அரசியல் புரையோடிப்போயுள்ளது. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சி.சிறிதரன், த.சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், குருகுலராஜா மற்றும் பெரும்பான்மையான மாகாண சபை உறுப்பினர்களும் ஓமந்தையில் தான் பொருளாதார மத்திய நிலையம் அமைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதுவே விவசாயிகளின் விரும்பமும் கூட. ஆனால் மாவை தலைமையிலான தமிழரசுக் கட்சியின் அணி பராளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சிவமோகன், சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் ரெலோ செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் கூட்டிணைந்து தாண்டிக்குளத்தில் அமைக்க முற்படுகின்றது.

இங்கு மக்களின் முதன்மைப்படுத்தும் அணி வெல்லக் கூடாது. அவர்களை தோற்கடித்து மத்திய அமைச்சர் விரும்பும் தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என்ற தோரணையில் செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதை அவதானிக்க முடிகிறது.

அதற்காக இவர்கள் மத்திய அமைச்சர் ஓமந்தையை ஏற்றுக் கொள்ள மாட்டார். ஓமந்தையில் 2010 ஆம் ஆண்டு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொருளாதார மத்திய நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட 18 ஏக்கர் காணிக்கு புகையிரதக் கடவையை கடந்து போகவேண்டும் என்ற சாட்டுப் போக்குகளைக் கூறுகிறார்கள்.

இது சின்ன வயதில் கேட்ட பாட்டி வடை சுட்ட கதையை ஞாபகப்படுத்திச் செல்கிறது. இந்த புதிய நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வந்த கூட்டமைப்பு ஒரு பொருளாதார மத்திய நிலையத்தை விரும்பும் இடத்தில் கொண்டு வர முடியவில்லை என கூறுவது வேடிக்கையானதும் கூட. ஆகவே, இங்கு தாண்டிக்குளம் என்ற முடிந்த முடிவில் அந்த அணி செயற்படுகிறது. அவர்கள் முதலமைச்சருக்கு எதிராக செயற்படுவதாக நினைத்து விவசாயிகள் வயிற்றில் அடிக்க முனைகிறது என்றே கருதத் தோன்றுகின்றது.

உரிமைக்காக போராடிய இனம் இன்று ஒரு பொருளாதார மத்திய நிலையத்திற்காக இரண்டு பட்டு நிற்பது எமது மக்களின் எதிர்காலம் குறித்து சற்று சிந்திக்கவே தூண்டுகின்றது. குழிபறிக்கும் செயற்பாடுகளை விடுத்து அவர்கள் ஒன்றுபட வேண்டும். ஆனால் அது நடப்பதாக தெரியவில்லை.

மாகாண சபை மற்றும் வன்னி மக்கள் பிரதிதிகள் மத்தியில் இதற்கு தீர்வை எட்ட முடியாத நிலையிலேயே இந்த விவகாரம் எதிர்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களின் கவனத்திற்கு சென்றது. ஆனால் அவர் கூட அதை உடனடியாக தீர்க்காது உட்கட்சி மோதலை மேலும் தூண்டிவிடும் வகையில் செயற்பட்டிருப்பது வேதனையளிக்கிளது.

தாண்டிக்குளம் பகுதியில் விவசாய கல்லூரி அமைந்துள்ளது. வடமாகாணத்திற்கான ஒரே ஒரு கல்லூரி இதுவே. இன்று அதனை விஸ்தரிக்க வேண்டிய தேவை உள்ளது. இவ்வாறான சூழலில் அதன் முன்னால் அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது எவ்வகையில் பொருத்தமானது.

கடந்த காலத்திலும் சரி, தற்போது சரி களனி போன்ற பல்கலைக்கழங்களில் தமிழ் மாணவர்களுக்கு நிகழும் சம்பவங்களும் அங்கு ஏற்பட்ட வன்முறைகளும் மீள நினைவுபடுத்தி பார்க்கப்பட வேண்டியவை. இந்த விவசாய கல்லூரி கூட கடந்த காலத்தில் பல போராட்டங்களுக்கு மத்தியிலேயே அமைக்கப்பட்டும் இருந்தது. இதற்கு பாதிப்பு வருவது என்பது விவசாயத்துறை சார்ந்த தமிழ்மாணவர்களுக்கு நிச்சயமாக பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனாலேயே அந்த மாணவர்கள் தம்மை நிம்மதியாக படிக்க விடுமாறும் உருக்கமாக கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் வர வேண்டும் என பலரும் கோரும் நிலையில் தமிழ் அரசியல் தலைமைகளே அதனை பாதிக்க செய்வது எந்த வகையில் நியாயம். அவர்களுக்கு ஏன் இது புரியவில்லை.

