Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடைக்கால அறிக்கையும் சுயநிர்ணய உரிமையும்

Featured Replies

இடைக்கால அறிக்கையும் சுயநிர்ணய உரிமையும்

 

மகிழ்ச்சியைத் தொடர்ச்சியாகப் பின்தொடர்வதற்கான உரிமையை மட்டும்தான் அமெரிக்க யாப்பு அமெரிக்கர்களுக்கு உத்தரவாதப் படுத்துகிறது

பெஞ்சமின் பிராங்ளின்

catalonia-independence-1-1024x681.jpgகற்றலோனியா

வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது. இடைக்கால அறிக்கையில் பொதுக்கருத்தாகக் காணப்படும் பகுதி ஒப்பீட்டளவில் சிறியது. பொதுக்கருத்தோடு உடன்படாது தனித்தனியாக கட்சிகள் இணைத்திருக்கும் அறிக்கைகளே பெரும்பகுதியாகும். எனவே அதிகபட்சம் ஒரு பொதுக்கருத்தை எட்ட முடியாத கட்சிகள் நாட்டின் இதயமான பிரச்சினை ஒன்றைக் குறித்து மூன்றே நாட்களுக்குள் விவாதித்து முடிவை எடுக்கப்போவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பில் அரச தரப்பும், ஏனைய சிங்களக்கட்சிகளும் தெரிவித்து வரும் கருத்துக்கள் அகமுரண்பாடற்றவை. தொடர்ச்சியறாதவை. ஆனால் தமிழ்த்தரப்பு தெரிவித்து வரும் கருத்துக்கள் பூடகமானவை. வெளிப்படைத்தன்மை குறைந்தவை. கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தின் எழுபதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சிறப்பு அமர்வின் போது உரை நிகழ்த்திய சம்பந்தர் அப்படித்தான் பேசியிருக்கிறார். அப்படிப்பார்த்தால் இது விடயத்தில் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ணவும், மனோகணேசனும் ஒப்பீட்டளவில் வெளிப்படையாகப் பேசி வருவதாகத் தெரிகிறது.

வழிநடத்தற் குழுவின் முக்கிய உறுப்பினராகிய ஜயம்பதி விக்கிரமரட்ண கடந்த திங்கட்கிழமை பின்வருமாறு கூறியிருக்கிறார். “அதிகாரப்பகிர்வு மற்றும் ஆட்சிமுறை பற்றி இடைக்கால அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இலங்கை ஒற்றையாட்சி நாடாகக் காணப்படுகிறது. புதிய அரசமைப்பில் இலங்கையின் இறையாண்மை பிளவுபடாததும் பிரிக்க முடியாததுமாக தெளிவாக வலியுறுத்தப்படுகிறது. நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் தவறான கருத்துக்களை முற்றாக நிராகரிக்கின்றோம். கூட்டாட்சி என்ற அம்சம் (சமஸ்டி) பற்றி இடைக்கால அறிக்கையில் எங்கும் குறிப்பிடவில்லை. தற்போதைய அரசியலமைப்பில் இல்லாத ஒரு முன்மொழிவாக ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதற்காக இலங்கை என்பது பிளவுபடாததும் பிரிக்க முடியாததுமான நாடு என்று உள்ளது”

பிரிக்க முடியாததும், பிளவு படாததும் என்பதன் பொருள் என்ன? இலங்கைத் தீவிலுள்ள எந்தவொரு மக்கள் கூட்டத்திற்கும் பிரிந்து செல்லும் உரிமை இல்லையென்றுதானே பொருள்? பிரிந்து செல்லும் உரிமை என்றால் என்ன? ஒரு மக்கள் கூட்டம் தனது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரிந்து போதலே அது. மார்க்சிஸ்ட்டுகளின் வார்த்தைகளில் சொன்னால் விவாகரத்துப் பெறுவதற்கான ஓர் உரிமை எனலாம். அதாவது ஒரு குடும்பத்தில் மனைவியானவள் விவாகரத்துப் பெறும் உரிமையைக் கொண்டவள். கணவன் கொடுமைப்படுத்தும் பொழுது அவளுக்குப் பிரிந்து போக உரிமை உண்டு. அல்லது தனிப்பட்ட வேறு பொருத்தமான காரணங்களுக்காகவும் அவள் பிரிந்து போகலாம். இவ்வாறு பிரிந்து போகும் உரிமை என்பது மனைவிக்குள்ள ஒரு பாதுகாப்பு ஏற்பாடாகும். அப்படித்தான் ஒரு மக்கள் கூட்டமும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பிரிந்து போவதை சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்கிறது.

