Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'பன்டோராவின்' பெட்டியை திறந்தார்கள் வேண்டத்தகாத பலவும் வெளிவந்துவிட்டன; வடக்கு முதல்வர் கூறுகிறார்

Featured Replies

802_content_cv_wickneswaran_4.jpg

குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள் பதவியில் தொடர்ந்தால் மக்களின் ஏளனப் பார்வைக்கும் அவர்களின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் விமர்சனங்களுக்கும் ஆளாக நேரிடுமென்பதே யதார்த்தம் என்று சுட்டிக்காட்டியிருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்கள்மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் நடைமுறை மாற்றமொன்றை உறுப்பினர்களும் மக்களும் விரும்புவதாகத் தெரிவதால், அதனைக் கவனத்திற்கு எடுத்து அமைச்சர்கள் குருகுலராஜா மற்றும் ஐங்கரநேசன் ஆகியோரை தாமாகவே பதவிகளை தியாகம் செய்யுமாறு கோருவதுடன், மற்றைய இரு அமைச்சர்களுக்கு எதிராக புதிய விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்திருக்கிறார். அத்துடன் அவர்கள் இருவரும் விசாரணை முடிவடையும் வரை விடுமுறையில் விலகி இருக்க வேண்டும் என்று பணித்திருக்கிறார்.

வடமாகாண சபையில் அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் விசாரணை தொடர்பான விவாதம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றபோது அதை முடித்துவைத்து உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்ததாவது; அமைச்சர்களாகிய நாம் உரிய பயிற்சியுடன் இந்தப் பதவிக்கு வரவில்லை. சட்டங்கள் எமக்குச் சாதகமாக இருந்ததில்லை. அரசியல் சூழல் எமக்குச் சாதகமாக இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் எம் மக்களின் எதிர்பார்ப்பு எல்லை கடந்திருக்கின்றது. எம்மவர் எமக்குப் பெற்றுத் தருவார்கள் என்ற திடநம்பிக்கை அவர்களுக்குண்டு. அதை நாம் சிதைத்தலாகாது. எம் அமைச்சர்கள் குற்றங்கள் இழைத்தார்களா இல்லையா என்பது முக்கியமில்லை. சட்டப்படி அவை குற்றங்களா இல்லையா என்பதும் முக்கியமில்லை. அவை தண்டனைக்கு உட்படுத்தப்படக் கூடிய குற்றங்களா அல்லது வெறும் தவறுகளா என்பது கூட முக்கியமல்ல. அமைச்சர்களின் நடவடிக்கைகள் என்று கூறப்பட்டுள்ளவை மக்கள் மனதில் எந்த விதமான எண்ணங்களை, மனத்திருப்தியின்மையை, வெறுப்பை ஏற்படுத்தியுள்ளன என்பன சிந்திக்கப்பாலன. அந்த வகையில் குறையோ நிறையோ, சரியோ பிழையோ, ஒரு செயல்முறையின் ஊடாக நாங்கள் வந்துள்ளோம். "ஒருவர் மேல்தான் குற்றம்; முதலமைச்சர் மற்றையோரையும் தேவையில்லாது உள்ளடக்கியுள்ளார்'  என்ற குற்றச்சாட்டை சிலர் முன்வைத்தார்கள். விசாரணை அறிக்கை அதற்கு விடை பகர்ந்திருக்கின்றது.

802_content_thinakkural_cv_vigneswaran_speech_400.jpg

 

இவ்வாறான விடயங்களில் அரசியல் கலக்கப்பட்டமை வருத்தத்திற்குரியது. இது சம்பந்தமாக ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன். விசாரணைக்குழு முன் சமர்ப்பித்த குற்றச் சாட்டுக்களுக்கு மேலதிகமாக முறைப்பாட்டாளர்கள் வராமையால் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட  அமைச்சர்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. எனவே உரிய விசாரணைகள் உண்மையைக் கொண்டுவருவன. ஆனால் முறைப்பாட்டாளர் வராததால் விடுவிக்கப்பட்டவர்கள் குற்றம் செய்யாத நிரபராதிகள் என்று கூறித் திரிவது மனவருத்தத்திற்குரியது.   அவ்விரு அமைச்சர்கள் சம்பந்தமாக குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்பது முழுமையான உண்மை அல்ல. முறைப்பாட்டாளர்கள் வராததால் அவர்கள்மீதான குற்றங்களைப் பரிசீலித்து முடிவுக்கு வர முடியாததாக இருந்தது என்பதே உண்மை. முறைப்பாட்டாளருள் ஒருவர் பகிரங்கமாகவே இம்மன்றில், தான் விசாரணைத் தினமன்று போக முடியாமைக்கான காரணங்களைக் கூறினார்.

