Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நித்தம் நித்தம் நெல்லுச் சோறு

Featured Replies

rice.jpg
ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன் 

தமிழ்த் திரையிசைப் பாடல்களில் கதாநாயகன், கதாநாயகிக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பாடல்களே அதிகம். இவற்றில் உணவைப்பற்றிப் புகழ்ந்தோ, அன்றேல் வியந்தோ பாடப்பட்ட பாடல்கள் மிகக் குறைவு. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இவ்வாறு 'சாப்பாட்டைப்பற்றி' பாடப்பட்ட பாடல்களில் இரண்டு பாடல்கள் ரசிகர்களால் முக்கியத்துவம் கொடுத்து ரசிக்கப்பட்டது மட்டுமன்றி, அவை ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தும் விட்டன. முதலாவது பாடல் கறுப்பு, வெள்ளைத் திரைப்படமாகிய 'மாயா பஜார்' திரைப்படத்தில் இடம்பெற்ற "கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்" என்ற பாடல். இரண்டாவது பாடல் கலர்த் திரைப்படக் காலத்தில் வெளிவந்த 'முள்ளும் மலரும்' திரைப்படத்தில் இடம்பெற்ற "நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய்மணக்கும் கத்தரிக்கா" என்ற பாடலாகும்.

இதில் முதலாவது பாடலானது, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்த போதும், பெரிய அளவில் அடித்தட்டு மக்களையும் சென்றடையவில்லை. அதற்குக் காரணமாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். அந்தப் பாடலில் பெரும்பாலும் இனிப்பு வகைகளும், பலகார வகைகளுமே இடம்பிடித்திருந்தன. அப்பாடலில் குறிப்பிடப்பட்ட இனிப்பு வகைகளும், பலகார வகைகளும் பணக்காரர்களால் மட்டுமே உண்ணப்பட்ட பதார்த்தங்களாக இருந்தன. மற்றும் அப்பாடல் பாடப்பட்ட விதம் கிராமிய மக்களையும் சென்றடையும் வகையில் அமைந்திருக்கவில்லை.
ஆனால் இரண்டாவது பாடலானது மிகப்பெரிய அளவில் படித்தவர், பாமரர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டும், வாயால் அடிக்கடி உச்சரிக்கப்பட்டும், ரசிக்கப்பட்டும் நினைவில் கொள்ளப்பட்டது. அதற்குக் காரணமாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:- முதலாவதாக அது பாடப்பட்ட கிராமிய மெட்டு, பாடலைப் பாடிய வாணி ஜெயராமின் மதுரமான குரல், அந்தத் திரைப்படத்தில் நடித்திருந்த, ஆனால் ஒருசில வருடங்களுக்கு முன்  தமிழ் மக்களுக்கு அறிமுகமாகியிருந்த  நடிகர் ரஜினிகாந்த், மற்றும் பாடலில் வியந்து போற்றப்பட்ட, சாதாரண மக்களின் நாளாந்த உணவுகள் போன்றவை பாடலைக் கேட்போரைக் கவர்ந்ததில் வியப்பேதுமில்லை.

சரி, பாடலின் வெற்றியைப் பார்த்தோம், பாடலின் கவிஞரை, அவர்தம் சொல்லாட்சியைப்  பார்க்க வேண்டாமா? பாடலை எழுதிய கவியரசு கண்ணதாசன் தமிழ் நாட்டில் காரைக்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பிறந்த இந்தக் காரைக்குடி, மற்றும் சிவகங்கைப் பகுதிகள் 'செட்டிநாடு' என்ற பெயரால் அழைக்கப் படுகிறது. ஆங்கிலேயர் காலம்தொட்டு இன்றுவரை தமிழ்நாட்டிலும், இலங்கை,மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் வியாபாரத்தில் 'கொடிகட்டிப் பறப்பது' இந்தச் 'செட்டியார்' என்ற சமுதாயப் பிரிவினரே.
இந்தப் பிரிவினர் வியாபாரத்தில் மட்டும் வெற்றி பெற்ற மக்கட் பிரிவாக இருக்கவில்லை. "ஆம், நீங்கள் நினைப்பது சரியே"., இவர்கள் 'உண்போரை மயக்கும்' சுவையான உணவுகளைச் சமைக்கும் அற்புதமான சமையல் கலையிலும் வல்லுனர்கள்.
தமிழ் நாட்டில் மட்டுமின்றி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் வரை இவர்களது சமையல் கலையும், 'செட்டிநாடு உணவகங்களும்' மிகவும் பிரபலம். அண்மைக் காலங்களில் அமெரிக்காவிலும் ஏன் ஐரோப்பிய நாடுகளிலும் செட்டிநாடு உணவகங்கள் தோன்றிவிட்டன. எல்லாம் சரி, இவர்களது சமையலில் அப்படி என்ன விசேஷம்? இவர்களது உணவகங்கள் பிரபலமாகக் காரணம் என்ன?

செட்டிநாட்டு உணவகங்கள் பிரபலமாகக் காரணம் என்ன? செட்டிநாட்டுச்சமையலில் அப்படி என்ன விசேஷம்? இந்தக் கேள்விகளோடு, சிங்கப்பூரில் செட்டிநாட்டு உணவகம் ஒன்றை நடத்திவரும் திரு.பழனிச்சாமி என்பவரை அணுகினேன், ஆனால் அவரது பதில்கள் என்னைப் பெரியளவில் ஆச்சரியப்பட வைக்கவில்லை. அவர் கூறினார், "நாங்கள் எங்கள் சமையலில், சுத்தத்திற்கு முதலிடம் கொடுக்கிறோம்" அவரது இந்தப் பதில் என்னைத் திருப்திப் படுத்தவில்லை, நான் அவரிடம் திருப்பிக் கேட்டேன் "பெரும்பாலான உணவகங்கள்  சுத்தத்தைத் தானே கடைப்பிடிக்கிறார்கள்? அவரிடமிருந்து பதில் அமைதியாக வந்தது. "இல்லை அது உங்கள் தவறான பார்வையும், போலித்தோற்றமும்" என்றார். அவர் மேலும் என்னிடம் தெரிவித்த தகவல்கள் பின்வருமாறு: இலங்கையில், தமிழகத்தில் மட்டுமன்றி, மேற்கத்திய நாடுகளிலும் பெரும்பாலான உணவகங்கள் சுத்தத்திற்கு முக்கியத்துவம் தருவது குறைவு. வாடிக்கையாளர்களின் வரவு இதனால்தான் குறைய ஆரம்பிக்கிறது. இதை வாடிக்கையாளர்கள் நன்கு அறிவார்கள். எந்த உணவகத்தில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதுகிறதோ, அங்கு சுவை மட்டுமின்றி சுத்தமும் மேம்பட்டதாயிருக்கிறது  என்று அர்த்தம்.
அப்படியில்லாவிட்டால் ஒரேயொரு விதிவிலக்கு மட்டும் உண்டு, அதாவது, அந்த உணவகங்களுக்கு அருகில் வேறெந்த உணவகங்களும் இல்லாமல் இருந்தால் 'வேறு வழியில்லாமல்' அந்த உணவகத்தை மக்கள் தேர்வு செய்வார்கள். அப்படியானால் செட்டிநாடு உணவகங்கள் எல்லாமே சுத்தத்திற்கு முதலிடம் கொடுப்பவையா? இதுதான் நான் அவரிடம் கேட்ட அடுத்த கேள்வி.

 
 
 
 
chetti1.jpg
 
 

 

 
 
 

'செட்டிநாடு உணவகங்கள்' எல்லாமே சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவையா? இதுதான் நான் திரு.பழனிச்சாமி அவர்களிடம் கேட்ட அடுத்த கேள்வி. அவர் கூறினார்: "உலகில் நூற்றுக்கு நூறு வீதம் பூரணமானவர் என்றோ (perfect person), தவறே செய்யாதவர் என்றோ யாரையும் காட்ட முடியாது. அதேபோல் ஆங்காங்கே சில தவறுகள் நிகழலாம், இருப்பினும் நானறிந்தவரை செட்டிநாடு உணவகங்கள் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவை. இதில் இன்னும் சில தகவல்களையும் குறிப்பிட்டாகவேண்டும். ஒரு காலத்தில் தமிழகத்தில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் செட்டிநாட்டவர்கள் மட்டுமே 'செட்டிநாடு மெஸ்' அல்லது 'செட்டிநாடு ரெஸ்டோரன்ட்' நடத்தி வந்தார்கள். ஆனால் அண்மைக் காலமாக பல புதிய செட்டிநாட்டு உணவகங்கள் உலகம் முழுவதும் தோன்றி விட்டன. இவற்றில் சிலவற்றின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால், அவைகளை நடத்துபவர்களுக்கும் 'செட்டிநாட்டுக்கும்' எவ்வித சம்பந்தமும் இருக்காது. வெறுமனே பெயர்ப் பிரபலத்திற்காக அவ்வாறு வைத்திருக்கிறார்கள், இது ஒரு வகை ஏமாற்றுவேலை" என்றார்.
 

 

"அப்படியானால் செட்டிநாட்டைச் சாராதவர்கள், அந்தப் பெயரில் உணவகம் ஆரம்பித்தால்  
Copyright.jpgஅதைப் போலித்தயாரிப்பு(duplicate) என்றோ, அல்லது செட்டிநாட்டு உணவகம் என்ற நல்ல பெயரில் ஏற்பட்ட கலப்படம் என்றோ கூறலாமா? இது எனது அடுத்த கேள்வியாக இருந்தது. அவர் தொடர்ந்தார், "பல உணவகங்களுக்கும்(உதாரணமாக : KFC, MC Donalds, Pizza Hut), பல பொருட்களின் வியாபாரப் பெயர்களுக்கும்(உதாரணமாக Addidas, Nike,Nokia), ஏன் புத்தகங்களுக்குக் கூட காப்புரிமையோ(copyright), அல்லது தயாரிப்பு உரிமையோ(patent right) உள்ளன. ஆனால் இந்தச் செட்டிநாட்டு உணவகங்களுக்கு எந்தவிதமான தயாரிப்பு உரிமையும்(patent right) கிடையாது. யார் விரும்பினாலும் 'செட்டிநாடு உணவகம்' என்ற பெயரில் உணவகமொன்று ஆரம்பிக்கலாம். இது ஒரு துரதிர்ஷ்டமான நிலை" என்றார்.
chetti4.jpg
"அப்படியானால் செட்டிநாட்டு மக்கள் சேர்ந்து அப்படி ஒரு உரிமையை வாங்கலாம் அல்லவா"? இது எனது அடுத்த கேள்வி. அவர் தொடர்ந்தார், "வாங்கியிருக்கலாம், வாங்கலாம், செய்திருக்கலாம். ஆனால் யாருமே முயற்சி செய்யவில்லை, 'பூனைக்கு மணிகட்டுவது யார் என்ற கேள்விதான் ஞாபகத்திற்கு வருகிறது, இவ்வாறான அக்கறையின்மையால் பல அபாயங்களும் உள்ளன" என்றார். அபாயங்களா? என்றேன் நான் குழப்பத்துடன். அவர் தொடர்ந்தார், " ஆம் அபாயங்கள்தான், கடந்த 1997 செப்டம்பரில் 'இந்தியாவின் பாரம்பரியச் சொத்தாகிய 'பாசுமதி' அரிசியை' சர்வதேசச் சந்தையிலும், சர்வதேசப் 'patent' உரிமைக் கழகத்திலும், அமெரிக்கா தனது சொத்து என்று வழக்குத் தொடர்ந்ததை உதாரணமாகக் கூறலாம்.
"என்னது, அரிசிக்கு அமெரிக்கா சொந்தம் கொண்டாடியதா"? என்றேன் வியப்பு மேலிட.

