Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜல்லிக்கட்டு...

Featured Replies

ஜல்லிக்கட்டு... (1)... 

 

எழுத்தாளர் லதா சரவணன் வழங்கும் பொங்கல் சிறப்பு மினி தொடர் கதை.. ஜல்லிக்கட்டு.

 

 10 மணிக்கே ரோடு வெறிச்சோடிப் போயிருந்தது, ராக்காயியின் இட்லிக் கடையில் மட்டும் கொஞ்சம் கூட்டம் சொச்சமிருந்தது. தூங்காநகரம் என்று பெயர் பெற்ற மதுரையின் தெருக்களில் வண்டிகள் தங்கள் டயர்களை செலுத்தி ஒவ்வொரு வீட்டு வாயிலில் போட்ட கோலத்திற்குள் பாகப்பிரிவினையை ஏற்படுத்தியிருந்தது. பிள்ளைகள் ரோட்டில் ரெயில் வண்டி விட்டு விளையாடிக் கொண்டு இருந்தார்கள். தெருமுனையில் இளைஞர் சங்கத்தில் தனுஷ் கொலைவெறிப்பாடலை ரேடியோவில் பாடிக்கொண்டு இருந்தார்.

 

ஒழுங்கா சாப்பிடறியா ? இல்லை பூச்சாண்டிகிட்டே பிடிச்சிக்கொடுத்திடவா என்று குழந்தையிடம் போராடிக்கொண்டிருந்த மனைவியை ரசித்தபடியே கணவன் ஏண்டி பிள்ளையை வைய்யறே ? என்று சீண்டினான்.

Jallikkatu, a mini Pongal special series

யாரு நானு....உங்கப் பிள்ளைதேன் என்னைய பாடாய்ப்படுத்துதே?! பொழுது விடிஞ்சு இத்தனை நேரமாகுது இன்னும் காலைச் சாப்பாட்டையே இது முடிக்கலை இனிமே எப்ப மதியத்திற்கு உலை வைக்க இன்னும் ராவுக்கு கண் அசரறவரைக்கும் ஓயாத வேலை அலுப்புடன் கடைசி வாய் சோற்றையும் பிள்ளையிடம் அவசரமாய் திணித்துவிட்டு பிள்ளையை உடல் கழுவினாள் அவள்.

ரேடியோ சப்தத்தையும் மீறி பறையின் சப்தம் கேட்டது. இதனால் சகலவிதமான ஜனங்களுக்கும் தெரிவித்துக்கொள்வது என்னென்னா, தைப்பொங்கலை முன்னிட்டு நம்ம ஊர்லே ஜல்லிக்கட்டும், குறவைக் கூத்தும் நடைபெறப்போவுது, கலந்து கொள்ள இளவட்டங்க உங்கப்பேரை பதிவு செய்யலாம். அவன் அடுத்த தெரு நோக்கி பறை அடித்துக்கொண்டே போக அவன் பின்னாலேயே அந்த ஊர் பொடிசுள் எல்லாம் சப்தம் எழுப்பியபடி சென்றன.

இந்த வருஷம் ஜல்லிக்கட்டுலே ஜமாச்சிடம்லே. ஆமா இப்படித்தான் போன வருஷம் சொன்னே ? கோட்டை விட்டுட்டு மேலத்தெரு பயலுக ஜெயிச்சாங்க, சுளையா முப்பதாயிரம் தூக்கி கொடுத்தாச்சு....

Jallikkatu, a mini Pongal special series

இந்த முறை அப்படியெல்லாம் நடக்காது நாமதான் ஜெயிப்போம் இது மட்டும் நடக்கலைன்னா நான் ஒரு பக்க மீசையை எடுத்துக்கறேன் அவர்களுள் தலைவன்போல் உள்ளவன் ஆவேசமாய் பேசிட மற்றவர்கள் அப்போ அடுத்த வாரத்தில் இருந்து நீ மீசையில்லாமத்தான் இருக்கப்போறீயோ ? என்று நக்கலடிக்க சபதம் செய்தவனின் முகம் இஞ்சியைத் தின்றவனைப் போல் ஆனது.

Jallikkatu, a mini Pongal special series

ஏம் மச்சான் இந்த வருஷம் ஏதோ பஞ்சயாத்து தடை பண்ணிச்சுன்னும் ஜல்லிக்கட்டு நடக்காதுன்னும் சொன்னீயளே ?

பஞ்சாயத்து இல்லைடி ஹை கோர்ட்டு ஜல்லிக்கட்டுங்கிற பேர்ல, மாடுகளை துன்புறுத்துறோம் என்று பிராது கொடுத்து இருக்காங்களாம் அதனால ஜல்லிக்கட்டை நிறுத்தணுமின்னு தடை விதிக்க இருந்தது, சரி சரி நானும்போய் பேரு கொடுத்துட்டு வந்திடறேன்.

இன்னும் எந்த குமரியை மாட்டை அடக்கி கட்டப்போறீங்க, ஒரு பிள்ளைக்குத் தகப்பனா உருப்படற வழியப் பாருங்க. மனைவியின் நொடிப்பிற்கு சிரித்தபடியே வெளியேறினான் அவன்.

