Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் கடத்தும் அழகிய தீ!

Featured Replies

மான்டேஜ் மனசு 12: காதல் கடத்தும் அழகிய தீ!

 

ahzagiya_theeye_1_2706538f.jpg
 
 

ஃபேஸ்புக்கை திறந்தால் இன்று மணிகண்டன் பிறந்த நாள் என்ற அறிவிப்பு ஒளிர்ந்தது. அப்புறம் வாழ்த்தலாம் என்று நினைத்து மறந்துபோகும் மோசமான வியாதி எனக்கும் இருப்பதால் உடனே செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தினேன். இரவு விருந்துக்கு கண்டிப்பாக வந்துவிடவேண்டும் என்று சொல்லிவிட்டான்.

தம்பி பேச்சுக்கு மறு பேச்சா? கிளம்பத் தயாரானேன். அண்ணா சாலையில் இருந்து மேற்கு சைதாப்பேட்டை செல்ல எப்படியும் அரை மணிநேரம் ஆகுமே. அதுவும் 18k பஸ் தயவு பண்ணி தரிசனம் கொடுத்தால்தான் உண்டு. இந்த இடைவெளியில் உங்களுக்கு மணி - சரண்யாவை அறிமுகப்படுத்திவிடுகிறேன்.

தமிழ் சினிமாவின் லட்சத்து 99 ஆயிரத்து 90-வது விதிப்படி மணிகண்டனும், சரண்யாவும் ஒரே கல்லூரிதான். மணி பயோ - கெமிஸ்ட்ரி இரண்டாமாண்டு படிக்கும்போது என்.எஸ்.எஸ். கேம்ப்பில் முதல் முறையாக எலக்ட்ரானிக்ஸ் படிக்கும் சரண்யாவைப் பார்த்தான். அங்கு மணி இயக்கிய முதல் குறும்படம் 'உயிரின் வலி' திரையிடப்பட்டது. சரண்யாவுக்கு குறும்படம் பிடித்துப்போக மணியிடம் நான்கு வார்த்தைகள் பேசினாள்.

அவ்வளவுதான்! அவளிடம் அதிகம் பேசவேண்டும் என்று தோன்ற, நண்பர்கள் மூலமாக மொபைல் நம்பரை வாங்கினான் மணி.

கொஞ்சம் கொஞ்சமாகப் பேச ஆரம்பித்து நண்பர்களானார்கள். சரண்யாவுக்கு தன்மீது காதல் சாத்தியமா என்பதைத் தெரிந்துகொள்ள 'லவ் மேரேஜ் பெஸ்ட்டா? அரேஞ்ச் மேரேஜ் பெஸ்ட்டா?' என்ற வாதத்தை, தினமும் பேசுவதற்காகவே உருவாக்கினான். சில மாதங்கள் நீடித்த இந்தப் பட்டிமன்றத்தில் இறுதியில் ஜெயித்தது காதல்தான்! ஆம். காதல் திருமணமே சிறந்தது என சரண்யா திருவாய் மலர்ந்தாள்.

'நீ யாரையாவது லவ் பண்றியா?' என்ற வார்த்தையை அவளே மணியிடம் கேட்டாள். 'ஆமாம்...' என்று பதில் சொல்லியதோடு, யார் என்பதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை அவளிடமே கொடுத்துவிட்ட புத்திசாலி மணி. கண்டுபிடிப்பதில் சிரமம் தொடர்ந்தால் தினம் ஒரு க்ளூ என்பது இதில் ஒரு கோரிக்கை. ஒருவழியாக, 'மணி தன்னைதான் காதலிக்கிறான்' என்பதை சரண்யா தெரிந்துகொள்ள ஏழு மாதங்கள் ஆனது. மூன்றாம் ஆண்டு இறுதியில் காதலைச் சொன்னான். சந்தோஷமாக சம்மதித்தாள்.

'சினிமாதான் என்னுடைய கனவு, சினிமாதான் என் லட்சியம்' என்று சரண்யாவிடம் சொன்னான். அவள் மணியைக் காதலிக்கக் காரணமே இதுதான் என்பது தெரிந்ததும் மணியே ஆச்சர்யப்பட்டான்.

