Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்படியும் நடக்கிறது -தந்த "ஊடுருவி" மகான் ! கரவெட்டி வரதன்:-

Featured Replies

இப்படியும் நடக்கிறது -தந்த "ஊடுருவி" மகான் ! கரவெட்டி வரதன்:-

 

 

இப்படியும் நடக்கிறது -தந்த "ஊடுருவி" மகான் ! கரவெட்டி வரதன்:-

 

என் அன்புக்கும் மதிப்பிற்குமுரிய மகான் 
 
அவர்களின் பிரிவுச் செய்தியை ஈழநாடு முன்னாள் உதவி ஆசிரியரும்  முன்னாள் கொழும்பு அலுவலக நிருபருமாகிய கந்தசாமி அண்ணா அனுப்பியது கண்டபோது 
முதலில் அதிர்ச்சியடைந்தேன்.
 
 நாட்டைவிட்டு திடீரென்று வெளிநாடு போன ஊடகவியலாளர்கள் போல   பிரிவுத் துயரைஅதிர்ச்சியுடன் தந்தது .
 
மகானை நான் கடைசியாகச் சந்தித்தது  கொழும்பு ஈழநாடு அலுவலகத்தின் முன்னுள்ள ஒரு விருந்தகத்தில் . அவர் இந்தியா போவதற்கு முன்னர்  கொழும்பு வந்திருந்தபொழுது என்னை விருந்துக்கு அழைத்திருந்தார்.  கொழும்பு ஈழநாடு அலுவலகத்தின் -இல்லத்தின் உரிமையாளரும் ஈழநாடு உரிமையாளரான  திரு ராஜன் சண்முகரத்தினமும் நானும் மகானும் அன்று அச் சந்திப்பில் கலந்திருந்தோம்.
 
ஈழநாட்டின் பூர்வீகத்  தொடர்போ என்று சொல்லலாமோ என்னவோ -திரு  ராஜனுடன்   இன்று வரைக்கும் தொடர்பு நீடித்தது.  குறிப்பாக மகாராஜா நிறுவனத்தில்  இணைந்த பின்னர் எனது "வாகனத்தின் "   பாவனை அலுவல்களுக்காக அவருடைய மோட்டார் இயந்திர நிலையத்திற்கே போக வேண்டியிருந்தது . கொழும்பு ஈழநாடு அலுவலகம் அமைந்திருந்த திரு ராஜனின் இல்லத்தில் தற்பொழுது அவரது வாகன இயந்திர பராமரிப்பு நிலையமும் உள்ளது. கப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தில் முன்னர் பணியாற்றிய திரு ராஜன் பின்னர் அங்கிருந்து விலகி வந்து இந்த நிறுவனத்தை ஆரம்பித்தாலும் - மகாராஜா நிறுவனத்தின் வாகனங்கள் அனைத்தையும் பழுது பார்ப்பதுடன் கண்காணிக்கும் பொறுப்பையும்  இதுவே செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
நான் இங்கு வந்த பின்னர் இரண்டு தடவை மகானுடன் பேசினேன்.  ஒன்று நட்பு ரீதியானது. மற்றது இலங்கையின் முன்னணி நிறுவனம் ஒன்று யாழ்ப்பாணத்தில் ஈழநாடு இதழை மீண்டும் வெளியிடுவது தொடர்பான அவரது ஆலோசனையையும் ஒத்துழைப்பையும் கேட்பதற்காக அவருடன் பேசினேன்.
 
மகான் அதற்குச் சொன்ன பதில் , இன்றைய தமிழ் ஊடகங்களில் அவர் கொண்டிருந்த வெறுப்பையும் சலிப்பையும் காட்டியது.
 
"கானம் (அவர் குறிப்பிட்டது உதயன் பிரதம ஆசிரியர் திரு கான மயில் நாதனை ) இருக்கிறான் என்று நம்பினேன். இப்போ கானத்திற்கும் ஏலாது என்று தெரிகிறது. அவ என்ன மாதிரி எழுதுவான் தெரியுமா... எல்லாரும் தமிழ் இப்போ கொல்கிறான்கள் .
 
பெருமாள் மொழிபெயர்ப்போட நின்றுவிட்டாராம்.
 
