Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்ன பாவம் செய்தார் ‘பிரேமலால்’

Featured Replies

என்ன பாவம் செய்தார் ‘பிரேமலால்’
 

 

கார்கள், அதிசொகுசு வாகனங்கள் வீதிகளில் பயணிக்கும் போது, நானும் ஒருநாள் காரில் போக வேண்டுமென நினைக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ஆனால், கடந்த 6 நாட்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நிறை வாகன வரிசைகளைப் பார்த்தவுடன் “காராவது”, “பெஜிரோவாவது“ “காலே” போதும் என்று நினைத்தவர்களும் உள்ளனர்.  

சீராகச் சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டுநர்களின் ஓட்டங்களுக்கு, “சடன் பிரேக்” போட்ட மாதிரி ஆகிவிட்டது, இந்த ஒரு வார கால நிலைமை.  

கடந்த வௌ்ளிக்கிழமை முதல், எரிபொருள் நிரப்பு நிலையங்களே தஞ்சமென, மணிக்கணக்கில் காத்துக்கிடந்தனர் வாகன ஒட்டுநர்கள். போதாக்குறைக்கு, போத்தல், கேன்களுடன் கால்கடுக்கக் காத்திருந்த கூட்டங்களும் எதிர்த்தரப்பில் சேர்ந்துகொண்டன.  

இவர்கள் அனைவரும் பெற்றோலைப் பெற்றுக்கொள்வதற்கே, இவ்வாறு காத்துக்கிடந்தனர்.  

இதனால் வீதியில் சென்ற ஏனைய வாகனங்களும் நெரிசலில் சிக்கிக்கொண்டன. தமது நேர விரயத்தை எண்ணி நொந்த ஓட்டுநர்கள், அரசாங்கத்தைப் புரணி பேசிக்கொண்டிருந்தமையையும் காணக்கூடியதாய் இருந்தது. நாடளாவிய ரீதியில் பெற்றோலுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டமையே, இதற்கான காரணமாகும்.  

தரமிழந்தமையே சிக்கலானது

கடந்த 3 வாரங்களுக்கு முன்னர், இந்தியன் ஒயில் கம்பனி (ஐ.ஓ.சி) இறக்குமதி செய்த பெற்றோல், தரம் குறைந்திருந்தமையை அடுத்து, குறித்த பெற்றோல் நிரப்பப்பட்ட கப்பலில் இருந்த பெற்றோலை இறக்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஒன்றுக்கு இருமுறை பரிசோதித்தும் அக்கப்பலில் வந்த பெற்றோல் தரமானதென உறுதிசெய்யத் தவறிவிட்டது.  

அந்தக் கப்பல், திருகோணமலைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. எனினும், “எந்தக் காரணத்தைக் கொண்டும் தரமற்ற அந்தப் பெற்றோலை நாம் பெற்றுக்கொள்ளப் போவதில்லை”என இலங்கை அரசாங்கம் கங்கணம் கட்டியது. இதுவே, நாட்டில் நிலவிய பெற்றோல் தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்கு மூல காரணமெனக் கூறப்படுகின்றது.  

எனினும், பெற்றோல் தட்டுப்பாடு குறித்து பல்வேறு பேச்சுகளும் அடிபடுகின்றன. முன்னதாக, குறித்த இந்தியன் ஒயில் கம்பனி, பெற்றோலின் விலையை அதிகரிக்க வலியுறுத்தியதாகவும் அதனை இலங்கை அரசாங்கம் மறுத்ததாகவும் அதற்குப் பழி தீர்க்கும் முகமாகத் திட்டமிட்ட அடிப்படையில், இந்தப் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.  

அத்துடன், எரிபொருள் கையிருப்புத் தொடர்பில் வாராந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படாமையாலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், 21 நாட்களுக்குத் தேவையான எரிபொருளைச் சேமித்து வைத்திருக்கும் வழமையை இம்முறை கடைப்பிடிக்கப்படாமையாலும் இப்பிரச்சினை தோன்றியுள்ளதாக, அரசாங்கம் சார்ந்தோரே தெரிவித்தனர்.  

