Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தியேட்டருக்குச் சென்று விளையாடலாம் இந்த பொம்மையோடு! - குரங்கு பொம்மை விமர்சனம்

Featured Replies

தியேட்டருக்குச் சென்று விளையாடலாம் இந்த பொம்மையோடு! - குரங்கு பொம்மை விமர்சனம்

 
 

பணம் என்பது மனித வாழ்க்கையின் மதிப்பீடுகளைச் சிதைத்து, எப்படி குலைத்துப்போடுகிறது என்பதையும் பணத்தைத் தாண்டியும் உறவுகளை நேசிக்கும் மனித மனங்களையும் குற்றப் பின்னணி திரைக்கதை வழியாகச் சொல்கிறது 'குரங்கு பொம்மை'!

குரங்கு பொம்மை

 

சென்னையில் கால்டாக்ஸி ஓட்டும் விதார்த்தின் அப்பா பாரதிராஜா, தஞ்சையில் சட்டவிரோதத் தொழில் செய்யும் தேனப்பனிடம் வேலை பார்க்கிறார். விதார்த்துக்குப் பெண் பார்க்கும் படலம், சிலபல காரணங்களால் கைகலப்பில் முடிகிறது. விதார்த் ஒரு பஸ் ஸ்டாப்பில் நிற்கும்போது பெரியவர் ஒருவரிடமிருந்து குரங்குப் படம் போட்ட பையை பிக்பாக்கெட் திருடன் ஒருவர் பறித்துச் செல்கிறார். அந்தப் பையில் என்ன இருக்கிறது, வெவ்வேறு பகுதிகளில் அதன் பயணம் ஆகியவற்றை மையமாக வைத்து விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் நித்திலன்.

'குற்றமே தண்டனை', 'கிடாயின் கருணை மனு' வரிசையில் விதார்த்துக்குப் பெயர் சொல்லும் படம் 'குரங்கு பொம்மை'.  'நடிப்பில் நான் யார் தெரியுமா' எனக் காட்டமுடியாதபடியான கதாபாத்திரம். எந்த உணர்வுகளையும் பளீரென காட்டாமல், இயல்பாகவே இருக்க வேண்டும் என்பதுதான் இந்த கேரக்டரின் அடிப்படை. அதைக் கச்சிதமாக செய்திருக்கிறார் விதார்த். பெண் பார்க்கப்போய் சண்டையில் முடிந்தாலும், அந்தக் காதலை சென்னையில் தொடர்வது சுவாரஸ்ய அத்தியாயம். தந்தையைக் காணாமல் தவிப்பும் தேடலுமான விதார்த்தின் பயணத்தில் வேகமும் விறுவிறுப்பும்.

குரங்கு பொம்மை

படத்தின் இன்னொரு நாயகன் என்று தாராளமாகப் பாரதிராஜாவைச் சொல்லலாம். இத்தனைக்கும் மிகக் குறைவான காட்சிகள், மிகக் குறைந்த வசனங்கள்தான். ஆனால், நட்பின் விலக முடியாத நெருக்கத்தையும் முதுமையின் தளர்வையும் அழகாகத் தன் உடல்மொழியில் கொண்டுவந்திருக்கிறார். குறிப்பாக தழுதழுத்தபடி தன் கதை சொல்லும் அந்த ஒற்றைக்காட்சியின்போது.... பின்னிட்டீங்க எங்கள் இனிய தமிழ் இயக்குநரே! 

வில்லன் என்றாலே பிரமாண்டமாகவும் மிரட்டலாகவும் பார்த்துப் பழகிய நமக்கு, மிக மிகச் சாதாரணப் பின்னணியைக் கொண்ட வில்லனாக குமரவேலு அசத்தியிருக்கிறார். "அண்ணே... என்னண்ணே" என்று இன்முகம் காட்டியே வன்முறைகாட்டும் இடங்களில்... ரணகளம். மரக்கடை ஏகாம்பரமாக வரும் தேனப்பனின் நடிப்பிலும் கதாபாத்திர வடிவமைப்பிலும் நேர்த்தி. 