எங்கட காலத்தில ஊடகப்  பயிற்சி , பல்கலைக்கழகத்தில் ஊடகப் பயிற்சி என்று ஒன்றும் இல்லை .. ஆனால் இப்போ தெருவுக்குத் தெரு பல பயிற்சிகள் நடத்திறார்களாம் ..ஆனால் எவனும் ஒழுங்கா தமிழ் எழுதுறானா அல்லது செய்தியை செய்தியாய் எழுதுறானா என்று தெரியுதில்லை ...ஆசிரியர் பதவியில் இருக்கிறவங்களும் பதவிக்கும் சம்பளத்திற்கும் இருக்கிறான்கள் " என்று தமது உள்ளக்  கிடக்கையைச்    சொன்னார்.
 
 மகான் என்று எல்லாராலும் அன்பாக அழைக்கப்பட்ட  அமரர்   கே ஜீ மகாதேவா ஈழநாட்டின் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தான் நான் கரவெட்டி நிருபராக நியமனம் பெற்றேன் .
 
கரவெட்டி நிருபராக பணியாற்றிய எனது சகோதரர் வெளிநாடு சென்றதால் அந்த இடத்துக்கு நான் விண்ணப்பித்த போது  அண்ணர் மீதான ஒரு நம்பிக்கையும் காரணமாக அமைந்தது. பொதுவாக  மூன்று மாதங்கள் பார்த்த பின்னர்தான்  நிரந்தரமான நியாயமனக் கடிதம் வழங்கப்படும்.
எனினும் மகாதேவா எனக்கு ஒரு மாதத்திலேயே கொடுப்பனவைச்  சிபாரிசு செய்தார்.
 
"நல்ல எழுத்து ஐஸே ! அண்ணரும் நீரும் தமிழை மட்டுமல்ல எழுத்தையும் அழகாக எழுதுகிறீர்கள்  "- என்று சொல்லிவிட்டு என்னைச் சில கணங்கள் அவர் பார்த்துக் கொண்டிருந்த காட்சி நினைவுக்கு வருகிறது .
 
ரூபவாஹினிக்கு நான் நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற போது   ஈழநாடு செய்தி ஆசிரியர் என்ற வகையில் ஒரு கடிதம் கேட்டிருந்தேன்.
 
"எப்ப இன்ரவியூ ..போக முன்னர் நினைவு படுத்தும்"  என்று  சொன்னார்.
 
அப்படியே போக முன்னர் அவரிடம் போய்க் கேட்டேன் . அவர் அங்கு இருந்த அமரர் பெரி சண்முகநாதனை அழைத்து தான் சொல்வதை ஆங்கிலத்தில் எழுதச்   சொல்லிவிட்டு - எனது பதவியை  correspondent  என்று போடாமல் stringer என்று போடச்  சொன்னார்.
 
பெரி - "அது அங்க உள்ளவங்களுக்கு விளங்குமோ தெரியாது " என்றார் .
 
இது விளங்காட்டா அவனுக்கு மீடியா தெரியாது .அதனால எடுப்பார்கள் என்று தமக்கேயுரிய நக்கலான சிரிப்புடன் சொன்னார்.
 
இரண்டு மூன்று வசனங்களை மட்டும் கொண்ட மூன்றே  மூன்று  பந்திகள் கொண்ட கடிதம் அது.
 
நான் வாங்கிப் பார்த்தபோது , "என்ன கடிதம் சின்னனாய் இருக்கு என்று பார்க்கிறீரா ? ; இதன் வல்லமை அங்கு இருப்பவர்களில் தங்கியுள்ளது . இது விளங்கினால் உம்மை விளங்குவார்கள் என்று என் முதுகில் தட்டி வாழ்த்தினார்.
 