தவிர, 2018 ஆம் ஆண்டுக்கான, வரவு - செலவுத்திட்டத்தை இலக்கு வைத்து, வேண்டுமென்றே இத்தட்டுப்பாடு உருவாக்கப்பட்டதெனவும் பேச்சுகள் உலாவின.  

மேலும், உடனடிக் கேள்வி மனுக்கோரலின் அடிப்படையிலேயே, இந்தியன் ஒயில் கம்பனிக்குப் பெற்றோல் இறக்குமதி செய்யப்பட்டமையாலேயே இச்சிக்கல் தோன்றியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

image_be87f3f989.jpg

செவ்வாய் சூடுபிடிப்பு

பெற்றோல் தட்டுப்பாட்டுப் பிரச்சினையால் அரசாங்கத்தின் ஆசனங்களே, கடந்த செவ்வாய்க்கிழமை சூடுபிடித்தன. நாடாளுமன்ற அமர்வின் போதான காரசாரப் பேச்சுகள் ஒருபக்கம், அமைச்சரவைக் கூட்டத்தின் போது இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்கள் ஒருபக்கமென, அரசாங்கமே அன்றைய தினம் ஆட்டங்கண்டது.  

“பெற்றோல் தட்டுப்பாட்டின் காரணமாக நாட்டு மக்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். இது பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தும். எமது நாட்டில், எரிபொருளைச் சேமிப்பதற்கு முறையான கட்டமைப்புகள் உருவாக்கப்படவில்லை” என ஜே.வி.பியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் அன்றையதினம் (07) அரசாங்கத்தைக் கடிந்துகொண்டார்.  

அதேபோன்று, தினேஷ் குணவர்தன எம்.பி, “கொழும்பிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட கப்பல், திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளமையால், சர்வதேசத்தின் அச்சுறுத்தலுக்கு நாம் முகங்கொடுத்துள்ளோம்” என்றும் அச்சம் வெளியிட்டார்.  

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “பெற்றோல் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய, அமைச்சு இறக்குமதி செய்யும் பெற்றோலுக்கு மேலதிகமாக, இந்தியாவிலிருந்து மற்றுமொரு கொள்கலன் கப்பலில், பெற்றோல் இறக்குமதி செய்யப்படவுள்ளது. எமது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளக் கூடியதாக இருக்கும்” என ஆறுதலாகப் பதில் வழங்கிவிட்டு, நழுவினார்.  

நாடாளுமன்றத்தில் நிலைமை இவ்வாறு இருக்க, செவ்வாயன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கும் இடையிலேயே கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.  

பெற்றோல் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் அர்ஜுன, அமைச்சரவைக்கு விளக்கமளிக்கும் போது, இடைமறித்த அமைச்சர் தயாசிறி, “இந்நிலை, ஜனாதிபதியை இக்கட்டான நிலைக்குக் கொண்டுசெல்லும். மக்கள், ஜனாதிபதியையே திட்டுகின்றனர்” என்று முரண்பட்டு நின்றார்.
இதன்போது உரையாற்றிய, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சரும், முன்னாள் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, “இது சிறிய பிரச்சினை அல்ல. இது ஒரு மாஃபியா பிரச்சினை என்பதை மறக்கவேண்டாம். இதை இலகுவாக எடுக்கவேண்டாம். எனது காலத்திலும் இந்த மாஃபியா செயற்பட்டது” எனப் பதறினார்.  

வேடிக்கையான சுற்றறிக்கை

இது இவ்வாறிருக்க, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க, செவ்வாய்க்கிழமையன்று காலை சுற்றறிக்கையொன்றை வெளியிட்டார்.  

அந்த சுற்றறிக்கையில், நாட்டில் நிலவுகின்ற பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக, வாகனங்களுக்கு மட்டும் பெற்றோல் விநியோகிக்கப்படுமெனவும் போத்தல், கேன் மற்றும் ஏனைய நிரப்பும் உபகரணங்களுக்குப் பெற்றோல் விநியோகிக்கப்படமாட்டாதெனவும் அறிவிக்கப்பட்டது. பெற்றோல் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வரையிலும், இந்த நடைமுறை அமுலில் இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டது.  