பொங்கல் நெருங்கிட்டது இந்த முறை ஜல்லிக்கட்டுக்கு நம்ம காளைகளை தயார் செய்யணும் நீங்க நாளைக்கே அதுக்குண்டான ஏற்பாடுகளைப் பாருங்க, நம்ம மாட்டைப் பார்த்து அவனவன் மிரளணும். மீசையைத் தடவி விட்டபடியே பண்ணையார் சொல்ல,

அத நீங்க சொல்லணுமா அய்யா ?! நம்ம மாட்டை அடக்க இதுவரையில் யாருங்க இருக்கா ?! அதெல்லாம் ஜமாச்சிடலாம். சொக்கன் தலையைச் சொறிந்தபடியே நின்றிருந்தான்.

என்னடா பணம் வேணுமா ?

இல்லை அய்யா உள்ளாற மீன் குழம்புங்களா ?

வாசனை மூக்கைத் துளைக்குது. ஆத்தாகிட்டே சொல்லி ஒரு வா சோறு போடச் சொல்லுங்க ?!

Jallikkatu, a mini Pongal special series

பண்ணையார் பெரிதாய் சிரித்தபடியே. சரி போ கொல்லைப்பக்கமா வந்து நில்லு, வருவாங்க.

மரகதம் சொக்கனுக்கு கொஞ்சம் சோத்தப்போட்டு அனுப்பு கொல்லைப்பக்கம் உட்கார்ந்து இருக்கான்னு உள்ளே பார்த்து குரல் கொடுத்துவிட்டு ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாக கையில் புத்தகத்தோடு கிளம்பும் தன் மகள் ரோஜாவைப் பார்த்து என்னத்தா எங்கே கிளம்பிட்டே ?

பள்ளிக்கூடத்திற்குப்பா,,, இன்னிக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு..... வழக்கமான பள்ளிச்சீருடையில் சிறுமியாய் தெரியும் மகள் இன்று பட்டு பாவடையில் பளிச்சென்று கல் ஜிமிக்கியும், அட்டிகையும் போட்டு மீனாட்சி அம்மனைப்போல் தெய்வீக அழகுடன் தெரிந்தாள். இரு ஆத்தா நடந்து போவாதே நான் வண்டியிலே விடச்சொல்றேன் ஏலே பாண்டி ....

 

கொல்லைப்புறத்தில் மாட்டுக்கு புண்ணாக்கும் தண்ணீரும் வைத்துக்கொண்டிருந்த பாண்டி விறுவிறுவென்று ஓடிவந்தான் தலையில் இருந்த துண்டு தன்னால் கக்கத்திற்குப் போக அய்யா கூப்பிட்டீங்களா ?

ம்... பாப்பாவுக்கு பள்ளிக்கூடத்திற்கு போகணுமாம் கூடப்போயி விட்டுட்டு வா !

அய்யா மாட்டுக்குத் தண்ணீ காட்டுறேனுங்க நம்ம சொக்கனை அனுப்பட்டுமா ?

அவன் தண்ணீ காட்டுவான் நீ நான் சொன்னதை செய் போ வண்டியைப் பூட்டு, பதில் பேசாமல் வண்டியில் மாட்டைப் பூட்டிவிட்டு திவ்யாவிற்காக காத்திருந்தான் அவன். தந்தையிடம் சொல்லிவிட்டு வண்டியில் ஏறி அமர்ந்தாள் ரோஜா.

போகலாங்களா ?

ம்.... சுருக்கமாகவே வந்த பதிலில் அவளுக்கு தன் மேல் இருக்கும் கோபத்தை உணர்ந்து கொண்டான் பாண்டி, அமைதியாகவே பயணம் தொடங்கியது. இப்போது தெரு முனை ரேடியோவில் குடகு மலைக்காற்று பாடலில் கனகாவும், ராமராஜனும் உருகிப் பாடிக்கொண்டிருந்தார்கள்.

(தொடரும்)

http://tamil.oneindia.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நான் ஊருக்குத்தான் சின்னம்மா உங்களுக்கு இல்லை - ஜல்லிக்கட்டு (2)

 

எழுத்தாளர் லதா சரவணன் வழங்கும் பொங்கல் சிறப்பு மினி தொடர் கதை.. ஜல்லிக்கட்டு. இது பாகம் 2

 

 நீங்களும் கிளம்பணுமா? வள்ளி வீரய்யனைப் பார்த்து கேட்ட கேள்வியில் ஏக்கத்தின் சாயல் இருந்தது?

