Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய சிறைவாசி எண்: 3718 - சிறுகதை

Featured Replies

மத்திய சிறைவாசி எண்: 3718 - சிறுகதை

 

 

p92a.jpg

ன்புள்ள விஜி…

நினைவின் எல்லா திருப்பங்களும் ரணங்களால் நிரம்பியிருக்கச் சபிக்கப்பட்டவர்கள் நாம். ஒவ்வொரு முறை உன்னைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போதும், சிறைச்சாலையின் உயர்ந்த சுவர்களுக்குள்ளாக நீ படும் அவஸ்தைகளை உன் முகம் உணர்த்திவிடுகிறது. அடிக்கடி வந்து பார்க்கச் சொல்கிறாய். எங்கனம் சாத்தியம்? ‘எதுக்கு இந்த மாமாவை அடிக்கடி பார்க்கப்போறம்மா?’ என ஆதிரா கேட்கிறாள். சில கேள்விகளுக்கு மெளனத்தையே பதிலாகச் சொல்வது எத்தனை சிக்கலானது தெரியுமா? என்னை எதிர்நோக்குகிற அநேகரும் என் முதுகுக்குப் பின்னால் சத்தமாகவே இதைக் கேட்கிறார்கள். அதற்கான பதிலையும் தெரிந்துவைத்திருப்பது போல் சிரித்துக்கொள்கிறார்கள். இப்போது எல்லாம் என் பாதைகள் எங்கும் அவமானத்தின் நகைப்புகள் முதுகில் ஏறி தொடர்ந்தபடியேதான் இருக்கின்றன. எதிர்காலம் குறித்து எந்தவிதமான நம்பிக்கையையும் உனக்கு இப்போது தர முடியாதுதான். ஆனாலும் உனக்கே உனக்கான அமுதாவாக, இந்த வாழ்வை வாழும் உறுதியுடன் இருக்கிறேன். அடுத்த மாதத்தில் வந்து பார்க்கிறேன். (உனக்கு தேவையானதை வாங்கிக்கொள். நான் வரும்போது பணம் தருகிறேன்.)

 - அமுதா.

இந்தக் கடிதம் விஜியின் கைகளில் கிடைத்தபோது, அவன் வேலூருக்கு மாற்றப்பட்டு பத்து நாட்கள் ஆகியிருந்தன. பதில் கடிதம் எழுதும் சூழல் அவனுக்கு வாய்க்கவில்லை. தண்டனை நிமித்தமாக, மதுரை சிறையில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்ட நாளில் இருந்து அச்சம் உடலின் ஒவ்வொரு நரம்பினுள்ளும் நுழைந்து அவனைத் தூங்கவிடவில்லை. கடும் தண்டனைகளுக்கான தனிமைச் சிறையில் எட்டு நாட்களுக்கும் மேலாக அடைத்துவைக்கப்பட்டிருந்த விஜிக்கு, பகல் இரவு எல்லாமும் இருளின் பிம்பங்களாகவே தெரிந்தன. வெளிச்சம் கசிந்துவருவதற்காக வைக்கப்பட்ட சின்னஞ்சிறு ஜன்னலை மறைத்தபடி உயர்ந்து வளர்ந்து இருந்தது மரம். அவனுக்கு மட்டுமே கேட்கும்படியான அவனது அழுகைக்கும் கண்ணீருக்கும் ஆறுதலாக ஒருவரும் இல்லாத தனிமை. பிரிவின் அதீதத் துயரமே நமக்கு விருப்பமானவர்களின் குரலையோ ஸ்பரிசத்தையோ உணர முடியாமல் ஏற்படும் தவிப்புதான்.

முதா அவனின் காதலி என்றாலும் அவளுக்குத் திருமணமாகிவிட்டது. சொல்லப்போனால் அவளின் திருமணத்துக்குப் பிறகுதான் அவளை இவனுக்குத் தெரியும். காட்டுமரம் போன்றதொரு தேகம். அபூர்வமாகவே பெண்களுக்குள் இருக்கும் வலு அவளுக்கு. தன்னைவிடவும் மூன்று வயது அதிகம் என்பதால், அவளோடு பேச அதீதக் கூச்சமும் அச்சமும் இருந்தன. தன்னை எதிர்கொண்ட சில நாட்களிலேயே தன் மீது அவனுக்கு இருக்கும் எண்ணத்தை அமுதா புரிந்துகொண்டாலும், அவன் வயது காரணமாக அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. பிறழ்வின் எந்தத் தடயங்களையும் அமுதா அவனுக்குக் காட்டியது இல்லை. விடிகாலையில் மொத்தத் தெரு ஆட்களும் தத்தம் வீட்டுவாசலில் குழாயில் தண்ணீர் அடித்துக்கொண்டிருக்கும்போது, கூட்டத்தை விலக்கி இவன் கண்கள் தெளிவாக அவளை அடையாளம் கண்டுகொள்ளும். தூரத்தில் இருந்து சில நொடிகள் அவளும் கவனித்துத் திரும்புவாள். தன்னை மீறி அவனுக்குள் எழும் உணர்வு எழுச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள ஒரே காரணம் மனோ அண்ணன்தான்.

