Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் இலங்கை டெஸ்ட் போட்டி செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் முகமூடி அணிந்து விளையாடியது ஏன்?

இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

டெல்லியில் நடக்கும் இந்தியா- இலங்கை இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடையூறு ஏற்படுத்திய காற்று மாசுவை சமாளிக்க, இலங்கை வீரர்கள் முகமூடி அணிந்து விளையாடினர்.

கடந்த பல வாரங்களாக காற்று மாசு பிரச்சனையில் டெல்லி பாதிக்கப்பட்டுள்ளது.

பல இலங்கை வீரர்கள் முகமூடி அணிந்து விளையாடியபோதிலும், ஒரு கட்டத்தில் 10 இலங்கை வீரர்கள் மட்டுமே களத்தில் இருந்தனர்.

பந்துவீச்சாளர்கள் லஹிரு கமேஜ் மற்றும் சங்குங்கா லக்மாலும் மதிய வேளையில் களத்தை விட்டு சென்றனர்.

முதல் இன்னிங்ஸில் இந்திய ஏழு விக்கெட்டிற்கு 536 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இந்திய அணியின் கேப்டன் கோலி 243 ரன்கள் எடுத்தார்.

ஆறு இரட்டைச் சதங்கள் அடித்த முதல் சர்வதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் என்ற பெருமையை இதன் மூலம் பெற்றார் கோலி.

கோலிபடத்தின் காப்புரிமைTWITTER/ICC

காற்று மாசு குறித்து இலங்கை வீரர்கள் புகார் அளித்தனர். அத்துடன் மூன்று முறை போட்டி நிறுத்தப்பட்டது. இது கேப்டன் கோலி, இந்திய அணியின் இன்னிங்ஸை டிக்ளர் செய்ய வழிவகுத்தது.

ஒரு கட்டத்தில்,போட்டியை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு நடுவர்கள், மருத்துவர்களிடம் ஆலோசித்தனர்.

நடுவர்களிடம் பேசுவதற்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இலங்கை பயிற்சியாளர் நிக் போத்தாஸும் களத்திற்கு வந்தனர்.

தேநீர் இடைவேளை வரை, இலங்கை இரண்டு விக்கெட்டுகளை இழந்து 18 ரன்கள் எடுத்திருந்தது.

http://www.bbc.com/tamil/sport-42214478

  • Replies 64
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சீருடையுடன் களமிறங்கத் தயாரான பயிற்சியாளர்கள்.. இந்திய அணி டிக்ளேர் செய்ய நிர்பந்திக்கப்பட்டதா?

 
 

டெல்லி டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. 

WhatsApp_Image_2017-12-03_at_6.35.57_PM_

 


நான்கு விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கோலி - ரோகித் ஷர்மா இணை, இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். ஐந்தாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 135 ரன்கள் குவித்தது.இந்த போட்டியில் இரட்டை சதமடித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தொடர்ச்சியாக இரண்டாவது இரட்டை சதமடித்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன்னர் , இச்சாதனையை வினோத் காம்ப்ளி நிகழ்த்தியுள்ளார். 

இந்த போட்டியின் போது பீல்டிங் செய்துகொண்டிருந்த இலங்கை வீரர்கள் சுவாசிக்க சிரமப்பட்டதாகக் கூறப்பட்டது. டெல்லி காற்று மாசுபாடு காரணமாக இலங்கை வீரர்கள் முகமூடியுடன் களத்தில் இறங்கி விளையாடினர். உணவு இடைவேளைக்குப் பின்னர் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு காமாகே,  அசாதாரணமாக உணர்வதாக அணியின் உடற்பயிற்சியாளரை அழைத்து இதுதொடர்பாகப் பேசினார். இதனால், போட்டி 17 நிமிடங்கள் தடைபட்டது. அதேபோல், மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான சுரங்கா லக்மலும், தன்னால் சுவாசிக்க முடியவில்லை என்று கூறி மைதானத்தைவிட்டு வெளியேற போட்டி தொடங்குவதில் 4 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. இந்த இடைவெளியில் நடுவர்கள், மருத்துவர் ஒருவருடன் ஆலோசனை நடத்தினர்.

WhatsApp_Image_2017-12-03_at_6.37.14_PM_

மேலும், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் இலங்கை அணியின் பயிற்சியாளர் நிக் போதாஸ் ஆகியோரும் கள நடுவர்களிடம் ஆலோசனை நடத்தியதைப் பார்க்க முடிந்தது. ஒரு கட்டத்தில் இலங்கை அணி 10 வீரர்களுடன் களமிறங்கும் சூழல் ஏற்பட்ட போது, அந்த அணியின் உடற்பயிற்சியாளர் நிக் லீ, ஜெர்சியுடன் களமிறங்கத் தயாரானார். அதேபோல், இலங்கையின் ஃபீல்டிங் பயிற்சியாளர் மனோஜ் அபேவிக்ரமாவும் ஃபீல்டிங் செய்யத் தயாரானார். 

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் எடுத்திருந்தபோது, கேப்டன் விராட் கோலி டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். முதல் இன்னிங்ஸில் பெரிய அளவில் ரன் குவிக்க இந்திய அணி திட்டமிட்டிருந்தபோது, இலங்கை வீரர்களுக்கு ஏற்பட்ட சிரமம் காரணமாகவே டிக்ளேர் செய்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்திய அணி தரப்பில் சாஹா 9 ரன்களுடனும், ஜடேஜா 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. ஏஞ்சலோ மேத்யூஸ் 57 ரன்களுடனும், தினேஷ் சண்டிமால் 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கின்றனர். 

https://www.vikatan.com/news/sports/109674-delhi-pollution-india-almost-forced-to-declare-their-innings-at-feroz-shah-kotla.html

  • தொடங்கியவர்

சதமடித்தார் மெத்தியூஸ்

 

 

இந்திய அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் 100 ஓட்டங்களைப் பெற்றார்.

angelo.jpg

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி டில்லியில் இடம்பெற்று வருகின்றது.

இப் போட்டியின் 3 ஆவது நாளான இன்று இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 220 ஒட்டங்களைப் பெற்றுள்ளது.

இப் போட்டியில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணியின் அஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் போட்டியில் தனது 8 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார். அவர் 104 ஓட்டங்களைப்பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றார்.

இதேவேளை, மறுமுனையில் துடுப்பெடுத்தாடிவரும் அணித் தலைவர் சந்திமல் ஆட்டமிழக்காது 70 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகின்றார்.

இதேவேளை, நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 536 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது.

http://www.virakesari.lk/article/27827

  • தொடங்கியவர்

2 ஆண்டுகள், 36 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு மேத்யூஸ் சதம்: இலங்கைப் போராட்டம் தொடர்கிறது

 
mathews

சதத்தைக் கொண்டாடும் மேத்யூஸ்.   -  படம்.| பிடிஐ.

டெல்லி டெஸ்ட் போட்டியில் காற்று மாசு, இந்தியப் பந்து வீச்சு ஆகியவற்றுக்கு எதிராக இலங்கையின் போராட்டம் தொடர்கிறது, ஆஞ்சேலோ மேத்யூஸ் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு சதம் அடித்து ஆடி வர, இலங்கை 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்துள்ளது.

