Jump to content

ஒரே நாளில் ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, குருப்பெயர்ச்சி... எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் நாம்?


Recommended Posts

பதியப்பட்டது

ஒரே நாளில் ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, குருப்பெயர்ச்சி... எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் நாம்?

AA_1.jpg

ஆடி மாதத்தின் சிறப்பு:

ஆடி மாதம் என்றாலே அது பெண்களுக்கான பிரத்யேக மாதம். சைவ சமயத்தில் அம்பாள் சிவனை நோக்கி தவம் செய்து, ஆசி பெற்றதும் இம்மாதத்தில்தான்; வைணவ சமயத்தில் ஆண்டாள் அவதாரம் நிகழ்ந்ததும் இம்மாதம்தான். இத்தகைய பெருமைமிகு ஆடிமாதத்தில் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருப்பெயர்ச்சி ஆகிய மூன்று நிகழ்வுகளும் ஒரே நாளில் அமைவது, அபூர்வமாக நிகழும் நிகழ்வு.

ஆனால், மூன்று நிகழ்வுகளும் ஒரே நாளில் வந்தாலும் ஆடி அமாவாசைக்கு மிகவும் முக்கியத்துவம் தரவேண்டும், என்று ஞானநூல்கள் கூறுகின்றன. பொதுவாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாளில் நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும், என்பது சாஸ்திரம். அதிலும் ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தினங்களாகும். ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி, ஆடி அமாவாசையுடன் ஆடிப்பெருக்கு, குருப்பெயர்ச்சி சேர்ந்து வந்தாலும், நம்முடைய முன்னோர்களை வழிபடவேண்டிய ஆடி அமாவாசைக்குத்தான் நாம் மிகவும் முக்கியத்துவம் தரவேண்டும்.

ஆடிப்பெருக்கில் ஆடிஅமாவாசை

அமாவாசை என்றால் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் சந்திக்கும் நாள். சூரியனை தந்தை வழி முன்னோராகவும், சந்திரனை தாய் வழி முன்னோராகவும் நினைத்து அவர்களது ஆன்மாவிற்கு மரியாதை செய்யும் விதமாக 'அமாவாசை' அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் தந்து வழிபடுவர். தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கமான ஆடிமாதத்தில் வரும் அமாவாசை முன்னோர்களை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளாகும். எனவே அன்று நாம் முன்னோர் ஆராதனைக்குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும். அன்றைய தினம் பித்ரு தர்ப்பணம்.

ஆடி அமாவாசை வழிபாடுகள்

'ஆடி அமாவாசை' அன்று கோயில் குளம், நதிக்கரை, கடல் போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று நீராடி, நம் முன்னோர்களுக்கு எள்ளும், நீரும் விட்டு தர்ப்பணம் கொடுக்கவேண்டும். பின்னர் வீட்டில் முன்னோர் படங்களுக்கு மலர்ச்சரம் அணிவித்து, அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளுடன், பூசணிக்காய், வாழைக்காய் போன்ற காய்கறிகளையும் சமைத்து படைக்க வேண்டும். பின்னர் காகங்களுக்கும், அதிதிகளுக்கும் உணவளித்து அதன் பிறகே நாம் உண்ணவேண்டும். இப்படிச் செய்தால், முன்னோர்களுடைய ஆசிகள் நமக்குப் பூரணமாகக் கிடைக்கும்.

ஆடிப்பெருக்கு (ஆடி -18)

பயிர் செழிக்க வளம் அருளும் நீருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆற்றங்கரைகளிலும், நதிக்கரைகளிலும் ஆடிப் பெருக்கை மக்கள் கொண்டாடுகிறார்கள்.

ஆடி மாதம், 18-ம் நாளை கணக்கில் கொண்டு கொண்டாடப்படும் விழா ஆடிப்பெருக்கு. ஆடி மாதம் காவிரியைச் சுற்றியுள்ள, 18 படித்துறைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் என்பதால், இந்த 18ஐ கணக்கில் கொண்டு ஆடி 18ம் நாளை ஆடிப்பெருக்காக கொண்டாடுகிறார்கள்.

முக்கியமாக, காவிரி நதிக்கரையோரங்களில் உள்ள ஊர்களில், இவ்விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மேட்டூர் அணை, பவானி கூடுதுறை, ஈரோடு, பரமத்தி வேலூர், குளித்தலை, திருச்சி, தஞ்சை, புகார் ஆகிய இடங்கள் ஆடிப் பெருக்கு விழாவிற்கு மிகவும் சிறப்புமிக்க இடங்கள் ஆகும். மேலும் ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபம் படித்துறையில் இவ்விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அது தவிர, நெல்லை, மதுரை, கோவை, தேனி மாவட்டத்திலும் பரவலாக கொண்டாடப்படுகிறது.

