Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவருக்குள்ளே மறையும் படுக்கை!

Featured Replies

சுவருக்குள்ளே மறையும் படுக்கை!

 

white_spacer.jpg

சுவருக்குள்ளே மறையும் படுக்கை! white_spacer.jpg
title_horline.jpg
 
அ.முத்துலிங்கம்
white_spacer.jpg

ல்லாமே விசித்திரமாக இருந்தது. கனடா விமான நிலையத்தில் அவரை அழைத்துப் போக மகன் வரவில்லை; மருமகள்தான் வந்திருந்தாள். மகன் வராததற்கு அவள் சொன்ன

காரணமும் நம்ப முடியாததாக இருந்தது.கம்பெனி விஷயமாக அவசரமாக

அடுத்த மாநிலம் போக வேண்டி இருந்ததாம். நாளை காலை வந்துவிடுவானாம்.

p231d.jpg

இந்தக் கணத்துக்காக அவர் பன்னிரண்டு வருடங்கள் அல்லவா காத்திருந்தார். வத்ஸலாவைக் கூர்ந்து கவனித்தார். முதன்முதலாக அவளைப் பார்க்கிறார். தலைமுடியைத் தூக்கி மேலே கட்டியிருந்தாள். அது ஒரு கடுமையான தோற்றத்தை அவளுக்குக் கொடுத்தது. கையிலே மாட்ட வேண்டிய ஒரு வளையத்தைக் காதிலே மாட்டியிருந்தாள். கூர்மையான நாடி. அவள் முகம் முழுக்கக் கீழ் நோக்கி இறங்கி ஒரு முனையில் சேர்ந்தது போல முக்கோண வடிவமாக இருந்தது.

அவள் பெரிய பேச்சுக்காரியும் அல்ல. அவர் ஸீட் பெல்ட்டை இழுத்துக் கட்டும் முன்னரே காரை எடுத்தாள். ஆகப் பின்னால் ஆசனத்தை தள்ளிப்போட்டு, கைகளை மடிக்காமல் நீட்டிப் பிடித்தபடி வாக னத்தை ஓட்டினாள். ஆறு வீதி நெடுஞ்சாலையில் கார் வேகமாக ஓடியது. இரண்டு பக்கமும் தொழிற் சாலைகள், பச்சைப் புகையைக் கக்கின. பார்த்த பக்கமெல்லாம் வாகனங்கள் மனிதருக்குச் சாத்தி யப்படும் உச்சபட்ச வேகத்தில் ஒன்றை யன்று துரத்தின. கைப்பிடியை இறுகப் பற்றியபடி ஸீட் நுனியில் இருந்தார் ராஜநாதன். ஏதாவது கேட்டால் மட்டுமே வத்ஸலா பதில் சொன்னாள். பாதி பதில் காற்றில் அள்ளிப் போனது. திடீ ரென்று காரை ஓரத்தில் நிறுத்தி விட்டு வாந்தி எடுத்தாள். இவர் பதறியபடி என்ன... என்ன என்றார். அவள் ஒன்றுமே பேசாமல் மறுபடியும் காரை எடுத்தாள்.

வீடு வந்து சேர்ந்தபோது இரவு பதினோரு மணி. நிலவறையில் அவருக்காக ஒரு சின்ன அறை தயாராக இருந்தது. ஒரு சின்னப் படுக்கை; சின்ன மேசை; அதற்கு மேல் ஒரு சின்ன டி.வி; சுவரில் சாத்தி வைத்த ஒரு கதிரை; கயிற்றைப் பிடித்து இழுத்தால் எரியும் மின் விளக்கு, அவ்வளவுதான். அவருடைய மகன் காலையில் வருவான் என்று சொல்லிவிட்டு, அவள் மறைந்துவிட் டாள். நெஞ்சிலும் வயிற்றிலும் அவ ருக்கு முடிச்சுகள் விழ ஆரம்பித்தன.

