Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதெமி விருது

Featured Replies

2016- ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது வண்ணதாசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதெமி விருது

அவரது ஒரு சிறு இசை நூலுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
வண்ணதாசன் என்ற பெயரில் கதைகளையும் கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளையும் எழுதி வரும் இவரது இயற்பெயர் சி. கல்யாணசுந்தரம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த இவர், 1962-லிருந்து எழுதி வருகிறார். கலைக்க முடியாத ஒப்பனைகள், ஒளியிலே தெரிவது, உயரப் பறத்தல் கனிவு ஆகியவை இவரது சில சிறுகதைத் தொகுப்புகள்.
தற்போது விருதை வென்றிருக்கும் ஒரு சிறு இசை நூலை, சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
சின்னு முதல் சின்னு வரை என்ற நாவலையும் புலரி, முன்பின், ஆதி உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளையும் வண்ணதாசன் கடிதங்கள் என்ற கடிதத் தொகுப்புகளையும் இவர் எழுதியுள்ளார்.
இலக்கியச் சிந்தனை, விஷ்ணுபுரம் விருது உள்ளிட்ட விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.
இவரது தந்தையான தி.க. சிவசங்கரன், தமிழின் குறிப்பிடத் தகுந்த விமர்சகர்களில் ஒருவர். 2000-வது ஆண்டில் சாகித்ய அகாதெமி பரிசை வென்றவர்.

http://www.bbc.com/tamil/india-38392107

ஒரு சிறு இசை

வண்ணதாசனின் ‘ஒரு சிறு இசை’ நூலுக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.

வண்ணதாசன் நெல்லையைச் சேர்ந்தவர். அவரது எழுத்துக்களில் நெல்லை மாந்தர்கள் அப்படியே அச்சு அசலாக வந்து செல்வார்கள்.

அப்படித்தான் இந்த ‘ஒரு சிறு இசை’ நூலிலும். ‘ஒரு சிறு இசை’ எனும் இந்த நூலில் முதல் கதையான “ஒரு சிறு இசை” வயதான ஒரு பெண்ணின் நிறைவேறாத காதல் ஆசையை வரம்பு மீறாத ஒரு இசையைப் போல வெளிப்படுத்துகிறது. மூக்கம்மா அம்மாச்சி என்ற கதாபாத்திரம் இறந்து போவதில் தொடங்கும் அந்தக் கதை கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பெண்ணின் நிறைவேறாத ஆசை பற்றி மென்மையாக விவரிக்கிறது.

‘ஒரு சிறு இசை’யோடு, ‘தண்டவாளங்களைத் தாண்டுகிறவர்கள்’, ‘தண்ணீருக்கு மேல் தண்ணீருக்குக் கீழ்’ என மொத்தம் 15 சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது. அத்தனை கதைகளிலும் ஏதோ ஒரு வகையில் ஒரு இசையை எழுத்தில் எழுப்பியிருக்கிறார் வண்ணதாசன்.

இந்தச் சிறுகதைகள் குறித்து, எழுத்தாளர் பாவண்ணன் எழுதிய விமர்சனத்தில், இத்தொகுதியில் பதினைந்து சிறுகதைகள் உள்ளன. சமீபத்தில் இவ்வளவு நிறைவான சிறுகதைகளை நான் படித்ததில்லை. தினமும் இசை கேட்பதுபோல தினமும் ஏதேனும் ஒரு சிறுகதையை மீண்டும் மீண்டும் படித்து அசைபோட்டபடி இருக்கிறேன் என்று எழுதியிருந்தார்.

http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/special-news/35/72435/oru-siru-isai

சாகித்ய அகாடமி விருது பற்றி, வண்ணதாசன் பற்றி இவையெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

 

சாகித்ய அகாடமி

* சாகித்ய அகாடமி அமைப்பு, இந்திய மொழிகளில் இலக்கியத்தை மேம்படுத்தவும், எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தவும், இலக்கியச் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கவும் 1954 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட தன்னாட்சி உரிமை பெற்ற ஒரு அமைப்பு. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு உலகலாவிய இலக்கியங்களை மொழிபெயர்ப்பதுடன், சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து படைப்பாளர்களை விருதளித்து அங்கீகரிப்பது, சிறந்த ஆளுமைகளின் புத்தகங்களை வெளியிடுவது, படைப்பாளிகளை ஆவணப்படுத்துவது போன்ற பணிகளையும் செய்கிறது.  

