Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பணம் மாற்றும் பக்கா கேங்க்! - எடப்பாடி சர்ச்சை 1

Featured Replies

பணம் மாற்றும் பக்கா கேங்க்! - எடப்பாடி சர்ச்சை 1

 

ரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன்... இவர்களுடன் இன்னொரு வி.ஐ.பி இருக்கிறார். அவர்தான், சந்திரகாந்த். தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் இவர்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கான்ட்ராக்டர் ராமலிங்கத்தின் மகன்தான் இந்த சந்திரகாந்த். பெருந்துறை சுப்பிரமணியம் என்பவர் வீட்டில் பெண் எடுத்தவகையில் ராமலிங்கமும் எடப்பாடி பழனிசாமியும் நெருங்கிய உறவினர்கள். கடந்த ஆண்டு டிசம்பரில் திடீரென வருமானவரித் துறையினர் பெங்களூரு, ஈரோடு ஆகிய ஊர்களில் ராமலிங்கத்தை மையமாக வைத்து ரெய்டு நடத்தினர். பணத்தட்டுப்பாடு நிலவிய நேரத்தில், 5.40 கோடி ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்த காரணத்துக்காக சந்திரகாந்த்தை வருமானவரித் துறையினர் கைதுசெய்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். சந்திரகாந்த் ஏற்கெனவே கான்ட்ராக்டர் என்றாலும், அவரது குறுகியகால வளர்ச்சியைப் பார்த்த வருமானவரித் துறையினருக்கு, ‘இவர் எடப்பாடி பழனிசாமியின் பினாமியாக இருப்பாரோ?’ என்கிற சந்தேகம் எழுந்தது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் பின்னணியை ஆய்வுசெய்து வருவதாக வருமானவரித் துறை தரப்பில் அப்போது சொல்லப்பட்டது.

p36.jpg

அடுத்த சில நாட்களில், எடப்பாடி பழனிசாமியின் ‘நிழல் அமைச்சர்’ ஆக கோலோச்சிய பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன் பக்கம் வருமானவரித் துறையினரின் பார்வை திரும்பியது. சேலம் மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் இளங்கோவன் இருக்கிறார். ‘பழைய ரூபாய் நோட்டுகளை இந்த வங்கி மூலம் மாற்றியிருப்பார்களோ?’ என்கிற சந்தேகத்தின் பேரில், அந்த வங்கியில் திடீர் ரெய்டு நடத்தினர். இளங்கோவன் உட்கார்ந்து இருந்த அறையிலும் சோதனை போடப்பட்டது. அங்கிருந்து ஏராளமான ஆவணங்களை எடுத்துச் சென்றனர். சந்திரகாந்த், இளங்கோவன் ஆகிய இருவரையும் தொடர்ந்து, எடப்பாடியும் சிக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ரெய்டில் சிக்கிய ஆவணங்கள் பரிசீலனையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘‘செல்வம் கொழிக்கும் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை இரண்டையும் தன் வசம் வைத்திருந்ததால், எடப்பாடி காட்டில் பண மழைப் பொழிந்தது. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராகவும் திகழ்ந்தார். ‘சீஃப் கலெக்‌ஷன் ஏஜென்ட்’ என்று இவரை மற்ற அமைச்சர்கள் கிண்டலாக அழைத்தார்கள். இதனால், அவர் தலைகால் புரியாமல் ஆடினார். யாரையும் மதிப்பது இல்லை. மற்றவர்களுடன் பேசுவதைக் குறைத்துக்கொண்டார். ஜெயலலிதா, சசிகலா தவிர யாரிடமும் அதிகம் பேசாமல் இருந்தார். ஜெயலலிதாவுக்கு உடல்நலம் இல்லாமல் போனபோது, முழுமையாக சசிகலாவிடம் சரணாகதி அடைந்தார். இவர், முதல்வர் ரேஞ்சுக்குப் போனது இப்படித்தான்” என்று சொல்கிறார்கள் கொங்கு மண்டலத்தில்.

