Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பன்னீர் சட்டையைப் பிடித்த டாக்டர் வெங்கடேஷ்!

Featured Replies

மிஸ்டர் கழுகு: பன்னீர் சட்டையைப் பிடித்த டாக்டர் வெங்கடேஷ்!

 

போயஸ் கார்டன், ஓ.பி.எஸ் வீடு, அ.தி.மு.க தலைமைக் கழகம் எனப் பறந்து பறந்து சுழன்றுவிட்டு களைப்போடு லேண்ட் ஆனார் கழுகார்.

“அ.தி.மு.க-வுக்கு என சில வரலாற்று விதிகள் உள்ளன. அந்த விதிகளின்படிதான் இப்போதும் அது இயங்கி கொண்டிருக்கிறது” என முன்னோட்டம் கொடுத்தவரிடம், ‘‘நடக்கும் கூத்துக்களை விரிவாகச் சொல்லும். அதற்கு முன்பு அந்த வரலாற்று விதிகளுக்கு விளக்கவுரைச் சொல்லும்’’ என்றோம்.

p42d.jpg‘‘தனி மனித துதி, அனுதாப வெற்றிகள், மரணத்துக்குப் பின்பே தலைமை மாற்றம், அதனால் மிகப் பெரிய குழப்பங்கள் என்ற அடிப்படைகளோடு மட்டுமே அ.தி.மு.க எப்போதும் இயங்கி வந்திருக்கிறது.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்துக்குப் பொருந்திய இந்த விதிகளே, இப்போது சசிகலா, ஓ.பி.எஸ் காலத்துக்கும் பொருந்துகின்றன.’’

‘‘இவ்வளவு சிக்கல்கள் உருவாக யார் காரணம். சசிகலாவா, பன்னீர்செல்வமா?’’

‘‘இருவருமே சூழ்நிலைக் கைதிகள்தான். இப்போது நடக்கும் நிகழ்வுகளில் அவர்களின் விருப்பமும் இயக்கமும் மிகக் குறைவு. பன்னீரை முதலமைச்சராக்கியது சசிகலாவும் அவர் குடும்பமும்தான். இதை பன்னீரே ஒப்புக்கொண்டுள்ளார். அதுபோல, தஞ்சாவூரில் ஜனவரியில் நடைபெற்ற விழாவில் பேசிய நடராஜன், பிரதமர் மோடிக்கு சில எச்சரிக்கைகளை மறைமுகமாக விடுத்தார்; ‘ஆட்சிக்கு எதிராக வடக்கில் சதி நடக்கிறது’ எனக் குற்றம்சாட்டினார். ஆனால், ‘ஓ.பி.எஸ் ஆட்சி சிறப்பாக நடக்கிறது. அவரே முதலமைச்சராகத் தொடர்வார்’ என்றுதான் உறுதி அளித்தார். ஆக, சசிகலாவுக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையில் ஆரம்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பது தெளிவு.’’

‘‘அப்படியானால் பன்னீர்செல்வம்தான் குழப்பம் ஏற்படுத்தினாரா?’’

‘‘அதுவும் இல்லை. ஜெயலலிதா இறந்ததும் பன்னீர்செல்வத்திடம் முதலமைச்சர் பொறுப்பை ஏற்கச் சொல்லி உள்ளனர். அப்போதே அவர் மறுத்துள்ளார். இதை இப்போது பன்னீர்செல்வம் சொன்னபோது, அதை யாரும் மறுக்கவில்லை. பன்னீர்செல்வத்தை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘அக்காவை(சசிகலா) ஊருக்கு அழைத்துக்கொண்டு போகிறோம் என்று திவாகரன் என்னிடம் சொன்னார்’ என்று தெரிவித்தபோது, பன்னீர் பதறி உள்ளார். உடனே, ‘சின்னம்மாவுக்காக நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டு, சசிகலாவைக் கட்சியின் பொதுச் செயலாளராகக் கொண்டுவர பன்னீர்செல்வமே முன்வந்து முன்மொழிந்துள்ளார். இந்தத் தகவலையும் பன்னீர்செல்வம் சொன்னபோது, யாரும் மறுக்க வில்லை. அதனால், பன்னீரும் பிரச்னையைத் தொடங்கவில்லை.’’

