Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி ஆட்சியை நோக்கி மெல்ல மெல்ல நகரும் தமிழகம்!

Featured Replies

ஜனாதிபதி ஆட்சியை நோக்கி மெல்ல மெல்ல நகரும் தமிழகம்!

 

 தமிழகம், ஜனாதிபதி ஆட்சியை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வருவதாகவே தெரிகிறது நடக்கிற நிகழ்வுகளைப் பார்த்தால்.

தமிழக அரசு நிர்வாகத்தின் தலைமையிடமான, சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆளுநருக்கு என்று ஒரு தனி அறை இருக்கிறது. இந்த அறையானது முதலமைச்சரின் அறைக்கு பக்கத்திலேயே இருக்கிறது. இது வெளியுலகில் உள்ள பலருக்கும், ஏன் அரசியல் வாதிகளிலேயே பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். இதற்கு முக்கிய காரணம் அந்த அறைக்கு தமிழகத்தின் ஆளுநர்களாக இருப்பவர்கள் வருவது என்பது அரிதினும் அரிதானதாகவே இருந்திருக்கிறது.

Is Tamil Nadu heading,slowly but steadily moving towards President's rule

இந்த கட்டுரையாளரின் நினைவுகள் சரியாக இருக்குமானால், கடைசியாக அந்த ஆளுநர் அறைக்கு வந்தவர் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா. எப்போது என்றால் 31.01. 1991. அதாவது அதற்கு முந்தய நாள், 30.01.1991 ல் தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த, முதலமைச்சர் மு.கருணாநிதியின் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டபோதுதான். அப்போது மத்தியில் சந்திரசேகர் பிரதமராக இருந்தார். காங்கிரசின் 195 மக்களவை எம் பி க்கள் மற்றும் ஜெயலலிதா தலைமயிலான 10 க்கும் மேற்பட்ட எம் பி க்களின் ஆதரவுடன், சந்திரசேகரின் சமாஜ் வாதி ஜனதா கட்சி (ராஷ்டிரிய) நாட்டு ஆண்டு கொண்டிருந்தது. சந்திரசேகரின் கட்சிக்கு பலம் வெறும் 60 எம் பிக்கள் தான். அப்போதுதான் ஜெயல லிதா கொடுத்த அழுத்தத்தின் காரணமாக திமுக அரசாங்கத்தை கலைத்தார் சந்திரசேகர்.

1990 ம் ஆண்டு நவம்பர் முதல் மார்ச் 7, 1991 வரையில் சந்திரசேகருக்கு ஆதரவு கொடுத்த காங்கிரஸ் கட்சி அன்றைய தினம் தனது ஆதரவை வாபஸ் பெற்றது. அதற்கு காங்கிரஸ் கட்சி சொன்ன காரணம், டில்லி போலீசின் இரண்டு கான்ஸ்பிள்கள் ராஜீவ் காந்தியின் வீட்டை வேவு பார்த்தார்கள் என்பது. சாதாரணமான, சமூகத்தின் படிம நிலையில் கீழே இருக்கக் கூடிய 2 போலீஸ் கான்ஸ்டபிள்கள் ஒரு அரசாங்கத்தையே, அதுவும் இந்தியா போன்ற மாபெரும் ஜனநாயாக நாட்டின் ஆட்சியை கலைக்க முடியும் என்பதற்கு அந்த சம்பவம் முதல் சாட்சி.

31.01.1991 மாலை 3 மணியளவில் அந்த அறையில் தான் செய்தியாளர்களை பர்னாலா சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட முக்கியமான கேள்வியும், பதிலும் இதுதான்; ''திமுக அரசை கலைக்க நீங்கள் சிபாரிசு செய்தீர்களா? ஏனெனில் வழக்கமாக எந்தவோர் மாநில அரசு கலைக்கப் பட்டாலும், அந்த மாநிலத்தின் ஆளுநர் கொடுத்த அறிக்கைதான் முக்கியமானதாக இருக்கும். இதற்கு பர்னாலா சொன்ன பதில் ,''தேவையில்லை. நான் அறிக்கை கொடுக்க வேண்டிய தேவையில்லை. ஏனெனில் அரசியல் சாசனத்தின் சம்மந்தப்பட்ட ஷரத்துகளின் படி, ஒரு மாநில அரசை கலைக்க வேண்டும் என்றால், ஆளுநரின் அறிக்கையின் படியும் கலைக்கலாம், ஆளுநரின் அறிக்கை இல்லாமலும் கலைக்கலாம், ஆங்கிலத்தில் சொன்னால், Or Otherwise, என்றுதான் இருக்கிறது'' என்றார். அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த கட்டுரையாளரும் இருந்தார் என்ற நேரடி அனுபவத்தில் இதனை அவர் எழுதுகிறார்.

