Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெயலலிதா சொன்ன குட்டிக் கதைகள்

Featured Replies

ஜெயலலிதா சொன்ன குட்டிக் கதைகள் - தொடர் 1

ஜெயலலிதா

செல்வி ஜெயலலிதா 1991-ம் ஆண்டு முதன்முறையாக ஆட்சிக்கு வந்து, தன்னுடைய ஆளுமைத்திறனை வெளிப்படுத்தினார். மக்களால் முதல் பெண் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 ஆண்டுகள் தமிழ்நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தவர். 1999-ல் இருந்து கட்சிக் கூட்டங்களுக்கோ, இதர விசேஷங்களுக்கோ எப்போது சென்றாலும் தன் கட்சியின் செயல்பாடுகள் பற்றியும், எதிர்க்கட்சி செய்யும் தவறுகள் பற்றியும் குட்டிக்கதைகளாகச் சொல்ல ஆரம்பித்தார். அந்தக் கதைகள், நீதிக்கதைகளாகவும், புராணக்கதைகளாகவும், தழுவியக் கதைகளாகவும் இருக்கும். அவர், இதுபோல் 100-க்கும் மேற்பட்ட கதைகளைச் சொல்லியிருக்கிறார். அதில் சிறந்த 10 கதைகளின் தொகுப்பை இங்கே தொடர்களாகப் பகிரவிருக்கிறோம். இதோ... அவர் சொன்ன கதைகள்!


கதை-1: பெண்கள் வெல்வார்கள்!


 
 

‘‘ஓர் ஊரில் ஒரு வணிகன் இருந்தான். அவனுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் அவன் கடனாளி ஆகிவிட்டான். அவனுக்கு கடனாகப் பணம் கொடுத்தவன் கொடுமையானவன். பல தடவை வணிகன், தவணை சொன்னான். இதனால் கோபம் அடைந்த பணம் கொடுத்தவன், வணிகனின் வீட்டுக்கு திடீரென்று ஒருநாள் சென்றுவிட்டான். அப்போது வணிகன் தன் ஒரே மகளுடன் தோட்டத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான். தோட்டத்தின் நடைபாதையில் கூழாங்கற்கள் கறுப்பு நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் ஆங்காங்கே கிடந்தன. உள்ளே நுழைந்த பணம் கொடுத்தவன், அவர்களைப் பார்த்து மரியாதை இல்லாமல் கத்தினான். ‘உடனே கடனைத் திருப்பிக் கொடு. இல்லாவிட்டால், உனக்கு சிறைத் தண்டனை கிடைக்கும்’ என்று மிரட்டினான். அதைக் கண்டு வணிகன் பயந்து நடுங்கினான். அது, மன்னர் ஆட்சிக் காலம். ஆகவே, கடன் கொடுத்தவன் மன்னரிடம் புகார் செய்தால் கடன் வாங்கியவனுக்குத் தண்டனை நிச்சயம். 

இந்தநிலையில், வணிகனுக்கோ வயது 70. அவனால், சிறைக்குப் போகவும் முடியாது; போனால், அவன் மகளைக் காப்பாற்றவும் யாருமில்லை. என்ன செய்வது என்று புரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருந்தான். அப்போது, பணம் கொடுத்தவனின் பார்வை வணிகனின் மகள் மீது விழுந்தது. அழகின் வடிவமாக இருந்த அவளைப் பார்த்த பின்பு ஒரு தீர்மானத்துக்கு வந்தான், பணம் கொடுத்தான். பிறகு, வணிகனைப் பார்த்து அவன் கூறினான். ‘வணிகனே... நான் சொல்வதைக் கேள். உன்னைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. நான் உனக்கு உதவ நினைக்கிறேன். ஆனால், நான் சொல்லும் ஓர் ஏற்பாட்டுக்கு நீ சம்மதிக்க வேண்டும். நான், ஒரு பையில் இங்கே கீழே கிடக்கும் கறுப்பு நிறக் கூழாங்கல் ஒன்றையும், வெள்ளை நிறக் கூழாங்கல் ஒன்றையும் போடுவேன். அதிலிருந்து, உன் மகள் ஒரு கல்லை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும் கல், வெள்ளை நிறக் கல்லாய் இருந்தால்... நீ கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டாம். அதன்பிறகு நான் உன்னை ஒருபோதும் தொந்தரவு செய்ய மாட்டேன். ஆனால், கறுப்பு நிறக் கல்லாய் இருந்தால்... உன் மகளை எனக்கு கல்யாணம் செய்து தரவேண்டும். இதற்குச் சம்மதமா?’ என்று வணிகனைக் கேட்டான். வணிகனுக்கு வேறு வழி தெரியவில்லை. பின்னர், தயங்கி... தயங்கி ‘சரி’ என்றான். கீழே தரையில் கிடந்த இரண்டு நிறக் கற்களையும் எடுத்து பைக்குள் போட்டான். ஆனால், திருட்டுத்தனமாக இரண்டு கறுப்பு நிறக் கற்களையும் பைக்குள் போட்டுவிட்டான். வணிகன், இதை கவனிக்கவில்லை. ஆனால், வணிகன் மகள் இதை கவனித்துவிட்டாள். பை, அவள் முன் கொண்டு வரப்பட்டது. உள்ளே இருக்கும் இரண்டுமே கறுப்பு நிறக் கற்கள். அவற்றில் அவள், எதை எடுத்தாலும் பணம் கொடுத்தவனை கல்யாணம் செய்தே ஆக வேண்டும். தந்தையோ கண்ணீர் சிந்தியபடி நிற்க... பணம் கொடுத்தவனின் மோசடித்தனத்தை எப்படிச் சொல்வது? அப்படியே உண்மையைச் சொன்னாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. 

