Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் பங்களாதேஷ் டெஸ்ட் போட்டி செய்திகள்

Featured Replies

வங்காள தேச அணியை குறைத்து மதிப்பிட மாட்டோம்: சஹா சொல்கிறார்

வங்காள தேச அணியை குறைத்து மதிப்பிட மாட்டோம் என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா குறிப்பிட்டுள்ளார்.

 
வங்காள தேச அணியை குறைத்து மதிப்பிட மாட்டோம்: சஹா சொல்கிறார்
 
இந்தியா - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 9-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்தியா வங்காள தேசத்தை குறைத்து மதிப்பிடாது என்று சகா கூறியுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பரான சகா, வங்காள தேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி குறித்து கூறுகையில் ‘‘ஐ.சி.சி.யின் டெஸ்ட் அணிகள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் நாங்கள் அவர்களை எளிதான அணியாக நினைக்கலாம் என்று கூறப்படலாம். ஆனால், மைதானத்தில் அவர்களை எதிர்கொள்வதற்கு முன்னாள் குறைத்து மதிப்பிடமாட்டோம். போட்டி நடைபெறும் அந்த நாளின் சூழ்நிலையை பொறுத்து இருக்கிறது. சூழ்நிலையை பொறுத்து நாங்கள் செயல்படுவோம்.

ஒவ்வொருவரும் மைதானத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புவார்கள். நாம் என்ன நினைக்கிறமோ, அதை சில சமயங்களில் செயல்படுத்த முடியாமல் போகலாம். இது உங்களது சிந்தனைகளை நல்ல ஆட்டத்திறனாக மாற்றுவதில் இருக்கிறது.

ஆஸ்திரேலியா அணி இந்தியா எப்போது வருகிறது என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், தற்போது வங்காள தேச டெஸ்ட் மீதுதான் எனது கவனம் இருக்கிறது. அவர்கள் இந்தியா வந்த பிறகு நாங்கள் அவர்களை பற்றி சிந்திப்போம்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/05205443/1066464/Not-Underestimating-Bangladesh-Says-Wriddhiman-Saha.vpf

  • தொடங்கியவர்

அஸ்வினுடைய கட்டுப்பாடு அவரை வித்தியாசப்படுத்துகிறது: சாஹிப் அல் ஹசன்

 

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், அவருடைய கட்டுப்பாட்டால் வித்தியாசப்படுகிறார் என சாஹிப் அல் ஹசன் கூறியுள்ளார்.

 
அஸ்வினுடைய கட்டுப்பாடு அவரை வித்தியாசப்படுத்துகிறது: சாஹிப் அல் ஹசன்
 
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். இவர் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்திய மண்ணில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி 9-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. இதில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் சுழற்பந்து வீச்சில் முக்கிய பங்கு வகிக்க இருக்கிறார்கள்.

இதேபோல் வங்காள தேச அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் சாஹிப் அல் ஹசன். இவரும் தனது சுழற்பந்து வீச்சால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஸ்வினுக்கு உங்களுக்கும் இடையில் போட்டி நிலவுகிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அஸ்வின் அவருடைய கட்டுப்பாட்டில் தனித்து காணப்படுகிறார் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவிற்கு எதிரான போட்டி குறித்து சாஹிப் அல் ஹசன் கூறுகையில் ‘‘இந்த போட்டி ஒவ்வொரு வீரர்களுக்கும் சவாலானது. நீங்கள் 250 ரன்கள் அடித்து, பந்து வீச்சாளர் சிறப்பான செயல்பட்டால், 250 ரன்கள் மிகப்பெரிய ஸ்கோராகும். அதேவேளையில் நீங்கள் 500 ரன்களுக்கு மேல் குவித்து, பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால் அதிக ரன்கள் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் அணி சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

ஒரு துறையை மட்டும் நம்பி ஒரு அணி வெற்றியை சார்ந்திருக்க முடியாது. நியூசிலாந்து தொடரில் இது நடந்தது. ஒருநாள் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம். அடுத்த நாள் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால், இரு துறைகளிலும் ஒரே நாளில் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது. புதிய வீரர்கள் இருந்த போதிலும் ஒவ்வொரு வீரரரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது.

அஸ்வின் உடன் எந்தவொரு போட்டியும் இல்லை. அவருடனான வழியில் நான் உள்ளேனா என்று என்னால் நினைக்க தோன்றவில்லை. அந்த வழியில் எந்தவொரு நினைப்பும் இல்லை. அவருடைய இடத்தில் இருந்து அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். என்னுடைய வழியில் நான் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்து வருகிறேன். நான் மேலும் சிறந்த முறையில் செயல்பட்டால் அது அணியின் வெற்றிக்கு உதவும். முக்கியமான வீரர்கள் அணிக்கு அணிக்கு மாறுபடுவார்கள். எனக்குன்டான வேலையை அணிக்காக சிறப்பாக செய்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

அஸ்வின் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்திய அணிக்காக சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவருடைய கட்டுப்பாடு அவரை தனி வீரராக உருவாக்கியுள்ளது. பந்து வீச்சில் என்ன செய்ய விரும்புகிறாரோ, அதை அவர் செய்கிறார். அவருடைய கட்டுப்பாடு மற்றும் உறுதி அவரை நம்பர் ஒன் வீரராக உருவாக்கியுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/05184049/1066447/Ashwin-control-sets-him-apart--Shakib.vpf

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

காயம் காரணமாக வங்காள தேச தொடக்க வீரர் இம்ருல் கெய்ஸ் இந்திய தொடரில் இருந்து நீக்கம்

தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக வங்காள தேச அணியின் தொடக்க வீரர் இம்ருல் கெய்ஸ் இந்திய தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

 
 
காயம் காரணமாக வங்காள தேச தொடக்க வீரர் இம்ருல் கெய்ஸ் இந்திய தொடரில் இருந்து நீக்கம்
 
இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 9-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.

இந்த போட்டிக்கு முன்னோட்டமாக வங்காள தேசம் அணி இந்திய ‘ஏ’ அணிக்கெதிராக இரண்டு நாட்கள் கொண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இன்று நடைபெற்ற கடைசி நாளில் வங்காள தேச அணி பீல்டிங் செய்தபோது அந்த அணியின் தொடக்க பேட்ஸ்மேன் இம்ருல் கெய்ஸின் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது,

இதனால் அவர் இந்தியாவிற்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் கெய்ஸ் விளையாட வில்லை. அவருக்குப் பதிலாக முதன்முறையாக சவுமியா சர்கார் தொடக்க வீரராக களம் இறங்கினார். அவர் முதல் இன்னிங்சில் 86 ரன்னும், 2-வது இன்னிங்சில் 36 ரன்னும் எடுத்தார். இதனால் இந்தியாவிற்கு எதிராக சவுமியா சர்கார் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/06203516/1066707/Thigh-injury-rules-out-Imrul-Kayes.vpf

  • தொடங்கியவர்

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டிலும் வெற்றி தொடரும்: கும்பிளே

இந்தியாவுக்கு வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியிலும் வெற்றி தொடரும் என்று கும்பிளே பேட்டியளித்துள்ளார்.

 
 
 
 
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டிலும் வெற்றி தொடரும்: கும்பிளே
 
ஐதராபாத் :

இந்தியாவுக்கு வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் ஐதராபாத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணியின் பயிற்சியாளர் கும்பிளே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றோம். அதே உத்வேகத்தை இந்த போட்டியிலும் தொடர விரும்புகிறோம். உள்ளூர் சீசன் இதுவரை எங்களுக்கு நன்றாக அமைந்துள்ளது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்றுஅதன் மூலம் நம்பிக்கையை அடுத்த போட்டிக்கு எடுத்து செல்ல வேண்டும். ஏனெனில் இந்த போட்டிக்கு பிறகு மேலும் சில டெஸ்டுகளில் விளையாட உள்ளோம்.

மிகவும் மேம்பட்டு வரும் ஒரு அணி வங்காளதேசம். சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர்கள் உண்மையிலேயே சிறப்பாக செயல்பட்டு இருந்தனர். நிச்சயம் அவர்களை நாங்கள் மதித்து ஆக வேண்டும். சில தரமான வீரர்கள், ஆல்-ரவுண்டர்கள் அந்த அணியில் அங்கம் வகிக்கிறார்கள். எனவே இது சுவாரஸ்யமான டெஸ்ட் போட்டியாக இருக்கப்போகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியது குறித்தே பேசுகிறார்கள். ஆனால் வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு இருந்ததையும் மறந்து விடக்கூடாது.

இவ்வாறு கும்பிளே கூறினார்.

