Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict

Featured Replies

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict

Jayalalithaa%20Time%20line%20.png

மிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

பெங்களூரு உயர் நீதிமன்றம் முதல் அப்போலோ மருத்துவமனை வரை என்னவெல்லாம் நிகழ்ந்தது..?

ja27_1.jpg

 

செப்டம்பர் 27, 2014: வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
செப். 29: ஜெயலலிதா, பிணை கேட்டு கர்நாடகா உயர் நீதிமன்றத்தை நாடினார்.
செப். 30: உயர் நீதிமன்றம், வழக்கை அக்டோபர் 1 வரை ஒத்திவைத்தது.
அக்டோபர் 2: உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால நீதிமன்றம், வழக்கை அக்டோபர் 7-க்கு ஒத்திவைத்தது.
அக். 7: நீதிமன்றம் பிணைக்கு மறுப்பு.
அக். 9: ஜெயலலிதா, உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
அக். 17: உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது.
டிசம்பர் 18: பிணை, மேலும் நான்கு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம், கர்நாடகா உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு ஏற்படுத்த உத்தரவு.

ja27_2.jpg

 

ஜனவரி 1, 2015: கர்நாடகா உயர் நீதிமன்றம், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தலைமையில் சிறப்பு அமர்வு உருவாக்கம்.
ஜனவர் 5: வழக்கு விசாரணை தொடக்கம்.
பிப்ரவரி 5: ‘‘தன்னையும் இந்த வழக்கு விசாரணையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்’’ என்று தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் கொடுத்த மனு தள்ளுபடியானது.
பிப். 26:  ‘‘அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்க வேண்டும்’’ என்று அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
ஏப்ரல் 7: உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை வெளியிடத் தடை விதித்தது.
மே 11: சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து கர்நாடகா உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மே 23: மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார்.
ஜூன் 5: ஜெயலலிதா, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
ஜூன் 23: கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
ஜூன் 30:  ஜெயலலிதா ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.

ja27_3.jpg


ஏப்ரல் 25, 2016:  15-வது பொதுத் தேர்தலில் மீண்டும் ஜெயலலிதா ஆர்.கே.நகரில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
மே 19: ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
மே 23: மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார்.
மே 23 : பதவி ஏற்ற அதே நாளில், மதுக்கடைகளை பகுதிபகுதியாக மூடுவது தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டார்.
செப்டம்பர் 17: அம்மா திருமண மண்டபம் திட்டத்தை அறிவித்தார்.
 செப் 21: சின்னமலை முதல் மீனாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை திறந்து வைத்தார்.
செப் 22: நள்ளிரவு, உடல்நிலை சுகவீனத்தால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
செப் 26: உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

http://www.vikatan.com/news/coverstory/68862-from-parappana-agrahara-prison-to-apollo-hospital---jayalalithaa-two-years-timeline-2yearsofbangaloreverdict.art

  • தொடங்கியவர்

சிறை எண் 7402 முதல் அறை எண் 2008 வரை... செப்டம்பர் 27-ம் ஜெயலலிதாவும்! 

j1.jpg

ஜாதகம், சோதிடம், வாஸ்து என்று யோகத்தைக் கணிக்க எத்தனை இத்யாதிகள் இருக்கிறதோ, அத்தனையிலும் நம்பிக்கை உள்ளவர் ஜெயலலிதா. அவர், போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் இருந்து வெளியில் கிளம்புவதாக இருந்தாலும் சரி... தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வதாக இருந்தாலும் சரி... அனைத்தும் இந்த வாய்ப்பாடுகளுக்குள்தான் அமையவேண்டும். இதற்காகவே, போயஸ் கார்டனுக்குள், பிரத்யேகமாக இயங்கும் சிறப்புக்குழு ஒன்று சுற்றிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின் சோதிட நம்பிக்கை அத்தனை வலுவானது. அவருடைய நம்பிக்கையின் அடிப்படையில் பார்த்தால், ஜெயலலிதாவுக்கும் செப்டம்பர் 27-ம் தேதிக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. 

ஏனென்றால், 2014-ம் ஆண்டு, இதே செப்டம்பர் 27 அன்றுதான், பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை குற்றவாளி என்று அறிவித்தது; அதில் அவருடைய முதலமைச்சர் பதவி பறிபோனது; அடுத்துவந்த மூன்று மாதங்களும், ஜெயலலிதா சிறையில் இருந்தார். இப்போது 2016-ம் ஆண்டு இன்றையத் தேதியில் (செப்டம்பர் 27) ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவனையில் அடைக்கலமாகி உள்ளார். 


