'தன்னிலை அறிதலே என்னை காப்பாற்றியது' – டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள்
பட மூலாதாரம்,Getty Images
கட்டுரை தகவல்
க. சுபகுணம்
பிபிசி தமிழ்
6 மணி நேரங்களுக்கு முன்னர்
வேலூரை பூர்வீகமாகக் கொண்ட மணிஷா மனோகரனுக்கு திரைப்படங்கள் பார்ப்பது மிகவும் பிடிக்கும். ஆனால், முன்பெல்லாம் ஒவ்வொரு முறை திரையரங்கம் செல்லும்போதும் தன்னைப் பதற்றம் தொற்றிக் கொண்டதாகக் கூறுகிறார்.
அதற்குக் காரணம், அவரது கட்டுப்பாடின்றி தன்னியக்கமாக ஏற்படும் டிக்ஸ் (tics) என்ற உடல் இயக்கங்கள் அல்லது குரல் ஒலிகளே.
"நான் படம் பார்க்கும்போது, உணர்ச்சி மிகுதியில் என் உடலில் தன்னியக்கமாக ஏற்படும் அசைவுகள் அல்லது எழுப்பப்படும் ஒலிகள் தங்களைத் தொந்தரவு செய்வதாகவும் அதைக் கட்டுப்படுத்துமாறும் பிறர் கூறுவதுண்டு."
ஆனால், "அதைக் கட்டுப்படுத்த முடிந்தால் செய்ய மாட்டேனா?" என்று பதற்றமும் கோபமும் தனக்கு ஏற்படும் எனக் கூறுகிறார்.
அவர் மட்டுமின்றி, கேரளாவை சேர்ந்த பாடகி எலிசபெத் மேத்யூவும் தனக்கு இருக்கும் டூரெட்ஸ் குறைபாட்டால் (Tourette's Syndrome) ஏற்படுகின்ற தன்னியக்கச் செயல்பாடுகளால் இதுபோன்ற கருத்துகளைப் பொதுவெளியில் எதிர்கொண்டுள்ளார்.
டூரெட்ஸ் சிண்ட்ரோம் என்றால் என்ன?
உளவியல் நிபுணர் ராஜ்குமாரின் கூற்றுப்படி, டூரெட்ஸ் சிண்ட்ரோம் என்பது ஒரு நரம்பியல் குறைபாடு. இது பிறவியிலேயே இருக்கும் என்றாலும், அது இருப்பது, "பொதுவாக ஐந்து முதல் பத்து வயதுக்குள், குழந்தைப் பருவத்தில் தெரியத் தொடங்குகிறது. உடல் இயக்கங்கள் அல்லது குரல் ஒலிகளைத் தன்னிச்சையாக மேற்கொள்வது, அதையே திரும்பத் திரும்பச் செய்வது இதன் முதன்மையான அறிகுறி" என்று விளக்கினார்.
அதாவது நிபுணர்களின் கூற்றுப்படி, மூளை திடீரென ஒரு சமிக்ஞையை உடலுக்கு அனுப்புகிறது, அதற்கு உடல் டிக்ஸ் வடிவில் உடனடியாக எதிர்வினையாற்றுகிறது. "இந்த நிலை காரணமாகத் தங்களது உடல் ஏற்படுத்தும் அசைவுகளையோ ஒலிகளையோ ஒருவரால் கட்டுப்படுத்த முடியாது." என்கிறார் ராஜ்குமார்.
"அப்படிக் கட்டுப்படுத்த முயலும்போதுதான் நிலைமை மிகவும் மோசமாகும். ஓர் எறும்புப் புற்றின்மீது நிற்கிறீர்கள், அங்குள்ள எறும்புகள் உங்கள் கால்களைக் கடுமையாகக் கடிக்கின்றன. ஆனால், நீங்கள் அங்கிருந்து நகரவே முடியாது என்றால் எப்படி இருக்கும்?
அப்படித்தான் இந்தத் தன்னியக்கச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முயலும்போது எங்களுக்கு இருக்கும். அது அவ்வளவு கடினமானது," என்கிறார் மணிஷா.
