Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மசிடோனியா: அதிகாரத்துக்கான அடுத்த ஆடுகளம்

Featured Replies

மசிடோனியா: அதிகாரத்துக்கான அடுத்த ஆடுகளம்
 

article_1493896626-Parliamkent-new.jpg

 

- தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ  

அதிகாரத்துக்கான ஆடுகளங்கள் தொடர்ந்தும் மாறுவன. மாறுகின்ற உலக ஒழுங்கு புதிய சவால்களை உருவாக்குகின்றது; புதிய அரங்காடிகளைத் தோற்றுவிக்கிறது. புதிய அதிகாரச் சமநிலையும் புதிய கூட்டணிகளும் உருப்பெறுகின்றன. 

இதன் பின்னணியில், பூகோள அரசியல் அரங்கில், புதிய களங்கள் உருவாகவும் உருவாக்கவும்படுகின்றன. 

புவியியல்சார் ஆதிக்கத்துக்கான அவா புதிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தோற்றுவிக்கின்றது. அவ்வாறு தோற்றம்பெறுவன அதிகாரத்துக்கான புதிய ஆடுகளமாகின்றன.   

மசிடோனியாவின்  நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற வன்முறை, 
ஊடகங்களின் அதீத கவனத்துக்குள்ளானது. 

குறிப்பாக, சிறுபான்மையினரான அல்பேனிய இனத்தவர் நாடாளுமன்ற சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்றினுள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை அடித்துத் துவைத்தனர்.

 மசிடோனியாவில் ஜனநாயகத்துக்கான தேவை குறித்து அமெரிக்கா, மேற்குலக நாடுகள், ஐரோப்பிய நாடுகள், நேட்டோ என்பன கருத்துரைக்கின்றன. 

அதேவேளை ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஒரு நாட்டின் உள்நாட்டலுவல்களில் வெளியார் தலையிடுவது கண்டிக்கத்தக்கது என அறிவிக்கின்றன. 

இவை, ஐரோப்பாவின் பல்கன் வளைகுடாப் பகுதியில் அமெரிக்க-ரஷ்ய அதிகாரப் போட்டியின் புதிய ஆடுகளமாக மசிடோனியா உருவெடுத்துள்ளது.  

மசிடோனியா என்ற நாட்டை உலகறியச் செய்த பெருமை மாவீரன் அலெக்சாண்டரைச் சாரும். மசிடோனியரான அலெக்சாண்டர் உலக நாடுகளை வென்றதனூடு மசிடோனியா என்றவொரு நாட்டையும் மசிடோனியர்கள் என்ற இனத்தையும் உலகமே திரும்பிப் பார்க்கச் செய்தான். 

இன்று மசிடோனியக் குடியரசு என்று அறியப்படுகின்ற மசிடோனியாவானது தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடாகும். 

கொசோவோ, சேர்பியா, பல்கேரியா, அல்பேனியா, கிறீஸ் ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்ட, நிலத்தால் சூழப்பட்ட ஒரு நாடாகும். 2.08 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்நாட்டில், 65 சதவீதமானவர்கள் மசிடோனியர்களாகவும் 25 சதவீதமானவர்கள் அல்பேனியர்களாகவும் சேர்பியர்கள், துருக்கியர்கள், ரொமேனியர்கள் ஆகியோர் மிகுதி 10 சதவீதமானவர்களாவர். 

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் தோற்றம் பெற்ற யூகோஸ்லாவிய சோஷலிச சமஷ்டிக் குடியரசின் ஆறு குடியரசுகளில் ஒன்றாக மசிடோனிய சோசலிசக் குடியரசு தோற்றம் பெற்றது. 1990 இன் தொடக்கத்தில் யூகோஸ்லாவியா துண்டாகத் தொடங்கியதன் விளைவால், 1991 இல் மசிடோனியா தனிநாடாகத் தன்னைப் பிரகடனப்படுத்தியது. 

