Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடுவுக்கு நகருமா நடுவப் பணிமனை?

Featured Replies

நடுவுக்கு நகருமா நடுவப் பணிமனை?
 

இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நெருக்கடி நிலை, பலதசாப்தங்கள் கழிந்தும், தொடர்ச்சியாக அதே கொதிநிலையில் உள்ளது. ஆட்சியாளர்களும் கடந்த கால வரலாற்றை படிப்பினையாகக் கொண்டு, எதிர்கால சந்ததியினருக்காகச் சிறந்த தேசத்தை உருவாக்க, நிகழ்காலத்தில் விருப்பமின்றியே உள்ளனர், என்பதையே நடப்பு நிகழ்வுகள் எடுத்து உரைக்கின்றன.  

இனப்பிரச்சினைக்குப் பல்வேறு காலங்களிலும் பல தரப்பாலும் பல தீர்வுத் திட்டங்கள் முன் மொழியப்பட்ட போதும், அவை அனைத்தும் தோல்வியைத் தழுவியதே நாம் அனைவரும் கடந்து வந்த கசப்பான வரலாறு ஆகும்.  

இவ்வாறு இருந்த போதிலும், 1987 ஆம் ஆண்டு, இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம், ஈழத்தமிழர்களின் ஒட்டு மொத்தமான சம்மதமின்றி அல்லது விருப்பமின்றி வழங்கப்பட்ட தீர்வுப் பொதியே, இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண சபை ஆகும். அந்த நாட்களில் இலங்கை அரசாங்கம் கூட, மனதளவில் பற்று இன்றியே ஒப்பந்தத்தைப் பற்றிக் கொண்டது எனலாம். அயல் நாட்டின் அழுத்தத்தின் காரணமாகவே அடி பணிந்தது.   

ஆகவே, அந்த மாகாண சபைத் தீர்வு முறையில் பாதகமான அம்சங்கள் காணப்பட்டாலும், அது எமது மண்ணில், நடைமுறையில் ஊசலாடிக் கொண்டே இருக்கின்றது. தமிழ் மக்கள் விரும்பியோ அல்லது விருப்பின்றியோ மூன்று தசாப்த காலமாக நடைமுறையில் உள்ளது.  
1987 ஆம் ஆண்டு முதல், 2006 ஆம் ஆண்டு வரையான 19 வருடங்களாக வடக்கு, கிழக்கு இணைந்த ஒரே மாகாணமாக இருந்தது; இயங்கியது. அந்தக் காலப்பகுதியில், அதன் தலைமைப் பணிமனை திருகோணமலையில் இயங்கியது. ஆகவே இரண்டு மாகாணத்துக்கும் எனப் பொதுத் தலைமைச் செயலகமாக திருகோணமலை ஏற்றுக் கொள்ளப்பட்டது.   

மக்கள் விடுதலை முன்னணியால் 2006 ஆம் ஆண்டு, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, அப்போதைய பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையிலான அணியினர் வடக்கு, கிழக்கை இரண்டு மாகாணங்களாகப் பிரித்தனர். தமிழ் மக்களது அரசியல் அபிலாஷைகளுக்கு (தீர்வுப் பசிக்கு) மாகாண சபை சோளப் பொரியாக அமைந்த போதிலும், இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண சபை இரண்டான சம்பவம் தமிழ் மக்களது இதயம் இரண்டானதுக்கு ஒப்பானது எனலாம்.   

இனம், மொழி, பண்பாடு, கலாசாரம் என அனைத்து விடயங்களிலும் ஒருமித்து இருந்த தமிழர் வாழ்வில், குறுக்கே ஒரு வேண்டப்படாத கோடு வரையப்பட்டது போலவே தமிழ் மக்கள் உணர்ந்தனர்.  

இலங்கையில் 19 ஆம் நூற்றாண்டு தொடக்கம் மாகாணங்கள் நடைமுறையில் இருந்தாலும், 1987 ஆம் ஆண்டு இலங்கை, இந்நிய ஒப்பந்தத்தின் மூலமான 13 ஆம் சரத்தின் பிரகாரமே அவை உத்தியோக பூர்வமாக நிர்வாக நடைமுறைக்கு வந்தது எனலாம்.   

வடக்கு, கிழக்கு எனப் பிரிக்கப்பட்ட பின், வடக்கு மாகாண சபை திருகோணமலை வரோதய நகரில் ஒரு வளாகத்தில் தற்காலிகமாக இயங்கியது. கிழக்கு மாகாண சபை தனியே வேறு ஒர் இடத்தில் இயங்கியது. பின்னர், ஆயுத போர் ஓய்ந்த 2009 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலத்தில், யாழ்ப்பாணத்தில் பல சொந்த கட்டடங்களிலும் தனியார் வீடுகளிலும் வேறு கட்டடங்களிலும் வடக்கு மாகாண சபை இயங்கி வருகின்றது.   