படக்குறிப்பு,மணிஷா மனோகரன்
டூரெட்ஸ் குறைபாட்டால் ஏற்படும் தன்னியக்கச் செயல்பாடுகள்
உடல் அசைவுகள், குரல் ஒலிகள் என டூரெட்ஸ் குறைபாட்டால் ஏற்படும் தன்னியக்கச் செயல்பாடுகள் இரண்டு வகைப்படுகின்றன.
உடல் அசைவுகளாக ஏற்படும் டிக்ஸ்களை பொருத்தவரை, "கண்களைப் பலமுறை சிமிட்டுவது, தோள்களைக் குலுக்குவது, முகத்தைச் சுருக்கிக் கொண்டே இருப்பது, கை கால்களைத் திடீர் திடீரென அசைப்பது ஆகியவை தன்னிச்சையாக அடிக்கடி நிகழக்கூடும்." என்கிறார் உளவியல் நிபுணர் அனிஷா ரஃபி.
உதாரணமாக, வகுப்பில் அமர்ந்திருக்கும் மாணவர் ஒருவர், தொடர்ந்து கண்களைச் சிமிட்டிக்கொண்டே இருப்பதைத் தன்னைக் கேலி செய்யும் செயலாக ஆசிரியர் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்புண்டு. ஆனால், "இந்தக் குறைபாடு உடைய அந்த மாணவரின் சுயக் கட்டுப்பாடின்றி அது நடக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்," என்று விளக்கினார் அனிஷா.
அதேபோல, தொண்டையை திரும்பத் திரும்பச் செருமுதல், நோய்க் காரணி ஏதுமின்றி இருமுதல், சிறு சத்தங்களை எழுப்புதல், ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் கூறுவது ஆகியவை குரல் ஒலி டிக்ஸ்களுக்கான சில உதாரணங்கள்.
"நான் படிப்பை முடித்து முதன்முதலில் வேலைக்குச் சென்ற காலகட்டத்தில், தோள்களை திடீர் திடீரெனக் குலுக்குவது, அடிக்கடி குரலொலிகளை எழுப்புவது போன்ற என் உடலில் நடக்கும் தன்னியக்கச் செயல்பாடுகளை, பிறரின் கவனத்தை ஈர்க்க நான் செய்பவை என்று சக பணியாளர்கள் கருதியதுண்டு. ஆனால், அவை தன்னியக்கமாக நிகழ்பவை. எனது கட்டுப்பாட்டில் நடப்பவையல்ல.
என் உடலில் நடக்கும் இத்தகைய செயல்பாடுகள், பிறரின் கவனத்தை அதிகமாக ஈர்த்த காரணத்தால், நான் மிகவும் சங்கடமாகவும் பதற்றமாகவும் உணர்ந்தேன். அதனால் டிக்ஸ்கள் அதிகமானதே தவிர குறையவில்லை," என்று கூறுகிறார் மணிஷா.
உளவியல் நிபுணர்கள் ராஜ்குமார், அனிஷா ரஃபி இருவருமே, "இதுபோன்று திடீர் திடீரென நடக்கும் உடல் இயக்கங்கள், எழுப்பப்படும் குரலொலிகளை டூரெட்ஸ் சிண்ட்ரோம் இருப்பவர்கள் வேண்டுமென்றே செய்வதில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்று வலியுறுத்துகிறார்கள்.
படக்குறிப்பு,உளவியல் நிபுணர் அனிஷா ரஃபி
சமூகத்தில் ஏற்படும் அழுத்தம்
தற்போது பெங்களூருவில் பணியாற்றி வரும் மணிஷா மனோகரன், டூரெட்ஸ் குறைபாட்டால் பள்ளிப் பருவத்தின்போது பல சவால்களை எதிர்கொண்டதாகக் கூறுகிறார்.