கேப்டன் தினேஷ் சந்திமால் அவ்வப்போது சில அருமையான பவுண்டரி நீங்கலாக தடுப்பாட்டமே ஆடி வருகிறார், அவர் 81 ரன்களுடனும், மேத்யூஸ் 108 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

நேற்று மேத்யூஸுக்கு ஒரு கேட்ச் விடப்பட்டது, சற்று முன் சதம் அடித்த பிறகு மிட் ஆஃபில் விஜய் சங்கர் கை வழியாக கேட்ச் ஒன்று நழுவிச் சென்றது.

மேத்யூச் சுமார் 2 ஆண்டுகள், 36 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு போராட்ட சதம் ஒன்றை அடித்து ஆடிவருகிறார். இருவரும் சேர்ந்து 3-வது விக்கெட்டுக்காக இதுவரை 166 ரன்கள் சேர்த்துள்ளனர்.

இந்தியப் பந்து வீச்சும் கோலியும் இலங்கை அணிக்கு சற்றும் இடைவெளியில்லாமல் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். முதல் 2 மணி நேரத்தில் 61 ரன்களையே எடுக்க முடிந்தது. உணவு இடைவேளைக்கு சற்று முன்பாக ஜடேஜா நெருக்கமான களவியூகத்தில் அவருக்கு நெருக்கடி கொடுத்தார், ஒருமுறை ஆட்டமிழந்திருப்பார் ஆனால் பந்து ஆஃப் திசையில் பீல்டருக்கு முன்னால் விழுந்தது.

நேற்று வேகப்பந்து வீச்சாளர்களால் கடும் சோதனைக்குள்ளான மேத்யூஸ், அதனைக் கடந்து வந்தார், இன்றும் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டும் நன்றாகச் சமாளித்தார். இன்றும் மொகமது ஷமி பந்தில் சிலபல பீட்டன்கள் ஆனார். ஷமி நல்ல வேகத்தில் அவரைப் படுத்தினார். இசாந்த் சர்மா வலுவான லெக் திசை பீல்டிங்கை வைத்துக் கொண்டு ஷார்ட் பிட்ச் பந்து சோதனை மேற்கொண்டார். இதிலும் மேத்யூஸ் சற்றே திணறினார், ஆனால் விக்கெட்டைக் கொடுக்கவில்லை.

சந்திமாலும் ஷமியினால் திணறடிக்கப்பட்டார், ஒரு பந்து கிளவ்வைத் தாக்கியது மற்றுமொரு எட்ஜ் ஸ்லிப்புக்கு முன்னால் வந்தது, மற்றபடி சந்திமால் முழுக்க தடுப்பாட்ட உத்தியைக் கடைபிடித்தார்.

இப்போதைக்கு இந்திய அணி இன்றைய தினத்தின் முதல் விக்கெட்டுக்காகத் தேடி வருகிறது.

http://tamil.thehindu.com/sports/article21258843.ece

  • தொடங்கியவர்

தினேஷ் சந்திமால் அபாரம்; 147 நாட் அவுட்: ஃபாலோ ஆனைத் தவிர்த்த இலங்கை 356/9

 

 
chandimal

இலங்கை கேப்டன் தினேஷ் சந்திமால் சதம்.   -  படம். | பிடிஐ.

டெல்லி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தரமான போராட்டக்குணத்தை வெளிப்படுத்தி ஃபாலோ ஆனைத் தவிர்த்தது, மேத்யூஸ், சந்திமால் இணைந்து 79 ஓவர்கள் கூட்டணி அமைத்தனர். கடைசியில் சில விக்கெட்டுகளை இந்திய ஸ்பின்னர்கள் கைப்பற்ற இலங்கை அணி தன் முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்துள்ளது.

3-ம் நாள் ஆட்ட முடிவில் கேப்டன் தினேஷ் சந்திமால் 147 ரன்களுடனும், சண்டகன் ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். சந்திமால், மேத்யூஸ் கூட்டணிக்குப் பிறகு அஸ்வின், ஜடேஜா விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அஸ்வினைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றே தெரிகிறது, அவர் தற்போது 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

அஸ்வின் குறைவாகப் பயன்படுத்தப்பட்டார்?

கேட்ச்கள் கவலையளிக்கும் விதமாக உள்ள நிலையில் விருத்திமான் சஹா 3 கேட்ச்களை எடுத்தார். அஸ்வின் இன்றும் தாமதாகவே பந்து வீச அழைக்கப்பட்டார், ஆனால் அவர் தன் ரவுண்ட் த விக்கெட் பந்து வீச்சின் மூலம் மேத்யூஸைப் படுத்தி எடுத்தார்.

ஒரே கோணத்தில் ஒரே இடத்தில் பிட்ச் ஆகும் இரண்டு பந்துகளில் ஒன்று உள்ளே திரும்புவதும் ஒன்று மட்டையின் விளிம்பைக் கடந்து செல்வதுமாக மேத்யூஸுக்கு திணறலை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட பந்து ஒன்றில்தான் மேத்யூஸ் எட்ஜ் செய்ய சஹா பிடித்தார். அஸ்வின் ஏன் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதற்கு உதாரணம் ஒருகட்டத்தில் ஜடேஜா 30-க்கும் மேற்பட்ட ஓவர்களை வீச, இசாந்த் சர்மா, மொகமது ஷை ஆகியோர் 20க்கும் மேற்பட்ட ஓவர்களை வீசினர்.

ashwinjpg

அஸ்வின்.   -  படம். | ஏ.பி.

 

வலது கை பேட்ஸ்மென்களான மேத்யூஸ், சந்திமால் சுமார் 79 ஓவர்கள் ஆடியதால் கூட கோலி அஸ்வினைக் கொண்டு வருவதில் தாமதமாகியிருக்கலாம், ஆனால் இவர்களின் அதீத யோசனையினால் ஏதோ வலது கை பேட்ஸ்மென்களுக்கு ஆஃப் ஸ்பின்னர் பயன்படவே மாட்டார் என்பது போல் இப்போதெல்லாம் ஆக்கி விட்டனர். இது தோனி கேப்டன்சி ஏற்படுத்திய தவறான சிந்தனையாகும். இப்படிச் சிந்திக்கும் தோனிதான் லார்ட்ஸ் டெஸ்ட் பசுந்தரை பிட்சில் முதல் நாள் உணவு இடைவேளைக்குப் பிறகு ரெய்னாவை பந்து வீச அழைத்த தவறில் போய் முடிந்தது. மேலும் அயல்நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் வீச வரும்போது தோனி தவறாக டீப் பாயிண்ட் வைத்து வீச வைத்த அபத்தமும் நடந்தது. ஸ்மித் நேதன் லயனை எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதையும் அஸ்வினை விட கொஞ்சம் தரம் குறைந்த மொயின் அலியை இங்கிலாந்து எப்படி பயன்படுத்துகிறது என்றும் கூட பார்த்துக் கற்றுக் கொள்ளலாம்.

வழக்கம் போல் அஸ்வின் பந்துகளை உள்ளே இறக்கி பிட்ச் ஆக்கி எழுப்பினார், இதனால் மட்டை விளிம்பை பந்துகள் பலமுறை கடந்து சென்றன. இப்படிப்பட்ட பந்தில்தான் பேட்டிங் சாதக டெல்லி ஆடுகளத்தில் அஸ்வின் அறிமுக இலங்கை வீரர் ரோஷன் டிசில்வாவை பேட்-கால்காப்பு கேட்சில் வீழ்த்தினார். மேத்யூஸ், டிசில்வா இருவரும் வலது கை வீரர்களே!

