Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவர்னர் மிரட்டலால் அதிகாலை அட்டாக்!

Featured Replies

மிஸ்டர் கழுகு: கவர்னர் மிரட்டலால் அதிகாலை அட்டாக்!

 

மிழ்நாடு பெரும் புரட்சியைப் பார்த்துக்கொண்டு இருக்கிறது. இதை சமாளிக்கத் தெரியாமல் தமிழக அரசு திணறிக்கொண்டு இருக்கிறது” என்றபடியே கழுகார் வந்து குதித்தார்!

p44big.jpg‘‘தலைநகர் சென்னை தொடங்கி தென் மண்டலமாம் மதுரை தாண்டியும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் கடந்த 10 நாட்களாக அமைதியான வழியில் நடந்து வந்தது. மாநில அரசு ஓர் அவசரச் சட்டத்தைத் தயாரித்து ஒரே நாளில் மத்திய அரசின் அனுமதியை வாங்கிவிட்டது. ஆனால், இதைப் போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை. அதாவது, அவர்கள் ஏற்கும்வகையில் இவர்களுக்குச் சொல்லத் தெரியவில்லை. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தொடங்கி வைக்கப்போன முதல்வர் பன்னீர்செல்வமே தோல்வியைத் தழுவி திரும்பினார். 23-ம் தேதி சட்டசபை கூட இருந்தது. அதில் சட்டமுன்வடிவு நிறைவேற இருந்தது. சட்டமுன்வடிவு நிறைவேறியதும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லும் சூழல் இருந்தது. ஆனால், 23-ம் தேதி காலையில் போலீஸ் அதிகாரிகள் எடுத்த தவறான நடவடிக்கை, போராட்டத்தை இன்னும் மோசமானதாக ஆக்கிவிட்டது. அமைதியாக நடந்த போராட்டத்தை வன்முறைப் பாதைக்கு போலீஸே திருப்பிவிட்டது.”

‘‘ம்.”

‘‘கடந்த 17-ம் தேதி சென்னை கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் திரண்டார்கள்.

23-ம் தேதி காலை 5 மணி வரை காவல் துறை அவர்களை எதுவும் செய்யவில்லை. பெரும்பாலான நேரம் அந்த வட்டாரத்தில் போலீஸே இல்லை என்றும் சொல்லலாம். 22-ம் தேதி இரவில், ‘மறுநாள் காலையில் கூட்டத்தை கலைக்கப் போகிறார்கள்’ என்ற செய்தியை போலீஸ் பரப்பியது. 23-ம் தேதி காலை 6 மணிக்கு மயிலாப்பூர் போலீஸ் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் வந்து போராட்டக்காரர்கள் மத்தியில் பேசினார். அவசரச் சட்டத்தின் நகலைக் கொண்டுவந்து கொடுத்தார். அரசாங்கத்தின் நடவடிக்கையை அவர்களுக்குப் புரிவது மாதிரி எளிமையாக மைக்கில் விளக்கினார். ‘இப்போது போட்டுள்ள அவசரச் சட்டம் நிரந்தரச் சட்டமாக விரைவில் ஆகிவிடும். எனவே, கலைந்து செல்லுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். அப்போது, ‘எங்களது வழக்கறிஞர்கள் வர இருக்கிறார்கள். அவர்களிடம் ஆலோசனை செய்துவிட்டு மதியத்துக்குள் நாங்கள் கலைந்துவிடுகிறோம்’ என்று அவர்களும் அமைதியாகச் சொன்னார்கள். ‘இதனை ஏற்றுக்கொள்கிறோமா, இல்லையா’ என்று சொல்லாமலேயே, போராட்டக்காரர்களை மிரட்டி அனுப்ப ஆரம்பித்தது போலீஸ். பெண்கள், குழந்தைகள் என்று பார்க்காமல் பிடித்துத் தள்ள ஆரம்பித்தார்கள். கடற்கரையைவிட்டு வெளியேற வேண்டிய இளைஞர்கள், கடலை நோக்கிப் போனார்கள். அதன்பிறகு விபரீதம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. எங்கே போய் நிற்கும் என்று தெரியவில்லை.”

p44c.jpg

p44d.jpg

‘‘பிரச்னையைச் சமாளிக்கத் தெரியவில்லையா?”

