Jump to content

நான் அகதி


Recommended Posts

பதியப்பட்டது

நான் அகதி - பயணம் ஆரம்பம் - 1

 
 

 

 

தாலா பானுவால் ஒரு வார்த்தைகூடப் பேசமுடியவில்லை என்பதால் அவர் கணவர் முகமது மூலமாகவே அவர்கள் கதை வெளியுலகுக்கு வந்திருக்கிறது. அவர்கள் பர்மாவைச் சேர்ந்தவர்கள். பர்மா என்று சொல்லும்போதே அவர் கண்கள் மினுமினுப்போடு விரிகின்றன. பர்மா என்பது அவரைப் பொறுத்தவரை ஒரு நாடல்ல, குட்டி சொர்க்கம். கனவில் மட்டுமே காணக்கூடிய மயக்கமூட்டும் காட்சிகளை ஒருவர் பர்மாவில் அசலாகக் காணமுடியும்.

விக்டோரியன் கட்டடங்களும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் நவீன வர்த்தக வளாகங்களும் நிரம்பியிருந்தாலும் பர்மாவை நவீனத்துவம் இன்னமும் முழுக்க முழுங்கிவிடவில்லை. அழகிய ஓடைகள், பச்சைப் பசேலென்று விரிந்திருக்கும் கானகப் பகுதிகள், ஒருவேளை பொம்மையோ என்று திகைக்கவைக்கும் ஜொலிக்கும் பகோடாக்கள், திரும்பும் பக்கமெல்லாம் அடர்த்தியான காவி அங்கி தரித்த பௌத்தர்கள் என பர்மா இதயத்துக்குள் இடம் கேட்கும் கனவுப் பகுதி. 

122p21.jpg

பெரும்பான்மை பௌத்தர்களால் நிரம்பியிருக்கும் ஒரு நாட்டில் ஓர் இஸ்லாமியராக இருப்பதை அவர் ஓர்  உறுத்தலாகவே நினைக்கவில்லை. பௌத்தம் என்றால் அன்பு. பௌத்தம் என்றால் சகோதரத்துவம். பௌத்தம் என்றால் புழு, பூச்சியையும் உயிர்களாகக் கருதி மதிப்பளித்து வாழ்வது. சொர்க்கம் என்பதும் இதுதான் அல்லவா? மனநிம்மதி மட்டுமல்ல செல்வமும் இருந்தது. ஒரு பண்ணை, ஐந்து பசுமாடுகள், மூன்று காளைகள். ஆடுகளும் நிறையவே இருந்தன. சந்தேகமின்றி இது பெருஞ்செல்வம். இதுதான் வாழ்வு என்று பூரித்துக் கிடந்தார் முகமது.

எங்கே, எப்போது, யாரால் இந்த நிலைமை மாறியது என்பதை முகமதுவால் இப்போது நினைவுகூரமுடியவில்லை. ‘`நீ பர்மாவைச் சேர்ந்தவன் அல்ல என்று ஒரு நாள் திடீரென்று எனக்குச் சொல்லப்பட்டது. நீ, உன் மனைவி, உன் மகள் மூவரும் அந்நியர்கள் என்று சொன்னார்கள். எனக்குப் புரியவில்லை. என் தாத்தா பர்மாவைச் சேர்ந்தவர். என் தாத்தாவின் தாத்தாவும் இங்கிருந்தவர்தான். நான் எப்படி அந்நியனாவேன்?’’

122p6.jpg

முகமதுவோடு தர்க்கம் செய்யத் தயாராக இல்லை ஒருவரும். ஒரு நாள் அவருடைய ஆடுகள் மொத்தமும் காணாமல் போயின. மாடுகள் மறைந்துபோயின. பர்மிய ராணுவ வீரர்களுக்குப் பணியாற்றும்படி முகமது கட்டாயப்படுத்தப்பட்டார். பணி என்று சொன்னாலும் ஓர் அடிமையாகவே அவர் அங்கு நடத்தப்பட்டார். அவர் கண் முன்னால் அவருடைய பண்ணை சிறிது சிறிதாக அழியத் தொடங்கியது. பசுமை அனைத்தையும் தொலைத்துவிட்டு ஒரு பாழ்நிலமாக அது மாறிப்போனது.

ஏன் இப்படித் தனக்கு நேர்கிறது என்பதை முகமதுவால் கண்டறிய முடியவில்லை. இதற்கெல்லாம் யார் காரணம் என்றும் அவரால் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை. பர்மிய ராணுவம்தான் தவறிழைத்தது என்று சில சமயம் நினைத்துக்கொள்வார்.  அவர்களால் தானே என் பண்ணையும் வாழ்வும் அழிந்தன? அவர்கள்தானே என்னை அடிமைப்படுத்தினார்கள்? ஆனால், நிதானமாக யோசிக்கும்போது சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள்தான் குற்றவாளிகள் என்று நினைக்கத் தோன்றும். ராணுவம் மிருகத் தனமாகத்தான் நடந்துகொள்ளும். அக்கம் பக்கத்தினர் மனிதர்கள்தானே? அவர்கள் ஏன் ஆடுகளையும் மாடுகளையும் அபகரித்துக்கொள்ள வேண்டும்?122p7.jpg

இல்லை, ஒரு சிலரை நொந்து பயனில்லை. ஒட்டுமொத்த பர்மிய சமூகமும் சேர்ந்துதான் எங்களை இப்படி ஆக்கியிருக்கிறது என்னும் முடிவுக்கு வந்துசேர்ந்தார் முகமது. ராணுவத்தில் பணிபுரிபவர்களும் அக்கம் பக்கத்துக் குடியிருப்புகளில் வசிப்பவர்களும் இந்தச் சமூகத்தின் அங்கத்தினர்கள்தான் இல்லையா? எனில், இது ஒரு சமூக நோயாகத்தான் இருக்கவேண்டும். அந்த நோய் வெடித்து அதன் கிருமிகள் பர்மா முழுக்கப் பரவியிருக்கவேண்டும். இதுவரை என்னிடம் தோழமையுடன் பழகியவர்கள் அனைவரையும் அந்தக் கிருமி தொற்றிக்கொண்டு விட்டது. அது அவர்களுடைய அடிப்படைக் குணங்களை மாற்றிவிட்டது. அவர்களிடமிருந்து மனிதத்தன்மை  விடைபெற்றுச் சென்றுவிட்டது. அவர்கள் என்னை அந்நியர்களாகவும் விரோதிகளாகவும் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். நான் அப்படியேதான் இருக்கிறேன். என் நாடு மாறிப்போய்விட்டது.

முகமது மட்டுமல்ல எல்லா ரோஹிங்கியா முஸ்லிம்களும் கடும் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் தள்ளப்பட்டிருந்தனர். நீ ஒரு வந்தேறி, உன்னுடைய நாடான பங்களாதேஷுக்குத் திரும்பிப் போ என்னும் கூக்குரலை அவர்கள் அவ்வப்போது கேட்க நேர்ந்தது. அவர்களுடைய சொத்துகள் சூறையாடப்பட்டன. குடியிருப்புகள் கொளுத்தப்பட்டன. முதல்முறையாக கலவரங்கள் வெடிக்க ஆரம்பித்தன. ஒவ்வொன்றும் திட்டமிட்டு உருவாக்கப் பட்டதாக இருந்தது. பர்மியர்களோடு ராணுவம் கூட்டு சேர்ந்துவிட்டதா அல்லது சிவில் சமூகமே ராணுவமயமாகிவிட்டதா என்று தெரியவில்லை. ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு இரண்டு வாய்ப்புகளே இருந்தன. பர்மாவில் தங்கி, சிறிது சிறிதாக வதைபடுவது அல்லது ஒரேயடியாக நாட்டைவிட்டு வெளியேறிவிடுவது.

122p3.jpg

முகமது இதற்குமேல் வதைபட விரும்பவில்லை. தன் மனைவியையும் 23 வயது மகளையும் அழைத்துக்கொண்டு பர்மாவிலிருந்து வெளியேறினார். எல்லையைக் கடந்து  பங்களாதேஷ் வந்துசேர்ந்தார்கள். அங்கே அவர்களைப் போலவே பல ரோஹிங்கியா முஸ்லிம்கள் பெரிய முகாம்களில் தங்கியிருப்பதைக் கண்டனர். அதற்குப் பிறகு நடந்ததை முகமதுவால் விவரிக்கமுடியவில்லை. இவ்வளவு தூரம் பேசிய அவரால் அதற்குப் பிறகு ஒரு சொல்கூடப் பேசமுடியவில்லை. அவருடைய உதடுகள் ஒட்டிக்கொண்டுவிட்டன. அவர் பரிதாபமாக விழித்தார். அதுவரை அமைதியாக இருந்த தாலா பானு மிச்ச கதையைச் சொல்லிமுடித்தார். ‘`முகாமில் இருந்தபோது என் மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். எங்கள் வாழ்க்கை அத்தோடு முடிவுக்கு வந்துவிட்டது.’’
122p8.jpg
பர்மாவை மட்டுமல்ல, உலகம் முழுவதையுமே தாக்கி அழித்துக் கொண்டிருக்கிறது அந்தக் கிருமி. பர்மா இனியும் முகமதுவுக்கு ஒரு கனவு தேசமாக இருக்கப்போவதில்லை. உறக்கம் கலைந்து அவர் விழித்துக்கொண்டுவிட்டார். பகோடாக்களையும் புன்னகைக்கும் பௌத்தர்களையும் இனி அவரால் நினைவுகூர முடியாது. பர்மா என்றதும் அவர் இனி, தன் மகளைத்தான் நினைத்துக்கொள்வார். பிறகு களையிழந்த தன் பண்ணையை, சீரழிந்த தன் வாழ்க்கையை, அமைதியாக முடங்கிக்கிடக்கும் தன் மனைவியை. பர்மா என்னும் கனவு முற்றாகக் கலைத்துப்போய்விட்டது.

சிரியாவும் பலருக்கு சுகமான கனவாகத்தான் இருந்தது. வரலாறு எழுதப்படுவதற்கு முன்பே வரலாறு படைத்துவிட்ட நாடு என்பதில் அளவில்லாத பெருமிதத்துடன்  இருந்தார்கள் சிரியர்கள். ஆம், ஆட்சிமுறை அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லைதான். ஊழலும் ஒடுக்குமுறையும் மலிந்திருந்தது உண்மைதான். வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவம் என்று பல துறைகளில் போதாமைகள் இருக்கத்தான் செய்தன. ஆனாலும் சிரியாவை விட்டுத் தந்ததில்லை அவர்கள். ஆட்சியாளர்களின் ஒழுங்கீனங்களுக்காக என் தாய் நாட்டை நான் ஏன் பழிக்கவேண்டும்?

சிரியாவைப் போலவே பழைமையான நிலம், இராக். சிரியாவைப் போலவே அங்கும் அரசியல் தலைமை மக்களின் எதிர் பார்ப்புகளைப் பொய்த்தது நிஜம். ஜனநாயகத்தின் இடத்தை அடிப்படைவாதம் பிடித்துக்கொண்டதால் அநேகம் பேர் அங்கே ரத்தம் சிந்த வேண்டியிருந்ததும் உண்மை.  `நான் சன்னி’, `நீ ஷியா’ என்று சண்டையிட்டுக் கொண்டாலும் நெருக்கடி ஒன்று நேரும்போது நான் இராக்கியன் என்று நெஞ்சு நிமிர்த்திச் சொன்னவர்கள் அங்கே அநேகம் பேர்.

122p4.jpg

அமைதியாகத்தான் இருந்தது இலங்கையும். சின்னஞ்சிறிய அழகிய தீவு. பர்மாவைப் போலவே பௌத்தர்கள் புன்னகைத்தபடி வளைய வந்துகொண்டிருந்த நிலம் அது. அமைதிக்கு மட்டுமல்ல அழகுக்கும் குறைவில்லாத பிரதேசமாகவே இருந்தது. ஆனால், இப்போது எல்லாமே மாறிவிட்டன. சிரியா ஓர் அகண்ட சுடுகாடாக மாறிவிட்டது. பர்மாவிலிருந்து ரோஹிங்கியாக்கள் இந்த நிமிடம்வரை வெளியேறிக் கொண்டி ருக்கிறார்கள். இராக்கின் இதயம் வெறுமனே  துடித்துக்கொண்டிருக்கிறது. பல லட்சக் கணக்கான இராக்கியர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள். இலங்கை இன்று ஜீவனில்லாமல் பிளவுண்டு கிடக்கிறது.

ஆப்கானிஸ்தான், துருக்கி, ஏமன், லிபியா, சோமாலியா, சூடான், வடகிழக்கு நைஜீரியா என்று இன்னும் இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். முடிவில்லாமல் இந்நாடுகளிலிருந்து எறும்புக் A22.jpgகூட்டங்களைப்போல் மக்கள் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள், நடுத்தர மக்கள், ஏழைகள், செல்வத்தைத் தொலைத்தவர்கள் அனைவரும் இந்த வரிசையில் இடம்பெற்றிருக்கிறார்கள். நடக்க முடியாத முதியோர்கள், இதய நோயாளிகள், பார்வையிழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஒன்றுபோல் வெளியேற வேண்டியிருந்தது. பெண்கள் தங்களையும் பாதுகாத்துக்கொண்டு குடும்பத்தையும் கவனித்துக்கொள்ளவேண்டியிருந்தது. குழந்தைகளின் அழுகுரலோடு போட்டியிடுகின்றன வளர்ந்தவர்களின் ஓலம். 

இவர்கள் இழந்தவை அநேகம். பெற்றதோ ஒன்றுதான். அகதி என்னும் பெயர். பாலின வேறுபாடின்றி, வர்க்க வேறுபாடின்றி அனைவருக்கும் ஒரே பெயர். தங்கள் நாட்டின் எல்லையைக் கடந்து இன்னொன்றில் முதல் காலடியை எடுத்து வைத்த அந்தத் தருணத்தில் எங்கிருந்தோ  ஓடிவந்து  ஒட்டிக்கொள்கிறது. பலருக்கும் இனி இதுவே ஒரே அடையாளமாக இருக்கப்போகிறது.

உண்மையில் அகதி என்பவர் யார்? அவர் எப்படி உருவாகிறார்? அவர் உருவாவதற்கு யார் காரணம்? எந்தச் சூழலில் இந்த மாற்றம் நிகழ்கிறது? இந்தக் கேள்விகளுக்கு எளிமையான பதில்கள் இல்லை. மாறாக, மேலதிகக் கேள்விகளையே எழுப்பவேண்டியிருக்கிறது. அமைதியிழந்த நாடுகளே அகதிகளை உருவாக்குகின்றன என்பதைப் பொதுவிதியாகக் கொண்டால் ஒரு நாடு ஏன் அமைதியிழக்கிறது? அகதிகளில் கணிசமானவர்கள் ஏன் இஸ்லாமியர்களாகவே இருக்கிறார்கள்?  

122p5.jpg

அகதிகளுக்கு மட்டுமல்ல, அவர்களுடைய கதைகளுக்கும் எல்லைகள் கிடையாது. எனவே இந்தத் தொடரில் உலகம் முழுக்க நாம் வலம் வரப்போகிறோம். அகதிகளின் கதை என்பது ஆசியாவின் கதையாகவும் மத்திய கிழக்கின் கதையாகவும் ஆப்பிரிக்காவின் கதையாகவும் இருக்கப்போகிறது. நிச்சயம் இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் கதையும்தான். நிகழ்காலமும் கடந்தகாலமும்; அரசியலும் வரலாறும்; வாழ்வும் மரணமும் இத்தொடரில் கைகோக்கப்போகின்றன. அகதிகளை உலகம் எப்படிக் காண்கிறது என்பதை நாம் பார்க்கப்போகிறோம். அகதிகளின் கண்களைக் கொண்டு பார்த்தால் உலகம் எப்படி இருக்கும் என்பதையும் பார்க்கப்போகிறோம்.

அகதிகளின் கதை வலியும் ரணமும் மிக்கது. அதே சமயம் அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கும் நட்புக்கும் காதலுக்கும் வேட்கைக்கும் இடமிருக்கத்தான் செய்கிறது. என் வாழ்க்கை முற்றுபெற்றுவிட்டது என்று சொல்லும் அகதிகளைப் போலவே, என் வாழ்வை மீட்டெடுக்கப்போகிறேன் என்று சொல்லும் அகதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இருவரையுமே நாம் இங்கே சந்திக்கப் போகிறோம்.

அகதிகளின் கதை என்பது நம் காலத்து மனிதர்களின் கதை. சுருக்கமாகச் சொன்னால், நம் கதை. அகதிகளுக்கு ஒரு முகம் கொடுத்துப் பார்க்கவேண்டுமானால் நம்முடையதைக் கொடுக்கலாம். இன்று அகதிகளாக மாறியிருக்கும் அனைவருமே நேற்றுவரை இயல்பானவர்களாக இருந்தவர்கள்தாம். இதன் பொருள், இன்று இயல்பாக இருக்கும் யார் வேண்டுமானாலும் நாளை அகதிகளாக உருமாறலாம் என்பதுதான். இது அச்சுறுத்தல் அல்ல, அக்கறையுடன்கூடிய ஓர் எச்சரிக்கை மட்டுமே.

-சொந்தங்கள் வருவார்கள்

https://www.vikatan.com

 

Posted

நான் அகதி - போரும் அகதியும் - 2

 

 

போர் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் என்று யார் சொன்னாலும் ஹிப்பா அவர்களைப் பொதுவாக நம்புவதில்லை. உங்களுக்கு எப்படித் தெரியும், நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்களா, எனில் எங்கே என்று கேள்விகள் எழுப்பி உறுதி செய்துகொண்ட பிறகே அவர்களுடனான உரையாடலைத் தொடர்வது அவர் வழக்கம். அதற்கான காரணத்தை அவரே சொல்கிறார். ‘நான் பேசும் பலரும் நிறைய திரைப்படங்களைப் பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். திரையில் கண்டதை வைத்து போரைப் புரிந்துகொண்டு விட்டதாக அவர்கள் சொல்வதை என்னால் ஏற்கமுடியவில்லை.’
 
ஹிப்பா இராக்கைச் சேர்ந்த 16 வயது சிறுமி. ‘நான் சொல்கிறேன். போர் என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். ஒரு குண்டு அருகில் வந்து விழுந்தால் எப்படி இருக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். அப்போது அப்பா எங்களுடன் இல்லை. அவர் ஜோர்டான் சென்றிருந்தார். அங்கே உள்ள இராக்கியத் தூதரகத்தில் அவர் தங்கியிருப்பதாக அம்மா சொன்னார். நான், என் அம்மா, இரண்டு சகோதரர்கள் ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்தோம். நாங்கள் எல்லோரும் ஓர் அறையில் நெருக்கியடித்துப் பதுங்கியிருந்தோம். குண்டு விழும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒவ்வொருமுறை சத்தம் வரும்போதும் நாங்கள் எல்லோரும் காதைப் பொத்தியபடி  ஒருவரையொருவர் பயத்துடன் பார்த்துக் கொள்வோம். தலைக்கு மேலே விமானங்கள் பறந்துசெல்லும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. பூமி அதிரத் தொடங்கியது. நாங்கள் கட்டிலுக்குக் கீழே தவழ்ந்துசென்றோம். உலகம் எங்களைச் சுற்றி வெடித்துச் சிதறிக்கொண்டிருந்தது. நிச்சயம் இறந்துவிடுவோம் என்று நாங்கள் எல்லோருமே நம்பினோம். இந்த உணர்வுதான் போர். இதைத் திரைப்படம் ஒருபோதும் அளிக்காது.’

38p1.jpg

ஹிப்பாவும் அவர் குடும்பத்தினரும் அன்று உயிர் தப்பிவிட்டனர். ஆனால், அதற்காக நிம்மதியடைய  முடியவில்லை. பிரச்னை தனக்கோ தன் வீட்டுக்கோ அல்ல, தன் நாட்டுக்கு என்பது பிறகுதான் ஹிப்பாவுக்குப் புரிந்தது. அவருக்குத் தெரிந்து இராக் ஒரே ஒரு அதிபரைத்தான் சந்தித்திருக்கிறது. சதாம் உசேன். தீர்க்கமான பார்வையும் கம்பீரமான தோற்றமும் கொண்டவராக  வலம் வந்துகொண்டிருந்தார் சதாம். ஆனால், இராக் தாக்கப்படும் இந்நேரம் சதாம் ஊரில் இல்லை. அவர் அமெரிக்காவுக்கு பயந்து, தப்பியோடிவிட்டார் என்று பேசிக் கொண்டார்கள். இரானையும் குவைத்தையும் கசக்கிப் பிழியத் தெரிந்த, ஷியா முஸ்லிம்களின் கொடுங்கனவாகத் திகழ்ந்த சதாம் உசேனால் அமெரிக்காவை எதிர்கொள்ளமுடியவில்லை.

நிச்சயம் சதாம் ஒரு வெள்ளைப்புறா அல்ல. நினைத்துப் பார்க்கமுடியாத கொடூரமான குற்றங்களை அவர் இழைத்தவர் என்பதையும், வாய்ப்பு கிடைத்தால் அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் மீண்டும் இழைக்கத் தயங்காதவர் என்பதையும் இராக்கியர்கள் அறிவார்கள். சதாமுக்குத் தெரிந்த ஒரே மொழி வன்முறை. அவர் வழிபட்ட ஒரே கடவுள் ஆயுதம். இதுவும் அவர்களுக்குத் தெரியும். ஆனால், நல்லவரோ கெட்டவரோ சதாம் இந்நாட்டின் அதிபர் அல்லவா? அவரை விரட்டுவதற்கும் அவருடைய நாட்டின்மீது குண்டு போடுவதற்குமான உரிமையை அமெரிக்காவுக்கு யார் கொடுத்தார்கள்? அமெரிக்காவுக்கு முதலில் இராக்கில் என்ன வேலை?
38p2.jpg
காரணத்தைத் தயாராக வைத்திருந்தார் ஜார்ஜ் புஷ். செப்டம்பர் 11 தாக்குதலுக்குக் காரணம் சதாம் உசேன். அவர் பயங்கரப் பேரழிவு ஆயுதங்களை இராக்கில் பதுக்கி வைத்திருக்கிறார். உலகைக் காக்க சதாம் வீழ்த்தப்படவேண்டும், அவருடைய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். திட்டம் தயார், குற்றச்சாட்டும் தயார். ஆனால், ஆதாரம் மட்டும் இல்லை. ஆனால், அதைப் பற்றிக் கவலைப்படவில்லை புஷ்ஷின் அமெரிக்கா. தன்னுடைய எதிரிகளில் ஒருவரை அவர் பழிவாங்க விரும்பினார். செப்டம்பர் 11 கொடுத்திருக்கும் வாய்ப்பை அவர் இழந்துவிடத் தயாராயில்லை. புஷ்ஷின் தவறு சமகால அரசியல் வரலாற்றை எப்படியெல்லாம் பாதித்தது என்பதையும் இந்த ஒரு தவறால் எத்தனை லட்சம் பேர் கொல்லப்பட்டனர், எத்தனை லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டனர் என்பதையும் பின்னால் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

ஹிப்பாவுக்கு புஷ்ஷின் அரசியல் தெரியாது. தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லை. அவருடைய சந்தேகங்கள் எளிமையானவை. சதாமுக்கும் அமெரிக்காவுக்கும் சண்டை என்றால் என் வீட்டுக்கு அருகில் ஏன் போர் தொடங்கப்பட வேண்டும்? நடைபெறுவது அமெரிக்காவுக்கும் சதாமுக்குமான போர் மட்டுமன்று, ஷியாவுக்கும் சன்னிக்குமான போரும்கூட என்று சிலர் சொன்னார்கள். அதுவும் ஹிப்பாவுக்குப் புரியவில்லை. பார்ப்பதற்கு அச்சு அசல் ஒன்று போலிருக்கும் இந்த இருவரும் ஏன் ஒருவரையொருவர் விரோதிகளாகப் பார்த்துக் கொள்கிறார்கள்?  தெரியாது. ஆனால் ஹிப்பாவுக்குத் தெரிந்த ரகசியம் ஒன்றுண்டு. அவர் அம்மா ஒரு சன்னி. அப்பா ஒரு ஷியா. ஒரே வீட்டில்தான் குழந்தைகளோடு இருவரும் அமைதியாக வாழ்ந்துவருகிறார்கள். ஆனால், வீதிகளில் மட்டும் ஏன் இந்த இரு பிரிவினரும் மூலைக்கு மூலை அடித்துக்கொள்ள வேண்டும்? யார் ஷியா, யார் சன்னி என்பதை  எப்படி  இந்தக்  கலவரக்காரர்கள் கண்டுபிடிக்கிறார்கள்?

ஹிப்பாவுக்கு மட்டுமன்று, அமெரிக்கா வீசிய குண்டுக்கும் யார் ஷியா, யார் சன்னி என்று பாகுபடுத்தத் தெரியவில்லை. பாகுபாடின்றி அனைவரையும் அது சிதறிடித்துக் கொன்றது.  பயங்கரவாதிகளையும் சிவிலியன்களையும் மட்டுமல்ல, முதியோர்களையும் பெண்களையும் குழந்தைகளையும்கூடப் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை அந்தக் குண்டுகளுக்கு. அலுவலகம், பள்ளிக்கூடம், குடியிருப்பு, மைதானம் என்று எங்கே வீசினாலும் விழவேண்டியது, வெடிக்க வேண்டியது, மனிதர்களைச் சிதறடிக்கவேண்டியது. ஒரு வெடிகுண்டுக்கு இதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அமெரிக்காவுக்கோ இவை எது குறித்தும் அக்கறையில்லை. சதாமுக்கும்தான்.  எஞ்சியிருந்தவர்கள் இராக்கியர்கள்தாம். சதாமைத் தேடுவதா, அமெரிக்க குண்டுகளிடமிருந்து தப்பிப்பதா என்பதை முடிவு செய்யவேண்டிய பொறுப்பு அவர்களிடமே திணிக்கப்பட்டது.

38p3.jpg

ஹிப்பா இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள முயன்று திணறிக்கொண்டிருந்தார். அவருடைய தாய்நாடு பிளவுண்டு கிடந்தது. அதிகம் தென்படாத அமெரிக்கர்கள் இப்போது இராக் முழுக்க நிறைந்திருப்பதைக் கண்டார் ஹிப்பா. சதாமிடமிருந்து உங்களையெல்லாம் மீட்கவே வந்துள்ளோம் என்னும் அவர்களுடைய அறிவிப்பைக் கண்டு கோபத்தைக் காட்டிலும் சிரிப்பே வந்தது ஹிப்பாவுக்கு. என்னையும் என் அம்மாவையும் என் சகோதரர்களையும் கட்டிலுக்குக் கீழே உயிரைக் கையில் பிடித்தபடி பதுங்கியிருக்கச் செய்ததன்மூலம் எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்போகிறீர்களா? இதுதான் பாதுகாப்பு என்றால் சதாம் இதைவிடவும் கூடுதலான பாதுகாப்பை அல்லவா அளித்துக் கொண்டிருந்தார்? அப்பா எப்போது வந்து சேர்வார்? எங்கள் குடும்பம் எப்போது ஒன்றிணையும்?

அப்பாவின் நினைப்பு ஹிப்பாவைத் தூங்கவிடாமல் செய்திருக்கவேண்டும். அப்பா பாதுகாப்பாக இருக்கிறார், பயப்படாதே என்று அம்மா தினந்தோறும் கணக்கற்றமுறை திரும்பத் திரும்பச் சொல்லிவந்தது அச்சத்தை அதிகரிக்கவே செய்தது.  அம்மாவும்கூட உச்சகட்ட பயத்தில் இருப்பதுபோலவே இருந்தது. அதை மறைக்க அவர் செய்யும் ஒவ்வொரு பிரயத்தனமும் பரிதாபகரமாகத் தோல்வியடைவதை ஹிப்பா கண்டார். பாவம், என்னைப் போல் என் அம்மாவால் அழக்கூட முடியாது.

நாம் அப்பாவைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதைப்போல் அவரும் நம்மைப் பற்றிதான் எந்நேரமும் நினைத்துக்கொண்டிருப்பார் என்பது ஹிப்பாவுக்குத் தெரியும். அந்த நினைப்பே கொஞ்சம் ஆறுதல் அளிப்பதுபோல் இருந்தது. அப்பா தற்சமயம் இருப்பதாகச் சொல்லப்படும் ஜோர்டான் எப்படிப்பட்டது என்பது ஹிப்பாவுக்குத் தெரியாது. அங்கும் குண்டுகள் வந்து விழுந்துகொண்டிருக்கின்றனவா? அங்கு அப்பாவும் என்னைப் போலவே கட்டிலுக்குக் கீழேதான் ஒளிந்துகொண்டிருக்கிறாரா? `பயப்படாதீர்கள், அமைதியைக் கொண்டுவருவதே எங்கள் முதன்மையான நோக்கு’ என்று இங்குபோல் அங்கும் அமெரிக்கா முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறதா?

அப்பா பாதுகாப்பாக இருக்கிறார் என்பதில் ஹிப்பாவுக்குச் சந்தேகங்கள் இல்லை. ஒரே ஒரு ஒற்றைவரிச் செய்தியை மட்டும் அவர் அப்பாவுக்கு அனுப்பிவைக்க விரும்பினார். ‘அப்பா, எங்களை நினைத்துக் கவலைப்படாதீர்கள், நாங்கள் அனைவரும் நன்றாக இருக்கிறோம். எல்லாம் சரியானபிறகு நாம் அனைவரும் உறுதியாக மீண்டும் ஒன்றுசேர்வோம்.’
38p4.jpg
நம்பிக்கையின் உச்சிக்கு ஹிப்பாவும் கொந்தளிப்பின் உச்சிக்கு இராக்கும் சென்று சேர்ந்திருந்த சமயம் அது. சதாம் இல்லாததால்  சமூகத்தில் சமநிலை குலைந்து அராஜகவாதம் தழைக்கத் தொடங்கியிருந்தது. சதாம் இருந்த போதும் அராஜகவாதம் இருந்திருக்கிறது என்றாலும் அது அவரால் கட்டுப்படுத்தக்கூடியதாக இருந்தது. இப்போது இருப்பது அடக்கமுடியாத அல்லது அடக்குவதற்கு யாருமற்ற முழுமையான அராஜகவாதம். இது முற்றிலும் வேறான அச்சமூட்டக்கூடிய  வடிவம். சதாமை அகற்றினால் இப்படியொரு பூதம் கிளம்பிவரும் என்று அமெரிக்காவுக்கும் தெரியும்தான். ஆனால், அவர்களுடைய உள்நாட்டுப் பிரச்னையில் எப்படி அமெரிக்கா தலையிடும்?

சதாம் இருந்தவரை தலையைக் கவிழ்த்திருந்த ஷியாக்களுக்குப் புதிய வெற்றிடம் அளவுகடந்த உற்சாகத்தை அளித்தது. ஆம், நான் ஒரு ஷியா. இனி இது என் நிலம் என்று அவர்கள் துப்பாக்கியைத் தூக்கித்  தோளில் போட்டுக் கொண்டு புது மிடுக்குடன் நடமாடத் தொடங்கினர். ஆக்கிரமிக்க வந்த அமெரிக்கர்களை அல்ல, சன்னிக்களையே முதன்மை விரோதிகளாக அவர்கள் கண்டனர். ஒவ்வொரு சன்னியும் சதாம். ஒவ்வொரு சதாமும் அடக்குமுறையின் அடையாளம்.  அமெரிக்கா சதாமுக்கு எதிராகப் போர் தொடுத்திருந்த சமயத்தில் ஷியாக்கள் சன்னிக்கு எதிரான போர்ப் பிரகடனத்தை வெளியிட்டார்கள்.

ஹிப்பா இந்த இரு போர்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டார். உன் குடும்பத்தில் சன்னிக் குருதி கலந்திருக்கிறது, நீ வெளியேறவேண்டும் என்று முகமூடி அணிந்த ஷியாக்கள் வீடு புகுந்து மிரட்டினார்கள். மிரட்டல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொல்லும்வெறியாக மாறியபோது ஹிப்பாவின் குடும்பம் பாக்தாத்திலிருந்து வெளியேற முடிவு செய்தது. அவர்களைப் போலவே நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இராக்கிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தனர். பிறந்து  வளர்ந்த  நாட்டை விட்டுப் பிரிந்து செல்வதில் அளவு கடந்த வருத்தம்தான் என்றாலும் ஒருவழியாக அப்பாவோடு இணைந்து விடப்போகிறோம் என்னும் நம்பிக்கையோடு இராக்கை விட்டு வெளியேறினார் ஹிப்பா.

38p5.jpg

இது நடந்தது ஜூலை 2003-ல். அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு தொடங்கி சில மாதங்கள் கழிந்திருந்தன.  ஹிப்பாவின் குடும்பம் பாதுகாப்பாக ஜோர்டான் வந்து சேர்ந்தது. அப்பா அவர்களுக்காக அங்கே காத்திருந்தார். அவரைக் கண்டதும் எல்லாத் துயரங்களும் மறைந்துவிட்டதைப் போலிருந்தது ஹிப்பாவுக்கு. இந்தப் புதிய நாட்டில் ஒரு புது வாழ்வு மலரப்போகிறது. இங்காவது போர் மூளாதிருக்கவேண்டும். குழு மோதல், பயங்கரவாதம், மதவாதம், அமெரிக்கா எதுவும் எட்டிப் பார்க்காமல் இருக்கவேண்டும். இந்த எளிய கனவை நிறைவேற்றி வைப்பதில் கடவுளுக்கு எந்தச் சிக்கலும் இருக்காது அல்லவா?

ஆனால், அப்பாவால் இராக்கை மறக்க முடியவில்லை. ஆயிரம் குறைகள் இருந்தாலும் அது நம் நாடு, நாம் அங்கேதான் போயாகவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். 2006-ம் ஆண்டு அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு அவர் பாக்தாத் கிளம்பினார். அங்கிருந்து தன் குடும்பத்தைத் தொடர்புகொள்ளவும் செய்தார். `நீங்கள் இருந்ததைவிடவும் இப்போது நிலைமை பரவாயில்லை, விரைவில் எல்லாம் சுமுகமாகிவிடும். நீங்கள் எல்லோருமே பழையபடி பாக்தாத் திரும்பிவிடலாம்’ என்றார்.

