Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்துவட்டி... தமிழ் சினிமாவின் ஹீரோவா... வில்லனா?! - உண்மை பேசும் தொடர்

Featured Replies

கந்துவட்டி... தமிழ் சினிமாவின் ஹீரோவா... வில்லனா?! - உண்மை பேசும் தொடர்-1

 
 
Chennai: 

'அசோக்குமார் - அன்புச்செழியன்' இந்த இரண்டு பெயர்களுக்குள் சமீபத்திய தமிழ்சினிமாவின் முகம் அடங்கிவிடும். கந்துவட்டிப் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்ட 'கம்பெனி ப்ரொடக்ஷன்ஸ்' நிர்வாகி அசோக்குமாரின் மரணமும், மரணத்திற்குக் காரணம் பைனான்ஸியர் அன்புச்செழியன்தான் என அவர் எழுதிவைத்த கடிதமும், அசோக்குமாரின் மரணத்திற்குப் பிறகு அன்புச்செழியனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் திரண்டு நிற்கும் தமிழ்சினிமாவும்... என இந்த விவகாரம், 'தமிழ்சினிமா'வின் வண்ணங்களைக் குழைத்துப் போட்டு, கசடுகளைக் கையில் எடுத்துக் காட்டியிருக்கிறது.

கந்துவட்டி

 
 

 

இருவரின் விவகாரத்தில் கேள்விக்குள்ளாகி நிற்பது ‘கந்துவட்டி’ என்கிற ஒற்றை வார்த்தை. கோயம்பேடு பூ மார்க்கெட்டில் சிறுவியாபாரம் செய்யும் ஒருவர் காலையில் 10,000 ரூபாய் ஒருவரிடம் கடனாகப் பெற்றுக்கொண்டு, அன்றைய இரவே வட்டியாக ஆயிரம் ரூபாய் சேர்த்து 11,000 ரூபாயைத் திருப்பிக்கொடுக்கிறார். சிறு வியாபாரத்திற்கே இப்படியென்றால், அனுதினமும் பல கோடிகளில் புழங்கிக்கொண்டிருக்கும் சினிமாவில் கந்துவட்டி புழங்காமல் இருக்குமா?

சினிமா

“எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் அல்ல… அதற்கு முந்தைய காலத்தில்கூட வட்டிக்குப் பணம் வாங்கிப் படமெடுக்கும் சூழல் இருந்தது. இன்றைக்கும் தமிழ்சினிமாவின் முகங்களாக இருக்கும் சில தயாரிப்பு நிறுவனங்கள்கூட கடன் வாங்கிப் படம் எடுத்தவர்கள்தான். கடன் கொடுப்பவர்கள் கார்களில் வந்து ஸ்டுடியோ வாசலில் இருக்கும் சைக்கிளில் பணப் பையை வைத்துவிட்டுப் போவார்கள். பிறகு, அந்த சைக்கிள் ஸ்டுடியோவின் பின்பக்கம் வழியாகக் கொண்டுசெல்லப்பட்டு தயாரிப்பாளரிடம் ஒப்படைக்கப்படும். ‘பெயரும், புகழும் கொண்ட தயாரிப்பு நிறுவனம், கடன் வாங்கிப் படம் எடுக்கிறார்கள்’ என்ற பேச்சு எழுந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த நடைமுறை” என்கிறார், தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியாத இடத்தில் இருக்கும் நடிகரும், தயாரிப்பாளருமான ஒருவர்.

அப்படி மறைமுகமாக இருந்த கடன் வாங்கிப் படம் எடுக்கும் நிலையை, இன்று சாதாரணமான ஒன்றாக மாற்றியிருக்கிறது காலமும், சூழலும். ‘கந்துவட்டி, மீட்டர்வட்டி, வாரவட்டி, மாதவட்டி… இதெல்லாம் வட்டிகளின் வகைகளாக நினைத்துவிடவேண்டாம். சட்டபூர்வமற்ற அதாவது, தண்டனைக்குரிய வட்டிவசூல் முறைகள் என்கிறது அரசு. ஆனால், தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை, இவைதான் அதிகாரம் செய்துகொண்டிக்கிறது. இந்த வகையில் வட்டி கொடுக்கும் பைனான்ஸியர்கள்தான் அதிகாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

சினிமா - கந்துவட்டி

அந்த அதிகார மையத்தில் இருக்கும் பலரில் ஒருவர்தான், அன்புச்செழியன். ஊர் ராமநாதபுரம். வளர்ந்தது மதுரை. வளர்க்கப்பட்டது அரசியல், சினிமா அதிகார மையத்தில் இருக்கும் சிலரால்! அன்புச்செழியனைக் குறிப்பிட்டு ‘இவர் இல்லையெனில் தமிழ் சினிமா இல்லை’ என்கிறார்கள் சில தயாரிப்பாளர்கள், ‘இவரை மட்டுமே நம்பி தமிழ்சினிமா இல்லை’ என்கிறார்கள் சிலர். இருதரப்பின் கருத்தும் நபர் சார்ந்துதான் வேறுபடுகிறதே தவிர, ‘வட்டி’ என்ற வார்த்தையைத் தாண்டி வரவில்லை. ஆக, தமிழ்சினிமாவின் ஒட்டுமொத்தக் குரலாக ஒலிப்பது ‘வட்டிக்குப் பணம் வாங்காமல், படம் எடுக்க முடியாது’ என்பதுதான். இதுதான் உண்மையா?

வட்டிக்குப் பணம் வாங்கிப் படம் எடுத்தவர்கள் நிலை, வட்டிக்குப் பணம் வாங்கிப் படம் எடுப்பவர்கள் நிலை, வட்டிக்குப் பணம் வாங்குபவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், பிரச்னைகளைச் சரிசெய்த முறை, வட்டிக்குப் பணம் வாங்கிப் படம் எடுத்தாலும் அதில் எவ்வித அசைவுகளையும் கொடுக்காமல் சீராக இயங்கும் சிலரின் சாமர்த்தியம், வட்டிக்குப் பணம் வாங்காமல் சொந்தமாகப் படம் எடுக்கும் திறமையாளர்கள், தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையேயான பிரச்னைகள், ஒரு படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்து வெளியிடுவதில் இருக்கும் சிக்கல், ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருக்கும் படங்களுக்குப் பின்னணிக் காரணம் என்ன, நடிகர்களின் சம்பளம், தரைமட்டமாகிக் கிடக்கும் வியாபார கட்டமைப்பு… அனைத்தையும் ஆராய்ந்து உணரவே இந்தத் தொடர்.

சினிமா - கந்துவட்டி

‘நேர்த்தியான தயாரிப்பாளரால் எப்போதும் ஜெயிக்கமுடியும்’

‘நல்ல படைப்புகளை நசுக்குவதே தயாரிப்பாளர்கள்தான்!’

‘படைப்பாளிகள்தான் குற்றவாளிகள்’

‘டெக்னாலஜி தெரியாத தயாரிப்பாளர்கள் புலம்பத்தான் செய்வார்கள்’

‘படத்தை தயாரிப்பதைவிட, வெளியிடுவதில் இருக்கும் சிரமங்கள் அதிகம்’

‘திரையரங்குகளே தேவையில்லை’

‘வட்டிக்குப் பணம் வாங்காமல் படம் எடுப்பது சுலபம்’

‘எனக்குத் தயாரிப்பாளரே தேவையில்லை’

‘நடிகர்களின் சம்பளத்தைக் குறைத்தால், வட்டிக்குப் பணம் வாங்கவேண்டிய அவசியம் இல்லை’

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
109329_thumb.jpg

கலக்கப்போவது யாரு சீசன் 1 டூ 7, அது இது எது ஷோவோட இரண்டு சீசனிலும் என்னோட ட்ராவல் பண்ணுன ஸ்டார்ஸைப் பற்றிதான் இந்தத் தொடரில் நான் பேசப்போறேன். உங்களுக்கு பிடிச்ச பிரபலங்கள், காமெடியன்களைப் பற்றி உங்களுக்கு தெரியாத பல தகவல்கள் ஆன் தி வே ப்ரோஸ்! The real story of reality show heroes episode 1

‘திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், அறிவோடுதான் செயல்படுதா?’

  • இப்படிப் பலரின் குரல்களை வார்த்தைகளாக வாசிப்போம்.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/109488-is-usury-hero-or-villain-for-tamil-cinema-series-part-one.html

  • தொடங்கியவர்

“தயாரிப்பாளர்களே... 20 வருஷ பழைய படத்தை வச்சு இப்போ சம்பாதிக்கலாம்..!’’ - கந்துவட்டி... தமிழ் சினிமாவின் ஹீரோவா... வில்லனா? - உண்மை பேசும் தொடர் அத்தியாயம்-2

 
 

கந்துவட்டி

 

ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது என்ன? 

 

வசூல், நல்ல விமர்சனம், பரவலான கவனம், விருதுகள்... எனப் பல காரணங்களை அடுக்கலாம். ஆனால், தமிழ்சினிமாவின் அடிப்படை பணம்தான். அதனால்தான் படப்பிடிப்புக்கு தேவையான பணத்தை வட்டிக்கு வாங்குவது, படம் எடுத்து முடித்தாலும் அதை ரிலீஸ் செய்யப் பணம் இல்லாமல் இன்னொரு நபரை எதிர்பார்த்து கையைப் பிசைந்துகொண்டு நிற்பது, தியேட்டர் டிக்கெட்டுகள் மூலம் வரும் வசூல் காப்பாற்றுமா என நகம் கடித்தபடி திரிவதுமாய் இருக்கிறார்கள். தமிழ்சினிமாவின் பெரும்பாலான தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்குத் தெரிந்த வருமான வழிகள், தியேட்டர் வசூல், சேட்டிலைட் ரைட்ஸ், ஃபாரீன் ரைட்ஸ்... என மிகச் சிலதான்.

அதில், சேட்டிலைட்ஸ் ரைட்ஸ் உரிமையிலும் இப்போது உலை எரிந்துகொண்டிருக்கிறது. தமிழ்சினிமாவில் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருக்கும் 500க்கும் அதிகமான படங்களின் எண்ணிக்கைக்குக் கொஞ்சமும் குறையாமல் இருக்கிறது, சேட்டிலைட்ஸ் ரைட்ஸ் விற்கப் படாத படங்களின் எண்ணிக்கை. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், "இதற்கான வழிவகைகளை சங்கமே மேற்கொள்ளும்" என்கிறார். 'தேவர் மகன்' படத்தில் வரும் வசனம் மாதிரி, 'மெதுவா மெதுவான்னா எம்புட்டு மெதுவாய்யா' எனக் கமல் பேசும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

"கந்துவட்டிக்குப் பணம் வாங்கிப் படம் எடுப்பதும், அதை ரிலீஸ் செய்ய மேலும் கடனை நம்பியே இருப்பதும், போட்ட பணத்தை எப்படியாவது வசூலிக்க, மேலும் மேலும் கடன் வாங்கி அந்தப் படத்திற்கு பப்ளிசிட்டி கொடுக்கும் நிலைதான் இன்றைய தமிழ்சினிமாவின் நிலை" என்கிறார், ஒரு தயாரிப்பாளர். ஆனால், "இதெல்லாமே தயாரிப்பாளர்களின் அறியாமை. கந்துவட்டிக்குப் பணம் வாங்கி அல்ல, பணமே இல்லாமல் படம் எடுக்க முடியும்" என்பது, இசையமைப்பாளர் சாம்.டி ராஜ் சொல்லும் சீக்ரெட். "நெட்பிலிக்ஸ்" நிறுவனத்திற்கு தமிழ்சினிமா குறித்த ஆலோசனை சொல்லிக்கொண்டிருப்பவர். விரைவில் வெளிவரவிருக்கும் 'ஏமாலி' படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அவரிடம் பேசுவோம்.

