Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திர தினக் கொண்டாட்டம் யுத்தத்திற்கான புதிய அத்தியாயம்

Featured Replies

சுதந்திர தினக் கொண்டாட்டம் யுத்தத்திற்கான புதிய அத்தியாயம்

-ஜெயராஜ்-

'விடுதலைப் புலிகளுடனான 20 வருடகாலப் போரில் தாம் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளதாகக் காட்டும் செயல்" எனச் சிறிலங்காவின் 59 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் போது மகிந்த அரசாங்கம் மேற்கொண்ட 'தீவிரமான இராணுவ விளம்பரங்கள்" இருந்தன

சிறிலங்கா கடற்படையின் போர்க் கப்பல்கள், அதிவேக டோறாப் பீரங்கிப்படகுகள் அணி வகுத்துச் செல்ல, கிபிர் மற்றும் மிக்-27 ரகப் போர் விமானங்கள், எம்.ஜ - 24 வகைத் தாக்குதல் வானூர்திகள் வானில் பறந்து சாகசம் செய்ய, பல்குழல் எறிகணைச் செலுத்திகள், டாங்கிகள், கவச வாகனங்கள், ஆட்லறிப்பீரங்கிகள் என்பன அணிவகுப்பில் வர 3,500 சிறிலங்கா இராணுவத்தினரின் அணிவகுப்பும் இடம்பெற்றது.

சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்பொழுது தான் விடுதலைப் புலிகளுடனான போரில் ஓர் அத்தியாயத்தைத் திறந்துள்ளார் எனக் கூறுவது எத்துணை பொருத்தப்படானதாகக் கொள்ளமுடியும்? அவர் பதவி ஏற்ற காலத்தில் இருந்தே ஒருபுறத்;தில் ஒட்டுக்குழுக்கள் இராணுவப் புலனாய்வுத்துறையினர் மூலம் ஒரு மறைமுகப் போரை நடத்தி வந்தார். அதன் பின்னர் கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் மாவிலாற்று விவகாரத்துடன் அவர் முழு அளவிலான போருக்கான புதிய அத்தியாயத்தை ஆரம்பித்திருந்தார் என்றே கொள்ளப்படுதல் வேண்டும்.

ஆயினும் வாகரையை ஆக்கிரமித்த பின்னர் அவரின் நடவடிக்கைகள் வெளிப்படையாகப் புதிய அத்தியாயத்தை அவர் பிரகடனப்படுத்த ஆரம்பித்து விட்டார் என்றே கூறவேண்டும். அதாவது மாவிலாற்று இராணுவ நடவடிக்கைக்கு மனிதாபிமான நடவடிக்கை எனவும் சம்பூர் மீதான நடவடிக்கைக்கு திருமலைத்துறை முகத்தின் மீதான நடவடிக்கை எனவும் காரணம் கூறிய மகிந்த ராஜபக்ச, வாகரை மீதான ஆக்கிரமிப்புப் போருக்குக் கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றுதல் எனப் பகிரங்கமாகவே அறிவிப்புச் செய்திருந்தார்.

இந்த வகையில் வாகரை மீதான படையெடுப்புடன் சிறிலங்கா அரசு யுத்தத்திற்கான புதிய அத்தியாயம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது எனக் கூறுவது தவறாகமாட்டாது. மேலும் வாகரையை ஆக்கிரமித்துக்கொண்டதன் மூலம் மகிந்த ராஜபக்சவிற்கு யுத்தத்தின் மீதான நம்பிக்கை வலுப்பட்டுள்ளது எனக் கூறுவதும் மிகையாகமாட்டாது.

சம்பூரைச் சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்தபோது, அதனைச் சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் படைத்தளபதிகளுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். ஆனால் அதில் ஓரளவு இரகசியம் காக்கப்பட்டது என்றே கூறமுடியும்.