"முதன்முதலில் டிக்ஸ் ஏற்படத் தொடங்கியபோது, எனக்கு 6 வயது இருக்கும். என்னை அறியாமல் நான் கண் சிமிட்டிக்கொண்டே இருந்தேன். நான் ஏதோ அதிகமாக டிவி பார்ப்பதாலேயே இப்படி இருப்பதாக கண் மருத்துவர்கள் கூறினர். பல ஆண்டுகளாக என்ன பிரச்னை என்பதைப் புரிந்துகொள்ளாமலே வளர்ந்தேன்."
பிறகு 2021-ஆம் ஆண்டுதான், தனக்கு இருப்பது ஏதோ வினோதமான பழக்கம் கிடையாது, அதுவொரு குறைபாடு என்பதை முழுமையாக உணரத் தொடங்கியதாகக் கூறுகிறார் மணிஷா.
ஒரு பெண் இந்தச் சமூகம் கருதும் "சாதாரணமான, அழகான, ஆரோக்கியமான" என்ற வகைப்பாட்டின் கீழ் வரவில்லை என்றால், அவர் ஒருவித "சமூகப் புறக்கணிப்பை எதிர்கொள்ள நேரிடும். அதை நானும் எதிர்கொண்டேன்" என்கிறார் மணிஷா.
தனது பெற்றோர் இந்தக் குறைபாட்டைப் புரிந்துகொள்ள முடியாத ஒரு வினோதமான பிரச்னையாகப் பார்த்தாலும், எப்போதாவது அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்டிருந்ததாகக் கூறுகிறார் அவர்.
ஆனால், "டூரெட்ஸ் சிண்ட்ரோமை உளவியல் சிகிச்சைகள் மூலம் கட்டுப்படுத்த முடியுமே தவிர அதைக் குணப்படுத்த முடியாது," என்கிறார் உளவியல் நிபுணர் ராஜ்குமார்.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இந்தக் குறைபாட்டால் ஏற்படும் உடலின் தன்னியக்கச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது எறும்புப் புற்றின் மீது நிற்பதைப் போல் மிகவும் கொடுமையானது என்கிறார் மணிஷா மனோகரன்
சமூகத்தில் தொடர்ந்து வினோதமாகப் பார்க்கப்படுவதைத் தவிர்க்க, "இயன்ற அளவுக்கு உடலில் நிகழும் தன்னியக்கச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முயன்றேன். இப்படித் தொடர்ந்து முகமூடியுடன் வாழ்ந்தது, என் மனநலனைப் பெரியளவில் பாதித்தது. நான் போலியானவளைப் போல் உணரத் தொடங்கினேன்" என்று தான் எதிர்கொண்டதை விவரித்தார் மணிஷா.
பிறரின் அடிப்படைப் புரிதலற்ற அறிவுரைகள் மற்றும் கேலிகளால் மிகுந்த மனச்சோர்வை எதிர்கொண்ட மணிஷா, மிகப்பெரிய உளவியல் போராட்டத்திற்குப் பிறகு, "இதுகுறித்து முதலில் நானே புரிந்து, உணர்ந்து, அங்கீகரிக்க வேண்டும்" என்பதையும் "இந்தக் குறைபாட்டுடன் சேர்த்து என்னை நானே முழுமையாகக் காதலிக்க வேண்டும்" என்பதையும் உணர்ந்ததாகக் கூறினார்.
பலவீனத்தை பலமாக மாற்றிய பாடகி
கேரளாவை சேர்ந்த பாடகியான எலிசபெத் எஸ். மேத்யூ, தனது டூரெட்ஸ் குறைபாட்டை ஒரு பலவீனமாகப் பார்க்காமல் அதையே பலமாகக் கருதித் தனது பாடல்களைப் பாடி வருகிறார்.
மேட்ச் பாயின்ட் ஃபெயித் என்ற இசை நிறுவனத்துடன் இணைந்து பாடல்களைப் பாடி வரும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர். அவர் பாடும் பாடல்களுக்கு, பலராலும் இடையூறாகப் பார்க்கப்படும் டிக்ஸ்களே, ஒரு தனி அழகூட்டும் அம்சமாக மாறியுள்ளது.
