Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளைப்பது சுலபம்....//வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?... அனுபவத் தொடர்

Featured Replies

இளைப்பது சுலபம்

 

வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

அனுபவத் தொடர் - 1

-பா.ராகவன்


இந்த லட்டு, பூமி, அறுபது வாட்ஸ் பல்பு இதெல்லாம் எப்படித் தொடக்கத்தில் இருந்தே குண்டாகப் படைக்கப்பட்டதோ, அதேபோல் ஆண்டவன் என்னையும் உருட்டிப் படைத்தான். நான் பிறந்ததும், பிழைப்பது சிரமம் என்று வைத்திய சிரோன்மணி என் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், கணிப்பு களைக் கதறியோடச் செய்கிற பிறப்பல்லவா நம்முடையது? பிழைத்துத் தொலைத்தேன்.
3.jpg
இந்த சந்தோஷத்தில், என் அம்மாவானவர் என்னைப் போஷாக்காக வளர்க்கிறேன் பேர்வழி என்று புஷ்டியாக வளர்க்க ஆரம்பித்தார். நான் உண்ணப் பிறந்தவன் என்பது அவர் முடிவு. அது நல்ல கணிப்பு என்பதால் பொய்யாக்கத் தோன்றவில்லை. நினைவு தெரிந்த நாளாக என்னிஷ்டத்துக்குச் சாப்பிட்டு ஏகமாய் வளர்ந்துகொண்டிருந்தேன்.

நான்கு அல்லது ஐந்து வயதிருக்கும் அப்போது. ரொம்பப் புராதன நினைவாக உள்ளது இதுதான். குடும்பத்தோடு திருப்பதிக்குச் சென்றிருந்தோம். அது அநியாய பயங்கரக் குளிர்காலம். முழு ராத்திரிப் பொழுது கொட்டும் குளிரில் தவித்துவிட்டு, விடிந்ததும் தரிசனம் முடித்து வெளியே வந்தோம். தரிசனம் முடித்தால் அடுத்து என்ன? பிரசாதம்தான்.
3a.jpg
திருப்பதி பிரசாதம் என்பது அரை மணிக்கொருதரம் மாறிக்கொண்டே இருக்கும். வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், சிறு லட்டு, புளியோதரை என்று என்னவாவது ஒன்று. வரிசை நகர நகர, காலியாகும் பிரசாதப் பாத்திரங்களை இழுத்து உருட்டிவிட்டு, அந்தக் கணம் வந்து சேரும் மாபெரும் புதிய அண்டாக்களில் இருந்து அள்ளி அள்ளிப் போடுவார்கள்.

அன்றைக்கு எங்களுக்கு அங்கு வாய்த்தது வெண் பொங்கல். இன்றுள்ள தொன்னை யெல்லாம் அன்றில்லை. அப்படியே இரு கைகளையும் குவித்து ஏந்தினால் பிரசாதம் வந்து விழும். கொதிக்கக் கொதிக்கக் கைநர்த்தனக் களிப்போடு கபளீகரம் செய்து முடித்துப் பத்து நிமிடம் ஆன பின்பும் அடித்தொண்டையில் ருசித்துக்கொண்டே இருந்தது அப்பொங்கல்.
3b.jpg
இன்னும் கொஞ்சம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. இன்னும் கொஞ்சம் நிறையவே கிடைத்தால் குடும்பத்தோடு ஹோட்டலுக்குச் செல்லும் செலவு மிச்சமாகுமே என்று என் அப்பாவுக்குத் தோன்றியிருக்க வேண்டும். எங்கோ போனார். யாரையோ பார்த்தார். திரும்பியபோது ஒரு பெரிய மந்தார இலை நிறையப் பொங்கலோடு வந்தார்.

என் நினைவில், முதல் முதலில் நான் பகாசுரனைப் போல் அள்ளி அள்ளித் தின்ற தினமாக அன்றுதான் பதிவாகியிருக்கிறது. முந்திரியும் மிளகும் நெய்யும் சரிவிகிதத்தில் கலந்த வெண் பொங்கல். உண்ணும் பதத்தில் சூடும், எண்ணிக் கிறங்கும் தரத்தில் மணமும் ருசியும் நிறைந்த பொங்கல். சாப்பிட்டுவிட்டு வெளியே வந்ததும், ‘லட்டு கவுண்ட்டருக்குப் போயிட்டு வந்துடறேன்’ என்று சொல்லிவிட்டு அப்பா கிளம்பிச் சென்றார்.

சில நிமிடங்களில் லட்டு வந்தது. அந்நாள்களில் லட்டுக்குக் குடும்பக் கட்டுப்பாடெல்லாம் கிடையாது. கேட்ட அளவு கிடைக்கும். சொற்ப விலை. பெரிய சைஸ். ருசியும் பிரமாதமாக இருக்கும் ‘பத்து இருக்கு; போதும் இல்லியா?’ உறவினர்களுக்குக் கொடுக்கச் சேர்த்துத்தான் வாங்கியிருப்பார். ‘ஓ, போதும்’ என்றபடியே அம்மா ஒரு முழு லட்டை எடுத்து என்னிடம் நீட்டினாள்.

சொருகு ஓடு மாதிரி அதில் ஒரு பெரிய முந்திரி முன்னால் துருத்திக்கொண்டு வசீகரித்தது. ஆசையாக அதை முதலில் கிள்ளித் தின்றேன். அபாரமாக இருந்தது. ஐந்து நிமிடங்களில் முழு லட்டையும் முடித்துவிட்டு ‘இன்னொண்ணு தருவியாம்மா?’ என்று கேட்டது நினைவிருக்கிறது. அன்று தொடங்கிய வேள்வி யானது, நான் வளர வளர வீரியமடைந்தபடியே இருந்தது. ஒரு கட்டத்தில் உண்பதை ஒரு பொழுதுபோக்காக்கிக் கொண்டேன்.

என்ன பிரச்னை என்றால், பொழுதுபோக்குக்காக நான் தனியே நேரம் ஒதுக்குவதில்லை. வேறு என்ன வேலை இருந்தாலும் அதனோடு இணைந்தே இதுவும் தன் பயணத்தை மேற்கொள்ளும். பொதுவாக ராத்திரியில்தான் என்னால் எழுத முடியும். மாலை ஆறு மணிக்குமேல் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்து, பிள்ளையார் சுழி போடப் பத்து மணியாகும்.

அதற்குள் இரவு உணவை முடித்திருப்பேன். அதனால் என்ன? பிள்ளையார் சுழி போட்டதும் கால்கிலோ மிக்சர், காராசேவு, வெங்காய பக்கோடா இவற்றில் ஏதேனும் ஒன்றோ, அல்லது எல்லாமோ உள்ளே போகவேண்டியது சாஸ்திரம். சில நாள் வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலில் இருந்து நெய் ஜாங்கிரி வாங்கி வந்து வைத்துக்கொள்வேன். ஆழ்வார்பேட்டை சிக்னல் அருகே ஒரு சேட்டுக் கடையில் மோத்தி சூர் லட்டு பிரமாதமாக இருக்கும்.

திருப்பதி லட்டைக் கழித்துவிட்டால் இந்த உலகில் ஆகச் சிறந்த லட்டிலக்கியம் படைப்பது சேட்டுகள்தாம். இந்த லட்டு, பக்கோடா வகையறாக்கள் இருந்துவிட்டால் போதும். எழுத்து ஊழியம் ஏகாந்தமாக நடக்கும். ஒரு நாள் இருநாளல்ல. பல்லாண்டுக் காலமாக இவ்வாறுதான் உண்டு களித்து உடல் வளர்த்துக்கொண்டிருந்தேன். சென்னை நகரின் ஹோட்டல்கள், மெஸ்கள், சந்துக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் அனைத்துக்கும் சிறு பத்திரிகைக்குச் சந்தா செலுத்துபவர்களைப் போல் விசுவாசமாகச் சென்றுகொண்டிருப்பேன்.

எங்கே எது சிறப்பு என்று உறக்கத்திலும் சரியாகச் சொல்ல முடியும் என்னால். விளைவாக ஒரு நல்ல நாளில் என் எடையானது 110.8 கிலோ என்று காட்டியது. ரத்த அழுத்தம் 180/110 என்றும் HbA1c என்னும் மும்மாத சராசரி ரத்த சர்க்கரை அளவு 6.8 என்றும் தெரிந்தது. அட எம்பெருமானே! இதை இப்படியே விட்டால் தமிழ்நாட்டின் எதிர்காலம் வீணாகிவிடாதோ? பயம்போல் ஏதோ ஒன்று எட்டிப் பார்ப்பதற்கு எனக்கு நாற்பத்தி ஐந்து வருடங்கள் தேவைப்பட்டன.

ஒன்றும் பிரச்னை இல்லை; பேலியோ டயட்டில் இதையெல்லாம் சரி செய்துவிடலாம் என்று என் மனைவி சொன்னார். இந்த டயட் என்பது எனக்குப் பிடிக்காத சொற்களுள் ஒன்று. முன்பொரு சமயம் குத்து மதிப்பாக டயட் இருந்து பார்த்துக் குழல் விளக்கு வாங்கிய அனுபவம் உண்டு என்பதால் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால், திரும்பத் திரும்ப பயம் காட்டிய எடையும், நின்றால் இருந்தால் கிடந்தால் நடந்தால் மூச்சிறைத்து முழி பிதுங்கிய அனுபவங்களும் யோசிக்க வைத்தன. பெரிய ஆர்வங்கள் இல்லாமல்தான் பேலியோவை அணுகினேன். எடுத்த உடனேயே அது அசைவ உணவாளர்களுக்கான டயட் என்றார்கள். அது கெட்டுது போ என்று உடனே அலுப்பாகிவிட்டது.

பார்ப்பதற்கு முட்டை என்னைப் போலிருக்கும் என்பது தவிர எனக்கு அசைவம் பற்றி வேறெதுவும் தெரியாது. ஒரு வடிகட்டிய தாவர பட்சிணியாகவே வாழ்வில் பாதி ஓடிவிட்ட பின்பு, எடையைக் குறைப்பதற்காக எப்படிக் கட்சி மாற முடியும்? அவசியமில்லை. பேலியோவையே சைவத்துக்கு மாற்றிவிட்டால்? மாற்றி வைத்திருந்தார் ஓர் உத்தமோத்தமர்.

இன்றைக்குச் சரியாகப் பதினொரு மாதங்களுக்கு முன்னால் பேலியோ டயட் உதவியுடன் என் எடைக்குறைப்பு முயற்சிகளை ஆரம்பித்தேன். முட்டைகூட இல்லாத முழுச் சைவ முயற்சி. என் வாழ்வைத் தலைகீழாகத் திருப்பிப் போட்ட அனுபவம் என்றால் சந்தேகமின்றி இதுதான். எதையும் இழப்பதற்கு யாருக்கும் பிடிக்காதுதான். ஆனால், எடையை இழக்க எனக்குப் பிடித்திருந்தது. பதினொரு மாதங்களில் 26 கிலோ.
 

(குறைக்கலாம்)

http://kungumam.co.in

  • தொடங்கியவர்

இளைப்பது சுலபம் வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

 

 

அனுபவத் தொடர் - 2

பேலியோவுக்குள் நுழைவதற்கு முன்னால் பிள்ளையார் சுழி மாதிரி ரொம்ப முக்கியமாக, அழுத்தந்திருத்தமாக மனத்துக்குள் எழுதி வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உண்டு. அது, பேலியோ என்பது ஒரு டயட் அல்ல என்பதுதான். இது ஒரு பலான வாழ்க்கை முறை. கேட்டால் ஆதி மனிதன் இப்படித்தான் சாப்பிட்டான் என்று வரலாறு புவியியலில் இருந்து ஆரம்பிப்பார்கள்.

நமக்கு அதெல்லாம் வேண்டாம். டயட்டுக்கும் வாழ்க்கை முறை என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை மட்டும் தெரிந்துகொண்டால் போதும். டயட் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு சில வித உணவுகளை நீக்கி அல்லது குறைத்து, வேறு சில உணவு வகையைச் சேர்த்து சாப்பிட்டுப் பார்ப்பது. வாழ்க்கை முறை என்பது, உணவு முறையை முற்றிலும் மாற்றி அமைப்பது.
7.jpg
இதுவரை நாம் சாப்பிட்டுக்கொண்டிருந்த உணவுகளை மொத்தமாக நகர்த்தி வைத்துவிட்டு, ஆத்மசுத்தியோடு மதம் மாறுவது. பேலியோ உணவு முறையைத் தமிழகத்துக்கு அறிமுகம் செய்த நியாண்டர் செல்வன், ஆரம்பத்தில் சுத்த சைவ உணவு உண்பவராக இருந்தவர். பிறகு ஏதோ ஒரு அமெரிக்க ஆலமரத்தடியில் அவருக்கு ஞானம் மாதிரி என்னவோ சித்தித்து, படு தீவிர அசைவ உணவாளராக மாறிப் போனார்.

ஒரு சமயம் அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘என்றாவது ஒருநாள் உங்களை நான் மீண்டும் சைவ உணவுப் பக்கம் திருப்பி மதமாற்றம் செய்தே தீருவேன்’ என்று சொன்னேன். ‘நீங்க வேற சார். நானே இப்பத்தான் தாய்மதம் திரும்பியிருக்கேன். இன்னொரு தடவை சான்சே இல்ல’ என்றார் சிரித்தபடி.

ஒன்றை ஒப்புக்கொள்வோம். மனித குலத்தின் ஆதி உணவு அசைவம்தான். இந்தியாவில் ஜைன மதம் வேரூன்ற ஆரம்பித்த பிறகுதான் கொல்லாமை, புலால் உண்ணாமை போன்ற கருத்தாக்கங்கள் வலுப்பெறத் தொடங்கின. என்ன பெரிய வலு? இன்றளவும் தயிர்வடை தேசிகன் அளவுக்கான வலுவில்தான் வெஜிடேரியனிசம் உள்ளது. உலக அளவிலேயே சைவ உணவு என்பது மிகச் சிறுபான்மையினரின் உணவுப் பழக்கம் மட்டுமே.
7b.jpg
எம்பெருமான் என்னை அச்சிறுபான்மை சமூகத்தில் கொண்டுபோய்ப் படைத்து வைத்தான். அவனை யார் கேள்வி கேட்பது? ஆனால், தாவர உணவு என்பது குலமோ, குடும்பமோ என்மீது திணித்ததல்ல. நிச்சயமாக அல்ல. எங்கள் வம்சத்தில் அசைவம் உண்கிற பிரகஸ்பதிகள் பலரை அறிவேன். நாளைக்கே என் மனைவியோ, மகளோ முட்டை சாப்பிடப் போகிறேன் என்றால் எனக்கு அதில் எந்தப் பிரச்னையும் இராது. நிச்சயமாக நான் அவர்களது உணவு முறையில் தலையிட மாட்டேன்.

என் சிக்கல், தனிப்பட்ட முறையில் வள்ளலார் என்னை ஓரெல்லை வரை கருத்து ரீதியில் பாதித்திருக்கிறார். திருவள்ளுவர் கொஞ்சம் அதிகமாகவே பாதித்திருக்கிறார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடுகிற ஜென்மமாக என்றைக்காவது நாமும் உருப்பெற மாட்டோமா என்கிற சிறு வயது விருப்பமே என்னை நிரந்தரத் தாவர உணவாளியாக்கியது.

இதனால்தான் பேலியோ என்பது முற்றிலும் அசைவம் சார்ந்த ஓர் உணவு முறை என்றதும் சற்று சோர்வு ஏற்பட்டது. ஆனால், சைவ உணவிலும் இதனை முயற்சி செய்து பார்க்கலாம் என்று நண்பர்கள் சிலர் சொன்னார்கள். அசைவ உணவு தருகிற அளவுக்குப் பெரிய பலன் இருக்குமா என்று தெரியாது; ஓரளவு லாபம் கிடைக்க வாய்ப்புண்டு என்று தெரிந்தது.
7a.jpg
நியாண்டர் செல்வன், தாவர உணவாளிகளுக்கும் பேலியோவின் சாத்தியங்களை விவரித்து எழுதி வைத்திருந்த குறிப்புகளை வாசித்துப் பார்த்தேன். காசா பணமா? ஒரு முயற்சி செய்து பார்த்துவிடலாம் என்று அதன் பிறகுதான் முடிவு செய்தேன். ஆங்கிலத்தில் இதனை Low Carb High Fat Diet என்று சொல்லுவார்கள். சுருக்கமாக LCHF. மனுஷகுமாரனாகப்பட்டவன் - நிற்க, நடக்க, ஓட, ஆட, உத்தியோகம் பார்க்க, சிந்திக்க, தூங்க, மூச்சுவிட, இன்னபிற சகல காரியங்களையும் செய்து ஜீவித்திருப்பதற்கு உடம்புக்கு ஐந்து விதமான சத்துகள் தேவை.
கார்போஹைடிரேட் என்கிற மாவுச்சத்து முதலாவது. கொழுப்பு இரண்டாவது. புரோட்டின் என்கிற புரதம் மூன்றாவது. விட்டமின்களும் மினரல்களும் அடுத்தவை. வாய் வழியே நாம் மத்தியப் பிரதேசத்துக்கு அனுப்புகிற எந்த ஒரு உணவிலும் இந்த ஐந்துமோ, ஐந்தில் சிலவோ, குறைந்தது ஏதேனும் ஒன்றோ நிச்சயம் இருக்கும். இருந்தால்தான் அது உணவு.

இந்த ஐந்தில், உணவுக்கு அதிக ருசி கொடுப்பதும் அடிக்கடி தின்றுகொண்டே இருக்கச் சொல்லுவதுமான திருப்பணியைச் செய்வது கார்போஹைடிரேட் என்கிற மாவுச்சத்து. சைவ உணவைப் பொறுத்தவரை, கார்போஹைடிரேட் என்பது காற்று மாதிரி. கடவுள் மாதிரி. அது இல்லாத உணவுப் பொருளே இல்லை. சுண்டைக்காயில் ஆரம்பித்து ஸ்வீட் கார்ன் வரை.

சாம்பார் சாதத்தில் ஆரம்பித்து சர்க்கரைப் பொங்கல் வரை. வீச்சு பரோட்டாவில் ஆரம்பித்து வெஜிடபிள் புலாவ் வரை அனைத்திலும் உண்டு. அதிக அளவில் உண்டு. எத்தனை சாப்பிட்டாலும் இன்னும், இன்னும் என்று கேட்க வைக்கிற இந்திரஜால யட்சிணியான இந்த மாவுச்சத்தை உணவில் ஆகக் கணிசமான அளவில் குறைத்துவிட்டு, அந்த இடத்தைக் கொழுப்புச் சத்தால் நிரப்புவதே பேலியோ.

ஐயோ கொழுப்பா என்று உடனே அலறத் தோன்றுகிறதல்லவா? ஆனால், அது அவசியமில்லை. ஒரு சின்ன விஷயத்தை யோசித்துப் பார்த்துவிட்டால் கொழுப்பு அச்சமூட்டாது. மனித உடலின் அதி அத்தியாவசியமான உறுப்புகளான மூளையும் இதயமும் முற்றிலும் கொழுப்புப் பந்துகள்தாம். இந்த இரண்டும் இல்லாவிட்டால் நாம் யார்?

ரமணர் ரூட்டில் யோசித்தால், அது வேறு ‘நாம் யார்’. நமக்குத் தெரிந்த வழியில் சிந்தித்தால், மூளையும் இதயமும் இல்லாவிட்டால் இது வெறும் கட்டை. ஆக, இரு பெரும் உடல் உறுப்புகளே கொழுப்புப் பந்துகளாக இருக்கும்போது கொழுப்பு சாப்பிட்டு எப்படி செத்துப் போவோம்? கொழுப்பில் எதைச் சாப்பிடுகிறோம், எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதில் இருக்கிறது சூட்சுமம்!

(தொடரும்)                                  

பேலியோ கிச்சன்

புது வீட்டுக்குக் குடிபோகுமுன் பெருக்கிக் கழுவிக் கோலம் போடுவது மாதிரி மங்களகரமாக வயிற்றைச் சுத்தப்படுத்துகிற ஒரு ஜூஸோடு ஆரம்பிப்போம். இது கீரை ஸ்மூத்தி. ஏதேனும் ஒரு கீரை அரைக்கட்டு எடுத்துக்கொள்ளுங்கள். கொதித்த நீரில் உருவிப் போட்டு இரண்டு நிமிடம் மூடி வைத்துவிட்டு, நீரை வடித்துவிட்டால் பச்சை வாசனை போய்விடும் (கீரையோடு சேர்த்துக் கொதிக்கவைக்கக்கூடாது).
7c.jpg
ஆச்சா? ஒரு பிடி கொத்துமல்லி, அரைப்பிடி புதினா, ஒரு பத்து கருவேப்பிலை, அரை மூடித் தேங்காய், ஒரு தக்காளி, ஏழெட்டு மிளகு, ஒரு துண்டு இஞ்சி, நாலு சிறு வெங்காயம், நாலு பல் பூண்டு. இவற்றை மேற்படிக் கீரையுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்தால் கொழகொழவென்று ஒரு சமாசாரம் கிடைக்கும். அதன் தலையில் அரைமூடி எலுமிச்சை பிழிந்து உப்புப் போட்டு அருந்திப் பாருங்கள். வாரம் ஓரிரு முறை காலை உணவுக்கு பதில் இந்தக் கீரை ஸ்மூத்தியை அருந்தினால் வயிற்றுப் பிரச்னைகளே வராது. மலச்சிக்கல் அறவே இருக்காது.

-பா.ராகவன்

kungumam.co.

  • தொடங்கியவர்

இளைப்பது சுலபம்

வெஜ் பேலியோவில் எடை குறைப்பது  எப்படி?

அனுபவத் தொடர் - 3
3.jpg
சரி, இளைத்து இலி - ஆணாகிவிடலாம் என்று முடிவு செய்ததும், என் முழுநேர நண்பரும் பகுதி நேர டாக்டருமான ப்ரூனோவுக்கு போன்  செய்தேன். தூத்துக்குடிக்காரரான அவர் ஒரு தீவிர அசைவவாதி. அசப்பில் என்னைக் காட்டிலும் கனபாடிகளாகத் தெரிவார். ஆனால் பேலியோ  கடைப்பிடிக்க ஆரம்பித்து மிகக் குறுகிய காலத்தில் அவரது சுற்றளவு சிற்றளவாகியிருந்ததை நேரில் கண்டபோது வியப்பாக இருந்தது. என்ன  செய்தீர்கள் என்று கேட்டேன்.

‘மிகவும் சுலபம். பசி கூடாது. தானியம் கூடாது. சீனி கூடாது. அவ்வளவு தான்’ என்று சொன்னார். பசி கூடாது என்பது நல்ல விஷயம். ஒரு  நாளைக்கு இரண்டு ரத்தக் கொதிப்பு மாத்திரை சாப்பிட்டுக்கொண்டிருந்த என்னால் இயல்பில் பசி தாங்க முடியாது. குறிப்பிட்ட நேரத்துக்கு  சாப்பிடாவிட்டால் உச்சந்தலையில் வியர்க்கத் தொடங்கும்.

தொழில்முறைக் குடிகாரனைப் போல் கைகள் நடுங்க ஆரம்பிக்கும். திடீரென்று சமூகக் கோபமெல்லாம் வந்து ஃபேஸ்புக்  புரட்சியாளர்களைப்போல் காச்சு மூச்சென்று கத்தத் தொடங்கிவிடுவேன். எனவே, பசியாதிருப்பது முக்கியம் என்கிற முதல் கட்டளை  எனக்குப் பிடித்தது. தானியம் கூடாதென்றால்? எந்த தானியமும் கூடாது.

அரிசி, கோதுமை, சோளம் முதல் க.பருப்பு, உ.பருப்பு, து.பருப்பு, ப.பருப்பு வரை சகலமும். அதாவது அற்புத சுகமளிக்கும் அரிசிச் சோறு  கிடையாது. பூரித்துத் திளைக்கச் செய்யும் பூரி கிடையாது, பொங்கல் கிடையாது. வாசமிகு வடை இல்லை. மனம் மயக்கும் மசால் தோசை  இல்லை. பீடுடைய பீட்சா இல்லை, பர்கர் இல்லை, எதுவும் இல்லை.

சரி ஒழியட்டும். சீனி கூடாதென்றால் வெல்லம் கூடுமா? கருப்பட்டி? அட, தேன் இருந்தால் போதுமே? நான் அப்பளத்தையே பாயசத்தில்  தோய்த்துச் சாப்பிடுகிற ஜென்மம். சர்க்கரை கூடாதென்றால் அதற்கொரு மாற்று வைத்தாக வேண்டும் அல்லவா? டாக்டர் முறைத்தார். இது  இனிப்பு என்று நாக்கு சொல்லும் எதுவும் கூடாது என்று சொன்னார். பகீரென்றாகிவிட்டது எனக்கு.

முன்பொரு சமயம் இதே மாதிரி எடை குறைக்கலாம் என்று ஒரு சிறு நப்பாசை ஏற்பட்டது. அப்போது பேலியோவெல்லாம் கிடையாது,  தெரியாது. தொண்ணூறு கிலோவுக்கு மேல் இருக்கிறேன்; என்ன செய்தால் இளைக்கலாம் என்று குடும்ப டாக்டரிடம் போய்க் கேட்டேன்.  தொண்ணூறா! உங்கள் உயரத்துக்கு அறுபத்து ஐந்து கிலோவுக்கு மேல் இருக்கக்கூடாதே என்றார் அந்த உலக உத்தமர்.

அதுசரி, இதெல்லாம் இறைவன் கொடுக்கும் வரமல்லவா? வேண்டாமென்று சொல்லுவதோ, தள்ளி நிற்பதோ அநாசாரமல்லவா?  அப்படியானால் காலக்கிரமத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, ஹார்ட் அட்டாக் உள்ளிட்ட கசுமாலங்கள் வந்து சேரும்;  பரவாயில்லையா என்றார் மருத்துவ சிரோன்மணி.

இது ஏதடா பேஜாராகப் போகிறதே? என்ன செய்யலாம் என்று அவரையே கேட்டேன். டாக்டரானவர் ஒரு டயட் சார்ட் போட்டுக்  கொடுத்தார். அதில் அவர் என்னை நிறைய ஓட்ஸ் கஞ்சி குடிக்கச் சொல்லியிருந்தார். அப்புறம் அரைக்கீரை, முளைக்கீரை,  பொன்னாங்கண்ணிக்கீரை, முருங்கைக் கீரை, முசுமுசுக்கீரை, சிறுகீரை, வெந்தயக்கீரை, வெங்காயக் கீரை, வெள்ளைப்பூண்டுக் கீரை என்று  உலகிலுள்ள அத்தனை இலை தழைகளின் பெயரையும் எழுதி அனைத்தையும் ஆடு மாதிரி அசைபோட்டுச் சாப்பிடச் சொல்லியிருந்தார்.

அப்பேர்ப்பட்ட தீவிரவாத டாக்டர்கூட என்னை இனிப்பு சாப்பிடாதே என்று சொல்லவில்லை. ஆனால் இந்த ப்ரூனோ ஏன் இப்படி அடி  மடியில் கைவைக்கிறார்? அந்த சூட்சுமம் அன்றுதான் எனக்குப் புரிந்தது. நாம் கணக்குப் போட்டாலும், கண்ராவிக் கவிதை எழுதினாலும்,  தமிழ் ராக்கர்ஸில் தரவிறக்கிப் படம் பார்த்தாலும் கம்ப்யூட்டருக்கு எப்படி எல்லாம் 010101 தானோ, அதே மாதிரிதான் இட்லி சாப்பிட்டாலும்  இடியாப்பம் சாப்பிட்டாலும் அல்வா சாப்பிட்டாலும் ஹார்லிக்ஸ் குடித்தாலும் உடம்பு இயந்திரத்துக்கு அது எல்லாமே வெறும் மாவுப்  பொருள்.

இந்த மாவுப் பொருள்தான் க்ளூக்கோஸாகி சத்து கொடுக்கிறது; செயல்பட வைக்கிறது. ரத்தத்தில் இந்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது  அதைத் தடுத்தாட்கொள்வதற்கு இன்சுலின் நிறைய சுரக்க வேண்டியிருக்கிறது. அது கார்ப்பரேஷன் தண்ணீர் மாதிரி மக்கர் செய்கிறபோது,  கேன் வாட்டர் வாங்குவதுபோல மாத்திரை, ஊசி என்று மாற்று வழி தேட வேண்டியிருக்கிறது. சர்க்கரை வியாதியஸ்தர் என்கிற  பட்டமொன்று ஒட்டிக்கொள்கிறது.

பத்தாத குறைக்கு அளவுக்கதிகமாக உணவின்மூலம் உள்ளே போகும் மாவுப் பொருள் அடி வயிற்றில் போய் அடைக்கலமாகிறது. அடுத்த  வேளை இந்தப் பரதேசிக்குச் சோறு கிடைக்காது போனால் செயல்பட முடியாமல் துடித்துவிடுவானே என்கிற பரோபகார சிந்தையுடன்  உடலானது நாம் உட்கொள்ளும் மிகை உணவை அப்படிப் பாதுகாக்கிறது. பிதுரார்ஜித சொத்து மாதிரி சேர்ந்து, சேர்ந்து அதுதான் குண்டடிக்க  வைக்கிறது. பலப்பல வியாதிகளுக்கும் காரணமாகிவிடுகிறது.

‘இப்போது புரிகிறதா ஏன் சீனி எந்த வடிவத்திலும் கூடாதென்று சொன்னேன் என்று?’ ப்ரூனோ கேட்டார். ‘அது சரி ஐயா. இதுவரை  சாப்பிட்டுக் கொண்டிருந்த எதையுமே கூடாது என்றுதான் சொல்லியிருக்கிறீர். ஆனால், என்ன சாப்பிடலாம் என்று இன்னும்  சொல்லவில்லையே?’ ‘சரி எழுதிக்கொள்ளும்.

நீங்கள் சுத்த சைவம் அல்லவா? எனவே நெய்யில் வறுத்த பாதாம் பருப்பு சாப்பிடுங்கள். ஒரு வேளைக்கு நூறு கிராம் பாதாம் சாப்பிடலாம்.  இன்னொரு வேளைக்கு பனீர் சாப்பிடுங்கள். இருநூறு கிராம் பனீர். பனீர் டிக்கா, பனீர் புர்ஜி, பெப்பர் ஃப்ரை என்று பிடித்த விதமாக  சமைத்துச் சாப்பிடுங்கள். போனால் போகிறது, மூன்றாம் வேளைக்குக் காய்கறி. அதிலும் தரைக்கு அடியில் விளையும் எதுவும் கூடாது.

மேலே விளைகிற ரகங்களிலும் பீன்ஸ், அவரைக்காய், கொத்தவரங்காய், காராமணி கூடாது. காய்கறி சாப்பிடும்போது மறக்காமல் கொஞ்சம்  வெண்ணெய் சேர்த்துக்கொள்ளுங்கள். சமைப்பதற்கு எண்ணெய் வேண்டாம். நெய்யில் சமைத்துச் சாப்பிடுங்கள். பால் சேர்க்கலாம். தயிர்  சேர்க்கலாம். மோர் சேர்க்கலாம். சீஸ், ஃப்ரெஷ் க்ரீம் என்று வளைத்துக் கட்டுங்கள். இரண்டு நிபந்தனைகள்.

சாப்பிடுகிற அனைத்தும் கொழுப்புள்ளதாக இருக்க வேண்டும். எதிலும் சர்க்கரை இருக்கக்கூடாது.’ உங்களுக்குப் புரிகிறதா? பாதாம்  சாப்பிடலாம். நெய் சாப்பிடலாம். பாதாம் அல்வா கூடாது. பால் சேர்க்கலாம். க்ரீம் சேர்க்கலாம். ஐஸ் க்ரீமாக இருக்கக்கூடாது. பனீர்  நல்லது. பனீர் புலாவ் கெட்டது. பட்டர் நல்லது. பட்டர் ரோஸ்ட், பட்டர் நான் தகாது.

அந்த வினோத ரச மஞ்சரி என்னைக் கவர்ந்தது. என்ன கெட்டுவிட்டது? ஒரு முயற்சி செய்து பார்த்துவிடுவோம் என்று முடிவு செய்தேன்.  யோசித்துப் பார்த்தால் என் நெருங்கிய நண்பனான எம்பெருமான் கிருஷ்ணபரமாத்மா இப்படித்தான் சாப்பிட்டுத் தீர்த்திருக்கிறான். குடம்  குடமாகப் பாலும் தயிரும் வெண்ணெயும் உண்டுதான் அத்தனை பெரிய கவர்ச்சிக் கண்ணனாகவே கடைசிவரை இருந்திருக்கிறான்.

அத்தனைக் கொழுப்பு சாப்பிட்டு அவன் என்ன ஹார்ட் அட்டாக் வந்தா செத்தான்? இறுதிவரை முதுமை பாராத மகத்தான மன்மத  வாழ்வல்லவா! அவனால் முடிந்ததென்றால் என்னால் எப்படி முடியாமல் போய்விடும்? ஒரு வழி பண்ணிவிடுவது என்று முழுமூச்சுடன்  ஆரம்பித்தேன்.

(தொடரும்)

-பா.ராகவன்
3a.jpg
பேலியோ கிச்சன் - பாதாம் சாப்பிடுவது எப்படி?

நூறு கிராம் பாதாம் பருப்பை நன்கு அலசிக் கழுவி, அரிசி ஊறவைப்பது போல ஒரு முழு ராத்திரி உப்புப் போட்ட நீரில் ஊறவையுங்கள்.  விடிந்ததும் மீண்டும் அலசிக் கழுவி மீண்டும் ஊறப் போடுங்கள். இருபத்து நான்கு மணி நேரம் பாதாம் இந்த உப்பு நீரில் ஊறினால்தான்  அதிலுள்ள பைட்டிக் ஆசிட் நீங்கும். இப்படி ஊறிய பாதாமை நிழலில் உலர்த்தி எடுத்தால், அது வறுப்பதற்குத் தயார்.

