Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முக்தி பவனம்...

Featured Replies

முக்தி பவனம்...

சிறுகதை: போகன் சங்கர், ஓவியங்கள்: செந்தில்

 

p100a.jpg

முக்தி பவனம்...

அகோபிலத்தில் வைத்துதான் இந்தப் பெயரை நான் முதன்முறையாகக் கேள்விப்பட்டேன்.அகோபிலத்துக்கு மழைக்காலத்தில் போவது அவ்வளவு உசிதமானது அல்ல. ஆனால், நான் என் வாழ்க்கையில் எது உசிதமானது... எது உசிதமற்றது என்று எல்லாம், நின்று யோசிக்கிற மனநிலையில் இல்லை. எனக்கு எல்லாவற்றிலும் இருந்து எங்கேயாவது தப்பித்துப்போக வேண்டும்போல இருந்தது. கொஞ்ச நாட்கள் கேரளத்தில் சுற்றினேன். நாராயணகுருவின் ஆசிரமம் இருக்கும் வர்க்கலையில் ஒரு மாதம் இருந்தேன். மனம் கொஞ்சம் அமைதியானதுபோல இருந்தது. அங்கே உள்ள கடற்கரையில் நடுவெயிலில் தோல் பொரிய நிற்பேன். மாலை நேரங்களில் கடலில் குளிப்பேன். அந்த உப்பு நீர் பட்டு உடல் எல்லாம் காந்தும். அந்த எரிச்சல் என்னைத் தற்காலிகமாக மனப்பதற்றத்தில் இருந்து விடுவிக்கும்.

ஜெர்மனியில் இருந்து அங்கு வந்திருந்த ஒரு வெள்ளைக்காரருடன் சற்றுப் பரிச்சயம் ஏற்பட்டது. அவருக்கு இரண்டு கால்களும் இல்லை. ஒரு மீனவ வாலிபன் வர்க்கலையின் கடற்கரையில், சக்கர நாற்காலியில் வைத்து அவரை உருட்டிவருவான். அவரும் நாராயண குருவைத் தேடி வந்தவர்தான். எனக்கு அது சற்று வியப்பை அளித்தது. நாராயணகுரு வழக்கமாக வெள்ளைக்காரர்கள் தேடிவரும் யோகிகள்போல அல்ல. அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி.

ஒரு குறிப்பிட்ட இனக் குழுவை அதன் தளைகளில் இருந்து அகற்றியவர். அத்வைதம் போதித்தவர். காலை நேரங்களில் ஆசிரமத்துக்குப் போய் தியானம் செய்வேன்.

ஒருநாள் அங்கு இருக்கும் மூத்தத் துறவி ஒருவர் என்னை அழைத்து, `உங்களுக்கு என்ன பிரச்னை? தியானம் செய்யும்போது உங்களையும் அறியாமல் அழுதுவிடுகிறீர்கள்' என்றார்.

நான் திடுக்கிட்டேன். எனக்கு அது செய்தியாக இருந்தது.

`ஒன்றும் இல்லை... ஒன்றும் இல்லை' என்று சொல்லிவிட்டுப் பதற்றத்துடன் அங்கு இருந்து வெளியே வந்தேன்; களைப்பாக விடுதிக்கு வந்துசேர்ந்தேன். அலைபேசி, அவள் அனுப்பிய குறுஞ்செய்திகளால் விம்மிக்கொண்டிருந்தது.ஒன்றை விடுவித்துப் பார்த்தேன்.

`கண்ணா... நீ எங்கே இருக்கிறாய்? எதற்கும் நாம் காரணம் இல்லை; நீ காரணம் இல்லை.  ஐ லவ் யூ.'

நான் கசப்புடன் அலைபேசியைத் தூர எறிந்தேன். கண்ணுக்குள் மாமாவின் கால்கள் மீண்டும் ஒரு முறை ஆடின. நான் மானசீகமாக அவரின் உயிரற்ற கால்களைப் பிடித்துக்கொண்டு அழுதேன். மன்னிப்பு கேட்டேன். எப்படித் துணிந்தேன்... என் உடல் முழுவதும் மலம் நொதிப்பதுபோல ஓர் உணர்வு ஏற்பட்டது. மாமாவுடன் இதே ஊருக்கு வந்திருக்கிறேன். நாராயணகுரு, அத்வைதம் பற்றி எல்லாம் அவர்தான் எனக்குச் சொன்னவர். `ஒரே இனம், ஒரே நம்பிக்கை, ஒரே கடவுள், ஒரே மனிதன்'... இதில் `ஒரே மனிதன்’ எவ்வளவு அற்புதமான வரி. மாமா சற்று செறிவாக்கிய நாராயணகுருவின் வரி அது என்று பின்னால் அறிந்தேன்.