"நான் பத்து வயதாக இருந்தபோது, எனக்கு டூரெட்ஸ் குறைபாடு இருப்பது தெரிய வந்தது. அப்போது அதுகுறித்த புரிதல் இல்லாததால், அதை நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை."
பட மூலாதாரம்,Elizabeth/IG
படக்குறிப்பு,பாடகி எலிசபெத் எஸ். மேத்யூ
அதற்கு மாறாக, "எனது பெற்றோர் இப்படியொரு அரிய குறைபாடு தங்கள் மகளுக்கு இருப்பதை நினைத்து மிகுந்த கவலைக்கு உள்ளானார்கள். ஆனால் அவர்களும் இப்போது இதை ஏற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளார்கள்" என்கிறார் எலிசபெத்.
இந்தக் குறைபாட்டால் ஏற்படும் தன்னியக்கச் செயல்பாடுகளை, "நான் பிறரது கவனத்தை ஈர்ப்பதற்காகச் செய்வதாகவும், வலிய வேண்டுமென்றே செய்வதாகவும், உறவினர்கள் உள்படப் பலர் குறைகூறத் தொடங்கினார்கள். இதன் விளைவாக என் சுயத்தை மறைத்துக் கொள்ளத் தொடங்கினேன்.
பள்ளிப் பருவத்தில், எப்போதும் ஒருவித கோபத்துடனும், ஆதங்கத்துடனுமே இருப்பேன். மனப் பதற்றம், அச்சம், குழப்பம் எனப் பல எதிர்மறை உணர்ச்சிகளால் பீடிக்கப்பட்டிருந்தேன். இந்தப் பிரச்னைகளை டூரெட்ஸ் குறைபாடு இருப்பவர்கள் பலரும் எதிர்கொள்கின்றனர்," எனக் கூறிய எலிசபெத், இந்தக் குறைபாட்டுடன் வாழ்வது அவ்வளவு எளிய விஷயமல்ல என்றார்.
அதையெல்லாம் கடந்து, "எனக்கு பாடுவது பிடிக்கும் என்பதால், தன்னிச்சையாக ஏற்படும் டிக்ஸ்களை பொருட்படுத்தாமல், அதனூடாகவே பாடத் தொடங்கினேன்."
தனது பாடல்களை லட்சக்கணக்கானோர் ரசிக்கக் காரணம், அவரது திறமை மட்டுமில்லை எனக் கூறும் எலிசபெத், "இந்தக் குறைபாட்டால் ஏற்படும் டிக்ஸ்களை இடையூறாகக் கருதாமல், அவற்றின் ஊடாகவே நான் எனது பாடல்களைப் பாடுவதுதான் என் வளர்ச்சிக்குக் காரணம்," என்றார்.
பட மூலாதாரம்,Getty Images
சமூக விழிப்புணர்வு மிகவும் அவசியம்
நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடான டூரெட்ஸ் சிண்ட்ரோம் இருப்பவர்களுக்கு ஏற்படும் டிக்ஸ்கள் அவர்களுடைய விருப்பத்தின் பேரில் நடப்பதில்லை என்ற விழிப்புணர்வு "சமூகத்தில் மிகவும் குறைவாக இருப்பதாக" கூறுகிறார் உளவியல் நிபுணர் அனிஷா ரஃபி.
டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்கள், தங்களுக்கு ஏற்படும் தன்னியக்கச் செயல்பாடுகளை பிறர் வினோதமாகப் பார்ப்பதால், "தன்னம்பிக்கை குறைவு, மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்," என்றும் கூறுகிறார் அவர்.
பொதுவாக, இதுகுறித்து முதன்மையாக பெற்றோர்களுக்குக் கற்பிக்கப்படும் எனக் கூறுகிறார் அனிஷா. "தங்களது குழந்தைகள் இத்தகைய செயல்பாடுகளை வேண்டுமென்றே செய்வதில்லை. இது அவர்களின் கட்டுப்பாட்டை மீறிய இயக்கம் என்பதை பெற்றோருக்குப் புரிய வைக்க வேண்டும்."
