Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவல் மரம்

Featured Replies

நாவல் மரம்

சிறுகதை: அகரமுதல்வன், ஓவியங்கள்: ம.செ.,

 

`அவளை இன்று பார்க்க வேண்டும்' என நினைத்தபடியேதான் நித்திரையில் இருந்தே கண்விழித்தேன். பிரிவுக் காலங்களின் பொழுதுகள் எல்லாம் எனக்குள் குடிகொண்டுவிட்டதைப் போன்று சலனமுற்றுக்கொண்டே இருக்கிறேன். இரவும் பகலும் தணல் என எரிந்தன.

நானும் என் சிந்தையும் சாம்பலாகியும்,  அவளின் கண்களும், மூக்கின் மச்சமும், பூவரசம் இலையின் நரம்புச் சிரிப்பும், எரியாத விருட்சத்தின் வேராக இன்னும் இன்னும் எனக்குள் இறங்கி வளர்கின்றன. அவளின் நினைவுகள், வளரும் நிலம் என மாறிய என் பொழுதுகளில் யுத்தம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. எறிகணைகள் விழுந்து வெடித்த வீதிகளில் ஊரே இடம்பெயர்ந்துகொண்டிருந்த ஒரு மதிய நேரத்தில், கோயில் கிணற்றில் தண்ணீர் எடுக்கப் போனபோதுதான் அவளைக் கண்டு கதைத்தது.

“எங்க போய் இருக்கப் போறியள் ஆரணி?'' என்று நான் தான் அவளிடம் கேட்டேன். கோயில் கிணற்றில் நீர் அள்ளிய படி இருந்த கப்பிச் சத்தத்தின் இடையில் முகம் இறுகிக்கிடந்த அவள், ``தெரியாது'’ என்று சொன்னாள்.

இந்த நிலத்தில் இடம்பெயரும் கால்கள், எங்கு இளைப்பாற முடியும்? இந்த நிலத்தில் இளைப்பாறல் என்றால், சாவு.

``நாங்கள் வள்ளிபுனத்தில் இருக்கப்போகிறோம். எங்கட சொந்தக்காரரோட காணி இருக்கு'' என்று, நான் போகப் போகும் ஊரை அவள் கேட்காமலேயே சொன்னேன்.

அவள், என்னை கண்கள் விழுங்கப் பார்த்துக்கொண்டாள். நான் அவளின் கண்களை எப்போதும் `கண்ணிவெடிகள்' எனச் சொல்லித்தான் செல்லம் கொஞ்சுவேன். கிணற்றில் சனம் கூடிக்கொண்டே இருந்தது. இந்த யுத்தத்தில் ரத்தங்களால் எழுதப் படும் அவலங்களைப்போலவே, என்னையும் ஆரணியையும் போன்ற காதலர்கள் இருக்கும் இடம்தெரியாமல் சிதறிப்போவது நிகழ்ந்துகொண்டே இருந்தது. யுத்தம் முதலில் பறிக்கும் உயிர், அன்பு எனும் பயிர். ஆரணியின் கைகளில் இருந்த இரண்டு போத்தில்களையும் வாங்கிக்கொண்டு நான் வரிசையில் நின்று தண்ணீரை நிரப்பிக் கொடுத்தபோது, அவளின் கண்களில் நீர் நிரம்பிக்கிடந்ததை நான் பார்த்தேன்; பார்க்க மறுத்தேன்.