‘‘அப்படியானால் நடக்கின்ற குழப்பங்களுக்கு யார்தான் காரணம்?’’

p42e.jpg

‘‘அ.தி.மு.க-விலும் ஆட்சியிலும் நடக்கின்ற அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம், டாக்டர் வெங்கடேஷும், டி.டி.வி. தினகரனும்தான் எனச் சொல்கிறார்கள். இவர்கள் இருவரும் நடத்தும் ஆட்டத்தில் திவாகரன், நடராசனே கொஞ்சம் ஆடிப்போய் உள்ளனர். சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன், டாக்டர் வெங்கடேஷ்; மகள் அனுராதா. சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகன், டி.டி.வி.தினகரன். இந்த டி.டி.வி. தினகரன்தான் டாக்டர் வெங்கடேஷின் அக்கா அனுராதாவை திருமணம் செய்திருக்கிறார். சொந்த அத்தை, மாமா பிள்ளைகள் இவர்கள். இவர்கள்தான் இப்போது சசிகலாவையே கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.’’

‘‘ஆனால், டாக்டர் வெங்கடேஷும், தினகரனும் எதிரும் புதிருமாகத்தானே இருந்தார்கள்?’’

‘‘அது ஜெயலலிதா காலத்தில்! டாக்டர் வெங்கடேஷ் கட்சிக்குள் வந்தபோது அவருடைய வளர்ச்சி வேகமாக இருந்தது. அப்போது அதை எதிர்த்துக் குடும்பத்தில் குரல் எழுப்பியவர் தினகரன். அதுபோல, தினகரனின் வளர்ச்சி வேகமாக இருந்தபோது, அதைப் பின்னால் இருந்து தடுத்தவர் வெங்கடேஷ். தினகரன் முதலில் ஓரம் கட்டப்பட்டார். பிறகு வெங்கடேஷ் ஓரம் கட்டப் பட்டார். 2011-ல் சசிகலா குடும்பம் கட்சியைவிட்டு நீக்கப்பட்டபோது இவர்களும் சேர்த்துத்தான் கட்டம் கட்டப்பட்டனர். பிறகு, போயஸ் கார்டனுக்கு மன்னிப்பு கேட்டு திரும்பிச் சென்ற சசிகலாவோடு இளவரசியும் இருந்தார். இதனால், இளவரசியின் குடும்பம் ஆதிக்கம் பெற்றது. இளவரசியின் மகன், விவேக் ஜெயராமன் மிகப் பெரிய அளவில் வளர்ந்தார். இதில் சசிகலாவின் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்குக் கொஞ்சம் எரிச்சல். இதையடுத்து வெங்கடேஷும் தினகரனும் ஒன்று சேர்ந்து கொண்டனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவர்கள் போயஸ் கார்டனை வசப்படுத்தி அதன்மூலம் கட்சி, ஆட்சி மற்றும் மன்னார்குடி உறவுகளில் மற்றவர்களையும் கட்டுப்படுத்தலாம் என்று நினைக்கின்றனர். இவர்கள் முதலில் சுதாகரனை உள்ளேவிடாமல் தடுத்தார்கள். ‘மகாதேவனை சென்னைக்கு வரக்கூடாது’ என்றார்கள். டாக்டர் சிவகுமாரை ஒதுக்கினார்கள். விவேக் ஜெயராமனை ‘பிசினஸை மட்டும் கவனித்துக்கொண்டால் போதும்’ என்றார்கள். நடராசன், திவாகரன் பேச்சைக்கூட சசிகலா அதிகம் கேட்டுவிடாத மாதிரி தடை போட்டார்களாம்.’’

‘‘ஓஹோ!”