நாள்கள் செல்லச் செல்ல ஜோர்டானில் வாழ்வது கடினமாகிக்கொண்டே இருந்தது ஹிப்பாவின் குடும்பத்துக்கு. சதாம் கவிழ்ந்தபோதே அப்பாவுக்கு வேலை போய்விட்டதை ஹிப்பா அறிவார். சேமிப்பு என்று எதுவும் இல்லை. இப்படியே போனால் பிறகு உணவுக்கே வழியில்லாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம். பேசாமல் பாக்தாத்தில் இருக்கும் நம் வீட்டை விற்றுவிடலாம் என்றார் அப்பா. அங்கே ஒவ்வொரு சொந்தக்காரரின் வீடாக மாறி மாறி அவர் தங்கிக்கொண்டிருந்தார். சில வாரங்களில் தன் முதல் மகனை அவர் பாக்தாத்துக்கு வரவழைத்துக் கொண்டுவிட்டார். வீட்டை விற்றுக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு விட்ட இடத்திலிருந்து மீண்டும் வாழ்வைப் புதுப்பித்துக்கொண்டுவிட முடியாதா என்ன?

மே 2016 வாக்கில் ஒரு தொலைபேசி வந்தது. ஹிப்பாவால் அந்தச் செய்தியை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளக்கூட முடியவில்லை. அப்பாவை யாரோ சிலர் கடத்தி விட்டார்களாம். பிறகு எங்கள் சொந்தக்காரர்களை அழைத்துப் பணம் கேட்டார்களாம். அவர்கள் தரவில்லை போலும். பிறகு அண்ணாவைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். பிணவறைக்கு வந்து உன் அப்பாவைப் பெற்றுக்கொள் என்று சொல்லித் துண்டித்திருக்கிறார்கள். விழுந்தடித்து ஓடியிருக்கிறார் அண்ணன். பிணவறையில் அப்பா இல்லை. ஆனால், அறைக்கு வெளியில் இருந்திருக்கிறார். கீழே தரையில் படுத்துக்கொண்டிருந்தாராம். தலையின் பின்பக்கத்திலிருந்து ரத்தம் வடிந்துகொண்டிருந்ததை அண்ணா பார்த்திருக்கிறார். அப்பாவின் ரத்தம். நெற்றிப்பொட்டில் சுட்டிருக்கிறார்கள்.

அண்ணனால் திரும்பிவரவும் முடியவில்லை. நீ உள்ளே வந்ததற்கே அனுமதி வாங்கவில்லை, எப்படி வெளியில் அனுப்புவது என்று அதிகாரிகள் கடிந்துகொண்டு தடுத்து நிறுத்திவிட்டார்கள். அவரை இப்போதைக்குப் பார்க்க முடியாது. அப்பாவை எப்போதுமே பார்க்க முடியாது.  குடும்பம் நிரந்தரமாகச் சிதைந்துவிட்டது. தாய்நாடு என்றொன்று இனி இல்லை. கையில் பணமில்லை என்பதால் ஜோர்டானில் தங்கியிருப்பது சாத்தியமில்லை. வீடு இல்லை. வருமானம் இல்லை. வாழ்க்கை இல்லை. எதிர்காலம் என்றொன்று இல்லை.

இனி அவர் ஓர் அகதி. தன் அப்பாவின் புகைப்படத்தைக் கையில் ஏந்தியபடி ஹிப்பா சொல்கிறார். ‘ஒரு போர் என்னவெல்லாம் செய்யும் என்பதை உங்களால் கற்பனைகூடச் செய்ய முடியாது. அதேபோல், ஓர் அகதியாக இருப்பது என்றால் என்னவென்பதையும் உங்களால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது.’

- சொந்தங்கள் வருவார்கள்


38p6.jpg

இராக் போர்:  நான்கு உண்மைகள்

மார்ச் 2003 அமெரிக்கா இராக்கை ஆக்கிரமித்தது. கிட்டத்தட்ட 2 லட்சம் இராக்கிய சிவிலியன்கள் இராக் போரில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

போர் தொடங்கிய மூன்றே ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50 லட்சம் இராக்கியர்கள் தங்கள் வீடுகளிலிருந்து இடம்பெயரவேண்டியிருந்தது.

சதாம் உசேன் ஒரு மோசமான சர்வாதிகாரியாக இருந்தபோதும் அவருடைய வளர்ச்சியில் அமெரிக்காவின் பங்கு கணிசமானது. அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் போயிருந்தால் அவரால் தனது அரசியல், பொருளாதார மற்றும் ராணுவ பலத்தை வளர்த்துக்கொண்டிருக்க முடியாது.

இராக் போருக்கு அமெரிக்கா வைத்த பெயர், ஆபரேஷன் இராக் ஃப்ரீடம். ஆனால், சதாமின் கரங்களில் அனுபவித்ததற்குச் சற்றும் குறைவில்லாத துயரங்களை அமெரிக்காவின் ஆதிக்கத்தில் இராக்கியர்கள் அனுபவிக்கநேர்ந்தது.

https://www.vikatan.com

Posted

நான் அகதி! - 3

 

 

துருப்பிடித்துப்போன தனது இரும்புப் படுக்கையிலிருந்து ஒருமுறை தலையை மட்டும் உயர்த்திப் பார்த்தார் ஜேப்மங்கோ ஜூலியன். அவரால் எழுந்திருக்க முடியவில்லை. வயிற்றில் இருந்த பாரம் அவரை அழுத்திப் பின்னுக்குச் சாய்த்தது. குழந்தை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், தற்சமயம் ஒரு பாரமாகத்தான் அதைக் கருதவேண்டியிருக்கிறது. இந்த முகாமில் நானே ஒரு பாரம்தான் என்னும்போது நான் பிரசவிக்கும் குழந்தையை யார் ஆனந்தத்துடன் அள்ளியெடுத்து அணைத்துக்கொள்ளப் போகிறார்கள்?

ஜேப்மங்கோவின் தலைக்குப் பின்னால் மெல்லிய திரைச்சீலை ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. பெயரளவிலான ஒரு தடுப்பு அது. ஜேப்மங்கோவைப் போலவே வேறு பல கர்ப்பிணிகள் அந்தத் தடுப்புக்குப் பின்னால் அதே போன்ற துருப்பிடித்த கட்டில்களில் வரிசையாகப் படுக்க வைக்கப்பட்டிருந்தார்கள். சிலர் முனகிக் கொண்டிருந்தனர். சிலர் வலி பொறுக்கமாட்டாமல் வாய்விட்டு அலறிக்கொண்டிருந்தனர். உதவி, உதவி என்று சத்தம்போட்டுக் கத்திக்கொண்டிருந்தார்கள் இன்னும்  சிலர். யாரும் பொருட்படுத்தி ஓடிவந்ததைப்போல் தெரியவில்லை. யாரும் எதையும் பொருட்படுத்தவேண்டிய அவசியமில்லை அங்கு. ஏற்கெனவே நடுங்கிக்கொண்டிருந்த ஜேப்மங்கோ கிலியுடன் தன் கண்களை மூடிக்கொண்டார். என் குழந்தை இந்தக் குழப்பங்களுக்கும் புறக்கணிப்புகளுக்கும் மத்தியிலா பிறக்கவேண்டும்? 

28p1.jpg

அவர் தங்கியிருந்தது டான்சானியாவின் மேற்குப் பகுதியில் அமைந்திருந்த நியாருகூசு என்னும் அகதி முகாமில். முகாம் என்று அழைப்பதைவிட கூடாரங்களின் தொகுப்பு என்று அந்த இடத்தை அழைப்பது பொருத்தமாக இருக்கும். உண்மையில் அது ஒரு காட்டுப் பகுதி. காளான்களைப் போல் முளைத்திருந்த கணக்கற்ற கூடாரங்களில் 1,30,000 அகதிகள் எறும்புக் கூட்டங்களைப்போல் தங்கியிருந்தனர். அவர்களில் ஜேப்மங்கோவைப்போல் பிரசவசத்துக்குத் தயாராக இருப்பவர்களை மட்டும் தனியே பிரித்தெடுத்து ஒரு கூடாரத்தில் தொகுத்திருந்தார்கள். அந்தக் கூடாரத்தை மருத்துவமனை என்றும் அழைக்கலாம்.

ஜேப்மங்கோ பிறந்தது, வளர்ந்தது எல்லாம் ஆப்பிரிக்க நாடான புருண்டியில். உலகின் ஏழை நாடுகள் என்று பட்டியலிட்டால் அதில் புருண்டி நிச்சயம் அழுத்தந்திருத்தமாக இடம்பெற்றிருக்கும். முதல் உலகப் போரில் ஜெர்மனி தோற்கடிக்கப் படும்வரை அந்நாட்டின் காலனியாக இருந்தது புருண்டி. பின்னர் பெல்ஜியத்தின் ஆதிக்கத்தின்கீழ் வந்துசேர்ந்தது. ஆள்கள் மாறினார்களே தவிர, அடுக்குமுறை மாறவில்லை. மேலதிகம் வலுப்படவே செய்தது. உலகளவில் அதிக எண்ணிக்கையிலான அகதிகளைத் தோற்றுவித்த பெருமை காலனியாதிக்கத்துக்கு உண்டு. ஒரு நாட்டை ஆக்கிரமித்து அந்நாட்டின் வளங்களை உறிஞ்சும்போது தவிர்க்கவியலாதபடிக்கு அந்நாட்டு மக்கள் கடும் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகிறார்கள். அப்போது தவிர்க்கவியலாதபடிக்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். காலனியாதிக்கம் முடிவுக்குவந்து விடுதலை கிடைத்தபிறகும் பல நாடுகளில் வன்முறைப் போராட்டங் களும் குழு மோதல்களும் நடை பெறுவதையும் அவற்றின் காரணமாக அகதிகள் லட்சக்கணக்கில் பெருகுவதையும் நாம் பார்க்கிறோம். 1947 சுதந்திரத்துக்குப் பிறகு நடைபெற்ற இந்தியப் பிரிவினை என்பது ஓர் உதாரணம் மட்டுமே. 

புருண்டியும் இதேபோன்ற வன்முறையைதான் சந்தித்தது. பெல்ஜியத்தின் பிடியில் கடும் 28p3.jpgஒடுக்குமுறையை அனுபவித்துவந்த புருண்டி மக்கள் 1962-ம் ஆண்டு விடுதலைபெற்றனர். ஆனால், இனக்குழு மோதல் வடிவில் இன்னொரு வன்முறை அத்தியாயம் அங்கே தொடங்கியது. அங்கே பெரும்பான்மையாக இருப்பவர்கள் ஹூட்டு இன மக்கள். சிறுபான் மையினர், டுட்ஸி இனத்தவர்கள். இருவருமே கறுப்பினத்தவர்கள். இருவருமே பண்டு மொழி பேசுபவர்கள். இருவருக்குமே பிரெஞ்சு மொழி நன்றாகத் தெரியும். இருவருமே கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டவர்கள். ஒருவர் ஹூட்டுவா, டுட்ஸியா என்பதைக் கண்டறிவது அவ்வளவு சுலபமல்ல. அச்சு அசல் ஒன்றுபோலவே இருப்பார்கள். அந்நியர்களான நாம் மட்டுமல்ல, இந்த இரு குழுவினரின் மரபணுக்களையும் பரிசோதித்த மருத்துவ ஆய்வாளர்கள்கூட இந்த இருவருக்குமிடையிலான வேறு பாட்டைக் கண்டடைவது கடினம் என்னும் முடிவுக்கே வந்து சேர்ந்துள்ளனர். கண்டிப்பாக இருவரையும் வேறுபடுத்தியே ஆகவேண்டுமானால் ஓர் அம்சத்தைக் குறிப்பிடலாம். ஒரு ஹூட்டுவைவிட ஒரு டுட்ஸி சில அங்குலங்கள் உயரமாக இருப்பார், அவ்வளவுதான்.

ஆனால், இந்த இரு குழுக்களுக்கும் இடையிலான பகைமையும் அதன் காரணமாகப் பெருக்கெடுத்து ஓடிய ரத்த ஆறும் வரலாறு காணாதது.   1972-ம் ஆண்டு டுட்சி இனக்குழு மக்கள் கிட்டத்தட்ட 2 லட்சம் ஹூட்டுக்களைக் கொன்றுகுவித்தனர். இருபதாம் நூற்றாண்டு ஆப்பிரிக்கா சந்தித்த முதல் இன அழிப்புச் சம்பவம் இது. இரண்டாவது இனஅழிப்பு   1994-ம் ஆண்டு நடைபெற்றது. இந்த முறை ஹூட்டுக்கள் ஒன்றுதிரண்டு 10 லட்சம் டுட்ஸிக்களைக் கொன்று பழி தீர்த்துக்கொண்டனர். இரண்டு முறையும் லட்சக்கணக்கான ஹூட்டுக்களும் டுட்ஸிக்களும் புருண்டியிலிருந்து வெளியேறி, பக்கத்து ஆப்பிரிக்க நாடுகளில் அடைக்கலம் புகவேண்டியிருந்தது.

28p4.jpg

இனக்குழு மோதல் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் அரசியல் சிக்கல்கள். தற்போது புருண்டியின் அதிபராக இருக்கும் பியரி குருன்ஸிஸா 2005 முதல் அந்தப் பதவியில் விடாப்பிடியாக அமர்ந்திருக்கிறார். அவரை வெளியேறச் சொல்லி அந்நாட்டு மக்கள் பலமுறை பலவிதமான முறைகளில் போராடிப் பார்த்துவிட்டார்கள். ஒவ்வொரு போராட்டத்தையும் மிருகத்தனமாக ஒடுக்கியது அரசு. மூன்றாவது முறையாக, 2015-ம் ஆண்டு குருன்ஸிஸா அதிபராக முன்னிறுத்தப்பட்டபோது மீண்டும் வலுவான எதிர்ப்புகள் கிளம்பின. ராணுவப் புரட்சியைக்கூட முயன்று பார்த்தார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்களே தவிர ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. அரசு ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்ததுதான் மிச்சம். இதன் காரணமாகவே லட்சக்கணக்கான புருண்டி மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறவேண்டியிருந்தது.
28p2.jpg
ஜேப்மங்கோ அவர்களில் ஒருவர். இனக்குழு மோதல் எப்போதும் மீண்டும் வெடிக்கலாம். அல்லது அரசு இயந்திரமே ஏதோ காரணத்தை முன்னிட்டு நேரடியாக வன்முறையில் இறங்கலாம். இரண்டில் ஒன்று அல்லது இரண்டுமே நடப்பதற்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளுமே நீடித்த நிலையில் 1996-ம் ஆண்டு ஜேப்மங்கோ தன் கணவனுடன் இணைந்து புருண்டியிலிருந்து தப்பியோடினார். உயிர் பறிபோவதைவிட அவர் அதிகம் பயந்தது மானம் பறிபோய்விடக்கூடாது என்றுதான். ஒன்று, இரண்டு என்றல்ல, நூற்றுக்கணக்கான பெண்கள் கடத்திச்செல்லப்படுவதையும் கூட்டாகப் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதையும் பற்றிய செய்திகள் முடிவில்லாமல் பெருகிக்கொண்டே சென்றன.

போர், கலவரம், இனக்குழு மோதல் என்று எது நடைபெற்றாலும் முதல் தாக்குதல் ஒரு பெண்ணின் உடலின்மீதுதான் என்பது ஜேப்மங்கோவுக்குத் தெரியும். இப்படிப்பட்ட காரணங்கள் எதுவும் தேவையில்லாமலும் பாலியல் வன்முறை நடக்கத்தான் செய்கிறது என்றாலும், பெரிய அளவில் சமநிலை குலையும்போது அதுவரை தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் ஆண்களும் வெறியுடன் பெண்கள்மீது பாய்வதை ஜேப்மங்கோ கண்டிருக்கிறார். ஏற்கெனவே பசியிலும் விதவிதமான நோய்களிலும் செத்து விழுந்துகொண்டிருக்கும் பெண்கள், ஆண் என்னும் நோய்க்கிருமியைக் கண்டு இன்னும் அஞ்சவேண்டியிருக்கிறது. வளர்ந்த பெரிய நாடுகளிலேயே இந்தக் கிருமி பல்கிப் பெருத்திருக்கிறது எனும்போது பெருமளவில் நிலவுடைமைச் சமூகமாகவே இருக்கும் ஓர் ஆப்பிரிக்க நாட்டில் பெண் எப்படிப் பாதுகாப்பாக இருந்துவிட முடியும்? 

எங்கே போகிறோம் என்றுகூடத் தெரியாமல் ஜேப்மங்கோவும் அவர் கணவனும் ஓடிக்கொண்டிருந்தார்கள். புருண்டி அவர்களை விட்டுச் சிறிது சிறிதாக மறைந்துகொண்டிருந்தது. ஹூட்டு, டுட்ஸி ஆகியோரோடு துவா மக்களும் கிட்டத்தட்ட 500 ஆண்டுகளாக புருண்டியில் வாழ்ந்துவந்திருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டு வரை புருண்டி ஒரு சுதந்தர நாடாகவே இருந்தது. காலனியாதிக்கம் கொடியது, தெரியும். ஆனால், சொந்த மக்களால் ஆளப்படும்போதுகூட ஏன் புருண்டி இப்படியொரு சீரழிவைச் சந்திக்க வேண்டும் என்று ஜேப்மங்கோவுக்குப் புரியவில்லை. இது என் நிலம், என் மக்கள் என்று ஒரு தலைவர் கருதமாட்டாரா? என் நிலத்தில் வன்முறையை அனுமதிக்கமாட்டேன் என்று அவர் உறுதியாக நிற்கமாட்டாரா? பிறகெதற்கு அவருக்கு அதிகாரம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது?  காட்டாட்சிதான் எங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு ஓர் அதிபர் எதற்கு? தேர்தல், குடியரசு, ஜனநாயகம் என்றெல்லாம் வீணாக ஏன் பேசிக் கொண்டிருக்க வேண்டும்? ராணுவ சர்வாதிகார ஆட்சியை வெளிப் படையாக அறிவித்துவிடலாமே?

28p5.jpg

எதிர் இனக்குழுவைச் சேர்ந்தவர் களால் மட்டும்தான் ஆபத்து வரும் என்றில்லை, அரசும்கூட  நேரடியாகப் பெண்களை வேட்டையாடத் தயங்குவதில்லை. பல பகுதிகளில் தடி, கத்தி, துப்பாக்கி ஆகியவற்றை ஏந்தியபடி ஒரு பெரிய குழு எங்கிருந்தோ புறப்பட்டு வரும். மக்கள் குடியிருப் புகளில் புகுந்து இளம் பெண்களையும் சிறுமிகளையும் வெளியில் இழுத்துப்போட்டுக் கூட்டாகப் பாயும். கிளம்புதற்கு முன்னால் கொன்றுவிட்டு உடல்களை வீசியெறிவதும் வழக்கம்தான். ஆளுங்கட்சியின் இளைஞர் படையைச் சேர்ந்த வீரர்களை இந்தக் குழுவில் அடிக்கடி காணமுடியும். சில சமயம் அவர்களை மட்டுமே கொண்டிருக்கும் குழுக்களும் கிளம்பிவந்து பெண்களை பலாத்காரம் செய்வது வழக்கம்.

காவல்துறையினரிடம் புகார் கொடுக்க முடியாது. குற்றமிழைத் தவர்களைத் தெளிவாக அடையாளம் காட்ட முடியும் என்றாலும், பலனில்லை. நம் தலைவரின் செயல்வீரர்கள்மீதா அபாண்டமாகக் குற்றம் சுமத்துகிறாய் என்று,  பாதிக்கப்பட்ட பெண்களையே வசைபாடும் காவலர்கள் அங்கே அநேகம் பேர். ஆம், பத்திரிகைகள் இருக்கின்றன. தனியார் தொலைக்காட்சிகள் இருக்கின்றன. ஆனால் அவை, இத்தகைய ‘நெருக்கடியளிக்கும் செய்திகளை’ வெளியிடுவதில்லை. செய்தி வெளியிட்ட மறுநிமிடமே ஒரு ஜீப் புழுதிபறக்க அலுவலகத்துக்கு முன்னால் வந்து நின்றால் உதவுவதற்கு யார் இருக்கிறார்கள்? அரசு தலையிடுவதற்கு முன்னால் சுயதணிக்கை செய்துகொள்வது பாதுகாப்பானதல்லவா?

டான்சானியாவில் உள்ள டபிலா என்னும் அகதி முகாமில் ஜேப்மங்கோ தஞ்சமடைந்தார். ஒரு முதலையைப் போல அந்த முகாம் அவர்களை உள்ளிழுத்துக்கொண்டது. முகாமின் விதிகள், கட்டுப்பாடுகள், சரி தவறுகள் அனைத்தையும் அவர் விரைவில் புரிந்துகொண்டார். அங்கே ஜேப்மங்கோவுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. முகாமின் குழந்தைகள். 2005-ம் ஆண்டு புருண்டி அவர்களை அழைத்தது. எல்லாம் சரியாகிவிட்டது, நிறைய பேர் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள், நீயும் வந்துவிடேன் ஜேப்மங்கோ என்று நண்பர்களும் உறவினர்களும் அழைத்தபோது மனம் பொறுக்கவில்லை அவருக்கு. சொர்க்கத்தின் கதவுகள் தனக்காகத் திறக்கப்பட்டிருப்பதைப் போல் உணர்ந்தார். அடக்குமுறை, பலாத்காரம், கொலை, ரத்த ஆறு எல்லாம் நொடியில் மறந்துபோனது. என் தாய்நாட்டிலிருந்து வரும் குரலுக்கு என்னால் மரியாதை செலுத்தாமல் இருக்கமுடியுமா?

28p6.jpg

தவிரவும் என் குழந்தைகள் புருண்டியில் அல்லவா கால் பதித்து நடக்கவேண்டும்? ஆம் ஆயிரம் குறைகள் இருக்கின்றன, எங்குதான் பிரச்னை இல்லை? இதோ இந்த முகாம் என்ன அமைதிப் பூங்காவா? இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த எனக்கு இங்குள்ள ஆயிரமாயிரம் பிரச்னைகள் தெரியாதா என்ன? என் கண்மணிகளே அம்மாவின் நாட்டை நீங்கள் விரைவில் பார்க்கப்போகிறீர்கள் என்று வழி முழுக்க ஆயிரம் முறை சொல்லியபடி, ஜேப்மங்கோ புருண்டி திரும்பினார்.  ஜேப்மங்கோவின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை.

மேலும் இரு குழந்தைகள் பிறந்தன. ஆப்பிரிக்காவில் இது இயல்பானது. ஐந்து குழந்தைகளுக்கு மேல் பிரசவிக்கும் பெண்கள் பலரை ஆப்பிரிக்காவில் இயல்பாகக் காணமுடியும். குழந்தை பிறப்பைத் தடுப்பது இயற்கைக்கு விரோதமானது என்னும் நம்பிக்கை ஒரு காரணம். பிறக்கும் குழந்தைகளில் எத்தனை பேர் தாக்குப்பிடிப்பார்களோ தெரியாது என்னும் அச்சம் இன்னொரு காரணம். பிரசவத்தின்போது மரணமடையும் குழந்தைகளின் எண்ணிக்கை அங்கே அதிகம். மீறிப் பிழைப்பவர்கள் பெருகும் தொற்று நோய்களையும் ஆட்கொல்லிக் கிருமிகளையும் வென்றாகவேண்டும். அப்படியும் பிழைப்ப வர்களை இனக்குழு மோதல் இழுத்துக் கொண்டுவிடுகிறது. அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பதன்மூலம் அதிக குழந்தைகளைப் பிழைத்திருக்கச் செய்யமுடியும் அல்லவா?

இதற்கிடையில் ஜேப்மங்கோ எதிர்பாராததும் நடந்தது.  புருண்டியின் நிலைமை மீண்டும் மோசமடைந்தது. அம்பையும் வில்லையும் தூக்கிக்கொண்டு வீதிகளில் மக்கள் திரண்டார்கள். கற்களும் கம்புகளும் காற்றில் பறந்தன. கலவரத்தை அடக்குகிறேன் என்று சொல்லி மேலும் தீயை அள்ளி வீசியது அரசுப் படை.  அழுது வீங்கிய முகத்துடன் மீண்டும் ஓட ஆரம்பித்தார் ஜேப்மங்கோ. இந்த ஓட்டம் நிற்கப்போவதேயில்லையா? மீண்டும் அகதி முகாமா? அது மட்டும்தான் எனக்கு இனி நிரந்தரமா? இந்த முறை அதே டான்சானியாவில் நியாருகூசு முகாமில் இடம் கிடைத்தது. இந்தமுறை ஜேப்மங்கோவின் நம்பிக்கை தளர்ந்து போயிருந்தது. கனவில் மட்டுமே தோன்றக்கூடிய ஓரிடமாக புருண்டி மாறிப்போனது. காலம் உருண்டோடியது.  ஜூலை 2016. இன்னொரு உயிரை முகாமின் கணக்குக்குச் சேர்க்கவேண்டிய நேரம் நெருங்கியது. அழுகுரல்களுக்கும் அலறல்களுக்கும் மத்தியில்  அசைந்தாடும் திரைச்சீலையைக் கண்டபடி கண்களை மூடினார் ஜேப்மங்கோ. என் ஐந்தாவது குழந்தை மீண்டும் முகாமில்தான் பிறக்கப்போகிறதா?

இரு தலைகளும் இருபது விரல்களும் வெளியில் வந்தன. கண்விழித்தவுடன் ஜேப்மங்கோவுக்குத் தகவல் சொன்னார்கள். ‘நான் இரட்டைக் குழந்தைகளையா பெற்றிருக்கிறேன்?’ என்று சொல்லியபடி வெடித்து அழ ஆரம்பித்தார் ஜேப்மங்கோ. கொசு வலைக்குள் இரண்டு குழந்தைகளும் உறங்கிக்கொண்டிருந்தன. இரு சிறிய அகதிகள்.

-சொந்தங்கள் வருவார்கள்

https://www.vikatan.com

Posted

நான் அகதி! - 4

 
 
 
நான் அகதி - பயணம் ஆரம்பம் - 1நான் அகதி - போரும் அகதியும் - 2நான் அகதி! - 3நான் அகதி! - 4நான் அகதி! - 5 - யார் அகதி?நான் அகதி! - 6 - வேட்டையாடு விளையாடுநான் அகதி! -7 - அகதிகளால் என்ன லாபம்?நான் அகதி - 8 - வெறுக்கத்தக்க அமைதிநான் அகதி - 9 - அகதிகளை உற்பத்தி செய்வது எப்படி?நான் அகதி! - 10 - ரத்தமும் அவமானமும்!நான் அகதி! - 11 - ஹிட்லரின் வதை முகாம்கள்நான் அகதி! - 12 - சபிக்கப்பட்ட பயணம் - 1939நான் அகதி! - 13நான் அகதி! - 14 - மனிதர்கள் படைத்த உலகம்!

 

‘தினமும் உணவுவேளை வரும்போது முகாமில் உள்ள அகதிகள் வரிசையாக உங்களிடம் வருவார்கள்.  ஒவ்வொருவரிடமும் ஓர் அடையாள  அட்டை இருக்கும். அதில் அவருடைய பெயரும் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறிக்கப்பட்டிருக்கும். அதை வாங்கிப் பாருங்கள். எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை உணவுப்பொட்டலங்களை அவர்களுக்கு வழங்கவேண்டும். குழந்தைகளுக்கு மட்டும் ஒரு பழச்சாறு பாக்கெட் கூடுதலாக அளிக்கவேண்டும். உங்களால் இதைச் செய்யமுடியும், இல்லையா?’

இதைவிட எளிமையான ஒரு வேலை இருக்காது என்று நினைத்துக்கொண்டார் செல்சியா ரோஃப். கிரீஸில் உள்ள ஓர் அகதி முகாமில் பணியாற்றுவதற்காக அவர் வந்திருந்தார். அடிப்படையில் அவர் ஒரு பத்திரிகையாளர். அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியைச் சேர்ந்தவர்.  ஒரு  தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்திவருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்துகொண்டிருக்கிறார். அகதிகள் பிரச்னை குறித்து ஓராண்டுக்காலம் கட்டுரைகள் எழுதிவந்திருக்கிறார்.

28p1.jpg

அகதிகள் யார், அவர்கள் எப்படி உருவாகிறார்கள், அவர்கள் ஏன் தங்கள் தாய்நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள், முகாம்களில் அவர்களுடைய வாழ்க்கை எப்படியிருக்கும் என்பது தொடங்கி ஏராளமான தரவுகளை அவரால் இணையத்திலிருந்து பெறமுடிந்தது. ரோஹிங்கியா முஸ்லீம்கள் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டுமா? சிரிய அகதிகள் குறித்த அறிமுகம் வேண்டுமா? ஆப்கானிஸ்தானிலும் இராக்கிலும் நடைபெற்ற போர்கள் குறித்த பின்னணி தெரியவேண்டுமா? பிரச்னையே இல்லை. இணையத்தைத் திறந்தால் செய்திகளும் கட்டுரைகளும் ஆய்வுக் குறிப்புகளும் புள்ளிவிவரங்களும் மலை மலையாகக் கொட்டிக் கிடந்தன. புகைப்படக் கட்டுரைகளுக்கும் ஆவணப் படங்களுக்கும்கூடக் குறைவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அதனால் எல்லாப் பத்திரிகையாளர்களையும்போல் செல்சியாவுக்கும் அகதிகள் குறித்த தரவுகள் திரட்டுவதிலும் உருக்கமான கட்டுரைகளை எழுதுவதிலும் சிக்கல்கள் எதுவும் இருக்கவில்லை.

இவ்வளவு மாய்ந்து மாய்ந்து எழுதுகிறோமே, நாம் ஏன் ஓர் அகதி முகாமை நேரில் சென்று 28p3.jpgபார்வையிடக்கூடாது என்று ஒரு நாள் செல்சியாவுக்குத் தோன்றியது. வெறுமனே பார்வையிடுவதைவிட முகாமில் சிறிது காலம் பணியாற்றுவதன்மூலம் அகதிகளை இன்னும் நெருக்கமாக அறிந்துகொள்ள முடியும் அல்லவா? கிரீஸ் நாட்டின் தலைநகரமான ஏதென்ஸிலிருந்து இரண்டு  மணி நேரப் பயணத்தில் அமைந்திருந்த ரிட்சோனா என்னும் அகதி முகாம் செல்சியாவின் உதவியை ஏற்றுக்கொள்ள முன்வந்தது.

அந்த முகாமில் மொத்தம் 900 அகதிகள் இருந்தனர். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் சிரியர்கள். மற்றவர்கள் இராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் போக, பாலஸ்தீனிய மற்றும் குர்தி அகதிகளும்கூட இருந்தனர். ஒரு காலத்தில் ராணுவ முகாமாக இருந்த அந்த இடம் இப்போது அகதி முகமாக மாற்றப்பட்டிருந்தது. மின்சாரம் கிடையாது. தண்ணீர் கிடைப்பது சிரமமாக இருந்தது. முரட்டுத் துணிகளைக் கொண்டு கூடாரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. தரை சீரற்றதாக இருந்தது. களிமண்ணையும் குப்பைகூளங்களையும் அள்ளியெடுத்துவந்து அடுப்புகளை உருவாக்கியிருந்தார்கள் அகதிகள். அடுப்புக்கு அருகிலேயே படுத்து உறங்கினார்கள்.

முதல்முறை அந்த முகாமுக்குள் அடியெடுத்து வைத்தபோதே செல்சியாவுக்குத் தெரிந்துவிட்டது. நான் இதுவரை புத்தகங்களிலும் இணையத்திலும் செய்தித்தாள்களிலும் பார்த்த முகாம் இதுவல்ல. இங்குள்ள மனிதர்கள் வேறு உலகைச் சேர்ந்தவர்கள். இந்த உலகம் இதுவரை நான் காணாதது. எலிகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தன. சில குழந்தைகள் எலிகளைத் துரத்திக்கொண்டிருந்தார்கள். அழுக்கு உடைகளை அணிந்த சிறுவர்கள் ஆர்ப்பாட்டமாகக் கூச்சலிட்டுக் கொண்டிருந் தார்கள். எல்லாப் பக்கங்களிலிருந்தும் மனிதர்கள் இருமிக்கொண்டிருந்தார்கள். காசநோய் அந்த முகாமில் சகஜம் என்று சொல்லப்பட்டது. மனச்சிதைவை நெருங்கிக் கொண்டிருந்த பலரையும் அவர் கடந்துசெல்ல நேரிட்டது.

28p4.jpg

ஒரு சிறுமி எங்கிருந்தோ ஓடிவந்து செல்சியாவின் கால்களைக் கட்டிக்கொண்டாள். `ஹலோ’ என்றபடி கன்னத்தில் குழி விழ புன்னகைத்த அந்தச் சிறுமியிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் `ஹலோ’ என்று பதிலுக்குப் புன்னகைத்தார் செல்சியா. முகாமுக்கு அருகில் இருந்த மின்சாரக் கம்பங்களிலிருந்து ஒயர்களை இழுத்துவந்து சிலர் செல்போன்களுக்கு உயிரூட்டிக்கொண்டிருந்தார்கள். அது எவ்வளவு ஆபத்தானது என்பதை ஒருவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

யாரும் எதையும் உணரும் நிலையில் அங்கு இல்லை. பிரான்ஸில் அமைந்திருந்த மற்றொரு முகாமுக்குச் சென்றபோது அவர் கிட்டத்தட்ட இதே காட்சிகளையே மீண்டும் காண வேண்டியிருந்தது. நாம் ஒரே மனிதர்களைத்தான் வெவ்வேறு  இடங்களில் மீண்டும் மீண்டும் சந்தித்துக்கொண்டிருக்கிறோமா என்று குழப்பம் வந்துவிட்டது. அதே இருமல் சத்தம். சிறிது சிறிதாக மனிதர்களை அரித்துத் தின்னும் விதவிதமான நோய்கள். அதே இருமல் சத்தம். அதே அழுக்கு. எதற்கும் கவலைப்படாமல் பட்டாம்பூச்சிகளைப் போல் திரிந்து கொண்டிருக்கும் குழந்தைகள்.