காட்டிக் கொடுப்புக்களும், உடைவுகளுமே தமிழர் வாரலாற்றை முள்ளியவாய்கால் வரை கொண்டு சென்றது. இதை எவரும் மறந்து விடவில்லை. இந்த நிலையில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்திற்காக இந்த மோதல் என்பது சரியானதும் அல்ல. விவசாயிகள் நன்மை கருதி கொண்டு வரப்படும் ஒரு பொருளாதார மத்திய நிலையத்தைக் கூட விவசாயிகள் விருப்பபடி தீர்மானிக்க சில அரசியல்வாதிகள் மத்திய அரசுடன் இணைந்து தடையாக இருக்கிறார்கள் என்றால், எவ்வாறு நாம் நிரந்த தீர்வைப் பற்றி பேசுவது. தனிப்பட்ட கட்சி மோதல்கள், கருத்து வேறுபாடுகள் அரசியல்வாதிகளுக்கு இருக்கலாம். அது அவர்கள் சார்ந்த பிரச்சனை. ஆனால் அதை மக்கள் மீது எவ்வகையிலும் திணிக்க கூடாது. அது ஆரோக்கியமபனதும் அல்ல.

இன்று மத்திய அரசாங்கம் கூட இந்த திட்டம் வவுனியாவிற்கானது. பொருத்தமான இடத்தை நீங்களே தெரிவு செய்து தாருங்கள் என கூறி விட்டது. அப்படியாயின் விவசாயிகளுக்காக இந்த திட்டத்தை அமைக்க ஏன் இவ்வளவு முரண்பாடுகள். மத்திய அரசாங்கம் விட்டுக் கொடுத்தாலும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் விட்டுக் கொடுக்காத நிலை முதலமைச்சருக்கு எதிராக மேற்கொள்வதாக கருதி மேற்கொள்ளும் இந்த நகர்வுகளால் ஜெயிக்கப் போது முதலமைச்சரே. அதற்கு காரணமும் உண்டு. பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் விவசாயிகள், நிபுணர்குழு ஆகியோரின் விருப்பம் போல் முதலமைச்சர் அமைத்தால் அவர் தூரநோக்கு அடிப்படையில் மேற்கொண்ட திட்டமிடலுக்கு கிடைத்த வெற்றியாகவே அது அமையும். விவசாயிகள் மத்தியில் அவருக்கான வரவேற்பு கூட அதிகரிக்கும். ஆனால் அதை தடுத்து குழப்பி தாண்டிக்குளத்தில் அமைப்பதால் எதுவும் நடந்து விடப்போதில்லை.

அதிலும், முதலமைச்சர் விவசாயகள், நிபுணர்குழு, மக்கள் விருப்பப் படி ஓமந்தையில் அமைக்க முற்பட்டேன். ஆனால் அதை மத்திய அரசுடன் இணைந்து சிலர் குழப்பியுள்ளார்கள். நான் என்ன செய்வது என தெரிவிக்க வாய்ப்புள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தும்.

இந்த இடத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஒதுங்கியிருந்த முதலமைச்சர் 'மக்களுக்காக மக்களுடன் நிற்கக் கூடியவர்களை நீங்கள் தெரிவு செய்யுங்கள்' என்று மக்களுக்கு கூறியமை தான் ஞாபகத்திற்கு வருகிறது. யாழ் மாவட்டத்தில் சிறிதரன் எம்.பி தற்போதும் மக்கள் நலன்சார்ந்து சிந்தித்து ஓமந்தைக்காக குரல் கொடுத்து வருகிறார். அதற்காகவே அவர் அன்று அதிகூடிய வாக்குகளையும் பெற்றிருந்தார்.

வடக்கின் பல பகுதிகளிலும் விவசாயிகளே அதிகமாக வாழ்கிறார்கள். இந்த நிலையில் அவர்களின் விருப்பம், கோரிக்கை என்பவற்றை புறக்கணிப்பது வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இதை தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும். வடக்கில் தடம்பதித்து வரும் ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி என்பவற்றுக்கு கூட வாய்பாகிவிடும்.

ஆகவே, முதலமைச்சருக்கு எதிரான குடும்பிடிச் சண்டையில் பாதிக்கப்படப் போவது அப்பாவி விவசாயிகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்புமே என்பதே உண்மை. இதை புரிந்து உடனடியாக ஒன்றுபட்டு விவசாயிகளின் விருப்படி பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க கூட்டமைப்பின் தலைவர் நடவடிக்கை எடுப்பதே ஆரோக்கியமான சூழலை உருவாக்கும்

http://www.tamilwin.com/articles/01/110470

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.