Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெரினா புரட்சி முடிவில்... குப்பத்து மக்களைக் குறிவைக்கிறதா காவல்துறை?

Featured Replies

மெரினா புரட்சி முடிவில்... குப்பத்து மக்களைக் குறிவைக்கிறதா காவல்துறை?

ஐஸ் அவுஸ் போலீஸார்

மெரினா புரட்சியில் எது நடந்ததோ, இல்லையோ சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாக பாசம்மிகுந்த மதுரைக்காரர்கள், வந்தாரை வாழவைக்கும் மெட்ராஸ்வாசிகள், மரியாதைக்குப் பெயர்போன கோயம்புத்தூர்க்காரர்கள், வீரத்துக்குப் பெயர்போன நெல்லையைச் சேர்ந்தவர்கள், அனைவருக்கும் சோறுதரும் தஞ்சை தரணிக்காரர்கள், வற்றாத காவிரி பாயும் திருச்சிவாசிகள் என்று நிலவியல் குறுகிய எண்ணங்களை உடைத்து எறிந்து, நாம் ‘அனைவரும் தமிழர்கள்’ என்ற நிலைப்பாடு மேலோங்க காரணமாயிருந்தது, ஜல்லிக்கட்டு மீட்பு பிரச்னைதான். 

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுப்போட்டிக்காக, அதைப் பற்றி அறிந்திராத, பிறமாவட்ட மக்களும் அறவழியில் போராட மெரினாவில் கைகோர்த்தனர். ஆரம்பத்தில் அலங்காநல்லூர், மெரினா, வாடிப்பட்டி என சிறியஅளவில் ஒன்றுதிரண்ட போராட்டம், நாளடைவில் ஜல்லிக்கட்டு எனும் ஒரு பெரும்நோக்கத்துக்கு ஆக தமிழகம் முழுதும் தன் கிளைகளைப் பரப்பியது. போராட்டத்தில் திருநெல்வேலியில் ஒரு மைதானத்தில் இசுலாமிய இளைஞர்கள் தொழுகை நடத்திக்கொண்டிருக்கும்போது மழைபெய்கிறது. அந்த மழை பெய்யும்போது இசுலாமிய இளைஞர்களின் தொழுகை கெட்டுவிடக்கூடாது என்பதற்காக, தார்பாயைப்பிடிக்கிறார்கள் இந்து மக்கள். ஒருவழியில், மதச்சார்பற்று மக்களை ஒன்று திரட்டிய முக்கிய போராட்டம் இது.

நடுக்குப்ப மக்கள் நள்ளிரவில்

இப்படி நடந்த இளைஞர்களின் இந்த போராட்டத்தில் அன்பும்  நேர்மையும் இருந்தது. அவர்களின் செயல்பாட்டில் ஒரு கண்ணியம் இருந்தது. இதனால், ஜல்லிக்கட்டுக்கு நடந்த போராட்டம்  தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் பிடித்திருந்தது.
மெரினாவில் போலீஸார் செய்யவேண்டிய சாலை சீரமைப்புப் பணியை வாலன்டியராகச் சென்று சீராக்கினர், ஜல்லிக்கட்டு போராட்ட குழுவினர்.

அங்கு பாதுகாப்புப் பணிக்கு வந்த போலீஸாருக்கு உணவுப்பொட்டலங்களையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்தனர், போராட்டக்காரர்கள் அவர்களின் களைப்புக்கு இளநீரையும், காபியையும் பருக கொடுத்தனர், அந்த  தன்னெழுச்சியான இளைஞர்கள். இதனால் போராட்டக்களத்தில் 'ஒன்னும், ஒன்னும் ரெண்டு, போலீஸ் நம்ம ஃப்ரெண்டு" - என முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன. இதெல்லாம் நிலவியது என்னவோ ஜனவரி -17 முதல் 22-ம்தேதி, ஞாயிற்றுக்கிழமைவரை தான் என்பது மட்டும் உண்மை. அதன்பின்  நாம் பார்க்கமுடிந்தது என்னவோ,  'நான் போலீஸ் இல்ல;......" ரக போலீஸைத்தான்.

