Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1996 வில்ஸ் உலகக்கிண்ணம் – ஒரு சுகானுபவம்

Featured Replies

1996 வில்ஸ் உலகக்கிண்ணம் – ஒரு சுகானுபவம்

received_10207174941604401-696x457.jpeg

1996 வில்ஸ் உலகக்கிண்ணம் – ஒரு சுகானுபவம்.

*****

இப்பொழுது போலல்ல அப்பொழுதெல்லாம் கிரிக்கெட் போட்டிகள் பார்ப்பதில் கிரிக்கெட் பிரியர்களுக்கு வெறித்தனம் இருக்கும். சீவிய தென்னம்மட்டை அல்லது சிறிய அளவிலான மரத்தாலான பற் சகிதம் வெள்ளை , மஞ்சள் பந்துகளில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த காலத்தில்தான் 1996 உலகக்கிண்ணபோட்டிகள் ஆரம்பமாயிற்று.

சங்கக்கடையில எப்பிடியாவது கஷ்டப்பட்டு 2 போத்தில் மண்ணெண்ணெய் உசார் செய்து கிடைக்காத பட்சத்தில் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சியில் டைனமோ சுத்தி கரண்டெடுத்து அன்ரனாக்கு இரண்டு எக்ஸ்ட்ரா பைப் போட்டு உயர்த்தி அப்பிடி சுத்தி இப்பிடி சுத்தி ஒருவாறாக ரூபவாஹினியை பிடிச்சு மேட்ச் பார்க்க ஊரே ஒரு வீட்டில் திரண்டிருக்கும்.

இலங்கை இந்திய ஆதரவாளர்களின் மோதல்கள் , கேலி கிண்டல்கள் , எதிர்வுகூறல்கள் , பழைய போட்டிகளின் அனுபவப்பகிர்வுகள் என சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாத கதைகளுடன் ஒரு பந்து விடாமல் இருந்து மேட்ச் பார்ப்பார்கள். நம்மை சைக்கிள் உழக்க விட்டுவிடுவார்கள் என்ற காரணத்தினாலேயே டைனமோவில் சுற்றி பார்க்கும் போட்டிகளை தவிர்த்து மற்றைய போட்டிகளை பார்க்க தொடங்கினோம்.

அவ்வாறு ஆரம்பித்ததுதான் இன்றுவரை தொடரும் என் கிரிக்கெட் மோகம். 1996 உலகக்கிண்ணம் எனக்கு அறிமுகப்படுத்திய வீரர்களில் பலர் இன்றுவரை என் ஆதர்ச நாயகர்களாய்…

1996 உலகக்கிண்ணம் இந்தியா, பாகிஸ்தான் , இலங்கை இணைந்து போட்டிகளை நடாத்தின. அன்று யாராவது போய் இலங்கைதான் இந்த உலகக்கிண்ணத்தை வெல்லப்போகுது என்று கிரிக்கெட் ரசிகர்களிடம் சொல்லியிருந்தால் அவர்களின் மனநிலை இனப்பிரச்சனைக்கு தீர்வை இவ்வருட இறுதியில் சம்பந்தன் பெற்றுத்தருவார் என்று உங்களிடம் யாராவது சொன்னால் எப்படி எதிர்கொள்வீர்களோ அப்படித்தான் இருந்திருக்கும்.

ஆனாலும் வட்மோரின் நேர்த்தியான பயிற்றுவிப்பும் , ரணதுங்கவின் சிறந்த தலைமைத்துவமும், வீரர்களின் மிகச்சிறந்த பங்களிப்புடன் சாதகமான ஆடுகளத்தன்மையும் இந்த மகத்தான வெற்றிக்கிண்ணத்துக்கு பொருத்தமான அணியாகவே இலங்கையை மாற்றியிருந்தது.