p2_12127.jpg

இந்தச் சவாலை எப்படிச் சந்திப்பது என்ற முடிவோடு வணிகன் மகள் அந்தப் பைக்குள் கையைவிட்டு ஒரு கல்லை வெளியே எடுத்தாள். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தக் கல்லை நழுவவிட்டாள். கல் விரைந்து ஓடிப்போய் கற்குவியலோடு சேர்ந்துகொண்டது. வணிகன் மகள் கல்லை நழுவவிட்டதற்காக... பணம் கொடுத்தவனிடம் வருத்தம் தெரிவித்தாள். பிறகு அவனிடம், ‘இப்போது பையில் ஒரு கல் இருக்கிறது. அந்தக் கல், கறுப்பு நிறமாக இருந்தால்... நான் எடுத்தது வெள்ளை நிறக் கல். அப்படியென்றால், நாங்கள் கடனைச் செலுத்த வேண்டியதில்லை. நான், உங்களை மணம் புரியவும் அவசியம் இல்லை. கல், வெள்ளை நிறமாக இருந்தால்... நான் எடுத்தது கறுப்பு நிறக் கல். அப்படி என்றால், நான் உங்களை மணந்துகொள்ளத்தான் வேண்டும். ஆகவே, பையில் என்ன நிறக் கல் இருக்கிறது என்று பார்க்கலாமா’ என்று கேட்டாள் வணிகனின் மகள்.

திணறிப் போனான் பணம் கொடுத்தவன். எடுத்த கல் போக... பைக்குள்ளே இருக்கும் ஒரு கல், கறுப்பு நிறக் கல்லாகவே இருக்கும். அவன் போட்ட இரண்டு கற்களும் கறுப்பு நிறக் கற்கள்தானே? அப்படியென்றால், அந்தப் பெண் எடுத்த கல் வெள்ளை நிறம் என்று ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பணம் கொடுத்தவனின் தந்திரம் பலிக்கவில்லை. இதனால் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு போய்விட்டான். மகள், வெற்றிப் புன்னகை பூத்தாள். இந்தக் கதை எதனைக் காட்டுகிறது... இதிலிருந்து என்ன தெரிகிறது? அறிவுள்ள பெண்களை யாரும் ஏமாற்ற முடியாது. எப்படிப்பட்டவரும் எளிதில் தீர்க்க முடியாத சிக்கல்கள் வந்தாலும்கூட பெண்கள் அதை வென்றுவிடுவார்கள். அவர்களுக்குத் தேவை வாய்ப்புகள் மட்டுமே. வாய்ப்பு மட்டும் கிடைத்து விடுமேயானால் பெண்கள் எந்தத் துறையிலும் வெல்வார்கள். ஆண்களுக்கு சமமாக... ஏன்? ஆண்களைவிடவும் அதிகம் வெற்றி பெற முடியும். இதற்கு உங்கள் அன்புச் சகோதரியாகிய நானே சிறந்த எடுத்துக்காட்டு.’’ ஆம். உண்மைதான். வாய்ப்புகளைத் தவறவிடாமல் மலை போன்ற எண்ணற்ற தடைகளைத் தகர்த்து மகத்தான வெற்றி கண்டவர் அவர்.

p3_12287.jpg

கதை-2: உன்னை நேசிக்கிறேன்!

‘‘மலைப் பகுதியில் ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டில் ஒரு சின்னஞ்சிறு பையன் இருந்தான். அவன் ஒருநாள் தன் அம்மாவிடம் சண்டை போட்டுக்கொண்டு, ‘நான் உன்னை வெறுக்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டே வெளியே ஓடினான். போனவன் வீட்டுக்கு வெளியே ஓரிடத்தில் நின்றுகொண்டு, ‘நான் உன்னை வெறுக்கிறேன்’ என்று உரக்கக் கத்தினான். அது, மலைப்பகுதி என்பதால், அவன் சொன்ன வார்த்தை திரும்பத்திரும்ப எதிரொலித்தது. ஆனால், பாவம். சின்னஞ்சிறு பையனாகிய அவனுக்கு... அது அவனுடைய குரலின் எதிரொலிதான் என்று தெரியவில்லை. உடனே வேகமாக வீட்டுக்கு ஓடிச் சென்று அம்மாவைக் கட்டிக்கொண்டு தயங்கிதயங்கி பேச ஆரம்பித்தான். ‘ஏன் இப்படிப் பயப்படுகிறாய்’ என்று அம்மா கேட்டாள். ‘இந்த மலையில் நிறைய கெட்டப் பையன்கள் இருக்கிறார்கள். அந்தப் பையன்கள் எல்லோரும், ‘நான் உன்னை வெறுக்கிறேன்... நான் உன்னை வெறுக்கிறேன்’ என்று கத்துகிறார்கள்’ என்றான் அந்தச் சிறுவன். அவனுடைய தாய்க்கு என்ன நடந்திருக்கும் என்று புரிந்தது. அவள் புத்திசாலி. அவள் என்ன நடந்தது என்பதையும் விளக்கிச் சொல்லவில்லை. அவள் மகனைப் பார்த்துச் சொன்னாள், ‘இப்போது நான் சொல்கிறபடி செய். நீ முன்னால் நின்ற இடத்தில் போய் நின்றுகொண்டு, ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று உரக்கச் சொல்’ என்று கூறி அனுப்பிவைத்தாள். அவனும் அம்மா சொன்னபடியே அதே இடத்தில் போய் நின்றுகொண்டு, ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று உரக்கக் கத்தினான். அவன் சொன்ன வார்த்தை திரும்பத்திரும்ப எதிரொலித்தது. பையனுக்கு இப்போது சந்தோஷம். இந்தக் கதை நமக்குச் சொல்வது என்ன? நீங்கள், இந்த உலகத்துக்கு எதைக் கொடுக்கிறீர்களோ... அதுதான் உங்களுக்குத் திரும்ப வரும் என்பதுதான் இந்தக் கதை உணர்த்துகின்ற செய்தி... உணர்த்துகின்ற உண்மை.’’ தமிழ்கூறும் நல்லுலகுக்கு ஜெயலலிதா எவற்றை எல்லாம் தந்து சென்றுள்ளாரோ... அவை எல்லாம் தமிழ் உள்ளவரை, இந்த உலகம் உள்ளவரை தொடர்ந்து நீடிக்கும் என்பதில் ஐயமில்லை. 