நான் ரூபவாஹினிக்கு 1984 ஜூலை மாதம் நேர்முகப் பரீட்சசைக்கு சென்றபொழுது என்னுடைய எல்லா சான்றிதழ்கள் கலைத்துறை சார்ந்த படங்களை பார்த்தவர்கள் மகானின் கடிதத்தை  ஆழமாக மெதுவாக வாசித்தனர். அங்கு இருந்த ஒருவர் ஆங்கில இலக்கியம் கவிதைகளில்  ஆர்வமும் தேர்ச்சியும்  மிக்க ஒருவர்.  
அவரின் நிருவாகத்தின் கீழ் நான் பின்னர் பணியாற்றினேன்.
அவர் நேர்முகத்தில் மகனின் கடிதத்தைத்  திரும்பித் திரும்பி வாசித்து என்னைப் பார்த்தார்.
 
மகாதேவா  சொல்லி, பெரி ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் அதுவாயினும்  மகானின்  சிறுகச் சொல்லித் தகவல் வழங்கும் ஆளுமையை   அக் கடிதம் காட்டி நின்றது. இக் கடிதம் தவறியமையால் இங்கு இட  முடியவில்லை.எனது 
தவறவிடப்பட்ட ஆவணங்களில் அதுவும் ஒன்று.
 
மகானின் "இப்படியும் நடக்கிறது" என்ற பத்தியை ஈழநாட்டின் பின் பக்கத்தில் படித்துவிட்டுத் தான் முதற்பக்கத்தைப் பார்க்கும் ஒரு காலத்தை ஈழநாடு கொண்டிருந்தது.
 
இப்படியும் நடக்கிறது ஊடுருவி ஒரு "ஸ்டார்ட்டர் (starter) -தொடக்கி வைப்பவர் போல அன்றைய பல வாசகர்களுக்கு இருந்தார் .
 
நான் ரூபவாஹினிக்கு போய் எனக்கு எனது நேர் முகப் பரீட்சசையில் நடந்ததை ஊடுருவி (மகான் ) தமது இப்படியும் நடக்கிறது பத்தியில் பின்வருமாறு எழுதியிருந்தார்.
 
அண்மையில் தலைநகரில் ஒரு நேர்முகப் பரீட்சசை நடந்தது.
 
நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்கள் பரீட்சசைக்குத் தோற்றினர் .
 
கூட்டுத்தாபனம் ஒன்றில் காலியாகவுள்ள பதவிக்கு இந்த நேர்முகப் பரீட்சசை நடைபெற்றது .
 
அந்த இளைஞர் 
நீதிபதிகள்" முன்னர் தமது "பைலுடன் " நின்றார் .பல "செர்டிபிகேட்டுகளும்" கைமாறின.
 
 நீதிபதிகளில் ஒருவர்," நீர் ஈழநாடு பத்திரிகையிலும் கடமையாற்றியிருக்கிறீர் . அது யாழ்ப்பாணத்திலிருந்துதானே வருகிறது .அது தடைசெய்யப்பட்டு விட்டதல்லவா?
 
நீதிபதிகளில் மற்றொருவர் ," நீங்கள் சொல்வது சாட்டர்டே ரிவியூவை . ஈழநாடு ஒரு தேசிய பத்திரிகை அது யாழ்பாணத்திலிருந்து நீண்ட காலமாக வருகிறது."
 
உங்கள் காதுகளுக்கு மட்டும் :-
 
இந்த இளைஞரை முதலில் விசாரித்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இவரது கேள்வியின் சந்தேகத்தைத் தீர்த்தவர் ஒரு சிங்களப்  பெண்மணி.
 
 மகாதேவாவின் சமூகப்பாங்கை வெளிக்காட்டும் அவரது  "இப்படியும் நடக்கிறது"
 பத்தியில் வந்த சில குறிப்புக்கள் அன்றைய யாழ்ப்பாணத்தினதும் தமிழ் சமூகத்தினதும் காலத்தின் கண்ணாடியாக அமைகிறது.
 
அவற்றில்  சிலவற்றை இங்கு நினைவு கூர்வது அன்னாருக்கு இந்நாளில் செய்யும் அஞ்சலியாகுமென நான் கருதுகிறேன்.
 