* சாகித்ய அகாடமி விருது, இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாகும். ஒவ்வோராண்டும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 24 மொழிகளில் சிறந்த படைப்பு ஒன்றைத் தேர்வு செய்து இந்த விருது வழங்கப்படும். சிறுகதை, நாவல், கவிதை, இலக்கிய விமர்சனம், பயண நூல், வாழ்க்கை வரலாறு, நாடகம், சுய சரிதை உள்பட அனைத்து வகை இலக்கிய வடிவங்களுக்கும்  இவ்விருது வழங்கப்படும். 

* 1955ம் ஆண்டு முதன்முதலில் தமிழ் மொழிக்கான விருது, "தமிழ் இன்பம்" என்ற கட்டுரை நூலுக்காக ரா.பி.சேதுப்பிள்ளைக்கு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை 5000 ரூபாய். 1983ல், தொ.மு.சிதம்பர ரகுநாதன் எழுதிய "பாரதி; காலமும் கருத்தும்" என்ற இலக்கிய விமர்சன நூலுக்கு சாகித்ய அகாடமி வழங்கப்பட்ட தருணத்தில் இத்தொகை 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. 1988ல் வா.செ.குழந்தைச்சாமி எழுதிய "வாழும் வள்ளுவம்" என்ற நூலுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அப்போது 25 ஆயிரமாக பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டது. 2001ல் சி.சு.செல்லப்பாவின் "சுதந்திர தாகம்" நாவலுக்கு விருது வழங்கப்பட்ட தருணத்தில் 40 ஆயிரமாக உயர்ந்தது. 2003ம் ஆண்டில் "கள்ளிக்காட்டு இதிகாசம்" நாவலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு இவ்விருது வழங்கப்பட்ட போது 40 ஆயிரமானது. 2009 முதல் 1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. கூடவே ஒரு பட்டயம். 

* ஆண்டு முழுவதும் வெளிவரும் நூல்களில் சிறந்தவற்றைத் தேர்வு செய்ய, சாகித்ய அகாடமி நிர்வாகம் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி குழுவை அமைக்கும். அக்குழு குறிப்பிட்ட புத்தகங்களைத் தேர்வு செய்து மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட கருத்தாளர்களுக்கு அனுப்பும். ஒவ்வொரு கருத்தாளரும் இரண்டு நூல்களை பரிந்துரை செய்வார்கள். அவ்விதம் பரிந்துரை செய்யப்பட்ட நூல்களில் இருந்து சாகித்ய அகாடமி அமைக்கும் நடுவர் குழு, ஒரு நூலை ஏகமனதாக தேர்வு செய்யும். அந்த ஆண்டில் சிறந்த நூல்கள் ஏதும் வரவில்லை என்று கருதினால் கடந்த ஆண்டுகளில் வெளிவந்த நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 

வண்ணதாசன்

* 2016ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை நூலுக்காக வண்ணதாசனுக்கு வழங்கப்படுகிறது. இந்த நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருந்தது. டி.செல்வராஜ், டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன், எம்.ராமலிங்கம் உள்ளிட்ட நடுவர் குழு இந்த நூலை விருதுக்கு தேர்வு செய்தது.  

* சாகித்ய அகாடமி விருதுகளை தென்மாவட்டங்களில் பிறந்த எழுத்தாளர்களே அதிக அளவில் பெற்றுள்ளார்கள். குறிப்பாக திருநெல்வேலி வட்டாரத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அதிக அளவில் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள். சாகித்ய அகாடமி விருது பெற்ற தென்மாவட்ட எழுத்தாளர்கள்; சு.வெங்கடேசன் (மதுரை), அ.மாதவன் (செங்கோட்டை), ஜோ.டி.குரூஸ் (உவரி), மேலாண்மை பொன்னுச்சாமி (விருதுநகர்), நீல பத்மநாபன் (இரணியல்), தி.க.சிவசங்கரன் (திருநெல்வேலி), தோப்பில் முகமது மீரான் (தேங்காய்ப்பட்டினம்), பொன்னீலன் (நாகர்கோவில்), வல்லிக்கண்ணன் (திசையன்விளை), மீ.ப.சோமு (மீனாட்சிபுரம்), பி.ஸ்ரீ. ஆச்சார்யா (தென் திருப்பேரை), அழகிரிசாமி (இடைச்செவல்), நா.பார்த்தசாரதி (சிவகாசி), தொ.மு.சி.ரகுநாதன் (திருநெல்வேலி), ஆதவன் (கல்லிடைக்குறிச்சி), சு.சமுத்திரம் (திருநெல்வேலி), கி.ராஜநாராயணன் (கோவில்பட்டி), சி.சு.செல்லப்பா (சின்னமனூர்), கவிஞர் வைரமுத்து (தேனி), மு.மேத்தா (பெரியகுளம்), நாஞ்சில்நாடன் (வீர நாராணமங்கலம்), பூமணி (தூத்துக்குடி), டி.செல்வராஜ் (தென்கலம்) வண்ணதாசன் (திருநெல்வேலி).