அடுப்பை சிம்மில் வைத்து பாதாமை வறுக்கவும். சும்மா ஒரு பத்து, பதினைந்து நிமிடங்கள் வறுத்தால் போதும். தகதகவென்று தமன்னா  நிறத்துக்கு வரும். கூடவே சொக்கவைக்கும் ஒரு நறுமணமும் சேர்ந்து வரும். ஆச்சா? இறக்கிவைத்து அதன் தலையில் ஓரிரு ஸ்பூன்  நெய்யைக் கொட்டுங்கள். தேவைக்கு உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்றாகக் கலந்து ஓரிரு நிமிடங்கள் ஊறவிட்டால் போதும். அதி ருசியான  பாதாம் உணவு தயார். இதை இன்னும் கொஞ்சம் அலங்கரிக்க முடியும். அடுத்த வாரம் சொல்கிறேன்.

kungumam.co

  • தொடங்கியவர்

இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

 

அனுபவத் தொடர் - 4

இந்த உலகில் நான் செய்யக் கூடிய கர்மாக்கள் என்று நான்கு இருந்தன. சாப்பிடுவது. தூங்குவது. எழுதுவது. படிப்பது. இந்த நான்கைத் தவிர நாற்பத்தி ஐந்து வயதுவரை வேறு எதையும் செய்த நினைவில்லை. இதனாலேயே எனது தேகமானது சர்க்கரை வள்ளிக் கிழங்கை சாக்லெட்டால் மெழுகிவிட்டாற்போல மொழுங்கென்று இருக்கும். உடம்பை அசைக்காத உத்தமன் என்பதால் சிறு வயது முதல் காயங்கள் ஏதும் பட்டதில்லை.

வாழ்நாளில் கொசுக்களுக்கு அளித்ததற்கு அப்பால் வேறு எந்த விதத்திலும் நான் ரத்தம் இழந்ததில்லை. ஓடியாடி என்ன வாவது சாகச முயற்சியில் ஈடுபட்டிருந்தால் சின்னதாக ஏதேனும் காயம் பட்டு ரத்தம் வந்திருக்கும். நானோ எடுத்து வைக்கும் அடியையெல்லாம் எருமை நிகர்த்த அடிகளாகவே வைப்பேன். அட, சமையலறையில் நாலு காய் நறுக்கியாவது சற்று ரத்த சேதம் பார்த்திருப்பேனா என்றால் கிடையாது. சாப்பிடத் தெரியுமே தவிர, சமையல் எப்பேர்ப்பட்ட ஒரு அசகாயப் பணி என்பதையே அறியாத அப்பாவியாகவும் படுபாவியாகவும் ஒருங்கே இருந்தேன்.

இப்பேர்ப்பட்டவன் தன் வாழ்நாளில் யாருக்கும் ரத்ததானம்கூடச் செய்ததில்லை என்பதைச் சொல்ல வேண்டாம் அல்லவா? தவமிருந்து பெற்று வளர்த்த பெண்ணையே எனக்குத் தொண்ணூற்றொன்பது வருட திருமண லீசுக்குக் கொடுத்த பரோபகாரப் பெண்மணி மரணப் படுக்கையில் இருந்தபோது, ஏகப்பட்ட லிட்டர்கள் ரத்தம் வேண்டும் என்று ஆசுபத்திரியில் சொன்னார்கள்.

நல்லவனான நான், உட்கார்ந்த இடத்தில் இருந்தபடிக்கு நண்பர்களுக்கு போன் செய்து விவரம் சொல்லி எப்படியோ நாலைந்து ஜீவாத்மாக்களின் ரத்தத்துக்கு ஏற்பாடு செய்தேனே தவிர, என்னால் அன்று ரத்தம் கொடுக்க முடியாமல் போய்விட்டது. வாழ்நாள் முழுதும் சொல்லிக்காட்ட மனைவிக்கு என்னத்தையாவது மிச்சம் வைக்க வேண்டாமா? எல்லாம் அந்த நல்லெண்ணம்தான்.

கிடக்கட்டும். இவ்வாறாக ரத்தம் காணாத ரத்தத்தின் ரத்தமாகவே வாழ்ந்து வந்தவனை முதல் முதலில் ஒரு ரத்தப் பரிசோதனை செய்யச் சொன்னார் சென்ற அத்தியாயத்தில் நாம் சந்தித்த அதே டாக்டர். ‘எதற்கு ரத்தப் பரிசோதனையெல்லாம்? உணவை மாற்றப் போகிறேன். அவ்வளவுதானே?’

‘யோவ், இத்தனை காலம் நீ சேர்த்து வைத்த சொத்துபத்து எத்தனை என்று தெரிய வேண்டாமா? நாளைக்குக் கொழுப்பு சாப்பிட்டு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது என்று சொல்லிவிடுவாய். உண்மையில் எடைக் குறைப்பைக் காட்டிலும், உன் ஹார்ட் அட்டாக் ரிஸ்க் ரேட் எவ்வளவு என்று தெரிந்துகொண்டு அதைக் குறைக்கத்தான் இந்த டயட்டே!’ என்றார் மருத்துவமாமணி. இந்தக் காவியத்தின் பாயிரத்திலேயே பார்த்தோம், இதயமே ஒரு பெரும் கொழுப்புப் பந்தாக இருக்கும்போது, கொழுப்பு சாப்பிட்டால் ஒன்றும் கொலை பாதகம் நேராது என்று.

அப்படியென்றால், மாரடைப்பு ஏன் வருகிறது?

ரொம்ப டெக்னிகலாக விவரிக்கவெல்லாம் எனக்கு வக்கில்லை. எளிமையாக இப்படிச் சொல்வேன். கொழுப்பால் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதில்லை. நமது ரத்த நாளங்களில் உண்டாகும் காயமே (இதை இன்ஃப்ளமேஷன் என்பார்கள்) மாரடைப்புக்குக் காரணம். காயமே இது பொய்யடா என்று கண்டுகொள்ளாமல் விட்டால் தீர்ந்தது கதை. இதயத்தின் உட்பகுதிகளில் ஏற்படுகிற இந்தக் காயம்தான் மாரடைப்பு முதல் மண்டையைப் போடுவது வரை நிகழும் சகலமான கெட்ட சம்பவங்களுக்கும் காரணம்.

7.jpg

அப்புறம் கொழுப்பால்தான் மாரடைப்பு என்று ஏன் சொல்கிறார்கள்?

 விஷயம் என்னவென்றால், ரத்த நாளங்களில் உண்டாகியிருக்கும் மேற்படி காயங்களை ஆற்றுவதற்காக நல்ல, உயர்தரக் கொழுப்பு மருந்தை எல்டிஎல் என்கிற ஒருவிதப் புரத கேப்ஸ்யூலுக்குள் ஏற்றி அனுப்புகிறது கல்லீரல். எல்.டி.எல். என்றால் கெட்ட கொழுப்பு என்று உலகம் சொல்லும்.

நம்பாதீர். அது கொழுப்பே அல்ல. புரதம்தான். கெட்டது மல்ல; அதையும் நம்பாதீர். கூரியர்க்காரன் கருப்பாயிருந்தாலென்ன? சிவப்பாயிருந்தாலென்ன? தபால் ஒழுங்காகப் பட்டுவாடா ஆனால் பத்தாதா? கல்லீரலில் இருந்து கிளம்பி, இதயத்தை நோக்கிப் பயணம் செய்யும் இந்த கூரியர் டப்பா, போகிற வழிக்குப் புண்ணியமாக நிறைய ஹார்மோன்களைச் செழிப்படைய வைத்துக்கொண்டே போகிறது.

பத்தாத குறைக்கு உணவின் மூலம் நாம் உள்ளே அனுப்புகிற விட்டமின்கள், மினரல்கள் போன்றவற்றை அனைத்து செல்களுக்கும் பகுத்துக் கொடுக்கிற திருப்பணியையும் இதுவேதான் செய்கிறது. இத்தனை நல்ல மனம் கொண்ட எல்.டி.எல்., தனது சேவையின் உச்சமாக, இதய நாளங்களுக்குள் உண்டாகியிருக்கும் காயங்களை ஆற்றும் விதமாக, தான் சுமந்து செல்லும் நற்கொழுப்பை அதன்மீது பூசுகிறது. எதற்காக? காயங்களால் மாரடைப்பு வந்துவிடக் கூடாதே என்பதற்காக.

அதையும் மீறி எப்படி மாரடைப்பு வருகிறதென்றால், பூசுகிற கொழுப்பு போதாமல் மேலும் மேலும் காயங்கள் பெருகிக்கொண்டே இருப்பதால்தான். வாழ்நாளில் ஒரு சொட்டு ரத்தம்கூடச் சிந்தாமல், எந்தக் காயமும் படாமல் வாழ்ந்தவன் நான் என்று சொன்னேன். என்னையறியாமல் என் இதயத்துக்குள் எத்தனையோ காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று டாக்டர் சொன்னார்.

அதுசரி, ஏமாற்றங்கள், நம்பிக்கை துரோகங்கள், சொந்த சோகம், வாடகை சோகம் என்று இதயம் காயமுறக் காரணங்களா இல்லை? அதில்லையப்பா. இந்தக் காயம் வேறு. இத்தனை வருஷ காலமாக நீ சாப்பிட்டு வந்த உணவினால் உண்டான காயங்கள் இவை என்றார் டாக்டர். என்ன அக்கிரமம் இது? அன்னம் அமுதமல்லவா? அரிசி நம் உயிரல்லவா? பருப்பும் பயிறும் பலவித எண்ணெய்களும், விருப்பமுடன் புசிக்கும் விருந்துணவு வெரைட்டிகளும் நம் வாழ்வை வண்ணமுற வைப்பவை அல்லவா?

7a.jpg

என்றால், அறிவியல் சற்று வேறு விதமாக ஒரு கருத்தைச் சொல்லுகிறது. நாம் சாப்பிடுகிற சர்க்கரையோ, அரிசியோ, கோதுமையோ, மைதா மாவோ, சோளமோ, டப்பாக்களில் விற்கப்படுகிற பிராண்டட் எண்ணெய்களோ தன்னாலான சத்தும் ருசியும் கொடுப்பதோடு நிற்பதில்லை. பொதுக்கழிப்பிடச் சுவர்களில் தன் கையெழுத்தைப் போட்டுச் செல்லும் விடலைப் பையன்களைப் போல இதய நாளங்களில் கீறல்களை ஏற்படுத்திவிட்டே போகின்றன.

இந்தக் கீறல் என்கிற காயத்தை ஆற்றத்தான் கொழுப்பைக் கொண்டுபோய் அங்கே பூசுகிறது உடலியற்கை. நீ பாட்டுக்குப் பூசு; நான் பாட்டுக்குக் கீறுகிறேன் என்று தொடர்ந்து காயம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறபோது, கொழுப்பு மேலும் மேலும் பூசப்படுகிறது. அதுவும் எத்தனை லேயர்தான் தாங்கும்? ஒரு கட்டத்தில் ரத்த ஓட்டம் தடைபட ஆரம்பிக்கிறது. விளைவு, மாரடைப்பு.

ஆஹா, கொழுப்பு ஜாஸ்தி; அதனால் மாரடைப்பு என்று சொல்லிவிடுகிறோம். இப்போது சொல்லுங்கள். கொழுப்பா காரணம்? அத்தனைக் கொழுப்பு அங்கே சென்று படிவதற்கு வழிசெய்த உள்காயங்கள் அல்லவா காரணம்? அந்தக் காயத்தின் தோற்றுவாயான உணவு முறையல்லவா மூலக் காரணம்? ‘அதனால்தான் ரத்தப் பரிசோதனை அவசியம் என்கிறேன். உன் காயம் சிறு காயமா பெருங்காயமா என்று முதலில் பார்த்துவிட வேண்டும்’ என்றார் டாக்டர்.
 

(தொடரும்)

-பா.ராகவன்


பேலியோ கிச்சன்

பொங்கல் பானைக்குக் கட்டுகிற பசு மஞ்சள் இருக்கிறதில்லையா? அதை ஒரு துண்டு எடுத்துக்கொண்டு தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக்கிக்கொள்ளுங்கள். இதோடு நாலு மிளகு, இரண்டு துளசி இலை, இரண்டு பல் பூண்டு, ஒரு சிறு வெங்காயம் சேர்த்து நாலு குத்து குத்தி நசுக்குங்கள். இரவு உணவுக்குப் பின் இதை அப்படியே எடுத்து வாயில் போட்டு மென்று விழுங்கிவிடுங்கள். விடாமல் தினசரி இதைச் செய்து வருவது இதயத்துக்கு நல்லது. ரத்தக்குழாய் உள்காயங்களை இது கணிசமாகச் சரி செய்யும்.

www.kungumam.co.

  • தொடங்கியவர்

இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

பா.ராகவன் - 5

என்ன பார்த்துக்கொண்டிருந்தோம்? ஆம். அந்த ரத்தப் பரிசோதனை. டாக்டர் சொல்லிவிட்டபடியால் என் தேகத்து ஜீவநதியில் சில சொட்டுகளை இழக்கத் தயாரானேன். ஒரு நல்ல நாள் பார்த்து போன் செய்து வரவழைத்து, பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்து அனுப்பினேன். பன்னிரண்டு மணி நேரம் உண்ணாதிருந்து வழங்கப்பட்ட ரத்தம். ஒன்றும் பிரமாதமில்லை. ராத்திரி சாப்பிட்டுவிட்டுப் படுத்தால் காலை அதே நேரத்துக்கு ரத்தம் கொடுத்தால் முடிந்தது கதை.

இந்த ரத்தத்தைக் கொண்டு செய்யப்படும் பரிசோதனைகளில் சுமார் பதினைந்து முடிவுகள் நமக்குத் தேவைப்படுகின்றன. lipid profile எனப்படும் கொழுப்புத் தொகுப்பின் சரிதம். Cardiac markers என்கிற மாரடைப்புக் காரணங்களைச் சுட்டும் புள்ளிகள். பிறகு கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடுகள் பற்றிய புள்ளிவிவர அறிக்கை. அப்புறம் தைராய்டு இருக்கிறதா, இரும்புச் சத்துக் குறைபாடு இருக்கிறதா, விட்டமின்கள் போதிய அளவு இருக்கிறதா என்றெல்லாம் பார்க்கிற பரிசோதனைகள்.

ரொம்ப முக்கியம், நமது கணையம் எந்தத் தரத்தில் இருக்கிறது என்று பார்ப்பது. Hemogram என்கிற முழு ரத்த விவரக் குறிப்பு, அப்புறம், மஞ்சள் காமாலை உள்ளதா என்று பார்ப்பது. இருக்கவே இருக்கிறது ரத்த சர்க்கரை அளவுகள். ரொம்ப ஆசுபத்திரி வாசனை அடிக்கிறதா? வாழ்வில் ஆசுபத்திரி வாசமே இல்லாதிருக்க வேண்டுமானால் இந்த ஒரு பரிசோதனையை ஆரம்பத்தில் செய்துகொண்டுவிடுவது நல்லது.

மேற்படி பரிசோதனைகள் முடிந்து எனது ரிசல்ட்டுகள் காலக்கிரமத்தில் வந்து சேர்ந்தன. நான் குண்டனே தவிர ஆரோக்கியசாலி என்றொரு எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. சும்மா தலைவலி ஜுரம் என்றுகூட என்றுமே படுத்தவனல்லன். எந்தக் காலத்திலோ ஓரிரு முறை டைஃபாய்ட் வந்திருக்கிறது. மற்றபடி என் பீமபுஷ்டி பராக்கிரமங்களில் எக்குறையும் இருந்ததில்லை. எனவே இந்தப் பரிசோதனை முடிவுகளிலும் அபாய அறிவிப்பு ஏதும் இருக்காது என்று நினைத்தேன்.

எம்பெருமான் அங்கே வைத்தான் ஒரு தங்க ஆப்பு. எனது உள்காய அபாய மணிக்கூண்டில் எண் ஒன்பது ஏற்றப்பட்டிருந்தது [HsCrP - 9.07]. உடம்பில் இருக்கவேண்டிய நல்ல கொழுப்பின் (HDL) அளவு மிகவும் குறைவாகவும், கெட்டது போதிய அளவும் இருந்தன. தவிரவும் விட்டமின் டி மற்றும் பி12 போன்ற அதி அத்தியாவசியங்கள் கண்ணராவிக் கோலத்தில் கிடந்தன.

பிடபிள்யூடியில் ரோடு போடுகிற உத்தியோகம் தேடிக்கொண்டு நாலைந்து ஜென்மங்களுக்கு வெயிலில் காய்ந்தால்தான் என் விட்டமின் டி அளவு ஓரளவு ஏறும் என்று தோன்றியது. இதெல்லாம் பத்தாதென்று ரத்த சர்க்கரை சராசரிப் புள்ளி 6.8 என்று காட்டியது. நமது தேசத்திலுள்ள ரத்தப் பரிசோதனை நிலையத்தார் யாரானாலும் அடிப்படையில் கருணாமூர்த்திகள். இந்த ரத்த சர்க்கரை சராசரி ஆறு சதத்துக்கு உட்பட்டிருந்தால் நார்மல் என்றுதான் சொல்லுவார்கள்.

6.jpg

ஆறிலிருந்து ஏழு சதம் காட்டினால் Good Control என்று சான்றிதழ் வழங்குவார்கள். ஏழிலிருந்து எட்டுக்குச் சென்றால் பரவாயில்லை ரகத்தில் சேர்ப்பார்கள். எட்டிலிருந்து பத்தென்றால் ம்ஹும் என்று லேசாக முகம் சுளித்துவிட்டு, பத்துக்கு மேலே போனால் மட்டுமே அடேய் நீ சர்க்கரை வியாதியஸ்தன் என்று அலறுவார்கள். உண்மை முற்றிலும் வேறு. இந்த மும்மாத ரத்த சர்க்கரை சராசரி எனப்படுகிற HbA1c, ஆறு புள்ளிகளைத் தாண்டினாலே நீரிழிவு அபாயம்தான்.

6.4 என்பதே சர்வதேச அபாயக் கோடு. ரத்தத்தில் உள்ள க்ளூக்கோஸ் 140 என்கிற எண்ணைத் தொடுமானால் நிச்சயம் ஆபத்து. ஏனென்றால் இன்றைக்கு மட்டும் 140, நாளை முதல் 130ஐத் தாண்டமாட்டேன் என்று சர்க்கரை ஒன்றும் நமக்கு சத்தியம் செய்து தருவதில்லை. நாம் தினசரி பரிசோதித்துப் பார்ப்பதில்லை என்பதால் குத்து மதிப்பாக ஒரு நாள் கிடைக்கும் பரீட்சை ரிசல்ட்டை வைத்து ஒரு முடிவுக்கு வந்துவிடுவது ஆபத்து.

இந்த ரீதியில் எனது சொத்து மதிப்பான 6.8 என்பது மிக நிச்சயமாக நான் சர்க்கரை நோயின் வாசலில் நிற்பதைச் சுட்டிக்காட்டியது. ஆக, எப்படிப் பார்த்தாலும் டாக்டர் ப்ரூனோ எச்சரித்தது சரிதான் என்பது புரிந்தது. எனக்கு இன்னின்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிந்த பிறகு அவற்றில் இருந்து வெளியே வரவும், என் இஷ்ட ப்ராஜக்டான எடைக் குறைப்பில் கவனம் செலுத்தவும் வசதியாக இருந்தது.

சரியப்பா, நான் ப்ரீ-டயபடிக். விட்டமின் குறைபாடுகள் உள்ளவன். HsCrP எண்ணிக்கை அதிகம். கெட்ட கொழுப்பின் ஆதிக்கம் உண்டு. அனைத்துக்கும் மேலாக 111 கிலோ கனத்த சரீரி. என்னால் உடம்பை வருத்திக்கொண்டு ஓடவெல்லாம் முடியாது. இந்த பளு தூக்குதல், பஸ்கி எடுத்தல் வகையறாக்களுக்கும் எனக்கும் எந்த ஜென்மத்திலும் சம்பந்தமில்லை.

உடம்பை அசைக்காமல், உட்கார்ந்த இடத்தில் நான் இளைக்க வேண்டும். இன்னொரு நிபந்தனை, நான் சுத்த சைவம். பள்ளி, கல்லூரி மதிப்பெண்களில் தவிர வேறெங்கும் முட்டை காணாத வெஜிடேரியன் தீவிரவாதி. என்னை உங்களால் எத்தனை கிலோ இளைக்க வைக்க முடியும்? மேற்படி வினாவை என் நண்பரும் பேலியோ பயங்கர வாதியுமான சங்கர்ஜியிடம் கேட்டேன்.

அவரும் ஒரு காலத்தில் என்னைப் போலொரு குண்டர் குலத்திலகமாக இருந்தவர்தாம். நான்காண்டுகளுக்கு முன்னால் பேலியோ இங்கே அறிமுகமான புதிதிலேயே அதைப் பழகி, பயின்று, கணிசமாக எடை குறைத்தவர். வெண்ணெய்யும் பாதாமுமாகத் தின்று தளதளவென்று மேனி மினுமினுக்க ஆரம்பித்த பிறகு சொய்யாவென்று அசைவக் கட்சிக்கு மாறிப் போனவர்.

6a.jpg

பேலியோவில் இது ஒரு பேஜார். என்னைப் போன்ற வெகு சிலரைத் தவிர, பெரும்பாலானவர்கள் எடைக்குறைப்பு வெறி திடீரென்று அதிகரித்து அசைவத்துக்கு கன்வர்ட் ஆகிவிடுவார்கள். வெளிப்படையாக ஒன்றை முதலில் சொல்லிவிடுவது நல்லது. சைவ பேலியோவில் எடைக் குறைப்பு சற்று நிதானமாகத்தான் நிகழும். ஓர் உதாரணம் சொன்னால் புரியும் என்று நினைக்கிறேன். 2016ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி நான் பேலியோ ஆரம்பித்தேன். ஓரிரு நாள் வித்தியாசத்தில் என் நண்பர் செந்தில்குமாரும் ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் அவர் சைவமாகத்தான் இருந்தார். ஆனால், அவர் என்னைக் காட்டிலும் கனத்த சரீரி. 192 என்றால் உங்களுக்கு நோட்டுப் புத்தக சைஸ் நினைவுக்கு வரலாம். அவருக்கு அது எடை. அதாவது என்னைக் காட்டிலும் சுமார் எண்பது கிலோ அவர் ‘மூத்தவர்’. பார்த்தார் மனிதர். சைவமெல்லாம் சரிப்பட்டு வராது என்று முடிவு செய்து ஒரு முகூர்த்த நாளில் ஆத்மசுத்தியோடு அசைவியாகிப் போனார். விளைவு, இந்த ஓராண்டில் அவர் ஐம்பது கிலோக்களுக்கு மேல் எடை குறைந்தார்.

நான் இதை எழுதுகிற இந்த நிமிடம் 27 கிலோக்கள் குறைந்திருக்கிறேன். பேலியோவின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வது என்பது சைவ - அசைவ உணவு வகைகளின் தன்மையைப் புரிந்துகொள்வதில்தான் உண்மையில் தொடங்குகிறது. விரிவாகவே பார்க்கலாம்.
 

(தொடரும்)


பேலியோ கிச்சன்

போன வாரத்துக்கு முந்தைய வாரம் பாதாமை மேலும் ருசிகரமாக்குவது எப்படி என்று அடுத்த வாரம் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தேன். ஆனால், சென்ற இதழில் அதை மறந்தே போனேன். இப்போது பார்த்துவிடுவோம். ப்ராசஸிங் எல்லாம் முன்னர் சொன்னபடியேதான். பாதாமைப் பத்திருபது நிமிடங்கள் வறுத்த பிறகு அதை அம்மிக் குழவியால் லேசாக இடியுங்கள்.

இடித்தபின் ஒரு ஸ்பூன் நெய்விட்டுக் கிளறி ஒரு நிமிடம் அப்படியே வையுங்கள். உப்பு போடாதீர்கள். ஒரு இருபத்தி ஐந்து கிராம் சீஸ் க்யூபை உருக்கி அதன் தலையில் கொட்டிக் கிளறுங்கள். இதன்பின் மிளகாய் அல்லது மிளகுப் பொடி போட்டு மேலுக்கு ஒரு ஸ்பூன் நெய்.  சீஸில் உள்ள உப்பு போதும். சீஸின் ருசியும் வறுத்த பாதாமின் ருசியும் இணையும்போது அமர்க்களமாக இருக்கும்.

www.kungumam.co

  • தொடங்கியவர்

இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

 

 

அனுபவத் தொடர் - 6 

- பா.ராகவன்

கடவுள் இல்லாத இடமே இல்லை என்று தன் தகப்பனிடம் சொன்னான் பிரகலாதன். சைவ உணவில் கார்போஹைடிரேட்தான் கடவுள். படைப்பது, காப்பது, அழிப்பது மூன்றையும் செய்வது அதுதான். காய்கறிகள், கீரைகள், கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானியங்கள், பழங்கள், பால், தயிர் - எதை எடுத்தாலும் அதில் நிச்சயம் இருக்கும் கார்போஹைடிரேட் என்கிற மாவுச் சத்து.
7.jpg
ஒரு சிலவற்றில் கூடுதலாக இருக்கும். வேறு சிலவற்றில் குறைவாக இருக்கும். ஆனால், இருக்கும். அதில் சந்தேகமில்லை. இந்த கார்போஹைடிரேட் உணவின் அளவு அதிகரிக்கிறபோது உடல் பருமனில் பிள்ளையார் சுழி போட்டு நீரிழிவு வரைக்கும் சந்தையில் கிடைக்கிற சகலவிதமான வியாதிகளுக்கும் நமது தேகமானது வாசல் திறந்து வைத்துவிடுகிறது.

உதாரணத்துக்கு ஓராண்டுக்கு முன்னால்வரை எனது தினசரி மெனு என்னவாக இருந்தது என்று ஒரு சாம்பிள் சொல்கிறேன். நான் ஏன் குண்டானேன் என்பது இதிலிருந்து உங்களுக்குப் புரியும். காலை எழுந்ததும் பிரமாதமாக ஒரு டிகிரி காப்பி வேண்டும் எனக்கு. தண்ணீர் கலக்காத பாலில் கலந்த உயர்தர காப்பி. கண்டிப்பாக சர்க்கரை உண்டு. இந்த ரக நல்ல காப்பி குறைந்தது முப்பது முதல் முப்பத்தைந்து கலோரி இருக்கும். காப்பிக்குப் பிறகு காலை உணவாக நாலைந்து இட்லி என்றால், தொட்டுக்கொள்ள மிளகாய்ப் பொடி போதாது எனக்கு.

ஒரு இட்லிக்கு சாம்பார். இன்னொன்றுக்கு சட்னி. வேறொன்றுக்கு கெட்டித்தயிர், இன்னொன்றுக்கு நெய் என்று கதன குதூகலமாகத் தொடங்கினால்தான் எனக்குக் காலைவேளை களைகட்டும். அதுவும் தினமும் இட்லியாக இருந்துவிடக் கூடாது. இன்று இட்லி என்றால் நாளை தோசை. (நெய் ரோஸ்ட்!) அடுத்த நாள் பூரி. அவ்வப்போது பொங்கல், என்றேனும் சேமியா உப்புமா, அரிசி உப்புமா. எப்படிப் பார்த்தாலும் காலைக் கணக்கு கண்டிப்பாக சுமார் அறுநூறு முதல் எழுநூறு கலோரிகளாகும்.
7a.jpg
அடுத்து மதியம் என்றுதானே நினைக்கிறீர்கள்? அங்கேதான் நான் மாறுபடுகிறேன். காலைக்கும் மதியத்துக்கும் நடுவே சுமார் நான்கு மணி நேரம் உள்ளதால் நடுவே நொறுக்கு நேரம் என்று ஒன்று உண்டு. அப்போது வேர்க்கடலை சாப்பிடுவேன். அல்லது சிப்ஸ் சாப்பிடுவேன். சீடை, முறுக்கு வகையறாக்களை மொத்த கொள்முதல் செய்து வைத்துக் கொண்டு தினமும் நூறு முதல் நூற்றைம்பது கிராம் அளவுக்குப் பகல் பதினொரு மணிக்குச் சாப்பிட்டு, ஒரு தேநீர் அருந்துவேன். நூறு கிராம் உருளைக்கிழங்கு சிப்ஸில் உள்ளது, சுமார் 550 கலோரி. கொசுறாகக் குடிக்கும் தேநீருக்குப் போடு ஒரு ஐம்பது. ஆக, பதினொன்றரைக்கு ஒரு 600 கலோரி.

அடுத்தபடியாக மதிய உணவு. எனக்கு மதிய உணவோடு கண்டிப்பாக அப்பளம் இருந்தாக வேண்டும். காய்ச்சிய அப்பளமல்ல. பொரித்த அப்பளம். குழம்பு சாதத்துக்கு ஒன்று, ரசத்துக்கு ஒன்று, தயிர் சாதத்துக்கு ஒன்று என்று கணக்கு. பாயசத்துக்கே அப்பளம் தோய்த்து உண்கிற பிரகஸ்பதி நான். சில நாள் இந்த அப்பளங்கள் தவிர கடையில் இரண்டு பஜ்ஜி வாங்கி வைத்துக்கொண்டு சாப்பிடுவதும் உண்டு. இவற்றோடு வழக்கமான காய் கூட்டு வகையறாக்கள். இந்த உணவு குறைந்தது 1200 கலோரிக்கு வரும்.

அடுத்தபடியாக மாலைச் சிற்றுண்டி. உத்தியோகம் என்ற ஒன்று பார்த்துக்கொண்டிருந்த காலத்தில் பெரும்பாலும் மாலை வேளைகளில் இனிப்பு மட்டுமே சாப்பிடுவேன். சும்மா ஒரு கால் கிலோ மைசூர்பா, நூறு கிராம் பால்கோவா, நாலு மோத்திசூர் லட்டு என்று வாங்கி வைத்துக்கொண்டு தின்பது அந்நாளில் என் வழக்கம். சாப்பிட்டுவிட்டு சுடச் சுட ஒரு காப்பி. இங்கே இன்னொரு ஐந்நூறு, அறுநூறு கலோரி போட்டுக்கொள்ளுங்கள்.

இரவுக்கு தோசையோ சப்பாத்தியோ. எதுவானாலும் நாலு. தொட்டுக்கொள்ளும் வக்கணைகளுக்குக் குறைச்சலிருக்காது என்று சொல்லவேண்டியதில்லை அல்லவா? எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் நாளொன்றுக்கு மூவாயிரம் கலோரிக்குக் குறையாமல் தின்று கொழுத்தவன் நான். இது நாலாயிரம், நாலாயிரத்தைந்நூறு ஆகியிருக்கலாமே தவிர இரண்டாயிரம், இரண்டாயிரத்து ஐந்நூறுக்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை.

பிரச்னை என்னவென்றால் மனுஷகுமாரனாகப்பட்டவன் சகல சௌபாக்கியங்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து தீர்ப்பதற்கு நாளொன்றுக்கு அவனுக்கு ஆயிரத்தி ஐந்நூறு முதல் ஆயிரத்து எழுநூற்றைம்பது கலோரி வரை உணவிருந்தால் போதும். சரி ஒழிகிறது இரண்டாயிரம். அதற்கு மேல் போனால்தான் சிக்கல் ஆரம்பிக்கிறது. சில பேருக்கு சிக்கல் காண்டம் சீக்கிரம் வரும். என்னைப் போன்ற உத்தமோத்தமர்களுக்கு கொஞ்சம் தாமதமாக வரும். ஆனால், எப்படியும் வரும்; வந்தே தீரும்!

உடல் இயந்திரம் வேலை செய்ய ஆயிரத்து ஐந்நூறு கலோரிக்குச் சாப்பிட்டால் போதும் என்னும்போது மூவாயிரம் கலோரிக்குத் தின்பவனின் மிச்ச கலோரிகள் என்னவாகின்றன? பரதேசி நாளைக்குப் பட்டினி கிடந்தால் உதவட்டுமே என்கிற பரோபகார சிந்தனையின் அடிப்படையில், செலவானது போக மீதமுள்ளவற்றை உடம்பு சேகரிக்க ஆரம்பிக்கிறது. இன்றைக்கு ஆயிரம், நாளைக்கு ஆயிரத்து ஐந்நூறு, அடுத்த நாள் இரண்டாயிரம் என்று ஆண்டுக்கணக்கில் இப்படிக் கூடுதல் உணவின் மூலம் உள்ளே போகிற மாவுச்சத்து அடி வயிற்றில் சேரச் சேர, உடம்பானது ஊதத் தொடங்குகிறது.
7b.jpg
மறுபுறம் இப்படிக் கணக்கு வழக்கின்றி நாம் உள்ளே தள்ளுகிற மாவுப் பொருள்களை உடம்பு க்ளூக்கோஸாக்கினால்தான் சக்தி. அதற்குக் கணையம் இன்சுலின் என்னும் ஹார்மோனைச் சுரக்க வேண்டும். அது பாவம் ஒழுங்காகத்தான் சுரக்கும். ஆனால், அமுக்கு அமுக்கு என்று நாம் அமுக்கிக்கொண்டே இருந்தால் அந்தப் பாவப்பட்ட ஹார்மோன்தான் என்ன செய்யும்?

அது பத்தாமல் போகும்போது ரத்த சர்க்கரை அளவு தாறுமாறாகிவிடுகிறது. உள்ளே சுரக்கும் இன்சுலின் போதாமல் வெளியில் இருந்து மாத்திரை வடிவிலும், அதுவும் பத்தாமல் போகும்போது இன்ஜெக்‌ஷன் வடிவிலும் செயற்கையாகவும் உள்ளே அனுப்பும்படியாகி விடுகிறது. டாக்டர் பட்டம் மாதிரி சர்க்கரைப் பட்டம். ஆக, அனைத்துக்கும் காரணம் என்ன? உள்ளே போகிற உணவில் இருக்கிற கார்போஹைடிரேட்.

காலை எழுந்ததும் குடிக்கிற காப்பியில் ஆரம்பித்து, ராத்திரி படுக்கப் போவதற்கு முன்னால் மெல்லுகிற நாலு பாக்குத் தூள் வரைக்கும் சகலமானவற்றிலும் கலந்திருக்கிற கடவுள் அதுதான். கொஞ்சம் ஓவர் டோஸாகும்போது இதுவே கெட்ட கடவுளாகிவிடுகிறது. ஆனால், என்னவொரு ஓரவஞ்சனை பாருங்கள். இப்படி சகல வியாதி வெக்கைகளுக்கும் காரண கர்த்தாவான கார்போஹைடிரேட் சைவ உணவில்தான் நீக்கமற நிறைந்திருக்கிறதே தவிர அசைவத்தில் சுத்தமாகக் கிடையாது! இன்னும் புரியும்படிச் சொல்லுவதென்றால், புல் தின்னும் ஆட்டுக்கு ஷுகர் வந்தாலும் வருமே தவிர, ஆட்டைத் தின்னும் சிங்கம், புலிக்கு வரவே வராது!
 