‘‘ஜெயலலிதா இறந்ததும் சசிகலாவை பொதுச் செயலாளராகக் கொண்டுவர வேண்டும் என மன்னார்குடி குடும்பமே விரும்பியது. ஆனால், சசிகலா அப்போது விரும்பவில்லை. அப்போது அவர் சொன்னது, ‘நான் ஒருங்கிணைப்பாளராக இருந்துகொள்கிறேன். அம்மா விரும்பியபடி மதுசூதனனோ... அல்லது கட்சிக்காரர்கள் தேர்ந்தெடுக்கும் மற்றவர்களோ வரட்டும்’ என சொல்லியிருக்கிறார்.  ஆனால், வெங்கடேஷும் தினகரனும்தான் ‘பொதுச்செயலாளர் பதவிக்கு நீங்கள்தான் வரவேண்டும்’ என சொல்லிக் கட்டாயப்படுத்தினர். அதன்பிறகுதான் சசிகலா பொதுச் செயலாளர் ஆனதும், அ.தி.மு.க அமைச்சர்களை பன்னீர்செல்வத்துக்கு எதிராகப் பேட்டி கொடுக்க வைத்ததும் நடந்தன. எல்லாம் இவர்கள் கைங்கரியம்தான். அமைச்சர்களாக இருக்கும் மற்ற சீனியர்களுக்கு ஓ.பி.எஸ். மீது உள்ள பொறாமையைப் பயன்படுத்திக்கொண்டு இந்த இருவரும் மற்றவர்களைத் தூண்டி உள்ளனர். இவர்கள் தமிழகத்தில் இப்படிச் செய்து கொண்டிருந்தார்கள் என்றால், டெல்லியில் தம்பிதுரை வேறுமாதிரி காய் நகர்த்திக் கொண்டிருந்தார்.’’

‘‘தம்பிதுரை என்ன செய்தார்?’’

p42vc.jpg

‘‘ஜெயலலிதா இறந்த அன்று மாலையே தம்பிதுரை டெல்லியைத் தொடர்புகொண்டு ‘என்னை முதலமைச்சராக்குங்கள்’ எனக் கேட்டுக்கொண்டி ருந்தார். அந்தத் தகவல் அப்போதே மன்னார்குடி உறவுகளுக்கும், ஓ.பி.எஸ் உள்ளிட்ட கட்சியின் சீனியர்களின் காதுகளுக்கும் எட்டியது. ஆனால், அதன்பிறகு மத்திய அரசின் உதவியுடன் பன்னீர் சி.எம். ஆக்கப்பட்டார். அதில் தம்பிதுரை புழுங்கிவிட்டார். இதையடுத்துதான் அவர் ஓ.பி.எஸ்-ஸுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். பிரதமரைச் சந்திக்க ஓ.பி.எஸ் போனபோது, தம்பிதுரையும் 49 எம்.பி-க்களை அழைத்துக்கொண்டு பிரதமரைப் பார்க்கப் போனார். சசிகலா அப்படிச் சொல்லவில்லையாம். அது தம்பிதுரையாக செய்த ஏற்பாடு. எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, சசிகலாவைத் தொடர்புகொண்டு, ‘அம்மா... நாங்களும் போய் பிரதமரைச் சந்தித்தால், தமிழகத்தில் நம்மைப் பற்றி நல்ல அபிப்ராயம் ஏற்படும்’ எனத் தகவல் மட்டும் சொன்னார். அதையடுத்து, ‘டெல்லியில் பன்னீர்செல்வம் அவரைச் சந்தித்தார்... இவரைச் பார்த்தார்... அவர் உங்களுக்கு எதிராக செயல்படுகிறார்’ என பன்னீர்செல்வத்தைப் பற்றி வத்தி வைத்துக்கொண்டே இருந்தார். அதே நேரத்தில், இங்கு சட்டமன்றத்தில் ஓ.பி.எஸ் மீது தி.மு.க காட்டிய பரிவு பற்றியும் எதை எதையோ கூட்டிக் கழித்து சசிகலாவிடம் சொல்லி அவரைச் சம்மதிக்க வைத்தனர். அதன்பிறகுதான், கடந்த 5-ம் தேதி எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.’’