* சிறுபான்மையினர் பேசும் மொழிகளில் வெளிவரும் சிறந்த நூல்கள், சிறந்த படைப்பாளர்களைத் தேர்வு செய்து பாஷா சம்மான் என்ற விருதையும் சாகித்ய அகாடமி வழங்குகிறது. 1 லட்சம் பரிசுடன் கூடிய இந்த விருது சௌராஷ்டிர மொழி மேம்பாட்டுக்கு பாடுபட்ட கே.ஆர்.சேதுராமன், தடா.சுப்பிரமணியம் இருவருக்கும் 2006ல் வழங்கப்பட்டது. இதுதவிர மொழி பெயர்ப்புக்கென ஒரு விருது, குழந்தை இலக்கியத்துக்கான பால சாகித்ய அகாடமி விருது, 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கான யுவபுரஸ்கார் விருது போன்ற விருதுகளையும் சாகித்ய அகாடமி வழங்குகிறது. இம்மூன்று விருதுகளும் 50 ஆயிரம் பரிசுத்தொகையையும், பட்டயங்களையும் உள்ளடக்கியதாகும்.  

* இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள வண்ணதாசனின் தந்தை, தி.க.சிவசங்கரன். மார்க்சிய அறிஞரும் எழுத்தாளருமான இவர் ’விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்’ என்ற நூலுக்காக 2000-மாவது ஆண்டில் சாகித்ய அகாடமி விருது பெற்றது குறிப்பிடத்தகுந்தது. 

* வண்ணதாசன் பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது இயற்பெயர் கல்யாணசுந்தரம். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் என தொடர்ந்து இயங்கி வருபவர். எல்லா ஆளுமைகளாலும் பெரிதும் மதிக்கப்படுபவர்.

* கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், சமவெளி, பெயர் தெரியாமல் ஒரு பறவை, மனுஷா மனுஷா, கனிவு, நடுகை, உயரப் பறத்தல், கிருஷ்ணன் வைத்த வீடு, ஒளியிலே தெரிவது  ஆகியவை வண்ணதாசன் எழுதிய முக்கிய சிறுகதை நூல்கள். 

* கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதை இலக்கியத்திலும் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார் வண்ணதாசன். புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு ஆகியவை அவரின் கவிதை நூல்கள். இவை தவிர, அகமும் புறமும் என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்திருக்கிறது. எல்லோர்க்கும் அன்புடன் என்ற பெயரில் வண்ணதாசன் எழுதிய  கடிதங்கள் தொகுக்கப்பட்டு அழகான நூலாக வெளியிடப்பட்டுள்ளன. மீண்டும் பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு, ‘சில இறகுகள் சில பறவைகள்’ என்ற பெயரில் வெளியானது. 

