Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பராக் ஒபாமா: காலம் கலைத்த கனவு

Featured Replies


பராக் ஒபாமா: காலம் கலைத்த கனவு
 
 

article_1484827489-obama.jpg- தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ  

காலங்கடந்து நிகாலங்கடந்து நிலைத்தல் எளிதல்ல. காலம் தன்னளவில் நிலைக்க வேண்டியவையையும் மறக்க வேண்டியவையையும் தீர்மானிக்கிறது. ஒரு நபரின் காலங்கடந்த இருப்பு அவர் எதைச் செய்தார் என்பதை மட்டும் கருத்திற் கொண்டு முடிவாவதில்லை. மாறாக, எதைச் செய்யாமல் விட்டார் என்பதையும் கருத்திலெடுக்கிறது.

காலங்கடந்து நிலைத்தலை விட, மக்கள் மனதில் நிலைத்தல் கடினமானது. காலம் மன்னிக்கத் தயாராகவுள்ள விடயங்கள் பலவற்றை, மக்கள் மன்னிக்கத் தயாராகவில்லை. மக்கள் மனங்களில் நிலைக்கின்றவர்கள் நல்ல மனிதர்கள், அவர்கள் வரலாற்றின் பக்கங்களால் மறைக்கப்பட்ட போதும், மக்கள் மனங்களில் வாழ்பவர்கள்.   

தனது எட்டு ஆண்டுகள் பதவிக்காலத்தையடுத்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் செய்தி, மிகுந்த துக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. அவரது பிரியாவிடை உரை, மிகுந்த உணர்வுபூர்வமாக பேசப்பட்டது. இவை, ஒபாமா காலத்தால் எவ்வாறு கணிக்கப்படுவார் என்கிற கேள்வியை எழுப்புகின்றன.  
2008ஆம் ஆண்டு, “நம்பிக்கையான மாற்றம்” எனப்பட்ட கோஷத்துடன் பராக் ஒபாமா ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அமெரிக்க வரலாற்றின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி என்ற பெருமையும் அமெரிக்க மக்களின் ஏகோபித்த ஆதரவும் மிகுந்த எதிர்பார்ப்புக்களை உருவாக்கியிருந்த நிலையில் 2009ஆம் ஆண்டு, ஒபாமா பதவியேற்றார். இன்று எட்டு ஆண்டுகள் கழித்துத் தெரிவான அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்புக்கு இடம் விட்டு, வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும்போது, ஒபாமாவின் சாதனை என்ன என்ற வினாவை எழுப்புவது தவிர்க்கவியலாதது.   

பதவியேற்ற 12 நாட்களுக்குள் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு, அவ்வாண்டுக்கான பரிசும் வழங்கப்பட்ட நிலையில், சமாதானத்துக்கும் ஒபாமாவுக்கும் சம்மந்தமே இல்லையென்ற போதும், சமாதானப் புறா, சண்டைக்கோழியாகி கொன்று தீர்த்த கதையை இங்கு சொல்லியாக வேண்டும். அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட நாட்களாக நடைபெறும் ஒரு போரை, தனது காலத்திலும் ஒபாமா தொடர்ந்தார் என்பது பெருமைதான்.

கடந்த 16 ஆண்டுகளாக அமெரிக்கப் படைகள், ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ளன. ஆப்கானிஸ்தான், மெதுமெதுவாக அரசற்ற ஒரு நாடாக மாறியுள்ளது. ஒபாமா, தனது ஆட்சிக்காலத்தில் தலிபான்களுடன் பேசினார்; கூட்டணி வைத்தார்.

அமைதி மாநாடுகளை நடாத்தினார். ஆனால், அமைதி மட்டும் இன்று வரை ஆப்கானிஸ்தானில் திரும்பவில்லை. தனது பதவிக்காலம் முழுவதும் ஒபாமா நிகழ்த்திய போர்களில், ஆப்கான் முதலாவது. ஈராக் மீதான யுத்தம், இரண்டாவது. தனது முன்னவர் தொடங்கியதை ஒபாமா தனது பின்னவருக்கும் அளித்துச் செல்கிறார். ஏன் தொடங்கப்பட்டது என்ற நினைவே அழிந்துபோகின்ற அளவுக்கு, சிக்கலான பல்பரிமாண நெருக்கடி, ஈராக்கில் இன்று அரங்கேறுகிறது.   

