Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மசாஜ் - ம. நவீன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மசாஜ்

imagesமசாஜ் நிலையங்களை அறிமுகம் செய்து வைத்தவன் திருநாவுக்கரசன்தான். கெடாவின் ஒரு கம்பத்திலிருந்து கோலாலம்பூருக்குப் பிழைப்புத்தேடிவந்த புதிதில் அறிமுகமானவன். வாடிக்கையாளனாகத்தான் டாக்சியில் ஏறினேன். என் நிலை புரிந்து சில மாதங்களில் என்னையும் டாக்சி ஓட்டவைத்து தொழில் நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்தான். நகர நெரிசலில் புகுந்து ஓடவேண்டிய குறுக்கு வழிகளைக் காண்பித்தான். டாக்சியை ஓட்டி அலையும்போது கோலாலம்பூர் முழுவதும் பரவலாக இருந்த மசாஜ் நிலையங்களைப் பார்ப்பதுண்டு. கடும் முதுகு வலியில் அதன் போஸ்டர்களும் அறிவிப்புகளும்  மசாஜ் செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டினாலும் கூச்சம் வந்து தடுத்துக் கொண்டிருந்தன.

நான்கு மாதங்களுக்கு முன் திரு என்னை முதன் முதலாக அழைத்துச்சென்றது புக்கிட் பிந்தாங்கில் உள்ள தாய்லாந்து மசாஜுக்குதான். பிரமாண்டமான குடும்ப மசாஜ் நிலையம். முதலில் பருக சூடான சீனத் தேனீர் கொடுத்தார்கள். பெரும்பாலும் கணவன் மனைவி சகிதமாக வந்திருந்தனர். அங்கு ஆண்களுக்கு ஆண்கள் பெண்களுக்குப் பெண்கள் மசாஜ் செய்யப்படும் என அறிவிப்பு பெரிதாக எழுதப்பட்டிருந்தது. “இந்த மாதிரி சைவ மசாஜிக்கெல்லாம் நான் வரவே மாட்டேன். ஏதோ போயி பழக்கமில்லன்னு கெஞ்சினதால கூட இருக்கேன்…” என்றவன் என்னை மட்டும்தான் உள்ளே அனுப்பி வைத்தான்.

பெண்கள் மசாஜ் செய்யும் நிலையங்களின் நிரந்தர வாடிகையானாக இருந்தான் திரு.  அவன் பெண் மோகியெல்லாம் இல்லை. எனக்குத் தெரிந்து விபச்சார விடுதிப் பக்கமெல்லாம் அவன் தலைவைத்ததுகூட இல்லை. ஆனால் மசாஜ் நிலையம் செல்ல அவனிடம் ஒரு நியாயம் இருக்கவே செய்தது.

“மூத்தரம் பேயிற எடத்துக்கு ஆசைப்பட்டெல்லாம் காச கரியாக்கக்கூடாது ப்ரோ. நம்ம ஒடம்புல ஒரு எடத்துக்கு மட்டும் சொகம் வேணுமுன்னா கை மட்டும் போதும்ல. என்னா சொல்லுற?”  என்பான்.

முதல் அனுபவத்துக்குப் பின் நாங்கள் இருவரும் சேர்ந்தே மாசாஜ் நிலையங்களுக்குச் செல்வது வழக்கமானது. ஆனாலும் அவனுக்கு மசாஜ் பெண்களிடம் கிடைக்கும் சலுகையே வேறு.

மசாஜ் செய்யும் பெண்களிடம் லாவகமாகப் பேசி நெருக்கமாகிவிடுவான். அவர்களின் கைப்பேசி எண்களைப் பெற்றுக்கொண்டு நட்பு வளர்ப்பான். அவர்கள் பணத்தில் இரவுணவு உண்ணும் வரை அந்த நட்பு வளரும். பின்னர் அவ்வுறவை அவ்வளவு நாசுக்காகத் துண்டித்துவிடுவான். பல சமயங்கள் நாங்கள் இருவரும் பக்கப் பக்கம் அறைகளை எடுத்து மசாஜுக்குள் நுழையும்போது அவன் பேசுவது காதில் விழும். அவன் பேச்சுக்கு மசாஜ் பெண்ணும் சிரித்தபடி பதில் சொல்வாள்.

எனக்கு வந்து மாட்டும் மசாஜ் பெண்கள் ஏமாற்றுபவர்களாக இருந்தனர். எனக்கென்று அப்படியான பெண்கள் கிடைக்கிறார்களா? அல்லது என்னைப் பார்த்தவுடன் அப்படி ஆகிவிடுகிறார்களா? திருவிடம் கேட்டேன்.