ஆனால் வாகரையை ஆக்கிரமித்த பின்னர் மகிந்த ராஜபக்சவின் நடவடிக்கையானது 1995 இல் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்த போது அன்றைய சனாதிபதி சந்திரிகாவின் செயற்பாடு எவ்வாறானதாக இருந்ததோ அதை ஒத்ததானதாக இருந்தது.

யாழ். குடா நாட்டைக் கைப்பற்றியதும் கொழும்பில் சனாதிபதி சந்திரிகா ஒரு அண்டை நாட்டை ஆக்கிரமித்தது போன்று நடந்துகொண்டார். அவரின் ~தளபதியான| பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்த வெற்றிச்செய்தி அடங்கிய பேழையை அவரது கையில் வழங்க அதைப் பெற்றுக்கொண்ட சனாதிபதி சந்திரிகா படைத்தளபதிகளுக்கும் இராணுவத்தினருக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டார்.

இதேசமயம் விடுதலைப் புலிகள் இயக்கம் 60 சதவீதம் பலவீனமடைந்துவிட்டது விரைவில் புலிகள் தோற்கடிக்கப்படுவார்கள் எனவும் முழங்கினார். அத்தோடு விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு பேச்சுக்குவரின் பேச்சுவார்த்தை நடாத்த அரசாங்கம் தயாராகவுள்ளது என்றார்.

இத்தகையதொரு நிலையிலேயே தற்பொழுது வாகரையை ஆக்கிரமித்த பின்னர் மகிந்த ராஜபக்சவின் நடவடிக்கைகளும் உள்ளன. வாகரைக்குத் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச படை அதிகாரிகளுக்கும் இராணுவப்படைகளுக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வரவேண்டும் எனத் தெரிவித்தார். மேலும் அரசாங்கத்தின் அழைப்பை விடுதலைப் புலிகள் நிராகரித்தால் அவர்கள் அடக்கப்படுவார்கள் எனவும் எச்சரித்தார்.

இந்த வகையில் வாகரை வெற்றியை பெரும் அரசியல்மயப்படுத்தும் நோக்கிலும் மகத்தானதெனக் காட்டிக்கொள்ளும் வகையிலும் மகிந்த ராஜபக்ச நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதேசமயம் 59 ஆவது சுதந்திர தினத்தை அவ்வெற்றியின் ஒரு விழா போன்றும், சிறிலங்கா இராணுவத்தின் புஜபல பராக்கிரமத்தை விளம்பரப்படுத்திக் கொள்ளும் விழாவாகவும் அவர் ஆக்கிக்கொண்டார்.

ஆனால் யாழ். குடாநாட்டு ஆக்கிரமிப்பின் போது எது நடந்ததோ, சம்பூர், வாகரை ஆக்கிரமிப்பின் போதும் அதுவே நடந்தது. அன்று இராணுவ விமர்சகர்கள் எதைச் சுட்டிக்காட்டினார்களோ அதை ஒத்த நிகழ்வுகளே சம்பூரிலும் வாகரையிலும் இடம்பெற்றன.

அதாவது சம்பூரில் இருந்தும் வாகரையில் இருந்தும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு கட்டத்திற்கு அப்பால் அப்பிரதேசங்களில் இருந்து தமது ஆளணியுடனும் ஆயுதங்களுடனும் வெளியேறியிருந்தது. அதாவது யாழ். குடாநாட்டில் இருந்து வெளியேறியது போன்று அப்பிரதேசங்களில் இருந்தும் வெளியேறிருந்தனர்.

யாழ். குடாநாட்டை குறிப்பாக யாழ். நகரை சிறிலங்கா இராணுவமும் ஆக்கிரமித்தபோது சிறிலங்கா இராணுவம் சிறிலங்கா ஆட்சியாளரும் அதனைப் பெருவெற்றியாகக் கொண்டாடியபோது பல இராணுவ அதிகாரிகள், குறிப்பாக விடுதலைப் புலிகளுடன் போரிட்ட இந்திய மூத்த இராணுவ அதிகாரிகள் இதில் பெருமை கொள்ள எதுவுமே இல்லை எனத் தெரிவித்தனர். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை. அவர்கள் பத்திரமாக வன்னிக்கு வெளியேறிச் சென்றுள்ளார்கள். வன்னிக் காடுகளில் போரிடும் போதே புலிகளுடனான போர் எத்தனை கடுமையானதாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளமுடியும். விடுதலைப் புலிகள் காட்டிலுள்ள மரத்திற்கு மரம் போரிடுவார்கள் என்றார்கள்.

