Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறுபக்கம்

Featured Replies

விடுதலைப்புலிகள் இன்னமும் இலங்கையில் தடைசெய்யப்படவில்லை, இந்த நிலையில் விடுதலைப் புலிகளுடனான எவ்விதமான தொடர்பும் சட்ட விரோதமானதல்ல. விடுதலைப் புலிகளுடன் மட்டுமன்றி எந்த அரசியற் கட்சியுடனும் ஆயுதக் குழுவுடனும் தொடர்பு வைத்திருப்பவர் சட்டவிரோதமான காரியங்கட்காகக் கைது செய்யப்படலாமே ஒழிய அவரது அரசியல் தொடர்புகட்காக அல்ல. இது பொதுவாகச் சட்டமும் ஒழுங்கும் பேணவிரும்புகிற எந்த அரசாங்கமும் கடைப்பிடிக்கத்தக்க ஒரு நல்ல நடைமுறை. இலங்கையில் இவ்விதி அண்மையில் மூன்று சிங்களப் பத்திரிகையாளர்களின் ஆட்கடத்தலும் அதை அடுத்து அவர்களின் கைது என்று அறிவிக்கப்பட்டமையும் தொடர்பாக மீறப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்கள் மட்டுமன்றி, எதேச்சாதிகார ஆட்சி நடத்துகிற எவருக்கும், தங்களது குழறுபடிகளை வெளிவெளியாக உலகறியச் செய்கிற எவருமே பகைதான். இலங்கையிற் பத்திரிகையாளர்கள் முன்பும் அரசியல் காரணங்கட்காகக் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். யூ.என்.பி.யின் பதினேழு வருட இருண்டகால ஆட்சியின்போது நடந்த றிச்சட் டி ஸொய்ஸாவின் கொலை யூ.என்.பி.ஆட்சிக்கு எதிராக வெகுசன அபிப்பிராயத்தை திரட்டுவதற்குப் பயன்பட்ட ஒரு வலிய கருவியாயிருந்ததை யாரும் மறந்திருக்க நியாயமில்லை. அண்மையவை அந்தளவு பாரிய தாக்கத்தைத் தரவில்லை.

றிச்சட் டி ஸொய்ஸாவின் ஆட்கடத்தலும் கொலையும் பற்றி அன்றைய ஆட்சி பெருமைப்படவோ அதை நியாயப்படுத்தவோ முயலவில்லை. அந்தச் செயலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்ற விதமாகவே காட்டிக் கொண்டது. உண்மைகள் வெளியான பின்பும் அதற்கான பொறுப்பைக் கடுமையாக மறுத்தது. அச் செயல் குறிப்பிட்ட சில அதிகாரிகளின் தவறான நடத்தை என்றே கூறப்பட்டது. அண்மை வரை அது தான் நிலைமை.

அண்மைய ஆட்கடத்தல்கள் கொலைகளாக முடியாமையையிட்டு நாம் சிறிது ஆறுதலடையலாம். எனினும், அவை சட்டபூர்வமான செயல்களாகக் காட்டப்பட்டுள்ளமை இந்த நாடு எதிர் நோக்குகிற ஒரு பேரபாயம் பற்றிய கடும் முன்னெச்சரிக்கையாகும். விடுதலைப் புலிகளுடனான தொடர்பும் தெற்கிற் பயங்கரவாதச் செயல்களை நடத்தும் திட்டம் ஒன்று காரணமாக் கூறப்பட்டு கடத்தல், கைது என்று உருமாற்றம் பெற்று, கைதானோர் தமது குற்றங்களை ஏற்றக்கொண்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இதன் விளைவாகவோ என்னவோ அண்மைக் காலங்களில் அரசாங்கம் பற்றிய விமர்சனங்களை மிகவும் அடக்கி வாசித்து வந்த `டெய்லிமிரர்' நாளேடு, குறிப்பிட்ட பத்திரிகையாளர்களின் கைது எனும் சட்ட விதிகட்கு உடன்பாடற்ற செயலைக் கண்டிப்பதில் ஊடகவியலாளர் சங்கங்களதும் ஊடக சுதந்திரத்திற்கான அமைப்புக்களதும் கருத்துக்களை ஆதரித்து எழுதியதோடு, இக் `கைதுகள்' வேறு அரசியற் காரணங்கட்காக நடந்திருக்கலாம் என்று கூறுகிற விதமான சில அவதானிப்புக்களையும் வெளியிட்டுள்ளது. இது ஒரு நல்ல அறிகுறி. எனினும் போதியளவு திருப்திகரமானது என்று சொல்லத் தயங்குவேன்.

