Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பின் யுத்தகால வன்முறை குழுக்களின் இனஅழிப்பு பின்புலம்

Featured Replies

அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இனஅழிப்பு அரசின் காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தமிழ் வன்முறைக் குழுக்கள் தொடர்பான கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதன் பின்னணியை பலர் புரிந்திருந்தாலும் அது இன்னும் ஆழமாக சென்று அலசப்பட வேண்டிய விடயமாகும்.

நேரடியான இனஅழிப்பு நடந்து முடிந்த தேசங்களில் தொடர்ந்து இனச்சுத்திகரிப்பை மேற்கொள்ள நேரடி உத்திகளை கையாள முடியாத சூழலில் நுட்பமான உத்திகளை இனஅழிப்பு அரசுகள் கவனமாகக் கையாளும்.

அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் பலதரப்பட்டவை. அவை இனஅழிப்பு வடிவங்கள்தான் என்பதே சம்பந்தப்பட்ட இனக்குழுமத்திற்கு புரியாத வகையில் அவை நடைமுறைப்படுத்தப்படும்.

அதை விட கொடுமையானது, சம்பந்தப்பட்ட இனக்குழுமமே அதை மறுவாழ்வு, புனரமைப்பு, அபிவிருத்தி என்று நம்புவதும் அதை சுட்டிக்காட்டுபவர்களை இதற்கு எதிரானவர்களாக சித்தரித்து புறக்கணிப்பதுமாகும்.

இது அவர்களின் தவறல்ல. நடந்த இனஅழிப்பின் விளைவாக அந்தகுழுமம் அடைந்திருக்கும் உளவியல் நிலை இது. இதிலிருந்து அவர்களை மீள விடாது நுட்பமாக அந்த சிதைந்த உளவியலை இனஅழிப்பு அரசுகள் பேணுவதன் பிரதிபலிப்பு இது.

எனவே இனஅழிப்பு அரசுகள் தமது கருத்தியல் எப்படி அந்த இனக் குழுமத்திற்குள் விதைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதற்கு ஏற்றாற்போல் நாமே அந்த கருத்தியலை காவத் தொடங்கிவிடுவோம்.

அப்படியான ஒன்றுதான் இந்த பின் யுத்தகால வன்முறைக்குழுகக்ள் தொடர்பான நமது வாசிப்பும் - மனப்படிமமும்.

உதாரணத்திற்கு மேற்படி இரு மாணவர்கள் படுகொலையை வழமை போல் இனஅழிப்பு அரசின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் கட்டமைக்கப்பட்டிருக்கும் உளவியலின் பிரகாரம் ஊடகங்கள் உட்பட அனைவரும் 'விபத்து' என்றே பதிவு செய்திருந்தார்கள்.

உண்மை வெளிவர மறுநாள் வரை நாம் காத்திருக்க வேண்டியிருந்தது. 'விபத்து' என்ற போர்வையில் நடக்கும் இனஅழிப்பு குறித்து நாம் நிறையவே பேசியும் எழுதியுமாகிவிட்டது. அதனால் இங்கு மேலதிக விளக்கம் எதையும் பதிவு செய்யவில்லை.

விபத்து என்ற போர்வையில் நடக்கும் இனஅழிப்பு குறித்த புரிதல் இல்லாமல் சில ஊடகங்களும் சில அறிஞர்களும் வேகக்கட்டுப்பாடு, சாரதி அனுமதிப்பத்திரம் எடுக்காமை, குடி போதை, உயிர் குறித்த அக்கறையின்மை குறித்தெல்லாம் வகுப்பெடுத்து இந்த விபத்துக்களின் பின்னணியை தங்களையறியாமலேயே திரிக்கிறார்கள்.

இவையெல்லாம் உதிரிக்காரணங்கள். இதன் மையமாக இனஅழிப்பு அரசே இருக்கின்றதென்தை நாம் புரியவில்லை.

அப்படித்தான் இந்த பின் யுத்தகால வன்முறைக் குழுக்கள் குறித்த தமிழ்தரப்பின் அணுகுமுறையும்.