வீட்டையும் தோட்டத்தையும் விட்டுவிட்டு ஒரேயடியாக வந்திருக்கிறார். இந்த அறையில்தான் அவர் இனிமேல் வசிப்பார்; இங்கேதான் தூங்குவார்; இங்கேதான் சாவார். அதை நினைத்தபோது கிலி பிடித்தது. பேருக்குக்கூட சாப்பிட்டீங்களா என்று அவள் கேட்கவில்லையே என்று நினைத்தபோது துக்கம் பொங்கியது. இலங்கையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு, துபாயில் ஒரு மணி நேரம் இளைப்பாறி, அட்லாண்டிக் சமுத்திரத்தை ஒரே மூச்சில் கடந்து வந்த களைப்பில் அப்படியே தூங்கிவிட்டார். நெஞ்சுக்கு மேலே தொங்கும் கயிற்றை இழுத்து லைட்டை அணைக்கலாம் என்பதுகூட மறந்து விட்டது.

காலையில் மகன் வந்தபோது அவர் கைப்பிடி வைத்த கதிரையின் ஓரங்களில் உடம்பு படாமல் உட் கார்ந்திருந்தார். குச்சி போன்ற கால்கள். அவர் கன்னத்தில் பதிந்த தலையணை வரிகள்கூட இன்னும் அழியவில்லை. அவரை அந்தக் கோலத்தில் பார்த்தபோது மகனுக்கு என்னவோ செய்தது. கட்டிப்பிடித்து இரண்டு கன்னத்திலும் கொஞ்சினான். வத்ஸலா சிரித்துக்கொண்டு நின்றாள். அவன் பக்கத்தில் ஒட்டிக் கொண்டு நிற்கும்போது அவள் பூத்துக் குலுங்குவாள் என்பதையும், இல்லாதபோது வெடிப்பாள் என்பதையும் வரும் காலங்களில் அவர் கற்றுக்கொள்வார்.

‘‘இரவு சாப்பிட்டீங்களா அப்பா’’ என்றான். இவர், ‘‘சாப்பிட் டேனே’’ என்றார். வத்ஸலா சிரிப்பு குறையாமல் பார்த்துக்கொண்டே நின்றது இவருடைய மனதுக்குள் திக்கென்றது.

அவருடைய பயிற்சி மகனிடம் ஆரம்பித்தது. எப்படி கணப்பு அடுப்பை இயக்குவது; எப்படி தொலைக்காட்சி சேனல்களை மாற்றுவது; எப்படி கட்டிலை மடித்துவைப்பது. அந்தக் கட்டிலை மடித்து சுவருக்குள்ளே தள்ளி விடலாம். மறுபடியும் வேண்டும்போது இழுத்துப் போட்டுக்கொள்ளலாம். வீட் டிலே அவர்களுக்கு உதவியாக கடை யிலே போய் சாமான்கள் வாங்கி வரு வார். புல் வெட்டுவார்; பனி தள்ளுவார்.

அருண் பிறந்தபோது ராஜநாத னுக்கு ஒரே மகிழ்ச்சி, தன்னால் உப யோகமாக இருக்க முடிகிறதே என்று. குழந்தைகள் காப்பகத்தில் அருணைச் சேர்த்தார்கள். ஒரு மணிக்குப் போய் குழந்தையை எடுத்துவந்து பால் கொடுத்துத் தூங்கவைப்பார். மூன்று மணிக்கு வத்ஸலா வந்து பொறுப்பேற்றுக் கொள்வாள். மாலையில் மகன் வந்துவிடுவான்.

பக்கத்து வீட்டில் ஒரு சீனக் கிழவர் இருந்தார். கோடைக் காலங்களில் அழகான காய்கறித் தோட்டம் போடு வார். ராஜநாதன் யாழ்ப்பாணத்தில் வாழை, கத்தரி, தக்காளி, வெண்டைக் காய் என்று நிறைய பயிர் செய்தவர். கனடா மண்ணும் சுவாத்தியமும் அவருக்குப் பழக்கமில்லை. சீனக் கிழவர் கொடுத்த தைரியத்திலும் புத்திமதியிலும் அவரும் மண்ணைக் கொத்தி பதப்படுத்தி காய்கறித் தோட்டம் போட்டார். ‘‘ஏனப்பா இந்தக் கஷ்டம்’’ என்றான் மகன். வத்ஸலா வுக்கோ சுத்தமாகப் பிடிக்கவில்லை.