அறவழியில் கூடிய கூட்டத்தைக் கலைக்க, கடந்த 23-ம் தேதி அதிகாலை முதல் அத்துமீறலை செய்யத் துவங்கியது தமிழக காவல்துறை. உடனடியாக அங்கு குழுமியிருந்த கர்ப்பிணிப் பெண்கள், பச்சிளங்குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரையும் படிப்படியாக வலுக்கட்டாயமாக மெரினாவை விட்டுத் தள்ளி வெளியேற்றியது, காவல்துறை.

நடுக்குப்பம் எரிப்பு

கலைய சிறிது நேரம் கேட்டவர்களுக்குப் பதிலளிக்காமல், தன் அத்துமீறலைத்துவக்கி, தடியடியை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டது. இதனால், காவல்துறையை நம்பி, போராளிகளுக்கு உதவிய, உணவு சமைத்துக்கொடுத்த அத்தனை பேரும் நிலைகுலைந்து போனார்கள். அதாவது, அவ்வுதவிகளைச் செய்த குடிசைமாற்றுவாசிகளும், மீனவ மக்களும்தான் பெருமளவில் பாதிக்கப்பட்டார்கள். ஏனெனில், அவர்கள் வசிக்கும் பகுதியில் புகுந்த போலீஸார், தெருவில் நின்றிருந்த ஆட்டோ, பைக், ஜன்னல் கண்ணாடி ஆகியவற்றை அத்துமீறி அடித்து நொறுக்கினர். சிலவற்றை தீக்கரையாக்கினர். எதிர்த்துப்பேசிய மீனவ மக்களை தங்கள் கைகளில் இருந்த ராடுகளின் மூலமும், லத்திகளின் மூலமும் தாக்கினர். அவர்களின் மீன் கடைகளை தீக்கரையாக்கினர். அவர்களின் மேல் கற்களை வீசினர். மேற்கூறிய ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரமாக  தற்போது ஒவ்வொன்றாக சோஷியல்மீடியாக்களில் வீடியோக்கள் பதிவேற்றி வருகிறார்கள்.

சென்னை கமிஷனர், முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் பேசினாலும், அங்கு இருக்கும் அத்தனை குடும்பங்களும் போலீஸாரை சரமாரியாக குற்றம்சாட்டுகின்றன. இந்நிலையில் இதில் போலீஸாரால் பெருமளவில் பாதிக்கப்பட்டது சென்னை நடுக்குப்பம், ஐஸ்ஹவுஸ், மாட்டாங்குப்பம் , சிட்டி சென்டர் அம்பேத்கர் பாலப்பகுதியை சுற்றியுள்ளவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், காவல்துறையோ ஐஸ் ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷன் எரிப்புக்கும், நடந்த வன்முறைகளுக்கும் இவர்களின்மேல் சமூக விரோதிகள் என முத்திரைக்குத்தி, இப்பகுதி ஆண்களைத் தேடி வருகிறது. ஆண்கள் இல்லாத வீடுகளில் அத்துமீறி அராஜகம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இப்பகுதியே தூக்கம் தொலைத்து இரவிலும் விழித்திருக்கிறது. அவர்களை இரவில் சந்தித்தோம்.
 நடுக்குப்பம்  நீலம் பாஷாதர்ஹா தெருவைச் சேர்ந்தவர் கூறுகையில், 'எங்க புள்ளைங்க ஒன்னும் தப்பு செய்யலை. போலீஸ்காரங்கதான், இந்த ஏரியாக்குள்ள வந்து அடிச்சு, உடைச்சாங்க. ஜல்லிக்கட்டு போராட்டக்களத்தில் ஒரு பொண்ணை அடிச்சதில் ஐந்துமாதக் குழந்தையின் கரு கலைஞ்சுபோயிடுச்சு. இரண்டு வயசு சிறுமி இறந்துட்டா. ஒரு பொண்ணை கழுத்தறுத்து கொன்னுட்டாங்கன்னு சொல்றாங்க. எத்தனையோ பேர் வெளியில் சொல்லாம, அவ்வளவு அடியையும் வாங்கிட்டு அமைதியாப் போயிட்டாங்க.  மீன்மார்க்கெட்டை எரிச்சுட்டாங்க. மீனவ ஜனங்களை அடிக்கிறானுங்க. வீட்டை அடிச்சு உதைக்கிறாங்க. கல் எடுத்து எரியுறாங்க. இங்க நாங்க யாரும் நைட் நிம்மதியாக தூங்கவே முடியலை. எங்களை யாரும் போலீஸ்காரங்க வந்து அடிச்சிடுவாங்களோ, எங்க வீட்டை உடைச்சிடுவாங்களோன்ற பயத்துலேயே தூங்காம இருக்கோம். என் வீட்டுக் கதவையும் பூட்ஸ்காலால மிதிச்சு உடைச்சுட்டாங்க. போலீஸ் அராஜகம் ஒழியணும்' என்றார் கோபமாக.