மனோ அண்ணாவை, தெருவில் எல்லா இளைஞர்களுக்கும் பிடிக்கும். அவர் ராணுவத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் வருடத்தில் பாதி நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு ஊரிலேயே கிடப்பார். அமுதாவைவிடவும் அரை அடி உயரம் குறைவு. எப்போதும் கண்களில் ஒளிரும் விளையாட்டுக் குணம். மனோ அண்ணா விடுமுறைக்கு வருவதும், இந்தப் பயல்களோடு கிரிக்கெட் விளையாடுவதும், மாலை நேரங்களில் மது அருந்துவதும் எந்த மாற்றமும் இல்லாமல்தான் இருந்தன. விஜிக்கு மட்டும் அவரை எதிர்கொள்ளும்போது தாங்கொண்ணாத குற்றவுணர்ச்சி எழும். தன்னை எதிர்கொள்ளத் தயங்கி விலகுகிறவர்களிடம்தான் மனிதர்களுக்கு இயல்பாகவே கவனமும் அக்கறையும் வரும். அவருக்கும் விஜியின் மீது அப்படியாகவே நிகழ்ந்தது.

“ஏன்டா என்னக் கண்டாலே ஓடுற?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லண்ணே. வேலை…”

“பெரிய பொடலங்கா வேலை… நம்ம ஏரியாவுல இருக்கிறதே நூறு வீடு. அதுக்கு ஒரு கேபிள் டி.வி ஆபரேட்டர். இதுல என்ன கேபிள் பிரச்னை வரப்போகுது? இன்னிக்கு மதியம் வீட்டுக்கு வா. உன் அத்தாச்சி நாட்டுக்கோழி அடிச்சிருக்கா!'' என்றதும், அவனுக்குத் தயக்கமாகிவிடும். எப்படி எந்த உணர்ச்சிகளையும் காட்டிக்கொள்ளாமல் இருவரையும் ஒரே இடத்தில் சந்திப்பது? அதன் பிறகு, அவர் விடுமுறை முடிந்து ஊருக்குப் போகும் வரை கண்ணில் படவில்லை. ஊருக்குக் கிளம்பின தினத்தில் பார்க்கவந்த விஜி, அவர் பையை எடுத்துக்கொண்டு அவரோடு ரயில் நிலையம் போனான்.
“டேய், அன்னிக்கு சாப்பிட உன்னை வரச் சொன்னேன்ல… ஏன் வரலை?” - மனோ அண்ணா மறக்காமல் கேட்டார்.
 
விஜிக்கு தொண்டையில் முள் அடைத்துக் கொண்டதைப்போல் ஆகிப்போனாலும் சமாளித்து, “முரளி அண்ணன் இப்ப புதுசா அப்பக்கரையிலயும் கேபிள் நெட்வொர்க் ஆரம்பிச்சிருக்காருண்ணே. கலெக்‌ஷனுக்குப் போயிட்டேன்” - சிரித்தான்.

“இதெல்லாம் ஒரு காரணமாடா? சரி, இதுவே பொழப்புனு இருந்துடாத. ஒழுங்கா ஜிம்முக்குப் போ. அடுத்தவாட்டி வரும்போது எங்கே, யாரைப் பார்க்கணும்னு சொல்றேன். செலெக்‌ஷன் இருக்கும். மிலிட்டரிக்கு வந்துடு.”

விஜி வெறுமனே `சரி' எனத் தலையாட்டிக் கொண்டான்.

இரவு நேர ரயில் நிலையத்தில் அதிகக் கூட்டம் இல்லை. அவர் செல்லவேண்டிய ரயில் வருவதற்கு நிறைய நேரம் இருந்தது. முன்னரே தண்ணீர் பாட்டிலில் ரம்மை நிரப்பி இருவரும் எடுத்துவந்திருந்தனர். கடைசியாக வெளிச்சம் இல்லாமல் தனித்துக் கிடந்த கல் இருக்கையில் அமர்ந்து பேசியபடியே இருவரும் மெதுவாக மது அருந்தினர்.

அவர் தெருவில் இருக்கும் பெண்கள் குறித்து இயல்பாகப் பேசியபடியே “நீ இன்னும் சும்மாத்தான் இருக்கியாடா, ஏரியாவுக்குள்ள ஒண்ணுமா செட் ஆகல?” கேட்டார்.

“ச்சே… ச்சே… அதெல்லாம் இல்லண்ணே. எனக்கு எங்கே அதுக்கெல்லாம் நேரம்?” - முகத்தை வேறு பக்கமாக வைத்துக்கொண்டே சமாளித்தான்.

“சரி... சரி, மொச புடிக்கிற நாய் மூஞ்சியைப் பாத்தா தெரியாது. நான் தப்பா எதுவும் கேக்கலைடா. யாரையாச்சும் லவ் பண்றியா... எப்ப கல்யாணம் பண்ணப்போற?”