இன்றைக்கு தமிழகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஒரு அரசாங்கத்தை, அஇஅதிமுக அரசாங்கத்திற்கு எந்தளவுக்கு தொல்லை கொடுக்க முடியுமோ அந்தளவுக்கு, நாளோர் மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் மோடி அரசு தொல்லைகளையும், இம்சைகளையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நாடகத்தின் லேட்டஸ்ட் கதாபாத்திரம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அவர் நேரடியாகவே களத்தில் இறங்கி விட்டார். கோவையில் சமீபத்தில் அரசு அலுவலகங்களுக்கு சென்றார். நேரடியாகவே கள ஆய்வில், அதாவது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு எப்படி செயற்படுகிறது என்பதை பற்றி நீண்ட ஆலோசனைகளை மாநில அரசு அதிகளுடன் அவர் நடத்தினார். இதற்கு கடும் கண்டனங்கள் அநேகமாக அனைத்து அரசியல் கட்சிகளிடம் இருந்தும் எழுந்தன. ஆனால் மாநிலத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்தின் பதில் வேறுவிதமாக வந்தது.

இதில் என்ன தவறு இருக்கிறது'? சட்டத்திற்கு உட்பட்டுத் தானே ஆளுநர் செயற்படுகிறார்'' என்று மாநில அமைச்சர்களும், முதலமைச்சரும் கூறுகிறார்கள். இதை விட ஒரு குண்டு மணியளவு சுயமரியாதை கூட இல்லாமல் ஒரு மாநில அரசு இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்தில் இருக்கிறதா என்று கேட்டால், அதற்கான பதில், இல்லை இல்லை. சத்தியமாக இல்லை என்பதுதான். தொலைக் காட்சி விவாதங்தளில் பங்கு பெறும் பாஜக பிரதிநிதிகள் ஆளுநரின் இந்த நடவடிக்கையை வலுவாக ஆதரித்து பேசுகிறார்கள்.


இந்த விவகாரம் சம்மந்தமாக நடைபெற்ற இரண்டு வெவ்வேறு தொலைக் காட்சி விவாதங்களில் பங்குபெற்ற இந்த கட்டுரையாளர் இரண்டு கேள்விகளை பாஜக பிரதிநிதிகளிடம் வைத்தார். 1. குடியரசு தலைவர் இதே போன்று மோடி அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சகங்கள் சம்மந்தமாக தனியாக சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சசர்கள் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினால் அதனை மோடியும், பாஜக வும் ஆதரிப்பார்களா? 2. பாஜக ஆளும் நாட்டின் 15 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநிலத்தில், ஒரே ஒரு மாநிலத்தில் இதே போன்ற ஆலோசனை கூட்டங்களை ஆளுநர் நடத்தியிருக்கிறாரா? நமக்குத் தெரிந்தவரையில் இல்லை.


ஒருவேளை, ஒரு கற்பனையாக வைத்துக் கொள்ளுவோம். தமிழக ஆளுநரை போன்று நேரடியாக பாஜக ஆளும் ஒரு மாநிலத்தில் அந்த மாநில ஆளுநர் மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிட்டால் அதனை சம்மந்தப் பட்ட பாஜக மாநில அரசும், அதனது பாஜக முதலமைச்சரும் ஆதரிப்பார்களா? திரும்ப, திரும்ப இந்த கேள்வி கேட்கப் பட்டும் பாஜக பிரதிதிகளால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் பதில் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். கடந்த சில நாட்களாக தொலைகாட்சி விவாதங்களில் பாஜக பிரதிநிதிகள் பதில் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ''இதில் என்ன சந்தேகம் வேண்டிக் கிடக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் என்பது அறவே இல்லை. ஆகவே ஆளுநர் களத்திற்கு போக வேண்டிய அவசியமில்லை. ஆனால் தமிழ் நாட்டில் ஊழல் புரையோடியிருக்கிறது. மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம். ஆகவே ஆளுநர் நேரடியாக களத்தில் இறங்குவதில் எந்த தவறும் இல்லை''. இது எந்தளவுக்கு ஜனநாயக விரோத போக்கு, இது எந்தளவுக்கு இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமான போக்கு என்பதை குறைந்த பட்ச அறிவுள்ளவர்கள் கூட புரிந்து கொள்ளலாம்.