சூரியன் ஒரு சிறிய தூரக் குரல்போல மேற்கே மறையும் தருணத்தில், `எல்லாம் ஒன்று. நான், நீ, இந்தக் கல், அந்த வானம், உன் அப்பா, கவிதை, படகின் நிழல், கடல்மணலில் தனியாக கால்பந்து விளையாடும் இந்த மீனவச் சிறுவன், எல்லோரும் எல்லாம் ஒன்று. நாம் ஒருவரை ஒருவர் அழிக்கவே முடியாது. நாம் நம்மையேதான் அழித்துக்கொள்ள முடியும்' என்றார் அவர்.

என் முதுகெலும்பு சொடுக்கியது  `நாம் நம்மையேதான் அழித்துக்கொள்ள முடியும்'.

எனக்குத் தலை வலித்தது. அவர் தன்னையா அழித்துக்கொண்டார்? அதன்மூலம் என்னையும் அல்லவா, அவளையும் அல்லவா? ஆனால், அவளுக்கு அது புரியவில்லை.

அவள் சொல்கிறாளே... `இது எதற்கும் நாம் காரணம் அல்ல; நான் காரணம் அல்ல.'

உண்மையில் அவளுடைய `நான்’ எது?

அவளுக்கு மிக நீளமான தலைமுடி. நிதம்பம் தாண்டி முழங்கால் வரையும்கூட ஒரு  கரும்பட்டுத் துகில்போல நீளும் கூந்தல். அவள் விளையாட் டாக, அதுகொண்டு  முக்கியமான சந்தர்ப்பங்களில் அவளது பெண்மையை மறைத்துக்கொள்வது உண்டு. அவளது ‘நான்’ அதுவோ?அல்லது வான் நோக்கிக் காற்றுக்காகத் தவிக்கும் மீன்களின் மோவாய்கள் போன்ற அவளது மார்புகளோ? அல்லது நிறைவுற்றப் பொழுதில், அவள் முகத்தில் விரியும் பால் நிலா இரவிலே முகையவிழ்க்கும்  அல்லிமலர் போன்ற அமைதியா?

நான் தலையை உலுக்கிக்கொண்டேன்.நாசமாயிற்று... நாசமாயிற்று எல்லாம். நான் எனது குருதியை மாசுபடுத்திக்கொண்டேன்.இளம்காற்று, அந்தி மாலை, விடிவெள்ளி, கடலலையின் கால் தொடுகை எதையும் இனி காண முடியாத ஒரு பிணக்குழிக்குள் விழுந்துவிட்டேன். மீண்டும் ஒரு முறை அலைபேசி ஒளிர்ந்தது...

`I love you. Still and always will’

நான் அதை எடுத்துத் தரையில் அடித்து உடைத்தேன். தலைவலி விண்ணிட்டு வெளியே வந்து, மாமாவின் கால்கள்போல உயிரற்றுத் தொங்கிக்கொண்டிருந்த துணிகளை விலக்கி, வாந்தி எடுத்தேன்.

அந்த வெள்ளைக்காரர் அடுத்த அறையில் இருந்து என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.ஒரு கனத்தத் தயக்கத்துக்குப் பிறகு அவர்தான் சொன்னார்... `எங்கேயாவது மலைப் பிரதேசத் துக்குப் போங்கள். கடல் திரும்பத் திரும்ப உங்கள் மனதைப் பிரதிசெய்துகொண்டே இருக்கும் கண்ணாடிபோல. உங்கள் மனம் அமைதியில், வேராழ்ந்த பிறகு திரும்ப இங்கே வாருங்கள்.அப்போது நீங்கள் காணும் கடல் வேறாக இருக்கும். இப்போது உங்களுக்குத் தேவை ஓர் அசையா உண்மை. அது உங்களுக்கு மலைகளில்தான் கிடைக்கும். கடலும் மலையும் ஒன்றுதான் எனும் காலமும் வரும்தான். ஆனால், விவிலியத்தில் சொல்வது போல `அதனதன் காலத்தே அது. வாழ்வின் காலத்து வாழ்வு; மரணத்தின் காலத்து மரணம்'.