(தொடரும்)


பேலியோ கிச்சன்

பனீர் உப்புமா

200 கிராம் பனீர். ஒரு வெங்காயம். ஒரு தக்காளி. அரை குடைமிளகாய். இரண்டு ஸ்பூன் நெய். மிளகாய்ப் பொடி, சீரகப் பொடி, மஞ்சள் பொடி, உப்பு. கட்டக்கடைசியாக இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி. முடிந்தது. பனீரை ஏதாவது ஒரு வடிவத்தில் நறுக்கியோ, அல்லது சும்மா பிய்த்துப் போட்டோ வைத்துக்கொள்ளவும். வெங், தக், குடை வகையறாக்களை நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலி. அதிலே நெய். தாளித்ததும் காய்களைப் போட்டு வதக்கி, அதன்மேல் பனீரைச் சேர்த்து உப்பு, மிளகாய்ப் பொடி வகையறாக்களை வரிசையில் போட்டுப் புரட்டினால் ஐந்தே நிமிடங்களில் பனீர் உப்புமா தயார். இப்படிச் செய்தால் உதிரி உதிரியாக வரும். இதுவே வேகும்போது கால் டம்ளர் பால் சேர்த்துப் பாருங்கள். கொஞ்சம் குழைந்து, இன்னும் ருசியாக வரும். பனீர் உப்புமாவுக்குத் தேங்காய் சட்னி ஒரு நல்ல காம்பினேஷன்.

www.kungumam.co

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நவீனன் said:

இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

இப்ப உலகம் பூராய் வண்டி தொந்தி பிரச்சனை பெரிய பிரச்சனை போலை கிடக்கு...
எங்கை பாத்தாலும் வண்டியை உடம்பை குறைக்க அது இது எண்டு ஒரே அமர்களப்படுத்துறாங்கள். வண்டியை குறைக்கிறத்துக்கெண்டே புதுப்புது நீட்டி நிமித்துற கருவியள் கண்டுபுடிச்சு விக்கிறாங்களப்பா...:grin:

இரவு ஆறுமணிக்கு பிறகு சாப்பிடாதேங்கோ....

அதுக்கு....இதுக்கு எல்லாத்துக்கும் நல்லது சுகமாயும் இருக்கும்..:love:

ஜிம்....ஓட்டம் ஒரு கோதாரியும் தேவையில்லை கண்டியளோ...:)

சாப்பாட்டிலை மட்டும் கவனமெடுத்தால் மற்றெதெல்லாம் ஓகே...tw_thumbsup:

இது என்ரை சொந்த அனுபவம்.:innocent:

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் ஒரு பகுதி....இளைப்பதற்காகப் போராடுகின்றது!

ஆனால் இன்னொரு பகுதி...பிழைப்பதற்காகப் போராடுகின்றது!

இரண்டு பகுதிகளையும்  பார்த்தவன் என்ற வகையில்...எனது மனம் எப்போதும் போராட்ட மன நிலையிலேயே இருக்கின்றது!

இந்த உலக அமைப்பு...நிச்சயம் மாற்றப்பட வேண்டும்! 

 

  • தொடங்கியவர்

இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

 

அனுபவத் தொடர் - 7

பா.ராகவன்

ஆக, அசைவத்தில் கார்போஹைடிரேட் கிடையாது. நீங்கள் ஒரு முழுக் கோழியை ரவுண்டு கட்டி உள்ளே தள்ளினாலும் ஒரு சதவீதம் கூட உங்கள் சர்க்கரை அளவு ஏறாது. ஆடு அப்படித்தான். முட்டை அப்படித்தான். இதர கறி வகைகள் எதுவானாலும் அப்படித்தான். ஓரிரு மாதங்களுக்கு முன்னால் ஃபேஸ்புக்கில் ஓர் அம்மணி, ‘இன்று கரடிக் கறி சாப்பிட்டேன். ருசியாக இருந்தது; நல்ல ப்ரோட்டின், நீங்களும் ஏன் முயற்சி செய்யக்கூடாது?’ என்று எழுதியிருந்ததைக் கண்டு திடுக்கிட்டுப் போனேன்.

கரடிக் கறியெல்லாம் இந்தியாவில் கிடையாது. மேற்படி வீராங்கனை ரஷ்ய பார்டரில் உள்ள என்னமோ ஒரு குட்டி தேசத்தில் உத்தியோக நிமித்தம் வாழ்கிற தமிழ்ப் பெண்மணி. ஊர் பேர் மறந்துவிட்டது. எதைச் சாப்பிடுகிறோம் என்று பார்க்காமல், அதில் என்ன இருக்கிறது என்று மட்டும் பார்க்கிற பழக்கம் வந்துவிட்டால் கரடி, கரப்பான்பூச்சி, காண்டாமிருகம் எல்லாம் ஒன்றுதான்.
5.jpg
பேலியோவைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய நியாண்டர் செல்வன், தன் வீட்டில் அவர் சமைக்கிற காட்சியை முன்பெல்லாம் வீடியோ எடுத்துப் போடுவார். காட்டெருமை நாக்குக் கறி, காட்டுப்பன்றிக் குடல் என்று கேள்விப்பட்டிராத நூதன ஜீவஜந்துக்களையெல்லாம் தேடிப் பிடித்து சமைத்துச் சாப்பிடுகிற கலாசாரத்தை இங்கே முதல் முதலில் அறிமுகப்படுத்தியவர் அவர்தான்.

எனக்கு அந்த வீடியோக்களைப் பார்த்தாலே குலை நடுங்கும். உடல் நலன் சார்ந்த அக்கறை மட்டும் பீறிட்டுவிட்டால் மனுஷ குமாரனாகப்பட்டவன் எந்த எல்லைக்கும் தயங்காமல் போவான் என்கிற பேருண்மை அப்போதுதான் புரிந்தது. பேலியோவில் கால் வைத்துவிட்டால் ஒருவேளை நானும் கட்சி மாறிவிடுவேனோ?

ஒரு கணம் யோசித்துப் பார்த்தேன். எனக்கு சிக்ஸ் பேக்கோடு திரிகிற ஆசையெல்லாம் கிடையாது. என்றுமே கிடையாது. பாபா ராம்தேவ் மாதிரி கைகால்களை அஷ்டகோணலாக்கி, உடம்பால் எட்டுப் புள்ளி ஆறு கோடு கோலம் போட்டுப் பார்க்கிற உத்தேசமும் இல்லை. என்றால், என் தேவைதான் என்ன?

எனக்கு நடந்தால் மூச்சு வாங்கக்கூடாது. டாய்லெட் போய்விட்டுக் கழுவிக்கொள்ளக் கையைப் பின்பக்கம் கொண்டு போனால் இடுப்புப் பிராந்தியத்தில் மூச்சுப் பிடிப்பு வரக்கூடாது. ரொம்ப முக்கியம், என் கால் நகங்களை நானே வெட்டிக் கொள்ள வேண்டும். இதைவிட ஓர் அவலம் இருக்க முடியுமா பாருங்கள். கடந்த இருபது இருபத்தி ஐந்து வருடங்களில் ஒருமுறைகூட என் கால் நகங்களை நானே வெட்டிக்கொண்டதில்லை.

உட்கார்ந்த வாக்கில் குனிந்து வெட்டிக்கொள்ள முயற்சி செய்தால் அடி வயிற்றில் இருந்து கழுத்து வரை அமுங்கி, மூச்சு முட்டி, வியர்த்துக் கொட்டிவிடும். காரணம், மத்தியப் பிராந்தியம் அத்தனை சுலபத்தில் மடியாது. உருண்டு திரண்ட என் தொப்பையானது நெஞ்சை அழுத்தி வஞ்சனை புரியும். குனிந்து நிமிர்ந்தால் முதுகுத் தண்டில் யாரோ கெரசின் ஊற்றிப் பற்றவைத்தாற்போல ஆகிவிடும். பெருங்குண்டர்களின் பிரத்தியேகப் பிரச்னைகளைச் சொல்லிப் புரியவைப்பது சிரமம்.
5a.jpg
இம்மாதிரி இம்சைகளில் இருந்து மட்டும் விடுதலை கிடைத்தால் போதும் என்று நினைத்தேன். எனக்கு என் காரியங்களை நானே பார்த்துக்கொள்ள வேண்டும். அட, மலையேற முடியாது என்பதாலேயே என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு திவ்ய தேசத்துக்கு வருஷக்கணக்காகப் போகாமலிருந்திருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

நான் சேவிக்க வேண்டுமென்றால் எம்பெருமான் இறங்கி வந்தால்தான் உண்டு. இதெல்லாம் ஒரு பிழைப்பா என்றால் அது என்னப்பன் இட்டமுடன் என் தலையில் எழுதி வைத்த விதி. எனவே, குறைந்தபட்ச எடை இழப்பு இருந்தாலே நான் திருப்தியாகிவிடுவேன் என்று தோன்றியது. ஒரு பத்துக் கிலோ.

பதினைந்து கிலோ. போதுமே? பி.எம்.ஐக்குப் பொருத்தமான எடையில், போகிற வருகிறவர்களெல்லாம் திரும்பிப் பார்க்கிற விதத்தில் புதுப் பொலிவுடன் உலா வந்து என்ன ஆகப் போகிறது? தேவை, குறைந்தபட்ச சௌகரியம். முடிந்தது கதை. இப்போதுதான் என் நண்பர் சங்கர்ஜி எனது ரத்தப் பரிசோதனை அறிக்கையைப் பார்த்துவிட்டு நான் என்ன சாப்பிடலாம் என்று ஒரு பட்டியல் போட்டுக் கொடுத்தார்.

முன்பே சொல்லியிருக்கிறேன் அல்லவா? பேலியோவில் இளைத்ததோடு மட்டுமல்லாமல், ஒரு பெங்களூர் தக்காளியின் தளதளப்பையும் சேர்த்துப் பெற்ற புண்ணியாத்மா அவர். பத்தல்ல, பதினைந்தல்ல. சைவ பேலியோவிலும் கணிசமாக எடைக் குறைப்பு சாத்தியமே என்று அவர் சொன்னார். சரி, என்ன சாப்பிடலாம்? காலை உணவாக, நெய்யில் வறுத்த பாதாம் ஒரு நூறு.

பாதாமைப் போல் அதி சத்துணவு இன்னொன்று இருக்க முடியுமா என்று தெரியவில்லை. உயர்தரக் கொழுப்பு, உயர்தர புரோட்டின், விட்டமின் ஈ, பயோடின், ரிபோஃப்ளாவின் என்று சொல்லப்படுகிற விட்டமின் பி2, கணிசமாக மக்னீசியம், கொஞ்சம் பொட்டாசியம். இதெல்லாம் இருப்பது கூடப் பெரிதில்லை. பாதாமில் கார்போஹைடிரேட் குறைவு. நூறு கிராம் பாதாம் சாப்பிட்டால் அதில் 22 கிராம் மாவுச் சத்துதான் உண்டு.

அது கொடுக்கும் சுமார் அறுநூறு கலோரியில் மிச்சமனைத்தும் கொழுப்பிலிருந்து கிடைப்பதுதான். அதுவும் பத்தாமல் பசி வந்துவிடக் கூடாதே என்றுதான் அதை நெய்யில் வறுப்பது. நெய்யின் நற்கொழுப்பும் பாதாமின் புனிதக் கொழுப்பும் இணைகிறபோது வெறும் நூறு கிராமிலேயே ஒரு பெரும் விருந்து உண்டு முடித்த திருப்தி கிடைத்துவிடும். ஆச்சா? காலை உணவு பாதாம். மதியம்? இருநூறு கிராம் காய்கறிகள்.

அது தவிர ஒரு நூறு நூற்றைம்பது கிராம் அளவுக்குக் கீரை. பத்தாதா? போடு ஒரு ஐம்பது கிராம் வெண்ணெய். ஒரு கப் முழுக் கொழுப்புத் தயிர். இதில் வயிறு நிறைந்துவிடும். காய்கறிகள் விஷயத்துக்கு வருகிறேன். பூமிக்கு அடியில் விளைகிறவற்றுள் வெங்காயம், பூண்டு தவிர வேறெந்தக் காய்கறியும் கூடாது என்று சங்கர்ஜி சொன்னார். அதாவது கிழங்குகள் அனுமதியில்லை.

அவை தவிர, மேலே விளைகிற காய்களில் பீன்ஸ் வகையறாக்கள் கூடாது. அதாவது பீன்ஸ், அவரை, கொத்தவரங்காய், காராமணி போன்றவை (இதன் காரணத்தைப் பிறகு விளக்குகிறேன்). என்றால் என்ன சாப்பிடலாம்? கத்திரிக்காய், வெண்டைக்காய், முட்டைக் கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி, பூசணிக்காய், புடலங்காய், கோவைக்காய், தக்காளி, முருங்கைக்காய், பாகற்காய், வாழைத்தண்டு, வெள்ளரி, குடை மிளகாய், பீர்க்கங்காய், சுரைக்காய்.

கீரைகளில் பேதமே இல்லை. என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், எதையும் நெய்யில்தான் சமைக்க வேண்டும். பருப்பு சேர்க்கக் கூடாது. எவ்வளவு வேண்டுமானாலும் தேங்காய் சேர்த்துக்கொள்ளலாம். இரவுக்கு இருநூறு கிராம் பனீர். பனீர் டிக்கா, பனீர் புர்ஜி, பனீர் உப்புமா, பனீர் இட்லி, பனீர் வடை என்று பலவிதமான சமையல் சாத்தியங்களை அளிக்கும் கொழுப்புணவு.

நெய் சேர். வெண்ணெய் சேர். போனால் போகிறது, செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் சேர். மற்றபிற எண்ணெய் இனங்கள் எதுவும் கூடாது. பழங்கள் தொடாதே. தானியங்களை அறவே மறந்துவிடு. நூறு நாள் இதைத் தீவிரமாகக் கடைப்பிடித்துப் பார், இளைப்பது சுலபம் என்றார் சங்கர்ஜி. ஜெய் பேலியோ என்று மறுநாள் முதல் ஆரம்பித்தேன்.
 

(தொடரும்)


பேலியோ கிச்சன்

பனீர் தோசை
இருநூறு கிராம் பனீர். ஒரு பிடி தேங்காய்த் துருவல், இரண்டு கரண்டி தயிர். மிக்சியில் போட்டு மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொள்ளலாம். ரொம்ப வேண்டாம். உப்புப் போட்டுக் கலந்து தோசைக்கல்லில் ஊற்றி மிதமான சுட்டில் சுட்டெடுத்தால் பனீர் தோசை தயார்.

என்ன பிரச்னை என்றால் இதில் பேப்பர் ரோஸ்டெல்லாம் முடியாது. மாவு ஊற்றுகிற ஷேப்பில் அப்படியே வேகவிட வேண்டியதுதான். மேலுக்கு வெங்காயம், கொத்துமல்லி, தக்காளியெல்லாமும் போட்டுக்கொள்ளலாம். நெய்யில் வார்த்த பனீர் தோசை பிரமாதமாக இருக்கும். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி இருந்தால் சொர்க்கம்.

www.kungumam.co

  • தொடங்கியவர்

இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

 

பா.ராகவன் - 8

அனுபவத் தொடர்

சைவ பேலியோவின் சுக்லாம் பரதரம் என்பது பாதாம். பொதுவில் நமது சமூகம் இதனை அல்வாவாகவும் கீராகவும் உருமாற்றி உள்ளே தள்ளிப் பழக்கப்பட்டது. இப்படி உருமாற்றம் செய்வதன் நிகர லாபம் என்னவென்றால், எதற்காக நாம் பாதாம் சாப்பிடுகிறோமோ அதன் பலனை அப்படியே காலில் போட்டு மிதித்துத் தேய்த்துவிடுவதுதான். உண்மையில் பாதாம் ஒரு சிறந்த உணவு.
7.jpg
படு தீவிர சைவ உணவாளிகள் பேலியோவுக்கு வந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் முதல் உணவு நூறு கிராம் பாதாம்தான். அசைவர்களுக்கு பாதாம் அவசியமில்லை. அவர்கள் காலையில் மூன்று முதல் ஐந்து முட்டை சாப்பிட்டுவிட்டு ஆபீசுக்குப் போய்விடலாம். சைவத்துக்குத்தான் சாம தான பேத தண்டமெல்லாம். எனவே என்னுடைய டயட் சார்ட்டில் முதல் உணவாக இருந்த பாதாமை எதிர்கொள்ள முதல் நாள் தயாரானேன். ஏற்கெனவே இங்கே சொல்லியிருக்கிறேன். பாதாமை அப்படியே சாப்பிடக்கூடாது.

நன்கு அலசி, இரண்டு மூன்று முறை தண்ணீர் மாற்றி, இருபத்தி நான்கு மணி நேரம் ஊறவைத்து, அதன்பின் நிழலில் உலரப் போட்டுத்தான் பயன்படுத்த வேண்டும். இதற்குக் காரணம், தோலுக்கு மேல் இருக்கிற அழுக்குப் போகவேண்டும் என்பதல்ல. பாதாம் உள்ளிட்ட எல்லா ரகக் கொட்டைகளிலும் (பருப்பு வகை, எண்ணெய் வித்துக்களிலும் கூட) பைட்டிக் ஆசிட் என்றொரு அமிலப்படலம் உண்டு.

இந்த பைட்டிக் ஆசிட் இயற்கையாகத் தாவர உணவுகளுடன் சேர்ந்து வருவது. வராதே என்று தடை போட முடியாது. வந்து சும்மா உட்கார்ந்திருக்குமா என்றால் அதுவும் செய்யாது. உணவுப் பொருள்களில் இருக்கும் கால்சியம், மக்னீசியம், ஸிங்க், இரும்புச் சத்துகளை இது உடம்புக்குள் சேர விடாமல் தடுக்கும். போதாதகுறைக்கு, தாவர உணவுகளில் இது பாஸ்பரஸைச் சேர்க்கும்.

உடம்பு என்ன வெடி மருந்தா தயாரிக்கப் போகிறது, பாஸ்பரஸ் சேர்மானத்துக்கு? அது நமக்குத் தேவையற்ற சமாசாரம். எனவே இம்மாதிரியான இம்சைகளைத் தவிர்க்கும் பொருட்டு பாதாம் உள்ளிட்ட கொட்டை இனங்களை உண்ணுவதற்கு முன்னால் அதிலுள்ள பைட்டிக் ஆசிடை நீக்க வேண்டியது அவசியம். பைட்டிக் ஆசிடை நீக்குவதற்கு எளிதாக இரண்டு வழிகள் இருக்கின்றன.

ஒன்று, நான் குறிப்பிட்ட நீரில் ஊற வைக்கிற வழி. இரண்டாவது முளை கட்ட வைக்கிற வழி. சிலபேர் பாதாமின் தோலை நீக்கிவிட்டால் பைட்டிக் ஆசிட் போய்விடும் என்று சொல்லுவார்கள். தோலைத் தாண்டி உள்ளே போகமாட்டேன் என்று பைட்டிக் ஆசிட் என்ன சத்தியம் செய்து கொடுத்துவிட்டா வந்து உட்கார்ந்திருக்கிறது? அதெல்லாம் சும்மா.

முழுதாக ஒரு நாள் பாதாம் ஊறித்தான் தீரவேண்டும். இடையே இரண்டு மூன்று முறை தண்ணீரை மாற்றித்தான் ஆகவேண்டும். அதன்பிறகு உலர்த்தி எடுத்து வாணலியில் போட்டு வறுத்தால் முடிந்தது. முதல் நாள் (மறக்க முடியுமா! ஜூலை 23, 2016) பாதாமை வறுக்கத் தொடங்கியபோது எனக்குப் பெரும் குழப்பம். எவ்வளவு நேரம் வறுக்க வேண்டும்? அடுப்பில் தீ எந்த அளவில் இருக்க வேண்டும்? இரண்டுமே எனக்குத் தெரியாது.

சும்மா வாணலியில் போட்டு வறுக்க ஆரம்பித்தேன். பதினைந்து நிமிடங்கள் இடைவிடாமல் வறுத்தபோது மெலிதாக ஒரு மணம் வந்தது. அடடே இது பிரமாதமாக இருக்கும் போலிருக்கிறதே என்று மேலும் பதினைந்து நிமிடங்களுக்கு வறுத்தேன். இப்போது பாதாம் மெல்ல கருகத் தொடங்கியது. ஆனால், முன்னைக் காட்டிலும் வாசனை தூக்கியடித்தது. நன்கு வறுபட்டால் கரகரவென்று மெல்வதற்கு நன்றாக இருக்கும் என்று நினைத்து சுமார் நாற்பது நிமிடங்களுக்கு அதை வறுத்துத் தீர்த்தேன்.

இந்த வறுத்த பாதாமின் தலையில் ஒரு ஸ்பூன் நெய்யைக் கொட்டி, மேலுக்கு உப்பு, மிளகுத் தூளையும் போட்டுக் கலந்து படு ஆர்வமாகச் சாப்பிட உட்கார்ந்தேன். வாசனையெல்லாம் நிகரே சொல்ல முடியாத ரகம்தான். ஆனால், ஒன்றை வாயில் போட்டுக் கடித்தால் வலி உயிரே போய்விடும் போலிருந்தது. உண்மையிலேயே ஒரு கூழாங்கல்லைக் கடிக்கிற உணர்வு ஏற்பட, எனக்கு திகிலாகிவிட்டது.

என்னடா இந்த பாதாம் சாப்பிடுவது ஒரு பெரிய துவந்த யுத்தமாக இருக்கும் போலிருக்கிறதே என்று கலங்கி நின்றேன். மறுநாள் நாற்பது நிமிடங்கள் அல்லாமல் முப்பது நிமிடங்கள் மட்டும் வறுத்தேன். அதே பதம்தான் வந்தது. என்ன முயற்சி செய்தாலும் ரசித்துச் சாப்பிட முடியவில்லை. கடித்துக் கூழாக்கிவிட்டால் ருசிக்கத்தான் செய்தது. ஆனால், கடிப்பது கண்ணராவியாக இருந்தது.

இரு வார இடைவெளியில் ஐந்து நிமிடம், பத்து நிமிடம், பதினைந்து நிமிடம், இருபது நிமிடம் என்று வறுபடும் நேரத்தை மாற்றி மாற்றி அமைத்துப் பார்த்த பிறகு குத்துமதிப்பாக அதன் சூட்சுமம் புரிந்தது. அடுப்பை முழு சிம்மில் வைத்து, வாணலியைத் தனியே காயவிடாமல், அடுப்பில் ஏற்றிய உடனேயே பாதாமையும் போட்டு, பன்னிரண்டு நிமிடங்கள் வறுத்தால் போதும். ரசித்து ருசித்துச் சாப்பிடுகிற பதத்துக்கு பாதாம் தயாராகிவிடும். நடுவே கொஞ்சம் கூடத் தீயை அதிகரிக்கக்கூடாது. வறுப்பதையும் நிறுத்தக் கூடாது.

இந்த சூட்சுமத்தைக் கண்டறிந்தபோது எனக்குப் பரவசமாகிவிட்டது. என்னைப் போலவே பாதாமால் பல்லடி பட்ட உத்த மர்களுக்கு இந்நற்செய்தியை உடனே அறிவித்தேன். பேலியோவுக்கு வரும் என்னைப் போன்ற வீர வெஜிடேரியன்கள் பாதாம் கடிக்கிற பயத்திலேயே பின்னங்கால் பிடரியில் பட, அலறியோடிக் கொண்டிருந்த சங்கதியெல்லாம் அப்போதுதான் எனக்குத் தெரிய ஆரம்பித்தது.

சிலபேர் கர்ம சிரத்தையாக பாதாமில் என்னவெல்லாம் சத்து இருக்கிறது என்று பார்த்துவிட்டு, அதற்குச் சற்றேறக்குறைய நிகராக இருந்தால் என்ன தப்பு என்று வேர்க்கடலை சாப்பிட ஆரம்பித்ததையும் கவனித்தேன். ஆனால், பேலியோவில் வேர்க்கடலை கிடையாது. ரொம்ப பெரிய வியாக்கியானமெல்லாம் வேண்டாம். எதை நாம் பச்சையாக உண்டால் உடம்புக்கு ஒன்றும் செய்யாதோ, அதை மட்டும்தான் பேலியோ அனுமதிக்கும்.

ஓ, அதற்கென்ன, நான் வேர்க்கடலையைப் பச்சையாக உண்பேனே என்பீரானால் காலக்கிரமத்தில் உடம்புக்கு வேண்டாத வியாதி வெக்கைகள் வந்து சேர வாய்ப்புண்டு. வேர்க்கடலை என்பது நிலத்துக்கு அடியில் விளைவது. இம்மாதிரிப் பயிர்களுக்குத்தான் நோய்த் தாக்குதல் அதிகம். தவிர, வேர்க்கடலை என்பது கொட்டையல்ல. அது லெகூம்வகையைச் சேர்ந்தது. இதெல்லாம் போக, கணக்கு வழக்கில்லாமல் கடலை போட்டால் ஈரல் கெடும் அபாயமும் உண்டு.

வேர்க்கடலையிலும் சத்துகள் அதிகம்தான். பேலியோ எதிர்க்கும் கார்போஹைடிரேட்டும் அதில் குறைவுதான் (100 கிராமுக்கு 16 கிராம்). நமக்கு சாப்பிடுவது சுலபம், ருசிக்கு ருசி - ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் வேண்டாத வியாதிகளை விலை கொடுத்து வாங்குவது தவறல்லவா? எப்போதோ ஒரு சமயம் வேர்க்கடலை சாப்பிட்டால் ஒன்றும் உயிர் போய்விடாது. ஆனால், தினசரி ஒருவேளை உணவாக நூறு கிராம் வேர்க்கடலை சாப்பிடுவது கண்டிப்பாக பேஜார்.

(தொடரும்)
7a.jpg
பேலியோ கிச்சன்

பாதாம் பட்டர்

பாதாம் வறுத்துச் சாப்பிட போரடிக்கிறது என்பவர்கள் பாதாம் பட்டரை முயற்சி செய்யலாம். செய்வது எளிது. ஊறவைத்து, உலரவைத்த பாதாமை சும்மா ஒரு ஐந்து நிமிடங்கள் வாணலியில் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதை அப்படியே மிக்சியில் போட்டு ஓடவிட்டால் இரு நிமிடங்களில் பொடியாகிவிடும். மூடியைத் திறந்து ஸ்பூனால் தள்ளிவிட்டு மீண்டும் ஓட்டவும்.

இரண்டு மூன்று முறை இப்படி ஸ்பூனால் தள்ளிவிட்டு சுமார் ஆறேழு நிமிடங்களுக்கு மிக்சியை ஓடவிட்டுக்கொண்டே இருந்தால் பாதாம் தானே எண்ணெய் விட்டுக்கொண்டு பேஸ்ட் போலத் திரண்டு வரும் (தண்ணீரெல்லாம் வேண்டாம். வெறும் பாதாம்). இது அல்வா பதத்துக்கு வரும்போது எடுத்துவிடுங்கள். இதுதான் பாதாம் பட்டர். மணத்துக்கு ஒரு ஏலக்காய் பொடி செய்து போட்டால் போதும். உண்பதும் சுலபம், ருசி, உலகத்தரம்.

www.kungumam.co.

  • தொடங்கியவர்

இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

 

- பா.ராகவன்

அனுபவத் தொடர் - 9

வெஜ் பேலியோவில் பாதாம் பிள்ளையார் என்றால் பனீர்தான் நவக்கிரகம் என்பார்கள். என்னைப் பொறுத்தவரை பனீருக்கு முன்னால் காய்கறிகளையே முன்னிறுத்த விரும்புவேன். எனக்கு அளிக்கப்பட்டிருந்த டயட் சார்ட்டில் மதிய உணவாக சுமார் முன்னூறு கிராம் காய்கறியும் ஐம்பது கிராம் வெண்ணெய்யும் இருந்ததை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன் அல்லவா?
5.jpg
மதியப் பசி தீர அது போதும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், முதல் நாள் உண்ண உட்காரும்போதுதான் வயிறானது தனது விசுவரூப தரிசனத்தைக் காட்டத் தொடங்கியது. ஒரு விதத்தில் எனக்கு ஞானம் மாதிரி என்னமோ ஒன்று சித்திக்கத் தொடங்கியதும் அங்கேதான். உண்மையில் முன்னூறு கிராம் காய்கறியுடன் ஐம்பது கிராம் வெண்ணெய் என்பது கனத்த உணவுதான்.

ஏனெனில் ஐம்பது கிராம் வெண்ணெய்யிலேயே 355 கலோரி கிடைத்துவிடுகிறது. அதுவும் முழுதும் கொழுப்பு கலோரி. சர்க்கரை (அல்லது கார்போஹைடிரேட்) சுத்தமாகக் கிடையாது. கணிசமாக ஏ, டி வைட்டமின்கள், பொட்டாசியம், சோடியம் வகையறாக்கள் எல்லாம் வெண்ணெய்யிலே உண்டு. காய்கறியில் பெரிய கலோரி கிடையாது என்றாலும் சமைப்பதற்கு நெய் அல்லது வெண்ணெய்தான் உபயோகப்படுத்தப்படுகிறது என்பதால் அதிலிருந்து கொஞ்சம் சேரும். இருக்கவே இருக்கிறது ஒரு கப் தயிர்.

எப்படிப் பார்த்தாலும் ஒரு மதிய உணவுக்குப் போதுமான கலோரிகள் இதில் கிடைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் அதைச் சாப்பிட உட்கார்ந்தபோது என்னமோ ஸ்நாக்ஸ் சாப்பிடுகிற உணர்வுதான் இருந்ததே தவிர, உணவு உட்கொள்வது போல இல்லை. காரணம் எளிது. நமக்கெல்லாம் தட்டு நிறைய சாதம் போட்டு சாம்பார் ஒரு ரவுண்டு, ரசம் ஒரு ரவுண்டு, தயிர் ஒரு ரவுண்டு என்று வளைத்துக்கட்டுவதே வழக்கம்.

காய் என்றால் உருளைக்கிழங்கு ரோஸ்ட் அல்லது சேப்பங்கிழங்கு ரோஸ்ட் என்றுதான் புத்தி முதலில் சொல்லும். எண்ணெய்யில் குளித்த கத்திரிக்காய், வாழைக்காய், டீப் ஃப்ரை செய்யப்பட்ட வெண்டைக்காய் எல்லாம் கூட அதற்கு அடுத்த இடம்தான். கூட்டு என்றாலோ, அது பருப்பில் காணாமல் போன காய்கறிகளின் அணிவகுப்பு. ஆனால், பேலியோவில் பருப்பு கிடையாது. எண்ணெய்? அது தீட்டு. தொடப்படாது. இந்த டீப் ஃப்ரை, பொரித்தெடுத்தல், ரோஸ்ட் பண்ணுதலெல்லாம் பேலியோவுக்கு ஆகாத காரியம்.
5a.jpg
எனவே, அந்த முதல் நாள் நான் உண்ட காய்கறி உணவானது, ஆடு மாடுகள் தின்பதற்குச் சற்று மேம்பட்ட தரத்தைச் சேர்ந்தது என்றுதான் சொல்லவேண்டும். ஒரு ஸ்பூன் நெய்யில் தாளித்த (கடுகு கிடையாது. சீரகம், மிளகுப்பொடி மட்டும்) முட்டைக்கோஸ் பொரியல். மேலுக்கு ஒரு பிடி தேங்காய் தூவினால் முடிந்தது கதை. அட ஆண்டவா! நான் முட்டைக் கோஸைக்கூட பருப்புசிலி ஸ்டைலில் உண்ண விரும்புகிறவனல்லவா? எனக்கா இந்த அமிலச் சோதனை?

அன்றைய உணவில் ஒரு கீரையும் இருந்தது. முளையோ அரையோ, அது நினைவில்லை. பருப்பே காட்டாமல் வெறுமனே தேங்காய் அரைத்துவிட்ட கீரைக் கூட்டு. என் பிரத்தியேக உணவுத்துறை அமைச்சர் பிரமாதமாகச் சமைக்கக்கூடியவர்தாம். இந்த முட்டைக்கோஸ், கீரை உருப்படிகளும் அதனளவில் சிறப்பாகத்தான் வடிவம் பெற்றிருந்தன. ஆனாலும் தொட்டுத் தின்ற ஐட்டங்களைத் தட்டு நிறைய வைத்துக்கொண்டு சாப்பிடுவது ஒரு மாதிரி இருந்தது.

ஒரு வத்தக் குழம்பு சாதத்தின் ருசியோடு இதனை ஒப்பிட முடியுமா! ஒரு புளியோதரை தரத்துக்கு உறை போடக் காணுமா! என் வீட்டில், கேவலம் ஒரு தயிர் சாதம்கூட உலகத்தரத்தில் இருக்கும். அதில் பொரித்த அப்பளம் ஒன்றிரண்டை ஊறவைத்து மேலுக்கு ஒரு கரண்டி முந்தைய நாள் வைத்த வத்தக் குழம்பைக் கொட்டிப் பிசைந்து உண்டால் தேவாமிருதமாக இருக்கும். எம்பெருமானே, எல்லாம் பழங்கனவா! எனக்கு உறுதியாகத் தோன்றியது.
5b.jpg
இந்த உணவு எனக்கு நாலு மணிக்கெல்லாம் பசியைக் கொடுத்துவிடப் போகிறது. அப்போது என்ன சாப்பிடுவது? ஏனெனில், எப்போதும் சாப்பிட்டால் வயிறு திம்மென்று ஆகிவிடும். அன்று அப்படி இல்லை. மிகவும் லேசாக உணர்ந்தேன். லேசு என்றால் ஈர்க்குச்சி லேசு. நமக்கு இதெல்லாம் ஆகாத காரியமல்லவா! இந்தக் கவலையிலேயே சாப்பிட்டு முடித்தேன். ஆனால், நடந்தது வேறு. எனக்கு அன்றிரவு ஒன்பது மணி வரை பசி தெரியவில்லை. இது வாழ்நாளில் அதற்குமுன் நிகழாதது.

சாதாரணமாக நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை எனக்குப் பசிக்கும். ஆனால், அந்த மதிய உணவைக் கட்டியாண்ட வெண்ணெய்யானது நின்று ஆடத் தொடங்கியிருந்தது! கார்போஹைடிரேட் இல்லாத பண்டம். தவிர நான் உட்கொண்ட முட்டைக் கோஸும் சரி, கீரையும் சரி, மிக மிகக் குறைந்த அளவு கார்போஹைடிரேட் உள்ளவை. பத்து கிராமுக்கும் கீழே. ஒரு கப் தயிர் சாப்பிட்டிருந்தேன். அதிலும் மூணரை கிராம் கார்போஹைடிரேட் மட்டுமே உண்டு.

