Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பவரியா கொள்ளையர்களைப் பிடித்தது எப்படி?

Featured Replies

பவரியா கொள்ளையர்களைப் பிடித்தது எப்படி?

98815722jankitjpg

2005ல் தமிழ்நாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்த பவரியா கொள்ளைக் கும்பலை தமிழக காவல்துறையினர் பல மாத முயற்சிக்குப் பிறகு கைதுசெய்தனர். சமீபத்தில் வெளியான தீரன் திரைப்படத்தின் கதை இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது. மிகவும் அஞ்சப்பட்ட இந்த பவரியா கொள்ளையர்களை காவல்துறை கைதுசெய்தது எப்படி?

2005ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனக்குளம். உள்ளடங்கி அமைந்திருந்தது அ.தி.மு.கவின் கும்மிடிப்பூண்டித் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சருமான சுதர்சனத்தின் வீடு.

தமிழகத்தை அச்சத்துக்குள்ளாக்கிய கொள்ளை சம்பவம்

அதிகாலை 2.30 மணியளவில் அந்த கொள்ளைக் கும்பல் உள்ளே நுழைந்தது. சுதர்சனம் முதல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். மகன் விஜயகுமாரும் மருமகளும் தரைத் தளத்தில் தூங்கிக்கொண்டிருந்தனர். பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்த அந்தக் கும்பல், கதவைத் திறந்த மற்றொரு மகனான சதீஷைத் தாக்கியது.

சத்தம் கேட்டு மாடியிருந்து இறங்கிவந்த சுதர்சனத்தை அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவன் நாட்டுத் துப்பாக்கியால் சுட, அந்த இடத்திலேயே இறந்தார் அவர். வீட்டிலிருந்த ஐம்பது பவுன் நகைகளையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு வெளியேறி இருளில் மறைந்தார்கள் அந்த ஆறு பேரும்.

இந்தக் கொள்ளச் சம்பவம் தமிழகத்தையே பீதிக்குள்ளாக்கியது. இதற்கு முன்பாகவும் தமிழத்தின் வடக்கு, மேற்கு மாவட்டங்கள் பலவற்றிலும் குறிப்பாக அவினாசி, வாலஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 23 இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருந்தன. பலர் உயிரிழந்திருந்தார்கள்.

98815337housesjpg

தமிழ்நாட்டில் கொள்ளைகள் நடைபெற்ற சில வீடுகள்   -  BBC

1995ல் வேலூர் மாவட்டம் வாலஜாபாதில் டாக்டர் மோகன் குமார் என்பவர் வீட்டைத் தாக்கி கொள்ளை நடைபெற்றிருந்தது. இதில் மோகன் குமார் கொல்லப்பட்டார். அவரது மனைவியும் இரு குழந்தைகளும் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.

10 ஆண்டு இடைவெளியில் நடந்த இதுபோன்ற 24 கொள்ளைச் சம்பவங்களில் மொத்தம் 13 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 63 பேர் காயமடைந்தனர். சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தனர்.

2005ஆம் ஆண்டு சம்பவத்திற்குப் பிறகு அப்போதைய டிஜிபி ஏ.எக்ஸ். அலெக்ஸாண்டர், இந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை ஒன்றை அமைத்தார். எஸ்.ஆர். ஜாங்கிட் தலைமையில் அமைக்கப்பட்ட அந்தப் படையில் 4 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், 8 ஆய்வாளர்கள், 12 துணை ஆய்வாளர்கள், 4 கைரேகை நிபுணர்கள், 50க்கும் மேற்பட்ட பிற காவலர்கள் இடம்பெற்றனர்.

கொள்ளை நடந்த இடத்தை ஆராய்ந்ததில் துப்பாக்கியின் காலி ரவை ஒன்று, செருப்பு ஒரு ஜோடி ஆகியவை கிடைத்தன. இவையே ஆரம்பகட்ட துப்புகள். இதை வைத்துக்கொண்டு துப்பு துலக்கும் பணியைத் துவங்கியது காவல்துறை.

தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட பொருட்கள்

முதல்கட்டமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி என தமிழகத்தில் இதற்கு முன்பாக இதேபோல நடத்தப்பட்ட தாக்குதல் - கொலை - கொள்ளைச் சம்பவங்கள் ஆராயப்பட்டன.

அவை அனைத்திலும் ஒரு ஒற்றுமை தென்பட்டது. கொள்ளை நடந்த வீடுகள் எல்லாமே தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரமாக அமைந்திருந்தன. எல்லாமே பணக்கார, தனி வீடுகள். இந்த சம்பவங்கள் எல்லாவற்றிலும் தேவையின்றி கொடூரமாக வன்முறை பிரயோகிக்கப்பட்டிருந்தது. .315 அளவுள்ள ரவையைப் பயன்படுத்தக்கூடிய துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருந்தது. 5-7 பேர் கொண்ட கும்பலே இந்த கொள்ளைகளில் ஈடுபட்டிருந்தது.

