Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாரியை ஏந்திய விவகாரம்: செயலாளருக்கு இடமாற்றம்

Featured Replies

சாரியை ஏந்திய விவகாரம்: செயலாளருக்கு இடமாற்றம்
 

திருமண வைபவமொன்றில், மணப்பெண் அணிந்திருந்த சுமார் 3.2 கிலோமீற்றர் நீளமான சாரியை, பாடசாலை மாணவர்கள் ஏந்தியிருந்த விவகாரத்தையடுத்து, மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளர் பி.பீ விஜயரத்ன, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவர், ஊவா மாகாண பிரதான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று மத்திய மாகாண பிரதான செயலாளர் சரத் பிரேமவங்ச தெரிவித்தார்.

இந்த இடமாற்றம் தொடர்பில் எழுத்துமூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த விவகாரத்தில்  குற்றஞ்சாட்டப்பட்டிருந்த, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவை, அக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பதாக, மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க, கடந்த 25ஆம் திகதியன்று அறிவித்திருந்தார்.  

இந்த விவகாரம் தொடர்பில், ஆராய்வதற்காக, அன்று (25) நடத்தப்பட்ட கூட்டத்திலேயே, அவர் மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கண்டி- கண்ணொருவரையில். கடந்த 21ஆம் திகதியன்று இடம்பெற்ற திருமண வைபவமொன்றில், மணப்பெண் அணிந்திருந்த சுமார் 3.2 கிலோமீற்றர் நீளமான சாரியை, பாடசாலை மாணவர்கள் 250 பேர் ஏந்தியிருந்தனர். அதனையடுத்தே, இந்த விவகாரம் பெரும் பிரச்சினையாகியிருந்தது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/சாரியை-ஏந்திய-விவகாரம்-செயலாளருக்கு-இடமாற்றம்/175-204552

  • தொடங்கியவர்
சேலை ஏந்திய விவகாரம்: விரும்பியே அனுப்பினோம்
 

மொஹொமட் ஆஸிக் 

திருமண வைபவமொன்றில், மணப்பெண் அணிந்திருந்த சுமார் 3.2 கிலோமீற்றர் நீளமான சேலையை ஏந்துவதற்காக, தங்களுடைய விருப்பத்தின் பேரிலேயே, அலவத்துகொடை சரத் ஏக்கநாயக்க ஆரம்ப பாடசாலையின் மாணவ, மாணவிகளைப் பயன்படுத்தியதாக, அப்பாடசாலை மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக, மத்திய மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள், பாடசாலைக்கு விஜயம் செய்திருந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மாணவர்களின் பெற்றோர் நேற்று  (25) மாலை, பாடசாலையை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.  

கின்னஸ் சாதனையை நிலைநாட்ட வந்தவர், குறித்த பாடசாலையின் பழைய மாணவியே என்றும் பழைய மாணவி சாதனையொன்றை நிலைநாட்ட முயற்சிக்கும் போது, அதற்கு உதவி செய்வது தங்களுடைய கடமையே என்றும், இதன்போது பெற்றோர் கூறியுள்ளனர்.  

அதனாலேயே, தங்களுடைய பிள்ளைகளை, இதில் சம்பந்தப்படுத்துமாறு, அதிபரிடம் தாம் கோரிக்கை விடுத்ததாகவும் இதில், பாடசாலை அதிபரிடம் எந்தவொரு தவறும் கிடையாது என்றும், பெற்றோர் கூறியுள்ளனர்.   பாடசாலையை சுற்றிவளைத்த பெற்றோர், அங்கு ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

http://www.tamilmirror.lk/மலையகம்/சேலை-ஏந்திய-விவகாரம்-விரும்பியே-அனுப்பினோம்/76-204519

  • தொடங்கியவர்
நீளமான முந்தானை கின்னஸில் நீளுமா?
 

பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல், வாழும் போதே தனது பெயர் நிலைத்திருக்கும் வகையில், சாதனையொன்றை நிலைநாட்ட வேண்டும் என்ற துடிப்பு, நம்மிடையே பலருக்கும் உண்டு. இதற்கான வழித்தளத்தையே, கின்னஸ் உலக சாதனை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தின் ஆரம்பம்

சுமார் 60 வருடங்களுக்கு முன்னர், அயர்லாந்து நாட்டிலுள்ள வேக்ஸ்போர் என்ற இடத்துக்கு, சேர் ஹக் பீவர், பறவை வேட்டைக்குச் சென்றார். இதன்போது வேட்டையாடப்படும் பறவைகளில், ப்ளோவர் (புறாவை ஒத்த ஒரு வகை பறவை) எனப்படும் பறவைதான், ஐரோப்பாவிலேயே வேகமானதா என அறிய முற்பட்டார்.