இதே ரவுண்ட் த விக்கெட்டில் ஒரு பந்தை நேராக உட்செலுத்த இடது கை வீரர் நிரோஷன் டிக்வெல்லா கட் செய்யும் முயற்சியில் பவுல்டு ஆனார்.

சதீரா சமரவிக்ரமா 33 ரன்களில் அருமையான 7 பவுண்டரிகளை அடித்து இசாந்த் சர்மாவின் வெளியே சென்ற பந்தை துரத்தி சஹாவின் வலது புற டைவ் கேட்சுக்கு வெளியேறினார். இதே போல் ஷமி வீசிய அவுட்ஸ்விங்கரை சுரங்க லக்மல் ஆட இதே போல் வலது புறம் டைவ் அடித்து சஹா இன்னொரு கேட்சை எடுத்தார். கமகேவை ஜடேஜா எல்.பி.செய்தார்.

மேத்யூஸே கூறியது போல் ‘அதிர்ஷ்டத்தினால் வந்த சதம்’ ஆகும் இது அவருக்கு, 6 ரன்களில் விராட் கோலி கேட்ச் விட்டார், பிறகு 98 ரன்களில் அதே இடத்தில் ரோஹித் சர்மா கேட்ச் விட்டார், இருமுறையும் இசாந்த்சர்மாதான் பவுலர். சதம் அடித்த பிறகு ஜடேஜா பந்தில் விஜய் சங்கர் கைவழியாக ஒரு கேட்ச் தவறியது.

மேத்யூஸ் (111) 14 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் ஒப்பேற்றி ஒரு சதத்தை எடுக்க, சந்திமாலும் இவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 181 ரன்களைச் சேர்த்ததால் இலங்கை பாலோ ஆனைத் தவிர்த்து 356/9 என்று உள்ளது.

தினேஷ் சந்திமாலின் தனித்துவமான இன்னிங்ஸ் ஆகும் இது, அவ்வப்போது பீட்டன் ஆனாலும் திணறினாலும் 341 பந்துகள் நின்று 18 பவுண்டரிகள் 1 சிக்சருடன் கேப்டனுக்கேயுரிய பொறுமையுடன் மிகப்பிரமாதமாக ஆடி 147 நாட் அவுட்டாகத் திகழ்கிறார்.

http://tamil.thehindu.com/sports/article21261029.ece?homepage=true

  • தொடங்கியவர்

இலங்கை வீரர்கள் செய்தது சரியா?

இலங்கை வீரர்கள் செய்தது சரியா?

 

 
 
 
காற்று மாசு காரணமாக டெல்லியில் நடக்கும் டெஸ்ட் போட்டியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இலங்கை அணி முடிவு செய்தது சரியானதே என ஒரு மருத்துவ நிபுணர் கூறியுள்ளார்.

இந்தியத் தலைநகர் டெல்லி கடந்த சில வாரங்களாகக் காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின் கீழ் பார்த்தால், ஞாயிற்றுக்கிழமையன்று காற்று மாசு மிகவும் மோசமாக இருந்துள்ளது. அப்படியென்றால் கடுமையான உழைப்பைத் தவிர்க்க வேண்டும்.

´´இந்தச் சுற்றுச்சூழலில், வெளிப்புறத்தில் யாராலும் எந்த விளையாட்டையும் விளையாட முடியாது´´ என மேக்ஸ் பல்நோக்கு மருத்துவமனையின் தலைமை நுரையீயல்நோய் சிகிச்சை மருத்துவர் பிரசாந்த் சக்சேனா கூறுகிறார்.

களத்தில் இருந்த இலங்கை வீரர்கள் முகமூடி அணிந்து விளையாடினர். ஒரு கட்டத்தில் 10 இலங்கை வீரர்கள் மட்டுமே களத்தில் இருந்தனர்.

போட்டியை நிறுத்தியதற்காக இலங்கை அணியைப் பலரும் சமூக வலைத்தளத்தில் கிண்டல் செய்தனர். இலங்கை அணியின் இந்த முடிவு இந்தியாவில் பலத்த கோபத்தை ஏற்படுத்தியது.

காற்று மாசுவால், ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி நிறுத்தப்படுவது இதுவே முதல்முறை.

இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்திவரும் இந்தியாவின் கை மேலும் ஓங்குவதைத் தடுக்கவே இலங்கை அணியினர் போட்டியை நிறுத்தியதாகப் பலர் கூறுகின்றனர்.

´´ இந்தக் காற்று மாசில் எந்த விதமாக உடல் உழைப்பும், சுவாசிப்பதில் சிரமங்களை ஏற்படுத்தலாம். அத்துடன் கண்களில் நீர் வழியலாம், இருமல் ஏற்படலாம். இந்த சுழ்நிலையில் விளையாடச் சாத்தியமில்லாத கிரிக்கெட்டை விளையாடும் போது, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்´´ என பிபிசியிடம் கூறுகிறார் மருத்துவர் பிரசாந்த் சக்சேனா.

காற்று மாசுவின் விளைவுகளை கிரிக்கெட் மைதானம் மேலும் அதிகரிக்கலாம் என்கிறார் அவர். ´´கிரிக்கெட் மைதானத்தில் காற்றோட்டம் குறைவாக இருக்கும். இதனால் தூசி மற்றும் நச்சுகள் கலந்த காற்றையே ஒருவரால் சுவாசிக்க முடியும்´´ என்கிறார் சக்சேனா.

காற்றில் நச்சு வாயுக்கள் உள்ள நிலையில், இலங்கை வீரர்கள் முகமூடி அணிந்தது பயனற்றது எனக் கூறும் அவர், காற்று மாசு குறித்து சரியான கூற்றையே இலங்கை வீரர்கள் கூறினார்கள் என ஒப்புக்கொள்கிறார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=98119

  • தொடங்கியவர்

டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 163 ரன்கள் முன்னிலை!

 

 
chandimal_3rd

 

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 371 ரன்கள் எடுத்துள்ளது.

தில்லியில் இரு அணிகளுக்கு இடையே சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. 127.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது இந்தியா. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை 3-ஆம் நாள் ஆட்டம் முடிவில் இலங்கை 130 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்தது. சண்டிமல் 147, லக்ஷன் சன்டகன் ரன்கள் இன்றி களத்தில் இருந்தார்கள். 

இந்நிலையில் இன்று சண்டிமல் 164 ரன்களில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 135.3 ஓவர்களில் 373 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியத் தரப்பில் அஸ்வின், இஷாந்த் சர்மா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 163 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

http://www.dinamani.com/sports/sports-news/2017/dec/05/chandimals-164-cuts-sri-lankas-deficit-to-163-2820751.html

  • தொடங்கியவர்

மைதானத்தில் வாந்தி எடுத்த இலங்கை வீரர் சுரங்க லக்மல்: டெல்லியில் டெஸ்ட் போட்டிகளுக்கு சிக்கல்

 

LAKMAL-1

உடல் நிலை மோசமான நிலையில் சுரங்க லக்மல்.   -  படம்.| சந்தீப் சக்சேனா.

டெல்லியில் கடுமையாக காற்றில் மாசு அதிகரித்துள்ளதால் இலங்கை வீரர் இன்று மைதானத்திலேயே வாந்தி எடுத்து பிறகு பெவிலியன் திரும்பியுள்ளார்.