இவை அவ் அதிகாரிகளின் ஆரூடம் அல்ல, அனுபவம் ஆகும். சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கும் அத்தகைய அனுபவம் இல்லாமல் இல்லை. சிறிலங்கா இராணுவம் இதுவரையில் மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கையான ஜயசிக்குறு மூலமும் அவர்களுக்கு இப்பாடம் கிடைக்கப்பெற்றிருந்தது.

இரண்டுமாத காலத்திற்குள் வவுனியா தாண்டிக்குளத்தில் இருந்து கிளிநொச்சி வரையிலான சுமார் 40 மைல் தூரமான ஏ-9 பாதையைக் கைப்பற்றப் போவதாகவும், யாழ். குடாநாட்டிற்கான தரைவழிப்பாதையைத் திறக்கப்போவதாகவும் கூறி ஆரம்பித்த ஜயசிக்குறு நடவடிக்கை ஒரு வருடம் கடந்தும் முற்றுப்பெறாமல் போனது. அதன் விரிவாக்கமாக ஆரம்பித்த ரணகோச நடவடிக்கை, வோட்செட்ற் நடவடிக்கைகளும் முற்றுப்பெறாமல் போனதும் கடந்தகால நிகழ்வாகும். அத்தோடு இந்நடவடிக்கைகள் அனைத்தின் மூலமும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் மூலம் சில வாரங்களில் மீட்டெடுத்ததும் அறியப்பட்டதொன்றே.

இதேசமயம் யாழ். குடாநாட்டை ஆக்கிரமித்த போது வெளிநாட்டு இராணுவ அதிகாரிகளே புலிகள் பத்திரமாக வெளியேறியதாகத் தெரிவித்திருந்தனர். ஆனால் வாகரையில் இருந்து புலிகள் வெளியேறியதை கொழும்பை மையமாகக் கொண்ட இராணுவ ஆய்வாளர்களே புலிகள் தந்திரோபாய ரீதியில் பின்வாங்கிச் சென்றுள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க தற்பொழுது யுத்தமானது ஒரு தரப்பினதாகவுள்ளது என்பதே யதார்த்தமானது. அதாவது சிறிலங்கா அரசு முழு வீச்சில் தனது யுத்த நடவடிக்கைகளை முனைப்புப்படுத்தி வருகின்ற அதேவேளை விடுதலைப் புலிகள் இயக்கமோ, பதில் தாக்குதல் என்ற வரையறையுடன் நின்று கொண்டுள்ளனர். அதாவது புலிகள் பாரிய வலிந்து தாக்குதல்களை இதுவரை முனைப்புப் படுத்தியதாக இல்லை.

விடுதலைப் புலிகள் யுத்தத்தை முனைப்புப்படுத்தாத போதோ அன்றி ஒரு தலைப்பட்சமாக யுத்த நிறுத்த விதிகளைக் கடைப்பிடிக்கின்ற போதோ, சிறிலங்கா இராணுவம் யுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதும், இதில் பெறப்படும் வெற்றியில் பெருமிதம் கொள்வதும், இராணுவச் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாகக் கொக்கரித்துக் கொள்வதும் வழமையான தொன்றே.