நடுக்குப்ப சேதங்கள்


நடுக்குப்பம் பகுதியின் நுழைவு வாயில் அருகே  இரவு 1.20 மணிக்கு குழுமியிருந்த பெண்கள் பேசுகையில் ,'எங்க வீடுகளுக்கு ஓடி வந்த, போராடுற பசங்களை, 23-ம் தேதி இரவு பிடிச்சுட்டுப் போனாங்க. ரொம்ப அசிங்க, அசிங்கமாய் பேசினாங்க. பொம்பள போலீஸே அப்படி பேசுச்சு. அவ போலீஸா, ரவுடியானே தெரியலை! பீர்பாட்டில் எடுத்து உடைக்கிறாங்க. ஒரு மூட்டை நிறைய கல் கொண்டு வந்து எரியுறாங்க. எங்களோட D -5 காவல் நிலையத்தில் இருந்துகூட யாரும் வந்து எங்களை அடிக்கவரவில்லை. எல்லோரும் புதியவங்களாகத்தான் இருந்தாங்க. இரக்கமே படாம அடிச்சாங்க. அதுவும் ஒரு பெண் போலீஸ், தன் முகத்தை ஒரு வெள்ளை கர்சிஃப்ல மறைச்சுக்கிட்டு ஆட்டோ, பைக் என எல்லாத்துலேயும் பவுடரைப்போட்டுட்டு தீ வைச்சு கொளுத்துச்சு. 

மீன் மார்க்கெட்ட தீவைச்சு கொளுத்துனது. பக்கத்துலயிருந்த பஜ்ஜிக்கடையை தள்ளிவிட்டு கொளுத்துனது எல்லாமே போலீஸுதான். அங்கேயிருந்த மீன்களைக்கூட போலீஸ்காரங்க தூக்கிட்டுப் போனாங்க. தடுத்துக் கேட்கப்போனவங்க கிட்ட, கண்ணீர்ப்புகை குண்டுவீச்சு பண்ணுனாங்க. இதில் மாட்டிக்கிட்டு குழந்தைங்க பலருக்கு மூச்சுத்திணறல் வந்துடுச்சு. மீனவர்களான  எங்களுக்கு ஆதாரமே மீன் பிடி வலைகள் தான். அதையும் தீ  வைச்சு எரிச்சுட்டாங்க. எங்களோட பிழைப்பையேக் கெடுத்துட்டாங்க. எங்க வீட்டுல இருக்குற ஆண்களை மிரட்டுனாங்க. உயிருக்குப்பயந்து, அவுங்க எல்லாம் வேற இடங்களுக்குப் போயிட்டாங்க. எங்கவீட்டுக்குள் ஓடிவந்த இளைஞர்களை விரட்டி அடிக்கமுடியுமா? நாங்க எல்லாம் பிள்ளைங்களே பெத்துக்கலையா.