இந்திய அணியின் 2-வது இன்னிங்ஸ் நடைபெற்று கொண்டிருந்த போது சுரங்க லக்மல் மைதானத்திலேயே வாந்தி எடுத்தார். இலங்கை உடற்தகுதி நிபுணர் உடனே களத்துக்குள் விரைந்து லக்மலை அழைத்துச் சென்றார்.

ஞாயிறன்று சுற்றுச்சூழல் மாசு காரணமாக இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் லாஹிரு கமகேவும் பெவிலியன் திரும்பினார்.

இனி டெல்லியில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற வேண்டுமெனில் சுற்றுச்சூழல் முன்னேற்றம் அடைந்தால்தான் வாய்ப்பு என்ற ரீதியில் இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.

இன்றும் கூட மூக்கு, வாய் ஆகியவற்றை துணியால் மூடியபடிதான் இலங்கை வீரர்கள் பலர் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் டெல்லியில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இன்று இலங்கை அணி தன் முதல் இன்னிங்ஸில் 373 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, தினேஷ் சந்திமால் 164 ரன்கள் எடுத்து இசாந்த் சர்மாவிடம் ஆட்டமிழந்தார். இந்திய அணியில் அஸ்வின், இசாந்த் சர்மா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்திய அணி தன் 2-வது இன்னிங்ஸில் 246/5 என்று டிக்ளேர் செய்தது. ஷிகர் தவண் 67 ரன்களை எடுக்க, ரஹானே மீண்டும் சொதப்பி 10 ரன்களில் தூக்கி அடித்து அவுட் ஆனார். புஜாரா 49 ரன்களை எடுக்க விராட் கோலி 50 ரன்களையும், ரோஹித் சர்மா 50 ரன்களையும் எடுத்தனர். 410 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இலங்கை அணி சமரவிக்ரமா விக்கெட்டை மொகமது ஷமியின் ஆக்ரோஷ பவுன்சருக்கு இழந்து 14 ரன்கள் எடுத்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/article21266223.ece?homepage=true

  • தொடங்கியவர்

”இலங்கை வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியது நம்மை வெட்கப்பட வைத்துள்ளது” : மம்தா பானர்ஜி

 
 

”இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியது நாட்டுக்கு நற்பெயரைப் பெற்றுத்தராது” என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை வீரர்கள்

 
 

இந்தியா-இலங்கை மோதிய டெஸ்ட் போட்டி, இரண்டு நாள்களுக்கு முன்னர் டெல்லியில் நடைபெற்றது. இறுதி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது, ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த இலங்கை வீரர்கள், சுவாசிக்க சிரமப்பட்டதாகக் கூறப்பட்டது. டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசு காரணமாக இலங்கை வீரர்கள் முகமூடியுடன் களத்தில் இறங்கி விளையாடினர். உணவு இடைவேளைக்குப் பின்னர் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லஹிரு காமாகே,  அசாதாரணமாக உணர்வதாக, அணியின் உடற்பயிற்சியாளரை அழைத்துப் பேசினார். இதனால், போட்டி 17 நிமிடங்கள் தடைபட்டது. அதேபோல, மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான சுரங்கா லக்மலும், தன்னால் சுவாசிக்க முடியவில்லை என்று கூறி மைதானத்தைவிட்டு வெளியேற, போட்டி தொடங்குவதில் 4 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. இந்த இடைவெளியில்... நடுவர்கள், மருத்துவர் ஒருவருடன் ஆலோசனை நடத்தினர்.

ஒரு கட்டத்தில், இலங்கை அணி 10 வீரர்களுடன் களமிறங்கும் சூழல் ஏற்பட்டபோது, அந்த அணியின் உடற்பயிற்சியாளர் நிக் லீ, ஜெர்சியுடன் களமிறங்கத் தயாரானார். அதேபோல, இலங்கையின் ஃபீல்டிங் பயிற்சியாளர் மனோஜ் அபேவிக்ரமாவும் ஃபீல்டிங் செய்யத் தயாரானார். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் எடுத்திருந்தபோது, கேப்டன் விராட் கோலி டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். முதல் இன்னிங்ஸில் பெரிய அளவில் ரன் குவிக்க இந்திய அணி திட்டமிட்டிருந்தபோது, இலங்கை வீரர்களுக்கு ஏற்பட்ட சிரமம் காரணமாகவே டிக்ளேர் செய்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.

 

இந்நிலையில், இச்சம்பவம்குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியது எனக்கு வெட்க உணர்வைத் தருகிறது. டெல்லியில் உள்ள மாசு காரணமாக இலங்கை வீரர்கள் அதுபோல விளையாடி உள்ளனர். மாசு நிலையைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு உடனடியாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

https://www.vikatan.com/news/india/109815-mamata-banerjee-comments-over-the-srilankan-players-incident.html

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தலைநகரத்துக்கு அருகாமையில் குப்பை மலையை குவித்து வைத்து, அது சரிஞ்சு நூற்றுக்கணக்கானபேரை பலிகொள்ளும் அளவிற்கு சூழலில் அக்கறை உள்ள சிங்களவர், டெல்லியில் சூழல் மாசு என்று மாஸ்க் அணிந்தார்களாம்! இந்திய அணியின் ரன் குவிப்பில் இருந்து தப்புவதற்காக  ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி ஆட்டத்தை நிறுத்த போட்ட குறுக்குவழி திட்டம் அது!

  • தொடங்கியவர்

410 ரன்கள் வெற்றி இலக்கு: 3 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பாதையில் இலங்கைshami

கருணரத்னேயை பவுன்சரில் காலி செய்த மொகமத் ஷமி.   -  படம். | பிடிஐ.

டெல்லி டெஸ்ட் போட்டியில் 410 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடி வரும் இலங்கை அணி 4-ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்து தோல்வி முகம் காட்டுகிறது.

ஆட்டம் முடிய சற்று முன் வரை 1 விக்கெட்டையே இழ்ந்திருந்த இலங்கை அணி ஜடேஜா வீசிய கடைசி ஓவரில் கருணரத்னே (13), லக்மல் (0) ஆகியோரை வீழ்த்தினார், டிஎம்.டிசில்வா 13 ரன்களுடன் களத்தில் நிற்கிறார். மீண்டும் மேத்யூஸ், சந்திமால் கூட்டணியை நம்பி இலங்கை அணி நாளை 5-ம் நாள் தோல்வியைத் தவிர்க்கப் போராட வேண்டியுள்ளது.

முன்னதாக தொடக்க வீரர் சதீரா சமரவிக்ரம, மொகமது ஷமியின் ஆக்ரோஷ பந்துவீச்சில் சிக்கினார், வேகம், எகிறும் பந்துகளில் அவர் நிலைகுலைந்தார், முதல் பவுன்சரைத் தவிர்க்கும் முயற்சியில் கீழே விழுந்தார். 2-வது பவுன்சர் கிளவ்வில் பட்டு கல்லியில் கேட்ச் ஆனது. டெல்லி காற்று மாசு சூழலில் ஷமியும் வாந்தி எடுத்து களத்தை விட்டுச் சென்றார்.

