Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கபாலி – திரைவிமர்சனம்

Featured Replies

கபாலி – திரைவிமர்சனம்

 

25 வருட சிறை வாழ்க்கையை முடித்துவிட்டு சிறையிலிருந்து வெளியே வருகிறார் ரஜினி. வெளியில் வரும்போதே அவர் மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காக போராடிதான் சிறை சென்றார் என்பது தெரிய வருகிறது. சிறையில் இருந்து வெளியே வரும் அவரிடம் ஜான் விஜய், 25 வருடத்தில் மலேசியாவில் நடந்த மாற்றங்களை அவரிடம் விளக்கிக் கொண்டு வருகிறார்.

அப்போது, 43 கேங்க் என்ற கேங்ஸ்டர் கும்பல் மாணவர்களை போதை மருந்துக்கு அடிமையாக்கி இருப்பதையும், அதுமட்டுமில்லாமல், கொலை, கடத்தல் வேலைகளை செய்துவருவதாகவும் ரஜினியிடம் கூறுகிறார். முதலாவதாக 43-வது கேங்கை சேர்ந்த லிங்கேஷை சந்திக்கிறார்கள். அவனது கும்பலை அடித்து துவம்சம்செய்துவிட்டு, தான் வெளியில் வந்துவிட்டதாக அவனின் பாஸிடம் தெரியப்படுத்துமாறு சொல்லிவிட்டு, தமிழர்கள் வாழும் பகுதிக்கு செல்கிறார்.

அங்கு ‘கபாலி’ பெயரில் போதை மருந்துக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு கூடம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் போதைக்கு அடிமையான ரித்விகாவும் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த கூடத்துக்கு ஆசிரியராக கலையரசன் இருக்கிறார். இதையெல்லாம் பார்த்து ரஜினி, தனது பெயரில் நல்லது நடப்பது நினைத்து பூரித்து போகிறார். அப்போது மாணவர்களிடையே நடக்கும் உரையாடும் நிகழ்ச்சியில் தான் கேங்ஸ்டராக எப்படி மாறினேன் என்பதை எடுத்துக் கூறுகிறார். இதன்பிறகு பிளாஸ்பேக் விரிகிறது.

பிளாஸ்பேக் காட்சியில், ரஜினி ஜெயிலுக்கு போகும்போது, நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி ராதிகா ஆப்தே, குண்டு காயத்துடன் கிடப்பதை பார்த்துவிட்டுத்தான் செல்கிறார். இதனால், தற்போது ஜெயிலில் இருந்து வெளியே வந்தவுடன் தனது மனைவி உயிருடன் இருக்கிறாளா? தனது குழந்தை என்னவாயிற்று? என்ற குழப்பத்திலேயே இருக்கிறார். இந்நிலையில், கிஷோரின் கும்பலில் போதை மருந்து சப்ளை செய்துவரும் மைம் கோபியை ரஜினி கொன்றுவிடுகிறார். இதையடுத்து, கிஷோர், இனி ரஜினியால் தனது தொழிலுக்கு இடைஞ்சல் இருக்கும் என்றுகூறி அவரை தீர்த்துக்கட்ட பார்க்கிறார்.

இதன்பின்னர், ரஜினி தனது மனைவியையும் குழந்தையையும் கண்டுபிடித்தாரா? கிஷோரின் அராஜகத்தை அடித்து ஒடுக்கினாரா? என்பதுதான் மீதிக்கதை.

படத்தின் மிகப்பெரிய பலமே சூப்பர் ஸ்டார் ரஜினிதான். வழக்கமான மாஸ் காட்சிகள் மட்டுமில்லாது சென்டிமெண்ட் காட்சிகளிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் சிறைச்சாலையில் வெளிவரும்போதே இவர் தமிழர்களுக்காக பாடுபட்டவர் என்று தெரியவருகிறது. இவர் படத்தில் பேசும் முதல் வசனமே ‘மகிழ்ச்சி’ என்று சொல்லும்போது நமக்கே மகிழ்ச்சி வருகிறது.