சுயநிர்ணய உரிமை என்றால் என்ன? ஒரு மக்கள் கூட்டம் தனது சுயத்தை தானே நிர்ணயம் செய்யும் உரிமைதான். ஒரு மக்கள் கூட்டம் தன் சுயத்தை தானே தீர்மானிப்பது என்பது பிரிந்து போவது மட்டுமல்ல. இணைந்து வாழ்வதும்தான். கனடாவில் கியூபெக்கிலும் பெரிய பிரித்தானியாவில் ஸ்கொட்லாந்திலும் அப்படித்தான் மக்கள் முடிவுகளை எடுத்தார்கள். சூடானில் தென்பகுதியிலும், கிழக்குத் தீமூரிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிந்து போவது என்று முடிவை எடுத்தார்கள். எனவே ஒரு மக்கள் கூட்டம் தனது சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிப்பது என்பது பிரிவதையும் குறிக்கும். இணைவதையும் குறிக்கும். அதாவது விவாகரத்து உரிமை இருக்கிறது என்பதற்காக எல்லாக் குடும்பங்களும் பிரிந்து போவதில்லை. ஆனால் பெண் ஒடுக்குமுறை நிலவும் ஒரு குடும்பத்தில் அது பெண்ணுக்கு பாதுகாப்புக் கவசமாகும். இப்படிப் பார்த்தால் ஈழத்தமிழர்களுக்கும் சுயநிர்ணய உரிமை என்பது ஒரு பாதுகாப்பு ஏற்பாடுதான். ஆனால் அந்த ஏற்பாட்டை இடைக்கால அறிக்கை சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கின்றது.

“அரசியலமைப்பானது மக்கள் அச்சமடைய வேண்டிய ஆவணமொன்று அல்ல.“யுனிற்றரி ஸ்ரேற்” (Unitary state) எனும் ஆங்கிலப் பதத்தின் பண்டைய வரைவிலக்கணம் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் வட அயர்லாந்திலும் ஸ்கொட்லாந்திலும் தற்போது ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்லக் கூடியதாயுள்ளது. எனவே, ஆங்கிலப் பதமான “யுனிற்றரி ஸ்ரேற்” (Unitary state) இலங்கைக்குப் பொருத்தமற்றதாயிருக்கும்.” என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதாவது பெரிய பிரித்தானியா ஓர் ஒற்றையாட்சி நாடு. எனினும் அங்கே பிரிந்து செல்லும் உரிமை ஸ்கொட்லாந்து மக்களுக்கு வழங்கப்பட்டது. தென் சூடானுக்கும், கிழக்குத் தீமோருக்கும் இது பொருந்தும். அதே சமயம் கனடா ஓர் ஒற்றையாட்சி நாடு அல்ல. எனினும் அங்கேயும் கியூபெக் மக்களுக்கு பிரிந்து செல்ல வாய்ப்பளிக்கப்பட்டது. எனவே ஒற்றையாட்சிக்குக் கீழும் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்கலாம். கூட்டாட்சிக்குக் கீழும் பிரிந்து செல்லும் உரிமையைப் பிரயோகிக்கலாம். ஆனால் இடைக்கால அறிக்கையானது ஒற்றையாட்சி என்பதனை பிரிக்கப்பட முடியாதது, பிளவு படாதது என்று அறுத்துறுத்து வரையறைப்பதன் மூலம் தமிழ் மக்களின் , முஸ்லீம் மக்களின் சுயநிர்ணய உரிமையை நிராகரிக்கின்றது.

முன்னைய யாப்புக்கள் ஒற்றையாட்சி யாப்புக்கள்தான். முன்னைய யாப்புக்களில் காணப்பட்ட ஒற்றையாட்சி என்ற தோற்றப்பாடையும், இப்போதிருக்கும் யாப்பிலுள்ள பிரிவினைக்கு எதிரான ஆறாவது திருத்தச் சட்டத்தையும் இணைத்து பிரிக்கப்படவியலாதது என்ற ஏற்;பாடு தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை இன்னொரு விதமாகச் சொன்னால் ஒரே நாடு ஒரே தேசம் என்பதனை இடைக்கால அறிக்கையானது புதிய சொற்களில் நிறுவுகின்றது. இதை அதன்; பிரயோக வடிவத்தில் சொன்னால் 2009 மே மாதம் பெற்ற இராணுவ வெற்றியை யாப்பிற்குள் உள்வாங்கியிருக்கிறார்கள் எனலாம்.இப்படிப் பார்த்தால் இடைக்கால அறிக்கையானது யுத்த வெற்றி வாதத்தின் குழந்தையாகவே வெளிவந்திருக்கிறது.