p4_12424.jpg

கதை-3: தர்மம் வெற்றி கொண்டு வரும்!

‘‘ ‘எங்கு தர்மம் இருக்கிறதோ...

அங்கே கிருஷ்ணன் இருப்பார்!

எங்கே கிருஷ்ணன் இருப்பாரோ...

அங்கே வெற்றி இருக்கும்’ என்று சொல்வார்கள்.

எனவே, வெற்றி வேண்டும் என்றால்... அங்கே கிருஷ்ணன் வேண்டும்; கிருஷ்ணன் வேண்டும் என்றால்... அங்கே தர்மம் வேண்டும். சுருங்கச் சொன்னால், வெற்றி வேண்டும் என்றால்... தர்மம் வேண்டும். நம்மிடம் இருப்பது தர்மம். அதனால், நமக்குக் கிடைப்பது வெற்றி; சிலரிடம் அதர்மம்தான் இருக்கிறது. அதனால், அவர்களுக்குக் கிடைப்பது தோல்வி. மகாபாரதத்தில் ஒரு நிகழ்ச்சி. தானத்தில் சிறந்தவனான கர்ணன், ஒரு தடவை எண்ணெய் தேய்த்து தலை குளிப்பதற்கு உட்கார்ந்து இருந்தான். அவனது இடது கையில், தங்கக் கிண்ணத்தில் இருந்த எண்ணெய்யை வலது கையில் ஊற்றி உச்சஞ்தலையிலே தேய்க்கத் தொடங்கினான். அப்போது, அங்கே வந்த ஓர் அந்தணர், ‘கர்ணா, எனக்கு ஏதாவது தர்மம் கொடு’ என்று கேட்டார். உடனே கர்ணன், தனது இடது கையிலிருந்த தங்கக் கிண்ணத்தை அப்படியே நீட்டினான். அதைக் கையில் வாங்காமல் மறுத்த... அந்த அந்தணர் பதறிக்கொண்டே, ‘கர்ணா... இடது கையால் தர்மம் செய்தால் அப்படிச் செய்கிறவர்களுக்கு தரித்திரம் வரும் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, வலது கையைக் கழுவிவிட்டு அந்தக் கையாலே தங்கக் கிண்ணத்தை கொடு’ என்றாராம். இதற்கு கர்ணன், ‘அந்தணரே... அந்த சாஸ்திரம் எனக்கும் தெரியும். ஆனால், கிண்ணத்தை இடது கையில் இருந்து வலது கைக்கு மாற்றுவதற்குள் என் மனம் மாறிவிடலாம் அல்லவா? ஆகவே, எனக்குக் கஷ்டம் வந்தாலும் பரவாயில்லை... தரித்திரம் வந்தாலும் பரவாயில்லை. தர்மத்தை தாமதிக்காமல் செய்ய வேண்டும் என்று இடது கையாலேயே தர்மம் செய்கிறேன்’ என்றானாம். இந்தக் கதை உணர்த்தும் நீதிபோல்... ஜெயலலிதா, எத்தனையோ தான, தர்மங்களை காலநேரம் பார்க்காமல் செய்தவர். 

(கதை சொல்வோம்)

http://www.vikatan.com/news/tamilnadu/74295-short-stories-said-by-jayalalithaa-in-meetings-and-functions.art

  • தொடங்கியவர்

ஜெயலலிதா சொன்ன குட்டிக் கதைகள் - தொடர் 2

ஜெயலலிதா

ரணி போற்றிய தங்கத் தாரகை, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மூச்சு நின்றுபோய்... பல மணிநேரங்களைக் கடந்துவிட்டது. ஆனாலும் அவர் உரைத்த பேச்சுகளும், கதைகளும் காலம் உள்ளவரைக்கும் மக்கள் மனங்களில் ஒலித்துக்கொண்டிருக்கும். கட்சிக் கூட்டங்களிலும், வேறு பல நிகழ்வுகளிலும் ஜெயலலிதா சொன்ன 100-க்கும் மேற்பட்ட கதைகளில் சிறந்த 10-ஐத் தொடராகத் தந்துகொண்டிருக்கிறோம். அதன் தொடர்ச்சியில் இதோ சில கதைகள்...  

கதை-4: அன்புள்ள அம்மா!