‘‘ம்ம்ம்... அதில் என்ன நடந்ததாம்?’’

‘‘எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் என அழைக்கப்பட்டு எல்லோரும் தலைமைக் கழகத்தில் காக்க வைக்கப்பட்டனர். ஓ.பி.எஸ்-ஸை மட்டும் தனியாக வீட்டுக்குள் அழைத்துப்போனார்கள். அந்த அறையில் தினகரன், வெங்கடேஷ், சசிகலா மற்றும் ஓ.பி.எஸ் மட்டுமே இருந்துள்ளனர். ஓ.பி.எஸ்-ஸை ராஜினாமா செய்யச் சொன்னபோது, அவர், ‘நான் இந்தப் பதவியைக் கேட்கவில்லை. நீங்களாகக் கொடுத்தீர்கள். கொடுத்துவிட்டு இப்படி திடீரென்று இறங்கச் சொன்னால் எப்படி? கொஞ்சம் நாளாகட்டும். அதன்பிறகு நானே ஓய்வு பெறுவதுபோல் ஒதுங்கிக் கொள்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். ‘இல்லை, இப்போது ராஜினாமா செய்யுங்கள்’ எனச் சொன்னபோது, அதற்கும் சில விளக்கங்களைக் கொடுத்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த டாக்டர் வெங்கடேஷ், ‘நாங்கள் சொல்லிக்கிட்டி ருக்கோம். நீ பேசிக்கிட்டே இருக்கே... இந்தக் கட்சி யாருடைய கட்சினு நினைக்கிறே? இது உன்னோடதா? எங்களோடது! கையெழுத்துப் போடுன்னா போடு’ என்று ஒருமையில் சொல்லி திட்டியதாக பன்னீர் ஆட்கள் பதறுகிறார்கள். அப்போது பன்னீரின் சட்டையை வெங்கடேஷ் பிடித்ததாகவும் தினகரன் தடுத்ததாகவும் அவர்கள் சொல்கிறார்கள். இதனால், அதிர்ச்சி அடைந்த பன்னீர் அதற்கு பிறகுதான் ராஜினாமா முடிவுக்கு வந்தார். ‘நான் ராஜினாமா செய்யும் கடிதத்தை எழுதி அம்மா நினைவிடத்தில் வைத்து வணங்கிவிட்டு வருகிறேன்’ என்று சொல்லி இருக்கிறார். ‘உடனேயே... இங்கேயே எழுதிக் கொடுங்க. அதெல்லாம் எங்கேயும் போக வேண்டாம்’ எனச் சொல்லியிருக்கிறார்கள். வேறு வழியில்லாமல்தான் எழுதிக்கொடுத்துள்ளார். அடுத்து, ‘ராஜினாமா செய்துவிட்டேன், சின்னம்மாதான் இனி முதல்வர் என எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் போய் சொல்லுங்கள்’ எனச் சொல்லி இருக்கிறார்கள். ‘நான் இப்படியே வீட்டுக்குப் போய்விடுகிறேன். எனது குடும்பத்தை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்குச் சொல்கிறேன். அங்கு அம்மாவுக்கு ஒரு கோயில் கட்டப் போகிறேன்’ என்று சொல்லி இருக்கிறார். ‘நீங்கள்தான் தலைமைக் கழகம் போய் சொல்ல வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். அதன்பிறகுதான் தலைமைக் கழகம் வந்தார் பன்னீர்!”

‘‘ஓஹோ!”

‘‘அதன்பிறகு பன்னீருக்குக் கிடைத்த தகவல்கள் எதுவும் அவருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. அவருக்குத் துணை முதல்வர் பதவி தரப் போகிறார்கள் என்ற தகவல் பரவியது. ஆனால், கவர்னர் மாளிகைக்கு அனுப்ப புதிய அமைச்சர்கள் பட்டியல் தயாரானபோது, அதில் பன்னீர் செல்வம் பெயர் இல்லையாம். இது இன்னும் அவமானம் ஆகும். இந்தத் தகவல் பரவியபோது பன்னீருக்கு அமைச்சர் பதவி தரப்போவது இல்லை என சிலரும், அவரை சபாநாயகர் ஆக்கப் போவதில்லை என சிலரும் சொன்னார்கள். குழப்பம் அடைந்தார் பன்னீர். இதில் மன உளைச்சல், அவமானம், விரக்தியின் எல்லைக்குப் போன ஓ.பி.எஸ், அதன்பிறகுதான் ஜெயலலிதா சமாதியில் போய் தியானத்தில் அமர்ந்தார். பிறகு திகில் கிளப்பினார்!”