லையடிவாரத்தைச் சேர்ந்த சில நரசிம்மர்களைத் தரிசிக்க முடிந்தது. பிறகு நான் அகோபிலத்தில் பார்க்க முடிந்தது எல்லாம் முடிவே அன்றி வானத்தில் இருந்து பூமியை நோக்கி வந்துகொண்டிருந்த மழைத்தாரை களைத்தான். சீசனுக்கு வெளியே என்பதால், அகோபில மடத்தைச் சார்ந்த விடுதி பெரும் பாலும் காலியாகவே இருந்தது. எனது தளத்தில் ஒரே ஒரு நடுத்தர மனிதர் மட்டும் தங்கியிருந்தார். கர்நாடகத்தைச் சேந்தவர். பிராமணர் எனத் தெரிந்தது. அவர் தனது பிராமணியத்தன்மையை மறைக்கவும் முயற்சிசெய்யவில்லை.எனக்கு பிராமணர்களுடன் பழகுவதில் எப்போதுமே ஒரு மனத்தடை இருந்து வந்திருக்கிறது. ஆகவே சற்று விலகியே இருந்தேன். ஆனால், அங்கு இருந்த ஒரே நல்ல ஹோட்டலான உடுப்பி ஹோட்டல் திடீரெனச் செயல்படாதபோது, நாங்கள் இருவரும் சேர்ந்து, வேறு ஒரு நல்ல உணவு மூலத்தைக் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று இரவு எனது அறைக்கு வந்தார். நான் அப்போது `Death in banaras’ என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன்.
அவர் அதைப் பார்த்துவிட்டு, ``நீங்கள் காசிக்குப் போயிருக்கிறீர்களா ?'' என்று கேட்டார்.

நான் சலிப்புடன் அவரைப் பார்த்தேன்.அன்று நான் கண்ட அத்தனை நரசிம்மர்களிடமும் சொல்ல ஒரு வார்த்தைகூட என்னிடம் இல்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது. அவர்களும் இருந்தார்கள் ஊமைக் கல்லாக. பரிசுத்தத்துடனான என் தொடர்புகள் அத்தனையும் அறுந்துவிட்டன என்று நினைத்துக் கொண்டேன்.

அவர் என்னைத் தேடி வந்தது எனக்குப் பிடிக்கவில்லை.நான் களைப்படைய விரும்பினேன். களைப்படைவதின் மூலமாகத் தூங்க விரும்பினேன். அதற்காகவே யாரோ விடுதியில் விட்டுப்போயிருந்த அந்தப் புத்தகத்தை லயிப்பில்லாவிட்டாலும் படிக்க முயன்றுகொண் டிருந்தேன். அவர் மறுபடியும் அதே கேள்வியைக் கேட்கவும்தான் நான் பதில் சொல்லாததை உணர்ந்து, ``இருபது வயதில்... ஆனால் என்ன பார்த்தேன் என்பது சுத்தமாக நினைவில்லை'' என்றேன்.

அவர் எனது அறையின் கோலத்தைப் பார்த்து முகம் சுருங்குவது கண்டு லேசாக அதை ஒழுங்கு படுத்த நினைத்து பிறகு சலித்து, ``உட்காருங்கள்’’ என்றேன்.

அவர் உட்கார்ந்துகொண்டு, ``நான் சில வருடங்களுக்கு முன்பு ஏறக்குறைய இரண்டு மாதங்கள் அங்கே இருந்தேன்.''

எனக்கு அது ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. காசி, பிராமணர்களின் நகரம்.அங்கு ஒரு பிராமணர் இரண்டு மாதங்கள் இருந்ததில் என்ன சிறப்பு இருக்கிறது?

அவர், ``எனது அத்தை அங்கே இறக்க விரும்பினார்'' என்றார்.

நான் ஓர் உணர்வையும் காட்டாமல் அவரையே பார்த்தேன். சீக்கிரம் போயேன் என்று கண்களால் சொன்னேன். ஆனால், அவர் அதை எல்லாம் கவனிப்பவராக இல்லை.திடீரெனக் கடகடவென்று ஆவேசம் கொண்டவர்போல பேச ஆரம்பித்தார்.