உலகக்கிண்ணம் தொடங்கு முன் அவுஸ்திரேலியா , மேற்கிந்தியத்தீவுகள் , தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் , மற்றும் இந்திய அணிகளுக்கு பரவலாக எதிர்பார்ப்பு இருந்தது. நலிந்திருந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட்டை வலுவுள்ளதாக்கி அலன் போர்டர்,மார்க் டெய்லரின் கைகளில் கொடுத்திருந்தார். வோ சகோதரர்களுடன் பொன்டிங் , பெவன் துடுப்பாட்டத்திற்கு வலு சேர்க்க மக்ராத் , பிளெமிங் , வார்ன் ஆகியோரின் பந்துவீச்சும் அவுஸ்திரேலியாவை கிண்ணம் வெல்லும் அணியாக கணிக்க வைத்திருந்தன. இவர்கள் தான் இப்படி என்று பார்த்தால் மே.இந்தியா அதற்கு ஒருபடி மேல் இருந்தது . லாரா , சந்தர்போல் , ரிச்சர்ட்ஸன் என்று கலங்கடிக்கும் துடுப்பாட்ட வீரர்கள் இருந்தாலும் அம்ப்ரோஸ் , வால்ஷ் , பிஷப் பந்துவீச வருகிறார்கள் என்றால் எவனுக்குத்தான் மரண பயம் வராது.

jadeja_cs

இவர்கள் ஒரு புறம் கலங்கடித்தால் அக்ரம், வக்கார் என்று அவுட் ஸ்விங் , இன் ஸ்விங் , ரிவர்ஸ் ஸ்விங் , ஜோக்கர் என்று அனைத்து வித்தைகளிலும் தேர்ந்த பாகிஸ்தான் பந்துவீச்சு வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அனைவருக்கும் சவால் விட்டது.ஆனால் இந்திய அணியோ முற்று முழுதாக தமது துடுப்பாட்டத்தை நம்பி இறங்கியது அதிலும் குறிப்பாக சச்சின் அந்த நேரம் நெருப்பு போர்ம் இல் இருந்தார்.

தென்னாபிரிக்கா சகலதுறையிலும் மிளிர்ந்தாலும் ஆசிய ஆடுகளங்களில் அவர்களின் ஆதிக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதே கேள்விக்குரியதாக இருந்தது.

1996CricketWorldCupIndiaPakistanSri1T6uE

 

அப்போதைய இலங்கை அணியை பற்றி குறிப்பிட்டு ஆகவேண்டும் சனத் ஜயசூரிய , ரொமேஷ் கழுவித்தாரன , குருசிங்க , அரவிந்த, அர்ஜுன ரணதுங்க , ரொஷான் மஹாநாம , ஹசான் திலகரட்ன , குமார் தர்மசேன , சமிந்தா ஸ், முரளி , விக்கிரமசிங்க இதுதான் இலங்கை அணி.

கிடைத்த வளத்தைக் கொண்டு உச்சப்பயன்பாட்டை பெறும் முயற்சியில் ரணதுங்கவும் வட்மோரும் ஈடுபட்டு வெற்றியும் கண்டனர். முதல் 15 ஓவர்களும் 30 யார் வட்டத்துக்கு வெளியே 3 பேர் இருப்பதை பயன்படுத்தி இயலுமான ஓட்டங்களை ஜெயசூர்யாவும் கழுவித்தாரானவும் பெற்று விட வேண்டும் மீதி ஓவர்களை தடுத்தாடி குறைந்த பட்சம் 250 ஐ பெற்றுவிட வேண்டும் அதுவே அவர்களின் சிம்பிளான ஸ்ட்ராட்டஜி.

250 ஓட்டங்கள் பெற்ற இலங்கை அணியை துரத்தி அடித்து வெல்வது கொஞ்சகாலத்துக்கு முன்வரை சிரமமான காரியமே. அதே போல்தான் பந்துவீச்சிலும் முதல் 12-15 ஓவர்கள் வரை வாஸ் மற்றும் விக்கிரமசிங்க ஒழுங்காக பந்து வீசினால் போதும் மீதியை முரளி, தர்மசேன, ஜயசூரிய, அரவிந்த பார்த்துக்கொள்வார்கள்.