மீண்டும் விசாரணை நடந்தால் தன்னால் தனது குற்றச்சாட்டுக்களை நிலைநாட்ட முடியும் என்றுங்கூறியுள்ளார்.  இரு அமைச்சர்களின் தன்னிலை விளக்கங்கள் எந்த அளவுக்கு மக்களின் நல்லெண்ணத்தை மீண்டும் நிலைநிறுத்துவன என்பது சர்ச்சைக்குரிய விடயம். ஆனால் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டிய பல விடயங்கள் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் சம்பந்தமாக விசாரணைக் குழுவொன்றை மீள் நியமனம் செய்ய முடியாது. அவர்கள் பேரிலான மேலதிக விசாரணைகள் காலத்தை விரயமாக்கும் செயல்கள். எமக்கிருக்கும் மிகுதிக்காலம் சொற்பமே.  எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் கூறியிருந்த விடயங்களை நடைமுறைப்படுத்த நாம் எமது வேலைகளைத் துரிதமாகச் செய்ய, எம்முள் ஒற்றுமை வேண்டும். சுயநலம் மேலிட்டால், பொதுநலம் மறந்து போய்விடும். சில அமைச்சர்கள் எம்முடன் ஒத்துழைக்காது பிற நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப செயற்படுவது நன்கு புலனாகின்றது. அவர்களுக்கு மத்திய அரசாங்கமும் அங்குள்ள அமைச்சர்களும் கூடிய முக்கியத்துவம் பெற்றுவிட்டார்கள்.

அதனால் எம்மைத் தூஷிக்கவும் தயங்குகின்றார்கள் இல்லை. இது ஒற்றுமையை வளர்க்காது, ஒத்துழைப்பின்மையையே வலியுறுத்தும். அமைச்சர்கள் ஐவரும் ஒருமித்து வெளிப்படைத் தன்மையுடனும் பொறுப்புடனும் முன்சென்றால்தான் மக்கள் பயன் அடைவார்கள். நாம் ஒருவரோடு ஒருவர் ஒத்துழையாது செயற்படுவது எமது மக்களுக்கு நாம் செய்யுந்துரோகமாகும்.  எனினும் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டார்களோ இல்லையோ, காணப்படுவார்களோ இல்லையோ, இன்றைய நிலையில் அவர்கள் பதவியில் தொடர்ந்தால் எமது அமைச்சர்கள் மக்களின் ஏளனப் பார்வைக்கு ஆளாக வேண்டி வரும். அவர்களின் கீழ் பணி புரியும் அலுவலர்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும். அதுதான் யதார்த்தம்.  நிர்வாக ரீதியான முறைகேடுகளும் ஒழுக்கவீனங்களும் நடைபெற்றுள்ளதாலும் ஒரு நேர்மையான, கண்ணியமான, நாணயமான நிர்வாகத்தை மக்கள் எதிர்பார்த்திருப்பதாலும் இந்த அறிக்கையில் உள்ள சில விடயங்களையும் மற்றும் வேறு காரணங்களையும் கவனத்தில் எடுத்து மக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டிய கடப்பாடொன்று எனக்குள்ளது. முன்னர் சாட்சிகள் வராமையால் விடுவிக்கப்பட்டவர்கள்மீது உரிய விசாரணை நடத்தாது அவர்களைத் தண்டிப்பது பொருத்தமாகாது. இன்றைய இந்த நிலைமையை நான் ஏற்படுத்தவில்லை.