இதைவிட இரண்டு முக்கிய போர்களை, ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்க தொடக்கியது. அவை இரண்டும் ஒபாமாவின் சாதனைகளைக் கூறும் கட்டியங்கள். முதலாவது, லிபியா மீதான யுத்தம். “ஆட்சி மாற்றம்” என்ற போர்வையில், முஹம்மர் கடாபியை ஆட்சியை விட்டு அகற்றுவதற்கான யுத்தம், இன்று அரசற்ற ஒரு தேசத்தை லிபியர்களுக்குப் பரிசளித்துள்ளது.

வட ஆபிரிக்காவில் ஓரளவு வளர்ச்சி அடைந்த சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்திய ஒரே நாட்டையும் சிதைத்த பெருமை, ஒபாமாவின் நிர்வாகத்துக்குரியது. பத்துப் பன்னிரண்டு வயதுச் சிறுவர்கள் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு புரட்சிப் படையினராக வீதிகளில் திரிவதையும் தங்கள் நாட்டுக் கட்டங்களின் மீது சரமாரியாகச் சுடுவதுதையும், வெளிநாட்டுக் கமெராக்காரர்களுக்கு முன் ஓடிவந்து குழந்தைத்தனம் மாறாது கையசைப்பதும், லிபிய விடுதலை என்று சுட்டப்படுவதன் ஓர் அடையாளம் என்றே புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

இந்தப் பிஞ்சுக் கைகளில் ஆயுதங்களைக் கொடுத்தது யார்? சர்வதேச சட்டங்களும் போராளிச் சிறார்கள் பற்றிய ஐ.நாவின் பட்டயங்களும் எங்கே போயின? விடுதலையின் பெயரால் எவருடைய நன்மைக்காகவோ இவர்கள் பலியிடப்படுகிறார்கள்? இவர்கள் இழந்த குழந்தைப் பருவத்தை இவர்களுக்கு மீட்டுத் தரப்போவது யார்? இக்கேள்விகள், பதிலை வேண்டியபடி, காலங்கடந்தும் நிலைக்கும்.   

இரண்டாவது, சிரியாவில் ஒரு முடிவற்ற போரைத் தொடக்கி, போராளிக்குழுக்களை ஆயுதபாணியாக்கி, ஐ.எஸ்.ஐ.எஸ் என்கிற பயங்கரவாதத்துக்கும் முகவரியை வழங்கியதும், ஒபாமா நிர்வாகமே. இன்று உலகளாவிய ரீதியில் பல வகைகளில் தாக்கங்களை ஏற்படுத்திய யுத்தமாக, சிரிய யுத்தம் திகழ்கிறது. ஒருபுறம் மத்திய கிழக்கின் மொத்த அமைதியும் செத்துவிட்டது. மறுபக்கம், தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்வதற்காக ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொண்டு, மத்தியதரைக் கடலைக் கடக்கும் அகதிகள் கடலில் மடிவதும் ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோருவதும் என, மனிதாபிமான நெருக்கடியை சிரிய யுத்தம் பரிசளித்துள்ளது.

இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், இப்போது ஐரோப்பாவினுள் நுழைந்துள்ள, நுழைய முயல்கின்ற அகதிகளின் பிரச்சினை பற்றிய பார்வையும் பொதுப் புத்தி உருவாக்கமும், இதை வெறுமனே சிரியாவில் நிகழும் உள்நாட்டு யுத்தத்தால் ஐரோப்பாவுக்குள் வரும் சிரிய அகதிகளின் பிரச்சினையாகச் சுருக்குகியுள்ளது. இது வெறுமனே சிரிய அகதிகளின் பிரச்சினையல்ல. சிரியாவில் தஞ்சம் புகுந்து, அங்கு வாழ்ந்துவந்த பிற மத்திய கிழக்கு அகதிகளின் பிரச்சினையுமாகும். வட ஆபிரிக்காவின் யுத்தங்களாலும் வறுமையாலும் இடம்பெயரும் ஆபிரிக்கர்களின் பிரச்சினையுமாகும். ஈராக்கில் தொடங்கி, லிபியாவில் வளர்ந்து, சிரியாவில் வெடித்த மாபெரும் தொடர் அவலத்தின், இன்னோர் அத்தியாயமே இந்நெருக்கடியாகும்.   
தனது முன்னவர்கள் போலல்லாது, ஒபாமா, இன்னொரு வகையில் வித்தியாசமான யுத்தமொன்றைச் செய்தார்.