தனிப்பட்ட முறையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு இந்த டெஸ்ட் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் 887 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஜடேஜா 879 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். 8 புள்ளி மட்டுமே பின்தங்கி உள்ள ஜடேஜா, வங்காளதேச டெஸ்டில் விக்கெட் வேட்டை நடத்தினால், அஸ்வினை பின்னுக்கு தள்ளிவிட வாய்ப்புள்ளது.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/08100541/1066988/Testical-win-against-Bangladesh-will-continue-anil.vpf

  • தொடங்கியவர்

இந்தியா - வங்காளதேசம் டெஸ்ட் கண்ணோட்டம்

பதிவு: பிப்ரவரி 08, 2017 12:52

 
 

இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டி கண்ணோட்டம் பற்றி சில தகவல்களை காண்போம்.

 
 
 
 
இந்தியா - வங்காளதேசம் டெஸ்ட் கண்ணோட்டம்
 
இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டி 2000ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. டாக்காவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசியாக 2015ம் ஆண்டு ஜூன் மாதம் பதுல்லாவில் நடந்த போட்டி ‘டிரா’ ஆனது. இரு அணிகள் இடையே இதுவரை 8 டெஸ்ட் நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா 6 டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டி ‘டிரா’ ஆனது.

இந்த 8 டெஸ்டுகளும் வங்காளதேசத்தில் தான் நடைபெற்றது. தற்போதுதான் முதல் முறையாக வங்காளதேச அணி இந்தியாவில் டெஸ்டில் ஆட இருக்கிறது. இரு அணிகள் இடையே 5 டெஸ்ட் தொடர் நடந்துள்ளது. இதில் 4 தொடரை இந்தியா கைப்பற்றியது. ஒரு தொடர் ‘டிரா’ ஆனது.

இந்திய அணி 2007ம் ஆண்டு டாக்கா மைதானத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 610 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். வங்காளதேச அணி 2000ம் ஆண்டு அதிகபட்சமாக 400 ரன் குவித்து இருந்தது.

வங்காளதேச அணி 91 ரன்னில் சுருண்டதே குறைந்த பட்ச ஸ்கோராகும். இந்திய அணி 2010-ம் ஆண்டு சிட்டாகாங்கில் 243 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனதே குறைந்தபட்ச ஸ்கோராகும்.

தெண்டுல்கர் 7 டெஸ்டில் 820 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இதில் 5 சதம் அடங்கும். டிராவிட் 560 ரன்னும், அஸ்ரபுல் 386 ரன்னும் எடுத்து உள்ளனர். தெண்டுல்கர் 2004ம் ஆண்டு டாக்கா மைதானத்தில் 248 ரன் குவித்ததே ஒரு இன்னிங்சின் அதிகபட்ச ஸ்கோராகும். அவருக்கு அடுத்தப்படியாக தவான் 173 ரன் எடுத்து உள்ளார்.

ஜாகீர்கான் 7 டெஸ்டில் 31 விக்கெட் கைப்பற்றி உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக பதான் 18 விக்கெட் எடுத்துள்ளார். ஜாகீர்கான் 87 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது ஒரு இன்னிங்சில் சிறந்த பந்து வீச்சாகும். இர்பான் பதான் 96 ரன் கொடுத்து 11 விக்கெட் எடுத்தது ஒரு டெஸ்டின் சிறந்த பந்து வீச்சு ஆகும்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/08125242/1067043/India-vs-Bangladesh-Test-Overview.vpf

  • தொடங்கியவர்

வங்கதேச ஸ்பின்னர்களை குறைவாகக் கருத முடியாது: இந்திய ஆதிக்கம் தொடருமா?

 
இங்கிலாந்தின் மொயின் அலியை வீழ்த்திய மெஹதி ஹசனை பாராட்டும் வங்கதேச வீரர்கள். | படம். ஏ.பி.
இங்கிலாந்தின் மொயின் அலியை வீழ்த்திய மெஹதி ஹசனை பாராட்டும் வங்கதேச வீரர்கள். | படம். ஏ.பி.
 
 

வங்கதேச அணி இந்திய மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியை நாளை ஆடவிருக்கிறது. அந்த அணி சமீப காலங்களில் நல்ல முன்னேற்றம் கண்டு வந்துள்ளது. அதற்கு இந்திய ரசிகர்கள் போலவே வங்கதேச ஆக்ரோஷ ரசிகர்களும் ஒரு காரணம்.

இந்நிலையில் நாளை (வியாழன்) ஹைதராபாத்தில் உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியை நம்பர் 9 அணியான வங்கதேசம் எதிர்கொள்வது இருதரப்பு ரசிகர்களின் ஆவலைத் தூண்டியுள்ளது.

ஐசிசி-யில் ‘எதிர்காலப் பயணத்திட்டம்’ (FTP) அறிமுகமான 2001-ம் ஆண்டு முதல் இந்தியா நீங்கலாக அனைத்து முழு உறுப்பு அணிகளும் வங்கதேசத்துடன் இருதரப்பு தொடரை தங்கள் மண்ணில் நடத்தியுள்ளனர். இந்நிலையில் முதல் இருதரப்பு டெஸ்ட் தொடரில் ஆடும் வங்கதேசம் இங்கு வரும்போது வங்கதேசத்தை ஒருபொருட்டாகவே கருதாத பிசிசிஐ நிர்வாக அதிகாரிகள் இப்போது பதவி காலியாகிச் சென்றுள்ளனர். உண்மையில் வங்கதேசத்தை அழைக்க பிசிசிஐ பராமுகம் காட்டியது என்பதே உண்மை. பாகிஸ்தான் கிரிக்கெட் சீரழிவிற்கு எப்படி பிசிசிஐ ஒரு காரணமோ அதே போல் வங்கதேச கிரிக்கெட் அணியை இங்கு அழைக்காததும் பிசிசிஐ-யின் பணபலம், அதிகாரபலத்தை உணர்த்தும் தருணங்களாகும்.

இதனால்தான் இரு அணிகளுக்குமான பகைமை ஒருநாள் போட்டிகளில் கடுமையாக வெளிப்பட்டது, இந்திய அணிக்கு சரிசமமாக இந்த வடிவத்தில் வங்கதேசம் சவால்களை அளித்தது. இதே கோபதாபங்களை டெஸ்ட் போட்டிக்கு, இந்திய மண்ணில் கொண்டு வருவது கடினம். ஆனால், ஒருநாள் போட்டிகளில் காட்டிய அதே உத்வேகம் சவால்களை வங்கதேசம் இங்கு காண்பிக்காது என்பதற்கும் உத்தரவாதமில்லை.

இங்கிலாந்தை தங்கள் சொந்த மண்ணில் வீழ்த்தியது வங்கதேசம், இந்த அணியின் புதிய ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசன் மிராஸ் தான் வேறு ஒரு மட்டத்திற்கான ஸ்பின்னர் என்பதை இந்தத் தொடரில் நிரூபித்தார், இவரது பிளைட், பல்வேறு விதமான லெந்த்கள், வேகங்கள், பந்தை பிட்ச் செய்யும் சரியான இடம், பேட்ஸ்மென் கண்ணில் மண்ணைத்தூவும் பவுலிங் உத்தி ஆகியவை வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது என்பதை இந்திய அணி மறுத்துவிட முடியாது.

சமீபத்தில் நியூஸிலாந்தில் ஷாகிப் அல் ஹசன் இரட்டைச் சதத்தையும், முஷ்பிகுர் ரஹிம் 150 ரன்களையும் எடுத்து ரெக்கார்ட் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர், தமிம் இக்பால், சவுமியா சர்க்கார், மஹமுதுல்லா, ஷாகிப் உல் ஹசன், முஷ்பிகுர் என்று அந்த பேட்டிங் வரிசை ஓரளவுக்கு சவால் அளிக்கக் கூடியதே.

ஆனால் கடந்த முறை கோலி தலைமையில் வங்கதேசம் சென்ற போது ஃபாதுல்லாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்தை வருண பகவான் தோல்வியிலிருந்து காப்பாற்றினார். அஸ்வின் பந்து வீச்சில் திணறினர் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. மேலும் உமேஷ் யாதவ்வின் உயிரோட்டமான வேகப்பந்து வீச்சும் இசாந்த் சர்மாவின் திணறவைக்கும் பவுன்ஸும் வங்கதேசத்துக்கு புதிய பிரதேசத்தைக் காட்டின என்பதையும் அந்த அணி மறந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் தொடக்கத்தில் ஆட்டம் காணும் ஜோடியுடன் நடுக்கள, பின்கள வீரர்கள் வலுவுடன் இறங்கும் இந்திய அணியை ஏதாவது வங்கதேசம் அச்சுறுத்த முடியுமெனில் அது அவர்கள் பவுலிங்கைக் கொண்டுதான் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் மிகப்பெரிய இந்தத் தருணத்தில் இந்தியாவுக்கு எதையும் வங்கதேசம் எளிதாக்காது என்பதை நம்பலாம்.