தமிழ்நாட்டில் பிறந்தது தப்பா. எங்களைத் தேடிவந்த  தமிழ்மக்களை ஆதரித்தது தப்பா. வந்தவங்களைப் பிடிச்சுட்டு போகும்போது, பிடிச்சுட்டுப்போறதுக்கு காரணம் கேட்டால் பெரிய ராடு வைச்சு அடிக்கிறாங்க. எங்களோட  ஆட்டோ, பைக், வாசல் கதவு, கண்ணாடி ஜன்னல் எல்லாத்தையும் உடைச்சாங்க. மக்கள் தப்புப் பண்ணுனா நாங்க போலீஸ்கிட்ட சொல்லுவோம். போலீஸே தப்புப் பண்ணுனா, நாங்க யாருகிட்ட சொல்றது' என்று கண்ணீர் மல்க கூறினார்கள்.

'கள்வன் கன்னமிட்டால் காப்பவனிடம் கூறலாம். காப்பவனே கன்னமிட்டால் நாம் யாரிடம் கூறுவது' என்பது பழமொழி.
சமூகவிரோதிகளாக போலீஸ் செயல்படுவது சரியா? காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

http://www.vikatan.com/news/tamilnadu/78690-at-the-end-of-marina-revolution-is-the-police-focus-slum-people.art

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

“அவர்கள் ஆன்மாவில் ஒரு கடல் இருக்கிறது... அந்தக் கடலைக் காப்பாற்றுங்கள்!" : மீனவர்கள் மீதான தாக்குதலும்... அதன் பின்னணியும்!

 

 

திங்கட்கிழமை காலை. வெளி முழுவதும் காலை சூரியோதயத்தின் மஞ்சள் கதிர்கள் நிரம்பியிருந்த அந்தக் காட்சி, நன்றாக நினைவிருக்கிறது. காலை சூரியன்... ரகசியம் பேசும் கடல் அலைகள்... கரையில் ஏகாந்தமாக காற்று வாங்கும் பறவைகள்... அழகிய சூழல்தான். ஆனால், அவை எதுவும் அன்றுகாலை அங்கு நடந்து கொண்டிருந்த சம்பவங்களுடன் ஒட்டவில்லை. மெரினாவில் கூடியிருந்த யுவன், யுவதிகள் மீது காவல்துறை ஒரு வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகிறது. “இன்னும் இரண்டு மணி நேரத்தில் நாங்களே கலைந்து விடுகிறோம்” என்கிற அவர்களது வாதத்தை கேட்க போலீஸ் தயாராக இல்லை. குண்டுக்கட்டாக வெளியேற்றப் பார்க்கிறார்கள். லத்தியை சுழற்றுகிறார்கள். ஒரு பெருங்கூட்டம் கடலை நோக்கி ஓடுகிறது. இந்தப் புள்ளியில் இருந்துதான் மெரினா போராட்டத்தின் அடுத்த அத்தியாயம் தொடங்குகிறது...

நடுக்குப்பம் ஜல்லிக்கட்டு

ஆம்... இத்தனை நாள் அமைதியாகப் போராடிக் கொண்டிருந்த எந்தப் பிள்ளைகளும் இறந்து விடக்கூடாது... கடலில் குதித்து விடக்கூடாது என்பதற்காக, அருகிலுள்ள மீனவக் குடியிருப்புகளில் இருந்து பெருவாரியான மக்கள் ஓடி வருகிறார்கள். அவர்களின் ஒரே நோக்கம், இளைஞர்களை கடலில் விழுவதில் இருந்து தடுக்க வேண்டும் என்பது மட்டும்தான். கடல்தான் கடவுள்... கடல்தான் வாழ்வாதாரம்... கடல்தான் அவர்களுக்கு எல்லாம்... அந்தக் கடலில் எந்த அசாம்பாவிதங்களும் நடந்து விடக்கூடாது என்பதற்காக, கடல் நோக்கிச் சென்ற இளைஞர்களைத் தடுக்கிறார்கள். அவர்களுக்கு அரணாக நிற்கிறார்கள். அந்தச் சமயத்தில் ஊரெங்கும் வன்முறை வெடிக்கிறது. 