களத்தடுப்பில் இலங்கை அணி உலகத்தரம் வாய்ந்தது என்று சொல்லமுடியாவிட்டாலும் தங்களால் முடிந்த அளவு பாடுபட்டு ஓட்டங்களை கட்டுப்படுத்த முயல்வார்கள். வக்காரின் ஜோக்கருக்கே குனிய முடியாத குருசிங்க, தன் காலை குனிந்து பார்க்க முடியாத ரணதுங்க போன்றவர்கள் இருந்தாலும் மஹாநாம , முரளி , ஜயசூரிய என்போர் மிகச்சிறந்த களத்தடுப்பாளர்களாக திகழ்ந்தனர்.

இலங்கையில் ஏற்பட்டிருந்த போர்ச்சூழல் காரணமாக அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் இலங்கையுடனான போட்டிக்கு இலங்கைக்கு வரவில்லை அந்தவாய்ப்பை சரியாக பயன்படுத்திய இலங்கை அணி எந்த ஒரு போட்டியிலும் தோற்காமலே கிண்ணம் வென்றது.

குழுநிலைப்போட்டிகளில் அனைவரும் எதிர்பார்த்த 8 அணிகளே காலிறுதிக்கு முன்னேறியிருந்தன. குழு A இல் இலங்கை , அவுஸ்திரேலிய இந்திய அணிகள் முதல் மூன்று இடங்களை பிடிக்க மேற்கிந்தியத்தீவுகள் நான்காவது இடத்தையே தக்க வைக்க முடிந்தது. கென்யா அணியுடனான சாதனையுடன் கூடிய 398 ஓட்டங்கள் இலங்கையின் மனோபலத்தை அதிகரிக்க, இந்திய அணி சச்சினின் சதத்தின் உதவியுடன் நிர்ணயித்த 271 என்ற இலக்கை ஜெயசூர்யாவின் அதிரடியுடன் எட்டிப்பிடித்து அனைவரையும் ஒருமுறை திரும்பிப்பார்க்கச்செய்தது.

இது இவ்வாறு இருக்க குழு B இல் தென்னாபிரிக்கா லீக்கின் 5 போட்டிகளிலும் வெற்றியை பெற்று ஆசிய ஆடுகளங்களில் கலக்கியது. பாகிஸ்தான் , நியூசிலாந்து , என்பன அடுத்தடுத்த இடங்களை பிடிக்க மைக்கல் அத்தர்டன் தலைமையிலான இங்கிலாந்து அணி நாலாவது இடத்தில் நிலைபெற முடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தது.

அனைவரும் எதிர்பார்த்தது போலவே முதலாவது காலிறுதியில் இலங்கை இங்கிலாந்தை வீழ்த்த அதேநாள் நடந்த மற்றைய காலிறுதி அனைவரின் அதீத எதிர்பார்ப்புக்குள்ளாகியிருந்தது. பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் இந்திய பாகிஸ்தான் பரீட்சை நடாத்தின. தசைப்பிடிப்பால் உபாதைக்குள்ளாகியிருந்த வசீம் அக்ரம் போட்டியில் விளையாட முடியாமல் போக அமீர் சொஹைல் தலைமைப்பொறுப்பு ஏற்றிருந்தார். துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பத்தில் சச்சினை இழந்தாலும் சித்துவின் நிதானமான துடுப்பாட்டம் நல்ல அடித்தளம் இட ஜடேஜா கடைசி நேரம் வந்து 25 பந்துகளில் 45 விளாசியதே இந்திய அணியின் வெற்றிக்கு பாதை வகுத்தது .

