Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜல்லிக்கட்டு : மெரினாவில் நிகழ்த்தப்பட்ட காட்சிகளும், அதன் பின்கதையும்!

Featured Replies

ஜல்லிக்கட்டு : மெரினாவில் நிகழ்த்தப்பட்ட காட்சிகளும், அதன் பின்கதையும்!

மெரினா

காட்சி - 1

சுமுகமாகப் போய்க்கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நடுவே திடீரென ‘நான் விலகிக்குறேங்க’ என ஒரு வீடியோ வருகிறது. அதுநாள் வரை ஒன்றாக இருந்த கூட்டம்... சட்டென இருதரப்பாகப் பிரிந்து அடித்துக்கொள்கிறது, ‘நாங்க அப்பவே சொன்னோம்ல போதும்ன்னு’ என ஒரு தரப்பு; ‘இன்னும் நிரந்தரத் தீர்வு கிடைக்கலையே’ என ஒரு தரப்பு. விக்ரமன் படம்போல இருந்த சோஷியல் மீடியாக்கள், ‘பேரரசு’ படம்போல எக்கச்சக்க களேபரங்களுக்கு உள்ளாகின்றன.

காட்சி - 2

‘நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும்’ என அறிவிப்பு வெளியாகிறது. ‘அவ்ளோதான் திரும்பி வாங்க’ என சில நிர்வாகங்கள் தங்கள் மாணவர்களுக்கு அழுத்தம் தருகின்றன. ‘இரவு பிரஸ் மீட்’ என அறிவிக்கிறார்கள், ஜல்லிக்கட்டுக்காக ஆரம்பம் முதலே குரல்கொடுத்து வந்தவர்கள். ‘ஏன் அவசர அவசரமா பிரஸ் மீட்’ என்ற கேள்விக்கு பதில் அங்கே காத்திருந்தது. ‘நமக்கு வேண்டியது கிடைச்சுடுச்சு. போராட்டத்தைக் கைவிடுங்க’ என்கிறார்கள் போராட்டக் குழுவினர். முந்தைய காட்சியிலிருந்த இரு தரப்பும் இப்போது மிக உக்கிரமாகக் கருத்து மோதல் நிகழ்த்துகின்றன.

காட்சி - 3

‘அதிகாலைல கண்டிப்பா தடியடி நடத்தப் போறோம்’ என மீடியா வட்டாரங்களுக்குத் தகவல் வருகிறது. சில இடங்களில் ஓப்பனாகவே சொன்னது காவல் துறை. பீச் செல்லும் அத்தனை சாலைகளும் அடைக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கில் போலீஸார் குவிகிறார்கள்; அதே சமயம், மருத்துமனைகளில் சிலர் சிகிச்சை பெற வருகிறார்கள்; ‘தேசியக் கொடி ஏந்திக்கிட்டு போராட்டத்துல கலந்துகிட்ட எங்களைச் சிலர் அடிக்கிறாங்க’ எனக் கூறுகிறார்கள்; சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முற்பட, ‘சிகிச்சை வேண்டாம், Accident register Entry ரிப்போர்ட் மட்டும் போதும்’ என்கிறார்கள், அவர்கள். ‘காயத்தைக் காட்டுங்க’ என சோதித்துப் பார்த்தால்... யார் உடம்பிலும் காயம் இல்லை. ‘நீங்க AR மட்டும் கொடுங்க போதும்’ எனத் திரும்பத்திரும்பச் சொல்கிறார்கள். ‘காயமே இல்லாம எப்படிச் சிகிச்சை அளிச்சதா ரிப்போர்ட் தரமுடியும்?’ என திருப்பியனுப்புகிறார்கள் மருத்துவர்கள்.