1992 இல் யூகோஸ்லாவியா ஆறு துண்டுகளாகி, இன்று ஏழு நாடுகளாகி உள்ளது. இரண்டாம் உலகயுத்தத்துக்குப் பின்னரான காலத்தில் சோவியத் யூனியனின் நட்புசக்தியாகவும் அதைவிட முக்கியமாக புரட்சிகர கம்யூனிச அமைப்புகளின் ஆதரவாளனாக யூகோஸ்லாவியாவின் பங்கு முக்கியமானது. சோவியத் யூனியனின் உடைவு, யூகோஸ்லாவியாவின் சிதைவுக்கு வழியமைத்தது.   

இரண்டாவது உலக யுத்தத்துக்கு முன்பிருந்தே பல ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமைகளில் விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்றன. 1945 இல் உலக பாசிசம் தோற்கடிக்கப்பட்ட சூழலில், கிழக்கு, தெற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் சோஷலிச ஆட்சிகள் தோற்றம் பெற்றன. அவ்வாறு மார்ஷல் டிட்டோவின் தலைமையில் உருவாக்கப் பட்டதே யூகோஸ்லாவிய சமஷ்டிக் குடியரசாகும். 

அதேபோன்று அல்பேனியாவில் அன்வர் ஹோஜா தலைமையில் சோஷலிச ஆட்சி மலர்ந்தது. இத்தகைய சோஷலிச நாடுகள் ஐரோப்பிய, அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளுக்கு பெரும் சவாலாகவும் எதிர் நிலையாகவும் அமைந்தன. 

எனவே, இச்சோஷலிச நாடுகளை உடைப்பதற்கும் சிதைப்பதற்கும் மேற்குலகு சதாமுயன்று வந்துள்ளது. அதனைச் சக்தி மிக்க மக்கள் தலைவர்களாக விளங்கிய டிட்டோ, அன்வர் ஹோஜா போன்றோர் உயிருடனும் அதிகாரத்திலும் இருக்கும் வரை சாத்தியமாக்க முடியவில்லை. 

இருப்பினும் அந்நாடுகளில் இன, மத முரண்பாடுகளை வளர்ப்பதற்கும் பகை நிலைக்குத் தள்ளுவதிலும் ஊடுருவி வேலைகளைச் செய்தும் வந்தன.  

இப்பின்னணியில் பல்கன் நாடுகளில் மேற்குலகுக்கு ஆதரவான ஆட்சிகளை உருவாக்குவது, பல்கன் வளைகுடாவைக் கட்டுப்படுத்தவும் இராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஆதிக்கத்துக்கான பிடியை வலுவாக்கும் என்பதை நன்கறிந்திருந்த அமெரிக்காவும் மேற்குலகும் யூகோஸ்லாவியாவில் இன, மத ரீதியிலான பகையை உருவாக்கி, ஊட்டிவளர்த்து, அந்நாட்டைப் பிரித்துத் துண்டாக்குவதில் பெரும்பங்காற்றின. 

இப்பின்னணியில் யூகோஸ்லாவியா, ஸ்லாவ் தேசிய இனங்கள் பலவற்றின் ஒன்றிணைவால் உருவான நாடு என்பதும் அங்கே எவ்விதமான தேசிய இன ஒடுக்கலும் இருந்ததில்லை என்பதும் பலருக்கு நினைவுக்கு வருவதில்லை. 

அங்கே இருந்துவந்த தேசிய இனங்களிடையே போட்டி இருந்தது. இடையிடை பகைமையான உணர்வுகளும் இருந்தன. ஆனால், அது மோதல்களுக்கோ, பிரிவினைக்கோ 1990 கள் வரை இட்டுச் செல்லவில்லை. 

பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. மிகமோசமான பொருளாதார நெருக்கடி இருந்து வந்த 1980 களில் பிரிவினைக்கான இயக்கங்கள் உருப்பெறவில்லை.   

உண்மையில், 1945 முதலாக, சோவியத் யூனியனுடன் முரண்பட்டு நின்ற அணிசேரா நாடான யூகோஸ்லாவியாவின் ஒற்றுமையை அமெரிக்கா அப்போது விரும்பியது. அன்று ஒரு வலுவான யூகோஸ்லாவியாவால் அமெரிக்காவுக்கு பயன் இருந்தது. சோவியத் யூனியன் 1980 களின் இடைப்பகுதியிலிருந்து பலவீனப்படத் தொடங்கிவிட்டது. அதற்குப் பின்னர் யூகோஸ்லாவியாவால் பயனிருக்கவில்லை.  