பின்னே நான் போகலைன்னா என்னாகுறது வள்ளி. எனக்கும் உன்னை எப்போதும் பார்த்துகிட்டே இருக்கணும் போலத்தான் தோணுது. என்ன செய்ய வேலைன்னு ஒண்ணு இருக்கே. உத்தியோகம் புருஷ லட்சணம் இல்லையா ? யாரும் அறியாமல் வீரய்யனும் வள்ளியும் கண்களாலேயேப் பேசிவிட்டு நகர்ந்தார்கள். வேலையின் பொருட்டு கிளம்பினாலும் வீரய்யனின் மனம் வள்ளியை நினைத்து துடித்தது. எத்தனை அழகு,,,, எப்போது பார்த்தாலும் சிறுதுளி சோர்வு இல்லாமல் அவள் நிற்பதும், நடப்பதும், பாந்தமாய் மஞ்சள் பூசிய முகத்தோடு, நெற்றியில் அகலமாய் வைத்த குங்குமத்தோடு என்னை வழியனுப்புகிறாள். இதைவிடவும் ஒரு காதலனுக்கு என்ன வேண்டும். அகமும் மனமும் நிறைந்து போக வீரய்யன் வேலைக்குக். கிளம்பினான்.

Jallikkatu- Pongal special story

என்னோட பேசமாட்டீங்களா ? ரோஜாவின் குரல். எதிர்பார்த்தபடியே சற்றுத் தள்ளிவந்ததும் பேச ஆரம்பித்துவிட்டாளே, ஒரு விநாடி மெளனத்திற்குப்பிறகு சொல்லுங்க சின்னம்மா என்றான்.

நான் ஊருக்குத்தான் சின்னம்மா உங்களுக்கு இல்லை....என்றாள் உஷ்ணமாய்....உங்க முடிவுதான் என்ன ?

ரோஜா நீ சின்னப்பொண்ணு, இது அலைபாயற வயசுதான். ஆனா அதுக்கு ஒரு தராதரம் வேண்டாமா, நம்ம இரண்டு பேருக்கும் எப்பவும் ஒட்டாது. பேசாமல் நல்லா படி அப்பா பாக்குறே நல்ல பையனை கல்யாணம் செய்துக்குகோ, என்னதான் நான் உங்க ஜாதியைச் சேர்ந்தவனாய் இருந்தாலும், நமக்குள்ள ஏழை பணக்காரன்ங்கிற பிரச்சனை இருக்கு, இது சினிமா இல்லை ரைடக்டர் சொன்னதும் கதாநாயகியின் அப்பாக்கு மனசு மாற ?! வாழ்க்கை சின்னப்பிள்ளையோட மனசைக்கெடுத்த பாவம் எனக்கு வேண்டாம்.

என்னால முடியலை பாண்டி உங்களை மறக்கிறதுக்கு. நீங்க அப்பாவுடைய சுபாவத்தைப் பற்றி தெரியாம சொல்றிங்க, அவரு ரொம்ப தங்கமானவரு, நான் சொன்ன எதையும் தட்டமாட்டாரு. அப்பாவிடம் சம்மதம் வாங்குவது என் பிரச்சனை, உங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லாம... இப்பவாவது சரின்னு சொல்லுங்களேன்.

 

Jallikkatu- Pongal special story

ரோஜாவைப் பார்த்துப் புன்னகைத்தான். இப்பத்தான் எனக்கு பயம் அதிகமாகுது ரோஜா,

வாழ்வோ சாவோ அது உங்க கூடதான் பாண்டி, நான் உங்களை விட்டுத் தருவதா இல்லை, உங்களுக்கு இஷ்டம் இல்லைன்னா சொல்லிடுங்க நான் செத்துப்போயிடறேன், அதுக்காக தட்டிக்கழிக்காதீங்க. நீங்க சரின்னு சொன்னாப் போதும், நான் இப்பவே உங்க கூட வந்திடறேன்.

ச்சீ இது தப்பு ரோஜா....எப்படி வேண்டுமானாலும் வாழலான்னு நினைக்கிறது வாழ்க்கை இல்லை. எனக்கும் உன்மேல அன்பு இருக்கு, நம்பிக்கைத் துரோகின்னு என்னை நினைச்சிடுவாங்களோன்னு பயமாகவும் இருக்கு. நானே உங்க அப்பாகிட்டே பேசறேன் அவர் ஒப்புக்கொள்ளும் வரையில் காத்திருப்போம் எத்தனை பிரச்சை சிக்கல்கள் வந்தாலும் எதிர்த்துப் போராடுவோம். ஓடிப்போவது மட்டும் வேண்டாம். யாருடைய அழுகைக்கும் கோபத்துக்கும் மத்தியில் நம்ம காதல் வளரவேண்டாம். உயிர் போனால் அது உனக்காக போகும் பாண்டியின் உணர்ச்சி வசமான பேச்சு ரோஜாவைச் சந்தோஷத்திற்குள்ளாக்கியது. இவர்களுக்குள் நடந்த சம்பாஷனைகள் அனைத்தும் வீரய்யன் கவனித்துக்கொண்டே வந்தான் அவன் பார்ப்பதையும் கவனிப்பதையும் இவர்கள் இருவரும் உணரும் மனநிலையில் இல்லை. காதல் கண்கட்டு வித்தையாயிற்றே,

Jallikkatu- Pongal special story

அன்றிரவு கொல்லைப்புறத்தில் கிணற்றடியின் மேல் அமர்ந்துகொண்டு ரோஜாவின் அறை ஜன்னலைப் பார்த்துக் கொண்டு இருந்தான் பாண்டி. அவர்களின் மெளன சம்பாஷணைகளை நமுட்டுச் சிரிப்போடு பார்த்தபடியே வள்ளியிடம் சொல்லிக்கொண்டு இருந்தான் வீரய்யன். நிஜமாவா சொல்றீங்க ரோஜாம்மா, பாண்டியை விரும்புது. அதிசயமா இருக்கே ?! வள்ளியின் முகத்தில் விரிந்த ஆச்சரியத்தோடு அவள் முகத்தில் வீசிய மந்தகாச உணர்வையும் ரசித்தபடியே தலையசைத்த வீரய்யன். நம்மோட மனசு ஒன்றிப்போனா மாதிரி அவங்க மனசும் ஒன்றிப்போச்சு....!