basmathisoru.jpg


ricemark3.jpg"என்னது அரிசிக்கு அமெரிக்கா காப்புரிமை கேட்டு வழக்குத் தொடர்ந்ததா"? என்றேன் திரு.பழனிச்சாமியைப் பார்த்து, ஆச்சரியம் மாறாதவனாக. அவர் புன்னகைத்தவாறு தொடர்ந்தார் "ஆம் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கும், ஆனாலும் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும், இது நடந்ததது 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், அமெரிக்காவில் உள்ள Texas Rice Tec (டெக்சாஸ் அரிசி தொழிலகம்) என்ற நிறுவனம் இந்த வழக்கை அமெரிக்காவில் உள்ள சர்வதேசக் காப்புரிமைச் சங்கத்தில் தொடர்ந்தது, சுவிட்சர்லாந்துக்குள் இறைமையுள்ள ஒரு குறுகிய மன்னராட்சி நாடு உள்ளதல்லவா"? "ஆம் தெரியும் 'லீக்ட்டேன்ச்டைன்'(Liechtenstein) என்று அந்தக் குட்டி நாட்டுக்குப் பெயர் என்றேன் எனது புவியியல் அறிவைக் காட்டுவதற்காக". "நீங்கள் கூறியது மெத்தச் சரி" என்றார் அவர். "சரி, பாசுமதி அரிசி வழக்கிற்கும், இந்த குட்டி நாட்டிற்கும் என்ன சம்பந்தம்"? என்றேன் சற்றுக் குழம்பியவனாக, அவர் தொடர்ந்தார் "சொல்கிறேன், சொல்கிறேன், அந்த நாட்டின் இளவரசருக்குச் சொந்தமானதுதான் நான் மேலே குறிப்பிட்ட Rice Tec நிறுவனம், மேற்படி நிறுவனம் உலக நாடுகள் பலவற்றில், அரிசி ஏற்றுமதி, இறக்குமதி

ricemark2.jpg

வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தது, வருகிறது. அந்த நிறுவனம் ஒரு உண்மையை அனுபவ ரீதியாக அறிந்து கொண்டது" "என்ன அது"? என்றேன் குழப்பம் மாறாதவனாக, அவர் தொடர்ந்தார், "உலகில் பல நாடுகளால் பல லட்சக்கணக்கான இயற்கை, செயற்கை பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுகின்றன,
ricemark1.jpgஇவற்றில் பல செயற்கைப் பொருட்கள் சர்வதேசக் காப்புரிமைக் கழகத்தில் (Patent and Trademark Office) மேற்படி நாடுகளாலோ அல்லது நிறுவனங்களாலோ பதிவு செய்யப் பட்டிருக்கும். ஆனால் எமது இந்தியப் பாரம்பரியப் பொருளாகிய 'பாசுமதி'அரிசி இவ்வாறு பதியப்படவுமில்லை, அதற்கான தேவையும் எழவில்லை. ஆகவேதான் பாசுமதி அரிசிக்குத் தமக்குக் காப்புரிமை வழங்க வேண்டுமென்று மேற்படி நிறுவனம், வழக்குத் தொடர்ந்தது. "வழக்கில் அந்த நிறுவனம் வென்றதா"? என்றேன் நான் ஆர்வத்துடன். அவர் சிரித்துக்கொண்டே கூறினார் "இல்லை, அதுவரை காலமும் பல விடயங்களைக் கண்டும் காணாமலும் இருந்த நம் இந்தியர்கள் அந்தத் தருணத்தில் விழித்துக் கொண்டார்கள், மேற்படி வழக்கைத் தகுந்த ஆதாரங்களோடு இந்தியாவின் புதுடில்லியிலுள்ள, விவசாய ஆராய்ச்சிக் கழகம் (Agricultural Research Institute-IARI) எதிர்கொண்டது. இந்தியா சமர்ப்பித்த ஏராளமான ஆதாரங்களை ஆய்வு செய்த அமெரிக்கக் காப்புரிமைக் கழகம், இந்தியாவுக்கு ஆதரவாகத் தீர்ப்புக் கூறியதோடல்லாமல் "இனிமேல் இத்தகைய சில்லறைத்தனமான விடயங்களில் ஈடுபடவேண்டாம்" என்று 'Rice Tec' நிறுவனத்தை எச்சரிக்கை செய்தது.
 

saiva1.jpg

எல்லாம் இருக்கட்டும் சுவிஸ் நிறுவனம் வழக்குத் தொடரும் போது சாதக, பாதக அம்சங்களைக் கருத்தில் கொள்ளாமலா தொடர்ந்திருப்பார்கள்? இவர்களுக்கு சாதகமாகத் தீர்ப்புக் கிடைப்பதற்கு என்ன அமெரிக்காவில் அரிசி விளைகிறதா? என்றேன் அப்பாவித்தனத்துடன். அவர் மர்மப் புன்னகையுடன் தொடர்ந்தார் "அமெரிக்காவின் இருபதிற்கும் மேற்பட்ட மாநிலங்களில் மட்டுமன்றிக், குளிருக்குப் பேர்போன கனடாவிலும் கோடைகாலத்தில் அரிசி விளைகிறது, விளைவிக்க முடியும்" என்றார். "என்னது கனடாவில் நெல் விளைகிறதா"? என்றேன் ஆச்சரியம் தாங்காதவனாக.

 
briyani.jpgஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
 

என்னது! கனடாவில் நெல்விளைகிறதா? என்றேன் நான் ஆச்சரியம் தாங்க மாட்டாதவனாக,   அவர் தொடர்ந்தார், கனடா உட்பட வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளில் நெல் விளைகிறது. ஆனால் ஆசிய நாடுகளைப் போல் பெருமளவில் அல்ல. இந்நாடுகளில் கோடைகாலம் மூன்று மாதங்களுக்குக் குறைவாக இருப்பதாலும், இரவில் குளிர் அதிகமாக இருப்பதாலும் குறிப்பிடத்தக்க அளவில் நெல் விளைவிக்கப் படவில்லை. அத்துடன் மேற்கத்தைய நாட்டவர்களின் உணவுகள் பெரும்பாலும் 'கோதுமை' சார்ந்ததாக இருப்பதாலும், கோதுமையும் அது போன்ற ஏனைய தானியங்களும் குளிரைத் தாங்கி வளரும் என்பதாலும் இவர்கள் கோதுமையை அதிகளவில் விளைவிக்கிறார்கள். அத்துடன் இவர்களிடம் 'அரிசிக்கு' போதுமான சந்தை இல்லாத காரணத்தினால் இவர்கள் நெற்செய்கையில் போதிய ஆர்வம் காட்டவுமில்லை என்று முடித்தார் திரு.பழனிச்சாமி அவர்கள்.

ricemark4.jpg

அப்படியானால் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலோ, கனடாவிலோ 'பாசுமதி' அரிசி விளைகிறதா என்றேன் விடாப்பிடியாக. அவர் தொடர்ந்தார், உங்களுக்கு ஒரு விடயத்தைத் தெளிவாகக் கூறவேண்டியிருக்கிறது. 'பாசுமதி' அரிசி என்பது இந்தியாவின் பூர்வீகத் தானியங்களில் ஒன்று. இந்த பாசுமதி நெல் வகையானது இந்திய சீதோஷ்ண நிலையிலேயே நன்றாக விளையும் தன்மை கொண்டது, இருப்பினும் இந்திய மண்வகைகள், காலநிலை போன்றவற்றைக் கொண்ட பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பர்மா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் பாசுமதி நெல் விளைகிறது. ஆனால் 'பாசுமதி' அரிசியின் தாயகம் என்றால் அது இந்தியாதான், அதுமட்டுமல்ல உலகத்தோர் அனைவரும் உச்சரிக்கும் 'பாசுமதி' என்ற பெயர்கூட இந்தியாவின் தொன்மையான மொழியாகிய சம்ஸ்கிருத மொழிச் சொல்லாகும். சமஸ்கிருதத்தில் 'பாசுமதி' என்றால் 'வாசனை மிக்கது' என்று அர்த்தம். என்று ஒரு குட்டிப் பிரசங்கத்தையே நிகழ்த்தினார் அந்தப் பெரிய அனுபவசாலி.
சரி இன்றைய உலகில் மிகவும் விலைகூடிய அரிசி என்று 'பாசுமதியைத்தான்' கூறுவீர்களா? என்றேன் அவரிடமிருந்து மேலதிகமாக அறிவைப் பெறும் நோக்கத்துடன்.
அவர் தொடர்ந்தார் , "இன்றைய இருபதாம் நூற்றாண்டில் உலகில் ஏறக்குறைய 40000 அரிசியினங்கள் அல்லது நெல் இனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் பிரேசில், மெக்சிக்கோ நாடுகளில், காடுகளில் இயற்கையாகவே விளையும்

vildris.jpg
'காட்டு அரிசி'(wild rice)

'காட்டு அரிசி'(wild rice) என்றழைக்கப் படும் அரிசியே உலகில் விலைகூடிய அரிசியாகும், காரணம் ஒரு கிலோ பாசுமதி அரிசியின் சர்வதேசச் சந்தை விலை ஏறக்குறைய 3 அமெரிக்க டொலர்களாகும், ஆனால் நான் ஏற்கனவே குறிப்பிட்ட 'காட்டு அரிசியின்' விலை ஒரு கிலோவுக்கு இன்றைய சர்வதேசச் சந்தை நிலவரப்படி, ஏறக்குறைய 20 அமெரிக்க டொலர்களாகும்" என்றார்.
உங்களுடைய தகவல்கள் என்னைத் திகைப்பும், அளவுக்குமீறிய ஆச்சரியமும் கொள்ள வைக்கின்றன என்றேன் நான். "எதனால்? என்றார் அவர், "உலகில் அரிசியில் நாற்பதினாயிரம் வகைகள் என்ற தகவல் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது, அதேபோல் ஒரு கிலோ 'காட்டு அரிசியின்' விலை இலங்கை ரூபாயில் 2200 என்ற தகவல் என்னைத் திகைப்படையச் செய்கிறது" என்றேன். "இதில் எந்தவித திகைப்பும் கொள்ளத் தேவையில்லை, உலகில் எந்தப் பொருள் அருமைத் தன்மையாகக் கிடைக்கிறதோ அது மிகவும் விலை கூடியதாக இருப்பது இயற்கைதானே? தங்கத்தைவிட மிக அருமையாகக் கிடைக்கும் 'பிளாட்டினத்தின்' விலை அதிகம் தானே? என்று தனது கருத்திற்கு வலு சேர்த்தார்.

உலகில் எந்தப் பொருள் அருமைத் தன்மையாகக் கிடைக்கிறதோ, அப்பொருள் மிகவும் விலைகூடியதாக இருப்பது இயற்கைதானே? தங்கத்தைவிட மிக அருமையாகக் கிடைக்கும், 'பிளாட்டினத்தின்' விலை அதிகம்தானே? என்று தனது கருத்திற்கு வலுச் சேர்த்தார் திரு.பழனிச்சாமி அவர்கள்.

ஆம், நீங்கள் சொல்வது மிகவும் சரி, தங்கத்தைவிட மிக அருமையாக
கிடைப்பதால்தான் 'பிளாட்டினத்தின்' விலை தங்கத்தைவிட மிக அதிகம்
rice.jpgஎன்று, ஊரில் பாடசாலையில் படிக்கும்போது எங்கள் 'விஞ்ஞான ஆசிரியர்' கூறி இருக்கிறார், அது மட்டுமல்லாமல், நான் டென்மார்க் நாட்டிற்கு வந்த புதிதில், பெரும்பாலான டேனிஷ் பெண்களின் கழுத்திலோ, காதிலோ தங்க நகைகள் இல்லாததைக் கண்டு ஆச்சரியமடைந்தேன், பின்பு விசாரித்தபின்புதான் தெரியவந்தது, பெரும்பாலான பெண்கள் வெள்ளி நகைகளையும், குறிப்பிட்ட வீதத்தினர் இங்குள்ள தரம்குறைந்த(18 கரட்) தங்கத்தையும், பணக்காரப் பெண்கள் 'பிளாட்டினத்தாலான' நகைகளையும் அணிகிறார்கள் என்று" எனது அனுபவம், மற்றும் ஞாபகசக்தியுள்ள விடை அவர்க்குத் திருப்தியளித்ததுபோல் தோன்றினாலும், அவர் சிரித்துக்கொண்டே தொடர்ந்தார்,


platiring.jpg"நாங்கள் செட்டிநாட்டு உணவு வகைகளிலிருந்து அரிசிக்கு வந்தோம், இப்போது அரிசியிலிருந்து எங்கள் உரையாடல் நகைகளுக்குத் திரும்புகிறது, அரிசி பற்றிய உங்கள் சந்தேகம் அநேகமாகத் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்" என்றார் ஓர் பெருமிதத்துடன்.
ஆனால் நானோ அவரை மேலும் பேசவைக்க வேண்டும் என்ற ஆவலால் எனது புதிய சந்தேகமொன்றைக் கேள்வியாகத் தொடுத்தேன்.
 

 

"இல்லையில்லை அரிசி பற்றி எனக்கு இன்னும் சில சந்தேகங்கள் உள்ளன, தாங்கள் தயவுசெய்து அவற்றைத் தீர்த்து வைக்கவேண்டும்" என்றேன். "சரி கேளுங்கள் முடிந்தால் தீர்த்து வைக்கிறேன்" என்றார். "சரி கவிஞர்கள் பாடல்கள் எழுதும்போது தனியே 'சோறு' என்று எழுதாமல் ஏன் குறிப்பிட்டு(specific) 'நெல்லுச் சோறு' என்று எழுதுகிறார்கள்? உதாரணமாக; கண்ணதாசன் அவர்கள் "நித்தம் நித்தம் நெல்லுச்சோறு, நெய்மணக்கும் கத்திரிக்கா" என்றும், கங்கை அமரன் அவர்கள் "நிதமும் நெல்லுச் சோறாக்கி, நெத்திலி மீனும் கொழம்பாக்கி, மச்சான் வந்தா ஆக்கிக்கொடுப்பேன்" என்று எழுதும் போதும், 'நெல்லுச்சோறு' என்ற வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதைக் கவனித்தீர்களா? நெல்லுச்சோறு என்ற வார்த்தை 'சந்தத்திற்காக அல்லது எதுகை மோனைக்காக' பயன்படுத்தப் பட்டுள்ளதா? "எங்களூரில்(இலங்கையில்) நெல்லுச்சோறு என்ற பதம் உபயோகிக்கப் படுவதில்லை, ஏனென்றால் நெல்லில் இருந்து உமியை நீக்கியவுடன் கிடைக்கும் அரிசியில் பொங்கல்(ஈழத்தில் 'புக்கை' என்றும் அழைப்பர்), அல்லது கஞ்சி மட்டுமே சமைப்பார்கள்" என்று கேள்விக்குமேல் கேள்விகளைக் கேட்டு எனது சந்தேகங்களை அவர்முன் சமர்ப்பித்தேன்.
நீங்கள் கேட்டது மிகவும் பொருத்தமான, நியாயமான கேள்விகள், இதற்கு பதிலளிப்பதற்கு ஈழத்தவர்கள், மற்றும் தமிழ்நாட்டு மக்களின் உணவுகளில் 'தானியங்களின்' முக்கியத்துவம் பற்றிக் கூற வேண்டும்" என்றார்...

 

chakkaraipongal.jpg

.