ஆனால், அதற்கான எதுவிதமான அதிகாரபூர்வ ஆதாரங்களும் அவருக்குக் கிடைக்கவில்லை. இதற்கான குறிப்புப் புத்தகங்களையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், தொடர்ந்து இது போன்ற விடயங்களை அறிய சேர் ஹக் பீவரே ஒரு புத்தகத்தை உருவாக்கினார். அதுவே கின்னஸ் உலக சாதனைகள் புத்தகம்.
இந்தப் புத்தகத்தில் இடம்பிடிக்க வேண்டும் என, பலர் முயற்சி எடுத்து வந்தாலும் அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டுவது போன்று, ஒரு சிலருக்கு, கின்னஸ் புத்தகத்தில் இடம் கிடைத்து விடுகிறது. 

இந்தப் புத்தகத்தில், எங்களுடைய பெயர் இடம்பெறுவது என்பது, அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்காக பல சிக்கல்களை கடக்கவேண்டியேற்படுகின்றது. “ஒவ்வொரு வருடமும், சுமார் 40 ஆயிரம் சாதனைகள் பட்டியலிடப்படுகின்றன. ஆனால் அவற்றில் 10 சதவீதமானவையே, இந்தப் புத்தகத்தில் இடம்பெறுகின்றன” என, கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் தொடர்பில் 2005ஆம் ஆண்டு முதல் அதன் பிரதம ஆசிரியராக சேவை புரியும் க்ரேக் கிளண்டே தெரிவித்துள்ளார். இந்த 10 சதவீதமானோரில் எமது பெயரும் அடங்காதா என எண்ணுவதில் எவ்வித பிழையும் இல்லை. ஆனால், இந்த ஆசையை தவறான முறையில் பயன்படுத்தி கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற வேண்டும் என நினைப்பது மாபெரும் பிழையாகும். இதற்கு இலங்கையில் கடந்த வாரம், உலக சாதனைக்காக செய்யப்பட்ட திருமணம், சிறந்ததோர் எடுத்துக்காட்டாக அமைகிறது.

கண்டி, பேராதனை - கன்னொருவா பிரதேசத்தின் வீதியில் கடந்த வியாழக்கிழமை (21) தனது திருமண வைபவத்துக்காக, 3.8 கிலோமீற்றர் நீளமான சேலைத்தலைப்பை அணிந்து, கண்டியைச் சேர்ந்த பெண்ணொருவர், கின்னஸ் சாதனைக்கு முயன்றுள்ளார்.

image_07beda3e0d.jpg

இந்தச் சாதனை முயற்சியை அவர் மேற்கொண்ட விதம், நாடளவில் மாத்திரமன்றி, உலகளவிலும் கண்டனத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மாறியுள்ளது.

ருவன் புஷ்பகுமார, சஜனி பிரயங்கிகா ஆகிய இருவரும், கடந்த 21ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்துகொண்டனர். இந்நிலையில், சஜனி பிரியங்கிகா தனது திருமண வைபவத்தில் புதிய சாதனையொன்றை நிலைநாட்ட வேண்டுமென்பதற்காக, மேற்கொண்ட இந்த முயற்சியில் பிரதம அதிதியாக, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார். லொறி ஒன்றில் கொண்டுவரப்பட்ட 3.8 கிலோமீற்றர் நீளமான சேலைத்தலைப்பு, கெடம்பை சந்தியில் இருந்து ஈரியகம சந்தி வரை நீண்டு காணப்பட்டது.

இந்தச் சாதனை முயற்சிக்காக, பாடசாலைச் சிறுமிகளைப் பயன்படுத்தியமை தான், பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்த சேலைத்தலைப்பை விரிப்பதற்கு, பாதை நெடிகிலும் அலவத்துகொட சரத் ஏக்கநாயக்க பாடசாலையின் 250 மாணவர்கள் அமர்த்தப்பட்டனர். மணப்பெண்ணினது மலர்ச் சிறுமிகளாக (பிளவர் கேள்), 40 பேர் அமர்த்தப்பட்டிருந்தனர். இவர்கள், அதிகாலையிலிருந்து பிற்பகல் வரை, அங்கே நிறுத்தி வைக்கப்பட்டனர் என, ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. இது தான், உச்சக்கட்டமான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தனைக்கும், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்ட தினம், வியாழக்கிழமை ஆகும். அதாவது, பாடசாலை நாளாகும். பாடசாலை நாளில், பாடசாலைச் சீரூடையோடு, கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், தனிநபரின் சாதனைக்காக, கொளுத்தும் வெயிலில் மாணவிகள் நிற்க வைக்கப்பட்டமை என்பது, எவ்வளவுக்கு அநியாயமானது? இந்த நடவடிக்கையில், பாடசாலை அதிபரும் சில ஆசிரியர்களும் சம்பந்தப்பட்டிருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது. பாடசாலை மாணவிகளுக்குப் பொறுப்பாகச் செயற்படுவர் என எதிர்பார்க்கப்படும் இவர்கள், அந்த மாணவிகளைப் பயன்படுத்தி, அவர்களைத் துன்புறுத்தி, தனிநபரின் விருப்புகளுக்கு ஏற்றவாறு செயற்படுவது என்பது, எந்தளவுக்கு ஏற்றுக் கொள்ளத்தக்கது?