1280x720-c3f

அதுவும் வக்கார் தன் கடைசி இரண்டு ஓவர்களில் 40 ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தார். 288 என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு சிக்கல் வந்தது பந்து வீச நேரம் தாமதமாக்கியதால் அவர்கள் கணக்கில் ஒரு ஓவர் வேறு குறைக்கப்பட்டது. இதுக்கெல்லாம் மசியாத அன்வர் , அமீர் சொஹைல் ஜோடி வேகப்பந்து வீச்சாளர்களை துவைத்தெடுத்தது. வீரர்களின் மோதல் , ஆக்ரோஷமான வார்த்தை பிரயோகங்கள் என மைதானத்தில் அனல் பறந்தது.

venkatesh-prasad-vs-aamir-sohail-india-p

வெங்கடேஷ் பிரசாத்தின் பந்துக்கு எக்ஸ்ட்ரா கவர் திசையில் நான்கு ஒன்று அடித்து விட்டு அமீர் சொஹைல் பிரசாத்தை பார்த்து கை காட்டி திட்டுவார் அதற்கடுத்த பந்தில் cut அடிக்க முயல பந்து தவறி ஸ்டம்ப்பை பதம் பார்த்துவிட பிரசாத் என்ன செய்திருப்பார் என்று சொல்லவா வேண்டும். அதன் பிறகு பிரசாத் , கும்ப்ளே பந்துவீச்சில் இயாஸ் , இன்சமாம் , சலீம் மாலிக் என அனுபவ துடுப்பாட்ட வரிசை ஆட்டம் கண்டது. தன் கிரிக்கெட் வாழ்க்கையின் பிற்பகுதிகளில் இருந்த மியாண்டட் ரன் அவுட் ஆக பாகிஸ்தானின் வெற்றிக்கனி எட்டாக்கனி ஆனது. மறுநாள் பத்திரிகைகளை பாகிஸ்தான் ரசிகர் தன்னை தானே சுட்டு தற்கொலை , வசீம் அக்ரமின் உருவபொம்மை எரிப்பு போன்ற செய்திகள் அலங்கரித்திருந்தன.

மூன்றாவது காலிறுதி; கிண்ணம் வெல்லும் என்று எதிர்பார்த்த தென்னாபிரிக்கா , மேற்கிந்தியத்தீவுகள் மோதின. பால் ஆடம்ஸ் இன் வித்தியாசமான பந்துவீச்சுப்பாணி அப்பொழுது பிரபலம் பெற்றிருந்தது. தலையை நிலத்தில் குத்தி தலைக்கு மேலால் கையை சுழற்றி பந்துவீச முயன்று நம்மூரில் நிறையப்பேர் கழுத்தை உளுக்கிக் கொண்டார்கள் நான் உட்பட.

1996CricketWorldCupIndiaPakistanSri83CTr


கெர்ஸ்டென் , களினன் சிறந்த போர்மில் இருந்தபடியாலும் லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று இருந்தபடியாலும் தென்னாபிரிக்காவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் நடந்ததோ வேறு. லாரா என்னும் துடுப்பாட்ட அரக்கனின் முன் மண்டியிட்டது தென்னாபிரிக்காவின் பலம் வாய்ந்த பந்துவீச்சு. லாரா ஏன் இன்றும் மிகச்சிறந்த வீரராக கருதப்படுகிறார் என்பதற்கு அந்த இன்னிங்ஸ் ஒரு சான்று. offside இல் ஓவர்பிட்ச்சாக விழும் பந்தை கவர் திசையில் ஓங்கி அடிக்கும் ஸ்டைல் ஆகட்டும் ஒருமுறை குனிந்து நிமிர்ந்து லெந் பந்தை மிட்விக்கெட் திசையில் புல் செய்வதாகட்டும் லாராக்கு நிகர் லாராதான். அந்த நேரம் சிறப்பாக பந்து வீசிக்கொண்டிருந்த தென்னாபிரிக்க சகலதுறை வீரர் சிம்கோக்ஸ் இன் ஒரு ஓவரில் 22 ஓட்டங்கள் அடங்கலாக 16 நான்கு ஓட்டங்களுடன் 111 ஓட்ட்ங்களை லாரா விளாசியிருந்தார்.