தமிழகத்தின் மேற்கு மண்டலம், கடந்த தேர்தலில் கண்ணை மூடிக்கொண்டு அ.தி.மு.க-வை ஆதரித்தது. எடப்பாடியோடு சேர்த்து இங்கு கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தினர் ஆறு பேர் அமைச்சர்கள்; 26 பேர் எம்.எல்.ஏ-க்களாக இருந்தார்கள். முக்கியமாக வேலுமணி, தங்கமணி ஆகியோரும் செல்வாக்கு பெற்றவர்கள். கட்சியின் அவைத்தலைவர் செங்கோட்டையனும் இந்தச் சமூகம்தான். ஜெயலலிதா உயிருடன் இருந்தவரையில் சசிகலாவால் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்தவர் செங்கோட்டையன். எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி. கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் வரை அறிமுகம் உள்ளவர். ஜெயலலிதா உடல்நிலை மோசமான நிலையில், சசிகலாவின் என்ட்ரியை எதிர்க்கவும் துணிந்தார். ஆனால், லாகவமாக இவரை சசிகலா அழைத்துப்பேசி சமாதானப்படுத்தி அவைத்தலைவர் பதவி தந்ததோடு, முக்கிய ஆலோசனைகளில் தன்னருகே வைத்துக்கொண்டார். ‘ஒருவேளை சசிகலா முதல்வர் பதவியில் உட்கார முடியாவிட்டால், செங்கோட்டையன்தான் அடுத்த முதல்வர்’ என்று கூவத்தூர் ரிசார்ட்ஸில் எம்.எல்.ஏ-க்கள் ஆரூடம் சொல்லிவந்த நிலையில், திடீரென எடப்பாடி பழனிசாமிக்கு சான்ஸ் அடித்தது.

p36a.jpg

இதுபற்றி செங்கோட்டையன் ஆதரவு பிரமுகர் ஒருவர், ‘‘இது சசிகலாவின் முடிவு என்பதால், பொறுமை காக்கிறோம். எடப்பாடியை நாங்கள் ‘எரிச்சல் கேரக்டர்’ என்று சொல்வோம். அவருக்கென்று ஒரு சிலரை வைத்துக்கொண்டு செயல்படுவார். சேலத்தைப் பொறுத்தவரை, எடப்பாடி பழனிசாமியின் நிழல் அமைச்சர் இளங்கோவன் ஆதிக்கம் இனி அதிகமாகிவிடும். ஏற்கெனவே இங்கு இளங்கோவனின் கண் அசைவில்தான் அதிகாரிகள் நடந்து வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் முன்னிலையிலேயே கட்சிப் பிரமுகர்கள் இளங்கோவனைப் பார்த்து, ‘வாங்க, அமைச்சரே!’ என்று அழைப்பார்கள். அதைக்கேட்டு இவரும் சிரித்துக்கொள்வார். இப்போது முதல்வர் ஆகிவிட்டார். இனி, இளங்கோவன் என்ன செய்வார் என்று கேட்கவே வேண்டாம்” என்கிறார்கள்.

கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், ‘‘கொங்கு மண்டலத்துக்கு எடப்பாடி பழனிசாமி நிறைய திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அவரால் முடியுமா என்று தெரியவில்லை. ஏனென்றால், நிழல் முதல்வராக டி.டி.வி.தினகரன்தான் ஆதிக்கம் செலுத்துவார். ஏற்கெனவே ஓ.பன்னீர்செல்வத்தை என்ன பாடு படுத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பன்னீர் கதிதான் இவருக்கும்” என்கிறார்.

பார்ப்போம்!

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சாதி ஆணவம் தலைவிரித்து ஆட்டுவிக்கிறது! - எடப்பாடி சர்ச்சை-2

 

டப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோ வைரலாக பரவியது. அதில் பழனிச்சாமி என்ற போலீஸ்காரர் பேசுகிறார்.

p38b.jpg

“நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் குடியிருந்தேன். அவரது அண்ணன் கோவிந்தன் என்கிற கோவிந்தராஜின் முன் பைக்கில் போனதற்காக என்னைக் கட்டி வைத்து அடித்தார். அந்த ஊரில் அவருடைய குடும்பத்தினர், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் கேவலமாக நடத்துகிறார்கள். ஒரு போலீஸ்காரனான எனக்கே இந்த நிலைமையென்றால், அங்கு இருக்கும் சாதாரண மக்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்” என்று உருக்கமாகப் பேசியிருந்தார்.