சாம்.டி ராஜ்

"தியேட்டர் வசூல், சேட்டிலைட், ஃபாரீன் ரைட்ஸ். இதை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கிறார்கள் பெரும்பாலான தமிழ்சினிமா தயாரிப்பாளர்கள். ஆனால், ஒரு திரைப்படத்தை 60க்கும் அதிகமான வழிகளில்  விற்பனை செய்யமுடியும்" என்றவர், அதற்கான வழிகளையும் சொல்கிறார்.

"கடன் பிரச்னை, கந்துவட்டிப் பிரச்னைகளில் இருந்து விடுதலை செய்யவும், நம்பிக்கை கொடுக்கும் வழிகளைக் காட்டவும் தமிழ்சினிமா தயாரிப்பாளர் சங்கம் செய்யவேண்டியது, ஒன்றுதான். அது, யாரோ அனுபவித்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களின் பணத்தை தயாரிப்பாளர்களுக்கே கிடைக்க வழி செய்வது". 

எப்படி?

"அமேசான், நெட்ஃபிலிக்ஸ் மாதிரியான இணையதளங்களின் வருகைக்குப் பிறகு, பணம் இருந்தால்தான் படம் எடுக்க முடியும் என்ற நிலை மாறியிருக்கிறது. நல்ல திரைக்கதை, அதைப் படமாக்குவதற்கான பட்ஜெட்... இரண்டும் உங்களிடம் இருந்தால், மேற்சொன்னதுமாதிரி பல நிறுவனங்கள் பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். நல்ல கதையும், ஆர்வமும் இருந்தால் போதும். யாரிடமும் கடன் வாங்கவேண்டிய அவசியம் இல்லை, தயாரிப்பாளர்களைத் தேடித்திரிய வேண்டிய கட்டாயம் இல்லை.

அமேசான், நெட்ஃபிலிக்ஸ், பிக்ஃபிலிக்ஸ், ஸ்புல், பாக்ஸ் டிவி, ஹாட் ஸ்டார், விங் மூவிஸ் எனப் பல பிளாட்பார்ம் படைப்பாளிகளுக்கு இருக்கு. தமிழ்சினிமா தயாரிப்பாளர்களிடம் ரைட்ஸ் கேட்பவர்கள், 'ஆல் அதர் டிஜிட்டல் மீடியா' ரைட்ஸையும் சேர்த்து வாங்கிக்கிற பெரும் ஏமாற்று வேலை இங்கே தொடர்ந்து நடந்துக்கிட்டு இருக்கு. ஏன்னா, 'இனி எல்லாம் டிஜிட்டல்'ங்கிற சூழலைப் புரிஞ்சுக்காத தயாரிப்பாளர்கள் சொற்ப தொகைக்கு அந்த ரைட்ஸை கொடுத்துடுறாங்க. இதைத் தயாரிப்பாளர்கள் முதல்ல உணரணும். ஏன்னா, குறும்படங்களையே அமேசான், நெட்ஃபிலிக்ஸ் மாதிரியான இணையதளங்களில் விற்கும் நிலை இப்போ வந்துடுச்சு.

சாம்.டி ராஜ்

அதுக்கான வழிமுறைகள் இங்கே இருக்கிற சில தயாரிப்பாளர்களுக்குத் தெரியும்னாலும், அதை மத்தவங்களுக்கும் சொல்லிக்கொடுக்கமாட்டேங்கிறாங்க. அந்த நிலையை மாத்தணும். 20 வருடங்களுங்களுக்கு முன்னாடி ரிலீஸ் ஆன ஒரு படத்தை இப்போ இணையதளத்துல ரிலீஸ் பண்ணி ஒவ்வொரு மாசமும் சில லட்சம் சம்பாதிக்கிற சிலரைப் நான் பார்த்திருக்கேன். இதை எல்லாத் தயாரிப்பாளர்களும் பின்பற்றலாம்" என்பவர், ஒரு படம் ஒட்டுமொத்த உலக மொழிகளிலும் பேசிக்கொண்டிருக்கும் ஆச்சரியத்தையும் சொல்கிறார்.

"இதுக்காகவே மும்பையில் சில ஏஜென்ஸிகள் இருக்காங்க. உங்க படத்தை குறிப்பிட்ட தொகைக்கு உங்ககிட்ட வாங்கிக்கிட்டு, உலகின் பல்வேறு மொழிகளுக்கும் "சப்-டைட்டில்" செய்து வெளியிடுறாங்க. நம்மகிட்ட 50,000க்கும் அதிகமான படங்கள் இருக்கு. என்ன பண்றோம்?

அதையெல்லாம், குவாலிட்டி மாத்தி, சப் டைட்டில் கொடுத்து, அப்டேட்டட் டிரெய்லர் ரெடி பண்ணி,  அதோட தரத்தை மேம்படுத்திக்கொடுத்தா, அதை வாங்கி ரிலீஸ் பண்ண நிறைய இணையதளங்கள் இருக்கு. இங்கே பிரச்னை சினிமாவுக்கான பிஸ்னஸ் பிளாட்பார்ம் என்னென்ன... என்ற புரிதல் இல்லாததுதான். லோ பட்ஜெட்ல எடுக்கப்படுற பல நல்ல படைப்புகள் தியேட்டர்களில் ரெண்டுநாள்கூட ஓடலைனு பொழம்புறோம். 'கர்மா'னு ஒரு லோ பட்ஜெட் படம் தியேட்டர்ல சரியான ரெஸ்பான்ஸைப் பெறலை. ஆனா, அமேசான் தளத்துல சக்கைப் போடு போட்டுக்கிட்டு இருக்கு. ஆக, இங்கே தவறு ரசிகர்கள் மேல இல்லை. தியேட்டர்ல படம் பார்க்கிற அளவுக்கு, ரசிகர்கள் இங்கேயும் படம் பார்த்துக்கிட்டு இருக்காங்க. இந்த உண்மையை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் புரிஞ்சுக்கிட்டா, இன்னொரு அசோக்குமாரை நாம இழக்கவேண்டிய அவசியம் இருக்காது. 'ஃபைனான்ஸியர்கள் இல்லாம படம் பண்ணமுடியாது'னு சொல்லவேண்டிய கட்டாயமும் இருக்காது" என்று முடிக்கிறார், சாம்.டி.ராஜ். 

"சன் நெக்ஸ்ட், ஏர்டெல் டிவி, ரிலையன்ஸ் எனப் பல நிறுவனங்கள் தமிழ்த் திரைப்படங்களுக்கான சந்தையைக் கச்சிதமாக உணர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. நாம்தான் இன்னும் தியேட்டர்  மட்டுமே நம்பிக்கொண்டிருக்கிறோம்" என ஆதங்கப்படுகிறார்,  இளம் இயக்குநர் ஒருவர். 

இங்கே திருந்த வேண்டியது யார்? புரிதல் இல்லாமல் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்கள் யார்? தயாரிப்பாளர்கள் மட்டுமா?

 

''சினிமாவுக்கு வெளியே இருக்கும் மோசடிகளைவிட, சினிமாவுக்குள்ளேயே நடக்கும் மோசடிகள் கொடூரமானவை. ஒரு படைப்பாளி உணரும்விதமே நடக்கும் கொடூரம் அது. சினிமா தயாரிப்பாளர்கள் ஏன் கடன் வாங்குகிறார்கள், மன்னிக்கவும்... ஏன் கடனாளி ஆக்கப்படுகிறார்கள்?" என்ற உண்மையைச் சொல்கிறார், தயாரிப்பாளரும் இயக்குநருமான ஒருவர். அதை அடுத்தப் பகுதியில் பார்ப்போம்.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/109732-is-usury-hero-or-villain-for-tamil-cinema-series-episode-2.html?utm_content=social-s5mrz&utm_medium=social&utm_source=SocialMedia&utm_campaign=SocialPilot

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

"ஹாலிவுட்ல ஒருநாள் ஷூட்டிங் செலவின் 30 சதவிகிதத்தை அரசாங்கம் கொடுக்கும்!'' கந்துவட்டி... தமிழ்சினிமாவின் ஹீரோவா, வில்லனா? தொடர் - அத்தியாயம்-3

 
 

கந்துவட்டி தொடர்

வாரிசு நடிகர் என்றாலும், தனித்துவ நடிப்பால் தமிழ்சினிமாவில் தனி இடம் பிடித்தவர் அவர். வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்த இயக்குநர் ஒருவரிடம் அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் தொகையாக சில கோடிகளைப் பெறுகிறார். இந்த அட்வான்ஸ் தொகையை, கந்துவட்டிக்குப் பணம் பெற்றுக் கொடுத்திருக்கிறார், அந்த இயக்குநர். சில மாதங்கள் கடக்க, 'நான் இந்தப் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன்' எனச் சொல்லிவிட்டு, இயக்குநரிடம் பெற்ற தொகையைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறார், அந்த நடிகர். இங்கே பிரச்னை எதில் இருக்கிறது என்று கவனமாக யோசித்துப் பாருங்கள்... நடிகரின் வருகைக்குக் காத்திருந்த காலத்தில், அந்த இயக்குநர் அலுவலகம் அமைத்து வாடகை கொடுத்திருப்பார். கடன் வாங்கிக் கொடுத்த அட்வான்ஸ் தொகைக்கு வட்டி கட்டிக்கொண்டிருப்பார். படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்து சுற்றிக்கொண்டிருப்பார். ஆனால், 'படத்தில் நடிக்கமுடியாது' என நடிகர் திருப்பிக் கொடுக்கும்போது, இந்த செலவுகள் எல்லாம் கணக்கில் ஏறாது. சினிமாவில் பல தயாரிப்பாளர்கள் 'கடனாளி'யாகவே தொடர்ந்துகொண்டிருப்பதன் அடிப்படைக் காரணங்களில் இதுவும் ஒன்று. விஷயத்துக்கு வருவோம்.