சுற்றறிக்கை வெளியானதுதான் தாமதம், பொங்கியொழுந்தனர் அகில இலங்கை மோட்டார் சங்கத்தினர். “எரிபொருட்கள் இல்லாமல், இடைநடுவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை, சுற்றறிக்கையின் ஊடாக, எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்குக் கொண்டு செல்லமுடியாது” என்று கடுமையாக எதிர்த்தனர்.  

தலைக்குமேல் வௌ்ளம் வருவதை உணர்ந்த பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, அன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) மாலையே, சுற்றறிக்கையை வாபஸ் பெற்றுவிட்டார்.  

அதிலும், விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதவராக, விநியோகிப்பதற்குத் தேவையானளவு பெற்றோல் கையிருப்பில் உள்ளமையாலேயே, சுற்றறிக்கையை மீளப்பெற்றுக்கொள்கின்றோம் என்றார்.

வலைத்தளங்களில் கேலிக்கூத்தாகியது

அதிரடியாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இறுதியில் வேடிக்கையானது ஒருபுறமிருக்க சமூக வலைத்தளங்களிலும் இப்பிரச்சினை கேலிக்கூத்தாகியது.  

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன இலட்சனையைக் கூட சமூக வலைத்தளப் பிரியர்கள் விட்டுவைக்கவில்லை. அதில், தீப்பந்தத்துடன் கப்பீரமாகக் காட்சியளிக்கும் வீரரை, பெற்றோல் எங்கிருக்கின்றது எனத் தேடி அலைவது போன்று சித்திரித்திருந்தனர்.

பாடசாலை மாணவர்கள் கூட, பெற்றோல் இன்மை காரணமாக அவசர நிலைமையின் பொருட்டு, பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கவுள்ளதாகக் கூத்தாடினர். பெற்றோலுடன் டீசலும் கையிருப்பில் இல்லாமல் போயிருந்தால் நிலைமை மிகவும் பாரதூரமானதாக இருந்திருக்கும் எனவும் சமூக வலைத்தளங்களில்  பகிரப்பட்டது.  இவை போதாதென்று, பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வட மேல் மாகாண சபை ஒன்றிணைந்த எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலர், மாட்டு வண்டியில் சபைக்குச் சென்றனர். அத்துடன், மஹிந்த தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினர், நாடாளுமன்றத்துக்கும் நேற்று (09) சைக்கிளோட்டிச் சென்றனர்.

இலங்கையில் இதுவொன்றும் புதிதான விடயமல்ல. எனினும், பெற்றோல் பிரச்சினை பல்வேறு வடிவங்களைப் பெற்றிருந்தது என்பதே, இங்கு நோக்கத்தக்கது.  

image_172638d53b.jpg

வாடகை வாகனங்கள் முடங்கின; பயணிகள் சீரழிந்தனர்

வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டனர் என்பது ஒருபுறமிருக்க பயணிகள் சீரழிந்தனர் என்றே கூற வேண்டும். வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள், பெற்றோலைக் காரணம் காட்டி,  கடந்த சில நாட்களாகத் தமது சேவைகளை முடக்கிக் கொண்டன.  

எனவே, முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள், மீற்றருக்கு அதிகமாகப் பணம் அறிவிட்டதாக பயணிகள் விசனம் தெரிவித்தனர்.  

எனினும், எரிபொருள் இல்லையென்பதால் இவ்வாறு அறவிடுவதாகவும், மீற்றர் அடிப்படையில் வண்டி செலுத்துவதானால் தங்களுக்கு நட்டம் ஏற்படுவதாகவும் முச்சக்கர வண்டிச் சாரதிகள் அதனை நியாயப்படுத்தினர். ‘வதந்தியே நிலைமைக்குக் காரணம்’

பெற்றோலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, குறுந்தகவல் மூலம் பரப்பப்பட்ட தகவலால் தான் இந்நிலைமை தோன்றியது என, அரசாங்கம் தெரிவித்தது.