p76a.jpg

“சந்திப்பம். ஷெல் அடியளுக்கத் திரியாமல் இருங்கோ” என்று சொல்லிவிட்டு, போத்திலை வாங்கும்போது அவளின் விரல்கள் எனது விரல்களை அணைத்தன. அவள் விரல் அணைப்பின் தகிப்பில் காடு எரிவதைப் போன்ற வெப்பம் இருந்தது. நான்கு அடிகள் நடந்து சென்று என்னைத் திரும்பிப் பார்த்தவளின் முகத்தில் கண்ணீர் சரிந்து விழுந்துகொண்டே இருந்தது. புறாக்குஞ்சின் இதயத்தில் முள்ளுக்கம்பி ஏறியதைப்போன்று வலிக்கத் தொடங்கியது. எனக்குள் நான் விசும்பும் சத்தம் கேட்டு, கிணற்றடி வேம்பில் இருந்து குயில் ஒன்று கூவத் தொடங்கியது. ஆரணியின் கண்ணீர் சரிந்த கண்கள், எனக்குள் பேரலையை எழுப்பி உலுக்கின. வெயில் ஏறி தாகத்தைப் பெருக்கியது. நான் தண்ணீரைக் குடிக்காமல், எங்கட வீட்டுக்காரர்கள் இருந்த இடத்துக்கு மிக வேகமாக நடந்துபோய்க்கொண்டிருந்தேன்.
`அக்காவுக்கு சுகம் இல்லாமல் வந்திட்டுது' என்றும், `சுமதி அக்காவோட உடுப்பு மாத்த அந்தப் பக்கம் போய்ட்டாள்' என்றும் கோயிலின் மடப்பள்ளியைக் காட்டி அம்மா சொன்னாள். மரங்களின் நிழல், யுத்த நிலத்தின் மக்களை வெயிலில் இருந்து சற்றே காப்பாற்றிக்கொண்டிருந்தது. கோயில் வெளிவீதி எங்கும் திருவிழாவைப்போல சனங்கள் நிரம்பியிருந்தனர். ஆரணியை மட்டும்தான் கண்கள் இப்போதும் தேடிக்கொண்டிருந்தன. கண்கள் தேடும் பொருளை, காலம் மறைத்துக்கொண்டே இருக்கும்.

நேற்று பின்நேரம் வள்ளிபுனம் வந்த தீபன்தான், ஆரணி தர்மபுரத்தில் இருப்பதாகத் தகவல் சொன்னான். தீபனும் நானும் காலமை வெள்ளென வெளிக்கிட்டு தர்மபுரத்துக்குப் போறது எண்ட முடிவோடதான் படுத்தனாங்கள். தீபன் நித்திரைச் சாமி. அவன் ஒவ்வொரு நாளும் நித்திரைகொள்ளும் கும்பகர்ணன். தீபனைத் தட்டி எழுப்பினால், எழும்புறது சாத்தியம் இல்லை. முகத்தில் அடிச்சுத்தான் எழுப்பினான். முகம் சிவந்து தூசணத்தால் பேசினபடிதான் தீபன் எழும்பினான். முகத்தைக் கழுவி புட்டும், பழைய பயித்தங்காய்க் குழம்பையும் சாப்பிட்டிட்டு, தர்மபுரத்தை நோக்கி சைக்கிளை உழக்கத் தொடங்கின தீபன், விசுவமடு வரை ஒரே மூச்சில் வந்திட்டான். தீபனின் கால்கள், சைக்கிளில் என்னை ஏற்றித் திரிந்ததுபோல அவனின் மனைவியைக்கூட இனி சுமக்காது.

விசுவமடுவில் உள்ள ஒரு கடையில் சர்பத் வாங்கிக் குடித்து விட்டு மீண்டும் சைக்கிளை எடுத்த தீபன், என்னை ஓட்டச் சொன்னான். எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்றாலும் ஓட்டித்தான் ஆகவேண்டும். போய்க்கொண்டிருக்கும் வழியில் நாவல் மரம் ஒன்றில் பழங்களை ஆய்ந்து கொண்டிருந்த சின்னப் பொடியளின் கூட்டத்தைக் கண்டு நான் சைக்கிளை நிப்பாட்டிவிட்டேன். தீபனை, சைக்கிளில் இருந்து கீழே இறங்கச் சொன்னேன். அவன் முன்னால் இருந்துகொண்டு ஓர் ஓணானைப் போல தலையைத் திருப்பி, ``ஏனடா?'' என்றான்.