"எங்களூரில் (இலங்கையில்) நெல்லுச்சோறு என்ற பதம் உபயோகிக்கப் படுவதில்லை, ஏனென்றால் நெல்லில் இருந்து உமியை நீக்கியவுடன் கிடைக்கும் அரிசியில் பொங்கல் (ஈழத்தில் 'புக்கை' என்றும் அழைப்பர்), அல்லது கஞ்சி மட்டுமே சமைப்பார்கள்" என்று கேள்விக்குமேல் கேள்விகளைக் கேட்டு எனது சந்தேகங்களை அவர்முன் சமர்ப்பித்தேன்.
நீங்கள் கேட்டது மிகவும் பொருத்தமான, நியாயமான கேள்விகள், இதற்கு பதிலளிப்பதற்கு ஈழத்தவர்கள், மற்றும் தமிழ்நாட்டு மக்களின் உணவுகளில் 'தானியங்களின்' முக்கியத்துவம் பற்றிக் கூற வேண்டும்" என்றவர் தொடர்ந்தார்.

millet.jpg"தமிழர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் அவர்களின் உணவுகள், உணவுப் பழக்க வழக்கங்கள் பெரும்பாலும் ஒத்ததாகவே இருக்கும். தமிழ்நாட்டிலிருந்து 32 கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் ஈழத்து மக்களின் உணவுகளும் அத்தகையதே. பெரிய மாறுபாடுகள் ஏதுமில்லை. இதுபோக 'இந்தியாவும் இலங்கையும்' ஒரே காலப் பகுதியில் ஆங்கிலேய ஆட்சிக்குள் வந்து, கிட்டத்தட்ட ஒரே தருணத்தில் சுதந்திரமடைந்தவையாகும். இவ்வாறு சுதந்திரத்திற்கு முற்பட்ட காலப்பகுதில் இவ்விரு நாட்டிலும் வாழ்ந்த தமிழ் மக்கள் உணவுக்காகத் தனியே நெல்லை மட்டும் நம்பியிருக்கவில்லை. நெல் தவிர்ந்த ஏனைய தானியங்களாகிய சோளம், கோதுவரை, கம்பு(ஆங்கிலத்தில் Millet என்பர், ஈழத்தில் 'இறுங்கு' என்றழைப்பர்), கேழ்வரகு(மேற்கத்திய நாட்டவர்கள் Ragi என்றழைப்பர்), குரக்கன்(தமிழ் நாட்டில் 'கேப்பை' என்பர்), வரகு, சாமை (ஈழத்தில் 'சாமி' என்பர்), தினை, கொள்ளு, வாற்கோதுமை(மேற்கத்திய நாட்டவர்கள் Barley என்றழைப்பர்) கோதுமை போன்ற இன்னோரன்ன தானியங்களை உணவுத் தயாரிப்பில் பயன்படுத்தி வந்தனர். இவற்றில் எந்தெந்தத் தானியங்களை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்" என்று புதிய கேள்வியை என்னை நோக்கித் தொடுத்தார்.

images?q=tbn:ANd9GcQn8CXnOU0iW5Lt6cjIN8C9WXFCXNL0su84oZ7pR5d46DdcM9U&t=1&usg=__LbJbAU1gT0Q9zVUm-tv7zHLXYXw=அவரிடமிருந்து கிளம்பிய புதிய கேள்வியால் கொஞ்சம் தடுமாறிய நான் எனது தடுமாற்றத்தை வெளியே காட்டாமல் தொடர்ந்தேன், "சோளத்தை நன்கு அறிவேன், அவித்த சோளம் எனக்கு மிகவும் பிடிக்கும், ஊரில் வேர்க்கடலை(கச்சான்) வறுத்து விற்பவர்கள், கண்டிப்பாக சோளத்தையும் அதனுடன் சேர்த்து விற்பது வழக்கம், சுவை அடிப்படையில் வேர்க்கடலைக்கும் சோளத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நானறியேன், 'கோதுவரை' என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது, கம்பு அல்லது 'இறுங்கு' என்ற தானியத்தை இலங்கையில், நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் 'பொரி உருண்டை' என்ற பெயரில் தின்பண்டமாகக் கடைகளில் விற்பார்கள், ஒரு உருண்டையின் விலை பத்துச் சதம், அதற்குள் செயற்கையாக 'சிவப்பு' நிறத்தையும் சேர்த்திருப்பார்கள், பொரி உருண்டையை சாப்பிட்டதும் வாயெல்லாம், ஏன் பற்கள் கூட சிறிது நேரத்திற்கு 'சிவப்பு' நிறமாகக் காட்சி தரும். எமது நாட்டில் ஒரு துள்ளிசைப் பாடல்கூட(பொப் பாடல்) உண்டு, அது "சோழஞ்சோறு பொங்கட்டுமா, இறுங்குச்சோறு பொங்கட்டுமா? சொல்லுங்கோ மருமகனே! என்றுதான் தொடங்கும், சரி இறுங்கில்(கம்பு) சோறு சமைக்க முடியும், ஆனால் சோளத்தில் சோறு சமைக்க முடியுமா? என்று எனது தரப்பு சந்தேகத்தை அவரிடம் கேள்வியாகத் திருப்பினேன்.

 

 

 
market1.jpg
 


எமது நாட்டில் ஒரு துள்ளிசைப் பாடல்கூட(பொப் பாடல்) உண்டு, அது "சோளஞ்சோறு  பொங்கட்டுமா, இறுங்குச்சோறு பொங்கட்டுமா? சொல்லுங்கோ மருமகனே! என்றுதான் தொடங்கும், சரி இறுங்கில்(கம்பு) சோறு சமைக்க முடியும், ஆனால் சோளத்தில் சோறு சமைக்க முடியுமா? என்று எனது தரப்பு சந்தேகத்தை அவரிடம் கேள்வியாகத் திருப்பினேன்.
அவர் என்னைப் பார்த்து மெதுவாகச் சிரித்தபடியே கூறத்தொடங்கினார்.
"சோளத்தில் சோறு சமைக்க முடியாது என்பதை அனுபவ ரீதியாக அறிந்திருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன், சரி அது போகட்டும், அது பாடலின் சந்த வசதிக்காக எழுதப் பட்டிருக்கலாம்,  ஆனால் சோள மாவில் 'கூழ்' காய்ச்ச முடியும்,  சோளத்தில் அல்லது சோளமாவில் ஏனைய தானிய வகைகளைப் போல் பல உணவுப் பண்டங்களைத் தயாரிக்க முடியும்.
putthu1.jpgசோள மாவில் தயாரிக்கப் படும் பிட்டு,ரொட்டி போன்றவற்றின் சுவையே அலாதியானது, மட்டுமல்லாமல் அத்தானியத்தில் மனித சமிபாட்டுத் தொகுதி சீராக இயங்குவதற்கான போதுமான நார்ப்பொருள்(Fibre) உள்ளது.இதிலுள்ள நார்ப்பொருளானது, அரிசி, கோதுமை போன்ற தானியங்களில் உள்ளதைவிட அதிகம். இவ்வாறு உணவில் சோளத்தைச் சேர்த்துக் கொள்பவர்களுக்கு மலச்சிக்கல்(Constipation) என்ற பிரச்சனையே ஏற்பட வாய்ப்பில்லை".என்றார்.
baby-food-bottle.jpg&t=1"அது தெரிந்துதான் ஐரோப்பியர்கள் தமது நாளாந்த உணவுகளில் குறிப்பாக சலாட்(Salad) போன்றவற்றில் சோளத்தையும், பாண், கேக் போன்றவற்றில் சோள மாவையும் சேர்க்கிறார்களா? என்றேன் நான். அதற்கு பதில் கூறுமுகமாக பின்வருமாறு கூறினார் அந்த அனுபவசாலி: "நீங்கள் கூறுவது மெத்தச் சரி, அத்துடன் ஐரோப்பாவில் விற்பனையாகும் போத்தலில் அடைக்கப்பட்ட பெரும்பாலான 'குழந்தை உணவுகளில்' சோளமும் குறிப்பிட்ட வீதத்தில் கலக்கப் பட்டிருக்கும், ஏனெனில் சோளத்தில் அரிசி, கோதுமையைவிட புரதச் சத்தும் அதிகம். அது மட்டுமன்றி மதுபானங்கள் தயாரிப்பிலும் சோளம் முக்கிய பங்கு வகிக்கிறது"
"என்னது மதுபானத் தயாரிப்பில் சோளமா"? என்றேன் நான் வியப்புடன்.

சோளத்தில் அரிசி, கோதுமையைவிட புரதச் சத்தும் அதிகம். அது மட்டுமன்றி மதுபானங்கள் தயாரிப்பிலும் சோளம் முக்கிய பங்கு வகிக்கிறது"
"என்னது மதுபானத் தயாரிப்பில் சோளமா"? என்றேன் நான் வியப்புடன்.

carlsberg1.jpg
பியர்
 எனது ஆச்சரியத்தையும் புரிந்துகொண்ட திரு.பழனிச்சாமி அவர்கள் தொடர்ந்தார். "ஆம் சோளத்தில், மதுபானத் தயாரிப்பிற்கு தேவையான மூலப் பொருள் அடங்கியிருக்கிறது. இருப்பினும் ஐரோப்பியர்கள் சோளத்தைவிட மலிவாகக் கிடைக்கும் கோதுமை, பார்லி போன்றவற்றை மதுபானத் தயாரிப்பில் உபயோகிக்கிறார்கள். ஆனால் லத்தீன் அமெரிக்க நாட்டவர்கள் சாதாரண 'பியரை' விடவும் சோளத்தில் தயாரிக்கப் படும் அதிக போதைதரும் 'பியரையே'(Beer) விரும்பிக் குடிக்கிறார்கள், ஆபிரிக்க உணவு வகைகள் பெரும்பாலும் சோளத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், ஆபிரிக்கர்கள் சோளத்தில் மதுபானம் தயாரிப்பதில்லை. சீனர்கள் கொழுப்புக் குறைந்த எண்ணெய் வகைகளிலேயே 'சோள எண்ணையையே' அதிகம் உபயோகிக்கிறார்கள், மத்திய கிழக்கில் பணக்காரர்களின் கால் நடைகளுக்கு சோளத்தில் செய்யப்பட்ட 'தீவனங்கள்' நாளாந்தம் உணவாகக் கிடைக்கின்றன".
 
கோன் பிளேக்ஸ்
"சாதாரண சோளத்திற்குப் பின்னால் இவ்வளவு சுவையான தகவல்களா?" என்றேன் திரும்பவும் வியப்பு மேலிட, அவரும் விட்டபாடில்லை, "இல்லை, இன்னும் முடியவில்லை சோளத்தின் கதை" என்றார் சிரித்துக் கொண்டே, நானும் கேட்கத் தயாராகினேன். "பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் காலை உணவு என்ன? என்ற கேள்வியுடன் ஆரம்பித்தார், நானும் வெகு அலட்சியமாக "கோன் பிளேக்ஸ் (Corn Flakes) என்றேன். அந்தக் 'கோன் பிளேக்ஸ்' இன் அடிப்படையே 
 
chicken.jpg
சிக்கன் சிக்ஸ்டி பைவ்
'சோள மாவுதான்', அது மட்டுமல்ல ஐரோப்பியர்கள் பலகாரங்களை முறுகிய சுவையுடன் தயாரிப்பதற்கும், இறைச்சிகளை முறுகிய சுவையுடன் பொரிப்பதற்கும் சோளமாவே காரணம். கோழி இறைச்சியில் புகழ்பெற்ற 'கொட் விங்க்ஸ் (Hot wings)
தமிழ்நாட்டில் புகழ்பெற்ற 'சிக்கன் சிக்ஸ்டி பைவ் (Chicken 65) போன்ற உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதற்கும் காரணமும் சோள மாவுதான்". என்றார்.
 