“இலங்கையில் நாளொன்றுக்கு 2 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் பெற்றோல் தேவைப்படுகிறது. எனினும், தற்போதைய நிலையில், பெற்றோலுக்கான கேள்வி நாளொன்றுக்கு 4 ஆயிரத்து 700 மெற்றிக் தொன் ஆக அதிகரித்துள்ளது. பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படப்போவதாகத் திட்டமிட்ட வகையில் பரப்பப்பட்ட தகவலே, இந்த நிலைக்குக் காரணம். இதனால், பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக பெற்றோலை பெற்றுக்கொண்டுள்ளனர்” என பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நிலைமையை விளக்கினார்.   

நிலைமை சீரடைந்த பின்னர், இந்நிலைமை உருவாகுவதற்கு காரணமாக இருந்த மாஃபியா தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.  

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, குழுக்கள் அமைத்து, அறிக்கைகளைத் தயாரிப்பதன் ஊடாக, கால்கடுக்க நின்ற நேரத்தையும், இழந்த பணத்தையும், நிம்மதியையும் மீளப் பெறமுடியாது என்பது திண்ணமே. அதுமட்டுமன்றி, அப்பாவி உயிரொன்றும் மரணமடைந்துள்ளது. இல்லையில்லை. பலியெடுக்கப்பட்டுள்ளது என்பதுதான் மிகவும் வேதனையான விடயமாகும்.  

பெற்றோலுக்காக, மணிக்கணக்கில், ஏன் நாள் கணக்கில் காத்திருந்த ஊரகஸ்மங்ஹந்தியவைச் சேர்ந்த ஒருவரின் உயிரையே, இந்தப் பெற்றோல் தட்டுப்பாடு பறித்துவிட்டது.  

கையில் போத்தலுடன் பெற்றோலுக்காகக் கடந்த செவ்வாய்க்கிழமை நீண்ட நேரம் காத்திருந்த ஊரகஸ்மங்ஹந்தியைச் சேர்ந்த, சுடலை (பிணங்களை எரிக்கும் இடம்) காவல்காரர், 53 வயதான ஜயந்த பிரேமலாலுக்கு “பெற்றோல் தீர்ந்துவிட்டது” என எரிபொருள் நிரம்பு ஊழியர் கூறியது, பேரிடியாக இறங்கியது.  

காரணம், இவ்வாறான நிலைமைக்கு அன்றைய தினம் மாத்திரம் இவர் முகங்கொடுத்திருக்கவில்லை. கடந்த சில நாட்களாகவே, இதே ஏமாற்றத்துக்கு உள்ளாகியிந்துள்ளார். எனவே, பெற்றோல் இல்லையென்றவுடன், அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, அங்குள்ளவர்களால் ஊரகஸ்மங்ஹந்திய வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டார். எனினும், உயிர் பிரிந்துவிட்டது. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் மரணமடைந்துள்ளாரென, வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எவ்வாறோ, பெற்றோலின் பெயரால் பிரேமலாலை போன்ற இன்னும் பலர் பரிதவிக்கின்றனர். பிரேமலாலை இழந்து அவருடைய குடும்பமும் பரிதவிக்கின்றது.  

வீட்டுக்கும் சுடுகாட்டுக்கும் சென்றுகொண்டிருந்த அவரை, இந்தப் பெற்றோல் சுடுகாட்டிலேயே நிரந்தரமாக்கிவிட்டது என்பதுதான், கடந்த ஆறுநாட்கள் அவதியின் இறுதிப் பெறுபேறாக இருக்கின்றது.  

‘வந்தாச்சு கப்பல்’

ஐக்கிய நாடுகள் அமீரகத்திலிருந்து 40,000 மெற்றிக் தொன் பெற்றோல் அடங்கிய “NEVERSKA LADY” என்ற கப்பல், புதன்கிழமை இரவு, இலங்கைக் கடற்பரப்பை வந்தடைந்தது. குறித்த கப்பலிலுள்ள பெற்றோல், முத்துராஜவல எண்ணெய் சுத்திகரிப்பு இறங்குதுறையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படுமென, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். எனினும், நேற்று (09) மாலை வரை நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. கொழும்பு, கொழும்பை அண்மித்த பகுதிகளில் நள்ளிரவுக்குள் பெற்றோல் விநியோகிக்கப்பட்டாலும், வட, கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு கொண்டு செல்வதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கமுடியாது. எனவே, இந்நிலைமை சீராக இன்னும் சில நாட்கள் செல்லலாம். 