 

இன்றைய சூழலுக்கு சினிமா எடுப்பதைவிட, அதை ரசிகர்களிடம் கொண்டுசேர்ப்பதில்தான் அதிக கவனம் செலுத்தவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இங்கே 'ரசிகர்கள்' எனப்படுவது, தமிழ் ரசிகர்கள்களை மட்டும்தானா? இந்தக் கேள்விக்கான பதிலை மிகச் சரியாகக் கடந்துவிட்டால், கந்துவட்டிக்குப் பணம் வாங்கிப் படம் எடுத்தாலும், சொந்தப் பணத்தை மொத்தமாக இறக்கிப் படம் எடுத்தாலும் ஜெயிக்கலாம். ஏனெனில், ''சினிமா என்பது பொதுமொழி. அதை உணரக்கூடிய தயாரிப்பாளர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் முதலீடு என்பது ஒரு பொருட்டே அல்ல'' என்ற வாதத்தை முன் வைக்கிறார், மனோஜ் அண்ணாதுரை என்ற இயக்குநர்.  சென்னைத் தமிழரான இவர், 'கெட் ஹாப்பி' என்ற ஹாலிவுட் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்திற்காக 'கோல்டன் ரெமி' விருதும், மன்ஹாட்டன் ஃபிலிம் பெஸ்டிவெலில் 'சிறந்த ரொமான்டிக் காமெடி' படத்திற்கான விருதினையும் பெற்றிருக்கிறார். ஒரு திரைப்படத்திற்கான சந்தை, அந்தத் திரைப்படத்தை மார்க்கெட்டிங் செய்யும் முறைகள் என ஒரு திரைப்படத்தைச் சுற்றி இருக்கும் '360 டிகிரி'வாய்ப்புகளையும் பயன்படுத்தவேண்டிய கட்டாயத்தைச் சொல்கிறார், மனோஜ் அண்ணாதுரை. 

கெட் ஹாப்பி - மனோஜ் அண்ணாதுரை

"கூகுள்ல சிறந்த இயக்குநர் பட்டியலைத் தேடினா, இந்தியா சார்பில் சிலருடைய பெயர்கள்தான் இருக்கும். ஏன், அதுக்குப் பிறகு யாரும் நல்ல படம் எடுக்கலையா... எடுத்திருக்காங்க. ஆனா, அது தமிழ் ரசிகர்களைத் தவிர்த்து யாருக்கும் தெரியாதுங்கிறதுதான் உண்மை. அதை மாத்துறதுக்காகத்தான், தமிழ் சினிமாவில் நண்பர்கள் இருந்தாலும், அமெரிக்காவில் ஃபிலிம் கோர்ஸ் படிச்ச அனுபவம் இருந்தாலும், நான் என் முதல் படத்தை அமெரிக்காவில் எடுத்தேன்" என்கிறார், மனோஜ். 

"கந்துவட்டிப் பிரச்னைக்காகவோ, தயாரிப்பாளர் கிடைக்காமலோ நான் ஹாலிவுட்ல படம் எடுக்கலை. தமிழ் சினிமாவைவிட, ஹாலிவுட்டில் படம் எடுக்கிறது சுலபமான வழினு நான் உறுதியா சொல்றேன். ஏன்னா, தமிழ்ப் படம் எடுத்து அது தியேட்டர்ல ரிலீஸ் ஆகலைனா, தயாரிப்பாளர் போட்ட பணத்தைத் திரும்ப எடுக்கமுடியாது. தவிர, இங்கே ஒரு கோடி பட்ஜெட்ல படம் எடுத்து, 2 கோடி ரூபாய்க்கு பப்ளிசிட்டி கொடுக்கவேண்டிய கட்டாயம் இருக்கு. ஏன்னா, தியேட்டர் வசூல்தான் தமிழ்சினிமாவுக்கு முக்கியமான வருமான வழி. ஸோ, இது ஒரு காரணம்.  அடுத்து, ஹாலிவுட்ல ஒரு சினிமாவுக்கு இருக்கிற மார்க்கெட் ரொம்ப ரொம்பப் பெருசு. எந்த முயற்சியிலும் தரகர்கள் புகுந்து தடுக்கமாட்டாங்க. கடின உழைப்பு இருந்தா, ஹாலிவுட்டின் மார்க்கெட்டை ஒரு இயக்குநர் எட்டிப்பிடிக்க முடியும். அங்கே, நினைச்சதைப் பண்ணலாம். இப்படி சினிமாவுக்கான களம் அங்கே ரொம்ப சுத்தமா இருக்கு. இங்கெல்லாம் திரைக்கதைகள் நாம எழுதுறோம். அங்கே 'திரைக்கதை சந்தை'யே இருக்கு. நமக்குப் படம் எடுக்கிற ஆர்வம் இருந்தா, பிடிச்ச ஜானர்ல கதை பிடிக்கலாம். ஒரு நாட்டுக்கும், இன்னொரு நாட்டுக்கும் கலை ரீதியான தொடர்புகள் இருக்கு. உதாரணத்துக்கு, கனடாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே 'கோ-ப்ரொடக்‌ஷன்ஸ்' ஒப்பந்தம் இருக்கு. அங்கே போய்ப் படம் எடுத்தா, அரசாங்கமே நிதி உதவிகள் செய்யும். இதுதவிர, நிறைய நிதி உதவிகள் கிடைக்கிற வழிகள் உலகம் முழுக்க நிறைய இருக்கு. ஆனா, இதெல்லாம் நம்மாளுங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்ங்கிறதுதான் கேள்வி.

'கெட் ஹாப்பி' படப்பிடிப்பில் மனோஜ் அண்ணாதுரை

முக்கியமான இன்னொரு விஷயம் சொல்றேன். மற்ற நாடுகள்ல படம் எடுக்கும்போது, அங்கே வரிச்சலுகை கிடைக்கும். உதாரணத்துக்கு, ஒரு தமிழ்ப்படத்தை நியூயார்க் சிட்டியில ஷூட் பண்றாங்கனு வைங்க... நடிகர்களின் சம்பளம் தவிர்த்து, ஒருநாள் ஷூட்டிங் செலவு எவ்வளவுனு தெளிவான கணக்கைக் கொடுத்தா, அதில் 30 சதவீத பணத்தை அந்த அரசு நமக்குக் கொடுக்கும். அதாவது, ஒரு நாளைக்கு ஒரு லட்சம் செலவு பண்ணியிருந்தா, அதுல 30,000 ரூபாய் நமக்குத் திரும்ப வந்துடும். சலுகையில் வேறுபாடு இருந்தாலும், கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜார்ஜியானு உலகின் பெரும்பாலான நாடுகள்ல இது நடைமுறையில இருக்கு" என்பவர், ஒரு அப்படித் திரைப்படமாகும் படைப்புகளுக்கான விற்பனை சந்தையையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

"பெரும்பாலான இன்டிபென்டென்ட் படங்கள் தியேட்டருக்கு வராது. ஆனா, திரைப்பட விழாக்கள்ல கலந்துகிட்டு வரவேற்பைப் பெற்ற படமா இருந்தா, உடனடியாக அந்தப் படத்தை வாங்கிடுவாங்க. படத்தை யாரும் வாங்கலைனா, நெட்ஃபிலிக்ஸ், அமேசான் மாதிரியான இணையதளங்களுக்கு விற்கலாம். அல்லது ஏஜென்ஸிகளை அணுகி, நம்ம படத்தை அனைத்து உலக மொழிகளுக்கும் விற்கலாம். அதாவது, ஒரு படத்தை ஆப்பிரிக்கா, அர்ஜென்டினா, ஜிம்பாப்வே, பிரேசில்னு உலகின் எல்லா மொழிகளுக்கும்கூட 'சப்-டைட்டில்' செய்துகொடுத்து ரிலீஸ் பண்ணலாம். ஒவ்வொரு மொழிக்கும் சில ஆயிரம் டாலர்கள் நமக்குக் கிடைச்சாலும், உலகம் முழுக்க நம்மளோட படத்தை ரீச் பண்ண முடியும், அதுமூலமா நல்ல வருமானத்தையும் பெறமுடியும். தமிழ்சினிமாவுல ஏராளமான படங்கள் இருக்கு. ஆனா, நான் சொல்ற இந்த விஷயத்தையெல்லாம் செயல்படுத்துறதுக்கான வாய்ப்புகள் பூஜ்ஜியத்துலதான் நிற்குது. அதை நடைமுறைப்படுத்தும்போது, 'முத்து' படம் ஜப்பான்ல பெரிய அளவுக்கு ரீச் ஆனமாதிரி, எல்லாத் தமிழ்ப் படங்களும் ரீச் ஆகும். தயாரிப்பாளர்களுக்கும் வருமானம் அதிகமாகும். உலகம் முழுக்க நம்ம படத்தைப் பார்ப்பாங்க. அதனாலதான், 'கெட் ஹாப்பி'யை அங்கே இயக்கினேன்.

மனோஜ் அண்ணாதுரை

தவிர, இங்கே நிறைய திறமையான இயக்குநர்கள் இருக்காங்க. அவங்க படத்தை இங்கே மட்டுமே வெச்சுக்காம, உலகம் முழுக்கக் கொண்டுபோறதுக்கான வழிகளைத் தேர்ந்தெடுக்கணும். ஏ.ஆர்.ரஹ்மான், மனோஜ் நைட் ஷியாமளன் மாதிரியான சில இந்தியர்கள் ஹாலிவுட் அரங்கத்துக்குப் போனதுக்குக் காரணம், அவங்க எடுத்த முயற்சிகள்தான். 'சைன்ஸ்' படத்தை மனோஜ் நைட் ஷியாமளன் மலையாளத்துல எடுத்திருந்தா, இந்த உயரத்துக்குப் போயிருக்க முடியாது. ஆக, ஒரு படத்தை எடுக்குறது, ரிலீஸ் பண்றது, கந்து வட்டிக்குப் பணம் வாங்குறது... இந்தப் பிரச்னைகளிலேயே சுத்திக்கிட்டு இருக்காம, எல்லா வழிகளையும் தெரிஞ்சுக்கணும். வெளிச்சத்தை எல்லோரும் பார்க்கணும்னா, உயரமான இடத்துக்குப் போகணும். குழிக்குள்ள இருந்துக்கிட்டு லைட் அடிக்கிறதுனால ஒரு பிரயோஜனமும் இல்லை. தமிழ்சினிமாவுல திருந்தவேண்டிய நபர்களும், திருத்தவேண்டிய விஷயங்களும் நிறைய்ய்ய இருக்கு.  இங்கே சிலர், 'மாஸ் லெவல்ல இருக்கக்கூடிய நடிகர்கள் சம்பளத்தைக் குறைச்சுக்கணும்'னு சொல்றதைக் கேட்குறேன். ஏன் அவங்க மாறணும்... 'காக்கா முட்டை', 'விசாரணை' மாதிரியான படங்களை ரசிகர்கள் ஏத்துக்கலையா, இல்லை அதுல பெரிய நடிகர்கள்தான் நடிச்சாங்களா? இங்கே தயாரிப்பாளர்கள்கிட்ட இருந்துதான் பிரச்னையே ஆரம்பிக்குது" என்று முடிக்கிறார், மனோஜ் அண்ணாதுரை.