“நடிக்கத் தெரியனும்டா. அவளுங்க நம்மகிட்ட கூடுதலா டிப்ஸ் கெடைக்குமான்னு பொய்யா கொஞ்சுவாளுங்க. நாம அதுக்கு முன்ன அவளுங்க மேல இரக்கம் காட்டுறதா நடிக்கனும். கை வலிக்கும் ரொம்ப மெனக்கெட வேணாமுன்னு பதறனும். குரல் நடுங்கனும். கொஞ்சம் பக்கத்துல படுத்து ஓய்வெடுக்கச் சொல்லனும்.  அதுபோதும்.  டிப்ஸே இல்லாம வேலை நடக்கும். நீ ஹீரோவா தெரிவ. ஆனா தப்பித்தவறிகூட நீ உன் கண்ண அவளுங்க கிட்ட காட்டிடக்கூடாது. நடிப்புன்னு கண்டுப்புடிச்சிடுவாளுங்க. பொண்ணுங்க ஷார்ப்புடா. எந்த ஊரு பொண்ணா இருந்தாலும் ஷார்ப்பு ஷார்ப்புதான். குப்புறப்படுத்திருக்கும்போது பேசனும். குரல்ல நடிப்பக் காட்டு. உன் கண்கள நம்பாத” அவன் என்னை நடிக்கச்சொல்லும்போதெல்லாம் எனக்கு அப்பாவின் நினைவுதான் வந்தது.

அப்பா டெங்கிலில் மிகப்பிரபலமான கூத்துக்கலைஞர். கொஞ்சம் கொஞ்சமாகக் கூத்துக்கலை மறுவிய பின்னும் அங்கு நடத்தப்படும் காமடி திருவிழாவில் அவர்தான் முன்பு ரதி. காமடி திருவிழா என்பது காமன் ரதி திருவிழாவின் பேச்சுமொழி பரிணாமம் என தாமதமாகத்தான் எனக்குப் புரிந்தது.

dsc04996திடலின் நாலாபுறமும் காட்டுக்கம்புகளால் வேலிகட்டி, நடுவில் ஒன்பது விதமான செடிகள் நட்டு, எட்டு அடிக்கும் உயரமாக தூணெழுப்பி கோவிலுக்கு முன் இருக்கும் கூடத்தில் காமனோட அப்பா ரதியாக ஆடிவருவார் . இரண்டு பேர் கையிலும் வில் இருக்கும். தோட்டத்தில் காமடி திருவிழா பாட்டு தெரிந்த கிழவிதான் பாட்டைப்பாடுவார். ரதி மன்மதன் இடுப்பில துணியைச் சுற்றிவிட்டு பின்னால் இரண்டுபேர் ஆட்டத்துக்கேற்ற மாதிரி முன்னும் பின்னும் இழுக்க பறையும் உறுமியில்  அதிரும். ரதியை திருமணம் செய்ததால் பதினைந்தாம் நாள் மன்மதன் எரிந்து சாம்பலாகவேண்டுமென சாபம். நேரம் செல்ல செல்ல ரதி மன்மதனின் ஆட்டம் ஆக்ரோஷமாக மாறும். கிழவிப் பாட்டு கொஞ்ச கொஞ்சமாக ராகம் மாறி ஒப்பாரியாகும்.  எனக்கு பயமாக இருக்கும். ரதியாக ஆடுவது என் அப்பா இல்லையென்று தோன்றும். அப்படியே நடந்து என் அருகில் வந்தால் என்ன செய்வதென தெரியாமல் தொலைவாக நின்றுக்கொள்வேன். ஆனால் அப்பா வந்ததில்லை. யாரின் அருகிலும் வரமாட்டார். மன்மதனுடன் போட்டி போட்டுக் கொண்டு அப்பா ஆடி பாடி கதறி அழும்போது குரலில் இருக்கும் சோகத்தைக் கண்களில் பார்க்க முடியாத தொலைவில் இருப்பார். கண்களை யாரும் பார்த்துவிட முடியாத வேகம் அசைவுகளில் பரவியிருக்கும்.

கூத்து முடிந்ததும் வீட்டில் அப்பா சாதாரணமாக இருப்பார். என்னையும் அக்காவையும் தூக்கி மடியில் வைத்துக்கொள்வார். கொஞ்சும் அவரது கண்களைப் பார்த்துக்கொண்டே இருப்பேன்.