வடக்கு மாகாண சபைத் தேர்தல் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற பின், சில தலைமைத் திணைக்கள செயற்பாடுகள், கைதடிக்கு நகர்த்தப்பட்டுள்ளன. மாகாண சபையின் பேரவையும் அங்கு இயங்குகின்றது.   

தற்போது வடக்கு மாகாண சபைக்குரிய பல தலைமைக் காரியாலயங்கள் ஆங்காங்கே தனியார் கட்டடங்களில் இயங்குகின்றன. அவை மாதாந்தம் கொழுத்த பணத்தை வாடகையாகச் செலுத்தி வருகின்றன. அவ் வாடகை வருடாந்த அரச மீண்டெழும் செலவு மூலமே கொடுப்பனவு செய்யப்படுகிறது. ஆகவே, ஆண்டு தோறும் பாரிய தொகை வாடகைக்காக செலவழிக்கப்படுகிறது.   

மேலும் அவ்வாறாக வாடகைக்கு பெற்றுக் கொள்ளப்பட்ட வீடுகள் போதியளவு இட வசதிகள் இல்லாமையால் உத்தியோகத்தர் கடமையாற்றுவதே மிகச் சிரமமாக உள்ளது.

காற்றோட்ட வசதி, மலசலகூட வசதி உத்தியோகத்தர்கள் மற்றும் சேவை பெற வருவோருக்கான வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி எனப் பற்பல பிரச்சினைகளுடன் செயற்படுகின்றன.   

சில வேளைகளில் தூரப் பிரதேசங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சேவையைப் பெற வருவோரால், காரியாலயங்களைக் கண்டு பிடிப்பதே சவாலாக உள்ளது. அத்துடன் அவ்வாறாக வருவோர் முச்சக்கர வண்டிக்கும் ஒரு தொகைப் பணத்தைச் செலவிட வேண்டிய தேவை உள்ளது.  

ஆகவே, இவ்வாறான பிரச்சினைகளைக் களைந்து, ஒரே கூரையின் கீழ் மாகாண சபையின் அனைத்து சேவைகளையும் அந்த மாகாணத்து மக்களும் இதர நாட்டுப் பிரஜைகளும் பெற ஆவன செய்ய வேண்டிய தார்மீக கடமையும் பொறுப்பும் (மாகாண) அரசாங்கத்துக்கு நிறையவே உண்டு.  

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைதீவு, வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கியதாக வடக்கு மாகாணம் உள்ளது. மக்கள் தொகையில் குறைவாக இருந்த போதிலும் இலங்கையில் ஐந்து மாவட்டங்களைக் கொண்ட மாகாணம் வடக்கு மட்டுமே ஆகும். மாகாணத்தின் மொத்த சனத்தொகையில் ஏறத்தாழ அரைவாசி மக்கள் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.   

ஏனைய, மாகாண சபைகள் கூடிய பட்சம் மூன்று மாவட்டங்களையே கொண்டதாக உள்ளன. ஆகவே ஐந்து நிர்வாக மாவட்டங்களுக்கும் என ஒரு பொதுப் புள்ளியிலேயே வடக்கு மாகாண நிர்வாகத்தின் சகல திணைக்கள தலைமைப் பணிமனைகள் அமைய வேண்டும்.   

அந்த வகையில் நோக்கின், மாங்குளம் பொருத்தமான இடமாக அமையும். இவ்வாறு அமைவதினால் உள்ள அனுகூலங்கள்.   

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் காரியாலயம், பேரவை மற்றும் சகல மாகாண தலைமைத் திணைக்கள நடவடிக்கைகளும் ஒரு இடத்தில் அமையும்.   

அதற்கான காணி மாங்குளத்தை அண்மித்ததாகத் தெரிவு செய்யலாம். நாட்டில் ஏனைய இடங்களில் உள்ளதை விடவும் உத்தியோகத்தர், ஊழியர்களுக்கான தேவையை பூர்த்தி செய்யக் கூடிய விடுதி வசதிகளையும் ஏற்படுத்தலாம்.  

மாங்குளத்தை வடக்கின் முன் மாதிரியான நவீன, அனைத்து வசதிகளையும் தன்னகத்தே கொண்ட நகர் ஆக்கலாம்.  

யாழ்ப்பாணம் - வவுனியா ஏ9 சாலையில் கேந்திர முக்கியமான மையப்புள்ளியில் மாங்குளம் வருவதோடு புகையிரத நிலையமும் உண்டு.   