முன்னதாக இந்திய அணி 2-வது இன்னிங்ஸை ஆடிய போது 2 பவுண்டரிகளுடன் 9 ரன்கள் எடுத்த முரளிவிஜய் லக்மல் பந்தை தன் உடலுக்குத் தள்ளி ஆடமுற்பட்டு எட்ஜ் ஆகி வெளியேறினார். ரஹானே 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் சொதப்பி திலுருவன் பெரேரா பந்தை சிக்ஸ் அடிக்கப் போய் டீப் மிட் ஆனில் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்தத் தொடரில் 5 இன்னிங்ஸ்களில் 17 ரன்கள் மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது, உண்மையில் தென் ஆப்பிரிக்கத் தொடருக்கு முன்பாக ரஹானேயின் இத்தகைய சொதப்பல் இந்திய அணிக்கு கவலையேற்படுத்தக் கூடியதே.

ஷிகர் தவண், புஜாரா 3-வது விக்கெட்டுக்காக 77 ரன்கள் சேர்த்தனர். நல்ல ரன் விகிதத்தில் இதனைச் சேர்த்தனர். 66 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடித்த புஜாரா 49 ரன்களில் டிசில்வாவின் ரவுண்ட் த விக்கெட் பந்தில் எட்ஜ் ஆகி மேத்யூஸ் கேட்சுக்கு வெளியேறினார்.

ஷிகர் தவண் 91 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 67 ரன்கள் எடுத்த நிலையில் சண்டகன் பந்தை மேலேறி வந்து தூக்கி அடிக்க முயன்றார் பந்து திரும்பியதால் மட்டையில் சிக்கவில்லை ஸ்டம்ப்டு ஆனார்.

பிறகு விராட் கோலி, ரோஹித் சர்மா ஜோடி கிட்டத்தட்ட பந்துக்கு 1 ரன் என்ற விகிதத்தில் 90 ரன்கள் கூட்டணி அமைத்தனர். கோலி அரைசதம் எடுத்தவுடன் கமகேவின் வேகம் குறைக்கப்பட்ட பந்தை தூக்கி லாங் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார், இந்தத் தொடரில் விராட் கோலி 600 ரன்களைக் கடந்துள்ளார்.

246/5 டிக்ளேர் என்றவுடன் 410 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து களமிறங்கி இலங்கை அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துள்ளது, ஷமி 1 விக்கெட்டையும் ஜடேஜா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

http://tamil.thehindu.com/sports/article21267492.ece?homepage=true

  • தொடங்கியவர்

தனஞ்ஜயா சதம், ரோஷன் சில்வா 74 நாட் அவுட்: டெல்லி டெஸ்ட்டை டிரா செய்தது இலங்கை

 

 
dananjaya

சதம் அடித்து டிரா செய்ய உதவிய இலங்கை வீரர் தனஞ்ஜயா டிசில்வா.   -  படம். | பிடிஐ.

டெல்லி டெஸ்ட் போட்டியின் 4-வது இன்னிங்சில் 410 ரன்கள் வெற்றி இலக்குக்கு எதிராக இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்து டிரா செய்தது, இதன் மூலம் இந்திய அணி தொடரை 1-0 என்று கைப்பற்றியது.

4-ம் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகும் 5-ம் நாள் ஆட்டத்தில் இந்த தரமான பந்து வீச்சை வைத்துக் கொண்டு மீதமுள்ள 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிபெற முடியாமல் போனது ஏமாற்றமே.

ஆனால் அதே வேளையில் தனஞ்ஜயா 119 ரன்கள் எடுத்து காயத்தினால் வெளியேறினார். அறிமுக வீரர் ரோஷன் சில்வா 154 பந்துகளில்ல் 11 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், நிரோஷன் டிக்வெல்லா 44 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். இருவரும் இணைந்து 6-வது விக்கெட்டுக்காக உடைக்க முடியாமல் 94 ரன்களைச் சேர்த்தனர்.

இந்திய அணியில் ஜடேஜா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஸ்வின் 35 ஓவர்கள் வீசி 126 ரன்களுக்கு 1 விக்கெட்டையே கைப்பற்ற முடிந்தது.

விராட் கோலி இந்த டெஸ்ட் போட்டியில் 243 மற்றும் 50 ரன்களை அடித்ததால் ஆட்ட நாயகனாகவும், தொடரில் 610 ரன்களை 2 இரட்டைச் சதங்கள் உட்பட 3 சதங்களுடன் அடித்ததால் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

முதல் இன்னிங்ஸில் இந்திய பீல்டர்களின் வெண்ணெய் கைகளால் சதம் அடித்த மேத்யூஸ், மாறாக மிக அருமையாக ஆடி சதம் கண்ட கேப்டன் சந்திமால் ஆகியோர் இந்திய அணியை வெற்றியிலிருந்து திசைத்திருப்பினர் என்று கூற வேண்டும், 2-வது இன்னிங்சில் புதுமுகங்களாக தனஞ்ஜயா மற்றும் ரோஷன் சில்வா டிராவை உறுதி செய்தனர்.

5-ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியது, இந்தியாவில் இப்படி முன்பு நடந்திருக்குமா என்பது சந்தேகமே. சந்திமால், தனஞ்ஜயா 112 ரன்களைச் சேர்த்தனர், பிறகு தனஞ்ஜயா, ரோஷன் 58 ரன்கள் சேர்த்தனர்.

பிட்ச் படுமோசமான பிட்ச், இதில் ஸ்பின்னும் ஆகவில்லை, வேகப்பந்து வீச்சுக்கும் ஒன்றுமில்லை. பந்தை மிட் ஆஃபிலிருந்து வீசினால் கூட திரும்பாது போலிருக்கிறது. அதே போல் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் காலுக்குக் கீழேயே குத்திக் கொண்டாலும் எழும்பாது போலிருக்கிறது. இது போன்ற பிட்ச்களில் ஆடுவதனால் ஆய பயன் என்ன? என்பதைக் கேட்க வேண்டிய நேரம் வந்துள்ளது.

தனஞ்ஜயா தொடை காயம் காரணமாக தொடர முடியாமல் வேளியேறிய போது, இந்தியாவுக்கு லேசாக ஒரு வெற்றி வாய்ப்பு ஏற்பட்டது போல் தெரிந்தது, புதிய பந்தும் எடுக்கப்பட்டது. தேநீர் இடைவேளைக்குப் பிறகு விக்கெட் வீழ்த்த எடுத்துக் கொண்ட முயற்சியெல்லாம் ரோஷன் சில்வாவின் உறுதியான உத்தியினால் முறியடிக்கப்பட்டது. மொகமது ஷமியின் பவுன்சர் ஒன்று இவர் விரல்களை பதம் பார்த்தது, இசாந்த் சர்மாவின் பந்து ஒன்றும் எழும்பி இவரை சிரமப்படுத்தியது. ஸ்பின்னைக் கொண்டு வந்தனர், ஜடேஜா பந்தை மேலேறி வந்து கவர் பவுண்டரி அடித்து அரைசதம் கண்டார் சில்வா.

டிக்வெல்லா பாசிட்டிவாக ஆடினார், இதில் ஜடேஜா பந்து ஒன்றில் இவர் பீட்டன் ஆக ஸ்டம்பிங் வாய்ப்பு ஏற்பட்டது, ஆனால் பந்து சஹாவையும் கடந்து சென்றது. இப்படியே சென்று கொண்டிருந்த போது இன்னும் 35 நிமிடங்கள் ஆட்டமிருக்கும் போது இரு அணி வீரர்களும் கைகுலுக்கலில் இறங்கினர். ஆட்டம் டிரா ஆனது.