1986 -87 காலகட்டத்தில் `பயங்கரவாதிகளுடன்' எந்த விதமான உறவை வைத்திருப்பவரும் ஒரு பயங்கரவாதியே என்று `தீயாரைக் காண்பதுவுந் தீதே....' என்கிற தொனியில் அமைச்சர் லலித் அத்துலத் முதலி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். அதனாலோ என்று உறுதியுடன் சொல்ல இயலவில்லை; `பயங்கரவாதிகளின்' ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த யாழ். குடாநாட்டு மக்களை முற்றுகைக்குட்படுத்திப் பட்டினி போட்டு, மருந்து, எரிபொருள் போன்றவை கிடையாதபடி மறித்துப், பணியவைக்கிற ஒரு முயற்சி 1987 இல் மேற்கொள்ளப்பட்டது. அண்மைக் காலத்தில் வாகரையில் நடந்தது பழைய துன்பியல் நாடகமொன்றின் புதிய வடிவம் போலிருந்தது. எனினும், இரண்டினதும் பின்விளைவுகள் வெவ்வேறு வடிவினவாகவே அமைந்துள்ளன.

யூ.என்.பி.ஆட்சிக்காலத்திலான ஜனநாயக உரிமைகளின் மறுப்பு, தேசிய இன ஒடுக்கலுக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் உருவானது. 1977 - 1980 காலத்தில் ஜே.வி.பி.மூலம் தெற்கின் எதிர்க்கட்சிகளை முடக்கிப் போடுவதில் குறுகிய கால வெற்றி கண்ட யூ.என்.பி.வெகுவிரைவிலேயே ஜே.வி.பி.யுடன் முரண்பட்டது. ஜே.வி.பி. பேரினவாத அரசியலைத் தீவிரப்படுத்தி, இந்திய - இலங்கை உடன்படிக்கையை எதிர்த்து, வெகுசன ஆதரவைத் திரட்டிய பின்னணியிலேயே அரச இயந்திரத்தின் வெறியாட்டமும் ஜே.வி.பி.யின் வன்முறையும் மக்கள் விரோத நடவடிக்கைகளும் நடைபெற்றன. ஜே.வி.பி.யைக் குறிவைக்கிற பேரில் எத்தனையோ அரசியல் படுகொலைகள் நடந்தன. இன்று அவை பற்றிப் பெரிதாக எதுவும் பேசப்படுவதில்லை. அதிவலிய அரசியற் சக்தியான அரசியல் மறதி தென்னிலங்கையைக் குறுகிய காலத்திலேயே ஆட்கொண்டுவிட்டது.

தேசிய இன ஒடுக்கல் என்றாலும் வேறெந்த சமூக அடையாளத்தின் அடிப்படையிலான ஒடுக்கல் என்றாலும் அது குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் மீதான ஒடுக்குமுறை என்ற எல்லைக்குள் நின்றுவிட முடியாது. ஏனெனில், இன ஒடுக்கல் அதைவிடப் பாரிய ஒரு சமூக முரண்பாட்டின் வெளிப்பாடு மட்டுமே. தேசிய இன ஒடுக்கலுக்கு எதிரான போராட்டங்கள் அதைச் சரியாக அடையாளம் காணத் தவறுகிற போது தம்மை முடிவிற் பலவீனப்படுத்திக் கொள்கின்றன.

பிற சமூகத்தவருடனான நட்புறவும் அவர்களுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுப்பதும் தேசிய இன முரண்பாட்டைப் பகைமையின்றி நோக்க வேண்டுமென வற்புறுத்துவதும் சர்வதேச நோக்குடன் பிரச்சினைகளை அணுகுவதும் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்திற்குள் இருக்கக் கூடிய சமூக முரண்பாடுகளைப் பற்றிப் பேசுவதும் தமிழ்த் தேசியவாத அரசியலில் அரை நூற்றாண்டுக் காலமாக இருந்து வந்த ஒரு போக்கு, அதை முன்னெடுத்த இடதுசாரதிகள் எல்லாரையுமே தமிழ்த்துரோகிகள், இனத் துரோகிகள் என்று முத்திரை குத்திய காலம் இன்னமும் முடிந்து விடவில்லை.