``ஆரணிக்கு நாவல் பழம் என்றால் விருப்பம். கொண்டுபோய்க் குடுத்தால் சந்தோஷப்படுவாள்'' என்று சொன்னதும், தீபன் எதுவும் கதைக்க வில்லை. சிரித்துக்கொண்டே இறங்கி மரத்தின் கீழே விழுந்துகிடந்த ஒரு நாவல் பழத்தின் மணலை ஊதித் தள்ளி வாய்க்குள் போட்டான். எனக்கு மரம் ஏறத் தெரியாது. நான் மேலே நிற்கும் சின்னப் பொடியளிடம் கேட்டு வாங்கலாம் என்று நினைக்கவில்லை. அவர்கள் நாவல் மரத்தில் நின்றுகொண்டு பழங்களைச் சாப்பிடும் தோரணையும், கிளை பற்றி கிளை தாவும் விதமும் என்னைப் பயமுறுத்தின. நான் தீபனைப் பார்த்தேன். அவன் கீழேகிடந்த நாவல் பழங்களை ஊதி ஊதிச் சாப்பிட்டுக்கொண்டே இருந்தான். எனக்கு மரம் ஏறத் தெரியாது எனத் தெரிந்தி ருந்தும், வேண்டுமென்றே என்னைக் கவனியாமல் நின்றான்.

“டேய் தீபன்... மரத்துல ஏறி கொஞ்சம் பழம் ஆய்ஞ்சுதாவனடா” என்று நான் கேட்டது, பிச்சை கேட்பதுபோல அவனுக்கு இருந்திருக்கும். அவன் என்னைப் பார்த்து சிரித்தான்.
“நீ கொண்டுபோய்க் கொஞ்சுறதுக்கு நான் கொஞ்சப் பழத்தை உமக்கு மரத்துல ஏறி ஆயவேணுமோ?” என்று நக்கலாகக் கேட்டான்.

நான் ஒரு நமட்டுச் சிரிப்போடு அவனின் நக்கலை ஊதித் தள்ளினேன். தீபன் எப்போதும் எனது அன்பானவன். அவனின் வெள்ளந்தி மனமும், என்னோடு பழகும் நட்பும் வானத்து மழையின் தூய்மை. நான் தீபனை எத்தனையோ இடங்களில் விட்டுக்கொடுக்காமல் பேசியிருக் கிறேன் என்றாலும், என்னைப் பற்றி தவறாகப் பேசுபவர்களை தீபன் அடித்தே இருக்கிறான். நானும் ஆரணியும் காதலிப்பது தெரிந்து, எனக்கு வாழ்த்துச் சொன்ன நாளில் இருந்து இன்று வரை அவன் எனக்கு அணுக்கமாகவே இருக்கிறான். வானத்தின் வீழாத நட்சத்திரமாக தீபன் என்றும் எனது இதயத்தில் இருந்து மறைய மாட்டான். தீபன், மரத்தில் ஏறி நாவல் பழங்களை ஆய்ந்து, தான் போட்டிருந்த தொப்பியில் சேர்த்துக் கொண்டு கீழே இறங்கிவிட்டான். தொப்பி நிறைய நாவல் பழங்கள். சைக்கிளை எடுத்து உற்சாகமாக உழக்கத் தொடங்கிய என்னை, கடை ஒன்றில் நிறுத்தி பை ஒன்றை வாங்கச் சொன்னான். கடை ஒன்றில் பையை வாங்கி, நாவல் பழங்களை தொப்பியில் இருந்து பைக்கு இடமாற்றம் செய்துவிட்டு, நாவல் பழக் கறை படிந்திருந்த தொப்பியைத் தூக்கி எறிந்தேன்.

``உனக்கு புதுத் தொப்பி வாங்கித் தாறன்'' என்று தீபனைப் பார்த்துச் சொன்னேன்.

“நீ புதுத் தொப்பி வாங்கித் தா. ஆனால், நான் இந்தத் தொப்பியை எடுக்கிறன்” என்று அதை அணிந்துகொண்டான்.