‘‘ஆமாம். அவசர அவசரமாக அவசரச் சட்டம் கொண்டு வர முடிந்த அரசாங்கத்தால், மக்களை மனம் மாற்ற முடியவில்லை. தொடர்ச்சியாகப் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். அமைச்சர்கள் குழு, அதிகாரிகள் குழு அமைத்திருக்க வேண்டும். பன்னீர் பதுங்கியபடியே இருந்தார். ‘தடியடி நடத்தி விடக்கூடாது’ என்று முதல்வர் சொல்லி இருக்கிறார். ஆனால், மனமாற்றம் செய்வதற்கான வேலைகளில் இறங்கவில்லை. ‘அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்திவிட்டால் மெரினாவில் கலைந்துவிடுவார்கள்’ என்று முதல்வர் சொல்லி இருக்கிறார். அலங்காநல்லூரிலும் நடத்த முடியவில்லை. அங்கு போய்விட்டுத் திரும்பிவந்த முதல்வரிடம், கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிக்கை கேட்டுள்ளார். ‘இத்தனை நாட்களாகப் போராட்டத்தை அடக்க என்ன செய்தீர்கள்?’ என்ற ரீதியில் கவர்னர் p6aa10.jpgகேள்வி எழுப்பி உள்ளார். மத்திய அரசும் இப்படி போராட்டம் தொடர்ந்து வருவதை விரும்பவில்லை. மத்திய உளவுத்துறை அனுப்பிய அறிக்கையில், ‘போராட்டக் களத்தில் பிரதமர் மீது அதிகப்படியான தாக்குதல் தொடுக்கப்படுகிறது. அவரைத்தான் திட்டுகிறார்கள். இந்தப் போராட்டத்துக்குள் மாவோயிஸ்ட்டுகள் நுழைந்துவிட்டார்கள். தனித்தமிழ்நாடு கேட்பவர்களும் சேர்ந்துவிட்டார்கள்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம், தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டுள்ளது. ‘ஜனவரி 23-ம் தேதி காலையில் சட்டசபையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் உரை ஆற்ற வேண்டும். அதற்குள் போராட்டத்தைக் கலையுங்கள்’ என்று கவர்னர் மாளிகையில் இருந்து தகவல் வந்தது. அதனால்தான் போலீஸார் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் உள்ளே குதித்தார்களாம்.”

‘‘தமிழகத்துக்குத் துணை ராணுவப் படையினரை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் தயாரானதாகச் சொல்லப்படுகிறதே?”

‘‘ஆமாம்... அப்படித்தான் டெல்லி உயர் அதிகாரிகள் சொல்கிறார்கள். பிரதமர் மோடி, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஏதும் செய்ய முடியாது என்று ஜனவரி 19-ம் தேதியன்று தமிழக முதல்வரிடம் சொன்ன தகவல் வெளியானதும், மத்திய அரசு அலுவலகங்கள் பக்கம் போராட்டக்காரர்களின் பார்வை திரும்பியது. ரயில் மறியல் போராட்டங்கள் ஆங்காங்கே நடந்தன. இந்த நிலையில், சென்னையில் உள்ள மத்திய உளவுத்துறையினர் டெல்லியைத் தொடர்புகொண்டு எச்சரித்தனர். அதையடுத்து, மத்திய அரசின் அலுவலகங்களின் பாதுகாப்புக்காக துணை ராணுவத்தினரை அனுப்ப ரெடியானார்களாம். அந்த சமயத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில்தான் இருந்தார். இதுபற்றி அவரிடமும் மத்திய உள்துறை அதிகாரிகள் எடுத்துச் சொல்ல முயன்றதாகத் தகவல். அதே நேரம், ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு சார்பில் அவசரச் சட்டம் ரெடி செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஓ.பி.எஸ் பிஸியாக இருந்தார். அவரிடம் இதை நேரடியாக இல்லாமல், தகவலாகச் சொல்லி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. ‘அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் மாநில அரசு கேட்கும்’ என்றாராம் பன்னீர்.’’

p44b.jpg

‘‘இந்தப் பிரச்னையின் கொதிநிலையை மத்திய அரசு உணர்ந்து இருந்ததா?”

‘‘தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்களுக்குப் பிறகுதான் மத்திய அரசு இதனை உணர்ந்தது. ‘நாங்கள் அவசரச் சட்டம் தயாரிக்க முடியாது. தமிழக அரசு அவசரச் சட்டம் தயாரித்தால் அதற்கு உடனடியாக ஒப்புதல் கிடைக்கும்படி நாங்கள் செய்கிறோம். வெளிப்படையாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு நிலைப்பாட்டை நாங்கள் அறிவிக்க முடியாது’ என்றாராம் பிரதமர்.