மேலும் அவரது கூற்றுப்படி, அதற்கு அடுத்தகட்டமாக பெற்றோர் வாயிலாக ஆசிரியர்கள் உள்பட அவர்களின் சுற்றத்தாருக்கு இந்த விழிப்புணர்வைக் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.
இதன் மூலம், "டூரெட்ஸ் குறைபாடு இருக்கக்கூடிய மாணவர்களுக்கு ஏதுவான சமூக சூழ்நிலையை ஆசிரியர்கள் உதவியுடன் ஏற்படுத்த முடியும்" என்பதை வலியுறுத்துகிறார் உளவியல் நிபுணர் அனிஷா.
பட மூலாதாரம்,Getty Images
குழந்தைகளோ, பெரியவர்களோ, டூரெட்ஸ் இருப்பவர்களுக்கு டிக்ஸ் ஏற்படும்போது, "அவர்கள் பாதுகாப்பாக உணரக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்குவதே" அவர்களுக்கு நேர்மறையான வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் என்கிறார் அவர்.
ஒருவேளை, இதற்கு நேர்மாறாக, இந்தக் குறைபாடு உடையவர்கள் தொடர்ச்சியாக கேலிக்கு உள்ளாவது, கண்டிக்கப்படுவது, வினோதமாக நடத்தப்படுவது, மனரீதியான கொடுமைகளைச் சந்திப்பது ஆகியவற்றை எதிர்கொள்ள நேர்ந்தால், அது அவர்களின் வளர்ச்சியைப் பெரியளவில் பாதிக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
'தன்னிலை அறிதலே என்னைக் காப்பாற்றியது'
டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்களுக்குப் பிறர் செய்யக்கூடிய சிறந்த உதவி அவர்களைப் புரிந்துகொள்வதுதான் என்கிறார் அனிஷா ரஃபி.
"அவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் திட்டுவது, கேலி செய்வது, டிக்ஸ்களை நிறுத்துமாறு வலியுறுத்துவது போன்ற செயல்பாடுகள் அதை மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும்.
அதற்கு மாறாக, அவர்களிடம் பொறுமையைக் கடைபிடித்து, இந்த டிக்ஸ்கள் அடங்கும் வரை அவர்களுக்கு உளவியல் ரீதியாகப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவது, அவர்களின் நிலைமையை மேம்படுத்தும்," என்றும் விளக்கினார்.
"நீண்ட காலமாக, இந்தக் குறைபாட்டின் காரணமாகவே எனக்குள் ஏதோ தவறு இருப்பதாகவும் அதைச் சரிசெய்ய வேண்டுமென்றும் நினைத்துக் கொண்டிருந்தேன்" என்கிறார் மணிஷா.
ஆனால், "எப்போது அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு, பிறரைப் பற்றிக் கவலைப்படாமல், என் உடலில் நிகழும் தன்னியக்கச் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினேனோ, அதன் பிறகுதான் வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்கினேன்," என்று கூறியபோது மணிஷாவின் முகம் மகிழ்ச்சியில் பூரித்தது.
"இந்த உலகம் உங்களைப் புரிந்துகொள்வதற்கு முன்பாக, நீங்கள் முதலில் உங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் உடலை, மனதை, அவற்றிலுள்ள சிக்கல்களை, முழுதாக அப்படியே நீங்கள் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன்."
"அன்று முதல் டூரெட்ஸ் குறைபாட்டின் விளைவாக நான் எதிர்கொண்ட சவால்களும் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கின" என்கிறார் அவர்.
இதையே வழிமொழியும் வகையில் பேசிய பாடகி எலிசபெத், "தன்னைப் பற்றி ஏற்படும் சுய உணர்வுகளை மேம்படுத்திக் கொண்டபோதுதான், தன் மீதான நம்பிக்கையும் மேம்பட்டது" என்கிறார். மேலும், அதுவே தனது பலவீனத்தை பலமாக மாற்றவும் வித்திட்டதாகக் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c3d0m9xr1dvo
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.