மதத்தாலும் மொழிப் பிரிவுகளாலும் இனப்பிரிவுகளாலும் வேறுபட்ட யூகோஸ்லாவியத் தேசிய இனங்களைப் பிரிப்பதில், கத்தோலிக்கத் திருச்சபைக்கும் ஜேர்மனிக்கும் பயன் இருந்தது. 

ஆனாலும், யூகோஸ்லாவியாவில் தன்னுடைய படைகளை நிலைநிறுத்தத் திட்டமிட்டிருந்த அமெரிக்காவுக்கு பொஸ்னியா - ஹெர்ட்ஸ் கொவினா (பொஸ்னியா என்றே பலராலும் அழைக்கப்படுவது) ஒரு வாய்ப்பான இடமாயிற்று. அங்கே பிரிவினை தூண்டிவிடப்பட்டது.  

ஜேர்மனிய, வத்திக்கான் ஊக்குவிப்புடன் ஸ்லொவ்னியாவும் குறோவேஷியாவும் யூகோஸ்லாவிய சமஷ்டியினின்று பிரிந்துபோக முற்பட்டபோது, யூகோஸ்லாவியக் குடியரசுத் தலைவரான மிலஷோவிச், சேர்பியப் பேரினவாதியாகத் தன்னை அடையாளப்படுத்தவில்லை. 

மாறாக, யூகோஸ்லாவியா தொடர்ந்தும் ஒன்றுபட்ட நாடாக இருக்கும் தேவையையே வற்புறுத்தினார். குறோவேஷியப் பிரிவினையின்போது, மேலைநாட்டுக்குச் சார்பான நிலைப்பாட்டை எடுத்த அதன் தலைவர் துஜ்மன், பின்னர் சேர்பியர்கட்கு எதிரான இனத் துவேஷத்தை கட்டவிழ்த்து விட்டார்.

அதுமட்டுமன்றிக் குறோவேஷியாவினின் க்றயினா மாகாணத்திலிருந்து இரண்டரை இலட்சம் சேர்பியர்கள் ‘இனச் சுத்திகரிப்புக்கு’ உள்ளாயினர்.  

பொஸ்னியாவில் பொஸ்னிய முஸ்லிம் மேலாதிக்கச் சிந்தனையுடைய அலியா இஸெத்பெகோவிச், அமெரிக்க ஆதரவுடன் பொஸ்னியாவின் மூன்று தேசிய இனங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்த முற்பட்டார். 

அக்காலத்தில், அமெரிக்கா முஸ்லிம் தீவிரவாதத்தை வளர்த்து வந்தது என்பதையும், சோவியத் யூனியன் உடைவதை ஊக்குவித்ததும் போதாமல், முஸ்லிம் தீவிரவாதிகளைக் கொண்டு ரஷ்யாவை மேலும் பலவீனப்படுத்துகிற பணிகளிலும் தீவிரம் காட்டியதையும் நாம் நினைவிலிருத்த வேண்டும்.  

இத்தகைய பின்னணியிலேயே பொஸ்னியாவில் சேர்பிய, குறோவேஷிய, முஸ்லிம் தேசிய இனங்களுக்கிடையிலான மோதலுக்கான நிலை உருவானது. இம்மூன்று சமூகங்களும் மதத்தால் மட்டுமே வேறுபட்ட, ஒரே ‘சேர்ப்’ இனத்தவர் என்பதும் மதம் சார்ந்த அரசியலும் அந்நிய ஆக்கிரமிப்புமே மூன்று சமூகங்களையும் வெவ்வேறாக்கின என்பதும் நாம் நினைவிலிருத்த வேண்டிய உண்மைகளாகும். 

எனினும், இன்னொரு முறை நடந்த அந்நியக் குறுக்கீட்டின் மூலம், பொஸ்னிய சரித்திரம் மூன்று சமூகங்களுக்கடையிலும் மும்முனைப் போராட்டமாக வெடித்தெழ நேர்ந்தது. இதன் விளைவுகளில் சேர்பிய இனத்தவரது குற்றங்கள் மட்டுமே பேசப்பட்டதுடன் அவை மிகைப்படுத்தப்பட்டு, அதேபொய்கள் இன்னும் திரும்பத் திரும்பக் கூறப்படுகின்றன.