 

நல்ல படைப்புகளுக்கு தமிழ்சினிமாவில் வரவேற்பு இருக்கிறது. தமிழ்சினிமாவில் இல்லையெனில், இந்திய சினிமா. இந்திய சினிமாவில் கிடைக்கவில்லையெனில், உலகம் முழுக்க அந்தப் படைப்பைக் கொண்டுபோகவேண்டும். சினிமாவுக்கு மொழி தேவையில்லை எனும்போது, இந்த முயற்சிகளை எடுப்பதில் பிரச்னைகள் ஏதும் இருக்கப்போவதில்லை. உலகம் முழுக்க ஒரு சினிமாவிற்கான வருமான வாய்ப்புகளுக்கான அனைத்து வாசல்களும் திறந்துதான் இருக்கிறது. இனி, அந்த வாசல்களை எட்டியாவது பார்க்கலாம்.  சரி, தமிழ்சினிமாவில் ஒரு சினிமாவிற்கான வருமான வாய்ப்புகள் இப்போதைய சூழலில் எப்படி இருக்கிறது, தயாரிப்பாளர்கள் எப்படி இயங்குகிறார்கள்... எனப் பல விஷயங்களை அடுத்தப் பகுதியில் பார்ப்போம்.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/110008-is-usury-hero-or-villain-for-tamil-cinema-series-episode-3.html

  • தொடங்கியவர்

"எம்.ஜி.ஆர், சிவாஜி தோற்ற இடம்... 'விக்ரம்வேதா'வும், 'ஆரஞ்சுமிட்டாயு'ம் வேற வேற... இதை உணரணும்!" கந்துவட்டி... தமிழ்சினிமாவின் ஹீரோவா, வில்லனா? தொடர் - அத்தியாயம்-4

 
 
Chennai: 

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே'னு ஒரு பழமொழி இருக்கு. உணவு விஷயத்தில் மட்டுமல்ல, கலைப்படைப்புக்கும் இது கச்சிதமாகப் பொருந்தும்.

"ஹீரோக்களுக்குக் கொடுக்கும் சம்பளமும், அவர்களுடைய படங்களுக்கு ஒரு தயாரிப்பாளர் செய்யவேண்டிய செலவுகளுக்கும் நிச்சயம் கடன் வாங்க முடியாமல் காய் நகர்த்த முடியாது என்பதுதான் தமிழ் சினிமாவின் நிலை. ஆனால், எவ்வளவு அதிக முதலீட்டில் படம் எடுத்தாலும், கதையும், காட்சி அமைப்பும் ரசிகர்கள் மனதில் ஒட்டவில்லையெனில், படம் ஓடாது. கடன் வாங்கிய தயாரிப்பாளர், கடனாளியாகவே தொடர்வார்கள். இங்கே, ஹீரோக்கள் தான் நடிக்கும் படங்களில் தங்களுக்கான 'ஹீரோயிஸ'த்தைக் காட்டிகொள்ள மெனக்கெடுவதில் செலவிடும் கவனத்தைக் கொஞ்சமாவது, ரசிகர்களுக்குப் பிடித்தமாதிரியான கதைகளைத் தேர்தெடுத்து நடிக்கும்போது, இந்த நிலை கொஞ்சம் மாறலாம். ஆனால், ஹீரோக்கள் அதற்குத் தயாராக இருக்கவேண்டுமே?!" - ஒருவரோ இருவரோ அல்ல... பெரும்பாலான தயாரிப்பாளர்களும், இளம் தலைமுறை இயக்குநர்களும் இந்தப் புலம்புலை முக்கியமான ஒன்றாக முன்வைக்கிறார்கள். விஷயத்திற்கு வருவோம்... தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை 'கந்துவட்டி ஹீரோவா, வில்லனா?' என்ற கேள்விக்கு, 'வில்லனா, ஹீரோவா என்பது முக்கியமில்லை. கந்துவட்டி வாங்கித்தான் படம் எடுக்கமுடியும் என்ற நிலை தமிழ்சினிமாவில் இல்லை' என ஆணித்தரமாகச் சொல்கிறார், இயக்குநர் தாமிரா. 'ரெட்டச்சுழி'க்குப் பிறகு இவர் இயக்கியிருக்கும் 'ஆண் தேவதை' திரைப்படத்திற்கு 'கந்துவட்டிக்குக் கடன் வாங்காமல் எடுக்கப்பட்ட சினிமா' என கேப்ஷன் கொடுக்கிறார்.

 

'கந்துவட்டி' பிரச்னை குறித்துப் பேசுகிறார், இயக்குநர் தாமிரா

"சினிமா எடுக்கிறதுக்கு ஒரு தீர்மானம் இங்கே தேவையா இருக்கு. அது, 'பிஸ்னஸா, பேஷனா?' என்ற கேள்விக்கான பதிலைத் தெளிவா வெச்சிருக்கிறது. ஒரு படைப்பை வியாபார நோக்கத்தோட மட்டுமே அணுகும்போதுதான் எல்லாவிதமான பிரச்னைகளும் வரும். வாங்குற கடனுக்கும், கட்டுற கந்துவட்டிக்கும் சேர்த்து ரசிகர்கள் தலையில கட்டுவாங்க. யூதர்கள் ஆரம்பிச்சு வெச்சதா சொல்ற இந்த வட்டிமுறை, இப்போ முக்கியமான வியாபாரமா மாறி நிற்குது. படத்துக்காக வாங்குற கடனுக்கான வட்டியையும் சேர்த்து 'படத்துக்கான லாப நஷ்டக் கணக்கு' பார்க்கிற முறை இங்கே இருக்கு. அது தவறு. இங்கே பெரும்பாலான தயாரிப்பாளர்கள்கிட்ட தெளிவான திட்டமிடல் இல்லை. ஒரு படத்தை 90 நாள் ஷூட்டிங்கை முடிக்கணும்னு திட்டமிட்டா, படபூஜைக்கு 5 லட்சம் செலவு ஆகும். படத்தோட பட்ஜெட்ல மூன்றில் ஒரு பங்குதான், படப்பிடிப்புக்கு செலவு ஆகும். ஆக, இந்த குறைந்தபட்ச தொகை இருந்தாப் படத்தை எடுத்து முடிச்சிடலாம். 

பிரச்னை எங்கே ஆரம்பிக்குதுன்னா, எல்லா நடிகர்களுக்கும், டெக்னீஷியன்களுக்கு பணத்தை செட்டில் பண்ண பிறகுதான், ஷூட்டிங் போறதுலதான். உதாரணத்துக்கு, 3 கோடி பட்ஜெட்ல பிளான் பண்ண படத்தை எடுக்க ஒரு கோடி போதும். டெக்னீஷியன்களுக்கும், நடிகர்களுக்கும் கொடுக்கிற சம்பளத்தை, அந்தப் படம் முடியும் தருவாயில் கொடுக்கிறோம்னு அக்ரிமென்ட் போடும்போது, தயாரிப்பாளர் வட்டிக்குப் பணம் வாங்கவேண்டிய பிரச்னை இருக்காது. ஒருவேளை, அவர் வட்டிக்கு வாங்கித்தான் நடிகர்கள், டெக்னீஷயன்களுக்கு சம்பளம் கொடுக்கணும்னாலும், வட்டி கட்டுற காலம் குறையும். தவிர, இந்த முறையை ஃபாலோ பண்ணும்போது, ஷூட்டிங் முடிஞ்சு ஒரு படம் ரெடியா இருக்கும்போது, அந்தப் படத்துக்கான ஃபாரீன் ரைட்ஸ், டெலிவிஷன், ஆடியோ ரைட்ஸ் இதுமூலமா கிடைக்கிற பணத்தை வெச்சு சம்பளம் கொடுக்கலாம். இந்த முறையை ஃபாலோ பண்ணா, சினிமா வாழ்வாங்கு வாழும்!" எனச் சொல்லும் தாமிரா, அதை சாத்தியப்படுத்தும் முயற்சிகளையும் முன்வைக்கிறார்.

"இதை நடைமுறைப்படுத்துறதுக்கு ஒரே வழி, சினிமா பெயரளவுக்கு 'கூட்டுத்தொழில்'ங்கிற அடையாளத்தோட இல்லாம, உண்மையிலேயே கூட்டுத்தொழிலா மாறணும். அதுவரை கந்துவட்டிப் பிரச்னை, கடன் பிரச்னை எல்லாம் சிக்கலைக் கொடுத்துக்கிட்டேதான் இருக்கும். 'தயாரிப்பாளர் சம்பளம் கொடுக்கிறார், நாம நடிச்சிட்டுப் போய்க்கிட்டே இருப்போம்'ங்கிற மனநிலை மாறி, படத்துக்காக உழைக்கிற அத்தனை நடிகர்கள், டெக்னீஷியன்களும் அதைத் தங்களுடைய படைப்பாகப் பார்க்கும்போது பிரச்னை இருக்காது. தவிர, இங்கே வட்டிக்குப் பணம் வாங்குற பிரச்னையைவிட, எப்படிப் படம் எடுக்கிறதுனு தெரியாம இருக்கிறது வேறொரு பிரச்னை.

"மலையாள சினிமாவுல நட்பு ரீதியா செயல்பட்டுக்கிட்டு இருக்காங்க. ஒரு இயக்குநர், தன்னோட நண்பரோட படத்துக்கு வசனம் மட்டும் எழுதுறார், இன்னொரு படத்தோட கதை விவாதத்துல கலந்துக்கிறார். படைப்பாளிகளுக்குள்ள ஈகோ இல்லாம வொர்க் பண்ற மனநிலை இருக்குல்ல, அது இங்கே கிடையாது. தவிர, அங்கே வியாபாரத் தன்மை எப்படி இருக்குன்னா, ஒரு நடிகரோட் படம் நல்லா ஓடுதுன்னா, அடுத்த படத்துக்கான சாட்டிலைட் ரைட்ஸை விற்று, அடுத்த படத்தைத் தொடங்கிடுறாங்க. 'சாட்டிலைட் ரைட்ஸ்ல அவ்வளவு பணம் கிடைக்குமா'னு கேட்கலாம். ஆனா, கிடைக்கும்ங்கிறதுதான் உண்மை. சேட்டிலைட், எஃப்.எம்.எஸ் ரைட்ஸை அடிப்படையா வெச்சுத்தான் படத்தோட பட்ஜெட்டைத் தீர்மானிக்கிறாங்க. அதாவது, உற்பத்தியும் வியாபாரமும் அங்கே ஒரே சமயத்துல நடக்குது. கலெக்‌ஷனைப் பொருத்துதான் நடிகர்களுக்குச் சம்பளம் கொடுக்குறாங்க. தியேட்டர் மூலமா கிடைக்கிற வருமானம், தயாரிப்பாளர்களுக்குக் கிடைக்கிற போனஸ். இதுதான் மலையாள சினிமாவின் தற்போதைய நடைமுறை. ஏன் மலையாளத்துல தொடர்ந்து நல்ல படங்கள் வருதுனு தெரியுதா?