நம்மவர்கள் பலர் தமக்கு தெரிந்த அறிதலின்-புரிதலின் பிரகாரம் இந்த வன்முறைக் குழுக்கன் குறித்து ஒவ்வொரு அர்த்தத்தை கொடுக்கிறார்களே ஒழிய யாரும் இதை இனஅழிப்பு பின்புலத்தில் வைத்து மதிப்பிட்டதாகத் தெரியவில்லை. ஒரு சிலராவது இராணுவத்தின் சதி என்ற அளவிலாவது புரிந்து வைத்திருப்பது ஓரளவு மகிழ்ச்சி தரும் விடயம். ஆனால் அது முழுமையான பார்வை அல்ல. அதையும் தாண்டி நுட்பமான இனஅழிப்பு கூறுகள் இந்த வன்முறைக் குழுக்களின் உருவாக்கத்தின் பின்னணியில் உள்ளன.

பின் யுத்தகால சூழலில் இனஅழிப்பு அரசுகள் அந்த இனக்குழுமத்தை தொடர்ந்து இன அழிப்புக்குள்ளாக்க மட்டுமல்ல தொடர்ந்து அந்த இனக் குழுமத்தை கையாளவும் (இந்த 'கையாளல்' என்ற பதம் அதன் அர்த்தத்தில் இனஅழிப்பு உள்ளடக்கங்களை கொண்டதே) நமக்குள்ளிருந்தே ஆட்களை தெரிவுசெய்து விடுவார்கள்.அதற்கு உதாரணமாக நமது தமிழ் அரசியல் தவைர்களிலிருந்து 'ஆவா' குழு வரை சுட்டிக்காட்டலாம். விளைவாக அந்த இனக்குழுமம் இனஅழிப்பின் விளைவாக சிதைந்து போன தமது உளவியலின் பிரகாரம் தமது பிரதான எதிரிகளான இனஅழிப்பு அரசை மறந்துவிட்டு இனஅழிப்பின் விளைவாக பிறந்த உதிரிகள் மீது கோபம் கொள்கிறது.

விளைவாக மேற்படி இனக்குழுமம் ஒரு சம்பவத்தின் மீது அல்லது ஒரு சூழலின் மீது தூரநோக்கு சிந்தனையற்று, தர்க்க நியாயம் குறித்த தார்மீக அறத்தை இழந்து தனி மனிதர்களாக, குழுக்களாக பிரிந்து-பிளந்து நேரடி குற்றத்தை வீசி நேரடி விளைவை எதிர் பார்த்து ஒரு ஒவ்வாமையை பல வடிவங்களில் அந்த இனக் குழுமத்திற்குள் பிரதிபலிக்கிறது.

இதை இனஅழிப்பு அரசு அறுவடை செய்கிறது. இந்த ஏழு ஆண்டுகளில் நாம் முரண்பாடுகள் இருந்தாலும் குறைந்தளவிலேனும் உடன்படமுடியாமல் பல உதிரிகளாக சிதறியிருப்பதன் பின்புலம் இதுதான்.

இதற்கு நாம் யாரையும் நோக முடியாது. இதற்கு நாம் எல்லோருமே பொறுப்பாளிகள். இனஅழிப்பு அரசின் மேற்படி நுட்பமான சதி வலைக்குள் விழுந்து அந்த நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்குண்டவர்கள்.

எனவே மெல்ல மெல்லத்தான் வெளியேற முடியும். அதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது ஒன்றுதான். மிக எளிமையான தர்க்கம் அது. நாம் இன அழிப்புக்குள்ளான இனம்.

தொடர்ந்து நுட்பமாக இன அழிவை சந்தித்துக் கொண்டிருக்கும் இனம். எனவே நம்மைச்சுற்றி நடக்கும் காது குத்திலிருந்து, கருமாதிவரை நடக்கும் சம்வங்கள் அனைத்தையும் மேற்படி கண்ணோட்டத்துடன் அணுகும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த புரிதல் இருந்தால் போதும் நாம் பிழைத்துக் கொள்ளலாம். ஊடகங்கள்தான் இதன் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டியவர்கள். ஆனால் ஊடகங்கள் தமது பொறுப்பை உணர்ந்த மாதிரி தெரியவில்லை. இனி நாம் இந்த வன்முறைக் குழுக்களின் பின்னணியை ஆராய்வோம்.

மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் பாரிய மனித உரிமை மீறல்களுடன் மிக மோசமான வன்முறைகள் வழி இனஅழிப்பு நடந்து முடிந்தபோதே ஒரு இனக்குழுமம் தன்னளவில் வன்முறைக்கான எத்தனங்களை தனதாக்கிக் கொண்டுவிடுகிறது.

இனஅழிப்பின் மிக மோசமான பக்க விளைவு இது. இந்த உளவியல் எப்படி கருக்கொள்கிறது என்பதை இங்கு விளக்க இடம் காணாது. ஆனால் அந்த வடிவ மாறுதலை நாம் புரிந்து கொள்வது அவசியம்.

தம்மை அழித்த எதிரியை அல்லது இனக்குழுமத்தை எதிர்க்க முடியாத-எதிர்க்க திராணியற்ற ஒரு தோல்வி மனநிலை தமது இனக் குழுமத்திற்குள்ளேயே வன்முறையை பிரயோக்கிக்கும் மனநிலைக்குள் வந்து சேர்கிறது அந்த இனக்குழுமம்.

அதைத்தான் நாம் தமிழ்ச்சூழலுக்குள் கடந்த ஏழு ஆண்டுகளில் தனிமனித வன்முறையாகவும் குழு வன்முறையாகவும் பார்த்து வருகிறோம்.

இந்த வன்முறை வடிவங்களை இனஅழிப்பு அரசு தனது வசதிக்கேற்றாற்போல் சாதகமாக்கி வருவதன் அண்மைய வடிவம்தான் 'ஆவா' குழு.

செங்கல்லடி இரட்டை படுகொலை, அச்சுவேலி படுகொலை தொடக்கம் வித்யா மற்றும் சரண்யா படுகொலை வரையான கொலைகள், கொள்ளைகள், பாலியல் வல்லுறவுகள் உட்பட கோஸ்டி மோதல்கள் வரை தமிழர் தேசம் இதுவரை சந்திக்காத விசித்திரமான வன்முறைக்களம் இது.

வான்படை கண்ட ஒரு நேர்த்தியான படைக் கட்டமைப்புடன் இருந்த புலிகளின் நடைமுறை அரசையே அழித்தொழித்த ஒரு அரசால்-இராணுவ எந்திரத்தால் இந்த கொலை, கொள்ளை மற்றும் கோஸ்டி மோதல்களை கட்டுப்படுத்த முடியாதா? விடை ஒன்றும் பூடகமானதல்ல.

இனஅழிப்பு நோக்குடன் இந்த நிலையை தொடர்ந்து பேணுவதே இந்த அரசுதான்.

பின் எப்படி அவர்கள் இதை கட்டுப்படுத்துவார்கள்? இனஅழிப்பின் விளைவாக தோற்றம் பெற்ற வன்முறையின் குழந்தைகளான 'ஆவா' குழுவை சோறு போட்டு வளர்த்ததன் சூட்சுமத்தை இன்று பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலையை திசை திருப்பவும் அதன் பின்னான மாணவர் எழுச்சியை முடக்கவும் இனஅழிப்பு அரசு பயன்படுத்தியதிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

நீண்ட நோக்கில் அணுகினால் நாளை என்றாவது ஒரு நாள் வெடிக்கப்போகும் மாணவர்-மக்கள் எழுச்சியை இத்தகைய வன்முறைக் குழுக்களை கொண்டு குழு கும்பல் மோதல்களாக சித்தரித்து அழித்தொழிக்க முடியும்.

அதற்கான ஒத்திகைகளே கடந்த சில நாட்களக நடக்கும் 'வாள் வெட்டின்' பின்னணியில் உள்ளன. (சில வருடங்களுக்கு முன்பு இத்தகைய ஒரு ஒத்திகையை 'கிரீஸ் பூதங்களை' கொண்டு இனஅழிப்பு அரசு ஒத்திகை பார்த்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள்) அத்தோடு இராணுவ பரம்பலை தமிழர் தாயகத்தில் உறுதி செய்யவும் இந்த வன்முறைக் குழுக்களை பயன்படுத்துவதும் கடந்த சில நாட்களாக இனஅழிப்பு அரசின் அதிகாரிகள் பேசும் பேச்சிலிருந்து உறுதியாகிறது.

இவையெல்லாம் இந்த வன்முறைக்குழுக்களின் பின்னான இராணுவ - அரசியல் பெறுமானமுள்ள நேரடி காரணங்கள்.