அந்த மாஸ் காட்சியை தொடர்ந்து, லிங்கேஷை அடித்து துவம்சம் செய்து, டீசரில் வரும் டயலாக்கை பேசிவிட்டு, கடைசியில் நக்கலாக ‘கோழிக்கறி’ என்று சொல்லிவிட்டு செல்லும் காட்சிகளில் எல்லாம் மாஸ் காட்டுகிறார். ஆக்ஷன் காட்சிகளில் இன்னமும் தன்னுடைய அதே ஸ்டைலில் நடித்து கலக்கியிருக்கிறார். வயதானாலும் உங்க அழகும், ஸ்டைலும் குறையல என்ற படையப்பா வசனம்தான் நமக்கு ஞாபகம் வருகிறது. அதேபோல், பள்ளி மாணவர்களிடம் தான் எப்படி கேங்ஸ்டராக மாறினேன் என்பதை விளக்கும் காட்சியிலும் அசத்தியிருக்கிறார்.

ரஜினியின் நண்பராக கூடவே வரும் ஜான் விஜய் நடிப்பில் அசத்தியிருக்கிறார். இவருக்கான வசனங்கள் எல்லாம் மிகவும் எதார்த்தமாக இருக்கிறது. அதை எதார்த்தமாக செய்துவிட்டு கைதட்டல் பெறுகிறார். தன்ஷிகாவுக்கு இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம். ஸ்டைலான பெண்ணாகவும் அழகாக இருக்கிறார். இடைவேளைக்கு பிறகு இவரது கதாபாத்திரம் அப்படியே மாறுவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுக்கும். பிளாஸ் பேக் காட்சியில் வரும் நாசரின் நடிப்பும் அற்புதம்.

கிஷோர் மிரட்டலான வில்லனாக அசத்துகிறார். கலர் கலரான உடையில் ஹைடெக் வில்லனாக தெரிந்தாலும், லோக்கல் ரவுடிபோல்தான் நமக்கு தெரிகிறார். லிங்கேஷ், ரஜினிக்கு இணையாக அவருக்கு எதிரில் அமர்ந்து பேசும் காட்சிகளில் கெத்து காட்டுகிறார். மெட்ராஸ் படத்தில் பார்த்த கலையரசன், இப்படத்தில் அப்படியே நேர் எதிராக வந்து நிற்கிறார். குழந்தைதனமான முகத்தில் எதார்த்தம் கலந்து நடித்திருக்கிறார். தினேஷ், ரஜினிக்கு பாடிகார்டாக வந்திருக்கிறார். படம் முழுக்க ‘ரோபோ’ படத்தில் வரும் சிட்டி போல் படத்தில் ரஜினி செய்யும் கட்டளைகளை செய்துவருகிறார். இருந்தாலும், இறுதிக்காட்சிகளில் தனது நடிப்பால் ரசிகர்களை செண்டிமென்டால் கவர்கிறார்.

சூப்பர் ஸ்டாரின் மனைவியாக வரும் ராதிகா ஆப்தே, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். வயதான கெட்டப்பிலும், ரஜினியுடன் இவர் செய்யும் காதல் காட்சிகள் எல்லாம் ரசிக்கும்படியாக இருக்கிறது. 25 வருடத்திற்கு பிறகு தனது கணவனை பார்த்து கண்கலங்கி நிற்கும் காட்சிகளில் எல்லாம் நம்மையும் கலங்க வைத்துவிடுகிறார்.

படத்தில் 43 கேங்கின் தலைவராக வரும் மலேசியா நடிகர் வின்ஸ்டன் சா, தோற்றத்திலேயே மிரட்டுகிறார். இவருக்கும் ரஜினிக்கு இணையான மாஸ் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். போதைக்கு அடிமையான பெண்ணாக வரும் ரித்விகாவின் கதாபாத்திரத்தை அழகாக உருவாக்கியிருக்கிறார்கள். இவர் ரஜினியை எதிர்த்து பேசும் காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார்.

இயக்குனர் பா.ரஞ்சித், ரஜினிக்கு ஏற்ற கதையை உருவாக்கி, அதை தனது பாணியில் உருவாக்கியிருக்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பலமே எதார்த்தமான வசனங்கள்தான். ஆங்காங்கே, ரஜினி பேசும் வசனங்கள், பஞ்ச் டயலாக்காக இல்லாவிட்டாலும், ரசிகர்களை விசிலடிக்க வைத்துள்ளது. ஆனால், ஒருசில காட்சிகளால் படத்திற்கு தொய்வு இருக்கிறது. ரஞ்சித் இயக்கியிருந்த இரண்டு படங்களும் ரஞ்சித் பெயரைச் சொல்லும்படமாக இருந்தது. ஆனால், ‘கபாலி’ முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார் ரஜினியை மட்டுமே குறிப்பிடும். அந்தளவுக்கு ரஞ்சித்தின் பங்கு இதில் குறைவுதான் என்று சொல்லவேண்டும்.