‘‘டாக்டர் வெங்கடேஷும், டி.டி.வி.தினகரனும் என்னதான் நினைக்கிறார்கள்?’’

‘‘நடராசன் தளர்ந்துவிட்டார். அவர் பெசன்ட் நகர் வீட்டிலேயே இருக்கிறார். திவாகரன் மன்னார்குடியை விட்டு வருவதே இல்லை. ‘இந்த நேரத்தில் நாம் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து சசிகலாவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வோம்; அதன்மூலம் கட்சியையும் ஆட்சியையும் கட்டுப்படுத்துவோம்’ எனத் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். காலையில் 9 மணிக்கே போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்துவிடும் அவர்கள், இரவு வரை அங்குதான் இருக்கிறார்கள். இவர்களை மீறி சசிகலாவை யாரும் அணுக முடியவில்லை. இவர்கள் நினைத்ததைத்தான் கட்சியினர் அனைவரும் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். அதுவும் எந்த எல்லைக்கு இவர்கள் போகிறார்கள் என்றால், திவாகரன், அவரது மகன் ஜெய் ஆனந்த், இளவரசி, அவரது மகன் விவேக், மகாதேவன், சுதாகரன் என்று தங்களின் ரத்த சொந்தங்கள்கூட சசிகலாவை நெருங்கக்கூடாது என்று நினைக் கின்றனர். இவர்கள்தான் தற்போது சசிகலாவை ஆட்டி வைக்கும் இரு சக்திகளாக உள்ளனர். அன்று சசிகலா, ஜெயலலிதாவுக்கு என்ன செய்தாரோ அதைத்தான் இன்று சசிகலாவுக்கு வெங்கடேஷும், தினகரனும் செய்கிறார்கள் என்கிறார்கள்” எனச் சொல்லிவிட்டு எழுந்த கழுகார்,

‘‘இந்த மோதலின் உச்சமாக பன்னீர்செல்வத்துக்கு சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் போன் செய்தார். ‘உங்களது போராட்டத்துக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு’ என்று சொன்னார்’’ என்றார்.

‘‘அவர் யார்?’’ என்றோம். கழுகார், பெரிய கோயில் இருக்கும் திசை நோக்கி வணங்கினார்! பறந்தார்!

அட்டைப்படம்: மீ.நிவேதன்


நடராசனுக்கு என்ன ஆச்சு?

p42a.jpg

அரசியல் களம் அதகளமாகி கொண்டிருக்கும் சூழலில் நடராசன், ‘உடல்நலம் சரியில்லை’ என அப்போலோவில் அட்மிட் ஆனார். உண்மையில் என்ன ஆனது அவருக்கு? சில நாட்களாக டெல்லிக்கும் தமிழகத்துக்கும் மாறி மாறி அலைந்து கொண்டிருந்தார் நடராசன். பிப்ரவரி 4-ம் தேதி, காலையில் இருந்தே அவருக்கு லேசான காய்ச்சலும் தொண்டை வலியும் ஏற்பட்டது. அதையடுத்து வீட்டிலேயே ஓய்வில் இருந்தார். 5-ம் தேதி சசிகலா அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை, டி.வி-யில் பார்த்துக் கொண்டிருந்தார். ‘‘எதையும் நிதானமாக செய்யுங்கள். எந்த விஷயத்திலும் அவசரப்பட்டுவிடாதீர்கள்’’ என  தொலைபேசியிலேயே ஆலோசனைகளை வழங்கி கொண்டிருந்த நடராசனுக்கு திடீரென லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன்பிறகுதான் அட்மிட் ஆனார்.