ஆனால் அதை விட மோசமான சமூகத் தாக்கத்தை விளைவித்து கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பிற்குள் ஒரு இனத்தை தள்ளும் மோசமான பின்புலம் இந்த வன்முறைக் குழுக்களின் பின்னணியில் உள்ளன. இதை நாம் கொஞ்சம் விரிவாக ஆராய்வோம்.

போருக்கு பிந்திய சமூகத்தில் மனப்பிறழ்வுகளும் அதனால் உருக்கொள்ளும் உளவியற்சிக்கல்களும் பலதரப்பட்டவை. அதுவும் தோற்கடிக்கப்பட்டவர்கள் முற்று முழுதாக வெற்றி பெற்றவர்களின் ஆளுகைக்குள் தொடர்ந்து இருந்தால் எழும் உளவியற்படிநிலை சிதைவுகளை விபரிக்க வார்த்தைகளே இல்லை.

சிறீலங்கா அரசும் இன அழிப்பு நோக்கில் திட்டமிட்டு செயற்படுத்தும் படிமுறைகள் ஒரு மனநோய் சமூகமாக தமிழினத்தை மாற்றிக்கொண்டிருக்கிறது. கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் மிக முக்கியமான படிமுறை இது. இந்த வன்முறைக் குழுக்களின்-குற்றங்களின் பின்னணி இதுதான்.

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு முக்கிய கூறு தாம் அழிக்க நினைக்கும் இனத்தை ஒரு குற்ற சமூகமாக மாற்றுவது. போருக்கு பிந்திய சமூகத்தில் இனஅழிப்பு நோக்கில் பொருண்மிய, பண்பாட்டு, உளவியல் வாழ்வியல் நெருக்கடிகளை திட்டமிட்டு கடைப்பிடிக்கும் இன அழிப்பு அரசு இதை மேம்போக்காக மூடிமறைக்க கையிலெடுக்கும் ஒரு ஆயுதம்தான் ‘அபிவிருத்தி’ மற்றும் ‘நல்லிணக்கம்’.

இந்த வலைக்குள் வீழாத ஆட்களே இல்லையென்று சொல்லுமளவிற்கு இது பயங்கரமான ஆயுதம். அடிப்படை அபிலாசைகளும் இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடிப்படையிலான மீள்வாழ்வும், குடியேற்றமும் இல்லாமல் இந்த ‘அபிவிருத்தி’ யை இன அழிப்பு அரசு நடைமுறைப்படுத்த முனையும்போது வெளிப்பார்வைக்கு புனர்வாழ்வாக தோற்றமளிக்கும் அதே தருணத்தில் மறுவளமாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குள் தம்மை அறியாமல் சிக்கி கொள்கிறது அந்த இனம்.

விளைவாக அந்த இனத்திலிருந்து ஒரு குற்ற சமூகம் வெளித்தள்ளப்படும். தமிழீழத்தில் இன்று தினமும் கொலைகள்இ பாலியல் வல்லுறவுகள் கடத்தல்கள் கோஸ்டி மோதல்கள் திருட்டுக்கள் என்று நடக்கும் கூத்துக்கள் இதன் ஒரு பகுதிதான்.

தமிழர்களின்(புலிகள்) ஆட்சியில் குற்ற செயல்கள் அறவே ஒழிக்கப்பட்டிருந்தன. போரின் வடுக்களை தவிர ஒரு மேன்மையான சமூக அமைப்பு இருந்தது. இன்று அது கலைக்கப்பட்டுவிட்டது.

தின்பதற்கு சோறில்லை. ஆனால் இன்று பாலியல் உணர்வை தூண்டவும் அதை போக்கவும் வழி திறந்து விட்டிருக்கிறது இனஅழிப்பு அரசு. விளைவாக காதல் என்ற பெயரில் சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகங்களும், அது மறுக்கப்படும் போது அதை வன்முறை ரீதியாக எதிர்கொள்ளுமளவிற்கு ஒழுங்கற்ற சூழலையும் திட்டமிட்டு உருவாக்கி விட்டிருக்கிறது இன அழிப்பு அரசு.