விஜிக்கு மனம் ஆறுதல்கொண்டாலும், அது தற்காலிகமானதே என்பதையும் தெரிந்து கொண்டான். தனது மனதை அரிக்கும் ஒன்றை எங்கு உளறிவிடுவோமோ என்ற தயக்கத்தில் மதுவின் வீரியம் போதையாகத் தலைக்கு ஏறும் முன்னர் கிளம்பிவிட நினைத்து, “சரிண்ணே...

நீ பார்த்துப்போயிட்டு வா. நான் வீட்டுக்குப் போறேன்” பெஞ்ச்சில் இருந்து எழுந்துகொண்டான்.

மனோ, அவன் கைகளைப் பிடித்து நிறுத்தினார்.

“ஏன்டா, ஊர்ல இருக்கிறப்போதான் முகம்கொடுத்துப் பேச மாட்டேங்கிற, கிளம்பும்போதாச்சும் பேசவேண்டியதுதானே?”

“இல்லண்ணே, தம்பிக்கு ஒரு சின்ன கொடுக்கல் வாங்கல் பிரச்னை. அது சம்பந்தமா முரளி அண்ணங்கிட்ட பேசியிருந்தேன். இப்போ போனாத்தான் சரியா இருக்கும்.”

மனோ, அவன் கைகளை விட்டுவிட்டு என்ன ஏதென்று கேட்காமல், பைக்குள் கைவிட்டு கொஞ்சம் பணம் எடுத்து அவனிடம் கொடுத்தார். “இதை வெச்சுக்கடா… ஏதாச்சும் வேணும்னா அமுதாகிட்ட கேளு. நான் அவகிட்ட கூப்பிட்டுச் சொல்லிடுறேன். அப்புறம் வீட்ல வாட்டர் டேங்க் க்ளீன் பண்ணணும்னு சொல்லிட்டிருந்தா. யாராச்சும் ஆள் இருந்தா வரச்சொல்லு.”

“சரிண்ணே…”

விஜிக்கு அவரைத் திரும்பிப் பார்க்கவே கூச்சமாக இருக்க, அவசரமாக அங்கு இருந்து கிளம்பிவிட்டான்.

அடுத்த நாள் பிற்பகலில், வீட்டுக்கு வரச்சொல்லி அமுதாவே அவனுக்குத் தொலைபேசினாள். தனக்கு விருப்பமான பெண் மட்டுமே இருக்கும் இடத்தில், ஓர் ஆணுக்கு வரும் கூச்சத்தோடு உட்காரக்கூட முடியாமல் ஹாலின் ஒரு மூலையில் ஆதிரா சுவரில் வரைந்திருந்த உயிர் எழுத்துக்களைப் பார்த்தபடி நின்றான்.

“இந்தாடா… உங்க அண்ணன் குடுக்க சொன்னாரு!”

அவள் கையில் கொஞ்சம் பணம் இருக்க “இல்லை... பணம் வேணாம். பிரச்னை சரியாகிடுச்சு. இனி தேவைப்படாது.”

அவள் சிரித்தாள். “சரிடாப்பா. மானஸ்தா, வாங்கிக்கோ வேற எதுக்காச்சும் தேவைப்படும்” - வம்படியாக அவன் சட்டைப்பைக்குள் திணித்தபோது, அவள் கைகளில் இருந்து மலர்களின் நறுமணம் கசிந்து அவனுக்குள் சேர்ந்துகொண்டது.

“உக்காரு... இருந்து சாப்பிட்டு போ''. இந்தச் சில நிமிடத் தனிமைக்கே மனம் பல்லாயிர முகம்கொண்டு சிலிர்த்துக் கிளர்ந்தது.

“இல்லை, நான் சாப்பிட்டேன். கொஞ்சம் வேலை இருக்கு, அப்புறமா வர்றேன்” - அவசரமாகப் புறப்பட இருந்தவன், கதவுக்கு அருகில் வரை சென்று திரும்பினான்.

“வாட்டர் டேங்க் க்ளீன் பண்ண கேட்டிருந்தீங்களாமே. யாரையும் கூப்பிட வேணாம். நாளைக்குக் காலையில நானே வந்து பண்ணிவிடுறேன்.”

p92b.jpg

அவள் `சரி' எனத் தலையாட்டினாள். தாழிடப்பட்ட கதவின் மேல் தாழ்ப்பாளைத் திறக்க முயன்றான். வலுவாக அடைக்கப்பட்டிருந்தது. அவனுக்கு கை வலிக்க மொத்தப் பலத்தையும் கொடுத்து இழுத்துப் பார்த்தான். அவன் தோளுக்கு நெருக்கமாக வந்து பின்னால் இருந்து தாழ்ப்பாளை அமுதா லாகவமாகத் திறந்தாள். அவள் உடலின் சூடும் நெருக்கமும் கிறுக்குப் பிடிக்கவைக்க, திரும்பி அவசரமாக அவளை அணைத்துக்கொண்டு முத்தமிட்டான். எந்த எதிர்வினைகளும் இல்லாமல் நின்றவள், சில நொடிகளுக்குப் பிறகு தன்னில் இருந்து பிரித்தாள்.