2014 செப்டம்பர் 27 

தமிழகம், டெல்லி, கர்நாடகம் என்று 20 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது சொத்துக்குவிப்பு வழக்கு. அதில், தீர்ப்பு வழங்க, சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா இந்த தேதியைத்தான் குறித்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நாள் நெருங்கியபோது, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க பேரியக்கம், பெங்களூருக்கு இடம் பெயர்ந்தது என்றே சொல்லலாம். சிலிக்கான் சிட்டி முழுவதும் அ.தி.மு.க கரைவேட்டிகள், கொடிகட்டிய கார்களில் வலம் வந்து கொண்டிருந்தன. 

j4.jpg

சாலைகள் அனைத்தும் பரப்பன அக்ரஹாரவைநோக்கி

27-ம் தேதி அதிகாலை முதல், பெங்களூருவின் சாலைகள் அனைத்தும் பரப்பன அக்ரஹாராவை நோக்கித் திசைமாறின. அதிகாலை 6 மணிக்கே, அந்த வழித்தடம் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. நீதிமன்றம் இருக்கும் இடத்துக்கு 5 கி.மீக்கு முன்பே, போலீஸ் தடுப்புகளைப் போட்டது. அதற்குமேல் சொல்லவேண்டும் என்றால், பெங்களூரு போலீஸ் கொடுத்த ‘பாஸ்’ இருக்க வேண்டும். ‘பாஸ்’ இல்லாதவர், தமிழகத்தில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தடுத்துநிறுத்தி, திருப்பி அனுப்பப்பட்டார். 
அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் 5 கி.மீ-க்கு முன்பே தங்களின் கார்களில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். அங்கிருந்து நடந்துதான் செல்லவேண்டும் என்றது கர்நாடகா போலீஸ். அப்போது, தமிழகத்தில் ஆட்சியிலும் கட்சியிலும் நால்வர் அணி ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தது. அந்த அணியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிசாமியும் பரப்பன அக்ரஹாரா ஜங்ஷனில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அந்த இடத்தில், தாங்கள் தமிழ்நாடு ‘மினிஸ்டர்’ என்று சொல்லி அவர்கள் அடையாள அட்டையையும் காண்பித்தனர். அதன்பிறகே, அனுமதிக்கப்பட்டனர். 


7.30-க்கு வந்த எதிர்முகாம்

காலை 7.30 மணிக்கே, தி.மு.க வழக்கறிஞர்கள் தாமரைச்செல்வன், சரவணன், நடேசன், பாலாஜி சிங் நீதிமன்றம் வந்து சேர்ந்தனர். அதன்பிறகு, அ.தி.மு.க அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், மேயர்கள், மாவட்டச் செயலாளர்கள் வந்தனர். 

ஜெயலலிதா பராக்... பராக்... 

சென்னையில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மூவரும் மகிழ்ச்சியாகவே பெங்களூரு கிளம்பினர். சென்னை விமான நிலையத்தில் 8.57-க்கு தனி விமானத்தில் கிளம்பி, பெங்களூரு ஹெச்.ஏ.எல் விமான நிலையத்தில் 9.40-க்கு தரையிறங்கினர். கர்நாடக அ.தி.மு.க மாநிலச் செயலாளர் புகழேந்தி மலர்க்கொத்துக் கொடுத்து, ஜெயலலிதாவை வரவேற்றார். பிறகு அங்கிருந்து ‘கான்வாய்’ மூலம் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை வளாகத்தில் உள்ள நீதிமன்றம் வந்தனர். விமான நிலையத்தில் இருந்து பரப்பன அக்ரஹாரா வரை, ஜெயலலிதாவை வரவேற்று சரியாக 500 (அது என்ன கணக்கோ!) ஃபிளெக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகத்துக்கு ஜெயலலிதா வந்தபோது, நேரம் 10.45 மணி.


நேருக்கு நேர் முதல் சந்திப்பு... 

9.50-க்கு நீதிபதி குன்ஹாவின் கார், பலத்த போலீஸ் பாதுகாப்போடு நீதிமன்ற வளாகத்துக்குள் வந்தது. அங்கு வந்தவர், நீதிமன்றத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்டு இருந்த அறைக்குச் சென்றுவிட்டார். அதன்பிறகு, 10.55-க்கு நீதிமன்றத்துக்குள் வந்தார். அதையடுத்து, நீதிமன்ற டவாலி, 'ஜெயலலிதா... சசிகலா... சுதாகரன்... இளவரசி...’ என்று பெயர்களை வாசிக்க, ஒவ்வொருவராக உள்ளே வந்து, குற்றவாளிக் கூண்டில் நின்றனர். அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் உட்கார்ந்துகொள்ளலாம்’ என்றார் குன்ஹா.. அதைக்கேட்டதும், நீதிபதிக்கு கைகளைக் கூப்பி வணக்கம் சொன்னபடி நால்வரும் அமர்ந்தனர். அந்தச் சந்திப்புத்தான் குன்ஹாவும் ஜெயலலிதாவும் நேருக்குநேராக பார்த்துக் கொண்ட முதல் சந்திப்பு.