AA_2.jpgஎதற்காக இந்த ஆடிப்பெருக்கு?

ஆடி மாதம், தென்மேற்கு பருவ மழையின் தொடக்க காலமாகும். சித்திரை மாத வெயிலின் தாக்கம் ஆடி மாதத்தில் முடிவுற்று, நன்றாக மழை பொழியத் தொடங்கும். நீர் நிலைகளுக்கான அடிப்படை ஆதாரம் மழை. அத்தகைய மழையை வரவேற்று வணங்கி உபசரித்து கொண்டாடுவதே, ஆடி மாதத்தின் சிறப்பாகும். அப்படி, ஆடி மாதத்தின் தொடக்கத்தில் ஆற்றில் பொங்கி வரும் மழை நீரினை ஊற்றாய் கொண்டு விவசாயிகள் நாற்று நடத்தொடங்குவர்.

இந்த விதைநெல்களே விளைந்து தை மாதம் அறுவடைக்குத் தயாராகிறது. பொங்கல் எப்படி உழவர்கள் நன்றி சொல்லும் நாளோ, அதே போல் ஆடிப்பெருக்கு நதியை வணங்கி உழவை ஆரம்பிக்கும் திருநாள் என்கின்றனர் பெரியோர்கள்.

அதுமட்டுமின்றி, மழை பெய்து நதிகள் அனைத்தும் பெருக்கெடுத்து ஓடுவதை மகிழ்ச்சியுடன் கண்டுகளித்து கொண்டாடும் திருநாளே 'ஆடிப் பெருக்கு' என்கின்றனர் ஒரு சாரார்.

தஞ்சையில் பாயும் காவிரியின் துணை ஆறுகளான வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி ஆகியவற்றின் கரைகளில் இவ்விழா மிகவும் பிரபலம். இந்த நாளில், ஆற்றில் நீராடி அங்கு இருக்கும் நதியை தெய்வமாய் நினைத்து வழிபடுவார்கள்.

ஆடி 18 ம் பெருக்கு வழிபாடுகள்

ஒரு செம்பில் அரைத்த மஞ்சளைப் போட்டு அதனை அந்த ஆற்று நீரில் கரைத்துக் கொள்வர். பின்னர், வீட்டின் பூஜை அறையிலோ, ஆற்றங்கரையிலேயோ விளக்கு ஏற்றி அதன் முன் கலந்து வைத்த மஞ்சள் நீரை வைத்து, அதற்கு தீபாராதனை செய்து வழிபடுவர். பூஜையை முடித்து விட்டு அந்த நீரினை தங்களது விதை நிலங்களில் விடுவர். இந்த வழிபாட்டின் போது காப்பு அரிசி-கைக்குத்தல் அரிசியில் சமைத்த கலப்பு சாதங்களான தேங்காய் சாதம், சர்க்கரை பொங்கல், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் எனப் பல சித்ரான்னங்களை, காவிரி அன்னைக்குப் படைத்து பிறகு அந்த உணவு வகைகளை குடும்பத்தோடும், சுற்றத்தோடும் பகிர்ந்து உண்பார்கள்.

வற்றாமல் விவசாயத்திற்கு நீர் தரும் காவிரித் தாய்க்கு காணிக்கை தரும் பொருட்டு ஆற்றங்கரைகளில் நடக்கும் பூஜைக்கு பின்னர், அனைவரும் ஆற்று நீரில் தலையில் சில்லறை காசினை வைத்து மூழ்கி எழுவர்.

இந்த நாளில், ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் ஆலயத்தில் இருத்து புடைவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பழங்கள் முதலியவற்றை வைத்து ஆராதனை செய்வர். பின்னர், அவை அனைத்தும், ரங்கநாதரின் தங்கையாக கருதப்படும் காவிரி அன்னைக்கு சீர்வரிசையாக அனுப்பப்படும்.

