Jump to content

ஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்பும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் -சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. இந் நிகழ்வு இவ் வருடம்  02.08.2015 செவ்வாய்கிழமை அமைவதாக வாக்கிய பஞ்சாங்கம் கணித்துள்ளது.

நம்மை நிம்மதியாக வாழ வைக்கும் பித்ரு தர்ப்பணம்
ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம்என்று பெயர்.

இறை விருப்பப்படி மானிடருக்கு ஆசி கூறி இல்லறத்தை நல்லறமாக்கி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் அதிகாரம் படைத்தவர்கள் தேவர்களும், பித்ருக்களுமே!  அமாவாசை தினம் பிதிர் கடன் செய்வதால் மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிடைக்கின்றது என்பது ஐதீகம்.

நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று(ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும்செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.

ஒருவேளை முன்னோர்களின் இறந்தத் திதி தெரியாதவர்கள், ஆடி அமாவாசை அல்லது தை அமாவாசையன்று இராமேஸ்வரம் அல்லது சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்று. அதுவும் முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையளையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும்.

சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது.

திருவாதிரை, புனர்பூசம்,பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதுர்தர்ப்பணம் பன்னிரெண்டு ஆண்டுகள் பிதுர்திருப்தி ஏற்படுத்தும்.

அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பித்ருபூஜையானது, பித்ருக்களுக்கு தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும்.

மாசி மாதத்து அமாவாசையானது சதய நட்சத்திரத்தன்று வருமானால், அது பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்ககூடிய காலமாகும்.

மாசி மாத அமாவாசை அவிட்டம் நட்சத்திரத்தில் வருமானால், அதுவும் பித்ருக்களுக்கு அளவற்ற மனமகிழ்ச்சியைத்தரும். அன்று நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால்!!!

மாசி மாதம் அமாவாசை அவிட்டம் நட்சத்திரம் வரும் நாளில் பித்ருக்களை நினைத்து அன்னம் அல்லது தண்ணீர் தானம் செய்தால் பதினாயிரம் ஆண்டுகள் பிதுர்களைத் திருப்தி செய்த பலன் கிடைக்கும்.

மாசி மாதம் வரும் அமாவாசை பூரட்டாதி நட்சத்திரத்தில் வந்து, அப்போது அந்த நன்னாளில் சிரார்த்தம் செய்தால், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என விஷ்ணுபுராணம் கூறுகிறது.

திதிகள் தோன்றுவதற்கான காரணம்:

வானவியல் கணிப்பின் படி பூமியை சந்திரன் வலம்-சுற்றி வருவதும் பூமியும் சந்திரனும் இணைந்து சூரியனை வலமாக சுற்றி வருவதும் நிரூபிக்கப்பெற்ற உண்மைகள். பூமி தன்னைதானே சுற்றுவதால் பூமியில் இரவு, பகல் ஏற்படுகின்றன. அத்துடன் தன்னைத் தானே சுற்றும் பூமி, சூரியனையும் சுற்றி வருவதானது நாமும் உறுண்டு கொண்டு ஆலயத்தைச் சுற்றி அங்கப் பிரதிஷ்டை செய்வது போன்ற நிகழ்வாகும். சந்திரன் பூமியை வலம் வருவதோடு பூமியுடன் இணைந்து சூரியனையும் சுற்றி வருவருகின்றமையால் பூமியில் திதிகள் தோன்றுகின்றன. பூமி தனது அச்சில் 231/2 பாகை சரிவாகச் சுற்றுவதனால் பருவகாலங்கள் உண்டாகின்றன.

சில இரவுகளில் பூமியில் உள்ளோருக்கு சந்திரனைக் காண முடிவதில்லை. காரணம் சந்திரன் பூமியைச் சுற்றுவதால், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் 29.53 நாட்களுக்கு ஒரு முறை ஒரே நேர்கோட்டில் வருகின்றது. அப்போது பூமியில் உள்ளோருக்கு சந்திரன் தெரிவதில்லை. வேறு விதமாக கூறுவதாயின் சந்திரன் தானாக ஒளிர்வதில்லை சூரியனின் ஒளியைப் பெற்று பிரதிபலிப்பதனால் ஒளிர்வது போல் தோற்றமளிக்கின்றது. அதனால் பூமிப்பக்கம் இருக்கும் சந்திரனின் ஒருபக்கம் (சூரியனின் பக்கத்திற்கு மறு பக்கம்) சூரிய ஒளி படாது இருட்டாக இருப்பதனால் எம்மால் சந்திரனைப் பார்க்க முடிவதில்லை. ஆனால் சூரியனின் பக்கம் இருந்து பார்ப்போருக்கு பிரகாசமாக தெரியும். அன்றைய தினமே அமாவாசை திதி என அழைக்கப்பெறுகின்றது.