காட்சி - 4

மெரினா போராட்டம்

ஓ.பி வேன்களோடு மீடியாக்கள் தயாராகின்றன. முதலில் சாஃப்ட்டாகப் பேசுகிறது காவல் துறை. ‘கொஞ்சம் டைம் கொடுங்க, நாங்களே கலைஞ்சுடுவோம்’ என்கிறது மாணவர் தரப்பு. ‘முடியாது’ எனச் சொல்லி ஆண், பெண் பாகுபாடு பார்க்காமல் கைவைக்கிறார்கள்; குண்டுக்கட்டாக தூக்கியடிக்கிறார்கள். பயம், பீதி, குழப்பம் சூழ்கிறது; மீடியா கண்ணில்படும் எல்லாவற்றையும் கேமராவுக்குள் அடக்குகிறது. இதே சமயத்தில் தமிழகம் முழுவதும் போலீஸார் கோரிக்கை விடுக்கின்றனர். எல்லாரும் சமாதானமாய் கலைய, போராட்டத்தின் மையப்புள்ளிகளான அலங்காநல்லூரிலும் சென்னையிலும் மட்டும் போராட்டம் நீடிக்கிறது. ‘கடலுக்குள் செல்வோம்’ என்கிறார்கள் மாணவர்கள். கையைப் பிசைகிறது காவல் துறை. தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களோடு மீனவர்களும் கைகோக்கிறார்கள்; அடிவாங்குகிறார்கள்.

காட்சி - 5 

‘சென்னையில் மாணவர்களை, பெண்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறார்கள்’ என தகவல் வரவும் மாநிலம் பதற்றமாகிறது; சென்னையில் ஆங்காங்கே மறியல்கள் நடக்க, நகரம் ஸ்தம்பிக்கிறது. சட்டென, சிக்குபவர்களை எல்லாம் அடித்து நொறுக்குகிறது காவல் துறை. வீட்டுக்குள் இருப்பவர்களையும் இழுத்துப் போட்டு அடிக்கிறது. ‘இதெல்லாம் தேவையா?’ என்றும், ‘ஏன்யா இப்படிப் பண்றீங்க’ என்றும் முதல் காட்சியில் பார்த்த குழுக்கள் அலறுகின்றன. மாணவர்கள் என்றே சொல்ல முடியாத சில முரட்டு உருவங்கள் வண்டிகளைக் கொளுத்துகின்றன; கலாட்டா செய்கின்றன. மதுரையில் அடிதடி தொடங்குகிறது.

காட்சி - 6

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகர்கள் சுற்றிலும் சுவர் மறைக்க நின்றுகொண்டு ‘Go safe guys’ என்கிறார்கள். அதிலும் ஒருவர், எக்ஸ்ட்ரா தெளிவாய் ‘‘மாணவர்களே ஏன் இப்படிப் பண்றீங்க... போலீஸ் எவ்ளோ நல்லவங்க தெரியுமா’’ என்கிறார். மீடியாக்கள் திடீரென ‘போராட்டம் முடிஞ்சது’ என அறிவிக்கின்றன. ‘நம்பாதீங்க’ என களத்தில் லைவ் வீடியோவில் சொல்கிறார்கள் மாணவர்கள். அதற்குள், ‘சட்டசபையில் அவசரக் கூட்டம் கூடும்’ என அறிவிக்கப்படுகிறது. ‘சட்டம் பாஸாகி, அதை அரிபரந்தாமன் வந்து விளக்குனா நாங்க விலகிக்கிறோம்’ என்கிறார்கள் மாணவர்கள். சட்டம் பாஸாகிறது. அரிபரந்தாமன் வந்து விளக்குகிறார். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைகிறது.

காட்சி - 7

இரவு காவல் துறை ஆணையர் ஒரு பிரஸ் மீட் வைக்கிறார். ‘‘மாணவர்களிடையே ஆன்ட்டி சோஷியல் எலிமென்ட்ஸ் புகுந்ததால் வன்முறையைக் கையிலெடுக்க வேண்டியதாகிவிட்டது’’ என்கிறார். ‘ஆன்ட்டி சோஷியல் எலிமென்ட்ஸ்’ என்ற வார்த்தைக்கு திரும்பத் திரும்ப அழுத்தம் தரப்படுகிறது. காலையில் வெளியான நாளிதழ்களில், சேனல்களில், ‘போராட்டக்காரர்கள் காவல் துறை மீது வன்முறையை பிரயோகித்ததால்... வேறு வழியே இல்லாமல் காவல் துறை அடிக்கத் தொடங்கிவிட்டது’ என செய்திகள் வெளியாகின்றன.