``காசியில் இறப்பது நேரடியான முக்தி தரும் என்பதால், நிறையப் பேர் அங்கே மரணிக்க என்றே வருகிறார்கள். அவர்களது ஆசையை பணம் வாங்கிக்கொண்டும் இலவசமாகவும் நிறைவேற்றும், நிறையத் தாபனங்கள் அங்கு உள்ளன. அப்படி ஓர் இடம்தான் காசி லாப முக்திபவனம். அங்கு என் அத்தையுடன் அவர் இறக்கக் காத்திருந்தேன்’’ என்றார் அவர்.

``அவருக்குக் குடல் புற்றுநோய். மிகுந்த வலியில் இருந்தார். பெங்களூரில் ஒரு மருத்துவமனையில் எப்போதும் மார்பைனில் வைத்திருந்தோம். மிகுந்த செலவு. அதைவிட அவர்கூட யாராவது இருக்க வேண்டும். அதுதான் மிகுந்த சிரமமாக இருந்தது. அந்தப் பொறுப்பு என் தலை மேல் விழுந்தது. ஏனெனில் நான்தான் கல்யாணம் செய்துகொள்ளவில்லை. எனக்கு வேலை என்றும் ஒன்று இல்லை. அத்தைக்குச் சொத்துகள் இருந்தன. அவர் அந்தச் சொத்துகளை என் மீதுதான் எழுதிவைக்க விரும்பினார். ஆகவே, எனது குடும்பம் என் மீது அந்தப் பணியை மிக எளிதாகச் சுமத்திவிட்டது’’ என்றவர் சற்று நேரம் மௌனமாக இருந்தார்.

``காசி லாப முக்திபவனம் இரண்டு மாடிக் கட்டடம். அங்கு இருந்த எல்லா அறைகளிலும் சாவை எதிர்நோக்கிக்கொண்டு நபர்கள் காத்திருந்தார்கள். உண்மையில் அதற்குள் நுழைவதற்கே பெரிய காத்திருப்பு வரிசை இருந்தது. நாங்கள் காசி அன்னபூரணி கோயிலைச் சேர்ந்த ஒரு பண்டாவின் சிபாரிசின் மீது, உள்ளே நுழைந்தோம்'' - அவர் இப்போது என்னை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, ``மரணத்தைப் பற்றி நான் ஆழ்ந்து படித்திருக்கிறேன். நம் மதத்தின் பெரும்பகுதி மரணத்தைப் பற்றி பேசுவதுதானே? ஆனால், அங்கு நான் கண்ட மரணங்கள் வேறுவிதமானவை'' என்றவர் சற்று நிறுத்தி, ``சொல்லப் படுவதற்கு மாறாக மரணம் மிகுந்த வேதனையானது'' என்றார்.

பிறகு ஒரு வெடிப்பு போன்ற ஒரு குரலில் ``மிகுந்த நாற்றமுடையது’’ என்றார்.

``அத்தையின் குடல் அழுகும் நாற்றத்தை எந்த ஊதுவத்தியாலும் மழுப்ப முடியவில்லை.என்னால் அவள் அருகிலேயே இருக்க முடியவில்லை . செத்துப்போன எலியின் நாற்றம். நான் பெரும்பாலும் அறைக்கு வெளியேதான் நின்றிருந்தேன். அல்லது அவளைவிட்டுத் தனியே போய்விடுவேன். பல நேரங்களில் அவள் வலியில் என்னைக் கூப்பிடுவது கேட்கும். ஆனால், கேட்காததுபோல இருப்பேன். ஒருவர் அவளுக்குப் பாங்கு உருண்டைகளை வாங்கிக் கொடுக்கச் சொன்னார். ஆனால், அது பிரச்னையை மோசமாக்கிவிட்டது. அவளுக்கு ரத்தபேதி கண்டது. விடாது அறை முழுவதும் அவளது ரத்தம் கலந்த மலம் பெருகி நனைத்துக்கொண்டே இருந்தது. அங்கு துப்புரவாளர்கள் இருந்தார்கள் தான். ஆனால் கூட நிற்க வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் நான் பெரும்பாலும் பக்கத்து அறைக்குப் போய்விடுவேன். அங்கே ஒரு மார்வாரிக் குடும்பம் இருந்தது. அந்தக் குடும்பத்துப் பெரியவரும் இறக்கக் காத்திருந்தார். அனால், அவருக்கு நினைவே இல்லை. அவ்வப்போது தேன் கலந்த தண்ணீர் மட்டும் கொடுத்துவந்தார்கள். ஆனால், அத்தைக்கோ முழு போதமும் இருந்தது. அவள் என்னிடம் பேசிக்கொண்டே இருந்தாள். எதையாவது தின்ன வாங்கித் தரும்படிக் கேட்டுக்கொண்டே இருந்தாள். தினமும் அங்கு வந்துபோகிற புரோகிதர் அதை மரணத்தின் பசி என்பதுபோல சொன்னார். கேட்டதை வாங்கிக் கொடுக்கச் சொன்னார். ஆனால், நான் வாங்கிக் கொடுக்கவில்லை. அவற்றையும் தின்றுவிட்டு அவளுக்கு ரத்தபேதி உண்டானால் அதை யார் சகித்துக்கொள்வது? நரகம்'' என்றார்.