தாக்குதல்களை நடாத்துவதற்கு ட்ரோன்கள் (Drones) எனப்படும் ஆளில்லா பறக்கும் விமானங்களை ஒபாமா பயன்படுத்தினார். ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த மகத்தான செயல்களாக, அவை சிலாகிக்கப்படுகின்றன. இவை உலகளாவிய ரீதியில் “பயங்கரவாதத்தின் பெயரால்” இலட்சக்கணக்கான பொதுமக்களைக் கொன்றுள்ளன. குறிப்பாக பாகிஸ்தானிய பழங்குடிகள், இத்தாக்குதல்களால் தொடர்ந்தும் பலியாகினர். அதேபோல், நாடுகளின் இறைமையை மதிக்காமல் ட்ரோன்கள், பிற நாடுகளின் வான்பரப்பில் பறந்தன. ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் 4,000 பேர், ட்ரோன் தாக்குதல்களில் பலியாகியுள்ளனர். படைவீரர்களைக் காவு கொடுக்காமல், எதிரிகளைப் பலியெடுத்த தலைவன் என்ற பெருமையை ஒபாமா பெற்றார்.   


ஒபாமாவினுடைய காலத்திலேயே “அரேபிய வசந்தம்” அரங்கேறியது. மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் மக்களின் தன்னெழுச்சியால், அவர்களது உரிமைகளுக்காகவும் சுதந்திரத்துக்காகவும் நடந்த போராட்டங்கள் திசைதிருப்பலுக்கு உள்ளாகின. அமெரிக்கா, தன் நீண்டநாள் கூட்டாளிகளைக் கைவிட்டது. துனீஷியாவின் பென் அலி, எகிப்தில் முபாரக், யெமனில் சலே என, அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய ஆட்கள் பதவியிலிருந்து அகற்றப்பட்டனர்.

புதிய தலைமைகள், பழையதை புதிய உருவில் நடைமுறைப்படுத்தின. “அரேபிய வசந்தம்”, நல்ல பாடங்களை எமக்குச் சொல்லியது.   

சமூக வலைத்தளங்கள் கட்டமைப்பது போல, மக்கள் எழுச்சி ஒரு ஃபஷன் நிகழ்வல்ல. அது, தொடர்ச்சியாக பொறுப்புணர்வோடும் நம்பிக்கையோடும் முன்னெடுக்கப்படவேண்டியது. இன்று அரபு நாடுகளில் நடந்துள்ளது போல, வெறுமனே தேர்தல் ஜனநாயகத்தை உருவாக்குவது, பிரச்சினைகளின் தீர்வாகவோ போராட்டத்தின் குறிக்கோளாகவோ இருக்கமுடியாது. மேற்சொன்ன அத்தனை எழுச்சிகளிலும், உழைக்கும் தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபடாமலும் தொழிலாளர்கள் தலைமைப் பாத்திரம் ஏற்காத வண்ணமும் கவனமாகப் பார்த்துக் கொள்ளப்பட்டது.  

முன்னெப்போதும் இல்லாதளவுக்கு, இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துருவாக்கம் முனைப்படைந்துள்ளது. சவூதி அரேபியாவுக்கான ஒபாமாவின் ஆதரவு, இதற்கான தளத்தைத் தொடர்ந்து வழங்கியது. சவூதி அரேபியா, உலகெங்கும் வஹாபி, ஸலாஃபி முஸ்லிம் குழுக்களை அனுப்புகிறது. உலகெங்கும் இஸ்லாமியத் தீவிரவாதத்தை வளர்க்கிற அதேவேளை, முஸ்லிம் மக்களைப் பிளவுபடுத்துகின்ற காரியங்களையும் செய்கின்றன. இவை, அமெரிக்காவிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும், முஸ்லிம் மக்களின் இருப்பை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளன.   

ஒபாமாவுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் தொட்டுத் தொடரும் பந்தமொன்று உண்டு. அதை இக்கணம் நினைவூட்டுவது தகும்.  இலங்கையின் உள்நாட்டு யுத்தம் நிறைவுறும் தறுவாயில் அரங்கேறிய மனிதப் பேரவலத்தை, அமைதி காத்து வேடிக்கை பார்த்த பெருமை, ஒபாமாவைச் சாரும். சர்வதேச மனித உரிமைகள், மனிதாபிமான உரிமைகள் என இருக்கின்ற இல்லாத என அனைத்து உரிமைகள் பற்றிப் பேசுகிற அமெரிக்கா, இலங்கையில் அமைதி காத்தது. ஒபாமாவை நம்பியிருந்தோரின் கதை, “இலவு காத்த கிளி”யின் கதையானது. தமிழர்கள், ஒபாமாவின் ஆட்சிக்காலத்தை நினைவு கொள்ளக் காரணங்கள் நிறையவே இருக்கின்றன.   