படிப்பு முடிந்து, சரண்யா மேல்படிப்புக்காக சேலம் சென்றுவிட, மணி வேலை கிடைக்காமல் அவதிப்பட்டான். எக்காரணத்தைக் கொண்டும் வீட்டில் காசு வாங்கக்கூடாது என்று வைராக்கியமாக இருந்த மணிக்கு சரண்யாவின் 'எக்ஸாம் பீஸ்' பல தடவை கை கொடுக்கும்.

கடைசியாக தியேட்டரில் சென்று பார்த்த சினிமா எது என்று கேட்டால், அவளுடைய பதில் 'சந்திரமுகி!'. ஆனால், மணி பேசும் சினிமாக்களை ஆர்வமாகக் கேட்பாள். டைரக்டர் ஆகணும்னா, நிறைய படிக்கணும் என அட்வைஸ் செய்ததோடு, மாதம் ஒருமுறை ஊருக்கு வரும்போது முன்னே மணியும், பின்னே சரண்யாவும்... அல்லது முன்னே சரண்யாவும் பின்னே மணியுமாய் பரமக்குடியை வலம் வந்து, ஒரு புத்தக்கடைக்குள் நுழைந்துகொள்வார்கள். மணியின் வாசிப்புப் பழக்கத்தை அதிகரித்தவள் சரண்யாதான்.

சென்னைக்கு வந்து ஆறு மாதங்களாகியும் வேலை கிடைக்காத விரக்தியில் கடலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த மணி சரண்யாவுக்கு அலைபேசினான்.

கையில் காசு இல்லை என்றும் ஊருக்கே வந்துவிடப் போவதாகவும் கலங்கினான். சரண்யா வார்த்தைகளில் மட்டும் அந்த அக்கறையை, ஆறுதலை விதைக்கவில்லை. செயலில் காட்ட நினைத்தாள். இத்தனைக்கும் சென்னை சரண்யாவுக்கு பழக்கமில்லை. ஆனால், தலைநகரம் தன்னம்பிக்கையும், வாய்ப்புகளையும் கொடுக்கும் என்று அந்த தேசத்தில் தேடலை ஆரம்பித்தாள்.

தோழியின் தோழிக்கு சித்தப்பா ஒருவர் மயிலாப்பூரில் இருந்ததை அறிந்து 2000 ரூபாய் பணம் கொடுக்க ஏற்பாடு செய்தாள். அடுத்த நாள் காலை அந்த சித்தப்பா சைதாப்பேட்டைக்கு வந்து மணியை சந்தித்தார். மேன்ஷனில் அவனை தங்க வைத்து செலவுக்கு கையில் கொஞ்சம் பணத்தை திணித்துவிட்டுச் சென்றார்.

'சினிமா கோட்பாடு'னு, உலக சினிமா புத்தகங்கள் மூன்று தொகுதி, என குறிப்பிட்ட சில புத்தகங்களைப் படிச்சா டைரக்டர் ஆகிடலாம்!' என யாரோ அவளுக்குச் சொல்ல... விலையை விசாரிக்கச் சொல்லி மணியிடம் வற்புறுத்தினாள். ஆயிரத்துக்கும் அதிகம் விலை என்றதும் கொஞ்சமும் யோசிக்காமல், 'என் மோதிரத்தை வித்துடுறியா மணி? அம்மாகிட்ட தொலைஞ்சு போச்சுனு பொய் சொல்லிடுறேன்'னு சொன்னவள் சரண்யா.

பத்திரிகை அறிமுகம் கிடைத்து, அதன்மூலம் எளிதாக சினிமாவுக்குள் புகுந்துவிடலாம்... என அண்ணன் ஒருவர் சொன்ன பாதையைத் தேர்ந்தெடுத்து, ஒரு பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தான் மணி. சென்னைக்குச் செல்ல குறைந்தபட்சம் மூவாயிரம் தேவை என்ற சூழல். சின்ன வயதில் இருந்தே சேர்த்துவைத்த உண்டியலை மொத்தமாக உடைத்து, கைக்குட்டையில் சுற்றிக்கொடுத்தாள்.

சினிமா வாழ்க்கை பயத்தையும், அவ நம்பிக்கையையும், குழப்பத்தையும் கொடுக்கும்போதெல்லாம் மணி கொஞ்சம் பிதற்றுவான். அப்போதெல்லாம் புத்தகங்களாலும், டிவிடிகளாலும் சரண்யா பதில் சொல்வாள்.