இதைப் பற்றி அறிவதற்காக சிலுவம்பாளையத்துக்குச் சென்றோம். அமைதியாக இருந்தது கிராமம். பலரும் அச்சத்துடன் பேச மறுத்தார்கள். பளிங்குக் கற்களைப் பரப்பிப் போட்டது போல வழுவழுவென இருக்கிறது, சாலை. அந்த சாலை ஓரத்தில் பழனிசாமியின் அண்ணன் கோவிந்தன் வீடு இருக்கிறது. அதற்குப் பின்புறத்தில் எடப்பாடி பழனிசாமியின் வீடு. பழனிசாமி வீட்டு கேட் முன்பு, சேர் போட்டு வயதான ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அவர்தான், பழனிசாமியின் அம்மா. பக்கத்தில் ஒரு பெண் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்தார். அவரிடம், பழனிசாமியின் அம்மா பெயரைக் கேட்டோம். அவர் பயந்தபடி ரகசியமான குரலில், ‘‘அதெல்லாம் சொல்லக்கூடாதுங்க. அம்மானுதான் கூப்பிடுவோம். கவுண்டரூட்டு ஆட்கள் பேரை   நாங்க சொல்லக் கூடாதுங்க’’ என்றார். ‘‘அமைச்சர் பேரையாவது சொல்லுவீங்களா?” என்று கேட்டால், ‘‘மஹும்! அதெப்படிங்க கவுண்டர் பேரைச்  சொல்றது?” என்றபடி அவசரமாக நம்மை விட்டு நகர்ந்தார்.

p38a.jpg

அந்த வீடியோவை வெளியிட்ட போலீஸ்காரர் பழனிச்சாமியை தொடர்புகொண்டோம். “ஆமாம் சார். வீடியோவுல நான் சொன்னது அத்தனையும் உண்மை. அந்த சம்பவம் நடந்து ஒரு வருஷம் ஆகப் போகுது. நான் அப்பவே ஊரைவிட்டு வந்துட்டேன். நான் பொண்ணு கட்டுன ஊருதான் சிலுவம்பாளையம். நேரம் சரியில்லைனு ஆறு வருஷமா அங்கதான் தங்கியிருந்தேன். அங்க அமைச்சரோட அண்ணன் கோவிந்தனின் அடக்குமுறை ஓவருங்க. தாழ்த்தப்பட்ட சாதிக்காரங்க, வண்டியிலயோ சைக்கிள்லயோ அவுங்க வீட்டக் கடந்து போகும்போது கோவிந்தனை பார்த்துட்டா, டக்குனு இறங்கிடணும். அவருக்கு வணக்கம் வெச்சிட்டு, வண்டியைத் தள்ளிக்கிட்டு போய், அந்த வீட்டைக் கடந்துபோன பிறகுதான் வண்டியில ஏறணும். போலீஸ்காரன்னு கூட நினைக்காம,  நானும் அப்படித்தான் போய்க்கிட்டு இருந்தேன்.

என் பையன் ஒரு புல்லட் வாங்க ஆசைப்பட்டான். நானும் வாங்கிக் கொடுத்தேன். அத அவர் கண்ணு படும்படியா அவர் வீட்டுக்கிட்ட இறங்காம ஓட்டிக்கிட்டு இருந்திருக்கான். அதைப் பார்த்து மனுஷன் எரிச்சலாகியிருக்கார்.

p38.jpgமனசுக்குள்ளயே வெச்சிருந்தவர், ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு, ‘போலீஸ்காரன்னா பெரிய இவனாடா நீ...’னு கேவலமாத் திட்டி, அடி பிச்சு எடுத்துட்டாருங்க. என்னை அந்த ஊர்லயே இருக்கக் கூடாதுனு அடிச்சி விரட்டிட்டார். அங்க இருந்த என்னோட பொருள்களையும் எடுக்க விடல. ரொம்ப நாள் போராடி, ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதாங்க அதெல்லாம் எடுத்துட்டு வந்தேன். எடப்பாடி பழனிசாமி அப்படி கிடையாதுங்க. அவர் நல்லாத்தான் பழகுவார். ஆனா, அவுங்க அண்ணன் கோவிந்தன் சரியான சாதிவெறிப் பிடிச்ச ஆள். அந்த ஊர்ல அவரை எதிர்த்து யாருமே பேசமாட்டாங்க. பேசுனா அவுங்க அங்க இருக்க முடியாது. நான் உண்மையைச் சொல்றங்க. அதனால செத்தாலும் எனக்குக் கவலை இல்லை” என்று சொன்னார் போலீஸ்காரர் பழனிச்சாமி.