ஆனால் தனஞ்ஜயா தனது பொறுமையைக் காண்பித்து ஆடினாலும் சில வேளைகளில் நல்ல பவுண்டரிகள் சிலவற்றை அடித்தார், மொத்தம் 16 பவுண்டரிகளை அவர் அடித்தார், இதில் இசாந்த் சர்மாவை அடித்த இரண்டு புல் ஷாட்கள், மற்றும் ஸ்பின்னர்களுக்கு எதிரான ஸ்வீப் ஷாட்கள் அபாரமானவை, எப்போதாவதுதான் ஸ்பின்னர்கள் இவரை பீட் செய்ய முடிந்தது. 110 ரன்களில் இருந்த போது அஸ்வின் கடினமான வாய்ப்பொன்றை தன் பந்து வீச்சில் விட்டார்.

இலங்கை அணிக்கு இந்தத் தொடர் தன்னம்பிக்கை அளிக்கும் தொடராக அமைந்துள்ளது, சுரங்க லக்மல், தனஞ்ஜயா , கேப்டன் சந்திமால், மேத்யூஸ் தன் பார்மைக் கண்டுபிடித்துக் கொண்டது என்று தரமான சில விஷயங்கள் இலங்கை அணியில் உள்ளது தெரியவந்தது.

http://tamil.thehindu.com/sports/article21281531.ece?homepage=true

  • தொடங்கியவர்

4-ம் நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டு வெற்றி பெறாமல் போனது ஏமாற்றமே: விராட் கோலி

 

 
virat%20kohli

வெற்றி டிராபியுடன் விராட் கோலி.   -  படம்.| ஏ.பி.

டெல்லி டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகும் 5-ம் நாள் வெற்றி பெற முடியாமல் போனது ஏமாற்றமே என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்டம் முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் விராட் கோலி கூறியதாவது:

4-ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கையின் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகே 5-ம் நாள் வெற்றியுடன் முடிக்க முடியாதது ஏமாற்றமே. ஆனால் இலங்கை வீரர்கள் நன்றாக ஆடினர், தன்னம்பிக்கையும், கட்டுக்கோப்பும் அவர்கள் ஆட்டத்தில் தெரிந்தது. பிட்சும் கடைசியில் சோர்ந்து விட்டது.

அவர்கள் ஆட்டத்தை நாங்கள் வெற்றிக்குத் தள்ளுவதற்கான வாய்ப்பை வழங்கவில்லை. முதல் இன்னிங்ஸில் கேட்ச்களை பிடித்திருந்தால் அவர்கள் அதிக ரன்களை எடுத்திருக்க வாய்ப்பில்லை. இன்னும் கொஞ்சம் சிறப்பாக ஆடியிருக்கலாம். ஸ்லிப் கேட்ச், பீல்டிங்கில் இன்னும் கொஞ்சம் கடின உழைப்புத் தேவைப்படுகிறது.

அஜிங்கிய ரஹானே ஆரம்பத்திலிருந்தே கல்லியில் பீல்ட் செய்து வந்தார். அது கடினமான இடம் இதனால் அவரை அங்கு நம்பியிருந்தோம். முதலாம், இரண்டாம் ஸ்லிப்புகளில் பயிற்சிகள் மேற்கொண்டால் அங்கும் சிறபாக விளங்கலாம். ஆனால் கல்லியில் அப்படி கிடையாது. எனவே ஸ்லிப் கேட்சிங் என்ற ஒரு புலத்தில் இன்னமும் பயிற்சி, உழைப்பு தேவைப்படுவதாக உணர்கிறோம்.

பணிச்சுமை பயங்கரமாக உள்ளது, என் உடல் ஓய்வு கேட்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக உடல் கொஞ்சம் அதிக வேலை செய்து விட்டது. எனவே தென் ஆப்பிரிக்கா தொடருக்கு முன்பாக ஓய்வு என்பது சரியானதாக அமைந்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடுவது போலவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் என்னால் ஆட முடிகிறது என்பது எனக்கே புதிய வெளிப்பாடாகும். குறிப்பிட்ட, அமைக்கப்பட்ட முறையில் ஆடுவது என்பதல்ல, தன்னம்பிக்கை இருந்தால் எந்த ஒரு வடிவத்திலும் சாதிக்கலாம். நான் கேப்டனாக இல்லாத போது சூழ்நிலைகள் பற்றி சிந்திப்பது கடினம். டெஸ்ட் கிரிக்கெட் ஆட வரும் போது எனக்கு கடும் அழுத்தம் இருந்தது. அப்போது மைல்கல்லை எட்டினால் நான் ரிலாக்ஸ் ஆவேன். இப்போது இவை முற்றிலும் மாறிவிட்டது.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

http://tamil.thehindu.com/sports/article21283913.ece

  • தொடங்கியவர்

இலங்கை வீரர்களை மிரட்டிய காற்று மாசு: டெல்லியில் கிரிக்கெட் போட்டியை நடத்தியது சரியா?

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் பல்வேறு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டுள்ளன. பொதுவாக மழை காரணமாக இடைநிறுத்தப்படுவதை நாம் அதிகமாக பார்த்திருந்தாலும். பனி, மின்னல், மற்றும் சூரிய கிரகணத்தால் இடைநிறுத்தப்பட்ட நிகழ்வுகள் உள்ளன.

 

ஆனால், டிசம்பர் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று இந்தியத் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டம் மாசுபாடு காரணமாக இடைநிறுத்தப்பட்டது.

காற்று மாசுபாடு காரணமாக ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி இடைநிறுத்தப்படுவது இதுவே முதல்முறை. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி பார்த்தால், ஞாயிற்றுக்கிழமையன்று காற்று மாசு மிகவும் மோசமாக இருந்துள்ளது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடையூறு ஏற்படுத்திய காற்று மாசுபாட்டை சமாளிக்க, இலங்கை வீரர்கள் முகமூடி அணிந்து விளையாடினர்.

காற்று மாசு பற்றி இலங்கை கிரிக்கெட் வீரர்கள் புகார் அளித்ததுடன், மூன்றுமுறை போட்டி நிறுத்தப்பட்டது.

இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் விஜய் லோக்பாலி, ''விளையாட்டு இடைநிறுத்தப்பட்டது ஆரோக்கியமற்ற காற்று மாசுவால் ஏற்பட்டதாகும்'' என்று தெரிவித்தார்.

''இந்த ஆட்டத்தின்போது, ஆரோக்கியமற்ற காற்று மாசு குறித்து இலங்கை வீரர்கள் புகார் அளித்தனர். முகமூடி அணிந்து விளையாடினர்'' என்று அவர் மேலும் கூறினார்.

 

கடந்த சில நாட்களாக இந்தப் பிரச்சனையை டெல்லி சந்தித்து வருகிறது. இந்த பிரச்சனையால் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் மூடப்பட்டன.

"இலங்கை வீரர்கள் எவ்வாறு உணர்ந்தார்கள் என்று பார்க்க வேண்டியது முக்கியம். இத்தகைய காற்று மாசுபாட்டுக்கு அவர்கள் பழக்கப்பட்டவர்கள் அல்ல" என்று விஜய் லோக்பாலி குறிப்பிட்டார்.