எவ்வாறிருப்பினும், பெற்றோல் இன்மையால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொழுந்துவிட்ட தீ, நல்லாட்சியையே சுட்டுவிட்டது என்பதை மறுக்க முடியாது. எனினும், பொதுமக்களில் நலன் சார்ந்து, அத்தியாவசியத் தேவைகள் தொடர்பிலான எதிர்காலத் திட்டமிடல், சேமிப்பு இல்லாத வரை இந்நிலைமை இனியும் தொடரத்தான் செய்யும்.  

image_8bc156f910.jpg

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/என்ன-பாவம்-செய்தார்-பிரேமலால்/91-206938

  • தொடங்கியவர்
எப்போது விழித்துக் கொள்ளும் அரசாங்கம்?
 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இரு தலைவர்களின் கீழ், இவ்வரசாங்கம் உருவாக்கப்பட்டபோது காணப்பட்ட அதிகரித்த எதிர்பார்ப்புகளை, இவ்வரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பது உண்மையானது, அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அண்மைக்காலத்தில் இவ்வரசாங்கத்துக்கு எழுந்துள்ள சர்ச்சைகளும் நெருக்கடிகளும், அரசாங்கத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குட்படுத்தியிருக்கின்றன என்று கூறினால், அதைத் தவறென்று கூறமுடியாது.  

image_85b8de2127.jpg

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த இந்நெருக்கடி, இன்று (09) தீரலாம் என்று, பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கப்பல் வருவது தாமதமாகுமாயின், நாளை வரை, இப்பிரச்சினை இழுபட வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஒரு வாரத்துக்குப் பெற்றோல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கிடைப்பதென்பது, எப்படி இந்தளவுக்குப் பிரச்சினையாக முடியும்?  

image_523343a443.jpg

அதிலும் குறிப்பாக, இந்தியன் ஒயில் கம்பனி (ஐ.ஓ.சி) நிறுவனத்துக்கு, இலங்கைச் சந்தையில் ஆகக்கூடியது 20 சதவீதமான சந்தைக் கட்டுப்பாடு தான் இருக்கிறது எனக் கூறப்படுகிறது. இதை, பெற்றோலிய ஊழியர்களின் சங்கம் தெரிவிக்கிறது. ஆனால், தமக்கு 16 சதவீதமான கட்டுப்பாடு தான் இருப்பதாக, அந்நிறுவனம் கூறுகிறது. சில அமைச்சர்களோ, அது வெறுமனே 14 சதவீதம் என்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும், மிகக்குறைவான அளவையே, அந்நிறுவனம் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது.  

அப்படியாயின், அந்நிறுவனத்தின் ஒரு தொகுதிப் பெற்றோல் வரத்து நிராகரிக்கப்பட்டால், எப்படி இந்தளவுக்கு நெருக்கடி ஏற்பட முடியும்? இக்கேள்வி, சாதாரண மக்களுக்கு மாத்திரமன்றி, அமைச்சர்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் காணப்படுகிறது என்பதை, அவர்களின் கருத்துகள் மூலமாகவும் அறிக்கைகள் மூலமாகவும் பார்க்க முடிகிறது.  

பலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, பொது உணர்வுக்குத் தென்படுகின்ற காரணமாக, பெற்றோல் தட்டுப்பாடு வரப்போகிறது என்ற செய்தி, மக்களுக்குப் பரவியது; அதனால் அவர்கள், வழக்கத்தை விட அதிகமானளவு பெற்றோலைச் சேகரிக்க முயன்றனர்; இதனால் செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டது.   

உண்மை இதுவென்றால் - அப்படித்தான் அமைச்சர்கள் கூறுகின்றனர் - யதார்த்தத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்க்காமை, யாருடைய தவறு? “பெற்றோல் பிரச்சினை என்பது ஏற்படாது, பதற்றப்பட வேண்டாம்” என்று, மக்களை நம்ப வைத்திருக்க வேண்டியது, யாருடைய பொறுப்பு?   