இயக்குநர் தாமிரா

அங்கே சேட்டிலைட் ரைட்ஸை வெச்சு பட்ஜெட் போடுறாங்க. இங்கே சேட்டிலைட் ரைட்ஸ்லகூட தயாரிப்பாளர்களை ஏமாத்திக்கிட்டு இருக்காங்க. இங்கே சேட்டிலைட் ரைட்ஸை 'மோனோபோலி' அதாவது, தனியுரிமையா விற்கிற நிலை இருக்கிறதுனால, விலையை வாங்குறவங்க தீர்மானிக்கிறாங்க. இந்த நடைமுறைக்கு இடையில நிறைய இடைத்தரகர்கள் பண்ற பிரச்னைகள் இருக்கும். எந்த ஒரு வியாபாரமும் இடைத்தரகர்கள் மூலமா நடந்தா, உற்பத்தியாளருக்கும், பயனாளிகளுக்கும் நல்லது இல்லை. ஆனா, இதுதான் தமிழ்சினிமாவுல தொடர்ந்து நடந்துக்கிட்டு இருக்கு. கும்பகோணத்துல இருக்கிற ஒரு தியேட்டருக்கு, '130 ரூபாய் டிக்கெட் ரேட் போட்டா, படம் பார்ப்பாங்களா?'னு இடைத்தரகர்கள்தான் வியாபாரம் பேசிக்கிட்டு இருக்காங்க. இது எவ்வளவு தப்பான விஷயம்?" என்றவரிடம், சமகால நடிகர்களான விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் இருவரையும் முன்வைத்துச் சொல்லும் உதாரணம், மிக முக்கியமான ஒன்று. 

"படம் எடுக்கும் தயாரிப்பாளர்களோட நடைமுறை சரியில்லை. ஏ.வி.எம், வாசன், ஜெமினி போன்ற பெரு நிறுவனங்கள் படம் எடுத்துக்கிட்டிருந்து காலத்துல அதாவது, தயாரிப்பாளர்கள் முதலாளிகளாக இருந்த சமயத்துல 'கதைக்கு' பட்ஜெட் தீர்மானிப்பாங்க. ஒரு கதைக்கு சிவாஜி நடிச்சா இவ்ளோ பட்ஜெட், எம்.ஜி.ஆர் நடிச்சா இவ்ளோ பட்ஜெட்... என்பதுதான் அன்றையை நடைமுறை. ஆனா, இன்னைக்கு சிவகார்த்திகேயன் படத்துக்கும், விஜய்சேதுபதி படத்துக்கும் ஒரே பட்ஜெட் போடுறாங்க. அதாவது, 'கதைக்கு, பட்ஜெட்' என்ற நிலை மாறி, 'நடிகர்களைப் பொருத்து' பட்ஜெட் தீர்மானம் ஆகுது. பிறகு, படத்தோட மொத்த வியாபார பாரமும் அந்த நடிகரின் தலையில் வந்து இறங்குது. ஏன் இந்தப் பிரச்னை... தயாரிப்பாளர், அந்த நடிகருக்கு இருக்கும் 'இமேஜ்' படத்தை எப்படியாவது காப்பாத்திடும்னு நம்புறார். ஆனா, 'இமேஜ்' என்பது மாயத்தன்மைதானே?

ஒரு நல்ல உதாரணம் சொல்றேன். 'விக்ரம்வேதா'வுக்குப் பிறகு விஜய்சேதுபதியோட இமேஜ் மாறிடுச்சு, அவருக்கான மார்க்கெட் அதிகம் ஆயிடுச்சுனு சொல்லி, அடுத்த படத்துக்கும் அதே பட்ஜெட், அதே மார்க்கெட்டைக் குறி வைக்கிறாங்க. இப்போ, விஜய்சேதுபதி 'ஆரஞ்சு மிட்டாய்' மாதிரி ஒரு படம் எடுக்கும்போது, 'விக்ரம்வேதா'வுக்குக் கிடைச்ச வசூலும், வரவேற்பும் நிச்சயம் இந்தப் படத்துக்குக் கிடைக்காது. ஆனால், தயாரிப்பாளர்கள் 'ஆரஞ்சு மிட்டா'யை 'விக்ரம்வேதா'வோட மார்க்கெட்டை நம்பி எடுப்பாங்க. இதுதான், இங்கே பெரிய பிரச்னை. 'விக்ரம்வேதா'வுக்கான ரசிகர்கள், மார்க்கெட், பட்ஜெட் வேற... 'ஆரஞ்சு மிட்டாய்'க்கான ரசிகர்கள், மார்க்கெட், பட்ஜெட் வேற! 'விக்ரம்வேதா' வெற்றிக்குப் பிறகு ஒருவர் 'ஆரஞ்சு மிட்டாய்' மாதிரியான கதையை விஜய்சேதுபதிகிட்ட சொன்னா, அவரோட சம்பளம், படத்தோட பட்ஜெட் எல்லாம் மாறியிருக்கும். அப்போ சில கோடிகள்ல எடுக்கலாம்னு நினைச்ச 'ஆரஞ்சு மிட்டாய்' படத்தை, பல கோடி பட்ஜெட்டுக்கு மாத்தணும். அப்படி மாத்தும்போது, படத்தோட ஒட்டுமொத்த தன்மையும் உருக்குலைஞ்சு போகும். இங்கே ஒரு படம் ஹிட் ஆகி, நல்ல வசூல் கொடுத்தா, அடுத்த படத்துக்கும் அது நிச்சயம் கிடைக்கும்னு நினைக்கிறதுகூட பரவாயில்லை. 'அதைவிட அதிகம் கிடைக்கும்'னு நினைச்சு, படத்தோட பட்ஜெட்டை அதிகப்படுத்துற நிலை இருக்கே... அதை மாத்திக்கிட்டாலே பாதிப் பிரச்னைகள் காணாம போயிடும்!

தாமிரா

நடிகர்கள்கிட்ட இருக்கிற இன்னொரு முக்கியமான பிரச்னை, ஒரு படம் நல்லா ஓடி... தனக்கான ஒரு மார்க்கெட் உருவாயிடுச்சுனா, அது குறையும்போது, 'எனக்கான மார்க்கெட் குறைஞ்சிருக்கு'னு ஒப்புக்கவே மாட்டாங்க. எம்.ஜி.ஆரும் சிவாஜியும் தோற்ற இடம் இது. ஆனா, ரஜினி, கமல், விஜய், அஜித் தோற்றதை வெளிக்காட்டிக்கமாட்டாங்க. ஆனா, அதை எத்தனை நாளைக்கு மறைச்சுவைப்பீங்க? 'தங்கமுட்டை' போடுற வாத்து எப்பவுமே முட்டையை மட்டுமே போட்டுக்கிட்டு இருக்காது. ராமராஜனுக்கு இல்லாத ஆடியன்ஸா... இன்னைக்கு அவரோட நிலை என்ன? சமூகம் குற்றங்களைக் கண்டுக்காம இருக்கும்ங்கிறதுக்காக, தப்புப் பண்ணிக்கிட்டே இருக்கக்கூடாது. ஏன்னா, சமூகம் விழிப்படைந்து தண்டிக்கும்போது, அந்த தண்டனை மிகக் கொடூரமா இருக்கும். இதுதான் சமூக அறம். இதை அத்தனை படைப்பாளிகளும் உணரணும்!" என்று முடிக்கிறார், இயக்குநர் தாமிரா.

உண்மைதான், 'சுப்ரமணியபுரம்' எடுத்த சசிகுமார்தான், 'பிரம்மன்', 'பலே வெள்ளயத்தேவா' மாதிரியான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அந்தப் படங்கள் ஓடும் எனவும் நம்புகிறார். ஆனால், மீண்டும் மீண்டும் செய்த தவறுகளையே தொடர்ந்து செய்யும்போது ரசிகர்கள் திருப்பி அடிப்பார்கள். ஏனெனில், நடிகர்களோட நம்பிக்கையைவிட, ஆடியன்ஸ் ஒரு படத்தின்மேல வைக்கிற நம்பிக்கை மிக மிக முக்கியமான ஒன்று. 

https://cinema.vikatan.com/tamil-cinema/television/110275-kanthuvatti-series-part4.html?

  • தொடங்கியவர்

‘ ‘விவேகம்’ நஷ்டத்திற்காக ‘விசுவாசத்தி’ல் நடிக்கும் அஜித்... பிற நடிகர்களின் கவனத்துக்கு..!’ - அத்தியாயம்-5

 
 

கந்துவட்டி

 

 

கந்துவட்டிதான் சினிமாவை இயக்குகிறது. ஒரு சினிமாவுக்கு 'கந்துவட்டிப் பிரச்னை' என்பது பொருட்டே கிடையாது. ஃபைனான்ஸ் பெற்று படம் எடுத்து, கச்சிதமான தயாரிப்பு முறைகளைத் தெரிந்துகொண்டு சினிமா வியாபாரத்தை அணுகும்போது ஒரு திரைப்படம் வெற்றிப் படமாகும். பெரிய லாபம் இல்லையென்றாலும், நஷ்டமில்லாத அளவுக்குப் பணத்தைத் திரும்பப் பெறுவார் தயாரிப்பாளர். கடன் கொடுத்தவருக்குக் கச்சிதமாக வட்டியும் முதலும் திரும்பப் போகும். ஆனால், இதெல்லாம் மிக மிகச் சரியான திட்டமிடலோடு ஒரு திரைப்படம் தயாராகும்போதுதான் சாத்தியம். இதில் ஏதேனும் ஓரிடத்தில் தொய்வு ஏற்பட்டாலும், சீட்டுக்கட்டாகச் சரிந்து வீழ்ச்சியைச் சந்திப்பது தயாரிப்பாளர் மட்டுமே!” - பல வருடமாக சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து, விரைவில் இயக்குநராகத் தடம் பதிக்கவிருக்கும் ஒருவரின் கருத்து இது. 

அசோக்குமார் - அன்புச்செழியன் விவகாரத்திற்குப் பிறகுதான், கந்துவட்டிப் பிரச்னையைத் தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ‘அன்புச்செழியனால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் பட்டியல் ரெடியாகிக்கொண்டிருக்கிறது. அனைவரையும் கந்துவட்டிப் பிரச்னையிலிருந்து மீட்போம். தமிழ்சினிமாவைக் கந்துவட்டிப் பிரச்னையிலிருந்து காப்பாற்றுவோம்' என்றார், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால். ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கிளம்பிய எதிர்ப்புகள் இப்போது சைலைன்ட் மோடில் இருக்கிறது. இந்தப் பிரச்னையின் வீரியம் தெரிந்த பலர், தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளாமல் தகவல்களைச் சொல்கிறார்கள்... கந்துவட்டிப் பிரச்னைக்குத் தீர்வு தேடுவதில் இப்படியும் சில பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வழியும் கரடுமுரடான காட்டுப்பாதையாக இல்லை. எளிமையான ஒருவழிப் பாதையாகவும், அனைவருக்கும் பொதுவான ஒன்றாகவும் இருக்கிறது. கொஞ்சம் பயணித்துப் பார்ப்போம்...

கந்துவட்டி தொடர்

‘அன்புச்செழியன் உத்தமர்' என்றார், இயக்குநர் சீனுராமசாமி. ‘அன்புச்செழியனை மிகைப்படுத்திச் சித்திரிக்கிறார்கள்' என்றார், நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி. 'அன்புச்செழியன் பணத்தை வசூலிக்கும் முறைதான் கீழ்த்தரமாக இருக்கிறது' எனப் பலரும் சொல்கிறார்கள். ஆக, இங்கே அன்புச்செழியன் கந்துவட்டிக்குப் பணம் கொடுப்பதில் பிரச்னை இல்லை. பிறகு, எங்கேதான் பிரச்னை தொடங்குகிறது? எனக் கேட்டால், 'ஒரு படத்தின் தோல்விக்குக் காரணம் இயக்குநரும், நடிகரும்தான்!' என்ற கருத்தை முன்வைக்கிறார், ஒளிப்பதிவாளரும், தயாரிப்பாளருமான ஒருவர்.

“ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு படம் தயாரிக்கிறோம் என்றால், அந்தப் படத்தை ஒரு கோடி ரூபாயையும் செலவு செய்து தீர்க்கவேண்டும் என்பது அர்த்தமல்ல... ஆனால், பெரும்பாலான இயக்குநர்கள் அதைத்தான் செய்கிறார்கள். படத்தின் பட்ஜெட் அதிகரித்தால், தயாரிப்பாளர் வாங்கிய கடனுக்கு வட்டி அதிகரிக்கும் என்பதை இயக்குநர்கள் உணர்வதில்லை. ஒரு படத்தின் தயாரிப்பு திட்டமிடல் என்பது, படபூஜையில் தொடங்கி, ரிலீஸ்தேதி வரை என்பதையும் உணர்வதில்லை. படப்பிடிப்பு மட்டும் முடிந்த அல்லது போஸ்ட்-ப்ரொடக்‌ஷன் பணிகளை எட்டிய நிலையில் கிடப்பில் இருக்கும் படங்களை இயக்குநர்களோ, நடிகர்களோ எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும். 'அது தயாரிப்பாளர் பிரச்னை. அவரிடம்தான் கேட்கவேண்டும்' என நழுவிக்கொள்ளும் இயக்குநர்கள்தான் இங்கே அதிகம்.

இருக்கும் பணத்தில் இயக்குநர், நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான சம்பளம் கொடுத்துவிட்டு, ஷூட்டிங் நடத்துவதற்காக ஃபைனான்ஸியர்கள் தயவை எதிர்பார்த்து நிற்கும் தயாரிப்பாளர்கள் எண்ணிக்கைதான் இங்கே அதிகம். இந்த நடைமுறை மாறவேண்டும். எனக்குத் தெரிந்த தயாரிப்பாளர் ஒருவர், ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படத்தைத் தயாரித்தார். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும், அந்தப் படம் தியேட்டரில் வசூலித்த தொகை 20 லட்சம் ரூபாய்தான். 'எஃப்.எம்.எஸ்' மற்றும் சேட்டிலைட் ரைட்ஸ் மூலமாகக் கிடைத்த பணம் 40 லட்சம் ரூபாய். தயாரிப்பாளர்கள் நல்ல படம் எடுக்க நினைத்தாலும், அதனுடைய வியாபார தளம் இங்கே இவ்வளவுதான். தவிர, எஃப்.எம்.எஸ் ரைட்ஸ் என்பது, தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் விற்கப்படும் ஒளிபரப்பு உரிமை. இதுவும் சிறுபட்ஜெட் படங்களுக்கு ஒருவிதமாகவும், பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஒருவிதமான தொகையும் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், ரசனை என்பது ஒன்றுதானே?" என்கிறார், அவர்.

கந்துவட்டிப் பிரச்னைகள் குறித்த விவகாரத்தில் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத மற்றோர் இயக்குநர், நடிகர்களின் சம்பளம் குறித்த முக்கியமான பிரச்னை ஒன்றை முன்வைக்கிறார். 'அவர் கதை நல்லா இருக்குனு சொல்லிட்டார், படம் நிச்சயம் ஹிட் ஆகும்' என தமிழ்சினிமாத் துறையில் பரவலாகப் பேசப்படும் ஒரு நடிகர். அவர் நடிப்பதாக ஒப்புக்கொள்ளும் படத்திற்கு ஒரு பெரிய தொகையை சம்பளமாகக் கேட்பவர். 'நல்ல நடிகர், அவர் இருந்தால் படத்திற்குப் பலம்' என நினைக்கும் தயாரிப்பாளர்கள், அவர் கேட்ட பணத்தில் கொஞ்சம் கூடுதலாகவோ குறைவாகவோ கொடுக்கிறார்கள். ஆனால், அந்த நடிகரின் கொள்கை என்ன தெரியுமா... '25 நாள் படப்பிடிப்புக்கு வருவேன். அதற்குள் அனைத்துக் காட்சிகளையும் எடுத்துகொள்ளவேண்டும்' என்பது. 'சரி'யென அதற்கும் ஒப்புக்கொள்ளும் சூழல் இருக்கிறதுதான். ஆனால், அவரை வைத்து 10 நாள்கள் ஷூட்டிங் எடுத்தாலும், அவர் சொன்ன சம்பளத்தைத்தான் கொடுக்கவேண்டும் என்ற நிர்பந்தம் வரும்போதுதான், தயாரிப்பாளருக்குப் பிரச்னை வருகிறது. இது, தனிநபர் பிரச்னை என்று ஒதுக்கிவிடமுடியுமா?

அஜித்

நிச்சயம் முடியாது. ஏனெனில், பெப்சி தொழிலாளர்கள் கூடுதலாக சில நூறு ரூபாய் சம்பளம் கேட்கும்போது, 'தயாரிப்பாளர்கள் நிலை என்னாவது?' எனக் கவலைப்படும் மற்ற சங்கங்கள், 'நடிகர்களுக்கு ஏன் இவ்வளவு சம்பளம்?' எனக் கேட்கவேமாட்டார்கள், கேட்கவும்கூடாது.. என்பதுதான் தமிழ்சினிமாவின் நிலை. ஏனெனில், ''இங்கே நடிகர்களை வைத்துதான் வியாபாரம் நடந்துகொண்டிருக்கிறது" என்கிறார்கள். பெரிய நடிகர் நடிக்கும் ஒரு படத்தை எளிதாக வியாபாரம் செய்யமுடியும். சேட்டிலைட் ரைட்ஸ் உடனடியாக விற்பனையாகும். ஃபாரீன் ரைட்ஸ் வாங்க போட்டி போடுவார்கள். தியேட்டரிலும் வசூல் ரீதியான வரவேற்பு கிடைக்கும். ஆனால், இங்கேயும் பிரச்னை இருக்கிறது.

"பெரிய நடிகர் ஒருவரின் திரைப்படம் தியேட்டரில் நல்ல வசூலைப் பெறவில்லையெனில், அது தயாரிப்பாளருக்கு மோசமான விளைவுகளைக் கொடுக்கும். அதனால்தான், எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் அவர்கள் நடித்த ஒரு படம் தோல்வியடைந்தால், அந்தத் தயாரிப்பாளருக்கே அடுத்த படத்திற்கான கால்ஷீட் கொடுத்து, தயாரிப்பாளரின் நஷ்டத்தில் பங்கெடுத்துக்கொள்வார்கள். எனக்குத் தெரிந்த அளவுக்கு, 'விவேகம்' கூட்டணி மீண்டும் 'விசுவாசம்' படத்தில் இணைந்திருப்பது தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் சமாளிப்பதற்காகவே இருக்கும். அந்தப் படத்தைப் பற்றிய விமர்சனங்களைத் தவிர்த்து, ஒரு தயாரிப்பாளருக்கு அஜித் 'விசுவாசமாக' இருப்பது பெரிய விஷயம்!” என அஜித்தைப் பாராட்டுகிறார், பொங்கல் ரேஸில் தன் படத்தோடு காத்திருக்கும் இயக்குநர் ஒருவர்.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/110568-is-usury-hero-or-villain-for-tamil-cinema-series-episode-5.html

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

''கேவலமா படம் எடுத்து சம்பாதிக்கிறாங்க... நல்ல படம் எடுத்து நஷ்டப்படுறாங்க..!" - கந்துவட்டி தமிழ்சினிமாவின் ஹீரோவா, வில்லனா? அத்தியாயம்-6

 
 
Chennai: 

'சினிமா பைனான்ஸியர் அன்புச்செழியன் மீதான புகாரை விசாரிக்க காவல்துறைக்கு டிசம்பர் 29-ஆம் தேதி வரை விசாரணை நடத்த தடை' என உத்தவிட்டிருக்கிறது, நீதிமன்றம். அன்புச்செழியன் - அசோக்குமார் விவகாரத்தின் இப்போதைய நிலை இது. சரி... தமிழ்சினிமாவின் கந்துவட்டிப் பிரச்னைகளுக்குள் வருவோம்.

''படைப்பாளியின் வலி தற்காலிகமானது; படைப்பு நிரந்தரமானது" - திரைப்பட இயக்குநர்களின் வலி குறித்து, அமெரிக்க இயக்குநர் ஜான் மிலியஸ் என்பவரின் கூற்று இது. தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை, ''தயாரிப்பாளர்களின் வலி நிரந்தரமானது; அவரது படைப்பு தற்காலிகமானது'' என தாராளமாகச் சொல்லலாம். ப்ரீ ப்ரொடக்‌ஷன் - ஷூட்டிங் - போஸ்ட் ப்ரொடக்‌ஷன் - ரிலீஸ் என நான்கு நிலைகளில், பணத்தைப் பதம் பார்க்கும் தவறுகள் சிறிய அளவில் நடந்தாலும் பொருளாதார ரீதியாக முதல் அடி தயாரிப்பாளருக்குத்தான். தவிர, கந்துவட்டிக்குப் பணம் வாங்கி படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு, அது பெருத்த அடி! ஆனால், 'இங்கே தயாரிப்பாளர்கள் விரும்பித்தான் கந்துவட்டிக்குப் பணம் வாங்குகிறார்கள்' என்கிறார், இயக்குநர் ஒருவர். 

 

"தமிழ்சினிமாவுல எல்லோருக்கும் தெரிஞ்ச தயாரிப்பாளர் அவர். அவர்கிட்ட இல்லாத பணமானு நானும் சமயத்துல நினைச்சிருக்கேன். ஆனா, அவங்க கந்துவட்டிக்குப் பணம் வாங்கித்தான் படம் எடுக்குறாங்க. ஒரு படத்துக்கு பட்ஜெட் போடும்போதே, வட்டிக்கும் சேர்த்தே பட்ஜெட் பிளான் பண்றாங்க. வட்டி கட்டவேண்டிய பணத்தையும் ரசிகர்கள்கிட்ட இருந்துதான் சம்பாதிக்கணும்னு, மோசமான படத்தையும் நல்லா விளம்பரப்படுத்துறாங்க. 'ஏன் இப்படிப் பண்றாங்க?'னு எனக்குத் தெரிஞ்சுக்க, அந்தத் தயாரிப்பு நிறுவனத்தோட நிர்வாகிகள்ல ஒருத்தரைப் பிடிச்சுக் கேட்டேன். 'லாபமா கிடைக்கிற பணத்தையெல்லாம் வேற வேற தொழில்ல இன்வெஸ்ட் பண்ணுவாங்களே தவிர, சினிமாவுல இறக்கமாட்டாங்க. நிலம் வாங்கிப்போட்டா, ரெண்டு வருடத்துல நாலு மடங்கு பணமாகும். சினிமா அப்படிக் கிடையாது தம்பி. இங்கே ரொட்டேஷன்ல வாங்கி விட்டாதான், படத்துக்கும் நல்லது, நமக்கும் நல்லது' என மையமான ஒரு பதிலைச் சொன்னார்." என்கிறார், அந்த இயக்குநர். 