சிந்தனை என்ற கல்கி கதாபாத்திரத்தைப் போல பல கதாபாத்திரங்களை நாம் சமீபமாகவே நிறைய பார்க்கிறோம் என்பதால் புதிதாக ஒன்றுமில்லை. ஆனால் பாத்திரத்துக்கு ஏற்றபடி சின்னச் சின்ன குறும்புகளும் உடல்மொழிகளுமாய், கவனிக்கத்தக்க வரவுதான் கல்கி. சற்றே பெரிய கண்களோடு இயல்பான நாயகியாய் டெல்னா டேவிஸ். சில காட்சிகளே வந்தாலும் பாலாசிங்கும் கிருஷ்ணமூர்த்தியும் ரசிக்கவைக்கிறார்கள். கஞ்சா கருப்புவின் அந்த கடிகார ஐடியா செம செம! இப்படி படத்தில் ரசிப்பதற்கு சின்னச் சின்னதாய் சுவாரஸ்யமான ஐடியாக்கள்.

குரங்கு பொம்மை

ஒரே கதையை இருவேறு முனைகளில் இருந்து பின்னிக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் முடிச்சுப் போடுவதும், இறுதியில் அதை அவிழ்ப்பதுமாக நல்ல உத்தியைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர். 

 "பக்கத்துல நல்ல போலீஸ் ஸ்டேஷன் எதுவும் இருக்கா?",

 "ஹெல்மெட் இல்லையா?" "ஆங்... பைக் மட்டும்தான் இருந்தது", 

"என்ன அண்ணே இருமுறீங்க, உடம்பு எதுவும் சரியில்லையா என்ன?"

"காலைல சிகரெட் பிடிச்சேன். இரும மறந்துட்டேன்"  என்று மடோனே அஸ்வினின் வசனங்கள் ரசிக்கவைக்கின்றன. 

'உலிடவாரு கண்டந்தே', 'ரஞ்சிதரங்கா', 'க்ரிக் பார்ட்டி' ஆகிய கன்னடப் படங்களில் மிரட்டி எடுத்த இசையமைப்பாளர் அஜனீஷுக்கு இது தமிழில் முதல் படம். பாடல்களை விட, படத்தின் ஓட்டத்துக்கு ஏற்ப வழங்கியிருக்கும் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. நான் லீனியர் கதை சொல்லலில் எந்தக் குழப்பமும் ஏற்படாமல் படத்தைத் தொகுத்திருக்கிறார் அபிநவ் சுந்தர் நாயக். சென்னையின் இயல்பையும் இடுக்குகளையும் உள்ளது உள்ளபடி கவர்ந்திருக்கிறது உதயகுமாரின் ஒளிப்பதிவு. 

Kurangu Bommai

அவ்வளவு விவரமில்லாத பாரதிராஜாவை நம்பி அந்தப் பையைத் தேனப்பன் கொடுத்துவிடுவாரா, விதார்த் தன் ஃபேஸ்புக்கில் போடும் செய்தி இவ்வளவு பரவலாகச் சென்றுசேருமா, பிக்பாக்கெட் கல்கிக்கு ஜோசியம் சொல்லும் பரிகாரத்தில் எந்த எதார்த்தமும் இல்லையே, ‘என் வீட்டுக்காரர் கார்ப்பரேஷன்ல வேலை செய்றார். குப்பை தொட்டியில கண்டெடுத்தார். இதுல உங்க போட்டோவை பார்த்தேன்’ என்று பாரதிராஜாவின் செல்போனை விதார்த்திடம் ஒரு பெண் போகிற போக்கில் கொடுப்பது  செயற்கையாக இருக்கிறதே, காவல் நிலையத்தில் நாயகியை விதார்த் சொல்லி வைத்தது போல சந்திப்பாரா... இப்படி லாஜிக்கலாகக் கேட்கப் பல கேள்விகள் இருக்கின்றன. குறிப்பாக க்ளைமாக்ஸில் குமாரவேலுவுக்கு ஏற்பட்ட நிலையைச் சொல்ல ஒரு பெண்ணை இழிவுபடுத்தியிருப்பது எந்தவிதத்திலும் ஏற்கத்தக்கதில்லை. 