அவர் வந்த நாளிலிருந்து வத்ஸலா அவருக்கு புரியாத புதிராகவே இருந் தாள். ராஜநாதன் தன் மகனிடம் எதையும் சொல்ல மாட்டார் என்பதைச் சரியாக யூகித்துக்கொண் டாள். அந்த வீடு எப்படி இயங்குகிறது, அதிலே அவருடைய மகனின் அங்கம் என்ன என்ற விஷயம் அவருடைய மூளைக்குள் அகப்படக்கூடியதாக இல்லை. மகன் வீட்டில் இல்லாத சமயங்களை வெறுத்தார். கீழ்ப் பற் களால் மேல் பற்களைக் கவ்விக் கொண்டு வத்ஸலா வெளிப்படும் போது இவர் நிலவறைக்குப் போய் பதுங்கிவிடுவார்.

சில நாட்களுக்கு முன் ஒரு சம்பவம்... அவரிடம் அருணைப் பார்க்கச் சொல்லிவிட்டு, மகனும் மருமகளும் ஒரு விருந்துக்குப் புறப்பட்டார்கள். அப்போது மகன், ‘‘வத்ஸலா, அப்பா வரும்போது வாங்கிக்கொண்டு வந்த அட்டியலைப் போட்டுக்கொண்டு வாரும்’’ என்று சொன் னான். ‘‘அட்டியலா?’’ என்று இவர் வாயைத் திறக்கும் முன்னர், வத்ஸலா திரும்பி ஒரு பார்வை பார்த் தாள். அது இவருடைய நெஞ்சைத் துளைத்துக்கொண்டு போனது. வாயைப் பட்டென்று மூடிக்கொண்டார். அவள் ஒரு பச்சை நிற அட்டியலை அணிந்து, பச்சை நிற சேலையில் புறப்பட்டாள். அப்போது தலையைப் பின்னுக்கு எறிந்து இவரை அர்த்தத்தோடு பார்த் தாள். ‘புருஷனுக்குத் தெரியாமல் அட்டியல் வாங்கி, அதை நான் கொண்டு வந்ததென்று ஏன் கூறினாள்?’ என்று அவர் குழம்பிப் போய் வெகு நேரம் அங்கேயே நின்றார்.

அடுத்து நடந்த சம்பவத்தில் அவருக்கு விடை கிடைத்தது. ஆனால், இன்னொரு கேள்வி உண்டானது. மிஸஸ் ஜேம்ஸிடமிருந்து தொலைபேசி வந்தது. மிஸஸ் ஜேம்ஸ் என்றால் கடவுளுக்கு அடுத்தபடி. அவர்கள் பேசியபோதுதான் வத்ஸலா ரகசிய மாகச் சீட்டுப் போடுவது தெரிந்தது. அந்தக் காசில்தான் அட்டியல் வாங்கி யிருக்கிறாள். ஆனால், எதற்காக இதை புருஷனிடம் இருந்து மறைக்க வேண்டும். காலநேரம் தெரியாமல் அருண் பசி பசியென்று விடாமல் அழுதான். வத்ஸலாவுக்குத் தொலை பேசிப் பேச்சைத் தொடர முடிய வில்லையே என்ற கோபம். அருணு டைய சாப்பாட்டை எடுத்து அப்ப டியே கொட்டிவிட்டாள். அவன் ஓவென்று கதறியதை அவரால் தாங்க முடியவில்லை. ‘‘பச்சைப் பிள்ளையை ஏன் பட்டினி போடுறாய்’’ என்று அவளுடைய முதுகிடம் சொன்னார். அவள் திரும்பி சிங்கம் போல பாய்ந்து வந்தபோது அடித்துவிடுவாள் என்றே பட்டது. அருணுடைய கழுவாத பிளேட்டை அவர் முகத்துக்கு முன்னே நீட்டி, ‘‘வாயை மூடுங்கோ. உங்கள் புத்திமதியை உங்கள் பிள்ளையிடம் சொல்லுங்கோ; அல்லது மஞ்சள் கலர் பேப்பரில் அவருக்கு எழுதுங்கோ’’ -கத்தியபடியே அவருடைய முழங் கால்களுக்கிடையில் ஒடுங்கி நின்ற அருணை இழுத்துக்கொண்டு அறைக் குள்ளே போய்க் கதவைச் சாத்திக் கொண்டாள்.