எமது அரச ஊடகங்கள் பற்றி அவர் எழுதிய சில:-
 
( தனியார் ஊடகங்கள் மன்னிக்க வேண்டும் ஏனெனில் அக்காலத்தில் வசை வாங்குவதற்கும் புகழ் பெறுவதற்கும் அரச ஊடகங்கள் மட்டுமே இருந்தன)  
 
 
வானொலியின் செய்தி வேகம் 
 
சர்வகட் சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு தமிழர் விடுதலைக்கு கூட்டணிச் செயலாளர் நாயகம் திரு அ .அமிர்தலிங்கமும் முன்னாள் திருமலை பாராளுமன்ற உறுப்பினர் திரு இரா. சம்பந்தனும் சென்னையிலிருந்து புறப்படுகின்றனர் என்று பி ரி ஐ செய்தி தெரிவித்துள்ளது.
 
மேலே நீங்கள் படித்தது இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இன்றைய தமிழ்ச் செய்தி  அறிக்கை.
 
ஒருவர் கதைத்தால் இரகசியம் இருவர் கதைத்தால் பரம இரகசியம் என்பார்கள் .இதனை சற்றுத் தலை கீழாகப் பார்ப்போம்.
 
பரம இரகசியம்:- மேற்படி செய்தி ஓர் எழுத்துக்கு கூட மாற்றமடையாமல் நேற்று முன்தினம் இரவும் நேற்றுக் காலையும்  இலங்கை ஒலி பரப்புக் கூடுத்த்தாபனத்தின் தமிழ்ச் செய்திகளில் இடம்பெற்றிருந்தன.
 
காதோடு காதாக :- திரு அமிர்தலிங்கமும் திரு சம்பந்தனும் நேற்று முன்தினம் பகலே கொழும்பு திரும்பிவிட்டனர்.
 
ஈழநாடு:07.02.84
*****
 
தமிழ்சசேவையின் கழுத்தறுப்பு 
 
 ஈழத்துப் படைப்பாளி ஒருவரின் நூல் வெளியீட்டு விழா சம்பந்தமான செய்தி இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவை யின் செய்திப் பிரிவுக்குச் சென்றிருக்கிறது .
 
காலையில் இடம்பெறும் மாகாணச்   செய்தியில் இடம்பெறுவதாக ஏற்பாடு .ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை , குறிப்பிட்ட நூலின் வெளியீட்டு விழாச் செய்தி இருட்டடிப்புச் செய்யப்பட்டுவிட்டது.
 
இது ஒரு செய்தி . மற்றைய செய்தி..
 
தமிழகத்தின் "குப்பை இலக்கியங்கள்" என்று வர்ணிக்கப்பட்டு கடந்த கால இலங்கை அரசால் கட்டுப்படுத்தப்பட்ட சஞ்சிகைகளில்  வெளிவந்த 
சிறுகதைகளைத் தொகுத்து ஜே எம் சாலியினால் தொகுக்கப்பட்ட சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா பற்றிய செய்தி, இலங்கை வானொலிச் செய்தியில் அதுவும் நண்பகல் பிரதான செய்தியில் இடம், நேரம், காலம் ஆகிய விப ரங்களுடன்  இடம்பெற்றிருக்கிறது.
 
அப்படியானால் இலங்கைப் படைப்பாளியின் நூல் வெளியீட்டுவிழாவில் தஞ்சாவூர் பல்கலைக்கழக விரிவுரையாளர் , யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் , உதவி அரசாங்க அதிபர் கலந்து கொள்வது செய்தி அல்ல.
 
தமிழக எழுத்தாளரின் மூன்றாம் ரகக் கதைகள் வெளியீட்டு விழாதான் இலங்கை வானொலியின் தரத்துக்குச் செய்தி!
 
ஈழநாடு 23.05.83
 
 *****
 
கனா  கண்ட  காலங்கள் ...
 
இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபனம் முன்னர் இலங்கை வானொலியாக இருந்தபோது ,அரை மணிநேரம் நடைபெற்ற வர்த்தக சேவை புகழ் பெற்றது. அச்சேவையைத் திறம்பட நடத்தி இந்தியாவிலும் இலங்கை வானொலியை அறிமுகப்படுத்திய பெருமை திரு என் மயில்வாகனனையே சாரும். விளம்பரத்துத்துறையில் பல புதுமைகள் செய்தவர் அவர்.
 