“உனக்கு இதுக்கு எல்லாம் இன்னும் வயசு இருக்கு. இதை மட்டுமே நெனைச்சு மனசைக் குழப்பிக்காத… போ.”

கண்கொண்டு அவளைப் பார்க்க முடியாமல் சடாரென எழுந்த குற்றவுணர்ச்சியோடு கதவைத் திறந்தான்.

“நான் இதுக்காக உன்னைத் தப்பா எல்லாம் நினைக்கலைடா. எனக்கும் உன்னை ரொம்பப் பிடிக்கும். ஆனா, அது எல்லாத்துக்கும் சில வரம்புகள் இருக்கு. நீ எப்பவும்போல இங்கே வந்துட்டுப் போ.”
அவனுக்கு கண்கள் தளும்ப, “சரிங்க அத்தாச்சி” என வார்த்தைகள் உடையச் சொல்லிவிட்டு, வேகமாகப் படி இறங்கிப் போனான்.

அதன் பிறகு அமுதாவை அப்படிப் பார்க்கக் கூடாது என எவ்வளவு முயன்றாலும், மனம் விடாப்பிடியாக மறுத்தது. அவள் குறித்தான எண்ணங்களே பூர்ணசந்தோஷமாக இருக்க, அதில் இருந்து தன்னைத் துண்டித்துக்கொள்ள அவன் விரும்பவில்லை. வாழ்க்கை, ஒழுங்கீனங்களில்தான் அர்த்தபூர்வமானதாக மாறிவிடுகிறது. நியாயங்கள் குறித்து மனிதர்கள் கற்றுக்கொண்ட எதுவும் பல நூற்றாண்டுகளாக அவர்களைச் சந்தோஷ ப் படுத்தவில்லை; ஆறுதல் அளிக்கவில்லை. எளிய தீர்மானங்களுக்காக அடகுவைக்கப்படும் நமது நேர்மைகள் துயர்மிக்கவை. பாவங்களினால் மட்டுமே இனிவரும் தலைமுறை தூய்மை அடையக்கூடும்.

அந்த முறை மனோ அண்ணன் விடுமுறைக்கு வந்தபோது ஊரில் திருவிழா. எப்போதும் கொண்டாட்டத்தின் மனநிலையில் இருக்கும் மனோ அண்ணனுக்கு, திருவிழா என்பது கொண்டாட்டத்தின் கொண்டாட்டம். வந்த முதல் நாளிலேயே விஜியிடம் செலெக்‌ஷன் குறித்து அவர் பேச மறக்கவில்லை.

``கொஞ்ச நாள் போகட்டும்ணே. இப்ப உடனே வேணாம்” - மனோ அண்ணனின் பேச்சை மறுக்க மனம் இல்லாமல் சொன்னாலும், நிஜத்தில் அவனுக்கு இந்த ஊரைப் பிரிந்து எங்கும் செல்ல விருப்பம் இல்லை.

``யோசிச்சுக்கோடா, நாலு காசு பார்த்தாத்தான் ஊருக்குள்ள நம்மளுக்கு மதிப்பு” - அவர் ஆதுரமாகப் பேசினார். எப்போதும்போல் அடுத்த நொடியே முந்தைய நொடியில் நடந்த அவ்வளவையும் மறந்துவிட்டு, அவனைக் கூட்டிக்கொண்டு தெருப் பையன்களுடன் மது அருந்தச் சென்றார்.

திருவிழாவின் முதல் நாள் மாலை அவர் உறியடிக்க ஆர்வமாகக் கண்களைக் கட்டிக்கொண்டு இறங்கி, போதையில் தள்ளாடித் தள்ளாடி காந்தி சிலை வாசலில் முட்டி விழுந்தார். விஜிதான் அவர் கண்களை அவிழ்த்துவிட்டுத் தூக்கிவந்தான். எல்லோரும் அவரைப் பார்த்து கேலிசெய்து சிரித்ததைக்கூட அவரால் விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடிந்தது. அதன் பிறகு அவரை விஜி பார்க்கவில்லை.
 
இரண்டாவது நாள் திருவிழா முடிந்து ஊர் அடங்கிக்கொண்டிருந்த நேரம். இரண்டு நாட்களுக்குப் பாதுகாப்புக் காரணமாக இந்தப் பகுதியில் இருந்த மதுக்கடைகளுக்கு விடுமுறை விடும்படி காவல் துறை உத்தரவு. ஹைவேயில் புதிதாகத் தொடங்கியிருந்த தாபா பாரில்தான் தெரு ஆட்கள் மொத்தமும் இரவு-பகல் என மது அருந்திக்கொண்டிருந்தார்கள். இரண்டு ஏரியாக்களுக்கும் பல காலமாகவே ஒரு பனிப்போர் நடந்தபடிதான் இருக்கிறது. அது யார் பகுதி கோயிலுக்கு நிறைய பேனர் வைப்பது என்பதில் தொடங்கி, பாட்டுக் கச்சேரிக்கு யாரைக் கூப்பிடுவது, டான்ஸுக்கு யாரைக் கூப்பிடுவது என எல்லாவற்றிலும் வரும். போட்டி நிகழ்ச்சி நடக்கும்போது சண்டைகளோடும் முடிவது உண்டு.