நாவல் பழத்தை பையில் போட்ட பின், என்னால் சைக்கிள் ஓட்ட முடியாது. நான் ஆரணியின் கைகளில் இந்த நாவல் பழங்களைக் கொடுக்கும்போது, அவள் கண்களில் இருந்து பூக்கும் எத்தனையோ ஆயிரம் பழங்களின் பூக்களை நினைத்துக்கொண்டே வந்தேன். அவளின் மூக்கு மச்சத்தின் மேலே துளிர்க்கும் வியர்வையை நான் `மச்சத்தீவு' என எழுதிய கவிதையை ரசித்து அவள் தந்த பறக்கும் முத்தம், எனக்குள் இப்போதும் சிறகு பூட்டுகிறது. தீபன், சைக்கிளைக் களைப்பற்று உழக்காதவனைப்போல உழக்குகிறான். தீபன், நெத்தலி ஆற்றுப்பாலத்தைக் கடந்து சைக்கிளை உழக்கியபோது வேகம் குறைவானது.

``டேய், நான் மாறி ஓட்டவா?'' என்று கேட்டேன்.

``நடந்துபோகும் தூரம்தான் இருக்கு. நீ முன்னுக்கே இரு'' என்று பிடரியில் தட்டிச் சொன்னான்.

தீபன், பிரதான சாலையில் இருந்து உள்வீதியில் சைக்கிளைத் திருப்பினான். ஓடும் வாய்க்காலை பாலத்தின் வழி கடந்து சைக்கிள் ஓடிக் கொண்டிருந்தது. மணல் ஒழுங்கையில் சைக்கிளைக் கஷ்டப்பட்டு ஓட்ட முயற்சித்து முக்கினான் தீபன்.

``நான் இறங்கி நடக்கிறேன்'' என்று கீழே இறங்கிவிட்டேன். பூவரசம் மரங்கள் பூத்துக் கொண்டு வேலியாக நின்றன. மணல் ஒழுங்கையில் நடந்துகொண்டு ஒரு முடக்கில் நானும் தீபனும் திரும்புகிறோம்... எதிரே ஆரணியும் சுகந்தி அக்காவும் நடந்து வருகிறார்கள்.

நாவல் பழங்களின் இனிப்பும் ஒருவித உவர்ப்பும் அந்தக் கணத்தில் எனக்குள் அமுதென ஏறியது. என்னையும் தீபனையும் அவர்கள் கண்டுவிட்டார்கள். சுகந்தி அக்கா, ஆரணியின் மச்சாள்காரி. நாங்கள் காதலிப்பது தெரிந்து என்னை நக்கலடிப்பது தான் அவாவுக்கு ஒரு வேலையாக இருந்தது. சிரித்துக்கொண்டு எனக்கு கைகாட்டிய சுகந்தி அக்காவை, ``அந்த நிழலிலேயே நில்லுங்கள் வாறோம்'' என்றேன். ஆரணி, கறுப்பு நிறப் பாவாடையும் மண் நிறச் சட்டையும் போட்டிருந்தாள். அவளின் காதில் எப்போதும் இருக்கும் முத்துத் தோடுகள், இங்கிருந்து பார்க்கும்போது எனக்குத் தெரியவில்லை.

p76b.jpg

நானும் தீபனும் பக்கத்தில் போனவுடன்... “எப்பிடி இருக்கிறியள்?” என்று கேட்ட சுகந்தி அக்கா, “என்ன... நல்லாய் மெலிஞ்சு போயட்டிங்கள். பிரிவு மெலியச் செய்திருக்கு” என்று நக்கலைத் தொடங்கிச் சிரித்தாள்.

நான் ஆரணியைப் பார்த்தேன். தன் கைக்கு எட்டிய பூவரசம் இலை ஒன்றைப் பிய்த்து, உள்ளங்கையில் வைத்து உருட்டிக் கொண்டிருந்தாள்.