இந்த மன்றின் உறுப்பினர்களே ஏற்படுத்தினார்கள். சில உறுப்பினர்கள் என் சார்பானவர் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு அமைச்சரை மட்டும் வெளியேற்ற முற்பட்டு, அவர்களின் மதிப்புக்குரிய இன்னொருவரையும் பதவி இறக்கும் நிலைக்குக் கொண்டுவந்துள்ளார்கள். எமது வெளிப்படையான செயற்பாடுகள் சகலதையும் மக்கள் முன்னிலையில் எடுத்துச் சென்றுவிட்டன. இது எமக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். குற்றங்கள் எனக் கூறப்பட்டவற்றை என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறியிருந்தால் அவை பற்றி உரிய விசாரணை செய்து நடவடிக்கைகள் எடுத்திருப்பேன். சந்தி சிரிக்க மன்றில் எடுத்து, பத்திரிகைகளில் விளாசித் தள்ளி, அமர்க்களம் ஆக்கிவிட்டீர்கள். இப்பொழுது ஏன்தான் இவ்வாறு செய்தோம் என்று அல்லல்படுகின்றீர்கள். அமைச்சர்களின் மனங்களையும் புண்படுத்தியுள்ளீர்கள்.

இவ்வாறான புகார்கள் இனியாவது இரகசியமாக எமக்குத் தெரியப்படுத்தப்பட்டால் உரிய நடவடிக்கைகளை நாம் எடுப்போம்.   பன்டோராவின் பெட்டியைத் திறக்காதீர்கள் என்றார்கள். திறந்தார்கள். அத்துடன் வேண்டத் தகாத பலவும் வெளியே வந்துவிட்டன. அது போல் இது வரை நடைபெற்ற செயற்பாடுகள் யாவும் எம் எல்லோருக்கும் பாடமாக அமையட்டும். தனிப்பட்ட குரோதங்களுக்கும் பதவியாசைக்கும் பேராசைக்கும் எம்மை அடிமைப்படுத்திக்கொண்டால், வரக் கூடிய விளைவுகளுக்கு எங்கள் எல்லோரதும் இதுவரையிலான நடவடிக்கைகள் சாட்சியமாக அமைகின்றன. வேறெங்கோ இருப்பவரின் பதவி ஆசையானது எம்முள் சிலரை வழிநடத்திக்கொண்டிருக்கின்றதோ என்றும் எண்ண வேண்டியுள்ளது. மக்கள் எமது வேலைகளைத் துரித கதியில் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். அவற்றை நேர்மையுடனும் பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றார்கள். இந்த நிலைமையில் இம்மன்றின் 16 உறுப்பினர்கள் அமைச்சரவை மாற்றம் கோரி சென்ற வருடம் மார்ச் மாதம் ஒரு மனுச் செய்திருந்தார்கள்.

எந்தவித குறைகளும் கூறப்படாமல் எவ்வாறு அதனை நடைமுறைப்படுத்துவது என்று நான் அவர்கள் கோரிக்கைகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கத் தாமதித்தேன்.  ஆனால் முல்லைத்தீவுக்கு ஒரு அமைச்சர் இல்லை என்ற விடயத்தைக் கருத்தில் எடுத்திருந்தேன். அதன் பின்னர்தான் விசாரணைக்குழு அமைக்க வேண்டி வந்தது. அண்மையில் நான் அவர்களிடம் குறித்த கோரிக்கையை நினைவுபடுத்தி அந்தக் கோரிக்கை இன்றும் வலுவானதா என்று அறிய முற்பட்டேன். அதில் இருந்து தெரிய வந்தது, அக்கோரிக்கை இன்றும் வலுவுடையது என்பதே. நான்கு உறுப்பினர்கள் மட்டும் எந்த வித மாற்றங்களும் இனித் தேவையில்லை என்று கூறியுள்ளார்கள்.