சோளம் பற்றி பெரிய உரையே ஆற்றி விட்டீர்கள், அடுத்து இறுங்கு (கம்பு) தமிழ் மக்களின் உணவில் எத்தகைய முக்கியத்துவம் பெறுகிறது? என்று ஒரு புதிய கேள்விக்கணையை அவரை நோக்கித் திருப்பினேன்.
ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
millet2.jpg
கம்பு

சோளம் பற்றி பெரிய உரையே ஆற்றி விட்டீர்கள், அடுத்து இறுங்கு (கம்பு) தமிழ் மக்களின் உணவில் எத்தகிய முக்கியத்துவம் பெறுகிறது? என்று ஒரு புதிய கேள்விக்கணையை அவரை நோக்கித் திருப்பினேன். 
அவரும் அதை ஆமோதிப்பதுபோல் மெதுவாகச் சிரித்துக்கொண்டே ஆரம்பித்தார். "நல்ல கேள்விகளைத்தான் கேட்கிறீர்கள், இதன்மூலம் உங்கள் அறிவும் பெருகுகிறது, எனது தேடலும், ஞாபகசக்தியும் பலப்படுகிறது. சரி நீங்கள் கேட்ட கேள்விக்கு வருவோம், தமிழ் நாட்டு மக்களின், ஏன் இந்திய மக்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு தானியம்தான் கம்பு(இலங்கைத் தமிழில் இறுங்கு) இந்தியாவில் பயிரிடப்படும் சிறு தானியங்களில் கம்புக்கு முதலிடம் உண்டு. இந்தத் தானியத்தின் பிறப்பிடம் ஆபிரிக்கா என்றே நம்பப் படுகிறது". 
"அப்படியானால் இந்தியாவில் கம்பு எப்போது அறிமுகமானது என்று ஏதேனும் தகவல் உண்டா? என்றேன் நான். "இருங்கள் சொல்கிறேன்" என்று கையை காட்டியவர் தொடர்ந்தார்: "இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் இருந்து ஒரு விடயம் தெளிவாகியது, அது 2000 ஆண்டுகளுக்கு முன்பே கம்பு இந்தியாவில் பயிராகியிருக்கிறது என்பதுதான். கம்பு வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது, அதிக தட்ப வெப்ப சூழலிலும், குறைவான ஊட்டமுள்ள நிலங்களிலும் வளரும் தன்மை உடையது".
நான் உங்களிடம் 'கம்பஞ்சோறு'(இறுங்குச்சோறு) மற்றும் கம்பில் தயாரிக்கப் படும் உணவுகள் பற்றி அறிய ஆவலாயிருந்தேன்" என்று அவரது உரையை வேறு பக்கம் திருப்பினேன்.

millet3.jpg
கம்பஞ்சோறு

அவர் தொடர்ந்தார். "கம்பஞ்சோறு மிகவும் சத்துள்ள ஒரு உணவு மட்டுமின்றி நீண்டநேரம் பசியைத் தாக்குப் பிடிக்கக் கூடியது. கம்பஞ்சோறுக்குப் பழைய மீன்குழம்பு எத்தகைய பொருத்தம் என்று தமிழ்நாட்டின் கிராமப்புற மக்களைக் குறிப்பாகத் திருச்சி, சேலம் மாவட்ட மக்களைக் கேட்டுப் பாருங்கள்" என்றார். "அதுதான் எஜமான் படத்தில் பாடல் எழுதிய கவிஞர் பாடல் முழுவதுமே 

fishcurry.jpg

"கம்பஞ்சோறு கத்திரிக்கா கூட்டு இருக்கு,
நேத்து வச்ச மீன் குழம்பும் இங்கேயிருக்கு"  
என்ற வரியைத் திரும்பத் திரும்ப உபயோகித்திருந்தாரா? என்றேன் நான்.
"ஆமாம் சரியாகச் சொன்னீர்கள் அந்தப் பாடலை எழுதியவர், தமிழ்நாட்டு மக்களின் வாயில் நாவூறச் செய்கின்ற அத்தனை உணவுகளையும் வகைப் படுத்தியிருப்பாரல்லவா? 'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு' பாடலுக்குப் பின்னர் தமிழ்நாட்டு மக்களை வாயூற வைத்த பாடல் அது என்றால் மிகையாகாது" சரி கம்பில் என்னென்ன உணவுகள் தயாரிக்கலாம் என்று கேட்டீர்கள் அல்லவா சொல்கிறேன்., கம்பை இடித்த மாவிலிருந்து பெரும்பாலும் கூழ், களி போன்ற உணவுகளைத்தான் தயாரிப்பார்கள் இருப்பினும் அரிசி மாவுடன் சேர்த்து 'அடை', 'தோசை' போன்றவற்றைத் தயாரித்தால் அவற்றின் சுவையை எழுத வார்த்தைகளே கிடையாது"

 

kambangkool.jpg"அடடா கம்பு இந்த அளவுக்குத் தமிழ்நாட்டில் பிரபலமா? நமது இலங்கையில் அதை வெறும் பொரி உருண்டையாகவும், மரணச் சடங்கில் உபயோகிக்கப் படும் 'பொரியாகவும்' அல்லவா தமிழ் மக்கள் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்றேன் நான். இடையில் குறுக்கிட்டார் அவர் "இல்லையில்லை, நீங்கள் சொல்வது தவறு, சிங்கள மக்கள், இந்தத் தானியத்தை பல வகைகளிலும் உணவாக உட்கொள்கிறார்கள்" என்றார்.
எங்கள் நாட்டைப் பற்றி என்னைவிட அதிகமாகத் தெரிந்து வைத்திருக்கும் அந்தப் பெரியவரை ஆச்சரியத்துடன் நோக்கினேன்.

 

 

 
millet2.jpg
"அடடா கம்பு இந்த அளவுக்குத் தமிழ்நாட்டில் பிரபலமா? நமது இலங்கையில் அதை வெறும் பொரி உருண்டையாகவும், மரணச் சடங்கில் உபயோகிக்கப் படும் 'பொரியாகவும்' அல்லவா தமிழ் மக்கள் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்றேன் நான். இடையில் குறுக்கிட்டார் அவர் "இல்லையில்லை, நீங்கள் சொல்வது தவறு, சிங்கள மக்கள், இந்தத் தானியத்தை பல வகைகளிலும் உணவாக உட்கொள்கிறார்கள்" என்றார்.
எங்கள் நாட்டைப் பற்றி என்னைவிட அதிகமாகத் தெரிந்து வைத்திருக்கும் அந்தப் பெரியவரை ஆச்சரியத்துடன் நோக்கினேன்.

பரவாயில்லை எங்கள் நாட்டை என்னைவிட அதிகமாகவே தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்றேன். அவரும் சிரித்தபடியே "அறிஞனைக் கேளாதே, அனுபவசாலியைக் கேள்" என்ற பழமொழியை உங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன் என்றவர் தொடர்ந்தார், "இருப்பினும் எனக்கு எல்லாமே தெரியும் என்ற அகங்காரத்தோடு இதை நான் கூறுவதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்" என்றார் தன்னடக்கத்தோடு.
அவர் கூறுவதைப் புரிந்துகொண்ட நான் "நீங்கள் தன்னடக்கம் கருதி எதைக் கூறினாலும் நான் விடப் போவதில்லை, நீங்கள் ஒரு சிறந்த அனுபவசாலி என்பது உண்மை" என்றேன்.


**********************************************************************************

 
millet3.jpg
திரு பழனிச்சாமி அவர்களுடன் பேசிய பின் 'கம்பு' என்ற தானியம் தமிழ்நாட்டில் எத்தகைய முக்கியத்துவம் பெறுகிறது? என்று தமிழ்நாட்டு இணயத்தளங்களில் தேடினேன் அதில் ஒரு கவிதையும் சிக்கியது, முக்கியத்துவம் கருதி இத்தொடரில் அக்கவிதையை வாசகர்களுக்காகத் தருகிறேன்.
 
ஏக்கம் 
 
கம்பஞ் சோற்றுக்கும் 
தென்றல் காற்றுக்கும் 
ஒற்றையடிப் பாதைக்கும்
சைக்கிள் சவாரிக்கும் 
குளிர்ந்த மோருக்கும் 
பனைமர நுங்குக்கும் 
அம்மா அன்பில் பங்குக்கும் 
மனம் ஏங்குதடி ........
 
அவசர சாண்ட்விச்சும் 
பனிமழையும், குளிர்காற்றும் 
நெரிசல் ஹைவேயில் 
டொயோட்டாவிலும்
கப்புச் சீனோவும்
கோக் பாட்டிலுமாக
வாழ்க்கை தொடருதடி
ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 

ragi.jpgஎங்கள் நாட்டைப் பற்றி என்னைவிட அதிகமாகத் தெரிந்து வைத்திருக்கும் அந்தப் பெரியவரை ஆச்சரியத்துடன் நோக்கினேன்.
பரவாயில்லை எங்கள் நாட்டை என்னைவிட அதிகமாகவே தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்றேன். அவரும் சிரித்தபடியே "அறிஞனைக் கேளாதே, அனுபவசாலியைக் கேள்" என்ற பழமொழியை உங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன் என்றவர் தொடர்ந்தார், "இருப்பினும் எனக்கு எல்லாமே தெரியும் என்ற அகங்காரத்தோடு இதை நான் கூறுவதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்" என்றார் தன்னடக்கத்தோடு.
அவர் கூறுவதைப் புரிந்துகொண்ட நான் "நீங்கள் தன்னடக்கம் கருதி எதைக் கூறினாலும் நான் விடப் போவதில்லை, நீங்கள் ஒரு சிறந்த அனுபவசாலி என்பது உண்மை" என்றேன்.

 

india-2006.1156436820.img_0524.jpg

உங்கள் புகழ்ச்சிக்கு மிக்க நன்றி என்றவர் தொடர்ந்தார். "கம்பு பற்றி அநேகமாக  எனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் கூறிவிட்டேன் என்றே நினைக்கிறேன், இருப்பினும் ஒரேயொரு விடயம் கூற மறந்துவிட்டேன், 'கம்பு' சித்த மருத்துவத்தில் புகழ்ந்து பேசப்படும் ஒரு தானியம், உடல் சூடு உள்ளவர்கள் அரிசிக்குப் பதிலாக கம்பை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் சூடு தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது, அது மட்டுமன்றி நார்ப்பொருட்கள்(Fibre) உள்ள தானியங்களாகிய கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை போன்ற தானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் பெருங்குடலில் 'புற்றுநோய்' வராது தடுக்க முடியும் என்று நவீன மருத்துவ ஆராய்ச்சிகளும் கூறுகின்றன" என்றார்.
"இப்போதுதான் எனக்கு இன்னொரு தானியத்தைப் பற்றி நினைவு வருகிறது, ஆனால் நான் அந்தத் தானியத்தைக் கண்ணால் கண்டதில்லை, ஆனால் நூல்களில் படித்ததோடு சரி அதைப்பற்றியும் உங்களிடம் கேட்கவேண்டும் என்றிருந்தேன்" என்று புதிதாக ஒரு தலைப்பை ஆரம்பித்தேன்.
அது என்ன தானியம்? என்றார் அவரும் ஆச்சரியத்துடன். "நாங்கள் பள்ளியில் உயர் வகுப்பில் படிக்கும்போது 'வரகு' என்றொரு தானியத்தைப் பற்றி சில குறிப்புகள் வருவதுண்டு, தமிழ் வகுப்பில்கூட ஔவையார் பாடல்களில் ஒரு பாடல் படித்ததாக ஞாபகத்திலுள்ளது" என்றேன்.
அது என்ன பாடல்? என்றார் ஆவலுடன், எனக்கு நினைவில் நின்ற படலை அவரிடம் ஒப்புவித்தேன்:


வரகரிசிச் சோறும், வழுதுணங்காய் வாட்டும்(கத்தரிக்காய்ப் பொரியலும்)
முரமுர வெனவே புளித்த தயிரும், 
புல்வேளூர்ப்  பூதன் புகழ்பரிந்திட்ட சோறு,
எல்லா உலகும் பெறும்.


என்று முடியும் அப்பாடல். இப்படித்தான் எனக்கு ஞாபகமிருக்கிறது" என்றேன்.
"நல்லது, பாடல் எந்தச் சந்தர்ப்பத்தில், எதைப்பற்றிப் பாடப்பட்டது"? என்று ஞாபகமிருக்கிறதா? என்று புதிய கேள்விக்கணையை என்னை நோக்கி வீசினார். 

 

 

K.P.%20Sundarambal.jpg
ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
 
தமிழ் வகுப்பில்கூட ஔவையார் பாடல்களில் ஒரு பாடல் படித்ததாக ஞாபகத்திலுள்ளது" என்றேன்.
அது என்ன பாடல்? என்றார் ஆவலுடன், எனக்கு நினைவில் நின்ற படலை அவரிடம் ஒப்புவித்தேன்:
வரகரிசிச் சோறும்,வழுதுணங் காய் வாட்டும்(கத்தரிக்காய்ப் பொரியலும்) 
முரமுர வெனவே புளித்த தயிரும், 
புல்வேளூர்ப்  பூதன் புகழ்பரிந்திட்ட சோறு,
  எல்லா உலகும் பெறும்."
என்று முடியும் அப்பாடல். இப்படித்தான் எனக்கு ஞாபகமிருக்கிறது" என்றேன்.
"நல்லது, பாடல் எந்தச் சந்தர்ப்பத்தில், எதைப்பற்றிப் பாடப்பட்டது"? என்று ஞாபகமிருக்கிறதா? என்று புதிய கேள்விக்கணையை என்னை நோக்கி வீசினார்.
eggplant.jpg"எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது, அதாவது பாட்டி ஒருநாள் பசியால் வாடிய நிலையில், 'புல்வேளூர்' என்ற ஊருக்கு வருகிறார், அவ்வூரில் பாட்டிக்கு உணவளிக்கக்கூடிய வசதிபடைத்த எத்தனையோ மனிதர்கள்(பணக்காரர்கள்) வசித்தபோதும், பாட்டி அவர்களிடம் உணவுகேட்டு 'யாசிப்பதற்கு' அவர்களது இல்லம் செல்லாமல், ஏழையான, ஆனால் பாட்டியின் மனதுக்குப் பிடித்த மனிதனாகிய 'பூதன்' என்பவனுடைய வீட்டிற்கு செல்கிறார், மிகப்பெரிய 'தமிழ்ப்புலவர்' தன் வீட்டிற்கு உணவு கேட்டு வந்ததை எண்ணி, ஒருபுறம் பெருமையும், அகமகிழ்வும், எய்தும் 'பூதன்' தன் வீட்டில் பாட்டிக்கு அளிப்பதற்கு உகந்த 'அறுசுவை' உணவு இல்லையே என்று 'சிந்தை கலங்கி' நின்றான், இருப்பினும் தன்னிடமுள்ள வரகரிசிச் சோற்றையும்,(அக்காலத்திலும் இக்காலத்திலும் வரகரிசிச் சோறு ஏழைகளின் உணவு) கத்தரிக்காயில் செய்த பொரியலையும், தயிரையும் பாட்டிக்குக் கொடுத்தான்"
இடையில் குறுக்கிட்ட பழனிச்சாமி கூறினார் "நீங்கள் கூறுவது எல்லாமே சரி, ஆனால் ஒரு சிறு திருத்தம்" என்றார்.
என்ன? என்பதைப்போல் அவரைக் கேள்வியுடன் நோக்கினேன், அவர் சொன்னார் "நீங்கள் 'தயிர்' என்று ஞாபகம் வைத்துள்ளீர்கள், ஆனால் பாட்டிக்குப் பூதனின் இல்லத்தில் கிடைத்தது தயிர் அல்ல மோர்" என்றார். அப்படியா? என்றேன் ஆச்சரியத்துடன். "இத்தனை வருடங்களாக 'தயிர்' என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன், அப்படியானால் தயிரும் அக்காலத்தில் ஏழைகளின் கைகளுக்குக் கிடைக்காத பொருளா? என்றேன்.
அவர் தொடர்ந்தார், "அக்காலத்தில் மட்டுமல்ல இக்காலத்திலும் 'தயிர்' பணக்காரர்களின் உணவுதான், ஏழைகளின் கைகளில் 'மலிவாகக்' கிடைப்பது மோர்தான்" என்றவர் "சரி நீங்கள் கூறிய பாட்டியின் கதையைத் தொடருங்கள் என்றார்".
moor.jpg
மோர்
"பசியால் வாடியிருந்த ஒளவைப் பாட்டிக்கோ, வரகரிசிச் சோறும், கத்தரிக்காய்ப் பொரியலும், மோரும் 'தேவாமிர்தமாக' இருந்தது, இத்தகைய உணவுக்கு இணையான ஓர் உணவு எவ்வுலகிலும் கிடைக்காது, இந்த உணவுக்கு கைமாறாக ஈரேழு உலகத்தையும் எழுதித் தரலாம், என்ற பொருள்பட,
புல்வேளூர்ப் பூதன் புகழ்பரிந்திட்ட சோறு,
எல்லா உலகும் பெறும்  
என்று பாடினார், பாட்டிக்கு உணவளித்ததன்மூலம், 'புல்வேளூர்ப் பூதன்' என்ற அந்தக் குடியானவன், பாட்டியின் பாட்டில் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக இறவாப் புகழ் பெறுகிறான். ஒளவைப் பாட்டியின் பெயர் உள்ளவரைக்கும் தமிழுலகில் 'அம்மனிதனும்' வாழ்வான்". என்றேன் பெருமிதத்தோடு.
அவரும் சிரித்துக் கொண்டே நீங்கள் சொல்வது மெத்தச் சரி, அது மட்டுமன்றி, அவன் பாட்டிக்கு அளித்த உணவுமல்லவா தமிழ் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்துவிட்டது, என்று புதியதொரு பீடிகையைப் போட்டார்.
"என்ன சொல்கிறீர்கள்?  குழப்பத்துடன் கேட்டேன்.
'மோர்க் குழம்பைத்தான்' குறிப்பிடுகிறேன் என்றார்........
ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
 