இந்த ஆய்வு பற்றி ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் ''ஆளுநர் எந்த தவறும் செய்யவில்லை. அவர் எந்த உத்திரவுகளையும் யாருக்கும் பிறப்பிக்கவில்லை. ஆகவே ஆளுநரின் நடவடிக்கைகளில் அரசியல் சாசனப்படி எதுவும் மீறப்படவில்லை'' என்று கூறப்பட்டு விட்டது. ஆளுநரின் நடவடிக்கை கோவை யுடன் நிற்கவில்லை. அடுத்து ஆளுநர் தமிழ் நாட்டின் அநேகமாக அனைத்து மாவட்டங்களுக்கும் போக இருக்கிறார் என்பதும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் மூலம் தெளிவு படுத்தப் பட்டு விட்டது. ''ஆளும் அஇஅதிமுக வே இதனை எதிர்க்காத போது, பத்திரிகைகளும், எதிர்கட்சிகளும் ஏன் இதனை ஆட்சேபிக்கிறார்கள்?'' என்று கேட்கிறார்கள் பாஜக பிரதிநிதிகள்.


இது அபத்தமான வாதம். ஏனெனில் ஆளுநரின் இந்த நடவடிக்கை என்பது, மாநில அரசாங்கத்துக்கும், ஆளுநருக்குமான பிரச்சனை கிடையாது. இது 7 கோடி தமிழர்களின் சுய மரியாதைக்கும், எல்லா ஜனநாயக பண்புகளையும் காலின் கீழ் போட்டு மிதித்து துவம்சம் செய்து கொண்டிருக்கும் மோடி அரசுக்குமான பிரச்சனை. இந்த நாடகத்தின் லேட்டஸ்ட் ட்விஸ்டுக்கு வருவோம். தலைமை செயலகத்தில் உள்ள ஆளுநர் அறை நன்றாக தூசி தட்டப்பட்டு, நன்றாக சுத்தம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. காரணம் விரைவில் ஆளுநர் அந்த அறைக்கு வந்து, அங்கு அமர்ந்து கொண்டே எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் சம்மந்தமான அனைத்து விஷயங்களையும் பற்றி, அதிகாரிகளுடன் விவாதிக்கப் போகிறார். சமீபத்தில் கோவையில் விவாதித்தாரே அதனை போன்று விசாரணகள் நடக்கப் போகின்றன.இதனையும் தமிழக அரசு ஆதரிக்கும்.


''அவர்களுக்கு வேறு வழி கிடையாது, காரணம் மலை போல் குவிந்த கிடக்கும் ஊழல் புகார்கள் ..... ஆனால் ஏதோ தமிழ் நாட்டில் மட்டுமே ஊழல் நடப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவது தான் மரபு மீறிய செயல். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரி துறையினரின் சோதனை மூலம் தமிழகத்தின் அனைத்து அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும், மோடி அரசு உணர்த்திய செய்தி இதுதான்'' என்கிறார் எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான ஆழி செந்தில் நாதன். மூத்த பத்திரிகையாளரும், பொதுவாக அஇஅதிமுக ஆதரவாளருமான 'தராசு ஷ்யாம்' இது ஆரோக்கியமற்ற போக்கு என்று கூறுகிறார்; ''நிச்சயமாக இது ஓர் ஆரோக்கியமற்ற போக்குதான். 1995 காலகட்டத்தில் அன்றைய ஆளுநர் டாக்டர் சென்னா ரெட்டிக்கு எதிராக அனைறைய ஆளும் கட்சியான அஇஅதிமுக வினரின் போராட்டங்களை நடத்தினர். சிதம்பரத்தில் அத்தகையதோர் பெரிய ஆர்பாட்டம் நடந்த போது ஆளுநரின் காரை சுற்றி 500 க்கும் மேற்பட்ட போலீசாரை நிற்க வைத்துத் தான் ஆளுநரை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல முடிந்தது.


1952 ம் ஆண்டில் நேரு அமைச்சரவையின் சில செயற்பாடுகளில் அப்போதய குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் தலையிட்ட போது, இந்த விவகாரத்தை உடனடியாக பிரதமர் நேரு உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றார். அதாவது இந்திய அரசியல் சாசனத்தின் படி குடியரசு தலைவருக்கு இதுபோன்று செயற்பட இருக்கிறதா என்ற விளக்கத்தை கேட்டு கொண்டு சென்றார். அப்போது உச்ச நீதிமன்றம், குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்களின் பதவி என்பது வெறும் ஒரு விதமான கெளரவ பொறுப்புகளை கொண்ட பதவிதான், அதாவது "President and Governors are just ceremonial heads"" என்றே விளக்கம் கொடுத்தது. இதுதான் சட்டம், இதுதான் மரபு''.