இங்கு வந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளை விட சற்றே கூடுதல் சவால்களை வங்கதேசம் அளிக்கும் என்றே தெரிகிறது. கோலியை விரைவில் வீழ்த்தினால் மெஹதி ஹசன் மிராஸ், ஷாகிப் அல் ஹசன், தைஜுல் இஸ்லாம் ஆகியோரை வைத்து இந்தியாவை அது மிரட்ட வாய்ப்புள்ளது. ஹைதராபாத் மைதானத்தில் நன்றாக அனுபவம் பெற்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹிம் இல்லாதது அந்த அணிக்கு ஒரு பின்னடைவே.

இந்திய அணியில் விஜய், ரஹானே, விருத்திமான் சஹா விளையாடுவார்கள், 5 பவுலர்களில் நிச்சயம் ஜெயந்த் யாதவ்வின் ஆல்ரவுண்ட் திறமைக்கே முதலிடம் அளிக்கப்படும் என்று நம்பலாம், அல்லது ஹர்திக் பாண்டியாவை ஒரு ஆல்ரவுண்டராக வளர்க்க இந்த டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பளிக்கலாம். ஆனால் எதுவும் இன்னமும் முடிவாகவில்லை. கருண் நாயர் முச்சதம் அடித்து அடுத்த டெஸ்ட்டே உட்கார வேண்டியிருப்பது துரதிர்ஷ்டமே. ஆனால் ரஹானேவுக்கு இது சோதனைக் காலம் என்பதை அவர் அறிந்து செயல்படுவது நல்லது. இங்கிலாந்துக்கு எதிராக மிக அலட்சியமாக ஆடி அவுட் ஆனார் என்பதையும் அவர் நினைவில் கொள்வது நல்லது.

அஸ்வின் 250 விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்தினார் என்ற சாதனை நிகழ்த்த இன்னும் 2 விக்கெட்டுகளே உள்ளன. டெனிஸ் லில்லி 250 விக்கெட்டுகளை 48 டெஸ்ட் போட்டிகளில் கைப்பற்றியதே இதுவரை சாதனையாக உள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் அஸ்வினின் 45-வது டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. வியாழன் காலை 9.30 மணிக்கு இந்த டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

http://tamil.thehindu.com/sports/வங்கதேச-ஸ்பின்னர்களை-குறைவாகக்-கருத-முடியாது-இந்திய-ஆதிக்கம்-தொடருமா/article9529190.ece

  • தொடங்கியவர்

#INDvsBAN : இந்திய அணி பேட்டிங்

Virat Kohli

இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் இன்று தொடங்கியது. இந்திய கேப்டன் விராத் கோஹ்லி டாஸ் வென்று, பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்த கருண் நாயருக்கும், சுழற்பந்துவீச்சாளர் ஜெயந்த் யாதவுக்கும் அணியில் இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: முதல் ஓவரிலேயே துவக்க வீரரை இழந்தது இந்தியா

பதிவு: பிப்ரவரி 09, 2017 10:18

 
 

இந்தியா, வங்காளதேச கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இந்திய அணி முதல் ஓவரிலேயே துவக்க வீரரை இழந்தது.

 
 
 
 
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: முதல் ஓவரிலேயே துவக்க வீரரை இழந்தது இந்தியா
 
ஐதராபாத்:

முஷ்பிகுர் ரஹிம் தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் இந்த டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இன்று காலை தொடங்கியது.

இந்திய அணியில் ரகானே காயமடைந்திருந்தபோது, அணியில் சேர்க்கப்பட்ட கருண் நாயர் முச்சதம் அடித்து அசத்தினார். ஆனாலும், நிலையான இடத்தைப் பிடித்துள்ள ரகானேவை புறந்தள்ளிவிட முடியாது என்று கேப்டன் கோலி கூறியிருந்தார். எனவே, காயம் குணமடைந்து உடற்தகுதி பெற்ற நிலையில், இன்றைய ஆட்டத்தில் ரகானே சேர்க்கப்பட்டுள்ளார். கருண் நாயருக்கு வாய்ப்பு இல்லை.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. துவக்க வீரர் லோகேஷ் ராகுல், முதல் ஓவரில் 4 பந்துகளை சந்தித்து 2 ரன்கள் எடுத்த நிலையில், தஸ்கின் அகமதுவிடம் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து முரளி விஜய், புஜாரா இருவரும் நிதானமாக விளையாடி வருகின்றனர்.

2000-ம் ஆண்டில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற வங்காளதேச அணி 16 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக இந்தியா வந்து டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/09101802/1067201/India-loss-opening-batsman-against-bangladesh-test.vpf

  • தொடங்கியவர்

India 246/3 (69.5 ov)

  • தொடங்கியவர்

#CricketUpdates:முரளி விஜய் அசத்தல் சதம்!

Murali Vijay

இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதும், முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி, சற்று முன்வரை 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய முரளி விஜய் சதமடித்தார். கேப்டன் கோலி 56, கோஹ்லி, ரஹானே 10 ரன்களுடன் களத்தில் உள்ளனர். விஜய் 108 ரன்களுடனும், புஜாரா 85 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

அந்த அணியில் டஸ்கின் அகமது, ஹசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

  • தொடங்கியவர்

#CricketUpdates: கோஹ்லி சதம், வலுவான நிலையில் இந்தியா!

Kohli

இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதும், முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக பேட்டிங் செய்த விஜய், கேப்டன் கோஹ்லி சதமடித்து அசத்தினார்கள். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கோஹ்லி 111, ரஹானே 45 ரன்களுடன் களத்தில் உள்ளனர். விஜய் 108, புஜாரா 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

  • தொடங்கியவர்

விஜய்யின் நிதான, கோலியின் தங்குதடையற்ற சதங்களுடன் இந்தியா 356 ரன்கள் குவிப்பு

  • சதம் கண்ட விரா ட்கோலி. | படம்.| ஏ.எஃப்.பி.
    சதம் கண்ட விரா ட்கோலி. | படம்.| ஏ.எஃப்.பி.
  • வங்கதேசத்துக்கு எதிராக சதம் கண்ட விஜய். | படம்.பிடிஐ.
    வங்கதேசத்துக்கு எதிராக சதம் கண்ட விஜய். | படம்.பிடிஐ.
 

ஹைதராபாத்தில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது.

விராட் கோலி தனது 16-வது டெஸ்ட் சதத்தை எடுத்து 111 ரன்களுடனும், ரஹானே 45 ரன்களுடனும் முதல் நாள் ஆட்ட முடிவில் களத்தில் உள்ளனர். ரஹானே, கோலி இணைந்து 4-வது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காமல் 26.2 ஓவர்களில் இதுவரை 122 ரன்களைச் சேர்த்துள்ளனர். இதில் கடைசி 10 ஓவர்களில் 71 ரன்கள் விளாசப்பட்டது.

முரளி விஜய் நிதானத்துடன் ஆடி தொடக்க விக்கல்களுக்குப் பிறகு நிலைத்து 160 பந்துகளில் 12 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 108 ரன்கள் எடுத்து தைஜுல் இஸ்லாம் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று லைனை தவறாகக் கணித்து நேராக பவுல்டு ஆகி வெளியேறினார். ஆனால் முதல் ஓவரில் 4-வது பந்தில் கே.எல்.ராகுல் காலை நகர்த்தாமல் தஸ்கின் அகமதுவின் புல் லெந்த் ஆஃப் சைடு பந்தை ஆட முயன்று பந்து மட்டையின் உள்விளிம்பில் பட பவுல்டு ஆனார். ராகுல் 2 ரன்களில் அவுட்.

அதன் பிறகு புஜாரா, விஜய் ஆதிக்கம் செலுத்தினர் இருவரும் இணைந்து 178 ரன்களை 2-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

தொடக்க திணறலுக்குப் பிறகு விஜய்-புஜாரா அபாரம்: வாய்ப்புகளை நழுவ விட்ட வங்கதேசம்!

இதில் புஜாராவுக்கு 11 ரன்களில் ஒரு கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்ட வங்கதேசம், முரளி விஜய் 35 ரன்களில் இருந்த போது மிகவும் சுலபமான ரன் அவுட் வாய்ப்பை நழுவ விட்டனர். இந்த விக்கெட்டுகளை அப்போதே வீழ்த்தி கோலிக்கு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே லைனில் தொடர்ந்து வீசி நெருக்கமான களவியூகம் அமைத்து சவால் அளித்து கோலியையும் வீழ்த்த முடிந்திருந்தால் உண்மையில் வங்கதேசம் இன்று டாசில் தோல்வியடைந்தாலும் சவால் அளித்திருக்கும், ஆனால் வங்கதேச பீல்டிங்கும் ஒத்துழைக்கவில்லை ஒரு நேரத்துக்குப் பிறகு ஸ்பின்னர்களும் ஷார்ட் பிட்ச்களை அதிகமாக வீச புஜாரா (83), விஜய், கோலி ஆகியோர் ஆதிக்கம் செலுத்தினர். விஜய் புஜாரா 5-வது சதக்கூட்டணி அமைத்தனர், மொத்தமாக 8 சதக்கூட்டணிகளை இவர்கள் அமைத்துள்ளனர்.

