Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அ.தி.மு.க பொதுக்குழு

Featured Replies

அ.தி.மு.க பொதுக்குழு: முதல்வர், துணை முதல்வர் வருகை - 14 தீர்மானங்கள் இடம்பெறுவதாக தகவல்

 

தமிழக அரசியலின் பரபரப்பான சூழலில் அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
 
அ.தி.மு.க பொதுக்குழு: முதல்வர், துணை முதல்வர் வருகை - 14 தீர்மானங்கள் இடம்பெறுவதாக தகவல்
 
சென்னை:

அ.தி.மு.க அம்மா மற்றும் புரட்சித்தலைவி அம்மா அணிகள் இணைந்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

முன்னதாக, பொதுக்குழுவுக்கு தடை கோரி டி.டி.வி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ வெற்றிவேல் நேற்று சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும், பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்பட்டது என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று நடைபெற உள்ள பொதுக்குழுவில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் மண்டபத்திற்கு வரத்தொடங்கி விட்டனர். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வந்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சிறிது நேரத்திற்கு முன்னதாக மண்டபத்திற்கு வந்தடைந்தனர். அவர்களை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

இந்த பொதுக்குழுவில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக கட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு குழுவுக்கு கட்சியை வழிநடத்தும் அதிகாரம் அளிக்கும் வகையிலான தீர்மானம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், டி.டி.வி தினகரன் மற்றும் அவரது அணியினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலான தீர்மானங்கள் இடம்பெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் உள்ளிட்டவையும் இடம் பெறலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/12093923/1107575/admk-public-commitie-meeting--ops-and-eps-arrival.vpf

  • தொடங்கியவர்

95 சதவிகித உறுப்பினர்கள் வருகை! பரபரப்பில் அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம்

 

Meeting_12-9-17a_10348.jpg

பல்வேறு அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இன்று, சென்னை வானகரத்தில் அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் கூட உள்ளது. கூட்டத்துக்கு பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் 95 சதவிகிதம் பேர் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.க இன்று வரை பல அணிகளாகப் பிரிந்து செயல்பட்டுவந்தது. அதில், பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்த பிறகு, கட்சி மற்றும் ஆட்சியை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. 

இரு அணிகளும் இணைந்த பிறகு எடுத்த முக்கிய முடிவு, பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டதைக் கூட்டுவதுதான். அதன்படி, செப்டம்பர் 12-ம் தேதி பொதுக்குழு கூட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டது.

Meeting_12-9-17_10086.jpg

பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் சென்னை வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில், அதிகப்படியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்தில், பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இன்று நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிகிறது. தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைத் திரும்பப் பெற்று, கட்சியின் சின்னத்தை மீட்க தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும், பொதுச் செயலாளர் பதவிலிருந்து சசிகலாவை நீக்குவது போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  95 சதவிகித உறுப்பினர்கள், கூட்டத்துக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 

http://www.vikatan.com/news/politics/101978-admk-general-council-meeting-will-start-shortly.html

  • தொடங்கியவர்

சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி நியமனம் ரத்து! அ.தி.மு.க பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம்

 
 

Meeting_12-9-17aa_11254.jpg

அ.தி.மு.க.வின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் ரத்து செய்யப்படுவதாக, கட்சியின் பொதுக்குழுவில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அ.தி.மு.க சட்டமன்றத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். முதல்வராக சசிகலா பொறுப்பேற்கும் வேளையில், பன்னீர்செல்வம் திடீரென சசிகலாவின் தலைமை பிடிக்காமல் போர்க்கொடி தூக்கியதோடு, தனி அணியை உருவாக்கினார். இதைத் தொடர்ந்து, சசிகலா சிறைக்குச் சென்றார். தினகரன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இரட்டை இலை சின்னம் பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, கட்சியிலிருந்து தினகரனை ஒதுக்கிவைப்பதாக முதல்வர் பழனிசாமி அணியினர் அறிவித்தனர். பிரிந்துசென்ற அணியினரை  இணைக்கும் முயற்சி, நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் நடந்தது. இதற்கு, தினகரன் தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. அதோடு, முதல்வர் பழனிசாமி அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து தனித்தனியாக கடிதம் கொடுத்தனர். இதனிடையே, பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது; இதனால் சட்டப்பேரவையைக் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஆளுநரை சந்தித்து வலியுறுத்திவந்தன. ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Meeting_12-9-17b_11431.jpg