நீங்கள் என் நண்பரா என்று ஒரு சிறுமி ஓடிவந்து செல்சியாவிடம் கேட்டார். தன் காலைவிடப் பெரிய அளவு கொண்ட ஒரு எலி  இறந்துகிடந்ததை  அவர் கண்டார். அதற்கு அருகிலும் குழந்தைகள் விளையாடிக் கொண்டுதான் இருந்தார்கள். ‘நாங்கள் விலங்குகள் அல்லர்; மனிதர்கள்’ என்று ஒரு முகாமில் கறுப்பு மையில் யாரோ நல்ல கையெழுத்தில் எழுதியிருந்தார்கள். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், உங்கள் நாடு எப்படி இருக்கும், நீங்கள் வசிக்கும் வீடு எப்படி இருக்கும் என்று சிலர் செல்சியாவிடம் கேள்வி எழுப்பினார்கள். எனக்கு ஆங்கிலம் கற்றுத்தரமுடியுமா என்று சிரியர்கள் சிலர் ஆர்வத்துடன் அவரை நெருங்கினார்கள். நீங்கள் பத்திரிகையாளர்தானே, நிலைமை எப்போது சீரடையும்... உங்களுக்குத் தெரியும் அல்லவா என்று சிலர் கேட்டார்கள். ஆனால் செல்சியாவிடம் கேள்விகளே அதிகம் இருந்தன; பதில்கள் அல்ல.
28p2.jpg
செல்சியா தினமும் கொஞ்சம் விறகு வெட்டினார். சிலருக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க முயற்சி செய்தார். உணவுத்தயாரிப்பில் உதவினார். பொட்டலங்களை எடுத்துச் சென்று விநியோகித்தார். ஒரு நாள் உணவுக் கிடங்குக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான பொட்டலங்களைக் கணக்கிட்டு அளிக்கவேண்டிய எளிமையான பணி. செல்சியா தன் வேலையை ஆரம்பித்தார். மதிய நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. அகதிகள் வரிசையாக நின்றுகொண்டிருந்தார்கள். முதலில் ஒரு பெண் தன் அட்டையுடன் செல்சியாவை நெருங்கினார். செல்சியா அட்டையை வாங்கிப் பார்வையிட்டார். வளர்ந்தவர்கள் இருவர், குழந்தைகள் மூவர். செல்சியா ஐந்து உணவுப் பொட்டலங்களை எடுத்துக்கொண்டார். குழந்தைகளுக்கு மூன்று பழச்சாற்றுப் பொட்டலங்கள். எல்லாவற்றையும் ஒரு பெரிய பாலித்தீன் பையில் போட்டு அந்தப் பெண்ணிடம் ஒப்படைத்தார்.

ஒரு புன்னகையுடன் அதைப் பெற்றுக்கொண்ட அந்தப் பெண் தயங்கியபடியே நின்றுகொண்டிருந்தார். நீங்கள் போகலாம் என்று செல்சியா சொன்னபிறகும் அவர் நகரவில்லை. மாறாத புன்னகையுடன் அவர் செல்சியாவிடம் கேட்டார். ``எனக்கு ஒரு தண்ணீர் பாட்டில் அளிக்கமுடியுமா?’’ ``ஓ, தருகிறேன் இருங்கள்’’ என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார் செல்சியா. வரிசையாகத் தண்ணீர் பாட்டில்கள் அடுக்கப்பட்டிருந்த இடத்துக்குச் சென்றார். ‘வெளியில் ஒரு பெண் தண்ணீர் பாட்டில் கேட்கிறார், எடுத்துக்கொள்ளவா?’

அங்கே இருந்த அதிகாரி விளக்கினார்.  ``இதோ பார் செல்சியா, தண்ணீர் பாட்டிலுக்கு என்று சில விதிமுறைகள் இருக்கின்றன. கேட்பது யார், அவர் எந்த முகாமைச் சேர்ந்தவர், அவருக்கு ஒரு நாளைக்கு எத்தனை பாட்டில் வரை தரலாம் என்று சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. விதிமுறைகளை மீறி எதையும் யாருக்கும் அளிக்கக்கூடாது, புரிகிறதா?’’ செல்சியா அந்த அட்டையைக் கவனமாக ஆராய்ந்தார். குடிநீர் என்னும் தலைப்பின் கீழ் அழுத்தமாக ஒரு கோடு கீறப்பட்டிருந்தது. அதன் பொருள், அவர் குடும்பத்துக்குத் தேவையான குடிநீரை அவர் ஏற்கெனவே பெற்றுக்கொண்டுவிட்டார் என்பதுதான்.

செல்சியா அந்தப் பெண்ணிடம் இதை விளக்கிச் சொல்லவேண்டியிருந்தது. ``இதோ பாருங்கள் அம்மா, உங்களுடைய இன்றைய உணவுக்கணக்கில் குடிநீர் வராது. உணவுப் பொட்டலங்கள் மட்டும்தான்.’’ அந்தப் பெண் நகரவில்லை. புன்னகை மாறாத முகத்துடன் மெல்லிய குரலில் பேசினார். ‘`எனக்குக் கொடுக்கப்பட்ட குடிநீரை நான் சமைப்பதற்குப் பயன்படுத்திவிட்டேன். அழுக்கு நீரில் சமைக்க மனமில்லாததால் இப்படிச் செய்துவிட்டேன். அது தவறு என்று எனக்குத் தெரியும், ஆனால், வேறு வழி தெரியவில்லை. தயவு செய்து இந்தமுறை மட்டும் இன்னொரு பாட்டில் கூடுதலாக அளிக்கமுடியுமா?’’

28p5.jpg

அன்றைய பணி முடிந்து தன்னுடைய ஓட்டலுக்குத் திரும்பிப் போகும்வரை செல்சியாவின் நினைவுகளை அந்தப் பெண்ணின் புன்னகைக்கும் முகமே ஆக்கிரமித்திருந்தது. அதற்குப் பிறகு ஐரோப்பாவில் உள்ள வேறு சில அகதி முகாம்களுக்குச் சென்று பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. சிலவற்றில் பணியாற்றவும் முடிந்தது. விறகு வெட்டுவது தொடங்கி உணவுத் தயாரிப்பு வரை ஒவ்வொரு முகாமிலும் ஒவ்வொரு விதமான பணி. தனது பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் லாஸ் ஏஞ்சலீஸ் திரும்பினார் செல்சியா.

முகாமும் அவரோடு சேர்ந்து ஒட்டிக்கொண்டு விமானத்தில் ஏறி இறங்கி அவர் வீட்டுக்குள் நுழைந்துவிட்டிருந்தது. கிறீச் கிறீச் என்று கத்தும் எலிகளையும், வெறித்த கண்களோடு சுற்றிக்கிடந்த மனிதர்களையும், கூச்சலிட்டு விளையாடும் குழந்தைகளையும் அவரால் மறக்க முடியவில்லை. முகாமின் அழுக்கும் சத்தமும் வாசமும் பிரிக்க முடியாதபடி தன்னோடு கலந்துவிட்டதை அவர் உணர்ந்தார்.

படுக்கையில் சென்று விழுந்தார். மெலிதான பஞ்சுத்தலையணையும் மெத்தையும் அவரை உள்வாங்கிக்கொண்டன. எத்தனை முயன்றும் அந்தப் பெண்ணின் அழகான புன்னகையை அவரால் மறக்க முடியவில்லை. அவர் கேட்டது ஒரே ஒரு தண்ணீர் பாட்டில் மட்டுமே. ஆனால், அதை அளிப்பதற்குக்கூட விதிமுறைகள் இடம்கொடுக்கவில்லை.

``அவள் இதற்கு முன்பு எப்படி வாழ்ந்திருப்பாள்? அவள் எந்த நாட்டைச் சேர்ந்தவள்? வசதியானவளா, ஏழையா? சொந்த வீடு இருந்ததா? தன் குழந்தைகளை அவள் இதற்குமுன்பு எப்படி வளர்ந்துவந்தாள்? இறந்த எலிகளோடு தன் குழந்தைகள் விளையாடுவதை அவள் அனுமதித்திருப்பாளா? அசுத்தமான நீரில் சமைக்கும் வழக்கம் அவளுக்கு முன்பே இருந்திருக்குமா? ஒரேயொரு குடிநீர் பாட்டிலுக்காக ஓர் அந்நிய நாட்டுப் பணியாளரிடம் குழைந்து, புன்னகைத்து, கெஞ்சவேண்டிய அவசியம் அவருக்கு ஏன் நேரவேண்டும்? என்னால் அதற்குமேல் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வெடித்து அழ ஆரம்பித்துவிட்டேன்’’ என்கிறார் செல்சியா.

நீங்கள் வாசித்துத் தெரிந்துகொள்ளும் முகாம் வேறு, உண்மையான முகாம் வேறு என்கிறார் செல்சியா. நாம் ஏற்கெனவே சந்தித்த இராக்கைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி ஹிப்பா திடமான குரலில் சொல்கிறார்.  ‘போர் என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். நான் போரைப் பார்த்திருக்கிறேன். ஒரு குண்டு அருகில் வந்து விழுந்தால் எப்படி இருக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். ஒவ்வொருமுறை சத்தம் வரும்போதும் நாங்கள் எல்லோரும் காதைப் பொத்தியபடி  ஒருவரையொருவர் பயத்துடன் பார்த்துக்கொள்வோம். தலைக்கு மேலே விமானங்கள் பறந்துசென்றுகொண்டிருக்கும். பூமி அதிர்ந்து நடுங்க ஆரம்பிக்கும். நாங்கள் உடனே கட்டிலுக்குக் கீழே தவழ்ந்து சென்றுவிடுவோம். உலகம் எங்களைச் சுற்றி வெடித்துச் சிதறிக்கொண்டிருப்பதைப் போலிருந்தது. நிச்சயம் இறந்துவிடுவோம் என்று நாங்கள் எல்லோருமே நம்பினோம். இந்த உணர்வுதான் போர். இதை நீங்கள் உணர்ந்தால்தான் போர் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும்.’

ஹிப்பா சந்தித்த போரையும், செல்சியா சந்தித்த முகாமையும் நம்மால் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியாது. இறந்துபோன தன் அப்பாவின் புகைப்படத்தைக் கையில் ஏந்தியபடி ஹிப்பா சொல்கிறார்.  ‘ஒரு போர் என்னவெல்லாம் செய்யும் என்பதை உங்களால் கற்பனைகூடச் செய்யமுடியாது. அதேபோல், ஓர் அகதியாக இருப்பது என்றால் என்னவென்பதையும் உங்களால் ஒருபோதும் புரிந்துகொள்ளமுடியாது.’ செல்சியா இதை நூற்றுக்கு நூறு ஒப்புக்கொள்வார்.

-சொந்தங்கள் வருவார்கள்

https://www.vikatan.com/

Posted

நான் அகதி! - 5 - யார் அகதி?

 

 

டுங்கிக்கொண்டிருந்த நாயை எடுத்துத் தன் தோள்மீது போட்டுக்கொண்டார் நவோமி. காலுக்குக் கீழே வெள்ளம் பாய்ந்துகொண்டிருந்தது. சில இடங்களில் முழங்கால் வரை நீர். பல இடங்களில் இடுப்புவரை வளர்ந்துவிட்டது. மனிதர்களாவது பார்த்து, நிதானமாகக் காலடி எடுத்து வைத்து நகரலாம், நாய்க்குட்டி பாவம் இல்லையா? கறுப்பும் வெள்ளையுமாகத் திரண்டு நின்ற அந்த நாய்க்கு சிம்பா என்று பெயர். நவோமியின் தோளில் வசதியாக அமர்ந்துகொண்ட பிறகும்கூட சிம்பாவின் முகத்திலிருந்து அச்சம் மறையவில்லை. ஆனால், நவோமி ஒரு சிறு புன்னகையுடன் நடக்கத் தொடங்கினார். ஒரு துயரத்தைக் கடந்துசெல்லச் சிறந்த வழி, இதயத்தைக் கொஞ்சம் திறந்து வைப்பதுதான் என்று நவோமிக்குத் தெரிந்திருந்தது.  கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவைப் புரட்டிப்போட்ட ஹார்வே புயலை நினைவுபடுத்தும் புகைப்படங்களில் ஒன்றாக இது மாறிப்போனது.

p24a.jpg

யு.எஸ்.ஏ டுடே என்னும் அமெரிக்க நாளிதழ் ஹார்வே புயல் குறித்து வெளியிட்டிருந்த ஒரு செய்திக்கட்டுரை வித்தியாசமான காரணத்துக்காகச் சர்ச்சைக்குள்ளானது. புயலில் சிக்கித் தங்கள் குடியிருப்புகளையும் உடைமைகளையும் பறிகொடுத்தவர்களை அகதிகள் என்று குறிப்பிட்டிருந்தது அந்தக் கட்டுரை. சர்ச்சை தொடங்கியது இங்கேதான். நவோமியையும் அவரைப் போன்றவர்களையும் அகதிகள் என்று அழைக்கமுடியுமா?  அகதி என்னும் சொல்லை இந்த இடத்தில் பயன்படுத்தியது சரியா? பெரும் எண்ணிக்கையிலான அமெரிக்கர்கள் நடு வீதியில் வந்து நின்றது நிஜம். எல்லாம் போய்விட்டதே என்று கதறியழுதது நிஜம். மீண்டும் ஆரம்பத்திலிருந்து வாழ்வைக் கட்டமைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்துக்கு அவர்கள் தள்ளப்பட்டதும் உண்மைதான். ஆனால், அவர்கள் அகதிகளா? p24c.jpg

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே அமெரிக்காவை கேத்ரீனா புயல் தாக்கியபோது,  அனைத்தையும் இழந்து பரிதவித்தவர்களை ஒட்டுமொத்த ஊடகமும் அகதிகள் என்றே அழைத்தன. அவர்களைப் பொறுத்தவரை பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்ட எவரொருவரும் அகதியே. ஆதரவற்றவர்கள் அகதிகள். வீடற்றவர்கள் அகதிகள். வேலையிழந்தவர்கள், பொருளற்றவர்கள் அகதிகள். பெற்றோரை இழந்த குழந்தைகள் அகதிகள். குழந்தைகளை இழந்து தனித்துநின்றவர்கள் அகதிகள். பூகம்பத்தில் சிக்கி உயிர் தப்பியவர்கள் அகதிகள். ஏழைகள் அகதிகள்.

இப்படித்தான் நம்மில் பலரும் அழைக்கிறோம் என்றாலும், இவர்கள் யாருமே நிஜத்தில் அகதிகள் இல்லை. எனில், யார் அகதி? ஐக்கிய நாடுகள் சபை சில வரையறைகளை வகுத்து வைத்திருக்கிறது. அதன்படி நான் எப்போது அகதியாக மாறுகிறேன் தெரியுமா? என் நாடு என்னை ஒரு விரோதியாகப் பார்க்கவேண்டும். என் இனம், மதம், தேசிய அடையாளம், அரசியல் நிலைப்பாடு அல்லது நான் பங்குபெற்றுள்ள சமூக  அமைப்பு காரணமாக என் அரசு என்னைத் தனிமைப்படுத்தவேண்டும். என் அரசால் எனக்கு ஆபத்து நேரலாம் என்று நான் நம்பவேண்டும். அதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படவேண்டும். என் தாய்நாட்டில் தங்கியிருப்பது பாதுகாப்பற்றது என்று நான் மெய்யாக நம்பவேண்டும். என் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என் தாய்நாட்டிலிருந்து தப்பி வேறோர் இடத்துக்கு நான் குடிபெயர வேண்டும்.  அப்படிச் செய்தால் நான் ஓர் அகதி.

உதாரணத்துக்கு, ரோஹிங்கியா  முஸ்லிம்களை எடுத்துக்கொள்வோம். ரோஹிங்கியாக்களை பர்மியர்களாகக் கருத மியான்மர் அரசு முன்வரவில்லை. நீங்கள் வங்கதேசத்திலிருந்து வந்த குடியேறிகள், அங்கேயே திரும்பிச் செல்லுங்கள் என்கிறார்கள் பர்மியர்கள். ரோஹிங்கியாக்களின் தேசிய அடையாளம் இங்கே பிரச்னைக்குரியதாக மாறியது. ரோஹிங்கியாக்கள் இஸ்லாமியர்களாகவும் இருப்பதால் பெரும்பான்மை பௌத்தர்கள் அவர்களைத் தங்கள் சமூகத்துக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள். அந்த வகையில், ரோஹிங்கியாக்களின் மத அடையாளமும் அவர்களை பர்மியர்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறது.

ஐ.நா சட்ட விதி அளிக்கும் வரையறையை ரோஹிங்கியாக்களுக்குப் பொருத்தினால் அவர்கள் தங்கள் தேசிய அடையாளத்துக்காகவும் மத அடையாளத்துக்காகவும் தாக்கப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். பெரும்பான்மை பௌத்தர்களுக்கு மத்தியில் வாழ்வது கடினம் என்று சிறுபான்மை ரோஹிங்கியாக்கள் நினைக்கிறார்கள். அரசு தங்களைப் பாதுகாக்கும் என்னும் நம்பிக்கையை அவர்கள் முற்றாக இழந்துவிட்டார்கள். பர்மாவின் அரசு பெரும்பான்மையினரின் அரசுதான் என்பதை அவர்கள் அறிவார்கள். தடியும் துப்பாக்கியுமாக வந்து தாக்கும் பலர் காவல்துறைச் சீருடை அணிந்திருப்பதைக் கண்டு அதிர்ந்திருக்கிறார்கள். பெரும்பான்மை பயங்கரவாதத்தைக் காட்டிலும் அஞ்சத்தக்க ஒன்று, அதை ஆதரிக்கும் அரசு. எனவே உயிர் தப்ப அவர்கள் மியான்மரை விட்டு ஓடிவர வேண்டியிருக்கிறது. எனவே அவர்கள் அகதிகள்.

புயலிலிருந்து தப்பி வெளியேறிய அமெரிக்கர்களுக்கும் பர்மாவிலிருந்து வெளியேறிய ரோஹிங்கியாக்களுக்கும் இடையிலான வேறுபாடு இதுதான். உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத்தான் புளோரிடா மக்களும் வெளியேறினார்கள் என்றாலும் அவர்கள் அடைக்கலம் புகுந்தது அதே அமெரிக்காவில் உள்ள மற்றொரு மாகாணத்தில். இயற்கை அவர்களுக்கு எதிராக இருந்தபோதும் அமெரிக்க அரசு அவர்களைக் கைவிட்டுவிட வில்லை.  மாறாக, உதவத்தான் செய்தது. அதனால்தான் அவர்களில் மிகப் பெரும்பாலானோர் இப்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.ரோஹிங்கியாக்களுக்கு அப்படியா? அவர்கள் சந்தித்துக்கொண்டிருப்பது கேத்ரீனா, ஹார்வே, இர்மா போன்றதொரு இயற்கையான சவாலை அல்ல. திட்டமிடப்பட்ட, கொடூரமான ஓர் இனவொழிப்பை.  இந்த இனவொழிப்பை அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது பெருஞ்சோகம் மட்டுமல்ல, மிகப்பெரிய அநீதியும்கூட.

p24d.jpg

டொனால்ட் ட்ரம்ப் போன்ற ஓர் அதிபரைப் பெற்றிருந்தபோதும் அமெரிக்க அரசு இயந்திரத்தின் துணையை அமெரிக்கர்களால் பெறமுடிந்தது. ஆங் சான் சூச்சீ போன்ற ஒரு தலைவரைப் பெற்றிருந்தபோதும் ரோஹிங்கியா மக்களின் துயரம் முடிவுக்கு வரவில்லை. ஆக, எப்படிப் பார்த்தாலும் அமெரிக்கர்களும் ரோஹிங்கியாக்களும் ஒன்றல்லர். அவர்கள் சந்திக்க நேர்ந்த துயரங்களும் ஒன்றல்ல. வீட்டை இழப்பதும் நாட்டை இழப்பதும் ஒன்றல்ல. எனவே, இருவருக்கும் ஒரே பெயர் பொருந்தாது.

அதே அமெரிக்காவில் உள்ள மிச்சிகனில் வசிக்கிறார் குசோன் அல் ஹசன். சிவப்பு, வெள்ளை, நீலம் மூன்றும் கலந்த கட்டம் போட்ட ஹிஜாபை அவர் அணிந்திருந்தார். ``நான், என் கணவர், என் இரு குழந்தைகள் அனைவரும் சிரியாவில் வாழ்ந்துவந்தோம். ஒரு நாள் அரசுக்கு எதிரான போராட்டம் நடைபெறுவதைப் பார்த்தோம். என் தம்பிக்கு 27 வயது. அவன் கேமராவைக் கொண்டு போராட்டத்தைப் படம் எடுத்துக்கொண்டிருந்தான்.  அவன் மட்டுமன்று, பலரும் தங்களுடைய மொபைலில் படம் எடுத்துக்கொண்டுதான் இருந்தார்கள். சிலர் வீடியோவும் எடுத்தார்கள். அதற்குப் பிறகு அது நடந்தது. அரசுப் படைகள் எல்லோரையும் தாக்க ஆரம்பித்தார்கள். போராடுபவர்களை, அமைதியாக நின்று வேடிக்கை பார்ப்பவர்களை, பிறகு படம் பிடிப்பவர்களையும். என் தம்பியை என் கண் முன்னால் கொன்றார்கள்.’’

நடுக்கத்தை மறைத்துக்கொள்ளவோ என்னவோ அடிக்கடி தன் ஹிஜாபை அவர் தொட்டுப் p24g.jpgபார்த்துக்கொண்டார். `‘சிரியாவை விட்டு வெளியேறவேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தது அதற்குப் பிறகுதான்.’’ இதே முடிவைத்தான் சிரியாவைச் சேர்ந்த, கிட்டத்தட்ட 12 மில்லியன் பேர் எடுத்திருந்தனர். அவர்கள் அனைவருமே சிரியாவை விட்டு வெளியேறத் துடித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் முகத்தை மூடிக்கொண்டு துப்பாக்கியைத் தோளில் சாய்த்தபடி வீதிகளில் நடைபோட்டுக் கொண்டிருந்தனர். எங்காவது ஒரு பாடலின் ஒலி கேட்டால் அங்கே குண்டு ஒன்றை வீசினார்கள். முகத்தை மூடாமல் ஒரு பெண் குழந்தை வாயிலுக்கு அருகில் வந்து நின்றாலும், நிறுத்தி நிதானமாகச் சுட்டுத் தள்ளினார்கள். அரசை எதிர்க்கிறேன், அமெரிக்காவை எதிர்க்கிறேன் என்றெல்லாம் முழங்கினாலும் அவர்கள் உண்மையில் சிவிலியன்களைத்தான் வேகமாக அழித்துக்கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை அழிக்கிறேன் என்று சொல்லி சிரியாவை ஆளும் பஷார் அல் ஆசாத் மீண்டும் சிவிலியன்களைத்தான் அழித்துக்கொண்டிருந்தார். 

குண்டுகள் ஓயாமல் வந்து விழுந்தபடி இருக்கின்றன. அவற்றை வீசும் கரங்கள் யாருக்குச் சொந்தமானவை என்பதை ஆராய்வது வீண். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்நியர்களாக இருக்கிறார்கள். ஆசாத்தின் ராணுவத்தினர் சுதேசிகள். ஆனால், இருவருடைய கரங்களும் குண்டுகளைத்தான் எடுத்து வீசிக்கொண்டிருக்கின்றன. இருவருமே சீருடை அணிந்துகொண்டிருக்கிறார்கள். இருவருமே சிவிலியன்களைக் கொல்லத் தயங்காதவர்களாக இருக்கிறார்கள். இருவருமே அதிகார வேட்டை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இருவரிடமும் பெருங்கனவு ஒன்று இருக்கிறது. அந்தக் கனவு அச்சமூட்டக்கூடியதாக இருக்கிறது. அதை அடைய அவர்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். ஐஎஸ்ஐஎஸ் மதத்தைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறது. ஆசாத் அரசு அமைப்பைப் பயன்படுத்திக்கொள்கிறார்.  அப்படிச் செய்யும்போது மதம், அரசமைப்பு இரண்டுக்கும் அவர்கள் பெரும் தீங்கை இழைக்கிறார்கள். ஆனால், அதைப்பற்றி இருவருக்குமே கவலையில்லை.

சிரியர்களைப் பொறுத்தவரை இரு வாய்ப்புகள் மட்டுமே இருந்தன. ஒன்று நீங்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் கொல்லப்படலாம், அல்லது குசோன் அல் ஹசனின் சகோதரரைப் போல் அரசப் படையால் கொல்லப்படலாம். இருவரிடமிருந்தும் தப்பவேண்டுமானால் பிறந்த நாட்டை விட்டு வெளியேறியாக வேண்டும். இதற்குத் தயாராக இல்லை என்பதாலேயே பலர் சிரியாவின் மண்ணை முத்தமிட்டபடி  சுருண்டுகிடந்தனர்.  இறந்தாலும் என் நாட்டை விட்டு வெளியேறமாட்டேன் என்று திடமாகச் சொல்லிவிட்டார்கள் அவர்கள்.

p24e.jpg

p24f.jpg

ஆனால், குசோன் அல் ஹசனால் அப்படிச் சொல்லமுடியவில்லை. தாய்நாட்டை நேசிப்பதற்கு என்ன விலை கொடுக்கவேண்டும் என்பதை அவர் அறிவார். ``என் சகோதரன் சிரியாவின் மண்ணை விரும்பியவன், அவன் ரத்தம் அதே மண்ணில் சிந்தப்பட்டதை நான் பார்த்தேன். என் மண்ணில் அவன் ரத்தம் பீய்ச்சியடிக்கப்பட்டிருக்கிறது. சிரியா என்றால் எனக்கு இனி குருதியே நினைவுக்கு வரும். உலர்ந்து மண்ணோடு மண்ணாகிப்போன குருதி. என் பாதங்களை அங்கே இனி என்னால் பதிக்கமுடியாது. என் தாய்நாட்டை நான் நேசிக்கிறேன். ஆனால், அது வேட்டை விலங்குகளின் பிடியில் இப்போது சிக்கியிருக்கிறது. என் பாதங்களை அங்கே இனி பதிக்கமுடியாது. என் பிஞ்சுக் குழந்தைகளை விலங்குகளிடமிருந்து காப்பாற்றும் திராணி எனக்கோ என் கணவருக்கோ இல்லை. என் முடிவை என் நாடு புரிந்துகொள்ளும் என்று நம்புகிறேன்.”

அமெரிக்கா செல்ல முடிவெடுத்தார் குசோன் அல் ஹசன். லெபனான் சென்று அங்கிருந்து படிப்படியாக முன்னேறி, முறைப்படி விண்ணப்பித்து, முறைப்படி விசா பெற்று அமெரிக்கா செல்வதே அவர் திட்டம். ஆனால், லெபனானில் குடும்பம் பிரியவேண்டியிருந்தது. அனைவருக்கும் அனுமதி கிடைக்கவில்லை என்பதால் கணவனை விட்டுவிட்டு, தன் குழந்தைகளை மட்டும் அள்ளியெடுத்துக்கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார் குசோன் அல் ஹசன். ‘`என் பாதை நீண்டு நீண்டு சென்றுகொண்டிருந்தது. புரியாத பிரதேசங்களை எல்லாம் கடந்துகொண்டிருந்தேன். புரியாத மொழிகள் என் காதுகளை நிரப்பிக் கொண்டிருந்தன. யாரைப் பார்த்தாலும் அச்சம். என் குழந்தைகளை யாராவது கடத்திவிடுவார்களோ என்று அஞ்சினேன். எங்களை யாராவது கொன்றுவிடுவார்களோ, சிறைப்படுத்தி விடுவார்களோ என்று அஞ்சிக்கொண்டே இருந்தேன்.’’

மத்தியக் கிழக்கு நாடுகளைக் கிட்டத்தட்ட முழுக்க அவர் கடந்துசெல்ல வேண்டியிருந்தது. சைப்ரஸ் சென்று அங்கே சிறிது காலம் தங்கியிருந்துவிட்டு ஆவணங்கள் கிடைத்ததும் இணைந்துகொள்வதாகக் கணவர் சொல்லியிருந்தார். அவரைப் பற்றிய கவலையும் குசோன் அல் ஹசனை அரித்துக்கொண்டிருந்தது. இடையில் நம்பிக்கை வெளிச்சம் அளிக்கும் சில மாற்றங்கள் நடைபெற்றன. `அரபு வசந்தம் தொடங்கிவிட்டது குசோன், எல்லாம் மாறப்போகிறது’ என்று சிலர் ஆறுதல் சொன்னார்கள். எகிப்தில் ஆட்சி கவிழ்ந்துவிட்டது. துனிஷியாவில் ஆட்சி கவிழ்ந்துவிட்டது. கவிழ்த்தவர்கள் யார்? உன்னையும் என்னையும் போன்ற சாமானியர்கள். மக்கள் புரட்சி வெற்றிபெற்றுவிட்டது குசோன். பீரங்கிகளையும் ஏவுகணைகளையும் மக்கள் வென்றுவிட்டார்கள். நாளை சிரியாவிலும் இது நடக்கலாம். ஐஎஸ்ஐஎஸ் கலையலாம். ஆசாத் பதவி விலகலாம். நாம் மீண்டும் வீட்டுக்குத் திரும்பலாம். என்ன சொல்கிறாய்?

ஏதுமற்றிருந்த குசோனை இந்தக் கனவு நிரப்பத் தொடங்கியது. ஆனால், வெகு விரைவில் அவர் விழித்துக்கொண்டுவிட்டார். அரபு வசந்தம் சிரியாவைத் தொடுவதற்கு முன்பே இறந்துபோயிருந்தது. சிரியாவில் வன்முறை அதிகரித்திருக்கிறது, திரும்பிவந்துவிடாதே என்றொரு செய்திதான் அவருக்கு வந்தது. மன்னிக்கவும், உன் தந்தை இறந்துவிட்டார் என்று இன்னொரு செய்தி. முகம் முழுக்க கண்ணீருடன் குசோன், அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்தார். அது அப்போது ஒபாமாவின் அமெரிக்காவாக இருந்ததால் அதிக சிரமமின்றி அனுமதி கிடைத்துவிட்டது. வாக்குறுதி அளித்தபடி அவர் கணவரால் குடும்பத்துடன் இணையமுடியவில்லை. அவர் சிரியாவுக்குத்தான் திரும்பிச் செல்லவேண்டியிருந்தது.

எனில், நீங்களும் சிரியாவுக்குத் திரும்புவீர்களா என்று கேட்கப்பட்டபோது குசோன் தன் ஹிஜாபை அழுத்தமாகப் பற்றிக்கொண்டார். ‘`நான் இனி சிரியா திரும்புவதாக இல்லை. ஆட்சி மாறினாலும் சிக்கல் தீர்ந்தாலும் சிரியாவுக்கு நான் திரும்பப்போவதில்லை. என் சகோதரன், தந்தை, உறவினர்கள், நண்பர்கள்  அனைவரையும் சிரியா விழுங்கிவிட்டது. அங்கே எனக்கு இனி எதுவும் இல்லை. என் வேர்களைப் பிடுங்கியெடுத்துவந்து இங்கே நட்டுவிட்டேன்.” தன் குழந்தைகளை அணைத்துக்கொள்கிறார் குசோன். ‘`என் நாட்டுக்காக நான் கடவுளைத் தொழுவேன். ஆனால் திரும்பிச் செல்லமாட்டேன்.”

நவோமும் அவருடைய நாய்க்குட்டியும் வசிக்கும் அதே அமெரிக்காவில்தான் குசோனும் அவர் குழந்தைகளும் வசிக்கிறார்கள். நவோமின் துயரம் வெள்ளம் வடிந்ததோடு முடிவுக்கு வந்துவிட்டது.  குசோனின் துயரம் முடிவற்றது. சிரியா அவரைக் கைவிட்டுவிட்டது.  ஹிஜாப் அணிந்த குசோனால் ஒருபோதும் அமெரிக்கராக மாற முடியாது. எனவே அவர் அகதி.

- சொந்தங்கள் வருவார்கள்

https://www.vikatan.com

Posted

நான் அகதி! - 6 - வேட்டையாடு விளையாடு

 

 

‘ஒரு மனிதன் கையில் துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருக்கிறான்.  அருகில் ஒரு சிறுமி. கீழே தரையில் ஒரு சிங்கம் செத்து விழுந்து கிடக்கிறது. வீரனே, நீ ஒரு குழந்தையைக் காப்பாற்றிவிட்டாய் என்று எல்லோரும் அவனைப் பாராட்டுகிறார்கள். அப்போதுதான் அந்த மனிதன் ஒரு முஸ்லிம் என்பது தெரியவருகிறது. உடனே எல்லோரும் ஒரே குரலில் சொன்னார்கள். ஓர் அப்பாவி சிங்கத்தை இந்தப் பயங்கரவாதி அநியாயமாகக் கொன்றுவிட்டான்!’ நேற்று எனக்கு வந்த வாட்ஸ் அப் இது என்று சொல்லி, தன் அருகிலிருந்தவரிடம் காண்பித்தார் காலித். அந்த அறையில் சிரிப்பொலி பரவுகிறது.

சிரியாவிலுள்ள ஹோம்ஸ் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் காலித். தற்சமயம் அவர் அமர்ந்திருப்பது p28b.jpgஜோர்டானில் உள்ள கிழக்கு அம்மான் பகுதியில் அமைந்திருந்த ஒரு சமுதாயக் கூடத்தில். மொத்தம் பதினொரு பேர் அங்கே திரண்டிருந்தனர். அவர்கள் வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்கள். சிலர் இராக்கிலிருந்தும் சிலர் சிரியாவிலிருந்தும் இன்னும் சிலர் வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்தனர். அனைவரும் இஸ்லாமியர்கள்.