முந்தைய தின இரவு ஏரியாவில் டான்ஸ் நடந்துகொண்டிருந்தபோது கீழே இருந்து யாரோ சிலர் மண்ணை அள்ளிப்போட, என்ன ஏதென்று விசாரிக்கும் முன்னரே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடிப்போய் ஜெனரேட்டரை இணைத்தார்கள். டிரான்ஸ்ஃபார்மரில் யாரோ பச்சை வாழைமட்டையைப் போட்டுவிட்டு ஓடியதால், அது செயலிழந்துபோனது. அப்போதே இது இந்த ஏரியாக்காரர்களின் வேலையாகத்தான் இருக்கும் என எல்லோருக்கும் சந்தேகம்.

இரண்டாவது நாள் மது அருந்துகையில் பரிசாரகனான இளைஞன் ஒருவன்தான், அந்த தாபாவில் குடித்துக்கொண்டிருந்த இரண்டு பேரைக் காட்டி, `இவர்கள்தான் நேற்று நடந்த பிரச்னைக்குக் காரணம்' எனச் சொல்ல, குடிவெறியில் சண்டை தொடங்கியது. எப்போதும்போல் இளைஞர்களோடு மது அருந்திக்கொண்டிருந்த மனோ, சண்டை வேகமாக வளர்வதைக் கண்டு ஓடிப்போய் விலக்கிவிட்டார்.

எவ்வளவு கோபம் இருந்தபோதும் மனோ சொல்லியதற்காக ஏரியா ஆட்கள் சமாதானப்படுத்திக்கொண்டு அங்கு இருந்து கிளம்பினர். அதற்குள் அடிவாங்கியவர்களின் நண்பர்கள் சிலர் அங்கு வர, இப்போது கோபம் முழுக்க மிச்சம் இருந்த ஆட்களின் பக்கமாகத் திரும்பியது. இந்த முறை நடந்த தாக்குதலில் யார் மீதும் காயம் பட்டுவிடக் கூடாது என்ற கவனத்திலேயே மனோ சிலுவையை தனிமனிதனாகச் சுமந்துகொண்டார். முழு போதையில் இருந்த மற்றவர்களால் அவரின் வெட்டுண்ட உடலை மட்டும்தான் மீட்க முடிந்தது.

மருத்துவமனையில் மூட்டையாகக் கட்டி வைக்கப்பட்டிருந்த உடலை தூரத்தில் இருந்து பார்க்கக்கூட ஒருவரையும் அனுமதிக்கவில்லை. போலீஸ்காரர்கள் கொலைக்கான காரணத்தை விசாரித்தார்கள். ஆனால், ஆட்களைப் பிடிப்பதாக இல்லை. எந்த விசாரணையும் இனி தன் கணவனைத் திரும்பத் தரப்போவது இல்லை என்ற வேதனையில், அழுது அரற்றிய அமுதாவின் வதங்கிப்போன உடலோடு ஒட்டிக்கிடந்தாள் அவளின் மகள். தெரு ஆட்கள் கொஞ்சம் பேர் வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்தும் போஸ்ட்மார்ட்டம் முடிந்து உடலைத் தருவது வரை எங்கும் செல்வது இல்லை எனப் பிடிவாதமாக இருந்தாள். எப்போதும் எல்லோரோடும் சிரித்துப் பேசி வாழ்ந்த அந்த மனிதனின் உடல், இறுதியாக மயானத்தில் எரிந்து அடங்கியபோது அருகில் ஒருவரும் இல்லை.

துயரத்தின் மொத்த நிறங்களையும் பூசி அழுது வடிந்திருந்த தெருவில் ஒவ்வொருவருக்குமே பிரியத்துக்குரிய ஒருவனை இழந்துவிட்ட வலி. ஆறுதல் சொல்லித் தேற்ற முடியாது கசங்கிப்போயிருந்த அமுதாவுடன் விஜி இரண்டு நாட்கள்  இருந்தான். கொலைக்குக் காரணமானவர்கள் கோர்ட்டில் சரண்டர் ஆனதும், அடுத்த ஒரு வாரத்துக்குப் பிறகு மீண்டும் விசாரிக்கப்படுவார்கள் என்பதும் செய்தித்தாள்களின் வழியாகத்தான் தெரியவந்தன. அமுதா செய்தித்தாளின் அந்தப் பக்கத்தைக் கிழித்துவைத்திருந்ததை விஜி மட்டுமே கவனித்திருந்தான். அவளிடம் இருந்து அதைப் பிடுங்க மனம் இல்லை.