தொடக்கத்தில் கார்ட்னி வால்ஷ் பயிற்சியாளர் என்பதை நிரூபிக்கும் விதமாக மெதுவான, சற்றே புல் உள்ள பிட்சில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மென்களின் உத்தியைச் சற்றே ஆட்டிப்பார்த்தனர். ராகுல் ஆட்டமிழந்த பிறகு பெற்ற உத்வேகத்தையடுத்து தஸ்கின் அகமது, கம்ருல் இஸ்லாம் ராபி ஆகியோர் காற்றிலும் பிட்சிலிருந்தும் ஸ்விங்கைப் பெற்றனர். நிறைய பந்துகள் எட்ஜைக் கடந்து சென்றன. ஓரிரு முறை கூர்மையான ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்துகள் மூலம் விஜய் புஜாரா தங்களது மட்டைகளை முகத்திற்கு மேல் கொண்டுவரச் செய்தனர். புஜாராவின் பவுண்டரி ஒன்று கல்லிக்கு அருகில் கேட்ச் பிடிக்ககூடிய உயரத்தில் பவுண்டரி சென்றது. அதன் பிறகுதான் கம்ருல் புஜாராவின் எட்ஜைப் பிடிக்க பந்து ஸ்லிப்பில் ஷாகிப் அல் ஹசனுக்கு முன்னால் பிட்ச் ஆனது, ஆனால் இது விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிமின் கேட்ச் ஆகும். புஜாரா தப்பினார். இடையே ஒருமுறை புஜாராவின் லீடிங் எட்ஜ் ஒன்று கவருக்கு முன்னால் தரையில் விழுந்தது.

பிறகு 15-வது ஓவரில், நம்பக ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசன் மிராஸ், புஜாரா, விஜய் இருவரையும் எட்ஜ் செய்ய வைத்தார், இரண்டும் கேட்ச் பிடிக்கக் கூடிய வகையில் சென்றது ஆனால் ஸ்லிப்புக்கு தள்ளி சென்றது.

இதன் பிறகுதான் விஜய்யை ரன் அவுட் செய்ய கிடைத்த மிகமிக எளிதான வாய்ப்பை கோட்டை விட்டனர். புஜாரா, விஜய் இருவரும் ஒரு முனையில் இருந்தனர். கம்ருல் ஸ்கொயர் லெக் திசையில் டைவ் அடித்து பீல்ட் செய்து த்ரோவை அடிக்க பவுலர் முனையில் மெஹதி பந்தைப் பிடிக்கத் தவறினார்.

இத்தகைய அருமையான தொடக்கத்துக்குப் பிறகே வங்கதேசம் நெருக்கடி கொடுக்க தவறிவிட்டது. புஜாரா முதல் தன்னம்பிக்கையான பவுண்டரியையும், விஜய் கம்ருலை இரண்டு புல்ஷாட் பவுண்டரிகளையும் அடித்து நிலைக்க தொடக்க பதற்றங்கள் நிதானமடைய இருவரும் அருமையாக ஆடத்தொடங்கினர்.

உணவு இடைவேளையின் போது 86/1 என்ற நிலையிலிருந்து விஜய் தனது ஆட்டத்தை தொடங்கினார். அருமையான கவர் டிரைவ், ஷாகிப் அல் ஹசனை அவர் தலைக்கு மேல் ஒரு ஷாட், லேட் கட் என்று விஜய் தனது ஷாட்களை ஆடினார். உணவு இடைவேளையிலிருந்து தேநீர் இடைவேளை வரை 31 ஓவர்களில் 120 ரன்களை இருவரும் சேர்த்தனர். மெஹதி ஹசன் பந்தை நேராக புஜாரா பவுண்டரி அடித்த போது முதல்தர கிரிக்கெட் ஒரே சீசனில் அதிக ரன்களை எடுத்த சந்து போர்டே (1604 ரன்கள் 1964-65) சாதனையை முறியடித்து புதிய சாதனை நிகழ்த்தினார்.

83 ரன்களில் சதம் நோக்கிய அவரது முயற்சி மெஹதி ஹசன் பந்தில் முடிவுக்கு வந்தது. முஷ்பிகுரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முரளி விஜய் தனது 9-வது டெஸ்ட் சதத்தை எடுத்து 108 ரன்களில் பவுல்டு ஆனார். கோலி, விஜய் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 13 ஒவர்களில் 54 ரன்களைச் சேர்த்தனர்.

கோலியின் தங்குதடையற்ற சதம்

விராட் கோலி தொடங்கிய போதே மெஹதி ஹசன் மிராஸ் ஷார்ட் பந்தை கட் செய்து பவுண்டரி அடித்தார். பிறகு டஸ்கின் அகமதுவின் நல்ல பந்தை நேராக பவுண்டரி அடித்தார், இதன் மூலம் தான் என்னமாதிரியான பார்மில் இருக்கிறார் என்பதை வங்கதேசத்துக்கு அறிவுறுத்தினார். பிறகு வேகப்பந்து வீச்சாளர் கம்ருலை ஆஃப் திசையில் இரண்டு பவுண்டரிகளை தூக்கி அடித்த போது பந்து வீச்சை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். இடையில் கோலியின் மட்டையில் பட்ட பந்துக்கு எல்.பி. ரிவியூ செய்டு ஒரு ரிவியூவை விரயம் செய்தனர் வங்கதேச அணியினர்.

ஷாகிப் அல் ஹசனை அருமையான டைமிங்கில் லாங் ஆனில் ஒரு பவுண்டரி அடித்த பிறகு 70 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார். அரைசதத்திற்கு பிறகு ஒருமுறை தைஜுலின் பந்தில் ஏறக்குறைய எட்ஜ் செய்திருப்பார், ஆனால் தப்பித்தார். மெஹதி ஹசன் மிராஸின் ஆஃப் ஸ்டம்ப் பந்தை அருமையாக மிட்விக்கெட் பவுண்டரிக்கு விரட்டி 130பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் சதம் கண்டார் கோலி, இது அவரது 16-வது சதம். இந்த சீசனில் 9 போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்துள்ளார் கோலி.

ரஹானே களமிறங்கிய பிறகு ஒரு 120 பந்துகளில் கோலி 70 பந்துகளையாவது சந்தித்திருப்பார், இதனால் ரஹானே மீதான அழுத்தம் பெரும்பாலும் குறைந்தது, வங்கதேச பவுலர்கள் தேவையிலாமல் ரஹானேவுக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி வாங்கிக் கட்டிக் கொண்டனர்.

ஆட்ட முடிவில் கோலி 111 ரன்களுடனும் ரஹானே 7 பவுண்டரிகளுடன் 45 ரன்களையும் எடுத்தனர். மொத்தத்தில் முதல் இரண்டு மணி நேர ஆட்டத்துக்குப் பிறகு குறிப்பாக முதல் ஒருமணி நேர ஆதிக்கத்துக்குப் பிறகு வங்கதேசத்திடமிருந்து விஜய், புஜாரா, கோலி ஆகியோர் பறித்துச் செல்ல இந்திய அணி தன் முதல் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் குவித்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/விஜய்யின்-நிதான-கோலியின்-தங்குதடையற்ற-சதங்களுடன்-இந்தியா-356-ரன்கள்-குவிப்பு/article9532038.ece?homepage=true

  • தொடங்கியவர்

பேட்ஸ்மேன் தவறு செய்யும் வரை காத்திருக்க வேண்டும்: வங்காள தேச பவுலர் சொல்கிறார்

ஐதராபாத் போன்ற பிளாட் ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் தவறு செய்யும்வரை காத்திருக்க வேண்டும் என்று வங்காள தேச பந்து வீச்சாளர் தஸ்கின் அஹமது தெரிவித்துள்ளார்.

 
பேட்ஸ்மேன் தவறு செய்யும் வரை காத்திருக்க வேண்டும்: வங்காள தேச பவுலர் சொல்கிறார்
 
இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஐதாராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி, முரளி விஜய் ஆகியோர் சதம் அடித்தனர்.

இந்தியாவில் முதன்முறையாக விளையாடும் வங்காள தேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் இன்றைய போட்டி குறித்து கூறுகையில் ‘‘இன்றைய தினம் விளையாடிய ஆடுகளத்தில் பந்து வீச்சாளர்கள் பொறுமை காக்க வேண்டும். பேட்ஸ்மேன்கள் அடித்து விளையாடக் கூடிய பந்துகளை வீசினால், அவர்கள் அதை எளிதில் கையாண்டு கொள்வார்கள். பந்து வீச்சாளர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். பேட்ஸ்மேன்கள் தவறு செய்தால் மட்டுமே அவர்களை வெளியேற்ற முடியும்.