அது சரி நாம இரண்டுபேரும் ஒரே இனம் அவுக அப்படியா ? பெரியய்யாவுக்கு தெரிஞ்சா ?

பிரச்சனை வரும்தான். எது எப்படி போனாலும் அவங்க அன்பிலே களங்கம் இருக்கிறாப்போல எனக்குத் தோணலை, நான் முடிவு பண்ணிட்டேன் அவங்க காதலுக்கு உதவி செய்யறதா நீ என்ன சொல்றே ?

ம்.... செய்யுங்க. அப்படியே நம்ம விஷயத்தையும் மறந்திடாதீங்க. இன்னும் இரண்டு நாளில் தை பிறக்கப்போகுது. ஜல்லிக்கட்டு இருக்கு அது முடிந்ததும் நம்முடைய......

 

Jallikkatu- Pongal special story


நம்முடைய... போங்க வெட்கமாயிருக்கு....

வள்ளியின் வெட்கத்தை ரசித்தபடியே தன் இருப்பிடத்திற்கு நகர்ந்தான் வீரய்யன்.

(தொடரும்)

Read more at: http://tamil.oneindia.com

  • தொடங்கியவர்

காளையை அடக்கட்டும்.. அப்பத்தான் அவனுக்கு நீ... ஜல்லிக்கட்டு (3)

 

எழுத்தாளர் லதா சரவணன் வழங்கும் பொங்கல் சிறப்பு மினி தொடர் கதை.. ஜல்லிக்கட்டு. இது 3வது அத்தியாயம்.

 

 ஊரே திருவிழாக் கோலம் பூண்டு இருந்தது. தைத்திருநாள் பிறக்கப்போகிறது. வீடுகளுக்கு வெள்ளையடித்து, புதுத்துணியுடுத்தி பொங்கல் சமைத்து கருப்புப்படையல் இட்டு என எல்லாரும் அவரவர் வீட்டுப் பணிகளில் மும்முரமாய் இருக்க, பண்ணையார் எண்ணெயில் இட்ட பட்சணமாய் கொதித்துக் கொண்டு இருந்தார். காலையில் வரை பெண்ணிற்கு பட்டும், நகையும் தேர்ந்தெடுத்து தைநாளில் உடுத்தி அழகு பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டவர். இப்போது தீயை மிதித்ததைப் போல அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தது கண்டு ரோஜாவின் தாய்க்கும் கலக்கமாகத்தான் இருந்தது?! கணவரின் கோபம் அறிந்தவராயிற்றே அவரிடம் பேசக்கூட பயமாய் இருந்தது. அப்பாவைப்பற்றி நன்கு தெரிந்தும் இந்த பெண் ஏன் இப்படி பண்ணிட்டது. மெல்ல பேசிப்பார்த்தாள்.


ஊரே கையெடுத்து வணங்கும் மனிதரின் மகள் தன்னிடம் வேலை பார்க்கும் ஒருவனை விரும்பினால் அவரின் கெளரவம் என்னாவது ? இப்போ என்னங்க பண்றது. நான் வேண்டுமானால் அவகிட்டே பேசிப்பார்க்கவா.,.. ?!

Jallikkatu- Pongal story

வேண்டாம் மரகதம் பேசுவதால் அடிப்பதால் அவளின் வைராக்கியம் தான் அதிகமாகும், அது நமக்கு நல்லது அல்ல. அவ வயசு அப்படி, நம்ம மேலத்தெரு முனுசாமியோட பொண்ணு இது மாதிரி விஷயத்திலே அவன் அப்பனையே எதிர்த்து ஓடிப்போச்சு அப்படியேதாவது நடந்திட்டா நான் வெளியே தலைகாட்ட முடியாது. இதை வேறுவிதமாகத்தான் கையாள வேண்டும். நான் முடிவு செய்துவிட்டேன் என்ன செய்வது என்று ?! தன் திட்டத்தை மனைவியிடம் விரிவாக விளக்கத் துவங்கினார் பண்ணையார்.

நல்ல யோசனைதான்தாங்க ஆனா .... கணவரின் முறைப்பிற்கு பயந்து நான் இப்பவே ரோஜாவைக் கூப்பிடறேன்.