தமிழகத்தை பொறுத்த வரையில் ஆளுநரின் நடவடிக்கைகளை நாம் மோடி அரசின் கடந்த மூன்றரை ஆண்டு கால செயற்பாடுகளின் பின்புலத்தில் பார்க்கும் பொழுது இது எங்கே போய் முடியப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். மெள்ள, மெள்ள, ஆனால் அதே சமயத்தில் உறுதியாக குடியரசு தலைவர் ஆட்சியை நோக்கித்தான் தமிழகம் நகர்ந்து கொண்டிருக்கிறது

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/is-tamil-nadu-heading-slowly-but-steadily-moving-towards-president-rule-302779.html

  • தொடங்கியவர்
ஆளுநர் ஆட்சியை நோக்கித் தமிழகம் நகருகிறதா?
 

அரசியல் சட்டப்படி நியமிக்கப்பட்ட ஆளுநர் தமிழகத்தில் ஆட்சி செய்யத் தொடங்கியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.   

image_71a262dceb.jpg

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கோவை மாநகரிலும் திருப்பூரிலும் திடீரென்று ஆய்வு செய்தார். அரசாங்க அதிகாரிகளை அழைத்து, ஆலோசனை நடத்தினார். அதில் அமைச்சர்கள் சிலரும் பங்கேற்றனர்.   

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் கோட்டையில் இருக்கும் போது, மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆளுநர், ராஜ்பவனிலிருந்து ஆட்சி நிர்வாகத்தைக் கவனிக்கிறார் என்ற தோற்றம் மட்டுமல்ல, பகிரங்கக் குற்றச்சாட்டும் தொடங்கியிருக்கிறது.   

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், “மாநில சுயாட்சிக்கு விரோதமான ஆய்வு இது” என்று எதிர்த்துள்ளார்கள். மற்ற எதிர்க்கட்சிகளும் இதை எதிர்த்து இருக்கின்றன.   

ஆனால், வழக்கத்துக்கு மாறாக, எதிர்க்க வேண்டிய ஆளும் அ.தி.மு.கவின் அமைச்சர்கள், “ஆளுநர் ஆய்வு செய்ததில் தவறில்லை” என்று ஒவ்வொருவராகக் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.  

மூத்த அமைச்சர்களில் ஒருவரான திண்டுக்கல் சீனிவாசன், “டேக் இட் ஈசி” என்றே பேட்டியளித்துள்ளார்.  

இது போன்ற ஆய்வுகளுக்கு ஆதரவு தெரிவித்துக் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர்கள் உள்ள மாநிலமாக, தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்குகிறது.   

மாநில சுயாட்சிக்காக, முதன் முதலில் குரல் கொடுத்து, ‘ராஜமன்னார் குழு’ அமைத்து, மத்திய - மாநில அரசாங்கங்களின் உறவுகள் குறித்து, விரிவான அறிக்கையைத் தயார் செய்த கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம்.   

அதன் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி, சுதந்திர தினத்தன்று, மாநிலத்தில் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் பெற்றார். இன்றைக்கும் அனைத்து முதலமைச்சர்களும், தங்களது மாநிலத்தில், சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியேற்றுகிறார்கள் என்றால், அதற்கு தி.மு.கவின் மாநில உரிமைக் கோரிக்கைதான் காரணம்.  

image_e841e9e3d0.jpg

‘ஆட்டுக்குத் தாடி போல், நாட்டுக்கு ஆளுநர் தேவையா?’ என்பதுதான் தி.மு.கவின் முழக்கம். அந்த அடிப்படையில்தான் அரசியல் சட்டம் 356 ஆவது பிரிவில் இருக்கும், மாநில அரசாங்கங்களைக் கலைக்கும், மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தை தி.மு.க கடுமையாக எதிர்த்து வருகிறது.  

மாநில சுயாட்சிக் கொள்கையை எம்.ஜி.ஆர், அ.தி.மு.கவைத் தோற்றுவித்த பிறகும், அவர் ஆட்சியிலிருந்த போதும்கூட, விட்டுக் கொடுக்கவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், மாநில உரிமைகளுக்காக, மத்திய அரசாங்கத்துடன் பெரும் போர்க்களத்தையே நடத்திக் காட்டியிருக்கிறார்.   