இது எனக்கு புதிய அனுபவம். ஏனென்றால் நான் 3-வது டெஸ்டில்தான் விளையாடி கொண்டிருக்கிறேன். இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் இதுதான். பிளாட் டிராக்கில் பந்து வீசுவது புதிய அனுபவம். முதல் ஒரு மணி நேரத்தில் பந்து சற்று திரும்பியது. அதன்பின் ட்ரை மற்றும் பிளாட்டாக மாறியது. மாறாக இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/09214011/1067335/Bowling-on-this-flat-track-is-a-new-experience-says.vpf

  • தொடங்கியவர்

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் புஜாரா புதிய சாதனை

 

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் புஜாரா புதிய சாதனை படைத்துள்ளார்.

 
 
 
 
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் புஜாரா புதிய சாதனை
 
ஐதராபாத் :

இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் புஜாரா புதிய சாதனையை படைத்துள்ளார். அது குறித்த விவரமாக பார்க்கலாம்.

* நேற்றைய ஆட்டத்தில் 83 ரன்கள் எடுத்த இந்திய வீரர் புஜாரா இந்த சீசனில் (2016-17) முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 6 சதம் உள்பட 1,605 ரன்கள் (21 இன்னிங்சில்) குவித்தார். இதன் மூலம் ஒரு சீசனில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை தனதாக்கினார். இதற்கு முன்பு 1964-65-ம் ஆண்டு சீசனில் இந்திய வீரர் சந்து போர்டே 6 சதத்துடன் 1,604 ரன்கள் (28 இன்னிங்சில்) குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த 52 ஆண்டு கால சாதனையை புஜாரா நேற்று தகர்த்தார்.

* விஜய்-புஜாரா ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 178 ரன்கள் சேர்த்தது. இந்த சீசனில் உள்ளூரில் இந்த இணை 100 ரன்களுக்கு மேல் திரட்டியது இது 5-வது முறையாகும். இந்த வகையில் 2005-06-ம் ஆண்டு சீசனில் ஆஸ்திரேலியாவின் ஹைடன்-ரிக்கி பாண்டிங் ஜோடி 7 முறை 100 ரன்களுக்கு மேல் சேர்த்ததே சாதனையாக உள்ளது.

* டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக விஜய் அடித்த 9-வது சதம் இதுவாகும். இந்திய தொடக்க வீரர்களில் கவாஸ்கர் (33 சதம்), ஷேவாக் (22 சதம்) ஆகியோர் அதிக சதங்கள் அடித்து முதல் 2 இடங்களில் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கம்பீருடன் (9 சதம்), விஜய் 3-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

* உள்ளூரில் இந்த சீசனில் விராட்கோலி 1,075 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் உள்ளூர் சீசனில் 1,000 ரன்களை கடந்த 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அத்துடன் உள்ளூரில் ஒரு சீசனில் கேப்டனாக அதிக ரன்கள் குவித்தவர் என்ற சிறப்பையும் விராட்கோலி சொந்தமாக்கினார். இந்த வகையில் இங்கிலாந்து வீரர் கிரகாம் கூச் 1,058 ரன்கள் (1990-ம் ஆண்டு) எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

* கேப்டன் பதவியில் விராட்கோலி அடித்த 9-வது சதம் இதுவாகும். இதன் மூலம் இந்திய கேப்டனாக அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் முகமது அசாருதீனுடன் 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார். இந்திய கேப்டனாக கவாஸ்கர் 11 சதங்கள் அடித்ததே அதிகபட்சமாக உள்ளது.

* டெஸ்ட் போட்டியில் தான் எதிர்த்து ஆடிய 7 நாடுகளுக்கும் எதிராக விராட்கோலி சதம் அடித்துள்ளார். பாகிஸ்தான், ஜிம்பாப்வேக்கு எதிராக மட்டும் அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடியதில்லை.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/10095011/1067381/Pujara-a-record-in-Test-cricket-match-against-Bangladesh.vpf

  • தொடங்கியவர்

#CricketUpdates: சேவாக் சாதனை முறியடிப்பு; கோஹ்லி இரட்டை சதம்!

இந்தியா-வங்கதேசம் முதல் டெஸ்ட் ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. இதில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் கேப்டன் கோஹ்லி இரட்டை சதமடித்தார். அவர் 204 ரன்களில் ஆட்டமிழந்தார். கோஹ்லி தொடர்ச்சியாக நான்கு தொடர்களில் இரட்டை சதம் அடித்துள்ளார்.

Kohli

சற்றுமுன் வரை இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 510 ரன்கள் எடுத்துள்ளது. சஹா 14, அஸ்வின் 10 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

மேலும், இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையையும் கோஹ்லி படைத்துள்ளார். இதன்மூலம் சேவாக்கின் சாதனையை இவர் முறியடித்துள்ளார்.

  • தொடங்கியவர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் புதிய சாதனை!

இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஹைதராபாத்தில்  நடந்து வருகிறது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 687 ரன்களில் டிக்ளேர் செய்தது. கேப்டன் கோலி இரட்டை சதம் அடித்தும், சஹா சதம் அடித்தும் அசத்தினர்.

Kohli with Saha

இதன் மூலம் இந்திய அணி புதிய உலக சாதனையை படைத்துள்ளது. அதன்படி, தொடர்ந்து மூன்று டெஸ்ட்டில் 600 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

இதற்கு முன், இந்திய அணி  இங்கிலாந்துக்கு எதிரான  இரண்டாவது டெஸ்ட்டில்  631 ரன்களும், மூன்றாவது டெஸ்ட்டில் 759 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/sports/80376-india-is-the-first-team-to-score-600-plus-runs-in-three-successive-test-matches.html

  • தொடங்கியவர்

கோலி சாதனை இரட்டைச் சதம்; சஹா சதம்: இந்தியா 687 ரன்கள் டிக்ளேர்

 
சஹா, ஜடேஜா. | டெஸ்ட், ஐதராபாத். | படம்.| ஏ.எஃப்.பி.
சஹா, ஜடேஜா. | டெஸ்ட், ஐதராபாத். | படம்.| ஏ.எஃப்.பி.
 
 

ஹைதராபாதில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 687 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. வங்கதேசம் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்துள்ளது.

3 பவுண்டரிகளுடன் தன்னம்பிக்கையுடன் ஆடி வந்த சவுமியா சர்க்கார் உமேஷ் யாதவ் வீசிய அபாரமான வேக இன்ஸ்விங்கரில் மட்டையின் அடிவிளிம்பில் பட்டு சஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மிகவும் மெலிதான எட்ஜ், மிட் ஆனில் புஜாராவும், மிட்விக்கெட்டில் விஜய்யும் கவரில் கோலியும் எட்ஜில் நம்பிக்கையுடன் இருந்ததையடுத்து ரிவியூவில் அவுட் தீர்ப்பளிக்கப்பட்டது. தமிம் இக்பால் 24 ரன்களுடனும் மொமினுல் ஹக் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று காலை 356/3 என்று தொடங்கிய இந்தியாவின் விராட் கோலி, ரஹானே வங்கதேசத்தின் சில அலட்சியமான பந்து வீச்சைப் பயன்படுத்தி விளாசத் தொடங்கியது. முதல் ஒரு மணி நேர ஆட்டத்தில் 70 ரன்களை இருவரும் விளாசினர், நேற்று இருவரும் ஜோடி சேர்ந்து 122 ரன்களைச் சேர்த்தனர் இன்று மேலும் 100 ரன்களைச் சேர்த்து 4-வது விக்கெட்டுக்காக 222 ரன்களைச் சேகரித்தனர். 11 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் எடுத்து உறுதியான சதம் என்று ஆடிவந்த ரஹானே தைஜுல் இஸ்லாம் பந்தை கவரில் கேட்ச் கொடுத்தார், மெஹதி ஹசன் மிராஸ் டைவ் அடித்து ஒருகையில் கேட்ச் பிடித்தார்.

ஆனால் கோலி ஒருபுறம் வங்கதேசத்தின் தாறுமாறு பவுலிங்குடன் விளையாடினார். தஸ்கின் அகமது போட்டுக் கொடுத்த போது கோலி டீப் பாயிண்ட்டுக்கு மேல், பிறகு அதே திசையில் தரையோடு தரையாக 2 பவுண்டரிகளை விளாசினார். ஸ்லிப் தலைக்கு மேல் ஒரு பவுண்டரியையும் விளாசி தஸ்கின் அகமட் ஸ்பெல்லை கிழித்தார்.

விருத்திமான் சஹா இறங்கியவுடன் தைஜுலின் அருமையான பிளைட்டட் பந்தை சஹா மேலேறி வந்து ஆடி பந்தைக் கோட்டை விட ஸ்டம்பிங் செய்ய ஏகப்பட்ட நேரம் இருந்தும் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் சோடை போனார். அதாவது சஹா கிரீசிற்குள் திரும்புவதற்குள் இருமுறை பைல்களை அகற்ற அவருக்கு வாய்ப்பிருந்தது. ஆனால் முஷ்பிகுர் தனது விக்கெட் கீப்பிங் தொழிலை கைவிட வேண்டிய நேரம் வந்து விட்டது என்று நிரூபித்தார், லிட்டன் தாஸை அழைக்க வேண்டியதுதான்!