சேர்பியாவையும் மொண்டி நெக்ரோவையும் மசிடோனியாவையும் கொண்டிருந்த எஞ்சிய யூகோஸ்லாவியா, எவ்வகையிலும் பொஸ்னியாவில் குறுக்கிட இயலாதவாறு தடைக்குட்படுத்தப்பட்டிருந்தது. 

எனவே, பொஸ்னியாவின் இரத்தக் களரிக்கு மிலஷோவிச் பங்களித்தவரல்ல. எனினும் வெளி உதவியுடன் சேர்பியர்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் குறோவேஷிய இனத் தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டம் பற்றிப் பேசப்படுவதில்லை;முஸ்லிம் தீவிரவாதிகளுடைய குற்றங்களும் பேசப்படுவதில்லை. 

சேர்பியர்கள், பொஸ்னியாவில் அமெரிக்கா, நேட்டோ, ஐ.நா  எனும் மூன்று அந்நிய சக்திகளை எதிர்கொண்டனர். அதனால் அவர்களது மனித உரிமை மீறல்கள் நியாயமாகிவிடாதபோதிலும், அவர்களை மட்டுமே குற்றவாளிகளாக்குவது தவறான நோக்கமுடையது.  

கொசோவோவும் வொய்வொதினாவும் சேர்பியாவின் சுயாட்சி மாகாணங்கள். அங்கு வலுவான சுயாட்சிகள் இருந்தன. கொசோவோவில் ஒரு கணிசமான சேர்பிய சிறுபான்மை இருந்தது. சோவியத் யூனியனின் சரிவுக்குப் பின்னரே அங்கு கொசோவோ தேசியவாதம் கிளறிவிடப்பட்டது. 

கொசொவோ தீவிரவாத இயக்கம் ஒன்று சேர்பியாவின் ‘சோஷலிஸ’ ஆட்சியைப் பலவீனப்படுத்துகிற நோக்கத்துடன் அமெரிக்காவால் ஆயுதபாணியாக்கப்பட்டது. சேர்பியப் படைகளுக்கும் அமெரிக்கா ஆதரவு பெற்ற தீவிரவாதிகளுக்கும் மோதல்கள் வலுத்த போதும் கொசோவோவில் இனப்படுகொலைகள் நடக்கவில்லை.

எப்போது நேட்டோ, சேர்பியா மீது குண்டு வீச்சைத் தொடங்கியதோ அப்போதுதான் கொசோவோ, அல்பேனியர் மீதான தாக்குல்கள் நிகழ்ந்தன. கொசோவோவின் சேர்பியர்கள் விரட்டப்பட்டது பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. 

நமக்கு வழங்கப்படுகிற சித்திரம் என்ன? சேர்பியர்கள் பெருந்தேசிய மேலாதிக்கவாதிகள் என்பதனாலேயே யூகோஸ்லாவியா உடைந்தது என்றும், சேர்பியர்களின் தேசிய இனவெறியாலேயே கொசோவோ பிரிந்து செல்ல நேர்ந்தது என்றும் மிகையான, எளிமைப்படுத்தப்பட்ட ஒரு புனைவை நாம் மீண்டும் மீண்டும் கேட்கிறோம். இவ்வாறே இன்றும் மசிடோனியா பற்றிச் சொல்லப்படுகிறது.   

மசிடோனியாவும் சேர்பியாவும் அமெரிக்க மேலாதிக்க நோக்கங்களுக்கு எதிராகப் போரிடுகின்றன. அதன் விளைவாகவே சேர்பியாவில் உள்ள அல்பேனிய முஸ்லிம்களுக்காக அமெரிக்கா போரிட்டு கொசோவோயை தனிநாடாக, சேர்பியாவில் இருந்து பிரித்தெடுத்து, அங்கிகரித்து, தனது நலன்களைப் பேணிக் கொண்டது.

அப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத்தளமான ‘பொண்ட் ஸ்டீல்’ கொசோவோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் உலக அரசியல் அரங்கில் ரஷ்யாவின் மீள்வருகையானது பல்கன் பகுதியில் அதிகாரச் சமநிலையை மாற்றியுள்ளது. 