அ.தி.மு.க-வின் எம்.பி-க்கள் பிரதமரையும், ஜனாதிபதியையும் சந்திக்க இருப்பதாக சசிகலா சொல்லியிருந்தார். அப்படி ஏதும் நடக்கவில்லை. எம்.பி-க்கள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைத்தான் சந்தித்தனர். டெல்லியில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்... முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமரைச் சந்திக்க சென்ற பிறகு, தமிழ்நாடு இல்லத்தில் அனைத்து எம்.பி-க்களும் இருந்தனர். திருத்தணி ஹரி, வனரோஜா போன்றவர்கள் தம்பிதுரையிடம் பல கேள்விகளைக் கேட்டனர். அப்போது, ‘கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவரான வேணுகோபால் பெயரில் பிரதமரிடம் அப்பாயின்ட்மென்ட் கேட்காமல், உங்கள் பெயரில் நான்கு முறை கேட்டீர்கள். அதனால்தான் அனுமதி கிடைக்கவில்லை. நாங்களும் போக முடியவில்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள்.’’

‘‘இரண்டாம் நாளும் டெல்லியில் முகாமிட்டார்களே எம்.பி-க்கள்?’’

‘‘ஆமாம். முடிவு தெரியாமல் டெல்லியில் இருந்து கிளம்ப முடியாது என்ற நிலை முதல்வர் மற்றும்  எம்.பி-க்களுக்கு ஏற்பட்டது. பிரதமர் பதிலில் திருப்தி இல்லாமல் போன நிலையில், ‘தமிழக முதல்வரைப் போய் உள்துறை அமைச்சரைப் பார்க்கச் சொல்லுங்கள்’ என்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் சொல்லியுள்ளார்கள். அவர் இந்தத் தகவலை தமிழ்நாடு இல்லத்தில் இருந்த ஓ.பி.எஸ்-ஸிடம் சொல்லியுள்ளார்.

அதன்பிறகுதான் உள்துறை அமைச்சகத்தை நாட எம்.பி-க்கள் முடிவு செய்தார்கள். டெல்லியில் இருந்த ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான் முழு மூச்சில் இதற்கான வேலைகளில் இறங்கினார்கள். இந்த சட்டத் திருத்தம் வேண்டும் என்றால் மூன்று துறைகளில் ஒப்புதல் பெறவேண்டும் என்ற சிக்கலும் இருந்துள்ளது.’’

‘‘அப்படியா?’’

p44a.jpg‘‘உள்துறை அமைச்சரை சந்தித்தபோது ‘மூன்று துறைகளில் ஒப்புதல் தேவை என்பதால் நீங்கள் திங்கள்கிழமை வரை அவகாசம் தாருங்கள்’ என்று கேட்டதும், பதறிவிட்டாராம் முதல்வர். ‘தமிழ்நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. ஒரு நாள்கூட எங்களால் கால தாமதம் செய்ய முடியாது’ என்று அழுத்தம் கொடுத்துள்ளார். அதன் பிறகுதான் ‘சரி, சட்டத் திருத்தத்துக்கான வரைவுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். உங்கள் கேபினெட் கூட்டத்தைக் கூட்டி அவசரச் சட்ட தீர்மானத்தை நிறைவேற்றுங்கள். இதற்கு இறுதி ஒப்புதல் கொடுக்க வேண்டியது ஜனாதிபதிதான். அவரையும் சந்தித்துவிடுங்கள்’ என்று ஆலோசனை சொல்லியுள்ளார்.’’
‘‘மூன்று துறைகளும் எந்தச் சிக்கலும் செய்யவில்லையா?’’

‘‘கலாசாரத் துறை, வனம் மற்றும் சுற்றுச்சூழல், சட்டத்துறை ஆகிய மூன்று துறைகளும் இதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். ஆனால், கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் இருந்தார். இதனால், அங்கு ஒப்புதல் வாங்குவது காலதாமதம் ஆனது. இந்த விவகாரத்தில் தொடர்ந்து முனைப்பு காட்டிவரும் டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் ஆணையாளர் முருகானந்தம், உடனடியாக பொன்னாரின் தனிச்செயலாளரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான செந்தில் பாண்டியனை தொடர்புகொண்டு பேசியுள்ளார். கலாசாரத் துறை அமைச்சரின் தனிச்செயலாளரான ரவீந்தரும், செந்தில் பாண்டியனும் ஒரே பேட்ச் அதிகாரிகள். எனவே, செந்தில்பாண்டியன் ரவீந்தரிடம் தமிழகத்தின் நிலவரம், ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் குறித்து பேசியுள்ளார். அதன் பிறகுதான் கலாசாரத் துறை அமைச்சகம் விரைவாகச் செயல்பட்டு அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, விஜயகுமார், பூவலிங்கம், சின்னதுரை, முருகானந்தம் ஆகியோர் அடங்கிய ஐவர் படைதான் முழுவீச்சில் இதற்கான வேலைகளைக் கவனித்தவர்கள். இதற்கு முக்கியக் காரணமானவராக இன்னொருவரைச் சொல்கிறார்கள்.’’