ஒரு வாரத்துக்குப் பிறகு அந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் வழக்கம்போல் ஆட்கள் கூடியிருந்த மதுரை நீதிமன்ற வளாகத்தில், என்ன நடக்கும் எனப் பார்க்க வந்திருந்த ஆட்களுடன் விஜியும் வந்திருந்தான். அமுதா ஏழெட்டு நாட்களாக அழுததில் இளைத்துப்போயிருந்தாள். பேயுருகொண்ட கண்களில் வஞ்சகத்தின் தீவிரம். மகளுக்காகக் கட்டுப்படுத்திக்கொண்ட பழியுணர்ச்சி வெளிப்படுத்த இயலாத தவிப்பாகக் கொதித்தது.

காவலர்கள் புடைசூழ அழைத்து வரப்பட்ட அந்த இரண்டு இளைஞர்களையும் பார்த்து, கூடியிருந்த தெருக்காரர்கள் சரமாரியாக வசைகளைக் கொட்டினர். போலீஸ்காரர்கள், அவர்களின் முகங்களை மறைத்து வேகமாகக் கூட்டிச்சென்று கோர்ட் ரூமுக்கு வெளியே அமரவைத்தனர். சுற்றிலும் வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.

கொலைகாரர்கள் இரண்டு பேரும் அமர்ந்திருந்த வளாகத்தில் சில வழக்குரைஞர்கள், அவர்களோடு சம்பந்தப்பட்ட சில விசாரணைக் கைதிகள், காவல் துறையினர் மட்டுமே போவதும் வருவதுமாக இருந்தனர். விலங்கிடப்பட்ட கைகளோடு குத்தவைத்து அமர்ந்திருந்த குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அருகில் இரண்டு போலீஸ்காரர்கள் பாதுகாப்புக்கு நின்றிருந்தனர். சில வழக்குரைஞர்களோடு பேசியபடியே வந்த விஜி, இருவருக்கும் அருகில் வந்ததும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆவேசமாக வெட்டினான். அந்த விபரீதத்தை எதிர்நோக்கி இராதவர்களாக எல்லோரும் அலறத் தொடங்க, காவலுக்கு இருந்த போலீஸ்காரர்கள் துப்பாக்கியால் எவ்வளவு அடித்தும் அவன் பின்வாங்கவில்லை. அவன் உடம்பில் பெருந்தீ எனப் பற்றி எறிந்தது ஆவேசம். வெட்டுப்பட்டவர்கள் துடித்து அலறிய சத்தத்தில்தான் கொஞ்சம் கொஞ்சமாக அமுதாவின் கண்ணீரையும் அழுகையையும் மறக்கத் தொடங்கினான். அதனாலேயே முன்பைவிடவும் மூர்க்கமாக வெட்டினான். யார் யாரோ வந்து அடித்து இழுத்த பின்னரே அவன் கைகளில் இருந்த கத்தி நழுவியது.

இரண்டு பேருக்கும் உயிர் இல்லை என உறுதிசெய்துகொண்ட பிறகு, எந்த எதிர்ப்புகளையும் காட்டாமல் போலீஸ்காரர்களோடு நடந்தவனின் கண்கள், தனக்கு எதிரில் இருந்த பெரிய கூட்டத்தில் அமுதாவைத் தேடின. பழியுணர்ச்சியின் சுவடுகள் கரையத் தொடங்கின. அவளின் கண்கள் அவனுக்காகக் கசிந்து கொண்டிருக்க, அவன் அவளுக்கு மட்டுமே தெரியும்படியாகப் புன்னகைத்தான். அந்த மிகச் சிறிய புன்னகைதான் அவனுக்கும் அவளுக்குமான அந்தரங்கம்.

சிறைக்கு வந்த முதல் நாளிலேயே அவனுக்கு தண்டனைகளின் அசல் பரிமாணம் பிடிபட்டது. முதல் தடவையாக பலர் கூடி நின்ற ஒரு வெளியில் தன்னை உடை களையச் சொன்ன காவலரை, புரியாமல் பார்த்தான்.

“துணியை அவுருடான்னா என்ன வேடிக்கை?” - பொடனியில் ஓங்கி போலீஸ்காரர் அடிக்க, அவசரமாக அவிழ்த்தான்.

“வாயில எங்கயும் பிளேடைச் சொருகி வெச்சிருக்கானானு பாருங்கய்யா” - அவனைப் பற்றிய விவரங்களை எழுதிக்கொண்டிருந்த போலீஸ்காரர் சொல்ல “டேய், வாயைத் தொற. ம்… கால விரிச்சு நில்லு. ம்ம்ம்... முன்னால குனி” போலீஸ்காரரின் இறுக்கமான குரலுக்குப் பணிந்து எல்லாவற்றையும் செய்தான்.

எல்லாம் முடிந்து உடை மாற்றிக்கொண்டபோது தன் உடலில் அவமானத்தின் தழும்புகள் இடைவெளி இல்லாமல் நிரம்பியிருப்பதாக உணர்ந்தான். அங்கு இருந்த சிலருக்கு முன்னரே சிறை அனுபவம் இருந்ததால் இயல்பாக இருந்தனர்.