மல்லாவி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாங்குளம் மகா வித்தியாலயம், கனகராயன் குளம் மகாவித்தியாலயம் மற்றையது சற்று தொலைவு என்றாலும் கிளிநொச்சி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை ) என நான்கு கல்லூரிகளையும் நன்கு அபிவிருத்தி செய்வதன் முலம் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யலாம்.    பிற மாவட்ட உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் தங்களது பிள்ளைகளது கற்றல் செயற்பாடுகள் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கைகளுடன் மாங்குளத்தை நோக்கி நகர வைக்கும்.  

சுகாதார வைத்திசாலை வசதிகளை எடுத்துக்கொண்டால், மாங்குளம் ஆதார வைத்தியசாலை, மல்லாவி ஆதார வைத்தியசாலை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை என மூன்று வைத்தியசாலைகள் காணப்படுகின்றன.அவற்றை மேலும் அபிவிருத்தி செய்தல் வேண்டும்.  

காணி, நிலம் விடயத்தை எடுத்துக்கொண்டால், வேறு பகுதிகளில் சொந்தமாக காணி அற்ற அரச உத்தியோகத்தர்களுக்கு மாங்குளத்தை அண்மித்த பகுதிகளில் காணிகள் வழங்கலாம். மேலதிகமாக ஆர்வமுள்ள உத்தியோகத்தர்கள் வேளான்மை செய்கையிலும் ஈடுபடுவர்.   மேலும் பிற மாவட்டங்களை வதிவிடமாகக் கொண்ட அரச உத்தியோகத்தர்கள் சில வேளைகளில் மாங்குளத்துக்குச் செல்லப் பின்னடிக்கலாம். அது தொடர்பிலும் அவர்களது குடும்பத் தேவைகளை (கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, இருப்பிடம் மற்றும் பிற விடயங்கள்) மாங்குளத்தில் பூர்த்தி செய்யும் ஏற்பாடுகள் காணப்படின் அவர்கள் நிச்சயமாக முன் வருவார்கள்.  

வடக்கு மாகாண சபை தலைமைப் பணிமனை மாங்குளத்தில் அமைவது தொடர்பில் அரசியல்வாதிகள் பலரும் பலவாறாக கதைத்துள்ளனர். ஆனால், தெளிவான நிறுத்திட்டமான விடை எதுவென பொது மக்களுக்குத் தெரியாது.   

தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஆளும் அபிலாஷைகளுக்குப் பரிகாரம் காணவே மாகாண சபைகள் தோற்றம் பெற்றன. நாட்டில் ஒன்பது மாகாண சபைகள் இயங்குகின்றன. அந்த வகையில் வடக்கு மாகாண சபைக்குரிய தலைமை திணைக்களங்கள் மாத்திரமே அங்கொன்றும் இங்கொன்றுமாக இயங்குகின்றன.   

காலஞ்சென்ற முன்னாள் ஐனாதிபதி பிரேமதாச ஆட்சிக்காலத்தில், முழு நாட்டுக்கும் நடுப்புள்ளியாகிய தம்புள்ளையில் அமையப்பெற்ற மரக்கறிச் சந்தை அமைக்கப்பட்டது. இன்று அது சவால்களுக்கு மத்தியில் நன்கு வளர்ச்சி அடைந்து உள்ளது.   

ஆகவே, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், அரசாங்கம் மற்றும் ஏனைய தொடர்புடைய அனைத்துத் தரப்பும், இவ்விடயம் தொடர்பில் ஆய்வு செய்ய வேண்டும் என்பதே மக்களின் பெரு விருப்பாகும்.   

வடக்கு மாகாணத்துக்குரிய பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதிலேயே இரண்டு அணியாக இரண்டுபட்டவர்கள் நம் அரசியல்வாதிகள். அந்த ஒரு விடயத்தில் கூட, ஒன்றுபட்டு உழைக்க முடியாதவர்களையே தமது அரசியல் முதுசங்களாக தமிழ் மக்கள் கொண்டுள்ளனர்.   

வடக்கு மாகாண பொருளாதார மத்திய நிலையம் மற்றும் வடக்கு மாகாண சபை நடுவப் பணிமனை என அரச நிறுவனங்கள் வருமிடத்து மக்களது குடியேற்றங்களும் அதிகரிக்கும். அதையொட்டி நகர் மெல்ல மெல்ல அபிவிருத்தி காணும்.   ஈழத்தமிழர் நிலையோ, பட்டு வேட்டி பற்றி கனவு காணும் போது கட்டியிருந்த துண்டும் கழற்றப்பட்டது என்பது போலவே தற்போது காணப்படுகிறது.   

ஆம்! அந்த வாக்கியம் எவ்வளவு கனகச்சிதமாக தமிழர் வாழ்வியலுடன் பொருந்துகின்றது.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நடுவுக்கு-நகருமா-நடுவப்-பணிமனை/91-204867

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.