இப்பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தைத் தக்கவைப்பதன் அவசியத்தை ரஷ்யா நன்குணர்ந்திருக்கிறது. இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகள் முழுவதுமாக அமெரிக்காவின் கைகளுக்குப் போவதை ரஷ்யா விரும்பாது.

ஆகவே சேர்பியா, மசிடோனியா ஆகிய நாடுகளுக்கான பூரண ஆதரவை வழங்குவதன் மூலம் தனது கட்டுப்பாட்டை இப்பகுதியில் மீள நிறுத்த ரஷ்யா முயல்கிறது. 

மறுபுறம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அரங்கேற்றிய நிறப்புரட்சிகள் போன்றதொன்றை நிறைவேற்ற அமெரிக்கா முயன்றது. அது கடந்த பல வருடங்களாக வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் அங்குள்ள அல்பேனியர்களைக் கிளறிவிடுவதன் மூலம் சேர்பியாவில் இருந்து கொசோவோவைப் பிரித்தெடுத்து அங்கிகரித்தது போன்றதொரு செயலை மசிடோனியாவில் செய்ய விளைகிறது. இதற்கு அடித்தளமாகவே கடந்த வார நிகழ்வுகளையும் காண வேண்டியுள்ளது.   

சிறுபான்மை அல்பேனியக் கட்சிகளுடன் இணைந்து, மேற்குலக ஆதரவு பெற்ற எதிர்க்கட்சி ஆட்சியமைக்க முயன்றபோது, அதை மசிடோனிய ஜனாதிபதி ஜோர்ஜ் இவானோவ், தனது அதிகாரத்தின் மூலம் தடுத்து நிறுத்தியிருக்கிறார். 

மசிடோனியர்கள் எதிர்க்கட்சியின் இம்முயற்சியை, கொசோவோ போன்று மசிடோனியாவின் பகுதியொன்று தனியே பிரிந்து போவதற்கு அனுமதிக்கக் கூடாது என வீதிகளில் இறங்கி எதிர்க்கட்சிக்கு எதிராகப் போராடுகிறார்கள். 

இதேவேளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மசிடோனியாவை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழையுமாறு அழுத்தம் கொடுக்கின்றன. 

அமெரிக்கா, மசிடோனியாவை நேட்டோவுக்குள் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ள வற்புறுத்துகிறது. இந்நிலையிலேயே மசிடோனியாவின் அல்பேனியர்கள், மசிடோனியாவில் வன்முறையில் இறங்கியுள்ளனர். 

மசிடோனியா, ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோவிலும் இணைய மறுத்தால் ‘அகண்ட அல்பேனியக் கனவுக்கு’ மசிடோனியா பலியாவைத் தடுக்கவியலாது என அமெரிக்கா அச்சுறுத்துகிறது. 

பல்கன் பகுதியில் அமெரிக்காவின் கூட்டாளியான அல்பேனியாவின் செயற்பாடுகளுக்கு சேர்பியா மற்றும் மசிடோனியாவின் மூலம் ரஷ்யா தடைபோடுகிறது.   

மசிடோனியாவிலிருந்து ஒருபகுதி பிரியுமாயின் அல்பேனியா, அப்பகுதியையும் கொசோவோவையும் உள்வாங்கி தனது அகண்ட அல்பேனியக் கனவை நிறைவேற்றிக் கொள்ளும். 

அவ்வாறு நிகழுமாயின் ஐரோப்பாவின் எல்லைகளை மீள வரையவேண்டி ஏற்படலாம். எல்லாவகையிலும் அதிகாரப் போட்டிக்கான அடுத்த ஆடுகளமாக மசிடோனியா உருவெடுத்துள்ளதை இந்நிகழ்வுகள் குறித்து நிற்கின்றன. 

இவை ஐரோப்பாவின் நாயகன் யார் என்பதைத் தீர்மானிக்கும். 

வில்லன்கள் பற்றிக் கவலைகொள்ள அதிகம் இல்லை.   

- See more at: http://www.tamilmirror.lk/196000/மச-ட-ன-ய-அத-க-ரத-த-க-க-ன-அட-த-த-ஆட-களம-#sthash.mpiXrv0G.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.