கேட்டால், 'எனக்குக் கிடைச்ச முதல் பெஸ்ட் ஃபிரெண்ட் நீதான்டா! உன் ஆசை ஜெயிக்கணும்' என்றாள்.

மணிக்கும் சரண்யாவுக்கும் ஒரே வயது. வீட்டில் திருமண ஏற்பாடுகளுக்குப் பேச்சுகொடுத்துவிடுவார்கள் என்ற பயத்திலேயே மேல்படிப்புக்காக சேலம் சென்றாள். அவளுக்கு எம்.எஸ்.சி படிப்பதில் பெரிதும் விருப்பம் இல்லை என்றாலும், மணி திருமண

பயத்திலிருந்து இரண்டு வருடங்கள் நிம்மதியாக இருப்பான் என்பதால் படித்தாள்.

ஆசைப்பட்டது போலவே சினிமா பத்திரிகை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தான். அவள் படித்துக்கொண்டிருந்தாள். சரண்யா வீட்டில் அவளை நச்சரிப்பதற்குள் நல்ல வேலைக்குச் சேர்ந்துவிடவேண்டும் ப்ளஸ் தன்னுடைய பாதையும் மாறிவிடக்கூடாது என்று மணி உழைத்ததில், நல்ல பலன் கிடைத்தது. முதல் முறையாக மணியின் 'நிழல்' குறும்படத்தை யூடியூபில் பார்த்த முதல் ரசிகை அவள்தான்!

'சிக்குபுக்கு' படத்தின் இயக்குநர் பெயர் கே.மணிகண்டன். அந்தப் பேப்பரை எப்படியோ மடித்துப் பாதுகாத்து, கே-க்குப் பக்கத்தில் மணியினுடைய இன்னொரு இனிஷியலை எழுதி... கே.ஜி.மணிகண்டன்... சூப்பர்ல? என சிலாகிப்பாள். 'எந்தக் கதையை யோசிக்கணும்னாலும் தனுஷ்கோடி போனா போதும்!'னு என்றோ மணி சொன்னதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, அடிக்கடி கவனத்தை தனுஷ்கோடி பக்கம் திருப்புவாள்.

'ஃபிரெண்டுகிட்ட பேசுறேன்!' என்று சொல்லி, மணியிடம் அவள் பேசும் இரண்டு, மூன்று மணிநேர உரையாடல்கள் அவள் அம்மாவுக்குத் தெரியவர... வீட்டில் வந்து அவனைப் பேசச்சொன்னார்கள். 'சினிமாதான் என்னுடைய கனவுனு சொல்லிடாத!' என்று தடுத்தவள், எப்படிப் பேச வேண்டும்? என்ன பேசவேண்டும்? என்பதை மணிக்கு ஒருநாள் முழுக்க பாடமாகவே எடுத்தாள்...

மணி வேலை பார்த்த பத்திரிகை அவர்களுடைய தாத்தாவுக்கு ரொம்பப் பிடிக்குமாம். இந்த ஒரு தகுதியைவைத்தே... தாரளாமகப் பொண்ணு கொடுக்கலாம் என்று சிம்பிளாக சீன் வைத்தார்கள்.

சரண்யா தற்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறாள். இப்போது மணியால் நிறைய படங்கள் பார்க்க முடிவதில்லை. ஆனால், சரண்யா மணிக்கு நேரெதிராக மாறிவிட்டாள். தினம் ஒரு சினிமா பார்த்து, அந்தக் கதையை அவனுக்கு விவரிக்கிறாள்.

'ஆக்சுவலா, இந்த சீனை இப்படி எடுத்திருக்கவே கூடாது' என விமர்சனம் வைக்கிறாள். மொக்கையான ஒரு படத்தைத் திணித்து, 'இந்தப் படத்தைப் பார்த்துடு. அப்போதான், எப்படியெல்லாம் சினிமா எடுக்கக்கூடாதுனு கத்துக்கமுடியும்!' என்கிறாள்.

சினிமா குறித்து நிறைய பேசும் சரண்யாவின் எப்போதும் அணை போட நினைக்கமாட்டான் மணி. சரண்யாவின் சினிமா உரையாடல் நீர்வீழ்ச்சியைப் போல ஒழுங்கோடு இருக்கும். அந்த ஃப்ளோ வேறு சில சிந்தனைகளை ஊற்றெடுக்க வைக்கும் என்பது மணியின் நம்பிக்கை.