''விளையாட்டு போட்டியின் காற்று மாசுபாட்டை சமாளிப்பதற்கு இதுவொரு பாடம். எதிர்காலத்தில் நவம்பர் மற்றும் டிசம்பரில் மாதங்களில் டெல்லியில் கிரிக்கெட் போட்டிகள் நடத்த திட்டமிடாமல் இருப்பதற்கு உதவும்'' என்று லோக்பாலி கூறினார்.

இவ்வாறு ஆட்டத்தை இடைநிறுத்தி, இந்திய வீரர்கள் அதிக ரன்கள் எடுப்பதை மட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை வீரர்கள் செயல்பட்டார்களா என்று கேட்டதற்கு, "அவ்வாறு இருக்க வாய்ப்பேயில்லை, ஊடகங்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி காற்று மாசுபாடு இருந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதற்கு இந்திய வீர்ர்கள் பழக்கப்பட்டவர்கள். டெல்லியை சேர்ந்த ஷிகர் தவான் காற்று மாசுபாடு ஒரு பிரச்சனை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்" என்று விஜய் லோக்பாலி சுட்டிக்காட்டினார்.

 

மேலும், இலங்கை வீரர்களுக்கு தோல்வி பயம் என்று ஏளனம் செய்த இந்திய ரசிகர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, "கிரிக்கெட் ரசிகர்களை இந்திய கிரிக்கெட் விளையாட்டின் வேர்கள். இந்திய ரசிகர்கள் இந்தியாவுக்குதான் ஆதரவு தெரிவிப்பார்கள். கடைசி நாள் ஆட்டத்தில் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள்" என்று தெரிவித்தார்.

இதுபற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷிடம் கேட்டபோது, ''இலங்கை வீர்ர்கள் மாசுபாடு பற்றி புகார் தெரிவித்திருந்தனர். கிரிக்கெட்டில் ஓடியாடி விளையாடும்போது, அதிக சக்தி தேவைப்படும். மூச்சு இரைக்கும். மைதானத்தில் இருக்கின்ற நடுவர்கள்தான் இதுபற்றி முடிவெடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

 

முதல்முறையாக டெல்லியில் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளதால், நிர்வாக ரீதியாக திட்டமிடுவதற்கு உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார்.

இந்தியாவின் ரன் குவிப்பை மட்டுப்படுத்துவதற்காக இலங்கை வீர்ர்கள் இவ்வாறு செய்ததாக தெரியவில்லை. இலங்கை வீராகளில் இருவர் சதம் அடித்துள்ளனர். அவர்கள் மட்டைபிடித்து ஆடும்போது இந்த புகார் எழவில்லை என்று ரமேஷ் தெரிவித்தார்.

''ரசிகர்களுக்கு, கிரிக்கெட் விளையாட்டு ஒரு மதம். எனவே ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு சொல்வது எதையும் நம்மால் தடுக்க முடியாது. இலங்கை வீரர்கள் யாரும் விளையாட்டை நிறுத்த வேண்டுமென கோரவில்லை'' என்று ரமேஷ் கூறினார்.

http://www.bbc.com/tamil/sport-42255524

  • தொடங்கியவர்

முதிர்ச்சி அடையும் டெஸ்ட் போட்டியொன்று

23561652_1769355636471327_18268071824820
 

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான டெல்லி டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் காலையில் அஞ்செலோ மெத்திவ்ஸ் ஆட்டமிழந்தபோது, பகல் போசணத்துடன் அனைத்தும் முடிந்துவிடும் என்று ஊடக அறையில் முனுமுனுப்பு ஒலி கேட்டது.   

இலங்கை அணி போட்டியிடுவதற்கு தைரியம் இல்லாமல் டெல்லி காற்று மாசுபடுவதை கையில் எடுத்திருப்பதாக இந்திய ஊடகங்கள் பக்கம் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.

 

 

போதிய பலம்பொருந்திய அணியாக இந்தியாவை அடைந்த இலங்கை பலமிழந்த அணியாக நாடு திரும்பப்போகிறது என்று நம்பிக்கை இழந்திருந்த நேரமது. ஆனால், அதற்குப் பின்னர் இலங்கை அபார போராட்டத்தை வெளிக்காட்டியது. ஐந்தாம் நாள் முழுவதிலும் இலங்கை அணி வெறும் இரண்டு விக்கெட்டுகளையே இழந்தது. உண்மையில் அது ஒரு தேர்ந்த ஆட்டமாக இருந்தது. ஐந்தாவது நாள் ஆடுகளத்தில் எப்படி துடுப்பெடுத்தாட வேண்டும் என்ற சிறந்த உதாரணமாகவும் இருந்தது.

போட்டியின் ஒன்றரை நாட்கள் இருக்க விராட் கோஹ்லி இலங்கைக்கு 410 என்ற ஓட்ட இலக்கை நிர்ணயித்தபோது விருந்தாளிகள் எப்படி இந்த காலத்தில் துடுப்பெடுத்தாடப் போகிறார்கள் என்ற கேள்வி மாத்திரமே எழுந்தது. இலங்கை அணி இந்த சவாலை வெல்ல வேண்டுமானால் மூன்று முன்னணி துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன, அஞ்செலோ மெதிவ்ஸ் அல்லது தினேஷ் சந்திமால் ஆகியோரில் ஒருவரேனும் இன்னிங்ஸ் முழுவதும் ஆட வேண்டும் என்று கருதப்பட்டது.

இந்தியாவுக்கு எதிராக கருணாரத்னவின் மோசமான ஆட்டம் தொடர்ந்தது. அவர் இலகுவாக தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இறுதி நாள் காலையின் ஐந்தாவது ஓவரில் கசப்பு மாத்திரை ஒன்றை விழுங்குவது போல் மெதிவ்ஸின் விக்கெட் பறிபோனது.

இந்த சரிவுக்கு இடையே தனன்ஞய டி சில்வா தொடர்ந்து துடுப்பெடுத்தாடினார். நாம் ஒரு கச்சிதமான மூன்றாம் வரிசை வீரரை கண்டுபிடித்து விட்டோமா? என்று மாத்திரமே அப்போது கூறிக்கொண்டோம். அந்த இடத்தில் நிலைபெற குசல் மெண்டிஸ் எதிர்பார்த்தபோதும் எதிரணியினர் அவரை முன்கூட்டியே வெளியேற்றிவிட்டனர். மெண்டிஸ் மீண்டும் அணிக்கு திரும்ப தற்போது கடுமையாக போராட வேண்டி இருக்கும்.

 

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தனது கன்னி தொடரில் சதம் பெற்ற பின் தனன்ஞய மற்றொரு தொடரான ஜிம்பாப்வேயுக்கு எதிராகவும் அதிக ஓட்டங்கள் பெற்று சதம் குவித்தார். அப்போது அவர் ஆறாவது வரிசையில் துடுப்பெடுத்தாடினார். என்றாலும் இலங்கை அணி தென்னாபிரிக்கா சென்றபோது அவருக்கு நான்காவது இடத்தில் களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. இப்படியான ஒரு பரிசோதனை முயற்சிக்கு தென்னாபிரிக்கா பொருத்தமான இடமாக இருக்கவில்லை. அங்கு சோபிக்கத் தவறிய அவர் இறுதியில் தரமிறக்கப்பட்டு ‘A’ அணிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

மேற்கிந்திய தீவுகளில் இலங்கை A அணியை வழிநடாத்திய அவர் தொடரில் ஒரு சதம், இரு அரைச் சதங்களோடு வெற்றியுடன் திரும்பினார். இதன்மூலம் இலங்கை அணியில் தனது இடத்தை உறுதி செய்துகொண்டார். மேற்கிந்திய சுற்றுப்பயண முடிவின்போது, இந்த 26 வயது வீரரின் தன்னலமற்ற அணுகுமுறை பற்றி அணி முகாமையாளர் சரித் சேனநாயக்க பெருமிதத்தொடு குறிப்பிட்டிருந்தார்.