chetti3.jpg
பாட்டிக்கு உணவளித்ததன்மூலம், 'புல்வேளூர்ப் பூதன்' என்ற அந்தக் குடியானவன், பாட்டியின் பாட்டில் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக இறவாப் புகழ் பெறுகிறான். ஒளவைப் பாட்டியின் பெயர் உள்ளவரைக்கும் தமிழுலகில் 'அம்மனிதனும்' வாழ்வான்". என்றேன் பெருமிதத்தோடு.
அவரும் சிரித்துக் கொண்டே நீங்கள் சொல்வது மெத்தச் சரி, அது மட்டுமன்றி, அவன் பாட்டிக்கு அளித்த உணவுமல்லவா தமிழ் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்துவிட்டது, என்று புதியதொரு பீடிகையைப் போட்டார்.
fishmarket.jpg"என்ன சொல்கிறீர்கள்?  குழப்பத்துடன் கேட்டேன்.
"மோர்க் குழம்பைத்தான் குறிப்பிடுகிறேன்" என்றார்.
என்னது மோர்க் குழம்பா? "எனது வாழ்நாளில் அவ்வாறு ஒரு குழம்பைப் பற்றி கேள்விப்பட்டதேயில்லையே" என்றேன் நான் வியப்பு அடங்காதவனாக.
 
அவரும் சிரித்துக் கொண்டே "எனக்கும் வியப்பாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் தமிழகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் நினைக்கும்போதே வாயில் நீர் ஊறும் கறி வகைகளில் மோர்க்குழம்பும் ஒன்று" ஆனால் இந்த மோர்க்குழம்பு இலங்கையில் பிரபலமாகவில்லையே என்பதை நினைக்கையில் ஆச்சரியமாக உள்ளது, சரி இலங்கையில், உங்கள் பிரதேசத்தில் புளிப்புச் சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கறிவகைகள் எதுவுமே பிரபலம் இல்லையா? என்று புதிய வினாவைத் தொடுத்தார். நான் இடையில் குறுக்கிட்டுத் தொடர்ந்தேன். "இருக்கிறது இலங்கையில் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் 'கத்தரிக்காய்ப் பிரட்டல்' குழம்பு சமைக்கும்போது எப்போதும் புளியைக் கொஞ்சம் அதிகமாகவே சேர்ப்பார்கள், அந்தக் குழம்பு கொஞ்சம் புளிப்புச் சுவை கூடியதாகவே இருக்கும். அதனை நினைக்கும்போது வாயில் உமிழ்நீர் சுரக்கும், இதுதவிர 'புளிக்கறியை' நினைத்தாலும் வாயில் நீர் சுரக்கும்" என்றேன்.
 
 
crab.jpg"என்னது புளியில் கறி சமைப்பீர்களா? என்றார் கண்களை அகலத் திறந்தவாறு. அவரது செய்கை எனக்குச் சிரிப்பை மூட்டியது, ஒருகணம் சிரிக்க ஆரம்பித்த நான் இடையில் நிறுத்திக் கொண்டு கூறினேன். "இல்லையில்லை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் 'புளிக்கறி' என்றால் புளியில் தயாரிக்கப்படும் கறி அல்ல, இலங்கையின் யாழ் மாவட்டத்தில் சில குடும்பங்களில் இரவு உணவு முடிந்தபின்னர், அகால வேளைகளில், அல்லது தேங்காய் தட்டுப்பாடான ஒரு சூழலில் மக்களின் கைகளில் மீன், நண்டு, இறால் போன்ற கடலுணவுகள் கிடைத்தால் அவற்றை அடுத்த நாட் தேவைக்காகப் பயன்படுத்துவதற்காகவோ, அல்லது உடனடியாக உண்பதற்காகவோ மக்கள் மேற்படி கடலுணவில் 'புளிக்கறி' தயாரிப்பார்கள். அதாவது அரைத்த மிளகாய்க் கூட்டுடன் சிறிது வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு போன்றவற்றையும் சேர்த்து இதில் சுவையை அதிகரிக்க வேண்டுமென்பதற்காக 'புளியை' கொஞ்சம் அதிகமாகவே சேர்த்து(போதுமான தண்ணீர் கலந்து) 'புளிக்கறி' தயாரிப்பார்கள். இந்த எளிமையான கறியில் 'புளி' முக்கிய பங்கு வகிப்பதால் யாழ் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் இதற்குப் 'புளிக்கறி' என்று பெயர், எனது சொந்த ஊராகிய 'தீவகத்தில்' இதைப் 'புளித்தண்ணி' என்று அழைப்போம், யாழ் மாவட்டத்தின் வடமராட்சியில் இதற்குப் 'புளியாணம்' என்று பெயர்". என்று புளிக்கறியைப் பற்றி ஒரு விரிவுரை ஆற்றினேன்.
prawnmarket.jpg
எனது விளக்கத்தை மெய்மறந்து ரசித்த அவர் "அபாரம், அபாரம்" என்ற பாராட்டுடன் தொடர்ந்தார். "நீங்கள் சொல்வது மிகவும் சரி, மனிதனுக்கு இனிப்புச் சுவைக்கு அடுத்தபடியாக மிகவும் பிடித்தமான சுவை 'புளிப்புச் சுவை' ஆகும். அந்த வகையிலேயே இந்த மோர்க்குழம்புச் சமாச்சாரமும், உங்கள் ஊரில் பிரசித்தமான 'புளிக்குழம்புச்' சங்கதிகளும் விளங்குகின்றன"என்றார்..
"நீங்கள் கூறுவது எல்லாமே சரிதான், ஆனால் மோர்க்குழம்பு என்றால் என்னவென்று எனக்கு நீங்கள் இன்னமும் சொல்லவே இல்லையே" என்றேன் நான் பொறுமையிழந்தவனாக.


market3.jpgஇருங்கள் சொல்கிறேன் என்றவர் ஆரம்பித்தார். "கத்தரிக்காய்க் கறி, வெண்டிக்காய்க் கறி, பூசணிக்காய், சாம்பல் பூசணிக்காய்(இலங்கைத் தமிழில் 'நீத்துப் பூசணிக்காய்) சுரைக்காய்க் கறி போன்ற குழம்புகளில்  ஏதேனுமொன்றில் மோர் கலந்து சமைக்கப் பட்டிருந்தால் சுவை எப்படிப் பட்டதாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்" என்றார். "என்னால் அந்தச் சுவையை ஊகிக்க முடிகிறது" என்றேன். 
 
ஆக்கம்.இ.சொ.லிங்கதாசன் 
vege.jpg

இருங்கள் சொல்கிறேன் என்றவர் ஆரம்பித்தார். "கத்தரிக்காய்க் கறி, வெண்டிக்காய்க் கறி, பூசணிக்காய், சாம்பல் பூசணிக்காய் (இலங்கைத் தமிழில் 'நீத்துப் பூசணிக்காய்) சுரைக்காய்க் கறி போன்ற குழம்புகளில்  ஏதேனுமொன்றில் மோர் கலந்து சமைக்கப் பட்டிருந்தால் சுவை எப்படிப் பட்டதாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்" என்றார். "என்னால் அந்தச் சுவையை ஊகிக்க முடிகிறது" என்றேன். 
சரி இந்த மோர்க்குழம்பு தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமா? புதியதொரு கேள்வியைப் போட்டேன். அவர் தொடர்ந்தார்.என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள், தமிழ்நாட்டு மக்களால் மறக்கமுடியாத விடயங்களில் மோர்க்குழம்பும் ஒன்று. வெளிநாடுகளில் வாழும் தமிழ் நாட்டு மக்களைக் கேட்டுப் பாருங்கள் கூறுவார்கள் அதன் சுவையை, மகத்துவத்தை.வெளிநாடுகளில் வாழும் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் நீங்கள் இழந்தவை எவை என்று கேட்டால், மோர்க்குழம்பையும் சொல்வார்கள் என்றார்.

saiva1.jpg

அப்படியா? என்னால் நம்பவே முடியவில்லை, இலங்கையில் இப்படியொரு குழம்பை யாரும் தயாரிப்பார்கள் என்றோ, உண்பார்கள் என்றோ நான் நினைக்கவில்லை, நீங்கள் கூறுவதை வைத்துப் பார்க்கும்போது, இது 'ரசம்' அல்லது நமது நாட்டில் இடியப்பத்திற்காகத் தயாரிக்கப்படும் 'சொதி' போன்ற சுவையுடையதாக இருக்குமென்று நினைக்கிறேன் என்று எனது ஐயத்தை வெளியிட்டேன். .
ஒரு உணவை உண்டுபார்க்காமல் அதைப் பற்றி எவ்வாறு நாம் விவாதிக்க முடியும்? என்றவர் தொடர்ந்தார். நான் வேண்டுமென்றால் அதன் தயாரிப்பு முறையை உங்களுக்குக் கூறுகிறேன், முடிந்தால், விருப்பமிருந்தால் தயாரித்துப் பாருங்கள். ஆனால் ஒரு விடயம் உறுதி. இதை நீங்கள் ஒரு தடவை பரீட்சித்தால் பின்னர் விடவே மாட்டீர்கள் என்றார் அந்த அனுபவசாலி.
#############################################################################
திரு.பழனிச்சாமி அவர்கள் என்னிடம் தந்த மோர்க்குழம்பு தயாரிக்கும் முறையை வாசகர்களுக்காகத் தருகிறேன். இது முழுக்க முழுக்க இந்தியத் தமிழில் எழுதப்பட்டுள்ளது என்பதால், இந்தியத் தமிழில் உள்ள சில வார்த்தைகளை இலங்கைத் தமிழ் வாசகர்களுக்காக அடைப்புக் குறிக்குள்,   இலங்கைத் தமிழில் தந்துள்ளேன். 

 

moorkulambu.jpg
மோர்க்குழம்பு 



தேவையான பொருட்கள்:
மோர் - 2 கப் (தடிப்பானதாக இருந்தால் நல்லது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் (தேக்கரண்டி)
பச்சைமிளகாய் - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
அரிசி - 1/2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
தனியா(கொத்தமல்லி) - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன் (மேசைக் கரண்டி)
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்(செத்தல் மிளகாய்) - 1
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு (சிறிதளவு)
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

  • துவரம் பருப்பு, தனியா, சீரகம், அரிசி அகியவற்றை 10 அல்லது 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.


 

  • பின்னர் தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக மை போல் அரைத்துக் கொள்ளவும்.

 

  • மோரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அத்துடன் அரைத்த விழுது(மேலே குறிப்பிட்ட சரக்குச் சேர்வை) மஞ்சள் தூள், உப்பு இவைகளையும் சேர்த்து நன்றாகக் கலக்கி, அடுப்பிலேற்றிக் கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், உடனே அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

 

  • ஒரு வாணலியில்(தாச்சியில்) எண்ணை விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, குழம்பில் கொட்டவும். 