j3.jpg

மைக்கேல் டி குன்ஹா

நால்வரும் குற்றவாளிகள்... - மைக்கேல் டி குன்ஹா

11 மணிக்கு, சில ஆவணங்களைப் புரட்டத் தொடங்கிய நீதிபதி குன்ஹா, நால்வரையும் பார்த்து, “உங்கள் மீது போடப்பட்ட வழக்குகள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிருபிக்கப்பட்டு உள்ளது. அதனால் நீங்கள் நால்வரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கிறேன்” என அறிவித்தார். மேலும், “இந்தத் தீர்ப்பு நகலில், நான் நிறைய கையெழுத்துப்போட வேண்டி இருக்கிறது. அதனால் மதியம் 1 மணிவரை நீதிமன்றத்தை ஒத்திவைக்கிறேன். இந்தத் தீர்ப்பு பற்றி நீங்கள் சொல்ல விரும்பும் கருத்துகளை அப்போது சொல்லலாம். முதல் குற்றவாளியான ஜெயலலிதா உட்பட நான்கு பேரின் பெயில் பாண்ட்-களை கேன்சல் செய்கிறேன். பரப்பன அக்ரஹாரா போலீஸ் இவர்களைக் கஸ்டடி எடுக்கவும் உத்தரவிடுகிறேன்'' என்றும் அறிவித்துவிட்டு தன் அறைக்குச் சென்றார். 

முடியிழந்த முதலமைச்சர்... கொடி இழந்த கார்...

நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பையடுத்து, நீதிமன்ற அறையில் இருந்து வளாகத்துக்கு வந்த ஜெயலலிதா, அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை மட்டும் தனியாக அழைத்துப் பேசினார். அந்த நேரத்தில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் காரில் இருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டது. மீண்டும் மதியம் 1 மணிக்கு நீதிபதி குன்ஹா தன் இருக்கையில் வந்து அமர்ந்தார். “நீங்கள் எதாவது சொல்ல விரும்புகிறீர்களா?'' என்று கேட்டார். அதற்கு ஆங்கிலத்தில் பதில் சொன்ன ஜெயலலிதா, “இது அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால் போடப்பட்ட வழக்கு. 18 வருடங்களாக இந்த வழக்கில் தி.மு.க-வினர் எனக்கு கடுமையான மனஉளைச்சல் கொடுத்தனர். இந்த வழக்கு போடப்பட்டபோது எனக்கு வயது 48. தற்போது எனக்கு 66 வயதாகிறது. இந்த வழக்கால் எனக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மனச்சோர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நான் நிம்மதியை இழந்துள்ளேன். இதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார். அதன்பிறகு, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பும் இதுபோல் தங்கள் தரப்பை எடுத்து வைத்தனர். அனைத்தையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் தண்டனை விவரத்தை 3 மணிக்கு அறிவிக்கிறேன்'' என்று சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றுவிட்டார் நீதிபதி.


4 ஆண்டு சிறை... 100 கோடி அபராதம்..