“ஆளுநர் நியமனத்தில் முதலமைச்சரைக் கலந்தாலோசிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். மாநில அரசாங்கத்தின் உரிமையைப் பாதிக்கும் என்று கருதி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், சரக்கு மற்றும் சேவை வரிகள் சட்டம் போன்றவற்றையெல்லாம் கடுமையாக எதிர்த்தார்.   

ஏன், ஆளுநர் நியமன விவகாரத்தில் தன்னைக் கலந்தாலோசிக்கவில்லை என்பதை நிரூபிக்க, ஒருமுறை மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீலுக்கும், தனக்கும் இடையிலான உரையாடலையே வெளியிட்டார்.   

இன்னும் ஒரு கட்டத்தில், தமிழக ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி, மாநில நிர்வாகத்தில் தலையிடுகிறார் என்று கூறி, “ஆளுநரைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினார்.   

அதுமட்டுமின்றி, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடைபெற்ற, இது போன்ற ஆளுநரின் ஆய்வைக் கடுமையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர், மாநில நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதை வலுவாகவே எதிர்த்து வந்தார்கள். இதனாலேயே மத்திய அரசாங்கங்களுடன் மூன்று பேருக்குமே வெவ்வேறு காலகட்டங்களில் மோதல் போக்கு ஏற்பட்டது.   

கருணாநிதி இருமுறையும், எம்.ஜி.ஆர் ஒரு முறையும் அதற்காகத் தங்கள் ஆட்சியை இழக்க வேண்டியநிலை ஏற்பட்டது. ஆனால், இப்போது இருக்கின்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ, தமிழக ஆளுநரின் ஆய்வு பற்றி வாய் திறக்கவில்லை.   

இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலையில், மௌனமாக இருப்பதே சிறந்தது என்ற முடிவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்து விட்டார் போலவே தெரிகிறது.  

அதேநேரத்தில், மாநில பா.ஜ.க சார்பில், ஆளுநர் ஆய்வுக்குச் சிவப்புக் கம்பளம் விரிப்பது போன்ற வரவேற்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், “மக்களின் நலன் கருதி, ஆளுநர் செய்யும் ஆய்வை, அமைச்சர்களே ஆதரிக்கும் போது, எதிர்கட்சிகள் ஏன் இதில் அரசியல் செய்ய வேண்டும்” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.   

image_b0f5beac0c.jpg

இந்தக் கேள்வியில் உள்ள ஆழம் என்னவென்றால், ஆளும் அ.தி.மு.க அரசாங்கம், இதுபோன்ற ஆளுநரின் ஆய்வுகளை மனதார ஒப்புக் கொள்கிறது; அல்லது இதையெல்லாம் எதிர்க்கும் ஓர் அரசாங்கமாக, மாநில அரசாங்கம் இல்லை என்ற கருத்துகள்தான் தமிழிசையின் கேள்வியில் எதிரொலிக்கின்றன. ஆகவே, ஆளுநர் ஆய்வு விடயத்தில், ஆளும் அ.தி.மு.க அமைச்சர்களும் பா.ஜ.கவும் ஒரே பக்கத்தில் இருக்கின்றன.  

அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் வெவ்வேறாக இருந்தாலும், இந்தியாவில் ஆளுநர் பதவி என்பது ஒரு நியமன பதவிதான்.   

ஆளுநரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டபோது, நடைபெற்ற விவாதத்தில், ஜவஹர்லால் நேரு, டி.டி.கிருஷ்ணமாச்சாரி, டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள், “ஆளுநரை தேர்ந்தெடுக்கத் தேவையில்லை; நியமித்தால் போதும்” என்றே முடிவு செய்தார்கள்.   

அதற்கு முதல் காரணம், ஆளுநருக்கு எந்த விதத்திலும் மாநில நிர்வாகத்தின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்பதும், ஆளுநரை மக்கள் தேர்ந்தெடுத்தால், ஏற்கெனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையில் தேவையில்லாத மோதல் உருவாக வாய்ப்பு ஏற்படும் என்பதும் இன்னொரு காரணமாகும்.   

ஆகவேதான், மாநில ஆளுநர்களுக்கு உள்ள அதிகாரங்கள், தெளிவாக அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால், அவருக்கு உள்ள விருப்ப அதிகாரங்கள் எது என்பது கூட விளக்கப்பட்டுள்ளன. அந்த அதிகாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி, பதவியிருக்கும் போது, மாவட்ட அளவில் ஆளுநர் ஆய்வு மேற்கொள்வது சரியானதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.  