எடுத்துக் காட்டாக 2000 ஆம் ஆண்டின் இறுதியில் விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தத்தை அறிவித்திருந்தபோது சிறிலங்கா இராணுவம் ~ஷகினிகிர| என்ற பெயரில் பல கட்ட இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. கொழும்புத்துறை, நாவற்குழி, சாவகச்சேரிப் பகுதிகளுக்கென அது கட்டம் கட்டமாக நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நடவடிக்கைகள் இராணுவத்திற்குச் சாதகமானவையாக இருந்தமையால் இராணுவச் சமநிலை மாற்றம் கண்டுவிட்தாகவும் இராணுவத்தினரின் கை மேலோங்கியிருந்ததாகவும் சிறிலங்கா அரசால் பிரச்சாரப்படுத்தப்பட்டது.

ஆனால் விடுதலைப் புலிகள் அறிவித்த ஒரு தலைப்பட்ச யுத்த நிறுத்தம் முடிவடைந்து ஒருசில மணித்தியாலங்களுக்குள் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட 'தீச்சுவாலை" நடவடிக்கையானது விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது மட்டுமல்ல, அந்நடவடிக்கையில் ஏற்பட்ட இழப்பு சிறிலங்கா இராணுவத்தையும் அரசையும் நிலைகுலையச் செய்தது. இத்தழும்புகள் ஆற வருடக்கணக்கில் சென்றது.

சிலர் கேட்கலாம் விடுதலைப் புலிகளுக்கு தளமாகக் கொள்வதற்கு வன்னிப் பிரதேசம் சாதகமான இயற்கை மற்றும் பண்பாட்டுச்சூழலைக் கொண்டும் இருந்தது போல் கிழக்கில் சூழல் உண்டா? என்று. ஒருவகையில் இக் கேள்வி நியாயப்பாடானது போன்றும் இருக்க லாம்.

ஆனால் இதில் புரிந்து கொள்ளப்பட வேண்டியதொரு விடயம் யுத்தம் ஒன்று முழு அளவில் மூளுமானால் அது கிழக்கிற்கு மட்டுமானதல்ல, தமிழர் தாயகத்திற்கானது. இன்னும் சிறப்பாகக் கூறுவதானால் முழு இலங்கைக்கும் ஆனது. யுத்தமென்பது பல்வேறு பிராந்தியங்களில் நடந்தாலும் அனைத்துப் பிரதேசங்களிலும் வெற்றி என்பது சாத்தியமில்லை. அவை போராட்டத்தின் ஒட்டுமொத்தப் போக்கைத் தீர்மானிப்பவையாகவும் இருந்து விடுவதுமில்லை. ஆனால் சில சமர்களின் வெற்றிகள் பலவற்றை முறியடிப்பவையாகவும் தோற்கடிப்பவையாகவும் இருந்து விடுவதுண்டு. அதாவது ஜெயசிக்குறு, ரணகோச, வோட்செட்ற் போன்ற நடவடிக்கைகளை ஓயாத அலைகள்-03 தோற்கடித்தது போன்று.

ஆகையினால், கிழக்கில் சூழல் இருக்கின்றதோ இல்லையோ சிறிலங்கா இராணுவத்தை தோற்கடிக்கும், வலுவிழக்கச் செய்யும் வகையில் போரிடும் ஆற்றல், சக்தி விடுதலைப் புலிகளிடமுண்டு. இதனை வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிரூபித்தும் காட்டியுள்ளனர். ஆகையினால் கிழக்கில் புலிகள் வெற்றி பெறுவதற்கான சூழல் உண்டா? என்ற கேள்வி அவசியமானதொன்றல்ல.

ஆனால் சிறிலங்கா இராணுவத்தரப்பாலும் ஆட்சித் தலைமைகளினாலும் இவை மறக்கப்பட்டவையாகவும் புரியப்படாதவையாகவும் உள்ளன. சிறிலங்காவுக்கு ஒவ்வொரு புதிய ஆட்சியாளர்களும் வரும்போது அவர்கள் தமது பங்கிற்கும் யுத்தம் ஒன்றைச் செய்யவே விரும்புகின்றனர்.