‘‘அவர் யார்?”

‘‘மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் தனிச் செயலாளராக இருக்கும் சரவணக்குமார் ஐ.ஏ.எஸ். தமிழகத்தைச் சேர்ந்த இவர், பீகார் மாநில கேடர் அதிகாரி. மூன்று மத்திய துறைகளுக்கும் இந்த அவசரச் சட்ட நகலுடன் சென்று அதிகாரிகளிடம் நம் பாரம்பர்யம் பற்றிச் சொல்லிக் கையெழுத்து வாங்கியதன் பின்னணியில் இவர் இருந்தாராம். ‘இது காளை வதைதானே? எதற்காக இப்படி ஒரு சட்டத்தை ஆதரிக்கிறீர்கள்?’ என்று கேட்டவர்களிடம், ஜல்லிக்கட்டுக்கும் தமிழ்ப் பாரம்பர்யத்துக்கும் உள்ள தொடர்பை முழுமையாக விளக்கி உள்ளார். அதன்பிறகுதான் அதிகாரிகள் கையெழுத்துப் போட்டார்களாம்” என்றபடியே எழுந்த கழுகார், ‘‘சட்டசபையை முன்பே கூட்டி அ.தி.மு.க. அரசு ஒரு வாரத்துக்கு முன்னால் இந்த நடவடிக்கையை எடுத்து இருந்தால் இவ்வளவு வேதனைகள் நடந்திருக்காது” என்றபடி பறந்தார்.


p44.jpg

சி.பி.ஐ. அதிகாரி சந்தித்தது ஏன்?

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி கிளம்புவதற்கு முன்பு, அவரைத் தென் மண்டல சி.பி.ஐ இணை இயக்குநர் நாகேஸ்வர ராவ் திடீரென சந்தித்தார். ‘இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது’ என்று சொல்லப்பட்டது. ஆனால், ‘மத்திய அரசின் மறைமுக பிரஷருக்கான சிக்னல் இது’ என்றே தமிழக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

‘‘ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பன்னீர்செல்வம், மோடியைச் சந்திக்க கிளம்பிய நேரத்தில் சி.பி.ஐ இணை இயக்குநர் முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்கிறார் என்பது சாதாரண விஷயமாக இருக்க முடியாது. ரெய்டு பீதியில் இருந்தவர்களின் வயிற்றில் இந்தச் சந்திப்பு புளியைக் கரைத்தது என்றே சொல்லலாம். அதைவிட முக்கியமான விஷயம்... டெல்லியில் அவசரப்பட்டு மத்திய அரசுக்கு எதிராக  மீடியாக்களிடம் பேசிவிடக் கூடாது என்கிற அஜெண்டாவுடன்தான் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கும் என்கிறார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக மக்கள் சந்தேகித்தனர். பலர் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தனர். ஜெயலலிதாவின் மரணப் பின்னணியை விசாரிக்கச் சொல்லி, மத்திய அரசிடம் இரண்டு புகார் கடிதங்கள் சென்றன. அவை, சி.பி.ஐ-யை நிர்வாகிக்கும் மத்தியப் பணியாளர் நலத்துறையிடம் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து அனுமதி கிடைத்தால், சி.பி.ஐ களத்தில் இறங்கும். மத்திய அரசு தானாக எதையும் செய்யாமல், முறையான வழியில் முடிவெடுத்தமாதிரி வெளியில் சொல்லிக்கொள்ளவே இந்த வகையில் செயல்படுகிறது. இதையெல்லாம் நேரடியாக சி.பி.ஐ இணை இயக்குநர் சொல்லாவிட்டாலும், சந்திப்பின் பின்னணி இதுவாகத்தான் இருக்கும்” என்றும் சொல்கிறார்கள்.

http://www.vikatan.com/juniorvikatan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, நவீனன் said:

இந்தப் போராட்டத்துக்குள் மாவோயிஸ்ட்டுகள் நுழைந்துவிட்டார்கள். தனித்தமிழ்நாடு கேட்பவர்களும் சேர்ந்துவிட்டார்கள்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

போராடியவர்கள்  கொஞ்சம் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு விட்டார்களோ என்றுதான் நான் நினைக்கிறேன். இப்போதைக்கு சல்லிக்கட்டுடன் மட்டும் நின்றிருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.