Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பருவநிலை மாற்றம்: மணமற்ற மல்லிகைகள்

Featured Replies

பருவநிலை மாற்றம்: மணமற்ற மல்லிகைகள்
 
 

article_1472965173-Climate.jpgதெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

காலம் தன் பயணத்தில் எத்தனையோ விடயங்களைத் தின்று தீர்த்திருக்கிறது. எமது முன்னோர் அனுபவித்த பலவற்றைக் கேட்கும் பாக்கியம் மட்டுமே எமக்குக் கிடைத்திருக்கிறது. அன்று எமக்குச் சொந்தமானவையாக இருந்தவை இன்று எம்மிடத்தே இல்லை. நாம் அனுபவிக்கும் பலவற்றை, நம் சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லப் போவதில்லை. ஒருபுறம் காலமாற்றம் அதைச் சாத்தியமற்றதாக்குகிறது. இன்னொருபுறம் விரும்பினாலும் விட்டுச் செல்லவியலாதவாறான காரியங்களை மனித குலம் தொடர்ந்தும் செய்து வருகிறது. எதிர்காலம் எம்மைக் கயவர்கள் என்றும் சுயநலக்காரர்கள் என்றும் அழைப்பதற்கான அனைத்துக் காரியங்களையும் செய்தபடி உலகைச் சுடுகாடு நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.

கடந்த வாரம் ஈராக்கில் ஒரு சமையற்காரர் வீதியின் ஓரத்தில் நின்று ஒரு சட்டியை நீட்டிப் பிடித்தபடி முட்டையொன்றை வெயிலில் பொரிக்கும் காணொளியைக் காணக் கிடைத்தது. அது ஈராக்கின் வெப்பநிலையைக் காட்டுவதற்கான ஒரு குறிகாட்டியாகச் செய்யப்பட்ட செயலாகும். இது இன்று உலகம் எதிர்நோக்கும் மிக முக்கியமான சவாலைத் தெளிவுறுத்துகிறது. புவியின் வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இது தொடர்பாகக் கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அபாய அறிவிப்புக்கள் வெளியிடப்பட்ட போதும், அது எவரது காதுகளையும் எட்டவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் எதிர்பாராத இயற்கை அனர்த்தங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளன. பாரிய வெள்ளப்பெருக்கு, நீண்ட மோசமான வரட்சி, புயல் என இயற்கை தன் கோரதாண்டவத்தை ஆடுகிறது.  இந்த வகையான இயற்கை நிகழ்வுகளுக்கும் பருவநிலை மாற்றங்களுக்குமான இடைத்தொடர்பை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்ற வாதமே நடைபெறுகிறது.

அதிகரித்து வரும் புவியின் வெப்பத்தால் எதிர்காலத்தில் பூக்கள் நறுமணத்தை இழக்கத் தொடங்கும். அதிகரித்த புவிவெப்பம் மணமற்ற பூக்களுக்கே வழிசெய்யும் எனத் தாவரவியலாளர்கள் சொல்கிறார்கள். பூக்கள் மணமுள்ள பூக்களாக மலர்வதற்கு பகலில் 28°ஊ யும் இரவில் 18°ஊ யும் தேவை. அதிகரித்து வரும் புவிவெப்பநிலை அதற்கான சாத்தியங்களை இல்லாமல் செய்து வருகிறது.

ஒருபுறம் சர்வதேச ரீதியில், புவிவெப்பமடைதலுக்கு சுவட்டு எரிபொருட்களின் பாவனையே பிரதான காரணம் என்ற வாதம் வைக்கப்பட்டது. இதற்குத் தீர்வாக சுவட்டு எரிபொருட்களின் பாவனையைக் குறைக்க வேண்டும் என்றும் தொழிற்சாலைகள் கரியமில வாயுக்களை உமிழ்வதைத் தடுப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. மறுபுறம் உலகம் தொடர்ச்சியாக வெப்பமாகிக் கொண்டுதான் வந்திருக்கிறது, எனவே புவி வெப்பமடைதலையிட்டு அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை என்ற வாதமும் வைக்கப்பட்டது.

விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் இருபக்கங்களிலும் நின்று தம் வாதங்களையும் விஞ்ஞான ரீதியான காரணிகளையும் விளக்கினர். இதற்கிடையில் எண்ணெய்க் கம்பெனிகள் சுவட்டு எரிபொருட் பாவனையைக் குறைப்பதற்கெதிரான பாரிய பிரசாரத்தை மேற்கொள்ளத் தொடங்கினர். இதனால் பருவநிலை மாற்றம் என்பதொரு புனைவு போன்றதொரு படிமம் கட்டியெழுப்பப்பட்டு, மக்கள் மத்தியில் பரவ விடப்பட்டது. இதனால் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தின் வீரியத்தை மக்கள் அறிந்திருக்காத அதேவேளை, உலகளாவிய ரீதியில் அதிகம் கவனம் பெறாத ஒன்றாக பருவநிலை மாற்றம் விளங்குகிறது.

கடந்த ஜுலை மாதம் பூகோளத்தினுடைய வரலாற்றில் மிகவும் வெப்பமான மாதமாகப் பதிவாகியுள்ளது. 1880ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாகப் பூமியின் வெப்பநிலை அவதானிக்கப்பட்டு பதியப்பட்டு வந்துள்ளது. அப்பதிவுகளின்படி கடந்த 10 மாதங்களாகத் தொடர்ச்சியாகப் பூமியின் வெப்பநிலை அதிகரித்து வந்துள்ளது. இவ்வாறு முன்னெப்போதும் நடந்தது கிடையாது. இது பூமியின் எதிர்காலத்தை மட்டுமன்றி மனிதகுலத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது. ஆனால் இவை கவனம் பெறா வண்ணம் பார்த்துக் கொள்ளப்படுகிறது. இந்த வெப்பநிலை அதிகரிப்பானது துருவப்பகுதிகளில் பனி உருகும் வேகத்தை அதிகரித்துள்ளது. பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டத்தின் அளவை அதிகரிக்கச் செய்கின்றன. கடல்மட்டத்தில் உள்ள நாடுகள் கடலில் முழுமையாக மூழ்குவதற்கும் பவளப் பாறைகளில் அமைந்துள்ள நாடுகள் முற்றாக அழிந்து போவதற்குமான சாத்தியக்கூறுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. புவியின் வெப்பநிலை 2°ஊ யால் அதிகரிக்கும் போது எமது அண்டை நாடான மாலைதீவுகள் முற்றாக மூழ்கி அழிந்து போகும். உலக வரைபடத்தில் இருந்து ஒரு நாட்டை அகற்ற வேண்டியேற்படும். இந்நிலை மேலும் பல சிறிய தீவுகளுக்கும் ஏற்படும். இலங்கையின் கரையோரப் பகுதிகளில் கணிசமானவற்றைக் கடல் கொள்ளக்கூடிய வாய்ப்புக்களும் உண்டு.

இது ஒருபுறமிருக்க பனிப்பாறைகள் உருகுவதால் துருவக் கரடிகளின் வாழிடம் அழிக்கப்படுகிறது. துருவக்கரடிகள் அருகிவரும் உயிரினங்களாக மாறியுள்ளன. இதேபோல பருவநிலை மாற்றமானது சாதாரண மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. பொய்க்கிற மழை, அளவுக்கதிகமான மழையும் வெள்ளமும், பருவம் தவறி வரும் மழையும் வெயிலும் என எதுவுமே நிச்சயமற்றதாகியுள்ளது. இந்திய வரலாற்றிலேயே மிகவும் மோசமான வரட்சிகளில் ஒன்று தற்போதைய காலப்பகுதிகளில் இந்தியாவின் ஒரு பகுதியில் நிகழ்கிறது. இதனால் 330 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் 11 மாநிலங்களைச் சேர்ந்த 266 மாவட்டங்களில் உள்ள 2.5 இலட்சம் கிராமங்கள் இந்த வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இது அம்மக்களின் குடிநீர், விவசாயம், வாழ்வாதாரம், உணவுற்பத்தி, உணவுப் பாதுகாப்பு, இயற்கை வளங்கள், சேமிப்பு என அனைத்து அம்சங்களையும் இவ்வரட்சி பாதித்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள்.