ஊர்க்காரர்கள் சிலரிடம் விசாரித்தோம், “இதெல்லாம் அப்போதிலிருந்தே இருக்கிற நடைமுறைங்க. கோவிந்தனை அமைச்சரால கூட அடக்க முடியாது. அதிகபட்சமா, ‘நீ இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா நானும் உன்னோட வீட்ல வந்து உட்கார்ந்துக்க வேண்டியதுதான்’னு சொல்வார். அவ்வளவுதான். கோவிந்தன் வெச்சதுதாங்க சட்டம். மக்களும் காலங்காலமா பழகிட்டதால, இது வெளில தெரியாது. அவுங்களாப் பார்த்து மரியாதைக் கொடுக்குற மாதிரி ஒரு தோரணை இருக்கும்” என்றனர்.

இதுபற்றி விளக்கம்பெறுவதற்காக எடப்பாடி பழனிசாமியின் அண்ணன் கோவிந்தன் என்கிற கோவிந்தராஜைத் தொடர்புகொள்ள முயன்றோம். அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆஃபிலேயே இருந்தது. அவர் தரப்பு ஆட்களிடம் விசாரித்தால், ‘‘அதெல்லாம் உண்மை கிடையாதுங்க’’ என்பதோடு முடித்துக் கொள்கிறார்கள்.

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: கே.தனசேகரன், ரமேஷ் கந்தசாமி


இது எடப்பாடி ஸ்டைல்!

டப்பாடி பழனிசாமியின் அண்ணன் வெளிப்படையாக சாதி ஆதிக்கம் செய்கிறார் என்றால், இவர் அதிகாரத்தின் மூலமாக உள்ளுக்குள்ளாக சாதி ஆதிக்கம் செய்வார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ‘‘எடப்பாடி ஒன்றியத்தில் அதிகமான வன்னியர்கள் இருக்கிறார்கள். ஆனால், இங்கு இருக்கிற 11 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் எட்டு தலைவர்கள் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். வன்னியர்கள் பெருமளவில் இருந்தாலும் அவர்களைப் புறக்கணித்துவிடுவார்” என்று இவர்கள் புகார் வாசிக்கிறார்கள்.

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்
இடைப்பாடி முதல்வரானது எப்படி? கூவத்தூரில் நடந்த ரகசிய பேச்சு

 

ஆட்சியை தக்க வைப்பதற்கான செலவுகளை ஏற்பதாக, இடைப்பாடி பழனிசாமி தரப்பினர், சசிகலாவுக்கு வாக்குறுதி அளித்ததால் தான், அவரை, அ.தி.மு.க., சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்ய, சசிகலா சம்மதம் அளித்ததாக, தகவல் வெளியாகியுள்ளது.
பாதகமான தீர்ப்புஇதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:


தீர்ப்புக்கு முந்தைய நாள் இரவு, சசிகலா, கூவத்துார் சென்று, அங்கேயே தங்கினார். அப்போது இரவு, 9:00 மணிக்கு மேல், செங்கோட்டையன், இடைப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ.,க்களுடன் பேசினார்.


அப்போது, தீர்ப்பு பாதகமாக வந்தால், செங்கோட்டையன், இடைப்பாடி பழனிசாமி ஆகியோரில், ஒருவரை முதல்வராக்க வேண்டும். அந்த பதவிக்கு வருபவர், எம்.எல்.ஏ.,க்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று, சசிகலா தெரிவித்துள்ளார்.
உடனே, செங்கோட்டையன் தரப்பில், 'போதிய நிதி வசதி இல்லை; யாரை அறிவிச்சாலும் ஆதரிப்போம்' என, கூறப்பட்டது.