அடர்த்தியான மீசையைக் கொண்டிருக்கும் அகமதுவின் வயது 54. தன்னைச் சுற்றி எழுந்த சிரிப்பலைகளை அவர் பொருட்படுத்தவில்லை. அவர் கையில் ஒரு பை. கத்தை கத்தையாகக் காகிதங்கள் அதிலிருந்து பிதுங்கிக் கொண்டிருந்தன.  வீட்டை விட்டு வெளியில் எங்கே போனாலும் அவற்றை அவர் அள்ளியெடுத்துக்கொண்டு சென்றாகவேண்டும். இராக்கிலுள்ள ஃபலூஜா என்னும் இடத்தைச் சேர்ந்தவன் என்பதற்கான ஆதாரங்களை அவர் வைத்திருந்தார். தான் இராக்கிலிருந்து வெளியேறிவிட்டவன் என்பதற்கான அத்தாட்சி அவரிடம் இருக்கிறது. தனக்கு எந்த நாடும் இல்லை, தான் ஓர் அகதி என்பதற்கான அதிகாரபூர்வமான சான்றுகளையும் அவர் வைத்திருந்தார். இந்த மூன்றையும் தேவைக்கேற்ப அவர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். யார் எப்போது எதைக் கேட்பார்கள் என்று சொல்லமுடியாது என்பதால், ஒரு தேநீர் குடிக்கப் போகவேண்டுமென்றாலும் பையோடுதான் அவர் சென்றாக வேண்டும். அந்தப் பையைத் தொலைப்பது எதிர்காலத்தையும் கடந்தகாலத்தையும் ஒருசேரத் தொலைக்கும் செயல் என்பதால் ஒரு கையில் பிடித்துக்கொண்டேதான் இன்னொரு கையால் அவர் தேநீரையும் அருந்தியாக வேண்டும்.

p28a.jpg

அகமது அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். ஃபலூஜாவில் இருந்த ஓர் உள்ளூர்ப் பத்திரிகை அலுவலகத்தில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். நடப்பு அரசியலை உன்னிப்பாகக் கவனித்து அவர் கட்டுரைகள் எழுதிவந்தார். இராக்கைப் பொறுத்தவரை நடப்பு அரசியல் என்பது போரை மையப்படுத்தியே இயங்கிக்கொண்டிருந்தது. இன்று நேற்றல்ல, இராக் ஒரு போர்க்களமாக மாறிப் பல ஆண்டுகள் ஆகின்றன. மூன்று காரணங்கள்:

முதலில் சதாம் உசேன். பக்கத்து நாடான குவைத்தைத் தன் பூட்ஸ் காலால் மிதித்து நசுக்கிவிடமுடியும் என்னும் நம்பிக்கையுடன் போர் இயந்திரத்தை ஏவி விட்டார் சதாம். முன்னதாக, 1980 தொடங்கிப் பக்கத்து நாடான இரான் நாட்டின்மீது இராக் விட்டுவிட்டுப் போர் தொடுத்துக்கொண்டிருந்தது. எது இரு நாடுகளுக்குமான எல்லை என்பதில் ஆரம்பித்த தகராறு. குவைத்தைப் பொறுத்தவரை அதைத் தனியொரு நாடாகவே அவர் கருதவில்லை. இராக்கின் ஓர் அங்கம்தான் என்று சொல்லிவந்தார் அவர். அதைக் குவைத் ஏற்றுக் கொள்ள மறுத்தபோது, உலக வரைபடத்திலிருந்து அந்தச் சின்னஞ்சிறிய நாட்டை அகற்றிவிட முடிவெடுத்தார் சதாம். அப்படியே இரானையும். இரண்டும் சாத்தியமாகவில்லை என்றாலும், இராக் சிதறத் தொடங்கியது.

இரண்டாவது, ஜார்ஜ் புஷ்.  செப்டம்பர் 11 தாக்குதலுக்குச் சதாம்தான் காரணம் என்று சொல்லி இராக்குக்குள் நுழைந்தன அமெரிக்கப் படைகள். பயங்கர ஆயுதம் எதுவும் அங்கே அகப்படவில்லையென்றாலும் சதாம் நீக்கப்பட்டார். ஆனால், சதாமைவிடப் பல மடங்கு அதிக அழிவை அமெரிக்காவால் ஏற்படுத்த முடியும் என்பதை இராக்கியர்கள் கண்கூடாகத் தெரிந்துகொண்டனர். மூன்றாவது காரணம் அல் கொய்தா. சிதறிக்கொண்டிருக்கும் நிலத்தில்தான் வலுவாகக் காலூன்ற முடியும் என்பது அல் கொய்தாவுக்குத் தெரியும் என்பதால், அவர்களும் தங்கள் பங்குக்கு இராக்கைச் சிதறடிக்க ஆரம்பித்தனர்.

மே 2011-ல் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டபோது அல் கொய்தாவின் கதை அத்தோடு முடிவுக்கு வந்துவிடும் என்று பலரும் நினைத்தனர். ஆனால், அல் கொய்தா தொடர்ந்து தன் கரங்களை வலுப்படுத்திக்கொண்டே சென்றது. ஜனவரி 2014-ல் ஃபலூஜா அல் கொய்தாவின் பிடிக்குள் சென்றது. அது அகமதுவின் நகரம். அகமதுவுக்கு நெருக்கமான நகரம். தன் நகரமும் நாடும் மெல்ல மெல்ல இறந்துகொண்டிருப்பதை அவர் கண்டார். சதாமின் மறைவுக்குப் பிறகு இராக்கிய அரசு அமெரிக்காவின் செல்ல நாயாக மாறிவிட்டது. ஒசாமாவின் மறைவுக்குப் பிறகு அல் கொய்தா அடிபட்ட புலியாக மாறிவிட்டது. புலி, நாய் இரண்டுமே ஒன்றையொன்று எதிர்த்துக் கொண்டிருக்கின்றன. இராக்கைப் பொறுத்தவரை இவை இரண்டுமே ஆபத்தானவை. இரண்டுமே எதிர்க்கப்பட வேண்டியவை. இரண்டின் பிடியிலிருந்தும் சிவிலியன்கள் மீட்கப்பட்டாக வேண்டும்.

ஃபலூஜாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை இராக்கிலுள்ள மற்ற நகரங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். என் நாட்டுக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உலகம் அறிந்துகொள்ள வேண்டும். எனக்குக் கிடைத்திருக்கும் ஆயுதம், பேனா. என் பேனாவைக் கொண்டு இராக்கிய அரசின் செயலற்ற தன்மையை நான் பதிவுசெய்ய வேண்டும். என் பேனாவைக் கொண்டு அமெரிக்காவின் சட்டவிரோத அத்துமீறல்களை உலகறியச் செய்ய வேண்டும். இதே பேனாவைக் கொண்டு அந்நிய பயங்கரவாத சக்தியான அல் கொய்தாவின் ஆக்கிரமிப்பு களையும் நான் படம் பிடித்தாக வேண்டும். இவ்வளவையும் செய்துமுடிக்கும் திறன் இருக்கிறதா என் பேனாவுக்கு?  திறனைவிட முக்கியம் துணிச்சல். அது அகமதுவிடம் மிகுதியாக இருந்தது. செய்திக் கட்டுரைகளைத் தொடர்ந்து அவர் எழுதிக்கொடுத்துக்கொண்டே இருந்தார்.

p28c.jpg

அப்போதுதான் அது நிகழ்ந்தது. அகமது பணியாற்றிக்கொண்டிருந்த பத்திரிகை அலுவலகம் ஒரு நாள் திடீரென்று காணாமல் போய்விட்டது. அல் கொய்தா ஆட்கள் குண்டு வீசித் தகர்த்துவிட்டார்கள் என்று தெரிந்துகொண்டார் அகமது. தன்னைப் பற்றித் தொடர்ந்து செய்தி வெளியிட்டுவந்த ஓர் எதிரியை அல் கொய்தா அழித்துவிட்டது.  தன்னுடைய பேனா அமைதியாக்கப்பட்டு விட்டதை உணர்ந்தார் அகமது. வேறொரு பத்திரிகையைக் கண்டறிந்து, தொடர்புகொண்டு செய்தி வெளியிடுவது இனி சாத்தியமில்லை. ஒரு பத்திரிகை அலுவலகத்தைக் குண்டு வீசி அழிக்கத் தெரிந்த இயக்கத்தால் இன்னொன்றையும் அதேபோல் அழிக்க முடியாதா என்ன?

அகமதுவோடு பணியாற்றிவந்த இன்னொரு பத்திரிகையாளரை அல் கொய்தா ஆட்கள் கண்டறிந்து நடு வீதியில் நிற்க வைத்துச் சுட்டுக்கொன்றுவிட்டார்கள். அப்போதுதான் அகமதுவுக்குப் புரிந்தது. அல் கொய்தா கண்மூடித்தனமாகத் தாக்கிக் கொண்டிருக்க வில்லை. தன்னைக் காட்டிக் கொடுத்தவர்களை வேட்டையாடிக் கொன்றுகொண்டிருக்கிறது. அப்படியானால் அதிகக் கட்டுரைகளை எழுதி வெளியிட்ட என்னையும் அவர்கள் இந்நேரம் தேடிக்கொண்டிருக்கலாம் இல்லையா?

நடந்தது அதுதான். தன் வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அகமதுவைச் சிலர் வழிமறித்து நிறுத்தினார்கள். முகமூடி அணிந்த மூன்று பேர். அப்படியே கொத்தாகப் பிடித்து காரைத் திறந்து பின்னால் அகமதுவைப் போட்டு மூடிவிட்டு ஓட்டிச்சென்றுவிட்டார்கள்.  குலுங்கியோடிய வண்டியில் காலைக் குறுக்கிப் படுத்துக்கிடந்த அகமது  தன் வாழ்க்கை இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதை உணர்ந்தார். தன்னைச் சுட்டுக்கொல்வார்களா அல்லது கழுத்தை அறுத்துக் கொல்வார்களா என்பது மட்டும்தான் புரியாமல் இருந்தது.

இருள் படர்ந்திருக்கும் ஓர் அறையில் கொண்டுசென்று அகமதுவைத்  தள்ளினார்கள். ஓர் இருக்கையில் அவர் கட்டிப்போடப்பட்டார். அது ஒரு கட்டடத்தின் பாதாள அறை. அந்த அறையில் மேலும் சிலர் தன்னைப்போலவே சிறை வைக்கப்பட்டிருந்ததை அகமது உணர்ந்தார். பேச முடியாதபடிக்கு அவர்களுடைய வாய்கள் அடைக்கப்பட்டிருந்தன. கண்களும் கட்டப்பட்டிருந்தன.  அகமதுவைப் போலவே. கழிப்பறைக்குப்  போகக்கூட ஒருவருக்கும் அனுமதியில்லை என்பதால் அந்த இடம் சகிக்கமுடியாத நாற்றத்துடன் இருந்தது. உணவு கொடுக்கப்படவில்லை. அருந்த நீரில்லை. எப்போதும் அங்கே இருள்  மட்டுமே இருந்ததால் பகலா இரவா என்பதைக் கண்டறிய முடியவில்லை. மொத்தம் மூன்று நாள்கள் அகமது அந்த அறையில் கடும் பட்டினியில் கடும் நாற்றத்தில் கடும் மரண பயத்தில் உறைந்துகிடந்தார்.

பிறகு  அகமதுவின் முகத்தில் கட்டப்பட்டிருந்த துணி விலக்கப்பட்டது. தலைவர்போல் தோற்றமளிக்கும் ஒருவர் உள்ளே நுழைந்தார். கைவிளக்கைக் கொண்டுவரச் சொல்லி அகமதுவின் முகம் நெருக்கத்தில் ஆராயப்பட்டது. சில விநாடிகள்தாம். அந்தப் பத்திரிகை ஆசிரியர் வேறொரு ஆள், இவனில்லை என்று சொல்லிவிட்டார் அந்தத் தலைவர். முகமதுவின் முகத்தில் மீண்டும் கறுப்புத் துணி கட்டப்பட்டது. மீண்டும் காரில் அள்ளி வந்து போட்டார்கள். ஒரு மணி  நேரம் வண்டி குலுங்கியபடி பறந்தது. உடலெல்லாம் வலித்தது. பிறகு ஓரிடத்தில் நிறுத்தி அகமதுவைத் தூக்கி வெளியில் வீசிவிட்டு மறைந்துவிட்டார்கள். மெள்ள மெள்ள சுதாரித்துக்கொண்டு முதலில் தன் கைக் கட்டுகளை அவிழ்த்துக்கொண்டார். பிறகு முகத்தில் உள்ள துணியை விலக்கிக்கொண்டு சுற்றிலும் ஒருமுறை பார்த்தார். பிறகு தன் வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தார்.

p28d.jpg

உடனடியாகத் தன் மனைவியை அழைத்துக்கொண்டு ஃபலூஜாவை விட்டு வெளியேற முடிவு செய்தார். இங்கிருப்பது இனியும் பாதுகாப்பானதல்ல. பத்திரிகை ஆசிரியரை வேட்டையாடி முடித்த பிறகு, அவர்களுக்கு என் பெயரும் அடையாளமும் தெரியவரலாம். அப்போது என்னைத் தேடுவார்கள். இன்னொருமுறை மரணத்தின் வாய்க்குள் சென்றுவருவது சாத்தியமில்லை. 2007-ம் ஆண்டு அகமதுவும் அவர் மனைவியும் ஜோர்டான் வந்துசேர்ந்தனர். இருவரும் இப்போது அகதிகள்.

‘என்னிடம் ஒன்றுமே இல்லை. ஒரே ஒரு பேனா வாங்க வேண்டும் என்று விரும்பினேன். முடியவில்லை. என்னால் ஜோர்டானில் வேலை எதுவும் செய்ய முடியாது. நான் அகதி என்பதால் பணியாற்றுவதற்கான ஆவணங்களை என்னால் பெறமுடியாது. ஒரே ஒரு பென்சில் மட்டும் வாங்கினேன். சிறிய நோட்டுப் புத்தகத்தில் எழுத ஆரம்பித்தேன்.’ அந்தப் பென்சிலும் நோட்டும் எப்படிக் கிடைத்தது என்பதையும் அகமது விவரித்தார். ‘அகதிகளுக்காகப் பணிபுரியும் ஒரு தொண்டு நிறுவனத்துக்காகச் சிறிது வேலை செய்தேன். நான் பத்திரிகையாளர் என்பதால் வகுப்பு எடுக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டார்கள். அப்போது பென்சிலும் நோட்டும் கிடைத்தன.’

அகமது தன் பையை இறுக்கப் பிடித்தபடி அந்த அறையில் இருந்த மற்ற அகதிகளுடன் சேர்ந்து அமர்ந்திருந்தார். ‘நான் ஃபலூஜாவைச்  சேர்ந்தவன் என்பதற்கான அத்தாட்சியை எனக்கு யார் அளித்தது தெரியுமா? இராக்கை ஆக்கிரமித்த அதே அமெரிக்க ராணுவம்தான். பிறகு ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடமிருந்து எனக்கான அடையாள அட்டை வந்தது. பார்க்கிறீர்களா?’ தன்னிடம் அதுவரை உரையாடிக்கொண்டிருந்த அமெரிக்கப் பத்திரிகையாளரிடம் தன் ஆவணத்தை நீட்டுகிறார் அகமது.

அகமது ஜோர்டான் வந்துசேர்ந்து பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.  இன்னமும் அவர் ஓர் அகதிதான். எந்த நாட்டுக்குச் செல்வது என்பதை ஓர் அகதி முடிவு செய்ய முடியாது. ஏதேனும் ஒரு நாடு அவரை ஏற்றுக்கொள்ள முன்வந்தால்தான் உண்டு. அப்படி ஏற்பதற்கு நேர்காணலில் தேர்ச்சிபெற வேண்டும். நீ ஃபலூஜாவில் என்ன செய்துகொண்டிருந்தாய்? அல் கொய்தாவுக்கும் உனக்கும் என்ன தொடர்பு? அல் கொய்தா ஏன் உன்னைக் கடத்த வேண்டும்? உன் தொழில் என்ன? நீ வேலை செய்த பத்திரிகை யாருடையது? அமெரிக்காவை விமர்சித்திருக்கிறாயா? மீண்டும் மீண்டும் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்து ஓய்ந்துபோய்விட்டார் அகமது.

p28e.jpg

அகமது மட்டுமன்று, அந்த அறையில் இருந்த 11 பேருமே ஏதேனும் ஒரு நாட்டிலிருந்து இன்றாவது அழைப்பு வராதா என்னும் எதிர்பார்ப்புடன் அங்கே காத்திருந்தனர். பல ஆண்டுகளாக அவர்கள் மீண்டும் மீண்டும் அந்த அலுவலகத்துக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய அகதி அட்டைகளைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து அவர்கள்  நேர்காணல்களில் பங்கேற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இன்னும் பத்தாண்டுகள் கழிந்தாலும்  அவர்கள் ஜோர்டானில் பணியாற்றவோ சம்பாதிக்கவோ முடியாது. முகாம்தான் ஒரே ஆதாரம். அவர்கள் எல்லோருமே தங்களுடைய படிப்பை, திறமையை அமைதியாக வீணடித்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருமுறையும் நம்பிக்கையோடு எல்லா ஆவணங்களையும் அவர்கள் கொண்டு வருவார்கள். திரும்பிப் போகும்போது முகம் சோர்ந்துபோயிருக்கும். இதென்ன வாழ்க்கை,  இதற்குப் போரிலேயே செத்திருக்கலாமே என்று தோன்றும். பிறகு மீண்டும் சில வார இடைவெளியில் மலர்ந்த முகத்துடன் திரும்பி வருவார்கள்.

அகமது நினைத்துக்கொண்டார். நான் அகதியாக மட்டும் இருந்திருந்தால் ஒருவேளை  புகலிடம் கிடைத்திருக்கலாம். ஆனால், முஸ்லிமாகவும் இருந்துவிட்டதால் அப்பாவி சிங்கத்தைக் கொன்றவனாக என்னை எல்லோரும் பார்க்கிறார்கள். நாங்கள் வேட்டைக்காரர்கள் அல்லர், வேட்டையாடப்படுபவர்கள் என்று எப்படி இந்த உலகுக்குப் புரியவைப்பது?

- சொந்தங்கள் வருவார்கள்

https://www.vikatan.com/

Posted

நான் அகதி! -7 - அகதிகளால் என்ன லாபம்?

 

 

கதிகளை ஏற்றுக்கொள்ள ஒரு நாடு தயங்குவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் அவற்றில் பிரதானமானது பொருளாதாரம். சிறிய குழந்தைகளோடு, கண்கள் முழுக்கக் கவலையுடன், மூட்டை முடிச்சுகளுடன் வந்து நிற்கும் அகதிகளைப் பார்க்க உண்மையிலேயே பாவமாகத்தான் இருக்கும். சரி போகட்டும் என்று கதவைத் திறந்துவிடலாம்தான். ஆனால், அவர்களை வால் பிடித்தபடியே இன்னொரு கூட்டம் திரண்டுவரும். கதவை மேலும் திறந்தோம் என்று வையுங்கள், அலை அலையாக அகதிகள் பொங்கிவர ஆரம்பித்துவிடுவார்கள். கண்ணுக்கே தெரியாத சிறிய ஓட்டை என்று விட்டுவிட்டால் முழுக் கப்பலும் கவிழ்ந்துவிடும். பிறகு வருத்தப்பட்டு என்ன பலன்?

p28b.jpg

சில முகாம்களில் அளிக்கப்படும் வசதிகளைப் பார்க்கும்போது நிஜமாகவே அகதிகள் அந்நாடுகளின் பொருளாதாரத்துக்குப் பெரும் சுமையாகவே இருக்கிறார்கள் என்றுதான் பலருக்குத் தோன்றும். சிரியாவிலிருந்தோ இராக்கிலிருந்தோ வந்துசேரும் அகதிகள் ஜெர்மனிக்கோ பிரிட்டனுக்கோ அமெரிக்காவுக்கோ சென்று குடியேறும்போது நிச்சயம் அவர்கள் இதுவரை வாழ்ந்த வாழ்வைவிடப் பல மடங்கு நல்ல, ஆடம்பரமான வாழ்வைத்தான் வாழப்போகிறார்கள். ஆம், அகதிகள் தங்கள் தாய்நாட்டில் பலவற்றை இழந்திருக்கிறார்கள், உண்மை. ஆனால் புது நாடு அவர்களுக்குக் குறைவாகவா அள்ளித் தந்திருக்கிறது? சுத்தமான சாலைகளையும் பளபளப்பான கட்டடங்களையும் அதிநவீன நாகரிக வாழ்வையும் அவர்கள் தங்கள் வாழ்நாளில் கண்டிருப்பார்களா? சற்றே குரூரமாகத் தோன்றக்கூடும் என்றாலும் போரும் வன்முறையும் ஒருவகையில் அகதிகளுக்கு நன்மையையே அளித்திருக்கிறது என்றுகூடச் சொல்லலாம் இல்லையா?

p28a.jpg

அதனால்தான் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் கதவுகளை இறுக்கமாக மூடிக்கொள்ள விரும்புகிறார். அகதிகளை அனுமதிக்க முடியாதபடிக்குச் சட்டத்தை மாற்ற அவர் துடித்தார். அது முடியாது என்னும் நிலையில் இயன்றவரை அகதிகளின் நுழைவைக் குறைத்துக் கொண்டுவருகிறார். அகதிகளை அனுமதிப்பது உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலை அளிக்கும் என்பது ஒரு பக்கமிருக்க, அவர்களால் அமெரிக்காவின் வளம், வேலை வாய்ப்புகள் அனைத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படும், தேசத்தின் பொருளாதாரத்தையே ஒரு கட்டத்தில் சீரழித்துவிடும் என்று வாதிடுகிறார் ட்ரம்ப். அகதிகளுக்காகச் செலவிடும் தொகை அதிகரித்துக்கொண்டே போகிறது. இன்னொரு பக்கம், அமெரிக்கர்களுக்காக அளிக்கப்படும் நலத்திட்டங்களை இந்த அகதிகளும் சட்டப்படி அனுபவிப்பதால் பண விரயம் அதிகரிக்கிறது என்கிறார் டிரம்ப்.
 
ஆனால் இது உண்மையல்ல. அகதிகளுக்காக ஒரு நாடு செலவிடும் தொகையை மட்டும் எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு அலறுவது அநீதியானது என்கிறார்கள் இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள். `நீ அகதிக்கு என்ன செய்திருக்கிறாய் என்று மட்டும் பார்க்காதே; அகதி உனக்கு என்ன செய்திருக்கிறார் என்றும் பார்’ என்பதுதான் அவர்களுடைய தர்க்கம். அகதிகள் அமெரிக்காவில் வாழ்கிறார்கள் என்றால் அவர்கள் மற்ற அமெரிக்கர்களைப் போல் அரசுக்கு வரி செலுத்துகிறார்கள் என்று பொருள். அதிக அகதிகள் என்றால் அரசுக்கு அதிக வரி வருமானம் என்று பொருள்.  உதாரணத்துக்கு செப்டம்பர் 2015-ல் வெளிவந்த ஓர் அறிக்கையை எடுத்துக்கொள்வோம். அதன்படி, பெரும்பாலான நாடுகளில் குடியேறியவர்கள் அதிக வருமான வரி செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். மேலும், அந்நாடுகளின் சமூக வளர்ச்சியில் அவர்களுடைய பங்களிப்பு கணிசமானதாக இருக்கிறது. இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பவர்கள் உலக வங்கி, சர்வதேசத் தொழிலாளர் ஆணையம் மற்றும் பணக்கார நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் `OECD’ என்னும் கூட்டமைப்பு.

அகதிகளால் அமெரிக்காவுக்குச் செலவு அதிகமா அல்லது வருமானம் அதிகமா என்பதைக் கண்டறிய ஃப்ரெஞ்சு பல்கலைக்கழகமொன்றில் பணிபுரியும் வில்லியன் இவான்ஸ் என்னும் பொருளாதார ஆய்வாளர் தன் உதவியாளருடன் சேர்ந்து ஓர் ஆய்வைச் சமீபத்தில் நடத்தி முடித்திருக்கிறார். அமெரிக்க அரசின் அதிகாரபூர்வக் கணக்கெடுப்பின் அடிப்படையில் அமெரிக்காவில் குடியேறிய அகதிகளின் விவரங்களை அவர் எடுத்துக்கொண்டார். அதில் 18 முதல் 45 வயது வரையிலான அகதிகளுக்காக அரசு தோராயமாக எவ்வளவு செலவழித்திருக்கிறது என்று கணக்கிட்டார். கடந்த இருபது ஆண்டுகளாக ஓர் அகதியைக் குடியமர்த்த அரசு மேற்கொண்டுள்ள செலவு, சுமார் 15,000 டாலர். அகதி ஒருவருக்கான சமூக நலத் திட்டங்களுக்கு 92,000 டாலர். மொத்தச் செலவு 1,07,000 டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் ஓர் அகதிக்கு சுமார் 70 லட்சம் ரூபாய் செலவு செய்கிறது அமெரிக்க அரசு. குடியமர்த்தப்பட்ட பிறகு இந்த  அகதிகளால் அமெரிக்காவில் பணியாற்ற முடியும். அந்த வகையில் ஓர் அகதி மூலமாக எவ்வளவு வரி வருவாய் அரசுக்கு அதே இருபது ஆண்டுகளில் கிடைத்திருக்கிறது என்பதைக் கணக்கிட்டார். கிடைத்த தொகை, 1,30,000 டாலர். அதாவது செலவழித்தது போகக் கூடுதலாக இருபதாயிரம் டாலருக்கும் அதிகமான வருவாயை ஓர் அகதியிடம் இருந்து அமெரிக்கா ஈட்டியிருக்கிறது.

p28c.jpg

மேலும் பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளன. முதல் சில ஆண்டுகள் அகதிகளுக்கு வேலை கிடைப்பது கடினமானதாக இருந்திருக்கிறது. அப்படியே கிடைத்தாலும் குறைவான ஊதியமே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆறு ஆண்டுகளுக்குப் பிறந்த அதே அகதிகள் மிக நல்ல வருமானத்தை ஈட்ட ஆரம்பித்துள்ளனர். அதே வயதுள்ள அமெரிக்கர்களைக் காட்டிலும் திறமையாகவும் அதிகமாகவும் உழைத்து இந்த அகதிகள் சம்பாதித்திருக்கின்றனர். அரசு வழங்கும் நலத்திட்டங்களால் பயனடைவதையும் அவர்கள் ஒரு கட்டத்துக்கு மேல் நிறுத்திக்கொண்டுவிட்டனர். ஆனால், அதே வயதுகொண்ட அமெரிக்கர்களோ இன்னமும் நலத்திட்டங்களுக்கு அரசின் கையை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தனர். இதில் கவனிக்கவேண்டிய விஷயம், ஓர் அகதிக்கும் ஓர் அமெரிக்கருக்கும் சராசரி வருமானம் ஒன்றுபோல் இருப்பதில்லை. ஒரே வேலையைச் செய்தாலும் ஓர் அகதி அமெரிக்கரைக் காட்டிலும் குறைவான வருமானமே பெறுகிறார்.

ஆனால், ட்ரம்ப் இத்தகைய ஆய்வுகளை மட்டுமல்ல, கள யதார்த்தங்களையும்கூட ஏற்பவர் அல்லர்.  அதனால்தான் அவர் பதவியேற்ற நாள் தொடங்கி அமெரிக்கா அனுமதிக்கும் அகதிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. மிகச் சமீபத்திய கணக்கின்படி, அக்டோபர் 2016 வாக்கில் 9,945 அகதிகளை அமெரிக்கா அனுமதித்தது. ஏப்ரல் 2017-ல் இது 3,316 ஆகக் குறைந்துவிட்டது. டெக்சாஸ், கலிஃபோர்னியா, அரிசோனா என்று ஒவ்வொரு பகுதியும் அகதிகளை அனுமதிப்பதைக் குறைத்துக்கொண்டுவருகிறது.

p28d.jpg

அகதிகளை அனுமதிப்பது குறித்த சட்டம் 1980-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டபோது அமெரிக்கா இரண்டு லட்சம் அகதிகளை வரவேற்று ஏற்றுக்கொண்டது. அதற்குப் பிறகு படிப்படியாக இந்த எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் குறைய ஆரம்பித்தது. அதிகபட்சம் ஓர் ஆண்டுக்கு 76,000 அகதிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்ச வரம்பு விதித்தார் ஒபாமா. சிரியா சிதற ஆரம்பித்தபோது இந்த எண்ணிக்கையை ஒபாமா 1,10,000 ஆக உயர்த்தினார். ட்ரம்ப்பின் சமீபத்திய உச்சவரம்பு, 45,000. இதுவரை அமெரிக்கா விதித்த உச்ச வரம்பில் மிகக் குறைவானது இதுவே.

அகதிகளைக் குடியமர்த்துவதற்கு அமெரிக்கா மிகப் பெரும் விலையை ஒவ்வோர் ஆண்டும் கொடுத்துவருகிறது என்பதுதான் ட்ரம்ப்பின் வாதம். இந்த வாதத்துக்கு வலுச்சேர்க்கப் புள்ளிவிவரங்கள் தேவை என்று கடந்த மார்ச் மாதம் கேட்டிருந்தார் ட்ரம்ப். HHS அறிக்கை (ஹெல்த் அண்டு ஹியூமன் சர்வீசஸ் துறை) என்னும் பெயரில் அந்தப் புள்ளிவிவரங்கள் ட்ரம்ப்பிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் ஒரு சிக்கல். அகதிகளுக்காக அமெரிக்க அரசு செய்யும் செலவைவிட அகதிகள்மூலம் அமெரிக்க அரசு அதிகம் சம்பாதிக்கிறது என்னும் உண்மையைப் போட்டுடைத்திருந்தது அந்த அறிக்கை. ஆதாரத்துக்கு விரிவான வரவு, செலவுக் கணக்கும் இருந்தது. செலவு போக, 63 பில்லியன் டாலர் வருமானத்தை அகதிகள்மூலம் அமெரிக்கா ஈட்டியிருக்கிறது. இதன் பொருள், டொனால்ட் ட்ரம்ப் கூறிவருவது பொய் என்பதே.

தடுத்து நிறுத்தியதோடு நில்லாமல் வழக்கமாகக் கூறிவரும் அதே பொய்களைச் சிறிதும் தயக்கமின்றி மீண்டும் சொல்லத் தொடங்கி விட்டார் ட்ரம்ப். அவரைப் பொறுத்தவரை புள்ளிவிவரங்கள் அநாவசியம். அகதிகள் பொருளாதாரச் சுமை என்று அவர் முடிவு செய்துவிட்டார். அந்த முடிவை எதன் பொருட்டும் மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை அவர். ட்ரம்ப் மட்டுமல்ல, பலரும் இதே தவறான முன்முடிவுடன்தான் அகதிகளை அணுகிக்கொண்டிருக்கிறார்கள். அகதிகளை மட்டுமல்ல, ஆசியாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் முறைப்படி ஆவணங்களுடன் குடியேறுபவர்களைக்கூட ட்ரம்ப் தடுத்து நிறுத்தவே விரும்புகிறார். குடியேறிகளும் அகதிகளும் அமெரிக்கர்களின்  வேலை வாய்ப்புகளை, நலத் திட்டங்களை அபகரித்துக் கொள்கிறார்கள் என்று கூச்சலிடுவதுதான் அவருடைய அரசியலாக இருக்கிறது.

இத்தனைக்கும், அமெரிக்காவின் அடையாளமாக மாறிவிட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு குடியேறியின் மகன் என்பதை அமெரிக்கா அவ்வப்போது ட்ரம்புக்கு நினைவுபடுத்திக் கொண்டுதான் இருக்கிறது. ஸ்டீவ் ஜாப்ஸின் தந்தை படிப்பதற்காக 1950களில் சிரியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர். பெயர், அப்துல் ஃபதா ஜண்டாலி. ‘மிஸ்டர் ட்ரம்ப், ஒருவேளை நீங்கள் அப்போது அதிபராக இருந்திருந்தால் ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாகியிருக்கமாட்டார்!’ என்கிறது ஒரு ட்வீட். ‘ஸ்டீவ் ஜாப்ஸின் அப்பா சிரியாவிலிருந்து வந்தவர். யாரைத் தடுத்துநிறுத்துவது என்று முடிவு செய்யும்போது கவனமாக இருங்கள்’ என்கிறது ட்ரம்ப்புக்கான இன்னொரு ட்வீட்.

அகதிகளால் லாபமே கிடைக்கும். எனவே கதவைத் திறங்கள் என்று கோருவது ட்ரம்ப் போன்றவர்களுக்கான ஒரு நல்ல பதிலடியாக மட்டுமே இருக்கும். அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கான தார்மிக நியாயம் என்பது முற்றிலும் வேறு. ஆயிரம் அகதிகளை உள்ளே அனுமதித்தால் பதிலுக்கு அவர்கள் எனக்கு என்ன தருவார்கள் என்னும் கேள்வியைக் கடந்துசென்றால் இந்த நியாயத்தை தரிசிக்க முடியும் என்கிறார், அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஜெஃப்ரி சாக்ஸ்.

அகதிகள் என்பவர்கள் பிரச்னைக்குரிய இடங்களிலிருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத் தப்பியோடி வருபவர்கள். இந்த எளிய உண்மையை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. அவர்களைக் காப்பாற்றவேண்டியது நம் கடமை. சக மனிதர்கள் செத்து விழுந்தால் பரவாயில்லை, எனக்கு என் நாடும் என் மக்களும் மட்டும்தான் முக்கியம் என்று பொறுப்புள்ள ஓர் அரசாங்கம் சொல்லாது. மனிதர்களை அழிவிலிருந்து மீட்டு அவர்களுக்கு வாழ்வளிப்பது அரசாங்கங்களின் கடமை. உன் நாடு போரிட்டால் அதற்கு நான் என்ன செய்வது என்று சொல்லி அகதிகளைத் திருப்பியனுப்புவது அநீதியான செயல். அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான ஒரு நடவடிக்கையும்கூட.

இருந்தும் அரசாங்கங்கள் இதைத்தான் உலகெங்கும் செய்துகொண்டிருக்கின்றன. அகதிகளை ஏற்கவேண்டுமா, வேண்டாமா என்பதை சம்பந்தப்பட்ட நாடுதான் முடிவு செய்கிறது. விருப்பமிருந்தால் கதவைத் திறக்கிறது. பிடிக்கவில்லையென்றால் விரட்டுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான சட்டம். `இந்த ஆண்டு இத்தனை அகதிகளை மட்டுமே ஏற்பேன்’ என்று ஒரு நாடு உச்ச வரம்பு விதிக்கலாம். அல்லது, `ஒரேயொரு அகதியைக்கூட ஏற்க மாட்டேன்’ என்று எல்லையில் பூட்டுப் போடலாம். மீறி உள்ளே வரத் துடிப்பவர்களைக் கைது செய்து சிறையில் தள்ளுவதற்கும் அந்நாட்டுக்கு உரிமை இருக்கிறது. அகதிகளை ஏற்க மறுப்பதற்குக் காரணங்களைச் சொல்லவேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. நாம் எல்லோருமே ஒருவரோடு ஒருவர் இணைக்கப்பட்டுள்ளோம் என்பதை நினைவுடுத்தவேண்டியிருக்கிறது என்கிறார் ஜெஃப்ரி சாக்ஸ். எபோலா பிரச்னையாக இருந்தாலும் சரி, புவி சூடேற்றமாக இருந்தாலும் சரி; எல்லோரும் ஒன்றுபட்டுதான் தீர்வு காணவேண்டியிருக்கிறது. பிரச்னைகளுக்கு எல்லைகள் கிடையாது. தீர்வுகள் காணவேண்டுமானால் எல்லைகளை நாம் கடந்தாக வேண்டும்.

p28e.jpg

2005-ம் ஆண்டு ஷரீஃபா டா என்னும் பர்மியப் பெண் தன் குடும்பத்தினருடன் 9000 மைல் பயணம் செய்து அமெரிக்காவில் அகதியாகக் குடியேறினார். `‘நான் தற்சமயம் டெக்சாஸில் தங்கியிருக்கிறேன். நானும் என் கணவரும் எங்களுடைய மூன்று குழந்தைகளுடன் அகதிகளாக இங்கே வந்துசேர்ந்தோம். அமெரிக்காவில், எங்கள் வாழ்நாளிலேயே முதல்முறையாகப்  பாதுகாப்பாக உணர்ந்தோம்.’’

