Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழை அறிவோம் - தமிழராவோம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழை அறிவோம் - தமிழராவோம்!

முனைவர் தமிழண்ணல்

நம் நாட்டில் குழந்தைகள் தமிழே தெரியாமல் - தமிழ் எழுத்து, எண், சொல், சுற்றுச்சூழல் பெயர்கள், உறவுப் பெயர்கள் என எதுவுமே தெரியாமல் கோடிக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்குத் தமிழ்மொழியை அறிமுகம் செய்யப் பல்வேறு திட்டங்கள் வகுப்போம்; முயற்சிகள் எடுப்போம்.

நம் நாட்டில் உழவர்கள், உடலு ழைப்புத் தொழிலாளர், மகளிர், ஊர்திகள் ஓட்டுநர், அரசு அலுவலர்கள், காவல் துறையினர், பொதுமக்கள் என, நூற்றுக்குத் தொண்ணூறு பேருக்கு இன்று தமிழைப் பற்றி எதுவும் தெரியாது; சிலப்பதிகாரம் என்று சொன்னதும் தெரியாது; சங்க (அவைய) இலக்கியமென்றால் விளங்காது.

அதுபோலவே நம்மை ஆளவந்த ஊராட்சியர் முதல், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் வரை பலருக்கு எதுவுமே தமிழைப் பற்றிய அடிப்படைகள் தெரியாது. அமைச்சர்களிலும் அவ்வாறே பலருளர்.

இவர்களுக்குக் குறைந்த அளவு; சிறிதளவு தமிழ்மொழியறிவு, தமிழிலக்கிய அறிமுகம், நமது பண்பாடு, நாகரிகம் பற்றி அறிவிக்கத் திட்டமிடுவோம்; பயிற்சி தருவோம்; பயிற்றும் பயிற்சியாளர்களை உருவாக்குவோம்.

பட்டம், பதக்கம், பணம் எனப் பெரியோர்க்கு அள்ளித் தருவதைவிட, இச் சிறார்களுக்கு, இளையோர்க்கு, பொது மக்களில் தமிழார்வலர்களுக்குப் பட்டம் தருவோம்; பதக்கம் சூட்டுவோம்; பொற்கிழி வழங்குவோம். இதனாலும் பெரும்பயன் விளையும்.

செந்தமிழ்ச்செல்வி, செந்தமிழ்ச் செல்வன், தமிழ்மணி, தமிழ்மாமணி, செவ்வியர் குரிசில், வளர் தமிழ்த்தென்றல், சிலம்பு சீர் பரவுவார், மணிமேகலை மாமணி, தொல்காப்பியச் செல்வன் என இவ்வாறு பல ஆயிரக்கணக்கான தமிழ்ச் செல்வர்களை, தமிழ் மாமணிகளை, வளர்த்த தமிழ்க் குரிசில்களை, தொல் தமிழ்த் தோன்றல்களை, தமிழ்சீர் பரவுவோர்களை, தமிழ்ப் பணிச் செம்மல்களை, தமிழ்த்தவத் தொண்டர்களை உருவாக்குவோம். இதனால் தமிழ்காக்கும் "தமிழ் மறவர் பேரணி', "போர்ப்படைத் தமிழணி' "பகையறு தமிழணி' எனப் பல உருவாகும். முயல்வோம்; செயலில் இறங்குவோம்; வெல்வோம்.

தமிழ்ப்பகையே மாறிவிடு

தமிழை இனி வாழவிடு

பொதுமக்கள் ஊடகங்கள்- தொலைக்காட்சி, நாளிதழ், தாளிகைகள், மேடைப் பொழிவுகள், படைப்பிலக்கியங்கள் யாவும் கொச்சைத் தமிழை, ஒலித்திரிபுகளை, பிறமொழிக் கலப்படத்தை, பண்பாட்டுச் சிதைவைக் கைவிட வேண்டும்.

தமிழ் மண்ணில் வாழும் பிற மொழியினர், பிற மாநிலத்தவர், பிற இனத்தவர், பிறபல சமயத்தவர், உடன்பிறந்து தமிழரென வாழ்வோர் எல்லோரும், இங்கு வாழ்வதனால் தங்களைத் தமிழருடனும் தமிழுடனும் இணைத்துக் கொண்டு, உறவுபூண்டு, தமிழருடன் தமிழரென வாழ்வதே முறை.

பிறமாநிலங்களில், நாடுகளில் வாழும் தமிழர்கள், அவ்வந்நிலத்தவரைச் சீர்குலைக்க நினைப்பதில்லை; அவ்வந் நாட்டு மொழிகளைப் பகைப்பதில்லை.

தமிழைக் குலைப்பது, தமிழுணர்வுடையாரைப் புறக்கணிப்பதே, தமிழின எழுச்சியை ஒடுக்க நினைப்பது, தமிழினத்தவரை வீழ்த்த எண்ணுவது, தமிழால் வாழ்ந்து தமிழை அழிப்பதை உடனே கைவிட வேண்டும்.

தமிழரென உண்மையுடன் வாழ்பவரே இனி வாழ்வார்!