எப்படிப் பார்த்தாலும் எனது அந்த உணவில் இருந்த மொத்த கார்போஹைடிரேட் முப்பது கிராமுக்கு மிகாமல் இருந்தது. ஆனால், கொழுப்பு கணிசம். கார்போஹைடிரேட் எப்படி ஓர் எரிபொருளோ, அதே மாதிரிதான் கொழுப்பும். கார்ப் அதிகமுள்ள உணவைச் சாப்பிடும்போது சீக்கிரம் பசிக்கும். அதிக முறை பசிக்கும். அளவுக்கு மீறி உண்ண வைக்கும். அப்படி மீறும் அளவே குண்டடிக்க வைக்கும். மாறாக, கொழுப்பை உண்ணும்போது அளவுதாண்டி உண்ணமாட்டோம். உண்ண முடியாது என்பதுதான் விஷயம்.

தவிர, அது போய் சேகரமாகிக் கொண்டிராமல், காலக்கிரமத்தில் சக்தியாக உருமாற்றம் கண்டுவிடுகிறது. பசி தெரியாமல் செயல்பட வைக்கிறது. விட்டமின்கள், மினரல்களுக்காகக் கொஞ்சம் காய்கறி, கீரை சாப்பிட்டேன் பாருங்கள்! அதிலுள்ள கார்போஹைடிரேட்தான் அடுத்த வேளை என்று ஒன்று உள்ளதையும் அப்போது சற்று பசியையும் சுட்டிக் காட்டும்.

அன்றிரவு ஒரு சிந்தனைச் சிற்பிபோல யோசிக்க ஆரம்பித்தேன். மதியம் ஒரு மணிக்கு உண்டவன், மீண்டும் ஒன்பது மணிக்குத்தான் பசியை உணர்ந்திருக்கிறேன். என்றால், உடம்புக்குள்ளே என்னதான் அப்படி நடந்திருக்கும்? முதல் நாள் வரை என் வாழ்க்கை விதமே வேறு. மதிய உணவுக்குப் பிறகு மாலைப் பசி என்ற ஒன்றைத் தணிப்பதற்கு நாலு பஜ்ஜி அல்லது நூறு கிராம் வெங்காய பக்கோடா அல்லது நாலு லட்டு, இரண்டு தேங்காய் போளி என்று என்னத்தையாவது தின்றிருப்பேன்.

ஒன்றுமே கிடைக்காவிட்டால் ஒரு பாக்கெட் நல்ல நாள் பிஸ்கட்டாவது காலியாகியிருக்கும். தவறாமல் ஒரு டிகிரி காப்பி இருக்கும். இன்றைக்கு ஏன் இதெல்லாம் வேண்டியிருக்கவில்லை? இத்தனைக்கும் ஸ்நாக்ஸ் கொறிப்பது போலத்தான் மதிய உணவை உட்கொண்டேன். எனக்குக் கூடப் பசி மறக்குமா? யோசித்தபடி இரவு உணவுக்குத் தயாரானேன். அன்று முதல்முறையாக என் வாழ்வில் நான் பன்னீர்செல்வனாகவிருந்தேன்.

(தொடரும்)
5c.jpg
பேலியோ கிச்சன்

பேலியோ அவியல்


கேரட் உள்பட கிழங்குகள் கூடாது. வாழைக்காய் கூடாது. பீன்ஸ், அவரை வகையறாக்கள் கூடாது. எனவே, மிச்சமிருக்கும் என்ன காயை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். என் பட்டியல் இது. கத்திரிக்காய், குடைமிளகாய், முருங்கைக்காய், காலி ஃப்ளவர், பூசனிக்காய், சௌசௌ, வெள்ளரி. காய்கறிகளைத் தனியே வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். நாலு பிடி தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் வகையறாக்களை மிக்சியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.

அது வெந்து, இது அரைத்து ஆனதும் அதன் தலையில் இதனைக் கொட்டி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கிளறவும். தீ மிதமாக இருக்கட்டும். இறக்குவதற்கு முன்னால் தேங்காய் எண்ணெய், கொஞ்சம் கொத்துமல்லி கருவேப்பிலையைக் கசக்கிப் போட்டு அப்படியே மூடிவைத்துவிட்டால் அவியல் தயார். விரும்பினால் தயிர் சேர்க்கலாம். நான் சேர்ப்பதில்லை.

kungumam.co.

  • தொடங்கியவர்

இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

பா.ராகவன் - 10

வெஜ் பேலியோவில் உங்களுக்கு கனத்த கலோரி தரக்கூடிய நம்பர் ஒன் நயம் உணவு பனீர். வெறும் கலோரிக்காக மட்டுமல்லாமல் ப்ரோட்டீன் கொள்முதலுக்கும் இதுவே மூலாதார வாசல். இந்த சைவ உணவாளர்களுக்கு என்னவெல்லாம் பிரச்னை பாருங்கள். நானொரு ஆட்டையோ கோழியையோ வளைத்துக்கட்டுகிறவனாக இருந்தால் ப்ரோட்டீன் என்பதைப் பற்றி யோசிக்கக்கூட வேண்டாம். உள்ளே போகிற போஜன பலகாரங்களில் அது அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொண்டால் போதும்.
7.jpg
அதையெல்லாம் தொடமாட்டேன் என்று அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டு காய்கறிகளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டுவிட்டதால்தான் ப்ரோட்டீனைப் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே பார்த்தோமல்லவா? மனித ஜீவிதம் சொகுசாக நடைபெற வேண்டுமானால் உடம்பு இயந்திரத்துக்கு ஐந்து விதமான மூல சக்திகள் அவசியம். கார்போஹைடிரேட், கொழுப்பு, ப்ரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள். இந்த ஐந்தில் கார்போஹைடிரேட் இல்லாவிட்டால் பிராணன் போய்விடாது.

அதனால்தான் அதை பேலியோவில் கழித்துக் கட்டுகிறோம். கொழுப்பு இருந்தே தீரவேண்டியது. ப்ரோட்டீனும் இருந்தே தீரவேண்டியது. வைட்டமின்களும் மினரல்களும் அவசியம். ஆனால், அளவு குறைந்தால் அதை சப்ளிமெண்டுகள் (மாத்திரைகள், டானிக், ஊசி வகையறா) மூலம் எடுத்துக்கொண்டு விடமுடியும். ப்ரோட்டீனுக்கும் சப்ளிமெண்டுகள் இருக்கின்றன என்றாலும் அதனால் பெரிய பிரயோஜனங்கள் இருக்காது. உணவின் மூலம் உள்ளே போகிற ப்ரோட்டீன்தான் உயிருள்ள அளவும் உதவும்.
7a.jpg
ஆக, ப்ரோட்டீன் முக்கியம். வெஜ் பேலியோவில் அது இரண்டு இனங்களில்தான் அதிகமுண்டு. ஒன்று பாதாம். இன்னொன்று பனீர். இரண்டிலும் நூறு கிராம் அளவுக்குத் தோராயமாக இருபது கிராம் ப்ரோட்டீன் தேறிவிடும். வேண்டிய அளவுக்குக் கொழுப்பு, வேண்டிய அளவுக்குப்ரோட்டீன் இரண்டும் இருக்கிற இரண்டே வெஜிடேரியன் பண்டங்கள் இவைதான் என்பதால்தான் பாதாமும் பனீரும் பேலியோவை ஆள்கின்றன.

பிஸ்தா, வால்நட் போன்ற பிற கொட்டைகள், பால் பொருள்கள் அனைத்திலுமே கொழுப்பும் ப்ரோட்டீனும் உண்டுதான். என்ன சிக்கல் என்றால் ஒரு மனிதன் எத்தனை கிலோ எடையில் இருக்கிறானோ, சராசரியாக அதே அளவுக்கு கிராம் கணக்கில் அவனுக்கு ப்ரோட்டீன் உள்ளே போகவேண்டும்.  தொல்லை தராத உதாரணமாக என்னையே எடுத்துக்கொள்ளலாம். பேலியோ தொடங்குவதற்குமுன் நான் திருமண் சூர்ணத்தை ஞாபகப்படுத்துகிற மாதிரி 111 கிலோ எடையில் இருந்தேன்.

அந்த எடைக்கு நான் தினமும் குறைந்தது 100 கிராம் ப்ரோட்டீன் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். முடிந்ததா என்றால், யோசித்தே பாராமல் சொல்லிவிடலாம், கண்டிப்பாக இல்லை. நான் தின்றதெல்லாம் டிரான்ஸ் ஃபேட் நிறைந்த கெட்ட பலகாரங்கள். எல்லாவற்றையும் என்ன எண்ணெய்யில் பொரித்தானோ என்னமோ. எத்தனை முறை பொரித்தெடுத்த எண்ணெய்யோ, அதுவும் தெரியாது. ப்ரோட்டீனை விடுங்கள். அதில் நல்ல கொழுப்பும்கூடக் கிடையாது.

வெறும் மாவுச் சத்தும் டிரை க்ளிசரைட் என்னும் கெட்ட கொழுப்பை உற்பத்தி செய்யக்கூடிய வில்லத்தனம் கொண்ட வஸ்துக்களும்தான் பிரதானமாக உண்டு. தினசரி உணவில் இருந்த பருப்பு, காய்கறிகள், கொஞ்சம் நெய், பால், தயிர் மூலமாக ஓரளவு ப்ரோட்டீன் உள்ளே போயிருக்கும். என்னமோ என் நல்ல நேரம், பெரிய உடல் உபாதைகள் வராமல் நாற்பத்தி ஐந்து வருடங்களை ஓட்டிவிட்டேன். விழித்துக்கொண்ட போதுதான் நான் உண்டவற்றின் விபரீதமே எனக்குப் புரிந்தது.

பேலியோ எனக்குச் சொல்லிக் கொடுத்த முதல் பாடம் இதுதான். உணவென்றால் அதில் இரண்டு முக்கியம். ஒன்று கொழுப்பு. மற்றொன்று ப்ரோட்டீன். ஒரு வகையில் கொழுப்பைக் காட்டிலுமே ப்ரோட்டீன் அதி முக்கியம் என்பேன். கார்போஹைடிரேட்டுக்கு மாற்றாகத்தான் நாம் கொழுப்பை இங்கே முன்வைக்கிறோம். அந்த மாற்றத்தில் ஆட்டம் கண்டுதான் உடல் எடை சரிய ஆரம்பிக்கிறது. அப்படி எடை இறங்கும்போது தசை தொளதொளத்து விடும் அபாயம் இருக்கிறது.

அது நிகழாதிருக்க முதற்கண் ப்ரோட்டீன் சரியான அளவில் உணவில் சேர வேண்டும். ஆனால், இதுவல்ல முக்கியக் காரணம். பிறந்தது முதல் கார்போஹைடிரேட் உணவுகளை மட்டுமே உட்கொண்டு பழகிவிட்ட தேகம் நம்முடையது. இப்போது ஒரு மாற்றம் கொண்டு வருகிறோம். நல்ல மாற்றம்தான் என்றாலும் உடம்பு அதைப் புரிந்துகொள்ள வேண்டுமல்லவா? அதற்கொரு அவகாசம் உண்டல்லவா? மனித மூளையின் செயல்பாட்டுக்கு (லீவு கிடையாது, ப்ரேக் கிடையாது என்பதை நினைவில் கொள்ளவும்) ஒரு நாளைக்கு 240 கிராம் கார்போஹைடிரேட் தேவை என்று பொதுவாகச் சொல்லுவார்கள்.

இதை கலோரி கணக்கில் சொல்லுவதென்றால் சுமார் 550 - 600 கலோரிகள். பேலியோவில் நாம் மொத்தமாக எடுக்கப் போவதே நாற்பது, நாற்பத்தி ஐந்து கிராம் கார்போஹைடிரேட்தான். எனவே நமது மூளை சர்வ நிச்சயமாக க்ளூக்கோஸால் இயங்கப் போவதில்லை. சக்தியைக் கொழுப்பில் இருந்தும் ப்ரோட்டீனில் இருந்தும்தான் அது பெற்றாக வேண்டும். இதனால்தான் மூலாதார சக்திகளான கொழுப்பும் ப்ரோட்டீனும் அத்தனை முக்கியம் என்று சொன்னேன்.

சரி, போதிய அளவுக்கு ப்ரோட்டீன் உள்ளே போகவில்லை என்றால் என்ன ஆகும்?
ஒன்றும் ஆகாது. ஏற்கெனவே உடம்புக்குள் சேகரமாகியிருக்கும் அமினோ அமிலங்களில் இருந்து (ப்ரோட்டீனில் ஒன்பது வித அமினோ அமிலங்கள் உள்ளன) தேவையானதை உடம்பே உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும். இப்படி சேமிப்பெல்லாம் கரையத் தொடங்கினால் என்ன ஆகும்? உடம்பு தொளதொளத்துப் போகும்.  இதுவே கொழுப்பைக் கொஞ்சம் குறைவாக எடுத்துக்கொண்டால் பிரச்னை இல்லை.

ஏனெனில் சேமிப்புக் கொழுப்பில் இருந்துதானே உடம்பு சக்தி உற்பத்தி செய்யப் போகிறது? அந்த சொத்து கரைந்தால் நல்லது தானே? நமக்கு உடம்புக் கொழுப்பு கரைய வேண்டும். அதே சமயம் கன்னம், மூஞ்சியெல்லாம் தொங்கிப் போய்விடவும் கூடாது என்றால் இதுதான் வழி. சரியான அளவு ப்ரோட்டீன். பனீரைப் பற்றிப் பேசத் தொடங்கி ப்ரோட்டீனுக்குத் தாவிவிட்டோம். நல்லதுதான்.

இந்த டயட் எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இதை இப்போதே தெரிந்து கொண்டுவிடுவது உதவிகரமாக இருக்கும். எனக்கு இரவு உணவாக இருநூறு கிராம் பனீர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்தப் பனீரைப் பலபேர் வீட்டிலேயே தயாரிக்கவெல்லாம் செய்கிறார்கள். அதென்னமோ பாலைக் காய்ச்சி, எலுமிச்சம் பழம் அல்லது வினிகர் சேர்த்துத் திரியவிட்டு, வடிகட்டி... என்னமோ சொல்லுவார்கள்.

நமக்கு எதற்கு அந்த வம்பெல்லாம்? பனீர் ஆவினில் கிடைக்கிறது. தனியார் பனீர் பாக்கெட்டுகளும் உண்டு என்றாலும் நான் அந்தப் பக்கம் போவதில்லை. விலை அதிகம் என்பது மட்டுமல்ல காரணம். நீண்ட நாள் கெடாதிருக்க என்னத்தையாவது போட்டுத் தொலைத்திருப்பான் என்கிற பயமே காரணம். இருநூறு கிராம் பனீரில் ஐம்பது கிராம் கொழுப்பும் நாற்பது கிராம் ப்ரோட்டீனும் கிடைத்துவிடுகிறது. வேறு எதில் இந்த சௌகரியம் உண்டு சொல்லுங்கள்?
 

(தொடரும்)


பேலியோ கிச்சன் பனீர் மிண்ட் மரிஜ்வானா

இது புதினாவால் புனிதப்படுத்தப்படும் உணவு. எனவே தேவை இரண்டு பிடி புதினா. அதற்குத் துணையாக ஒரு பிடி கொத்துமல்லி. இதோடு இரண்டு தக்காளி, ஒரு இஞ்ச் இஞ்சி, ஒரு பச்சை மிளகாய், எட்டு கருவேப்பிலை, அரை மூடி எலுமிச்சை, இருபத்தி ஐந்து கிராம் சீஸ். மேற்படி உப பொருள்களை மிக்சியில் போட்டு அரைக்கவும். பாதி அரைந்ததுமே உப்புப் போட்டு மீண்டும் அரைக்கவும். ஐஸ் க்ரீம் பதம் வந்தால் போதும். எடுத்து எலுமிச்சையைப் பிழிந்துவிடவும்.

பிறகு அடுப்பு, வாணலி, ஐம்பது கிராம் வெண்ணெய். நாலு கடுகு போட்டுத் தாளித்துவிட்டு பனீர் துண்டுகளைப் போட்டு வதக்கவும். பாதி வதங்கியதும் சும்மா ரெண்டு சிட்டிகை உப்பு. கிளறிவிட்டு, மேற்படி ஐஸ்க்ரீம் பதத்து புதினாக்கரைசலை இதன் தலையில் கொட்டவும். தளதளவென்று கொதிக்க ஆரம்பிக்கும். அடுப்பு சிம்மில் இருக்கட்டும். இந்தக் கொதியெல்லாம் அடங்கி, புதினா பனீரோடு இரண்டறக் கலக்கும்வரை விடாதீர்.

முழுக் கரைசலும் பனீரில் ஊறி, பனீரின் நிறமே முழுப் பச்சையாகிவிடும். அதுதான் கணக்கு. இதுவரை வெளியே எடுத்து வைத்திருந்த சீஸானது, ஃப்ரிட்ஜ் இல்லாத செட்டியார் கடை ஊத்துக்குளி வெண்ணெய் பதத்துக்கு வந்திருக்கும். அதை எடுத்து வழித்துப் போட்டு ஒரு கிளறு. முடிந்தது. இந்த பனீர் மிண்ட் மரிஜ்வானா அபார ருசி மிக்கது. நான் ஆசாரமாக வெங்காயம் பூண்டு சேர்க்காமல் சொல்லியிருக்கிறேன். அதையும் சேர்த்தால் ருசி இன்னும் அள்ளும். 

http://www.kungumam.co.in/

  • தொடங்கியவர்

வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

- பா.ராகவன்

பனீர், பாதாம், காய்கறிகள், வெண்ணெய், சீஸ், நெய், தேங்காய் எண்ணெய். இன்னும் என்ன? ஒரு ராஜ செட்டப் தயாராகிவிட்டதல்லவா? பேலியோவைத் தொடங்கிவிட வேண்டியதுதான்.  உலகிலுள்ள சகல ஜீவாத்மாக்களைக் காட்டிலும் எம்பெருமான் எனக்கு சில சொகுசு சௌகரியங்களைக் கொடுத்திருக்கிறான். அதிலொன்று எனக்கு வாய்த்த குடும்ப இஸ்திரி. இதை இங்கே குறிப்பிடுவதற்கு ஒரு காரணமுண்டு. ரொம்ப ஆர்வமாக பேலியோ ஆரம்பிக்கும் பலபேர் எண்ணி ஏழெட்டு நாளில் ஆட்டத்துக்கு வரலை என்று ஒதுங்கிக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். 
2.jpg
எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட நண்பர் ஒருவருக்கு நீரிழிவு அதன் உச்சத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. மாத்திரையெல்லாம் போதாமல், இருவேளை இன்சுலின் ஊசி தரத்து நீரிழிவு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எப்படியாவது அதிலிருந்து விடுதலை பெறவேண்டுமென்று விரும்பி வந்து, பேலியோவைப் பற்றித் தெரிந்துகொண்டு தமது உணவு முறையை மாற்றிக்கொண்டு சாதகத்தை ஆரம்பித்தார். நாலைந்து நாளில் ரிசல்ட்டும் அவருக்குத் தெரிய ஆரம்பித்தது. ‘நம்பவே முடியல சார். ஃபாஸ்டிங், பிபி ரெண்டுமே கணிசமா குறைஞ்சிருக்கு சார்’ என்று சந்தோஷமாகச் சொல்லவும் செய்தார்.

ஆனால் ஒரு வாரத்துக்குப் பிறகு ஆள் எங்கே போனார் என்றே தெரியவில்லை. விசாரித்ததில் எனக்குக் கிடைத்த தகவல், அவரது மனைவி இந்த உணவைச் சமைக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார் என்பதுதான். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது எனக்கு. ஏன், என்ன ஆயிற்று அவருக்கு? இத்தனைக்கும் நண்பருடன் பேசும்போது அவரது மனைவியையும் அருகே வைத்துக்கொண்டுதான் பேசினேன். அவர் என்ன சாப்பிடலாம், எப்படிச் சாப்பிடவேண்டும், எதெல்லாம் சாப்பிடக் கூடாது, இதைச் சாப்பிடுவதால் என்ன ரிசல்ட் வரும், ஏன் அது வருகிறது

 ஒன்று விடாமல் தெளிவாக எடுத்துச் சொல்லித்தான் அனுப்பியிருந்தேன். ஆனாலும் ஏன் அவர் சமைத்துத்தர மறுத்துவிட்டார்?  காரணம் இதுதான். அந்தப் பெண்மணி வழக்கமாகச் செல்லும் மருத்துவரிடம் போய் இதைப் பற்றிப் பேசியிருக்கிறார். கணவருக்கு ரத்த சர்க்கரை அளவு குறைய ஆரம்பித்திருக்கிறது. தினசரி ரத்தப் பரிசோதனை செய்து பார்க்கும்போது இது உறுதியாகத் தெரிகிறது. இந்த ரீதியில் எப்போது அவர் மாத்திரையை முற்றிலுமாக நிறுத்த முடியும் என்று கேட்டிருக்கிறார். கொஞ்சம் யோசித்துவிட்டு டாக்டர் சொன்ன பதில்: ‘சர்க்கரை அளவு நார்மலாகிவிடும்தான்.
2a.jpg
ஆனால் இத்தனைக் கொழுப்பு சாப்பிட்டால் உங்கள் கணவர் கூடிய சீக்கிரம் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிடுவார். அவர் சர்க்கரையோடு இருப்பது பரவாயில்லையா? அல்லது, சர்க்கரை வியாதி தீர்ந்து, இறந்தால் பரவாயில்லையா?’ மருத்துவம் ஒரு மகத்தான சேவை மட்டுமல்ல. தன்னிகரற்ற பிசினஸும்கூட. வாழ்நாள் முழுதும் ஒரு மனிதன் மருந்து மாத்திரைகளுக்கு மாதாந்திரக் கப்பம் கட்டுவதென்றால் எத்தனை லட்சம் கட்ட வேண்டியிருக்கும்! ஒரு தேசத்துக்கு சுமார் பத்து கோடிப் பேர் என்று வைத்துக்கொள்ளுங்கள். ‘‘

உலகம் முழுதும் எத்தனை கோடிப் பேர்! எத்தனை பில்லியன் வியாபாரம்! சட்டென்று மருந்துகளற்ற ஒரு பேருலகம் உருவாகிவிடுமென்றால் அது சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்காதா! எப்படி இதை ஏற்பார்கள்? ‘இதையும் நான் அந்தப் பெண்மணியிடம் சொல்லித்தான் அனுப்பினேன். ஆனாலும் அவர் டாக்டரைத் தன் தரப்பில் வைத்துக்கொண்டு என்னையும் அவரது கணவரையும் எதிர்த்தரப்பில் நிறுத்திவிட்டார். முடியாதென்றால் முடியாது. சமைக்க மாட்டேன்! அதற்குமேல் என்ன பேச முடியும்? நண்பர் மீண்டும் இன்சுலின் துணையுடன் வாழத் தொடங்கினார்.

எதற்கு இதைச் சொல்லுகிறேன் என்றால், இம்மாதிரி சிக்கல் ஏதும் என் விஷயத்தில் வரவில்லை. காரணம், என்னை பேலியோவில் பிடித்துத் தள்ளியதே என்னுடைய மனைவிதான்.  பேலியோவில் HDL என்கிற நல்ல கொலஸ்டிரால் ஏறும். LDL என்கிற புரத அணுவின் அளவு பெரிதாகும். அதனால் அது இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களுக்குள் புகுந்து அடைத்துக்கொள்ளும் வழக்கம் அறவே ஒழியும். பேக்கரி உணவுப் பொருள்களோ, கார்போஹைடிரேட் உள்ள வேறெந்த விதமான உணவோ, எண்ணெய்களோ இனி நம் வாழ்வில் இல்லை என்பதால் டிரை கிளிசிரைட் கணிசமாகக் குறையும். ‘‘

ஹார்ட் அட்டாக்கில் இருந்து வெகு தொலைவு தள்ளி நிற்போம் என்பதை முதல் முதலில் எனக்கு எடுத்துக் காட்டியதே என் மனைவிதான். எனவே, நான் பேலியோ தொடங்கிய அதே நாளில் அவரும் ஆரம்பித்தார். காலை பாதாம். மதியம் காய்கறிகளுடன் வெண்ணெய், தயிர். இரவுக்கு பனீர். பதினொரு மணிக்கு எலுமிச்சை ஜூஸ். கூடவே ஒரு சீஸ் க்யூப். மாலைப் பசிக்கு கொய்யாக்காய். நாளொன்றுக்கு நாலு லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர். தினசரி ஒரு மணி நேர நடை. விட்டமின்டிக்காக வெயிலில் நிற்கச் சொல்லியிருந்தார்கள். அது மட்டும் கட்டுப்படியாகவில்லை.

பகல் பதினொண்ணே முக்காலுக்கு நான் அரை நிர்வாணமாக மொட்டை மாடிக்குப் போய் நின்றால், துணி உலர்த்த வரும் நாரீமணிகளெல்லாம் துவந்த யுத்தத்துக்கு வந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அதை மட்டும் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தேன். மற்றபடி முழுமையான பேலியோ. ஒரு நாள். இரண்டாம் நாள். மூன்றாம் நாள். எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. உற்சாகமாகவே இருந்தேன். சுறுசுறுப்பாக இருந்தேன். நாலாம் நாள் எடை பார்த்தபோது என்னுடைய 111 கிலோ 108 கிலோ ஆகியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியும் அதிர்ச்சியும் ஒருங்கே அடைந்தேன். ஒருவேளை எடை மெஷின் பழுதாகியிருக்குமோ?

அதைத் தூக்கி, குலுக்கி, உலுக்கி என்னென்னமோ செய்து மீண்டும் ஒருமுறை முயற்சி செய்து பார்த்தபோதும் அதையே காட்டியது. 108. ஆண்டவா, நாலு நாளில் மூன்று கிலோவா! என் மனைவியும் எடை பார்த்தார். ஆனால் அவருக்குக் குறைந்திருக்கவில்லை. அதெல்லாம் பத்து நாளில் இறங்க ஆரம்பித்துவிடும், அவசரப்படாதே என்றேன் ஆறுதலாக. [பெண்களுக்கு எடைக்குறைப்பு இதில் மிகத் தாமதமாகத்தான் நிகழும் என்பதைப் பிற்பாடு அறிந்தேன். இதைப் பற்றி விரிவாக எழுதவேண்டும். அதுவும் பிற்பாடு.]

எடை குறையாமல் இருந்தது ஒரு பிரச்னையல்ல. ஆனால் சட்டென்று அவரது செயல்பாடுகளில், நடவடிக்கைகளில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. மிகவும் சோர்வாக உணர்வதாகச் சொன்னார். தலை சுற்றல் இருந்தது. வயிற்றில் ஒரு மிக்சி ஓடுவதுபோலப் புரட்டிப் போடுவதாகச் சொன்னார். வேலை செய்ய முடியவில்லை என்றார். கண் சொருகி, எப்போதும் மப்பாகத் தெரிந்தார். இரவு படுத்தால் தூக்கம் வருவதில்லை. மாறாக இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. இதயத் துடிப்பு காதில் கேட்கிறது என்றார்.

பகீரென்றாகிவிட்டது எனக்கு. அதைவிட பயங்கரம், மிகக் கடுமையான மலச்சிக்கல் பிரச்னை. உயிரே போய்விடும் அளவுக்குத் துடித்துத் துடித்துத் தணிய ஆரம்பித்தார். கலவரமாகிப் போனேன். பேலியோ கிடக்கிறது. பெண்டாட்டிக்கு ஒன்றென்றால் உத்தம புருஷன் உள்ளம் தாங்குமா? என்ன நடக்கிறது அவருக்கு? எதனால் இந்த விபரீதங்கள்? என்ன செய்தால் சரியாகும்?  டாக்டர் ப்ரூனோவை போனில் கூப்பிட்டேன்.
 

(தொடரும்)


பேலியோ கிச்சன் பனீர் இட்லி

அரிசி, பருப்பு மாவுக்கு பதில் பனீர். இதை முதலில் உதிர்த்துக்கொள்ளுங்கள். இரண்டு பிடி தேங்காயுடன் சேர்த்து மிக்சியில் ஒரு ஓட்டு.. ஒரு கரண்டி தயிர் சேர்த்துக் கலந்து உப்பு போட்டால் தீர்ந்தது விஷயம். ஆவியில் வேக வைத்து எடுத்தால் பனீர் இட்லி தயார். தேங்காய் சட்னியுடன் உண்ணப் பிரமாதமாக இருக்கும். இதையே பதம் மாற்றி பனீர் தோசையாகவும் வார்க்கலாம். என்ன கொஞ்சம் பார்க்கக் கண்ணராவியாக இருக்குமே தவிர, ருசி ஜோராக இருக்கும்!

www.kungumam.co

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

 

அனுபவத் தொடர் - 12

- பா.ராகவன்

உடம்பு ஒரு ஒய்யார வாகனம். நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிற வரைக்கும் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. இடையில் என்னவாவது இசகுபிசகானால்தான் சிக்கல். ஒன்று கேட்கிறேன். வாழ்நாளில் என்றைக்காவது உங்கள் கால் சுண்டுவிரலைக் குறித்து நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? அட, இத்தனைக் குட்டியாக ஓர் உறுப்பை எப்படி ஆண்டவன் செய்திருப்பான் என்று எண்ணிப் பார்த்திருப்பீர்களா?

மற்ற உறுப்புகளைத் தனியே அசைக்க முடிவதுபோல, கால் சுண்டு விரல்களையும் காதுகளையும் மட்டும் ஏன் அசைக்க முடிவதில்லை என்று யோசித்திருப்பீர்களா? இதுவே அந்த சுண்டுவிரல் ஓரத்தில் சின்னதாக ஒரு காயம் படட்டும். அதுகூட வேண்டாம். சுண்டுவிரல் நகம் பாதியாக உடைந்து கொஞ்சம் வலிக்கட்டும். புத்தி மொத்தமாக அந்த இடத்தில் குவிந்துவிடுகிறது. இல்லையா? அந்த வலி தீருகிறவரைக்கும் வேறு ஞாபகமே இருப்பதில்லை.
7.jpg
இல்லையா? நமது செயல்பாட்டு வேகத்துக்கு எதிராக உடம்பு கொஞ்சம் முரண்டு பிடித்தாலும் தீர்ந்தது கதை. வயிற்றுவலியோ, தலைவலியோ, காய்ச்சலோ மற்றதோ. அது வந்து கொண்டாடிவிட்டுப் போய்ச்சேருகிற வரைக்கும் நமக்கு வேறு வேலை ஓடுவதில்லை. பிறந்தது முதல் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் உணவைத் தொடரும்போதே இதுதான் நிலைமை என்றால், தடாலென்று உடம்புக்கு ஒரு மதமாற்றம் நிகழ்த்தினால் அது சும்மாவா இருக்கும்?

என் மனைவிக்கு நேர்ந்த உடல் சார்ந்த நெருக்கடிகளுக்கு அதுதான் காரணம். அறிவியல் அதை கார்ப் ஃப்ளூ என்று சொல்லும். அதாவது கார்போஹைடிரேட் வரத்து திடீரென்று கணிசமாகக் குறைந்துவிடும்போது, அதற்குக் காலகாலமாகப் பழகிவிட்ட உடம்பு மக்கர் செய்ய ஆரம்பிக்கும். மக்கர் என்றால் இன்ன விதமான மக்கர்தான் என்று சொல்ல முடியாது. எந்த விதத்திலும் தாக்கும். எல்லா விதத்திலும்கூடத் தாக்கும்.

சிலருக்குக் கடும் தலைவலி உண்டாகும். இன்னும் சிலருக்கு வயிற்றுப் போக்கு. தலை சுற்றல் சிலருக்கு. காய்ச்சல் சிலருக்கு. உடம்பெல்லாம் தடதடவென்று உதறுவது நடக்கும். நெஞ்சு படபடப்பு இருக்கும். மலச்சிக்கலும் அனைவருக்கும் பொதுவானதே. ஆனால், இதெல்லாம் ஒரு நாலைந்து தினங்களுக்குத்தான். மிஞ்சிப் போனால் ஒரு வாரம்.

அது அவரவர் தேகம், கொழுப்புணவுக்குத் தன்னை மாற்றிக்கொள்ளும் வேகத்தைப் பொறுத்தது. பிறந்தது முதல் டீசலில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு காரை சட்டென்று பெட்ரோல் வண்டி ஆக்கினால் என்ன நேரும்? அதுவேதான் இங்கும் நிகழ்கிறது. பேலியோவுக்கு மாறும்போது உடனடியாக உடலுக்கு ஏற்படும் மாற்றம் என்பது ரத்த சர்க்கரை அளவு குறைவதுதான்.
7a.jpg
இதில் கார்போஹைடிரேட் மிகக் கணிசமான அளவுக்குக் குறைந்துவிடுகிறது என்பதால் ரத்தத்தில் கலக்கிற சர்க்கரை அளவும் சுருங்கிவிடுகிறது. இதனாலேயே இன்சுலின் சுரப்பும். தீவிரமான நீரிழிவுப் பிரச்னை உள்ளவர்கள், மருந்து மாத்திரைகளில் இருந்து விடுபடுவதற்காகப் பேலியோவுக்கு வருவார்கள். அதுவும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்கிறவர்கள் என்றால் ரத்த சர்க்கரை தடாலடியாகச் சரியும்.

என்னடா இது நேற்று டெஸ்ட் எடுத்துப் பார்த்தபோது நூற்றி எண்பது காட்டியதே, இன்று நூறு காட்டுகிறதே என்று குழப்பமாக இருக்கும். பரிசோதனை தவறோ என்று எண்ணத் தோன்றும். சிலருக்கு நார்மலுக்குக் கீழேகூட இறங்கிப் போகும். லோ ஷுகராகி, மயக்கமே வரலாம். இதனால்தான் மருத்துவப் பரிசோதனையும் டாக்டர் உதவியும் அவசியம் என்பது. ரத்த சர்க்கரை அளவு குறையும்போது அதற்கேற்ப எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரை அளவுகளைக் குறைக்க வேண்டும்.

