Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்கள் குறித்த ரீட்டாவின் கரிசனையை அரசாங்கம் செவிமெடுக்குமா?

Featured Replies

முஸ்லிம்கள் குறித்த ரீட்டாவின் கரிசனையை அரசாங்கம் செவிமெடுக்குமா?

 

அண்மைக் காலமாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரமுகர்கள் பலர் இலங்கைக்கு விஜயம் செய்வது வழக்கமாகிவிட்டது. 2015 ஆட்சி மாற்றத்திற்குப் பிற்பாடு தேசிய அரசாங்கம் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் ஐ.நா. உட்பட சர்வதேச நாடுகளுடன் கடைப்பிடிக்கும் நெகிழ்வுத் தன்மையான போக்கே இதற்குக் காரணமாகும்.

இதன் தொடரில் தான் சிறு­பான்மை விவகாரங்கள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நாடியா இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். கடந்த 10 நாட்­க­ளாக இலங்கையில் தங்கியிருந்த அவர் பல்வேறு சிறுபான்மை தரப்புகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய நிலையில் நேற்று முன்தினம் கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடாத்தி தனது முதற்கட்ட அவதானங்களையும் அரசாங்கத்திற்கான பரிந்துரைகளையும் முன்வைத்தார்.

 ரீட்டா எதிர்வரும் 2017 மார்ச் மாதத்தில் தனது விஜயம் தொடர்பான பூரண அறிக்கையை ஐ.நா அமைப்பின் மனித உரிமைப் பேரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளார். அதற்கு முன்னோடியாகவே அவர் தனது விஜயம் தொடர்பான அவதானங்களை ஊடகவியலாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

ரீட்டா தனது விஜயத்தின் போது இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், தெலுங்கர்கள், வேடுவர்கள், பறங்கியர்கள், மலே இனத்தவர் மற்றும் இலங்கை ஆபிரிக்கர்கள் ஆகியோர்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தார்.

எனினும் ரீட்டா முஸ்லிம் சமூக விவகாரங்கள் தொடர்பில் மேற்கொண்ட சந்திப்புகள் மற்றும் முன்வைத்துள்ள பரிந்துரைகள் தொடர்பில் ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

ரீட்டா கடந்த 10 நாட்களில் முஸ்லிம்கள் தரப்பில் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம், மு.கா. தலைவர் அமைச்சர் ஹக்கீம், அ.இ.ம.கா. தலைவர் அமைச்சர் ரிஷாட் ஆகியோரையும் சிவில் சமூக அமைப்புகள் பலவற்றையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியதுடன் முஸ்லிம் சமூகத்தின் குறை நிறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

முதற்கட்டமாக கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் ஆர்.ஆர்.ரி அமைப்பின் பிரதிநிதிகள் ரீட்டாவை சந்தித்து முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு சமகாலப் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைத்தனர். ஆர்.ஆர்.ரி. என்பது கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த மத கடும்போக்கு சக்திகளால் முன்னெடுக்கப்பட்ட வெறுப்புப் பேச்சுக்கள் மற்றும் வன்முறைகளின் போது முஸ்லிம்களின் உரிமைகளை சட்டரீதியாக பாதுகாக்கும் வகையில் முன்னின்று செயற்பட்ட தற்போதும் செயற்பட்டு வருகின்ற சட்டத்தரணிகளை அதிகம் கொண்ட ஓர் அமைப்பாகும்.