இதுபோல இப்பொழுது குரல் வளமிக்க பி எச் அப்துல் ஹமீத் ஒரு புதுமை  செய்கிறார்-பொருத்தமாக 
 
இரவுச் சேவை இரண்டு இரவின் மடியில் முடிந்ததும் "பி எச்" இப்படி நம்பிக்கை கூறுகிறார்.
 
"நாளை விடியும்போது நல்ல பொழுதாக அமைய இறைவனை வேண்டி விடைபெறுவது "என்று பய பக்தியுடன் சொல்கிறார்.
 
எத்தனை அர்த்தங்கள் 
 
(ஈழநாடு 12.11.1983)
 
 ******
 
 
குருட்டு அதிர்ஷ்டம் 
 
தேசிய லொத்தர் சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்தை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது செய்தியில் நேற்று மாலை பின்வருமாறு வெளியிட்டது:-
 
"அண்மையில் நிகழ்ந்த கலவரத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் சுவீப்  டிக்கற் விற்பனை பெருமளவு அதிகரித்துள்ளது.   வாரந்தோறும் இந்த அதிகரிப்புக் காணப்படுகிறது.
 
தெற்கில் எல்லாவற்றையும் இழந்து வடக்கே வந்தவர்களின் "அதிர்ஷ்ட நம்பிக்கையை " இது பிரதிபலிக்கிறது அல்லவா?
 
(ஈழநாடு 13.11.1983)
 
******
 
 பனைமட்டை இரகசியம் 
 
கண்டிப்பகுதியைச் சேர்ந்த சிங்கள வர்த்தகர் ஒருவர் யாழ்ப்பாணம் வந்து பணம் மட்டைகளைக் கொள்வனவு செய்து அவற்றைக் கண்டிக்கு கொண்டு சென்று தும்புகளாக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் அவர் நூற்று நாற்பது இலட்சம் ரூபா பெற்றுக் கொண்டார். இதற்கு ஊக்குவிப்பு உபகார பணமாக 14 இலட்சம் ரூபாவையும் அரசிடமிருந்து தட்டிக் கொண்டார் .
 
இந்த விபரத்தை வெளியிட்டவர் யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபை உறுப்பினரும் யாழ் மாவட்ட தெங்கு பனம்பொருள் உற்பத்தி விற்பனைச் சங்கத்தின் தலைவருமான எஸ் நடேசு அவர்கள்.
 
வடபகுதி தொழில் அதிபர்கள் ,வர்த்தகர்களுக்கு இது சமர்ப்பணம்.!
 
ஈழநாடு 14.07.1983
 
*******
 
 
பத்திரிகா தர்மம் 
 
ஒரு நாட்டின் ஐக்கியத்தை  கட்டிக் காப்பதில் தேசிய பத்திரிகைகளின் பங்கு எத்தகையது?
 
இது என்ன கேள்வி? ஜனநாயகத்தின் காவல் நாய்களே பத்திரிகைகள்  தானே என்று நீங்கள் முணுமுப்பது ஒருபுறமிருக்கட்டும்...
 
நேற்று வெளியான ஒரு செய்தி சின்ன சந்தேகத்தை எழுப்பிவிட்டிருக்கிறது..
 
ஒரே பத்திரிகை நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகைகள் அவை .ஆங்கிலம் .சிங்களம் ,தமிழ் மூன்றிலும் தினசரிகள் வெளிவருகின்றன.
 
ஜனாதிபதி ஜே ஆரின் அதி முக்கியம் வாய்ந்த உரை பற்றிய செய்தி அது. அதுவும் ஜூலைக் கலவரம் தொடர்பாக அவர் கூறிய அறிவுரை :-
 
"மீண்டும் ஒரு ஜூலைக்  கலவரம் வரக்கூடாது . தமிழக கடைகளை சிங்களவர்கள் தாக்கியதால் சிங்களவர்கள் தான் நஷ்டம் அடைந்தனர் . . தமிழர்களைத் தோற்கடித்து சிங்களவர்கள்வெற்றி அடைந்தனர்  என்று சில சிங்களவர் நினைத்தால் அது முட்டாள்த்தனமாகும்" என்று "பச்சை"யாகக் கூறியுள்ளார் ஜனாதிபதி .
இது யாருக்கு கூறிய அறிவுரை? சாட்சாத் . சிங்கள மக்களுக்குத்தான். அவர்கள் தான் இந்த அறிவுரையைப் பார்க்க வேண்டும் .படிக்க வேண்டும். ஆனால் செய்தி வந்த விதமோ..?
தமிழ்ப் பத்திரிகையில் அதன் முதல் பக்கத்தில் அது தலைப்புச் செய்தி.
 