அந்த மாணவிகள் எவரும், இது தொடர்பாக முறைப்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்றோ, அல்லது மாணவிகளின் சம்மதத்தோடு தான் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்றோ, சிலர் வாதங்களை முன்வைக்க முடியும். பாடசாலையின் அதிபரும் ஆசிரியரும் கேட்கும் போது, மாணவிகள் நிச்சயமாக அதற்குச் சம்மதிக்கத் தான் செய்வார்கள். அது, அவர்களது பதவிகளுக்குக் காணப்படுகின்ற மரியாதை. அதைத் தவறாகப் பயன்படுத்துகின்றமை தான், பிரச்சினைக்குரியது. அத்தோடு, 16 வயதுவரை, முடிவுகளை எடுப்பதற்கு, சிறுவர்களுக்குத் தகுதி இல்லை என்ற அடிப்படையிலேயே, “சம்மதம் வழங்கக்கூடிய” வயது என்பது, 16 என நிர்ணயிக்கப்பட்டது. இந்த வகையில், ஆரம்பப் பாடசாலை மாணவிகளைப் பயன்படுத்துவது என்பது, சிறுவர் துஷ்பிரயோகமாகவே கருதப்பட வேண்டும். 

இலங்கை என்ற ரீதியில் கின்னஸ் சாதனை இடம்பெறுவது, எம் அனைவருக்கும் பெருமையையே தரும். ஆனால், இந்த முயற்சியானது, சர்வதேசத்தின் முன் தலைகுனிய வேண்டிய தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கின்னஸ் சாதனை நடத்தும், நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியால், இலங்கைக்கு சர்வதேசத்தால் பாராட்டுக் கிடைக்கும் என எதிர்பார்த்த போதிலும், கடுமையான அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. பல சர்வதேச ஊடகங்கள், உலக சாதனைக்காகச் செய்யப்பட்ட திருமணத்தில், சிறுவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

image_6c4cb4c85d.jpg

ஐக்கிய நாடுகளின் சிறுவர்கள் தொடர்பான கொள்கைகளுக்கமைய, பல வருடங்களுக்கு முன்னரே குழந்தைத் தொழிலாளி சேவை முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை குறித்து கருத்திற்கொள்ளாமல் இலங்கையில் இன்னமும் குழந்தைத் தொழிலாளி சேவை முன்னெடுக்கப்படுவதாக, கடந்த காலங்களில் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. இந்நிலையில் கண்டியில் இடம்பெற்ற இத்திருமண நிகழ்வு, சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு மேலும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக, மனித உரிமை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

சாதனைகள் பல வகைப்படும் என்ற போதிலும், புதிதாக ஒரு விடயத்தைச் செய்தல், ஏற்கெனவே காணப்படும் ஒன்றை விடச் சிறப்பாகச் செய்தல் என, அவற்றை இலகுவாக வகைப்படுத்த முடியும். சஜனி பிரியங்கிகா, மேற்குறிப்பிட்ட விடயங்களில் 2ஆம் வகையையே தேர்ந்தெடுத்து முயன்றுள்ளார். அவர் முயன்றமை தவறு என்று யாரும் கூறவில்லை. ஆனால் அவர் அதற்காக முயன்ற விதமே அனைவராலும் தவறு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்து, கின்னஸ் மணப்பெண் சஜினி சுரவீர தெரிவிக்கையில், “கின்னஸ் சாதனைக்காகவே நீளமாக முந்தானையுடன் திருமண சேலையை அணிந்தேன். பாடசாலை மாணவிகளை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் நோக்கம் இருக்கவில்லை.
“திருமண நாளில் பாடசாலை சீருடை அணிந்த பிள்ளைகள் முந்தானையை பிடித்துக்கொண்ருந்தமையை பெரிய தவறாக எண்ணியிருக்கவில்லை. நாட்டுக்கு புகழை ஏற்படுத்தும் நோக்கிலும், கின்னஸ் சாதனை படைக்கவும், பாடசாலை மாணவிகளை பயன்படுத்தியது தவறு என சமூக வலைத்தளங்களுக்குத் தெரிந்தாலும், அங்கு எந்த பிள்ளைகளையும் அசௌகரியத்துக்கு உள்ளாகும் வகையில் எதுவும் நடக்கவில்லை.