குறிப்பு:
தயிராக இருந்தால், ஒரு பாத்திரத்தில் கொட்டி மோர் சிலுப்பியால்(முட்டை அடிக்கும் அடிப்பான்) நன்றாக சிலுப்பிக் கொள்ளவும். குழம்பை நீண்ட நேரம் கொதிக்க விடக்கூடாது. அப்படிக் கொதித்தால், குழம்பு நீர்த்துப் போய் விடும். குழம்பில் காய் சேர்த்தும் செய்யலாம். வெண்டைக்காய், பெங்களூர் கத்திரிக்காய், வெள்ளைப் பூசணிக்காய் பொருத்தமாய் இருக்கும். வெண்டைக்காய் சேர்ப்பதென்றால், காம்பு நீக்கி விட்டு, இரண்டு அங்குலத் துண்டுகளாக நறுக்கி, ஒரு டீஸ்பூன் எண்ணையில், பிசுக்கு(வழுவழுப்பு) போக வதக்கி, குழம்புடன் சேர்த்து கொதிக்க விடவும். மற்ற காய்கள் என்றால், காயை சிறிது வேகவைத்து சேர்க்கவும். நாலைந்து மசால் வடைகளை(கடலை வடை)  குழம்பில் சேர்த்தால், வடை ஊறி, அருமையான வடை மோர்க்குழம்பு தயார்.

நன்றி:adupankarai.kamalascorner.com
**************************************************************
 
அன்பார்ந்த வாசகர்களே இந்தத் தொடரில் உணவு வகைகளைப் பற்றிக் கலந்துரையாடும்போது, அதனைத் தயாரிப்பது எப்படி என்ற கேள்வி உங்கள் மனதில் எழுவது இயற்கையானதே என்பதைக் கருத்தில் கொண்டே மேற்படி சமையற் குறிப்பை உங்களோடு பகிர்ந்துகொண்டேன்.
ஆக்கம்.இ.சொ.லிங்கதாசன் 
 

idiyappam.jpg"நீங்கள் கூறுவதை வைத்துப் பார்க்கும்போது, இது 'ரசம்' அல்லது நமது நாட்டில் இடியப்பத்திற்காகத் தயாரிக்கப்படும் 'சொதி' போன்ற சுவையுடையதாக இருக்குமென்று நினைக்கிறேன்" என்று எனது ஐயத்தை வெளியிட்டேன். .
"ஒரு உணவை உண்டுபார்க்காமல் அதைப் பற்றி எவ்வாறு நாம் விவாதிக்க முடியும்? என்றவர் தொடர்ந்தார். "நான் வேண்டுமென்றால் அதன் தயாரிப்பு முறையை உங்களுக்குக் கூறுகிறேன், முடிந்தால், விருப்பமிருந்தால் தயாரித்துப் பாருங்கள். ஆனால் ஒரு விடயம் உறுதி. இதை நீங்கள் ஒரு தடவை பரீட்சித்தால் பின்னர் விடவே மாட்டீர்கள்" என்றார் அந்த அனுபவசாலி.



அதன் பின்னர் அவர் என்னிடம் கொடுத்த 'மோர்க்குழம்பு' செய்முறையைக் கடந்த வாரம் வாசகர்களோடு பகிர்ந்து கொண்டேன்.

moorkulambu.jpg

"சரி இப்போது கூறுங்கள் பாடல்களில் சோற்றைப் பற்றிக் குறிப்பிடும்போது ஏன் நெல்லுச் சோறு என்று குறிப்பாகக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்? புதிய கேள்வியொன்றை திரு.பழனிச்சாமி என்னை நோக்கி வீசினார். பல விளக்கங்களை அவரிடமிருந்து ஏற்கனவே பெற்றிருந்த காரணத்தால் எனது பதிலைப் படபடவென்று ஒப்புவித்தேன்.

 
 

ricemark4.jpg"அதாவது, தமிழ்நாட்டில் சோறு தயாரிப்பதற்கு அரிசி மட்டும் உபயோகிக்கப் படுவதில்லை, கம்பு, வரகு, தினை, சாமை, போன்ற தானியங்களும் உபயோகிக்கப் படுவதால் மக்கள், அதுவும் கிராம மக்கள் எப்போதும் நெல்லிலிருந்து கிடைத்த அரிசியினால் தயாரித்த சோற்றைப் பற்றிக் குறிப்பிடும்போது 'நெல்லுச் சோறு' என்று குறிப்பிடுவார்கள். ஆனால் இலங்கையில் பெரும்பாலான மக்கள் நெல்லிலிருந்து கிடைத்த அரிசியிலிருந்தே 'சோறு' தயாரிக்கிறார்கள், ஆதலால் அவர்கள் வெறுமனே 'சோறு' என்று மட்டுமே அழைக்கிறார்கள். ஏனைய தானியங்களிலிருந்து சோறு தயாரிக்கும் வழக்கம் இலங்கையில் அருகிப் போய்விட்டது. நெல் தவிர்ந்த ஏனைய தானியங்களில் 'சோறு' தயாரிக்கும் வழக்கம் இலங்கையில் 'வேடுவர்கள்' மத்தியில் மட்டுமே இன்றுவரை தொடர்கிறது. அவர்களும் இப்போது மெல்ல மெல்ல 'அரிசிக்கு' மாறிக் கொண்டிருக்கிறார்கள்" என்று பேசி முடித்தேன்.

 

rice.jpg

"அருமை, அருமை நீங்கள் மிகவும் சிறந்த ஒரு புரிதலைப் பெற்றுவிட்டீர்கள்" என்று பாராட்டியவர் தொடர்ந்தார். "அதேபோல் தமிழ்நாட்டில் சோற்றை மக்கள் அழைக்கும் வார்த்தைகள் வேறுபடும் உதாரணமாக உணவகங்களில் சோற்றை 'சாப்பாடு' என்பார்கள், நடுத்தர மக்கள் பெரும்பாலும் 'சாதம்' என்றே அழைப்பார்கள், ஏழை மக்களும், கிராம வாசிகளும் 'கஞ்சி' என்று அழைப்பார்கள். அவர்கள் 'கஞ்சி' என்று கூறும்போது சோற்றைக் குறிப்பிடுகிறார்களா அல்லது உண்மையிலேயே 'கஞ்சியைத்தான்' குறிப்பிடுகிறார்களா? என்று நாம் உண்மையிலேயே குழம்பித்தான் போவோம். ஆனால் மலையாளிகள் எப்போதுமே 'சோறு' என்றுதான் கூறுவார்கள். இது இலங்கைத் தமிழ் மக்களின் வழக்கத்தோடு ஒத்துப் போகிறது" என்றவர், அதேபோல் நீங்கள் பொங்கலைப் 'புக்கை' என்று அழைப்பதைப் போல, தமிழ்நாட்டில் பொங்கலைப் 'பொங்கச் சோறு' என்று அழைக்கும் வழக்கமும் உள்ளது. தமிழ்நாட்டில் யாராவது 'பொங்கச் சோறு' என்று கூறினால் நீங்கள் சோற்றைக் குறிப்பிடுகிறார் என்று எண்ணிவிடக் கூடாது, ஏனெனில் 'சர்க்கரைப் பொங்கலையும்' 'பொங்கச் சோறு' என அழைக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் உள்ளது. ஆனால் இதற்கு எதிர்மாறாக தமிழ்நாட்டில் நடுத்தர உணவகங்களில் நீங்கள் போய் 'பொங்கல்' கொடுங்கள் என்று கேட்டால் 'உளுத்தம்பருப்பு, பொட்டுக் கடலை, தேங்காய் போன்றவை சேர்த்துத் தயாரித்த 'வெண் பொங்கல்' தான் உங்களுக்குக் கிடைக்கும். அது மட்டுமன்றி உணவகங்களின் விலைப் பட்டியலிலும், சாதாரண பட்டியலிலும்(Menu) இவ்வெண் பொங்கலை 'பொங்கல்' என்றே எழுதுவார்கள் அவ்விடத்தில் நீங்கள்  'சர்க்கரைப் பொங்கலை' எண்ணி ஏமாந்து விடவேண்டாம்" என்றார் எச்சரிக்கும் குரலில்.

P1010372.JPGசரி கங்கை அமரனின் பாடல் வரிகளுக்கு வருகிறேன் "நிதமும் நெல்லுச் சோறாக்கி நெத்திலி மீனும் குழம்பாக்கி" என்கிறாரே, நெல்லுச் சோறுக்கும், நெத்தலி மீனுக்கும் அத்தகைய ஒரு அரிய சுவை (Combination) இருக்கிறதா? என்றேன் அவரிடமிருந்து மேலும் தகவல்களை அறியும் நோக்கத்தில்."என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள், நெத்தலி மீனாகட்டும், நெத்தலிக் கருவாடு ஆகட்டும் தமிழ் மக்களில்(அசைவம் உண்பவர்களில்) ஒரு அங்கமாயிற்றே, இதை  நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றல்லவா நினைத்திருந்தேன்".

 

 
nethali.jpg
ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
நெல்லுச் சோறுக்கும், நெத்தலி மீனுக்கும் அத்தகைய ஒரு அரிய சுவை (Combination) இருக்கிறதா? என்றேன் அவரிடமிருந்து மேலும் தகவல்களை அறியும் நோக்கத்தில்."என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள், நெத்தலி மீனாகட்டும், நெத்தலிக் கருவாடு ஆகட்டும் தமிழ் மக்களில்(அசைவம் உண்பவர்களில்) ஒரு அங்கமாயிற்றே, இதை  நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றல்லவா நினைத்திருந்தேன்". என்று ஆச்சரியத்தோடு என்னைப் பார்த்தபடியே கேட்டார்.
Anchovy.jpg
அவர் கேள்வியை முடிக்குமுன்னரே இடையில் குறிக்கிட்ட நான் "இல்லையில்லை, நீங்கள் நினைப்பதுபோல் எனக்கு 'நெத்தலி மீன்' என்றால் என்னவென்றே தெரியாது என்று அர்த்தமல்ல, சிறு வயதில் என் பேர்த்தியார் சமைத்த நெத்தலி மீன் குழம்பையும், நெத்தலிமீன் பொரியல், நெத்தலிக்கருவாட்டுப் பொரியல் போன்றவற்றையும் நாக்கைச் சப்புக்கொட்டி சாப்பிட்டு வளர்ந்தவன் நான், இப்போதும் அதை நினைக்கையில் வாயூறுகிறது. இருப்பினும் நெத்தலிக் கருவாடும், நெத்தலி மீனும் இன்றுவரை இலங்கையில் அடித்தட்டு மக்களின் உணவாகவே இருந்து வருகிறது, மேல்தட்டு மக்கள் நெத்தலி மீனையோ, நெத்தலிக் கருவாட்டையோ விரும்பி/தேடி உண்பார்கள் என்று நான் எண்ணவில்லை" என்று எனது பங்கிற்கு கூறினேன்.
அவர் தொடர்ந்தார். நீங்கள் கூறுவது ஓரளவுக்குச் சரியானது, ஆனால் இந்த நெத்தலி மீன் (Anchovy/White Bait), கருவாடு தமிழகத்தில் அடித்தட்டு மக்களின் உணவு என்று உறுதியாகக் கூற முடியாது காரணம் அதன் சுவை. அதன் சுவையில் கிறங்கிப் போயிருக்கும் பல பணக்காரக் குடும்பங்களை நான் அறிவேன். நெத்தலி மீனாகட்டும், கருவாடு ஆகட்டும் ஏனைய மீனினங்களை விடவும் சுவை அதிகமானவை. அத்துடன் இந்த மீனினம் அத்தனை மீன் இனங்களிலும் மிகவும் சிறியது, குறிப்பாக ஒரு முழு வளர்ச்சியடைந்த 'நெத்தலி மீன்' 6 சென்டி மீட்டர்களுக்குமேல் வளர்வதில்லை. மிகவும் சிறிய மீனினமாக இருப்பதால் ஏனைய மீன் இனங்களைவிடவும் அதிக அளவில் உயிர்ச் சத்துக்களையும் (Vitamins), கல்சியம், இரும்பு போன்ற தாதுப் பொருட்களையும், குறைந்த அளவில் கொழுப்பையும், அதிக அளவில் புரதத்தையும் கொண்டுள்ளது. இது கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்ற ஒரு மிகச் சிறந்த உணவாகும். குழந்தைகளின் பல், எலும்புகள் வளர்ச்சியடைவதற்கும், வலுப் பெறுவதற்கும் உதவும் ஒரு மலிவான திட உணவாகும். ஏனைய மீன்களைப்போல் சாப்பிடும்போது 'தொண்டையில் முள் சிக்கிவிடும்' என்று குழந்தைகள் பயப்படத்தேவையில்லை. ஏனென்றால் நெத்தலி மீனின் முட்கள் மிகச் சிறியவை, அவை குழந்தைகளின் பற்களாலேயே அரைபடக் கூடிய தன்மை உடையவை. மலேசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் நாடுகளில் குழந்தைகளுக்காகத் தயாரிக்கப் பட்டு கடைகளில் விற்கப்படும் 'தின் பண்டங்களில்' நெத்தலிக் கருவாடு சேர்க்கப் படுகிறது" என்று நிறுத்தினார்.
 
anchovycurry.jpg
"என்னது குழந்தைகளின் தின்பண்டங்களில் நெத்தலிக் கருவாடா? என்றேன் வியப்புடன். அவர் தொடர்ந்தார். "நான் ஏற்கனவே கூறியதுபோல், குழந்தைகளுக்கு மட்டுமின்றி, கர்ப்பிணித் தாய்மாருக்கும் மிகச் சிறந்த ஒரு சத்துள்ள உணவு இது. இதன் மகத்துவம் தெரியாமல் பாட்டிமார்கள் சொல்கின்ற செவி வழி வந்த நம்பிக்கையாகிய "நெத்தலி மீன் ஒவ்வாமையை (Alergi) ஏற்படுத்தும் என்று நம்புகிறார்கள். இது மருத்துவ ரீதியாக இன்றுவரை ஏற்றுக் கொள்ளப் படவோ, நிரூபிக்கப் படவோ இல்லை"
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.
 