“தீக்கிரையாக்கப்பட்ட வாழ்வாதாரம்”

நடுக்குப்பம்

 

திங்கிட்கிழமை இரவு, மீனவர்கள் குடியிருப்புகளுக்குள் காவல்துறை நுழைகிறது. வீடுகளில் இருந்த அனைத்துப் பொருள்களையும் அடித்து நொறுக்குகிறது. அந்த மக்கள் சொல்லும் எந்த சமாதானத்தையும் கேட்கத் தயராக இல்லை. நடுக்குப்பம் இரண்டாவது தெருவைச் சேர்ந்த பானு இவ்வாறாகச் சொல்கிறார், “ஏன் அந்த பசங்களுக்கு தண்ணி கொடுத்தீங்க... அவனுங்களுக்கு ஏன் சாப்பாடு போட்டீங்க... போலீஸையே எதிர்த்து பேசுறீங்களா..? என்று சொல்லியவாறே மக்களை அடித்தார்கள். கைகளில் அகப்பட்டவர்களை எல்லாம் கைது செய்தார்கள்...” என்கிறார். இது அவர் ஒருவரின் குரல் மட்டும் அல்ல... அதே பகுதியைச் சேர்ந்த பழனி... தணிகைவேல்... சூரியகாந்தி என அந்தக் குடியிருப்பைச் சேர்ந்த ஒவ்வொருவரும் இதே நிலைதான் என்று சொல்கிறார்கள். 

அவர்களின் அனைத்து வாழ்வாதாரங்களும் தீக்கிரையாக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, அங்கு இருந்த மீன் சந்தை... மீன்கள் எரிக்கப்பட்டு, ஒரு துயர நிகழ்வின் சாட்சியமாக சந்தை எங்கும் சிதறிக் கிடக்கிறது.

நடுக்குப்பம்

 

செவ்வாய்கிழமை இரவு.... மீண்டும் போலீஸ் வரும்.. கைது நடவடிக்கை தொடரும் என்கிற செய்தி பரவுகிறது. இப்போது அந்தக் குடியிருப்புகளில் எந்த ஆணும் இல்லை... ஒன்று போலீஸால் கைது செய்யப்பட்டிருப்பார்கள் அல்லது கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் குடியிருப்பை விட்டு வெளியே சென்று இருப்பார்கள்.  குடியிருப்பு முழுவதும் பெண்கள் மட்டும்தான். அவர்களும் அச்சத்தில் வீட்டுக்குள் செல்லாமல்... வெளியே கூட்டமாக அமர்ந்திருக்கிறார்கள்.  பாக்கியம்மா என்பவர் சொல்கிறார், “தம்பி... காலைல 4 மணிக்குள்ள கைது செய்வோம்னு சொல்லி இருக்காங்க... பயமா இருக்கு... அதான் கூட்டமா வெளியே உட்கார்ந்து இருக்கோம்” என்கிறார் கண்கள் கலங்க. “கலவரத்துல ஈடுபட்டவங்களைக் கைது பண்ணட்டும். அதுல எங்களுக்கு எந்த மாற்று கருத்துமில்ல... ஆனா, வீட்டுக்கு ஒருத்தரை கைது செய்றதுல என்ன சார் நியாயம்...?” என்றார் அவர்.

நடுக்குப்பம்

கைது படலத்தை போலீஸ் தற்காலிகமாக இப்போது நிறுத்தி வைத்துள்ளது... ஆனால், பெரும் எண்ணிக்கையிலான காவலர்கள் எங்கும் குவிக்கப்பட்டிருப்பது, உளவியல் ரீதியாக அவர்களை வதைத்துக் கொண்டிருக்கிறது.