எனக்கு அலங்காரம் செய்த அழகுக் கலை நிபுணரும், சேலையை அணிவித்த ஆடை அலங்கார கலைஞருமே திருமண நிகழ்வில் பாடசாலை மாணவிகளை சம்பந்தப்படுத்தினர். மேலும், பிள்ளைகளுக்கு தேவையான உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்டன. வெயிலில் வைத்து அவர்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கவில்லை. சமூக வலைத்தளங்கள் இதனை தேவையற்ற வகையில் காட்டியுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

அவர் இவ்விடயத்தை சர்வசாதாரணமாக எடுத்துக்கொண்டுள்ளார் என்பதையே, அவரது பதில் எடுத்துக் காட்டுகிறது. மறுபுறத்தில், இந்நிகழ்வில் பிரதம அதியாகக் கலந்துகொண்ட முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, இதற்கு ஒத்துழைப்ப வழங்கியுள்ளார் என்பது வௌிச்சத்துக்கு வந்துள்ளது. ஓர் அரசியல்வாதியின் ஆதரவுடன் இடம்பெற்ற நிகழ்வு என்பதால்தான், மணப்பெண் சஜினி, இவ்வாறான பதிலை தெரிவித்திருக்கிறார் என எண்ணத்தோன்றுகின்றது.

இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், தமது சுயநலத் தேவைகளுக்காக, பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்துகின்றனர். தலைவர்களை வரவேற்பதற்காக, பாடசாலை மாணவர்களைக் கடும் வெயிலுக்கு மத்தியில் கால் கடுக்க நிற்கவைத்து வதைப்பது, இலங்கையைப் பொறுத்த மட்டில் சாதாரணமாகிவிட்டது. இன்று அதற்கெல்லாம் ஒரு படி மேலாக, நடுவீதியில் சாதனைக்காக பாடசாலை மாணவர்கள் பகடைக்காய்களாகப் பயன்படுத்தும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.

உலக நாடுகளில் பாடசாலை மாணவர்களைக் கொண்டு சாதனை நிகழ்த்திய சம்பவங்கள் எண்ணிலடங்காதவை, உதாரணமாக, எமது அயல்நாடான இந்தியாவை எடுத்துக்கொண்டால் கடந்த வரும் ஓகஸ்ட் மாதம் திருச்சி - மணப்பாறையில் 7 ஆயிரம் மாணவ மாணவிகள், தமிழின் முதல் எழுத்தான “அ” வடிவில் நின்று கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 5 ஆயிரம் பாடசாலை, கல்லூரி மாணவிகள் ஒரே மேடையில் பரதநாட்டிய நிகழ்ச்சியை அரங்பேற்றி கின்னஸ் சாதனைப் படைத்தனர். ஓகஸ்ட் மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கல்லூரி மாணவ, மாணவிகளைக் கொண்டு ஒரே நிமிடத்தில் 5,366 நாற்றுகளை நட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. 

இந்த சாதனைகள் இடம்பெற்ற தருணத்தில் சர்ச்சைகள் எழும்பியதா? இச்சாதனைகள் எவையும், தனிமனிதனின் சுயநலத்துக்காக மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், இலங்கையில் இடம்பெற்ற இந்தச் சாதனைக்காக மாணவர்களை பயன்படுத்தியதானது, தனிநபர் ஒருவரின் சுயநலத் தேவைக்காகும்.

இதற்கு எதிராகப் பலர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். கல்வி அமைச்சும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. 

இது சம்பந்தப்பட்டோருக்கு எதிராக எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது கேள்விக்குறியே. இந்தத் திருமணத்தின் போதும், சிறுவர் பாதுகாப்பு மீறப்பட்டுள்ளது. 

இதன்மூலம், கல்வியறிவு பெற்ற மாணவர்களின் கௌரவத்தையும் பாதுகாப்பையும் பாதிக்கும் செயலாக இது அமைந்துள்ளது. மேலும், பாடசாலை நேரத்தில், மாணவர்கள் இவ்வாறு தனிப்பட்ட தேவைக்காகப் பயன்படுத்துவது, சட்டத்துக்கு விரோதமானது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கூற்றின் படி, இந்தக் குற்றச்செயல் நிரூபிக்கப்பட்டால், 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூற்றின் படி, சம்பந்தப்பட்டோருக்கு தண்டனை வழங்கப்படுமானால், மாணவர்களை தனது சுயநலத் தேவைக்காக பயன்படுத்த எத்தனிக்கும் ஒவ்வொருவருக்கும் ஓர் அச்ச உணர்வை நிச்சயமாக ஏற்படுத்தும்.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நீளமான-முந்தானை-கின்னஸில்-நீளுமா/91-204471

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.