கட்டியிருந்த புடவையின் நுனியை சுற்றிச் சுற்றிப் பிரித்துக்கொண்டு இருந்தாள் ரோஜா. அப்பாவிற்கு இத்தனை சீக்கிரம் விஷயம் தெரியும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை, எப்படியும் ஒரு நாள் தெரியப்போவதுதான் என்றாலும், அவர் நல்ல மூடில் இருக்கும் போது சொல்லுவோம் என்று நினைத்திருந்தாள், ஆனால் .... இப்போது எப்படி பாண்டியிடம் தைரியமாக சொல்லியபோதும், அப்பாவின் முன் பேசிட நாக்கு எழவே இல்லை. தொண்டைச் செறிமிக்கொண்டே அவர் பேச ஆரம்பித்தார்.

 

நான் விஷயம் எல்லாம் கேள்விப்பட்டேன் ரோஜா. முதல்ல எனக்கு அதிர்ச்சியா இருந்தாலும் உம்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு நீ எந்த தவறும் செய்யமாட்டேன்னு.... பாண்டி நல்லபையன்தான். என்ன நம்ம கிட்டே கைநீட்டி சம்பளம் வாங்குறவன் சொல்லிக்கிறாமாதிரி எந்த சொத்தும் இல்லை, இவன்தான் என் மருமகன்னு நாளைக்கு ஊருக்குள்ளே சொன்னா என் மானம் போவது உறுதி, சற்று நிறுத்திவிட்டு பேச்சைத் துவங்கினார். அதற்குள் ரோஜாவின் இதயம் ஏகத்திற்கும் துடித்தது.

அதிலேயும் அவன் நம்ம வீட்டுலேயே இருக்கிறவன்........! திடீர்னு உனக்கும் அவனுக்கும் கல்யாணமின்னு சொன்னா சின்னஞ்சிறுசுங்க என்ன தப்பு பண்ணினாங்களோ அதுதான் பண்ணையார் காதுங்காதும் வைச்சாமாதிரி கல்யாணத்தை முடிச்சிட்டாருன்னு பேசிடுவாங்க, ஊரு வாய மூட முடியாது. நான் ஒரு முடிவு செஞ்சிருக்கேன் நீ அதுக்கு கட்டுப்படுவேன்னு நினைக்கிறேன்

அப்பா நான் ....

இரும்மா நான் இன்னும் பேசி முடிக்கலை, நாளை மறுநாள் நடக்கப்போற நம்ம ஜல்லிக்கட்டுலே பாண்டி கலந்துகிட்டு நம்ம காளையை அடக்கட்டும், நம்ம காளை அடக்கிறவனுக்கு பணமுடிப்போட அவன் வீரத்தை மெச்சி என் பொண்ணை கல்யாணம் செய்து தர்றதா சொல்லிடறேன். அப்ப யாரும் எதுவும் பேசவும் மாட்டாங்க. சொன்னபடி மாட்டை அடக்கிட்டா நானே உன்னை கல்யாணம் பண்ணித்தர்றேன். இது என் கெளரவ பிரச்சனை பாப்பா. என் மருமகன் பணக்காரன்ங்கிறதைவிட வீரன்னு சொல்லிக்க நான் பெருமைப்படறேன் உன்னைப் பெத்ததுக்கு அந்த பெருமையாவது எனக்கு கொடும்மா

 

அப்பா அவர் உயிருக்கு ஏதாவது ?

 

பெரிய இடத்துப்பொண்ணை கல்யாணம் செய்துக்கணுமின்னு ஆசையிருந்தா மட்டும் போதாது. அதுக்குரிய தகுதி வேண்டாமா ? அவன் வீரன்னும், உன் மேல எத்தனை ஆசை வைச்சிருக்கான்னும் இதிலே தெரிந்திடுமே. பயந்தாங்குளியா இருந்தா போட்டியிலே சேரவே மாட்டான். உம்மேல உண்மையான அன்பு வைச்சிருக்கானா இல்லை பணத்துக்காக காதலிக்கிறாமாதிரி நடிக்கிறானான்னு இதுலே தெரிஞ்சுபோயிடும். என்ன சொல்ற ? என்ன சொல்வாள் ?! வேண்டாம் என்றால் தன் காதலே பொய் என்றுதானே அப்பா பூடகமாக சொல்லுகிறார். ஆனால் போட்டியில் தவறுதலாக ஏதாவது ஆகிவிட்டால்,,, குழம்பிய அவள் மனதை படம் பிடித்தபடியே,, அவசரம் இல்லை ரோஜா.... நீ அவன்கிட்டே பேசிட்டு சொல்லு தலையைத் தடவி பாசமாய் அனுப்பிவைத்தார்.

என்னங்க நீங்க அவளைக் கூப்பிட்டு ஒரு நாலு அறையாவது விட்டுட்டு இதைப்பற்றி பேசியிருக்கலாம்.

விடு பிரச்சனையை தீர்க்கத்தான் பார்க்கணும் வளர்க்க இல்லை போ வேலையைப் பாரு....?! அவள் ஒருமுறை நொடித்துவிட்டு சென்றுவிட்டாள். பண்ணையார் சொக்கனை அழைத்துவர ஆளனுப்பினார்.