கோலியை ஆட்டிய மெஹதி ஹசன் மிராஸ்; தப்பிய சஹா சதம்!

இரட்டைச் சதம் அடிப்பதற்கு முன்பாக கோலி 180 ரன்களில் இருந்த போது ஒரே ஓவரில் கோலியை 3 முறை பீட் செய்தார் மெஹதி. இதில் ஒரு பந்து நன்றாகத் திரும்ப கோலி லெக்திசையில் ஆடும் முயற்சியில் கால்காப்பில் வாங்கினார், நடுவர் ஜோ வில்சன் அவுட் என்று தீர்ப்பளித்தார், ஆனால் கோலி ரிவியூ செய்தார், இதில் பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்வது தெரிந்தது! நாட் அவுட். இரட்டைச் சதம் அடித்து தைஜுல் பந்தை கட் செய்யும் முயற்சியில் மீண்டும் கோலி கால்காப்பில் வாங்க இம்முறை எராஸ்மஸ் கையை உயர்த்த ரிவியூ செய்யாமல் வெளியேறினார், ஆனால் பந்து ஆஃப் ஸ்டம்பை மிஸ் செய்வது ரீப்ளேயில் தெரிந்தது, இரட்டைச் சதம் அடித்தாயிற்றே பிறகு எதற்கு இன்னொரு ரிவியூ என்று கோலி ‘பெரிய மனது’ பண்ணியிருக்கலாம்.

அதன் பிறகு சஹா பிளிக்குகள், கட் ஷாட்கள் என்று 86 பந்துகளில் அரைசதம் கண்டு, ஸ்பின்னர்களுக்கு எதிராக கால்களை நன்றாகப் பயன்படுத்தி தைஜுலை அருமையாக நேராக சிக்ஸ் அடித்தார் 153 பந்துகளில் சஹா சதம் கண்டார். 155 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 106 ரன்களை எடுத்த சஹா நாட் அவுட்டாக திகழ்ந்தார். அஸ்வின் 34 ரன்களை எடுத்து மெஹதி ஹசனிடம் வீழ்ந்தார்.

ஜடேஜா களமிறங்கி 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என்று உத்வேகமாக ஆடி 78 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். 166 ஓவர்களில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 687 ரன்களை எடுக்க கோலி டிக்ளேர் என்று அறிவித்தார்.

வங்கதேசத்தில் 8 பவுலர்கள் பயன்படுத்தப்பட்டதில் 5 பவுலர்கள் ‘சதமடித்ததுதான்’ மிச்சம்! தைஜுல் இஸ்லாம் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், மெஹதி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். கம்ருல் இஸ்லாம் ராபி 100 ரன்களை 19 ஓவர்களில் விட்டுக் கொடுத்தாலும் நல்ல வேகத்தில் வீசினார்.

கேப்டன்சி இன்னும் கொஞ்சம் டைட்டாக இருந்திருந்தால் இவரை வைத்து கோலியை எளிதில் வீழ்த்த முடியும், இவரது மலிங்கா போன்ற ஆக்சன் நல்ல லெந்தில் நல்ல அவுட்ஸ்விங்கர்களை உற்பத்தி செய்யக்கூடியது. தொடர்ந்து ஆஃப் ஸ்டம்ப் லைனில் கோலியை வெறுப்பேற்றிப் பார்த்திருக்கலாம், குறைந்தது அவரை ரன்களுக்காக ஏங்கவாவது வைத்திருக்கலாம், ஆனால் இவற்றையெல்லாம் நாம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எதிர்பார்க்கலாம்.

http://tamil.thehindu.com/sports/கோலி-சாதனை-இரட்டைச்-சதம்-சஹா-சதம்-இந்தியா-687-ரன்கள்-டிக்ளேர்/article9534779.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஷாகிப் 82; முஷ்பிகுர், மெஹதி ஹசன் போராட்டம்: வங்கதேசம் 322/6

 
  • வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் அடித்த அருமையான டிரைவ். | படம்.| கே.ஆர்.தீபக்.
    வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் அடித்த அருமையான டிரைவ். | படம்.| கே.ஆர்.தீபக்.
  • வங்கதேச விக்கெட்டைக் கொண்டாடும் இந்திய அணி. | படம்.| பிடிஐ.
    வங்கதேச விக்கெட்டைக் கொண்டாடும் இந்திய அணி. | படம்.| பிடிஐ.
 

ஹைதராபாத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று வங்கதேச அணி தன் முதல் இன்னின்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் எடுத்துள்ளது.

ஆட்ட நேர முடிவில் முஷ்பிகுர் ரஹிம் 81 ரன்களுடனும், மெஹதி ஹசன் மிராஸ் 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இருவரும் இணைந்து 7-வது விக்கெட்டுக்காக இதுவரை ஆட்டமிழக்காமல் 87 ரன்களைச் சேர்த்துள்ளனர்.

முதல் 2 மணி நேர ஆட்டத்தில் முக்கிய விக்கெட்டுகளை இழந்தது வங்கதேசம், ஆனால் ஷாகிப் அல் ஹசன் தொடக்கத்தில் உமேஷ் யாதவ்வின் ஆக்ரோஷமான, அருமையான பந்து வீச்சை கடும் பீட்டன்களுடனும், அப்பீல்களுடனும் சமாளித்து 103 பந்துகளில் 82 ரன்களை வேகமாக எடுத்த நிலையில் அஸ்வின் பந்தை தேவையில்லாமல் அடித்து ஆட முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அவர் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால், முஷ்பிகுர் கடுமையான பொறுமையுடன் அருமையான தடுப்பாட்ட உத்தியுடன் 81 ரன்களில் நாட் அவுட்டாக இருப்பதற்கு இந்தியாவை விக்கெட் கைப்பற்ற விடாமல் திணறடித்திருக்கலாம். இந்த வகையில் ஷாகிப் அல் ஹசனின் அவுட் ஆனது பொறுப்பற்றதே.

இசாந்த் சர்மா முதல் 5 ஓவர்களில் 30/0 என்று சரியாக வீசவில்லை, ஆனால் அதன் பிறகு மிகச்சிறப்பாக வீசியதில் அவரது பந்து வீச்சு இதுவரை 16-5-54-1 என்று மேம்பட்டது.

அஸ்வினுக்கு ரிதம் சுத்தமாக இல்லை அவரிடம் வழக்கமாக காணப்படும் ட்ரிஃப்ட் இல்லை, பேட்ஸ்மென்களை அவர் எந்த வித சவால்களுக்கும் உட்படுத்தவில்லை. பந்துகள் திரும்பவும் இல்லை. கடந்த 3 இன்னிங்ஸ்களில் அஸ்வின் 110 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளையே கைப்பற்றியுள்ளார். சென்னையிலிருந்து அவரது இந்தத் திணறல் தொடர்ந்துள்ளது.’

இத்தனைக்கும் இவர் விக்கெட்டுகளை வீழ்த்துவதை சவுகரியம் செய்து கொடுக்கும் விதமாக வேகப்பந்து வீச்சாளர்கள் ரவுண்ட் த விக்கெட்டில் வீசி எதிர்முனையிலிருந்து அஸ்வின் பந்துகள் எழும்பி திரும்புவதற்காக தங்கள் கால்தடங்களை பதித்தனர், ஆனாலும் அஸ்வினால் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியவில்லை என்பதே எதார்த்த நிலை. பவுலர் கால்தடங்களை விட அவருக்கு குட்லெந்தில் நடுவில் குழி இருந்தால்தான் சரிப்பட்டு வரும் போல் தோன்றுகிறது. எனவே அவர் 24 ஓவர்களில் 6 மெய்டன்களுடன் 77 ரன்களுக்கு ஷாகிப் விக்கெட்டை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

இதனால் இங்கிலாந்தை விடவும் வங்கதேச பேட்டிங் நன்றாக ஆடுவது போல்தான் தெரிகிறது. 5-வது முறையாக டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்களை வங்கதேசம் கடந்துள்ளது. ஆனால் முஷ்பிகுர் ரஹிம் 18 ரன்களில் இருந்த போது ஜடேஜாவின் அற்புத பீல்டிங் மற்றும் த்ரோவுக்கு மிகவும் நெருக்கமான ரன் அவுட்டில் ரீப்ளேயில் தப்பியதும் கவனிக்கத்தகுந்தது. ஷாகிப் அல் ஹசன் பேட்டிங் ஹை ரிஸ்க் பேட்டிங், உமேஷ் யாதவ் அவரது பேட்டிங் உத்தியை இரு புறமும் ஸ்விங் செய்தும், ரிவர்ஸ் செய்தும் ஆட்டிப்படைத்தார், ஸ்பின்னர்களையும் ஷாகிப் திருப்திகரமாக ஆடவில்லை. அஸ்வினின் 249-வது விக்கெட்டாக வெளியேறினார்.