படிப்படியாகக் குறைத்துக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் நிறுத்திவிடலாம். ஆனால், எவ்வளவு குறைப்பது, எப்போது நிறுத்துவது என்று சுட்டிக்காட்ட டாக்டர் வேண்டுமல்லவா? பேலியோ தொடங்கிய புதிதில் என் மனைவிக்கு ஏற்பட்ட இந்தப் பிரச்னைக்கு டாக்டர் ப்ரூனோ கொடுத்த மருந்துகள் இரண்டு. ஒன்று, அரை வாழைப்பழம் சாப்பிடுங்கள்.

இரண்டாவது, உப்பு போட்டு எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள். அரை வாழைப்பழம் என்பது மிகவும் குறைந்து போகும் சர்க்கரை அளவைக் கொஞ்சம் கூட்டி சமநிலைக்குக் கொண்டு வருவதற்கு. எலுமிச்சை ஜூஸ், உடனடி சக்திக்கு. இது பலனளித்தது. இதுவே போதுமானதாக இருந்தது. என்ன வியப்பு என்றால் மேற்படி உடல் உபாதைகள் எதுவும் நான் பேலியோ தொடங்கியபோது எனக்கு உண்டாகவில்லை. மிகவும் நார்மலாக இருந்தேன். எடைக்குறைப்பும் சீராக நிகழ்ந்துகொண்டிருந்தது.

ஆனால், ஆரம்பித்து, கொழுப்புணவுக்கு உடல் பழகி ஓரிரு மாதங்களுக்குப் பிறகு எனக்கு இது வேலையைக் காட்டியது. அன்றைய தினத்தை என்னால் மறக்கவே முடியாது. என் எழுத்து வேலைகளை முடித்துவிட்டு ராத்திரி இரண்டுக்கோ இரண்டரைக்கோ படுத்தேன். பொதுவாக படுத்த மறு நிமிடம் உறங்கிவிடுவது என் வழக்கம். அன்றைக்கு எனக்குத் தூக்கம் சற்றும் இல்லை. கண்ணை மூடவும் முடியவில்லை.

பளிச்சென்று திறந்து வைத்திருப்பதுதான் வசதியாக இருந்தது. எழுந்து உட்கார முடியவில்லை. தலை சுற்றியது. உட்காரும்போது தலைசுற்றுவதைக் காட்டிலும் படுத்த நிலையில் சுற்றும் தலை இன்னும் களேபரமாக இருந்தது. சரி, நடந்துகொண்டிருக்கலாம் என்று ஓசைப்படாமல் எழுந்து ஹாலுக்கு வந்து மெல்ல நடக்க ஆரம்பித்தேன். கால்கள் உதறின.

இது ஏதடா பேஜார் என்று மெல்ல மெல்ல பயம் கொள்ள ஆரம்பித்தேன். சில வினாடிகளில் இதயம் படபடவென துடிக்கத் தொடங்கியது. வழக்கத்துக்கு விரோதமான துடிப்பு. பயத்திலேயே எனக்கு வியர்த்துவிட்டது. சரி, நமது கதை முடிந்தது என்றே நினைத்தேன். அந்த நள்ளிரவில் மனைவி, மகளை எழுப்பி விடைபெறுவதெல்லாம் ரொம்ப நாடகத்தனமாக இருக்கும் என்று தோன்றியது.

என் கவலையெல்லாம் ஒன்றுதான். மறுநாள் மின்சார வாரியத்துக்குப் பணம் கட்ட வேண்டும். இல்லாவிட்டால் ஃப்யூஸைப் பிடுங்கிவிடுவான். கரண்ட் இல்லாமல் கிரைண்டர் போட முடியாது. மிக்சி ஓடாது. ஏசி இயங்காது. சனியன், கடைசி நாள் வரை தள்ளிப் போட்டுவிட்டேன். இன்றிரவு நான் மண்டையைப் போட்டுவிட்டால் இத்தனை அவஸ்தைகளையும் என் குடும்பம் சேர்த்துப் படவேண்டியிருக்கும். தவிரவும் நிறைய ராயல்டி பாக்கிகள் வசூலிக்க வேண்டியிருந்தன. சம்பள மிச்சம் வைத்திருக்கும் கலை கம்பெனிகளை வேறு கவனித்தாக வேண்டும்.

என்ன செய்யலாம் என்று யோசித்தேன். வீட்டில் அன்று வாழைப்பழம் இல்லை. என் நேரம் எலுமிச்சம்பழம்கூட இல்லை. கொஞ்சம் சர்க்கரை அள்ளிப் போட்டுக்கொள்ளலாமா என்று கிச்சனுக்குப் போனேன். ஒரு கணம் தயக்கமாக இருந்தது. இரண்டு மாதங்கள் சற்றும் சர்க்கரை இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து தீர்த்திருந்தேன். சொன்னால் நம்பமாட்டீர்கள்.

பதிமூன்று கிலோ குறைந்திருந்தேன் அப்போது! வாழ்நாளில் நான் எண்ணிக்கூடப் பார்த்திராத அளவு அது. சட்டென்று ஒரு ஸ்பூன் சர்க்கரை உள்ளே போய் இந்த எடைக்குறைப்பு யாகத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிட்டால் என்ன செய்வது? டேய், இன்னும் சில வினாடிகளில் உன் உயிரே போய்விட்டால் அப்போது என்ன செய்வாய் என்று அந்தராத்மா அலறியது.
 

(தொடரும்)


பேலியோ கிச்சன்

நட் கட்லெட்

கேரட், முட்டைக்கோஸ், வெங்காயம், பூண்டு, ஏதேனும் ஒரு கீரை ஒரு பிடி. இவற்றை வழக்கமான உப்பு, மிளகாய்த்தூள், மசாலாப் பொடி வகையறாக்கள் சேர்த்து மொத்தமாகப் பொரியல் போல் சமைத்துக் கொள்ளவும். மேலுக்குக் கொஞ்சம் தேங்காய்ப் பூ. ஊறவைத்து உலர்த்திய பாதாமை வாணலியில் பொன்னிறத்துக்கு வறுத்து கொஞ்சம் ஆறவைத்து மிக்சியில் போட்டு நறநறவெனப் பொடித்துக்கொள்ளவும். இந்தப் பொடியை அந்தப் பொரியலுடன் கலந்தால் நமது கட்லெட் கலவை தயார்.

அடுப்பில் தோசைக்கல்லைப் போட்டு இந்தக் கலவையை வடைபோல் தட்டிப் போட்டு நெய் விட்டு வேகவிடவும். வழக்கமான ப்ரெட் போட்ட கட்லெட் மாதிரி இது இருக்காது. ஆனால், இதில் கிடைக்கும் அபார ருசி ஒருபோதும் அந்த கன்வென்ஷனல் கட்லெட்டுக்கு வராது.

www.kungumam.co.

  • தொடங்கியவர்
 

இளைப்பது சுலபம்

 
 

அனுபவத் தொடர் 13

வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?


என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? ஆம். நிலைகெட்ட மனிதரை நினைக்காத போதும் நெஞ்சு துடித்துக்கொண்டிருந்த அந்த நடு ராத்திரி களேபரத்தைப் பற்றி. சர்க்கரை சாப்பிட்டால் அந்தத் துடிப்பு சரியாகிவிடுமா என்று எனக்கு சந்தேகமாக இருந்தது.
6.jpg
எதோ தலை சுற்றல், மயக்கமென்றால் சர்க்கரைக் குறைவால் ஏற்பட்டது என்று நினைக்கலாம். இதயத் துடிப்பு அதிகரிப்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? அல்லது இதயத் துடிப்பு அதிகரிப்புக்கும் பேலியோவுக்கும்தான் என்ன சம்பந்தம்? 

உள்ளே போன நற்கொழுப்பெல்லாம் இதயத்தைச் சுற்றி நின்று ஜிமிக்கி கம்மல் பாட்டுப் பாடி நடனமாடத் தொடங்கிவிட்டதா? இருக்காதே. இலக்கணப்படி நல்ல கொழுப்பென்றால் அது காலக்கிரமத்தில் எரிக்கப்பட்டு சக்தியாகி விடுமல்லவா? உள்ளே போய் உட்காரக் கூடாதல்லவா? என்றால் இது வேறு ஏதோ பிரச்னை என்று தோன்றியது. சனியன் தூக்கம்தான் இல்லாமல் போய்விட்டது.
6a.jpg
பிராணன் போகிறதென்றால் அதற்குமுன் என்னத்தையாவது ஒன்றைத் தெரிந்துகொண்டு போய்த் தொலைக்கலாமே என்று என் மடிக்கணினியைத் திறந்து நெஞ்சு படபடப்பின் காரணிகள் என்னென்னவென்று கூகுளில் தேடத் தொடங்கினேன்.

அது நடுநிசி நாய்களின் நேரம். என் நட்பு வட்டத்தில் உள்ள மருத்துவர்கள் யாரும் விழித்திருந்தால் ஒரு வழி பண்ணியிருப்பேன். அவர்களது நல்ல நேரம் அப்படி யாரும் அப்போது இல்லாதபடியால் கூகுளைச் சரணடைந்தேன்.

இரண்டு காரணங்கள் அகப்பட்டன. முதலாவது இரும்புச் சத்து குறைபாடு. அது இருக்குமானால் இப்படித்தான் நேரங்கெட்ட நேரத்தில் நெஞ்சம் துடிக்கும். அவ்வப்போதைய நிலவரத்துக்கேற்ப சமூகக் கவலைகளைத் தூக்கி வைத்துக்கொண்டால் பொருத்தமாக இருக்கும்.

மற்றொரு காரணத்தை நியாண்டர் செல்வன் ஒரு கட்டுரையில் எழுதியிருந்ததைக் கண்டேன். நமது தசைகள் தூங்கத் தொடங்கும் நேரம் மூளை விழித்துக்கொண்டு, நாம் எழுந்துவிட்டால் இந்த மாதிரி படபடப்பு இருக்கும் என்று அவர் சொல்லியிருந்தார்.  என்ன செய்யலாம்? சும்மா தண்ணி குடித்துவிட்டு ராமா கிருஷ்ணா என்று ஜபம் பண்ணிக்கொண்டிருக்கலாம். ஒன்றும் உயிர் போய்விடாது என்று தெரிந்தது. அதன்பின் சற்று
ஆசுவாசமடைந்தேன்.

நமது அடிப்படைப் பிரச்னைகளுள் ஒன்று சரியான தூக்கமின்மை. பல உடல் சார்ந்த கோளாறுகளுக்கு அது முக்கியக் காரணம்.
என்னைப் பொறுத்தவரை இம்மாதிரியான பிரச்னைகள் என்னவாவது இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். ஏனென்றால் நான் ஒரு நித்ய ராக்கோழி. இரண்டு மணிக்கு முன்னால் படுத்ததாக சரித்திரமே கிடையாது.

பல நாள் அதிகாலை மூன்றரை, நான்கு மணி வரைகூட எழுதிக் கொண்டிருப்பேன். அதன்பின் படுத்து இரண்டு, இரண்டரை மணி நேரம் தூங்கிவிட்டு எழுந்து மீண்டும் வேலையைப் பார்க்கப் போய்விடுவேன். மதிய உணவுக்குப் பின் சுமார் மூன்று மணி நேரம் தூங்கிவிடுவேன். 
பல வருடங்களாக இதுதான் வழக்கம் எனக்கு. ஆனால், இது மிகவும் தவறு. நமது மெட்டபாலிசத்தை சர்வநாசமாக்குகிற காரணி இது. என்ன ஆனாலும், உலகமே இடிந்தாலும் இரவு எட்டு மணி நேரம் தூங்கிவிட வேண்டும் என்றே மருத்துவ விஞ்ஞானம் சொல்கிறது.

பேலியோவில் இந்த விவகாரம் மிகத் தீவிரமாக வலியுறுத்தப்படுவது இதனால்தான். காலைச் சாப்பாடு படு லேசாக இருந்தால் போதும். மதியம் சற்று கனமாக. இரவு ஃபுல் கட்டு. வயிறு நிறையக் கொழுப்புணவை உண்டுவிட்டு, இதய சொஸ்தத்துக்கு பசு மஞ்சள் சாப்பிட்டுவிட்டு ஒரு அரை மணி நேரம் விழித்திருந்த பின் படுத்துவிட வேண்டும்.

வரும் பாருங்கள் ஒரு தூக்கம்..! அதற்கு நிகரே கிடையாது. இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். இதென்ன தலைகீழ் விகிதமாக இருக்
கிறது! காலை உணவைத்தான் ராஜ போஜனமாக உண்ண வேண்டும் என்பார்கள். இரவு லேசாக உண்டால் போதும் என்றுதானே சொல்லித் தரப்பட்டிருக்கிறது?  என்றால், அது பிழையான போதனை. காலை டிபன் பிசினஸ்காரர்கள் தமது சௌகரியத்துக்காகக் கிளப்பிவிட்ட கதை.

ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். உங்கள் மகன் அல்லது மகள் எல்கேஜி, யுகேஜி வயது தொடங்கி ஒரு பதிமூன்று பதினான்கு வயதுக்காலம் வரை காலை உணவை உட்கொள்ள எத்தனை பாடு படுத்தியிருப்பார்கள்? பிடித்து வைத்து அடைத்துத்தான் பள்ளிக்கு அனுப்பியிருப்பீர்கள்.
அதே குழந்தை மாலை பள்ளி விட்டு வீடு வரும்போதே பசி பசி என்று பறந்து வந்து, கொடுப்பதை அள்ளி அடைத்துக் கொள்வதையும் பார்த்திருப்பீர்கள். காலை ஒரு இட்லி தின்னவே உயிரை வாங்கிய பிள்ளை மாலை மட்டும் எப்படி மொத்த கபளீகர மேளா நடத்துகிறது என்று என்றாவது சிந்தித்திருக்கிறீர்களா?

நமது இயற்கையே அதுதான். பசி உணர்ச்சியானது நடுப்பகலுக்கு அப்புறம்தான் மெல்ல சோம்பல் முறித்து, கண்ணை விழிக்கும். மாலையானால் கொஞ்சம் சுறுசுறுப்படையும். இருட்டும் நேரம் உச்சம் போகும். சூரியன் மறையும் நேரம் உண்டு முடிப்பது என்கிற வழக்கம் ஜைனர்களிடம் உள்ளது தெரியுமல்லவா? விஷயம் இதுதான்.

முழு உணவை உட்கொள்ள அதுவே தகுந்த பொழுது. ஏனென்றால், இரவு எட்டு மணி நேரம் நாம் உறங்குகிறோம். நடுவே காப்பி டீ குடிப்பதில்லை. கண்டபடி நொறுக்குத்தீனி தின்பதில்லை. மறுநாள் காலை வரை கண்டிப்பாக வாய்க்கும் வயிற்றுக்கும் ஓய்வளிக்கிறோம்.

இந்த ஓய்வுப் பொழுதில்தான் உடல் இயந்திரமானது உண்டதை எரித்து சக்தியாக மாற்றுகிறது. அதிகம் உண்டிருந்தால் கொழுப்பாக மாற்றி சேமிக்கவும் செய்கிறது. ப்ராசசிங் என்பார்கள். கிரைண்டருக்கு நாம் ஓய்வு கொடுத்தால்தான் அந்த ப்ராசசிங் ஒழுங்காக நடக்கும்.

அப்படிச் செய்யாமல், மணிக்கொருதரம் என்னத்தையாவது போட்டு மென்று தள்ளிக்கொண்டே இருந்தால், உள்ளே போகிற அனைத்தும் பிதுரார்ஜித சொத்தாகச் சேர்ந்துகொண்டேதான் இருக்குமே தவிர, கொழுப்பு எரித்தல் என்னும் செயலே நடைபெறாது போகும்.

இதனால்தான் பேலியோவில் இரவு உணவை கனமாக உண்ணச் சொல்லுவார்கள். எனக்குச் சொன்னது, இருநூறு கிராம் பனீர். அதை நெய்யில் சமைத்து உண்ணவேண்டும். பனீரே கொழுப்பு. நெய் இன்னொரு கொழுப்பு. பத்தாது? உண்டு முடித்த மறுகணமே தலை கிர்ரென்று சுழன்று மப்படிக்க ஆரம்பிக்கும். ஒழுங்காகப் படுத்துத் தூங்கினால் ஒரு பிரச்னையும் இராது.

ஆனால், நான் என்ன செய்தேன்? இரண்டு கை பச்சைத் தண்ணியை அள்ளி முகத்தில் அடித்துக்கொண்டு, வந்த தூக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டுக் கலைச்சேவை செய்யப் போனேன். இது தகுமா? முறையா? அதனால்தான் நெஞ்சப் பறவை சிறகடிக்க ஆரம்பித்தது என்பது புரிந்தது.
என் புருஷலட்சண உத்தியோகத்தில் ராத்திரி சீக்கிரம் தூங்குவதென்பது இயலாத காரியம். அதே சமயம் இந்தப் பிரச்னைக்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும். என்ன செய்யலாம்? தீவிரமாக யோசிக்கத் தொடங்கினேன்.

பேலியோ கிச்சன்

சுரைக்காய் சாதம்

காய்களில் பேலியோ ஃப்ரெண்ட்லி என்றால் அதில் சுரைக்காய்க்குத்தான் முதலிடம். நூறு கிராமில் மொத்தமே மூணரை கிராம் கார்போஹைடிரேட்தான். அதிலும் ஒண்ணரை கிராம் நார்ச்சத்தைக் கழித்துவிட்டால் மிச்சம் ஒன்றுமே கிடையாது. வெறும் தண்ணி. ஆனால் கொழுப்பைக் கரைப்பதிலும் தூக்கப் பிரச்னைகளைத் தீர்ப்பதிலும் சுரைக்காய் ஒரு பெரிய தாதா.

பேலியோவுக்கு வந்ததும் சாதம் சாப்பிட முடிவதில்லையே என்று வருந்துவீர்களானால் சுரைக்காய் அக்கவலையைப் போக்கும். தோலை உரித்து, உள்ளே உள்ள சரக்கைத் துண்டுகளாக்கி (அல்லது துருவி) கொஞ்சம் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். துண்டுகளென்றால் மிக்சியில் போட்டு ஒரு ஓட்டு. துருவல் என்றால் வேண்டாம். அப்படியே வழித்து எடுத்து உப்பைப் போட்டு, கொஞ்சம்போல் தாளித்துக்கொண்டு இரண்டு கரண்டி தயிர் சேர்த்துக் கலந்தால் சுரைக்காய் தயிர்சாதம் ரெடி.

இது ரெகுலர் தயிர்சாதத்தைவிடப் பிரமாதமாக இருக்கும். எலுமிச்சங்காய் ஊறுகாய் அல்லது தக்காளித் தொக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் தந்தனுப்பலாம்.
 

(தொடரும்)

www.kungumam.co

  • தொடங்கியவர்

இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

அனுபவத் தொடர் - 14

பா.ராகவன்

சென்ற அத்தியாயத்தின் இறுதியில் கொஞ்சம் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தேனல்லவா? அப்படியே இன்னும் இரண்டு அத்தியாயங்கள் முடிகிற வரைக்கும் யோசித்துக்கொண்டிருப்போம். யோசனையின் முடிவில் கிடைத்த அந்த வழியைச் சொல்லுவதற்கு முன்னால் வேறொரு சங்கதியைச் சொல்ல வேண்டியிருக்கிறது. இது ரொம்ப முக்கியமான விவகாரம். பேலியோவில் உடம்பு இளைப்பதற்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் ஒரே எம்எல்ஏ.
8.jpg
எனக்கு உணவுப் பரிந்துரை செய்து, வழிகாட்டிய நண்பர் சங்கர்ஜி, கூடவே இன்னொன்றைச் சொன்னார். தினமும் சுமார் நாலாயிரம் தப்படிகளாவது மிதமான வேகத்தில் நடக்க வேண்டும்! இதெல்லாம் அக்கிரமம் இல்லையா? யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிவிட்டார்! ‘நடையில் நின்றுயர் நாயகன்’ என்று ராமனைப் பார்த்து கம்பர்  சொன்னதெல்லாம் சும்மா. நான் நடந்தால் அண்ட சராசரமும் கிடுகிடுக்கும். பிரளயம் வரும். அது கும்பகர்ணன் போருக்குக் கிளம்புகிற காட்சிக்குச் சற்றும் சளைக்காத சம்பவ சரித்திரமாக இருக்கும்.

ஏனென்றால் நமது தேக ஆகிருதி அப்படி. பன்னெடுங்காலமாக உருட்டி உருட்டி உருவேற்றி வைத்திருக்கும் கருணையற்ற கிழங்கின் களேபர வடிவமல்லவா? தவிரவும் கால்கள் என்பன, மடக்கி அமர்வதற்கும் நீட்டிப் படுப்பதற்கும் மட்டும் பயன்படும் உறுப்புகள் என்றே எண்ணி வந்திருப்பவன் நான். இந்த நடப்பது, ஓடுவது, குதிப்பதெல்லாம் என்னைப் போன்ற சொகுசு சுந்தரர்களுக்கு அநாசாரம்.
8a.jpg
உட்கார்ந்த இடத்தில் எதையும் செய்வதுதான் என் வழக்கம். உட்கார்ந்தபடி செய்ய முடியாத எதையும் அதுவரை நான் செய்ததில்லை. அட ஒரு கீரைக்கட்டு வாங்கத் தெரு முனை வரை போகிற வழக்கம்கூடக் கிடையாது. எங்காவது வெளியூர் போனால்கூட இறங்கிய இடத்தில் வாடகை வண்டி அமர்த்திக்கொண்டுவிடுகிற உத்தமனாகவே இருந்தேன்.

இக்காரணங்களால் என் கால்களுக்கு நடப்பது என்னும் கலை மறந்துவிட்டிருந்தது. ஆனால், பேலியோவில் அரை மணி நேர நடை என்பது கட்டாய விதி என்றார் நண்பர். ரொம்ப வேகமெல்லாம் வேண்டாம். ஆயிரக்கணக்கான கலோரிகள் அதன்மூலம் செலவிட வேண்டாம். சும்மா ஒரு நூறு, நூற்றைம்பது கலோரி எரிந்தால் போதும். மென் நடை. ‘வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திலள்’ என்று இளங்கோவடிகள் கண்ணகியைச் சொல்லுவாரே, அந்த மாதிரி நடை போதும்.
8b.jpg
இதென்னடா புது பேஜார் என்று கவலையுடன்தான் முதல் நாள் களத்தில் இறங்கினேன். முதல் பத்திருபது அடிகள் நடந்து முடிக்கிறபோதே மூச்சு வாங்கியது. பத்து நிமிடம் ஆகியிருக்குமா என்று மணி பார்த்தேன். ம்ஹும். பத்து வினாடிகள்தாம் ஆகியிருந்தன. சரி, இன்னொரு பத்தடி நடப்போம் என்று நடந்தேன். உடல் மெல்ல வியர்க்கத் தொடங்கியது. என் இலக்கு, நான் வசிக்கும் வீதியைக் கிழக்கு மேற்காக ஒருதரம் அளந்து பார்த்துவிடுவது. ஆண்டுக்கணக்கில் அந்த வீதி என் உடைமையாகத்தான் இருக்கிறது. ஆனால், என் வண்டிச் சக்கரங்களுக்குத்தான் அது பழக்கமே தவிர, பாதங்களுக்கல்ல.

நடக்க ஆரம்பித்தபோது, வீதியானது திரவுபதி வஸ்திரம் மாதிரி நீண்டுகொண்டே போவதாகப் பட்டது. முடிவற்ற பெரும்பாதை. கரடுமுரடானது. ஏற்ற இறக்கங்கள் கொண்டது. வாழ்க்கையைப் போன்றதுதான். வாழ்ந்துதானே தீர்க்க வேண்டியிருக்கிறது? இது மிகையே அல்ல. அந்த முதல் நாள் நான் என் வீட்டில் இருந்து புறப்பட்டு, அந்தச் சாலையின் இறுதிப் புள்ளிவரை போய்ச் சேர்ந்து திரும்பிப் பார்த்தபோது உண்மையிலேயே பயந்துவிட்டேன்.

எப்படி திரும்பி வீட்டுக்குப் போகப் போகிறேன்? போன் செய்து மனைவியை வண்டி எடுத்து வரச் சொல்லலாமா என்று தோன்றியது. அவமானம்தான். ஆனால், அதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா! அந்தக் கணத்தில் ஒன்று தோன்றியது. நடந்தே பழகாத ஜென்மமாக இருப்பது எப்பேர்ப்பட்ட அவலம்! மூச்சிரைத்து, வியர்த்துக் கொட்டி, கண்கள் இருட்டிவிட்டன. என் ஸ்தூல சரீரத்துக்குள் என்னென்னவோ நிகழ்வதாகத் தோன்றியது. எலும்புகள் அனைத்தும் இடம் பெயர்ந்து முறிந்து நிற்பது போல.

எப்படியோ சமாளித்து வீடு திரும்பிவிட்டேன். அன்று எனக்குக் கிட்டிய புள்ளிவிவரம், நான் வசிக்கும் வீதியானது மொத்தம் தொள்ளாயிரத்தி இருபது தப்படிகள் நீளம் கொண்டது என்பது. ஆக நான் ஆயிரத்து எண்ணூற்று நாற்பது தப்படிகள் நடந்திருக்கிறேன்! மாபெரும் மாரத்தான் சாகசமல்லவா இது? வீட்டுக்கு வந்து அக்கடாவென்று படுத்துவிட்டேன். பேலியோ கூடப் பரவாயில்லை; இந்த நடை என்னைக் கொன்றுவிடுமோ என்று பயமாக இருந்தது. உண்மையில், அந்தளவுக்கு நான் பருத்திருந்தேன்.

என்னுடைய 111 கிலோ எடையைக் காட்டிலும் அதிக எடை கொண்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்த 111ஐயும் வெறும் கெட்ட கொழுப்பாக வளர்த்து வைத்தவர்கள் எத்தனைப்பேர் இருப்பார்கள் என்று தெரியவில்லை. சரி, தொடங்கிவிட்டோம்; உயிரே போனாலும் விடுவதில்லை என்று எண்ணிக்கொண்டேன். ஊர் உலகத்தில் உள்ள அத்தனை தெய்வங்களையும் சகாயத்துக்குக் கூப்பிட்டுக்கொண்டு மறுநாளும் என் நடைப்பயணத்தைத் தொடர்ந்தேன். மூன்று நாள். நான்கு நாள். அட பரவாயில்லையே... மூச்சிரைப்பு குறைந்தாற்போல் இருக்கிறதே.

ஒரு வாரத்தில் எனக்கு நடந்தால் வரும் இடுப்பு வலி, முட்டி வலி, மூச்சிரைப்பு அனைத்தும் இல்லாமல் போயின. நெஞ்சை அடைப்பது போல ஓர் உணர்வு முதல் சில தினங்கள் இருந்தன. அதுவும் எங்கே போனதென்று தெரியவில்லை. ஒரு தெருவை அளந்துகொண்டிருந்தவன், இரண்டாம் வாரம் முதல் இரு தெருக்களின் மொத்த நாய்கள் எண்ணிக்கையைக் கணக்கிட ஆரம்பித்தேன். நைட்டியுடன் வாசலில் கோலம் போட வரும் பெண்கள் யார் யாரிடம் என்னென்ன நிறத்தில் நைட்டி உள்ளதென்கிற புள்ளிவிவரம் தெரியவந்தது. இதில் தலையையாவது கோதிக்கொண்டு வரும் பெண்கள் எத்தனை பேர், உறங்கி எழுந்த கோலத்திலேயே கலாசாரக் காவலுக்கு வருகிற பெண்கள் எத்தனை பேர் என்கிற கணக்கு தனி.

காலைப் பொழுதுகளில் டீக்கடையில் காணக்கிடைத்த நபர்களில் பத்துக்கு மூன்று பேராவது மெதுவடை சாப்பிடுவதைப் பார்த்தேன். போஸ்டர்களைப் பார்த்தே நாட்டு நடப்பு தெரிந்துகொள்ளும் வேட்கையில் வருகிறவர்களைக் கவனித்தேன். பால்காரர்கள், பேப்பர்காரர்கள், காய்கறி விற்பவர்கள், காலை ஷிஃப்ட் பணிக்கு ஓடுகிறவர்கள், குப்பைவண்டிக்காரர்கள் - உலகில் என் ஒருத்தனைத் தவிர எல்லோரும் காலையில் பிசியாகத்தான் இருப்பார்கள் போலிருக்கிறது.

ஆக, நான் நடக்க ஆரம்பித்துவிட்டேன். என்னால் இப்போது மூவாயிரம் தப்படிகள் நடக்க முடிந்தது. இது என்னாலேயே நம்ப முடியாததாக இருந்தது. எனக்கு ஏதாவது பரிசு கொடுத்துக்கொண்டால் என்ன? உடனே பெங்களூரில் உள்ள என் நண்பன் என்.சொக்கனை அழைத்து விஷயத்தைச் சொன்னேன். ஒரு நல்ல நாள் பார்த்து அவன் எனக்கு MI Band என்றொரு கங்கணத்தை வாங்கி அனுப்பினான். வெறும் ஆயிரம் ரூபாய் வஸ்து. அது வந்து சேர்ந்தபோது பார்க்கப் பரம சாதுவாகத்தான் தெரிந்தது. ஆனால், பயன்படுத்தத் தொடங்கிய ஓரிரு நாள்களிலேயே அது ஒரு குட்டிச்சாத்தானாக உருமாற்றம் கண்டது.
 

(தொடரும்)


நடை டிப்ஸ்

இந்த வாரம் பேலியோ கிச்சன் கிடையாது. பதிலுக்கு, இது:

* வேகமாக நடந்தால் சீக்கிரம் இளைக்கலாம் என்று நினைக்காதீர். மிதவேக நடையே மனிதனுக்கு நல்லது.
* செருப்புடன் நடக்காதீர். குறைந்த விலைக்கே பதமான வாக்கிங் ஷூக்கள் கிடைக்கின்றன. ஷூ அணிந்து நடப்பதே காலுக்கு நல்லது.
* மிக மிக மெதுவாக நடக்கத் தொடங்கி, படிப்படியாக வேகத்தைக் கூட்ட வேண்டும். மூச்சு வாங்குகிற வேகம் கூடவே கூடாது. நடைப் பயிற்சி முடிவடையும் கடைசி ஐந்து நிமிடங்கள் மெல்ல மெல்ல வேகத்தைக் குறைத்து, தொடங்கியபோது கடைப்பிடித்த வேகத்துக்கே வரவேண்டும்.
* எத்தனை தப்படிகள் நடந்திருக்கிறோம் என்று காட்டும் பட்டைகள் நிறைய வந்துவிட்டன. அதிலொன்றை வாங்கி மாட்டுங்கள். இது தரும் பரவசத்துக்கு நிகரே கிடையாது. நம்மையறியாமல் நிறைய நடக்க வைக்கும்.
* நடக்கும்போது போன் பேசாதீர்கள். பதிலாக ஹெட்போன் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்கலாம். கிண்டில் போன்ற கருவிகள் துணையுடன் புத்தகம் படிக்கலாம். ஆனால், மெயின் ரோடில் இப்படிப் படித்தபடி நடந்தால் மாடு அல்லது லாரி முட்டும், ஜாக்கிரதை.

www.kungumam.co

  • தொடங்கியவர்
 
 

இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

 
 

அனுபவத் தொடர் - 15

- பா.ராகவன்

ஒரு நடைமானி உங்களுக்குத் தரக்கூடிய ஆகப்பெரிய பரிசு, நிகரே சொல்ல முடியாத, அபாரமான தன்னம்பிக்கை உணர்ச்சி. இதை அனுபவித்துப் பார்த்துவிட்டே சொல்கிறேன். நான் அந்த நடையளவுப் பட்டையைக் கையில் கட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்த முதல் நாள் மூவாயிரத்து ஐந்நூறு தப்படிகள் நடந்தேன். வாழ்நாளில் அதற்குமுன் நான் அவ்வளவு நடந்ததில்லை. ஒருவேளை வாழ்நாள் முழுதும் அதுவரை நடந்ததன் மொத்த எண்ணிக்கையாகவும் அது இருக்கக்கூடும். அப்படிப்பட்டவன், ஒரு மணி நேரத்தில் மூவாயிரத்து ஐந்நூறு தப்படிகள் நடந்திருக்கிறேன் என்பது எவ்வளவு பெரிய விஷயம்!

மறுநாள் என் இலக்கு நாலாயிரம் தப்படிகளாக இருந்தன. அடுத்த நாள் நாலாயிரத்து ஐந்நூறு. ஆனால், ஒவ்வொரு நாளும் நான் இலக்காக வைத்ததைக் காட்டிலும் குறைந்தது இருநூற்று ஐம்பது தப்படிகள் அதிகமாகவே நடந்தேன். எப்படியாவது ஒரு நாள் பத்தாயிரம் என்னும் கனவு எண்ணைத் தொட்டுவிட வேண்டுமென்கிற வெறி அப்போதுதான் உண்டாக ஆரம்பித்தது. கூடவே என்னால் எப்படி நடக்க முடிகிறது என்கிற வியப்பு கலந்த வினாவும் மனத்துக்குள் பூதாகரமாக எழுந்து நின்றது. தலைமுறை தலைமுறையாகப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது மூதாதையர் உண்டு வந்த அதே உணவைத்தான் நானும் உண்டு கொண்டிருந்தேன்.
3.jpg
உடல் உழைப்பு என்ற ஒன்று இல்லாத படியால் தருமமின்றி பருமன் கண்டேன். இப்போதும் உடல் உழைப்பு கிடையாதுதான். அதே உட்கார்ந்து பார்க்கிற உத்தியோகமே. ஆனால், உணவை மட்டும் மாற்றினேன். இதனால் மட்டுமே எப்படி நடக்க முடிகிறது? சூட்சுமம் இதுதான். கார்போஹைடிரேட் அதிகமுள்ள அரிசி, கோதுமை போன்ற தானிய உணவுகளின் அடிப்படை சுபாவம், நாம் உள்ளே அனுப்பும் உணவின் பெரும்பகுதியை சக்தியாக்கிச் சேமித்து வைப்பது. அதாவது, கொழுப்பாக்கிச் சேமிப்பது.

கொழுப்புணவின் அடிப்படை, உள்ளே போகும்போதே சக்தியாக உருப்பெற்று செலவாவது. ‘கொழுப்பாதல்’ என்னும் ப்ராசஸ் அங்கு இல்லையல்லவா? நேரடி சக்தி. நேரடி செலவு. நாம் உண்ணும் உணவில் இருந்து பெரும்பகுதி. அதனோடுகூட ஏற்கெனவே உடலுக்குள் சேமிக்கப்பட்டிருக்கும் ஸ்டாக் கொழுப்பில் இருந்து ஒரு பகுதி. இப்படித்தான் கொழுப்பு கரைய ஆரம்பிக்கிறது. சேமிப்புக் கொழுப்பு கரையும்போது உடல் லேசாகத் தொடங்குகிறது. உடல் லேசாகும்போது நடப்பது, ஓடுவது அனைத்தும் எளிதாகிவிடுகிறது!