அதில் அரசியல் கலந்திருப்பதைக் காண்கின்றேன். எனவே எல்லோரையும் மாற்ற வேண்டும் என்று சென்ற வருடம் கேட்டவர்கள், இன்று ஒருவரையும் மாற்றத் தேவையில்லை என்கின்றார்கள். மாற்றக் கோரும் கோரிக்கை என்முன் கிடப்பில் இப்போது உள்ளது.  மற்றையவர்கள் போனால் முதலமைச்சரும் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை இப்பொழுது சிலர் மத்தியில் நடைமுறைச் செல்வாக்குப் பெற்று வருகின்றது. ஒரு முதலமைச்சரை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கின்றார்கள். அமைச்சர்களை முதலமைச்சரே கட்சி வரையறைகளைப் பேணி, மாவட்ட நலவுரித்துக்களைச் சிந்தையில் நிறுத்தித் தேர்ந்தெடுக்கின்றார். அதற்கு சட்ட வலுவை ஆளுநர் அளிக்கின்றார். ஆளுநரால் தான்தோன்றித்தனமாக அமைச்சர்களை நியமிக்க முடியாது.

எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சர், தான் சிபார்சு செய்த அமைச்சர்களை நீக்கி, புதிய அமைச்சர்களை நியமிக்கக் கோரும் பொறுப்பை உடையவர் என்பதை இங்கு கூறிவைக்கின்றேன்.  அமைச்சர்கள்மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நடைமுறை மாற்றம் ஒன்றை எமது உறுப்பினர்களும் மக்களும் விரும்புகின்றார்கள் போலத் தெரிகின்றது. இவற்றை எல்லாம் கவனத்திற்கெடுத்து செயற்படுவது எனது தார்மீகக் கடமையாகும்.

இதன் நிமித்தம் அமைச்சர்கள் குருகுலராஜா, ஐங்கரநேசன் ஆகியோரைத் தாமாகவே தமது பதவிகளைத் தியாகம் பண்ணுமாறு வேண்டிக்கொள்கின்றேன். மற்றைய இரு அமைச்சர்களுக்கு எதிராக புதிய விசாரணையொன்று நடைபெறும்.  அவர்களுக்கு எதிராகக் கிடைத்திருக்கும் மேலதிக விடயங்களும் அவ்விசாரணையின்போது பரிசீலனை செய்யப்படுவன. விசாரணை முடிவடையும் வரை இயற்கை நீதியையும் நல்லாட்சி விழுமியங்களையும் கருதி, இரு அமைச்சர்களும் விடுமுறையில் விலகி இருக்க வேண்டும். தமது அமைச்சு விடயங்களில் அவர்களோ அவர்களின் பிரத்தியேக ஆளணியினரோ பங்குபற்றல் ஆகாது. அவர்களின் அமைச்சுப் பொறுப்புகளை நான் தற்காலிகமாக ஏற்றுக்கொள்கின்றேன். அந்த அமைச்சர்களின் செயலாளர்கள் எனக்குப் பொறுப்புக் கூற வேண்டும்.  விசாரணையில் அவர்கள் விடுதலை அடைந்தால் திரும்பவும் பதவிகளில் தொடர்ந்து கடமையாற்றலாம். எனவே முதலிரு அமைச்சர்களின் இராஜினாமாக் கடிதங்களையும் மற்றைய இருவரின் ஒருமாதத்திற்கான விடுமுறைக் கடிதங்களையும் நாளை மதியத்திற்கிடையில் நான் எதிர்பார்க்கின்றேன். கூடிய விரைவில் புதிய விசாரணைக் குழு நியமிக்கப்படும். வேண்டுமெனில் விடுமுறையில் உள்ள அமைச்சர்களின் விடுமுறைக் காலம் தேவைக்கேற்றபடி நீட்சி செய்யப்படும்.

http://www.thinakkural.lk/article.php?article/aukxxdqv9m5687218ac3fe3d12176ggvdhf6ff2c8fe8f9353f1084f6xzjkn#sthash.WdE3neMx.dpuf

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எக்காரணம் பற்றியும் தமிழ்நாட்டில் கருணாநிதி போன்றோரால் வளர்த்தெடுக்கப்பட்ட  ஊழல் சாம்ராச்சியம் தமிழீழத்திலும் உருவாக இடமளிக்கக்கூடாது.  இஐத முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.  முதலமைச்சரின் பின்னால் மக்களனைவரும் அணிதிரள வேண்டும்.  ஊழல் மன்னர்கள் தூக்கியெறியப்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.