இதே காலப்பகுதியில் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் தொடர்ச்சியான மழையும் அதைத்தொடர்ந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக 1.8 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 480 பேர் இறந்துள்ளனர். இம்மாநிலத்தில் உள்ள உலக மரபுரிமைத் தளமான 'கசிரங்கா தேசியப் பூங்கா'வின் பெரும்பகுதி முழுமையாக வெள்ளத்தில் முழ்கிய நிலையில் 300 க்கும் அதிகமான விலங்குகள் இறந்துள்ளன. உலகில் அருகிவரும் உயிரினங்களில் ஒன்றான   காண்டாமிருகங்கள் 21 உம் இதில் அடக்கம். கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் மழையால் உலகின் மூன்றாவது பெரிய நதியாகிய கங்கைநதியின் நீர்மட்டம் முன்னர் எப்போதும் எட்டாத எல்லையை எட்டியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான கிராமங்கள் முழுமையாக நீரில் முழ்கியுள்ளன.

பருவநிலை மாற்றங்கள் மக்களின் வாழ்வாதாரங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பருவநிலை மாற்றங்களால் உலகில் கோப்பி உற்பத்திக்குப் பொருத்தமான பகுதிகளின் அளவு அரைவாசியாக மாறும் என்றும் இதனால் கோப்பி உற்பத்தியை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள, ஏலவே வறுமையில் வாடுகின்ற 120 மில்லியன் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கிறது. அவ்வறிக்கையின்படி பருவநிலை மாற்றங்கள் ஏற்கெனவே கோப்பி உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. தன்சானியாவில் 2.4 மில்லியன் மக்களின் பிரதான ஜீவனோபாயமாக்  கோப்பி உள்ள நிலையில், அங்கு உற்பத்தி சரி அரைவாசியாகக் குறைந்துள்ளது. மத்திய அமெரிக்க நாடாகிய குவாட்டமாலாவில் அதிகளவான வெப்பமும் உயர் நிலப்பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையும் கோப்பிப் பயிர்ச்செய்கையை முற்றாக அழித்துள்ளது. இம் மோசமான காலநிலையால் குவாட்டமால விவசாயிகள் அவர்களது அறுவடையில் 85 சதவீதத்தினை முழுமையாக இழந்துள்ளார்கள். இதன் விளைவுகள் மொத்த மத்திய அமெரிக்காவையே பாதித்தது. இப்பிராந்தியத்தில் இதனால் 350,000 பேர் வேலையிழந்தார்கள்.

உலக சுகாதார நிறுவனம் பருவநிலை மாற்றங்களுக்கும் பட்டினிக்கும் இடையிலான நெருக்கமான தொடர்பை ஆராய்ந்து, பருவநிலை மாற்றங்களின் விளைவால் நிகழக்கூடியவற்றை  எதிர்வு கூறியிருக்கிறது.

1.            2050 ஆம் ஆண்டு பட்டினியால் வாடுபவர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தால் அதிகரிக்கும்.

2.            2050 ஆம் ஆண்டளவில் 24 மில்லியன் மேலதிக குழந்தைகள் ஊட்டச்சத்துக்குறைவால் பாதிக்கப்படுவர்.

3.            2025 ஆம் ஆண்டளவில் ஆபிரிக்காவின் பயிடக்கூடிய நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பகுதி பயிரிடமுடியாத நிலமாக மாறும்.

4.            2030 ஆம் ஆண்டளவில் உணவுப்பொருட்களின் விலைகள் 60 சதவீதத்தால் மேலதிகமாக அதிகரிக்கும்.