வயதான ரதியைப் பார்க்க விரும்பாத கோயில் தலைவர், அப்பாவை வேஷம் கட்ட அனுமதிக்காமல் புதிய ரதியைத் தேடிக்கண்டடைந்தார். அப்பா உண்மையாக அழுது அன்றுதான் பார்த்தேன். நாடகத்தில் காமன் சாகும்போது ரதியாகி கதறி அழுவார். ஆங்காரமாகக் குதிப்பார். அரங்கத்தைச் சுற்றி சுற்றி வருவார். நிஜத்தில் அப்பா அப்படி அழவில்லை. கண்களின் மௌனமாக நீர்ச்சொட்டிக்கொண்டே இருந்தது. அவரிடம் ஒரு அசைவும் இல்லை. ஆனால் அந்த அழுகை என்னை உலுக்கியது. அதன்பின்னர் கூத்தில் பாடும் பாட்டை எப்பவும் பாடிக்கொண்டே இருந்தார். அதுவும் கடைசி நாள்களின் ஒப்பாரியைச் சத்தமிட்டு பாடுவாரு. தொலைவில் நின்று கேட்கும்போது ஓநாயின் ஊளை போல இருக்கும். சாவதற்கு முதல்நாள்கூட அந்தப்பாட்டைதான் அரற்றினார். கன்னங்களில் வழிந்த நீரைத் துடைக்கவே இல்லை. கண்களை மறைக்கவும் இல்லை.

அப்பாவைப்போலவோ திருவைப்போலவோ எனக்கு நடிப்பு வரவில்லை. திரு எனக்குப் புதியப் புதிய மசாஜ் வகைகளை அறிமுகம் செய்து வைத்தாலும் பாவனையாக அதிக நேரம் மெனக்கெடமுடியாமல் தவிப்பேன். அப்படி அவன் அறிமுகம் செய்த இந்தோனேசிய மசாஜ் நிலையத்தில் ஒரு துண்டை  உடம்பில் போர்த்திவிட்டாலும் கைகளை உள்ளே விட்டே மசாஜ் செய்தாள். ஆனால் அந்தச் சிறிய துண்டு கொஞ்சம் கூட உடம்பிலிருந்து நழுவாமல் மிகநூதனமாக வேலை நடந்தது. வலி ஒன்றும் இல்லை. இஞ்சியில் தயாரித்த எண்ணெயில் உருவியதில் உடம்பு கொஞ்சம் கொஞ்சமாகப் புத்துணர்ச்சி பெறத் துவங்கியது. முதலில் சிரித்துப் பேசிய பெண்ணிடம் நானும் முகம் கொடுத்தேன். நடிப்பைக் குரலில் கொண்டுவர முயற்சித்தேன். பின்னர் அவள் ஒரு கையால் மசாஜ் செய்துகொண்டே வாட்சப் செய்யவும் வாடிக்கையாளர்களுக்குப் புக்கிங் போடவும் இன்னொரு கையை உபயோகித்தது கடுப்பேற்றியது. யாரிடமும் தொணதொணவென பேச வேண்டாம் என கொஞ்சம் கடுமையாகச் சொன்னதும் மௌனமானாள். அவளது புறக்கணிப்பு கைகளில் தெரிந்தது.  வெளியே வந்ததும்,  திருவுக்கு மசாஜ் செய்த இந்தோனேசியப் பெண் அவனுக்கு கையசைத்து வழியனுப்பினாள். எனக்கு செய்தவள் முகம் சிவந்திருந்தது. திரு, “அவள என்னாடா செஞ்ச?” என என்னைக் குற்றவாளிபோல குடைந்தான்.

பாலி மசாஜ் இன்னொரு ரகமாக இருந்தது. மசாஜ் பெண் என் முதுகின் மேல் ஏறி, முழங்காலிட்டு நின்றாள். திரும்பிப் படுத்திருந்ததால் முதலில் அவை கைகள் என நினைத்தேன். அவ்வளவு சிறிய பரப்பளவைக் கொண்ட முழங்காலை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. ஒரு நடனம் போன்றது பாலி மசாஜ். காதருகே வந்த அவள் “டிப்ஸ் கொடுக்க முடியுமா” எனக்கேட்டவுடன்தான் வம்பே ஆரம்பித்தது. தன் முதலாளியைத் திட்டத் தொடங்கினாள். வெள்ளைக்கார வாடிக்கையாளர்களை இன்னொருத்திக்கு அனுப்பி டிப்ஸ் கொடுக்காத பன்றிகளை தன் தலையில் கட்டிவிடுவதாக முணுமுணுத்தாள். எழுந்து உடை மாற்றும்போதுகூட அவள் முகத்தைப் பார்க்கவில்லை. இருக்கும் கோபத்தில் அடித்து விடுவாளோ? பயத்தைக் காட்டாமல்தான் வெளியேறினேன்.