காட்சி 1, 2-க்கான பின்கதை!

United we stand, divided we fall - இதை நம்மைவிட அதிகார வர்க்கம் நன்றாகவே தெரிந்துவைத்திருக்கும். மோடி எதிர்ப்புக் கோஷமோ, பெப்ஸி - கோக்குக்கு எதிரான கோஷமோ திடீரென முளைத்ததல்ல. முதல் நாளிலிருந்தே அவை களத்தில் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. அது மட்டுமே ‘குட்டி பாரதி’ போராட்டத்திலிருந்து விலகுவதற்கான காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. ராஜசேகர், கார்த்திகேயன் சேனாதிபதி இருவரும் பல ஆண்டுகாலமாக ஜல்லிக்கட்டுக்காகப் போராடி வருபவர்கள். திடீர்ப் போராட்டக்காரர்கள்போல ‘காசு வாங்கிட்ட’ என்ற குற்றச்சாட்டை அவர்கள் மேல் போகிறபோக்கில் எல்லாம் வைக்க முடியாது. அப்படியென்றால் அவசர அவசரமாக ஏன் இந்த பிரஸ் மீட்? மாணவர்கள் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் முதலில் முன்னிலைப்படுத்தப்பட்டது அவர்கள்தான். அதனால் இந்தப் போராட்டம் மூலம் நடக்கும் நல்லது கெட்டதுகளில் அவர்களுக்கும் பங்கு இருக்கத்தான் போகிறது. போராட்டம் தவறான பாதைக்குச் சென்றால் தாங்களும் பொறுப்பேற்க வேண்டுமோ என்ற social pressure அந்த பிரஸ் மீட்டுக்குக் காரணமாய் இருக்கலாம். போக... அதிகார வர்க்கம், தனிநபர்கள் முன்னிலைப்படுத்தப்படுவதை என்றுமே விரும்பவதில்லை. அவர்களின் அழுத்தமும் இருக்கக் கூடும்.

‘போராட்டங்களில், தேவை இல்லாததைப் பேசினார்கள்’ என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. தேவை ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படுமே. சென்னையில் ஜல்லிக்கட்டு மட்டுமல்ல, விவசாயிகள் பிரச்னை, காவிரிப் பிரச்னை எனப் பல பிரச்னைகளும் ஆரம்பம் முதலே முன்னிறுத்தப்பட்டன. ஒன்றாக இருந்த களம் இரண்டுபடத் தொடங்கியது சனிக்கிழமை முதல்தான். ஆர்டினன்ஸ் போடப்பட்டதுமே சிலர் கலையத் தொடங்க, பெரும்பான்மையானவர்கள் களத்தில்தான் இருந்தார்கள். அதுநாள் வரை ஜல்லிக்கட்டுக் கோஷங்கள் எழுப்பிய மாணவர்கள் நோக்கம் நிறைவேறிய மகிழ்ச்சியில் இருக்க, அந்த அமைதியைப் பயன்படுத்திக்கொண்டன சில தீவிர வலது, இடதுசாரி அமைப்புகள். சில வித்தியாச கோஷங்கள் எழுப்பப்பட்டன. ‘இது இத்தனை நாள் இல்லையே’ என வித்தியாசம் உணர்ந்தார்கள் சாமான்யர்கள். அவ்வளவு பேர் கூடும் கூட்டத்தில் இவர்களைக் கட்டுப்படுத்த மாணவர்களாலும் முடியாது என்பதுதான் உண்மை. அதுவும் இரண்டு தரப்பாக பிரிய ஒரு காரணம்.

காட்சி 3, 4-க்கான பின்கதை!