சந்தோஷ் நாராயணன் இசையில் ஏற்கெனவே பாடல்கள் ஹிட்டாயிருந்தாலும், திரையில் பார்க்கும்போது அந்த பாடல்களுக்கு ஜீவன் பிறந்திருக்கிறது. பின்னணி இசையும் மிரட்டலாக இருக்கிறது. முரளியின் ஒளிப்பதிவு மலேசியாவை அழகாக படம்பிடித்திருக்கிறது. செட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளும் மிகவும் தத்ரூபமாக தெரிகிறது. ரஜினிக்கு அமைத்த மாஸ் காட்சிகளில் எல்லாம் இவரது கேமரா அழகாக வேலை செய்திருக்கிறது.

மொத்தத்தில் ‘கபாலி’ ரசிகர்களுக்கு மகிழ்ச்சி

http://tamil.adaderana.lk/kisukisu/?p=15036

  • கருத்துக்கள உறவுகள்

 நான் போட்ட கபாலி பட விமர்சனத்தை யாழ் போடவில்லை அதனையும் இங்கு பதிகிறேன்

கபாலி பற்றியவோர் பார்வை

கபாலியைச் சென்ற வாரம்  பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. படம் ரிலீஸாகும்வரை அதுபற்றிய விமர்சனத்தைப் போடக்கூடாது என்பதால் தற்போது போடுகிறேன்.

கபாலி வழமைபோல சாதாரணமானவோர் கதை ஆனால் சற்று வித்தியாசமாக மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் நிகழ்கிறது.  சிறிது சென்னைக்கும், புதுவைக்கும் நகர்ந்து பின்னர் மீண்டும் மலேசியாவிலேயே சரண்டராகி அங்கேயே முடிவடைகிறது.

கபாலியாக வரும் ரஜனிக்கு அவரது வயதுக்கும் தோற்றத்திற்குமேற்ற பாத்திரம் கொடுக்கப்பட்டு இடையிடையே கபாலியின் இளமைக்காலத்தை மிகைப்படாமல் காட்டுவது பாத்திரப் பொருத்தத்திற்கு ஏற்றதாயிருக்கிறது.

மலேசியாவில் போதைப்பொருள் வர்த்தகத்திலீடுபடும் 43 என்றவோர் சமூகவிரோதக் கும்பலுக்கெதிராக ஆரம்பத்தில் நாசர் தலைமையில் ஒர் எதிர்க்குழு இயங்க, பின் நாசர் கொல்லப்பட கபாலி (ரஜனி) அந்தக் குழுவின் தலைமையை ஏற்கிறார்.    நாசரின் மகனுக்குத் தானே குழுவின் தலைவனாகி விடவேண்டுமென்ற ஆசை வருகிறது.  அந்த ஆசைக்கு 43 குழுவினர் தூபமிடுகிறார்கள்.  அதனாலேற்படும் கலவரமொன்றில் நாசரின் மகனும் கொல்லப்பட்டு விடுகிறார்.   ரஜனி இந்தக்குற்றச் சாட்டுகளால் 25 வருட சிறைக்கு அனுப்பப்பட்டு விடுகிறார்.  அந்தக் கலவரத்தில்  கபாலியின் கர்ப்பிணியான இளம் மனைவி காணாமற் போய்விடுகிறார்.  கபாலியோ தன் மனைவி தாக்குதலால் விழுந்ததைக் காண்கிறார்.  ஆனாலும் அவளுக்கு என்ன நடந்தது என்பதை நிச்சயமாக அறியாமலேயே சிறை வாசத்தைக் கழித்துவிட்டு வெளியே வருகிறார். 

கதை ரஜனியின் சிறைவாசம் முடிவடைந்து வெளிவரும் நிலையிலேயே ஆரம்பித்து இடையிடையே பிளாஸ்பாக்குகளாக மேற்சொன்ன வகையில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ரஜனியோ தனது கூட்டாளிகளின் உதவியோடு சீர்திருத்தப் பள்ளியொன்றை நடத்திக் கொண்டிருக்கிறார்.  அவர் சிறை மீண்டு வந்து தான் நடத்தும் சீர்திருத்தப்பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும்போதே மேற்சொல்லப்பட்ட கதையும் பிளாஸ்பாக்காகச் சொல்லப்படுகிறது.