அதே நிறுவனத்தின் ஆங்கிலப் பத்திரிகையில் , வரி வரியாக படித்து, தொடர்ச்சிகளையும் பார்த்து ,ஒரு படியாக ஏதோ ஒரு மூலையில் சில வசனங்களில் மூழ்கிக் கிடந்தது அந்தச் செய்தி .
 
ஆனால், சிங்கள பத்திரிகையில் ..பூதக்  கண்ணாடி பிடித்தும் கண்ணுக்குப் புலப்படவில்லை !
 
ஈழநாடு 17.07.84
 
*******
 
தரமான யாழ் வீடியோ 
 
யாழ்ப்பாணத்தில் திரைப்படப் பயிற்சி நிலையம் எதுவும் இயங்குகிறதா?
 
படத்தின் பெயர் :-"கல்லூரி வசந்தத்தில் "
வெறும் பொழுதுபோக்கு  அம்சம் எதுவுமில்லாமல் மாணவ சமுதாயத்தை வழிநடத்தக் கூடிய விதத்தில் படம் அமைந்திருக்கிறது 
தயாரிப்பு :-யாழ்ப்பாணக் கல்லூரி தமிழ் மன்றத்தினர்.
 
இயக்குனர்:- யாழ்ப்பாணக் கல்லூரி மாணவன் வீ எஸ் நேசானந்தன்  
 
சும்மா சொல்லக் கூடாது .படம் வீடியோப் படம் தான்.ஆனால் தென் இந்தியாவின் தரமான திரைப்படங்களுக்கு நிகராக இருக்கிறது.  சபாஷ்!
 
ஈழநாடு 16.07.84
 
*******
 
 
அமைச்சர் விமலா வீசிய குண்டு 
 
  அமைச்சர் ஒருவர் பேசிய பேச்சுக்கு குறித்து இருவர் சுவாரஸ்யமாகக் கதைத்துக்கொண்டிருந்தார்கள் 
 
ஒருவர்:- கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் விமலா ஒரு கூட்டத்தில் நல்லாய் பேசியிருக்கிறாரே ..?
 
மற்றவர்;- நானும்  பேப்பர் பார்த்தனான் அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லையே..?
 
ஒருவர்:- அப்படின்னா பேப்பரை ஒழுங்காய் படிக்கேல்லை என்று சொல்லுங்க. அமைச்சர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? யானையும் புலியும் காட்டில் ஒன்றையொன்று மோதிக்கொள்ளாமல் வாழமுடியுமானால், நாட்டில் ஏன் இரு வேறுபட்ட மக்கள் ஒன்றாகக் கூடி வாழ முடியாது ? என்று அமைச்சர் விமலா கேட்டிருக்கிறார்.
 
மற்றவர்:- அது சரி காட்டில் யானையும் புலியும் வாழ்ந்தாலும் ஒன்றாக வாழ்வதில்லையே ? அதுபோல இரு இன  மக்களும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம்  செளக்கியமே..."
 
 (ஈழநாடு 2.11.1983)
 
********
 
 
 காலத்தின்  ஆவணமாக இவரது "இப்படியும் நடக்கிறது " பல நிகழ்வுகளையும் சமூகத்தின்  அனுபவங்களையும் நமக்குத்தந்துள்ளது.
 
கதையல்ல நிஜம் என்ற இவரது நூல் இவற்றின் தொகுப்பாகவும், நினைவலைகள் இவரது ஊடக வாழ்வின் அனுபவங்களையும் தரும் வகையில் ஊடக மாணவர்களுக்கும் தாம் வாழ்ந்த சமூகத்திற்கும் நல்ல இரு ஆவணப் பதிவுகளைத்  தந்துவிட்டுச் சென்றுள்ளார் !
 
மகா தேவாவின் ஆத்மா சாந்தியடைவதாக!

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135874/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.