* வண்ணதாசனின் சகோதரர் பெயர் கணபதி. திருவேந்தி என்ற பெயரில் இவர் குறுந்தொகைக்கான உரையை எழுதியிருக்கிறார்.   

http://www.vikatan.com/news/coverstory/75608-facts-you-should-know-about-sahitya-akademi.art

நெல்லை மண்ணின் பண்பாடே என் கதைகளுக்கு உயிரோட்டம்: சாகித்ய அகாடமி விருதுபெறும் எழுத்தாளர் வண்ணதாசன் கருத்து

 
விருதுபெறும் புத்தகம் (இடது), வண்ணதாசன் (வலது)
விருதுபெறும் புத்தகம் (இடது), வண்ணதாசன் (வலது)
 
 

எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, பெருமாள்புரம், சிதம்பரநகரில் வசிக்கும் வண்ண தாசன் 22.8.1946-ல் பிறந்தவர். கல்யாணசுந்தரம் என்கிற இயற் பெயரைக் கொண்ட இவர் வங்கிப் பணியில் இருந்து ஓய்வுபெற்றவர். 13 சிறுகதை தொகுப்புகள், 13 கவிதைத் தொகுப்புகள் உட்பட ஏராளமான நூல்களை எழுதியவர். இவரது `ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கலைமாமணி விருது, இலக்கிய சிந்தனை விருது, சுஜாதா அறக்கட்டளை விருது, வைரமுத்து கவிஞர் தின விருது என்று 10-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார். இன்னும் சில நாட்களில் விஷ்ணு புரம் விருது பெறவுள்ளார். சாகித்ய அகாடமி விருது பெறும் வண்ண தாசனை, அவரது இல்லத்தில் `தி இந்து’வுக்காக சந்தித்தோம்.

உங்களது முதல் எழுத்து அனுபவம் குறித்து..?

பள்ளியில் படிக்கும்போது தி.சு.ஆறுமுகம் என்ற தமிழாசிரியர் தமிழ் கற்றுக்கொடுத்தார். அவரது வகுப்பில் வைத்துத்தான் சீட்டுக் கவிதைகளை எழுதி அரங்கேற்றம் செய்தேன். 1962-ல் ‘ஒரு ஏழையின் கண்ணீர்’ என்கிற எனது முதல் சிறுகதை `புதுமை’ என்ற இதழில் வெளிவந்தது. ஒரு அச்சகத்தில் வேலை பார்ப்பவனின் கதை அது. அதன் பிரதிகூட இப்போது என்னிடம் இல்லை.

2000-ல் உங்களது தந்தை, திறனாய்வாளர் தி.க.சி.-க்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. உங்களது எழுத்துக்கு அவர் அளித்த ஊக்கம்போன்று வேறு யாரேனும் ஊக்கமாக இருந்துள்ளார்களா?

எனது தந்தை முதல் காரணம். அவர் உருவாக்கிய எங்கள் வீட்டு நூலகம் என்னை அதிகம் வாசிக்க வைத்திருந்தது. எனது அண்ணன் கணபதி நல்ல படைப்பாளி. வண்ணதாசன் என்ற பெயர்கூட அண்ணனிடமிருந்து நான் எடுத்துக்கொண்டதாக நினைக்கிறேன். தமிழ் எழுத்துலகில் தந்தைக்கும், மகனுக்கும் சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது இதுவே முதல்முறை என்று நினைக்கிறேன்.

வண்ணதாசன், கல்யாண்ஜி என்கிற உங்கள் புனைப் பெயர்களைப் பற்றி?

வண்ணதாசன் என்ற பெயரில் சிறுகதைகளையும், கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளையும் எழுதுகிறேன். வர்ணம் என்ற குமுதம் ஓவியர் மீது எனது அண்ணன் கணபதிக்கு ஒரு பெரிய ஈடுபாடு. வர்ணதாசனாக அவர் இருந்தார். எனக்கு வல்லிக்கண்ணன் மீது ஈடுபாடு. சுப்புரத்தினதாசன் என்பதை ஒரு கவிஞர் சுரதா என வைத்துக்கொண்ட மாதிரி, வல்லிக்கண்ணதாசனை ‘வண்ண தாசன்’ என மாற்றிக்கொண்டேன். ஆனால், இப்பெயர் என் அண்ணனிடம் இருந்து எடுத்துக் கொண்ட மாதிரிதான் ஞாபகம்.

எல்லா கதைகளிலும் நீங்களே ‘கதை சொல்லி’யாக இருக்கிறீர்களே?