கந்துவட்டி தொடர்

'கந்துவட்டிக்குப் பணம் வாங்குவது ஏன்?' என்ற கேள்விக்கு, கூட்டாக ஒரு பாட்டு பாடுகிறார்கள் இன்னும் சிலர். ''வட்டிக்குப் பணம் வாங்கிதான் படம் எடுக்கணும்ங்கிறது தமிழ்சினிமாவோட கலாச்சாரம். தொன்றுதொட்டு இதுதான் நடந்துக்கிட்டு இருக்கு... இனியும் அப்படித்தான் நடக்கும். ஏன்னா, எல்லாத்துக்கும் ஒரு 'கால்குலேஷன்' இருக்கு. தவிர, கந்துவட்டிக்குப் பணம் வாங்கிப் படம் எடுத்தாதான், அதுக்கான வியாபாரம் குறைந்தபட்ச நேர்மையா இருக்கும். ஏன்னா, பணம் கொடுக்கிற அதே ஆட்கள்தான், வியாபாரம் ஆகுற இடத்துலேயும் கூடாரம் கட்டியிருப்பாங்க!" என்கிறார்கள். 

ஆனால், இன்றைய வியாபார சூழல் மாறிக்கொண்டிருக்கிறது என்பதைக் கடந்த பகுதிகளில் பார்த்தோம். அதை இன்னும் தீவிரமான பார்வைகளோடு முன்வைக்கிறார், இளம் இயக்குநர் ஒருவர். 'துப்பாக்கி'யை மையப்படுத்தி முதல் படத்தைக் கொடுத்தவர், வளர்ந்து வரும் வாரிசு நடிகரை வைத்து இயக்கவிருக்கும் அடுத்த படத்திற்கான பணிகளில் தீவிரமாக இருக்கிறார். அவர், "வட்டிக்கொடுமை இங்கே ரொம்ப டூ மச் பிரதர். ஒரு படம் ரெடியாகி, ரிலீஸுக்கு ஒரு மாசம் லேட் ஆனாலும், அதுக்கான வட்டியைக் கட்டவேண்டிய சூழல் இங்கே இருக்கு. இதுக்கு, சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் மட்டுமே காரணமா இருக்கிறதில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்துல இருந்து 'சிறுபட்ஜெட் படங்களுக்குத் தேவையான வசதிகளை செய்துகொடுப்போம். இனி, பெரிய படங்கள் விழாக்காலங்களில் மட்டுமே ரிலீஸ் ஆகும்'னு என்னைக்கோ ஒருநாள் சொன்னாங்க. ஆனா, இப்போவரைக்கும் ஒவ்வொரு வாரமும் ரிலீஸாகுற படங்கள் முட்டிமோதிக்கிட்டுதான் வருது. ஒரு மனுஷன் வாரத்துல ரெண்டு படம் பார்க்கலாம், மூணு படம் பார்க்கலாம்... பத்து படங்களைப் பார்க்கமுடியுமா, நிச்சயம் முடியாது. ஆனா, அதுதான் எதார்த்தத்துல நடக்குது." என்றவர், ''தவிர, அரசாங்கம் எவ்வளவோ நல்ல விஷயங்களைப் பண்ணலாம் பிரதர். கந்துவட்டியை முறைப்படுத்தலாம், வங்கிகள் கடன் தரலாம். இதையெல்லாம் அரசு கண்டுக்காம இருக்கிறதுனாலதான், தமிழ்சினிமா தனிநபர்கள் கைக்குப் போயிடுச்சு. அதோட விளைவுகள் எவ்ளோ மோசமா இருக்கும்ங்கிறதுக்கு உதாரணம்தான், அசோக்குமாரின் மரணம். தவிர, இப்போதைய தமிழ்சினிமா மிக மிக மோசமான சூழல்ல இருக்குனு என்னைமாதிரி புது இயக்குநர்களாலகூட ஈஸியா உணரமுடியுது. இங்கே எல்லோரும் சுயநலவாதிகளா இருக்கிறதுதான் பெரும் பிரச்னையாவும் இருக்கு, பணம் தொடர்பான எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணமா இருக்கு. அதை நான் கண்கூடாவே பார்க்குறேன். தமிழ்சினிமாவுல ரெண்டுவிதமான தயாரிப்பாளர்கள் பிரிவைப் பார்க்குறேன். ஒரு பிரிவினர், என்னமாதிரியான படம் எடுத்தாலும், அவங்களுக்கு தியேட்டர்கள் ஈஸியா கிடைக்குது, வியாபாரம் ஈஸியா நடக்குது. எந்தப் பிரச்னையும் இல்லாம படம் ரிலீஸ் ஆகுது, நல்ல லாபமும் பார்க்குறாங்க. இன்னொரு பிரிவினர், நல்ல படங்களை எடுத்தாலும் தியேட்டர் கிடைக்கிறதில்லை. வியாபாரமும் ஆகுறதில்லை. இந்த நிலைமை எவ்ளோ சீக்கிரம் மாறுதோ, அவ்ளோ சீக்கிரம் மாறணும்!" என வேண்டுதளோடு முடிக்கிறார்.

கந்துவட்டி தொடர்

தயாரிப்பாளர்களின் பணத்தைப் பதம் பார்க்கும் வேலையை 'கந்துவட்டி'க்காரர்கள் மட்டும் செய்வதில்லை. சினிமாவுக்குள்ளேயே ஏராளமான சுரண்டல்கள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமான சில பிரச்னைகள் இதோ...

"ஒரு திரைப்படத்திற்கான மிக முக்கியமான வருமான ஆதாரம், திரையரங்குகளின் டிக்கெட்தான்! ஆனால், பெரிய தயாரிப்பு நிறுவனங்களுக்கும், அரசியல் பின்புலம் சார்ந்த சிலருக்கும் நியாயமான 'டிக்கெட் கணக்கு'களை சமர்ப்பிக்கும் திரையரங்க உரிமையாளர்கள், புதிய தயாரிப்பாளர்களிடம் நேர்மையாக இருப்பதில்லை."

" 'வாங்கி வெளியிடும்' முறையை இப்போது வேறு மாதிரி மாற்றிவிட்டார்கள். பத்து கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை, 11 கோடி அல்லது 12 கோடி ரூபாய்க்குப் பெற்றுக்கொண்டு, திரையரங்குகளில் வெளியிட்டு வரும் வருமானத்தை எடுத்துக்கொள்வது 'வாங்கி வெளியிடும்' முறையாக இருந்தது. இன்று, திரையரங்குகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிலர், 'திரையரங்குகளில் ரிலீஸ் செய்து தருகிறேன்' என ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, தயாரிப்பாளரின் வருமானத்தில் குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொள்கிறார்கள். அதாவது, 'வாங்கி வெளியிடும்' நல்லவருக்கு 'லாபம்' எவ்வளவு என்பது மட்டுமே குறிக்கோள். தவிர, 'இத்தனை திரையரங்குகளில் வெளியிட்டுத் தருவேன்' எனச் சொல்லும் அவர்கள், திரையரங்குகளைக் குறைத்துவிட்டு, அதிலும் கமிஷன் பார்ப்பதுதான் உச்சகட்ட கொடுமை!."

"திரையரங்குகள் குறிப்பிட்ட சிலரின் கன்ட்ரோலில் இருப்பதால், அவர்கள் சொல்வதைக் கேட்கவேண்டிய கட்டாயம் இங்கே இருக்கிறது. பல படங்கள் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருப்பதற்கு, ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போவதற்கு, ரிலீஸான சில நாட்களிலேயே திரையரங்குகளில் இருந்து நீக்கப்படுவதற்கு... எனப் பல பிரச்னைகளுக்கு, திரையரங்குகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிலர்தான் காரணம்." 

''சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்கள் வெற்றிகரமாக ஒரு நல்ல படத்தை எடுத்து முடித்தாலும், அதை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய குறிப்பிட்ட சில நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்கவேண்டிய சூழ்நிலை இங்கே இருக்கிறது. இதனால், பல சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வசூலைப் பெற்றாலும், 'நியாயமான தொகை' தயாரிப்பாளருக்குக் கிடைப்பதில்லை!."

'மல்டிபிளெக்ஸ்' திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வசதிகள் இருப்பதால், படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையை, வசூலாகும் தொகையை அப்படத்தின் தயாரிப்பாளரே டிராக் பண்ணமுடியும். தமிழ்நாட்டுல இருக்கிற தியேட்டர்களின் எண்ணிக்கை சில ஆயிரம்தான். அத்தனை திரையரங்குகளையும் ஒரே குடையின் கீழ் இணைச்சு வசூலைக் கண்காணிக்கிறது, டெக்னாலஜி யுகத்துல ஈஸியான வழி. ஆனா, அது நடந்துடக்கூடாதுனு நினைக்கிறாங்க, நடக்கவும் விடமாட்டாங்க!."

"தயாரிப்பாளருக்குக் கந்துவட்டிப் பிரச்னை அல்லது வேறுசில பிரச்னைனு வைங்க... இங்கே இருக்கிற சங்கங்கள் என்ன பண்ணனும்? அதுக்கான ஒரு முடிவை சொல்லணும். ஆனா, அன்புச்செழியன் - அசோக்குமார் விவகாரத்துல என்ன நடந்தது... ஆளாளுக்கு தங்கள் கருத்துக்களைப் பொதுவெளியில சொல்றது, ஆதரவு/எதிர்ப்பு இப்படி ரெண்டு பிரிவா பிரிஞ்சு நிற்கிறதுமாதானே இருந்தாங்க! சினிமாவுக்காக இயங்குற சங்கங்கள் பொறுப்புணர்ச்சியோட நடந்துக்கணும். ஒரு பிரச்னை முளைச்சா, குறைந்தபட்சம் இருதரப்பையும் கூப்பிட்டுப் பேசி, காம்ப்ரமைஸ் பண்ணிவைக்கலாம். அதுகூட இங்கே நடக்குறதில்லை."

 

இன்னும் பலரின் குரல்கள் பலவிதமாக இருக்கிறது. ஆனால், எல்லாப் பிரச்னைகளையும் கடந்து 'பண ரீதியான' பாதுகாப்பைப் பெற தயாரிப்பாளர்கள் தினம் தினம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும்; சினிமாவின் பலதரப்பட்ட சந்தைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற கட்டாயமும், அதற்கான காரணங்களும் நிறைய இருக்கிறது. அதைப் பிறகு பார்க்காலாம். 

https://cinema.vikatan.com/others/cinema-serials/111268-worst-film-breaks-record-good-film-flops-kanthuvatti-series-6.html

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

`வட்டிக்குப் பணம் கொடுக்கிறவர், படத்துல நடிக்கிற நடிகர் நடிகைகள் தேர்வு வரைக்கும் மூக்கை நுழைப்பார்..!’ - அத்தியாயம்-7

 
 

கந்துவட்டி தொடர்

 

‘பண ரீதியான’ பாதுகாப்பைப் பெறுவதுதான் ஒரு தயாரிப்பாளரின் முதல் திட்டமிடலாக இருக்க வேண்டும். ஆனால், இன்றைய தமிழ்சினிமா சூழலில் அது சாத்தியமே இல்லாத ஒன்றாக இருக்கிறது. புதிதாக வரும் தயாரிப்பாளருக்கு சினிமாவின் சந்தை தெரிவதில்லை, தமிழகத்தில் உள்ள மொத்த திரையரங்குகளும் குறிப்பிட்ட சிலரின் கன்ட்ரோலில் இயங்கிக்கொண்டிருக்கிறது, வெளியிடுவதில் பல பிரச்னைகளைச் சந்திக்கவேண்டியதாக இருக்கிறது... என நீளும் புகார் பட்டியலிலுக்கு இடையில்தான், தமிழ்சினிமா இயங்கிக்கொண்டிருக்கிறது; தயாரிப்பாளர்கள் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு திரைப்பட உருவாக்கத்தின் ஆதாரமையமே தயாரிப்பாளர்தான். ஆனால், கந்துவட்டிப் பிரச்னையில் ஆரம்பப் புள்ளியே அவர்களிடம் இருந்துதான் தொடங்குகிறது' என்கிறார், இயக்குநர் ஒருவர்.