“நாங்கள் சொல்வதை மக்கள் நம்புகிறார்கள் இல்லை” என அரசாங்கம் கூறுமாயின், “மக்களின் நம்பிக்கையை நாம் இழந்துவிட்டோம்” என்று அவர்கள் சொல்வதற்குச் சமனானது. மக்களை நம்பவைக்க வேண்டியது, மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் கொண்டுள்ள அரசாங்கத்துக்கு இலகுவான செயலாக இருக்க வேண்டுமல்லவா? ஆனால், அரசாங்கத்தால் அதைச் செய்ய முடியவில்லை.  

சமூக இணையத்தளங்களைச் சேர்ந்தவர்கள், இந்நெருக்கடி தொடர்பாக வெவ்வேறு கருத்துகளைக் கூறுகின்றனர். ஊடகவியலாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கும் போது, “புதிய அரசமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடைபெற்று, அது தோல்வியடையுமாயின், அது இதனால் (பெற்றோல் நெருக்கடி) தான் என்பதை ஞாபகப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்” என்றார். பெற்றோல் நெருக்கடிக்கும் சர்வஜன வாக்கெடுப்புக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி, உங்களுக்கு எழ முடியும்.  

ஆனால், இந்த நெருக்கடி, கார்களையும் சொகுசு வாகனங்களையும் கொண்டுள்ளவர்களை மாத்திரம் பாதித்திருக்கவில்லை. முச்சக்கரவண்டி மூலம் பிழைப்பு நடத்தும் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவர்களைப் பாதித்திருக்கிறது; முச்சக்கர வண்டிகளை வாடகைக்குப் பெற்று ஓடும் மத்திய வர்க்க, வறுமையானவர்களைப் பாதித்திருக்கிறது; மோட்டார் சைக்கிளில் செல்பவர்களைப் பாதித்திருக்கிறது. அனைவருமே, அரசாங்கத்தின் மீது கடும் கோபத்துடன் காணப்படுகின்றனர் என்பதை மறுக்க முடியாது.  

அதேபோல், இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுள்ள ஒன்றிணைந்த எதிரணி உட்பட எதிர்த்தரப்புகள், “இவ்வரசாங்கத்துக்குச் செயற்றிறன் இல்லை” என நிறுவ முயல்கின்றன. இவ்வரசாங்கத்தால், அடிப்படையான பிரச்சினையைக் கூடத் தீர்க்க முடியாது என்பதை, மக்களின் மனங்களில் விதைக்க முயல்கின்றன. இதன்மூலம், அவ்வெதிர்த்தரப்புகள் பலமடைகின்றன; இது இறுதியில், அரசாங்கம் செய்ய முயலும் அனைத்தையும் எதிர்க்கும் மனநிலையை, மக்களுக்கு ஏற்படுத்தக்கூடும்.  

ஆகவேதான், ஒன்றிணைந்த எதிரணி போன்ற, அதிகாரத்துக்காக எதையும் செய்யவும் சொல்லவும் தயாராக இருக்கின்ற குழுக்களுக்கு இடம்வழங்காமல், அவர்களைத் தோற்கடிப்பதென்பது, அரசாங்கத்தின் பொறுப்பல்லவா?  

இப்பிரச்சினைகளுக்கெல்லாம் மகுடம் வைப்பதுபோல, கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சம்பவங்கள் - சிலர் அவற்றைக் கேலிக்கூத்துகள் என வர்ணிக்கக்கூடும் - மாறியிருந்தன. பெற்றோலை, வாகனங்களில் மாத்திரம் வழங்குமாறும், கொள்கலன்களிலும் போத்தல்களிலும் வழங்க வேண்டாமெனவும், பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சால், சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அன்று காலையில் வெளியிடப்பட்ட இச்சுற்றறிக்கையை, அமைச்சின் செயலாளர் விடுத்திருந்தார்.   