வாழ்க்கையின் தளத்தில் இருந்து தான் எழுத முடியும். ஜெயகாந்தனால் குதிரை வண்டிக்காரனைப் பற்றி எழுத முடிகிறது. வண்ணநிலவனால் கடல்புரத்து மக்களைப் பற்றி எழுத முடிகிறது. நான் சுந்தரத்து சின்னம்மை பற்றி எழுதுகிறேன். நேரடிப் பங்கேற்பு அனுபவம் இல்லாதவரை அப் படைப்பாளியால் அதை எழுத முடியாது. பரமசிவன் என்கிற நண் பரை பற்றி எழுதும்போது, சிவன், சிவன் என்றே எழுதியிருப்பேன். சில நேரங்களில் குறியீடுகளாய் மாற்றி எழுதியுள்ளேன்.

உங்களது நட்பு வட்டாரம் குறித்து…?

மிகக் குறைந்த நண்பர்கள், சுருக்கமான நட்பு வட்டாரம். வண்ணநிலவன், கலாப்ரியா, விக்ர மாதித்யன். இப்படியான எங்க ளது நால்வரை குறித்தும் விக்ர மாதித்யன் எழுதியுள்ள 4 பேர் கட்டுரை நல்ல கட்டுரை. நண்பர்களும் எழுத்தாளர்களாய் அமைவது பெரிய விஷயம்.

நாவல் எழுத இதுவரை முயற்சிக்காதது ஏன்?

தடை ஒன்றும் இல்லை. இன்று நினைத்தாலும் எழுதி விடலாம். என்னுடைய 15 சிறுகதைகளை முன் பின்னாக எப்படி மாற்றிப்போட்டாலும் நாவல் வடிவம் வந்துவிடும். என்னுடைய சிறுகதைகளை நானே இப்படிச் செய்யமுடியும். இலங்கையிலும் பிறமொழி இலக்கியங்களிலும் இப்போக்கு நடைமுறைக்கு வந்து விட்டது. அதையே சுவாரசியமான நாவலாக்கிவிடலாம். தடையேதும் இல்லை.

சாகித்ய அகாடமி விருதுபெற்றுள்ள நிலையில் இளம் படைப்பாளிகளுக்கு எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?

அதிகம் வாசிக்க வேண்டும். படைப்பாளிகளாக இருந்து கொண் டும் இப்போதும் நாங்கள் வாசித்துக் கொண்டே இருக்கி றோம். படைப்பாளிகள் சிறந்த வாசகர்களாக இருக்க வேண்டும்.

http://tamil.thehindu.com/tamilnadu/நெல்லை-மண்ணின்-பண்பாடே-என்-கதைகளுக்கு-உயிரோட்டம்-சாகித்ய-அகாடமி-விருதுபெறும்-எழுத்தாளர்-வண்ணதாசன்-கருத்து/article9439270.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நவீனன்....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

வண்ணதாசனுக்கு வாழ்த்துக்கள்!

ஆர். அபிலாஷ்

 

 

தமிழ் கவிதைக்கான மொழி. இங்கு மிகச்சிறந்த புனைகதையாளர்கள் குறைவு. ஆனால் மிகச்சிறந்த கவிஞர்கள் ஏராளம். ஒரு கவிதை மூலம் தமிழனின் மனதை தொட்டு விடுவது போல் உரைநடையினால் முடியாது. கவிதை நம் உயிர்நாடி. அதனாலே ஒரு நவீன கவிஞருக்கு சாகித்ய அகாதமி எனும் போது தித்திக்கிறது. மேலும் வண்ணதாசனுக்கு எனும் போது கூடுதல் இனிக்கிறது.

 நம் பால்யத்தின் தவிர்க்க முடியாத ஒரு பகுதி வண்ணதாசன். வாழ்க்கையை நுண்வியப்புகளால் ஆனதாய் நாம் உணரும் பருவத்தில் வண்ணதாசன் நம் தலை கோதும் நீளமான விரல்களாய் இருந்தார். ஒவ்வொன்றையும் இன்னும் இன்னும் நுணுகி லயித்து அணுக கற்றுத் தந்தார்.