அப்படித்தான் அன்றும் பேச ஆரம்பித்தனர்.

'' 'பிசாசு' செம படம் டா. குடிகாரனைத் திருத்துது. தப்பு செய்தவனை தண்டிக்குது. ஆனா, சாவுறதுக்கு காரணமா இருந்த ஹீரோவை எதுவுமே பண்றதில்ல... அவன் அம்மாவை காப்பாத்தி, அவன் சாகக்கூடாதுன்னு தடுக்குது''

''அட... ஆமாம்ல...''

மணிக்கு சின்ன ஸ்பார்க் அடித்தது. எதையோ கண்டுபிடித்துவிட்டதைப் போல வெற்றித் தொனியில் பேசினான்.

''இந்த கார் விபத்தை எங்கேயாவது பார்த்த ஞாபகம் இருக்கா...''

''இல்லையே மணி''

''சரி. இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவினால் தொட்டிலைக் கட்டி வைத்தேன் பாட்டு ஞாபகம் இருக்கா?''

''இருக்கு. நீதிக்கு தலைவணங்கு. எம்ஜிஆர், லதா, நம்பியார் நடிச்ச படம்.''

''கரெக்ட். ப.நீலகண்டன் டைரக்ஷன்ல வெளிவந்த படம். கதை என்ன?''

''எம்ஜிஆர் பணக்கார வீட்டுப் பிள்ளை. ரொம்ப ஃப்ரீக்கியா இருப்பார். எதையும் பெருசா எடுத்துக்காம ஜாலியா இருப்பார். அசால்ட்டா பயங்கர வேகத்துல கார் ஓட்டுவார். ஒரு நாள் எம்ஜிஆருக்கும், நம்பியாருக்கும் கார் பந்தயம் நடக்குது. அதுல ஆடுகள் செத்தாலும் பரவாயில்லைன்னு நம்பியார் வேகமா கார் ஓட்டுறார். எம்ஜிஆர் தான் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதவாராச்சே. அவர் ஆடு, மாடுகளுக்கு எல்லாம் வழி விட்டு கார் ஓட்டி வழக்கம்போல ஜெயிக்கிறார். ஜெயிச்ச உடனே ரெண்டு மனுஷங்களை கவனிக்காம வண்டி ஓட்டினியேன்னு நம்பியாரை அடிக்கிறார்.''

''நிறுத்து.''

''என்னாச்சு?''

''இந்த கார் தான் பிசாசுவோட முக்கிய களம். எம்ஜிஆர் படத்துல யார் ஓட்டின காரால விபத்து நடந்ததுன்னு சொல்லலை. ஆனா, எம்ஜிஆர் தான் ஓட்டினதா சொல்றாங்க. தப்புக்கு பிராயச்சித்தமா பாதிக்கப்பட்ட குடும்பத்துக்காக உழைக்க நினைக்கிறார் எம்ஜிஆர். இதான் பிசாசுவோட கதையும். கொஞ்சம் கலைச்சுப் போட்டு இருக்காங்க.''

''என்ன மாமா, இப்படி பின்ற? இதை நான் யோசிக்கவே இல்லையே!''

''இன்னும் இருக்கு கேளு. அப்புறம் எம்ஜிஆர் லதா வீட்லயே சமையல்காரனா ஆகுறது. அப்புறம் அப்பா பெருமைப்படுற மாதிரி நடந்துகிட்டது. அப்புறம் காதலியைக் கரம் பிடிக்குறது படம். இந்த லைன் தான் பிற்காலத்துல ரஜினி நடிப்பில் 'தம்பிக்கு எந்த ஊரு படமா' மறுஆக்கம் ஆகியிருக்கு.''

''ம்...''

''இன்னும் சொல்லவா? கார் பந்தயத்துல நம்பியாரே தப்பு பண்ணி இருக்கலாம். ஆனா, நண்பனுக்காக பழியை ஏத்துக்குறதும் ஹீரோயிஸம்தானே. அதான் சசிகுமார் நடிச்ச 'சுந்தரபாண்டியன்'''

''அப்புறம் 'தென்மேற்குப் பருவக்காற்று'ம், 'குட்டிப்புலி'யும் பார்த்திருக்கியா?''