received_10207174943804456

பத்தாதற்கு சந்தர்போல் அரைச்சதம் விளாச 264 ஓட்டங்களை பெற்றது மேற்கிந்தியா. கேர்ஸ்டன் அம்ப்ரோஸ் பந்தில் ஆட்டமிழக்க மிஷன் இம்பொசிபிள் ஆனது தென்னாபிரிக்காவிற்கு. தன் போர்மை தொடர்ந்த களினன் அரைச்சதம் அடிக்க 245 ஓட்டங்களையே அவ் அணியால் பெறமுடிந்தது. நாக்- அவுட்டில் வெளியேறும் பழக்கத்தை இம்முறையும் தொடர்ந்தனர் ப்ரோடீஸ்.

நான்காவது காலிறுதியில் நியூஸிலாந்து நிர்ணயித்த 286 என்ற பெரிய இலக்கை வோ சகோதரர்களின் துடுப்பின் உதவியுடன் துரத்தியடித்தது ஆஸி. அதிலும் 4வது இலக்க வீரராக வீரராக இடையில் வந்த வார்ன் 2 ஆறு 1 நான்கு அடங்கலாக 24 ஓட்டங்களை பெற்றது ஆஸியின் வெற்றியை இலகுவாக்கியது.

அரையிறுதிக்கு குழு A அணிகள் நான்குமே தெரிவாகியிருந்தன. இலங்கை இந்தியா முதல் அரையிறுதியிலும் அவுஸ்திரேலியா மேற்கிந்தியா இரண்டாவது அரையிறுதியிலும் மோத தயாராகின.

234755-4

லீக் போட்டிகளில் இவ் அணிகள் சந்தித்த போட்டிகளில் இலங்கையும் மேற்கிந்தியத்தீவுகளும் வெற்றி பெற்றிருந்தன. சரித்திர பிரசித்தி வாய்ந்த முதலாவது அரையிறுதி இரண்டு ஆசிய நாடுகளுக்கிடையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் லட்ஷக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்துடன் ஆரம்பமாகியது.

டாஸ் வென்ற இந்தியா களத்தடுப்பை தீர்மானித்தது பலரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது ஆனால் அதற்கான விடை உடனேயே கிடைத்தது. ஸ்ரீநாத் ஆரம்ப வீரர்கள் இருவரையும் ஆரம்ப ஓவரிலேயே பெவிலியன் அனுப்ப இலங்கை அணி இரண்டு ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டை இழந்து மிகத்தடுமாறியது.

Javagal Srinath of India, left, takes the wicket of Sri Lankan batsman Asanka Gurusinha for 1 run, during the Sri Lankan innings during their World Cup Cricket semi-final Wednesday March 13, 1996. Sri Lanka scored 251 runs in their stipulated 50 overs. (AP Photo/Dave Caulkin)

அடுத்து வந்த குருசிங்க 1 ஓட்டத்துடன் பெவிலியன் திரும்ப ஈடன் கார்டன் அதிர்ந்தது. ஆனால் மறுமுனையில் அரவிந்த டீ சில்வா எனும் இலங்கை அணி இதுவரை கண்ட மிகச்சிறந்த ஒரு துடுப்பாட்ட வீரன் எந்த சலனமுமில்லாமல் அடித்து ஆடி போட்டியின் போக்கை இந்தியா வசமிருந்து பறித்துக்கொண்டிருந்தார்.

5ஆம் இலக்கத்தில் அன்று வழக்கத்துக்கு மாறாக மஹாநாம இறங்கி பந்துகளை நாலாபக்கமும் தெறிக்க விட்டுக்கொண்டிருந்த அரவிந்தாவிற்கு சிறந்த இணைப்பை வழங்கினார். அரவிந்த தான் அடித்த 66 ஓட்டங்களில் 14 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கியிருந்தன என்பது கூடுதல் சிறப்பு.