image_79bf2ad6fd.jpg

இச்சுற்றறிக்கை நடைமுறைப்படுத்தப்படும் போது, நடுவீதியில் பெற்றோலின்றி நின்ற வாகனத்துக்கு, எவ்வாறு பெற்றோலைப் பெறுவது? வீட்டில் பெற்றோலின்றி நிற்கும் வாகனத்துக்காக, பெற்றோலை எவ்வாறு பெறுவது? இந்தக் கேள்விகள் தான், வாகன சாரதிகளால் எழுப்பப்பட்டன. கடுமையான எதிர்ப்பு, இத்திட்டத்துக்கு முன்வைக்கப்பட்டது.   
அன்று மாலையே, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இச்சுற்றறிக்கையை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். அதாவது, காலையில் செயலாளரால் விடுக்கப்பட்ட சுற்றறிக்கை, அன்று மாலையில், அமைச்சரால் வாபஸ் பெறப்பட்டது. இது, இந்தப் பெற்றோல் பிரச்சினையை, அரசாங்கம் எவ்வாறு கையாண்டது என்பதற்கான, மிகச்சிறந்த உதாரணமாக அமைந்தது.  

அரசாங்கத்தின் செயற்பாட்டில் அல்லது நோக்கத்தில், மோசமான நோக்கங்கள் இருக்கின்றன போன்று தெரியவில்லை. விடுக்கப்பட்ட சுற்றறிக்கை, மக்கள், பெற்றோலை வாங்கி, தேவையற்ற விதத்தில் சேமித்து வைப்பதைத் தடுப்பதற்காக, இது மேற்கொள்ளப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

ஆனால், அதன் மறுபக்கம் பற்றி ஆராயாமலேயே இது விடுக்கப்பட்டது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. மேலே, வாகன சாரதிகளால் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் பற்றி, முன்னரே எதிர்வுகூறி, அவற்றுக்கேற்ற பரிகாரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.  

உதாரணமாக, யுத்த காலத்தில், இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில், எரிபொருள் தட்டுப்பாடு நிலவியது. அப்போது, குடும்பப் பதிவு அட்டைக்கு என, குறித்தளவு மண்ணெண்ணெய் வழங்கப்படும். அதேபோன்று, வாகனப் பதிவுக்கோ அல்லது வேறு ஏதாவது ஒன்றுக்கோ, குறித்த அளவு பெற்றோல் மாத்திரமே வழங்கப்பட முடியும் என்ற திட்டத்தைக் கொண்டுவந்திருக்கலாம். அப்படிச் சிந்திக்கும் போது, ஏற்கெனவே ஒரு வாகனம் எரிபொருள் பெற்றுவிட்டது என்பதை எவ்வாறு அடையாளங்காண்பது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டியதும் அவசியமானது. அதற்கான விடையைக் கண்டுபிடிப்பது, கடினமானது என்பது யதார்த்தம். இது, சிக்கலான பிரச்சினை என்பது தெளிவானது. அதனால் தான், “கொள்கலன்களின் பெற்றோல் இல்லை” என்ற “எளிமையான தீர்வு”, இதற்குரிய தீர்வு கிடையாது.  

இச்சுற்றறிக்கை விடயமொன்றும், முதற்தடவை கிடையாது. அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட ஏராளமான முன்மொழிவுகள், பின்வாங்கப்பட்ட வரலாற்றை, தொடர்ச்சியாகப் பார்த்து வருகிறோம். வீதிப் போக்குவரத்து விதி மீறல்களுக்கு 25,000 ரூபாய் தண்டம் என்ற அறிவிப்பு; இலங்கை துறைமுக நகரத் திட்டத்தை இல்லாது செய்யப் போவதாக வழங்கிய தேர்தல் வாக்குறுதி; சைட்டம் தொடர்பில் தொடர்ச்சியாக வழங்கிய வாக்குறுதிகள்; இலங்கை குற்றவியல் சட்டத்தில் மேற்கொள்வதற்குத் திட்டமிட்ட திருத்தங்கள்; பெறுமதிசேர் வரியிலும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியிலும் மேற்கொண்ட திருத்தங்கள் என, ஒரு முடிவை எடுத்துவிட்டு, பின்னர் அவற்றில் பின்வாங்கிய ஏராளமான சந்தர்ப்பங்களை, நாங்கள் கண்டுவந்திருக்கிறோம்.  