''பார்த்திருக்கேன்.''

''ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?''

''நீயே சொல்லிடேன். ''

''பையன் வாழ்க்கைக்காக தன் உயிரையே கொடுக்குற அம்மாவோட தியாகம்தான் கதை. ரெண்டுலயும் அம்மா சரண்யா பொன்வண்ணன் தான்.

''ஆமாம்..''

'''ஆசை', 'வாலி' ரெண்டும் ஒரே படம்தான். மச்சினி மேல ஆசைப்படற அக்கா கணவனோட கதை 'ஆசை'. தம்பி மனைவி மேல ஆசைப்படற அண்ணன் கதை 'வாலி'. 'ஆசை' படத்துல இரட்டை வேடங்கள் இல்லை. 'வாலி'யில இரட்டை வேடங்கள். ரெண்டுமே அஜித் நடிச்ச ஹிட் படங்கள். இது இப்படியும் நடந்திருக்கலாம். இல்லை தற்செயலா கூட நடந்திருக்கலாம்.

''சரிதான் மாமா. எனக்கு ஒரே ஆசைதான். பாலாஜி சக்திவேலுக்கு அவர் மனைவி கலாநிதி தான் எல்லாமேன்னு படிச்சிருக்கேன். அவர் கஷ்டப்பட்ட காலத்துல துணையா இருந்து பேராசியர் வேலையில கிடைக்குற சம்பளத்தை வெச்சு குடும்பப் பொறுப்பை கவனிச்சுக்கிட்டாங்க. அதனால்தான் அவரால 'காதல்', 'வழக்கு எண்' மாதிரி தரமான படங்களைக் கொடுத்து, தேசிய விருது பெற்ற இயக்குநரா ஜெயிக்க முடிஞ்சது. உனக்கும் எல்லாம் கிடைக்கணும் மாமா. அதை நான் பக்கத்துல இருந்து பார்க்கணும்'' என்றாள்.

மணி நெக்குருகிப் போனான்.

இன்னும் சினிமாவுக்கே போகலையே.. என மணிக்கு வருத்தம் இருந்தது.

''கல்யாணம் பண்ணிக்கிட்டாதான், நீ சினிமாவுக்குள்ள ஈஸியாகப் போகமுடியும். தாலி கட்டுறவரைக்கும் வேலையில இரு. அப்புறம் சினிமாவுக்குப் போயிடு!'' என்பது, சரண்யாவின் பதில்.

'எனக்கு நல்ல ஃபிரெண்ட், காதலன், கணவன்... மூணுமே நீதான்!' என அடிக்கடி சரண்யா மணியிடம் சொல்வாள். அவளுக்கு என்ன பிடிக்கும்? என்னவாக ஆசைப்படுகிறாய்? என ஒருமுறை கேட்டான்.

'ரோட்டுல திரியிற வயசானவங்களைப் பார்த்துக்க ஒரு இடம் கட்டணும். அனாதைக் குழந்தைங்களுக்கு ஒரு ஸ்கூல் கட்டி, அதுக்கு நான் டீச்சரா இருக்கணும்!' என்று சொல்லியிருக்கிறாள்.

அதை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும் என்பது மணியின் ஆசை.

சரண்யா 'சிக்குபுக்கு' படத்தின் பேப்பரில் கே.ஜி. மணிகண்டன் என திருத்தி எழுதியது எனக்கு 'அழகிய தீயே' படத்தை நினைவூட்டியது.

ராதாமோகன் இயக்கிய முதல் படம் 'அழகிய தீயே'. பிரசன்னாவும், சிறப்புத் தோற்றத்தில் நடித்த பிரகாஷ்ராஜூம் நடிப்பில் பின்னி இருப்பார்கள். நவ்யா தமிழில் அறிமுகமான முதல் படம் இது.

விழிகளின் அருகினில் வானம் என்ற பாடலில் 'மனம் விரும்புதே உன்னை' படத்தின் போஸ்டரைக் காட்டுவார்கள். அதில் சிவசந்திரன் என்று பெயர் இருக்கும். நவ்யா சிவ என்பதை மட்டும் தன் கைகளால் மறைத்துவிட்டு சந்திரன் என்பதை பிரசன்னாவுக்கு தெரியும்படி காட்டுவார். அதைப் பார்த்து பிரசன்னா சின்னதாக புன்னகையை சிந்துவார். (படத்தில் பிரசன்னாவின் பெயர் சந்திரன்.)