பின், பழனிசாமி தரப்பினர், 'கட்சி உடைய கூடாது; ஆட்சி கலைய கூடாது; அதற்காக, என்ன சொன்னாலும் செய்கிறேன்' என்றனர். அதன்பின், இடைப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய, சசிகலா முடிவு எடுத்தார். அந்த விபரம், அனைத்து, எம்.எல்.ஏ.,க்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த, 14ம் தேதி உச்சநீதிமன்றம், சசிகலாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்தது. உடனடியாக, அன்று மதியமே, இடைப்பாடி பழனிசாமி, சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்ததை, செங்கோட்டையன்,
நிருபர்களிடம் தெரிவித்தார்.



பிரச்னை
விடுதியில் இருந்த, எம்.எல்.ஏ.,க்கள் அந்த விபரத்தை, முன்கூட்டியே அறிந்ததால் தான், யாரும் பிரச்னை செய்யவில்லை. எம்.எல்.ஏ.,க்கள் தங்கியிருந்த கூவத்துார் மற்றும் பூந்தண்டலத்தில் உள்ள விடுதிகளின் செலவையும், பழனிசாமியே ஏற்க உள்ளார்.
இதனால் தான், முதல்வர் பதவியுடன், அவர் ஏற்கனவே வகித்து வந்த, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறைகளையும் கவனிக்க, சசிகலா தரப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1713475

  • தொடங்கியவர்

எக்குத்தப்பு எடப்பாடி! - சக்கரை மூட்டை To சி.எம். நாற்காலி

ஓவியம்: ஹாசிப்கான்

 

ஜெயலலிதா மறைந்த நிமிடங்களில், முதல்வர் பதவிக்கான போட்டியில் முதல் வரிசையில் இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஓ.பன்னீர்செல்வம் கலகக்குரல் எழுப்பியப் பிறகு... உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சசிகலாவின் கனவைச் சிதைக்க...  இப்போது, முதல்வர் பதவிக்கு அவர் முன்னிறுத்தப்பட்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி யார்?

``நெடுங்குளம் கன்னங்கூட்டம் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், தன் பங்காளிகள் மூன்று பேரை ஈட்டியால் குத்திக் கொன்று அந்த சமூகத்துக்கே அவப்பெயர் வாங்கிக் கொடுத்தார். அந்த இளைஞன்தான் பின்னாளில் தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சரான எடப்பாடி பழனிசாமி. சொந்த சமூகமே அன்று அவருக்குப் பெண் கொடுக்கத் தயங்கியது. ஆனால், இன்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா, அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்து இருக்கிறார்.’’ இதுதான் எடப்பாடி வட்டாரத்தில் அவர் பற்றி சொல்லும் அறிமுகம்.

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டத்தில் இருக்கும் நெடுங்குளம் சிலுவம்பாளையத்தைச் சேர்ந்த கருப்ப கவுண்டர் - தவுசாயம்மாள் தம்பதிக்கு ரஞ்சிதம், கோவிந்தராஜ், பழனிசாமி என மூன்று பிள்ளைகள். கடைக்குட்டிதான், எடப்பாடி பழனிசாமி. இவருடைய மனைவி, ராதா. ஒரே மகன் மிதுன். மருமகள் திவ்யா.

p18.jpg

பழனிசாமியின் குடும்பத்துக்குச் சொந்தமாக 15 ஏக்கர் நிலம் இருந்தது. அதில், அண்ணன் கோவிந்தராஜ் விவசாயம் செய்ய, பழனிசாமி அவருக்கு ஒத்தாசையாக இருந்தார். ஆங்காங்கே வெல்லம் காய்ச்சுபவர்களிடம் சென்று வெல்லம் வாங்கி... அதை சித்தோடு, பூதப்பாடி, அந்தியூர் உள்ளிட்ட ஏரியாக்களுக்கு எடுத்துச் சென்று, மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்வார். மூட்டை ஒன்றுக்கு இரண்டு ரூபாய் கமிஷன் கிடைக்கும். இதனால் இவருக்கு, ‘சக்கரை மூட்டை’ என்ற புனைப் பெயரும் உண்டு.

 உள்ளூரைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான கோபால், ‘‘இவன் நம்ம பையன். உனக்கு விசுவாசமாக இருப்பான்’’ என்று பழனிசாமியைக் கூட்டிச் சென்று அப்போது ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராக விளங்கிய செங்கோட்டையனிடம் அறிமுகம் செய்துவைத்தார். அதையடுத்து, சிலுவம்பாளையம் கிளைக் கழகச் செயலாளராக ஆனார் பழனிசாமி. 