எண்ணி ஒரு மாதம். நடைப்பயிற்சி என் மொத்த மனோபாவத்தை, சுபாவத்தை, நடவடிக்கைகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. நம்ப முடியாத அளவுக்கு நான் சுறுசுறுப்பாக இருப்பதாக உணர்ந்தேன். ஒரு வேலையைச் செய்து முடித்ததும் எப்போதும் வருகிற அடித்துப் போடும் களைப்பு இல்லை. பத்து நிமிஷம் படுத்து எழுந்திருக்கலாம் என்கிற உணர்வில்லை. என்னத்தையாவது கொறிக்கலாம் என்ற எண்ணமில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்று மனம் பரபரக்க ஆரம்பித்ததை விழிப்புடன் கவனித்தேன். இதே காலக்கட்டத்தில்தான் இன்னொன்றும் நிகழத் தொடங்கியது. அது, பசி குறைந்து போதல்.

அது நான் பேலியோ தொடங்கிய மூன்றாவது மாதம். சுமார் பதினாலு அல்லது பதினைந்து கிலோ இளைத்திருந்தேன். பயங்கர கிளுகிளுப்பாக இருந்தது. பார்க்கிறவர்கள் எல்லோரும் என்னவென்று விசாரிக்க ஆரம்பித்திருந்தார்கள். யாராவது அகப்பட்டால் நானும் இழுத்து உட்காரவைத்துப் பிரசங்கம் செய்யத் தொடங்கியிருந்தேன். அது ஒரு வியாதியாகவே ஆகிவிட்டிருந்ததை உணர முடிந்தது. ஆனால், மகிழ்ச்சியான வியாதி. நான் புதிதாக ஒன்றைக் கண்டடைந்திருக்கிறேன். ஓர் உணவு முறை. வாழ்க்கை முறையைத் தலைகுப்புறப் புரட்டிப்போடுகிற உணவு முறை. இதன்மூலம் என் வியாதிகள் சொஸ்தமாகின்றன. உடம்பு இளைக்கிறது. என் இளமை எனக்கு திரும்பக் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. சாதனையல்லவா? சாகசமல்லவா?

முன்பெல்லாம் எனக்கு தினசரி ஐந்து வேளை பசி வரும். வரும் என்றால் மெதுவாகவெல்லாம் வராது. திடீரென்று ஒரு கணத்தில் வயிற்றுக்குள் ஒரு புரட்சி நிகழும். குப்பென்று உச்சந்தலையில் வியர்த்துவிடும். விரல்கள் நடுங்க ஆரம்பிக்கும். படபடப்பு கூடும். அடுத்த கணம் வயிற்றுக்குள் என்னத்தையாவது திணித்தால்தான் சரி. பத்து நிமிடம் தாமதமானாலும் முடிந்தது கதை. ரத்தக் கொதிப்பு எகிறிவிடும். இதனாலேயே கைவசம் எப்போதும் சில நொறுக்குத்தீனிகள் ஸ்டாக் வைத்திருப்பேன். உணவுக்குத் தாமதமானாலும் சிற்றுணவால் சற்றுச் சமாளித்துவிட முடியுமல்லவா? அதனால்.
3a.jpg
ஆனால், இப்போது எனக்கு அத்தகைய பசி உணர்ச்சி மெல்ல மெல்லக் குறைந்ததைக் கண்டேன். சிறுதீனிகள் நின்றுபோயிருந்தன. பேலியோ அனுமதித்த சீஸ், கொய்யாக்காய் வகையறாக்களைக் கூட நான் அதிகம் தொடவில்லை. காலை பாதாம் சாப்பிட்டுவிட்டு, மதியம் காய்கறிகளுக்குப் போகவே இன்னும் சிறிது நேரம் தள்ளலாமா என்று தோன்றியது. என் பிரச்னை என்னவென்றால் மதிய உணவை நான் ஒரு மணிக்கு முடித்தே தீரவேண்டும். பசி காரணமல்ல. சாப்பிட்டுவிட்டு இரண்டு மணிக்காவது படுத்தால்தான் ஆறு மணிக்கு எழுந்து என் வேலையைத் தொடங்க சௌகரியமாக இருக்கும்.

எழுத்துப் பணியில் இருப்பவன் பெரும்பாலும் ராக்கோழி. அதுவும் நான் இயங்குவது சீரியல் துறை. முதல் நாள் இரவுதான் அடுத்த நாளுக்கான திட்டமே பெரும்பாலும் வகுக்கப்படும். அதன்பிறகு உட்கார்ந்து எழுத ஆரம்பித்தால் முடிப்பதற்குள் பாதி பொழுது விடிந்துவிடும். இப்படி இரவெல்லாம் கண் விழிக்க வேண்டுமென்றால் பகலில் சற்றுத் தூங்கினால்தான் முடியும். இங்கேதான் எனக்கு அந்தச் சிக்கல் வந்தது. எந்தச் சிக்கல்? போன அத்தியாயத்துக்கு முந்தைய அத்தியாயத்தின் இறுதியில் சொல்லியிருந்தேனே, அந்தச் சிக்கல்.
ராத்திரி சாப்பாட்டுக்குப் பிறகு சுழற்றியடிக்கிற தூக்கம். அதைக் கெடுத்துக்கொண்டு எழுதவேண்டியிருப்பதில் உள்ள மெடபாலிசப் பிரச்னைகள்.

என்ன செய்யலாம் என்று சிந்தித்துக்கொண்டிருந்தபோது இன்னொரு நண்பர் அறிமுகமானார். அவர் பெயர் சவடன் பாலசுந்தரன். என்னைப் போலவே பெரும் கனபாடிகளாக இருந்து பேலியோவுக்கு வந்து உடம்பிளைத்தவர். அதுவும் கொஞ்சநஞ்சமல்ல. முப்பது கிலோக்களுக்கு மேல். அவர் சொன்ன ஒரு வார்த்தை என்னை வெகுவாக யோசிக்கவைத்தது. பசித்தால் உண்ணவேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம், பசிக்காதபோது உண்ணக்கூடாது என்பது! என்ன செய்யலாம்?

எளிது! உங்களுக்கு இரண்டு வேளை உணவு போதுமானதாகத் தோன்றுகிறதென்றால் மூன்றாவது வேளையை மறந்துவிடுங்கள். சாப்பிடாவிட்டால் சிறையில் வைத்துவிடுவேன் என்று யார் சொல்லுவது? அட, இது நன்றாக இருக்கிறதே என்று நினைத்தேன். ‘வாரியர்’ எனக்கு அறிமுகமானது இப்படித்தான். வாரியர் என்றால் விரதம். பேலியோவில் வாரியர் என்பதற்கு உண்ணாதிருப்பது என்று அர்த்தமில்லை. ஒரு நாளைக்குத் தேவையான மொத்தக் கலோரிகளை இருவேளை உணவிலேயே எடுத்துக் கொண்டுவிடுவது. அது பழகிவிட்டால் பிறகு ஒரே வேளை உணவு. ஆனால், முழு நாள் கலோரியும் அதில் கிடைத்தாக வேண்டும்! புரியவில்லை அல்லவா? விளக்குகிறேன்.

பேலியோ கிச்சன் - பட்டர் டீ
இது ஒரு காலை உணவு. முன்னூறு மில்லி அளவுக்கு இந்த டீயைக் குடித்துவிட்டுக் கிளம்பினீர்கள் என்றால் மதியம் இரண்டு, மூன்று மணி வரை பசிக்காது. படிக்கும்போது கொஞ்சம் கச்சாமுச்சாவென்று தெரியலாம். ஆனால், அருந்திப் பார்த்தால் விடமாட்டீர்கள். தேவை, முழுக் கொழுப்புப் பால் இருநூறு மில்லி. கொஞ்சம் வெந்நீர். டீத்தூள். முப்பது நாற்பது கிராம் வெண்ணெய். இரண்டு ஸ்பூன் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய். ரெகுலராக டீ போடுவது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? அதே முறைதான்.

டீயைப் போட்டு இறக்கி வைத்துவிட்டு அதில் முப்பது கிராம் வெண்ணெய் சேருங்கள். பிறகு இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றுங்கள். நன்றாகக் கரையும் வரை கலக்கிவிட்டு அப்படியே கல்ப் அடித்துவிடவும். படு பயங்கர டேஸ்ட்டாக இருக்கும். வாசனைக்கு வேண்டுமானால் பெருமாள் கோயில் தீர்த்தப்பொடி போட்டுக் கொள்ளலாம். இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். சர்க்கரை மட்டும் கூடாது. ஒரு சுறுசுறுப்பான காலைப் பொழுதுக்குத் தேவையான கொழுப்புச் சத்து, ப்ரோட்டீன் இரண்டும் இதிலுண்டு. செமையாகப் பசி தாங்கும்.
 

(தொடரும்)

www.kungumam.co.

  • தொடங்கியவர்

இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

அனுபவத் தொடர் - 16

சோறு தோன்றி, குழம்பு தோன்றாத காலம் தொட்டு, இன்று வரை வாழும் நமது கலாசார அடையாளங்களுள் ஒன்று விரதம் இருப்பது. ஆண்களைக் காட்டிலும் இந்த விஷயத்தில் பெண்கள் படு தீவிரவாதிகள். திங்களுக்கு ஒன்று, செவ்வாய்க்கு ஒன்று, வெள்ளிக்கு ஒன்று, சனிக்கு ஒன்று, புரட்டாசிக்கு ஒன்று, கார்த்திகைக்கு ஒன்று, சஷ்டிக்கு ஒன்று, நவராத்திரிக்கு ஒன்றென்று டிசைன் டிசைனாக விரதம் வகுப்பார்கள்.

விரதமோ வேறெதுவோ, கடைப்பிடிக்கும் ஒழுக்கத்துக்கு ஒரு பக்தி கோட்டிங் கொடுத்துவிடுவது. ‘நாயே பேயே’ என்று திட்டிக் கொண்டிராமல் ‘ராமா கிருஷ்ணா’ என்று சொல்லிக்கொண்டிருப்பதில் ஒன்றும் பிரச்னை இல்லையே? விரதம் இருப்பதன் காரணங்கள் இரண்டு. முதலாவது, உள் உறுப்புகளுக்கு ஓய்வு தருவது. குறிப்பாக கணையத்துக்கு. என்னத்தையாவது உள்ளே தள்ளிக்கொண்டே இருந்தால் இன்சுலின் சுரந்துகொண்டே இருக்க வேண்டும். உணவை சக்தியாக மாற்றுகிற செயல்பாடு நடந்துகொண்டே இருக்க வேண்டும்.
9.jpg
சட்டென்று ஒரு வேளை எதையுமே சாப்பிடாமல் இருந்தால் இன்சுலினுக்கு வேலை இராது. பதிலாக, ஏற்கெனவே சேர்த்து வைத்த கொழுப்புச் சொத்தில் கொஞ்சத்தை எடுத்து உடம்பு எரித்து சக்தியாக்கிவிடும். இரண்டாவது காரணம், மிக முக்கியமானது. வேளை தவறாமல், நேரம் தவறாமல் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் ஒருவர் சட்டென்று ஒரு பிரேக் எடுத்தால் உணவைப் பற்றிய ஞாபகம் அடிக்கடி அவருக்கு வரும்.

ருசி சார்ந்த இச்சைகள் எழும். அடுத்த வேளை சாப்பிட உட்காரும்போது வழக்கத்தைவிட ரசித்து ருசித்து உண்பார். உண்பது ஒரு கடமையல்ல. அது ஒரு கலை. போதிய அவகாசம் கொடுத்து, நிதானமாக அரைத்து உண்ணும் உணவு, திருப்தியின் முழுமையைக் காட்டித்தரும். இது அடுத்த வேளைப் பசியைச் சற்றுத் தள்ளிப்போடும். பேலியோ உணவு முறையில் இந்த விரதமானது முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் கையாளப்படுகிறது. இங்கே ஒருவேளை சாப்பிடாமல் இருப்பதால் ஒரு நாளில் நாம் உண்ணும் உணவின் அளவு குறையாது. உள்ளே போகும் கலோரி எண்ணிக்கை சரியாது. சாப்பிடாமல் இருக்கும் வேளையில் பசியும் இருக்காது.

அது எப்படி? எனக்கு நடந்ததையே சொல்கிறேன். ஒரு நாளைக்கு 1300 முதல் 1500 கலோரி அளவுக்கு நான் உணவு உட்கொள்ள வேண்டும் என்பது என் டயட் சார்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆயிரத்து ஐந்நூறு கலோரி உணவை பனீர், பாதாம், வெண்ணெய், நெய், தயிர், காய்கறிகள், தேங்காய், சீஸ் என்று பல்வேறு உணவுப் பொருள்களில் இருந்து எடுத்துக்கொண்டிருந்தேன்.

வாரியர் என்கிற விரத முறைக்கு நான் நகர்ந்தபோதும் இந்த ஆயிரத்து ஐந்நூறு கலோரி என்பதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதே பனீர், பாதாம் வகையறாக்கள்தாம். அதே அளவுதான். ஆனால் மூன்று வேளைக்குப் பிரித்து உண்டதை இரண்டு வேளைகளுக்குப் பிரித்துக்கொண்டேன். முடிந்தது விஷயம்! காலை உணவைத் தவிர்த்துவிட்டேன். ஒரு நாளில் என்னுடைய முதல் உணவானது மதியம் ஒரு மணிக்கு உண்பதாக இருந்தது. இந்த உணவில் இருநூறு கிராம் பனீர் இருக்கும். ஐம்பது கிராம் வெண்ணெய் இருக்கும். கால் கிலோவுக்குக் குறையாமல் என்னவாவது ஒரு காய், கீரை, நூறு மில்லி தயிர் எல்லாம் இருக்கும்.

காலை முதல் உண்ணாதிருப்பதால் இத்தனையையும் சேர்த்து உண்பது எளிதாகவும் இருந்தது. இந்த முதல் உணவை முடித்துவிட்டு இரவு எட்டு மணிக்கு அடுத்த உணவாக நெய்யில் வறுத்த நூறு பாதாம் பருப்புகள். தின்று தீர்த்தால் முடிந்தது ஒரு தினம். இதனால் என்ன ஆகிறது? இரவு ஒன்பது மணி முதல் மறுநாள் மதியம் ஒரு மணி வரை நான் எதையும் சாப்பிடுவதே இல்லை. மொத்தம் பதினாறு மணி நேரம் விரதம்! இந்த நேரத்தில் இன்சுலின் அதிகம் சுரக்கத் தேவை இருக்காது.

உண்டு முடித்த பண்டங்களை சக்தியாக்குகிற செயல் மட்டும் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கும். கூடவே ஏற்கெனவே சேமிப்பில் உள்ள கொழுப்பும் வேறு வழியின்றி உண்ணாத நேரத்தில் கரைய ஆரம்பிக்கும். இதனால் எடைக் குறைப்பு வேகமாக நடக்கத் தொடங்கும். இந்த சூட்சுமம் புரிந்ததும் சட்டென்று மதியம் - இரவு என்றிருந்த உணவு நேரத்தைக் காலை - மதியம் என்று மாற்றிக்கொண்டேன். காலை ஒன்பது மணிக்கு பாதாம் சாப்பிட்டுவிடுவது.
9a.jpg
மதியம் ஒரு மணிக்கு மற்ற உணவுகள். அதோடு சரி. ஒன்றரைக்கு சாப்பிட்டு முடித்து எழுந்துவிட்டால் அதோடு மறுநாள் காலை ஒன்பதுக்கு மறுபடியும் பாதாம். மதியம் சாப்பிட்டுவிட்டுக் கொஞ்ச நேரம் ஃபேஸ்புக் பார்த்துவிட்டுப் படுத்துவிடுவேன். மாலை வரை தூங்கி எழுந்து கலைச் சேவை செய்ய உட்கார்ந்தால், இப்போது இரவு நெடு நேரம் கண் விழிப்பது கஷ்டமாக இல்லாமல் போனது.

ஏனென்றால் இரவு உணவு என்ற ஒன்று இல்லாதபடியால் கண்ணை அழுத்தும் கன்னியைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட முடிந்தது! இதெல்லாம் அடாத செயல், மதியத் தூக்கம் உடம்புக்கு கெடுதல், அதுதான் குண்டடிக்க வைக்கும் என்றெல்லாம் யாராவது சொன்னால் நம்பாதீர்கள். பல்லாண்டு காலமாக ஒருநாள் தவறாமல் மதியம் இரண்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை அடித்துப் போட்டாற்போலத் தூங்குகிறேன். என் பொழுதே மாலை ஆறு மணிக்கு மேல்தான் விடிகிறது. இப்படி இயங்கித்தான் என்னால் இருபத்து எட்டு கிலோ எடை குறைக்க முடிந்திருக்கிறது!

மேற்படி இருவேளை உணவை பேலியோவில் 16:8 வாரியர் என்று சொல்லுவார்கள். அதாவது பதினாறு மணிநேர விரதம்; எட்டு மணி நேரங்களுக்குள் இரண்டு உணவுகள். இன்னொன்றும் இருக்கிறது. அது 20:4 வாரியர். இருபது மணி நேரம் உண்ணாமல் இருந்துவிட்டு நான்கு மணி நேரங்களுக்குள் இரண்டு உணவுகளை முடித்துக்கொள்வது. இது 16:8ஐ விட வீரியம் மிக்க விரத வழி. என்ன சாப்பிடுவதென்றாலும் நாலு மணி நேரத்தில் தின்று தீர்த்துவிடுவது. உடலுக்கு இருபது மணி நேர ஓய்வு அளிப்பதன்மூலம் கொழுப்பெரிப்பு நடவடிக்கை கனஜோராக நடக்கும்.

எனக்கு இந்த 20:4 சரிப்பட்டு வராது என்று தோன்றியது. ஏனென்றால் என்னுடைய மதிய உறக்கம் குறுக்கே விழுந்து கட்டையைப் போட்டுக்கொண்டிருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தேன். பேலியோ பழகிவிட்டிருந்ததில், பசியுணர்ச்சி கணிசமாகக் குறைந்திருந்தது. சரி, ஊரெல்லாம் 20:4 வாரியர் இருக்கட்டும், நாம் ஏன் 23:1 வாரியருக்கு மாறக்கூடாது என்று யோசித்தேன்.

அதாவது ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உண்பது. மொத்த 1500 கலோரி உணவையும் ஒரே அமர்வில் முடித்துவிடுவது! முடியுமா இது? என்னவாவது பிரச்னையாகிவிட்டால் என்ன செய்வது? கொஞ்சம் தயங்கித்தான் ஆரம்பித்தேன். அது நானே எதிர்பாராத விஷயம். ஒரு பரீட்சையாகத் தொடங்கியது, வெகு விரைவில் என் வாழ்வாகிப் போனது.
 

(தொடரும்)

- பா.ராகவன்


கொய்யாக்காய் பொரியல்

பேலியோவில் அனுமதிக்கப்படும் ஸ்நாக்ஸ் மிகக் குறைவு. அதிலொன்று கொய்யாக்காய். சற்றும் பழுக்காத கட்டைக்காய். இதை உண்பது சிரமமாக இருக்கிறது என்பவர்களுக்கு இந்தக் குறிப்பு பயன்படலாம். கொய்யாக்காயைத் துண்டுகளாக நறுக்கி நாலு நிமிடம் மைக்ரோவேவில் வைத்து எடுத்தால் கொஞ்சம் வெந்துவிடும். பிறகு வாணலியில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் தாளித்து, இக்காயைப் போடவும். உப்பு, மிளகாய்த் தூள், ருசிக்குக் கொஞ்சம் தனியாப் பொடி. சும்மா மூன்று நிமிடங்கள் வதக்கினால் போதும். அட்டகாசமான கொய்யாப் பொரியல் ரெடி! இதில் வெங்காயம் நறுக்கிப் போட்டால் இன்னுமே ருசிக்கும். என்ன கொஞ்சம் கார்ப் அளவு கூடும். மற்றபடி அருமையான பொரியல் இது.

www.kungumam.co.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

அனுபவத் தொடர் - 17

காலை கனமாக ஒரு டிபன். மதியம் கன ஜோராக விருந்து (நமக்கு வெறும் சாப்பாடெல்லாம் சரிப்பட்டு வராது. தினமுமே விருந்து தரத்தில் இருந்தாக வேண்டும்). ராத்திரியென்றால் கொஞ்சம் சுமாரான டிபன் போதும். இடைப்பட்ட பொழுதில் இருவேளை நொறுக்கு அவசியம். இப்படியாக உடலையும் உயிரையும் ஐந்து வேளை தின்று தீர்த்து வளர்த்துக் கொண்டிருந்தவன் நான். என்னால் ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு மட்டும் உட்கொண்டு உயிர் வாழ முடியுமா? சந்தேகம் வலுவாகவே இருந்தது. சரி ஒருநாள் முயற்சி செய்துதான் பார்ப்போமே என்று நினைத்தேன்.

அன்றைய தினத்துக்கு முதல் நாள் உடலைக் கொஞ்சம் சுத்திகரித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இரண்டு லோட்டா நிறைய கீரை ஸ்மூத்தி குடித்தேன். இந்த ஸ்மூத்தி விவகாரத்தை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் அல்லவா? என்னவாவது ஒரு கீரையுடன் பூண்டு, புதினா, கொத்துமல்லி, கருவேப்பிலை என்று கிடைக்கிற இலை தழைகளையெல்லாம் போட்டு பச்சையாக அரைத்து அப்படியே கல்ப்பாக அடித்துவிட வேண்டியது. இதனைச் செய்வதன் மூலம் என்ன நிகழ்கிறது என்றால், வெளியேறாமல் குடலுக்குள் தேங்கிக் கிடக்கும் அழுக்கெல்லாம் மொத்தமாக வெளியேறிவிடும். கிட்டத்தட்ட இது ஓர் இயற்கை எனிமா.
1.jpg
இதைத் தவிரவும் கீரை ஸ்மூத்தியால் வேறு சில பலன்கள் உண்டு. அதில் முதன்மையானது, நமது உள் உறுப்புகளை சர்வீஸ் செய்து வாட்டர் வாஷ் செய்து எடுத்தாற்போல் ஆக்குவது. சட்டென்று ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். உச்சந்தலை சூடெல்லாம் குறையும். ஒருநாள் இந்த ஸ்மூத்தியைக் குடித்துவிட்டால் மறுநாள் உடம்பானது என்ன மாதிரியான பரீட்சைக்கும் எளிதில் தயாராகிவிடும். ஆக, நான் தயார். குறிப்பிட்ட நாளுக்கு முதல் நாள் இரவு எட்டு மணிக்கு என் உணவை முடித்துக்கொண்டு படுத்துவிட்டேன். திட்டப்படி மறுநாள் இரவு எட்டு மணிக்குத்தான் அடுத்த உணவு.

விரதம் இருக்கிறேன் பேர்வழியென்று நாளெல்லாம் அமைதியாக ஓரிடத்தில் சும்மா உட்கார்ந்திருக்கவும் முடியாது. வழக்கமான வேலைகளும் நடக்க வேண்டும். அதே சமயம் சோர்வடைந்துவிடவும் கூடாது. முடியுமா இது? மடிந்தது! அன்று காலை கண் விழித்ததில் இருந்து இரவு எட்டு மணி வரை தண்ணீர் மட்டுமே குடித்துக்கொண்டிருந்தேன். எப்படியும் ஆறு லிட்டர் நீர் இருக்கும். நாம் சாப்பிடாமல் இருக்கிறோம் என்ற எண்ணம் இருக்கும் வரை லேசாகப் பசிப்பது போலவே இருந்தது. குறிப்பாகக் காலை பதினொரு மணி முதல் ஒரு மணி வரை ரொம்பப் படுத்தியெடுத்தது. அதன்பின் அந்த உணர்வில்லை. பரபரவென்று என் வேலைகளைப் பார்த்தேன்.

வழக்கம்போல் மதியம் இரண்டு மணிக்குப் படுத்துவிட்டேன். சாப்பிடாமல் படுத்தால் தூக்கம் வராது என்று ஒரு பாட்டிக் கதை சொல்லுவார்கள். எனக்கு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எப்போதும்போல் நிம்மதியாகவே தூங்கினேன். மாலை ஆறு மணிக்கு எழுந்து முகத்தைக் கழுவிக்கொண்டு எழுத உட்கார்ந்து இரவு எட்டரை வரை இடைவிடாமல் எழுதினேன். ஜனநாயகக் கடமையை எல்லாம் ஆற்று ஆற்றென்று ஆற்றி முடித்துவிட்டு உணவு உண்ண அமர்ந்தேன். சுமார் முன்னூறு கிராம் பனீர். வெங்காயம் தக்காளி குடைமிளகாயெல்லாம் போட்டு நெய் விட்டு வதக்கியது. அதோடு கால் கிலோ வெண்டைக்காய் பொரியல். ஐம்பது கிராம் வெண்ணெய். பத்தாத குறைக்கு ஒரு சீஸ் க்யூப். நூறு மில்லி தயிர்.

உண்டு முடித்தபோது கிர்ரென்றது. எழுந்துகொள்ள ஓரிரு நிமிடங்கள் பிடித்தன. சுமார் பத்திருபது நிமிடங்களில் உறங்கியும் விட்டேன். சரியான தூக்கம்! மறுநாள் காலை எழுந்தபோது கவனமாக வயிற்றை உற்றுக் கவனித்தேன். அது காலியாக இல்லை என்று உணர முடிந்தது. சட்டென்று காலைக் கடன்களை முடித்துவிட்டு நடக்கப் போனேன். ஒரு மணி நேரம் உற்சாகமான நடைப்பயிற்சி. நடக்கிறபோது புத்தகம் படிப்பது என் வழக்கங்களுள் ஒன்று. சிலநாள் பாட்டு கேட்டபடி நடப்பேன். சில நாள் படித்தபடி நடப்பேன். வெகுசில தினங்கள் மட்டுமே ஒன்றுமில்லாமல் வெறுமனே யோசித்தபடி நடப்பது. என் கருத்தில், பாட்டுக் கேட்டபடி நடப்பதைக் காட்டிலும் புத்தகம் படித்தபடி நடப்பது சிறப்பானது. எதிரே மோதுவதற்கு எருமைகள் இல்லாத பிராந்தியமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்வது மட்டும் முக்கியம்.
1a.jpg
இதில் என்ன லாபம் என்றால் மனமும் உடலும் ஒரே சமயத்தில் இயங்கத் தொடங்கும். பொதுவாக மூளை உழைப்பின்போது உடலுழைப்பு இராது. உடல் உழைப்பின்போது மூளைக்கு நாம் வேலை தருவதில்லை. படித்தபடி நடக்கிறபோது இந்த இரண்டும் ஒருங்கே நடைபெறுவதால், வழக்கமான நடை அனுபவம் தருகிற புத்துணர்ச்சியைக் காட்டிலும் இது சற்றுக் கூடுதலாக இருக்கும் இன்றைக்கும் இருபத்தி நான்கு மணி நேர விரதம் என்று வீட்டுக்குப் போனதும் அறிவித்தேன். ஒரு காப்பியாவது சாப்பிடக்கூடாதா என்று மனைவி கேட்டபோது மறுத்துவிட்டேன். தண்ணீர் மட்டும். முடியுமா? முடிந்தது.

முதல் நாள் காலை 11 மணிக்குப் பசிக்கிற மாதிரி இருந்தது என்று சொன்னேன் அல்லவா? அந்த இரண்டாம் நாள் அந்த உணர்ச்சி இல்லை. மாறாக முதல் தினத்தைக் காட்டிலும் உற்சாகமாக இருந்தேன். அன்றெல்லாம் ஐந்து லிட்டர் தண்ணீர் அருந்தியிருப்பேன். ஆனால், மாலை ஆறு மணிவாக்கில் அன்று வயிறானது தன் வேலையைக் காட்டத் தொடங்கியது. அது பசிதான். ஆனால், வேறு விதமாக இருந்தது. வயிற்றுக்குள் கடமுடாவென்று பலத்த சத்தம். எழுந்து நின்றால் கால்கள் உதறின. சாப்பிட்டுவிடலாமா என்று ஒரு யோசனை. கட்டக்கடைசிப் பொழுதில் விரதத்தைக் கெடுப்பதா என்று கூடவே ஒரு எதிர் யோசனை.

பொதுவாக சாப்பாட்டு விஷயத்தில் நான் இம்மாதிரியான பரிசோதனைகள் எதையும் அதற்குமுன் செய்ததில்லை. உணவு விஷயத்தில் நான் செய்கிற ஒரே பரிசோதனை, விதவிதமாக உண்டு பார்ப்பது மட்டுமே. எனவே இந்த அனுபவம் புதிதாக இருந்தது. எப்படியோ தாக்குப் பிடித்து எட்டு மணியைத் தொட்டேன். ஆ, உணவு! அன்றைக்கு கத்திரிக்காய் பொரியல். பனீரை உப்புமா போல் சமைத்திருந்தது. ஒரு தீவிரவாதியைப் போல் அனைத்தையும் தின்று தீர்த்துவிட்டுப் படுத்தேன். மறுநாள் காலை எழுந்து எடை பார்த்தபோது திகைத்துவிட்டேன். எண்ணி இரண்டே நாள். இரண்டே முக்கால் கிலோ குறைந்திருந்தேன்!
 

(தொடரும்)

 

- பா.ராகவன்


பாலக் பனீர்

செய்வது எப்படி?
ஒரு கட்டு பாலக் கீரை. 200 கிராம் பனீர். இரண்டு தக்காளிப் பழம். ஒரு வெங்காயம். ஒரு இஞ்ச் இஞ்சி. நாலு பல் பூண்டு. கொஞ்சம் கொத்துமல்லி. நெய். ஃப்ரெஷ் க்ரீம். முடிந்தது. கீரையை ஆய்ந்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காய வகையறாக்களை நறுக்கி வைத்துக்கொள்ளவும். வெந்த கீரையை மிக்சியில் நன்கு அரைத்துக்கொள்ளவும். கீரை அரைத்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டுகளைப் போட்டுத் தனியே அரைக்கவும். அடுப்பில் வாணலி. அதில் கொஞ்சம் நெய். நெய் உருகி வாசனை வந்ததும் வெங்காய பேஸ்ட்டைப் போட்டு வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளித் துண்டுகள், ஒரு பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கல். பதம் வந்ததும் இரண்டு ஏலக்காயைத் தட்டிப் போடுங்கள்.

சும்மா கும்மென்று மணமடிக்கும். இதுதான் சமயம். அரைத்து வைத்திருக்கும் கீரையை இதில் கொட்டி உப்பு, மிளகாய்த் தூள் போட்டு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடுங்கள். தண்ணீர் வற்றத் தொடங்கி, இந்தக் கீரை கோல்கேட் பேஸ்ட் பதத்தை நோக்கி நகர ஆரம்பிக்கும் நேரத்தில் நறுக்கிய பனீர் துண்டுகளைப் போட்டு வேகவிடுங்கள். இரண்டு நிமிடம் போதும். கொத்துமல்லியைக் கசக்கிப் போட்டு, மேலுக்கு ஒரு ஸ்பூன் நெய் விட்டு மூடி வைத்துவிடுங்கள். ஐந்து நிமிடங்களுக்குப் பின் திறந்தால் அருமையான பாலக் பனீர் தயார்!

www.kungumam.co

  • தொடங்கியவர்

இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

அனுபவத் தொடர் - 18

பசித்துப் புசி என்று பாட்டி காலத்துச் சொலவடை ஒன்று உண்டு. பேலியோவின் அடிப்படையே அதுதான். பசியெடுத்துவிட்டால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வயிறு நிரம்பும் வரை உண்டு தீர்த்துவிட வேண்டும். அந்தத் தீனித் திருவிழா முடிந்ததா, அடுத்த கணம் சாப்பாட்டை மறந்துவிட்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட வேண்டும். மீண்டும் பசியுணர்ச்சி எட்டிப் பார்க்கிறவரை வாய்க்கும் வயிற்றுக்கும் ஓய்வு.

சாதாரணமாக நாம் உட்கொள்ளும் கார்போஹைடிரேட் நிறைந்த உணவானது, உண்டு முடித்த நான்கு மணி நேரத்தில் மீண்டும் பசியைக் கிளப்பக்கூடிய இயல்பு கொண்டது. பேலியோ பரிந்துரைக்கும் கொழுப்புணவுக்கு அந்தக் கெட்ட வழக்கம் கிடையாது. ஒரு முழு பேலியோ உணவானது (சுமார் 1500 கலோரி) தாராளமாக இருபத்து நான்கு மணி நேரம் பசிக்காதிருக்க வைக்கும்!
7.jpg
இதன் நிகர லாபம் என்ன?
ஒரு நாளில் நாம் சாப்பிடும் நேரம் என்பது மிஞ்சிப் போனால் ஒரு மணி நேரம். அதற்குள் முடித்துவிடுகிறோம். மிச்சமுள்ள இருபத்து மூன்று மணி நேரமும் உண்ட உணவை ப்ராசஸ் செய்யத்தான். உடல் இயந்திரம் அதை சிரத்தையாக, தொந்தரவு ஏதுமின்றிச் செய்து முடிப்பதால் அடைபட்ட கொழுப்பெல்லாம் கரையத் தொடங்குகிறது. தவிர, இந்த உணவில் மாவுச் சத்து அதிகம் இல்லை என்பதால் இன்சுலினுக்கு வேலையில்லை. குறைந்த அளவு மாவுச் சத்து, குறைந்த இன்சுலின் சுரப்பு என்பது ரத்த சர்க்கரை அளவை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து சேர்க்கும்.

பேலியோ தொடங்கும் முன் என்னுடைய மும்மாத ரத்த சராசரி (HbA1c) 6.8 ஆக இருந்தது. பேலியோ ஆரம்பித்து அது படிப்படியாக இறங்கி வந்து 16:8 வாரியரில் இருந்தபோதே 6.2க்கு வந்துவிட்டது. என்றைக்கு நான் ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு என்ற நிலையை எட்டினேனோ, அன்று முதல் சர்க்கரை அபாயம் முற்றிலும் நீங்கி 5.6 என்கிற Safe Zoneக்குப் போய்விட்டேன். என் ரத்த அழுத்தப் பிரச்னையும் இந்நேரம் சரியாகியிருக்க வேண்டுமல்லவா? எதற்கும் டாக்டரைப் பார்த்துக் கேட்டுவிடலாம் என்று முடிவு செய்து ஒரு நாள் காலை நான் வழக்கமாகச் சந்திக்கும் மருத்து வரைப் பார்க்கப் போனேன். என்ன என்று கேட்டார்.