நாசரின் பேரன் (இறந்த மகனின் மகன்) தன் தந்தையின் மரணத்துக்குக் காரணமான ரஜனியைப்  பழிவாங்கத் துடிக்கிறார்.  ஆனால் ரஜனியின் நேர்மையான போக்கையறிந்து அவருக்கு ஆதரவாளராக மாறுகிறார்.

ரஜனி வெளிவந்து விட்டார் என்று அறிந்ததும் போதைப்பொருள் கடத்தும் 43 கும்பல் அவரைக் கொலை செய்யத் திட்டமிடுகிறது.    அந்தத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு   மூன்றாந் தரப்பிலிருந்த அடியாட் கும்பலொன்றின் தலைவியான ஒரு பெண்ணிடம் கொடுக்கப்படுகிறது.  ஆனால் அந்தப் பெண்ணோ ரஜனியின் மகள்.  அவள் தன் தகப்பனை அடையாளம் கண்டு அவரைப் பாதுகாப்பதோடு 43 கும்பலுக்கெதிராக ரஜனியோடு செயற்படத் தொடங்குகிறாள். 

இருவரும் சேர்ந்து தாய்க்கு என்ன நடந்தது என்பதை ஆராய்கிறார்கள்.  நிகழ்ந்த அந்தக் கலவரத்தில் பங்குபற்றி, ரஜனியின் மகளைக் காப்பாற்றி பின்னர் பாரிச வாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம்  ரஜனியின் மனைவி தமிழ்நாட்டில் இருப்பதாக அறிந்து தந்தையும் மகளும் சென்னை சென்று பின்னர் பாண்டிச்சேரியில் பிரெஞ்சுப் பிரஜையொருவரின் வீட்டில் தாயைக் கண்டு பிடிக்கிறார்கள்.   அங்கும் அவர்கள் மூவருக்கும் ஆபத்துத் தொடர்கிறது.  மீண்டும் மலேசியா வந்து 43 கும்பலைக் கூண்டோடு பிடிக்க பொலீஸாருக்கு உதவி செய்கிறார்கள்.  வயது முதிர்ந்து விட்ட கபாலியின் கடமைகள் வேறு ஒரு இளைஞனிடம் கையளிக்கப்படுகிறது.  

அவன் தலை மூடிய ஜாக்கட்டுடன் நடந்து செல்வதோடு படம் முடிகிறது.   அந்த இளைஞன் கபாலியையும் முடித்துக் கட்டப் போகிறானா அல்லது கபாலியின் கடமைகளைத் தொடரப் போகிறானா என்ற விடை தெரியாமலேயே படம் முடிவடைகிறது.

படத்தின் காட்சிகள் போதிய தணிக்கை செய்யப்படாமல் காட்டப்பட்டதால், படம் குழந்தைகள் சிறுவர்களுக்கு ஏற்றதாக இருக்கவில்லை.   ஒரே அடி, உதை, துப்பாக்கிச் சூடு போன்றவற்றோடு, வன்முறை மிகுந்த இரத்தம் சிதறும், அங்கங்கள் துண்டாடப்படும் காட்சிகளும் இருந்ததால் தணிக்கை அவசியமென்றே கருதப்பட்டது.

தமிழர்களுக் கெதிராக மலேசியாவில் இருக்கக்கூடிய இனப் பிரச்சனைகளையும் படத்தின் வசனங்களில் சேர்த்து உணர்ச்சியூட்ட முனைந்திருக்கிறார்கள்.  ‘நான் ஆண்ட பரம்ரையில்லடா ஆளப்பிறந்தவண்டா‘ என்பனபோன்ற வசனங்கள், தமிழ்த் தேசிய வாதிகளை இடித்துரைக்கும் பாணியில் ரஜனியால் உரைக்கப்படுவதையும் காணக்கூடியதாயிருந்தது.

ஒரு சில இடங்களில் ஆங்கிலப் பாணியைப் பின்பற்றி  ஆங்கிலத்தில் பொதுவாக வழங்கப்படும் கெட்ட வார்த்தை மலேசிய சீனர் ஒருவரால் பாவிக்கப்பட்டுள்ளதை தற்கால உலக நாகரீகத்தின் போக்கைக் கருதி ஏற்றுக்கொள்ளலாம்.