“இவய்ங்களைப் பூராம் பி பிளாக்ல கொண்டுபோய்ப் போடுங்கய்யா” - பாரா நின்ற போலீஸ்காரர் இவர்களை மொத்தமாக ஒரு கதவைத் திறந்து உள்ளே அழைத்துப் போனார்.

ஒவ்வொரு முறையும் அமுதா அவனைப் பார்த்துவிட்டுச் செல்லும்போது எல்லாம் அவள் தரும் பணத்தை வாங்கக் கூச்சமாக இருக்கும். சிறையில் இருக்கும் ஒருவனுக்கு ஒவ்வொரு ரூபாய்க்குமான மதிப்பு தெரியும். தனிமை வலி, நிராசைகள் இவற்றை மறந்து உயர்ந்த சுவர்களுக்குள் ஒருவன் உறங்குவது எளிதானது அல்ல. தொடக்கத்தில் இருமல் மருந்துகள் காய்ச்சல் மாத்திரைகள் என சாத்தியம் உள்ள வழிகளிலேயே உறங்குவதற்கு முயன்று பார்த்தான். ஆனால், அவை கைகொடுக்கவில்லை. கொஞ்சம் புகையிலை, உறக்கத்தைத் தராதுபோனாலும் துயரத்தை மறக்கச்செய்தது. அவனுக்கு அந்தச் சின்னஞ்சிறு தேவையை நிறைவேற்றிக்கொள்ளவும் அவசரத் தேவைகளுக்காகவும் பணம் தேவைப்படவே செய்தது. ஒரு பீடித் துண்டு முப்பது ரூபாய். ஹான்ஸ் புகையிலை பாக்கெட் ஐம்பது ரூபாய். இவற்றை எல்லாம் சிரமங்கொண்டு கைதிகளின் உறக்கத்துக்காகவும் பழக்கத்துக்காகவும் கொண்டுவரும் நீண்டகாலக் கைதிகள், இதில் மிச்சம் பண்ணும் சின்னத் தொகையைத்தான் அவ்வப்போது வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.

அமுதாவிடம் பணம் வாங்கக் கூச்சமாக இருந்ததால், அவனே ஏதாவது செய்து சிறைக்குள் சம்பாதிக்கலாம் என சிலரிடம் உதவி கேட்டபோதுதான், கஞ்சா விற்பவர்கள் குறித்து தெரியவந்தது. வாரத்துக்கு ஒருமுறை வீட்டில் இருந்து பார்க்க வருகிறவர்களிடம் கிலோக்கணக்கில் மிக்ஸர் வாங்கச் சொல்லி அதற்குள் சிறு சிறு பொட்டலங்களாகக் கஞ்சாவைக் கலந்துவிடுவதுதான் ட்ரிக். ஆனால், அது பத்திரமாக வந்துசேர்வது அத்தனை எளிதான காரியம் அல்ல. அதோடு சிறைக்குள் யாருக்கும் தெரியாமல் பதுக்கிவைத்து பாதுகாப்பதும் சிரமமான காரியம். தேவைக்கு முன்னால் எதுவும் சிரமம் இல்லை என விஜி உறுதியாக இருக்க, பக்கத்து பிளாக்கில் இருந்த ஒச்சு சொல்லித்தான் பொன்ராஜின் அறிமுகம் கிடைத்தது.

“தம்பி, உனக்கு என்ன ஆனாலும் பொருள் சேஃப்ட்டியா இருக்கணும். முடியுமா? நீ புதுசுனு வேற சொல்ற. எப்படித் தாங்குவ?” - நம்பிக்கை இல்லாமல் பொன்ராஜ் கேட்டான்.

“அதெல்லாம் நம்பலாம்ண்ணே. எனக்கு என்ன ஆனாலும் பொருள் சேஃப்ட்டியா இருக்கும். காசும் கரெக்டா உங்களுக்கு வரும்” - அடக்கத்துடன் கை கட்டி நின்றான்.

“சரி ரெண்டு நாள் போகட்டும் பாக்கலாம்” -பொன்ராஜுக்கு, கேட்டதும் கொடுக்க மனம் இல்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு கொஞ்சமாக வந்த பொருளை அவன் பாதுகாப்பாக வைத்து விற்றதோடு குறைவாகவே கமிஷனும் எடுத்துக்கொண்டிருந்ததால், பொன்ராஜுக்கு அவனைப் பிடித்துப்போனது.

p92c.jpg

ஒவ்வொரு புதன்கிழமையும் வழக்கமாக எல்லோருடைய செல்லுக்குள்ளும் நடக்கும் சோதனையில் அந்த முறை விஜி காட்டிக் கொடுக்கப்பட்டான். அவனுக்குத் தெரிந்திருக் கவில்லை அவனைக் காட்டிக்கொடுத்தது அவனைப்போலவே திருட்டுத்தனமாக கஞ்சா விற்ற இன்னொருவன் என்பது.