இதுவேதான் மணி - சரண்யா காதலிலும் நடந்தது.

நவ்யாவின் படிப்புக்கு ஃபீஸ் கட்ட சென்டிமென்ட் சைக்கிளை விற்பார் பிரசன்னா. இங்கே மணிக்காக சென்டிமென்ட் உண்டியலை உடைக்கிறார் சரண்யா.

உதவி இயக்குநரின் வறுமையையும், வெறுமையையும் சொன்ன 'அழகிய தீயே' படத்தையும், குறும்பட இயக்குநராகவும், அதே சமயத்தில் பத்திரிகை நிறுவனத்தில் வேலை பார்க்கும் மணியையும் என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

கேரக்டர் உட்பட பிரசன்னாவும், மணியும் வேறு வேறு நபர்கள் அல்ல. 'அழகிய தீயே' அந்த விதத்தில் சிலிர்ப்பான நாஸ்டாலஜியை உருவாக்கிவிட்டது.

'அழகிய தீயே' கதை இதுதான்.

எல்லா வசதிகள் இருந்தும் அப்பா, அண்ணனின் அடிதடி, வெட்டுக்குத்து பிடிக்காமல் சுயமாக தான் உழைத்து சம்பாதிக்க வேண்டும். சுதந்திரமாக தன் கனவுகளை நிறைவேற்ற வேண்டும். தன் வாழ்க்கைத் துணையை தனக்கு ஏற்றார் போல தேர்ந்தெடுக்க வேண்டும் என நினைக்கிறார் நவ்யா. அப்பா பிரமிட் நடராஜன் லண்டனில் இருக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் பிரகாஷ்ராஜை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார். மாட்டேன் என்று சொன்ன நவ்யாவுக்கு அடியும், கண்ணீருமே பரிசாக கிடைக்கிறது. தோழியின் அண்ணன் ரமேஷிடம் உதவி கேட்கிறார் நவ்யா. ரமேஷ் உதவி இயக்குநராக இருக்கும் பிரசன்னாவை அறிமுகப்படுத்துகிறார்.

பிரசன்னா, குமரவேல், பாலா, ஜெயவர்மா என்று நான்கு பேரும் வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள். ஜெயவர்மா பாடி பில்டர். நடிகனாக ஆசைப்படுகிறார். குமரவேல் 'காதலிக்க நேரமில்லை' படத்துக்குப் பிறகு நல்ல காமெடிப் படம் வரவில்லை. அந்த காமெடிப் படத்தை தன்னால் மட்டுமே கொடுக்க முடியும் என்று நம்புகிறார். பாலா பார்க்கிற பெண்களை எல்லாம் காதலிக்கும் இன்னொரு உதவி இயக்குநர்.

பிரசன்னா நவ்யாவுக்கு உதவுவதாக உறுதி கொடுக்கிறார். தானும், நவ்யாவும் காதலிப்பதாக பிரகாஷ்ராஜிடம் பொய் சொல்கிறார். ஆரம்பத்தில் கோபப்படும் பிரகாஷ்ராஜ் இருவரும் காதலிப்பதாக நினைக்கிறார். நவ்யாவை வேண்டாம் என்று சொல்லி தன் திருமணத்தை நிறுத்திவிடுகிறார். பிரச்சினை முடியவில்லை.

நவ்யாவுக்கு இன்னொரு மாப்பிள்ளை பார்க்கிறார் பிரமிட் நடராஜன். நிலைமையின் தீவிரம் உணர்ந்து பிரகாஷ்ராஜ் பிரசன்னா, நவ்யாவை காரில் அழைத்துச் செல்கிறார். அந்த கார் ரிஜிஸ்டர் ஆபிஸில் வந்து நிற்கிறது. திருமணம் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக சொன்ன பொய் இப்படி திருமணப் பதிவு வரை கொண்டுவந்து விட்டதே என்று பிரசன்னா பிரகாஷ்ராஜிடம் உண்மையை சொல்ல நினைக்கிறார்.

ஆனால், நவ்யா கையெழுத்து போடச் சொல்கிறார். நவ்யாவுக்கும், பிரசன்னாவுக்கும் பதிவுத் திருமணம் நடக்கிறது.