உலக அலுவல்களை விட்டுவிடுவோம். அமெரிக்காவின் உள்ளூர் விடயங்களுக்கு வருவோம். இப்போது அமெரிக்காவின் வேலையில்லா நெருக்கடி, 10 சதவீதத்தை எட்டியுள்ளது. வேலையின்மை, வறுமை என்பவற்றின் விளைவால் 30 வயதுக்குட்பட்டவர்களில் 40 சதவீதத்தினர், இன்னமும் பெற்றோருடன் வசிக்கின்றனர்.  

அமெரிக்காவின் செல்வந்த அடுக்களில் உயர்நிலையில் உள்ள 1 சதவீதத்தினர், ஒபாமா நிர்வாகத்தின் கீழ் மொத்த தேசிய வருமானத்தில் 97%க்கு உரித்துடையவராயுள்ளனர். இது ஜோர்ஜ் புஷ்ஷினுடைய நிர்வாகத்தில் 65%உம் அதற்கு முந்தைய பில் கிளின்டனின் நிர்வாகத்தில் 48%ஆகவும் இருந்தது. இது, தன்னை யாருடைய பிரதிநிதியாக ஒபாமா கொண்டார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.   

ஒபாமாவின் பிரியாவிடை உரையில் அவர் சிந்திய கண்ணீரை, எவ்வாறு விளங்குவது. கடந்த எட்டு ஆண்டுகாலத்தில் இலட்சோப இலட்சம் மக்களின் கண்ணீருக்குக் காரணமான ஒருவரின் கண்ணீரின் பெறுமதி என்ன? கறுப்பின அமெரிக்கர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக தோன்றி, கவனிப்பாரற்றுக் கரையும் ஒரு மனிதரை, எவ்வாறு மனதில் இருத்துவது. அவரது ஆட்சிக்காலத்திலேயே கறுப்பர்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறை அதிகரித்தது. நூற்றுக்கணக்கான கறுப்பர்கள், பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். கறுப்பர்களின் அமெரிக்காவை, கறுப்புப் பக்கங்களால் நிறைத்த பெருமையை என்னவென்று சொல்வது.   

இன்னொரு வகையில் ட்ரம்ப், ஒபாமா உருவாக்கிச் செல்லும் வழித்தடத்தின் பிரதிநிதி அவ்வளவே.   
2010இல் புயலால் பாதிக்கப்பட்ட நியூ ஓர்லென்ஸ் மாநிலத்தை ஒபாமா பார்வையிடுகையில், அங்கு பொதுமக்களை சந்தித்துப் பேசியபோது டைரன் ஸ்காட் என்ற 9 வயதுச் சிறுவன், ஒபாவைப் பார்த்து “மக்கள் ஏன் உங்களை வெறுக்கிறார்கள்?” என்று கேட்டான். அவனது கேள்வியால் தடுமாற்றமடைந்த ஒபாமா, சமாளித்துக்கொண்டே “நான், ஜனாதிபதித் தேர்தலில் ஏராளமான வாக்குகளைப் பெற்றுள்ளேன். அதனால் என்னை எல்லோருமே வெறுக்கிறார்கள் எனக் கூறமுடியாது” எனப் பதில் அளித்தார். அந்தச் சிறுவனின் கேள்வி, என்றைக்கும் ஒபாமாவைத் துரத்திக் கொண்டேயிருக்கும்.   
மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவில் அவரது கனவின் நிலையென்ன. அவர் இன்று உயிரோடு இருந்திருந்தால், கறுப்பின ஜனாதிபதி உருவாக்கிவிட்ட அமெரிக்காவில், கறுப்பினத்தவர்கள் நிலைகண்டு என்ன எண்ணியிருப்பார்? இன்னமும் ஒவ்வோர் அமெரிக்கனின் உள்ளத்திலும் உன்னதமான அமெரிக்கர்களின் அலங்காரப்பீட அடுக்கில் தனக்கான அசைக்க முடியாத இடத்தில், ஆறுதலாக அமர்ந்திருக்க விரும்பியிருப்பாரா, அல்லது தனது பீடத்திலிருந்து கீழிறங்கி, வெற்றுப் புகழாரங்களை உதறித் தள்ளிவிட்டு, தன் மக்களை மீண்டும் பேரணியில் திரட்ட வீதிக்கு வந்திருப்பாரா?  

- See more at: http://www.tamilmirror.lk/190008/பர-க-ஒப-ம-க-லம-கல-த-த-கனவ-#sthash.lFhLLHAn.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.