 
 
 

ஆட்சிக்கு எதிராக தினகரன் தரப்பும் எதிர்க்கட்சியினரும் போராடி வரும் சூழ்நிலையில், அ.தி.மு.க பொதுக்கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று தொடங்கியது. அவைத் தலைவர் மசூதுதனன் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில், மூன்று வரிசையில் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. 57 பேர் இந்த நாற்காலியில் அமர்ந்திருந்தனர். இதைத் தொடர்ந்து, மேடையிலிருந்த ஜெயலலிதா படத்துக்கு மலர்தூவி மரியாதைசெலுத்தப்பட்டது. பின்னர், உறுப்பினர்களை வரவேற்று முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசினார். இதைத் தொடர்ந்து, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் செய்தியை பொள்ளாச்சி ஜெயராமன் வாசித்தார். பின்னர் பொதுக்குழு தீர்மானத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாசித்தார்.

தினகரன் நியமனம் செல்லாது!

முதலில், 'இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும்' என்ற தீர்மானத்தை வாசித்தார். பின்னர் தமிழகத்தைக் காக்க ராமர், லட்சுமணனைப் போல பழனிசாமி- பன்னீர்செல்வம் இணைந்துள்ளனர் என்றும் தீர்மானம் வாசித்தார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள், நியமனங்கள் செல்லாது எனவும்,  ஜெயலலிதா நியமித்த உறுப்பினர்கள், கட்சிப் பொறுப்புகளில் நீடிப்பார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு 15 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்க முடிவுசெய்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தும், விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்கும் முடிவை எடுத்த அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

7-வது தீர்மானமாக, அ.தி.மு.க-வின் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகாலா நியமனம் ரத்து செய்யப்படுவதாக, கட்சியின் பொதுக்குழுவில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, கூட்டத்திலிருந்து எதிர்ப்பு எழுந்தது. அவர்களை உடனிருந்தவர்கள் சமாதானப்படுத்தினர். இதையடுத்து சலசலப்பு அடங்கியது. இதைத் தொடர்ந்து, 'ஜெயலலிதாவுக்குப் பின், கட்சியில் பொதுச் செயலாளர் பொறுப்பு யாருக்கும் கிடையாது' என்றும் 'இனி பொதுச் செயலாளர் பதவி கிடையாது எனவும் சட்ட திருத்தம் கொண்டுவரப்படும்' என்று தீர்மானம் வாசிக்கப்பட்டது.

முதன்மை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்!

மேலும்,  அ.தி.மு.க.வின் முதன்மை ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி நியமனத்துக்கும் பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அ.தி.மு.க.வில் இனி ஒருவரை சேர்க்கவும், நீக்கவும் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 11 பேர் இடம்பெற பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பொதுச் செயலாளருக்கான அதிகாரங்கள் அனைத்தும் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு வழங்கப்படும். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பின் பொதுச் செயலாளர் பதவியை யாராலும் நிரப்ப முடியாது. அ.தி.மு.க.வின் சட்டவிதி 19ல் திருத்தம் செய்ய ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

http://www.vikatan.com/news/tamilnadu/101984-appointment-of-sasikala-as-general-secretary-will-be-cancelled.html

  • தொடங்கியவர்

பொதுக்குழுவில் சசிகலா குடும்பத்துக்கு எதிராக சீறிய வளர்மதி!