வன்முறையிலும் போரிலும் சிக்கிச் சீரழியும் குடும்பங்களுக்கு ஒரு நாடு அளிக்கும் அதிகபட்ச உதவி இதுவே. அகதிகள் கப்பலின் ஓட்டைகள் அல்ல. அவர்களைச் சேர்த்து அணைத்துக்கொண்டு செலுத்தும்போது கப்பல் மேலதிக வேகத்துடன் பயணம் செய்கிறது. மூழ்கட்டும் நமக்கென்ன என்று கருதுபவர்கள்தான் ஆபத்தான ஓட்டைகள். அவர்கள் செலுத்தும் கப்பல் நிறைய தள்ளாட்டங்களைச் சந்திக்க நேரிடும்.

ஷரீஃபா டா தொடர்கிறார், ‘`அதிபர் தேர்தல் பிரசாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் குதித்தபோது என்னுடைய பாதுகாப்பு உணர்வு அகன்று முதல்முறையாக நான் அச்சப்பட ஆரம்பித்தேன். இப்போது ட்ரம்ப் அதிபராகிவிட்டார். அமெரிக்கா எனக்கு இதுவரை அளித்துவந்த பாதுகாப்பு உணர்வு விலகிச் சென்றுவிட்டது போல் இருக்கிறது. ட்ரம்ப் வெறுப்பையும் அச்சத்தையும் விதைத்து ஆண்டு கொண்டிருக்கிறார். அக்கம்பக்கத்தினரும் அவரைப் பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்களோ என்று அஞ்சுகிறேன். அப்படி நடந்தால் என் குடும்பத்தின் நலன் பாதிக்கப்படும் என்று எனக்குத் தெரியும்.’’

`கவலைப்படாதீர்கள் அம்மா, அப்படியெல்லாம் நடக்காது, நாங்கள் இருக்கிறோம்’ என்று, ஷரீஃபா டாவின் நடுங்கும் கரங்களைப் பற்றி யார் ஆறுதல் அளிக்கப்போகிறார்கள்?

- சொந்தங்கள் வருவார்கள்

https://www.vikatan.com

Posted

நான் அகதி - 8 - வெறுக்கத்தக்க அமைதி

 

 

நெல்சன் மண்டேலாவுடன் இணைந்து இனவொதுக்கலுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் டெஸ்மாண்ட் டுட்டு. ஆங்கிலிக்கன் திருச்சபையின் முன்னாள் பேராயர். உலகம் நன்கறிந்த மனித உரிமைப் போராளி.  அமைதிக்கான நோபல் விருது பெற்றவர். இந்திய அரசிடமிருந்து காந்தி அமைதிப் பரிசையும் பெற்றிருக்கிறார். தற்சமயம் இவருக்கு 85 வயதாகிறது. நீண்டகாலமாக ஓய்வில் இருந்துவரும் டுட்டு முதல்முறையாக கடந்த செப்டம்பர் 7-ம் தேதி மீண்டும் உலகுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்.  தன்னைப் போலவே அமைதிக்கான  நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சிக்கு டுட்டு எழுதியுள்ள திறந்த மடல் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.  p28b.jpg

ஆங் சான் சூச்சியை அன்புக்குரிய சகோதரி என்று நேசத்துடன் அழைப்பது டுட்டுவின் வழக்கம். இப்போது எழுதிய கடிதத்தையும்கூட அப்படித்தான் அவர் தொடங்கியிருக்கிறார். `‘பல ஆண்டுகளாக உங்கள் புகைப்படத்தை என் மேஜைமீது வைத்திருந்தேன். மியான்மர் மக்களுக்காக நீங்கள் செய்த தியாகங்களையும் நீங்கள் சந்திக்க நேர்ந்த அநீதிகளையும் அந்தப் படம் எனக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். நீதியின் அடையாளமாகவும்  அந்தப் படம் எனக்குக் காட்சியளித்தது.

பொது வாழ்வில் நீங்கள் அடியெடுத்துவைத்த போது எங்கள் கவலையெல்லாம் பறந்துபோனது. ரோஹிங்கியா மக்கள்மீதான வன்முறை குறித்து இனி கவலைப்படவேண்டாம், இனி எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்துக்கொண்டோம். ஆனால் நடக்கவில்லை. இன அழிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது அல்லது அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

p28a.jpg

எனக்கு வயதாகிவிட்டது. உடல் தளர்ந்து விட்டது. முறைப்படி ஓய்வு பெற்றுவிட்டேன். பொது விவகாரங்களில் அமைதி காக்கவேண்டும் என்று சபதமும் ஏற்றுக்கொண்டிருந்தேன். ஆனால், இப்போது வாய் திறக்கவேண்டிய அவசியம் நேர்ந்துவிட்டது. ஆழமான சோகம் என்னைப் பேச வைத்துவிட்டது.

ஒரு நாடு தன் மண்ணில் வாழும் எல்லோருடைய உரிமைகளையும் விதிவிலக்கின்றி ஒன்றுபோல் மதிக்கவேண்டும். தன் மக்களுக்கு அமைதியான வாழ்வை அளிப்பது ஓர் அரசின் கடமை. மக்களின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அந்த நாட்டின் சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். அந்த வகையில், சூச்சி தலைமை தாங்கி வழிநடத்தும் நாட்டை இனியும் சுதந்தர நாடு என்று அழைக்க முடியாது.

 உங்களுக்குத் துணிச்சல் பிறக்கவேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம். நீதிக்காக நீங்கள் குரல்கொடுக்க வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம். மனித உரிமைகளுக்காகவும் ஒற்றுமைக்காகவும் உங்கள் குரல் ஒலிக்கவேண்டும். அதிகரித்துக்கொண்டே போகும் பதற்றத்தை நீங்கள் உடனடியாகத் தலையிட்டுக் குறைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.’’ என்று எழுதியிருந்தார் டெஸ்மாண்ட் டுட்டு.

அமைதிக்கான நோபல் பரிசை வாங்கிய அன்புக்குரிய சகோதரி, ரோஹிங்கியா விவகாரத்தில் அமைதி காப்பதை டுட்டுவால் ஏற்க முடியவில்லை. நெஞ்சில் தைத்த முள்ளாக அந்த அமைதி அவரை வாட்டியிருக்கிறது. ராணுவ ஆட்சியின் பிடியிலிருந்த மியான்மரை ஜனநாயகத்தை நோக்கி நகர்த்திச் செல்ல வேண்டும் என்று பலமுறை குரல் கொடுத்த சூச்சி, தன் சொந்த நாட்டில் நடைபெறும் இனவொழிப்பைக் கண்டும் காணாமலும் கடந்து செல்வதைவிடப் பெரிய முரண் இருக்க முடியுமா?  ‘`இந்த உயரத்தை அடைய உங்களுக்கு அமைதி உதவியிருக்கிறது என்றால், அதற்காக நீங்கள் கொடுக்க வேண்டிய விலை மிகப் பெரியதாக இருக்கும்’’ என்று எச்சரிக்கிறார் டுட்டு.

சூச்சியைப்போல், டுட்டுவைப்போல் உலக அமைதிக்கான நோபல்  விருதை வென்ற மலாலாவும் தன் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார். நாட்டைப் பாதுகாக்க வேண்டிய படைகள் அதே நாட்டைச் சேர்ந்த ஒரு பிரிவினர்மீது வன்முறையைப் பிரயோகிப்பதை மலாலாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அந்த வன்முறை எப்படியிருக்கும் என்பதை நேரடியாக உணர்ந்தவர் அவர். கிட்டத்தட்ட அதனால் கடுமையாக பாதிக்கப்பட்டவரும்கூட. ``ஒவ்வொருமுறை செய்தி வெளிவரும்போதும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் துயரங்களை நினைத்து என் இதயம் உடைந்துபோகும்’’ என்கிறார் மலாலா.

சூச்சிக்காக எழுதப்பட்ட தனது கடிதத்தில் மலாலா இரண்டு விஷயங்களைக் கவனப்படுத்துகிறார். முதலில், குழந்தைகள். வன்முறை நிறைந்த இடத்தில் குழந்தைகளாக இருப்பது கொடூரமானது. வன்முறை குழந்தைகளின் உடலை மட்டுமன்று,  உள்ளத்தையும் சிதைத்துவிடும். இதை மலாலா ஸ்வாட் பள்ளத்தாக்கில் கண்கூடாகப் பார்த்திருக்கிறார். அவர் கேள்விப்படும் செய்திகள், மியான்மர் மற்றொரு ஸ்வாட் பள்ளத்தாக்காக மாறிக்கொண்டிருப்பதையே உறுதிப்படுத்துகின்றன. அதே பயங்கரவாதம்,  அதே வன்முறை. அம்மா, அப்பாவை இழந்து வீதிகளில் அழுதுகொண்டு ஓடும் குழந்தைகளின் முகங்களைத் தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும் கண்டு கலங்கியிருக்கிறார் மலாலா. ஸ்வாட் பள்ளத்தாக்கில் இந்நிலை ஏற்பட்டதற்குக் காரணம் பயங்கரவாதிகள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், மியான்மரில் அதேபோல் குழந்தைகள் பரிதவித்து நிற்பதற்குக் காரணம் அந்நாட்டின் அரசேதான் என்பது எவ்வளவு பெரிய கொடூரம்?

மலாலாவைப் பாதித்த முதல் விஷயம் இதுதான். ‘`மியான்மர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்படும் சிறு குழந்தைகளின் படங்களை நான் பார்த்தேன். இந்தக் குழந்தைகள் ஒருவரையும் தாக்கியதில்லை. இருந்தாலும் அவர்களுடைய வீடுகள் கொளுத்தப்படுகின்றன. இது ஏன் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்’’ என்கிறார் மலாலா. இது பௌத்தர்களின் நிலம், வந்தேறி ரோஹிங்கியாக்களுக்கு இங்கே இடமில்லை என்னும் வாதம் அவரைத் திருப்திப் படுத்தவில்லை. ‘`அவர்களுடைய வீடு மியான்மர் கிடையாது என்றால் வேறு எங்கே இருக்கிறது?’’

ரோஹிங்கியாக்கள் பிறந்தது பர்மாவில், அவர்களுடைய தாய்நாடு அதுதான். பல தலைமுறைகளாக பர்மாவில் வாழ்ந்துவரும் ரோஹிங்கியா முஸ்லிம்களை  மியான்மரின் குடிமக்களாக அங்கீகரிக்கவேண்டும் என்கிறார் மலாலா. பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ தற்சமயம் ரோஹிங்கியாக்களால் நம்பமுடிந்த ஒரே நாடு பங்களாதேஷ் மட்டுமே என்பதையும் மலாலா நன்கு உணர்ந்திருக்கிறார்.  பர்மாவிலிருந்து உயிர் தப்பியோடும் லட்சக்கணக்கான ரோஹிங்கியாக்களின் நம்பிக்கை வங்காளதேசம் தான். `‘கொடூரமான வன்முறைத் தாக்குதல்களிலிருந்து தப்பியோடும் ரோஹிங்கியாக் குடும்பங்களுக்கு பங்களாதேஷைப்போல் பிற நாடுகளும் உணவு, இருப்பிடம் ஆகிய உதவிகளை அளிக்க முன்வர வேண்டும். இது பாகிஸ்தானுக்கும் பொருந்தும்’’ என்கிறார் மலாலா.

``ரோஹிங்கியா முஸ்லிம்களின் வேதனையான, வெட்கக்கேடான  துயரத்துக்கு எதிராக நான் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறேன். நோபல் விருது பெற்றவரும் இதைச் செய்யவேண்டும் என்று காத்திருக்கிறேன்’’ என்கிறார் மலாலா. சூச்சிக்கு இவர் விடுக்கும் செய்தி இதுதான்: ``தயவு செய்து உங்கள் அமைதியைக் கலையுங்கள்!”

p28c.jpg

டுட்டுவின் செய்தியும் இதுவேதான். நோபல் விருது பெற்ற மூத்த போராளியும் இளம் போராளியும் தனித்தனியே சூச்சிக்குக் கோரிக்கை அனுப்பிவிட்டனர். தயவுசெய்து உங்கள் உதடுகளைப் பிரித்துப் பேசுங்கள் என்று மன்றாடிப் பார்த்துவிட்டனர். ஆனால், சூச்சியிடமிருந்து எந்த அசைவும் இல்லை.

இந்த இருவருக்கு மட்டுமன்று, உலகுக்கும்கூடப் புரியவில்லை. மியான்மரின் போராளிக்கு என்ன ஆகிவிட்டது? அயல்நாடுகளில் வளர்ந்து, கல்வி பயின்று 1989-ம் ஆண்டு நாடு திரும்பிய சூச்சியை பர்மிய ராணுவ ஆட்சியாளர்கள் வீட்டுச் சிறையில் அடைத்தனர். அமைதிக்கான நோபல் விருது பெற்ற பிறகும்  கிட்டத்தட்ட 15 ஆண்டுக்காலம் அடைபட்டுக் கிடந்த சூச்சி, நவம்பர் 2010-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். நவம்பர் 2015 தேர்தலில் போட்டியிட்ட சூச்சியின் நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரஸி கட்சி வரலாறு காணாத வெற்றியை ஈட்டி மியான்மர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தையும் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரத்தையும் பெற்றது. அதிபர் பதவியில் வேறொருவரை அமரவைத்துவிட்டு அவருக்கும் மேலான ஒரு பதவியை உருவாக்கி (ஸ்டேட் கவுன்சிலர்) தன்னை அதில் பொருத்திக் கொண்டார் சூச்சி. எந்த மியான்மர் அவரை வீட்டுக் காவலில் வைத்ததோ அந்த மியான்மர் அரசு இப்போது சூச்சியின் கரங்களில்.

அதைக் கண்டு முதலில் மகிழ்ந்தவர்கள் அநேகமாக ரோஹிங்கியா மக்களாகத்தான் இருக்கவேண்டும். தொடர்ச்சியாக ராணுவச் சீருடை அணிந்தவர்களையே ஆட்சியாளர்களாகக் கண்டுவந்த ரோஹிங்கியாக்கள் முதல்முறையாக வண்ணப் பூக்களையும் புன்னகையையும் சூடி வலம்வந்த சூச்சியைக் கண்டு நம்பிக்கை கொண்டார்கள். ``எங்கள் நாடு அமைதிக்காக நீண்டகாலம் காத்துக்கொண்டிருக்கிறது’’ என்று அவர் அறிவித்தபோது, அவர் நம்மைப் பற்றிதான் பேசுகிறார் என்று ரோஹிங்கியாக்கள் உணர்ச்சிவயப்பட்டனர். `மியான்மரின் 90 சதவிகித பௌத்தர்கள் இனி சூச்சியைக் கண்டு அஞ்சிப் பின்வாங்குவார்கள், வந்தேறி என்று நாம் இனியும் தூற்றப்பட மாட்டோம், இனி அரசுப்படைகளால் தாக்கப்பட மாட்டோம்’ என்று அவர்கள் கனவு காண ஆரம்பித்தனர். `இனி, சூச்சி எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்.  குழந்தைகளே,  ஒரு புதிய பர்மாவை இனி நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். இனி இங்கே நமக்கான குரல் ஒலிக்கும்’ என்று எதிர்பார்த்தனர்.

அந்தக் குரலை அவர்கள் கேட்கவும் செய்தனர். சூச்சி பேசினார். ``இங்கே எந்த இனவொழிப்பும் நடக்கவில்லை. எந்த மனித உரிமை மீறலும் நிகழவில்லை. உலகம் எங்கள் நாட்டைப் பற்றித் தவறான செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறது.  அரசுப் படைகள் ரோஹிங்கியாக்களைத் தாக்கிவருவதாகவும் நாட்டைவிட்டு விரட்டிவருவதாகவும் சொல்லப்படுவது உண்மையல்ல. உண்மையில், அரசுப் படைகள் பயங்கரவாதிகளுக்கு எதிராகத்தான் நடவடிக்கை எடுத்துவருகிறது. அரசுப் படைகள் வன்முறையில் ஈடுபடவில்லை,  வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவரத்தான் முயன்றுவருகிறது. நாங்கள் பிரச்னையைத் தோற்றுவிக்கவில்லை, தீர்க்கத்தான் விரும்புகிறோம்’’ என்றார்.

சூச்சி தொடர்ந்து பேசினார். ``ரோஹிங்கியாக்களின் குடிசைகள் தீக்கிரையாக்கப்படவில்லை. அவர்கள் தாங்களாகவே தங்கள் குடிசைகளுக்குத் தீ வைத்துக் கொள்கிறார்கள். அரசுப் படைகள்மீது எல்லோரும் குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால், எப்படி அரசுப் படைகளைச் சிலர் குற்றம் சொல்கிறார்களோ அப்படியே அரசுப் படைகளும் வேறு சிலரைக் குற்றம் சொல்கிறார்கள். குற்றச்சாட்டு, எதிர்க் குற்றச்சாட்டு இரண்டையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும்.  ஒருபக்கத்தை மட்டும் பார்க்கக்கூடாது’’ என்று ஒருதலைப்பட்சமாகப் பேசினார் சூச்சி.

தங்களுடைய அத்தனை எதிர்பார்ப்புகளும் அத்தனை கனவுகளும் அத்தனை பிரார்த்தனைகளும் முடிவுக்கு வந்த அந்தத் தருணத்தை ரோஹிங்கியா மக்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க மறக்கப்போவதில்லை. ஏன் இப்படி நிகழவேண்டும் என்று அவர்கள் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சொற்களெல்லாம் உண்மையிலேயே அவரிடமிருந்து புறப்பட்டு வந்தவையா அல்லது அவர் வகிக்கும் பதவியின் குரலா? உண்மையில் அவர் நல்லவர்தான், ராணுவம்தான் அவரைக் கட்டாயப்படுத்தி இப்படியெல்லாம் பேச வைக்கிறது, பாவம் அவர் என்ன செய்வார் என்று பரிதாபப்படுகிறவர்களும்  இருக்கத்தான் செய்கிறார்கள்.

சூச்சி மியான்மரின் நம்பிக்கை நட்சத்திரம் என்று நாம் நினைத்திருந்தோம். தவறு. அவர் பெரும்பான்மை பர்மியர்களின் தலைவர் மட்டுமே என்கிறார்கள் வேறு சிலர். அவர் 90 சதவிகித மக்களின் அணியில் இடம்பெற்றிருக்கவே விரும்புகிறார்.  அவர்களுக்குச் சூச்சி தேவைப் படுகிறார்கள். சூச்சிக்கும் அவர்கள் தேவை. இது ஓர் ஒப்பந்தம். இரு தரப்புக்கும் நலனளிக்கும் ஒப்பந்தம். ஒரு தலைவர் நீதியின் பக்கம் நிற்க வேண்டும் என்று அவசியமில்லை, பெரும்பான்மையின் பக்கம் நின்றாலே போதும். ஜனநாயகமோ நீதியோ அல்ல, ஓட்டுகளே அவருக்கு இப்போது முக்கியமாக இருக்கிறது. இமாலய வெற்றியின் மிதப்பில் இப்போது அவர் பூரித்துக் கிடக்கிறார். இந்தப் பூரிப்பு அவருக்கு முக்கியமானதாக இருக்கிறது. இப்போது அவரால் நம்மைப் பற்றிச் சிந்திக்கக்கூட முடியாது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ரோஹிங்கியா முஸ்லிம்களை ஆதரிப்பதால் அவருக்கு ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா?

மாறாக, கெட்ட பெயரே கிடைக்கும். நீதிக்குக் குரல் கொடுப்பதாக நினைத்துக்கொண்டு அவர் நமக்காகப் பேசினால் ஒட்டுமொத்த பர்மாவும் அவரை வெறுத்தொதுக்க ஆரம்பித்துவிடும். அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குரல் கொடுக்கும் சில மனித உரிமைப் போராளிகளுக்காகவும் ஒருசில நோபல் விருதாளர்களுக்காகவும் சூச்சி தன் அரசியல் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்வாரா என்ன? இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு நாம் தெளிவடைய வேண்டும். இது நம் போராட்டம். இது நம் போர். நம்முடையது மூழ்கும் கப்பல். ‘ஓடிவந்து இதில் தாவிக் குதிக்க ஒருவரும் விரும்பமாட்டார்கள்;  அகதிகளைத் தவிர’ என்கிறார்கள் பாதிக்கப்பட்டிருக்கும் ரோஹிங்கியாக்கள்.

p28d.jpg

மலாலாவும் டுட்டுவும் சூச்சி வாய் திறக்க வேண்டும் என்கின்றனர். அவர் வாய் திறக்கும் ஒவ்வொருமுறையும் எங்கள் வலி அதிகரிக்கவே செய்கிறது என்கின்றனர் ரோஹிங்கியாக்கள். `எங்கள்மீதான இனவொழிப்புக்குக் காரணம் நாங்கள்தான் என்கிறார் அவர். எங்கள் குழந்தைகள் துப்பாக்கிகளைக் கண்டு வீறிட்டு அழுவதற்குக் காரணம் எங்கள் குழந்தைகள்தான் என்று அவர் நம்பச் சொல்கிறார். மியான்மர் ராணுவம் எங்களைத் துரத்தவில்லை, நாங்களே எங்களை வெளியேற்றிக்கொண்டிருக்கிறோம். மியான்மர் எங்களைத் தாக்கவில்லை, நாங்களே எங்களை அழித்துக்கொள்கிறோம். எங்களை நாங்களே வெறுத்துக்கொள்கிறோம். நாங்களே எங்களை அகதிகளாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ரோஹிங்கியாவும் இதை நம்பவேண்டும் என்று அவர் விரும்புகிறார். இப்படி நம்புவது அவருக்கு வேண்டுமானால் அனுகூலமாக இருக்கலாம். நாங்களுமா அதைச் செய்யவேண்டும்?’

டெஸ்மாண்ட் டுட்டு தன்னுடைய அன்புக்குரிய சகோதரியின் புகைப்படத்தை இன்னமும் மேஜையின்மீது வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை. அவரைப் போலவே பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு கல்லூரியும் தனது கூடத்தில் சூச்சியின் புகைப்படத்தை மாட்டி வைத்திருந்தது. 1960களில் சூச்சி அரசியல், தத்துவம், பொருளாதாரம் பயின்றது இங்கேதான். தன்னுடைய 67வது பிறந்தநாளை சூச்சி இங்கே வந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். அந்த மகிழ்ச்சியில் பங்கேற்கும் விதமாகத் தன்னுடைய பெருமிதத்துக்குரிய பழைய மாணவிக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது ஆக்ஸ்ஃபோர்டு. ஆனால், இனியும் அதே பெருமித உணர்வைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்று ஆக்ஸ்ஃபோர்டுக்குத் தெரியவில்லை. ரோஹிங்கியா முஸ்லிம்கள் விவகாரத்தில் சூச்சியின் அணுகுமுறை ஏற்கத்தக்கதாக இல்லை என்கிறது அந்தப் பல்கலைக்கழகம். அத்தோடு சூச்சியின்  படத்தை  அகற்றி சரக்கு அறையில் ஒரு மூலையில் கிடத்தியுள்ளது.

சூச்சி தன் குடிமக்களைப் பாரபட்சமின்றி நடத்தவேண்டும் என்று விரும்புகிறோம். அதை அவர் செய்வார் என்று நம்புகிறோம் என்கிறது ஆக்ஸ்ஃபோர்டு. டுட்டுவும் மலாலாவும்கூட இதே நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். உலகின் நம்பிக்கையும் இதுதான். ஆனால், ரோஹிங்கியா அகதிகள் நம்பிக்கை குறித்துப் பேசத் தயங்குகிறார்கள். `எங்களுடைய உடைமை களையும் உறவினர்களையும் குழந்தைகளையும் நண்பர்களையும் தாய் மண்ணையும் இழப்பதற்கு முன்னால் நாங்கள் முதலில் துறந்தது எங்கள் நம்பிக்கையைத்தான். நம்பிக்கை என்னும் சுமையை நாங்கள் சுமக்க விரும்பவில்லை. அதற்கான வலு எங்களிடம் இல்லை, மன்னித்துக்கொள்ளுங்கள்.’

- சொந்தங்கள் வருவார்கள்

https://www.vikatan.com

Posted

நான் அகதி - 9 - அகதிகளை உற்பத்தி செய்வது எப்படி?

 

 

``இது என்னுடைய கிராமம் என்பதற்காகச் சொல்லவில்லை. நிஜமாகவே அல் வலாஜா, உலகிலேயே மிக அழகான ஓரிடம்’’ என்கிறார் ஷீரின் அல் அராஜ். பாலஸ்தீனத்துக்காகக் குரல்கொடுத்துவரும் ஒரு செயற்பாட்டாளர் இவர். மேற்குக் கரையில் அமைந்திருக்கும் அல் வலாஜா அதிகம் அறியப்படாத, அதே p28bb.jpgசமயம் அபூர்வமான ஒரு சிறிய கிராமம். பாலைவனம்போல் வறண்டிருக்கும் நீண்ட நிலப்பகுதிகளுக்கு மத்தியில் இந்த ஒரு கிராமம் மட்டும் பச்சைப் பசேலென்று  பூத்துக் கிடக்கிறது. ஆயிரமாண்டுக்கால உழைப்பில்  பாலஸ்தீனர்கள் இந்த  அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், இந்த அதிசயத்தை அவர்களால் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளமுடியுமா என்று தெரியவில்லை.

``நான் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன், எங்குமே என்னுடைய அல் வலாஜா போன்றதோர் இடத்தைக் கண்டதில்லை. ஆனால், இன்று என் அழகிய கிராமம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் சீரழிந்துகொண்டிருக்கிறது’’ என்கிறார் ஷீரின். ``என் கிராமம் தனது தனித்துவத்தை இழந்துகொண்டிருக்கிறது. என் மக்கள் தங்களுடைய அடையாளத்தை இழந்துகொண்டிருக்கிறார்கள். பாலஸ்தீனத்தின் துயரத்தை நீங்கள் புரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? இன்று என் கிராமத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று பாருங்கள். இந்தக் கிராம மக்கள் எதற்காகப் போராடிக்கொண்டி ருக்கிறார்களோ அதற்காகத்தான் பாலஸ்தீனமும் போராடிக்கொண்டிருக்கிறது’’ என்கிறார் ஷீரின்.

p28a.jpg

``இஸ்ரேல் என்னும் நாடு உதயமான 1948-ம் ஆண்டே அல் வலாஜாவுக்குக் குறி வைக்கப்பட்டுவிட்டது. இந்தக் கிராமத்தின் 85 சதவிகிதப் பகுதி ஏற்கெனவே இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டுவிட்டது. எஞ்சியிருப்பதையும் கைப்பற்றிவிட்டால் ஆக்கிரமிப்பு முழுமையடைந்துவிடும். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 90 சதவிகித மக்கள் முன்பே வெளியேற்றப்பட்டுவிட்டனர். ஆயிரமாண்டுக்கால வரலாறு கொண்டவர்கள் அந்த மக்கள். `மேற்குக் கரையில் எங்கள் பகுதியில் மட்டும்தான் காய்கறிகளும் பயிர்களும் விளையும் தெரியுமா?’ என்று கண்கள் மின்னப் பெருமிதம் கொள்பவர்கள். இப்போது அவர்கள் பாலஸ்தீனர்களோ மேற்குக் கரை மக்களோ அல்லது அவர்கள் தங்களைப் பெருமையுடன் அறிவித்துக்கொள்வதுபோல் அல் வலாஜாவாசிகளோ  அல்லர். என்னுடைய அழகிய கிராமத்தின் மக்கள் இன்று அகதிகளாக உலகம் முழுக்கச் சிதறடிக்கப்பட்டிருக்கிறார்கள்’’ என்று தன் மக்கள் அகதிகளானதைப் பற்றிய அறிமுகம் கொடுக்கிறார் ஷீரின்.

எஞ்சியிருந்தவர்கள் பத்துச் சதவிகிதம் பேர் மட்டுமே. அவர்களையும் நிம்மதியாக இருக்கவிடவில்லை இஸ்ரேல். 2007-ம் ஆண்டு ஒரு நாள் பெரிய பெரிய புல்டோசர்கள் கிராமத்துக்குள் நுழைந்தன. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று கிராம மக்களுக்குப் புரிந்துவிட்டது. உடம்பு முடியாமல் படுத்துக்கிடந்த முதியோர் கைத்தடியை ஊன்றி எழுந்து நின்றனர். பெண்கள் மொத்தமாக வீதிக்குத் திரண்டு வந்தார்கள். இதென்ன புதிய இயந்திரம் என்று வேடிக்கை பார்க்க வந்த குழந்தைகளை அவர்களுடைய தந்தைகள் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்கள். இது எங்கள் நிலம், இவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு வெளியேறுங்கள் என்று ஒரே குரலில் அனைவரும் சொல்லிப்பார்த்தார்கள். ஒருவரும் மசிந்து கொடுப்பதாக இல்லை.

P28GG.jpg

ஆண்களும் பெண்களும் ஒன்றுதிரண்டு புல்டோசர்கள் முன்னால் காலை மடக்கி அமர்ந்துகொண்டனர். ஊன்றுகோலைத் தரையில் படுக்கவைத்துவிட்டு முதியோர் கீழே உட்கார்ந்துகொண்டனர். சிலர் அப்படியே படுத்துவிட்டனர். என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழந்தைகள் ஓடிவந்து குடும்பத்தோடு சேர்ந்துவிட்டன. கிராம மக்கள், எதிர்ப்பார்கள் என்று தெரிந்துதான் ஆயுதம் தாங்கிய இஸ்ரேலிய வீரர்களும் உடன் வந்திருந்தனர். உண்மையில் அவர்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தையே எதிர்பார்த்திருந்தனர். இப்படி முதியோர்களும் குழந்தைகளும் பெண்களும் வெறுங்கையோடு வந்து கலங்கி நிற்பார்கள் என்று அவர்கள் நினைக்கவில்லை.

அதனாலென்ன? ஆயுதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதிரிகள் எதிரிகள்தாம். அவர்களை எப்படி அணுக வேண்டுமோ அப்படித்தான் அணுகியாக வேண்டும். தடதடவென்று குதித்து வந்த ராணுவ வீரர்கள் புல்டோசர் வண்டிகளுக்கு முன்னால் அமர்ந்திருந்த  அனைவரையும் விரட்டியடிக்கத் தொடங்கினார்கள். சுண்டுவிரலை உயர்த்தவேண்டிய அவசியம்கூட இல்லை என்றபோதும் ராணுவம் தனது இயல்பை மாற்றிக்கொள்ளாமல் வன்முறையில் இறங்கியது.  அடித்தும் உதைத்தும் மக்கள் இழுத்து வெளியில் வீசப்பட்டார்கள். குழந்தைகளும் முதியோர்களும்கூட இந்தத் தாக்குதலிலிருந்து தப்பவில்லை.

வாய்விட்டு அழுதபடி ஒதுங்கி நின்றார்கள் அல் வலாஜா மக்கள். அதுமட்டும்தான் நம்மால் முடியும் என்று அவர்களுக்குத் தெரியும். அடிபட்ட வலியைவிடத் தங்கள் நிலத்தின் மீது இயந்திரங்கள் உருண்டு சென்றதைக் கண்டு ஏற்பட்ட வலி அவர்களை மிகுதியாகத் துன்புறுத்தியது. அவர்கள் பார்த்து வளர்த்த மரங்களும் அவர்களுக்கு முன்பே வேர்கொண்டுவிட்ட மரங்களும் நசுக்கப்பட்டபோது பலரும் தங்கள் உடல் நடுங்குவதை உணர்ந்தனர். மலைகளுக்கு அரசியல் உணர்வு இல்லை என்பதால் அவை பாலஸ்தீனத்தில் கொஞ்சம், இஸ்ரேலில் கொஞ்சம் என்று முறையற்று வளர்ந்து நின்றுகொண்டிருந்தன. அதையும் இஸ்ரேல் ராணுவம்தான் சரி செய்யவேண்டியிருந்தது. பாலஸ்தீனத்து மலைப் பாகங்களை வெடித்துத் தகர்த்தார்கள். தங்கள் நிலத்தின் மீதான தாக்குதலைத் தங்களுடைய இன மக்களின் ஆன்மாவின் மீதான தாக்குதலாகவே அந்தக் கிராம மக்கள் கண்டனர்.

p28d.jpg

மரம், மலை, பயிர்கள், குடியிருப்புகள் ஆகியவற்றை நசுக்கிப் போட்ட பிறகு அங்கே ஒரு சுவர் உருவாக ஆரம்பித்தது. அந்தச் சுவர் எங்கே பாலஸ்தீனின் எல்லை முடிவடைகிறது என்பதையும், எங்கிருந்து இஸ்ரேலின் எல்லை தொடங்குகிறது என்பதையும் நிர்ணயம் செய்தது. கட்டடப் பணியாளர்களே அந்தச் சுவரை எழுப்பினார்கள் என்றாலும், ராணுவம் அதன் வளர்ச்சியை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தது. பிரிவினைச் சுவர் என்னும் பெயரால் அது சரியாகவே இன்றும் அழைக்கப் படுகிறது.

அல் வலாஜாவில் வசிக்கும் அப்ஸியா ஜஃபாரி நூறு ஆண்டுகளைக் கடந்தவர். எண்ணற்ற சுருக்கங்களுக்கு மத்தியில் நிரந்தரமாக ஒரு கேள்விக்குறியும் அவர் முகம் முழுக்க எழும்பி நிற்கிறது. அவரிடம் பாலஸ்தீனக் கடவுச்சீட்டு இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் காட்டுவதற்குத் தயாராக அதை அவர் தன் படுக்கைக்கு அருகிலேயே வைத்திருக்கிறார். இந்தக் கடவுச்சீட்டு அவருக்கும் அவர் கணவருக்குமானது. அதை வழங்கியவர்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள். 1923 முதல் 1948 வரை பாலஸ்தீனம் பிரிட்டிஷ் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அந்தச் சமயத்தில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டு அது. பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற பிறகு இஸ்ரேலின் ஆதிக்கத்தின்கீழ் வந்து சேர்ந்தது பாலஸ்தீன். ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்குத் தன்னுடைய கிராமமும் நாடும் கைமாறியதை மட்டுமே கண்டார் அப்ஸியா. விடுதலையை அவரால் காணமுடியவில்லை.