கடந்த மாதம் புதியதாக கேரளா மசாஜ் நிலையத்தை அறிமுகப்படுத்தினான். முதலில் குளிர்ச்சி என் உடலுக்கு ஏற்றதா என சோதிக்கப்பட்டது. நாடி பிடித்துப்பார்த்து ‘ஏற்றுக்கொள்ளும் உடம்புதான்’ என வெண்ணிற ஜிப்பா அணிந்துகொண்டு சந்தனம் பூசியிருந்த டாக்டர் ஒருவர் அனுமதி கொடுத்ததும் உள்ளே அழைத்துச் சென்றனர்.  அங்கே வித்தியாசமாகக் கோவணம் கொடுக்கப்பட்டது. துணிகளை பத்திரமாக வைக்கக் கொடுக்கப்பட்ட அலமாரியின் கதவைத் திறந்து, அதன் மறைவில் கோவணத்தைக் கட்டிக்கொண்டு மசாஜ் கட்டிலில் குப்புறப்படுத்தேன். மரக் கட்டில் அது. “முன்புறமிருந்து ஆரம்பிக்க வேண்டும்” என சைகை செய்தாள் மலையாளப்பெண். கொஞ்சம் தடுமாறியே போனேன். கேரளா மசாஜ் வயிற்றிலிருந்து ஆரம்பிக்கும் என அப்போதுதான் தெரிந்தது. ஒருவாறாகக் கோமணத்தைச் சரிசெய்து உடம்பை தயார் செய்துகொடுத்தேன். கோமணம் அகலாமல் நான் திரும்பிய விதம் மசாஜ் பெண்ணுக்குச் சிரிப்பாக இருந்திருக்க வேண்டும். முகத்தை ஏறிடும் போதெல்லாம் சிரித்து வைத்தாள். அதிகம் ஏப்பம் விட்டாள். முறையாக மசாஜ் செய்தால் என் உடம்பில் உள்ள காற்று அவள் உடம்பின் உள்ளே புகுந்து ஏப்பம் வரும் என்றாள். எண்ணெய்யில் குளிப்பாட்டினாள். சோற்று ஒத்தடம் கொடுத்தாள். நான் குரலில் நடிக்கத்தொடங்கினேன். அன்பைக்கொட்டித்தீர்த்தேன். வெளியேறும்போது பில் குறிப்பிட்டதைவிட அதிகம் காட்டியது. நான் தமிழில் பேசியது புரியாமல் அவளாக முடிவெடுத்து ஸ்பெஷல் மூலிகை எண்ணெய்யைப் பயன்படுத்திவிட்டாளாம். முதலாளி ஒன்றும் செய்ய முடியாது எனக் கையை விரித்தார்.

தொடர்ந்து புது புது மசாஜ் வகையராக்களைத் திரு அறிமுகம் செய்து வைத்தான். அதில் ஒன்று பாத்தின் மசாஜ். நிர்வகிப்பவன் சீனன். வரவேற்பறையில் கால்பிடிnavin-1மசாஜுக்காக சாய்வு நாற்காளிகள் போடப்பட்டிருந்தன. அனைத்தும் காலியாகவே இருந்தன. “இங்கெல்லாம் யாரும் கால் அமுக்க வர்றது இல்லை” எனக் கிசுகிசுத்தான் திரு. சீனன் கைத்தொலைபேசியைக் காட்டி எந்தப் பெண் வேண்டும் என்றான். வியாட்னாம் பெண்கள் விக்கிரகம் போல இருந்தனர். அனைவருக்குமே சிறிய இடை. பளீர் நிறம். யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் இருக்கும்போதே திரு ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து பணமும் கட்டினான். சீனன் எந்த பேக்கேஜ் என்றவுடன் “பாத்தின்” என்றான். உனக்கு என்றவுடன் விழித்தேன். சுதாரித்துக்கொண்டு அப்போதுதான் விலைப்பட்டியலைப் பார்த்தேன். கால் பிடிக்கு ஒரு விலை. முழு உடலுக்கு ஒரு விலை. முழு உடலுடன் காலுக்கும் மசாஜ் செய்தால் ஒரு விலை. முழு உடலுடன் ‘பாத்தின்’ மசாஜ் ஒரு விலை. உள்ளதிலேயே அதுதான் விலை அதிகம். “என்னடா சாப்பாடா ஆர்டர் செய்யப்போற” என திரு கேட்டான்.  சீனன் பொறுமை இல்லாமல் அவனுடைய பேக்கேஜையே எடுத்துக்கொள் என்றான். “உன் பேக்கேஜில் என்ன இருக்கிறது?” என நாவுக்கரசனைக் கேட்டபோது “எல்லாம் நல்ல பேக்கேஜ்தான்” என்றான். சிவப்பு சட்டையில் குவிந்த உதடுகளைக் காட்டிக்கொண்டிருந்த ஒருத்தியைத் தேர்ந்தெடுத்து கொடுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தேன். உடம்புப்பிடியில் ஏமாற்றப்பட்டிருந்தாலும் அவளால்தான் மசாஜ் மீது ஒருவித சபலம் ஏற்பட்டிருந்தது.