ராஜநாதனுக்கு அப்போது கொஞ்சம் புரிந்தது. அவர்கள் காதலித்தபோது மகனுக்குப் புத்திமதி சொல்லி நிறையக் கடிதங்கள் எழுதியிருந்தார். எல்லாம் மஞ்சள் பேப்பரிலே இருக்கும். என்ன மயக்கமோ அவர் சொல்லைக் கேட்காமல் வத்ஸலாவையே அவன் கட்டினான். அதைத்தான் சொல்லிக் காட்டுகிறாள் என்பது பளிங்கு போல தெரிந்தது. இந்தச் சம்பவத்தையும் அவர் மகனிடம் சொல்லவில்லை.

தோட்டத்தில் கத்தரி, தக்காளி, வெள்ளரிக்காய் மூன்றையும் பயிரிட் டிருந்தார். முதலில் காய்த்தது கத்தரி தான். வதக்கிக் குழம்புவைக்க அருமையாக இருக்கும். முற்றாத கத்தரிக்காயாகப் பார்த்து ஆய்ந்து கொண்டுவந்து சமையலறை மேசை யில் வைத்தார். அங்கே, ஏற்கெனவே அதே மாதிரியான கத்தரிக்காய் குவிந்துபோய்க் கிடந்தது. கடையில் வாங்கியது. இவர் பேசாமல் திரும்பி விட்டார். அன்று இரவு அவர்கள் சாப்பிட்டது கடையில் வாங்கிய தாகத்தான் இருக்க வேண்டும். அவருடைய கத்தரிக்காய்க்கு என்ன நடந்தது என்பதை அவரால் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை.

சரி, இது தற்செயலாக நடந்தி ருக்கலாம் என்று மறக்கப் பார்த்தார். ஆனால், இரண்டாவது சம்பவம் அதை உறுதிப்படுத்தியது. இப்போது தக்காளியின் முறை. இது விசேஷமாக கனடாவில் மட்டுமே விளையும் ஒரு வகைத் தக்காளி. மார்க்கெட்டில் இந்தத் தக்காளியில் விலைச் சீட்டு ஒட்டி விற்பார்கள். இவருடைய தோட்டத்தில், தக்காளி ரத்தச் சிவப் பில் மாசு மருவில்லாமல் காய்த்திருந்தது. நன்றாகக் கனிந்த, தோல் இறுக்கம் குறையாத நாலு பழங்களை ஆய்ந்து வந்தார். சொல்லிவைத்தாற் போல சமையல் மேசையிலே அன்றும் வேறு தக்காளிப் பழங்கள் இருந்தன. அந்தப் பழங்களில் விலைச் சீட்டு ஒட்டி யிருந்தது.

இரவு உணவின்போது அவருடைய மகன் மூன்று நிமிடம் பல்லுக்கு வேலை கொடுக்கும் ஒரு பெரிய தக்காளித் துண்டை வாய்க்குள் திணித்தான். வத்ஸலா எதையும் விரல்களினால் சுட்டிக்காட்டுவது கிடையாது. கண் இமைகளை அடித்தபடி, முகத்தினால் சுட்டிக் காட்டி அவரை தக்காளி சாலட் சாப்பிடச் சொன்னாள். அவள் மனதுக்குள் சிரித்துக்கொண்டு இருந்தது தெரிந்தது.

மகனிடம் வத்ஸலாவின் காரியங் களைச் சொல்ல வேண்டும் என்று ராஜநாதன் நினைத்தார். உடனேயே, அவன் விவாகரத்து செய்துவிடு வானோ என்ற பயமும் பிடித்தது. அருணின் கதி என்னவாகும்? ஒரு முடிவுக்கும் அவரால் வர முடியவில்லை.

அன்று ஒருவருக்கும் சொல்லாமல் அவர் தோட்டத்திலே காய்த்த வெள்ளரிப் பிஞ்சுகள் அத்தனையை யும் பிடுங்கி அவருடைய நண்பர்களுக் கும், சீனக் கிழவருக்கும் அனுப்பிவைத் தார். அதிலே முக்கியமாக மிஸஸ் ஜேம்ஸுக்கு நாலு காய்கள் எடுத்துப் போய் கொடுத்திருந்தார். இதுபற்றி அவர் ஒருவருக்கும் சொல்லவுமில்லை; சமையலறை மேசையில் ஒரு பிஞ்சைக் கூட வைக்கவும் இல்லை. காரணம், வத்ஸலாவுக்கு அவரை இன்னொரு முறை அவமானம் செய்வதால் கிட்டும் மகிழ்ச்சியைக் கொடுக்க மனம் இல்லாததுதான்.