``ஆனால், நான் அதைச் செய்தாக வேண்டும்.எனக்கு வேறு ஜீவனம் வழி இல்லை. நான் அந்த வெறுப்பை எல்லாம் அவர் மீது காட்டினேன்.ஒருவர் பாங்கு உருண்டைகளைக் கொடுத்த பிறகு தண்ணீரே கொடுக்காமல் இருந்தால், அவர் சீக்கிரம் இறந்துவிடுவார் என்று சொன்னார்.அவள் இரவு முழுக்கத் தண்ணீருக்காக முனகிக்கொண்டே இருந்தார். நான் அறைக்கு வெளியே கேட்காததுபோல நின்றிருந்தேன்.

விடிகாலையில் அவளது முனகல் நின்றுவிட்டது.நான் சற்றுநேரம் கழித்து உள்ளே போய்ப் பார்த்தேன். அவள் இறந்துபோயிருந்தாள்.''

நான் சற்றுத் தாக்கப்பட்டேன். எனினும் மிகுந்த அதிர்ச்சி அடையவில்லை என்பதை நானே வியப்பாக உணர்ந்தேன். என் மிக அருகில் ஒரு மரணத்தைக் கண்டிருந்ததாலா?

``விடுங்கள்... இது நீங்கள் நினைப்பதுபோல அப்படி ஒன்றும் நடக்காத விஷயம் அல்ல.கிராமப்புறங்களில் இயல்பாக நடக்கிறது’’ என்றேன்.

``என் பிரச்னை அது அல்ல... துர்நாற்றம்.''

நான் புரியாமல், ``எந்தத் துர்நாற்றம்?'' என்றேன்.

``அத்தையின் மரண நாற்றம். அத்தை இறந்த தினத்தில் இருந்து,  அது எப்போதுமே என்னுடன் இருக்கிறது. எவ்வளவு குளித்தாலும் வாசனைத் திரவியங்கள் பூசிக்கொண்டாலும் என்னுடனே எப்போதுமே இருக்கிறது. குறிப்பாக அது நான் சாப்பிடும் நேரங்களில் உக்கிரமாக எழுந்துவருகிறது.

என்னை யாரோ சடடென்று முகத்தில் தாக்கியதுபோல் இருந்தது. நான் மிகுந்த கோபத்துடன் எழுந்து, ``இவை எல்லாம் உங்கள் மனப்பிரமைகள். மரணம், சட்டையை மாற்றிக் கொள்வது போலத்தான் என்று உங்களது சாஸ்திரங்கள் திரும்பத் திரும்பச் சொல்வது இல்லையா? இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறீர்கள்?'' என்று கத்தினேன்.

எனது சொற்கள் எனக்கே வியப்பு அளித்தன. என்னிடம் வேறு யாரோ சொல்ல வேண்டும் என்று நான் விரும்பிய சொற்களா அவை?

அவர் சட்டென்று உடைந்து என் கைகளைப் பற்றிக்கொண்டு அழுதார் .

``நான் சிறுவயதில் இருந்தே அவள் தோளில்தான் வளர்ந்தேன்.எங்கள் குடும்பத்தி லேயே மிகச்சிறந்த சமையல் செய்கிறவள்  அவள்தான். அவளுக்குத் தெரியாத பட்சன வகைகளே இல்லை. அவள் எப்போதும் ஏதாவது செய்து எனக்கு ஊட்டிக்கொண்டே இருப்பாள். எனது தசை எல்லாம் அவள் ஊட்டிய அன்னம். ஆனால் நான் அவளுக்கு தண்ணீர்கூட கொடுக்க மறுத்தேன்.''

எனக்கு இப்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை. சிறிய தயக்கத்துக்குப் பிறகு குனிந்து  அவரை அணைத்துக்கொண்டேன்.