இந்த ஆடி 18-ல், ஆற்றங்கரைகளில் பூஜையில் வைத்த மஞ்சள் சரடு கொண்டு திருமணமான பெண்கள் திருமாங்கல்யத்தை மாற்றிக் கொள்ளும் சடங்கினை நடத்திக்கொள்கின்றனர். பழைய மாங்கல்யத்தை, எடுத்து விட்டு புது மாங்கல்யத்தை அணிந்து கொண்டு கணவனுக்காக வழிபடுவார்கள். திருமணம் ஆகாதவர்கள், அம்மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டி கொண்டு நல்ல வரன் கிடைக்க வழிபடுவர். உழவர்களை பொறுத்த வரையில், ஆடி மாதத்தில், விவசாயம் செய்வதற்கு ஏதுவாக ஆற்று நீர் பொங்கி வருவதால் இந்நாளை மிக விமரிசையாக படையலிட்டு வழிபடுவர்.

ஆடிப்பெருக்கில் குருப்பெயர்ச்சி:

AA_3.jpg

ஆடி அமாவாசையும் ஆடிப்பெருக்கும் வரும் அதேநாளில் தான் குருப்பெயர்ச்சியும் வருகிறது. குரு ஒருவரின் ராசிக்கு நல்ல இடத்தில் வரும்போது நிச்சயம் நல்ல பலனைத் தருவார். அதனால்தான் எல்லோரும் ஆர்வமாக குருப்பெயர்ச்சி பலன்களை எதிர்பார்க்கின்றனர்.
துர்முகி வருடம், ஆடிமாதம் 18-ம் நாள் (2.8.2016) செவ்வாய்க்கிழமை, காலை 9.27 மணிக்கு உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில் கன்னி ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார். நவக்கிரகங்களில், சுப கிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் குருபகவான். அவரது அருள் நமக்கு எப்பொழுதும் தேவை. அதனால்தான் நமது சான்றோர்கள், ‘குருவருள் இருந்தால்தான் நமக்கு திருவருள்’ கிடைக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருப்பெயர்ச்சி ஆகிய மூன்று விசேஷங்களும் ஒரே நாளில் வந்தாலும் எதற்கு மிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயிலின் அர்ச்சகர் சிவராஜபட்டரிடம் கேட்டபோது:

"மூன்று விசேஷங்களும் ஒரே நாளில் வருவது போல் அமைந்திருப்பது மிகவும் அபூர்வமானதே. கிரக நிலைகளின் அமைப்பே இப்படியானதொரு சிறப்பான நாள் அமைவதற்குக் காரணமாகிறது. ஆடிப்பெருக்கு மற்றும் குருப்பெயர்ச்சி ஆகியவை பக்தர்களுக்கு அதீத பலனளிக்கும் மிக முக்கிய நிகழ்வுகளாக இருந்தாலும், அன்றைய தினமே ஆடி அமாவாசையும் வருவதனால், அன்றைய தினத்தில் நாம் முதலாவதாக நம் முன்னோர் வழிபாட்டிற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில், ஆடி அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுக்கும்போது, அதை நம் முன்னோர்களே நேரடியாக வந்து பெற்றுக்கொள்கிறார்கள், என்பது ஐதீகம். தம் சந்ததியினர் படைக்கும் தர்ப்பணத்தை ஏற்றுக்கொள்ளும் விதமாக நேரடியாக வருகை புரியும் நம் முன்னோர்களின் மனம் குளிர வேண்டும். அவர்களின் சாபத்துக்கு நாம் ஆளாகக்கூடாது. எனவே, அன்றைய தினத்தில் பித்ரு வழிபாட்டை முடித்த பிறகே ஆடிப் பெருக்கு, குருப்பெயர்ச்சி போன்ற மற்ற தெய்வ வழிபாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்"- என்றார்.///////

திட நம்பிக்கை:

ஆடிப்பெருக்கு நாளில் மிகவும் அபூர்வமாக வரும் ஆடி அமாவாசை நாளில் நம் முன்னோர்களை முதலில் வழிபடுவோம். அதன்பிறகு ஆடிப்பெருக்கைக் கொண்டாடுவோம். குருப்பெயர்ச்சியும் நடைபெறுவதால், தட்சிணாமூர்த்தியையும், நவகிரகங்களில் குருபகவானையும் அர்ச்சனை செய்து வழிபடுவோம். இதன் மூலம், நமது முன்னோர்களின் ஆசியும், உழவுக்குத் துணையாகும் நீரின் ஆசிர்வாதமும், கூடவே குருபகவானின் அருளும் சேர்த்துப் பெற்று சிறக்க வாழ்த்துவோம்.

http://www.vikatan.com/news/spirituality/66729-aadi-amavasai-aadi-18-guru-peyarchi-on-same-day.art?artfrm=news_most_read

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகிர்வுக்கு நன்றி நவீனன் ....!

அமாவாசைக்கு அப்புறம்தான் பெருக்குதல் பெயருதல் எல்லாம் ....!

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.