ஜல்லிக்கட்டு

மாணவர்கள் முதலில் இருந்தே ஆர்டினன்ஸ் தேவையில்லை. அமென்ட்மென்ட்தான் வேண்டும் என்ற நினைப்பில்தான் இருந்தார்கள். ஆகவே சட்டசபையில் லா பாஸானதும் கலைந்து போயிருப்பார்கள்தான். அவர்கள் காத்திருந்தது அதற்குத்தான். போக, போராட்டத்தில் ஈடுபட்டது ஒரே ஒரு குழு அல்ல. பல அணிகள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தருணத்தில் கலைந்துசென்றார்கள். இத்தனை நாள் காத்திருந்த காவல் துறை ஏன் மேலும் ஒருநாள் காத்திருக்கக் கூடாது என்ற கேள்வி எழத்தானே செய்யும். இந்தத் தடியடிக்குப் பின்னால் மத்திய அரசின் அழுத்தம், ஓ.பி.எஸ்ஸை ஓரங்கட்ட நினைக்கும் அரசியல், இனிமே கூட்டம் கூட்டுற எண்ணம் யாருக்கும் வரக் கூடாது என்ற மேலிடத்தின் பயம் (காரணம், போராட்டம் ஒரு போதை) போன்றவையும் இருக்கின்றன. சும்மா எப்படி அடிப்பது? உடனே ‘பிரிவினைவாதிகள்’ என்ற வார்த்தையை வாடகைக்கு எடுத்துக்கொண்டார்கள். அதற்கான முன்னேற்பாடுதான் முந்தைய இரவில் மருத்துவமனையில் நடந்தது. மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தாக்கப்படுகிறார்கள். குரல் கொடுத்த சினிமா ஸ்டார்கள் எல்லாம் காணாமல் போக, மாணவர்களுக்கான அடியை தங்கள் உடலில் வாங்கினார்கள் மீனவர்கள். அலங்காநல்லூரிலும் லத்தி பேசியது.

புதுச்சேரி அரசு நடந்துகொண்ட விதத்துக்கும் நம் அரசு நடந்துகொண்ட விதத்துக்குமான வித்தியாசத்தை உணர்ந்தாலே லாஜிக் பிடிபடும். 

ரொமான்டிசைஸ் செய்வதில் நம்மை அடித்துக்கொள்ள யாருமே இல்லை. காவல் துறை என்றுமே மக்களின் நண்பனாக இருந்ததில்லை. அதிகார வர்க்கத்தின் குணத்துக்கேற்ப நிறம் மாறுவதுதான் அதன் இயல்பு. பாசம் கொட்டிப் பார்த்துக்கொண்ட மாணவர்கள் இப்போது உணர்ந்திருப்பார்கள்.  

காட்சி 5, 6-க்கான பின்கதை!

வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவிக்க, கண்ணில்பட்டவர்களை எல்லாம் நொறுக்குகிறது காவல் துறை. தங்கள் வாதங்களுக்கு வலு சேர்க்க ‘யாரும் பாக்கல’ என்ற நினைப்பில் வாகனங்களையும் கொளுத்துகிறது. அவர்கள் எதிர்பார்த்ததுபோலவே... சிலர், வன்முறையில் இறங்க (நேரில் பார்த்தவர்கள் எல்லாரும் சொல்லும் ஒரே விஷயம் அவர்கள் மாணவர்கள் இல்லை என்பதுதான்), இன்னும் பிடியை இறுக்கியது போலீஸ். இதை எல்லாம் ஒளிபரப்பிக்கொண்டிருந்த சேனல்களை தென் தமிழகத்தில் ‘யாரோ’ துண்டிக்கிறார்கள். ஏற்கெனவே காலையில் சில பத்திரிகையாளர்களைச் ‘செல்லமாய்’ தட்டி ட்ரையல் காட்டி இருந்தது போலீஸ். 