 

valaramathi_long_12396.jpg

''ஆட்சியைக் கலைப்போம் என்று சொல்பவர்கள் ஜெயலலிதாவை என்ன பாடுபடுத்தியிருப்பார்கள்'' என்று சசிகலா குடும்பத்தினரை பொதுக்குழுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

சசிகலா, தினகரன் ஆகியோரின் எதிர்ப்புக்கு மத்தியில், அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வளர்மதி வரவேற்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ''ஆட்சியைக் கலைப்போம் என்று சொல்பவர்கள் ஜெயலலிதாவை என்ன பாடுபடுத்தியிருப்பார்கள். ஜெயலலிதாவின் ஆட்சியை விரட்டுவோம் என மிரட்டுபவர்கள் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள்.

ஆட்சியை வீழ்த்துவோம் என்பவர்களிடம் சுயநலத்தைவிட வேறென்ன இருக்க முடியும். அ.தி.மு.க-வை காப்பாற்ற ஜெயலலிதா எவ்வளவு பாடுபட்டார் என்பது தொண்டர்களுக்குத் தெரியும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இல்லாத நிலையில் 2-வது முறையாக பொதுக்குழுவை நடத்தியுள்ளோம். முதல்வர் பழனிசாமி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி, ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தி வருகிறார்" என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் செய்தியை பொள்ளாச்சி ஜெயராமன் வாசித்தார். பின்னர், பொதுக்குழு தீர்மானத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாசித்தார்.முதல் தீர்மானமே, டி.டி.வி.தினகரன் பதவியும் செல்லாது, அவர் வழங்கிய பொறுப்புகளும் செல்லாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், கட்சியின் பொதுச் செயலாளர்தான் பொதுக்குழுவைக் கூட்ட முடியும். பொதுக்குழுவில் எந்தத் தீர்மானம் நிறைவேற்றினாலும் அது நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பது தொண்டர்கள், மக்களின் விருப்பமாக இருக்கிறது" என்று கூறினார்

http://www.vikatan.com/news/tamilnadu/101986-valarmathi-speech-at-admk-general-council-meeting.html

  • தொடங்கியவர்

’ஓராயிரம் தினகரன்கள் வந்தாலும் அசைக்க முடியாது’ - பொதுக்குழுவில் சூளுரைத்த எடப்பாடி பழனிசாமி

 
 

ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் கட்சியையும், ஆட்சியையும் அசைக்க முடியாது என்று அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

EPS_12329.jpg


சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலா நீக்கம், பொதுச்செயலாளர் பதவியே இல்லை, கட்சியிலிருந்து ஒருவரை நீக்க, சேர்க்க ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

admk_12595.jpg

 


கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ’ஜெயலலிதா இல்லாத நிலையில் நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். பொதுக்கூட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்காதது நமக்குக் கிடைத்த முதல் வெற்றி. பிரிந்த இயக்கம் ஒன்று சேர்ந்த வரலாறு இல்லை; ஆனால், நாம் ஒன்றிணைந்திருக்கிறோம். அதேபோல், தமிழகத்தில் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியைப் பிடித்தது அ.தி.மு.க.தான். இனி யார் நினைத்தாலும் அ.தி.மு.கவை அழிக்க முடியாது. ஏன், ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் கட்சியையும், ஆட்சியையும் அசைக்க முடியாது. கட்சியில் உறுப்பினராக இல்லாத டி.டி.வி.தினகரன் மற்றவர்களை எப்படி நீக்க முடியும்?. துரோகம் செய்ததால் ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தினகரன், எங்களைத் துரோகிகள் என்பதா?. கடந்த 10 ஆண்டுகளாக தினகரன் எங்கிருந்தார்?’ என்று அவர் பேசினார். 

http://www.vikatan.com/news/tamilnadu/101990-edappadi-palanisamy-speech-in-admk-gs-meet.html

  • தொடங்கியவர்

சசிகலா நியமனம் செல்லாது; அதிமுகவில் இனி பொதுச் செயலாளர் பதவியே கிடையாது: பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

 

 
 
admk3jpg

அதிமுக பொதுக்குழு மேடையில் முதல்வர், துணை முதல்வர்

pothujpg

அதிமுக பொதுக்குழு கூட்டம் | படம்: ம.பிரபு.

அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. முதல் தீர்மானமாக இரட்டை இலையை மீட்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இரு அணிகள் இணைந்ததற்கு பாராட்டு தெரிவித்து ஒரே கட்சியாக இணைந்தது குறித்து பாராட்டியும் வாழ்த்தியும் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

முதல் தீர்மானமாக இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என்ற தீர்மானத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாசித்தார். பின்னர் அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதிமுகவில் முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்பட்டு வந்த 2 அணிகளும் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி இணைந்தன.

சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று அப்போது அறிவித்தனர். இதையடுத்து, துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றார். இதற்கு தினகரன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 21 எம்எல்ஏக்கள், முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அதிமுக நிர்வாகிகள் கூடி, பொதுக்குழுவை விரைவில் கூட்ட முடிவெடுத்தனர். செப்டம்பர் 12-ம் தேதி பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

அதன்படி, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் இன்று (செப்.12) நடைபெற்று வருகிறது.

தீர்மானங்கள் விவரம்:

தீர்மானம் 1 - இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக என்ற கட்சிப் பெயரையும் தேர்தல் ஆணையத்தில் இருந்து மீட்பது.

தீர்மானம் 2 - ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள் அதே பதவிகளில் தொடர்வார்கள்.

தீர்மானம் 3 - எம்ஜிஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வருவதற்காக தமிழக அரசுக்கு பாராட்டு.

தீர்மானம் 4 - முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட ரூ.15 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி.

தீர்மானம் 5 - வர்தா புயல் மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு நன்றி. 

தீர்மானம் 6- நெருக்கடியான சூழலில் கட்சியை ஆட்சியை காப்பாற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டு.

தீர்மானம் 7- அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மட்டுமே.

தீர்மானம் 8 -  தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது ரத்து. அவரது நியமனங்கள் ஏதும் செல்லாது.

தீர்மானம் 9 - கட்சிக் கட்டுப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் தினகரன் நியமிக்கும் நியமனங்கள் செல்லாது.

தீர்மானம் 10 - தொண்டர்கள் மனம் அறிந்து கட்சியை வழிநடத்த புதிய பதவி உருவாக்கப்படும்.

தீர்மானம் 11 - பொதுச்செயலாளர் வகித்துவந்த அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்.க்கு வழங்கப்படும்.

தீர்மானம் 12 - கட்சியின் சட்டவிதிமுறை விதி எண் 19 முதல் 40 வரை மாற்றம் செய்து திருத்தம் மேற்கொள்ள ஏகமனதாக ஒப்புதல்.

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். மதியம் 1.05 மணியளவில் பொதுக்குழு கூட்டம் நிறைவு பெற்றது.

http://tamil.thehindu.com/tamilnadu/article19670048.ece?homepage=true

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜெயலலிதாபோல் வருமா விருந்து சாப்பாடு? சோகத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள்

 
 

Meeting_12-9-17_food_14070.jpg

சென்னை வானகரத்தில் அ.தி.மு.க-வின் இரண்டு அணிகள் சார்பில் இன்று பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு காலை சிற்றுண்டியாக இட்லி, வடை, மூன்று வகை சட்னி, பொங்கல் என டிபன் வகைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் அசைவ உணவு வழங்கப்படவில்லை. மாறாக சைவ உணவு பரிமாறப்பட்டுள்ளது.

வெஜிடபுள் பிரியாணி, சாதத்துடன் சாம்பார், ரசம், மோர், தயிர், வடை, பால் பாயசம், ஒரு அவியல், கேரட், பீன்ஸ் பொரியல், கிழங்கு வறுவல், அப்பளம், ஜாங்கரி, ஜஸ்க்ரீம், பாதாம் பால் ஆகியவைப் பரிமாறப்பட்டுள்ளன. இது, அசைவப் பிரியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்கள் கூறுகையில், "அம்மா உயிரோடு இருந்தபோது நடந்த பொதுக்குழு விருந்தில் அசைவ உணவு பரிமாறப்படும். பிரியாணியில் அதிக அளவு மட்டன் கறி இருக்கும். அதோடு வஞ்சிர மீன் வறுவல் நாக்கில் எச்சில் ஊறவைக்கும். ஆனால், இந்தப் பொதுக்குழு சாப்பாடு திருப்பதிகரமாக இல்லை" என்றனர்.