வெளித் தோற்றத்திற்கு அதிகளவு அதிகாரங்கள் பகிரப்படுவதாகவும், ஆளுநரின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதாகவும் பொதுவாக சொற்கள் மூலம் விபரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரே நாடு ஒரே தேசம் என்பது அதாவது இராணுவ வெற்றியானது புதிய துலக்கமான வார்த்தைகள் மூலம் அழுத்திக் கூறப்படுகிறது. அதே சமயம் தமிழ் மக்களின் கூட்டுரிமையைப் பாதுகாக்க வேண்டிய இடங்களில் சுட்டிப்பான துலக்கமான சொற்களைப் பயன்படுத்தப்படவில்லை.

Kurdistanflagcitadel2.jpgகுர்டிஸ்தான்

குர்திஸ் மக்கள் பிரிந்து செல்வதற்கான தமது விருப்பத்தை ஒரு சுய வாக்கெடுப்பின் மூலம் உலக சமூகத்திற்கு தெளிவாகக் காட்டியிருக்கும் ஒரு காலகட்டத்தில் கட்டலோனியாவின் மக்கள் பிரிந்து போவதற்கான தமது விருப்பத்தை ஒரு சுய வாக்கெடுப்பின் மூலம் தெளிவாக வெளிக்காட்டியிருக்கும் ஒரு பின்னணிக்குள் தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை பிரயோகிக்க முடியாத ஏற்பாடுகள் இடைக்கால அறிக்கையில் மிகத் தெளிவாக விபரிக்கப்பட்டுள்ளன.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட ஜயம்பதி விக்கிரமரத்தின தெரிவித்த கருத்துக்களின் மற்றொரு பகுதி பின்வருமாறு கூறுகின்றது. “இறையாண்மை பிரிக்கப்பட முடியாததாக காணப்படுகின்றது. கூட்டாட்சி அரசமைப்பில் மாத்திரமே இறையான்மையைப் பிரிக்க முடியும். மாகாணங்கள் பிரிந்து செல்வதைத் தடுக்க தற்போதைய அரசமைப்பில் கூட தெளிவான சட்ட ஏற்பாடுகள் இல்லை. புதிய யாப்பில் மாகாணங்களைப் பிரிக்க முடியாத நிலையில் ஒற்றையாட்சி பலப்படுத்தப்பட்டுள்ளது. மாகாணங்களில் கலவரங்கள், போராட்டங்கள், அசாதாரண நிலமைகள் தோன்றும் போது அரசுத் தலைவரின் கீழ் நேரடியாக மாகாண அதிகாரத்தைக் கொண்டு வரமுடியும் என்பதோடு மகாணத்தைக் கலைக்கவும் அதிகாரம் உண்டு. இப்போதுள்ள அரசமைப்பiயும் தாண்டி புதிய யாப்பின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது”.

மேற்படிக் கருத்துக்களை அவர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். இடைக்கால அறிக்கை தொடர்பில் தவறான விளக்கங்கள் மக்கள் மத்தியில் கொடுக்கப்பட்டு வருவதினால் அதைக் குறித்து தெளிவுபடுத்தும் நோக்கத்தோடு மேற்படி செய்தியாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளது.
எனவே ஜெயம்பதி தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலும்; மனோகணேசன் முகநூலில் தெரிவித்து வரும் கருத்துக்களின் அடிப்படையிலும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் மழுப்பி மழுப்பி தெரிவித்து வரும் கருத்துக்களின் அடிப்படையிலும்; தொகுத்துப் பார்த்தால் இடைக்கால அறிக்கையை அடிப்படையாக வைத்துக் கொண்டு உருவாக்கப்படவிருக்கும் புதிய யாப்பானது தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாகக் கருதவே இல்லை. எனவே ஒரு தேசிய இனத்திற்கு இருக்க வேண்டிய சுயநிர்ணய உரிமையை அது நிராகரிக்கின்றது. ஒரு தேசிய இனத்தின் தாயகப் பிரதேசத்தை அது பிரித்துப் பார்க்கின்றது. அதாவது பொழிவாகச் சொன்னால் அந்த அறிக்கையானது தமிழ் மக்களை ஒரு சிறுபான்மை மக்கள் கூட்டமாகவே பார்க்கின்றது.