இந்திய சுற்றுப்பயணத்தில் ரவிச்சந்தரன் அஷ்வினுக்கு எதிராக தனது பொறுமையை வெளிக்காட்ட முடியாமல் தடுமாறிய லஹிரு திரிமான்னவை டெல்லியில் நடக்கும் கடைசி டெஸ்டில் நீக்குவதற்கு தேர்வாளர்கள் தீர்மானித்தார்கள். அணியின் உப தலைவரை இவ்வாறு அடிக்கடி நீக்கும் வழக்கம் இல்லாத நிலையில் இது ஒரு தீர்க்கமான முடிவாக இருந்தது. என்றாலும் இந்த தைரியமான முடிவின் மூலம் அணிக்கு வந்த தனன்ஞய தனக்கு கிடைத்த வாய்ப்பை பற்றிப்பிடித்துக் கொண்டார்.

ஆட்டமிழக்காமல் அவர் பெற்ற 119 ஒட்டங்களும் வருகை தந்த துடுப்பாட்ட வீரர் ஒருவர் இந்தியாவில் நான்காவது இன்னிங்ஸில் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாக உள்ளது. தனன்ஞய விவ் ரிச்சட்ஸை தாண்டியே இந்த சாதனையை படைத்தார். ரிச்சட்ஸ் ஆட்டமிழக்காது பெற்ற 109 ஓட்டங்கள் கூட டெல்லியில் பெறப்பட்டதாகும். இது இந்திய அணியின் கோட்டையில் அந்த அணி 30 ஆண்டுகளுக்கு முன் கடைசியாக தோல்வியை சந்திக்க காரணமானது.

 

டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்ஸில் இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஒருவர் சதம் பெற்ற நான்காவது சந்தர்ப்பமாக இது இருந்தது. கடைசியாக பத்து ஆண்டுகளுக்கு முன் ஹோபார்டில் குமார் சங்கக்கார நான்காவது இன்னிங்ஸில் 192 ஓட்டங்களைப் பெற்றார்.

தனன்ஞயவுடன் ரொஷேன் சில்வாவும் ‘A’ அணி சுற்றுப் பயணத்தில் இணைந்திருந்தார். முதல்தர கட்டமைப்புக் கொண்டதும் குறைந்த போட்டித்தன்மை உடையதுமான ‘A’ அணி தொடர் அதிக சவால் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான வீரர்களை தயார்படுத்துவதற்கு தீர்வாக உள்ளது.

ரொஷேன், இந்தியாவுடனான முதல் இன்னிங்ஸில் பூஜ்யத்திற்கு ஆட்டமிழந்தபோது அவர் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்தார். தமது திறமையை வளர்த்து இந்த இடத்திற்கு வர அவர் நீண்ட காலம் காத்திருந்தார். ரொஷேன் அளவுக்கு டெஸ்ட் அணிக்கு தகுதி பெறுவதற்கு பொருத்தமான வேறு ஒருவர் இல்லை. அவர் தனது கன்னி டெஸ்டில் ஆடுவதற்கு முன் 100க்கும் அதிகமான முதல்தரப் போட்டிகளில் ஆடி 6,000க்கும் அதிகமான ஓட்டங்களை பெற்றிருக்கிறார்.

முதல் இன்னிங்ஸில் அவரை ஆட்டமிழக்கச் செய்த அஷ்வின், கடைசி நாளில் இலங்கை போட்டியை காப்பாற்ற போராடிய நிலையில் அவர் துடுப்பெடுத்தாட களமிறங்கியபோது எதேச்சையாக அதே அஷ்வினே பந்து வீசிக்கொண்டிருந்தார். காலை வேளையில் இலங்கை அணி ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்த நிலையில் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் இரண்டு மணி நேரத்துக்கு மேல் துடுப்பெடுத்தாடி விக்கெட்டுகளை காத்துக்கொண்டிருந்தார்.

அந்த நிலையான ஆட்டத்தையே ரொஷேன் தொடரவேண்டி இருந்தபோதும் அவரது அனுபவமின்மை பெரிய நம்பிக்கை தரவில்லை. ஆனால் அவர் அந்த சந்தர்ப்பத்தில் சிறப்பாக செயற்பட்டார்.

 

 

அஷ்வினின் மூன்று பந்துகளை பதற்றத்துடன் முகம்கொடுத்த ரொஷேன் இந்திய சுழற்பந்து வீச்சாளர் லெக் திசையில் பந்தை வீசியபோது அதனை தட்டிவிட அது லெப்–கலி (leg-side) திசையில் இருக்கும் செடேஷ்வர் புஜாராவை கடந்து பௌண்டரிக்கு சென்றது. அது தொடக்கம் அவரது மன உறுதி வலுப்பெற்று நேர்த்தியாக பந்தை அடித்தாட ஆரம்பித்தார்.

உண்மையில் ரொஷேன் ஓப் திசையில் பந்தை அடிப்பதில் வலுவான வீரராவார். ஒப் திசை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அவர் அதிரடி பௌண்டரிகளை விளாசினார். ஒரு தடவை ஜடேஜா தூக்கிப் போட்ட பந்தை முன்னால் வந்து எக்ஸ்ட்ரா கவர் (extra cover) திசையில் விளாசி தனது கன்னி அரைச் சதத்தை பெற்றார். அதேபோன்று ஓன் திசையிலும் சிறப்பாக ஆடிய அவர் வேகமாக தனது கால்களை நகர்த்தி முன்னால் வந்து லாவகமாக டிரைவ் செய்து பௌண்டரி விளாசினார். தனன்ஞயவைப் போலவே அவரது ஆட்டத்தை பார்க்க பெரும் விருந்தாக இருந்தது.

தனன்ஞய மற்றும் ரொஷேன் சரியான முறையில் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடிய நிலையில், நிரோஷன் திக்வல்ல இந்திய அணியை வீழ்த்தும் ஓர் ஆட்டத்தை ஆட முயன்றார். ரொஷேனுடன் அவர் ஆடுகளத்தில் இருந்தபோது தனது சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் அந்தஸ்தில் இருந்து விலகி எதிர்முனை வீரருக்கு சதம் பெற இடம்விட்டார். பின்னர் 117 ஓட்ட இலக்கை எட்ட 50 நிமிடங்கள் எஞ்சி இருப்பதாக கூறப்பட்டபோது திக்வல்ல அதனை விரட்ட முயன்றார். அதனை கைவிட ரொஷேன் புத்திசாலித்தனமான யோசனை கூறினார்.

திக்வல்ல போன்ற வீரர்கள் எமக்கு தேவைப்படுகின்றனர். அவரது குரும்புத்தனங்களை உலகக் கிரிக்கெட் தொடர்ந்து பார்க்கத்தான் போகிறது. இதன்மூலம் இலங்கை கிரிக்கெட் அற்புதமான காலத்தை எதிர்கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

http://www.thepapare.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.