பழனிசாமி குடும்பத்துக்கும், அவர்களின் பங்காளிகளுக்கும் இடத்தகராறு இருந்துவந்தது. இந்தத் தகராறு முற்றியபோது, பழனிசாமியும் அவருடைய அண்ணன் கோவிந்தராஜும் மற்றும் சிலரும் சேர்ந்து, பங்காளிகளான சோமசுந்தரம், கருப்பண்ண கவுண்டர், துரை ஆகிய மூன்று பேரை ஈட்டியால் குத்தினர். சம்பவ இடத்திலேயே சோமசுந்தரம் இறந்துவிட்டார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கருப்பண்ண கவுண்டரும், துரையும் சில நாட்களில் இறந்துவிட்டனர். இதில், முதல் குற்றவாளியாக பழனிசாமியின் பெயர் பதிவுசெய்யப்பட்டது. போலீஸுக்குப் பயந்து பழனிசாமியும் கொலையில் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் தலைமறை வானார்கள். பழனிசாமியின் சமுதாயத்தைச் சேர்ந்தவரான முத்துசாமி, அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். எனவே, அவர் தயவை நாடினார்கள். அதன்மூலமாக சமரசத்துக்கு ஏற்பாடு நடந்தது. பழனிசாமி தரப்பு விட்டுக்கொடுக்க முன்வந்தது. அதையடுத்து, இவர்கள் மீதான வழக்கை பங்காளிகள் வாபஸ் வாங்கினர்.

ஆனாலும், இது அழியாத கறையாகப் படிந்தது. ‘இவர்கள் குடும்பத்துக்குப் பொண்ணு கொடுக்கக் கூடாது’ என்று எடப்பாடி எட்டுப்பட்டி கவுண்டர்களும் முடிவெடுத்தனர். பழனிசாமிக்கு சொந்த ஊரில் பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. அதனால், தேவூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில், ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ராதாவைத் திருமணம் செய்தார். அவர், செங்கோட்டையனுக்கு உறவினர்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, ஜெ. அணி - ஜா. அணி என அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்து, 1989 தேர்தலில் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில், எடப்பாடி தொகுதியில் போட்டியிட பழனிசாமிக்கு வாய்ப்பு வாங்கிக்கொடுத்தார், செங்கோட்டையன். சேவல் சின்னத்தில் போட்டியிட்ட பழனிசாமி வெற்றிபெற்றார். அதன்பின் அவருக்கு கிடுகிடு வளர்ச்சிதான். 1990-ல் அ.தி.மு.க-வின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டச் செயலாளராக ஆனார் பழனிசாமி. 1991 சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அப்போது, பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கண்ணப்பனுக்கு நெருக்கமானார். சேலத்தில் வீடு, கார், சொத்துக்கள் என பழனிசாமியின் பொருளாதார கிராஃப் உயரத்தொடங்கியது.

 1996 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட பழனிசாமி, தோல்வியடைந்தார். அவரிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, அர்ஜுனனிடம் வழங்கப்பட்டது. 1998 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மீண்டும் சேலம் மாவட்டச் செயலாளர் ஆனார். திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, பழனிசாமி எம்.பி ஆனார். வாஜ்பாயின் 13 மாத கால மத்திய அரசை ஜெயலலிதா கவிழ்த்தார். பின்னர், 1999-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

 ஜெயலலிதா, 2000-ம் ஆண்டு, கட்சியில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தார். ஒருங்கிணைந்த சேலம் புறநகர் மாவட்டத்தை சேலம் புறநகர் கிழக்கு, சேலம் புறநகர் மேற்கு என இரண்டாகப் பிரித்து, கிழக்கு மா.செ-வாக மஞ்சனி முருகேஷனையும், மேற்கு மா.செ-வாக செம்மலையையும் நியமித்தார். ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராக இருந்த பழனிசாமி, சேலம் புறநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் எனப் பதவி இறக்கம் செய்யப்பட்டார்.