image_69e1fc6e99.jpg

மேலே கூறப்பட்ட பல கொள்கை ஏற்பாடுகள் மீது, ஒருவருக்கு ஏற்புடைமை இருக்கலாம், இல்லாமலிருக்கலாம். ஆனால், மேலே குறிப்பிட்டவற்றில் எவையும், மோசமான எண்ணங்களை மனதிற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட அல்லது மேற்கொள்ளப்பட முனையப்பட்ட திருத்தங்கள்/மாற்றங்கள் கிடையாது. உறுதியுடைய அரசாங்கமாக இருந்தால், மேலே குறிப்பிட்டவற்றைச் சிந்தித்தே முடிவெடுத்திருந்தால், அம்முடிவுகளில் உறுதியாக இருந்திருக்க வேண்டும்.  

மாறாக, எப்போதெல்லாம் அழுத்தங்கள் வழங்கப்படுகின்றனவோ, அப்போதெல்லாம் அவ்வழுத்தங்களுக்கெல்லாம் அடிபணிவதென்பது, ஆரோக்கியமான நிலைப்பாடு கிடையாது. இது, தலைமைத்துவத்தில் காணப்படும் பலவீனத்தைக் காட்டுகிறது. அதேபோல், தங்களுடைய திட்டங்கள் பற்றிய விவரங்களையும் தகவல்களையும், மக்களிடத்தில் ஒழுங்காகக் கொண்டு சேர்க்காத, மக்கள் தொடர்பாடலில் காணப்படும் பிரச்சினையாகவும் இருக்கிறது.  

பெற்றோல் விவகாரத்தில், முடிவெடுத்தலில் எந்தளவுக்குப் பலவீனம் காணப்பட்டதோடு, அதைவிட அதிகமாக, மக்கள் தொடர்பாடலில் பலவீனம் காணப்பட்டது. பிரச்சினை தலைக்கு மேல் வந்த பின்னர், சமாளிப்பதில் ஈடுபடுவது என்பது, நெருக்கடிநிலை முகாமைத்துவம் கிடையாது. அது, நெருக்கடிநிலை முகாமைத்துவத்தில் ஓர் அங்கமே. நெருக்கடிநிலை முகாமைத்துவத்தின் முக்கிய அம்சமாக, பிரச்சினையை வரவிடாமல் தடுப்பதுவும், பிரச்சினை வந்த பின்னர் ஆரம்பத்திலேயே அதை முடிப்பதுவும் காணப்படுகின்றன.  

பெற்றோலிய ஊழியர்கள், வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போகிறார்கள் என்று, குறுஞ்செய்தி மூலமாகப் பொய்யான தகவல்கள் அனுப்பப்பட்டன என, அரசாங்கம் இப்போது சொல்கிறது. அவ்வாறெறென்றால், அவ்வாறான குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்ட உடனேயே, அவற்றை நிறுத்துவதற்கு, என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? அவ்வாறான குறுஞ்செய்திகளை, மக்கள் நம்பாமலிருப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?   

எல்லாமே உச்சநிலையை அடைந்த பின்னர், விசாரணை செய்யப் போவதாகவும் ஆணைக்குழு அமைக்கப் போவதாகவும் அறிவிப்பது, சரியான நடைமுறை கிடையாது. அதனால், பலனும் கிட்டப் போவதில்லை. இதை, எந்தளவுக்கு விரைவாக இந்த அரசாங்கம் உணர்கிறதோ, அந்தளவுக்கு நல்லதாக அமையும்.  

நாட்டின் நீண்டகால அரசியல் என்பதுவும் முன்னேற்றம் என்பதுவும் எந்தளவுக்கு முக்கியமானவையோ, அவற்றைவிட அரசாங்கத்துக்கு, விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை வெல்வது அவசியமானது. அதைப் புரிந்துகொண்டு நடக்கத் தவறினால் என்ன நடக்குமென்பது, அரசாங்கத்துக் தெரியாமலிருக்க வாய்ப்புகளில்லை.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/எப்போது-விழித்துக்-கொள்ளும்-அரசாங்கம்/91-206892

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.