தாக்குதல் நடத்த இரும்பு கம்பிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. பாலியல் வன்முறை எதுவும் நடத்தப்படவில்லை. எல்லா சம்பவங்களுமே இரவில்தான் நடந்திருந்தன.

98815719weaponsjpg

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள்   -  BBC

"1995ல் முதன்முதலாக இதுபோன்ற ஒரு தாக்குதல் தமிழ்நாட்டில் நடந்தது. அதற்குப் பிறகு 1996ல் ஒரு சம்பவம் இப்படி நடந்தது. அதற்குப் பிறகு 2000வது ஆண்டுவரை இம்மாதிரி கொள்ளை சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை. அது ஏன் என யோசித்தோம். மேலும், அந்தக் குழுவினர் பயன்படுத்திய மொழி, அவர்கள் அணிந்திருந்த காலனி, உடைகள் ஆகியவற்றை வைத்துப் பார்த்தபோது, அவர்கள் வட இந்தியர்கள் என்பது தெரிந்தது" என நினைவுகூர்கிறார் தற்போது டிஜிபியாக உள்ள எஸ்.ஆர். ஜாங்கிட்.

இதற்குப் பிறகு மற்ற மாநிலங்களில் இதுபோல நடந்திருந்த குற்றங்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்ததது காவல்துறை. தமிழகத்தில் மட்டும் சுதர்சனத்தின் கொலையோடு சேர்த்து 24 சம்பவங்கள் இதுபோல நடந்திருந்தன. கர்நாடகத்தில் 1 சம்பவமும் ஆந்திராவில் 6 சம்பவங்களும் நடந்திருந்தன.

எப்படி பிடிபட்டனர்?

வட இந்தியாவிலிருந்து வரும் கும்பலே இந்தக் கொள்ளைகளில் ஈடுபடுகிறது என்பது தெரியவந்ததும் அம்மாதிரி கொள்ளைச் சம்பவங்களையே தொழிலாக வைத்திருக்கும் இனக்குழுக்களைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டன. முடிவில் பவரியா, பார்தீஸ், சான்சீஸ், கஞ்சார், முஸ்லிம்களின் கஞ்சா பனியன் குழுக்கள் (வங்கதேசம்), சபேரா என ஆறு குழுக்களில் ஒன்றுதான் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது தெரியவந்தது.

98815726img4790jpg

தமிழ்நாட்டில் கொள்ளைகள் நடைபெற்ற சில வீடுகள்   -  BBC

இவற்றில் சான்சீஸ், கஞ்சார், சபேரா ஆகிய குழுக்கள் வட இந்தியாவில் மட்டுமே இயங்கிவந்தன. மீதமிருக்கும் மூன்று குழுக்களில் கச்சாக்கள், ரயில் பாதைகளுக்கு அருகில் மட்டுமே கொள்ளைகளில் ஈடுபட்டனர். பார்தீ குழுக்களும் மிக மோசமான வன்முறையில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்தாலும் அவர்கள் கொள்ளைச் சம்பவங்கள் எல்லாவற்றிலுமே பாலியல் வல்லுறவில் ஈடுபடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்கள். எஞ்சியிருந்தது பவரியா குழு மட்டும்தான்.

ஆக, பவரியா குழுவைச் சேர்ந்தவர்கள்தான் இந்தக் கொள்ளைகளில் ஈடுபட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் என காவல்துறை நம்பியது. பவரியாக்கள் இயங்கிவரும் சஹரன்பூரில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இதே பாணியில் கொல்லப்பட்டிருந்ததும் காவல்துறையின் நம்பிக்கைக்கு வலுச்சேர்த்தது.

இந்த குழுவினர் ஹரியானாவின் பல்வல் மாவட்டத்திலும் ராஜஸ்தானின் பரத்பூரிலும் இயங்கிவந்தனர்.

1996லிருந்து 2000வது ஆண்டுவரை இந்தக் குழுவினர் எந்தக் குற்றச் சம்பவத்திலும் ஈடுபடவில்லை என்பதால், அவர்கள் ஏதாவது ஒரு சிறையில் இருந்திருக்கக்கூடும் என யூகித்து, சிறைகளில் உள்ள கைரேகைகளை ஆராய முடிவுசெய்தது காவல்துறை.

"நான்கு குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு குழுவிலும் ஒரு கைரேகை நிபுணர் இருக்கும்படி பார்த்துக்கொண்டோம். அவர்கள் ஒவ்வொரு சிறைச்சாலைக்கும் சென்று 95ஆம் வருடத்தில் இருந்து சிறைக்குச் சென்ற பவரியா குழுக்களைச் சேர்ந்தவர்களின் கைரேகையைப் பரிசோதித்தார்கள். சில கைரேகைகளை வைத்துக்கொண்டு, பெரிய பெரிய லெட்ஜர்களில் அதேபோன்ற ரேகையைத் தேடுவதைப் பார்த்து வட இந்திய அதிகாரிகள் ஆச்சரியமடைந்தார்கள்" என்கிறார் ஜாங்கிட்.