``வாருங்கள் சாப்பிடப் போகலாம்’’ என்றேன்.

அவர், ``இல்லை இன்று நான் உபவாசம்’’ என்றார். நான் வற்புறுத்த வலுவில்லாமல் விட்டுவிட்டேன். கீழே இறங்கிச் சாப்பிடப் போனேன்.

அந்த வெள்ளைக்காரர் மீது கோபம் வந்தது. மலை! `மலைக்குப் போங்கள் அமைதி கிடைக்கும்’ என்றாரே! இங்கேயோ... வேண்டாம் நினைக்காதே! வயிறு நிறைந்துவிட்டால் ஒருவேளை தூக்கம் வரலாம். அது பற்றிக் கவலைப்படு. உடுப்பி ஹோட்டல் திறந்திருந்தது.

``கடப்பாவுக்கு ஒரு கல்யாணம் போய்விட்டோம்'' என்றார் கடையில் இருக்கும் பெண். மூக்குத்தி அணிந்திருந்தார்.

``அடை சாப்பிடுகிறீர்களா ?'' என்றவர், ``உங்கள்கூட வருவாரே அவர் எங்கே?'' என்று கேட்டார். p100b.jpg

``அவர் இன்று உபவாசம் ''என்றேன்

``ஓ’’ என்றார். பிறகு சற்றுத் தயங்கி அடைகளை வைத்துக்கொண்டே, ``தப்பாய் நினைத்துக் கொள்ளாதீர்கள். அவருடன் எப்படிச் சேர்ந்து அலைகிறீர்கள்?''

நான் அடையைப் பிட்டுக்கொண்டே ``ஏன்...அவர் உங்களது பிரிவுதானே?''

``அது சரிதான். அது வேறு. ஆனால் எங்கள வர்கள் யாரும் இவ்வளவு துர்நாற்றமுடைய வர்களாக இருக்க மாட்டார்கள்''

நான் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, ``என்ன துர்நாற்றம்?’’ என்றேன்.

அவர் முகத்தைச் சுளித்துக்கொண்டு ``உங்களுக்கு அடிக்கவில்லையா? எப்போதுமே அவருடன் வரும் அந்த எலி செத்த நாற்றம்?'' என்றாள்.

நான் அப்படியே சாப்பிடாமல் விக்கித் திருப்பதைப் பார்த்துவிட்டு அவரது கணவர் உள்ளிருந்து அவசரமாக வந்தார்.

``சாப்பிட வருகிறவரிடம் என்ன பேசுகிறாய்!'' எனக் கடிந்துகொண்டார். பிறகு என்னிடம் திரும்பி, ``மன்னியுங்கள் அவள் அதிகம் பேசுவாள்.அதுதான் அவள் பிரச்னை'' என்றார்.

என் கண்களில் நீர் வழிந்துகொண்டிருப்பதைப் பார்த்து, ``அய்யோ அவள் தெரியாமல் பேசிவிட்டாள்!'’ என்று சங்கடப்பட்டார்.

நான் தலையசைத்து, ``இல்லை... உங்கள் மனைவியைக் கூப்பிடுங்கள். நான் அவரிடம் ஒன்று கேட்க வேண்டும்.''

``அவள் பேசியது தவறுதான். மன்னியுங்கள்.கோபித்துக்கொள்ளாதீர்கள்.''

``இல்லை... கோபித்துக்கொள்ளக் கூப்பிடவில்லை. தயவுசெய்து அழையுங்கள்.''

அவர் இப்போது சிறுத்த முகத்துடன் புடவையை நன்றாகச் சுற்றிக்கொண்டு உள்ளிருந்து வந்தார். 

நான் அவர் அருகில் போய், ``என் மேல்... என் மேல் ஏதாவது துர்நாற்றம் அடிக்கிறதா அம்மா?'' என்றேன். 

அவர் ``இல்லையே’’ என்றார்.

p100bb.jpg

மறுகணம் அவள் முகம் எதையோ புரிந்துகொண்டதுபோல புன்னகையில் அவிழ்ந்தது. அப்போது அந்தக் கணம் அவரது முகம் நெடுங்கூந்தலால் தன் பெண்மையை மறைத்துக் கொள்கிறவளின் முகம்போல ஆனதையே நான் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவள் சொன்னாள்...

``உயிரற்றவையே துர்நாற்றம்கொள்கின்றன.''

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.