பொதுக்குழு விருந்து முடிந்ததும் அ.தி.மு.க-வினர் அங்கிருந்து ஏ.சி பஸ் மூலம் நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பேருந்தில் செல்லும்போதே சசிகலாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவு குறித்து விவாதம் நடந்துள்ளது. அப்போது, சசிகலாவுக்கு எதிராகத்தான் பெரும்பாலானவர்கள் பேசியுள்ளனர். சசிகலாவுக்கு எதிராக முடிவெடுத்த பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களைச் ஸ்பெஷலாகக் கவனிக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் நட்சத்திர ஹோட்டல்களில் தயாராக உள்ளதாம்.

 

சசிகலாவின் பதவி பறிப்பு எட்டாவது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு சென்டிமென்ட்டாக சில காரணங்கள் இருப்பதாக அ.தி.மு.க-வினர் தெரிவித்தனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/102007-admk-cadres-grieved-about-aiadmk-general-council-meeting.html

  • தொடங்கியவர்

சசிகலாவை நீக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தவர் இவர்தான்!

 

சசிகலாவின் தற்காலிக பொதுச் செயலாளர் பதவியும் அவர் நியமித்த நியமனங்களையும் ரத்து செய்யும் தீர்மானத்தை ஆர்.வைத்திலிங்கம் எம்.பி முன்மொழிந்துள்ளார். இது, தினகரன் தரப்பினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சசிகலா

சென்னை வானகரத்தில் இன்று நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் சசிகலாவின் தற்காலிக பொதுச் செயலாளர் பதவியும் அவர் நியமித்த நியமனங்களும் ரத்து என்ற தீர்மானம் 8-வதாக நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை ஆர்.வைத்திலிங்கம் முன்மொழிந்துள்ளார். அதைப் பொதுக்குழு உறுப்பினர்களும் வழிமொழிந்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியுடன் ஓ.பன்னீர்செல்வம் அணி இணைந்த நிகழ்ச்சி கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அப்போது, சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி, பொதுக்குழுவில் பறிக்கப்படும் என்று வைத்திலிங்கம் எம்.பி அறிவித்தார். அதன்படி அவரே சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி பறிப்புத் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார். 

 

சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி பறிப்பு தீர்மானத்தில், ஜெயலலிதா மரணமடைந்த சூழ்நிலையில் 29.12.2016-ல் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள வி.கே.சசிகலா, தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை ரத்து செய்வதோடு, 30.12.2016 முதல் 15.2.2017 வரை அவர் மேற்கொண்ட நியமனங்கள், நீக்கங்கள், சேர்த்தல்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லாது என்பதை இந்தப் பொதுக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கப்படுகிறது என்று விரிவாகத் தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளது. சசிகலாவால், எம்.பி. பதவியைப் பெற்ற வைத்திலிங்கம், அவருக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது சசிகலா ஆதரவாளர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/102042-sasikala-sacked-from-top-post-of-admk-resolution-proposed-by-this-man.html

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: அதிமுக பொதுக்குழு தீர்மானம்- மோடி வாழ்த்து என்னாச்சு?

 

 
adm

ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையிலான அதிமுக பொதுக்குழுவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்த நெட்டிசன்களின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Prk Bhoopathi

   

தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்த முடிவும் வராத நிலையில் அதிமுக பொதுச் செயலாளரை அதிமுக அம்மா அணியும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியும் சேர்ந்து கூட்டம் போட்டு நீக்க முடியுமா?

சட்ட வல்லுனர்களின் பதில் தேவை.

Padalur Vijay @padalurvijay

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம்- பொறுத்தது போதும் பொங்கியெழு தினகரா!

H Umar Farook

அதிமுகவில் இனி பொதுச் செயலாளரே இல்லை!- பொதுக்குழு முடிவு.

தமிழிசை, பொன்.ராதா வரவேற்பு மற்றும் மோடி வாழ்த்துச் செய்தி என்றுகூடவா இன்னும் செய்தி வரலை?