‘‘ஓர் ஊரில் ஒரு தாய் இருந்தாள். அவள் அன்புத் தாய்... நீதித்தாய். அவளுக்குப் பல பிள்ளைகள் இருந்தார்கள்.

அவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு தொழிலை மேற்கொண்டு... தங்களது குடும்பத்தை மேம்படுத்த, இரவும் பகலும் உழைத்துக் கொண்டிருந்தார்கள். அதில், ஒரு பிள்ளை மட்டும் வீட்டிலேயே இருந்தது. மற்றவர்கள், கொடுக்கும் பணத்தை கணக்கு வைத்துக்கொள்வதுதான் இந்தப் பிள்ளையின் வேலை. மற்றவர்களைக் காட்டிலும் இது கொஞ்சம் படித்திருந்தது. நல்ல உணவு, நல்ல உடை, நல்ல ஓய்வு - இப்படி வசதியாக வாழ்ந்த இந்தப் பிள்ளை அடிக்கடி செலவுக்குப் பணம் கேட்டு அம்மாவைத் தொல்லைப்படுத்தியது. அவரும், கேட்ட பொருளைக் கொடுக்கிறவர்தான்... கேட்காமலும் கொடுக்கிறவர்தான். இந்த நிலையில், அந்த ஆண்டு மழை பெய்யவில்லை... கழனிகள் விளையவில்லை. எனவே, முன்பு கொடுத்ததுபோல் அந்தப் பிள்ளைக்கு இப்போது அம்மாவால் கொடுக்க முடியவில்லை. சட்டியில் இருந்தால்தானே, அகப்பையில் வரும்... அம்மா என்ன செய்ய முடியும்? அம்மா சொன்ன வார்த்தைகளை - அன்பு மொழிகளை - அந்தப் பிள்ளை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. போதாக்குறைக்கு, உள்ளூர் பணக்காரர் ஒருவரும், அம்மாவை எதிர்க்குமாறு அந்தப் பிள்ளையைத் தூண்டிக்கொண்டே இருந்தார்.

அந்தப் பணக்காரருக்கு எந்தக் குடும்பமும் ஒற்றுமையாக இருந்தால் பிடிக்காது. ‘கோள் மூட்டுவதே தனது கொள்கை... குடி கெடுப்பதே தனது கோட்பாடு’ என்னும் லட்சியத்தோடு வாழ்ந்து வந்தவர் அவர். வீட்டைவிட்டு வெளியே வந்து விடுமாறும், அவ்வாறு வெளியே வந்தால், தான் உறுதியாக ஆதரிப்பதாகவும் அந்தப் படுபாவி பணக்காரர் வாக்குறுதி தந்துகொண்டே இருந்தார். 

அந்தப் பிள்ளையும், அந்தக் கபட மனிதரின் வார்த்தை ஜாலங்களுக்குப் பலியாகி வீட்டைவிட்டுப் போனது. கொஞ்ச நாட்கள் கழிந்தன. அன்பிற்சிறந்த அம்மா, அச்சுறுத்தலுக்குப் பணிந்துவிட மாட்டார் என்பதை அந்தப் பிள்ளை உணர ஆரம்பித்தது. தவறு செய்து விட்டோமோ என்று வருந்தி, தன்னை வீட்டிலேயே மீண்டும் சேர்த்துக்கொள்ளுமாறு அம்மாவிடம் வேண்டுகோள் விடுத்தது. ஆனால், அதற்குள் அம்மாவுக்கும் அந்தப் பிள்ளைக்கும் சமரசம் ஏற்பட்டுவிடாதபடி பார்த்துக்கொண்டார். அத்துடன் அவர், அந்தப் பிள்ளையிடம், ‘வீட்டுக்கு நீ போய்விடாதே, உனக்காக நான் கோர்ட்டுக்கு ஆள் அனுப்பியிருக்கிறேன். ஒரு கை பார்த்துவிடுவோம்’ என்று கொம்பு சீவிக்கொண்டே இருந்தார். அந்த அடாவடிப் பணக்காரர் யார் என்று உங்களுக்குத் தெரியும். வீட்டைவிட்டு வெளியேறிய பிள்ளை யார் என்ற விவரமும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். அன்புள்ள அந்த அம்மா யார் என்பதும், அவர் ஆற்றிவரும் அரிய பணிகள் எப்படிப்பட்டவை என்பதும் உங்களுக்கு மிகமிக நன்றாகவே தெரியும்’’ என்று தன்னைப் பற்றியும், தம்மைச் சுற்றி நின்ற பகைகளையும் குறிப்பால் உணர்ந்துகொண்டு, அதனை குட்டிக் கதைகளாய் மக்களிடம் சொல்லி... அன்பையும், அதன் உண்மைத்தன்மையையும் உணர்த்தியவர்தான் ஜெயலலிதா. 

1_17013.jpg

கதை-5: குருவும்... சீடர்களும்!

