Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் கால்பதிக்கும் சீனாவின் ஆர்வத்தை இந்தியா தடுத்து நிறுத்துமா?

Featured Replies

A container ship is pictured docked at the Colombo South Harbor funded by China in Sri Lanka January 21, 2016. Sri Lanka's inflation measured in a new National Consumer Price Index (NCPI) was up 4.2 percent in December from a year earlier, compared with a 4.8 percent rise in November, the Department of Census and Statistics said on Thursday. REUTERS/Dinuka Liyanawatte - RTX23EF9

படம் | Dinuka Liyanawatte Photo, Reuters, Time | சீனாவின் நிதியுதவியுடன் கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கப்பட்ட பகுதி.

சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஜி சியான்லியாங் (Yi Xianliang)  வடக்கில் துனைத் தூதரகம் ஒன்றை உருவாக்குவதில் தாம் ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு சாதாரண செய்தி. ஆனால். அரசியல் கண்கொண்டு நோக்கினால் இது மிகவும் முக்கியமானதொரு செய்தி. ஏற்கனவே இந்தியா யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் ஒன்றை நிறுவியிருக்கும் நிலையிலேயே சீனாவும் அவ்வாறானதொரு ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. சீன முதலீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதல் பகுதி 2010இல் திறந்துவைக்கப்பட்டது. இதே ஆண்டுதான் இந்தியா அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இரண்டு இடங்களிலும் துணைத் தூதரகங்களை திறந்தது. தற்போது அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீதமான பங்குகளை சீனா வாங்கியிருக்கின்றது. மேலும், அரசாங்கம் சீனாவினால் நிர்மானிக்கப்படவுள்ள முதலீட்டு வலயத்திற்கென 15,000 ஏக்கர் காணிகளையும் வழங்கியிருக்கின்றது. இவ்வாறானதொரு சூழலிலேயே, சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்தின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார். சீனத் தூதுவர் கடந்த யூன் மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் வடக்கின் ஆளுனர் ஆகியோரை சந்தித்திருந்தார். இதன் போது பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு உதவுவதில் தாம் ஆர்வம் கொண்டிருப்பதாக தெரிவித்திருந்ததையும் இந்த இடத்தில் குறித்துக்கொள்ளலாம். சீனத் தூதுவரின் வடக்கு விஜயத்தின் போது யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பத்துப் பேருக்கு புலமைப்பரிசில்களை வழங்கும் விருப்பத்தையும் தெரிவித்திருந்திருந்தார்.

வடக்கின் மீதான சீனாவின் ஆர்வத்தை நாம் எவ்வாறு புரிந்துகொள்ளலாம்?

மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் சீன – இலங்கை நெருக்கம் வரலாற்றில் என்றுமில்லாதவாறு உச்சத்தைத் தொட்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது மஹிந்த ராஜபக்‌ஷவின் தேவைகளை துல்லியமாகப் புரிந்துகொண்ட சீனா, யுத்தத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஆயுத ஒத்துழைப்புக்களை வழங்கியதன் ஊடாக, கொழும்புடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது. இந்தத் தொடர்பை பயன்படுத்தியே அம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்றை நிர்மானிக்கும் முயற்சியில் வெற்றிபெற்றது. விடுதலைப் புலிகள் யுத்தமுனையில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருந்த 2008ஆம் ஆண்டிலேயே அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் சீனாவிற்கான கதவுகள் மேலும் திறக்கப்பட்டது. மனித உரிமைகள் தொடர்பில் ராஜபக்‌ஷ மீது போடப்பட்ட அமெரிக்க அழுத்தங்கள் அனைத்தும், தனது வெளிவிவகார கொள்கையில் மனித உரிமைகளுக்கு பெரியளவில் முக்கியத்துவமளிக்காத சீனாவின் உள்நுழைவை மேலும் இலகுபடுத்தியது. இவ்வாறு சீனாவின் பிடி இலங்கையின் மீது இறுகிக்கொண்டிருந்த சூழலில்தான் ஆட்சிமாற்றமொன்று நிகழ்ந்தது. ஆட்சி மாற்றம் எதனை இலக்காகக் கொண்டிருந்தது என்பதை இலகுவாகப் புரிந்துகொள்ளக் கூடியவாறே, அதன் பின்னரான நிகழ்வுகள் அனைத்தும் இடம்பெற்றன. சீனாவின் பாரிய முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுவந்த கொழும்பு நகரத்திட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டது. இது பெய்ஜிங் – கொழும்பு உறவில் விரிசல்களை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் இலங்கை சர்வதேச ரீதியாக பாதகமான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்று சீனா எச்சரிக்குமளவிற்கு சீன – இலங்கை உறவில் விரிசல்கள் ஏற்பட்டன. ஆனால், ஒரு கட்டத்துடன் புதிய அரசாங்கம் சீனாவுடன் இணைந்து செல்லும் முடிவை எடுத்ததைத் தொடர்ந்து மீண்டும் சீனாவின் நகர்வுகளை தடையின்றி முன்னெடுக்கும் சூழல் உருவாகியது. பொருளாதார நெருக்கடிகளிலிருந்து தப்பும் நோக்கில் மீண்டும் சீனாவை நோக்கியே பயணிக்க வேண்டிய நிர்பந்தம் கொழும்பிற்கு ஏற்பட்டது. இந்தப் பின்னணியில் நோக்கினால், சீனாவை ஓரங்கட்டுதல் என்னும், ஆட்சி மாற்றத்தின் பிரதான இலக்கு அதன் ஆரம்பக்கட்டத்திலேயே தோல்வியைத் தழுவியது. உண்மையில், சீனாவை ஓரங்கட்டுதல் என்பது இலங்கையின் தோல்வியல்ல. மாறாக, ஆட்சி மாற்றத்தை ஆதரித்துநின்ற இந்தியாவினதும் அமெரிக்காவினதும் தோல்வியாகும். இன்றைய நிலையில் சீனா இலங்கையில் வலுவாக காலூன்றிவிட்டது. இனி எந்தவொரு நகர்வாலும் சீனாவை ஓரங்கட்ட முடியாது. இனி நிகழவிருப்பது ஊன்றிய காலை அகல வைப்பதற்கான முயற்சிகள்தான்.

இலங்கை மீதான சீனாவின் ஆர்வத்திற்கான காரணம் என்ன?

சீனாவின் ஆர்வங்கள் வர்த்தக நோக்கம் கொண்டதல்ல. சீனாவைப் பொறுத்தவரையில் இலங்கை அதன் சந்தை நோக்கில் முக்கியமான ஒன்றல்ல. ஆனால், அதன் பொருளாதார நலன்களை பெருக்கிக் கொள்வதற்கும் அதற்கான பாதுகாப்பு அரணை கட்டியெழுப்புவதிலும் இலங்கை மூலோபாய முக்கியத்துவம் கொண்ட நாடு. இந்த அடிப்படையிலேயே சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணித்தது. சீனா ஏற்கனவே மியன்மார், பங்காளாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவு, கென்யா ஆகிய நாடுகளில் மூலோபாய துறைமுகங்களை நிர்மாணித்திருக்கின்ற நிலையிலேயே, தற்போது அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் பொறுப்பேற்றிருக்கிறது. இவ்வாறு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் அனைத்து துறைமுகங்களும் இந்து சமுத்திர பிராந்தியத்தை இணைக்கும் பிரதான கடல்வழிப்பாதைகளாகும். இவ்வாறு துறைமுகங்களை நிர்மாணிக்கும் இத்திட்டத்தின் பின்னால் இருக்கும் நிகழ்ச்சி நிரலோ வேறு என்கின்றனர் புவிசார் அரசியல் நோக்கர்கள். அதாவது, சீனாவின் துறைமுகங்களை விரிவுபடுத்தும் மேற்படி திட்டமானது இறுதியில் அதன் கடற்படை விரிவாக்கமாகவே உருமாறும் என்பதே அவ்வாறானவர்களின் கருத்து. இவ்வாறு, சீனா தனது துறைமுகங்களை நிர்மாணித்திருக்கும் நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, மியன்மார், பங்களாதேஷ் ஆகிய நாடுகள், சீனாவிடமிருந்து குறிப்பிட்டளவான இராணுவ உதவிகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்ற நாடுகளாகும்.