தமிழரென எண்ணாதார் தலைகவிழ்வார் விழுவார்!

அயல்மொழியை ஆளவிட்டு அடிமைசெயோம், மீள்வோம்!

தமிழகத்தில் பல ஆயிரம் ஆங்கில மழலையர் பள்ளிகள் இன்னமும், அரசின் ஆணைவழி இசைவின்றியே நடக்கின்றன.

பல ஆயிரம் மெட்ரிகுலேசன் பள்ளிகளும் இசைவு பெற்றும் பெறாதும், அவ்வத் துறை சார்ந்த இயக்குநர்களின் அரவணைப்புப் பெற்று நடைபெறுகின்றன.

இவை பல கல்வி வாணிகக் கூடங்களாயின; இதில் பலர் "அடுக்கிய கோடி' சம்பாதித்துக் கட்டுக்கடங்கா முதலாளிகளாகி யுள்ளனர். அமைச்சர்கள் முதல் ஆண்டிகள் வரை; பிற சமயத்தவர், சிறுபான்மையர், நடுவணரசுப் பாடப் பள்ளியினர் எனப் பலர் இவ் வாணிகத் தொழிலை வளம்பெற நடத்திவருகின்றனர்.

ஆங்கிலம் நமக்கு வேண்டும். "மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என முழங்கினர். "உரிமைக்குக் குரல் கொடுப்போம், உறவுக்குக் கைகொடுப்போம்' என ஆரவாரித்தனர். அவைபோல வேலைக்கு ஆங்கிலங் கற்போம்; உலகத் தொடர்புக்கு ஆங்கிலம் கற்போம்; தொழில் வணிக வளர்ச்சி கருதி ஆங்கிலத்தை அவற்றினளவு பயன்படுத்த நன்கு கற்போம்.

ஆனால் தாய்த் தமிழைவிட மாட்டோம்! நம் உணர்வுக்கும் உயிருக்கும் இன உறவுக்கும்-நம் முகவரிக்கும் அடை யாளத்திற்கும் பண்பாட்டிற்கும் நாகரிகத்திற்கும் காப்பாக இருப்பது தாய்த் தமிழே!

தாய்த் தமிழே இனி நம்மை ஆளட்டும்! தாய்மொழி தவிர்த்த பிறமொழிகள் நமக்குதவி ஆகட்டும்!

தமிழ்ப் பகைக்கு இடங்கொடுத்துக் கெடமாட்டோம்!

தமிழிற்பேசு, தமிழிலேயே பேசு

ஆங்கிலத்திற் பேசு, ஆங்கிலத்திலேயே பேசு!

தமிழில் ஆங்கிலத்தைக் கலந்து தமிழில் உரையாடும் திறனை இழக்காதே!

ஆங்கிலத்திற் தமிழைக் கலந்து ஆங்கிலத்திற்பேசும்

அறிவையும் இழக்காதே

சென்னையில் ஓர் ஆங்கிலப் பள்ளியின் அறிவிப்பு If the students speak in non-English inside the campus they will be punished with Rs.5 and it will be noted in their progress report.! - பள்ளி வளாகத்தில் ஆங்கிலத்தைத் தவிர வேறு மொழியில் மாணவர்கள் பேசினால் அவர்களுக்கு ரூ.5 விதிக்கப்படுவதோடு, அவர்களது மதிப்பெண் அறிக்கையிலும் அது குறிக்கப் பெறும்

இதனால் அந்தப் பிஞ்சு உள்ளங்கள் தமிழில் பேசுவது ஒரு கீழ்த்தரமான செயல்; தமிழ் ஒரு அடிமைகளின் மொழி; சூத்திர மொழி எனத் தம் நெஞ்சில் பதிவித்துக் கொள்ளுமல்லவா? இளமையில் விதைக்கப் படும் இத்தீமை வாழ்நாள் முழுவதும் தொடருமல்லவா? இவ்வுள்ளமுடைய பிள்ளைகள், பின்பொரு காலத்தில் தாமும் பெற்றோராகும்போது, தமிழை மேலும் இழிவுபடுத்திப் புறக்கணித்தால், அதனால் நம் செவ்வியல் மொழி ஒன்று கலப்பட மொழியாகும் அல்லது சமற்கிருதம்போலப் பேச்சு வழக்கற்ற மொழியாகாதா? இத்தொலை நோக்கு நம் தலைவர்களிடமும் கைகால் பிடித்து, இன்புற்று மகிழ்பவர்களிடமும் இன்றைய பெருவாழ்வுப் பெரு முதலாளி களிடமும் இம்மியளவும் காணப்படாதது ஏன்? இவை போல்வன "தமிழுக்கு மரண அடி' ஆகுமெனில் தவறாகுமா?

மதுரையில், ஓர் அறிவியல் கண்காட்சி நடத்திய ஆங்கில வழிப் பள்ளியில், காண வருவோரிடம் மாணவர்கள் ஆங்கிலத்தி லேயே விளக்கவேண்டுமென்றும் தவறினால் நூறு ரூபாய் தண்டம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தியிருந்தது. ஓராண்டிற்கு முன், அங்கு சென்ற மதுரை வானொலி நிலைய இயக்குநர் "அம்மா, நீ ஆங்கிலத்திற் சொல்வது எனக்கும் விளங்கவில்லை; உனக்கும் விளங்கிற்றா என்று தெரியவில்லை' என்று கூறியபோது அந்தப் பெண் "தண்டம்' பற்றிய விவரத்தைக் கூறியிருக்கிறது.