51 ரன்களில் மெஹதி ஹசன் மிராஸ் 10 பவுண்டரிகளை விளாசினார். இசாந்த், யாதவ், ஜடேஜா, அஸ்வின் என்று அனைவரது பவுலிங்கிலும் பவுண்டரி அடித்தார். கடைசியில் அஸ்வின் பந்தை அருமையாக லேட் கட் செய்து அரைசதம் கண்டார் மெஹதி. முஷ்பிகு ரஹிம் 3000 டெஸ்ட் ரன்களை எடுத்த 4-வது வங்கதேச வீரரானார். ஹபிபுல் பஷார், தமிம், ஷாகிப் ஆகியோருக்கு அடுத்ததாக இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தினார். ஆட்டம் முடியும் தறுவாயில் இசாந்த் சர்மா பவுன்சர் ஒன்று இவரது விரல்களைப் பதம் பார்த்ததும் குறிப்பிடத்தக்கது.

உமேஷ் யாதவ்வின் ஆக்ரோஷ பந்து வீச்சு:

இன்று காலை 3-வது ஓவரிலேயே தமிம் இக்பால், உமேஷ் யாதவுக்கு எதிராக 2 ரன்கள் எடுக்கும் முயற்சியில் ரன் அவுட் ஆனார். உமேஷ் த்ரோ அருமையாக அமைய பவுலர் புவனேஷ் ரன் அவுட் செய்தார்.

உமேஷ் யாதவ் மிக இயல்பாக ரிவர்ஸ் ஸ்விங் செய்தார், ஷார்ட் பிட்ச், அவுட் ஸ்விங்கர்கள் அதிவேகமாக வந்தன, 140கிமீ வேகத்துக்கு மேல் சீராக வீசினார். இதனால் 5-2-7-1 என்று இருந்தார் உமேஷ், பிறகு மொமினுல் ஹக் விக்கெட்டை எல்.பி.முறையில் வீழ்த்தினார். இன்ஸ்விங்கர் மிக கூர்மையாக ஸ்விங் ஆனது.

ஷாகிப் இறங்கியவுடன் ரவுண்ட் த விக்கெட்டில் அசவுகரியமான லெந்த்தில் வேகமாக இருபுறமும் ஸ்விங் செய்து அவரை திணறடித்தார், வெளியே செல்லும் பந்துக்கு சந்தேகமாக மட்டையைக் கொண்டு செல்வதும், உள்ளே வரும் பந்தில் காலில் வாங்குவதுமாக ஷாகிப் திணறினார், ஒருமுறை கடுமையான முறையீடும் எழுந்தது. உமேஷ் யாதவ் லெந்த் மிகவும் அபாரமாக இருந்தது, இதே முறையில் அவர் வீசினார் ரபாடா ஆஸ்திரேலியாவுக்குச் செய்ததை இவரும் ஆஸ்திரேலியாவுக்குச் செய்ய முடியும்.

மஹமுதுல்லா, ஷாகிப் இணைந்து 45 ரன்களைச் சேர்த்தனர். அப்போது இசாந்த் சர்மா இன்ஸ்விங்கரில் இவரை எல்.பி.செய்தார்.

பிறகுதான் ஷாகிப், முஷ்பிகுர் இணைந்து 107 ரன்களை போராடி 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர், அப்போதுதான் ஷாகிப் உல் ஹசன் தன்னை ஏதோ ஒரு கில்கிறிஸ்ட் என்று நினைத்துக் கொண்டு சூழ்நிலை தெரியாமல் பொறுப்பற்ற ஒரு ஷாட்டில் அஸ்வினிடம் ஆட்டமிழந்தார். சபீர் ரஹ்மான் 16 ரன்களில் ஜடேஜாவிடம் எல்.பி.ஆனார். 235/6 என்ற நிலையிலிருந்து 322/6 என்று 3-ம் நாள் ஆட்டத்தைச் சேதமில்லாமல் முடித்தது வங்கதேசம்.

http://tamil.thehindu.com/sports/ஷாகிப்-82-முஷ்பிகுர்-மெஹதி-ஹசன்-போராட்டம்-வங்கதேசம்-3226/article9536957.ece?homepage=true

  • தொடங்கியவர்

#CricketUpdates: பங்களாதேஷ் 388-க்கு ஆல்அவுட்

இந்தியா-பங்களாதேஷ் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 687 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

24771_11312.jpg

இதையடுத்து பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 388 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ரஹிம் 127ரன்கள் எடுத்தார். நான்காம் நாள் ஆட்டத்தின், உணவு இடைவேளைக்கு முன் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 1 ரன் எடுத்துள்ளது. முரளிவிஜய் 1 ரன்னுடனும், ராகுல் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

  • தொடங்கியவர்

அதிவேக 250 டெஸ்ட் விக்கெட்டுகள்: அஸ்வின் புதிய சாதனை; வ.தேசம் 388 ஆல் அவுட்

 

 
 
அஸ்வின் அதிவேக 250 விக். சாதனை. | படம்: ஏஎப்பி.
அஸ்வின் அதிவேக 250 விக். சாதனை. | படம்: ஏஎப்பி.
 
 

ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் 45 டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அஸ்வின் புதிய சாதனை படைக்க வங்கதேசம் தன் முதல் இன்னிங்ஸில் 388 ரன்களுக்குச் சுருண்டது.

டெனிஸ் லில்லி 48 டெஸ்ட் போட்டிகளில் 250 டெஸ்ட் விக்கெட்டுகள் மைல்கல்லையும், டேல் ஸ்டெய்ன் 49 டெஸ்ட்களில் 250 விக்கெட்டுகள் மைல்கல்லையும் எட்ட இந்திய சுழற்பந்து நட்சத்திரம் அஸ்வின் 45 டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டி புதிய சாதனை படைத்துள்ளார்.

அதிக டெஸ்ட் விக்கெட்டுகளுக்கான உலகசாதனையை வைத்துள்ள மேதை முத்தையா முரளிதரனே 45 டெஸ்ட் போட்டிகளில் 218 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹர்பஜன் சிங் 199 விக்கெட்டுகளை 45 டெஸ்ட்களில் கைப்பற்றியுள்ளார்.

ரங்கனா ஹெராத் 46 போட்டிகளில் 247 விக்கெட்டுகள் என்று இச்சாதனையை நூலிழையில் தவறவிட்டார்.

அனில் கும்ப்ளே 55 டெஸ்ட்களிலும், பிஷன் பேடி 60 டெஸ்ட்களிலும், ஹர்பஜன் 61 டெஸ்ட்களிலும், கபில்தேவ் 65 டெஸ்ட்களிலும் ஜாகீர் கான் 73 டெஸ்ட்களிலும் 250 டெஸ்ட் விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டியது குறிப்பிடத்தக்கது.

இன்று அஸ்வின், 127 ரன்கள் எடுத்த வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனையை அடைந்தார். லெக் திசை சென்ற பந்தை முஷ்பிகுர் எட்ஜ் செய்ய சஹா கேட்ச் பிடித்தார்.

இன்று காலை மெஹதி ஹசன் மிராஸ் 51 ரன்களில் புவனேஷ்வர் குமாரிடம் பவுல்டு ஆனார். தைஜுல், தஸ்கின் அகமதுவை முறையே யாதவ், ஜடேஜா வீழ்த்தினர். கடைசி விக்கெட்டாக முஷ்பிகுர் ரஹிம் ஆட்டமிழந்தார், கேப்டனுக்கான பொறுப்புடன் வழிகாட்டியாக ஆடிய மிகச்சிறந்த இன்னிங்ஸ்.

இந்தியா தன் 2-வது இன்னிங்சை ஆடி வருகிறது. தஸ்கின் அகமதுவிடம் முரளி விஜய் (7), ராகுல் (10) ஆகியோர் வைடு பந்தை எட்ஜ் செய்து ஆட்டமிழக்க இந்திய அணி 55/2 என்று 354 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புஜாரா 15 ரன்களுடனும், கோலி 22 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

http://tamil.thehindu.com/sports/அதிவேக-250-டெஸ்ட்-விக்கெட்டுகள்-அஸ்வின்-புதிய-சாதனை-வதேசம்-388-ஆல்-அவுட்/article9537404.ece?homepage=true

  • தொடங்கியவர்

வங்காள தேசத்திற்கு 459 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

ஐதராபாத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்காள தேச அணிக்கு 459 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ள இந்தியா.

 
 
வங்காள தேசத்திற்கு 459 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா
 
இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 687 ரன்கள் குவித்தது. விராட் கோலி (204), முரளி விஜய் (108), சகா (106 அவுட் இல்லை) சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காள தேசம் 388 ரன்கள் சேர்த்தது. இந்தியாவை விட 299 ரன்கள் பின்தங்கியிருந்தது. அந்த அணியின் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் 127 ரன்கள் குவித்தார்.