``இந்தாரும் உமக்குத்தான் நாவல் பழம்'' என்று கையை நீட்டினேன்.

அவள் முதலில் வாங்கவில்லை. நீட்டிய என் கைகளையும் முகத்தையும் பார்த்துவிட்டு வாங்கிக்கொண்டாள். நானோ ஆரணியோ இன்னும் ஒரு வார்த்தைகூடக் கதைக்கவில்லை. பேசத் துணிவற்ற அறம் காதல். சுகந்தி அக்காவின் கேள்விகளுக்கும் சுக விசாரிப்புகளுக்கும் இடையிடையே பதில் சொல்லிக்கொண்டி ருந்தேன்.

ஆரணியின் முகத்தில் ஆழப்பதிந்து இருந்த கோபம், யானையின் காலடியாக என்னை நெரித்தது. ஒருமாத காலமாக அவளை நான் தேடவில்லை; பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டை கண்கள் மூலம் பரிமாற்றம் செய்திருந்தாள். ஒரு பூவரசம் இலையைப் பிய்த்து மெதுவாகச் சுருட்டி, “அந்த இலையை எறிந்துவிட்டு, இதை கையில் வைத்துச் சுருட்டுங்கள்” என்று கொடுத்தேன். அவள் கோபம், சிட்டுக்குருவி ஒன்று விசுக்கெனப் பறப்பதைப்போல மறைந்தது.

``ஒரு மாசம் தேடாததற்குத்தான் இவ்வளவு நேரமும் தண்டனை'' என்று சொல்லி கண்ணடித்தாள்.

அது பொன்னிறமான வெளிச்சம் ஒன்றை எனக்குத் தந்தது. பின்னர் நால்வரும் கதைத்துக்கொண்டு, சுகந்தி அக்காவின் வீட்டுக்கு வந்தோம்.

அவளின் காது தோடுக்கு என்ன நடந்தது எனக் கேட்டேன். அவள் பதில் சொல்லவில்லை. நான் மீண்டும் அவளைக் கேட்கவில்லை. நடந்து போகும்போது எனக்கு மிக அருகில் வந்து கைகளைப் பற்றி முகத்தில் கிள்ளினாள்.

அவளிடம், ``நாவல் பழங்களைச் சாப்பிடும்'' என்று சொன்னேன்.

“ஆரணி, நீ முன்னுக்கு வா. ஆராச்சும் பார்த்தால் பிரச்னை யாகப் போயிடும்” என்று சொல்லிக் கொண்டு என்னைப் பார்த்து `மன்னிக்கவும்' என்று சொல்வதைப் போல சிரித்த சுகந்தி அக்காவை, என்னால் மன்னிக்க முடியவில்லை. ஆரணி, பின்னுக்கும் அல்லாமல் முன்னுக்கும் அல்லாமல் இடைவெளிகளில் சமாளித்து நடந்துகொண்டிருந்தாள்.

தீபன், எங்கள் இருவரையும் திரும்பிப் பார்த்துச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் புரண்டிருந்த சந்தோஷம் நட்பின் ஜீவவெளியில் மணிக்குரல்போல ஓடிக் கொண்டிருந்தது. `ஏன் மெலிஞ்சு போயிட்டியள் ஆரணி?' என்று கேட்கலாம் என நினைத்தேன். ஏலவில்லை. சுகந்தி அக்காவின் வீட்டுக்கு வந்து, சட்டி ஒன்றில் உப்பைக் கரைத்து, நாவல் பழங்களை அதற்குள் போட்டு ஒவ்வொன்றாக எடுத்துச் சாப்பிடத் தொடங்கினாள். நானும் தீபனும் சுகந்தி அக்காவின் வீட்டுக்கு வெளியில் இருந்த கதிரை களில் இருந்தோம். ஆரணியும் இன்னொரு கதிரையைத் தூக்கிக் கொண்டு எங்களோடு வந்திருந்தாள்.
நாவல் பழங்களைச் சாப்பிடு மாறு என்னையும் பணித்தாள். எனக்கு நாவல் பழம் பெரிதாகப் பிடிக்காது என்றாலும், அவள் சாப்பிடச் சொன்னதால் சாப் பிட்டேன். அவளின் சிவந்த சொண்டுகளின் வழிபோகும் ஒவ்வொரு நாவல் பழமும், இதழ்கள் மண்டிய ரோஜாப் பூவில் மொய்க்கும் கறுப்பு வண்டுகள்போல எனக்குத் தெரிந்தது.