ஒரு பெண் என் உடலில் அவ்வளவு உரிமை எடுத்துக்கொண்டது அதுவே முதன்முறை. “இந்த இடத்துல இவ்வளவு காற்று இருந்தால் எப்படி நெடு நேரம் உறவு வச்சிக்க முடியும்?” என அவளுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கேட்டபோது கூச்சம் கௌவியிருந்தது. இடுப்பில் இருந்து அகன்று வயிற்றில் ஏறி இருந்த சிறுதுண்டை முகத்தில் போர்த்திக்கொண்டேன். எல்லாம் முடிந்தபிறகு எவ்வித சலனமும் காட்டாமல் அவள் ஏதோ மங்கை கழுவி வைப்பதுபோல உடம்பைத் துடைத்துவிட்டு கைகளை கழுவி வருவதாகச் சென்றவள் 15 நிமிடங்கள் கழித்தே உள்ளே நுழைந்தாள். அதன்பின் ஏனோதானோவென உடம்பைப் பிடித்தவள் ‘ஹபீஸ்’ என எழுந்தாள். என் கண்களை அவள் பார்க்க மறுத்தாள். கூட்டிக்கழித்துப் பார்த்தால் அவள் முப்பது நிமிடங்களுக்கும் குறைவாக உடம்பைப் பிடித்துவிட்டு என்னை ஏமாற்றியிருப்பதாகவே பட்டது. பாத்தின் மசாஜ் முதன்முறை என்பதால் எதிர்த்துக் கேட்க தைரியம் வரவில்லை. மனம் ஒருவித கிரக்கத்தில் இருந்தது. இங்கெல்லாம் இப்படித்தான் போல என எழுந்து வந்துவிட்டேன். கண்கள் காட்டாமல் அவளிடம் எனக்கு பேசத்தெரியவில்லையோ என்று தோன்றியது

ஒவ்வொரு மசாஜ் முறையும் ஒவ்வொரு வகை என எனக்குப் போகப் போகத்தான் புரிந்தது. சில மசாஜ், எலும்புகள் வரை அழுத்திப்பிடித்தன, சில வகை மசாஜ் எண்ணெய் மூலமாக உடலைக் குளிர்ச்சி செய்தன, பெரும்பாலானவை உடலில் ஏறியுள்ள காற்றை அகற்றின, நரம்புகளைச் சரிபடுத்தவும் , மன அழுத்தத்தைக் குறைக்கவும் கூட மசாஜ் வகைகள் இருந்தன.  எல்லாவற்றிலும் நூதனமான ஏமாற்று வேலைகள் நடந்தன. அதெல்லாம் என்னைப் போன்றவர்களிடம்தான்.

***

“பாத்தினெல்லாம் வேணாம்டா. ஒருமாதிரி கூச்சமா இருக்கு… உடம்ப ஒழுங்கா பிடிச்சிவிடாம ஏமாத்துவாளுங்க” காரிலிருந்து இறங்கி நடந்தபோது நான் அவனிடம் உறுதியாகச் சொல்லவில்லை.

“இது பாத்தின் இல்லடா… அதுக்கும் மேல” என படியில் ஏறத்தொடங்கினான். கடந்தமுறை நடந்ததெல்லாம் மீண்டும் நினைவுக்கு வந்து மனதை கிளர்ச்சி அடையச் செய்தது.