14VBG_JAYA__269092f.jpg

மூன்று மணி வரை கோர்ட் ஹாலுக்கு அருகில் இருந்த அறையில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்கள் அமர்ந்திருந்தனர். மூன்று மணிக்கு நால்வரும் கோர்ட் ஹாலுக்குள் வந்ததும் கோர்ட் ஊழியர், “நீதிபதி நான்கு மணிக்கு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார்!'' என்று சொல்ல... மீண்டும் நால்வரும் அறைக்குச் சென்றுவிட்டனர். நான்கு மணிக்கு நீதிபதி குன்ஹா தன் இருக்கைக்கு வந்தார். இதையடுத்து, சசிகலாவும் இளவரசியும் ஆளுக்கு ஒரு பக்கமாக ஜெயலலிதாவை கைத்தாங்கலாகப் அழைத்துக் கொண்டு நீதிமன்றம் வந்தனர். குற்றவாளி கூண்டில் இருந்த சேரில் ஜெயலலிதா அமர்ந்து கொண்டார். இளவரசி இன்னொரு பக்கம் அமர்ந்து கொண்டார். சசிகலா மட்டும் உட்காரவே இல்லை. ஜெயலலிதாவின் தோள் மீது கைவைத்தபடியே நின்றிருந்தார். அப்போது சசிகலாவின் கண்கள் கலங்கியது. நீதிபதி குன்ஹா வந்து அமர்ந்ததும், எல்லோரையும் பார்த்துவிட்டு, தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார். “நீங்கள் சொன்ன கருத்துகளையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஊழலுக்கு எதிராக நீதிமன்றங்கள் மென்மையான போக்கை ஒருபோதும் கடைபிடிக்காது. ஊழல் வழக்கில் கருணை காட்டக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. ஒரு வழக்கில் நீதி வழங்கும்போது கண்ணைக் கட்டிக்கொண்டு வழக்கின் தன்மையைப் பார்த்துதான் நீதி வழங்க வேண்டும். முதல்வரே தவறு செய்தால் அவருக்கு கீழ் பணி புரிகின்றவர்களிடம் எப்படி நேர்மையை எதிர்பார்க்க முடியும்? நீங்கள் செய்திருப்பது கருணை காட்டக்கூடிய குற்றமல்ல. இது மக்களுக்கு எதிரான குற்றம். சாதாரண குற்றம் என்று கருதி தண்டனை வழங்க முடியாது. இந்த வழக்கில் உங்களுக்கு 7 வருட அதிகபட்ச தண்டனைதான் வழங்க வேண்டும். இருந்தாலும் நான் உங்களுடைய வயதையும், 18 ஆண்டு தாமதத்தையும் கருத்தில் கொண்டு 50 சதவிகித தண்டனை வழங்க வேண்டும் என நினைக்கிறேன். இந்த வழக்கில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு உள்ளவர்கள், முதல் குற்றவாளி செய்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இந்தியத் தண்டனைச் சட்டம் 109-ன் படி 'குற்றத்துக்கு உடந்தை (aiding and abet)’ என்பதும் குற்றமாகிறது. எனவே, நான்கு பேரும் குற்றவாளிகள் என்று இந்த நீதிமன்றம் அறிவிக்கிறது. குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்குத் தண்டனையாக ஒவ்வொருவருக்கும் தலா நான்கு வருடங்கள் சிறைத் தண்டனை அளிக்கிறேன். அதுபோல, முதல் குற்றவாளிக்கு அபராதத் தொகையாக 100 கோடி ரூபாய் விதிக்கிறேன்.'' என்று தீர்ப்பளித்தார். 

நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு...

ஜெயலலிதாவுக்கு பரப்பன அக்ரஹாரா சிறையில் மருத்துவர்கள் உடல் நிலையை பரிசோதித்தனர். அப்போது அவருக்கு ரத்த அழுத்தம் சீரற்ற நிலையில் இருந்தது. அதற்கான சிகிச்சை அளித்தனர். அரை மணி நேரத்தில் ரத்த அழுத்தம் சீரானது. அதன்பிறகு, நான்கு பேரையும் சிறைக்கு அனுப்ப நீதிபதி குன்ஹா உத்தரவு பிறப்பித்தார். அதன் பிறகு, ஜெயலலிதாவின் காரில் அவரை அழைத்துச் சென்று பரப்பன அக்ரஹாரா சிறையில், எண் 7402 அறைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மணி சரியாக இரவு 8.20. இப்படித்தான் மிக மிக சோதனையான நாளாக, 2014 செப்டம்பர் 27-ம் தேதி ஜெயலலிதாவுக்கு இருந்தது. 

2016 செப்டம்பர் 27 

j5.jpg

2016 செப்டம்பர் 27-ம் தேதியும், ஜெயலலிதாவை, அவருடைய வாழ்க்கையின் மிக மிக மோசமான சோதனைக் கட்டத்தில் கொண்டுவந்து நிறுத்தி உள்ளது. கடந்த 22-ம் தேதி இரவு உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, இன்றும் அங்குதான் இருக்கிறார். அவருக்கு எடுக்கப்பட்ட மிக முக்கியமான பரிசோதனைகளின் முடிவுகளுக்காக காத்திருக்கிறார். மொத்தம் 18 வகையான மருத்துவப் பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுக்காகக் காத்திருக்கிறார். நிச்சயமாக இந்த செப்டம்பர் 27-ம் தேதியும் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் வேதனையான நாளாகத்தான் பதிவாகி உள்ளது.

குன்ஹா இப்போது...

 

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, அதன்பிறகும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பொறுப்பிலேயே இருந்தார். ஆனால், ஒருமாதம் கழித்து, 2014 நவம்பர் 1-ம் தேதி, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு, பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இப்போதுவரை அவர் பதிவாளர் பொறுப்பிலேயே நீடிக்கிறார்.

http://www.vikatan.com/news/coverstory/68852-september-27-and-jayalalithaa.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.