பாலஸ்தீனத்தின் இறந்தகாலத்திலிருந்தே இஸ்ரேலின் எதிர்காலம் ஆரம்பமாகிறது என்பதை அப்ஸியா 1948-ம் ஆண்டே உணர்ந்துவிட்டார். அவர் பிறந்து வளர்ந்த அல் வலாஜாவை இஸ்ரேலியப் படைகள் அப்போதே கிட்டத்தட்ட அழித்துவிட்டன. அவருடைய சொந்தங்கள், உறவுகள் கிராமத்திலிருந்து விரட்டியடிக்கப் பட்டதை அவர் கண்டார். ஆனால், அவர் வெளியேறவில்லை. இங்கேயே கிடந்து சாகிறேன் என்று மற்றவர்களுடன் சேர்ந்து தங்கிவிட்டார். வெளியேறிய மக்கள் ஜோர்டான், லெபனான், பெத்லஹேம் என்று பல பகுதிகளில் குடியேறி விட்டதாக அவர் தெரிந்துகொண்டார். இந்த வெளியேற்றம் அவர்களுடைய வாழ்வை எந்த வகையிலும் முன்னேற்றவில்லை என்பதும் அவருக்குத் தெரியும். தவிர, அவர்கள் இப்போது அகதிகளாக மாறிவிட்டதையும் அவர் அறிவார். ``என்னால் அகதியாக மாறமுடியாது” என்று அவர் சொல்லிவிட்டார். ``உயிருள்ளவரை நான் என் கிராமத்தைவிட்டுப் பிரியமாட்டேன். என் கிராமமே என் அடையாளம். நான் ஒரு பாலஸ்தீனப் பெண். இதோ அதற்கான ஆதாரம்!’’ ஆனால், நடுங்கும் விரல்களால் அவர் எடுத்து நீட்டும் கடவுச்சீட்டை வாங்கிப் பார்க்க இப்போது அங்கு யாருமில்லை.

பிரிவினைச் சுவர் எழும்பிக்கொண்டிருந்தபோது யாசிர் கலிஃபாவுக்கு 45 வயது. இந்தச் சுவர் கட்டிமுடிக்கப்பட்டால் சுவருக்கு அந்தப் பக்கம் உள்ள எங்களுடைய குடும்ப நிலம் இஸ்ரேலுக்குச் சொந்தமானதாக மாறிவிடும் என்று வருந்தினார் அவர். இவருடைய பயம் இப்போது நிஜமாகிவிட்டது. இவரைப் போலப் பலரும் தங்களுடைய குடும்பத்துக்குச் சொந்தமான நிலங்களை இழந்துவிட்டனர். சட்டத்தின் உதவியை இவர்களால் நாடிச்செல்ல முடியாது. காரணம் இஸ்ரேலியச் சட்டங்களின்படி இந்தக் கிராமம் ‘ஏரியா சி’ என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. 1993-ம் ஆண்டு கையெழுத்தான ஆஸ்லோ ஒப்பந்தத்தின்படி இந்தப் பகுதி இஸ்ரேலிய ராணுவத்துக்குச் சொந்தமானதாக மாறிவிட்டது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக இருந்த யாசிர் அராஃபத் பாலஸ்தீன் சார்பாக இஸ்ரேல் அரசுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் இது.

p28e.jpg

இதன்படி அல் வலாஜாவில் மட்டுமல்ல, ஜெருசலேம் பகுதியிலும் 1967-ம் ஆண்டுக்குப் பிறகு பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிடம் ஒப்புதல் பெறாமல் எந்தக் கட்டுமானத்தையும் எழுப்பக்கூடாது. மீறி எழுப்பினால் அவற்றை அகற்றுவதற்கு இஸ்ரேல் ராணுவத்துக்கு அதிகாரம் இருக்கிறது.  ஆனால், இஸ்ரேலிடம் விண்ணப்பித்து முறைப்படி அனுமதி பெற்று வீடு கட்டிக்கொள்வது என்பது சாத்தியமில்லாதது. அதனால் கிராமவாசிகள் தாங்களே முன்வந்து தங்களுக்கான இருப்பிடங்களை அமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது.

ஒரு நாடு இன்னொரு நாட்டின் பிரதேசங்களை எப்படி ஆக்கிரமிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அல் வலாஜா கிராமம் கண்முன் உள்ள உதாரணம். பாலஸ்தீனர்கள் எழுப்பும் கட்டடங்களுக்கு அனுமதி பெறவேண்டும் என்று கிடுக்கிப்பிடி ஒப்பந்தம்மூலம் இஸ்ரேல் அந்தக் கிராம மக்கள் அனைவரையும் அகதிகளாக மாற்றிவிட்டது. இஸ்ரேல் உதயமானபோது நடந்த முதல் தாக்குதலில் வெளியேறியவர்கள் முதல் கட்ட அகதிகள். வெளியேறமாட்டேன் என்று கிராமத்திலேயே தங்கியவர்கள் சொந்த கிராமத்திலேயே அகதிகளாக வாழவேண்டியது தான். அவர்கள் தங்கியிருக்கும் வீடுகள் எல்லாமே சட்டத்துக்கு விரோதமானவைதாம் என்பதால் எந்நேரமும் அவையனைத்தும் கூண்டோடு இடிக்கப்படலாம். அதற்குப் பிறகு அவர்களும் அங்கிருந்து வெளியேற வேண்டியதுதான்.

``இந்தச் சுவர், சிறைச்சாலையின் சுவரைப் போல் உள்ளது. உள்ளே இருக்கும் நாங்கள் அனைவரும் கைதிகளாக மாறிவிட்டோம்” என்கிறார் முகமது அவதல்லா என்னும் 72 வயது முதியவர். பாலஸ்தீனம் முழுக்க இத்தகைய பிரிவினைச் சுவர்கள் எழுப்பப்பட்டிருப்பதைக் காணலாம். மலைப் பிரதேசங்கள் குண்டு வீசித் தகர்க்கப்படுகின்றன. குடியிருப்புகள் புல்டோசர்களால் பொடியாக்கப்படுகின்றன. இடிக்கப்பட்ட இடங்களிலெல்லாம் பிரிவினைச் சுவர் முளைத்துப் படர ஆரம்பிக்கிறது.

ஒமர் ஹஜஜ்லா தன் மூன்று குழந்தைகளுடன் சுவருக்கு அருகில் நின்றுகொண்டிருக்கிறார். அவருடைய வீடு சுவருக்கு மறுபக்கம் அமைந்திருக்கிறது. இதன் பொருள் அவர் தன் வீட்டை இஸ்ரேலிடம் இழந்துவிட்டார் என்பதுதான். அவர்  பிறந்து வளர்ந்த வீட்டுக்குள் இனி அவர் காலடி எடுத்து வைத்தால் அது விதிமீறலாகவே பார்க்கப்படும். இந்தச் சுவர் என் வாழ்வைப் புரட்டிப்போட்டுவிட்டது என்கிறார் அவர். சுவர்க் கட்டுமானப் பணிகள் தொடங்கியதிலிருந்து இரண்டு முறை அவருக்கு இதய வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவிட்டார்.

p28f.jpg

அந்தச் சுவர் குழந்தைகளை அவர்களுடைய பள்ளிக்கூடத்திலிருந்து பிரித்துவிட்டது. பையைத் தூக்கிக்கொண்டு இனி குதித்தபடி ஓடிச் சென்றுவிட முடியாது. பல கிலோ மீட்டர் நடந்து ஊரைச் சுற்றிச் சென்றால்தான் பள்ளியை அடைய முடியும். தங்களுடைய விளைநிலத்தைக் காணவேண்டுமானால் கிராம மக்கள் இனி நடையாக நடந்துசெல்ல வேண்டும். மலைமீது ஏறி மறுபக்கத்தை அடைய வேண்டும். சிலர் சுவரில் உள்ள இடைவெளி அல்லது ஓட்டையைப் பயன்படுத்திக் குறுக்கு வழியில் செல்வதுண்டு. அப்படிக் கடந்துசெல்லும்போது யாராவது பார்த்துவிட்டால் அது மேலும் சிக்கலைக் கொண்டுவரக்கூடும். பெண்கள் ராணுவச் சோதனைச் சாவடிகளைக் கடந்துதான் செல்ல வேண்டும். கண்காணிப்புக் கோபுரம் ஒன்றும் முளைத்திருக்கிறது. ராணுவச் சீருடை அணிந்தவர்கள் எந்நேரமும் கிராம மக்களைக் கண்காணித்துக்கொண்டே இருப்பதால் அச்சத்திலும் பதற்றத்திலும்தான் அனைவரும் வாழ்ந்தாகவேண்டும்.

அல் வலாஜாவை இனியும் கிராமம் என்று அழைக்க முடியுமா என்று தெரியவில்லை. ஒரு திறந்தவெளி அகதி முகாமாகவே அது காட்சியளிக்கிறது. இறைவனே, எங்களை ஏன் இப்படிச் சுருக்கிவிட்டீர்கள் என்னும் அழுகுரலை அங்கே அவ்வப்போது கேட்க முடிகிறது. பூட்ஸ் கால் அணிந்த வீரர்களும் புல்டோசர்களும் தங்கள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர்கள் தினமும் கனவு காண்கிறார்கள். என் தன்மானத்தை அழித்து என்னைக் கைதியாக மாற்றியிருக்கும் இந்தச் சுவர் இடிந்து நொறுங்கிப்போகாதா என்று தினமும் அவர்கள் ஏங்குகிறார்கள். `இது என் நிலம். என் கிராமம். பாலஸ்தீன் என் நாடு. இப்படி உரிமையுடன் குரலை உயர்த்தி முழங்கும் உரிமையை என் வாழ்நாளில் நான் பெறுவேனா?’

சிலருக்குச் சுவர் பழகிவிட்டது. அதில் அவர்கள் ஓவியங்களைத் தீட்டி வைத்திருக்கிறார்கள். பாலஸ்தீன் விடுதலை குறித்த முழக்கங்களை எழுதிப் பழகுகிறார்கள். சிறுவர்கள் பள்ளி முடிந்து வந்ததும் சுவருக்கு அருகில் கால்பந்தை உதைத்து விளையாடுகிறார்கள். சிலர் சுவர் ஏறி பாலஸ்தீன் கொடியை ஏற்றித் தற்காலிகமாக மகிழ்ச்சியடைகிறார்கள். சுவருக்குக் கீழே நிழலில் முதியோர்கள் கட்டிலை இழுத்துக் கொண்டுவந்து போட்டு உறங்குகிறார்கள். பிடிக்கிறதோ பிடிக்க வில்லையோ, சுவர் அவர்களுடைய வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அதைக் கண்டும் காணாமலும் இருக்க அவர்கள் தங்களைப் பழக்கப் படுத்திக்கொண்டுவிட்டார்கள். நீங்கள்  அகதிகளா என்று கேட்டால், இருக்கலாம் என்பதே அநேகமாக அவர்களுடைய பதிலாக இருக்கும்.

- சொந்தங்கள் வருவார்கள்

https://www.vikatan.com

Posted

நான் அகதி! - 10 - ரத்தமும் அவமானமும்!

 

 

மருதன்

 

யிர்கொல்லும் கண்ணீர்ப் புகைக்குண்டு, ஆபத்தற்ற கண்ணீர்ப் புகைக்குண்டு என்று இரண்டாக p28b_1512456819.jpgவகைப்படுத்தி அழைத்தாலும் இவற்றுக்கிடையில் எந்தப் பெரிய வேறுபாடும் இருப்பதுபோல் தெரியவில்லை. இரண்டுமே ஒன்றுபோல் பாய்கின்றன, ஒன்றுபோல் உயிர்களைக் கொல்கின்றன. ஜவஹெர் அபு ரஹ்மா என்னும் 35 வயது பாலஸ்தீனப் பெண்மீது இஸ்ரேல் வீசியது எந்த வகைப் புகைக்குண்டு என்று தெரியவில்லை. அப்படியே சுருண்டு கீழே விழுந்துவிட்டார். போராட்டத்தை நிறுத்திவிட்டு, சிலர் அவரை அள்ளியெடுத்துக்கொண்டு ஓடியிருக்கிறார்கள். ஓடிக்கொண்டிருக்கும்போதே அடுத்தடுத்து குண்டுகள் புகை கக்கியபடி பெயர்ந்துவந்து அவர்கள் காலடியில் விழுந்து கொண்டிருந்தன. மயங்கியவர்களைப் போலவே ஓடியவர்களுக்கும் சம அளவில் மூச்சுத் திணறல் இருந்திருக்கவேண்டும். அவற்றையெல்லாம் மீறித்தான் மருத்துவமனைக்குள் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

இது நடந்தது ஜனவரி 2011-ல். மேற்குக் கரையின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் பிலின் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் அபு ரஹ்மா. `நான், என் வீடு, என் மதம், என் குடும்பம்’ என்று வெளியுலகம் உட்புகாதவாறு கதவுகளை இறுக்கப் பூட்டிக்கொண்டு தன்னுடைய பிரத்தியேக உலகில் வாழ்ந்துவந்தவர்தான் அவர். ஆனால், அவர் வசித்த அதே கூரையின்கீழ் வளர்ந்த அவரின் சகோதரர் பசீம் அபு ரஹ்மா வீட்டைப் பற்றிச் சிந்தித்ததே கிடையாது. மாபெரும் அரசியல் கனவொன்றில்தான் அவர் எந்நேரமும் திளைத்துக்கொண்டிருந்தார். இஸ்ரேலின் பிடியிலிருந்து பாலஸ்தீனம் விடுவிக்கப்படவேண்டும் என்பதுதான் அந்தக் கனவு.

p28a_1512456841.jpg

இதையே லட்சியமாக வரித்துக்கொண்டு இயங்கிவந்த பாலஸ்தீன இளைஞர்களுடன் இணைந்து செயல்பட்டுவந்தார் பசீம். எந்நேரமும் தன் தோழர்களுடன் அமர்ந்து அரசியல் விவாதங்களை நடத்திக்கொண்டு, எந்நேரமும் ஏதோவொரு போராட்டத்துக்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்த தன் தம்பியைக் கவலையுடன் பார்த்துக்கொண்டு நிற்பதைத் தவிர வேறு என்ன செய்வதென்று தெரியவில்லை ஜவஹெருக்கு. `நமக்கே ஆயிரத்தெட்டுப் பிரச்னைகள், இந்த அரசியல் விபரீதமெல்லாம் உனக்கு எதற்கு பசீம்’ என்று சொல்லத்தான் ஆசை. ஆனால், சொல்பேச்சு கேட்டு நடக்கக்கூடிய வயதா பசீமுக்கு?

ஒரு நாள், தன்னுடைய பகுதிக்கு மிக அருகில் வளர்ந்துகொண்டிருந்த ஆக்கிரமிப்புச் சுவரை எதிர்த்து ஒரு போராட்டத்தை முன்னெடுக்க பசீமும் அவர் நண்பர்களும் முடிவு செய்தனர். பெரிதாக ஒன்றுமில்லை, பாலஸ்தீனக் கொடியைக் கையில் ஏந்தி, சில பதாகைகளைப் பிடித்துக்கொண்டு சுவரையொட்டியுள்ள பகுதிகளில் உலா வருவதுதான் திட்டம். மிக எளிய, மிகவும் அடிப்படையான ஓர் எதிர்ப்புப் பேரணியாக இந்நிகழ்வை அவர்கள் கட்டமைத்திருந்தார்கள். பிரிவினைச் சுவர் என்பது கல்லும் மண்ணும் மட்டுமல்ல. அது நம் இனத்தை அடிமைப்படுத்துவதற்காகப் பின்னப் படும் ஓர் அடிமைச்சங்கிலி என்பதை மக்களுக்கு உணர்த்த அவர்கள் விரும்பினார்கள். அவர்களிடம் ஆயுதம் இல்லை. ஆயுதத்தைக் கொண்டு இஸ்ரேலை வீழ்த்தி விடுதலை பெற்றுவிட முடியும் என்று பகல் கனவு காணத் தயாராக இல்லை அவர்கள். சின்னச் சின்ன அடிகளாக எடுத்து வைத்து மக்களின் மனதை மாற்றி, அவர்களை ஒருங்கிணைத்து அமைதி வழியில் போராடி சுதந்திரத்தை வென்றெடுக்க வேண்டும் என்பதே அவர்கள் விருப்பம்.

31 ஏப்ரல் 2009 அன்று நடக்க ஆரம்பித்தார்கள். ஆரம்பிக்கும்போதே, ஆயுதம் தாங்கிய இஸ்ரேலிய ராணுவப் படையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தன்னுடைய நாட்டின் மண்ணை மிதித்துக்கொண்டு நிற்கும் இஸ்ரேலிய பூட்ஸ் கால்களைப் பார்த்தபடி பசீம் அபு ரஹ்மா தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருந்தார். ``என் காலத்தில் இல்லாவிட்டாலும் அடுத்த தலை முறையிலாவது இந்தக் கால்களை இங்கிருந்து அகற்றியாகவேண்டும். இல்லாவிட்டால் உலக வரைபடத்திலிருந்து பாலஸ்தீனம் அகற்றப் பட்டுவிடும்.’’

இதற்கிடையில் ஜவஹெர் வீட்டில் காத்திருந்தார். எல்லாம் நல்லபடியாக முடிந்து பசீம் வீடு வந்து சேர்ந்துவிடவேண்டும் என்பதே அவருடைய ஒரே பிரார்த்தனையாக இருந்தது. ஆனால், வீட்டுக்கு வந்து சேர்ந்தது பசீமின் உடல்தான். என்ன நடந்தது என்பதை மற்றவர்கள் அழுகையுடன் விவரித்தார்கள். ஆனால், ஒரு சொல்கூட ஜவஹெரைச் சென்றடையவில்லை.

p28d_1512456878.jpg

விசாரணை என்றொன்று அதற்குப் பிறகு நடந்தது. அமைதியாக நடந்த ஒரு போராட்டத்தை எதற்காக ராணுவம் குண்டு வீசித் தடுக்கவேண்டும்? நிராயுதபாணியைக் கொல்வது கொலைக்குற்றம் அல்லவா? பசீமைக் கொன்ற இஸ்ரேலிய வீரரை ஏன் குற்றவாளியாகக் கருதி தண்டனை கொடுக்கக்கூடாது? வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளது என்று ஜவஹெரிடம் சொன்னார்கள். நீதி கிடைக்கும், கவலைப்படாதே என்று அவரை ஆற்றுப்படுத்தவும் முயன்றார்கள். இஸ்ரேலிய நீதிமன்றங்களை அவர்கள் ஒருபோதும் நம்பியதில்லை என்றாலும், பசீம் விவகாரம் தனித்துவமானது அல்லவா?

முதல்முறையாக அவர்களிடம் வலுவான வீடியோ ஆதாரம் இருந்தது. பசீம் தன் தோழர்களுடன் அமைதியாக நடந்துகொண்டிருந்த காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன. பாலஸ்தீனர்கள் தாக்கினார்கள், தற்காப்புக்குத் திருப்பித் தாக்கினோம் என்று ஆயிரத்தெட்டு முறை சொன்ன காரணத்தை  இந்தமுறை பயன்படுத்த முடியாது. முன்னெச்சரிக்கையுடன் முடிவு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட இந்த வீடியோ ஓர் அப்பாவியின் கொலைக்குச் சாட்சியமாக இருக்கும். யார் கண்டது, நீதியைப் பெற்றுத்தரும் வலிமை இதற்கு இருக்கவும் செய்யலாம்.

வீடியோவைப் போட்டுப் பார்த்துப் பரிசீலித்த பிறகு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஓர் இஸ்ரேலிய வீரர் பசீமின் மார்பைக் குறிவைத்துக் குண்டு வீசுவதுபோன்ற காட்சி இதில் வருவது உண்மை. ஆனால், சம்பந்தப்பட்ட நபரைக் கொல்லவேண்டும் என்னும் நோக்கத்தில்தான் வீரர் குண்டு வீசினார் என்று உறுதியாகச் சொல்வதற்கில்லை. எனவே, ராணுவ வீரர்மீது நடவடிக்கை எதையும் மேற்கொள்ள முடியாது என்றது தீர்ப்பு. இது குறித்த செய்தி ஜவஹெரின் காதுகளை அடைந்தபோது அவர் தனது நீண்ட துயிலிலிருந்து திடுக்கிட்டு விழித்துக்கொண்டார். 

p28e_1512456892.jpg

பசீமின் வீடியோ அவரை உலுக்கி எடுத்து நிஜ உலகில் கொண்டுவந்து போட்டது. அந்த வீடியோவை அவர் எத்தனை முறை பார்த்திருப்பார் என்று சொல்ல முடியாது.  வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து, பிறகு அந்தப் போராட்டம் ஆரம்பமாகியிருக்கிறது. உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி அயல் நாடுகளிலிருந்தும் செயற்பாட்டாளர்கள் திரண்டு வந்திருந்தனர். இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர் (ஐ.டி.எஃப்) சுவருக்கு  அருகில் காத்திருந்தனர். பாலஸ்தீனர்கள் நடந்து வருவதைப் பார்த்ததும், `இது ராணுவப் பகுதி, நெருங்கி வராதே’ என்று  ஒலிபெருக்கியில் அறிவிக்கிறார்கள். 29 வயது பசீம் வீடியோவில் தனித்துத் தெரிகிறார். சுத்தமாக மழிக்கப்பட்ட கன்னம். நன்றாக வாரப்பட்ட குட்டையான தலைமுடி. கண்ணைப் பறிக்கும் மஞ்சள் நிற டீ ஷர்ட்டும் ஜீன்ஸும் அணிந்திருக்கிறார். கூட்டத்தோடு நடந்துகொண்டிருந்த பசீம் ஒரு கட்டத்தில் நடப்பதை நிறுத்திவிட்டு இஸ்ரேலியர்களை நோக்கிச் சத்தமிடுவது தெரிகிறது. ``இது ராணுவப் பகுதி என்று சொல்லாதே, இது எங்கள் கிராமம். இதை நீ ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறாய். அத்துமீறுவது நாங்களல்ல, நீதான்!’’

``கலைந்து போ’’, ``கலையமாட்டோம்’’ என்னும் இரு குரல்களும் ஒரே சமயத்தில் கலந்து ஒலிக்கின்றன. பாலஸ்தீனக் கொடியை ஏந்திய சில இளைஞர்கள் பசீமைக் கடந்து முன்னால் நகர்ந்து செல்கின்றனர். `கீ...’ என்று பஸ்ஸர் ஒலி கேட்கிறது. பூட்ஸ் கால்கள் தடதடக் கின்றன. வீரர்கள் பரபரப்புடன் ஒன்றுகூடுகிறார்கள். கண்ணீர்ப் புகைக்குண்டுகள் பறந்து வருகின்றன. கூச்சலும் ஓலமும் காற்றில் பரவுகின்றன. காட்சிகள் பேய்த்தனமாக மேலும் கீழுமாக ஆடுகின்றன. கால்கள் மேல்புறத்தில் தோன்றுகின்றன. துப்பாக்கிச் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் சிலர் விரைந்து பின்னால் திரும்பி ஓடுகிறார்கள்.

கேமரா இப்போது இஸ்ரேலியர்களின் பக்கம் திரும்புகிறது. பாலஸ்தீனக் கொடியுடன் சிலர் அதற்குள் சுவரை நெருங்கியிருந்தனர். சிலருடைய கைகளில் தற்காப்புக் கேடயம் இருக்கிறது. கண்ணீர்ப் புகைக்குண்டுகள் முன்பைவிட அதிகமாகப் பொழியத் தொடங்குகின்றன. அதிக சத்தம். அதிக ஓட்டம். அதிக குழப்பம். கேமராவை வைத்திருப்பவர் இந்தக் களேபரங்களுக்கு அருகில் இப்போது இருக்கிறார். பசீம் இருப்பது அவருக்குப் பின்னால். இருவரிடமும் கேடயம் இல்லை. சில காட்சிகளுக்குப் பிறகு பசீம் அலறும் சத்தம் கேட்கிறது. கேமரா திடுக்கிட்டுத் திரும்புகிறது. இப்போது பசீம் தரையில் விழுந்துகிடக்கிறார். தன் மார்பை அவர் கையில் ஏந்தியிருக்கிறார். அவருடைய விரல்களுக்கு இடையிலிருந்து ரத்தம் கசிந்துவருவதை நாம் பார்க்கிறோம்.

கீழே குனிந்து தேடி, பசீமைத் துளைத்த குண்டை எடுத்துவந்து அவருடைய வீட்டில் தரவேண்டும் என்று யாருக்கோ தோன்றியிருக்கிறது. அந்தக் குண்டையும் பலமுறை கையில் எடுத்துப் பார்த்துவிட்டார் ஜவஹெர்.  சிறியதாக அதே சமயம் சற்று கனமாக இருந்தது. அதைக் காட்டி உருளைக்கிழங்கு என்று சொல்லியிருந்தால் அந்நியர்கள் உடனே நம்பிவிடுவார்கள். தன் வீட்டைத் தேடிவந்த பத்திரிகையாளர்களுக்கு ஜவஹெர் அந்தக் குண்டை எடுத்து வந்து காட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டார். அந்த வீடியோவையும் அவர்களுக்குப் போட்டுக் காட்டுவார். ``அது பசீம். இது அவனைக் கொன்ற குண்டு.’’

இஸ்ரேல் முழுக்க முழுக்க சுவர்களைக் கொண்டு ஜீவித்திருக்கிற ஒரு நாடு என்பதை உணர ஜவஹெருக்கு அதிக காலம் பிடிக்கவில்லை. ஒரு நாடுகூட அல்ல அது. பலமாகப் பாதுகாக்கப்பட்ட ஒரு கோட்டை மட்டுமே. உளவாளிகளும் ராணுவமும் சுவர்களை எழுப்பும் கட்டடக் கூலிகளும் இல்லாதுபோனால் இஸ்ரேல் இருக்காது. ஒரே சமயத்தில் மிகப் பெரிய ஆக்கிரமிக்கும் சக்தியாகவும் இருபத்து நான்கு மணி நேரமும் அச்சத்துடன் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் ஒரு பலவீனமான  நாடாகவும் இஸ்ரேல் இருக்கிறது. ஆயுதங்களையும் அமெரிக்காவையும் கொண்டு அது தன் பலவீனத்தை மறைத்துக்கொள்கிறது. ராணுவத்தை அரசியல் பாதுகாக்கிறது. அரசியல் ராணுவத்தைச் சார்ந்திருக்கிறது. அரசியலும் ராணுவமும் இணைந்து சுவரை எழுப்புகின்றன. இந்த இரண்டும் சேர்த்தே அதைப் பாதுகாக்கின்றன.

சுவருக்குப் பல பொறுப்புகள் இருக்கின்றன. அது இஸ்ரேலைப் பாலஸ்தீனத்திடமிருந்து பிரிக்கிறது. பாலஸ்தீன மக்களை சுதந்திரத்திட மிருந்தும் சுதந்திர வேட்கையிலிருந்தும் பிரிக்கிறது. இளைஞர்களை அவர்களுடைய குடும்பங்களி டமிருந்தும், தந்தைகளை அவர்களின் குழந்தைகளிடமிருந்தும், பெண்களை அவர்களின் கணவன்களிடமிருந்தும் பிரித்து வைக்கிறது. சுதந்திரமான ஒரு பகுதியை, சுவர் ராணுவ கேந்திரமாக மாற்றுகிறது. பள்ளிக்கூடங்களை, குடியிருப்புகளை, விளைநிலங்களை வகுத்துச் சுடுகாடாக மாற்றுகிறது. சுடுகாட்டையும்கூட அது விட்டுவைக்கவில்லை. ``என் வீட்டுக்கு அருகிலிருந்த தந்தையாரின் கல்லறை இப்போது சுவருக்கு அந்தப் பக்கம் சென்றுவிட்டது. சட்டவிரோதமாக மட்டுமே இனி நான் என் தந்தையை தரிசிக்கமுடியும்’’ என்கிறார் பாலஸ்தீனர் ஒருவர்.

p28f_1512456906.jpg

பசீமும் அவரின் தோழர்களும் சுவரை எப்படி அர்த்தப்படுத்திக்கொண்டார்கள் என்பதும், ஏன் அதை உயிரைக் கொடுத்து எதிர்த்தார்கள் என்பதும் ஜவஹெருக்கு இப்போது தெளிவாகப் புரிந்தது. அது ஒரு பிரிவினைச் சுவர் மட்டுமல்ல,  பாலஸ்தீனர்கள் பலரின் ரத்தம் அதில் பீய்ச்சியடிக்கப்பட்டிருக்கிறது. ``நீங்கள் ஆக்கிரமிக்கப்பட்டவர்கள், இஸ்ரேலின் தயவில் வாழ்பவர்கள்’’ என்பதை இரவு பகலாக உணர்த்திக்கொண்டு நிற்பதால் அது ஓர்  அவமானச் சுவரும்கூட. அதை ஏற்றுக்கொண்டால் நாம் அடிமைகள் என்பதையும் ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடும்.

ஒரு நாட்டிலிருந்து அகதிகள் உருவாவதை உலகம் கண்டிருக்கிறது. ஒரு நாடே அகதிகளாலும் அகதிகளாக மாறவிருப்பவர்களாலும் நிரம்பியிருப்பது பாலஸ்தீனத்தில் மட்டும்தான். சுவரின் நீளம் பெருகப் பெருக அது கிழிக்கும் மனிதர்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டே போகிறது. இரு வாய்ப்புகள் மட்டுமே இப்போதைக்கு பாலஸ்தீனர்களுக்கு இருக்கின்றன. உள்ளிருந்து இஸ்ரேலியர்களின் கையில் வதைபட்டுச் சாவது. அல்லது தப்பியோடி முகாம்களில் வசிப்பது. ஜோர்டான், லெபனான், காசா முனை, மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளில் உள்ள முகாம்களில் பாலஸ்தீன அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர். ஐ.நாவின் பார்வையில் மொத்தம் 1.5 மில்லியனுக்கும்  அதிகமான பாலஸ்தீன அகதிகள் 58 அதிகாரபூர்வமான அகதி முகாம்களில் வாழ்ந்துவருகிறார்கள். அரசு ஆதரவுடன் இஸ்ரேலியக் குடிமக்கள் அவர்களுடைய இருப்பிடத்தை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டனர். எனவே, திரும்பிப் போவதென்னும் பேச்சுக்கே இடமில்லை. வீட்டை மட்டுமா அல்லது நாட்டையும் சேர்த்தே இழந்துவிட்டோமா என்னும் அச்சமும் இருக்கிறது அவர்களிடம்.

அகதிகள் மேலும் பெருகக்கூடாது என்பதால்தான் பசீம் போராட வந்தார். அதே காரணத்துக்காக ஜவஹெரும் இப்போது வீதியில் இறங்கினார். அபு ரஹ்மா குடும்பத்திலிருந்து இன்னொரு போராளியா, அதுவும் பெண்ணா என்று வியந்து அந்தக் கிராமம் அவரை உற்சாகத்துடன் வரவேற்றது. பசீம் சென்ற பாதையிலேயே ஜவஹெரும் சென்றார். பசீமைப் போலவே அவரும் முழக்கமிட ஆரம்பித்திருந்தார். போராட்டக்காரர்களுடன் சேர்ந்து பதாகையைப் பிடித்துக்கொண்டு நடைபோடவும் அவர் கற்றிருந்தார். ``திரும்பிப்போ’’ என்று கத்தும் இஸ்ரேலிய வீரனைப் பார்த்து ``நீ போ முதலில்!’’ என்று திருப்பிக் கத்தும் திராணியும் துணிவும் அவருக்கு வந்திருந்தன. அதனால்தானோ என்னவோ பசீமைத் தாக்கிய அதே குண்டு அவரையும் வீழ்த்திப்போட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது என்றாலும் பிழைக்க முடியவில்லை.

இப்போது அஷ்ரஃப் அபு ரஹ்மாவின் முறை. தன் சகோதரியும் சகோதரனும் கொல்லப்பட்டுவிட்ட பிறகும் அஷ்ரஃபால் சுவர் குறித்தும் அது உருவாக்கும் அகதிகள் குறித்தும் தெளிவான பார்வையுடன் உரையாட முடிகிறது. கணக்கற்ற போராளிகளை உற்பத்தி செய்தபடியிருக்கும் அபு ரஹ்மா குடும்பத்தைக் குறித்துக் கேள்விப்பட்டு அவரை நேரில் கண்டு உரையாடிய பத்திரிகையாளர், அஷ்ரஃபின் வீட்டுச் சுவரில் சே குவேராவின் படங்கள் ஒட்டப்பட்டிருந்ததைக் கண்டார். அஷ்ரஃப் இப்போது அந்தப் பகுதியின் புகழ்மிக்க இளம் போராளியாக மாறிப்போயிருந்தார். அவரிடமும் வீடியோப் பதிவுகள் இருக்கின்றன. ``இஸ்ரேலிய வீரர்களிடமிருந்து நான் தப்பியோடி வரும் காட்சிகள் இதில் இருக்கின்றன. எங்கள் வீடுகளை இடிக்கும் இஸ்ரேலிய புல்டோசரின் மேலே ஏறி அதில் தேசியக்கொடியை ஏற்றிய காட்சியும் இருக்கிறது, பார்க்கிறீர்களா’’ என்று புன்னகையுடன் கேட்கிறார் அவர். அந்த உருளைக்கிழங்குக் குண்டு இப்போது அவரிடம்தான் இருக்கிறது.

- சொந்தங்கள் வருவார்கள்

https://www.vikatan.com

Posted

நான் அகதி! - 11 - ஹிட்லரின் வதை முகாம்கள்

 

 

 

 

ஹிட்லருக்குப் படம் பார்க்கப் பிடிக்கும். வெறும் பொழுதுபோக்குச் சாதனமாக இல்லாமல், ஓர் அரசியல் p28j_1513075591.jpgகருவியாகவும் திரைப்படத்தைப் பயன்படுத்தமுடியும் என்று அவர் நம்பினார். ஏப்ரல் 1941-ல் ஜெர்மனியில் ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. அந்தப் படத்தைக் காண ஜெர்மானியர்கள் கும்பல் கும்பலாக அணிவகுத்துச் சென்று வரிசையில் நின்றனர். ஒருவர் பாக்கியில்லாமல் ஜெர்மானியர்கள் அனைவரும் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்பதுதான் ஹிட்லரின் விருப்பமும். அதனால்தான் அவருடைய நாஜிக்கட்சி இந்தத் திரையிடலுக்கு மிகுந்த ஆதரவை அளித்தது. தேசபக்திமிக்க குடிமகன்கள் இந்தப் படத்தைப் பார்ப்பது நல்லது என்று பிரசாரமும் செய்தது.