அந்த வகையில் இச் சந்திப்பின் போது அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்­தத்தில் முஸ்­லிம்­களின் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­துவம், முஸ்லிம் தனியார் சட்­டத் திருத்­தங்கள், தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வாசல் விவ­காரம், கிராண்ட்பாஸ் பள்­ளி­வாசல் விவ­காரம், மும்­மானை முஸ்லிம் பாட­சாலை மைதான விவ­காரம், அளுத்­கம வன்­செ­யல்கள் தொடர்­பாக ஆணைக்­குழு ஒன்று அமைக்­கப்­பட்டு விசா­ரணை நடத்­து­வதன் அவ­சியம், மத வெறுப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தும் பேச்­சுக்கள் தொடர்­பி­லான முறைப்­பா­டு­க­ளுக்கு பொலிஸார் நட­வ­டிக்கை எடுக்­காமை, அளுத்­கம வன்­செ­யல்­கள் மற்றும் பொது­ப­ல­சேனா சம்­பந்­தப்­பட்ட வழக்­குகளில் தாமதம், தெஹி­வளை பொர­லஸ்­க­முவ, பாத்­தியா மாவத்தை பள்­ளி­வாசல் பிரச்­சி­னைகள் என முஸ்லிம்கள் அரசியல் மற்றும் மத உரிமை சார் விவகாரங்கள் தொர்பில் ரீட்டாவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இதன் பிற்பாடு ரீட்டா முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது '' இந்த அர­சாங்கம் முஸ்­லிம்­களை எவ்­வாறு நடத்­து­கி­றது? முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் எவ்­வாறு கையா­ளப்­ப­டு­கின்­றன?'' என ரீட்டா அமைச்சர் ஹலீமிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதேபோன்று சர்வ மத தலைவர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி, ''புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தில் முஸ்லிம் சமூ­கத்தின் பாது­காப்பு, பிர­தி­நி­தித்­துவம், மத, கலா­சார உரி­மைகள் தெளி­வாகக் குறிப்­பி­டப்­ப­ட­வேண்டும். அதில் தெளி­வற்ற தன்­மைகள் இருக்­கக்­கூ­டாது. இவ்­வி­வ­கா­ரத்தில் ஐக்­கிய நாடுகள் அமைப்பின் பங்­க­ளிப்பை நாம் வேண்டி நிற்­கிறோம்" எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில் வடக்கிற்கும் கிழக்கிற்கும் விஜயம் செய்த ரீட்டாவை அப் பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல முஸ்லிம் சிவில் அமைப்புகள் சந்தித்து மீள்குடியேற்றம், காணிப் பிரச்சினை, முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் போன்ற விவகாரங்கள் தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

இவற்றின் தொடரில்தான் ரீட்டா முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கமைய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை ரீட்டா ஐசாக் நாடியா கடந்த செவ்வாய்க் கிழமை கட்சியின் தலைமையகமான தாருஸ் ஸலாமில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது யுத்த காலத்­திற்கு பின்பு நாட்டில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய நல்­லி­ணக்கம், சிறு­பான்­மை­யி­ன­ருக்கு நாட்டில் ஏற்­பட்டு வரும் அசா­தா­ரண நிலை­மைகள், காணிப் பிரச்­சினை, மீள் குடி­யேற்றம், அடிக்­கடி ஏற்­படும் சமய முரண்­பா­டுகள், அரச தொழில் வாய்ப்பு, மத வெறுப்புணர்வுப் பேச்சுகளை சட்டத்தின் மூலம் தடைசெய்வதற்கு சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டியதன் அவசியம் எனபன தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் ரீட்டாவின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

குறிப்பாக அமைச்சர் ஹக்கீம், சிறுபான்மை இனங்களுக்கு மத்தியில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக சுயாதீன தேசிய ஆணைக்குழு ஒன்றினை அரசு நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

இதற்கு சாதகமாக பதிலளித்த ரீட்டா, இலங்­கையில் சிறு­பான்மை இனங்­க­ளுக்­கு மத்தியில் நிலவும் பிரச்­சி­னை­களை ஆராய்ந்து தீர்­வு ­காண்­ப­தற்­கான சிபாரிசு­களை வழங்­கு­வ­தற்கு சுயா­தீன தேசிய ஆணைக்­குழு ஒன்­றினை நிறுவ அர­சாங்­கத்­துக்கு பரிந்­து­ரைப்பேன் என உறுதியளித்திருந்தார்.

சிறுபான்மையினருக்கென ஆணைக்குழு வேண்டும் எனும் ஹக்கீமின் இந்தக் கோரிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வரவேற்றிருந்தது.

இச் சந்திப்பு நடைபெற்ற மறுநாள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனையும் அவரது கட்சி முக்கியஸ்தர்களையும் ரீட்டா சந்தித்தார்.

இதன்போது அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான குழுவினரும் முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு அபிலாஷைகள் தொடர்பில் ரீட்டாவிடம் எடுத்துரைத்தனர்.

குறிப்பாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினைகள் தொடர்பில் ரிஷாத், ரீட்டாவின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

''1990 ஆம் ஆண்டு வடக்­கிலே வாழ்ந்த முஸ்­லிம்கள் துரத்­தப்­பட்டு இன்னும் அகதி முகாம்­களில் வாழும் கொடு­மையே நில­வு­கின்­றது. இந்தக் காலப்­ப­கு­தியில் இவர்கள் வாழ்ந்த பூர்­வீக குடி­யி­ருப்புக் காணிகள், விவ­சா­யக் ­கா­ணிகள் கப­ளீ­கரம் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன. மேலும் சில காணிகள் வர்த்­த­மா­னிப்­பி­ர­க­டனம் மூலம் அர­சினால் சுவீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த நிலையில் மீள்­கு­டி­யே­று­வ­தற்கு பெருந்­தடை நில­வு­கின்­றது.