ரத்த சர்க்கரை பார்க்க வேண்டும். ரத்த அழுத்தம் பார்க்க வேண்டும். அதற்கென்ன பார்த்தால் போயிற்று என்று முதலில் என் குருதிக் கடலில் இருந்து ஒரு சொட்டு எடுத்துக் கருவியில் இட்டுப் பார்த்தார். அது ரேண்டம் பரிசோதனைதான். தொண்ணூற்று ஆறோ, தொண்ணூற்று ஏழோ காட்டியது. ‘காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடவில்லையா?’ என்று கேட்டார்.
7a.jpg
‘இல்லையே டாக்டர்! எழுந்ததும் ஒரு காப்பி சாப்பிட்டேன். அதன்பிறகு ஒரு பெரிய லோட்டா நிறைய கீரை ஜூஸ் சாப்பிட்டேன். மற்றபடி இன்னும் திடமாக ஏதும் உண்ணவில்லையே!’ என்று சொன்னேன். டாக்டருக்குக் கொஞ்சம் குழப்பமாக இருந்தது. எனக்கும் கொஞ்சம் சந்தேகம்தான்.

எதற்கும் இருக்கட்டும் என்று மறுநாள் காப்பி கூடச் சாப்பிடாமல் ஒரு முறை ரத்தப் பரிசோதனை செய்தேன் (ஃபாஸ்டிங்). அதில் தொண்ணூறு காட்டியது. பிறகு கொஞ்ச நேரம் கழித்து இருநூறு மில்லி அளவுக்கு திடமாக பட்டர் காப்பி அடித்துவிட்டுப் போய் மீண்டும் பரிசோதித்துப் பார்த்தேன். முந்தைய நாள் காட்டிய அதே தொண்ணூற்று ஆறுதான் காட்டியது.

‘இது நம்ப முடியாத ஆச்சரியம்’ என்று டாக்டர் சொன்னார். இதில் நம்புவதற்குக் கஷ்டமாக என்ன இருக்கிறது? சாப்பிட்ட எதிலும் சர்க்கரையே இல்லாத பட்சத்தில் ரத்த சர்க்கரை மட்டும் எப்படி ஏறும்? ஆனால், பசி அடங்கும். உற்சாகம் கூடும். பரபரவென்று வேலைகளைப் பார்க்க முடியும். இது பெரிதல்லவா? வரமல்லவா? சொல்லி வைத்த மாதிரி என்னுடைய ரத்த அழுத்த எண்களும் சீராகத் தொடங்கியிருந்தன.

ஒரு நாளைக்கு மூன்று மாத்திரை எடுத்துக் கொண்டிருந்தேன் அதுவரை. டாக்டர் அதை ஒரு மாத்திரையாகக் குறைத்தார். ‘நீங்கள் சொல்லும் டயட் எனக்கு அவ்வளவாகப் புரியவில்லை. ஆனால், நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. வாழ்த்துகள்’ என்று சொன்னார். நூற்றுப் பதினொரு கிலோ எடை கொண்ட ஒரு மனித உருண்டையாக உலவிக் கொண்டிருந்தவன், சரசரவென்று எடை இழந்து நான்கு மாதங்களில் எண்பத்தி எட்டு கிலோவுக்கு வந்து சேர்ந்திருந்தேன்.

இப்போது என்னால் நடக்க மட்டுமல்ல; ஓடவும் முடிந்தது. இது எனக்கே பெரும் ஆச்சரியமாக இருந்தது. எனது தினசரி நடைப் பயிற்சியின்போது ஐந்து நிமிடம், பத்து நிமிடம் என்று ஓடிப் பார்க்கவும் தொடங்கியிருந்தேன். நான் ஓடுவதை ஒருநாள் என் தம்பி எனக்கே தெரியாமல் வீடியோ எடுத்து அனுப்பியிருந்தான். ஒரு பெருச்சாளி ஓடுவது போலத்தான் இருந்தது.

ஆனாலும் நான் ஓடுகிறேன்! கிட்டத்தட்ட இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இது சாத்தியமாகியிருக்கிறது என்பது எப்பேர்ப்பட்ட விஷயம்! வாழ்வில் அதுநாள் வரை அனுபவித்திராத கிளுகிளுப்புணர்வை அனுபவித்துக்கொண்டு சௌக்கியமாக எடை குறைந்து கொண்டிருந்தேன். சட்டென்று ஒருநாள் அந்த ப்ராசஸ் நின்று போனது. அநேகமாக தினமும் எடை பார்த்துக்கொண்டிருப்பவன் நான்.

ஒரு மாறுதலுக்கு வாரம் ஒரு முறை பார்த்தால் போதும் என்று ஓரிரு வாரங்கள் நிறுத்திவிட்டு மீண்டும் பார்த்தபோது அதே பழைய எடையிலேயே இருப்பதைக் கண்டேன். இன்னும் ஒரு வாரம் பொறுத்திருந்து பார்த்தபோது, அப்போதும் அதே பழைய எடை. கொஞ்சம் குழப்பமாக இருந்தது. பொதுவாக பேலியோ பழகுவோருக்கு எடைக் குறைப்பு நிற்கும்போது வாரியர் கைகொடுக்கும். அதாவது, விரத முறையைப் பின்பற்றினால் எடைக் குறைப்பு மீண்டும் நிகழத் தொடங்கும். என் விஷயத்தில் அது தலைகீழாக இருந்தது.
7b.jpg
இருவேளை உணவு உட்கொண்டிருந்த வரையிலுமே சரசரவெனக் குறைந்துகொண்டிருந்த எடையானது, ஒருவேளை உணவுக்கு மாறிய பிறகு எப்படி நின்றது? ஒருவேளைதான் சாப்பிடுகிறோம் என்ற உணர்வில் கண்டபடி எக்கச்சக்கமாகச் சாப்பிட்டுவிடுகிறேனோ? அப்படியெல்லாம் இல்லையே. அது முடியவும் முடியாதல்லவா? இட்லி தோசை சாம்பார் சாதத்தை வளைத்துக் கட்டுவது போல உங்களால் பனீரைச் சாப்பிட முடியாது.

அது கொழுப்புப் பொருள். ஓரளவுக்கு மேல் உள்ளே போக மக்கர் செய்யும். தவிர நான் ரா கலோரிக்காக தினமும் ஐம்பது கிராம் வெண்ணெய் வேறு சேர்த்து எடுத்துக்கொண்டிருந்தேன். ஐம்பது கிராம் வெண்ணெய் என்பது குத்து மதிப்பாக முன்னூற்று ஐம்பது கலோரிகளுக்கு வரும். மிச்சத்துக்கு பனீர். மேலுக்குக் காய்கறிகள். பத்தாது?

எனக்கென்னவோ சரியாகத்தான் சாப்பிடுவதாகத் தோன்றியது. தினசரி நடையில் குறைவில்லை. ஆனாலும் ஏன் எடைக் குறைப்பு நின்றது?
என்னமோ போரடித்து நின்றுவிட்டது என்றெல்லாம் இதில் குத்து மதிப்பாக அடித்துவிட முடியாது. பேலியோ என்பது அறிவியல். அனைத்துக்கும் காரண காரியம் உண்டு. அதைக் கண்டுபிடிக்காமல் விடுவதில்லை என்று முடிவு செய்துகொண்டேன்.
 

(தொடரும்)

- பா.ராகவன்


பேலியோ கிச்சன்

பனீர் கில்மா

ஒரு பாக்கெட் பனீர். அதை வைகையில் போட்ட தெர்மாகோல்களின் மினியேச்சர் வடிவங்களாக வெட்டிக்கொள்ளவும். அடுப்பில் வாணலி, அதில் நாலு ஸ்பூன் நெய். பனீரை அதில் போட்டு பொன்னிறத்தில் வறுத்தெடுத்து வைக்கவும். பிறகு அதே கடாயில் மேலும் நெய்விட்டு கடுகு, கருவேப்பிலை, ப.மிளகாய் வகையறாக்களைத் தாளித்து, ஒரு கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்டைப் போட்டு வதக்கவும். பிறகு சிறிது தண்ணீர்.

அதன்பின் நறுக்கிய தக்காளி, வெங்காயம் ஒன்றிரண்டு. மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி தலா ஒரு ஸ்பூன். ருசிக்கு உப்பு மற்றும் மசாலாப் பொடி. மொத்தமாகக் கலந்து வதக்கினால் சும்மா தளதளவென்று ஒரு பதத்தில் இது கொதிக்கும். கொதி வந்ததும் மேற்படி வறுத்து வைத்த பனீரை இதில் சேர்த்துப் புரட்டியெடுக்கவும். தண்ணீர் முழுதும் வற்றும் நேரம் இரண்டு கரண்டி வெண்ணெய் சேர்த்துக் கிளறி இறக்கவும். அலங்காரத்துக்கு கொத்துமல்லி, கேரட் துருவல் இத்தியாதிகள். இதற்கு பனீர் கில்மா என்று பெயர் வைத்திருக்கிறேன். அருமையான மதிய உணவு.

www.kungumam.co.

  • தொடங்கியவர்

இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

 

அனுபவத் தொடர் - 19

இந்த அம்மாக்கள், பாட்டிகள், அத்தைப் பாட்டிகள் சமூகத்தாருக்கு ஒரு வழக்கம் உண்டு. வருமானம் ஒழுங்காக இருந்து, குடும்பத்தில் பெரிய பஞ்ச காலமெல்லாம் இல்லாதிருந்தாலும் வீட்டுச் செலவுக்கென்று நிர்ணயிக்கப்படும் தொகையில் சுமார் நாலைந்து சதவீதத்தைத் தனியே எடுத்து கிச்சனில் ஒளித்து வைப்பார்கள். பருப்பு டப்பாக்களிலும் பூஜையறைப் படங்களின் பின்னாலும் புருஷன்காரன் தொடவே விரும்பாத பழைய சட்டை பாக்கெட்டுகளிலுமாக அவர்கள் அவ்வாறு சுருட்டிச் சுருட்டிச் சொருகி வைக்கிற பணத்தைப் பல சமயம் அவர்களே மறந்தும் விடுவார்கள்.

எப்போதாவது பண நெருக்கடி பெரிய அளவில் உருவாகும்போது கனவில் இருந்து விழிப்பதுபோல அவர்களுக்கு அந்தப் பணம் நினைவுக்கு வரும். பாய்ந்து சென்று ஒளித்து வைத்த இடத்தில் இருந்து எடுத்து வந்து சுருக்கம் நீக்கி நீட்டுவார்கள். பெண்களின் இந்த இயல்பு அடிப்படையில் நமது உடலின் இயல்பே. எதற்கும் இருக்கட்டும் என்று தேவை இல்லாத சமயத்திலும் தனியே கொஞ்சம் எடுத்துச் சேர்த்து வைக்கிற இயல்பு. நாம் என்ன சாப்பிட்டாலும் அதைச் சக்தியாக்கிச் செலவு செய்வது போக, நாளைக்குக் கொஞ்சம் இருந்துவிட்டுப் போகட்டும் என்று கொழுப்பாக உருமாற்றிச் சேகரித்து வைக்கிற இயல்பு உடலுக்கு உண்டு.
4.jpg
மனித குல வரலாறெங்கும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியதன் விளைவு இது. உணவில்லாக் காலங்களில் உயிரைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடிப் போராடி உடம்பானது தன் இயல்பாக ‘எதற்கும் இருக்கட்டும்’ என்று உள்ளே போகிற அனைத்திலும் ஒரு பகுதியை எடுத்துச் சேர்த்து வைக்கத் தொடங்கிவிட்டது. இந்தியாவிலேயேகூட எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் வரை உணவுப் பஞ்சம் என்ற ஒன்று இருந்திருக்கிறது. உண்ண ஏதுமின்றி கொத்துக் கொத்தாக மனிதர்கள் மடிந்துபோயிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்தபிறகுதான் பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி வகையறாக்களுக்கு வேளை வரத் தொடங்கியது.

இதனைக் குறிப்பிடுவதன் காரணம் புரிகிறதா? எனது எடைக்குறைப்பு யாகம் கெட்டுப் போனதைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். பரம ஒழுக்கமாக டயட்டைக் கடைப்பிடித்து, ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு உண்டாலே முழுநாள் பசி தாங்கும் அளவுக்கு உடம்பைப் பழக்கி வைத்த பிறகும் எப்படி எனக்கு எடைக் குறைப்பு நிற்கும்? இப்படியெல்லாம் அழிச்சாட்டியம் செய்தால் நான் எப்படி இலியானாவைத் தோற்கடிப்பது? இதற்கான காரணத்தைத் தேடியபோதுதான் இந்த உண்மை தெரிய வந்தது. மாவுச்சத்து மிக்க உணவில் இருந்து கொழுப்புச் சத்து உணவு முறைக்கு மாறியபோது ஏற்பட்ட அதிர்ச்சியில் நிலைகுலைந்து சரசரவென்று எடை குறைய ஆரம்பித்தது.

என்னடா இவன் என்னத்தையோ தின்று தொலைக்கிறானே, இது நமக்குப் பழக்கமில்லையே என்று முதலில் உடம்பு காட்டிய எதிர்ப்பின் விளைவு அது. உணவில் சர்க்கரையே கிடையாது; எனவே இன்சுலினுக்கு மவுசும் கிடையாது என்ற நிலைக்குக் கொண்டுபோனபோது, வேறு வழியின்றி உடல் இயந்திரம் கொழுப்பை எரித்து சக்தியை உருவாக்கத் தொடங்கியது. தோதாக, ரத்த சர்க்கரை அளவு சீரானது, ரத்த அழுத்த அளவு சீரானது போன்ற உபரி லாபங்கள். சட்டென்று ஒருநாள் உடல் தன் இயல்புப்படி சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது.

தறுதலை எங்கோ போய் என்னத்தையோ புதிதாகக் கற்றுக்கொண்டு வந்திருக்கிறான் போலிருக்கிறது; இனி இவன் கொழுப்பெடுத்துத்தான் திரிவான்; ஒன்றும் செய்ய முடியாது என்பது அதற்குப் புரிந்திருக்கிறது. சொன்னேனல்லவா? மனித உடல் என்பது பெண்மையின் குணத்தைக் கொண்டது. எனவே, இனி இவன் இப்படித்தான் உண்பான்; இதனை வைத்துத்தான் சக்தியை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற தெளிவு உண்டானதும், தன் வழக்கப்படி உள்ளே போகும் கொழுப்பிலும் ஒரு பகுதியை அது சேமிக்கத் தொடங்கிவிடுகிறது! முன்னர் கார்போஹைடிரேட் உணவாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, மாவுச் சத்தைக் கொழுப்பாக்கிச் சேமித்தது.
4a.jpg
இப்போது கொழுப்புணவே என்பதால், நேரடிக் கொழுப்பிலேயே கொஞ்சம்! ஆனால், கடவுளே, ஏற்கெனவே சேகரமாகியிருக்கும் விந்திய சாத்பூரா அளவுக்கான கொழுப்புக் குன்றுகளைக் கரைக்கவே அல்லவா நான் கொழுப்புணவுக்கே மாறினேன்? இது முள்ளை முள்ளால் எடுக்கிற முயற்சி அல்லவா? அந்த வேலையை விட்டுவிட்டு, இப்போது உண்ணுகிற உணவிலும் ஒரு பகுதியை உடம்பு சேகரிக்கத் தொடங்கினால் நான் என்ன ஆவேன்! ஒன்றுமே செய்ய முடியாது. உடலின் இயல்பு அதுதான். ஒரு கட்டத்துக்குமேல் அது அப்படித்தான் செய்யும். என்றால் எடைக் குறைப்பு அவ்வளவுதானா?

இல்லை; அதற்கும் வழி இருக்கிறது என்று சொன்னார்கள். எப்படி கார்ப் உணவில் இருந்து கொழுப்புணவுக்கு மாறியபோது ஏற்பட்ட அதிர்ச்சியில் சரசரவென எடைக் குறைப்பு நிகழ்ந்ததோ, அதே மாதிரி இப்போது கொழுப்பிலிருந்து தடாலென்று ஒருநாள் கார்ப் உணவுக்கு மாறி மீண்டும் ஒரு ரிவர்ஸ் கியர் போட்டால் மீண்டும் எடைக்குறைப்பு நடக்கும் என்று சில புத்தகங்களில் படித்தேன். என் நண்பர் ஈரோடு செந்தில்குமார் இதனை ஒரு யக்ஞம் போலவே செயல்படுத்திக் கொண்டிருந்தார். முன்பே சொல்லியிருக்கிறேனல்லவா? அவர் 192 கிலோவில் இருந்து குறைந்துகொண்டு வருபவர்.

எடைக் குறைப்பு நிற்கிறதென்று தோன்றினால் உடனே ஒருநாள் பழைய சாப்பாட்டுக்குப் போய்விடுவார். நன்றாக மூன்று வேளை அரிசிச் சோறு. சாம்பார், ரசம் வகையறாக்கள். பேலியோ அனுமதிக்காத அநியாய மாவுச் சத்து மிக்க காய்கறிகள். பத்தாத குறைக்கு இனிப்புகள், பலகாரங்கள். கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக கொழுப்புணவுக்குப் பழகிப் போயிருக்கும் உடலுக்கு இந்த திடீர் கார்போஹைடிரேட் தாக்குதல் படு பயங்கர அதிர்ச்சி அளிக்கும். அதற்கு என்ன செய்வதென்றே தெரியாது. இதைத்தான் ஓராண்டுக்கு முன்னால் இந்தப் பன்னாடை பிறந்ததில் இருந்து தின்றுகொண்டிருந்திருக்கிறான்; அதைத்தான் நாமும் கர்ம சிரத்தையாக சேமித்து வைத்திருக்கிறோம் என்பதெல்லாம் அதற்கு மறந்துவிட்டிருக்கும்!

புதிய உணவுத் தாக்குதல் என்று எண்ணி, அதைச் சமாளிக்கப் போராடும். அந்தப் போராட்ட முயற்சியில் மீண்டும் தடாலென்று எடை சரிய ஆரம்பிக்கும் என்பதுதான் இதன் சித்தாந்தம். அட, இது நன்றாக இருக்கிறதே; நாமும் செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். என் திட்டம் பின்வருமாறு: ஒருநாள் - ஒரு வேளை மட்டும் பழைய அரிசிச் சாப்பாடு. ஒரு பிளேட் புளியோதரை. ஒரு பிளேட் சாம்பார் சாதம். இன்னொரு பிளேட் தயிர் சாதம். உருளைக்கிழங்கு ரோஸ்ட். அவியல். பொரித்த அப்பளம். பத்தாது? ம்ஹும். பத்தாது.

இறுதியில் ஒரு ஐஸ் க்ரீம். இப்படிச் சாப்பிட்டுவிட்டு அடுத்த நாற்பத்தியெட்டு மணி நேரம் முழுப்பட்டினி போட்டால் என்ன ஆகும்? கண்டிப்பாக எடை குறையும் என்று தோன்றியது. ஆனால் நாற்பத்தியெட்டு மணி நேர உண்ணாவிரதம் முடியுமா? பார்த்துவிடலாம் என்று களத்தில் இறங்கினேன்.
 

(தொடரும்)

- பா.ராகவன்


பேலியோ கிச்சன் (பாதாம் அல்வா)

பேலியோவில் பாதாம் உண்டு, நெய் உண்டு; ஆனால் பாதாம் அல்வா கிடையாது. அதாவது சர்க்கரை கூடாது என்பதுதான் கான்செப்ட். அதனாலென்ன? சர்க்கரை இல்லாமல் ஒரு பாதாம் அல்வா செய்யலாம். பாதாமை ஊறவைத்து மிக்சியில் போடவும். கொஞ்சம் அரைத்தபின் துருவிய தேங்காய் அரை மூடி சேர்த்து மீண்டும் அரைக்கவும். நறநறவென்று தேங்காய் சட்னி பதம் வந்ததும் எடுத்து வைத்துக்கொள்ளவும். முழுக்கப் பழுக்காத பப்பாளி ஒரு கை அள்ளி அதே மிக்சியில் போட்டு ,அரை தம்ளர் இளநீர் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
மேற்படி பாதாம் துவையலில் இந்த பப்பாளிச் சட்னியைச் சேர்த்துக் கலந்து ரெடியாக வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலி. அதிலே நெய். நெய் காயும் வாசனை வந்ததும் இதை எடுத்து அதில் போட்டுக் கிளற வேண்டியது. வழக்கமான ஏலக்காய் உள்ளிட்ட நானாவித வாசனாதி திரவியங்களைச் சேர்த்துக்கொள்வது உங்கள்பாடு. இனிப்பு ரொம்ப மட்டாக இருக்கும். ஆனால் ருசி அபாரமாக இருக்கும். குறிப்பு: எடைக்குறைப்பில் இருக்கும்போது பப்பாளி, இளநீர் கூடாது. ஓரளவு எடை குறைந்தவர்கள் இதனை முயற்சி செய்யலாம்.

www.kungumam.co

  • தொடங்கியவர்

இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

அனுபவத் தொடர் - 20

நானெல்லாம் தின்னாமல் இருந்த நாளே கிடையாது. பத்து நிமிடம் கூடப் பசி பொறுக்க மாட்டேன். மூன்று வேளை சாப்பாடும் முப்பது வேளை நொறுக்குத்தீனியுமாக வாழ்நாளில் பாதியைக் கடந்துவிட்டு சட்டென்று விரதமெல்லாம் என்னால் இருக்க முடிகிறது என்றால் அதனை என் வீட்டார் அல்ல; என்னாலேயே நம்ப முடியவில்லை. இதனைச் சரியாகப் புரிந்துகொள்ளுவதற்கு ஒரே ஓர் உதாரணம்தான் உண்டு.
6.jpg
நாம், நமது சம்பாத்தியம், நமது குடும்பம். இது ஒரு பக்கம். ரிடையராகி பென்ஷன் பணம் வாங்கும் நமது தந்தை, தாத்தா - அவர்கள் நடத்தும் குடும்பம்; அது எதிர்ப்பக்கம். இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். நமது சம்பாத்தியம் என்பது இப்போது நடப்பது. மாதம் முழுதும் உழைத்து, ஒரே ஒருநாள் சம்பளம் வாங்கி வந்து அதை அடுத்த மாதம் முழுவதற்கும் செலவு செய்கிறோம்.

ரிடையர் ஆனவர்கள், பென்ஷன் வாங்குவோர் என்ன செய்கிறார்கள்? என்றோ உழைத்து முடித்துவிட்டவர்கள் அவர்கள். கொடுத்த கூலி குறைவு என்று அரசாங்கம் பெரிய மனது பண்ணி இப்போது மாதம் கொஞ்சமாக விடாமல் அனுப்பிக்கொண்டிருக்கிறது. அது சம்பந்தப்பட்டவர் உயிருள்ளவரை வந்துகொண்டேதான் இருக்கும்.

அவர்களும் சாப்பாட்டுக்கு, மருந்து மாத்திரைகளுக்கு, தீர்த்த யாத்திரைகளுக்கு அந்தக் காசை செலவு பண்ணிக்கொண்டிருப்பார்கள். ‘என் இறுதிச் சடங்குக்கு’ என்று சீட்டு எழுதி வைத்து தனியே ஒரு தொகையை ஒரு பர்ஸில் போட்டு பீரோவுக்குள் வைத்திருந்த பெரியவர் ஒருவரை எனக்குத் தெரியும். ஆனால், அவரது இறுதிச் சடங்கு அந்தப் பணத்தில்தான் நடந்ததா என்று தெரியாது.

இப்போது யோசிக்கலாம். என்றைக்கோ உழைத்ததற்கான கூலி மிச்சம் அவர்களுக்கு இன்னமும் எப்படி வந்து கொண்டிருக்கிறதோ, அம்மாதிரிதான் நம் உடல் இயந்திரமானது, இதுநாள் வரை சேர்த்து வைத்த கொழுப்பை விரத காலங்களில் எரித்து சக்தியாக மாற்றிக் கொடுக்கும். என்ன ஒன்று, வழக்கமான அரிசிச் சாப்பாடு சாப்பிடுவோர் இப்படி விரதம் இருக்கும்போது பசி தெரியும்.

வயிறு எரியும். தலை சுற்றிக் கண் இருட்டும். காதடைத்து, கொய்ங் என்றொரு சத்தம் கேட்கும். கை கால் மெல்ல நடுங்கும். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதியஸ்தர்கள் என்றால் அடித்து வீழ்த்தியே விடும். ஆனால், கொழுப்புணவு உண்ணும் வழக்கம் வந்துவிட்டால் மேற்படி தேகாவஸ்தைகள் இராது. இந்த உணவின் சிறப்பே அதுதான். எப்படி சாப்பிட்டாலும் சாப்பிடாதிருப்பது போலவே வயிறு லேசாக இருக்குமோ, அதேபோல் சாப்பிடாதிருக்கும்போதும் சாப்பிட்ட மாதிரியே இருக்கும்.
6a.jpg
அந்த தைரியத்தில்தான் நான் நாற்பத்தி எட்டு மணி நேர விரதம் இருக்கலாம் என்று முடிவு செய்தேன். இம்மாதிரி விரத காலங்களில் தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியம். எப்போதும் கையில் ஒரு பாட்டிலுடனேயே திரிய வேண்டியிருக்கும். உடம்பு டீ ஹைடிரேட் ஆகாதிருப்பது முக்கியம். ரொம்ப தேவைப்பட்டால் ஒரு நாளைக்கு இரண்டு ப்ளாக் காப்பி அல்லது க்ரீன் டீ குடிக்கலாம். கொஞ்சம் உப்புப் போட்டுக் குடித்தால் நன்றாக இருக்கும். ஆனால், அதற்குமேல் எதுவும் கூடாது. நடுவே ஒரு பால் காப்பி அருந்தினால்கூட விரதம் கெட்டதாகத்தான் அர்த்தம்.

ஒரு எலுமிச்சம்பழ ஜூஸ் குடித்தாலும் முடிந்தது கதை. அதிலுள்ள கார்போஹைடிரேட் உள்ளே கலந்துவிட்டால் தீர்ந்தது. ப்ளாக் காப்பியிலேயே ஒன்றிரண்டு கலோரி உண்டு. விரத காலத்திலும் நான் என்னுடைய தினசரி நடைப்பயிற்சியை நிறுத்தப் போவதில்லை என்பதால் அந்த ஒன்றிரண்டு கலோரிகளை அதில் கரைத்துவிடலாம் என்று தோன்றியது. ஒரு முடிவோடுதான் ஆரம்பித்தேன்.

அன்று காலை எழுந்ததும் முதல் வேலையாக நடப்பதற்குச் சென்றேன். ஐம்பது நிமிடங்கள் மித வேக நடை. தோராயமாக ஐயாயிரம் தப்படிகள் நடந்திருப்பேன் என்று நினைக்கிறேன். உற்சாகமாக இருந்தது. வந்து ஒரு ப்ளாக் காப்பி உப்புப் போட்டுக் குடித்துவிட்டு பேப்பர் படித்தேன். குளித்து முழுகி வழக்கமான வேலைகளைப் பார்க்க உட்கார்ந்தேன்.

மதியம் வரை ஒரு வித்தியாசமும் இல்லை. எப்போதும் ஒரு மணிக்குச் சாப்பிடுவது வழக்கம். அன்றைக்கு அது கிடையாது என்பதால் ஒரு மணிக்குப் படுத்துவிட்டேன். மாலை வரை நல்ல தூக்கம் (இதில் தெரிந்துகொண்டது என்னவென்றால், சாப்பிடாவிட்டால் தூக்கம் வராது என்பது ஒரு மாயை). மாலை எழுந்து மீண்டும் ஒரு ப்ளாக் காப்பி அருந்தினேன். மீண்டும் எழுத உட்கார்ந்தேன்.

சுமார் ஏழு மணி வாக்கில் லேசாகப் பசிப்பது போலத் தெரிந்தது. அது ஒரு பிரமை என்றும் தோன்றியது. எனக்கு எப்படிப் பசிக்கும்? ஏழு தலைமுறைகளுக்குச் சேர்த்து தின்று வைத்திருக்கிறேன். இப்போது சாப்பிடாவிட்டால் உள்ளே உள்ள சொத்தைக் கரைப்பதுதானே உடம்புக்கு விதி? ஆனால், என்ன நடந்திருக்கிறது என்று சொல்லுகிறேன். விரதம் தொடங்குவதற்கு முதல் நாள் நான் உண்டது புளியோதரை, சாம்பார் சாத வகையறாக்கள். அது ரெகுலர் உணவு. ஏகப்பட்ட மாவுச் சத்து கொண்டது.

முன் தினம் வரை கொழுப்புணவு எடுத்து வந்தவன், சட்டென்று மாவுச் சத்து மிக்க உணவுக்கு மாறியபோது வயிற்றுக்குள் ஓர் அதிர்ச்சி அலை உருவாகியிருக்கும். இவன் என்னத்தைத் தின்று தொலைக்கிறான் என்று வயிறு குழம்பும். திடீரென்று எப்படி இத்தனை சர்க்கரை சேர்கிறது என்று புரியாமல் தவிக்கும். சரி போ, கிறுக்குப் பயல் வேறு என்னவோ செய்கிறான்; இன்றைக்கு இதை எரிப்போம் என்று கார்ப் எரித்து சக்தியாக்க முயற்சி செய்திருக்கும்.

ஆனால், ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் அல்லவா? கார்ப் உணவின் அடிப்படைக் குணமே உண்ட நான்கு மணி நேரத்தில் மீண்டும் பசியுணர்ச்சியைத் தூண்டுவதுதான். அதுதான் சிக்கல். அந்த ஐந்நூறு - அறுநூறு கிராம் கார்ப் உள்ளே போனதை முற்றிலும் அழித்து ஒழிக்கும்வரை விரதத்தை விடவே கூடாது. என்னவாவது செய்து அச்சிறு பசியை விரட்டத்தான் வேண்டும்.

நான் மீண்டும் ஒரு வாக்கிங் போக முடிவெடுத்தேன். பசிக்கும்போது நடப்பது ஒரு மகத்தான அனுபவம். இதனை என் நண்பர் கோகுல் குமரன் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். நடையானது பசியை அதிகப்படுத்தும் என்று நாம் நினைப்போம். ஆரம்பத்தில் அப்படித்தான் தெரியும். ஆனால், நடக்க, நடக்க, பசி உள்ளிட்ட அனைத்து உணர்ச்சிகளுமே அடங்கி ஒடுங்கி உடலும் மனமும் மகத்தானதொரு ஓய்வு நிலைக்குப் போய்ச் சேரும்.

மூளை விழிப்புடன் இருக்கும். பரபரவென்று என்னவாவது செய்யலாம் என்று தோன்றும். எனக்கு அன்று அப்படித்தான் ஆனது. அன்றிரவு பன்னிரண்டு மணி வரை வேலை செய்துவிட்டுப் படுத்தேன். அன்றைக்கெல்லாம் ஆறு லிட்டர் தண்ணீர் குடித்திருந்தேன். மறுநாள் அதே போல் காலை நடை. அதே ப்ளாக் காப்பி. அதே ஆறு லிட்டர் தண்ணீர். ஆனால், அன்று மதியம் ஒரு மணிக்கு உறங்கப் போகும்போது யாரோ மோகினி கூப்பிடுவது போலத் தோன்றியது.
 

(தொடரும்)

- பா.ராகவன்


பேலியோ கிச்சன்

இந்த வாரம் சமையல் குறிப்பு கிடையாது. மாறாக ஓர் அதிருசி காப்பி தயாரிப்பது பற்றிச் சொல்கிறேன். நல்ல ஸ்டிராங்கான டிகாக் ஷன் அரை தம்ளர் எடுத்துக்கொள்ளுங்கள். இதில் கால் தம்ளர் வெந்நீர் சேருங்கள். சிட்டிகை உப்பு போட்டால் அப்படியே குடித்துவிட முடியும்தான். ஆனால், கொஞ்சம் பொறுங்கள். ஒரே ஒரு புதினா இலை. இரண்டு சொட்டு எலுமிச்சை ரசம்.

ஒரு சிட்டிகை சீரகப் பொடி. இவற்றை அந்தக் காப்பியில் போட்டு ஒரு ஆற்று ஆற்றி அருந்திப் பாருங்கள். செய்து பார்க்கும் முன்னரே உவ்வே என்பீரானால் இழப்பு உங்களுக்குத்தான். இந்த மாறுவேடக் காப்பி ஒரு மகத்தான அனுபவத்தைத் தரும். அருந்தி முடித்ததுமே வீறுகொள்ளும் புத்துணர்ச்சி, வாழ்வில் அதற்குமுன் நீங்கள் அனுபவிக்காததாக இருக்கும்!

kungumam.co.

  • தொடங்கியவர்
 

இளைப்பது சுலபம்

அனுபவத் தொடர் 21

வெஜ் பேலியோவில் எடை குறைப்பது


என் காதுகளுக்குள் யாரோ சாரங்கி வாசிக்கிறார்கள். அது இசையாகத்தான் உள்ளே இறங்குகிறது. ஆனால், ஒரு பயணம் மேற்கொண்டு அது மூளையை அடைகிறபோது ஓசையாகிவிடுகிறது.
1.jpg
கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஓசை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் உடம்புக்குள் ஓடுகிற ரத்தம் மொத்தத்தையும் வழித்துத் துடைத்தெறிந்துவிட்டு ஓசையே நிரம்பிவிடும்போல் இருந்தது. ஓசை என்றா சொன்னேன்? இல்லை. அது ஓலம். அப்படியொரு பெரும் சத்தம்.

திடுக்கிட்டுக் கண் விழித்து எழுந்து உட்கார்ந்தேன். சத்தம் நின்றபாடில்லை. தவிர கண்களுக்குள் ஸ்பாஞ்ஜ் வைத்த மாதிரி ஓர் உணர்வு. பாதங்களும் வழக்கத்துக்கு விரோதமாகச் சில்லிட்டிருந்தன.கவனியுங்கள்.
1a.jpg
இது பசிதான். ஆனால், வயிற்றில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. எப்போதும் பசிக்கும்போது என்னவெல்லாம் நடக்குமோ, அது இல்லை. மாறாக இந்தப் பசி வேறு ரகமாக இருந்தது. எழுந்துபோய் ஏதாவது வேலை பார்க்கலாம் என்றால் அதுவும் முடியவில்லை. சும்மா இரு என்று ஒரு ஞானியைப் போல் மனம் உத்தரவிட்டது.