(தொடரும்)


Read more at: http://tamil.oneindia.com/art-culture/essays/jallikkatu-pongal-story-271700.html

  • தொடங்கியவர்

பாண்டி நீ ஜெயிச்சிடுவியா?... ஜல்லிக்கட்டு (4)

எழுத்தாளர் லதா சரவணன் வழங்கும் பொங்கல் சிறப்பு மினி தொடர் கதை.. ஜல்லிக்கட்டு. இது 4வது அத்தியாயம்

 

-லதா சரவணன்

வீடு நிசப்தமாய் இருந்தது, பண்ணையாரும் அவர் மனைவியும் கோவிலில் பூரண கும்ப மரியாதை பெற சென்றுவிட்டார்கள். பதினெட்டுப்பட்டியும் சேர்ந்து எடுக்கும் விழா என்பதால் மிகவும் விமரிசையாக நடக்கும். ரோஜா தலைவலி என்று போகவில்லை. அவளின் தனிமை அவசியம் என்று பண்ணையாரும் மனைவியை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். வீட்டில் யாருமில்லை என்னும் தைரியத்தில் கூட்டத்தில் இருந்து கழண்டு கொண்டு, ரோஜாவின் அறையில் அவள் மடியில் தலைவைத்துப் படுத்திருந்தான் பாண்டியிடம் தந்தை சொன்னதை கவலையோடு சொல்லிக்கொண்டு இருந்தாள் ரோஜா.

ப்பூ இவ்வளவுதானே இதுக்கா இப்படி பயப்படறே ? என் வீரத்தின் மேல் உனக்கு இதுதான் நம்பிக்கையா ?! காளையை அடக்கிட்டு தைரியமா உங்க வீட்டுப் படியேறி வந்து பொண்ணு கேட்கிறேன் வருத்தப்படாம இரு,

எனக்கென்னமோ பயமா இருக்கு பாண்டி, நீ ஜெயிச்சிடுவியா ? அகலமான கண்களில் எப்போது கொட்டுவேன் என்று நீர் எட்டிப்பார்த்தது. அவள் தலையை இலேசாத் தட்டி உனக்காக உயிரையும் கொடுப்பேன் ரோஜா.

 

 
Jallikkatu- Pongal series story
 

 

அவள் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள். வீட்டிலே யாருமில்லை கேள்வியிலேயே அவன் உஷ்ண பெருமூச்சு தோன்ற,

இல்லைன்னு தெரிந்துதானே வந்தீங்க என்று இன்னும் அவனை ஒட்டிக்கொண்டாள் ரோஜா.

அவன் அவளை காற்றுப்புகாதபடி இறுக்கமாய் அணைத்தான். பாண்டியின் காதிற்குள் கொட்டில்ல வீரய்யனும், வள்ளியும் மட்டும் இருக்காங்க.

ஓஹோ நல்ல துணைதான் அவங்க நம்மளை ஒண்ணும் தொந்தரவு செய்யமாட்டாங்க. நம்மைப் போலத்தான் அவங்களும். நமட்டுச் சிரிப்புடன் குறவைக் கூத்தில் இன்றைய ஆட்டம் என்ன தெரியுமா ?! மறுநாள் காளையடக்கப்போகும் காதலனை சந்தோஷமாக வழியனுப்புவதாம் என் காதலி எப்படி ?

ரொம்பத் தைரியம் தான் உங்களுக்கு ... ?! நான் போறேன் பா...!?!

அப்பாதான் அனுமதி கொடுத்தாச்சே... இன்றைய இரவு நம்ம கல்யாணத்திற்கு உறுதி கிடைச்ச சந்தோஷமா இருக்கட்டும். நீ எனக்கு கிடைச்சா நான் கட்டாயமா நாளைக்கு ஜெயிச்சிடுவேன் ரோஜா.... அவன் கைகள் அத்துமீறி விளையாடின, தனிமையும், இரவும் கைகோர்த்துக்கொண்டு கதவை அடைத்தது?! ரோஜா அவனிடம் ஒன்றினாள். இளமையின் சிரிப்பும், சிணுங்கலும், வீரய்யனையும், வள்ளியையும் கூட நகைப்பிற்குக் கொண்டு போனது.

கேட்டிங்களா ? ஜல்லிக்கட்டுலே வெற்றியடைஞ்சிட்டா சின்னம்மாவுக்கும், பாண்டிக்கும் கல்யாணமின்னு அய்யா சொல்லிட்டாராம். இனிமே எல்லாம் உங்க கையிலேதான் இருக்கு. அவங்க கல்யாணம் நல்லபடியா நடந்ததும் நம்முடைய ஆசையையும் நிறைவேற்றிக்கலாம். இப்போ என் மனசு சந்தோஷமா இருக்கு குறவைக் கூத்து முடிய இன்னும் நாழியாகும் நாம போய் பார்க்கலாமா ?

இல்லை வள்ளி குறவைக் கூத்தைவிடவும் உன்கூட இருக்கும் நேரம் இனிமையா இருக்கு. இந்த நிலவொளியில் நான் இன்று என் இருப்பிடத்திற்குப் போகாமல் உன்னையே பார்த்துக்கொண்டு இருக்கப்போகிறேன். வீரய்யனின் காதற் கணைகள் லட்சுமியின் இதயத்திற்குள் நுழைந்தது!