 வண்ணதாசன் ஒரு வித்தியாசமான கலவை – ரொமாண்டிக்கான, நெகிழ்வான, ஒவ்வொரு சொல்லையும் நுண்பெருக்கியாய் மாற்றும் எழுத்து. கூடவே வாழ்க்கையின் நெருடலான, அதிர்ச்சியான, கசப்பான எதார்த்த உலகையும் அவர் சித்தரித்தார். ஒரு விகாரத்தை கூட ரொமாண்டிக்காய் அழகாய் பார்ப்பவர் அவர். அவரது கதையொன்றில் வீட்டுக்கு வரும் உறவினர் ஒருவருக்கு ஆறாவதாய் ஒரு விரல் இருக்கும். கதைசொல்லியின் நினைவுகளில் முழுக்க அந்த ஆறாவது விரல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். ஒரு அழகான பெண்ணின் மூக்கின் மேலுள்ள மருவையும் ஒரு மனிதனின் கையில் துருத்தித் தெரியும் ஆறாவது விரலையும் வண்ணதாசன் ஒன்றாகப் பார்ப்பார். வானம்பாடிகளில் இருந்து வண்ணதாசனை மாறுபடுத்திக் காட்டுவது இந்த ஆறாவது விரல் தான். நெருடலான, ஜீரணிக்க முடியாத, வெறுமையான உலகை அவர் ஒரு சிலாகிப்பான, மிகையுணர்ச்சி நிரம்பிய வாழ்க்கைபார்வையுடன் அணுகினார். இந்த ரொமாண்டிக் வண்ணமூட்டல் இல்லாவிட்டால் வண்ணதாசன் கலாப்ரியா, சுகுமாரன் போல் ஆகி விடுவார்.

 வண்ணதாசனின் சிலாகிப்பு என்பது வெறும் ஒரு அணுகுமுறை மட்டுமல்ல. அது நெல்லை மாவட்ட மண்ணின் குணம் என தோன்றுகிறது. நெல்லையின் கணிசமான எழுத்தாளர்களிடம் இந்த தாவணி காற்றில் பறக்கும் மொழிநடை உள்ளது. பாகாய் உருகுவார்கள். ஆனால் இனிப்பு உள்நாக்கில் பட்டதும் ஒரு கசப்பு உறைய ஆரம்பிக்கும். ஒரு சிறந்த உதாரணம் போகன் சங்கர். போகனின் கதைகள் ஜெயமோகன் மற்றும் வண்ணதாசனின் ஒரு அபூர்வமான கலவை. நெகிழ்விலும் கண்ணீர் மல்கலிலும் வண்ணதாசனையும், உடல் விகாரங்கள், சீரழியும் இச்சைகளை பேசுவதில் ஜெயமோகனையும் அவர் எடுத்துக் கொள்கிறார். போகன் என ஒரு உதாரணத்திற்கு தான் சொன்னேன். நெல்லை மண்ணில் இருந்து தோன்றும் எந்த புதுப் படைப்பாளியிடமும் வண்ணதாசனின் குரலை கேட்க முடியும். புதுமைப்பித்தன், அழகிரிசாமி, கி.ரா, விக்கிரமாதித்யன் ஆகியோரின் பாணியை பின்பற்றும் எழுத்தாளர்களை கூட அதிகம் காண முடியாது. ஆனால் வண்ணதாசனுக்கு எனும் நதிக்கு கிளைகள் ஆயிரம். நெல்லை பண்பாட்டின் ஒரு முக்கியமான கூறை வண்ணதாசன் பிரதிபலிக்கிறார். வண்ணதாசனை வாசிக்காத இளம் எழுத்தாளர்களின் மொழியில் கூட அவரது மொழியை, ஆளுமையை, அந்த தனி வாசனையை நாம் அடையாளம் காண முடிகிறது. அது தான் காலம் அவருக்கு அளித்த மகத்தான பரிசு. இது இரண்டாம் பரிசு! அவருக்கு மீண்டும் என் வாழ்த்துக்களும் அன்பும்!

வண்ணதாசனைத் தொடர்ந்து விக்கிரமாதித்யன், கலாப்ரியா, சுகுமாரன், தேவதச்சன், தேவதேவன், யுவன், மனுஷ்ய புத்திரன் போன்று மேலும் முக்கிய கவிஞர்களை சாகித்ய அகாதமி கௌரவிக்க வேண்டும். உரையநடை எழுத்தாளர்களை தேவைக்கு அதிகமாய் கொண்டாடி விட்டோம். இனி வரும் சில பத்தாண்டுகள் கிரீடத்தை தமிழ்க்கவிஞர்களின் தலையில் வைத்து அழகு பார்ப்போம்! உண்மையில் அது அவர்களுக்கு உரியதே!

 

http://thiruttusavi.blogspot.co.uk/2016/12/blog-post_21.html?m=1

  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.