முழுப்படமும் அல்ல, அதன் இறுதிக்காட்சியே முக்கியமானது. அதில் சிறைக் கைதிகள் பலர் p28g_1513075605.jpgகாட்டப்படுவார்கள். இந்தக் கைதிகள்  பரிதாபகரமாக நலிந்தும் மெலிந்தும் இருப்பதைப் பார்க்கலாம். எதிர்காலம் குறித்த அச்சமும் தவிப்பும் அவர்களுடைய வாடி வதங்கிய முகங்களில் அப்பட்டமாகத் தெரிகின்றன. முதலில் ஒரு கைதியைப் பிடித்து இழுத்துவருகிறார்கள். கைது செய்யப்படுவதற்குமுன்பு அவன் ஒரு போர்வீரனாக இருந்தவன். அவனை இழுத்துவந்து தூக்கில் போடுகிறார்கள் அதிகாரிகள். அடுத்த காட்சியில் அவன் மனைவி சுட்டுக்கொல்லப்படுகிறார். இவர்களைத் தொடர்ந்து மற்ற கைதிகளும் ஒவ்வொருவராகக் கொல்லப்படுகிறார்கள்.

யார் இந்தக் கைதிகள்? எதற்காக  அவர்களுக்கு இந்தக் கொடூரமான தண்டனை? அவர்களுக்குத் தண்டனை விதிப்பவர்கள் யார்? இவை அனைத்தும் குழப்பமின்றித் திரைக்கதையில் விவரிக்கப் பட்டுள்ளன. இறுதிக் காட்சியில் காட்டப்படும் கைதிகள், ஆப்பிரிக் காவிலுள்ள போயர் பழங்குடிகள். இவர்களைச் சிறையில் அடைத்துத் தூக்கிலிட்டும் சுட்டுக் கொன்றும் தண்டிப்பவர்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள். படத்தின் கதாநாயகர்கள் அவர்கள்தாம். பின்தங்கிய ஆப்பிரிக்காவை நல்வழிப்படுத்தி முன்னேற்றுவதற்காக அவர்கள் இத்தகைய தண்டனைகளை விதிக்கிறார்கள். பிரிட்டன் காலனிய அரசின் உன்னதமான நோக்கத்தைப் புரிந்துகொள்ளமுடியாமல் எதிர்த்தவர்கள்தாம் இந்தக் கைதிகள். எல்லாம் சரி, இந்தப் படத்தை ஹிட்லர் ஜெர்மனியில் திரையிட வேண்டிய அவசியம் என்ன? ஜெர்மானியக் குடிமகன்கள் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்று அவர் விரும்பியது ஏன்?

p28a_1513075634.jpg

ஏனென்றால், இந்தப் படத்தின் இறுதிக் காட்சிகள் அனைத்தும் நடைபெறுவது வதைமுகாமில். ஹிட்லர் இதன்மூலம் தெரியப்படுத்த விரும்பிய செய்தி அழுத்தமானது. ஜெர்மனியிலும் இதே போன்ற வதைமுகாம்கள்தான் உருவாக்கப் பட்டிருக்கின்றன. ஐயோ, நம் நாட்டில் இப்படிப்பட்ட ஓர் கொடூரமான அமைப்பு இருக்கிறதா என்று நீங்கள் அச்சப்பட வேண்டியதில்லை. நாம்  கைதிகளை வதைக்கிறோமே, கொல்கிறோமே என்று அவமானம் கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. Ohm Kruger என்னும் திரைப்படத்தைப் பாருங்கள். அதிலும் வதைமுகாம் வருகிறது. நாம் உருவாக்கியதைப் போன்ற அதே வதைமுகாம். அதே போன்ற கைதிகள். அதே போன்ற தண்டனைகள். அங்கே கைதிகளாக இருந்தவர்கள் போயர்கள். நாம் கைது செய்து அடைத்து வைத்திருப்பது யூதர்களை. அதுதான் வேறுபாடு.

பிரிட்டிஷ் காலனிய அரசு பலமிக்கதாக ஆக ஆப்பிரிக்காவை அடிமைப்படுத்தவேண்டியிருந்தது. போயர்களை அழிக்கவேண்டி யிருந்தது. அதேபோல் ஜெர்மனி ஒரு பெரும் சாம்ராஜ்ஜியமாக மாறவேண்டுமானால் நாமும் பிற நாடுகளை ஆக்கிரமிக்கவேண்டும். நாமும் பெருமளவில் எதிரிகளை அழிக்கவேண்டும். இது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல இதுவேதான் இயற்கை விதியும்கூட. யூதர்கள் பரவுவது நம் சுத்தமான ஆரிய இனத்துக்குக் கேடானது. நோய்களைப் பரப்பும் கொசுக்களை நாம் என்ன செய்யவேண்டும், சொல்லுங்கள்? பாவம் பறந்து போகட்டும் என்றா விட்டுவைப்போம்?

p28b_1513075650.jpg

Ohm Kruger என்னும் இந்த ஜெர்மானியப் படத்தைத் திரையிட்டு ஜெர்மானியர்களை அதிக எண்ணிக்கையில் பார்க்க வைத்ததன்மூலம் ஜெர்மானியர்களின் கலங்கிய மனசாட்சியை வருடிக் கொடுக்க விரும்பினார் ஹிட்லர். வதைமுகாம் என்பது என் கண்டுபிடிப்பு அல்ல, உலகுக்கே நாகரிகம் கற்றுக்கொடுத்த வெள்ளைக்காரர்கள்தான் அதையும் அறிமுகப்படுத்தினார்கள் என்று ஜெர்மானியர்களுக்கு மட்டுமல்ல உலகுக்கும் அவர் தெளிவுபடுத்த விரும்பினார். இறுதியாக,  யூதர்கள் ஜெர்மானியர்கள் அல்லர், அவர்கள் ஜெர்மானியர்களின் எதிரிகள் என்று அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்ய விரும்பினார். கதாநாயகர்களாக வலம் வரும் நல்ல பிரிட்டிஷ் அதிகாரிகள் கெட்டவர்களைச் சுட்டுக்கொன்றபோது கை தட்டி மகிழ்ந்தீர்கள் அல்லவா, அப்படியே யூதர்களை நாஜிகள் சுட்டுக் கொல்லும்போதும் மகிழுங்கள்!

கவனிக்கவும், பிரிட்டனைக் குற்றம்சாட்டுவதல்ல ஹிட்லரின் நோக்கம். தன் செயலுக்கு நியாயம் கற்பிக்கவே அவர் பிரிட்டனைத் துணைக்கிழுத்தார். ஒருமுறை, இருமுறை  அல்ல, தொடர்ச்சியாக ஹிட்லர் பிரிட்டனையும் போயர் வதைமுகாமையும் ஜெர்மானியர்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருந்தார். இரண்டாம் உலகப் போர் வெடித்தபோது இந்தப் பிரசாரம் மேலும் தீவிரமடைந்தது. வதைமுகாம் என்பது அயல்நாடுகளில் காலம் காலமாக இருந்துவரும், மதிக்கத்தக்க ஒரு நிறுவனம் என்றார் ஹிட்லருடன் பணிபுரிந்த மற்றொரு உயர் அதிகாரி.

p28c_1513075666.jpg

யூதர்களுக்கு எதிரான பெரும்போரைத் தொடங்குவதற்குமுன்பு ஹிட்லர் மேற்கொண்ட முதல் முக்கியமான நடவடிக்கை அவர்களுடைய குடியுரிமையைப் பறித்ததுதான். சட்டத்தின் உதவியைக் கொண்டு, ஆட்சி நிர்வாகத்தைப் பயன்படுத்தி அவர் இதனை அதிகாரபூர்வமாகச் செய்துமுடித்தார். சுத்த ரத்தத்தை உடலில் தாங்கி நிற்கும் ஆரியர்களான ஜெர்மானியர்கள் மட்டுமே நாட்டின் அதிகாரபூர்வமான குடிமக்களாக இருப்பார்கள். யூதர்கள் வெளியேற்றப்படவேண்டிய அந்நிய சக்திகள் அல்லது அழித்தொழிக்கவேண்டிய கிருமிகள். வதைமுகாமை ஹிட்லர்தான் முதலில் கண்டுபிடித்தார் என்று எப்படிச் சொல்ல முடியாதோ அப்படியே யூத வெறுப்பையும் அவர்தான் முதலில் தூண்டிவிட்டார் என்று சொல்லமுடியாது. பல நூற்றாண்டுக்கால வெறுப்பு அது. ஹிட்லர் செய்ததெல்லாம் இந்த வெறுப்பைத் தன்னுடைய அரசியல் லாபத்துக்காக மேலும் வளர்த்தெடுத்து, கொடூரமானதோர் இனவொழிப்புக்கு இட்டுச் சென்றது மட்டும்தான்.

p28h_1513075902.jpgஎந்த அளவுக்குத் தீவிரமான யூத வெறுப்பை ஹிட்லரும் அவருடைய அரசும் கொண்டிருந்தது என்பதற்கு எண்ணற்ற உதாரணங்களை வரலாறு சேமித்து வைத்திருக்கிறது. யூதர்களை அணு அணுவாகச் சிதைத்து முடித்த பிறகு எஞ்சியிருக்கும் உடலைத்தான் அவர்கள் இறுதியில் கொன்றார்கள். போலந்தில் உள்ள மாஜ்டெனெக் என்னும் முகாமில் ஒரு குளியலறை இருந்தது. அதைப் பயன்படுத்திய ஒரு கைதியின் குறிப்பு இது. ‘கைதிகள் எல்லோரும் அந்த அறையில்தான் குளிப்போம். மிகக் குறைவான குழாய்கள்தான் இருக்கும். நாங்கள் 4,500 பேர் இருந்தோம். அனைவரும் குளித்தாகவேண்டும். சோப் இருக்காது. துடைத்துக்கொள்ள டவல் கிடையாது.  ஒரு கைக்குட்டைகூட இருக்காது. ஆனாலும் குளித்தோம்.’

கழிப்பறை என்பது தோண்டப்பட்ட குழிகள்தாம். முழுக்க மலம் நிரம்பி வழியத் தொடங்கியபிறகும் மேலும் சில நூறு பேர் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். சுத்தப்படுத்திக்கொள்ள அழுக்கடைந்த சாக்கடை நீரே இருக்கும். வேலையின் ஒரு பகுதியாக மலக்குழிகளைச் சுத்தப்படுத்தும் பணிகளைக் கைதிகளே செய்தாகவேண்டும். இரண்டு பெரிய தகரப்பெட்டிகளில் கழிவுகளை வழிய வழிய நிரப்பிக்கொண்டபிறகு தோளில் சுமந்து நடக்கவேண்டும். சில கிலோ மீட்டர் இப்படி நடக்கவேண்டும். கவனமாக இருப்பது சுமப்பவருக்கு நல்லது; இல்லாவிட்டால் தகரப்பெட்டிகளில் இருப்பது உங்கள் கால்களிலும் தொடைகளிலும் சிந்தி வழியும்.

சுகாதாரமற்ற சூழல் பலவிதமான வியாதிகளை உற்பத்தி செய்தது. தொற்று நோய் மிக எளிதில் உடல் விட்டு உடல் தாவிப் படர்ந்தது. உடல் வியாதி சிலருக்கு மன வியாதியாகவும் மாறியது. பெர்கென் பெல்சன் முகாமைச் சேர்ந்த ஒரு யூதர் சொல்கிறார். ‘எங்கள் முகாமில் வியாதிகள் மிக வேகமாகப் பரவின. டைபாய்டு காய்ச்சல் பலருக்கும் வந்தது. சிலர் தங்களுக்குள் பேசிக்கொள்ளத் தொடங்கினர். திரும்பத் திரும்ப நடந்துகொண்டே இருந்தனர். பசியாலும் வியாதியாலும் நாங்கள் சாகவேண்டும் என்பதுதான் நாஜிக்களின் விருப்பமும்.’

p28d_1513075683.jpg

அதிகபட்சக் காய்ச்சல் இருந்தாலும் கைதிகள் வேலை செய்தே தீரவேண்டும். ஒரு கூடுதல் கம்பளிகூடக் கிடைக்காது. ஒரு ஜோடி மரக்காலணி இருந்திருந்தால் குளிரிலிருந்து தப்பிப் பிழைத்திருக்கலாம். கொடுக்க மாட்டார்கள். வயிற்றுப்போக்கைத் தடுத்து நிறுத்த சில எளிய மாத்திரைகள் போதுமானதாக இருந்திருக்கும். அளிக்கமாட்டார்கள். அது வளர்ந்து வளர்ந்து அவரைக் கொல்லும்வரை காத்திருப்பார்கள். மலச்சிக்கல், பல் வலி, தலைவலி, உடல் வலி எதற்கும் சிகிச்சை கிடையாது. வலியிலும் காய்ச்சலிலும் செயலிழந்து புத்தி பேதலித்து தனக்குள் அரற்றிக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டாலும்   சீந்த  ஒருவரும் இருக்கமாட்டார்கள்.

கிரேக்கத்திலிருந்து வந்திருந்த கைதிகள் என்று சிலரைக் கிடத்தி வைத்திருப்பார்கள். அவர்களுடைய உடல் பாதி எரிந்திருக்கும். சிலருடைய உடல்களில் பெரிய பெரிய ஓட்டைகள் போடப்பட்டிருக்கும் அல்லது ஆழமான தீக்காயங்கள் காணப்படும். 27 தினங்கள் தொடர்ச்சியாக உணவு இல்லாததால் இறந்த ஒரு யூதரின் சடலம் இருக்கும். முழுவதுமாகக் கிழிக்கப்பட்ட உடல்களையும் கண்கள் பிடுங்கப்பட்ட உடல்களையும் காண்பது இயல்பானது. யூதர்களை உயிருடன் படுக்கவைத்து விருப்பப்படி உடலைக் கிழித்தும் குதறியும்  போட்ட மருத்துவர்கள் பலர் இருந்தனர்.

வார்த்தைகளில் விவரிக்கமுடியாத பல கொடுமைகளை யூதர்கள் சந்தித்துக் கொண்டிருந்தபோது பெரும்பான்மை ஜெர்மானியர்கள் என்ன செய்துகொண்டி ருந்தார்கள் தெரியுமா? வாய்மூடி அமைதியாக இருந்தார்கள். இந்த அமைதிக்கு மூன்று காரணங்களைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும். முதலாவது, பொருளாதாரக் காரணம். யூதர்களை அகற்றுவதன்மூலம்  சமூகத்தில் அவர்கள் இதுவரை வகித்துவந்த பாத்திரத்தை இனி நாம் வகிக்கலாம். அவர்களுடைய தொழில்களை நாம் நடத்தலாம். அவர்களுடைய செல்வத்தை, அவர்களுடைய சேமிப்புகளை, அவர்களுடைய வாய்ப்புகளை இனி நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். யூதர்களை அகற்றுவது தமக்கு லாபகரமானதாக இருக்கும் என்று ஜெர்மானியர்கள் நினைத்தனர்.

p28e_1513075698.jpg

இரண்டாவது காரணம், வெறுப்பு அரசியல். யூதர்களை உள்ளபடியே வெறுத்த ஜெர்மானியர்கள் பலர் இருந்தனர். யூதர்களைச் சமூகத்திலிருந்து அகற்றமுடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று உள்ளூரக் கனவு கண்டுகொண்டிருந்தவர்கள் இவர்கள். யூத வெறுப்பையே தன்னுடைய அரசியலாக அறிவித்துக்கொண்ட ஹிட்லரின் அதிரடி நுழைவு இவர்களை உற்சாகப்படுத்தியது. நாஜிக்கள் யூதர்களை வளைத்துப் பிடித்ததும், குடியுரிமையைப் பறித்ததும், வதைமுகாமில் அடைத்து வைத்துக்கொன்றதும் இவர்கள் மனசாட்சியைச் சிறிதும் அசைக்கவில்லை. உண்மையில் அவர்கள் இத்தனை காலமாகச் செய்ய நினைத்திருந்ததைத்தானே ஹிட்லர் சாதித்துக் காட்டியிருக்கிறார்?

மூன்றாவது பிரிவினரின் மனசாட்சி உயிர்ப்புடன் இருந்தது. ஆயிரம் சொன்னாலும் யூதர்களைக் கொல்வது ஏற்கத்தக்கதல்ல என்றே அவர்கள் நினைத்தனர். ஹிட்லரின் இனவெறி அரசியலோடு அவர்களால் ஒன்றமுடியவில்லை. யூதர்கள் ஒழிவது நமக்கு லாபகரமானதுதானே என்று மற்றவர்களைப் போல் அவ்வளவு எளிதாக அவர்களால் வதைமுகாமைக் கடந்துசெல்ல முடியவில்லை. `என் அரசு செய்வது தவறு’ என்று அவர்கள் உறுதியாக நம்பினர். இருந்தாலும், அவர்கள் அமைதியாக இருந்ததற்குக் காரணம், அப்படி இருப்பதைத் தாண்டி வேறு என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை என்பதுதான்.

யூத இனப்படுகொலை நிகழ்ந்ததற்கு  ஹிட்லர் மட்டுமன்று, இவர்களும்தான் காரணம். யூதர்கள் இல்லாத ஜெர்மனி அமையவேண்டும் என்பதே முதல் இரு பிரிவினரின் விருப்பம் என்பதால் அவர்கள் ஹிட்லரைத் தாங்கிப் பிடித்து நின்றனர். நாஜிப் படைகளோடு பல சமயம் இந்த இரு பிரிவினரும் இணைந்து யூதர்களின் குடியிருப்புகளையும் வர்த்தக நிறுவனங்களையும் சூறையாடினர். மறைந்து வாழ்ந்த யூதர்களைக் காட்டிக்கொடுக்கவும் அவர்கள் தயங்கவில்லை. ஜெர்மனியின் வரலாற்றை ஹிட்லர் சரி செய்வார் என்றும், இழந்த பெருமிதங்களை மீட்டெடுப்பார் என்றும் அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஜனநாயகத்தால் ஒரு பலனும் விளையப் போவதில்லை என்றும், ஹிட்லர் போன்ற ஒரு வலுவான தலைமை எடுக்கும் சில கடினமான முடிவுகள் தேசத்தின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தவே செய்யும் என்றும் இவர்கள் நம்பினர். மூன்றாவது பிரிவினருக்கு இத்தகைய நம்பிக்கைகள் இல்லை என்றாலும், அவர்கள் தங்களுடைய ஒட்டுமொத்த பலவீனத்தால் ஹிட்லரின் பலத்தைப் பல மடங்கு பெருகச் செய்தனர்.

யூதர்கள் அன்றிருந்த நிலையில்தான் இன்றைய அகதிகள் பலர் இருக்கிறார்கள். நாஜிக்கள் போல் வகை வகையாகச் சித்ரவதைகள் செய்ய இன்று யாருமில்லை என்றபோதும் அகதிகள் சந்திக்கும் பல துயரங்கள் யூதர்கள் முன்பு சந்தித்த துயரங்களையே நினைவுபடுத்துகின்றன. ஜெர்மானிய யூதர்களின் குடியுரிமை எப்படிப் பறிக்கப்பட்டதோ அப்படித்தான் இன்று பல அகதிகளின் குடியுரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. ஹிட்லரின் படைகளுக்கு பயந்து தங்களுடைய நாட்டை விட்டுத் தப்பியோடிய யூத அகதிகள், எல்லாவற்றையும் போட்டது போட்டபடி தப்பியோடிய ரோஹிங்கியா முஸ்லிம்களையே நினைவுபடுத்துகிறார்கள். சிரியாவில் நடந்ததும் இதுவேதான். இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ஆப்பிரிக்காவிலும் இலங்கையிலும் இதுவேதான் நடந்தது. நீ இந்த நாட்டைச் சேர்ந்தவனல்லன். உன் வேர் இந்த மண்ணில் இல்லை. நீ அந்நியன். எனவே நீ வெளியேறியாகவேண்டும். இல்லாவிட்டால் கொல்லப்படுவாய்.

ஹிட்லர் இன்றில்லை. வதைமுகாம்கள் இல்லை. ஆனால், காளான் போல் பெருகிக்கொண்டே போகும் அகதி முகாம்கள் அழுத்தமாக அறிவிக்கும் செய்தி ஒன்றுதான். ஹிட்லரை பலப்படுத்திய மூன்று பிரிவினரும் இப்போதும் உலகம் முழுக்க நிரம்பியிருக்கிறார்கள். ரோஹிங்கியா முஸ்லிம்கள் நம் எதிரிகள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களை வெளியேற்றினால் அவர்களுடைய வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.  என் அரசு செய்வதை நான் ஏற்கவில்லை. ஆனால், என்னால் என்ன செய்யமுடியும் என்று நினைக்கிறீர்கள் என்று அமைதி காப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அகதி முகாம்கள் பெருகிக்கொண்டு போவதற்கு இவர்களும் ஒரு வகையில் காரணம்தான்.

வரலாற்றிலிருந்து நாம் கற்கவில்லை என்பது பெருஞ்சோகம். ஹிட்லரின் கரங்களில் கடும் வதைகளை அனுபவித்த யூதர்கள், உலகம் முழுக்க அகதிகளாகச் சிதறியோடிய யூதர்கள் தங்களுக்கென்று ஒரு தனி நாட்டை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். நல்லது. ஆனால், அதே யூதர்கள் இன்று பிரிவினைச் சுவர்களை எழுப்பி, பாலஸ்தீனர்களை அகதிகளாக மாற்றிச் சிதறடிக்கிறார்கள் என்பதை எப்படிப் புரிந்துகொள்வது?
 
- சொந்தங்கள் வருவார்கள்

https://www.vikatan.com

  • 2 weeks later...
Posted

நான் அகதி! - 12 - சபிக்கப்பட்ட பயணம் - 1939

 

மருதன்

 

னவொன்று உயிர்பெற்று மிதந்து வந்ததுபோல் இருந்தது. பிரமாண்டமாகவும் பளபளப்பாகவும் இருந்த p28b_1513576613.jpgஅந்தக் கப்பலுக்குள் தயக்கத்துடன் நுழைந்தார் 15 வயது இளம்பெண் ஜிசெலா ஃபெல்ட்மென். முதல் பெரும் பயணம் என்றாலும் அவர் நடையில் துள்ளல் இல்லை. கண்களில் பூரிப்போ நிறைவோ இல்லை. ஜிசெலாவின் தங்கை அவருக்குப் பின்னால் தயங்கித் தயங்கி வந்துகொண்டிருந்தார். அவருக்கும் பின்னால் அவர்களின் அம்மா. அவர் முகம் வெளிறியிருந்ததைக் காணும்போது ஜிசெலாவின் அச்சம் மேலும் அதிகரித்தது. அச்சங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் விடுவித்து நிம்மதியான ஓரிடத்துக்குக் கொண்டு சேர்க்கும் திறன் இருக்கிறதா இந்தக் கப்பலுக்கு?

அந்தக் கப்பலின் பெயர் எஸ்.எஸ் செயின்ட் லூயிஸ். கண்டம் விட்டுக் கண்டம் செல்லும் சொகுசுக் கப்பல் அது. ஹேம்பர்க் துறைமுகத்திலிருந்து நியூயார்க், கானரி தீவுகள், மொராக்கோ என்று பல இடங்களுக்கு ஜெர்மானியர்களை அது அழைத்துச் சென்றிருக்கிறது. ஆனால், 13 மே 1939 அன்று அந்தக் கப்பல் ஒரு புதிய திசை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. இது வழக்கமான மற்றுமொரு பயணம் அல்ல என்பது அந்தக் கப்பலில் பணிபுரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். இந்தமுறை அவர்கள் ஒரு பொறுப்புமிக்க பணியைச் செய்தாக வேண்டும். முதலில் க்யூபா செல்ல வேண்டும். பிறகு அங்கிருந்து அமெரிக்கா சென்று கப்பலில் உள்ள யூதர்களைப் பத்திரமாக இறக்கிவிட வேண்டும்.

p28a_1513576605.jpg

ஜிசெலா வியப்புடன் சுற்றிப் பார்த்தபடி நடந்துகொண்டிருந்தார். பெரிய உணவுக்கூடங்கள் தென்பட்டன. ஹோட்டலில் இருப்பதைப் போன்ற பெரிய சொகுசு அறைகளையும் அவர் கடந்துசென்றார். இன்னும் சற்று தள்ளி ஓரிடத்தில் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. அதைவிடவும் ஆச்சர்யம், உள்ளுக்குள்ளே ஒரு நீச்சல் குளமும் இருந்தது. இது அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லும் கப்பலா அல்லது அமெரிக்காவேதானா?

தங்களை வழியனுப்ப வந்த உறவினர்களும் நண்பர்களும் வெடித்து அழுதது திடீரென்று நினைவுக்கு வந்தது. கொஞ்சம் புதிராகவும் இருந்தது. இளகிய மனம் கொண்டவர்கள் இப்படிப்பட்ட பிரிவுத் தருணங்களில் கண் கலங்குவது இயல்புதான். ஆனால், இப்படியா பெருங்குரலெடுத்து அழுவார்கள்? ஒரு சிலர் என்றால் பரவாயில்லை, கப்பலில் உள்ள மற்றவர்களின் உறவினர்களும்கூட ஒன்றுபோலவே அழுதுகொண்டிருந்தது ஏன்? இனி இவர்களைக் காணவே முடியாது என்று நினைத்து இறுதிவிடை கொடுத்து அனுப்பிவிட்டார்களா?

இந்தக் கப்பலுக்குள் நுழைந்து பார்த்திருந்தால் அவர்கள் நிச்சயம் கலங்கியிருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. மாறாக, அவர்களுக்குப் பொறாமைதான் தோன்றியிருக்கும். இருள் படர்ந்துகிடக்கும் ஜெர்மனியிலிருந்து நம்மையும் ஒரு கப்பல் மீட்டெடுக்குமா என்று அவர்கள் ஏங்க ஆரம்பிப்பார்கள். யார் கண்டது? இந்தக் கப்பல் எங்களை இறக்கிவிட்ட பிறகு மீண்டும் ஜெர்மனி  திரும்பி மேலும் பல ஜெர்மானியர்களை அழைத்துவரலாம். அந்தக் கப்பலில் என் உறவினர்களும் நண்பர்களும் இருக்கலாம். இதே போன்ற இன்னொரு கப்பல் போலந்திலிருந்து என் அப்பாவையும் கொண்டுவந்து அமெரிக்காவில் சேர்க்கலாம். எல்லாக் கவலைகளையும் மறந்துவிட்டு ஒரு புதிய வாழ்வை அமெரிக்காவில் மீண்டும் தொடங்கலாம்.  நிச்சயம் அம்மாவின் முகம்  மீண்டும் மலரும்.

ஜிசெலாவின் அம்மா பெர்லினிலேயே தனக்கும் தன் இரு மகள்களுக்கும் சேர்த்து க்யூபாவுக்கான விசாவை முன்கூட்டியே வாங்கி வைத்திருந்தார். அமெரிக்கா செல்வதற்கான விசாவை க்யூபா சென்றபிறகுதான் பெற்றுக்கொள்ளவேண்டியிருக்கும். அவருடைய கைப்பையில் பத்து ஜெர்மானிய மார்க்குகள் இருந்தன. தன்னுடைய உள்ளாடையில் இருநூறு மார்க்குகளை அவர் மறைத்து வைத்திருந்தார். இது அவருக்கும் ஜிசெலாவுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அமெரிக்காவில் புது வாழ்வைத் தொடங்குவதற்கு இது ஒரு முதலீடாக இருக்கட்டும்.

ஜெர்மனி யூதர்களுக்கு விடைகொடுக்க ஆரம்பித்து வெகுகாலம் ஆகியிருந்தது. `இனி இது என் தாய்நாடல்ல, நான் ஓர் அகதி’ என்பதை உணர்ந்த மறுகணமே யூதர்கள் வெளியேற ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி வெளியேறாவிட்டால் என்ன நடக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். 28 அக்டோபர் 1938 அன்று நள்ளிரவு ஜிசெலாவின்  வீட்டுக் கதவைத் தட்டி உள்ளே புகுந்த நாஜிக்கள் ஜிசெலாவின் அப்பாவைத் தரதரவென்று இழுத்துச் சென்றுவிட்டனர். அவர் யூதராக இருந்தது முதல் குற்றம் எனில், இரண்டாவது குற்றம் அவர் போலந்து நாட்டுக்காரராகவும் இருந்தது. ``ஜெர்மனி ஜெர்மானியர்களுக்கானது மட்டுமே, யூதர்களுக்கு இடமில்லை’’ என்று சொல்லி அவரைக் கையோடு போலந்துக்கு நாடு கடத்தினர். அதற்குப் பிறகுதான் நாஜிக்கள் தங்கள் தவற்றை உணர்ந்துகொண்டனர். யார் வேண்டுமானாலும் யூதர்களை விரட்டியடிக்க முடியும். ஹிட்லர்  விரட்டுபவர் அல்லர்; அழிப்பவர். யூதர்கள் இல்லாத ஜெர்மனியல்ல, யூதர்கள் இல்லாத பூமிப்பந்தே அவர் விரும்புவது.

P28C_1513576631.jpg

1939 தொடங்கும்போதே ஜெர்மனியின் எல்லைகளை இழுத்து மூடும்படி  உத்தரவு பிறப்பித்துவிட்டார் ஹிட்லர். கிட்டத்தட்ட அதே சமயத்தில் ஜெர்மனியை ஒட்டியுள்ள நாடுகளும் தங்களுடைய எல்லைகளை அடைத்துக்கொண்டுவிட்டன. ஹிட்லரின் நோக்கம், யூதர்கள் தப்பிவிடாமல் பிடித்து அவர்களை வதைமுகாம்களில் அடைத்து அழிப்பது. என்னதான் காவல் பலப்படுத்தப்பட்டிருந்தாலும் யூதர்கள் அங்கும் இங்குமாகச் சந்துகளைக் கண்டுபிடித்து நழுவிக்கொண்டுதானிருந்தார்கள். 1938 முதல் 1939 வரை இரு ஆண்டுகளில் மட்டும் ஐம்பது சதவிகித யூதர்கள் ஜெர்மனியிலிருந்து தப்பிவிட்டனர். இப்படித் தப்பியோடும் யூதர்கள் அருகிலுள்ள நாடுகளில்தான் அடைக்கலம் புகுந்தனர். தொடக்கத்தில் வாசலைத் திறந்து அவர்களை வரவேற்ற நாடுகள், பின்னர் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொண்டன. ஜெர்மானிய யூதர்கள் ஜெர்மனியின் பிரத்தியேகப் பிரச்னையல்லவா? எனவே, வருபவர்கள் எல்லோரையும் அனுமதிப்பதற்குப் பதில் ஒரு வரையறையை நிர்ணயித்துக்கொண்டு இத்தனை தலைகள் மட்டுமே என்று எல்லையை இழுத்துப்பிடித்துக்கொண்டன பல நாடுகள்.

அதே கப்பலில் ஜெரால்ட் கிரான்ஸ்டன் என்னும் ஆறு வயதுச் சிறுவனும் தன் அப்பாவுடன் அமர்ந்திருந்தான். ஜெரால்டுக்கு க்யூபாவும் தெரியாது, அமெரிக்காவும் தெரியாது. யூதர்கள், அகதிகள், நாஜிக்கள் ஒன்றுக்கும் பொருள் தெரியாது. இந்த ஊர் வேண்டாம், நாம் வேறிடம் போகலாம் என்று அப்பா கைபிடித்து அழைத்துச் சென்று புனித லூயிஸ் கப்பலில் ஏற்றிவிட்டபோது, ஜெரால்ட் கண்கள் விரிய ஆச்சரியப்பட்டான். கப்பலில் கிடைத்த வகை வகையான தின்பண்டங்களும் மாலை நேரங்களில் நடைபெற்ற நடனங்களும் திரையிடப்பட்ட சினிமாக்களும் ஜெரால்டைக் கவர்ந்திழுத்தன. இரண்டு வாரங்கள் இந்தக் கப்பலில் சென்றாக வேண்டும் என்று அப்பா சொல்லியிருந்ததை நினைத்து அவன் வருந்தினான். இன்னும் சில வாரங்கள் கூடுதலாக   இதில் இருக்கமுடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

மொத்தம் அந்தக் கப்பலில் 900-க்கும் அதிகமான ஜெர்மானிய யூதர்கள் இருந்தனர். கப்பலின் கேப்டன் குஸ்தாவ் ஷ்ரோடர் பயணிகளின் உணர்வுகளை நன்கு அறிந்துவைத்திருந்தார். இது சாதாரணப் பயணமல்ல, பாவம் யூதர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தப்பிவந்திருக்கிறார்கள், இவர்களிடம் இதமாக நடந்துகொள்ளுங்கள் என்று பணியாளர்களுக்கு அவர் அறிவுறுத்தியிருந்தார்.

வெள்ளிக்கிழமைகளில், கப்பலில் யூதர்கள் பிரார்த்தனை செய்துகொள்ளவும் ஏற்பாடுகள் செய்திருந்தார். நீச்சல் குளங்களில் குழந்தைகளும் பெரியவர்களும் தங்கள் கவலைகளை மறந்து நீந்திக்கொண்டிருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். ஒரு ஜெர்மானியரான அவர் இதில் எதுவொன்றையும் ஜெர்மனியின் மண்ணில் அனுமதித்திருக்க முடியாது. மீறினால் தண்டனை உறுதி என்று அவருக்குத் தெரியும். இது ஜெர்மானியக் கப்பல். ஆனால், இதைச் செலுத்திக் கொண்டிருப்பவர் ஹிட்லரல்ல, நான். என் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை யூதர்கள் இங்கே மனிதர்களாக மட்டுமே நடத்தப்படுவார்கள். அதனால்தான், வழிபாட்டுக்கு யூதர்கள் ஒன்றுகூடும்போது வரவேற்பறையில் மாட்டப் பட்டிருந்த ஹிட்லரின் உருவப்படத்தை அகற்றிவைத்தார் குஸ்தாவ். வேறோரிடத்தில் இருந்த ஹிட்லரின் மார்பளவுச் சிலை துணி கொண்டு மூடப்பட்டிருந்தது.
 