(தொடரும்)

http://tamil.oneindia.com/art-culture/essays/jallikkatu-pongal-series-story-271736.html

  • தொடங்கியவர்

வாய்மொழியற்ற மெளனங்களின் வார்த்தைகள்... ஜல்லிக்கட்டு (இறுதி அத்தியாயம்)

 

எழுத்தாளர் லதா சரவணன் வழங்கும் பொங்கல் சிறப்பு மினி தொடர் கதை.

. ஜல்லிக்கட்டு. இது இறுதி அத்தியாயம்.

 

ஜல்லிக்கட்டுக்கு தயாராவதற்கு என்று காளைகளுக்கு அலங்கரிக்கப்பட்டு, அதன் கொம்புகள் எல்லாம் கூர்மையாக சீவி விடப்பட்டது. வீரய்யன் பொங்கல் திருநாளின் புதுமையில் அழகாய் மங்கலாய் அலங்கரித்துக்கொண்டு நின்ற வள்ளியைப் பார்த்து மெல்லச் சிரித்தான். நான் போயிட்டு வர்றேன் என்று கண்களாலேயே விடைபெற்றான். திவ்யா வீரய்யனுக்கும், பாண்டிக்கும் ஆரத்தி எடுத்து பொட்டிட்டாள். லட்சுமி நான் முன்னாடி போறேன். நீ கொஞ்ச நேரம் கழித்து பின்னாலே வந்திடு,. உனக்கும் உன் வீரய்யனின் விளையாட்டைப் பார்க்க ஆவலாய் இருக்கும் இல்லையா ? என்று வள்ளியின் முகத்தோடு முகம் வைத்து தேய்துவிட்டு சென்றாள். அன்போடு அழைக்கும் அந்த குழந்தையின் வாழ்வில் இன்று நடக்கப்போகும் மங்கல நிகழ்வும் அதற்கடுத்து தனக்கும் வீரய்யனுக்கும் நடக்கும் நிகழ்வும் வெட்கத்தை அப்பிப் பூசச்செய்தது. வள்ளியும் கிளம்பிடத் தயாரானாள். கொட்டிலை விட்டு கிளம்புகையில் பண்ணையாரின் குரல் காதைக் கிறீயது.

Jallikkatu- Pongal special story

 

அவர்கள் இருவருக்கும் இடையில் நடைபெற்ற வார்த்தைகளைக் கேட்டதும், வள்ளி திகைத்துபோனாள். பொன்னைய்யன் காளையின் கொம்பை கூர்மையாக சீவிவிட்டு எண்ணெய்யோடு விஷத்தையும் சோத்து தடவியிருக்கிறானாம். தண்ணீர் காட்டும்போது கூடவே மதுவையும் சேர்த்து தந்திருக்கிறான். நிச்சயம் காளை நிதானத்தில் இருக்காது சீறிப்பாயும் அப்ப பாண்டியில்லே யார் வந்தாலும் அவங்க கதி அதோ கதிதான்.

கடவுளே ! இதென்ன கொடுமை, அய்யய்யோ என் கையை வைத்து கண்ணைக் குத்துகிறார்களே நடப்பதை எப்படியாவது தடுத்து நிறுத்திட வேண்டும் என்று ஓடினாள் வள்ளி

புளியங்கொம்பினால் வளையம் செய்து கழுத்தில் அணிவிக்கப்பட்ட காளைகள் திமிர்த்தனத்தோடு காட்சியளித்தது, பணமுடிப்பும், பரிசுகளும் மேடையில் குவிந்துகிடக்க ஊர்பெரியவர்களோடு பண்ணையாரும் நடுநாயகமாய் அமர்ந்திருந்தார். அவ்வப்போது பொன்னய்யனின் பக்கம் அவர் பார்வை போய் வந்தது, எல்லாம் சரியாக நடக்கவேண்டுமே ?! அவன் திமிறிக்கொண்டு இருந்த வீரய்யனை பார்த்தான். அந்தக் கண்களில் ஒரு வெறி இருந்தது. ஏதோ உடம்பெல்லாம் முறுக்கேறியது. யாரைப் பார்த்தாலும் சீறிப்பாய வேண்டும்போல் தோன்றியது வீரய்யனுக்கு. ஏன் இப்படி ? கொல்லைப்பக்கம் இருந்து வரும்போது கூட இந்த கோபம் மனதில் இல்லையே ? வள்ளி என்ன சொல்லி அனுப்பினாள். ஜல்லிக்கட்டில் பாண்டியிடம் தோற்றுவிடு அவர்களின் காதல் ஜெயித்துவிடும் நாமும் இணையலாம் என்று சத்தியம் வாங்கியிருக்கிறாளே ? வள்ளியின் நினைவும் முகமும் மனக்கண் முன் தோன்றியதும், அவனின் எண்ணம் சிதைந்தது மனதிற்குள் மதர்ப்பு விலகி ஒரு வித அமைதி குடிகொண்டது.