கண் காட்சி அறிவியல் பற்றியது; காண வருவோரில் தமிழ் மட்டுமறிந்தவர்களே பெரும்பான்மையர்; இருந்தும் இந்த "உத்தரவும் கட்டுப்பாடும் தண்டமும்' தகுமா?

இதற்கு "மக்கள் விரும்புகிறார்கள்' என்பதுதான் காரணமா? ஒரு கவிப்பேரரசர் "மக்கள் விரும்பும்வரை இந்தக் கொடுமையே "நீடிக்கும். பஹந்ங் ண்ற் ங்ஹள்ஹ்' என்று ஒரு மேடையில் கூறி - இதனால் மேன்மேல் அவரால் உயர முடிகிறது. தமிழ் என்ன ஆகும் என்று கேட்டால் தவறா?

கோவையில் ஓர் ஆங்கிலப் பள்ளி, பெற்றோர்களுக்கு வீட்டு முகவரிக்கு ஒரு மடல் எழுதி, "இனி உங்கள் குழந்தை எங்கள் பள்ளியில் படிக்கவேண்டுமென்றால், நீங்கள் வீட்டிலும் ஆங்கிலத்திலேயே உங்கள் குழந்தையுடன் பேசுங்கள். வீட்டில் தமிழும் பள்ளியில் ஆங்கிலமும் என்று இருப்பதால், குழந்தைகள் குழம்பிப் போகிறார்கள்' என அறிவுறுத்தியது. பத்தாயிரம் ரூபாய் கொடுத்துப் பாலர் வகுப்பில் சேர்த்த பெற்றோர்க்கு, இவ்வறிவிப்பு அவர்களால் இயலாவிட்டாலும், முயலவேண்டுமென்ற தூண்டுதலைத் தருமல்லவா? தமிழைப் பேச்சுவழக்கற்றதாக்கும் முயற்சியாகுமல்லவா இது? தமிழுக்கு இது "மரண அடி' ஆகாதா?

திருச்சியிலும் பிற பல ஊர்களிலும் பெற்றோர்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? அவர்கள் பட்டம்பெற்றவர்களா? - என்று கேட்டு, நேர்காணல்கள் நடந்து, பிறகே பிள்ளைகள் சேர்க்கப்பெற்றனர். இதற்குப் பெயர்தான் இடஒதுக்கீடா?

இதுபோல் இங்கு நூறு நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டலாம். உலகளாவிய நிலையில் ஒரு மொழியை இதைவிடக் கேவலப்படுத்த முடியுமா? வானுயர்ந்த கட்டிடங்கள், சீருடை கள் எனக் காட்டி, மயக்கி நடப்பன எல்லாம் தமிழை அழிப்பதற்கும் இழிவுபடுத்துவதற்கும் பயன்படலாமா? இந்த முறை எப்போது தொடங்கியது? இன்றும் இதற்கு மூல "காரணிகள்' யார்? யார் கண்ணிலும் காதிலும் இவை படாததன் "உண்மை' என்ன?

கண்டு சொல்வர்கள் மீது காய்வதை விட்டுத் தமிழை இந்த அழிவினின்றும் காப்பாற்றவேண்டாமா?

மக்களையும் நல்வழிப்படுத்த வேண்டியது அரசு அல்லவா? மக்கள் "கள்ளச் சாராயத்தை' விரும்புகிறார்கள்; கறுப்புப் பணத்தைப் பதுக்குவதையே விரும்புகிறார்கள்; சட்டவிதிகளை மீறுவதில் மக்களுக்கு அளவற்ற ஆர்வமுளது.

இவற்றையெல்லாம் மக்கள் விரும்பு கிறார்கள் என விட்டுவிடலாமா? மக்களுக்கு "மனமயக்கம்' ஊட்டுவதற்கு ஆள்பவரே தூண்டுகோலாகிவிட்டால், மொழி அழிவதை அவ்வரசுதான் விரும்புகிறது என ஆகிவிடாதா?

ஆள்பவர்க்குத் தமிழ்மீது உண்மை அன்பு வரவேண்டும்!

ஆள்பவரால் அழிவுதரும் இழிவு தமிழுக்கு அகலவேண்டும்!

அன்னைத்தமிழ் இனியேனும் இழிவின்றி வளரவேண்டும்!

-தென்செய்தி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாகுப்போதும் தமிழ் படித்து சாக வேண்டும்

நம் சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும்

இணைப்புக்கு நன்றி கந்தப்பு அவர்களே!

  • கருத்துக்கள உறவுகள்

பேசுங்கள் தமிழ் தமிழர்களுடன்..

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேசுங்கள் தமிழ் தமிழர்களுடன்..

தமிழர்களுடன்.. தமிழ் பேசுங்கள்

RASAN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.