ரஜனி போன்ற கெளரவத்துக்குரிய பெரிய மனிதர்கள் சிறு பிள்ளைகள் அஞ்சி நடுங்கும் விதத்தில் அமைக்கப்பட்ட வன்முறை மிகுந்த காட்சிகளை தங்களது படங்களில் மிகையாகப் போடுவது சரியல்ல.   ஆங்கிலமுட்பட வேறுமொழிப் படங்களில் அவற்றின் வன்முறை சார்ந்த காட்சிகளைச் சிறுவர்கள் பார்க்க முடியாத விதத்தில் தணிக்கை செய்வார்கள் அல்லது அதற்கேற்ப படங்களை பெரியவர் சிறுவர்களுக்கென்று தரம் பிரிப்பார்கள்.  தமிழ்ப் படங்களில்  தணிக்கைக்குழு செக்ஸ் காட்சிகளையே முக்கியமாகக் கத்தரிப்பது வழக்கம்.   நல்ல  வேளையாக கபாலியில் செக்ஸ் அருவருக்கத் தக்க விதத்தில் இல்லை.  

மொத்தத்தில் ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றமில்லாவிட்டாலும் சுமாரான ஏமாற்றத்தைக் கபாலி படம் ஏற்படுத்தத்தான் போகிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டு

  • தொடங்கியவர்

திரை விமர்சனம்: கபாலி

 
 
kabali_2944611f.jpg
 

மலேசியாவில் தோட்டத் தொழிலாளர் களாக இருக்கும் தமிழர்களுக்காகப் போராடும் கபாலீஸ்வரன் (ரஜினி), ஒரு கட்டத்தில் மக்களுக்காக கேங்ஸ்டர் ஆகிறார். கொடூரமான மாபியா சம்ராஜ்யம் நடத்தும் டோனி லீ (வின்ஸ்டன் சாவோ) என்கிற சீனன், கபாலியைத் தீர்த்துக்கட்டப் பொறி வைக்கிறான். அந்த மோதலால் கபாலி சிறைக்குப் போக, நிறைமாத கர்ப்பிணியான அவர் மனைவி (ராதிகா ஆப்தே) என்ன ஆனார் என்பது தெரியவில்லை.

25 வருடங்களுக்குப் பின் விடுதலை ஆகும் கபாலி தன் எதிரிகள் மேலும் வளர்ந்து மாபெரும் சமூக விரோத சக்திகளாக இருப்பதைப் பார்க்கிறார். அவர்களை ஒடுக்குவதற்காகக் களம் இறங்குகிறார். இதற்கிடையில் தனது மனைவி உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்னும் தேடலும் தொடர் கிறது. இந்தச் சவாலில் கபாலி எப்படி வெல்கிறார் என்பதுதான் கதை.

ரஜினி சிறையில் இருந்து விடுதலை யாகும் காட்சியும், முதுமையான தோற்றத்திலும் முறுக்குக் குறையாமல் டோனியின் கையாள் ஒருவனை துவம்சம் செய்யும் வேகமும் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. சீர்திருத்தப் பள்ளியின் மாணவர்களைச் சந்திக்கும் காட்சியும், மனைவி குறித்த நினைவுகளின் அலைக்கழிப்பும் ஆழமான ஒரு பயணத்துக்குக் கட்டியம் கூறுகின்றன. இந்த இரட்டைப் பாதையில் கவனமாகப் பயணித்திருந்தால் படம் மாறுபட்ட சுவையுடன் இருந்திருக்கும். இரண்டிலுமே வலுவான, சுவாரஸ்யமான காட்சிகள் அமையாததால் படத்தின் மீதான ஈர்ப்பு குறைகிறது.

ரஜினி ‘டான்’ ஆன பின்னணி சரியாகச் சொல்லப்படவில்லை. ‘டான்’ களை அவர் ஒடுக்கும் பகுதிகளும் நம்பகத்தன்மையோடு வெளிப்படவில்லை. மனைவியைத் தேடிச் செல்லும் காட்சிகள் மட்டுமே ஓரளவு வலிமையோடு உள்ளன. சீர்திருத்தப் பள்ளி முதலான அம்சங்கள் திரைக்கதையுடன் ஒட்டவே இல்லை. கதையோட்டமும் நிதானமாகவே இருக் கிறது. சண்டைக் காட்சிகளில் போதிய தாக்கம் இல்லை. ரித்விகாவின் சோகம், சென்னையில் ரஜினிக்கு உதவும் நண்பர்கள், கலையரசனின் சஞ்சலம் எனப் பல விஷயங்கள் இருந்தும் எது வுமே தாக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு வலுவாகத் திரைக்கதையில் இடம் பெறவில்லை.