சர்­வ­தே­சமோ, அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களோ வடக்கு முஸ்லிம் சமூ­கத்தை எள்­ள­ளவும் கணக்­கெ­டுப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண வேண்­டு­மென அழுத்தம் கொடுத்­து­வரும் சர்­வ­தேசம், முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பிலோ, அவர்­களின் அர­சியல் அபி­லா­ஷைகள் தொடர்­பிலோ அக்­கறை காட்­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை'' எனும் தனது மனக்குறையை ரிஷாத் இதன்போது ரீட்டாவிடம் முன்வைத்தார்.

 

இவ்வாறு நடைபெற்ற முஸ்லிம் அரசியல் தரப்புகள், சிவில் அமைப்புகளுடனான பல சந்திப்புகளின் பின்னணியில்தான் அவர் தனது விஜயத்தின் போது முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் தான் கண்டறிந்த விடயங்கள் பற்றி நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கினார். அத்துடன் அரசாங்கத்துக்கும் சில சிபாரிசுகளை முன்வைத்தார்.

முஸ்லிம்கள் தனியான இனம்

அண்மையில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ''முஸ்லிம்களும் தமிழர்கள்தான். முஸ்லிம்கள் தனியானதொரு இனமல்ல'' என அர்த்தப்பட வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. விக்னேஸ்வரனின் இந்தக் கூற்றை முற்றாக மறுத்துரைப்பதாகவே ரீ்ட்டா ஐசாக் நாடியாவின் கருத்துக்கள் அமைந்துள்ளன.

முஸ்லிம்கள் தனியான இனம் என அங்கீகரிக்கப்பட்டு அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் தனித்துவமான கவனம் செலுத்த வேண்டும் என்பதே ரீட்டா முஸ்லிம்கள் தொடர்பில் முன்வைத்த மிக முக்கியமான விடயமாக நோக்கப்படுகிறது.

குறித்த ஊடக சந்திப்பில் முஸ்லிம்களின் விவகாரம் தொடர்பில் எழுப்பப்பட்ட பிரத்தியேக கேள்விக்கு பதிலளித்த ரீட்டா பின்வரும் முக்கிய விடயங்களை தனது அவதானங்களாக முன்வைத்தார்.

 '' இலங்கையில் வாழுகின்ற முஸ்லிம்களை தனித்துவம் வாய்ந்த இனமாகக் கருதி அவர்களது பிரச்சினைகளை விசேடமாக அணுகித் தீர்ப்பதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

இந்த நாட்டு முஸ்­லிம்­­கள் போரி­னாலும் அதன் பின்னர் இடம்­பெற்ற மத வன்­மு­றை­க­ளாலும் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். ஆனால் அவர்­களது பிரச்­சி­னை­கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்­தப்­ப­ட­வில்லை என்­பதை நான் உணர்­கிறேன்.

எனவே இலங்­கை அர­சாங்கம் முஸ்­லிம்­ சமூகத்தின் பிரச்­சி­னைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்­ப­துடன் அதற்­கான பொருத்­த­மா­னதும் விசே­ட­மா­ன­து­மான பொறி­முறை ஒன்றை உரு­வாக்க முன்­வர வேண்டும்.

முஸ்லிம் சிறு­பான்மை சமூகம் எதிர்­நோக்­­கு­கின்ற பல்­வேறு பிரச்­சி­­னைகள் தொடர்பில் எமது சந்­திப்­பு­களில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டன. இவற்­றில் காணிப் பிரச்­சி­னை­கள், இடப்­பெ­யர்­வு மற்றும் மீள்­கு­டி­யேற்­றம் என்­பன பிர­தா­னமான­வை­யா­கும். அத்­துடன் வடக்­கி­லி­ருந்து இடம்­பெ­­யர்ந்த முஸ்­லிம்கள் மற்றும் அவர்­க­ளுக்கு புக­லிடம் அளித்த மக்­களின் பிரச்­சினைகள் குறித்­தும் எனது கவ­னத்­திற்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

எனினும் அர­சாங்­கத்தின் முக்­கி­ய­மான முன்­னெ­டுப்­பு­களில் முஸ்­லிம்­களின் விவ­காரம் உள்­ள­டங்­கப்ப­ட­வில்லை எனும் கவ­லையை பலரும் என்­னிடம் வெளிப்­ப­டுத்­தி­னார்கள். குறிப்­பாக போரினால் தமது சமூ­க­மும் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளதாக முஸ்­லிம்கள் கவ­லைப்­ப­டு­கின்­ற­னர்.