 

வாடி வாசல் வழியாக காளைகள் சீறிவந்தது. ஒலிப்பெருக்கியில் பாடல்கள் கதறின. யாருடைய காளை என்ன பரிசு என்று அறிவித்துக் கொண்டே இவ்வளவு என்று அறிவித்துக்கொண்டே இருந்தார்கள். அடுத்து ... பண்ணையாரின் பொலிகாளை வீரத்தின் திருவுறு காளை வீரய்யன் என்று அறிவிக்கப்பட்டது. யாருய்யா அடக்குவது. திடலில் பாண்டி வந்து நின்றான். உழைத்து உழைத்து உறமேறிய உடம்பு தலையில் சிகப்புத் துண்டும், இடுப்பில் வேட்டியையும் இறுக்கி கட்டியபடி நின்றான் அவன் கருத்த உடம்பில் வெய்யில் பட்டு மின்னிய வியர்வைத் துளிகள் வைரத்துளிகளால் ஜொலித்தது. கண்களால் பார்வையாளர்கள் பக்கம் மேய்ந்தான். ரோஜா கல்யாணப்பெண்ணைப் போல நின்றுகொண்டிருந்தாள். கலக்கமும் மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் ஒருசேர அந்தக் கண்களில் மின்னியது. வெற்றிபெறுவேன் மாலை சூடுவேன் என்று உறுதி மொழி தருவதைப் போல ஒருமுறை கண்களை அழுந்த மூடிவிட்டுத் திறந்தான். வாடிவாசல் வழியாக காளை சீறிக்கொண்டு வந்தது.

டேய் தயாரா இருக்கியா ?

பயமா இருக்குடா, நாம மாடு மேல மிளகாய்ப்பொடி தூவுவதை யாராவது பார்த்திட்டா

போடா லூசு உனக்கு பயமா இருந்தா நீ போ, அந்த மைனரு அவன் தோட்டத்திலே மாங்காய் அடிச்சதுக்கு கட்டி வைச்சு தோலை உரிச்சானே உனக்கு நினைவு இல்லை, இப்போ அவன் மாடுதான் அடுத்ததாய் போகப்போகுது, அதுக்கு அடியிலே நான் பொடி தூவுனா அதுக்கு கண்ணுமன்னு தெரியாம ஆக்ரோஷமா ஓடும். வலிதாங்காம கீழே விழும் அப்போ அவன் அசிங்கப்படுவான் இல்லை,

திடலுக்குள் நுழைந்திட்ட வள்ளியின் கண்கள் வீரய்யனைத் தேடின. வீரய்யனின் திமிலைப் பிடித்தபடி ஓடிக் கொண்டு இருந்தான் பாண்டி அதன் எண்ணெய் வழுவழுப்பில் ஒருதரம் கீழே விழுந்தான். பிறப்புறுப்பில் மிளகாய் தூவிய மைனரின் காளை வேகமாய் ஓடிவந்தது?! வீரய்யனை எதிர்பார்த்து நின்ற வள்ளியைக் குறிபார்த்து? அவள் தன்னை நோக்கி வரும் ஆபத்தை அறியவில்லை, பாண்டி- ரோஜாவின் காதலை எப்படியாவது சேர்த்துவிடவேண்டும் என்ற எண்ணமும் அதற்கு தடையாய் தன்னையும் அறியாமல் மாறிவிட்ட வீரய்யனையும் நோக்கியே மனம் இருந்தது?

 

நிமிடத்திற்குள் எல்லாம் முடிந்து விட்டது?! வள்ளி நிலைகுலைந்து கீழே கிடந்தது? ரத்தம் பீய்ச்சிக்கொண்டு இருக்க வள்ளி உடல் முழுக்க, சிகப்பாய் நனைத்தது, அய்யய்யோ என்று ஆங்காங்கே கூக்குரல் ஒலித்தது.வீரய்யன் திமிறிக்கொண்டு பாண்டியைத் தள்ளிவிட முயன்றது. வள்ளி கதறிக்கொண்டு இருப்பது தெரிந்தது. அதன் உடல் வலி மிகுதியில் தூக்கிப்போட்டது விழிகள் கண்ணீரில் நிரம்பிய போதும், பாண்டியின் கைகளில் அகப்பட்டு கிடந்த வீரய்யனின் விழிகளை தீண்டின. வாய்மொழியற்ற மெளனங்களின் வார்த்தைகள் காற்றில் கரைந்து கொண்டு இருந்தது?! அதன் விழிகளின் ஜீவன் மங்கிக்கொண்டே வந்தது. பாண்டியின் பிடி இறுகிக்கொண்டே வந்தது.

வீரய்யனோ வள்ளியிடம் எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்ற வேதனையில் தன் கொம்பை இலேசாக அசைத்து பாண்டியினை நோக்கி நகர்த்தியது. சுருக்கென்று வலியில் இடுப்பைப் பிடித்தபடி மல்லாந்து விழுந்தான் பாண்டி.....?! வீரய்யன் வேகமாய் சென்று வள்ளியிடம் நின்றான். வள்ளியின் கண்கள் நிலைகுத்தி நின்றது. அதில் வீரய்யனின் உருவம் தெரிந்தது,

முற்றும்

Read more at: http://tamil.oneindia.com/art-culture/essays/jallikkatu-pongal-special-story-jan-13-271789.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.