“மாணவர்கள் மீது எந்த வருத்தமும் இல்லை”

நடுக்குப்பம்

இவ்வளவு அவஸ்தையிலும், அவர்களின் சுட்டு விரல் இளைஞர்களை நோக்கி நீளவில்லை. ஆம்... இந்த துயர நிலையிலும் மெரினாவில் போராடியவர்களைக் கொண்டாடுகிறார்கள். “எங்களுக்கு அவங்கமேல எந்தக் கோபமும் இல்லை சார்... அந்த புள்ளைங்க அமைதியாத்தானே போராடிக்கிட்டு இருந்துச்சுங்க... குப்பையை பொறுக்குச்சுங்க, போக்குவரத்தை சரி பண்ணுச்சுங்க... உண்மையா நாங்க அதுங்களுக்கு உதவி செஞ்சதை பெருமையாத்தான் சார் நினைக்கிறோம்”  என்கிறார்கள் அந்த மக்கள். 

இதுதான் இப்போது அங்கு புறநிலையும்... மீனவர்களின் அகநிலையும். அவர்கள் எல்லாவற்றையும் இழந்த பின்பும்... இளைஞர்களுக்கு உதவியதைப் பெருமையாக நினைக்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் இப்போது என்ன செய்யப் போகிறார்கள்...?

அனைத்தையும் இழந்து நிற்கும் அவர்களுக்கு ஜல்லிக்கட்டு குறித்தும் தெரியாது, நாட்டு மாடு, பால் அரசியல், பெரு நிறுவன அரசியல் என எதுவும் தெரியாது. அவர்கள், உங்களுக்கு உதவியது, எதையும் எதிர்பார்த்தும் அல்ல. 'நம் பிள்ளைகளை நாமே கைவிட்டு விடக்கூடாது' என்ற எண்ணம் மட்டும்தான் காரணம். பார்ப்பதற்கு கரடுமுரடாக இருக்கும் அவர்களின் எளிய மனம், படித்த நம்மை விட நிச்சயம் மேன்மையானது. அவர்கள் மட்டும் இல்லையென்றால், நிச்சயம் உங்களால் ஏழுநாள் போராடி இருக்க முடியாது. அவர்கள் உங்களுக்கு உதவினார்கள்... அதனால், காவல்துறை கைது செய்து விடுமோ என்ற பயத்தில் தற்போது நள்ளிரவில் வீதியில் நிற்கிறார்கள். ஒரு பாக்கியம்மா உங்களுக்கு தண்ணீர் கொடுத்தார்... மற்றொரு பழனி உங்களுக்கு உணவு விநியோகம் செய்ய உதவி செய்தார்... அப்படிப்பட்ட அந்த மீனவ மக்கள் இன்று செய்வதறியாது திகைப்புடன் நின்று கொண்டிருக்கிறார்கள். இப்போது நீங்கள் அவர்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்...? அவர்கள் வாழ்வாதாரம் அனைத்தும் நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது... அதனை மீட்க வேண்டும்தான். ஆனால், இப்போது அதுமட்டும் போதாது. நீங்கள் அவர்களுடன்தான் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையை தர வேண்டும். அவர்களைச் சந்தியுங்கள்... 'எங்களுக்காக நின்றவர்களுக்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம்' என்ற நம்பிக்கையை விதையுங்கள்.  அவர்கள் மனதில் ஏற்படும் நம்பிக்கையில்தான், உங்கள் போராட்டத்தின் உண்மையான வெற்றி இருக்கிறது. அவர்கள் ஆன்மாவில் ஒரு கடல் இருக்கிறது. அந்த கடலை காப்பாற்றுங்கள்... ஏனென்றால் அந்த கடல்தான் உங்களுக்கு துணை நின்றது!

http://www.vikatan.com/news/coverstory/78716-truth-behind-the-police-atrocities-on-fishermen.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.