பிரகாஷ்ராஜ் தன் வீட்டை திருமணப் பரிசாக கொடுத்துவிட்டு லண்டன் சென்றுவிடுகிறார். எலியும் பூனையுமாக சண்டைபோடும் பிரசன்னாவும், நவ்யாவும் ஒரு கட்டத்தில் நண்பர்கள் ஆகிறார்கள். நவ்யா மேல் பிரசன்னாவுக்கு காதல் பூக்கிறது. அதை சொல்ல தயங்குகிறார். நண்பன் பாடிபில்டர் ஜெயவர்மா, பிரசன்னாவுக்கு தைரியம் கொடுக்கிறார். ஆனால், நவ்யாவிடம் பிரசன்னா காதலை சொல்லவில்லை.

ஜெயவர்மா விபத்தில் இறந்துவிடுகிறார். அதற்குப் பிறகே, பிரசன்னா தயாரிப்பாளரிடம் கதை சொல்லி அட்வான்ஸ் வாங்குகிறார். ஜெயவர்மா இப்போது இல்லையே என ஃபீல் பண்ணுகிறார்.

நவ்யாவுக்கு பெங்களூரில் வேலை கிடைக்கிறது. அவர் பெங்களூர் செல்ல தயாராகிறார்.. நவ்யா பிரசன்னாவிடம் இருந்து விடை பெற்று ஆட்டோ ஏறிச் செல்கிறார். அடுத்த நிமிடமே ஓடிவருகிறார். சாவியை எடுத்துட்டுப் போய்ட்டேன் என்று சொல்லி, பிரசன்னா கையில் கொடுக்கிறார். அப்போது பிரசன்னாவின் விழிகளில் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது. நவ்யாவும் பிரசன்னாவும் மாறி மாறிப் பார்க்கிறார்கள்.

பிரசன்னாவுக்கு முன்பு வந்த அந்த பூம் நவ்யாவுக்கு வருகிறது. இருவரும் இணைகிறார்கள்.

பிரசன்னா, பிரகாஷ்ராஜ், எம்.எஸ். பாஸ்கரின் கதாபாத்திர வடிவமைப்பு படத்தில் கன கச்சிதம். சினிமாவை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனை தெய்வமாக வணங்குபவர் பிரசன்னா. 'சினிமாவுல கூட ஒருத்தரை ஒருத்தர் ரத்தம் வர்ற மாதிரி அடிக்கிறது எனக்குப் பிடிக்காது' என்று சொல்லும் பிரசன்னாவின் வார்த்தைகளில் இருந்தே அவரின் மென்மையான கதாபாத்திரத்தை புரிந்துகொள்ளலாம்.

ஹவுஸ் ஓனர் எம்.எஸ். பாஸ்கர் போலீஸாக நடிக்க யுனிஃபார்மில் வருவது காமெடி அத்தியாயம்.

''உன் நம்பிக்கையை வெச்சு ஒரு டம்ளர் டீ வாங்க முடியுமா?''

''உன்னை மாதிரி பிச்சைக்காரன் கிட்ட நான் தோத்துப் போகணுமா?''

''என் எதிரியா இருக்க உனக்கு தகுதி இருக்கா?'' என பிரசன்னாவிடம் வெடிக்கும் பிரகாஷ்ராஜ் பின்பு 'நீ என் தம்பி டா' என உருகுவது ரசனை.

விஜியின் வசனங்கள் படத்துக்கு கூடுதல் படம் என்பதை சொல்லியே ஆக வேண்டும்.

''அண்ணாச்சி மண்டை வேர்க்கும்போது என் கண்ணு வேர்க்குது.'' 2004ல் வந்த இந்த வசனம் 2014ல் வெளியான 'ராஜா ராணி'யில் 'நான் ஒண்ணும் அழல. கண்ணு வேர்க்குது 'என பரிமாணம் (?!) அடைகிறது.

சைக்கிள் விற்ற பிரசன்னா ''ஒரு பாக்கியலட்சுமி இல்லன்னா இன்னொரு ஜோதிலட்சுமி'' என்று நவ்யாவிடம் சொல்வார். இதுவே 'தலைநகரம்' படத்தில் த்ரிஷா இல்லனா திவ்யா என்று மாறி இருக்கலாம்.