ஆனால் சில இரவுகளில் சந்திரனின் முழுத் தோற்றத்தையும் பூமியில் உள்ளோரால் பார்க்க முடிகிறது. காரணம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சஞ்சரித்த சந்திரன் சுமார் 15 நாட்களில் பூமியின் மறுபக்கத்திற்கு சென்று விடுகின்றது, அதாவது; சந்திரன், பூமிக்கு ஒருபக்கத்திலும், சூரியன் மறுபக்கத்திலுமாக, மூன்றும் ஒரே நேர் கோட்டில் வருகின்றது. இப்போது பூமியை நோக்கி இருக்கும் சந்திரனின் பகுதியில் சூரியக் கதிர்கள் பட்டு ஒளிர்கின்றது. அதனால் சந்திரன் பூமியில் உள்ளோருக்கு பிரகாசமாகத் தோற்றமளிக்கின்றது. இந் நாளை பூரணை அல்லது பௌர்ணமி திதி என்று அழைக்கப்பெறுகின்றது.

சூரியனும் சந்திரனும்
சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். சூரியனைப் “பிதிர் காரகன்” என்றும், சந்திரனை “மாதுர் காரகன்” என்றும் சோதிடம் கூறுகின்றது. அதனால் சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாவாக வழிபடும் தெய்வங்களாக இந்துக்கள் கருதுகின்றனர்.

இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபடிகின்றனர்.

அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்களும், பூரணை தினத்தில் அன்னையை இழந்தவர்களும் வழிபடுவது புராதன காலம் தொட்டு பின்பற்றிவரும் ஒரு வழக்கமாகும்.

அமாவாசைத் திதி, மாதா மாதம் நிகழ்ந்தாலும் அவற்றுள் தைமாதத்திலும், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதிக்கு அதிக சிறப்பு உண்டு.

இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைப்பர். தட்சணா கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

அதேபோல், சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் தொடக்க மாதமாக தை மாதம் அமைவதால், அந்த மாதத்தில் வரும் அமாவாசைத் திதியும் பிதுர் வழிபாட்டிற்கு சிறப்பானது எனக் கொள்ளப்படுகிறது.

ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாக இருப்பதனால், அன்றைய தினம் தந்தையை இழந்தவர்கள் விரதம் அனுஷ்டிக்கின்றனர்.

இந்துக்களின் நம்பிக்கை
பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து தோஷ நிவர்த்தி பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது.

அமாவாசை, பெளர்ணமி ஆகிய இரண்டு விரதங்களும் முறையே காலமான தந்தை, தாய் ஆகியோரைக் குறித்து அவர்களின் (சந்ததியினரால்) பிள்ளைகளால் அனுட்டிக்கப்படும் விரதங்கள் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் இந்த விரதங்களுக்குரிய தினங்கள் வருகின்றன. இவ்விரதங்களை அனுஷ்டிப்பவர்கள் ஆசார சீலர்களாக உபவாசம் இருந்தும் அவ்வாறு இருக்க இயலாதவர் ஒரு பொழுது உண்டும் அனுஷ்டிப்பர்.

இத்தினத்தில் புண்ணியத் தீர்த்தங்களில் நீராடித் தூய்மையாராய் பிதிர், தருப்பணம் செய்தும் பிண்டதானம், சிரார்த்தம் செய்தும் இறைவனை வழிபட்டும் அந்தணர்களுக்குத் தானமும், விருந்தினர், சுற்றந்தார், ஏழைகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவும் அளித்தும் அவர்களுடன் போசனம் செய்து விரதக் கொள்கையுடன் இருப்பர்.

இறந்த தந்தை, தாயார் நற்கதி அடைதற் பொருட்டும், பிதிகளாக எம்மைச் சுற்றும் அவர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசி பெறவும் அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பிள்ளைகள் விரதங்களை அனுஷ்டிக்கிறார்கள். பிதிர்கள் மகிழ்வுற்றால் அம்மனை சிறக்கும் என்பது ஐதீகம். யாழ்ப்பாணத்தில் சிறப்பான நாட்கள் (கனத்த நாட்கள்) என அழைக்கப்படும் விளக்கீடு, தீபாவளி போன்ற தினங்களில் “வீட்டுக்குப் படைத்தல்” என்னும் நிகழ்வு வழக்கத்தில் உள்ளது. அண்மையி யாரவது அந்த வீட்டில் இறந்திருந்தால் தவறாது வீட்டுக்குப் படைத்து பிதிர்களை மகிழ்விப்பர்.

சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமியும், ஆடி, தை மாதங்களில் வருகின்ற அமாவாசையும் சிறப்புப் பொருந்தியன என்று சைவ நுல்கள் கூறுகின்றன.

அவரவர் தந்தை, தாயார் இறந்த திதிகளைத் தவற விட்டவர்கள் ஆடி அமாவாசை தினத்தில் தந்தையை நோக்கியும், சித்திரைப் பெளர்ணமி தினத்தில் தாயின் பொருட்டும் சிராத்தம், தருப்பணம், பிண்டதானம் என்பவற்றைச் செய்வர்.

யாழ்ப்பாணம் பகுதியில் வாழும் மக்கள் புரதான காலம் தொடக்கம் கீரிமலை நகுலேஸ்வரத்திலும் (கீரிமலைக் கேணி, கடல்), திருவடிநிலை தீர்த்தக் கரையில் தீர்த்தமாடியும் தம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தும்;

மன்னார் பகுதியில் வாழும் மக்கள் பாலாவியில் தீர்த்தமாடியும் தம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து  பிதிர் கடன் செலுத்தியும்;

மட்டக்களப்பு பகுதியில் வாழும் மக்கள் மாமாங்கப் பிள்ளையார் கோவில் அமிர்தகழியில் தீர்த்தமாடியும் தம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து  பிதிர் கடன் செலுத்தியும்;

திருகோணமலை பகுதியில் வாழும் மக்கள் கோணேஸ்வரர் ஆலய தீர்த்தக் கரையில் தீர்த்தமாடியும் தம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து  பிதிர் கடன் செலுத்தியும்;

கொழும்பு வாழ் மக்கள் மோதர-முகத்துவாரம்-கடலில் தீர்த்தமாடியும் தம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து  பிதிர் கடன் செலுத்தியும்;

கனடா-ரொறொன்ரோ வாழ் மக்கள் றிச்மன் -கில்ஸ் இந்து ஆலயத்ததில் அமைந்துள்ள தீர்த்த வாவியில் விஷேடமாக ஒழுங்கு செய்யப்பெற்றுள்ள புரோகிதர் மூலம் தங்கள் பிதிர் கடன்களைச்செலுதி வருகின்றனர்.

மற்றைய இடங்களில் இருப்போர் தமக்கு அண்மையில் இருக்கும் கடற்கரை, ஆறு, குளம் போறவற்றில் நீராடி தமது பிதிர் கடன்களை செலுத்துகின்றனர்

இரு வேறு சக்திகளான சூரியன், சந்திரன் ஒன்றாக இணையக் கூடிய நாளே அமாவாசையாக கொள்ளப்படுகிறது. எல்லா திதியிலும், ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் (வலுவிழப்பது) அடையும். ஆனால் அமாவாசை தினத்தன்று எந்தக் கிரகமும் திதி தோஷம் பெறுவதில்லை.

இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விடயங்கள் மேற்கொள்ளப்பட்டால் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைய முடியும். மருந்து உண்ணுதல், நோயாளிகள் குளித்தல் உள்ளிட்ட பல விடயங்களை அமாவாசை திதியன்று துவங்கலாம் என சித்த நூல்கள் கூறுகின்றன.

எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ராகு-கேது பரிகாரம், சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த மாதிரியானவற்றிற்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.

சங்க காலத்திலும் இதுபோன்ற விடயங்களும் நடைமுறையில் இருந்துள்ளது. முன்னோருக்கு திதி செய்வது, தர்ப்பணம், ஆற்றில் புனித நீராடுவது போன்றவை அமாவாசை தினத்தில் மேற்கொள்ளப்பட்டதை சங்க கால நூல்களும் உறுதி செய்துள்ளன.

மனிதப் பிறவி மகத்தான பிறவி. மனிதனாகப் பிறந்தால் தான், இறைவனை எளிதில் அடைய முடியும். வேறு எந்தப் பிறவிக்கும், இந்த சிறப்பு கிடையாது. வானுலகில் தேவராக இருந்தாலும் கூட, இறைவனைத் தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய, அவரோடு இரண்டறக் கலக்க முடியாது.

ஆக, இத்தகைய அரிய மானிடப்பிறவியைத் தந்த நம் முன்னோருக்கு, நன்றி தெரிவிக்க வாரிசுகள் நடத்தும் ஒரு விழாவாக அமாவாசை, பௌர்ணமியை எடுத்துக் கொள்ளலாம். சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் துவக்கமான தை மாதம், மிகவும் புனிதமானது. அந்த மாதத்தில் வரும் அமாவாசையில், கடற்கரை தலங்களுக்குச் சென்று, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வரலாம். 

http://sangunatham.com/?p=3252

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகிர்வுக்கு நன்றி தமிழரசு ....! 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.