நான்காவது மாடியில் அமைந்திருந்தது நிலையம். வாசல் இருளாகக் கிடந்தது. அழைப்பு மணியை அழுத்தியதும் ஒரு குண்டுப் பெண் கதவைத் திறந்தாள். அவள் தமிழ்ப் பெண். இதுவரை நான் எந்த மசாஜ் நிலையத்திலும் தமிழ்ப்பெண்களைப் பார்த்ததில்லை. வாசலில் ஒரு காமிரா இருந்தது. யாரால் கண்காணிக்கப்படுகிறோம் என யோசிப்பதற்குள் உள்ளே இழுத்துச் சென்றான்.

இதற்குமுன் நான் சென்ற நிலையம் போல அல்லாமல் இங்கு ஓர் இந்தியத் தன்மை கவிந்திருந்தது. எல்லா நிலையங்களிலும் அடிக்கும் எண்ணை வீச்சம் இல்லை. வாடிக்கையாளர்கள் காத்திருக்கவென தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. மெல்லிய ஒலியில் இந்திப்படம் காத்திருப்பு அறை தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. திரு பக்கத்தில் நான் அமர்ந்தேன். ஒரு தமிழ் இளைஞன் தரையில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் வாடிக்கையாளனாக இருக்க வாய்ப்பில்லை. தமிழர்களால் தமிழர்களுக்கு நடத்தப்படும் நிலையம் என சுற்றியிருந்த சூழல் உணர்த்திய கொஞ்ச நேரத்திய அச்சம் கௌவியது.

“தெரிஞ்சவங்க யாரும் வந்துட போறாங்கடா…”

“வரட்டுமே டா… மசாஜ் செய்யுறது ஒன்னும் கொலக் குத்தம் இல்ல. “

“இல்லடா… ஒருமாதிரியான மசாஜுன்னு சொன்னியே…”

“நீ என்னா பேக்கேஜ் எடுக்குறன்னு யாருக்கும் தெரியப்போறதில்ல. பயந்து சாவாத.தமிழ் பொண்ணுங்கடா. ஜாலியா பேசிக்கிட்டே செய்வாளுங்க. “

“அதுக்கில்லடா…” திரு முறைத்தவுடன் அடங்கிவிட்டேன். குண்டுப் பெண்மணி குடிக்க பிளாஸ்டிக் சாடியில் நீரும் இரு வெண்கலக் குவளைகளையும் கொண்டுவந்து வைத்தாள். வெளிச்சத்தில் இன்னும் பிரமாண்டமாகத் தெரிந்தாள். அவள் சைஸுக்குக் குட்டைப்பாவடையும் ஸ்லிப் லெஸ்ஸும் வெடிப்பதுபோல பிதுங்கி கிடந்தன. சாடியில் இருந்த நீரை ஊற்றும்போது மார்பு வெளியே வந்து விழுந்தால் என்ன செய்வது என பதறிப் போனேன்.

“சொல்லுங்க அரஸ்” என்றாள்.

நான் யாரிடம் கேட்கிறாள் என தேடியபோது திரு பதில் கூறினான்.

“பி டூ பி ரெண்டு பேருக்கு”

“யாரு வேணும். ஷாஷா வா?”

“இல்ல புதுசா…”

“மீரான்னு ஒரு பொண்ணு வந்திருக்கா. கொஞ்சம் வெய்ட் பண்ணனும். கஸ்டமரோட இருக்கா. அடுத்து நீங்க போகலாம். நல்ல பொண்ணு.”

திரு இளித்தான். “இவனுக்கு ஷாஷாவ புக் பண்ணுங்க…”

நான் விரும்பாத ஒன்று என் மேல் திணிக்கப்பட்டு, ஏதோ எனக்கு நடக்கக்கூடாதது நடப்பதுபோல முகத்தை வைத்துக்கொண்டேன்.

“மலையாளப் பெண். நல்லா மசாஜ் செய்வாங்க. இப்ப அவங்க ஃபிரிதான். வாங்க” எனக்கூறிவிட்டு குண்டுப்பெண் முன்னே நடந்தாள்.