"ஒருத்தனோட கனவை குறை சொல்லுற உரிமை யாருக்கும் கிடையாது" , "நம்மை சுத்தி நாலு நல்லவங்க இருந்தா போதும் அதை விட பெரிய ஆசிர்வாதம் எதுவும் கிடையாது" "கறந்த பால், அதிகாலை பனித்துளி , குழந்தையின் சிரிப்பை போல காதலும் புனிதமானது" போன்ற வசனங்களில் விஜி உணர்வுகளைக் கடத்தி இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் அச்சு பிச்சு காதலை சட்டயர் பண்ணும் வசனங்களும் படத்தில் உண்டு.

''கண்ணைப் பார்த்தவன், கொலுசைப் பார்த்தவன், 12 B பஸ்ல பார்த்தவன், மவுண்ட் ரோட்ல நிர்வாணமா ஓடுறவன் லாம் காதலிக்கிறான்.''

"ஏன் காதலை அவ கிட்ட சொல்ல மாட்டேன்ற. சினிமால காதலை சொல்லாத முரளி கூட இப்ப வர்ற படங்கள்ல தன் காதலை சொல்லிடறார்."

''வித்தியாசமா படமெடுத்தா உன்னை மாதிரி 4 பேர் திருட்டு விசிடில தான் படம் பார்க்கிறாங்க.''

''சினிமாவுல வில்லன் பொண்ணு ஹீரோயினாதானே இருக்கும். இது வில்லியாவே இருக்கு.''

''பீரியட் ஃபிலிம். 3 நாள்தான் ஷுட்டிங்.''

*

''ஹீரோவுக்கு கதை சொல்ல போனியே என்னாச்சு?''

''அவங்க அக்கா பையனுக்கு அஞ்சாங்கிளாஸ் பரீட்சை முடியலையாம்.''

''அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?''

''அந்த பையன் தான் கதையை ஓகே பண்ணனுமாம்.''

''உலகத்துலயே தமிழ்நாட்ல மட்டும் தான் டா ஜெராக்ஸ் காப்பிக்கு கூட கை தட்டுவான்.''

இப்படி வசனங்களிலேயே சினிமா கிழித்து தொங்கவிட்டு காயப் போட்டு இருப்பார்கள். ஆனால், அது எந்த நெருடலையும் ஏற்படுத்தாமல் சாமர்த்தியமாக பயன்படுத்தப்பட்டிருக்கும்.

*

நிற்க!

மணிக்கு தெய்வபக்தி அவ்வளவாய் கிடையாது. ஆனால், சரண்யாவின் ஆசைக்காக அவ்வப்போது கோயிலுக்குப் போவதுண்டு. அவர்கள் பெரும்பாலும் பேசிக்கொண்ட கடவுள் பிள்ளையாரைப் பற்றித்தான். அவர்கள் திருமணம் வருகிற விநாயகர் சதுர்த்தி அன்று நடைபெற உள்ளது.

அடுத்த மாதத்திலேயே மணிக்கு ஒரு பைக் வாங்கித் தர சரண்யா முடிவெடுத்திருக்கிறாள். மணி பஸ்ஸிலும், ஷேர் ஆட்டோவிலும் அலையக் கூடாதென்று மாதம் மாதம் சீட்டு கட்டுகிறாள். அந்த சீட்டு பணம் மணி பைக்கில் சென்று கெத்தாக சினிமாவில் சேர வேண்டும் என்பதுதான்.

இப்போது அழகியல் குறும்படத்தை பெரிய அளவில் திரையிட முடிவெடுத்திருக்கிறான் மணி. அண்ணாசாலையில் உள்ள ஓர் அலுவலகத்தில் கள்ளம் கபடம் இல்லாமல் 5 அடியில் புன்னகையை சிந்தியபடி ஒருவனைப் பார்த்தால் யாரென்று ரொம்ப யோசிக்காதீர்கள். அவன் மணிதான். அவனிடம் அட்வான்ஸ் வாழ்த்துகள் சொல்லிவிடுங்கள். ஆனால், பைக் விஷயம் நமக்குள் மட்டும் ரகசியமாக இருக்கட்டும்.

*

மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்...

http://tamil.thehindu.com/opinion/blogs/மான்டேஜ்-மனசு-12-காதல்-கடத்தும்-அழகிய-தீ/article8140591.ece?ref=relatedNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.