மாட்டிக்கொண்ட இரவில் நல்ல மழை. பரேட் நடக்கும் இடத்தையொட்டி வளர்ந்திருந்த அகன்ற மரத்தைக் கட்டிப்பிடித்தபடி நிற்கவைத்து கைகளைக் கட்டியிருந்தனர். தடித்த பிரம்புகளால் விடியும் வரை ஆள் மாற்றி ஆள் அடித்துத் துவைத்ததில், அரை உயிராகிப்போனான். சில தொழில்களுக்குப் பழக்கப்பட திறமை மட்டும் போதுமானது இல்லை. அனுபவமும் தந்திரங்களும் முக்கியம். பிந்தைய இரண்டும் விஜிக்கு வாய்த்திருக்காததால், அவனை அங்கு இருந்து வேலூருக்கு அனுப்பிவைத்தனர்.

தனிமைச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு தண்டனைக் கைதிகளுக்கான பிளாக்குக்கு மாற்றப்பட்ட இரண்டாம் நாள், அமுதா அவனைப் பார்க்க வந்திருந்தாள். நடக்க முடியாமல் தள்ளாடி வந்தவனைக் காணச் சகிக்கவில்லை அவளுக்கு. வழக்கமாக, கச்சேரியில் இருக்கும் பேரிரைச்சல்தான். ஆனால், அன்று பிரபஞ்சமே பேசுவதுபோல் இருவருக்கும் காதுகள் அடைத்துப்போயின. பேச நா எழாமல் தவித்தான்.

“ஏதாச்சும் வேணும்னா, எங்கிட்ட கேக்கவேண்டியதுதான... ஏன் இப்படிச் செஞ்ச?” - அமுதா கோபத்தைக் காட்டிக்கொள்ளாமல் கேட்டாள். பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்து கொண்டான்.

“பக்கத்துல இருக்கும்போது நினைச்சதும் வந்து பார்க்க முடியும். இப்ப பாரு எவ்ளோ தூரம். எங்கிட்ட கேட்கிறதுக்கு என்னடா உனக்கு?” -அமுதாவின் குரல் அழுகையும் தவிப்புமாக எதிரொலிக்க, பிடிமானத்துக்காகக் கம்பிகளைப் பிடித்து நின்று இருந்த விஜியின் கைகள் நடுங்கின.

“இல்ல… நீயும் எவ்ளோ நாளைக்குத்தான் எனக்குக் குடுத்துட்டு இருப்ப. இனி நானே என்னைப் பார்த்துக்கிறேன். நீ இவ்ளோ தூரம் அலைய வேணாம்” என்பதைச் சத்தமாகச் சொல்லும் திராணி இல்லாமல், முணுமுணுத்தான் விஜி.

``நான் வந்து உன்னைப் பார்க்கணும்னு நினைக்கிறது, நீ அநாதையாப் போயிடக் கூடாதுங்கிறதுக்காக இல்லை; நான் அநாதையா போயிடக் கூடாதுனுதான். நீ சொன்னதும் பாதியில விட்டுட்டுப் போற உறவு இல்லை நான். தயவுசெஞ்சு கொஞ்ச நாளைக்கு எதுவும் செய்யாம பொறுமையா இரு.”

அவன், அவளின் கண்களை எதிர்கொள்ள முடியாமல் வெறுமனே தலையை ஆட்டினான். “சரி, கவுன்ட்டர்கிட்ட வா… கொஞ்சம் பழம் இருக்கு. வாங்கிட்டுப் போ” - கூட்டத்தை விலக்கி இரண்டு பேரும் வந்தனர்.

பார்வையாளர்களுக்கும் கைதிகளுக்கும் இரண்டு கம்பி வேலிக்கு நடுவில் பொறுப்பில் இருந்த காவல் அதிகாரி, அமுதா எழுதி உள்ளே அனுப்பியிருந்த பார்வையாளர் மனுவைப் பார்த்தார். உறவினர் என்ற இடத்தில் மனைவி எனக் குறிப்பிடப்பட்டிருக்க, ஒரு முறை இருமிக்கொண்டு “நீங்கதான் மனைவியா? ஏம்மா பார்க்க நல்லவங்களா தெரியுறீங்க, இவனுக்கு புத்தி சொல்லக் கூடாதா? பனிஷ்மென்ட் வாங்கிட்டு வர்றது எல்லாம் பின்னால விடுதலை செய்ய நினைக்கிறப்ப பிளாக் மார்க் ஆகிடும். எடுத்துச் சொல்லுங்கம்மா...” - அவர் மனுவைப் பார்த்துவிட்டுச் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட விஜியின் கண்கள், அமுதாவைவிட்டு அகலவில்லை. தான் கொண்டுவந்த பொருட்களை காவலரிடம் கொடுத்துவிட்டு, “இனிமே அந்த மாதிரி நடக்காது சார். கொஞ்சம் பார்த்துக்கங்க…” -நன்றியோடு புன்னகைத்தாள். கம்பிக் கதவின் வழி துண்டில் பழங்களை வாங்கிக்கொண்ட விஜியின் கைகள் குளிர்ந்துபோயிருந்தன!

http://www.vikatan.com/anandavikatan/2016-aug-10/stories/121963-short-story.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.