இவை நாம் நமது வருங்காலச் சந்ததிக்கு விட்டுச் செல்லும் பொக்கிஷங்கள் எனப் பெருமைப்பட முடியுமா? பருவநிலை மாற்றங்களின் விளைவால் ஆண்டுதோறும் ஆறு இலட்சம் பேர் இறக்கிறார்கள். இதில் பெரும்பான்மையோர் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளைச் சேர்ந்தோரே. உலக உணவுத் திட்டத்தின் கணிப்பொன்றின்படி கடந்தாண்டு பருவநிலை மாற்றங்களின் விளைவால் 375 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வளவு மோசமான நிலையில் அனைத்துக்கும் பிரதான காரணியான புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்த இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படவில்லை. சுவட்டு எரிபொருட்கள் இன்னமும் சர்வதேசச் சந்தையின், உலக அரசியலின் பிரதானமான சரக்காக உள்ளது. இந்நிலையில் இதன் பாவனையைக் கட்டுப்படுத்துவது கடினம்.

சுவட்டு எரிபொருட்களுக்கு மாற்றான சக்தி மூலங்கள் உருவாக்கப்படுவது இதற்கான ஒரு தீர்வாக முன்வைக்கப்பட்ட நிலையில் வேளாண் எரிபொருட்கள் (யபசழகரநடள) ஒரு பயனுள்ள மாற்றாக முன்மொழியப்பட்டது. சோளம், சோயா, கரும்பு, பாம் எண்ணெய் போன்றவற்றிலிருந்து திரவ எரிபொருட்களை உருவாக்கி அதிலிருந்து போக்குவரத்துக்காகவும் கைத்தொழில் துறைக்கான எரிபொருட்தேவையை நிறைவுசெய்வது புதிய வழிமுறையாகவுள்ளது. இது சுத்தமான, வலுச்சிக்கனமான முறை என்று சொல்லப்பட்டதோடு சூழலுக்குப் பாதகமற்ற முறை என்றவகையில் பாராட்டப்பட்டது. ஆனால் இந்த உற்பத்திச் சங்கிலியின் ஒவ்வொரு படியிலும் ஏராளமான தண்ணீர் வீணாகிறது. அதற்கும் மேலாக உணவு உற்பத்தியை மேற்கொள்ளும் வயல்களில் இன்று எண்ணெய்த் தேவைக்கான பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. இது உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்த வல்லது.

இந்நிலையில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஆய்வொன்று வேளாண் எரிபொருட்கள் பருவநிலை மாற்றங்களைத் தூண்டுவதில் சுவட்டு எரிபொருட்களை விட மோசமானவை எனத் தெரிவிக்கிறது. வேளாண் எரிபொருட்களின் உற்பத்திச் சங்கிலியின் ஒவ்வொரு படிநிலையிலும் சூழலுக்கு மாசான புவி வெப்பமடைதலைத் தூண்டும் செயற்பாடுகள் நடப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வேளாண் எரிபொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் பயிர்கள் மிகக்குறைந்த அளவிலேயே கரியமில வாயுவை உறிஞ்சுவதாகவும் இறுதியில் அவை எரிக்கப்படும் போது அவையும் சூழலுக்குள் உமிழப்படுகின்றன. எனவே இவற்றால் அதிகமான பச்சையில்ல வாயுக்கள் வளிமண்டலத்துக்குள் வந்து சேர்கின்றன.

மல்லிகைப் பூக்களுக்கு மணம் இருந்தது என்பதை செவிவழியாகவும் புத்தகத்தின் ஊடும் எங்கள் எதிர்காலச் சந்ததி அறிந்துகொள்ளும். அதன் மணம் எவ்வாறு இருக்கும் என்பதை இரசாயன வாசனைத் திரவியங்கள் நுகரச் செய்யும். மல்லிகையின் மகத்துவம் மட்டுமல்ல மணமும் அற்றுப்போகும் ஒரு காலத்தை நோக்கியுள்ளோம். 'நிலா நிலா ஓடிவா' என்ற பாடலைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்காதீர்கள். ஏனெனில் மல்லிகைப் பூவை நிலா ஏன் கொண்டுவர வேண்டும் என்ற வினாவுக்கான பதில் உங்களிடம் இருக்கப் போவதில்லை.    

- See more at: http://www.tamilmirror.lk/181056/பர-வந-ல-ம-ற-றம-மணமற-ற-மல-ல-க-கள-#sthash.fGiVOrX2.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.