“தீபன்தான் மரத்தில் ஏறி ஆய்ஞ்சவன் ஆரணி” என்று சிரித்துக்கொண்டு சொன்னேன்.

“ம்... எனக்குத் தெரியும்தானே, நீங்கள் மரத்தில் ஏற மாட்டிங்கள் என்று” நக்கலாகச் சொன்னாள்.

``தீபன் அண்ணன், தங்கச்சிக்காய் ஏறி ஆய்ஞ்சு கொண்டுவந்த பழம் இது என்று எனக்குத் தெரியும்'' என்று சொல்லி முடிக்கும் முன்னர், ``இல்லை ஆரணி. அவன்தான் உமக்கு ஆசை என்று சைக்கிளை நிப்பாட்டி என்னைக் கெஞ்சி ஆய்ஞ்சுகொண்டு வந்தவன்'' என்று தீபன் சொன்னான்.

கண்களால் வெட்டியபடி ஒரு முத்தத்தை உடனேயே அனுப்பினாள். அந்தக் கண்கள் பாம்பின் புணர்ச்சியைப்போல என் மேலேயே ஓடிக்கொண்டிருப்பதை, நான் பார்க்காததுபோல இருந்தேன். ஆரணியின் கறுப்பு நிறப் பாவாடை, கால்களில் இருந்து கொஞ்சம் மேலே ஏறியிருந்ததை எனது கண்கள் சரிசெய்தன. சுகந்தி அக்கா ஊற்றித் தந்த தேத்தண்ணியைக் குடித்து முடித்து விட்டு, ``தீபன் வெளிக்கிடலாம்'’ எனச் சொன்னான். ஆரணி, நாவல் பழங்களை மிச்சம் வைத்துவிட்டு வாயைக் கொப்பளித்தாள். செவ்வாயில் இருந்து கொப்பளிக்கும் நீர், நாவல் நீரூற்றுபோல நிலத்தில் விழுந்தது.

``நாங்கள் வெளிக்கிடப்போகிறோம்'' என்று பொதுவாகச் சொன்னேன். சுகந்தி அக்கா வீட்டுக்குள் இருந்து வருவதாகச் சொன்னாள். ஆரணி, கொஞ்ச நேரம் இருந்துவிட்டு செல்லுங்கள் என்பதைப்போல கதிரையில் வந்திருந்தாள். நான் கதிரையில் ஒட்டப்பட்ட மெழுகுவத்தி என எழும்பவே விருப்பற்று உருகிக்கொண்டிருந்தேன். சேர்ந்திருக்கும் கணங்களில் ஊமைகளைப் போலவும் பிரியும் கணங்களில் பேச விழையும் மழலையைப் போலவும் முயற்சித்துக் களைப்புறுவதே காதல்.

``இனி எப்ப வருவியள்?'' என்று அவளே கேட்டாள்.

``நான் இந்தப் பக்கம் வருகிறபோது எல்லாம் வருவேன்'' என்று பதில் சொன்னேன். வீட்டுக்குள் எழும்பிச் சென்று இரண்டு நிமிடங்கள் இருக்கும் ``இஞ்ச ஒருக்கால் வாங்கோ'' என்று ஆரணி என்னைக் கூப்பிட்டாள். நான் உள்ளே சென்றேன். ஆரணி எனது கைகளில் ஒரு கோயில் நூலைக் கட்டினாள்.

``எந்தக் கோயில் நூல்?'' என்று கேட்டேன்.