ஒரு மக்கள் கூட்டத்தின் சுயநிர்ணய உரிமையை நிராகரித்து விட்டு வழங்கப்படும் ஓர் அதிகாரப் பரவலாக்கல் அலகில் ஆளுநரின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதாகக் கூறப்படுவதை எப்படிப் பார்ப்பது? ஒரு நபரை நலம் எடுத்து விட்டு திருமணம் செய்து தருகிறேன் பிள்ளை பெறு என்று கேட்பதற்கு ஒப்பானதே இது. சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்க முடியாத ஒரு மக்கள் கூட்டத்தை சக்தி மிக்க ஓர் ஆளுநரை வைத்து ஆள்வதும் ஒன்றுதான். ஒரு சம்பிரதாய பூர்வ ஆளுநரை வைத்து ஆள்வதும் ஒன்றுதான். ஏனெனில் சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்க முடியாத ஒரு மக்கள் கூட்டம் நலமடிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டம்தான்.

தேர்தல் காலங்களில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்று சுவரொட்டிகளை அச்சடித்து ஒட்டிவிட்டு இ;ப்பொழுது தமிழ்த்தலைவர்கள் தமிழ் மக்களை சிறுபான்மை மக்களாகத் தேயச் செய்துவிட்டார்கள்.

வழிநடத்தற்குழுவில் நிகழ்ந்த உரையாடல்களின் போது தமிழ்த்தரப்பானது வடக்கு கிழக்கு இணைப்பைப் பற்றிக் கதைக்கவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு இப்பொழுது எழுந்திருக்கிறது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராகிய றூவன் விஜயவர்த்தன இதை உறுதிப்படுத்துவது போல கருத்துத் தெரிவித்திருக்கிறார். ரணில் விக்கிரமசிங்கவின் மருமகன் இவர். சிங்கள மக்கள் மத்தியில் நன்கு ஸ்தாபிக்கப்பட்ட விஜய பத்திரிகைக் குழுமத்தின் வாரிசுகளில் ஒருவர். தெல்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு மத நிகழ்வில் பேசிய பொழுது அவர் பின்வருமாறு கூறியுள்ளார். “வடக்கு – கிழக்கு இணைப்பு என்ற கருத்துத் தொடர்பில் அரசு இதுவரையிலும் எதுவித கலந்துரையாடலையும் முன்னெடுக்கவில்லை. அதற்கான வாய்ப்புக்களும் இல்லை. தமிழ்த்தரப்பும் இதுவரையிலும் வட கிழக்கு இணைப்புப் பற்றி அரசாங்கத்துடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுமில்லை.”; எனவே வடகிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்று தமிழ்ப்பிரதிநிதிகளே கருதுவதாகத் தெரிகிறது.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் இடைக்கால அறிக்கையானது சிங்கள மக்களின் அதாவது வெற்றிபெற்ற பெரும்பான்மைத் தரப்பின் வெற்றியைப்பாதுகாக்கும் விதத்திலும் அந்த வெற்றிக்குப் பின்னரும் நீடித்திருக்கும் தேவையற்ற அச்சங்களைப் போக்கும் விதத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டிருக்கிறது. வார்த்தைக்கு வார்த்தை அது சிங்கள மக்களுடைய பொது உளவியலை கவனத்தில் எடுத்து தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறுபான்மையாகவும், அரசற்ற தரப்பாகவும் காணப்படும் தமிழ் மக்களின் அச்சங்களைப் போக்க வேண்டிய இடங்களில் அது வழுவழுத்த மூட்டமான சொற்களையே பயன்படுத்துகிறது. அது தமிழ் மக்களை ஒரு சிறுபான்மை மக்கள் கூட்டமாகக் கருதுவதன் மூலம் தொடர்ந்தும் அவர்களைத் தோல்வியுற்ற ஒரு தரப்பாகவே பேண முற்படுகிறதா?

யாப்புப்புருவாக்கம் தொடர்பான கடந்த மூன்று தசாப்தத்திற்கும் மேலான கால உலகளாவிய அனுபவத்தின் படி மோதல்கள் இடம்பெற்ற நாடுகளில் சிறுபான்மையினரின் அச்சங்களைப் போக்கும் நோக்கத்தோடு பெரும்பான்மையினரின் முடிவுகள் என்ற அம்சம் கவனத்திற் கொள்ளப்படுவதில்லை என்பதனை அரசியலமைப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் விதத்தில் பல சந்தர்ப்பங்களில் பெரும்பான்மை வாதம் –Majoritarianism ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆனால் இலங்கைத் தீவின் இடைக்கால அறிக்கையானது இந்த உலகளாவிய முன்னேற்றகரமான அனுபவத்திலிருந்து எதையும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இறந்த காலத்திலிருந்து பாடங்கள் எதையும் கற்றுக் கொள்ளாத ஒரு தீவு?.

http://www.nillanthan.net/

நிலாந்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.