நடராசனை எப்போது வேண்டுமானாலும் போய் சந்திக்கும் ஒரே நபர், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்தான். அவர்தான் நடராசனை போய் பார்த்தார். 6-ம் தேதி நடராசனின் உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. “நடராசனுக்கு கல்லீரல் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. அதேபோல் மூளைக்குச் செல்லும் ரத்த நாளம் ஒன்றிலும் லேசான அடைப்பு தோன்றியுள்ளது. அதனால், ரத்த ஓட்டத்தின் வேகம் குறைந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். பிரபல வயிறு மற்றும் குடல் சிகிச்சை நிபுணர் பழனிச்சாமி, நரம்பியல் நிபுணர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் சிகிச்சை தருகிறார்கள்” என டாக்டர்கள் சொன்னார்கள்.

இன்னும் கணவரைப் பார்க்க சசிகலா வரவில்லை. நடராசனும் அதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை.


p42b.jpgஜார்ஜ் சர்ச்சை!

ஓ.பி.எஸ் வீட்டிற்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும், டி.ஜி.பி. ராஜேந்திரனும் வியாழக்கிழமை திடீரென வருகை தந்தனர். உள்ளே இருபது நிமிடங்கள் ஆலோசனை செய்தார்கள். உடனே, ‘சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் டிரான்ஸ்பர் ஆகிறார்’ எனச் செய்தி பரவியது. கடந்த 8-ம் தேதி இரவு ஜார்ஜைத் தொடர்புகொண்ட ஓ.பி.எஸ், ஒரு விஷயத்தைச் சொல்லி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆனால், ஜார்ஜ், ‘‘இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இப்போது நடப்பது ‘காபந்து’ சர்க்கார்’’ என சொன்னாராம். இதன்பிறகுதான் கிரிஜா வைத்தியநாதனிடம் தகவலைச் சொல்லி உள்ளார். அதன்பிறகு, டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் வந்து, ஜார்ஜ் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். சந்திப்பில் இதுதான் நடந்தாம்.


ராஜ்பவன் டெம்பரேச்சர்!

ன்னீர், சசிகலா, தமிழக மக்கள் என எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ், ஒருவழியாக வியாழக் கிழமை வந்து சேர்ந்தார். முன்னதாக அவர், டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இல்லத் திருமண விழாவில் வைத்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி ஆகியோரிடம் தமிழக விவகாரம் குறித்து நீண்ட ஆலோசனை செய்திருந்தார் எனச் சொல்லப் படுகிறது. குறிப்பாக சசிகலா வழக்கு பற்றி முகுல் ரோத்கியிடம் அவர் பேசியிருக்கிறாராம்.

p42.jpg

‘‘தி.மு.க சதி’’ என பன்னீருக்கு எதிராக சீறிய சசிகலா ஆதரவாளர்கள், மத்திய அரசையோ, தமிழகம் வருவதற்குத் தாமதித்த கவர்னரையோ சீண்டிவிடக் கூடாது என்பதில் ரொம்ப உஷாராகவே இருந்தார்கள். 

முதல் அப்பாயின்ட்மென்ட் பன்னீருக்குத்தான். தனது ஆதரவாளர்களுடன் கவர்னரைச் சந்தித்தார் ஓ.பி.எஸ். அதற்கு முந்தைய தினம் நள்ளிரவில் ஒருவர் பன்னீரைப் பார்த்து ஆலோசனை நடத்தினார். அவர், ஜெயலலிதாவின் முன்னாள் வழக்கறிஞர் ஜோதி. கவர்னரிடம் பேச சில பாயின்ட்களை அவர் எடுத்துக் கொடுத்திருக்கிறார். ‘‘முதல்வர் ராஜினாமா செய்வதாக இருந்தால் அது தொடர்பான கடிதத்தை கவர்னரிடம் நேரில்தான் வழங்க வேண்டும். அப்போதுதான் எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் முதல்வர் ராஜினாமா செய்கிறார் என்பதை கவர்னர் அறிந்து கொள்ள முடியும். கடித வாசகங்கள் தொடர்பாகவும் முதல்வரிடம் கவர்னர் கேள்விகள் எழுப்பலாம். ‘உங்களை யாராவது நிர்ப்பந்தித்தார்களா?’ என்கிற கேள்வியையும் கவர்னர் எழுப்ப முடியும். இப்படி நிறைய மரபுகள் உண்டு’’ எனச் சொன்னாராம் ஜோதி. இவற்றையெல்லாம் வித்யாசாகர் ராவிடம் எடுத்துக் காட்டியிருக்கிறார் பன்னீர். அதோடு சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க தான் தயாராக இருப்பதாகவும், தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும் சொன்ன பன்னீர், பெரும் பான்மையை நிரூபிக்க கால அவகாசம் கேட்டாராம். 