பாலியல்உணர்வு குறித்த, பாலியல்கல்வி குறித்த போதிய புரிதல் இல்லாத சமூகத்தில்–அதுவும் இன அழிப்பை சந்தித்த, சந்தித்துகொண்டிருக்கிற ஒரு இனத்தில் பாலியல் உணர்வை தூண்டும் அதை பகிரங்கமாக காட்சிபடுத்தும் ஒரு சமூக அமைப்பு உருவாவது ஆரோக்கியமானதல்ல.

அது புங்குடுதீவு குற்றவாளிகளைத்தான் சமூகத்தில் உருவாக்கும். குடும்ப தகராறு மற்றும் காதல் தொடர்பின் விளைவாக நடந்த செங்கல்லடிப் படுகொலை, அச்சுவேலிப் படுகொலை போன்ற சம்பவங்களை முன்பே நாம் இனஅழிப்பின் பக்க விளைவாக கருதி அந்த ஒழுங்கின் பிரகாரமே நீதி எட்டப்பட வேணடும் என்று ஆய்வு செய்து சமர்ப்பித்ததை அரசியல்வாதிகளும் தமிழ்ச்செயற்பாட்டாளர்களும் கவனத்தில் எடுக்காததன் விளைவே இத்தகைய படுகொலைகள் தொடர்வதற்கு காரணமாகும்.

இதனால் ஒரு சமூகத்திற்கு கிடைக்கும் பட்டங்கள் திருடன், கொலைகாரன். ஏனென்றால் இதைத்தான் இனஅழிப்பு அரசு விரும்புகிறது. இந்த நிலைகளை திட்டமிட்டே உருவாக்கியதே இன அழிப்பு அரசுதானே! இதற்கு பெயர்தான் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு.

இப்போது நடக்கிற எந்த கூத்திற்கும் பெயர் புனர்வாழ்வும் இல்லை. அபிவிருத்தியும் இல்லை. நல்லிணக்கமும் இல்லை. அப்பட்டமான இன அழிப்பு இது.

குறிப்பாக பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் தமிழ் குழுமத்திற்குள் தொடர்ந்து நிகழ அனைத்து வாய்ப்புக்களையும் திறந்து விட்டிருக்கிறது இனஅழிப்பு அரசு.

ஒரு இனத்தின் அடிப்படையும் ஆதாரமும் பெண்கள்தான். எனவே இத்தகைய பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நிகழும்போது அது சமூகத்திற்குள் பாரிய விளைவை தோற்றுவிக்கிறது. மே 18 இற்கு பிறகு நூற்றுக்கணக்கான இத்தைகய சம்பவங்கள் வெளியாக தெரிந்தும் தெரியாமலும் நடந்திருக்கின்றன.

தமிழீழ நிழல் அரசின் காலத்தில் தமிழ்ப்பெண்கள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் தமது காலாச்சார விழுமியங்களைப் பேணி சுதந்திரப் பறவைகளாக வாழ்ந்து வந்த காலம் ஒரு கனவாகிப் போய், இன்று எமது பெண்கள் சமுதாயமே இனவழிப்பின் ஒரு ஆயுதமாக பாலியல் வன்கொடுமைப்போருக்குள் அடக்கப்பட்டு வருகிறார்கள்.

இதற்கு இந்த வன்முறைக் குழுக்களின் தொடர் இருப்பே காரணமாகிறது. இப்போதெல்லாம் நாம் அடிக்கடி கேள்விப்படும் செய்தி. தாயகத்தில் போதை பொருள் விற்பனையும், அதன் பாவனையின் அதிகரிப்பும்.

இதை விநியோகிக்க மட்டுமல்ல இதற்கு அடிமையாகி தமிழ் சமூகம் ஒரு வன்முறை-குற்ற சமூகமாகவும் உருவாக இன அழிப்பு அரசு நகர்த்தும் காய்நகர்த்தல் இது.

எனவே பின் யுத்தகால தனி மனித வன்முறையை-வன்முறைக் குழுக்களின் பின்னணியை நாம் இனஅழிப்பு நோக்கில் அணுக தவறுவோமாயின், நாம் அதற்கு பாரிய விலையைக் கொடுக்க நேரிடும்.

ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய இக்கட்டான தருணம் இது. இல்லையேல் நம்மை நாமே அழித்துக் கொண்டோம் என்ற இழிவான வரலாறே எஞ்சும்.

http://www.tamilwin.com/articles/01/123042?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.