2001 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதி, கூட்டணிக் கட்சியான பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்டது. அதனால், பழனிசாமிக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. அந்தத் தருணத்தில் உள்ளாட்சித் தேர்தல் வந்தது. எடப்பாடி நகர மன்ற துணைத் தலைவர் பதவிக்கு அப்போது எடப்பாடி நகரச் செயலாளராக இருந்த மணியை அ.தி.மு.க., தலைமை அறிவித்தது. அதனால், ஜெ. பேரவைத் துணைத் தலைவராக இருந்த முருகேசனை நிற்க வைத்து, மணியைத் தோற்கடித்தார் பழனிசாமி. இது ஜெயலலிதா கவனத்துக்குச் சென்றதும், பழனிசாமி வகித்து வந்த மேற்கு மாவட்ட அவைத் தலைவர் பதவியைப் பறித்தார்.  

அதன்பின், செங்கோட்டையனுக்கு வெண்சாமரம் வீசி வந்ததால், 2003-ம் ஆண்டில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த செங்கோடன் நீக்கப்பட்டு, பழனிசாமி நியமிக்கப்பட்டார். அதன்பின் 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் தோல்வி அடைந்தார் பழனிசாமி. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வி அடைந்தார். தொடர் தோல்விகளால், 2007-ல் இவரிடம் இருந்த மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு,        எஸ்.கே.செல்வத்திடம் தரப்பட்டது.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல, 2010  இறுதியில் சசிகலாவின் உறவுவட்டத்தில் ராவணனைப் பிடித்து மீண்டும் சேலம் மாவட்டச் செயலாளர் பதவியைப் பெற்றார் பழனிசாமி. அதிலும், ரெண்டாவது லட்டும் சேர்த்துக் கிடைத்தது. அதாவது, சேலம் புறநகர் கிழக்கு, மேற்கு என இரண்டாக இருந்ததை மீண்டும் ஒருங்கிணைந்த மாவட்டமாக மாற்றி, புறநகர் மாவட்டச் செயலாளர் ஆனார். மூன்றாவது லட்டு, 2011 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் கிடைத்தது. அது, சசிகலா குடும்பத்து உதவியுடன் கிடைத்த அமைச்சர் பதவி.  

அமைச்சர் ஆன பிறகு, அ.தி.மு.க-வின் ஐவர் அணியில் அசைக்க முடியாத தலைவராக இருந்தார். சமீபத்தில் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், சேகர் ரெட்டி வீடுகளில் ரெய்டு நடந்ததை அடுத்து பழனிசாமியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கம் வீட்டிலும் ரெய்டு நடந்தது. அப்போது, ‘அடுத்த குறி எடப்பாடி பழனிசாமி’ என்று பரவலாகப் பேசப்பட்டது. 

அரசியல் அரிச்சுவடியே தெரியாத ஆரம்பக் காலத்தில் இவருக்காக உதவி செய்த கோபால், சண்முகம், பாலாஜி, கருணாநிதி போன்றவர்களை ஆரம்பக் கட்டத்திலேயே பழனிசாமி ஒதுக்கினார். எம்.எல்.ஏ-வாக இருந்த காலகட்டங்களில் இவர் கூடவே விசுவாசிகளாக இருந்த எடப்பாடி முன்னாள் நகரச் செயலாளர் மணி, எடப்பாடி தொகுதிச் செயலாளர் பெருமாள், எடப்பாடி மீனவர் பிரிவுச் செயலாளர் சுரேஷ் போன்றவர்களை அமைச்சர் ஆனதும் கழற்றிவிட்டார். சிலரை அவமானப்படுத்தி அடித்ததாகவும் குமுறல்கள் எழுந்ததுண்டு. தனக்கென புதியதாக அதிகார வட்டம் ஒன்றையும் வளர்த்துக்கொண்டார்.

ஐவர் அணியில் ஓர் அமைச்சர் என்ற தகுதிக்கு உயர்ந்தபிறகு பழனிசாமியிடம் நிறைய மாற்றங்கள். தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டு தொகுதிக்குள் எந்தப் பிரச்னைக்கும் சென்றதில்லை. ஆனால், அவருடைய அண்ணன் கோவிந்தராஜ் பெயர், பல சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாகியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர், அமைச்சரின் அண்ணன் வீட்டருகே சைக்கிளில் இருந்து இறங்காமல் சென்றார் என்பதற்காக அவரைக் கட்டிப் போட்டு அடித்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

எக்குத்தப்புக்காரர்கள்தான் அரியணையில் அமர்வார்களா?

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.