சிறிலங்கா ஆட்சித் தலைவர்களுக்கு இராணுவத்தீர்வு என்பது ஆரம்பத்தில் பிரகாசமானதொன்றாகவே என்றும் இருந்ததுண்டு. ஜெ.ஆர்.ஜெயவர்த்தனவிற்கு லிபரேசன் ஒப்பரேசன், பிறேமதாசவிற்கு கிழக்கில் சில அனுகூலங்கள், சனாதிபதி சந்திரிகாவிற்கு 'ரிவிரச" போன்றவை வெற்றிகரமானதாகவே இருந்தன.

ஆனால் அவர்களின் மகிழ்ச்சி அவர்கள் பதவியில் இருந்து விலகும்வரை நீடிக்கவில்லை. கரும்புலி கப்டன் மில்லர் ஜே.ஆர். இன் கனவைக் கலைத்தார். பிறேமதாச இடையிலேயே மரணமானார் டி.பி.விஜயதுங்கவின் கனவை ஒப்பரேசன் யாழ். தேவியும், பூநகரியில் இராணுவம் வாங்கிய அடியும் கலைத்தன. சனாதிபதி சந்திரிகாவின் கனவை ஜெயசிக்குறு தோல்வியும் -ஆனையிறவு வீழ்ச்சியும் கலைத்தன.

ஆனால் இவற்றை மகிந்த ராஜபக்ச கண்டு கொள்ளவில்லை. சம்பூரையும் வாகரையையும் ஆக்கிரமித்ததன் மூலம் யுத்தம் தனது பக்கம் திரும்பிவிட்டதாக மதிப்பிட்டுள்ளார். யுத்தத்திற்கான அறைகூவலை விடுத்து வருகிறார்.

இனப்பிரச்சினைக்கு யுத்தத்தின் மூலம் தீர்வொன்றைக் கண்டுவிட முடியும் எனக் கருதுகின்றார். முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு ஒரு கேணல் மாமா கிடைத்தது போல் இவர் பின்னர் ஜெனரல் ஆகியது வேறு விடயம். சனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் ஒரு கேணல் தம்பி கிடைத்துள்ளார் இருவரும் ஜெனரல் ஆகலாம்.

இவர்கள் யுத்தத்திற்கு வழிகாட்டுபவர்களாகவும் யுத்தத்தை வழிநடத்துபவர்களாகவும் உள்ளனர். தமிழ் மக்கள் மீதான ஆதிக்கத்தின் மூலம் சிங்கள தேசத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் வென்று விடலாம் என எண்ணுகின்றனர்.

இந்தப் போக்கிலேயே மகிந்த ராஜபக்ச வாகரையில் கிடைத்த அனுகூலத்தை பெருவெற்றியாகக் காட்ட முற்படுகின்றார். நாட்டை முழு யுத்தத்திற்குள் இட்டுச்செல்ல முற்படுகின்றார். ஆனால் இதன் விளைவுகள் தமிழர் தாயகத்தின் ஒரு பகுதியில், ஒரு பிரதேசத்தை ஆக்கிரமிப்பதாலோ அப்பிரதேசத்தில் மக்களை அழித்தொழிப்பதாலோ சாத்தியமாக மாட்டாது.

விடுதலைப் புலிகளும் களமிறங்கி- இருதய நிலப்பகுதிகளில் நடத்தப்படும் போர்களிலேயே வெற்றி தோல்வியென்பது நிர்ணயிக்கப்படுவதாக இருக்கும். இதுவே இராணுவச் சமநிலையைத் தீர்மானிப்பவையாகவும் எதிர்கால அரசியலைத் தீர்மானிப்பவையாகவும் இருக்கும்.

ஆனால் அப்போர்களில் நிச்சயமாக சிறிலங்கா அரசோ, அதன் ஆயுதப்படையோ வெற்றிபெறப் போவதில்லை. ஏனெனில் அது தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் போராக இருக்குமாகையால் தமிழ் மக்கள் அப்போரில் எத்தியாகத்திற்கும் தயாராகவே இருப்பர். மக்கள் அணிதிரண்டால் எத்தகைய நடவடிக்கையையும் தோற்கடித்துவிட முடியும். இது உலக வரலாறு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.