‘‘முன்னொரு காலத்தில், பரமார்த்த குரு என்று ஒருவர் இருந்தார். அவருக்கு 16 சீடர்கள் இருந்தார்கள். அந்தச் சீடர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, தங்கள் குருவுக்காக ஒரு குதிரை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். ஒரு குதிரையை வாங்குவதைவிட, குதிரை முட்டையை வாங்கி அடைகாத்தால், தரமான குதிரைக் குட்டி கிடைக்கும் என்று புத்திசாலித்தனமாக முடிவெடுத்தார்கள். குதிரை முட்டை வாங்க வேண்டும் அல்லவா? அதற்காக இரண்டு சீடர்களைத் தேர்வு செய்து அனுப்பினார்கள். இந்த இரண்டு சீடர்களும் குதிரை முட்டை வாங்க, வெளியூர் சென்றபோது... ஓர் ஊரில், பெரிய அளவில், வெள்ளை நிறத்தில், குவித்து வைக்கப்பட்டிருந்த வெள்ளையான பொருள் ஒன்றைக் கண்டார்கள். இதுவும் ஒரு வகை முட்டைதான் என்று நினைத்து, ‘இந்த முட்டை என்ன விலை’ என்று அங்குள்ள வியாபாரியிடம் கேட்டார்கள். சொன்ன விலையைக் கொடுத்து, முட்டையை வாங்கிய அவர்களுக்கு அதில் பரம திருப்தி. அதை எடுத்துக்கொண்டு வரும் வழியில், இரவு நேரம் ஆகிவிட்டதால்... காட்டில் ஒரு மரத்தின் மேல் உட்கார்ந்துகொண்டார்கள். அரைகுறை தூக்கத்தில், அவர்கள் கையில் இருந்த அந்தப் பொருள், கீழே விழுந்தது. கண் விழித்துப் பார்த்தார்கள். அது விழுந்த இடத்தில் இருந்து, வெள்ளை நிறத்தில் ஒரு சிறிய முயல் குட்டி ஒன்று பாய்ந்து ஓடியது. ஆனால், அது முயல்தான் என்பதைத் தெரிந்து கொள்ளாத அவர்கள், அது குதிரைக்குட்டி என்று முடிவு செய்து... அதனை விடாது துரத்திச் சென்றார்கள். 

ஆனால், அது அவர்கள் கைகளுக்கு அகப்படவில்லை. ஊருக்குத் திரும்பி வந்து, நடந்த நிகழ்ச்சிகளை ஒன்றுவிடாமல், குருவிடம் சொன்னார்கள். எல்லாவற்றையும் கேட்ட குரு, ‘நல்லவேளை... அந்தக் குதிரைக்குட்டி மீது நான் சவாரி செய்து இருந்தால், என் கதை என்னவாகி இருக்கும்’ என்று நினைத்து வேதனைப்பட்டாராம். அந்தச் சீடர்கள் குதிரை முட்டை என்று நினைத்து வாங்கியது, வெள்ளைப் பூசணிக்காயை. அது, விழுந்த வேகத்தில்... கீழே புதரில் இருந்து ஓடியிருக்கிறது வெள்ளை முயல். அதைத்தான், அந்தப் புத்திசாலி சீடர்கள் குதிரைக்குட்டி என்று நினைத்தார்கள். அந்த பரமார்த்த குருவைப் போன்றவர்களும், அவருடைய சீடர்களைப் போன்றவர்களும் அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இந்தக் காலத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் யார் என்று நான் அடையாளம் காட்டத் தேவையில்லை. தேர்தல் வெற்றி என்ற குதிரைக் குட்டியை நோக்கி, ஓடிய அவர்களைப் பற்றி, உங்களுக்கு நன்றாகவே தெரியும்’’ என்ற சொன்ன ஜெயலலிதா, அவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய வெற்றிக்காகவே மட்டும் உழைத்து மறைந்தவர்.

12_17539.jpg

கதை-6: உழைப்பை விரும்பு!

‘‘ஒரு மரத்தின் அடியில்... பகல் நேரத்தில், ஓர் இளைஞன் காலை நீட்டி... கைகளைப் பரப்பிப் படுத்துக் கிடந்தான். அந்தப் பக்கம் வந்த ஒரு பெரியவர்... அவனைப் பார்த்து, ‘தம்பி, இந்த வயதிலே உனக்கு இத்தனை சோம்பலா... உழைக்க வேண்டிய வயதல்லவா இது’’ என்றார். அதற்கு இளைஞன், ‘ஏன் உழைக்க வேண்டும்’ என திருப்பிக் கேட்டான். ‘பணத்துக்காக’ என்றார் அந்தப் பெரியவர். ‘பணம் எதற்காக’ என்றான் இளைஞன். ‘வீடு, கார் வாங்கலாம்; திருமணம் செய்யலாம்; குழந்தை குட்டிகளோடு மகிழ்ச்சியாய் இருக்கலாம்’ என்றார் பெரியவர். ‘பிறகு...’ என்றான் இளைஞன். ‘குழந்தைகளைப் படிக்க வைக்கலாம்; வேலை வாங்கித் தரலாம்; நல்ல சம்பளம் வாங்கச் செய்யலாம்’ என்றார் பெரியவர். இளைஞன் கேட்டான், ‘அதற்குப் பிறகு?’ ‘அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கலாம்; பேரக் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம்’ என்றார். இளைஞன் விடவில்லை. ‘அதற்கு பிறகும்’ என்ன என்றான். ‘ஓய்வாக இருக்கலாம்; நிம்மதியாகக் கால்களை நீட்டித் தூங்கலாம்’ என்றார் பெரியவர். உடனே அந்த இளைஞன், ‘அதைத்தானே... இப்போது செய்துகொண்டு இருக்கிறேன். சென்று வாருங்கள்’ என்றானாம். ‘எனக்கு நன்றாக வேண்டும். வாயை மூடிக்கொண்டு வந்தவழியைப் பார்த்தபடியே போயிருக்கலாம்’ என்று புலம்பியபடியே போனாராம், அந்தப் பெரியவர். 