``எந்தக் கோயிலோ உங்களுக்கு எதுக்கு?'' என்று பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டாள்.

``சரி போகலாம்'' என்றாள்.

நான் அசையவில்லை. மீண்டும் சிரித்துக்கொண்டு `போங்கோ...' என்று கையைக் காட்டினாள்.

நானும் தீபனும் அங்கு இருந்து வெளிக்கிடும்போது ஆரணியும் சுகந்தி அக்காவும் படலை வரைக்கும் வந்து வழியனுப்பி வைத்தார்கள்.

``நான் கவனமாகப் பார்த்துக்கொள்கிறேன் தம்பி!'' என்று என்னிடம் சொன்னாள் சுகந்தி அக்கா. ஆரணியின் முகம் நிலத்தில் வீழ்ந்து மண் ஒட்டிய நாவல் பழம் எனக் கலங்கியிருந்தது; என்றாலும், அவள் சிரித்தாள். அந்தச் சிரிப்பில்தான் நான் கடைசியாக ஆரணியைப் பார்த்தது.

p76c.jpgஇத்தனை மாபெரும் அழிவுகளுக்குப் பின்னரும் எஞ்சிக்கிடக்கும் என்னைப்போல, அவளும் எஞ்சியிருக்க வேண்டும் என்று கையில் கிடந்த நூலைப் பார்த்து வேண்டிக்கொண்டேன். அவளின் கண்களும், கடைசியாகப் பார்க்கும் போது படலையில் இருந்த அவளின் முகமும் ஒரு கொடுங்கனவு என என்னில் ஊறிக்கொண்டே இருந்தன.

அவள் எங்கு இருந்தாலும் என்னைத் தேடிக் கொண்டிருப்பாள்; என்னை வந்தடைவாள் என உள்மனதின் ஆழத்தில் அடைகாத்துக் கிடந்தது நம்பிக்கை. இந்தத் தடுப்பு முகாமில் இருக்கும் சகபோராளிகளைப் பார்க்கவரும் அம்மாக் களிடமும் சகோதரிகளிடமும் நான் அவளின் ஊரையும் பெயரையும் சொல்லி விசாரித்துக் கொண்டே இருப்பேன். யுத்தத்தின் கைகளில் இருந்து ஓடிய குருதிகள் நந்திக்கடலில் சேர்ந்த பின்னரும், கண்ணீரும் அவலமும் எம்மைத் துரத்திக்கொண்டே இருந்தன. தடுப்பு முகாமில் பாதுகாப்புக்காக நிற்கும் ராணுவத்தின் கைபேசியில் இரவில் ஒலிக்கும் தமிழ்ப் பிள்ளைகளின் கதறலை, அவர்கள் கெஞ்சி அழும் யாசகத்தையும் கேட்டபடிக்கு எங்களால் நித்திரைகொள்ள முடியாது.

நேற்று இரவு நான் கேட்ட அந்தத் தமிழ்ப் பிள்ளையின் கதறல், ஆரணியின் குரல்தான்; அவளின் ஆரோகண அழுகைதான். கோபமாகப் பேசிக் கேட்ட தூசணம் அவள் பேசியதுதான். என் மனதின் ஆழத்தில் அடைகாத்துக் கிடந்த நம்பிக்கை கூழாகிப்போய் உடைந்து நாறியது. ஆரணிக்குப் பழங்கள் ஆய்ந்த அந்த விசுவமடு நாவல் மரம் ஷெல் விழுந்து, எரிந்து கருகியதை இடையில் நான் அறிந்திருந்தேன். கருகியது துளிர்க்கும். அந்த நாவல் மரம் துளிர்விட்டு பழங்களை நிறைத்து நிற்கையில் ஆரணிக்கு நாவல் பழங்களை ஆய்ந்து கொடுத்து ஒரு முத்தமிடுவேன். ஆனால், ஆரணி உயிரோடு இருக்க வேண்டும் அல்லவா?

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.