 

ஆனால், 'மோசமானவாகவே இருந்தாலும் நண்பன் என்பதற்காக விலகாமல் இருந்தால் கர்ணனுக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும்' என்பதை பாரதிராஜா பாத்திரம் மூலமும் 'பணம் ஒரு மனிதனை எவ்வளவு மோசமானவனாக மாற்றிவிடுகிறது' என்பதைக் குமரவேலு பாத்திரம் மூலமும், மோசமானவராகவே இருந்தாலும் நட்பின் ஆழத்தைப் புரிந்தவராக தேனப்பன் பாத்திரத்தைக் காட்டியதன் மூலமும் 'குரங்கு பொம்மை'யைப் பாராட்டி வரவேற்கலாம்!

http://www.vikatan.com/cinema/movie-review/101060-kurangu-bommai-review.html

  • தொடங்கியவர்
card-bg-img
 

மனிதனின் பரிணாமம் குரங்கிலிருந்து தான் வந்துள்ளது என படித்திருப்போம். குரங்கு பொம்மை எதை பார்க்கவேண்டும், பேச வேண்டும், கேட்க வேண்டும் என சொல்ல கேட்டிருப்போம். இப்போது வந்துள்ள குரங்கு பொம்மை எப்படிப்பட்டது, என்ன சொல்கிறது என பார்க்கலாம்.

கதைக்களம்

ஹீரோவாக நடித்திருக்கும் விதார்த் சென்னையில் ஒரு கார் ட்ரைவர். பாரதிராஜா தன் மகன் மீது பயமும், பாசமும் வைத்துள்ள ஒரு கிராமத்து தந்தை. விதார்த்துக்கு ஒரு தங்கை, அம்மா என அழகான குடும்பம்.

ஊரே பார்த்து பயப்படும் ஆளாக, கெட்டவனாக, டானாக இருப்பவர் ஏகாம்பரம். ஆனால் பாரதிராஜாவை பொறுத்தவரை அவர் நல்லவர். அப்படி என்ன இவர்கள் இருவருக்குள் என்றால் அதிலும் ஒரு பிளாஷ் பேக் இருக்கிறது.

பாரதிராஜா தன் நண்பன் சொன்ன வேலையை செய்துமுடிக்க சென்னை வருகிறார். அங்கு பொருளை கைமாற்றுவதற்காக ஒருவரை சந்திக்கும் நேரத்தில் கதையின் ஆட்டம் ஆரம்பமாகிறது.

இதற்கிடையில் பொது இடத்தில் விதார்த், திருடனிமிருந்து ஒரு பையை மீட்டு அதை தவறவிட்ட பெரியவரிடம் ஒப்படைப்பதற்காக காவல் நிலையத்தை நாடுகிறார். அங்கு தான் ஒரு ட்விஸ்ட்.

மேலும் சென்னைக்கு வந்த அப்பாவை காணவில்லை என தெரிந்ததும் விதார்த் தேட, கதை வலுக்கிறது. ஒரு பக்கம் எகிறிக்கொண்டு சென்னைக்கு ஏகாம்பரம் பறக்க, பாரதிராஜா என்ன ஆனார், விதார்த் சிக்கலில் இருந்து தப்பித்தாரா, பொருள் என்னானது என்பது கதையின் மிச்சம்.

படத்தை பற்றிய அலசல்

ஹீரோ விதார்த் கதைக்கு சரியானதொரு தேர்வு. இயற்கையான நடிப்பு. கதாபாத்திரம் உணர்ந்து நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதையில் இவர் வில்லனுக்கு ட்விஸ்ட் மூலம் பாடம் சொல்லியது கதையின் உச்சம்.