இந்தக் கதையிலிருந்து நமக்குத் தெரிவது என்ன? நம் நாட்டு மக்களுக்கு என்ன குறை... அறிவில் குறையா? இல்லை, ஆற்றலில் குறையா? இல்லவே இல்லை. அப்புறம் என்ன குறை? ஊக்கம் இல்லை என்பது குறை... உழைப்பு போதாது என்பது குறை. வளர்கின்ற நாடுகளில் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளிலும் மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். உழைப்புக்கு மரியாதை கொடுக்கிறது அந்தச் சமுதாயம். அங்கே பணக்காரர்களும் கடுமையாக உழைக்கிறார்கள். தொழிலதிபர்களும் நேரம் பார்க்காமல் உழைக்கிறார்கள். வளர்ந்த நாடுகளின் வெற்றிக்குக் காரணம் உழைப்புதான். உழைப்பு என்னும் மரத்தின் வேர்கள், கசப்பாக இருக்கலாம்; ஆனால், அதன் கனிகள் இனிப்பானவை. உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும். உங்கள் அன்புச் சகோதரியாகிய நான்... நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் உழைக்கிறேன் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?’’ என்று சொன்ன... அந்த ஜீவன், இப்படித் தொடர்ந்து ஓய்வின்றி உழைத்ததால்தான் என்னவோ தெரியவில்லை... நம்மைவிட்டுப் போய்விட்டது.

(கதை சொல்வோம்)

http://www.vikatan.com/news/tamilnadu/74435-short-stories-said-by-jayalalithaa-in-meetings-and-functions.art

  • தொடங்கியவர்

ஜெயலலிதா சொன்ன குட்டிக் கதைகள் - தொடர் 3 (நிறைவுப் பகுதி)

ஜெயலலிதா

மிழகத்தைச் சுவாசித்து மூச்சை நிறுத்திக்கொண்ட முன்னாள் முதல்வர்களான பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆகிய இருவரின் பூத உடல்களுக்கும் மெரினா அடைக்கலம் கொடுத்ததுபோல... இப்போது புரட்சித்தலைவி ஜெயலலிதாவுக்கும் கொடுத்துவிட்டது. ஆம், அவரது மூச்சுக்காற்றும் நின்றுபோனது. இதனால் தமிழகம் மட்டுமல்ல... இந்தியாவே துயரத்தில் மிதந்தது. ஒரு சகாப்தமாய் வாழ்ந்து மறைந்த ஜெயலலிதா, தன்னுடைய அரசியல் பயணத்தின்போது... பல்வேறு நிகழ்வுகளில் சொன்ன குட்டிக்கதைகளில் சிறந்த 10-ஐ நாம் தொடராய் வெளியிட்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாய் இதோ சில கதைகள்...

கதை-7: அவரவர் வாழ்க்கை... அவரவர் கையில்!

‘‘ஒரு கிராமத்துக்கு துறவி ஒருவர் வந்திருந்தார். அவர் மிகவும் சாதுவானவராகவும் செல்வாக்குமிக்கவராகவும் இருந்தார். எந்த விஷயத்தைப் பற்றிக் கேட்டாலும், அவர் ‘பளிச்’சென முக்காலமும் உணர்ந்து சொல்லக் கூடியவராக இருந்தார். அவர் எது சொன்னாலும்... அது, அப்படியே நடந்தது. இதைக் கண்ட கிராம மக்களுக்கு சற்றே பயம் வந்தது. இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள், அந்தத் துறவி சொல்வதைப் பொய்யாக்கிவிட வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டினார்கள். குளிர்காலத்தில் ஒருநாள், அந்த இளைஞர்களில் ஒருவன், பெரிய கோட் ஒன்றைப் போட்டுக்கொண்டு... அதன் உள்ளே ஒரு புறாவை மறைத்து வைத்துக்கொண்டான். இருவரும் துறவியை சந்திக்கப் புறப்பட்டார்கள். அவர் குடிலை அடைந்ததும், துறவியைக் கண்டார்கள். அவரைச் சுற்றி அவரிடம் வாக்கு கேட்க நிறைய மக்கள் கூடியிருந்தார்கள். 

அந்த நேரத்தில் இந்த இளைஞர்கள், ‘துறவியாரே... வணக்கம். இதோ இந்த கோட்டுக்குள் ஒரு புறாவை வைத்திருக்கிறோம். அது, உயிரோடு இருக்கிறதா... இல்லை, இறந்துவிட்டதா’ என்று கேட்டு அவரிடம் எள்ளி நகையாடினார்கள். ‘உயிரோடு இருக்கிறது’ என்று சொன்னால்... புறாவை அப்படியே அமுக்கிக் கொன்றுவிடுவது எனவும், ‘செத்துவிட்டது’ என்று சொன்னால்... அதை உயிரோடு எடுத்துக்காட்டி, அவர் சொன்னதைப் பொய்யாக்கிவிடுவது எனவும் அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு இருந்தார்கள். எந்தவிதத்திலும் துறவி தப்ப முடியாது என்று அவர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால் துறவியோ, ‘புறா சாகவும் இல்லை; உயிரோடும் இல்லை. அதன் வாழ்வும், சாவும் உங்கள் கையில்தான் இருக்கிறது” என்றார் மிகவும் சாதுர்யமாக. இந்தப் பதிலைக் கேட்ட இளைஞர்கள் இருவரும் திகைத்துப் போனார்கள். ‘துறவியாரே... நாங்கள் உங்களிடம் தோற்றுவிட்டோம். இதன்மூலம் எங்களின் கெட்ட எண்ணங்களும், அகந்தையும் அழிந்தன. எங்களை மன்னித்து ஆசீர்வதியுங்கள்’ என காலில் விழுந்தார்கள். இந்தக் கதையிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், யாருடைய வாழ்க்கையையும் யாராலும் தீர்மானிக்க முடியாது. அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்தான் உள்ளது’’ என்று சொன்ன ஜெயலலிதாவே, அவருடைய வாழ்க்கையை... அவரே நிர்ணயித்துக்கொண்டதுடன் அதில் வெற்றியும் பெற்றார். 