மஹாநாம அரைச்சதம் கடக்க 50 ஓவர் முடிவில் ரணதுங்க , திலகரட்ன , வாஸ் போன்றோரின் பங்களிப்போடு இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 251 ஓட்டங்களை பெற்றது. பதிலளித்த இந்தியா ஆரம்பத்தில் சித்துவை இழந்தாலும் சச்சின் , மஞ்சேக்கர் ஜோடி வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும் போதுதான் கழுவித்தாரணவின் மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் 66 ஓட்டங்களை பெற்று ஆடிக்கொண்டிருந்த சச்சின் அவுட் ஆனார் அப்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 98.

அதற்கப்புறம் ஜயசூரிய , அரவிந்த, தர்மசேன முரளியின் சுழலில் அகப்பட்டு இந்தியா அணி சின்னாபின்னமாகி 120 ஓட்டங்களை பெற்றபோது 8 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. இந்திய அணி தோல்வியடைவதை தாங்க முடியாத ரசிகர்கள் கோப மிகுதியால் கையிலிருந்த போத்தல்கள் , பொருட்கள் கொண்டு மைதானத்தில் எறிய போட்டி இடைநடுவில் தடைபட்டு இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

received_10207174941604401 prv_bd2a9_1420709802 65628

ஒரு பக்கத்தில் ஆட்டமிழக்காமல் ஆடிக்கொண்டிருந்த காம்ப்ளி அழுதுகொண்டே வெளியேறியது பார்ப்பவர் நெஞ்சை உருக்கியது.

ஒய்வு பெற்ற பின் அரவிந்த ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியொன்றில் தன்னால் மறக்க முடியாத போட்டி என்று இந்த அரையிறுதி ஆட்டத்தையே குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த அரையிறுதி போட்டி தொடரின் இரண்டு பலம் வாய்ந்த அணிகளுக்கெதிராக ஆரம்பமாயிற்று டாஸ் வென்று துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது அவுஸ்திரேலியா. தொடர் முழுவதும் கலக்கிக்கொண்டிருந்த மார்க் வோ , அணித்தலைவர் டெய்லர் , மேற்கிந்தியாவுடனான லீக் போட்டியில் தனித்து நின்று சதமடித்த பொன்டிங் , அணியின் தூண் ஸ்டீவ் வோ ஆகியோரை வந்தவேகத்தில் திருப்பி அனுப்பி மேற்கிந்தியாவின் வேகப்பந்து எப்படி இருக்கும் என்பதை காட்டினர் அம்ப்ரோஸ் மற்றும் பிஷப்.

466270-curtly-ambrose 6561215 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த அணியை வழக்கம் போல தூக்கி நிமிர்த்த தொடங்கினார் பினிஷெர் என்ற சொல்லுக்கு உண்மையான அர்த்தத்தை கொடுத்தவரான மைக்கல் பெவன்,அவருடன் ஸ்டுவர்ட் லோவும் இணைந்துகொள்ள ஒருவாறாக 207 எனும் மரியாதைக்குரிய ஓட்ட எண்ணிக்கையை எட்டியது அவுஸ்திரேலியா.