Na Bha Sethuraman Sethu

"இராமர், இலட்சுமணன் போல ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ். தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்" - மந்திரி ஆர்.பி.உதயக்குமார்

மெத்த வீட்டான் @HAJAMYDEENNKS

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கம்: சின்னம்மா சின்னம்மான்னு காலில் விழுந்துட்டு இப்ப காலை வாரி விட்டுட்டாங்களே?

admk1jpg1
 

Kavisri Dinesh @dineshgadmk

புரட்சித்தலைவி அம்மா அவர்களை மதிப்பிற்குரிய சின்னம்மா வடிவில் காண்கிறோம்: இதுவும் அதிமுக பொதுக்குழு தீர்மானம் தானே? #துரோகிகள்

It's me Vinoth @VKVINO23

மண்ணெண்ணைய், வேப்பெண்ணைய், விளக்கெண்ணைய், யார் பொதுக்குழு கூட்டினா எங்களுக்கு என்ன?

iluminaughty @KaakaiSiddhar

இப்ப எலெக்ஷன் நடந்தாக்கூட அதிமுக 40+ இடம் கண்டிசனா ஜெயிக்கும், அதான் தமிழ்நாடு.

Surya Born To Win @Surya_BornToWin

அதிமுக பொதுக்குழுவில் போடாத ஹிடன் (Hidden) தீர்மானம் "அதிமுகவை பாஜகவிடம் எப்போதும் அடகில் வைத்திருப்பது" என்பதாகும். 

Babu Vmk @BabuVMK

நாளை டிடிவி பொதுக்குழுவைக் கூட்டினாலும் இன்று வந்த 90% உறுப்பினர்கள் அதிலும் கலந்து கொள்வார்கள். அதிமுககாரங்களின் டிசைன் அப்படி..

அம்மு தமிழச்சி

இன்னும் கொஞ்ச நாட்களில் பிரதமர் நரேந்திர மோடிதான் எங்கள் நிரந்தர பொதுச்செயலாளர் என்று தீர்மானம் நிறைவேற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...!

ஏனென்றால் இவர்கள் யாரை, எப்போது மாற்றுவார்கள் என்று இவர்களுக்கே தெரியாது..!

admk1

Mahalingam Ponnusamy

முதல் முறையாக பொது செயலாளர் இல்லாத கட்சி பட்டியலில் அதிமுக #AiadmkGeneralCouncil

வெங்கடேஷ் ஆறுமுகம்

பா.ஜ.க கூட்டம் அதிமுக கூட்டம் என்ன வித்தியாசம்.?

பா.ஜ.க கூட்டத்துக்கு ஆட்கள் திரண்டாங்கன்னா பொது மக்கள் நம்பமாட்டாங்க.. அதிமுக கூட்டத்துக்கு ஆட்கள் திரண்டாங்கன்னா தினகரன் நம்பமாட்டார்.!

Stalin SP @Stalin_Tweets

சசிகலாவை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கிய பொதுக்குழு, அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கவில்லை.

மகிந்தன் @MSRajRules

அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கம்

கரண்ட்டே இல்லை.. இதுல இவங்க இப்ப யாருக்காக இந்த ஃப்யூசை புடிங்கிக்கிட்டு இருக்காங்க..

admk
 

Emil @007eml

சசிகலா மற்றும் தினகரன் கொடுத்த ஆர்டர், அறிக்கை மட்டும்தான் செல்லாதா இல்லை கரன்சியும் செல்லாதா?!- பொதுக்குழு காமெடிகள்.

meenakshisundaram @meenadmr

இதய தெய்வம் ஜெ.க்குப் பின் எங்களை வழிநடத்தும் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் நன்றினு ஒரு சிறப்புத் தீர்மானத்தை அதிமுக பொதுக்குழு நிறைவேற்றி இருக்கலாம். 

Smiley Azam @azam_twitz

அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கம்.