 
முருங்கைக்காய் நெத்தலிக் கருவாடு குழம்பு
 
 
drumstick.jpgஆயத்த நேரம் : 15 நிமிடம்
சமைக்கும் நேரம் : 20-30 நிமிடம்
பரிமாறும் அளவு : 6 நபர்களுக்கு
 
 
முருங்கைக்காய் - 2
நெத்தலிக் கருவாடு - 50 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 2
புளி - ஒரு எலுமிச்சை அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
 
 
நெத்தலிக் கருவாட்டை தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைக்கவும்.
முருங்கைக்காயை ஓரளவு துண்டுகளாக்கி இரண்டாக பிளக்கவும்.
புளியைக் கரைத்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, மிளகாயையும் நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
பின்பு வெங்காயம், பெருஞ்சீரகத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் முருங்கைக்காய், தக்காளி, மிளகாய் போட்டு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
புளிக்கரைசல் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
ஒரு கொதி வந்ததும் நெத்தலிக் கருவாட்டை சேர்த்து வேகவிடவும்.
முருங்கைக்காய் நன்கு வெந்ததும் இறக்கவும். இதை சோறு, புட்டு, சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.
 
Note:
விரும்பினால் பால் அரை கப் சேர்க்கலாம்.
ஆக்கம் இ.சொ.லிங்கதாசன்
indianmarket.jpg
"என்னது குழந்தைகளின் தின்பண்டங்களில் நெத்தலிக் கருவாடா? என்றேன் வியப்புடன். அவர் தொடர்ந்தார். "நான் ஏற்கனவே கூறியதுபோல், குழந்தைகளுக்கு மட்டுமின்றி, கர்ப்பிணித் தாய்மாருக்கும் மிகச் சிறந்த ஒரு சத்துள்ள உணவு இது. இதன் மகத்துவம் தெரியாமல் பாட்டிமார்கள் சொல்கின்ற செவி வழி வந்த நம்பிக்கையாகிய "நெத்தலி மீன் ஒவ்வாமையை (Alergi) ஏற்படுத்தும்"(யாழ்ப்பாணத் தமிழில் 'கிரந்தி')  என்று நம்புகிறார்கள். இது மருத்துவ ரீதியாக இன்றுவரை ஏற்றுக் கொள்ளப் படவோ, நிரூபிக்கப் படவோ இல்லை"
eggplant1.jpg
"சரி நெல்லுச் சோறையும், நெத்தலிக் கருவாட்டையும் பற்றி விரிவுரை ஆற்றி விட்டீர்கள், அந்த கண்ணதாசன் அவர்கள் பாடலில் விதந்துரைத்த 'நெய்மணக்கும் கத்தரிக்காயைப் பற்றியும்' கூறுங்கள்" என்றேன்.
"சரி சொல்கிறேன், அதற்கு முன்னால் ஒரு கேள்வி, உங்களுக்குக் 'கத்தரிக்காய்க் கறி' பிடிக்குமா? பிடிக்காதா? என்பதை முதலில் எனக்குக் கூறுங்கள் என்று ஒரு நிபந்தனையுடன் கூடிய ஒரு கேள்வியை' என்னை நோக்கி வீசினார்.
eggplantcurry.jpg
"எனக்கு மிகவும் பிடித்த காய்கறி வகைகளில் கத்தரிக்காயும் ஒன்று, அதிலும் 'கத்தரிக்காய் பொரித்துக் குழம்பு' என்றால், பாடலில் வாணி ஜெயராம் அவர்கள் பாடியது போல் 'நினைக்கையிலே வாயூறும்'. நம்மூரில் கத்தரிக்காயில் மூன்று விதமாகக் கறி சமைப்பார்கள், முதலாவது வகை 'கத்தரிக்காய்ப் பிரட்டல்' அல்லது 'கத்தரிக்காய் பிரட்டல் கறி' என இலங்கைத் தமிழில்(தமிழ்நாட்டுத் தமிழில் 'கறி' என்றால் பெரும்பாலும் மாமிசத்தையே குறிக்கும் என்பதை நினைவில் கொள்வதுடன், இலங்கைத் தமிழும் தமிழ்நாட்டுத் தமிழும் இவ்விடத்தில் வேறுபடுகிறது என்பதையும் நினைவில் கொள்க)   அழைப்போம். இது மிகவும் தடிப்பானதாக(thick) இருப்பதால் இதற்கு 'பிரட்டல்' எனப் பெயர் வந்திருக்கலாம் அல்லது 'பிரட்டல்' என்பது மலையாள வார்த்தையாகவும் இருக்கலாம். இரண்டாவது வகை 'கத்தரிக்காய்க் குழம்பு' என 'இலங்கைத் தமிழில்' அழைக்கப் படுகிறது. இது 'பிரட்டல்' போல தடிப்பானதாக இருக்காது, இதில் தண்ணீரும், தேங்காய்ப் பாலும் அதிகமாகச் சேர்க்கப் படுவதால் 'குழம்பு' அதிகமாக இருக்கும், கத்தரிக்காய் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குழம்புக்குள் கிடக்கும், பெரும்பாலும் கத்தரிக்காய்ப் பிரட்டலுக்குப் பயன்படுத்தப்படும் சகல வாசனைத் திரவியங்களும், மிளகாய்த் தூளும்(மிளகாய் பொடி) இதற்கும் சேர்க்கப் படுவதாலும், எண்ணையில் தாளிக்கப் படுவதாலும் இந்தக் கத்தரிக்காய்க் குழம்பும் வாசனை மிக்கதாக, பக்கத்து வீட்டிற்கும் 'மணக்கும்' வகையில், நாவூறச் செய்கின்ற ஒரு 'கறியாக' 
eggplant.jpgஇருக்கும். இதற்கு அடுத்த படியாக இலங்கைத் தமிழ் மக்கள் கத்தரிக்காயில் மிளகாய்த் தூள் சேர்க்காமல், பச்சை மிளகாய் வெங்காயம் போன்றவற்றையும், தேங்காய்ப் பாலையும் சேர்த்து 'கத்தரிக்காய் வெள்ளைக் கறி(கத்தரிக்காய்ப் பால்க் கறி எனவும் அழைப்பர்) என ஒரு கறியைத் தயாரிப்பர். இது பெரும்பாலும் ஒரு மீன்கறி, அல்லது கோழிக்கறி, ஆட்டுக்கறி போன்றவற்றோடு சேர்த்து உண்ணுகின்ற உறைப்பில்லாத(காரமில்லாத) ஒரு 'துணைக் கறியாக' இருக்கும். இது தவிரவும் சிறிய மீன்களில் கறி சமைக்கும்போதும், கருவாட்டுக் குழம்பு சமைக்கும்போதும் கத்தரிக்காயைச் சேர்க்கும் வழக்கம் சில பிரிவு மக்களிடம் காணப் படுகிறது. அதேபோல் வாழைக்காய், பலாக்கொட்டை போன்றவற்றை எண்ணையில்பொரித்து உண்பதுபோல் கத்தரிக் காயையும் பொரித்து உண்ணும் வழக்கமும் எமது இலங்கைத் தமிழ் மக்களிடம் காணப் படுகிறது". என்று கத்தரிக்காயைப் பற்றி எனக்குத் தெரிந்த விடயங்களை அவரிடம் ஒப்புவித்தேன்.  

 

 
indianfood1.jpg
ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
இது தவிரவும் சிறிய மீன்களில் கறி சமைக்கும்போதும், கருவாட்டுக் குழம்பு சமைக்கும்போதும் கத்தரிக்காயைச் சேர்க்கும் வழக்கம் சில பிரிவு மக்களிடம் காணப் படுகிறது. அதேபோல் வாழைக்காய், பலாக்கொட்டை போன்றவற்றை எண்ணையில்பொரித்து உண்பதுபோல் கத்தரிக் காயையும் பொரித்து உண்ணும் வழக்கமும் எமது இலங்கைத் தமிழ் மக்களிடம் காணப் படுகிறது". என்று கத்தரிக்காயைப் பற்றி எனக்குத் தெரிந்த விடயங்களை அவரிடம் ஒப்புவித்தேன்.
chetti2.jpg
"பரவாயில்லை, கத்தரிக்காயைப் பற்றி மட்டுமல்லாமல் மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களைப் பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருக்கிறீர்கள்" எனப் பாராட்டியவர் தொடர்ந்தார். "இது மாட்டும்தானா? அல்லது வேறு ஏதும் நடைமுறைத் தகவல்கள் வைத்திருக்கிறீர்களா? என்று கேட்டார். நானும் விடுவதாக இல்லை. இன்னும் சில தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்றேன். கூறுங்கள், கூறுங்கள் கேட்பதற்கு ஆவலாயிருக்கிறேன் என்றார்.
அதாவது கத்தரிக்காய்க் குழம்பில் கருவாடு சேர்த்துச் சமைக்கும் வழக்கம் இலங்கையில் பரவலாக எல்லாப் பாகத்திலும் வாழ்கின்ற மக்களிடமும் காணப் படுகிறது. ஆனால் இவ்வழக்கம் யாழ் மாவட்டத்தின் 'வடமராட்சி' பகுதியில் விசேடம். பல வருடங்களுக்கு முன் நான் சந்தித்த யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் யாழ் மாவட்டத்து உணவுகள், அவற்றின் 'நாவூற' வைக்கும் சுவைகள் பற்றி பேச்சு எழுந்தபோது பின்வருமாறு கூறினார்:
indianfishmarket.jpg
"நமது பகுதி மக்கள் 'சுவைப் பிரியர்கள்', அவர்களுக்கேயுரிய ஒரு வழக்கம் இருக்கிறது, மீன் இனங்களில் மற்றும் கருவாட்டில் 'திரியாப்பாரை'(Alectis Indicus) என்று ஒரு இனம் இருக்கிறது. அதைக் கண்டால் விடவே மாட்டார்கள். அந்த மீனாகட்டும், கருவாடு ஆகட்டும் அவற்றில் செய்த குழம்போ, பொரியலோ 'சுவை' சொல்லி மாளாது. இப்போதும் வெளிநாடுகளில் வாழுகின்ற நமது பிரதேசத்தைச் சேர்ந்த மக்களிடம் கேட்டுப் பாருங்கள் அதன் சுவையை" என்று கூறியவர், தொடர்ந்து உபரியாக இன்னொரு தகவலையும் கூறினார், "அதாவது கருவாட்டுக் குழம்பு என்றாலே நினைவுக்கு வருவது 'கத்தரிக்காயும் திரியாப்பாரைக் கருவாடும்' சேர்த்துக் காய்ச்சிய குழம்புதான். இதன் சுவைக்கு நிகராக நில புலங்களைக் கூட எழுதி வைக்கலாம்" என்று வாயில் நீர் ஊறும் வண்ணம் கூறினார். அதுமட்டுமல்லாமல் வடமராட்சிப் பகுதியில் 'திரியாப் பாரை' மீனை அல்லது கருவாட்டை 'தங்கத்திற்கு நிகரானது' என்று கூறுவார்கள். என்று கூறி முடித்தார். இவ்வாறு கத்தரிக்காயின் மகத்துவம் மட்டுமல்லாமல், 'திரியாப் பாரைக்' கருவாட்டின் மகத்துவமும் நான் அறிவேன். என்றேன்.
eggplant1.jpg
பரவாயில்லையே கத்தரிக்காய் உங்கள் மக்களின் உணவில் முக்கிய இடத்தை அல்லவா பிடித்திருக்கிறது. என்று வியந்தவரிடம் நான் கூறினேன். எமது மக்களின் உணவில் மட்டுமல்லாமல் 'முல்லாவின்' நகைச்சுவைக் கதையிலும் அல்லவா இடம்பிடித்துவிட்டது. என்றேன் என்னது முல்லாவின் கதையிலுமா? என்றார்.
 