navin-2“டேய் கேப் முக்கியம். முகத்தைக்காட்டாம நடிச்சிடு.” திரு குசுகுசுப்பு குண்டுப்பெண்ணுக்குக் கேட்டிருக்குமா என பயந்தபடி அறையின் அருகில் சென்றேன். எனக்கென்னவோ பதற்றம் குறையவில்லை. பி டூ பி என்றால் என்னவென்று கேட்க நினைத்து விழுங்கிக்கொண்டேன். இதுகூட தெரியாதா எனக்கேட்டுவிட்டால் அவமானமாகிவிடும். கட்டணத்தை அறையின் வாயிலிலே வாங்கிக்கொண்டாள் குண்டுப் பெண். நூற்று ஐம்பது வெள்ளி என்றதும் பகீர் என்றது. ஒன்றரை நாள் டாக்சி ஓட்டினால்தான் அதை சம்பாதிக்க இயலும். உள்ளே நுழைந்து எல்லாவற்றையும் கழற்றிப்போட்டுவிட்டு, ஒரு துண்டை மட்டும் எடுத்து பின்புறம் போர்த்தியபடி மல்லாந்தேன். அதுவும் பின்னர் உருவி எடுக்கப்படும் என அறிந்ததுதான்.

“ஹாய்” எனக் குரல் கேட்டது. திரும்பிப் பார்க்க ஆர்வமாக இருந்தாலும் “ம்” என சொல்லி வைத்தேன். அதிக ஆர்வம் இவ்விடத்துக்குப் புதுசு எனக்காட்டி விடலாம். இதுபோன்ற சங்கதிக்குப் புதியவன் எனக் காட்டுவது அவ்வளவு நல்லதல்ல.

“இஞ்ச அடிக்கடி வந்து உங்களுக்கு பழக்கமிருக்கே?”

அவள் மொழி என்னை என்னவோ செய்தது. திரும்பப் பேச வைக்கலாம் போல இருந்தது. திரு சொன்னதை நினைவில் நிறுத்தி நிதானமானேன்.

“வாட்” ஆங்கிலத்தில் கேட்பது அவளுக்கு கொஞ்சம் பயத்தைக் கொடுக்கலாம். படித்தவன் என்பதால் ஏமாற்ற முடியாது என மரியாதையாக நடந்துகொள்ளலாம்.

“இல்ல… இதுக்கு முன்னாடி உங்களுக்கு நான் மசாஜ் செஞ்சு விட்டிருக்கிறனா  என்று கேட்டனன்”

“நீங்க ஈழமா?” நான் என் இயல்புக்கு வந்திருந்தேன்.

அவள் மௌனமானாள்.

“வெளிய மலையாளமுன்னு சொன்னாங்களே…”

காதருகே வந்து ‘ஷ்ஷ்ஷ்…’ என்றாள்.  “உங்களுக்கு எப்படித் தெரிஞ்சது?”

“பேசுனா தெரியாதா?”

“இத்தனை நாளும் ஒருத்தருக்கும் தெரியேல்ல. நான் எல்லாரிட்டையும் கதைச்சுக்கொண்டுதானே இருக்கிறன்”

“அவ்வளவு கேணையங்களா இங்க வரவங்க…”

அவள் சிரித்தாள். “ஒங்களுக்குத் தெரியுமே? இதுவரையில ஒருத்தருக்கும் தெரியேல்ல. ஒங்களுக்குத் தெரிஞ்சிருக்கிது”  அவள் என் முதுகில் முழுமையாகச் சரிந்திருந்தாள். கனமான சரீரம்.

“அங்க போர் நடந்ததுல்ல. பாவம் மக்கள். கதைகள்ள படிச்சிருக்கேன். டிவியில பார்த்திருக்கேன். அப்படி ஒங்க ஸ்லேங் தெரியும்.”

“ஒங்களுக்குத் தெரிஞ்சிருக்கிது… நான் வன்னியில் இருந்தனான். வன்னி தெரியுமே, வன்னி…”

“தெரியும். அங்க அதிகமா குண்டு போட்டாங்கள்ள. ஒன் குடும்பத்துல போரால யாரும் செத்துப்போனாங்களா?”

“எல்லாரும் போயிட்டினம். மனுசனும் போயிட்டுது தகப்பனும் போயிட்டுது. அவையள் இருந்திருந்திருந்தா நான் இப்பிடி அலங்கோலப்பட்டுக் கிடப்பனே” அவள் மேலும் ஏதோ பேச ஆர்வம் காட்டினாள். கண்களில் அவ்வளவு கதை இருந்தன.