5_%282%29_10235.jpg

கதை-8: இதுதான் உலகம்!

‘‘ஓர் ஊரில் ஒரு தர்ம பிரபு இருந்தார். அவர் மிகுந்த இரக்க சுபாவம் உடையவர். தன்னிடம் இருப்பதையெல்லாம் ஏழை, எளியவர்களுக்கு வழங்குவதிலும் சரி, எவரேனும் உதவி என்று வாசல் தேடி வந்து விட்டாலும் சரி, தன்னால் இயன்றவரை உதவி செய்து மகிழ்ச்சியில் பூரித்துப் போவார். மக்கள் தன்னை நாடி வந்து கேட்டால்தான் தர வேண்டுமா... தர்மம் என்பது கேட்காமலேயே தருவதுதானே என நினைத்தார். அதை அடுத்த நிமிடமே செயல்படுத்தத் தொடங்கினார். ஒருநாள்... விதவிதமான பழங்களை, கூடைகூடையாய் வைத்துக்கொண்டு கடை வீதியில் உட்கார்ந்துகொண்டார். ‘எனதன்பு உடன்பிறப்புகளே... அன்பர்களே... நண்பர்களே... குழந்தைகளே... சுவையான பழங்கள் வேண்டுபவர்கள், இங்கே என்னிடம் வந்து இலவசமாய் பெற்றுச் செல்லுங்கள்” என்று கூவிகூவி அனைவரையும் அழைத்தார். ஆனால், அவரின் கூப்பிட்ட குரலுக்கு ஒருவருமே செவி சாய்த்து வரவில்லை. இதில் ஏதேனும் சதித்திட்டம் இருக்குமோ? இருந்தாலும் இருக்கும். இல்லையென்றால், இலவசமாய் யாராவது பழங்களை வாங்கி, அதுவும் விற்கிற விலைவாசியில் தருகிறார்கள் என்றால்? ம்...ம்... இது யோசிக்க வேண்டிய விஷயம். ஒருவேளை, கொஞ்சம்கூட சுவையே இல்லாத பழங்களா? இல்லாவிட்டால், விஷம் கலந்த பழங்களா என்று ஆளாளுக்கு, கூடிகூடிப் பேசிவிட்டு... வேணாம்ப்பா, நமக்கு எதுக்கு வம்பு என்று கலைந்துசென்றார்கள். நேரம் ஆக... ஆக, அந்தத் தர்ம பிரபுவுக்கு சற்று வெறுப்பாகக்கூட இருந்தது. ‘என்னடா இது, இலவசமாய் கொடுத்தால்கூட யாரும் வாங்கிக்கொள்ள மறுக்கிறார்களே?’ என்று மனம் நொந்த அந்த தர்ம பிரபு, மாலை நேரம் நெருங்கியதும்... கோபமாகப் பழங்களை எடுத்து அப்படியே கீழே கொட்டிவிட்டு வீட்டுக்கு நடையைக் கட்டினார். இப்போது... மக்கள் முண்டியடித்துக்கொண்டு உனக்கு, எனக்கு என்று போட்டி போட்டுக்கொண்டு அந்தப் பழங்களைப் பொறுக்கி எடுத்துச் சென்றனர். இதுதான் உலகம்’’ என்று சொன்ன ஜெயலலிதா, இந்தக் கதையின் மாந்தராக இருந்த தர்ம பிரபுவைப் போன்றே தமிழக மக்களுக்கு பல மகத்தான இலவசங்களைத் தந்துவிட்டுச் சென்றார்.

11_10420.jpg

கதை-9: சுயநலத்தின் பரிசு!

‘‘பாவம் செய்த ஒருவன், நரகத்துக்கு அனுப்பப்பட்டான். நரகப் பள்ளத்தாக்கில் இருந்து வந்த அவன்... நடந்துகொண்டிருந்தபோது, பாதையில் ஒரு சிலந்திப் பூச்சி இருந்ததைப் பார்த்து... அதை மிதிக்காமல் கவனமாகச் சென்றான். பிற உயிரைக் கொல்லாமல் இருந்ததற்காக அவன் கணக்கில் கொஞ்சம் புண்ணியம் சேர்ந்தது. உடனே, அந்தப் புண்ணியத்துக்கான பயனும் கிடைத்தது. நரகத்தில் இருந்து மேலே வருமாறு அவனை அழைத்தார்கள். ‘எப்படி மேலே ஏறி வருவது’ என்று அவன் கேட்டான். ‘இதோ, தொங்குகிறது பார்... சிலந்தி இழை! இதைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறி வா...’ என்று சொன்னார்கள். அவனுக்கோ அவ நம்பிக்கை. இவ்வளவு மெல்லியதாக இருக்கும் இந்தச் சிலந்தி இழை நம்மைத் தாங்குமா? கையால் தொட்டதும் அறுந்து போகுமே... இதை நம்பி எப்படி மேலே ஏறிச் செல்வது என்று யோசிக்கத் தொடங்கினான். அவனது தயக்கத்தைப் பார்த்து மேலே இருந்தவர்கள்... ‘தைரியமாக வா, இழை அறுந்துவிடாது’ என்று சொன்னார்கள்.