 
 
முல்லாவும் கத்தரிக்காயும்  
indianmarket.jpg
அரசரும் முல்லாவும் அருகருகே அமர்ந்திருந்து உணவருந்திக் கொண்டிருந்தனர். உணவில் கத்தரிக்காய்க் கறியும் இடம்பெற்று இருந்தது.அரசர் கூறினார் "கத்தரிக்காய் ஒரு அற்புதமான காய்கறி, அதன் சுவையே அலாதியானது" என்றார். உடனே முல்லாவும் "ஆமாம் அரசே, கத்தரிக்காய் மிகவும் சுவையானது" என்றார்.இன்னொருநாள் இருவரும் சேர்ந்து உணவருந்தியபோது மன்னர் கூறினார் "இந்தக் கத்தரிக்காய் ஒரு மோசமான காய்கறி, அதில் எந்தவிதச் சுவையும் கிடையாது" என்றார். உடனே முல்லாவும் "ஆமாம் அரசே கத்தரிக்காய் ஒரு வெறுக்கத்தக்க காய்கறி, அதனை உண்பதால் 'சொறி', 'சிரங்கு' போன்றவையும் ஏற்படுகின்றன" என்றார். உடனே மன்னர் முல்லாவைப் பார்த்துக் கேட்டார்.என்ன முல்லா? அன்று நான் கத்தரிக்காயைப் பாராட்டியபோது நீரும் பாராட்டினீர், இன்று நான் கத்தரிக்காயை இகழ்ந்து பேசும்போது நீரும் வெறுப்பாகப் பேசுகிறீர்? என்று கேட்டார். அதற்கு முல்லா கூறினார் "அரசே நான் வேலை பார்ப்பது, உங்களிடம்தான், கத்தரிக்காயிடம் அல்ல. எனக்குச் சம்பளம் தருவது நீங்கள்தான்,கத்தரிக்காய் அல்ல" என்று பதிலளித்தார்.
எனது கதையைக் கேட்ட திரு.பழனிச்சாமி அவர்கள் "இக்காலத்தைப் போலவே அக்காலத்திலும் பிழைக்கத் தெரிந்த முல்லா" என்றார் சிரித்துக் கொண்டே.
 
eggplant.jpg
"பரவாயில்லை கத்தரிக்காயைப் பற்றிப் பல விபரங்களை மிகவும் நுணுக்கமாகவே தெரிந்து வைத்திருக்கிறீர்கள் எனப் பாராட்டிய திரு.பழனிச்சாமி அவர்கள் தொடர்ந்தார், "சரி இப்போது 'கத்தரிக்காயைப் பற்றி' எனக்குத் தெரிந்த சில அறிவியல் விடயங்களைக் கூறுகிறேன்" என்றார். "கூறுங்கள், கூறுங்கள்" என்றேன் ஆவலுடன். அவர் தொடர்ந்தார் "நாம் நினைப்பதுபோல் கத்தரிக்காய் ஒரு காய்கறி வகை அல்ல, அது ஒரு பழ வகையச் சேர்ந்தது" என்று ஒரே போடாய்ப் போட்டார். என் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. "என்ன சொல்கிறீர்கள்? "கத்தரிக்காய் பழ வகையைச் சேர்ந்ததா? காய்கறிகளில் தக்காளிப் பழமும், மிளகாயும் மட்டுமே பழ வகையைச்(குடும்பத்தைச்) சேர்ந்தது என்று படித்திருக்கிறேன், இப்போது நீங்கள் கூறும் கருத்து எனக்கு மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது" என்றேன் நான். அவர் தொடர்ந்தார் "ஆம் நம்மில் பலர் கத்தரிக் காயை ஒரு 'காய்கறி' என்றே நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் விவசாய பீடத்திலும் (வேளாண்மைத் துறை), தாவரவியலிலும் கல்வி கற்றவர்களுக்குத் தெரியும் அது ஒரு பழ வகையைச்(Berry) சார்ந்த தாவர இனம் என்பது. விவசாயிகள் கத்தரிக்காயிலிருந்து நாற்று மேடைக்காகக் 'கத்தரி விதைகள்' எடுக்க விரும்பினால் கத்தரிக்காயை முதலில் நன்றாக முற்ற விடுவார்கள், அதன்பின் சில நாட்களில் கத்தரிக்காயானது நன்றாகப் பழுக்க ஆரம்பிக்கும் இறுதியில் அந்தப் பழம் ஒரு 'அழுகிய பழம்' போன்ற நிலையை எய்தும்போது அதைக் கைகளால் பிசைந்து 'கூழ்' ஆக்கி, அதைத் தண்ணீரில் கலந்து, துணியில், அல்லது 'வடிதட்டில்' வடித்து' (வடிகட்டி) விதைகளை வெயிலில் உலர்த்திக்   'கத்தரி விதைகள்' பெறுவார்கள். இதுதான் கத்தரிக்காய் 'கத்தரிப் பழமாக' மாறும் கதை என்றார். நானும் வியப்பு மேலிட "சிங்களக் கதையொன்றில் வரும் 'ஓணான் முதலையாக மாறிய கதை' போல் இருக்கிறது உங்கள் கதை என்றேன் சிரித்தபடி. அவர் தொடர்ந்தார் "அதுமட்டுமல்லாமல், கத்தரிக்காயைப் பச்சையாகக் கடித்துப் பார்த்தால் வாயில் மிகுந்த 'கசப்புச்' சுவை தெரிகிறதல்லவா? அதற்கும் காரணமுள்ளது. இந்தக் கத்தரிக்காயானது தாவரவியலில்(Botany)
tubacfarming.jpg
புகையிலை விவசாயம், அல்லைப்பிட்டி 
புகையிலைச் செடியின் நெருங்கிய உறவினர். கத்தரிக்காயோ, அதன் இலையோ, தண்டோ பச்சையாகக் கடித்துப் பார்க்கும்போது மிகவும் 'கசப்பாக' இருப்பதற்குக் காரணம் அச் செடியிலுள்ள Nicotinoid alkaloids எனும் இரசாயனப் பொருளாகும். இந்த 'நிக்கோட்டின்' எனும் இரசாயனமே புகையிலையிலும் உள்ளது. ஒரேயொரு வேறுபாடு புகையிலையில் 'நிக்கோட்டின்' அதிகமாக உள்ளது, கத்தரிக்காயிலும் அதன் செடியிலும் குறைவாக உள்ளது என்பதாகும்.
"நீங்கள் கூறும் கருத்துக்கள் என்னை வியப்புறச் செய்கின்றன, சரி குழந்தைகள் பச்சைக் கத்தரிக்காயைக் கடித்தால் பற்கள் 'சூத்தையாகி'(சொத்தையாகி) விடும் என்று அம்மாக்கள் கூறுகிறார்களே அது எந்தளவில் உண்மை? என்று புதியதொரு கேள்வியை போட்டேன். அவர் தொடர்ந்தார், "ஓரிரு தடவைகள் பச்சைக் கத்தரிக்காயைக் கடித்ததனால் பற்கள் சொத்தையாகிவிடும் என்பது அறிவியல் ரீதியாகவோ, மருத்துவ ரீதியாகவோ நிரூபிக்கப் படாத ஒரு 'மூட நம்பிக்கையாகும்' இவ்வாறு நமது மக்கள் கூறுவது உண்மையானால் பர்மா தொடக்கம் கொரியா வரை உள்ள மக்கள் தமது உணவில் கத்தரிக் காயைப் பச்சையாகச் சேர்த்து உண்கிறார்கள், அவர்களது பற்களெல்லாம் சொத்தையாகியிருக்க வேண்டுமே? என்றார் என்னைப் பார்த்து, நானும் அவர் கூறியதை ஆமோதிக்கும் பொருட்டு "ஆமாம் நீங்கள் கூறுவதிலும் நியாயமுள்ளது" என்றேன்.

 

 
 

images.jpg

 

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்

காதலும் கத்தரிக்காயும்

"இன்று சமையல் பிரச்சனையைப் பற்றிப் பேசுவதை விட்டு, ஒரு சமுதாயப் பிரச்சனையைப் பற்றி உங்களிடம் கேட்கப் போகிறேன்" என்றேன் நான். "சமுதாயப் பிரச்சனையை அலசி ஆராய்வதற்கு நான் ஒன்றும் 'சமூக ஆய்வாளர்' அல்லவே? என்றார் திரு.பழனிச்சாமி அவர்கள். "இருந்தாலும் நான் உங்களை விடப்போவதில்லை, உங்கள் தமிழ்நாட்டிலாகட்டும், இலங்கையில் தமிழ்ப் பகுதியிலாகட்டும் காதலை ஏன் கத்தரிக்காயுடன் சம்பந்தப் படுத்துகிறார்கள்? "அடடா நீங்கள் எதைப்பற்றிக் கூற வருகிறீர்கள் என்று புரிகிறது" என்றார் மெதுவாகச் சிரித்தபடி. "உண்மையில் உங்களுக்குத் தெரிந்ததைக் கூறுங்கள். காதலுக்கும், கத்தரிக்காய்க்கும் என்ன சமபந்தம்? ஏன் எதற்கெடுத்தாலும் இலங்கைத் தமிழில் "கண்டறியாத காதலும் கத்தரிக்காயும்" எனவும், தமிழ்நாட்டுத் தமிழில் "காதலாவது கத்தரிக்காயாவது" என்று கூறுகிறார்கள். இது சாதாரண 'எதுகை மோனைக்காகக்' கூறப்படுகிறதா? அல்லது காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் உண்மையிலேயே ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? என்று கேள்விகளை அடுக்கினேன். "ஐயையோ என்னை விட்டுவிடுங்கள், சத்தியமாக எனக்குத் தெரியாது". என்றார் மீண்டும் சிரித்தபடி. பின்னர் மெதுவாக அவரே ஆரம்பித்தார் "நான் நினைக்கிறேன், இது காதலைக் கொச்சைப் படுத்துவதற்காக தமிழர்கள் கண்டுபிடித்த ஒரு 'சொல்லடை' என்று நினைக்கிறேன், நான் கூறுவது தவறாகக் கூட இருக்கலாம். இருப்பினும் ஒருவர் கூறும் கருத்தை மறுதலிப்பதற்காக 'மண்ணாங்கட்டி' என்ற வார்த்தையை சிலர் உபயோகிப்பதைப் பார்த்திருப்பீர்கள், அதுபோலத்தான் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன். இருப்பினும் எல்லாவற்றிற்கும் பதில் கூறுவதற்குத்தானே 'இணையத் தளங்கள்' வந்துவிட்டன, இணையத் தளங்களில் தேடுங்கள், "தேடுங்கள் கண்டடைவீர்கள்" என்ற இயேசுவின் வார்த்தைகள் நினைவிருக்கட்டும். கிடைக்கும் விடையை என்னோடும், உங்கள் வாசகர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள் என்றார் அவர்.

அவர் கூறியபடியே பல தமிழ் இணையத் தளங்களில் கடுமையாக முயற்சிசெய்து தேடியதில் ஒரேயொரு தமிழ் இணையத்தில் மட்டும் என் கேள்விக்கான விடை கிடைத்தது. எனது கேள்விக்கு ஏற்ற பதிலை விளக்கமாகத் தனது இணையப் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார் ஓய்வுபெற்ற விவசாய விஞ்ஞானியான முனைவர்.P.கந்தசாமி அவர்கள். அதுமட்டுமல்லாமல் மேற்படி தனது விளக்கத்தை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் அனுமதியை வழங்கியுள்ளார்.
 
உங்களுக்கு நன்றி ஐயா. !
 

 

###############################################################
 
images.jpg

 

 

 

"காதலாவது கத்தரிக்காயாவது" என்று காதலில் விழுந்த கதாநாயகியைப் பார்த்து தந்தை கேட்பாரென்று பல கதைகளில் படித்திருக்கிறோம். சினிமாவிலும் பார்த்திருக்கிறோம். கத்தரிக்காய் இரண்டு நாளில் வாடி வதங்கிப்போவது போல காதலும் சீக்கிரம் வாடி விடும் என்பதுதான் காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் உள்ள ஒற்றுமை.

 

 

 

 

 


இன்றும் கூட என்னைப்போன்ற 'கிழடுகள்' அந்த அபிப்ராயத்தைத்தான் கொண்டிருக்கிறோம். 'பத்தாம்பசலி' என்று எங்களைப் போன்றவர்களை ஏளனமாகக் கூறுவார்கள். நாங்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் 'பழைய பஞ்சாங்கத்தையே' பாடிக்கொண்டிருப்போம்.

காதல் கல்யாணம் நன்மையா, தீமையா? என்று பட்டி மன்றம் நடத்தினால் ஆயுளுக்கும் நடத்தலாம். ஒவ்வொருவரும் அந்தப் பட்டி மன்றத்தில் ஒவ்வொரு கருத்து கூறமுடியும். ஆனால் இன்று உலகத்தில் நடைமுறையில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். செய்தித்தாள்களில் வருவதுதான் இன்றைய உலக நடைமுறை.
 
"காதலித்தவன் என்னைக் கெடுத்துவிட்டு, கைவிட்டுவிட்டான்" என்று போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோர்ட்டுக்கும், கலெக்டர் ஆபீசுக்கும் அலைபவர்கள் எத்தனை பேர்? காதல் கல்யாணம் நடந்து ஆறு மாதத்தில் கைவிட்டுவிட்டு ஓடுபவர்கள் எத்தனை பேர்? இல்லையென்றால் விவாக ரத்து வழக்கு போடுபவர்கள் எத்தனை பேர?
 
இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், ஆணும் பெண்ணும் வளர்ந்த கலாசாரம் மற்றும் பொருளாதார சூழ்நிலை வித்தியாசங்கள்தான். இவைகள் வாழ்க்கையில் மிகவும் முக்கிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இளமை வேகத்தில் வெறும் 'பாலுணர்வை' காதல் என்று நினைத்து ஏமாந்து போகிறவர்கள்தான் அநேகர்.
 
இந்த வித்தியாசங்களையும் மீறி அந்தக் கல்யாணம் நிலைத்தாலும் அவர்களுக்கு ஒரு சமுதாய அந்தஸ்து கிடைப்பதில்லை. அவர்களுடைய குழந்தைகளுக்கு கல்யாணம் பண்ணும்போது ஏற்படும் பிரச்சினைகள் அநேகம். இதையெல்லாம் இளைஞர்கள் மனதில் கொண்டு அவர்கள் எதிர்கால வாழ்க்கையை வகுத்துக் கொள்ளவேண்டும்.
 

Edited by வந்தியதேவன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி.

முதலில் தமிழகத்து ஆக்கம் என நினைத்தேன்.

உள்ளே எட்டிப் பார்த்த பின்னர் தெரிந்தது, அட நம்மூரு....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.