பொதுவாக இது போன்ற சர்ச்சைகள், மத்தியில் ஆளும் கட்சியும் மாநிலத்தில் ஆளும் கட்சியும் வெவ்வேறாக இருந்தால்தான் வரும். மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள், அந்த மாநிலங்களில் தனியாக அதிகாரிகளை அழைத்து, மாவட்ட அளவில் ஆய்வு செய்வதாக எந்தச் செய்தியும் இல்லை.   

ஆகவே, தமிழகத்தில் நடைபெறும் ஆளுநரின் ஆய்வு, சற்று வித்தியாசமானதாகவே அமைந்திருக்கிறது. அதனால்தான், மாநில சுயாட்சிக் கொள்கை பற்றிய நினைப்பு மீண்டும் 50 வருடங்களுக்குப் பிறகு, தமிழகத்தில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.   

தமிழகம் கண்ட ஆளுநர்களில் கே.கே.ஷா, சென்னா ரெட்டி ஆகியோர் மட்டுமே, இதற்கு முன்பு மாநிலத்தில் உள்ள ஆளுங்கட்சியுடன் மல்லுக்கு நின்றார்கள். அதன்பிறகு இப்போதுதான், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு என்று தொடங்கி, இங்குள்ள ஆளும் கட்சிக்குப் போட்டியாகக் களத்தில் குதித்திருக்கிறார்.  

கே.கே.ஷா மற்றும் சென்னா ரெட்டி ஆகியோர் ஆளுநர்களாகப் பதவி வகித்தபோது, அப்போது முதலமைச்சர்களாக இருந்த கருணாநிதியும், ஜெயலலிதாவும் எதிர்த்தார்கள். இன்று முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆய்வை எதிர்க்கவில்லை.  

ஆனால், ஆளுநர் ஆய்வு இத்துடன் நிற்கப் போவதில்லை. இப்போது ஆளுநரின் செயலாளராக இருப்பவர் மாற்றப்பட்டு, முன்னாள் உள்துறை செயலாளராக இருந்த ராஜகோபால், தமிழக ஆளுநரின் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார் என்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.  

இந்த நடவடிக்கை, தமிழக அரசாங்கத்தின் நிர்வாகத்தில் முழுக் கவனம் செலுத்த ஒரு செயலாளர் தேவை என்று ஆளுநர் கருதுகிறார் என்றே தெரிகிறது.   

சட்டமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்ற வழக்கு விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பாக தொடங்கியிருக்கின்ற நிலையில், ஆளுநர் ஆய்வு, புதிய செயலாளர் என்று ஆளுநர் மாளிகையாக இருக்கும் ‘ராஜ்பவன்’ புதிய உத்வேகம் பெறுகிறது.   

ஏற்கெனவே மூத்த கம்யூனிஸ்ட் தலைவரான நல்லக்கண்ணு போன்றோர், “தமிழகத்தில் ஏற்கெனவே பா.ஜ.க ஆட்சிதான் நடக்கிறது” என்று குற்றம் சாட்டி வருகிறார்கள். அந்தக் குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்க்கும் வகையில், இப்போது ராஜ்பவனும் பலம் பெற்று வருவது, தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.   

தற்போதுள்ள அரசாங்கம், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால், இதே ஆட்சி தொடருமா அல்லது ஆளுநர் ஆட்சியை நோக்கித் தமிழகம் நகருகிறதா என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் ஏற்பட்டு இருக்கிறது.   

அவற்றுக்கு எல்லாம், இப்போது, முதல் சுற்றில் நிகழ்ந்துள்ள ஆளுநர் ஆய்வு உரம் சேர்த்திருக்கிறது என்பதே தற்போதுள்ள நிலைமை. ஆனால், ‘முதல்வர் - ஆளுநர் மோதல்’ எதுவும் இல்லாமல் தமிழகத்தில் இந்த மாற்றம் உருவாகியிருப்பது, இந்திய மாநிலங்களில் முதல் உதாரணம் மட்டுமல்ல; முத்தாய்ப்பான சிறப்பம்சமாகவும் இருக்கிறது.  

இதில் விலை போனது, 50 வருடங்களுக்கும் மேலாகத் தமிழகத்தில் எழுப்பப்பட்டு வரும் ‘மாநில சுயாட்சி’க் குரல்தான்.     

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆளுநர்-ஆட்சியை-நோக்கித்-தமிழகம்-நகருகிறதா/91-207478

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.