ஜெயலலிதா சொன்ன குட்டிக் கதைகள் - தொடர் 2

ஜெயலலிதா சொன்ன குட்டிக் கதைகள் - தொடர் 1

அவனும் சிலந்தி இழையைப் பிடித்து மேலே பாதிவரை சென்றுவிட்டான். அப்போது திடீரென்று கீழே பார்த்தான். அவனைப் போலவே பல பேர் சிலந்தி இழையைப் பிடித்து மேலே வந்துகொண்டிருந்தார்கள். அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. புண்ணியம் செய்தது நான், பலனைப் பெற வேண்டியது நான், இவர்கள் எல்லோரும் மேலே வரப் பார்க்கிறார்களே என்று கோபித்து கீழே இருந்தவர்களைக் காலால் எட்டி உதைத்தான். எல்லோரும் விழுந்தார்கள். அவனும்கூட திரும்பவும் நரகத்துக்குள் விழுந்துவிட்டான். என்ன காரணம்? எப்போது அவன் பொறாமைப்பட்டானோ... எப்போது சுயநலத்தால் மற்றவர்களை எட்டி உதைத்துக் கீழே தள்ளினானோ, அப்போதே சிலந்தி இழையும் அறுந்து விழுந்தது. அந்தச் சுயநலக்காரனும் கீழே விழுந்தான். பொதுவாக, சுயநலக்காரர்களுக்குப் பொறாமை எப்போதும் அதிகம். அப்படிப்பட்ட சுயநலக்காரர்களுக்கு நாட்டில் பஞ்சமே இல்லை’’ என்று சொன்ன ஜெயலலிதா, ஒருபோதும் தன்னுடைய சுயநலத்துக்காக வாழ்ந்ததில்லை.

12_10563.jpg

கதை-10: தந்திர தந்தை

‘‘ஒரு பையன் பக்கத்து வீட்டில், தினம் ஒரு கோழி முட்டையைத் திருடிக் கொண்டிருந்தான். சில நாட்கள், அவன் இப்படியே செய்துகொண்டிருந்தான். ஒரு நாள், இந்தப் பையன் முட்டைத் திருடியதைப் பக்கத்து வீட்டுக்காரர் பார்த்துவிட்டார். உடனே அவர்... அந்தப் பையனின் அப்பாவைச் சந்தித்து, ‘உங்க பையன் செய்வது உங்களுக்கே நல்லா இருக்கா’ என்று கேட்டார். ‘அப்படி என்ன செய்கிறான்’ என்று பையனின் அப்பா கேட்க... ‘எங்கள் வீட்டில் இருப்பது ஒரே ஒரு கோழி. அது இடும் முட்டைகளை உங்கள் பையன் திருடிச் சென்றுவிடுகிறான். இன்று அவன் முட்டை திருடுவதை நானே பார்த்தேன். என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்’ என்று பக்கத்து வீட்டுக்காரர் கேட்டார். ‘நீங்கள் வீட்டுக்குப் போங்கள்... நான் தக்க நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று பையனின் அப்பா சொன்னார். பக்கத்து வீட்டுக்காரர் போய்விட்டார். மறுநாள், முட்டை திருடப்படவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. காரணம், கோழியையே காணோம். பையன் முட்டை திருடாமல் இருக்க... அப்பா, அந்தக் கோழியையே திருடிவிட்டார். ‘இனி, பையன் முட்டை திருட மாட்டான்’ என்று பையனின் அப்பா, பக்கத்து வீட்டுக்காரரிடம் சொன்ன சொல்லைக் காப்பாற்றிவிட்டான் அந்தப் பையன். இப்படி, மகன் திருடாமல் பார்த்துக்கொள்கிற அப்பாக்களும் உண்டு. அதற்கு அவர்கள் கையாளுகிற முறை இருக்கிறதே அதுதான் அபாரம். மறுநாள், கோழியைப் பறிகொடுத்த பக்கத்து வீட்டுக்காரரிடம்... பையனின் அப்பா, ‘நான் ரோஷக்காரன்... வார்த்தை மாறாதவன்... மனுஷனுக்கு வார்த்தை சுத்தம் வேணுமுங்க’ என்றார் தான் செய்த தவற்றை மறைத்தபடி’’ என்று சொன்ன ஜெயலலிதாவுக்கு எதிராக... அவருடைய எதிரிகள் பலர் அப்படித்தான் வாழ்ந்தார்கள் என்பது நிஜம்.

இப்படி எல்லாம் நாட்டின் நிலவரங்களை, தமிழக மக்களுக்கு குட்டிக்குட்டி கதைகளாய்ச் சொன்ன தமிழக முதல்வர் ஜெயலலிதா, இப்போது உயிரோடு இல்லை. இருந்தாலும், அவர் சொன்ன கதைகளில்... ஆயிரம் உண்மைகள் புதைந்திருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

http://www.vikatan.com/news/tamilnadu/74525-short-stories-said-by-jayalalithaa-in-meetings-and-functions.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.