299 ரன்கள் முன்னிலைப்  பெற்றாலும் இந்தியா பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. அதிரடியாக விளையாடிய இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. புஜாரா அவுட்டாகாமல் 54 ரன்கள் சேர்த்தார். அப்போது இந்தியா 459 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.

இதனால் வங்காள தேச அணியின் வெற்றிக்கு 459 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. 459 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/12152032/1067834/INDvBAN-459-runs-target-to-bangladesh-won.vpf

  • தொடங்கியவர்

ஹைதராபாத் டெஸ்ட்: தோல்வியைத் தவிர்க்க வங்கதேசம் போராட்டம்

 

 
புவனேஷ் குமார் பந்தில் ஹெல்மெட்டில் வாங்கிய வங்கதேச வீரர் சவுமியா சர்க்கார். | படம்.| கே.ஆர்.தீபக்.
புவனேஷ் குமார் பந்தில் ஹெல்மெட்டில் வாங்கிய வங்கதேச வீரர் சவுமியா சர்க்கார். | படம்.| கே.ஆர்.தீபக்.
 
 

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று ஆட்ட முடிவில் வங்கதேசம் தன் 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்து போராடி வருகிறது.

ஆட்ட முடிவில் ஷாகிப் அல் ஹசன் 21 ரன்களுடனும் மஹமுதுல்லா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் 10.5 ஓவர்களில் 28 ரன்களைச் சேர்த்தாலும் அஸ்வின், ஜடேஜாவுக்கு எதிராக கடுமையாகத் திணறினர், பிட்ச் இப்போது ஸ்பின்னர்களை ஆடுவதற்கு கடினமாக மாறிவிட்டது.

முன்னதாக வங்கதேசம் இன்று காலை 322/6 என்று தொடங்கி தன் முதல் இன்னிங்சில் 388 ரன்களுக்குச் சுருண்டது, கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் தனது விக்கெட் கீப்பிங் தவறுகளுக்கு பேட்டிங்கில் ஈடுகட்டி 127 ரன்களை எடுத்தார், அருமையான டெஸ்ட் இன்னிங்ஸ் ஆகும் இது, தனிமனிதராக அவர் ஒரு முனையில் போராடி கடைசி விக்கெட்டாகவும், அஸ்வினின் சாதனை 250-வது விக்கெட்டாகவும் ஆட்டமிழந்தார்.

இந்திய அணியில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் அஸ்வின், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் இசாந்த், புவனேஷ் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

299 ரன்களை இந்தியா முன்னிலை பெற்றிருந்தாலும் தற்காலத்திய ஃபேஷனுக்கிணங்க இந்தியாவே மீண்டும் பேட் செய்தது, விஜய், ராகுல் விரைவில் அவுட் ஆகினர், ராகுல் தன் இடத்தைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம், கடினமாக உழைத்துப் பெற்ற இடம், தனது பொறுப்பற்ற ஆக்ரோஷத்தினால் அதனை இழந்து விடக்கூடாது.

23/2 என்ற நிலையில் விராட் கோலி 40 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 38 ரன்களையும், புஜாரா 6 பவுண்டரி ஒரு ஹூக் சிக்ஸ் மூலம் 58 பந்துகளில் 54 ரன்களையும் எடுத்தனர், கோலி ஆட்டமிழந்தார், ரஹானே 28 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 16 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார், புஜாரா அரைசதம் அடித்த பிறகு 159/4 என்ற நிலையில் கோலி டிக்ளேர் செய்தார்.

459 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கினை எதிர்த்து களமிறங்கிய வங்கதேசம் தொடக்கத்தில் அஸ்வின் வீசுவார் என்பதை எதிர்பார்க்காத நிலையில் தமிம் இக்பாலை அஸ்வினிடம் 3 ரன்களில் இழந்தது. சவுமியா சர்க்கார் (42), மொமினுல் ஹக் (27 ) இணைந்து ஸ்கோரை 71 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். அப்போது சவுமியா சர்க்காரும் ஜடேஜா பந்தில் ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2 ஓவர்கள் சென்று அஸ்வினிடம் மொமினுல் வீழ்ந்தார், இதுவும் ரஹானே கேட்ச். ஆட்ட முடிவில் வங்கதேசம் 103/3.

http://tamil.thehindu.com/sports/ஹைதராபாத்-டெஸ்ட்-தோல்வியைத்-தவிர்க்க-வங்கதேசம்-போராட்டம்/article9537510.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஐதராபாத் டெஸ்ட்: வங்காள தேசத்தை 208 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

ஐதராபாத்தில் நடைபெற்ற வங்காள தேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 208 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

 
ஐதராபாத் டெஸ்ட்: வங்காள தேசத்தை 208 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
 
ஐதராபாத்:

இந்தியா- வங்காளதேசம் அணிகள் இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 687 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 388 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. ‘பாலோ ஆன்’ கொடுக்காமல் 299 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை இந்தியா விளையாடியது. 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்த நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் வங்காள தேசத்துக்கு 459 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா.

2-வது இன்னிங்சை விளையாடிய வங்காள தேசம் நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 103 ரன் எடுத்து இருந்தது. சவுமியா சர்கார் 42 ரன் எடுத்தார். மகமதுல்லா 9 ரன்னுடனும், சாஹிப் அல் ஹசன் 21 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. வெற்றிக்கு மேலும் 356 ரன் தேவை, கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் வங்காளதேசம் தொடர்ந்து பேட்டிங் செய்தது. எஞ்சிய 7 விக்கெட்டை கைப்பற்றினால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி பந்து வீச்சை தொடர்ந்தது.

ஆட்டம் தொடங்கிய 4-வது ஓவரிலேயே வங்காள தேச அணியின் 4-வது விக்கெட் சரிந்தது. முன்னாள் கேப்டன் சாஹிப் அல் ஹசன் 22 ரன்னில் வெளியேறினார். அவரது விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார். அப்போது அந்த அணியின் ஸ்கோர் 106 ஆக இருந்தது.

0F1B02BF-1E34-41D0-ADBA-E3C274A5927F_L_s
அரைசதம் அடித்த மெஹ்முதுல்லா பந்தை பவுண்டரிக்கு விரட்டும் காட்சி

5-வது விக்கெட்டுக்கு மெஹ்முதுல்லாவுடன் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். முதல் இன்னிங்சில் சதம் அடித்த முஷ்பிகுர் ரஹிமை அஸ்வின் தனது அபாரமான பந்து வீச்சால் எளிதில் அவுட் செய்தார். அவர் 23 ரன்களே எடுத்தார். அப்போது வங்காள தேச அணியின் ஸ்கோர் 5 விக்கெட்டுக்கு 162 ஆக இருந்தது. அடுத்து சபீர் ரஹ்மான் களம் வந்தார். மறுமுனையில் இருந்த மெஹ்முதுல்லா பொறுப்புடன் விளையாடி 115 பந்துகளில் 50 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும் அடங்கும்.

3C9C6441-9CFE-4ABA-923A-3E9CADFBFC07_L_s

மதிய உணவு இடைவேளையின் போது வங்காள தேசம் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்து இருந்தது. மெஹ்முதுல்லா 58 ரன்னுடனும், சபீர் ரஹ்மான் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

C70830EE-84EA-4709-9AC3-98F0F47E8D36_L_s
முஷ்பிகுர் ரஹிமை அவுட்டாக்கிய மகிழ்ச்சியில் அஸ்வின்

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இசாந்த் சர்மா பந்தில் அனல் பறந்தது. சபீர் ரஹ்மான் மேலும் நான்கு ரன்கள் எடுத்து 22 ரன்னில் இசாந்த் சர்மா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். மெஹ்முதுல்லா 64 ரன்கள் எடுத்த நிலையில் இசாந்த் சர்மா பந்தில் புவனேஸ்வர் குமாரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

3E0640E1-F36F-447A-AF6E-5C67BB01F465_L_s
சாஹிப் அல் ஹசன் அடித்த பந்தை பிடிக்கும் புஜாரா

அதன்பின் உள்ள விக்கெட்டுக்களை ஜடேஜாவும், அஸ்வினும் பார்த்துக் கொண்டனர். 23 ரன்கள் எடுத்து மெஹேதி ஹசன் மிராஸ் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். தைஜூல் 6 ரன்னில் ஜடேஜா பந்திலும், தஸ்கின் அகமது 1 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்திலும் ஆட்டம் இழந்தனர். இதனால் வங்காள தேசம் 100.3 ஓவரில் 250 ரன்னில் ஆல்அவுட் ஆனது. கம்ருல் இஸ்லாம் ரஃபி 3 ரன்னுடனும் களத்தில் இருந்தார்.

இதனால் இந்தியா 208 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அஸ்வின், ஜடேஜா தலா நான்கு விக்கெட்டுக்களும், இசாந்த் சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/13152027/1068051/Hyderabad-Test-india-Beats-bangladesh-by-208-runs.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.