சீனா வடக்கில் கால்பதிக்கும் ஆர்வத்தை வெளியிட்டிருப்பதை மேற்படி தகவல்களோடு சேர்த்து வாசித்தால், வடக்கின் மீதான சீனாவின் ஆர்வம் நிச்சயமாக மூலோபாய முக்கியத்துவமுடைய ஒன்றுதான் என்பதை விளங்கிக்கொள்ள முடியும். சீனா அம்பாந்தோட்டையில் துறைமுகமொன்றை நிறுவியதன் பின்னணியில்தான் இந்தியா அம்பாந்தோட்டையிலும், யாழ்ப்பாணத்திலும் துணை தூதரங்களை திறந்தது. தற்போது அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா பொறுப்பேற்றிருக்கின்ற நிலையில்தான், வடக்கில் ஒரு தூதரகத்தை நிறுவும் ஆர்வத்தை வெளியிட்டிருக்கிறது. இந்த இடத்தில் பலாலி விமான நிலையத்தை மீளவும் இயங்குநிலைக்கு கொண்டுவரும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகின்றது என்பதையும் இங்கு குறித்துக்கொள்ள வேண்டியது அவசியம். பலாலி விமான நிலையம் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்ற நிலையில் வடக்கின் நிலைமைகளை கண்காணிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக சீனா கருதுகிறதா?

இலங்கையில் இந்தியாவை தவிர வேறு எந்தவொரு தூதரகமும் பிராந்திய விவகாரங்களை கவனிப்பதற்கென தூதரங்களை கொண்டிருக்கவில்லை. ஆரம்பத்தில் கொழும்பிலும் பின்னர் கண்டியிலும் மட்டுமே துனை தூதரகங்களை நிறுவியிருந்த இந்தியாவானது, அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணிப்பிற்கு பின்னர் அங்கும் ஒரு துணைத் தூதரகத்தை நிறுவியது. அம்பாந்தோட்டையை தளமாகக் கொண்டு சீனா இயங்க முற்பட்டதன் பின்னணியில்தான் அங்குள்ள நிலைமைகளை கணிக்காணிப்பதற்கென துணைத் தூதரகம் ஒன்றை இந்தியா நிறுவியது என்பதை விளங்கிக் கொள்வதில் சிரமமில்லை. இதே போன்று வடக்கை தளமாகக் கொண்டு இயங்கும் இந்தியாவின் நடவடிக்கைகளையும் சீனா கண்காணிக்க முற்படுகின்றதா? ஒரு தூதரகத்தை நிறுவ வேண்டுமாயின் முதலில் அதனை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். அந்த வகையில் நோக்கினால் வடக்கில் கால்பதிக்கும் சீனாவின் ஆர்வத்தை அரசாங்கம் எவ்வாறு பார்க்கும் என்பது தொடர்பில் தற்போதைக்கு எதிர்வுகூற முடியாது. ஒருவேளை அரசாங்கம் இராஜதந்திர நெருக்கடிகளை கருத்தில் கொண்டு சீனாவின் விருப்பத்தை மறுத்தாலும் கூட, தெற்கில் இது அரசியல் விமர்சனங்களை ஏற்படுத்தலாம். அதாவது, இந்தியாவிற்கு பல தூதரகங்களை அமைக்க முடியுமானால் அந்தச் சந்தர்ப்பத்தை ஏன் சீனாவிற்கு வழங்க முடியாது என்றவாறு தெற்கின் சீன ஆதரவு சக்திகள் கேள்விகளை எழுப்பலாம். இதனைக் கொண்டு சிலர் புதிய அரசியல் பதற்ற நிலையொன்றை தோற்றுவிக்கலாம். இந்த பதற்றங்களைத் தவிர்க்கும் வகையில் அரசாங்கம் சீனாவின் விருப்பத்திற்கு இணங்கவும் வாய்ப்புண்டு.