 1990 இல் சுமார் 30,000 இற்கும் மேற்­­பட்ட குடும்­பங்கள் வடக்­கு கிழக்­கி­லி­ருந்து வெளியே­­றி­ய­தா­கவும் அவர்­களில் 20 வீத­மானோர் மாத்­தி­ரமே இது­வரை தமது சொந்த இடங்­களில் மீளக்­கு­டி­யே­றி­யுள்­ள­தாகவும் எனது கவ­னத்­திற்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இது மிகப் பெரிய எண்ணிக்­கை­யாகும்.

முக்­கி­ய­மான பல்­வேறு விட­யங்­களில் முஸ்­லிம்­களின் நலன்கள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்­லை என்­பதை இது எடு­த்துக் காட்­டு­கி­றது. எனவே முஸ்­லிம்கள் தனித்­து­வம் ­வாய்ந்­த­வர்­க­ளாக கரு­தப்­பட்டு அரசாங்­­கத்தின் சகல முன்­னெ­டுப்­பு­க­ளிலும் கண்­டிப்­பாக உள்­வாங்­கப்­பட வேண்­டியது அவ­சி­ய­மா­கும்.

அத்­துடன் மத சுதந்­திரமும் மிக முக்­கி­ய­மான விட­யமாகும். பள்­ளி­­வா­சல்கள் மீதான பல தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றுள்­ளன. இது தொடர்பிலும் எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது''என ரீட்டா குறிப்பிட்டிருந்தார்.

அதுமாத்திரமன்றி தனது சிபாரிசுகளிலும் முஸ்லிம்களின் அபிலாஷைகளை உள்ளடக்கும் வகையிலான பல விடயங்களை முன்வைத்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கான ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும், அனைத்து சிறுபான்மை மக்களின் மதஸ்தலங்கள் பாரிம்பரிய இடங்கள், முழுமையாக பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும், அரசியலமைப்பில் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான வலுவான சுயாதீன ஆணைக்குழு நிறுவப்படவேண்டும் போன்ற விடயங்களை அவர் சகல சிறுபான்மை சமூகங்களுக்கும் பொதுவான முறையில் வலியுறுத்தியுள்ளமை கவனிக்கத்தக்கதாகும்.

உண்மையில் ரீட்டாவின் வருகையும் அவர் சிறுபான்மையினர் விவகாரங்கள் தொடர்பான விசேட நிபுணர் என்ற வகையில் முஸ்லிம்களுடன் மேற்கொண்ட சந்திப்புகள் மற்றும் பரிந்துரைகளும் முக்கியமானவையும் வரவேற்புக்குரியவையுமாகும்.

இலங்கை முஸ்லிம்கள் இந்த அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்துவதற்கு மிகக் கணிசமான பங்களிப்பை வழங்கியிருந்தார்கள். இதற்கான பிரதான காரணம் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவாத மதவாத பிரசாரங்களும் வன்முறைகளுமேயாகும்.

இவற்றினால் விரக்தியடைந்த முஸ்லிம்கள் ஆட்சி மாற்றம் தமக்கு விமோசனத்தைக் கொண்டு வரும் என நம்பினார்கள். துரதிஷ்டவசமாக ஆட்சி மாற்றத்தினால் எதிர்பார்க்கப்பட்ட எந்தவொரு பலாபலனையும் முஸ்லிம் சமூகம் பெற்றுக் கொள்ளவில்லை.

முன்னரை விட அமைதியும் நிம்மதியுமானதொரு சூழல் நிலவுகின்றது என்று திருப்திப்பட்டுக் கொள்ள முடியுமே தவிர இந்த அரசாங்கம் முஸ்லிம் சமூகம் கடந்த பல ஆண்டுகளாக எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளில் ஐந்து வீதமானவற்றுக்கு கூட தீர்வு வழங்க முன்வரவில்லை அல்லது அக்கறை காட்டவில்லை என்பதே யதார்த்தமாகும்.

அவர் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான தெளிவானதொரு புரிதலைப் பெற்றுள்ளதை அவரது கருத்துக்கள் உணர்த்தி நிற்கின்றன. அவற்றை அடிப்படையாகக் கொண்டே தனது பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார்.

அந்த வகையில் இலங்கை அரசாங்கம் கண்டிப்பாக ரீட்டாவின் பரிந்துரைகள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இலங்கையைப் பொறுத்தவரை சர்வதேச நிபுணர்கள் வருவதும் அரசாங்கத்துக்கு பரிந்துரைகளை வழங்குவதும் பின்னர் அவை கிடப்பில் போடப்படுவதும் வழக்கமாகும்.  

அவ்வாறானதொரு வழக்கமான செயற்பாடாகவே ரீட்டாவின் வருகையும் அமையுமாயின் அது சிறுபான்மை சமூகத்தை மென்மேலும் ஏமாற்றுகின்ற செயற்பாடாகவே அமையும்.

பைஸ்--

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-10-22#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.