பொதுச்செயலாளர்தானே எல்லாரையும் நீக்குவாங்க, இங்கே பொதுச்செயலாளரையே நீக்கறாங்களே?

http://tamil.thehindu.com/opinion/blogs/article19670952.ece

  • தொடங்கியவர்

பொதுக்குழு முடிவின்படி சசிகலா நீக்கம் செல்லுமா?: சட்ட நிபுணர்கள் கருத்து

 

சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தின்படி பொதுச்செயலாளர் சசிகலா நீக்கம் செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து சட்டநிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 
 
பொதுக்குழு முடிவின்படி சசிகலா நீக்கம் செல்லுமா?: சட்ட நிபுணர்கள் கருத்து
 
சென்னை:

சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் சசிகலா நியமனத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்சியை வழிநடத்துவதற்காக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், மற்றும் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சசிகலா நீக்கமும், வழி காட்டுதல் குழு அமைத்ததும் செல்லுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இது சம்மந்தமாக முன்னாள் மத்திய அரசு வக்கீலும், சட்ட நிபுணருமான மோகன் பராசரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ஏற்கனவே சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லுமா? செல்லாதா? என்ற விவகாரம் தேர்தல் கமி‌ஷன் முன்னிலையில் முடிவு எடுக்கப்படாமல் உள்ளது. அது நிலுவையில் இருக்கின்ற நிலையில் இவர்களாக மீண்டும் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி எப்படி இன்னொரு முடிவு எடுக்க முடியும்.

தேர்தல் கமி‌ஷன் அதிகாரத்தை இவர்கள் கையில் எடுத்ததுபோல ஒரு நடவடிக்கை நடந்துள்ளது. எற்கனவே உள்ள விவகாரத்தில் தீர்வு காணப்படாமல் இருக்கின்ற நிலையில் புதிதாக அது சம்மந்தமாக வேறு ஒரு முடிவை பொதுக்குழு எடுத்திருப்பது சட்ட ரீதியாக சரியாக இருக்க வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரபல அரசியல் நிபுணர் காசிநாதன் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் உள்ள கட்சி சட்டவிதி 43-ன்படி பொதுக்குழுவுக்கு கட்சியில் சட்ட விதிகளை உருவாக்கவும், நீக்கவும் தான் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் என்பவர் கட்சி அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று விதி உள்ளது. அவரை மாற்றுவதற்கோ, கட்சியின் அடிப்படை விவகாரங்களை மாற்றுவதற்கோ பொதுக்குழுவிற்கு அதிகாரம் இல்லை.

ஆனால் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட பொதுச் செயலாளர் ஜெயலலிதா தற்போது இறந்துவிட்டார். எனவே தற்காலிகமாகத்தான் வேறு பொதுச்செயலாளரை தேர்வு செய்திருக்கிறார்கள்.
 
201709131049338252_1_edappadi-palanisamy


கட்சி சட்டவிதி 20(வி)-ன் படி புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் வரை இடைக்காலமாக பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கு அதிகாரம் உள்ளது. அதேபோல இடைக்கால குழுவை அமைத்து கொள்வதற்கும் அதிகாரம் இருக்கிறது.

ஆனால் இப்போது அமைக்கப்பட்டுள்ள வழி காட்டுதல் குழு சட்ட ரீதியாக செல்லுமா? என்பதில் கேள்விக்குறி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ஒருவர் கூறும்போது, இது ஒரு சிக்கலான வி‌ஷயம். அ.தி.மு.க.வின் கட்சி சட்டவிதிகள் என்ன சொல்கிறதோ? அதன்படி எல்லாம் நடந்துள்ளதா? என்பதை தேர்தல் கமி‌ஷன் ஆய்வு செய்து முடிவு செய்யும் என்று கூறினார்.

தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ஒருவர் கூறும்போது, பொதுக்குழு கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஏகமனதாக ஒரு முடிவு எடுத்தால் அந்த முடிவை ஏற்றுக்கொள்ளும் வகையில் தேர்தல் கமி‌ஷன் கருத்தில் எடுத்துக் கொள்ளும். இதில் அவர்கள் திருப்தி அடைந்தால் கட்சி சின்னத்தையும், கட்சி பெயரையும் மீண்டும் வழங்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/13104929/1107755/Will-the-General-Council-decide-to-dismiss-Sasikala.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.