மணியைப் பார்த்தேன். இதிலேயே 15 நிமிடங்கள் கழிந்திருந்தன. இன்னும் எஞ்சியிருப்பது 45 நிமிடங்கள். இவளிடம் குசலம் விசாரிக்கவா நூற்றைம்பதை அழுதேன். அதற்குமேல் நான் ஒன்றும் பேசவில்லை. இதுபோன்றவர்கள் பேசியே நேரத்தை சாதுர்யமாக ஓட்டிவிடுபவர்கள். உடல் நோகாமல் மெல்லியதாக உருவிவிட்டு அன்பை மட்டும் பொழிந்து அகன்றுவிடுவார்கள். எனக்கு எரிச்சல் வந்தது. எனக்கு திரு சொன்னதெல்லாம் மறந்துபோனது.

“இலங்கைக்கு போயிருக்கீறீரோ?” அவள்தான் உரிமையுடன் கேட்டாள். என்னைவிட எப்படியும் பத்து வயது மூப்பிருக்கும்.

“ஒடம்ப புடிச்சி விடுங்க” நான் கறாரான குரலில் கூறினேன். அவள் முதுகை அழுத்தத்தொடங்கினாள்.

“நான் கிளம்பி நாலு வருசம் போயிட்டுது. டூரிஸ் விசாவில வந்தனான்.”

“கழுத்து அதிகம் வலி. நல்லா நீவி விடுங்க”

“ஒரு பெட்டை இருக்கு. அஞ்சி வயசாகுது.”

“….”

“போஸுக்கு மட்டும்தான் நான் இலங்கையென்று தெரியும். யாரிட்டயும் சொல்ல வேண்டாமெண்டு அவர் சொன்னவர். பிரச்சினையாப் போயிடுமெண்டு அவருக்குப் பயம். நீர் போலிஸ் இல்லைதானே. கூட்டி பெருக்குற வேலைதான் கேட்டனான். ஆனா மசாஜ் செஞ்சா காசு கிடைக்குமெண்டு சொல்லிச்சினம். நான் எந்த மசாஜைக் கண்டனன்”
நான் சட்டென அதிர்ச்சியாகி திரும்பி அவளைப் பார்த்தேன். அவள் கண்களில் எந்தச் சலனமும் இல்லை.

“வராவனுக்கெல்லாம் உடம்பக் காட்டி மசாஜ் செஞ்சுவிடவேணும். ஒருத்தனுக்கு முப்பது வெள்ளி கொடுப்பினம். நெஞ்சால முதுகில தேய்ச்சு விடோணும். அப்படி மசாஜ் செய்துவிட்டா உடம்பு வலி போகுமே? போடி டூ போடிதான் எல்லாரும் தேடி வருகினம்” எனக்கு அந்த நேரத்தில் திரு எங்கோ நின்று சிரிப்பது போல தோன்றியது.

“உமக்கு எங்கட நாட்டுப் பிரச்சினை தெரியும் எண்டதால சொல்லுறன். திரும்பிப்படும் ” என்றவள் சட்டென சட்டையைக் கழற்றி கச்சை அகற்றினாள்.

“பால் சுரந்த மார்பு. அதான் பெருசா கிடக்குது. எண்ட பிள்ளைக்கு பால்கூடயும் முழுசாகக் கொடுக்கமுடியேல்ல. சோறு தண்ணியில்லாம சுண்டிப்போன காம்பில ரத்தம்தான் வரும். இண்டைக்கு அது உசிரோட இருக்குதெண்டால் அது எவன் செஞ்ச புண்ணியமோ இல்ல அது செஞ்ச பாவமோ” என்றவள் மீண்டும் “சரி, படும்… எண்ணெய் போட்டு வழிச்சு விடுறன்.  ” என்றாள். நான் திரும்பி படுத்தேன். எண்ணெய்யைக் கையில் எடுத்தாள்… முதுகில் ஓரிரு சொட்டு ஈரம் பட்டது.

“மன்னிச்சுக்கொள்ளும். முதலாளிட்ட  சொல்லி விடாதேயும்” என்றவள் முதுகில் பட்ட ஈரத்தை அவசரமாகத் துடைத்து எண்ணெய்யை விட்டு தேய்க்கத் தொடங்கினாள். நான் திரும்பி அவள் கண்களைப் பார்க்க முயன்றபோது மேலே சரிந்து மார்புகளால் முதுகை நீவத்தொடங்கினாள்.

எனக்கு அப்பா ஒப்பாரியை ஊளையிடும் சத்தம் கேட்டது.

 

http://vallinam.com.my/version2/?p=3611

  • கருத்துக்கள உறவுகள்

  உடலுக்கு ஜாலியாக ஆரம்பித்து உணர்ச்சிக்கு வேலியிட்ட  மிகவும் கனதியான கதை....!  :unsure:

Edited by suvy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.