தனது கதாபாத்திரங்களின் வாழ்விடத் தையும் வாழ்வியலையும் துல்லிய மாகச் சித்தரிப்பதில் தேர்ந்தவரான இரஞ்சித், இந்தப் படத்தில் சறுக்கியிருக் கிறார். பிரச்சினையின் பின்புலம் தெளி வாக இல்லாததால், முதன்மைக் கதாபாத்திரத்துடன் ஒன்ற முடியாமல் போகிறது.

பல காட்சிகளில் வசனங்கள் கூர்மையுடன் இருக்கின்றன. பகட்டான ஆடைகளை அணிந்துகொள்வதற்காகக் கூறப்படும் காரணம் முதலான சில இடங்களில் இயக்குநரின் அரசியல் வெளிப்படுகிறது.

நட்சத்திரத் தேர்வில் வில்லன்கள் வின்ஸ்டன் சாவோ, கிஷோர் ஆகியோர் எடுபடவில்லை. அவர்களது பாத்திர வார்ப்பு பலவீனமாக இருப்பதுதான் இதற்குக் காரணம். தனது ‘மெட்ராஸ்’ படத்தில் தான் இயக்கி பழகிய முக்கால்வாசி நடிகர்களையே ‘கபாலி’யிலும் இரஞ்சித் பயன்படுத்திய காரணம் என்னவோ?!

வெள்ளை தாடி, கோட்-சூட்டில் ரஜினியின் பளீர் தோற்றம் கவர்கிறது. சின்னச் சின்ன அசைவுகளைக்கூடத் தன் அலாதியான ஸ்டைலுடன் அழகுபடுத்து கிறார். தனது மன வெளியில் சஞ்சரிக்கும் மனைவியைக் காணும்போது வெளிப்படும் சோகமும், மனைவியைச் சந்திக்கும் தருணத்தில் அவர் வெளிப்படுத்தும் தவிப்பும் நடிகர் ரஜினியை அடையாளம் காட்டுபவை.

ராதிகே ஆப்தே, தன்ஷிகா, ரித்விகா ஆகிய மூவரில் ராதிகா ஆப்தேவுக்கு மட்டும் நடிப்புக்கான களம் அமைந்துவிடுகிறது. அதில் அவர் தனது திறமையை அழகுறக் காட்டிச் செல்கிறார். தன்ஷிகா துப்பாக்கி பிடித்துச் சுடுவதற்கு மட்டும்தான் பயன்பட்டிருக்கிறார். ரித்விகாவின் கதா பாத்திரமும் எடுபடவில்லை. கலையரசன், தினேஷ் கதையும் அதேதான். ஜான் விஜய் ஓரளவு மனதில் பதிகிறார். ஒருசில காட்சிகளில் வந்துபோனாலும் மைம் கோபி கவனிக்கவைக்கிறார்.

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை குடும்பப் பின்னணி கொண்ட கேங்ஸ்டர் கதைக்குத் தேவையான பங்கைச் சரியாக அளித்திருக்கிறது. ‘நெருப்புடா’ பாடல் சரிவரப் பயன்படுத்தப்படவில்லை. இந்தக் குறையை ‘மாயநதி’ பாடல் போக்கி விடுகிறது.

ஜி. முரளியின் கேமரா நவீன மலேசியா வின் ஒளிரும் வீதிகளையும், விடுதி களையும் பளிச்சென்று படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. எடிட்டர் பிரவீன் கே.எல்., துருத்தித் தெரியும் பல உபரிக் காட்சிகளில் கத்தரி வைத்திருக்கலாம்.

விளையாட்டுத்தனம், வெள்ளந்தியான இயல்பு, வேகம், உக்கிரம் ஆகிய அடையாளங்கள் கொண்ட ரஜினியின் திரை பிம்பத்தை நிதானம், பக்குவம், ஆழம் என்பதாக மாற்றிய வகையில் இரஞ்சித் தனது படைப்பாளுமையை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார்.

ஆனால், கதை, திரைக்கதை, காட்சி அமைப்பு, பாத்திர வார்ப்புகள் ஆகிய விஷயங்களில் ஒரு இயக்குநராக அவர் வெற்றி அடைந்ததாகச் சொல்ல முடியாது. விளைவு, படம் ரஜினி படமாகவும் இல்லாமல் இரஞ்சித் படமாகவும் இல்லாமல் நடுவாந்தரத்தில் தொங்குகிறது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-கபாலி/article8893691.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.