ஹீரோயின் டெல்னா புதுமுகமாக தெரிவார். ஆனால் சில படங்களில் முன்பே நடித்துள்ளார் என்பதை படம் காட்டுகிறது. விதார்த்துக்கு இணையான ஒரு ஜோடி. இவரை பெண் பார்க்க வந்தபோது நடக்கும் விசயங்கள் ரசிக்க வைக்கிறது.

பல படங்களை எடுத்த பாரதிராஜாவை பற்றி சொல்ல அவரிடம் என்ன குறை இருக்கிறது. இப்படத்தில் அத்தனை ஒரு எதார்த்தம். அப்பாவாக நடித்திருந்தாலும் கதையில் இவரும் ஒரு முக்கிய அங்கம். ஒரு பாதி விதார்த் என்றால், இன்னொரு பாதி இவரால் தான்.

கிளாப்ஸ்

நாளைய இயக்குனர் என்பதை நிரூபித்து விட்டார் நித்திலன். முதல் படம் என்பது போல தெரியவில்லை. முழுமையான பாராட்டுகளை பெறுகிறார்.

இயக்குனருடன் கைகோர்த்து கதையை அப்படியே காட்சிபடுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர். காட்சிகளை ஒன்றுடன் ஒன்று பொருத்தியதில் தெளிவு.

கிராமத்து சாயலில் பாடல்கள் கேட்கும் விதம். ஆங்காங்கே பின்னணி இசை பொருத்தியில் நேர்த்தி. கன்னட சினிமாவில் அஜனேஷ் சிறந்த இசையமைப்பாளர் என தெரிகிறது.

விதார்த், டெல்னா ஜோடி கதைக்கேற்ற நடிப்பு, பாரதிராஜா கதையின் இன்னொரு ஹீரோ என்பது ஒரு இடத்தில் தனியே தெரியும்.

பல்ப்ஸ்

ஏதாவது சிறு குறையிருக்க வேண்டுமல்லவா. டூயட் பாடல் வந்ததுமே இன்னொன்றா என கேள்வி கேட்க வைக்கிறது.

 

மொத்தத்தில் குரங்கு பொம்மை வெறும் கல் அல்ல, கலை. உணர்வுடன் பேசும். தரமான படம் பார்த்த ஒரு திருப்தி.

http://www.cineulagam.com/films/05/100853?ref=related_tag

  • தொடங்கியவர்

திரை விமர்சனம்: குரங்கு பொம்மை

 
kurangujpg

பணத்தின் மீதான பேராசை ஒரு நல்ல நட்பை, அன்பை, உறவை எப்படி சீர்குலைக்கிறது என்பதுதான் இந்த ‘குரங்கு பொம்மை’.

தஞ்சையை சேர்ந்த சிலை கடத்தல்காரர் தேனப்பனிடம் பல ஆண்டுகால சிநேகிதன் என்ற அடிப்படையில் பாரதிராஜா வேலை செய்கிறார். அவரது மகனான விதார்த், சென்னைக்குச் சென்று கால் டாக்ஸி ஓட்டுநராகப் பணிபுரிகிறார். தேனப்பனுடன் தன் தந்தை இருப்பதை விதார்த் விரும்பவில்லை. ஒரு கட்டத்தில் அவர்களது நட்பால் விதார்த்துக்கு பெண் பார்க்கப் போகும்போதும் பிரச்சினை உருவாகிறது. இந்நிலையில், நண்பன் கொடுத்த ‘குரங்கு பொம்மை’ படம் போட்ட டிராவல் பேக்குடன் மகனுக்குத் தெரியாமல் சென்னைக்கு வருகிறார் பாரதிராஜா. அந்தப் பையில் ரூ.5 கோடி மதிப்பிலான கடத்தல் சிலை இருக்கிறது. அதை பாரதிராஜா உரிய இடத்தில் ஒப்படைக்கும்போது நடக்கும் சம்பவங்கள் என்ன? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பது மீதிக்கதை.