என்னை யாரும் தடுக்கப் போவதில்லை. என்னை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. போய் அள்ளி ஒரு வாய் போட்டுக்கொண்டால் இந்தக் களேபரங்கள் அடங்கிவிடும் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் நப்பாசை யாரை விட்டது?

எப்படியோ தாக்குப் பிடித்து அன்று இரவு வரை உண்ணாமல் இருந்து எட்டரை மணிக்கு மேல் என் விரதத்தை முடிக்க உட்கார்ந்தேன்.
விரதம் தொடங்கும்போது புளியோதரை வகையறாவில் ஆரம்பித்திருந்தேன் அல்லவா? முடிப்பதற்கு சுத்தமான பேலியோ உணவு. முன்னூறு கிராம் பனீர், கால் கிலோவுக்கு மேல் வெண்டைக்காய் பொரியல், சீஸ் எல்லாம் போட்டுப் பிரமாதமாக ஒரு தக்காளி சூப். இருநூறு மில்லிக்குக் குறையாமல் முழுக் கொழுப்புத் தயிர். மேலுக்கு ஒரு அறுபது எழுபது கிராம் வெண்ணெய். பத்தாது?

என் மானசீகத்தில் ‘மாயாபஜார்’ ரங்காராவ் ஆகி மேற்படி உணவைக் கபளீகரம் செய்து முடித்துவிட்டுப் படுத்தேன். இந்த அதிர்ச்சி வைத்தியம் குறைந்தது நான்கு கிலோ எடையைக் குறைத்திருக்கும் என்பது என் எதிர்பார்ப்பு. அன்று இரவெல்லாம் எனக்குத் தூக்கம் இல்லை. மறுநாள் எப்போது விடியும்; எடை பார்த்து மகிழ இன்னும் எத்தனை மணி நேரம் உள்ளது என்பதைக் குறித்தே எண்ணிக்கொண்டிருந்தேன்.

விடியத்தான் செய்தது. காலைக் கடன்களை முடித்துவிட்டு எடையும் பார்த்தேன். நான்கு கிலோ இல்லாவிட்டாலும், ஆட்டோவெல்லாம் வைத்ததற்குப் பரிகாரமாக ஒரு மூன்று? அட ஒரு இரண்டரை? வெறும் இரண்டு?
ஒரு கிலோ கூடக் குறையவில்லை!

இது எனக்கு அதிர்ச்சி யாக இருந்தது. என்எடை மெஷின் யாரோ எதிரியிடம் விலை போயிருக்க வேண்டும் என்று தோன்றியது. அதைத் தூக்கி அப்படியும் இப்படியும் குலுக்கினேன். இடத்தை மாற்றி வைத்துப் பார்த்தேன். என்ன செய்தாலும் அதேதான். நான் எதிர்பார்த்த எடை இழப்பு இல்லை. சுத்தமாக இல்லை. அப்போதும் சந்தேகம் தீராமல் அன்று மாலை எனது பேட்டையில் உள்ள ஓர் உணவக வாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் எடை மெஷினில் போய் ஏறி நின்று பார்த்தேன்.

என்ன ஓர் அவலம். எல்லா எடை மெஷின்களும் எனக்கு துரோகம் செய்வதென்று கூட்டணி வைத்துத் தீர்மானம் செய்திருந்தன போலிருக்கிறது.
மிகுந்த மனச்சோர்வுடன் வீடு திரும்பினேன். நின்றுபோன எடைக்குறைப்பை மீண்டும் தொடங்குவது எப்படி? புரியவில்லை. பேலியோ பழகுபவர்களுக்கு எடைக்குறைப்பை மீண்டும் தொடங்க எல்லோரும் சிபாரிசு செய்யும் ஒரே வழி விரதம்தான். பசிக்காது; தைரியமாக விரதம் இருக்கலாம் என்று சொல்லுவார்கள். அது உண்மையும்கூட.

ஆனால், விரதம் இருந்தும் எடைக்குறைப்பு நிகழவில்லை என்றால் என்ன செய்வது?

அப்போதுதான் எனக்கு அந்த உண்மை தென்பட்டது. இது வெஜிடேரியன் மைனாரிடி களுக்கே உரிய பிரச்னை. எந்த சக்தியாலும் தீர்க்க முடியாத பிரச்னை.என்னதான் பேலியோ என்றாலும் நாம் உண்ணும் காய்கறிகளில் கார்போஹைடிரேட் இருக்கிறது. பருகும் பாலில் இருக்கிறது. தயிரில் இருக்கிறது. குடித்தேனே, தக்காளி சூப்! அதில் ஒரு வண்டி மாவுச் சத்து ஒளிந்திருக்கிறது.

எல்லாம் அளவுக்குள்தான்; கட்டுக்குள்தான் என்று சொல்லிக்கொண்டாலும் கார்ப் இல்லாத காய்கறி இல்லை. அரிசி, பருப்பு வகையறாக்களுடன் ஒப்பிட்டால் காய்கறிகளில் உள்ள மாவுச்சத்து சற்று நல்ல ரகம் என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர வில்லன்களுள் நல்ல வில்லன், கெட்ட வில்லன் என்று ரகம் பிரித்து அங்கீகரிக்க முடியாதல்லவா?

குறைந்த மாவுச் சத்து என்பதுதான் வெஜ் பேலியோவில் சாத்தியமே தவிர, கார்போஹைடிரேட்டே இல்லாத ஒரு டயட்டுக்கு ஒரு சதவீத வாய்ப்புகூட இல்லை. இதுதான் அடிப்படை. இதனால்தான் பேலியோவில் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு நாற்பது கிராமுக்கு மிகாமல் கார்ப் எடுக்க வலியுறுத்தப்படுகிறது.

உலக மருத்துவ கவுன்சில் பரிந்துரையெல்லாம் பார்த்தீர்களென்றால் அவர்கள் வள்ளலாக ஐம்பது கிராம் வரை போகலாம் என்பார்கள். இருநூறு முன்னூறு கிராம் கார்போஹைடிரேட் உணவை உண்டுகொண்டிருந்ததற்கு ஐம்பது கிராம் எவ்வளவோ தேவலை என்று நினைப்போமென்றால் தீர்ந்தது. ஆரம்ப எடைக்குறைப்பு இருக்குமே தவிர, ஒரு கட்டத்துக்குமேல் வண்டி நகராது.

என் பிரச்னை அதுதான் என்று புரிந்துவிட்டது. தினசரி பேலியோ உணவே என்றாலும் ஐம்பது கிராம் கார்புக்குக் குறையாமல் நான் எடுத்து வந்திருக்கிறேன். எனவே உடலானது கார்ப் தொடர்பை முற்றிலுமாகக் கைவிட்டிருக்கவில்லை.

அதனோடுகூட சீட்டிங் என்ற பெயரில் ஒரு ஃபுல் மீல் அடித்துவிட்டு விரதம் இருந்தால் மட்டும் என்ன பெரிய அதிசயம் நிகழ்ந்துவிடும்?
தின்ற புளியோதரை, இரண்டாம் நாள் பசியைக் கிளறிவிட்டதுதான் நிகர லாபம். பல மாதங்களாகப் பசியுணர்ச்சியே இல்லாதிருந்தவன் அந்த ஒரு நாளில் அதைப் பூரணமாக தரிசித்தேன். பழைய பசி. கோரப் பசி. தீப்பசி. தீனிப்பசி.

அன்று முடிவு செய்தேன். இம்மாதிரி விஷப் பரீட்சைகள் இனி வேண்டாம். முழு அசைவ உணவாளர்களுக்கு இந்த மாடல் கைகொடுக்கிறது. அசைவ பேலியோவில் இருப்பவர்களுக்கு எடைக் குறைப்பு நின்றுவிட்டால், சடாரென்று ஒருநாள் வழக்கமான அரிசி சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு இரண்டு நாள் வயிற்றைக் காயப்போட்டால் மூன்றாம் நாள் சரசரவென்று எடை குறைவதைப் பலரிடம் பார்த்தேன். ஆனால், சைவத்தில் அது போணியாகாது என்பதைக் கண்டறிந்தேன்.

மறுநாள் முதல் என் விஷப் பரீட்சைக்கு விடை கொடுத்தேன். ஒழுங்கான பேலியோ உணவு. ஒருநாளைக்கு ஒருவேளை உணவு போதும். முழு 1500 கலோரிகளை அந்த ஒரு வேளையிலேயே உண்டுவிடுவது. மிச்ச நேரத்தைக் கொழுப்பெரிக்கக் கொடுத்துவிடுவது. இதனோடுகூட ஒழுங்கான நடைப்பயிற்சியும் சேர்ந்தால் எடைக் குறைப்பு மீண்டும் நிகழ ஆரம்பிக்கும்.ஆனால், ரொம்ப மெதுவாக!

பேலியோ கிச்சன்

லோ கார்ப் சாலட்

ஒரு வெள்ளரிக்காய். அரை சுரைக்காய். எண்ணி நாலு துண்டு தக்காளி. நாலு துண்டு வெங்காயம். ஒரு பிடி கொத்துமல்லி. ஒரு பிடி முட்டைக்கோஸ். நாலு ஆலிவ் பழங்கள். போதும்.இவற்றை நறுக்கிக்கொண்டு மேலுக்கு இரண்டு கரண்டி திரவ சீஸை விட்டுக் கிளறுங்கள். இரண்டு நிமிடம் ஊறட்டும். அதன்பின் ஆப்பிள் சிடார் வினிகர் ஒரு ஸ்பூன் ஊற்றி இன்னொருமுறை கிளறுங்கள்.
 
ஆச்சா? அப்படியே தூக்கி ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும். அரை மணி நேரம் போதும். பிறகு அதை வெளியே எடுத்து அரைப்பிடி தேங்காய் தூவுங்கள். இந்த சாலடின் ருசி வித்தியாசமாக, நன்றாக இருக்கும். இதற்கு புதினா சட்னி தொட்டுக்கொள்ளப் பொருத்தமாக இருக்கும். ஐம்பது கிராம் வெண்ணெய் சேர்த்துக்கொண்டு இதை ஒரு முழு ப்ளேட் அடித்தால் ஒரு வேளை உணவாகவும் வேலை செய்யும்.
 

(தொடரும்)

www.kungumam.co.

  • தொடங்கியவர்

இளைப்பது சுலபம்

 

வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

அனுபவத் தொடர் - 22

சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்த நாற்பது கிராம் கார்ப், ஐம்பது கிராம் கார்ப் போன்ற அளவுகள் சற்றுத் தலை சுற்றச் செய்திருக்கலாம். பிறந்ததில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். எத்தனை சாப்பிடுகிறோம் என்பதைக் கூட அளந்து சாப்பிட்டுப் பழக்கமில்லை. இதில் சாப்பிடுகிற வஸ்துவில் எத்தனை கிராம் கார்போஹைடிரேட் இருக்கிறது என்றெல்லாம் எப்படிக் கணக்கிடுவது? இப்படியெல்லாம் உயிரை வாங்கும் டயட் எனக்கு எதற்கு? சாப்பிடுவதைச் சற்று அளவு குறைத்துச் சாப்பிட்டுக்கொள்கிறேன். காலை ஒரு மணி, மாலை ஒரு மணி நடக்கிறேன். பத்தாது? காலக்கிரமத்தில் எனக்கும் எடை குறையத்தான் செய்யும் என்று உள்மனமானது இந்த இடத்தில் கொஞ்சம் சண்டித்தனம் செய்யும்.

எனக்குச் செய்தது! ஏற்கெனவே இந்தப் பக்கங்களில் சொல்லி யிருக்கிறேன். பேலியோவுக்கு வருவதற்குப் பல வருடங்களுக்கு முன்னால் நானொரு குத்து மதிப்பு டயட் கடைப்பிடித்துப் பார்த்திருக்கிறேன். சுமார் ஒரு வருடம் என்று நினைக்கிறேன். அப்போது கிட்டத்தட்ட தொண்ணூறு கிலோ எடை இருந்த ஜீவாத்மாவானது படிப்படியாக இறங்கி எழுபத்தி எட்டு அல்லது எழுபத்தி ஒன்பது கிலோவுக்கு வந்ததாக நினைவு. ஒன்றும் பெரிய பாதகமில்லையே? பன்னிரண்டு, பதிமூன்று கிலோக்களை ஒரு வருடத்தில் குறைப்பதே பெரிய விஷயமல்லவா? இத்தனைக்கும் அப்போது எனக்கு பேலியோ என்ற பெயரே தெரியாது.
6.jpg
உலகில் வேறு என்னென்ன டயட் முறைகள் இருக்கின்றன என்று தெரியாது. எந்த டயட்டானாலும் முதல் ஐந்தாறு கிலோ சரசரவென்று இறங்கும் என்பதோ, அதன் காரணம் உடம்பிலுள்ள நீர் எடை வற்றுவதே என்பதோ சுத்தமாகத் தெரியாது. நாலு ப்ளேட் சாதம் சாப்பிட்ட இடத்தில் இரண்டு ப்ளேட் என்று ஆக்கிக்கொண்டேன். ஸ்பூனில் எடுத்துப் போட்டுக்கொண்ட காய்கறிகளைக் கரண்டியில் எடுத்துப் போட்டுக்கொள்வது. பொரித்த பலகாரங்கள், இனிப்புகளை மட்டும் அறவே தவிர்த்துவிட்டு நிறைய ஜூஸ், பழங்கள் என்று சாப்பிடுவது.

இவற்றோடு தினமும் சுமார் ஒரு மணி நேர நடை அல்லது அரை மணி நீச்சல். இவ்வளவுதான் அன்றைய எனது டயட் முறை. இதில்தான் நான் சொன்ன பன்னிரண்டு கிலோ குறைந்தது. ஆனால், ஒரு விபத்தில் எனக்குக் கால் எலும்பு முறிந்து வாழ்க்கையில் இரண்டாவது முறையாகக் கால் கட்டுப் போட்டுக்கொண்டு வீட்டில் கிடக்க நேரிட்டது. அந்தச் சில மாதங்களில் இந்த டயட்டெல்லாம் எனக்கு மறந்துவிட்டது. மீண்டும் எழுந்து எடை பார்த்தபோது அது தன் சௌக்கியத்துக்குத் தொண்ணூற்றைந்தில் போய் நின்றிருந்தது. அதாவது பன்னிரண்டு கிலோ இறக்குவதற்கு ஒரு வருடம்.

அதை ஒரு போனஸுடன் ஏற்றித் தொண்ணூற்றைந்து கிலோவுக்குக் கொண்டு செல்ல இரண்டு அல்லது இரண்டரை மாதங்கள். சரி போ, நாமெல்லாம் எடை குறைத்து எழிலுருவம் பெற்று எந்த இளவரசியை மீண்டும் மணந்துகொள்ளப் போகிறோம் என்ற அலுப்பிலும் களைப்பிலும் அதை அப்படியே விட்டுவிட்டேன். மீண்டும் எடையைக் குறைத்தே தீரவேண்டும் என்ற தீர்மானம் வந்தபோது 111 கிலோவில் இருந்தேன். இன்னும் விட்டிருந்தால் மேலும் பெருத்திருப்பேன். நமக்கு எதிலுமே தாராளம்தான். இம்முறை எடையைக் கணிசமாக இறக்கியே தீருவது என்று வீர சபதம் செய்துகொண்டு இறங்கியதற்கு பேலியோவின் அறிவியல் அடிப்படையே காரணம்.
6a.jpg
ஓர் அடிப்படையைப் புரிந்து கொள்ளுங்கள். மனித உடலுக்கு மூன்று மூலாதார சத்துகள் தேவை. ஒன்று க்ளூக்கோஸ். இன்னொன்று கொழுப்பு. மூன்றாவது ப்ரோட்டின். இதில் கொழுப்பு இல்லாவிட்டாலோ, ப்ரோட்டின் இல்லாவிட்டாலோ ஆள் காலி. காலி என்றால் நிஜமாகவே காலி! உயிர் போய்விடும். ஆனால் ஒரு ஜீவாத்மாவானது க்ளூக்கோஸ் இல்லாமல் உயிர் வாழ முடியும்! கொஞ்சம் கூட மாவுச் சத்தே இல்லாத முட்டை அல்லது சிக்கனை சாப்பிட்டுக்கொண்டு நீங்கள் சாகிற வரைக்கும் சௌக்கியமாக வாழ்ந்துவிட முடியும். எஸ்கிமோக்கள் எல்லாம் பொன்னி அரிசிச் சாதமா சாப்பிடுகிறார்கள்?

கடல் மட்டுமே அவர்களுக்கு விளைநிலம். அங்கு என்ன கிடைக்கிறதோ அதுதான். சாவதில்லையே? ஆனால் மூன்று வேளையும் கார்போஹைடிரேட் மிகுந்த இட்லி தோசை வகையறாக்களைச் சாப்பிட்டு, பத்தாத குறைக்கு பரோட்டா, சோளாபூரி, பீட்சா, பர்கர் என்று வளைத்துக் கட்டி பாவாத்மாக்களுக்கு மாவாட்டி உண்பதே விதி என்று எண்ணிக்கொண்டு வாழ்கிற நமக்குத்தான் ஆயிரத்தெட்டு வியாதிவெக்கை. எது இல்லாவிட்டாலும் மனித உடல் இயங்குமோ, அதைத்தான் நாம் வண்டி வண்டியாக உண்கிறோம். எது நம் உடலுக்கு அத்தியாவசியமோ அதை அளவோடு உண்கிறோம், அல்லது அளவு குறைத்து உண்கிறோம்.

ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். பிறந்த குழந்தைக்கு ஏன் தாய்ப்பால் அவசியம் என்று சொல்லப்படுகிறது? அது வெறும் கொழுப்பு, வெறும் ப்ரோட்டின். மருந்துக்கும் அதில் வேறு ஒன்றும் கிடையாது. பிறந்த குழந்தைக்குக் குறைந்தது ஆறேழு மாதங்கள் வரையிலாவது தாய்ப்பால் கொடுக்கச் சொல்லி டாக்டர்கள் ஏன் கதறுகிறார்கள் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? க்ளூக்கோஸ் சேர்மானமின்றி (கார்போஹைடிரேட் தாக்குதலின்றி) அது சௌக்கியமாகத் தன்னை வடிவமைத்துக்கொள்ள அந்த ஓருணவு அதற்குப் போதும்.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி, ஒரே மாதத்தில் டப்பா பால் சாப்பிட்டு வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியைக் காட்டிலும் சர்வ நிச்சயமாக அதிகமாகவே இருக்கும் என்கிறது மருத்துவ அறிவியல். பிறந்த குழந்தையையே இயற்கை கீடோசிஸ் நிலையில்தான் (கார்ப் இல்லாத நிலை) வைத்துப் பராமரிக்கச் சொல்கிறது. ஏழு கழுதை வயதான நமக்கெல்லாம் அது என்னத்துக்கு? மனித குலம் அனுபவிக்கும் நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட மிகப்பல வியாதிகளின் மூலாதார வித்து மாவுப் பொருளுக்குள் ஒளிந்திருக்கிறது. தானியங்கள். எண்ணெய்கள். விதவிதமான இனிப்புகள்.
6b.jpg
எதையெல்லாம் நாம் பல்லாண்டுக் காலமாக விரும்பி உண்டு வந்தோமோ, அவை அனைத்துமே பிழையான உணவுகள் என்கிறது பேலியோ அறிவியல். எளிமையாகப் புரியவேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். நீங்கள் சிக்கன் மட்டுமே சாப்பிடுபவராக இருந்தால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வராது. சிக்கன் பிரியாணியை ப்ளேட் ப்ளேட்டாக அடிப்பவரென்றால் வாய்ப்புகள் அதிகம். பாதாம் பருப்பை எத்தனை கிலோ வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். பாதாம் அல்வா ஒரு கிலோ உண்டாலும் கோவிந்தா.

புரிகிறதா? பிரியாணி அரிசியும் அல்வாவின் சர்க்கரையும்தான் விஷம். சிக்கனோ, பாதாமோ அல்ல. ஏனென்றால் அவை நல்ல கொழுப்பு. நம் உடலுக்கு உகந்த கொழுப்பு. உடம்பு விரும்பும் கொழுப்பு. உண்டால் ஒன்றும் செய்யாத கொழுப்பு. இது புரிந்துவிட்டால் நமது உணவில் ஏன் கார்போஹைடிரேட்டைக் குறைக்க வேண்டும் என்பது புரிந்துவிடும். ஏன் குறைக்க வேண்டும் என்பது புரிந்துவிட்டால் எவ்வளவு குறைப்பது என்பதைக் கணக்கிடுவது சுலபம் அல்லவா? இனி கார்ப் கேல்குலேஷன் எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.
 

(தொடரும்)

- பா.ராகவன் 


பேலியோ கிச்சன்

சாக்லெட் சாப்பிடுங்கள்!

பேலியோவில் இனிப்பு கிடையாது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வாழ்விலும் இனிப்பு கிடையாது. அதனாலென்ன? சாக்லெட் சாப்பிடக்கூடாது என்று கட்டாயமில்லை. நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ஒரு சாக்லெட் தயாரிப்போம். இருநூறு கிராம் வெண்ணெய் எடுத்துக்கொள்ளுங்கள். சர்க்கரை சேர்க்காத சுத்த கொக்கோ பொடி கடைகளில் கிடைக்கும். அமேசான் போன்ற ஆன்லைன் அங்காடிகளில் 100 சத டார்க் சாக்லெட் பொடியே கிடைக்கும். அதில் ஒரு நூறு கிராம் எடுத்துக் கொள்ளுங்கள். வெண்ணெயில் கொக்கோ பொடியைக் கொட்டி நன்றாகக் கலக்குங்கள். வெண்ணெயானது பிரவுன் வெண்ணெயாக மாறும் அளவுக்கு.

நூறு சத டார்க் சாக்லெட் என்பதே ரசனைக்குரிய கசப்பில்தான் இருக்கும். அதெல்லாம் முடியாது; எனக்கு இனிப்பு இருந்தே தீரவேண்டும் என்பீரானால் இந்தக் கலவையில் ஐம்பது மில்லி இளநீரைக் கொட்டி மீண்டும் கலக்குங்கள். முடிந்தது ஜோலி. ஃப்ரிட்ஜில் ஐஸ் க்யூப் டிரே இருக்கும் அல்லவா? அதில் இந்தக் கலவையை ஸ்பூனால் எடுத்துப் போட்டு அழகாக நிரப்புங்கள். ஃப்ரீசரில் ஒரு முழு நாள் வைத்து எடுத்தால் பிரமாதமான சாக்லெட் தயார். இதில் இளநீர் சேர்ப்பது மத்திமம். சேர்க்காதிருப்பது உத்தமம். இளநீருக்கு பதில் தேன் சேர்க்கிறேன், வெல்லப்பாகு ஊற்றுகிறேன் என்பீரானால் அது அதமம்.

www.kungumam.co

  • தொடங்கியவர்
 
 

இளைப்பது சுலபம்

 

அனுபவத் தொடர் 23

வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

ஒரு நாளில் நாம் உட்கொள்ளும் உணவில் கார்போஹைடிரேட் நாற்பது கிராமுக்கு மிகாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வது உசிதம் என்று சொன்னேன். அந்த நாற்பது கிராம் அளவை எப்படிக் கணக்கிடுவது?
9.jpg
இதற்குக் கண்கண்ட கடவுளாம் கூகுளை நாம் சரணடையலாம். Carbs in rice என்று போட்டுப் பாருங்கள். நூறு கிராமுக்கு 28 கிராம் என்று காட்டும். இதையே carbs in cooked cabbage என்று போட்டுத் தேடினீர்கள் என்றால் பிசுநாறித்தனமாக 2.2 கிராம் என்று காட்டும்.இதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

நம்மால் ஒரு வேளைக்கு நூறு கிராம் அரிசிச் சாப்பாட்டோடு நிறுத்திக்கொள்ள முடியுமா? தெரியவில்லை. ஒரு முழு நாளில் நாம் சாதாரணமாக உட்கொள்ளும் அரிசி மற்றும் கோதுமையின் அளவை யோசித்துப் பார்த்தால் குறைந்தது இருநூறு கிராம் அளவுக்காவது சாப்பிடுவோம்.

இது போகக் கலந்து சாப்பிட சாம்பார், ரசம் வகையறாக்கள் தனி. அவற்றில் சேர்க்கும் எண்ணெய் இனங்கள் தனி. பருப்பு ரகம் தனி. குத்துமதிப்பாகக் கணக்குப் போட்டுப் பார்த்தாலும் ஒரு நாளைக்குக் குறைந்தது இருநூறு கிராம் கார்போஹைடிரேட்டாவது நமது உணவின்
மூலம் உடலுக்குள் சென்றுவிடுகிறது. சேரும் கெட்ட கொழுப்புக்கும் கூடும் வியாதிகளுக்கும் இதுதான் ஆதி காரணம்.
9a.jpg
இந்த உணவைத்தான் நான் இப்படி மாற்றினேன்:நூறு கிராம் முட்டைக்கோஸ் பொரியல் என்று வைத்துக்கொண்டால் அதில் மிஞ்சிப் போனால் மூன்று கிராம் கார்போஹைடிரேட். வெண்டைக்காய் என்றால் ஏழு கிராம். பூசணிக்கு ஏழு கிராம். காலிஃப்ளவர் ஐந்து கிராம். குடைமிளகாயில் நாலரை கிராம். கத்திரிக்காயில் ஆறு கிராம்.

இப்படியே நீங்கள் ஒவ்வொரு காய்கறிக்கும் கூகுளில் சென்று எவ்வளவு மாவுச்சத்து இருக்கிறது என்று கேட்டால் அடுத்த வினாடி பதில் கிடைத்துவிடும்.இப்படிக் குறைந்த கார்போஹைடிரேட் உள்ள காய்கறிகளாகத் தேடிவைத்துக் கொண்டு விட வேண்டியது. இவற்றில் கார்ப்தான் குறைவாக இருக்குமே தவிர விட்டமின்களும் மினரல்களும் கண்டபடி நிறைந்திருக்கும். அதையும் நீங்கள் கூகுளில் பார்த்தே தெரிந்துகொள்ள முடியும்.

இதுவே அரிசிச் சோறில் என்ன இருக்கிறது என்று பார்த்தீர்கள் என்றால் தொண்ணூறு சதவீதம் கார்போஹைடிரேட்டும் எட்டு சதவீதம் ப்ரோட்டீனும் உள்ளதாகக் காட்டும். கோதுமை இன்னும் மோசம்.சாப்பிட்டால் திம்மென்று வயிறு நிறைந்துவிடுகிறது என்பதால் நாம் தலைமுறை தலைமுறையாக அரிசிக்குப் பழகிவிட்டோமே தவிர, உண்மையில் இது ஆரோக்கிய உணவில் சேர்த்தி இல்லை.

ஒரு பிளேட் சாதத்துக்கு பதில் ஒருநாள் இரண்டு ப்ளேட் முட்டைக்கோஸ் அல்லது காலிஃப்ளவர் பொரியல் மட்டும் சாப்பிட்டுப் பாருங்கள். இதுவும் வயிறு நிறைக்கும். ஆனால், ரத்த சர்க்கரை அளவைப் பெரிய அளவில் இது ஏற்றாது.கார்பில் நல்ல கார்ப் கெட்ட கார்ப் என்று இரண்டு ரகம் உண்டு. காய்கறிகள் மூலம் கிடைக்கிற (கிழங்குகள் மூலம் அல்ல) கார்போஹைடிரேட் நல்ல ஜாதி வஸ்து. தானியங்கள் மூலம் கிடைக்கிற கார்ப், கெட்ட ஜாதி. தீர்ந்ததா?

மீண்டும் தொடக்கத்துக்கு வருகிறேன். ஒரு நாளைக்கு நாற்பது கிராம் கார்ப்.எனக்கு ஒருநாள் நான் உட்கொள்ளும் காய்கறிகளின் மூலம் மிஞ்சினால் பத்து கிராம் கார்போஹைடிரேட் உள்ளே போகும். இதைத் தவிர நான் உட்கொள்ளும் உணவுகள் வேறென்ன?

பனீர். இது ஒரு நாளைக்கு இருநூறு கிராம் அளவுக்குச் சாப்பிடுகிறேன். இருநூறு கிராம் பனீரில் மொத்தமே இரண்டரை கிராம் கார்ப் இருந்தால் அதிகம். அடுத்து தயிர். அது ஒரு நூறு கிராம் என்றால், அதில் மூன்றரை கிராமுக்கு மாவுச் சத்து உண்டு. வெண்ணெய், நெய் வகையறாக்களில் கார்பே கிடையாது.

ஆனால், சமையலுக்குத் தேவைப்படும் தேங்காயில் உண்டு. நூறு கிராம் தேங்காய்ப்பூவில் 15 கிராம் கார்போஹைடிரேட் இருக்கிறது. நமக்கு மிஞ்சிப் போனால் ஐம்பது கிராம் ஒரு நாளைக்குத் தேவைப்படுமா? அது ஒரு ஏழரை கிராம்.

இவ்வளவுதான். மொத்தம் கூட்டினால் நாற்பது கிராமுக்கும் குறைவாகத்தான் வரும். சமைக்கிறபோது வாசனைக்கு, ருசிக்கு, மணத்துக்கு என்று நாம் சேர்க்கும் மசாலா வகையறாக்கள், இஞ்சி, பூண்டு, வெங்காயம், கொத்துமல்லி, புதினா இனங்களில் உள்ள கார்பையும் சேர்த்தால்கூட இது நாற்பதுக்குள்தான் வரும்.

இந்த மாதிரி நாம் என்ன சாப்பிடுகிறோம், அதில் எவ்வளவு கார்போஹைடிரேட் இருக்கிறது என்று ஒரே ஒருநாள் உட்கார்ந்து ஒரு கணக்கெடுத்து, எழுதி வைத்துக்கொண்டுவிட்டால் போதுமானது.ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். உடல் பருமனுக்கு ஒரே பெரிய காரணம் நம் உணவில் சேருகிற கார்போஹைடிரேட் மட்டும்தான்.

போன வருஷம் அம்பானி பிள்ளை ஒரு டயட் இருந்து எடை குறைத்ததாக எல்லா பேப்பர்களிலும் செய்தி வந்ததைப் பார்த்திருப்பீர்கள். என்ன செய்தீர்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு ‘லோ கார்ப் டயட்’ என்று சொன்னதையும் படித்திருப்பீர்கள்.சமீபத்தில் இசையமைப்பாளர் இமான் இதே மாதிரி எடை குறைத்தார். அவர் கடைப்பிடித்ததும் லோ கார்ப் டயட்.

திருப்பூரில் என் நண்பர் ஒருவர் இருக்கிறார். மனோஜ் விஜயகுமார் என்று பெயர். ஒரு காலத்தில் தறி கெட்டுத் தின்று தீர்த்து நூற்று முப்பத்தைந்து கிலோக்களுக்குமேல் ஏறி நின்ற குண்டர் குலத் திலகம் அவர். இதே குறைந்த கார்ப், அதிகக் கொழுப்பு உணவு முறைக்கு மாறி இப்போது எழுபத்தி ஐந்து கிலோவுக்கு வந்ததோடு அல்லாமல் ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சியெல்லாம் செய்து அநியாய ஆணழகனாகவும் ஆகிப் போனார்.

நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஒரு நபர் முப்பது வயதுத் தோற்றத்தைத் திரும்பப் பெறுவதென்பது சின்ன விஷயமா?

சூட்சுமம் இதுதான். உணவில் நாம் எடுக்கிற மாவுச் சத்து எவ்வளவுக்கு எவ்வளவு குறைகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு நம் தோற்றம் அழகு பெறும். தோற்றப் பிரசன்னம் ஒரு பக்கமென்றால் ஆரோக்கிய மேம்பாடு இன்னொரு பக்கம்.

கார்ப் இல்லாத உணவுக்குப் பழகிவிடுவோமானால், பாரிய தேகத்துக்கு சர்க்கரைப் பிரச்னை என்ற ஒன்று அறவே இராது. ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்பட்சத்தில் அச்சுறுத்தும் வியாதிகளின் பிடியில் என்றுமே விழமாட்டோம்.

முடியுமா பாருங்கள். அரிசி, கோதுமை உள்ளிட்ட எந்த தானியமும் உணவில் கூடாது. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் தவிர வேறு எந்த எண்ணெயும் கூடாது. சர்க்கரை - எந்த வடிவத்திலும் கூடாது. காய்கறிகளிலேகூடக் கிழங்கு வகை கூடாது. வெங்காயம் பூண்டு தவிர நிலத்துக்கு அடியில் விளையும் எதையுமே தொட வேண்டாம் என்பது என் கருத்து.இது முடியுமானால் இளைப்பது சுலபம்.

பேலியோ கிச்சன்

ராஜபோகத் தயிர்சாதம்

ஒரு தயிர்சாதத்துக்கு எதற்கு இந்த பில்டப் டைட்டில் என்று கேட்காதீர். செய்து சாப்பிட்டுப் பார்த்துவிட்டுச் சொல்லவும்.தேவை இருநூறு கிராம் பனீர், நூறு மில்லி தயிர், கால் தம்ளர் பால், அரை வெள்ளரிக்காய், அரை கேரட், அரை இஞ்ச் இஞ்சி, கொஞ்சம் கொத்துமல்லி, வறுத்த முந்திரி கொஞ்சம், ஒரு பிடி தேங்காய்ப் பூ.

இனி செய்யலாம்.பனீரை உதிர்த்துப் போட்டு, லைட்டாக வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் ஆறவைத்துவிட்டுப் பாலை ஊற்றி முதலில் பிசைந்துகொள்ளவும். அதன்பிறகு தயிரைக் கொட்டிக் கிளறிக்கொள்ளவும்.

 இப்போது உப்பு போடுங்கள். பிறகு, காய்கறி வகையறாக்களைத் தேங்காய்போல் நன்கு துருவி எடுத்து இதன் தலையில் கொட்டவும். லைட்டாகத் தாளிக்கலாம், தப்பில்லை. எல்லாம் முடிந்தபின் மேலே தேங்காய் தூவவும். வறுத்த முந்திரியால் அலங்கரித்து, எலுமிச்சை ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிடவும். முடிந்தால் எனக்கு ஒரு பார்சல் அனுப்பவும்.
 

(தொடரும்)

http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=12996&id1=6&issue=20171201

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.