சீனாவைப் பொறுத்தவரையில் அதற்கு இலங்கை மக்கள் மத்தியில் எவ்வித எதிர்ப்பும் இல்லை. இந்தியாவை எதிர்ப்பது போன்று சிங்கள மக்கள் மத்தியில் சீனாவிற்கு எந்தவொரு எதிர்ப்பும் இல்லை. இது சீனாவின் காலூன்றலுக்கும் விரிவாக்கத்திற்கும் மிகவும் சாதகமான அம்சமாகும். ஆனால், ஒப்பீட்டடிப்படையில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் எதிராக மக்களை திரட்டக் கூடிய அரசியல் சூழல் தெற்கில் உண்டு. ஒருவேளை தேவையற்ற அரசியல் பதற்றங்களை தணிக்கும் நோக்கில் சீனா, வடக்கில் தூதரகமொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் இணங்கும் பட்சத்தில், இந்தியா அதனை தனது நலன்களுக்கு அச்சுறுத்தலான ஒன்றாகக் கருதி இராஜதந்திர முட்டுக்கட்டைகளை போடுமா? இதுவும் ஊகிக்கக் கடினமான ஒன்றே. ஆனால், சீனா வடக்கில் கால்பதிப்பதை இந்தியா நிச்சயமாக விரும்பாது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த நிலைமைகளானது, சீனா இலங்கையைத் தளமாகக் கொண்டு ஒரு மூலோபாய ஆட்டத்தை ஆட ஆரம்பித்துவிட்டது என்பதையே உணர்த்திநிற்கிறது. இதில் பிறிதொரு விடத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. அண்மையில் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் சீனாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். ஒருவேளை, அங்குவைத்து வடக்கின் மீதான சீனாவின் ஆர்வங்கள் தொடர்பில் ஏதும் பேசபப்பட்டதா என்பதும் முக்கியமானது. ஆனால், இந்திய – சீன மூலோபாய மோதல்கள் எதிர்காலத்தில் தீவிரமடையவும் கூடும். எனவே, இது தொடர்பில் இரண்டு தரப்புக்களையும் கையாள வேண்டிய நிலைக்கு, தமிழ் தரப்புக்கள் செல்லவேண்டியும் வரலாம். தெற்காசியாவின் புவிசார் அரசியல் என்பது இந்தியாவை மையப்படுத்தியிருப்பது போன்று, இந்து சமுத்திர பிராந்தியத்தின் புவிசார் அரசியல் சீனாவை மையப்படுத்தியே சுழல்கின்றது. இந்த விடயங்களை துல்லியமாகக் கணிப்பிட்டு செயற்படுவதன் மூலமே யுத்தத்தால் நிர்மூலமான பகுதிகளை அபிவிருத்தி நோக்கி முன்கொண்டுசொல்ல முடியும்.

யதீந்திரா

http://maatram.org/?p=5160

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வெறுப்பு, சிங்களம் மட்டும் என்ற கருத்து தவறு.

அனுமான் காலத்திலிருந்து இன்றுவரை தீவு முழுவதுமே இந்திய எதிர்ப்பு நிலை. காரணம் எந்தத் தரப்பையுமே நம்பிக்கை கொள்ளும் அளவுக்கு இந்தியா நடந்து கொள்ளவில்லை.

சீனர்கள் வருவதில் ஒரே நன்மை, இந்தியா கரிசனம் கூடும் என்பதல்ல, மேற்கின் கரிசனம் கூடும் என்பதே. அதுவே எமக்கான நன்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.