இந்த இலக்கு மே.இந்தியாவின் துடுப்பாட்ட வீரர்களுக்கு தும்முவதற்கு கூட காணாது என்பது போல இருந்தது அவர்கள் பதிலளித்து ஆடிய விதம். இதெல்லாம் நீடித்தது சந்தேர்போல் 80 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கும் வரையே. ஒரு கட்டத்தில் 165 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்திருந்த மே.இந்தியா வார்னே இன் லெக் ஸ்பின் பந்துகளை சமாளிக்க முடியாமல் 202 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அணித்தலைவர் ரிச்சி ரிச்சர்ட்ஸன் மட்டும் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களுடன் ஒரு கரையில் நின்றுகொண்டிருந்தார். அதிலும் சுவாரஸ்யம் என்னவெனில் போட்டி நடந்துகொண்டிருக்கும் வேளையில் ரிச்சர்ட்ஸன் லெக் ஸ்குயெர் திசையில் அடித்த பந்து ஒன்று தவறுதலாக லெக் அம்பெயர் உடலில் பட்டு நான்கு ஓட்டங்கள் பெறும் சந்தர்ப்பம் ஒன்று தவறவிடப்பட்டது. அந்த 4 ஓட்டங்கள்தான் இறுதியில் போட்டியின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாயிற்று.

இறுதிப்போட்டியில் இலங்கையை கிண்ணக்கனவுடன் லாகூரில் சந்திக்க தயாரானது அவுஸ்திரேலியா.

இறுதிப்போட்டிக்கு ஊருல செம ரெஸ்பான்ஸ் எல்லா இடத்துலயும் இதே கதை. டிவி லயோ , ரேடியோலயோ மேட்ச் பார்க்க , கேட்க ஏறக்குறைய அனைவருமே தயாராக இருந்தனர். எம்மை பொறுத்தவரை இலங்கை வெண்டா நாளைக்கு பள்ளிக்கூடம் லீவு விடுவாங்கள் என்று யாரோ சொன்னதை தீவிரமாக நம்பி இலங்கை அணியை ஆதரித்து மேட்ச் பார்க்க தொடங்கினோம்.

டாஸ் வென்ற இலங்கை களத்தடுப்பை தீர்மானித்தது. துடுப்பெடுத்தாடிய ஆஸி டெய்லர், பொன்டிங் அடித்தளம் இட பின்னர் வந்த பெவன் தன் பணியை செய்ய 241 ஓட்டங்களை பெற்றது. பதிலளித்து ஆடிய இலங்கைக்கு அரையிறுதியை போலவே ஆரம்ப ஜோடி சரிந்து விட குருசிங்கவுடன் இணைந்து கிளாஸ் என்றால் என்னவென்று க்ளாஸ் எடுக்க தொடங்கினார் mad – max என்று அழைக்கப்படும் அரவிந்த. முகத்தை மறைக்காத தலைக்கவசம் அணிந்தபடி , பாரமான பேட் கொண்டு அனாயசமாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு க்ளான்ஸ் செய்து பந்தை எல்லைக்கோட்டுக்கு விரட்டும் காட்சியை பார்க்க கோடி கண் வேண்டும்.

குருசிங்க அரைச்சதம் கடந்த பின் அவுட்டாக தானே களமிறங்கினார் அணித்தலைவர் ரணதுங்க. அரவிந்தாவிற்கு அழுத்தத்தை குறைக்கும் வகையில் வந்த வேகத்தில் அடித்தாடி வெற்றியை இலகுபடுத்திக்கொடுக்க என்றென்றும் இலங்கை ரசிகர்கள் மறக்க முடியாத சரித்திர பூர்வமான வெற்றியொன்றை பெற்றது இலங்கை அணி.

1996-cricket-world-cup-winner-sri-lanka-2305569

ஆம் உலகக்கிண்ண சாம்பியன் ஆனது இலங்கை. இன்று இலங்கையில் கிரிக்கெட் இவ்வளவு பிரபலமாக இருக்கின்றதெனில் அதற்கு அடித்தளம் 96 உலகக்கிண்ணம் என்றே சொல்லுவேன்.

அதற்கு பிறகு 5 உலகக்கிண்ணங்கள் கடந்துவிட்டன ஆனால் 96 உலகக்கிண்ணம் தந்த உணர்வுகளையும் நினைவுகளையும் வேறு எந்த உலகக்கிண்ணத்தாலும் தர முடியவில்லை…

http://vilaiyattu_com.apache5.cloudsector.net/en/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/20151/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.