அதிகாலையிலேயே வத்ஸலாவுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. ராஜநாதன் நிலவறையில் படுக்கையில் இருந்தபடி அன்றைக்கு என்ன செய்யலாம் என்பதை யோசித்துக் கொண்டு இருந்தார். வத்ஸலாவின் குரல் திடீரென்று தேனில் தடவியது போல இனிமையாக மாறியது. அடுத்த முனையில் மிஸஸ் ஜேம்ஸ் இருக்க வேண்டும். ‘‘யேஸ் மிஸஸ்... ஜேம்ஸ், யேஸ் மிஸஸ் ஜேம்ஸ்’’ என்று வத்ஸலா குழைவது கேட்டது. ‘‘வெள்ளரிக்காய் பிஞ்சா? நான் அனுப்பி னதுதான். உங்களுக்குப் பிடித்திருந் ததா? இன்னும் நிறைய இருக்கிறதே... அனுப்புகிறேன், உடனே அனுப்பு கிறேன்.’’

முந்திய தினம் வெள்ளரிப் பிஞ்சுகளை ஆய்ந்த பிறகு தக்காளிச் செடிகளையும், வெள்ளரிக் கொடி களையும் அவர் வெட்டிச் சாய்த்து விட்டார். விரைவில் இலையுதிர் காலம் தொடங்கிவிடும் என்பதால் மண்ணைக் கொத்தி, செடிகளைப் புதைத்து, அடுத்த பருவத்துக்குத் தயார் செய்திருந்தார். வரும் ஏப்ரலில் நல்ல பசலை கிடைக்கும்.

மேலேயிருந்து வத்ஸலா, ‘‘மாமா, மாமா’’ என்று அழைத்தாள். அவருக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. வழக்கம் போல தும்புக் கட்டு முனை யால் தரையில் இடித்து அவரைக் கூப்பிடாதது ஆச்சர்யமாகயிருந்தது. இந்த நாலு வருடங்களில் மாமா என்று அவரை அழைப்பது இதுவே முதல் தடவை. மிஸஸ் ஜேம்ஸுடன் பேசியபோது மிச்சப்படுத்திய தேன் அவள் குரலில் இன்னமும் இருந்தது. ராஜநாதன் மேலே போனதும், ‘‘மாமா, மிசஸ் ஜேம்ஸுக்கு இன்னும் நாலு வெள்ளரிப் பிஞ்சுகள் அனுப்ப முடியுமா?’’ என்று கேட்பாள். அந்தக் காட்சியைக் கற்பனையில் கண்டு ரசித்தார். அவர் உதடுகளில் ஒரு சிரிப்பு உண்டாகியது. மீண்டும், ‘‘மாமா’’ என்ற குரல் அவசரமாக ஒலித்தது.

படுக்கையின் மீது கால்களை மடித்து அதற்கு மேல் உட்கார்ந்திருந்தார் ராஜநாதன். மெதுவாக கால் களை அவிழ்த்து எழுந்து நின்றபோது சூரியனுடைய சதுரம் அவர் நடு நெஞ்சில் விழுந்தது. கதவு இன்னும் பொருத்தப்படாத நிலவறையின் தட்டைக் கூரை அவர் தலைக்கு மேலே நாலு அங்குலம் உயரத்தில் இருந்தது. உடம்பை எச்சரிக்கையாக முறிக்க வேண்டும். கைகளைத் தூக்க முடியாது. அன்றிரவு முழுக்க உண்டாக்கிய ஒரு வார்த்தை அவர் தொண்டைக்குழியில் இருந்தது. அது வெளியே வந்தால் ஒரு குடும்பம் நாசமாகிவிடும். அதை விழுங்கினார். படுக்கையைத் தட்டி, மடித்து தேர்ந்த அனுபவக்காரர் போல தள்ளினார். அது சில்லுகளில் ஓடி சுவரைக் கிழித்து உள்ளே போனது. சுவர் மறுபடியும் மூடிக்கொண்டது. படுக்கை ஒன்று அங்கே இருந்ததற்கான அடையாளம் இப்போது இல்லை.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.