 

“இங்கே இருக்கும் பல தயாரிப்பாளர்களிடம் பணம் இருப்பதில்லை. சினிமாவில் பல வருடம் நிர்வாகத் தயாரிப்பாளராக இருப்பவர்கள்தான், தயாரிப்பாளர்களாக உருவெடுக்கிறார்கள். அவர்களுக்குத்தான் சினிமா உத்திகள், வியாபாரம் எல்லாமே தெரியும். சிறு பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள் சிலர் மட்டுமே இங்கே சொந்தமாக முதலீடு செய்து படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நல்ல கருத்துள்ள படங்களை அவர்கள் தயாரிக்கும் பட்சத்தில் தப்பித்துக்கொள்ளலாம். இல்லையெனில் சிரமம்தான்... இங்கே, தயாரிப்பாளர் எனப்படுபவர் பணத்தை முதலீடு செய்பவராக மட்டும் இருந்தால் பிரச்னை இல்லை. அவரே 'ஒரு குத்துப்பாட்டு இருந்தால்தான் படம் ஓடும்', 'இதுபோன்ற ஒரு காட்சி இருந்தால், படம் ஓடாது' எனக் கருத்து சொல்லி, கதையை மாற்றுபவர்களாக இருக்கிறார்கள். தவிர, பணம் இல்லாமல் ஃபைனான்ஸ் பெற்றுப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள்தான் இங்கே அதிகம்.

வட்டிக்குப் பணம் வாங்குகிறார்கள், படம் எடுக்கிறார்கள், அந்தப் படத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க சிரமப்படுகிறார்கள், ரிலீஸ் செய்ய முட்டி மோதுகிறார்கள், கடைசியில்... கந்துவட்டிக் கொடுமையில் சிக்கி நிற்கிறார்கள். இதில் சிலர் மட்டும் விதிவிலக்காக, ஒரு படத்தைக் கமிட் செய்து, அதற்கான சேட்டிலைட் ரைட்ஸ், ஃபாரீன் ரைட்ஸ், ரீமேக் ரைட்ஸ் எனப் பலவிதமான சினிமா சந்தையில் படத்திற்கான விலை பேசி, குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே பெற்றுக்கொண்டு, அந்தப் பணத்தில் படத்தைத் தொடங்குகிறார்கள். இந்த வழிமுறை எளிமையாக இருந்தாலும், எல்லாத் தயாரிப்பாளர்களுக்கும் இது சாத்தியம் ஆகாது. எனவே, ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பதில் முறையான திட்டமிடல் இருந்தால் மட்டுமே, தயாரிப்பாளரின் தலை தப்பிக்கும். ஆனால், தமிழ்சினிமாவில் அந்த 'திட்டமிடல்' என்பது என்ன நிலையில் இருக்கிறது என்பதை, தயாரிப்பாளர் - நடிகர் இடையேயான மோதல்களை 'பிரேக்கிங் நியூஸா'கப் பார்க்கும்போது தெரிந்துகொள்ளலாம்" என்கிறார், அவர்.

''கந்துவட்டிக்குப் பணம் வாங்கிப் படம் எடுக்கலாம். ஆனால், அதை முறையாக திருப்பித் தரும் வழிகள் நமக்கு இருக்கிறதா... என்ற கேள்வியை ஒவ்வொரு தயாரிப்பாளரும் உணர்ந்தாலே, பாதிப் பிரச்னைகள் தீர்ந்துவிடும்'' என்கிறார், மற்றொரு இயக்குநர். ''அன்புச்செழியன் விவகாரத்தில் அவர்மீது இத்தனை சர்ச்சைகள் எழக் காரணம், பணத்தை வாங்குவதில் அவர் கடைபிடிக்கும் அணுகுமுறை மட்டும்தான்." என்றவர், அவருடைய அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதையும் விவரித்தார்.

'' 'தமிழிலேயே இங்கிலீஷ் படம் எடுப்பவர்' எனப் பெயரெடுத்த இயக்குநர் அவர். தன் படத்திற்கு அன்புச்செழியனிடம் பணம் பெற்றுக்கொண்டு, பெரிய நடிகர் ஒருவரை ஹீரோவாக ஒப்பந்தம் செய்து ஷூட்டிங் கிளம்பவிருக்கிறார். 'ஹீரோயின் யார்?' என்ற கேள்வி, அன்புச்செழியன் தரப்பில் இருந்து வருகிறது. 'புதுமுகம் ஒருவரை அறிமுகப்படுத்தவிருக்கிறேன்' என்கிறார், இயக்குநர். 'நான் கொடுத்த பணத்துக்கு, பெரிய ஹீரோயினைப் படத்துல பயன்படுத்துனா மட்டும்தான், போட்ட பணத்தைத் திரும்ப எடுக்க முடியும்' என அட்வைஸ் கொடுத்தவர், இயக்குநர் அதை உதாசீனப்படுத்திய பிறகு, கட்டாயப்படுத்தி, டாப் ஹீரோயினை ஒப்பந்தம் செய்யவைத்திருக்கிறாராம். படத்தில் யார் நடிக்கவேண்டும் என்பது வரை... அவருடைய தலையீடு நீளுவதால்தான், பிரச்னைகள் வெளியேவரத் தொடங்கியிருக்கிறது" என்கிறார். அதேசமயம், 'விஜய் ஆண்டனி உள்ளிட்ட சிலர், அன்புச்செழியனுக்கு ஆதரவாகத்தானே பேசியிருக்கிறார்கள். பிறகு எப்படி கந்துவட்டிப் பிரச்னையில் அன்புச்செழியன் மட்டுமே குற்றவாளி ஆவார்?' என்ற கேள்வியை முன்வைத்தேன்.

கந்துவட்டி தொடர்

“விஜய் ஆண்டனிக்கு தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அவர் ஒரு படத்திற்குப் பெரும் கடன், இரு படங்களுக்கான வருமானத்தைக் கொடுக்கும். தவிர, கடந்த சில ஆண்டுகளாகத்தான் அவர் கடன் பெற்றுப் படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். இன்னும் சில வருடம் கழித்து, அவர் சசிகுமார் இடத்தில் இருந்து பேசும் சூழல் வரலாம்...” என்கிறார், அந்த இயக்குநர்.

‘எல்லோரும் ஏன் அன்புச்செழியனிடம் கடன் வாங்கவேண்டும்?' என்ற கேள்விக்குப் பின்னால் இருக்கும் பதில் ஒன்றுதான். சேட்டுகளிடன் கடன் பெற்றுப் படம் எடுக்கும் சூழல் இங்கே இருந்தாலும், அவர்களிடம் கடன் பெறும்போது, உத்திரவாதத்திற்கு சொத்து, நிலம், பத்திரம் எனப் பலவற்றைக் கொடுக்கவேண்டும். ஆனால், அன்புச்செழியன் 'பிரபலமான முகம்' என்பதை மட்டுமே உத்திரவாதமாகக் கொண்டு கடன் கொடுத்துகொண்டிருக்கிறார். தமிழ்சினிமா பிரபலங்கள் யாரும், எந்நேரமும் அவரிடம் கடன் பெறலாம். உடனடியாகக் கிடைக்கும்... எனப் பல வசதிகள் அன்புச்செழியன் தரப்பில் இருக்கிறது. தவிர, கடன் கொடுத்தவர், திருப்பிக் கேட்க சில தவறான அணுகுமுறையைக் கையாள்கிறார் என்றால், அவரிடம் ஏன் கடன் பெறவேண்டும்?' என்பதையும் தயாரிப்பாளர்கள் யோசிக்கவேண்டும்.

இங்கே திரும்பத் திரும்ப முன்வைக்கப்படும் ஒரு விஷயம், 'தயாரிப்பாளர்களிடம் இல்லாத திட்டமிடல்' என்ற வாதம்தான். அந்தத் திட்டமிடல் இருந்தால், கடன் வாங்கிப் படம் எடுத்தாலும் அதை பாஸிட்டிவாகக் கையாள முடியும். திட்டமிடல் என்பது, வெறும் வார்த்தை அல்ல... உழைப்பு. திரைப்படத்திற்கான பூஜைக்கு இவ்வளவு செலவு, ஷூட்டிங் இத்தனை நாட்கள்தான் நடந்தவேண்டும், படத்திற்கான சந்தையை நிர்ணயித்துக்கொள்ளவேண்டும், நடிகர், நடிகைகளுக்கான சம்பளத்தை தவணை முறையில் கொடுக்கவேண்டும், 'கால்ஷீட்' என்ற நடைமுறையை இங்கே 'முறை'யாகக் கையாளவேண்டும், படத்தின் சேட்டிலைட் ரைட்ஸ், ஃபாரீன் ரைட்ஸ் என வெளிச்சந்தைக்கான வாய்ப்புகளைப் படம் தொடங்கும்போது அல்லது பப்ளிசிட்டியின்போதே முடித்துகொள்ள முயற்சிக்கவேண்டும்.

விளம்பரத்திற்காக கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைக்காமல், அந்தப் படத்திற்கான ரசிகர்களைக் கண்டறிந்து, முதலில் அவர்களிடம் கொண்டுசேர்க்கவேண்டும்... என அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தால் மட்டுமே, ஒரு திரைப்படத்திற்கான வியாபாரம் முழுமையாக இருக்கும், ஒரு திரைப்படத்தின் தயாரிப்பாளர் 'பண ரீதியான' பாதுகாப்பைப் பெறுவார். இந்த நடைமுறைகள் எல்லாம் பாலிவுட் சினிமாவில் கச்சிதமாக நடந்துகொண்டிருக்கிறது. பாலிவுட்டில் இருக்கும் அந்தத் 'திட்டமிடல்' கோலிவுட்டிலும் சாத்தியமானால், கந்துவட்டிப் பிரச்னை மட்டுமல்ல, இன்னும் பல பிரச்னைகளுக்கும் முடிவு கிடைக்கும். அதை அடுத்த பகுதியில் பார்ப்போம்!

https://cinema.vikatan.com/tamil-cinema/news/112657-financier-will-interfere-in-all-matters-of-the-movie.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.