எதார்த்தமான கதாபாத்திரங்கள், இயல்பான நடிப்பு, நன்கு படமாக்கப்பட்ட பின்னணி இடங்கள் என்று ஆரம்பம் முதலே படம் சுவாரசியமாக நகர்கிறது. பொதுவாக இதுமாதிரி க்ரைம், த்ரில்லர் படங்களைக் கையாளும்போது படத்தின் விறுவிறுப்புக்காக கதை சிதைவதும், கதைக்காக வேகம் குறைவதும் நடக்கும். அப்படி தொய்வு ஏற்படாதவாறு நேர்த்தியாக திரைக்கதை அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன். குறும்படங்களால் கவனம் ஈர்த்த பிறகு கோலிவுட்டில் தடம் பதித்துள்ளார். ‘புதிர்’ என்ற அவரது முதல் குறும்படத்தின் தாக்கத்தில் உருவாகியுள்ளது ‘குரங்கு பொம்மை’. படத்தில் மடோன் அஸ்வினின் வசனங்களும் கவனம் ஈர்க்கின்றன.

பல இடங்களில் படத்தை பாரதிராஜா தாங்கிப் பிடிக்கிறார். குறிப்பாக, ‘என் பையனைப் போய் பார்த்துட்டு வந்துடறேன்’ என்று கலங்குகிற இடத்தில் நெகிழ வைத்துவிடுகிறார். பாரதிராஜாவுக்கு இணையான நடிப்பை தயாரிப்பாளர் தேனப்பனும் வெளிப்படுத்தியிருக்கிறார். இளங்கோ குமாரவேல் கதாபாத்திரமும் பிரதான இடம் வகிக்கிறது. விதார்த், அறிமுக நாயகி டெல்னா டேவிஸ், கல்கி போன்றவர்களும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாகத் திரையில் கொண்டு வந்திருக்கின்றனர். பாலா சிங், கிருஷ்ணமூர்த்தியின் நடிப்பும், அவர்களது கதாபாத்திரங்களும் மனதை நிறைக்கின்றன.

பெரியவர் தவறவிட்ட பணப்பையை ஒப்படைப்பதற்காக விதார்த் செல்லும் காவல் நிலையம், கஞ்சா கருப்பு வீட்டில் மாட்டப்பட்ட கடிகாரம், குமாரவேல் வீட்டில் மீன் தொட்டியில் அமர்ந்து அவரது மகன் விளையாடுவது உள்ளிட்ட பல இடங்களில் சூழலும், பின்னணியும் கவனமாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

பாரதிராஜா - விதார்த் வரும் காட்சிகள் அளவுக்கு, விதார்த் - டெல்னா காதல் காட்சிகள் ஈர்க்கவில்லை. என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவு, அபிநவ் சுந்தர் நாயக்கின் எடிட்டிங், அஜனீஷ் லோக்நாத் இசை ஆகியவை கச்சிதம்.

சண்டையில் தொடங்கும் விதார்த் - டெல்னா அறிமுகம், பின்னாளில் காதல், பாசம் என்று மலர்வதை சரியாக நிறைவு செய்யவில்லை. செல்போன் வைத்த இடத்தைக்கூட மறந்துவிடுகிற பாரதிராஜாவிடம் ரூ.5 கோடி சிலையைக் கொடுத்து அனுப்புவது, அவரைத் தேடி தேனப்பன் சென்னைக்கு வரும்போது நடக்கும் துப்பாக்கி சூடு ஆகியவை காட்சிகளோடு ஒன்றாமல் கடந்து செல்கிறது. சடலத்துடன் கூடிய ‘குரங்கு பொம்மை’ டிராவல் பேக் பேருந்து நிலையம், மருத்துவமனை, குப்பைத் தொட்டி என்று இடம் பெயர்கிறது. ஒரு இடத்தில் கூடவா துர்நாற்றம் வீசாது? விதார்த்திடம் இருக்கும் பாரதிராஜாவின் போன், குமார வேலிடம் சென்றது எப்படி என்ற லாஜிக்கும் மிஸ்ஸாகிறது. இப்படி சில குறைகள் இருந்தாலும், இயல்பாக நகரும் ‘குரங்கு பொம்மை’யின் வித்தை ரசிக்கும்படியாகவே உள்ளது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19614593.ece

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.