98815721dharamsinghjpg

கொள்ளைகளில் நேரடியாக ஈடுபடாமல், பின்னணியாகச் செயல்பட்ட தரம் சிங்   -  BBC

2005 பிப்ரவரி 1ஆம் தேதி. ஆக்ரா சிறையில் இருந்த ஒருவரது கைரேகை, தமிழகத்தில் கிடைத்த கைரேகையுடன் ஒத்துப்போனது. அவரது பெயர் அஷோக் என்ற லட்சுமணன். 96ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

உடனடியாக அவருடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தரம்சிங் பவரியா என்பவர் கைதுசெய்யப்பட்டார். இவர்தான் இந்த கொள்ளைக் கும்பலின் சூத்ரதாரி. ஆனால், கொள்ளை நடக்கும் இடங்களுக்கு வரமாட்டார். வழக்கு விவகாரங்களைப் பார்த்துகொள்பவரும் இவர்தான். இதற்குப் பிறகு லட்சுமணன் 26.02.2005ல் கைதுசெய்யப்பட்டார்.

விரைவிலேயே இந்தக் கொள்ளைக் கும்பல் பற்றிய முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டன. ஓமா என்ற ஓம் பிரகாஷ் பவரியாதான் இந்தக் கும்பலை கொள்ளைகளில் வழிநடத்துபவர். இவருக்கு இரு மனைவிகள். இரண்டாவது மனைவி, உள்ளூர் காவல்துறை அதிகாரியின் மகள். ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட ஏழு லாரிகள் அவரிடம் இருந்தன. கொள்ளையடித்த பணத்தில் தன் சகோதரி சாந்து பெயரிலும் உறவினர்கள் பெயரிலும் சொத்துகளை வாங்கிக் குவித்திருந்தார்.

98815335bavariajpg

முக்கியக் குற்றவாளியான ஓம் பிரகாஷ் பவரியா என்ற ஓமா பவரியா   -  BBC

இந்த ஓமாவை 2005 செப்டம்பர் 8ஆம் தேதியன்று உத்தரப்பிரதேசத்தின் கன்னௌஜ் மாவட்டத்தில் குருராஜ் கஞ் என்ற கிராமத்தில் வைத்து கைதுசெய்தது காவல்துறை. இந்தியா முழுவதும் 100 குற்றச் சம்பவங்களில் தேடப்பட்டு வந்தார் ஓமா.

98815333enquiryjpg

ஓமாவை விசாரிக்கும் ஜாங்கிட் குழுவினர்   -  BBC

இதற்கிடையில், உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரில் 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுரா பவரியா, விஜய் பவரியா ஆகிய இருவரையும் சுட்டுக்கொன்றது. சுரா பவரியா ஓமாவின் தம்பி. 25க்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்களில் அவர் தேடப்பட்டுவந்தார். கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ சுதர்ஸனம், சேலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நகர் மன்றத் தலைவர் தாளமுத்து நடராஜன், திருவேற்காட்டில் தி.மு.கவைச் சேர்ந்த கஜேந்திரன், அவரது வீட்டுக் காவலாளி ஆகியோரைக் கொலைசெய்த வழக்குகள் அவர் மீது இருந்தன.

வட இந்தியாவிலிருந்து தமிழகத்தில் உள்ள முக்கிய நிறுவனங்களுக்கு சரக்குகளை ஏற்றிவருவது, திரும்பிச் செல்லும்போது சாலைகளின் ஓரமாக உள்ள வீடுகளில் கொள்ளை அடிப்பதுதான் இந்தக் கும்பலின் வழக்கமாக இருந்தது. அவர்களது லாரிகளில், ஆயுதங்களை மறைத்துவைக்கவும் கொள்ளை அடித்த பொருட்களை வைக்கவும் ரகசிய அறைகளும் இருந்தன.

ஒன்றின் பின் ஒன்றாக 13 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். நான்கு லாரிகள் கைப்பற்றப்பட்டன. ராணிப்பேட்டையில் சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டு வழக்கு நடைபெற்றது. வாலஜா கொள்ளைச் சம்பவத்தில் 2006 ஏப்ரல் 6ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் ஓமா என்ற ஓம் பிரகாஷ் பவரியாவுக்கும் லட்சுமணனுக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. அவர்களது கூட்டாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.

இந்த தண்டனைகளை எதிர்த்து செய்யப்பட்ட மேல் முறையீட்டில் தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். ஆனால், அதற்குள் சிறையிலேயே ஓமா பவரியா இறந்துபோனார்.

http://tamil.thehindu.com/bbc-tamil/article20555500.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.