தென்னிலங்கையில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள `இனத் துரோகி', `தேசத் துரோகி' போன்ற சிந்தனைகளின் வேர்கள் ஆழமானவை. அவை நீண்ட வரலாற்றை உடையவை. எனினும், மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்ட போதும் சிங்கள மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதும் எதிர்த்து வாக்களித்த சிங்கள இடதுசாரிகள் அன்று இனத்துரோகிகள் என்று சிந்திக்கப்படவில்லை. 1970 பிற்பகுதியில் பல்கலைக்கழக அனுமதிகள் குறித்துத் தமிழ்ப் பரீட்சகர்கள் மீது ஐயங்கள் எழுப்பிச் செய்திகள் வெளியானபோது அதைக் கண்டித்து எழுதிய பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டன. இனத் துரோகி என்ற சிந்தனை அதன் பின்பு படிப்படியாக விரிவுபெற்றுத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க ஆயத்தமான எல்லாச் சிங்களவர்களையும் உள்ளடக்கக் கூடிய நிலையை விரைவில் எட்டவுள்ளது.

ஜேர்மனியில் முதலில் கம்யூனிஸ்ட்கள், பிறகு யூதர் என்று ஜேர்மன் ஜனநாயகத்துக்கான எல்லாக் குரல்களும் ஒன்றொன்றாக அடக்கப்பட்டன. இந்தோனேசியாவில் முதலில் கம்யூனிஸ்ட்கள் வேட்டையாடப்பட்டன. பின்பு இன, மத அடிப்படையிலான ஒடுக்குமுறை தீவிரமாகத் தொடர்ந்தது.

அடக்குமுறை ஆட்சியாளர்களுக்குத் தேவையானது ஒரு பொது எதிரி. அது அண்டை நாடொன்றாக இருக்கலாம். ஒரு சிறுபான்மை சமூகமாக இருக்கலாம். அடையாளங் காட்டிப் பெரும்பான்மையினரை அச்சத்திற்குட்படுத்தக் கூடிய எதுவாகவும் இருக்கலாம்.

இன்று இலக்கு வைக்கப்பட்டவர்கள் நாளைய எதிரியை அடையாளங்காட்டி, அழிப்பதற்கான ஒரு அச்சாரம் மாதிரி என்று தான் நினைக்கிறேன். யூ.என்.பி.யிலிருந்து பதவிகளுக்காகப் பக்கம் மாறியவர்களுடன் ஒரே அணியில் அமர்ந்திருக்கும் பழைய இடதுசாரிக் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களது எதிர்காலம் பற்றிக் கவலைப்படவில்லை என்றால் அவர்களுக்கு இடதுசாரி அடையாளத்துடன் கூடிய ஒரு எதிர்காலம் இல்லை. அந்த அடையாளம் எவ்வளவு போலியானதாயிருந்தாலும் கூட. பல வேறுபட்ட ஒடுக்குமுறைகள் தமக்கிடையே நேரடியான உறவைக் கொண்டிராவிடினும் ஒன்றுக்கொன்று உறவுடையனவும் எளிதிற் பிரிக்க இயலாதனவையும் என்பது இன்றைய யதார்த்தம். விடுதலைப்புலிகளின் தொடர்புகளைக் காரணங்காட்டி யாரையாவது தண்டித்தால் அதைத் தமிழர் எதிர்க்கவும் சிங்களவர் ஆதரிக்கவும் வேண்டுமென்ற கருத்துத் தவறானது. எந்த அநீதியும் எதிர்க்கப்பட வேண்டியது. நமக்கு வேண்டாதவர்களோ நம்முடன் தொடர்பில்லாதவர்களோ அநியாயமாகத் தண்டிக்கப்படும் போது நாம் கைகட்டியிருந்தால் நாளை நமக்கு வேண்டியவர்களுக்கும் நம்முடன் தொடர்புடையவர்களுக்கும் தண்டனைகள் வழங்கப்படுவது பற்றி நாம் வாய் திறக்க இயலாதிருக்கும். நமக்கே எதுவும் நடக்கும் போதும் யாரும் வாய் திறக்க இயலாத நிலைக்கு நாமும் பங்களித்தவர்களாவோம்.

அரசியல் என்பது சமூக அறஞ்சார்ந்த விடயம். அறம் பிழைப்படுகிற போது தான் அரசியல் சீரழிகிறது. சமூகத்தின் எல்லா வர்க்கங்களுக்கும் அறம் ஒன்றல்ல. எனினும், ஏற்கப்பட்ட அறநெறிகள் எனப் பேரளவிலேனும் சில நடத்தை விதிகள் உள்ளன. அவை அறிந்தே மீறப்படுவதை ஒரு சமூகம் பொறுத்துக் கொள்ளுமாயின் அச்சமூகம் தனது அழிவுக்கான சாசனத்தில் ஒப்பமிட்டுவிட்டது என்று தான் பொருள். இன்று நாம் காணுவன ஒரு பாரிய நோயின் வேதனையான அறிகுறிகள். பரிகாரம் எங்கள் கைகளில் உள்ளது. பார்த்துக் கொண்டு சும்மா கிடப்போமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.