இதன்பிறகு சசிகலா, கார்டனில் இருந்து கிளம்பி ஜெ. சமாதியில் வணங்கிவிட்டு ராஜ்பவன் வந்தார். பொதுச் செயலாளர் நியமன தீர்மானத்தை எப்படி ஜெ. சமாதியில் வைத்துப் பிறகு பதவி ஏற்றாரோ, அதேபோல ஆதரவு எம்.எல்.ஏ-கள் பட்டியலை சமாதியில் வைத்து எடுத்து வந்திருந்தார் சசிகலா. ‘‘ஐந்து நாட்களுக்குள் தீர்ப்பு வந்துவிடும். இப்படிப்பட்ட நிலையில் பதவியேற்பது சரியாக இருக்குமா’’ என அவரிடம் வித்யாசாகர் ராவ் கேட்டதாகத் தெரிகிறது. ‘‘தண்டனை விதிக்கப்பட்டவர்கள்தான் பதவி ஏற்க முடியாது. இப்போது என் மீது எந்த தண்டனையும் இல்லை. எங்கள் தலைவி 2001-ல் தேர்தலில் நிற்க முடியாத சூழலில்கூட அப்போது இருந்த கவர்னர் பாத்திமா பீவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்’’ என சசிகலா தரப்பில் சொல்லப்பட்டது. ‘‘கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கியதாக முதல்வர் சொல்லியிருக்கிறாரே’’ என கவர்னர் கேட்டபோது, ‘‘சசிகலாவை சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தை பன்னீர் செல்வம்தான் வழிமொழிந்து கையெழுத்துப் போட்டார். அப்போது அவர் பேசிய பேச்சு டி.வி-யில் வெளியாகி இருக்கிறது’’ என ரெடியாக பதில் சொன்னது சசிகலா தரப்பு. கவர்னரைச் சந்தித்தபோது சசிகலாவோடு சீனியர் அமைச்சர்கள் சென்றபோதும், சசிகலா பக்கத்தில் அமர்ந்திருந்தது டி.டி.வி.தினகரன். அவர்தான் சசிகலா சார்பில் கவர்னரிடம் பேசியிருக்கிறார். தினகரனும் வெங்கடேஷும்தான் காய் நகர்த்துகிறார்கள் என்பது அங்கே அப்பட்டமானது. ‘‘இப்படியெல்லாம் பிரச்னைகள் வரலாம் என யோசித்தே, பன்னீரை வழிமொழிய வைத்து அதை ஜெயா டி.வி-யில் ஒளிபரப்ப வைத்திருக்கிறார்கள். பன்னீர் வழிமொழிந்த பிறகுதான் கட்சி அலுவலகத்துக்கு சசிகலா வந்தார். இது எல்லாமே பன்னீரை பணிய வைக்க நடந்த விஷயங்கள்’’ எனப் பின்னணியை இப்போது சொல்கிறார்கள்.

‘உரிய ஆலோசனைக்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்’ எனச் சொல்லியிருக்கும் கவர்னர், இதுதொடர்பான அறிக்கையை ஜனாதிபதிக்கும் உள்துறை அமைச்சகத்துக்கும் அனுப்பிவிட்டார்.

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.