கேபிள் துண்டிக்கப்பட்டதைக் காட்டியே ஒவ்வொரு சேனலையும் நெருக்குகிறது ஆளும் தரப்பு. எந்த அளவுக்கென்றால் ‘This is the worst day in my profession’ என நேர்மையான பத்திரிகையாளர்கள் வெளிப்படையாக புலம்பும் அளவுக்கு. படிப்படியாக போலீஸாரின் ‘வீரதீர பராக்கிரமங்கள்’ லைம்லைட்டில் இருந்து மறைக்கப்படுகின்றன. மாணவர்களின் பெயர், ‘போராட்டக்காரர்கள்’ என மாறுகிறது. ரத்தம் வடியும் மாணவர்களின் வீடியோ நிறுத்தப்பட்டு போலீஸ்காரர் கெஞ்சும் வீடியோ ஒளிபரப்பப்படுகிறது. ஆளும் தரப்புக்கு ஆதரவானவர்கள் கண்காணிப்பில் செய்திகள் வெளியாகின்றன. ‘இது அநியாயம்’ என சேனல்களில் வாக்குவாதம் பெரிய அளவில் நடந்திருக்கிறது. பயனில்லை. களத்தில், ‘அரிபரந்தாமன் வந்து விளக்கினால் கலைகிறோம்’ என்கிறார்கள் மாணவர்கள். ஆனால், போலீஸ் கடைசிவரை அவரை அழைத்துவர முயற்சி செய்யவே இல்லை. அவர்களாக கலைவதை காவல் துறை விரும்பவில்லையோ என்னவோ? தனிநபர்களின் முயற்சியால் களத்துக்கு வருகிறார் அரிபரந்தாமன். அவர் வந்து சொன்னதும் மாணவர்கள் சொன்னபடி கலைகிறார்கள். 

காட்சி 7-க்கான பின்கதை!

திட்டத்தை, சிலபல சொதப்பல்களோடு முடித்த காவல் துறை பிரஸ் மீட் வைக்கிறது. அதில், மீண்டும் ஒரு முறை ‘ஆன்ட்டி சோஷியல் எலிமென்ட்ஸ்’தான் காரணம் என ‘அழுத்தமாக’ச் சொல்லப்படுகிறது; சொல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. திங்கள் மதியம் ‘போராட்டக்காரர்களாக’ இருந்த மாணவர்கள் செவ்வாய் காலையில் ‘வன்முறையாளர்கள்’ என்ற புதுப் பெயர் தரிக்கிறார்கள்.   

மாணவர்களுக்கு:

கடைசிவரை அகிம்சை வழியிலேயே ஒரு போராட்டத்தை நடத்திக்காட்டுவதெல்லாம் அசாத்தியம். அதற்காக சியர்ஸ். ஆட்டத்தைக் கலைக்க முயன்ற சினிமாப் புள்ளிகள், திசை திருப்ப முயன்ற சில அமைப்புகள் தாண்டி வெற்றி பெற்றதற்கு பாராட்டுகள். உங்களுக்காக அடிவாங்கிய மீனவர்களின் குடியிருப்புகள் இப்போதுவரை சூறையாடப்படுகின்றன. அவர்களுக்காகக் களம் காண்பதும் குரல் கொடுப்பதும் உங்கள் கடமை. இனியொரு முறை கூட்டம் கூடாது என நினைப்பவர்களைத் தாண்டி நீங்கள் கூடுவீர்கள் என நம்புகிறோம். 

பாலாஜிகளுக்கும், குட்டி பாரதிகளுக்கும் (RIP முண்டாசுக் கவிஞனே):

மைக்கில் உணர்ச்சித் ததும்பப் பேசுவது, கருத்துச் சொல்வது மட்டுமே தலைவனாக்கிவிடாது. சொன்னதை எல்லாம் கேட்டு கை மட்டுமே தட்டிக்கொண்டிருக்க வேண்டுமென்றால், நீங்கள் கிண்டர்கார்டனில் கதை சொல்லத்தான் போக வேண்டும். வெறுமனே ‘வா வா’ என மைக்கில் அலறாமல், எல்லாவித அரசியலையும் சமாளித்து நிற்பதே சிறந்த தலைமை. 

http://www.vikatan.com/news/tamilnadu/78640-marina-attack-a-preplanned-screenplay.art

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.