மே 27-ம் தேதி கப்பல் க்யூபாவை வந்தடைந்தது. ஜெரால்ட்டின் அப்பா மூட்டை முடிச்சுகளோடு தயாரானார்.  ஜிசெலாவின் குடும்பம் கப்பலை விட்டுப் பிரிய மனமில்லாமல் எழுந்து கொண்டது. கப்பலில் இருந்த எல்லோருடைய மனநிலையும் கிட்டத்தட்ட இதுதான் - ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும், மிக முக்கியமாக இயல்பாகவும் அவர்களால் கப்பலில் வாழமுடிந்தது. இந்த வாழ்க்கை அமெரிக்காவில் கிடைக்க வேண்டும் என்பதே அவர்கள் அத்தனை பேரின் ஒற்றைப் பிரார்த்தனை.

க்யூப அதிகாரிகளுடன் உரையாடிவிட்டுத் திரும்பிய குஸ்தாவின் முகம் இறுகிக் கிடப்பதைப் பார்த்ததும் பயணிகளின் கனவு சட்டென்று வடிந்துபோனது. ``காத்திருங்கள், அனுமதி கிடைக்கும்’’ என்று அமைதிப்படுத்தினார் குஸ்தாவ். அடுத்த ஏழு நாள்களும் அவர்கள் அமைதியாகத்தான் காத்திருந்தனர். இறுதிவரை அமெரிக்க விசா கிடைக்க வேயில்லை. ``அப்பா, எப்போது இறங்குவோம்’’ என்றான் ஜெரால்ட். நீச்சல்குளமும் திரைப்படமும் நடனமும் அலுக்க ஆரம்பித்துவிட்டது ஜிசெலாவுக்கு. ஏதேனும் சிக்கலா? பலர் அழ ஆரம்பித்துவிட்டனர். குஸ்தாவ் நிதானமிழக்காமல் பேசினார். ``சிக்கல்தான். க்யூபா நம்மைத் தரையிறங்க அனுமதிக்கவில்லை. அமெரிக்காவிடமிருந்து விசா பெறுவது சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டார்கள். பயப்பட வேண்டாம். நாம் நேராக அமெரிக்காவுக்கே சென்று விசா பெற்றுக் கொண்டுவிடலாம். நம்முடைய அடுத்த நிறுத்தம் ஃபுளோரிடா.’’

P28d_1513576645.jpg

பயணம் ஆரம்பமானது. அதுவரை இருந்த உற்சாகம் காணாமல் போய்விட்டதை உணர்ந்தார் ஜிசெலா. அம்மா மட்டுமன்று, விதிவிலக்கில்லாமல் எல்லோருடைய முகங்களும் வாடிப்போயிருந்தன. குழந்தைகள் எங்கிருந்து, என்ன தெரிந்துகொண்டார்களோ தெரியவில்லை, அவர்களுடைய கூச்சலும்கூடக் குறைந்து விட்டது. நேரத்தைப் பிடித்துப் பிடித்துத் தள்ளியபடி ஒரு வழியாக அமெரிக்காவை வந்தடைந்தது கப்பல். மீண்டும் அனைவரும் உற்சாகத்துடன் தயாரானார்கள். வழக்கம்போல் குஸ்தாவ் முதலில் இறங்கி அமெரிக்க அதிகாரிகளுடன் உரையாடினார். `அப்பா, நம்மை மீண்டும் வீட்டுக்கே அனுப்பி விடுவார்களா’ என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டி ருந்தான் ஜெரால்ட். எல்லோருக்கும் சேர்த்தே பதிலளித்தார். பேச்சுவார்த்தை முடிந்து திரும்பிவந்த குஸ்தாவ். ``அமெரிக்கா நம்மை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.’’

கட்டுப்படுத்தமுடியாமல் பலர் பெருங்குரலில் அழ ஆரம்பித்தனர்.  குழந்தைகள் பெற்றோர்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு வீறிட்டு அலறி னார்கள். குஸ்தாவ் அவர்களை ஆற்றுப்படுத்த முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார். ஓவென்று கத்தியபடி எங்கிருந்தோ ஓடிவந்த ஒருவர் தன் மணிக்கட்டைக் கீறிக்கொண்டு துடிதுடிக்கக் கீழே விழுந்தார். பீய்ச்சியடிக்கும் ரத்தத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான் ஜெரால்ட். ஜிசெலா வெறித்த விழிகளுடன் இடிந்துபோய் அமர்ந்திருந்தார்.

``ஏன் அமெரிக்கா ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது? யூதர்களை ஹிட்லர் வதைத்துக் கொண்டிருப்பது அவர்களுக்குத் தெரியாதா? எங்களுடைய வீடுகளை நாஜிக்கள் ஆக்கிரமித்துக் கொண்டதும், கடைகளைச் சூறையாடியதும், குடியுரிமைகளை ரத்து செய்ததும், சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாற்றியதையும் அமெரிக்கா அறிந்து வைத்திருக்கவில்லையா?

ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டை மனிதாபிமானமிக்க தலைவர் என்றல்லவா உலகம் புகழ்கிறது? அவரால் ஏன் ஒரேயொரு கப்பலைக்கூட அனுமதிக்க முடியவில்லை? நேரடியாக அவருக்குக் கடிதம் எழுதியும்கூட ஏன் பதிலில்லை? ஹிட்லர் ஒரு சர்வாதிகாரி என்பது தெரிந்ததுதான். அவருக்கு வெறுப்பு அரசியல் என்பது இயல்பானதாக இருக்கிறது. ஆனால், ஜனநாயகத்தை உயர்த்திப்பிடிக்கும் அமெரிக்கா ஏன் மனிதர்களை வெறுக்கவேண்டும்? உயிர்தப்பி நிராயுதபாணிகளாக வந்து நிற்கும் எளிய மக்களை வெளியில் தள்ளிப் பூட்டு போடுபவர்களால் எப்படி ஜனநாயகம் குறித்துப் பேசமுடிகிறது? நாங்கள் அந்நியர்கள் என்பதால் ஜெர்மனி எங்களை வேட்டையாடுகிறது. `நீங்கள் அந்நியர்கள், அதனால் நீங்கள் வேட்டையாடப்படுவதை நாங்கள் வேடிக்கை மட்டுமே பார்ப்போம் என்கிறதா’ அமெரிக்கா? ஒருவேளை நாங்கள் கொல்லப்பட்டால் இந்த இருவரின் கரங்களிலும் ரத்தக்கறை கிட்டத்தட்ட சமமாகப் படிந்திருக்கும் அல்லவா?’’

p28e_1513576659.jpg

குஸ்தாவுக்கும் புரியவில்லை. அவர் மீண்டும் கப்பலை ஐரோப்பாவை நோக்கித் திருப்பினார். ஆனால், ஜெர்மனிக்குத் திரும்பிப்போக அவர் விரும்பவில்லை. புறப்பட்டு ஒரு மாதம் கழிந்தபிறகு ஜூன் 17-ம் தேதி அங்குமிங்கும் சுற்றிவிட்டு, கடைசியில் பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப் துறைமுகத்தை வந்தடைந்தார். பெல்ஜியம் அவர்களைத் திருப்பியனுப்பவில்லை. பயணிகள் தரையிறங்குவதற்கு அனுமதித்தது. ``யூதர்கள் மீண்டும் ஜெர்மனிக்குத் திருப்பியனுப்பப்பட மாட்டார்கள்’’ என்றும் உறுதியளித்தது. பெல்ஜியம்  போக, பிரான்ஸ், நெதர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளும் விரிவான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு யூத அகதிகளைத் தங்களுக்குள் பங்கிட்டு ஏற்றுக்கொள்ள முன்வந்தன. 288 பேர் பிரிட்டனுக்குச் சென்றனர். 224 பேரை பிரான்ஸும், 214 பேரை பெல்ஜியமும், 181 பேரை நெதர்லாந்தும் ஏற்றுக்கொண்டன. ஜிசெலாவின் குடும்பமும் ஜெரால்டின் குடும்பமும் பிரிட்டனைத் தேர்ந்தெடுத்தன. குஸ்தாவ் நியாயமான மனத் திருப்தியுடன் காலியான செயின்ட் லூயிஸ் கப்பலை ஜெர்மனிக்குக் கொண்டுசென்று சேர்த்தார்.

இருந்தும் சபிக்கப்பட்ட பயணம் என்றே வரலாறு இந்நிகழ்வை நினைவில் வைத்திருக்கிறது. காரணம், பிரிட்டனுக்குச் சென்றவர்கள் மட்டுமே பாதுகாப்பாக இருந்தனர் என்பதுதான். மற்ற நாடுகளை ஹிட்லர் போரிட்டு ஆக்கிரமித்துக்கொண்டபோது யூதர்கள் மீண்டும் நாஜிக்களால் சிறைப்பிடிக்கப்பட்டனர். அவர்களில் பலர் வதைமுகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். செயின்ட் லூயிஸ் கப்பலைச் சேர்ந்த மொத்தம் 254 யூதர்கள் போரிலும், விவரிக்கமுடியாத வதைகளாலும் கொல்லப்பட்டனர். அமெரிக்கா அன்று கப்பலை அனுமதித்திருந்தால் இந்த 254 மரணங்களைத் தவிர்த்திருக்க முடியும். அமெரிக்கா ஏற்க மறுத்த அகதிகள் அல்லது அமெரிக்காவால் மறைமுகமாகக் கொல்லப்பட்ட அகதிகள் என்று இவர்கள் இன்று நினைவுகூரப்படுகிறார்கள். பின்னர் யூதர்கள் தங்களுக்கென்று ஒரு தாய்நாட்டை உருவாக்கிக்கொண்டபோது அவர்களை அமெரிக்கா ஆதரித்ததும் இன்றுவரை அந்த ஆதரவு தொடர்வதும் நமக்கெல்லாம் தெரிந்ததுதான். ஆனால், இந்த ஆதரவு யூதர்களுக்கு மட்டும்தான், அகதிகளுக்கு அல்ல. சபிக்கப்பட்ட பயணங்கள் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன. 

உயிர் தப்பி, கப்பலில் வந்துசேரும் அகதி களையெல்லாம் திருப்பியனுப்பிக் கொண்டிருக்கும் இன்றைய உலகைக் கண்டால் ஹிட்லர் நிச்சயம் பெருமிதம் கொள்வார். ஹிட்லருக்குப் பிடித்தமான ஓர் உலகில்தான் நாம் அனைவரும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

- சொந்தங்கள் வருவார்கள்

https://www.vikatan.com

  • 2 weeks later...
Posted

நான் அகதி! - 13

 

வரலாற்றில் அகதிகளும் அகதிகளின் வரலாறும்

`என் கணவர் வீட்டில் இல்லை, வெளியில் போயிருக்கிறார்’ என்று சொல்லி, கதவை வேகமாக மூடிவிட p132aa_1514360150.jpgமுயன்றார் அம்மா. ஆனால், அந்த இருவரும் கேட்பதாக இல்லை. கதவை அழுத்தித் திறந்து உள்ளே நுழைந்தார்கள். மொத்தம் இரண்டு பேர். ஏற்கெனவே சிறியதாக இருந்த எங்கள் வரவேற்பறையில் உள்ள நாற்காலிகளில் அமர்ந்துகொண்டார்கள். அவர்களை வெளியில் அனுப்புவது சாத்தியமில்லை என்பது புரிந்தது. வீடு திரும்பிய அப்பா அந்த இரு அதிகாரிகளையும் பார்த்து அதிர்ந்து நின்றுவிட்டார். நான் குளியலறைக்கு ஓடிச்சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டு அழ ஆரம்பித்தேன். அம்மாவும் அழுதுகொண்டுதான் இருந்தார். ஆனால், என்னை வெளியில் வரச் சொல்லி அப்பாவுக்கு விடைகொடுத்து அனுப்பச் சொன்னார். நான் அழுகையுடன் முத்தமிட்டு அப்பாவை அனுப்பிவைத்தேன். அப்பா அழாமல் இருப்பதற்குப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார்.

p132e_1514360124.jpg

இரண்டு மாதங்கள் கழிந்திருக்கும். மீண்டும் கதவு தட்டும் சத்தம். இந்த முறையும் இரண்டு பேர். அம்மாவை அழைத்துப் போக வந்திருக்கிறார்களாம். ``அப்படியானால் மகள் மட்டும் தனியாக இருக்கவேண்டுமா?’’ அம்மா கேட்டதற்கு அவர்களிடம் பதிலில்லை. என்னை என்ன செய்வது என்று அவர்களுக்கும் புரியவில்லை. இந்த வீட்டிலிருந்து ஒரு பெண்ணை அழைத்து வரவேண்டும் என்பது மட்டும்தான் அவர்களுக்கான உத்தரவாம். நானும் வருகிறேன் என்று தீர்மானமாக அவர்களிடம் சொன்னேன். என் அப்பாவும் அம்மாவும் எங்கே இருக்கிறார்களோ அங்கேயே நானும் இருந்துவிடுகிறேன் என்று சொன்னேன். வேறு வழியின்றி அவர்கள் என்னையும் அழைத்துப் போய்விட்டார்கள்.

மே 1940-ல் நடந்த இந்தச் சம்பவத்தை 55 ஆண்டுகள் கழித்து நினைவுகூர்ந்தார் அப்போது சிறுமியாக இருந்த ரெனேட். ஒரு யூதராக இருப்பது என்றால் என்னவென்று புரிந்துகொள்வதற்கு முன்பாகவே அதற்கான தண்டனை அவருக்கு அளிக்கப்பட்டுவிட்டது. ஆனால், இதில் ஆச்சர்யப்படுவதற்கு என்ன இருக்கிறது? லட்சக்கணக்கான யூதர்கள் அனுபவித்த துயரமல்லவா இது? பாவம் குழந்தை என்று நாஜிக்கள் எப்போதாவது தயங்கியிருக்கிறார்களா என்ன? எனில், எதற்காக ரெனேட்டைக் குறிப்பாக இங்கே நாம் கவனிக்கவேண்டும்? காரணம் ரெனேட்டும் அவருடைய குடும்பமும் கைது செய்யப்பட்டது ஜெர்மனியில் அல்ல, பிரிட்டனில். ரெனேட்டின் வீட்டுக் கதவைத் தட்டியவர்கள் நாஜிக்கள் அல்லர், பிரிட்டிஷ்  உளவு அதிகாரிகள்.

p132b_1514360169.jpg

p132c_1514360179.jpg

1940-வாக்கில் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கானவர்கள் ஹிட்லரின் ஜெர்மனியிலிருந்து தப்பி பிரிட்டனில் தஞ்சம் புகுந்திருந்தனர். ஜெர்மனியின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சிதறடிக்கப்பட்டவர்கள் அவர்கள். அவர்களில் சிலர் வணிகர்கள், சிலர் கலைஞர்கள், சிலர் செல்வந்தர்கள், சிலர் வீட்டு வேலை செய்துவந்த ஏழைகள்.  ஹிட்லரின் யூத வெறுப்பைக் கண்டு அஞ்சி ரெனேட்டின் குடும்பத்தினரைப் போல் அவர்கள் தப்பியோடி வந்திருந்தனர்.  ஜெர்மானியர்கள் போக, ஆஸ்திரியர்களும் இருந்தார்கள். ஹிட்லர் அந்நாட்டை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து அங்குள்ள யூதர்களும் வேட்டையாடப்பட்டபோது ஆஸ்திரிய யூதர்கள் அடைக்கலம் நாடி பிரிட்டன் வந்திருந்தனர். அனுமதி பெற்று முறைப்படி கப்பலேறி வந்தவர்கள் ஒரு பக்கம். அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பிரிட்டனில் குடியேறியவர்கள் இன்னொரு பக்கம். இந்த இரண்டும் சாத்தியமில்லை என்று நினைத்தவர்கள், உயிர்போனால் போய்த் தொலையட்டும் என்று துணிந்து, முட்கம்பி வேலிகளுக்குள் படுத்தபடியே ஊர்ந்துவந்திருந்தனர். 1942 வரை யூதர்களின் பிரிட்டன் வருகை தொடர்ந்துகொண்டிருந்தது. ஒரு குறிப்பின்படி கிட்டத்தட்ட 55,000 ஜெர்மானிய, ஆஸ்திரிய யூதர்கள் தங்களை அகதிகள் என்று பிரிட்டனில் பதிவு செய்துகொண்டார்கள். இவர்களில் 28,000 அகதிகள் பிரிட்டிஷ் அரசால் இழுத்துச் செல்லப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டபோது அவர்கள் அதிர்ந்துபோயினர்.

``நாங்கள் செய்த தவறு என்ன? ஹிட்லரிடம் இருப்பது ஆபத்தானது என்பதால்தான் ஓடிவந்தோம். அங்கே விடுதலைக் காற்று இல்லை என்பதால்தான் கடல்கடந்து இங்கே வந்தோம். நண்பர்களை, உறவினர்களை, குழந்தைகளைப் பறிகொடுத்த அதிர்ச்சியைத் தேக்கிவைத்தபடிதான் இங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பிரிட்டன் வந்துசேர்ந்தபிறகும் இன்னமும்கூட இரவில் அச்சமின்றி எங்களால் உறங்கமுடியவில்லை என்பதை நீங்கள் அறிவீர்களா? தலை குனிந்தபடியேதான் நாங்கள் சாலைகளில் நடக்கின்றோம் என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? ஒவ்வொருமுறை பூட்ஸ் கால்கள் எங்களை நோக்கி விரைந்துவரும்போதும் நாங்கள் தன்னிச்சையாக நின்று, பின்வாங்குவது உங்களுக்குத் தெரியுமா? நண்பர்களே, எங்கள் உடலில் பாயும் ரத்தத்தில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் அச்சம் குடிகொண்டிருக்கிறது. அந்த அச்சத்தைப் போக்கடிக்கும் ஆற்றல் விடுதலைக்கு மட்டுமே இருக்கிறது. அதைத்தேடித்தான் பிரிட்டன் வந்தோம். இங்கும் ஏன் எங்கள் வீட்டின் கதவுகள் தட்டப்படவேண்டும்? இங்கும் ஏன் நாங்கள் கைது செய்யப்படவேண்டும்?  யூதர் என்பதற்காக அங்கே வேட்டையாடப்பட்டோம். இங்கு வேட்டையாடப்படுவது அகதி என்பதற்காகவா? எனில், சர்வாதிகாரத்துக்கும் ஜனநாயகத்துக்குமான வேறுபாடு இதுதானா?’’

p132d_1514360220.jpg

அமெரிக்காவிலும் இதுதான் நடந்தது. 7 டிசம்பர் 1941 அன்று பெர்ல் துறைமுகத்திலுள்ள (ஹவாய்) அமெரிக்கக் கடற்படைத் தளத்தின்மீது தாக்குதல் தொடுத்தது ஜப்பான். இந்தத் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். அதுவரை இரண்டாம் உலகப் போரில் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்த அமெரிக்காவை இந்தத் தாக்குதல் போருக்கு இழுத்து வந்தது. ஜப்பான்மீதான போர்ப் பிரகடனத்தை மறுநாளே வாசித்தார் அமெரிக்க  அதிபர் ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட். ஆனால் அதற்கும் முன்பே, அதாவது பெர்ல் துறைமுகத் தாக்குதல் நடைபெற்ற சில மணி நேரத்துக்குள் அமெரிக்காவில் வசித்துவந்த  1,200 ஜப்பானியர்களை எஃப்பிஐ அதிகாரிகள் கைது செய்தனர். போர் அறிவிப்புக்குப் பிறகு வேட்டை தீவிரமடைந்தது. ஒரு சில மாதங்களுக்குள் 1,10,000 ஜப்பானியர்கள் தடுப்புக்காவலின்கீழ் கொண்டுவரப்பட்டனர். அனுமதியின்றித் தங்கியிருந்த ஜப்பானியர்கள் மட்டுமல்ல, முறைப்படி விண்ணப்பித்து அனுமதி பெற்று அமெரிக்கக் குடிமக்களாகவே மாறிவிட்ட ஜப்பானியர்களையும் அமெரிக்கா விட்டுவைக்கவில்லை.

இந்த ஜப்பானியர்கள்மீது எந்தவொரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என்பதைக் கவனிக்கவேண்டும். ``இன்ன காரணத்தால் உங்களை அழைத்துச் செல்கிறோம்’’ என்று எதுவும் சொல்லப்படவில்லை. ``எங்களுக்கு உத்தரவு வந்திருக்கிறது, கிளம்பி வா’’ என்று சொல்லி இழுத்துச் சென்றுவிட்டார்கள். பெண்கள், குழந்தைகள், முதியோர், நோயாளிகள் என்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கவில்லை. வண்டிகளில் கும்பல் கும்பலாக ஏற்றி அவர்களுடைய இருப்பிடத்தை விட்டு வெகு தொலைவில் தள்ளி அமைக்கப்பட்டிருந்த பெரிய தடுப்புக்காவல் முகாமில் கொண்டுசென்று மணல்போல் சரித்து, உதிர்த்துவிட்டு அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்துசென்றார்கள்.

முகாமுக்கு வெளியில் ஆயுதம் தரித்த அமெரிக்க வீரர்கள் காவல் காக்க ஆரம்பித்தார்கள். இரவு வேளைகளில் ராணுவ வீரர்கள் கவனமாக ரோந்து சென்றனர். கைதிகளின் அசைவுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டன. உணவுக்கு ஒரு பெரிய வரிசை இருந்தது. குளிப்பதற்கு ஒரு வரிசை. குடிநீருக்கு இன்னொன்று. அதிகாரிகளின் பார்வைபடாமல் எதுவொன்றையும் ஒருவரும் செய்துவிடமுடியாது. அந்த முகாமில் எரிந்துகொண்டிருந்த  அடுப்பு, அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் வரையறைத்து

வைத்துள்ள விதிமுறைகளையும் சேர்த்தே எரித்துப் பொசுக்கியது. ``எதற்காக இந்தத் தண்டனை என்று பல ஜப்பானியர்களுக்குத் தெரியவில்லை. எதற்காக இரும்பு வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறோம்? எதற்காக கிரிமினல்களைப் போல் ஒவ்வொரு விநாடியும் கண்காணிக்கப்படுகிறோம்? நாங்கள் இந்த மண்ணில் உழைத்துச் சம்பாதித்துச் சேர்த்த உடைமைகளை விட்டு ஏன் நாங்கள் பிரிக்கப்பட்டிருக்கிறோம்? எங்கள் தவறுதான் என்ன?’’ பிரிட்டனில் யூதர்கள் கேட்ட அதே கேள்வி.

ஒப்பீட்டளவில் பிரிட்டனின் யூதர்கள் அமெரிக்காவின் ஜப்பானியர்களைக் காட்டிலும் பாக்கியசாலிகள்.  மேற்கூரை இல்லாத திறந்தவெளித் தடுப்புகளில் பல ஜப்பானியர்கள் அடைபட்டுக்கிடந்தனர். குதிரை லாயங்களில் பல கைதிகள் படுத்துத் தூங்கவேண்டியிருந்தது. கழிவுகள் கொட்டிவைக்கும் கிடங்குகளில் கும்பல் கும்பலாக ஜப்பானியர்கள் நெருக்கியடித்து வாழநேர்ந்தது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தனித்தனியே பிரித்து வெவ்வேறு முகாம்களுக்கு அனுப்பிவைத்தனர். கைதிகள் கட்டாய உடலுழைப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். கடினமான, ஆபத்தான பணிகளில் ஈடுபட்ட பல ஜப்பானியர்கள் சரிந்து கீழே விழுந்தபோது அவர்களுடைய உடல்களை அப்புறப்படுத்திவிட்டு வேறு கைதிகளை அவர்களிடத்தில் அமர்த்தினார்கள் அமெரிக்கர்கள். தற்கொலை முயற்சிகள் சர்வ சாதாரணமாக நடைபெற்றன.

p132f_1514360238.jpg

ஹிகோஜி டக்கியூச்சி என்பவர் முகாமை விட்டுச் சற்று தள்ளி அமைந்திருந்த வனப்பகுதிக்குள் நுழைந்து விறகுகளைச் சேகரித்துக்கொண்டிருந்தபோது அவர் உடலில் குண்டு பாய்ந்தது. உடா என்னும் 63 வயது ஜப்பானியர் தன்னுடைய முகாமுக்கு அருகிலிருந்த வேறொரு முகாமுக்குச் செல்ல முயன்றபோது ஓர் அமெரிக்க வீரரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ``அவர் தப்பிப்போகிறாரோ என்று அஞ்சி சுட்டுவிட்டேன்’’ என்று பதற்றமின்றி பதிலளித்தார் அந்த வீரர். இந்த அச்சுறுத்தும் கொடுஞ்சூழலால் பல ஜப்பானியர்கள் மனச்சிதைவு நோய்க்கு உள்ளானார்கள். நாற்பதுகளில் இருந்த இசிரோ ஷிமோடா மனப்பிறழ்வு கொண்டு இருமுறை தற்கொலைக்கு முயன்று தோற்றுப்போனார். அவர் உடல்நலம், மனநலம் சரியில்லாதவர் என்பது முகாமில் இருந்த அனைத்து அமெரிக்கர்களுக்கும் தெரியும். இருந்தாலும் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சருகுபோல் உலர்ந்திருந்த அவரும்கூட `தப்பியோடிச்செல்ல முயன்றார்’ என்று சொல்லப்பட்டது.

முகாமில் அடைபட்டுக்கிடந்த ஜப்பானியர்களுள் 30,000 பேர் குழந்தைகள். ஹிட்லரின் வதைமுகாம்களுக்கும் அமெரிக்க முகாம்களுக்கும் வேறுபாடே இல்லை என்று ஒருவரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக குழந்தைகளுக்காக முகாமில் பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆனால், போதுமான வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. நோட்டு, பென்சில்கூடக் கொடுக்காமல் வேண்டா வெறுப்பாக ஏதோ கற்றுக்கொடுத்தார்கள். ஆனால், ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தது அமெரிக்கா. ஜப்பானியக் குழந்தைகளுக்குத் தேசப்பற்று ஊட்டும் வகையில், ``நான் அமெரிக்காவை நேசிக்கிறேன், இந்த மண்ணுக்காக உழைப்பேன், எந்தத் தப்புத் தண்டாவும் செய்யமாட்டேன்’’ என்பன போன்ற உறுதிமொழிகளை ஜப்பானியக் குழந்தைகள் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். அமெரிக்க தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்துவது அவர்களுடைய தினப்படி கடமையாக இருந்தது. ஜப்பானியக் குழந்தைகள் மெய்யான அமெரிக்கப் பற்றை வளர்த்துக்கொண்டுவருகிறார்களா என்பது கவனிக்கப்பட்டது.  அதே சமயம், வகுப்புகள் நடைபெறும் கட்டடத்தில் ஜன்னல்கள்  அதிகம்   இல்லாதவாறும்   பார்த்துக்கொண்டனர். குழந்தைகள்தாம் என்றாலும் ஜப்பானியர்கள் அல்லவா?

p132g_1514360253.jpg

பிரிட்டனில் யூதர்களும் அமெரிக்காவில் ஜப்பானியர்களும் தடுப்புக்காவலுக்குக் கொண்டுசெல்லப்பட்டதற்குக் காரணம் ஒன்றுதான். ஹிட்லர் அடுத்து பிரிட்டன்மீது போர் தொடுக்கப்போகிறார் என்னும் செய்தி அங்கிருந்த யூதர்களைக் கைது செய்யப் போதுமானதாக இருந்தது. அமெரிக்காவிலிருந்த ஜப்பானியர்களைக் கைது செய்ததற்கு பெர்ல் துறைமுகத் தாக்குதல் மட்டுமே காரணம். இந்த இரு காரணங்களையும் ஆராய்ந்து பார்த்தால் கசப்பான, கோரமான ஓர் உண்மை வெளிப்படுகிறது.

``ஆயிரம் இருந்தாலும் யூதர்கள் ஜெர்மானியர்கள் இல்லையா? ஹிட்லர் படையெடுத்துவரும்போது அவர்கள் கட்சி மாறி ஹிட்லரை ஆதரித்து இங்கே ஓர் எழுச்சியையோ கலகத்தையோ நடத்தினால் என்னாகும்? ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் யூதர்களுக்கு ஜெர்மானிய தேசப்பற்று இருக்கத்தானே செய்யும்? அதை  அவர்களுடைய ரத்தத்திலிருந்து துடைத்து அழித்துவிடமுடியுமா என்ன? தவிரவும், இன்னொரு பெரும்  அபாயமும் இருக்கிறது. இந்த யூதர்களில் பலர் உளவாளிகளாகவும் இருக்கக்கூடும் அல்லவா?’’

 ``நீ முன்னால் போய் உளவறிந்து தகவல் கொடு, தோதான நேரம் வாய்க்கும்போது நான் வந்து தாக்குகிறேன்’’ என்று சொல்லி ஹிட்லரே ஏன் இவர்களை  அனுப்பி வைத்திருக்கக்கூடாது? ஜெர்மனியின் ராணுவத் திட்டமாகவும் இது இருக்கலாம் அல்லவா? வெளியில் யூதர்களை வெறுப்பதாகவும் கொல்வதாகவும் சொல்லிக்கொண்டு நாஜிக்கள் அவர்களோடு ரகசியக்கூட்டு வைத்திருக்கலாம் அல்லவா?

அமெரிக்காவின் சந்தேகமும் இதுதான். ஜப்பான் என்னுடைய கடற்படைத் தளத்தில் தாக்குதல் தொடுத்ததற்கு இங்கிருக்கும் ஜப்பானியர்களே காரணம் என்று நான் ஏன் சந்தேகப்படக்கூடாது?  ஜப்பான் என் எதிரி என்னும்போது ஜப்பானியர்களும் என் எதிரிகள்தானே? அவர்களை எப்படி என் சொந்த மண்ணில் நான் இனியும் அனுமதிக்கமுடியும்?  ஜப்பான் என்மீது போர் தொடுக்கும். ஆனால், நான் மட்டும் ஜப்பானியர்களிடம் அமைதி காக்கவேண்டுமா? ஏமாளிபோல் வந்தாரை வரவேற்று வாழ வைத்துக்கொண்டிருக்க வேண்டுமா?

p132h_1514360269.jpg

பிரிட்டன் யூதர்களை நம்பமறுத்ததைப் போலவே அமெரிக்காவும் ஜப்பானியர்களை நம்ப மறுத்தது. அதனால்தான் யூதக் குழந்தைகளைக்கூடச் சந்தேகக் கண் கொண்டு அணுகினார்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள். ஜப்பானியக் குழந்தைகளின் சிறிய கரங்களில் அமெரிக்கக் கொடிகளைப் பலவந்தமாகத் திணித்தார்கள் அமெரிக்கர்கள். ஹிட்லரின் தவறுகளுக்கு யூதர்கள் அனைவரும் பொறுப்பேற்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜப்பான் அரசின் குற்றத்துக்கு ஜப்பானியர்கள் அனைவரையும் தண்டிக்கவேண்டும் என்று அமெரிக்கா நம்பியது.

அமெரிக்காவைத் தங்களுடைய தாய்நாடாக ஏற்று, தலைமுறை தலைமுறையாக அமெரிக்கர்களோடு அமெரிக்கர்களாக வளர்ந்து வாழ்ந்துவந்த ஜப்பானியர்களைத் திடீரென்று சந்தேகிக்க ஆரம்பித்தது அமெரிக்கா. ஹிட்லர் யூதர்களைத்தான் தேடித்தேடி அழித்துக்கொண்டிருந்தார். அவர்களுடைய உடலையும் உள்ளத்தையும்தான் வதைத்துக்கொண்டிருந்தார் என்று நன்கு தெரிந்திருந்தும், யூதர்களை ஹிட்லரின் உளவாளிகளாக  பிரிட்டனால்  பார்க்கமுடிந்தது.  ஹிட்லர் கொண்டிருந்த அணுகுமுறையும் இதுவேதான். யூதர்கள் அனைவரும் எதிரிகள் என்றுதான் அவரும் சொன்னார். அதையேதான் பிரிட்டனும் சொன்னது. ஹிட்லரை எதிர்த்துப் போரிட்ட அமெரிக்காவும் ஹிட்லரின் கண்களால்தான் ஜப்பானியர்களைப் பார்த்தது. ஹிட்லரிடமிருந்தது இனவெறி என்றால் பிரிட்டனிடமும் அமெரிக்காவிடமும் இருந்ததும் அதே இனவெறிதான். ஹிட்லர் அளவுக்கு இந்த இரு நாடுகளின் இனவெறி தீவிரமாக வெளிப்படவில்லை என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

p132j_1514360419.jpg

அகதிகளை அந்நியர்களாகப் பார்க்கும் போக்கு வரலாற்றில் நீண்டகாலமாகவே இருந்துவந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவும் பிரிட்டனும் எப்படி இருந்தனவோ அப்படித்தான் இன்றும் பல நாடுகள் இருக்கின்றன. காலமும் சூழலும் மட்டும்தான் மாறியிருக்கின்றன. அகதிகள் அனைவரும் துரோகிகள் அல்லது துரோகிகளாக மாறப்போகிறவர்கள் என்னும் கண்ணோட்டம் மாறவில்லை. அகதிகளைத் தடுப்புமுகாமில் அடைத்து வைக்கும் வழக்கம் மாறவில்லை. அகதிகளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் முறையில் மாற்றமில்லை.  அகதிகள் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும்
கூடத் தொடர்கின்றன.

``கவனம், குழந்தைகளும் சந்தேகத்துக்குரியவர்கள்தாம். முதியோரும் பெண்களும்கூட எந்நேரமும் அணிமாறலாம். நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நம்மைப் போன்றவர்களில்லை அவர்கள். அவர்கள் அந்நியர்கள். அந்நியர்களால் நம்  நம்பிக்கையை என்றென்றும் வென்றெடுக்க முடியாது.  அந்நியர்களால் நம்மோடு ஒன்றுகலக்க முடியாது. அவர்கள் நம்முடைய பாரங்கள். அவர்களை இறக்கிவையுங்கள். அவர்கள் இல்லாதுபோனாலும் பிரச்னையில்லை. இன்னும் சொல்லப்போனால் அதுவே நமக்கெல்லாம் நல்லது.’’

- சொந்தங்கள் வருவார்கள்

https://www.vikatan.com

Posted

நான் அகதி! - 14 - மனிதர்கள் படைத்த உலகம்!

 

நான் அகதி - பயணம் ஆரம்பம் - 1நான் அகதி - போரும் அகதியும் - 2நான் அகதி! - 3நான் அகதி! - 4நான் அகதி! - 5 - யார் அகதி?நான் அகதி! - 6 - வேட்டையாடு விளையாடுநான் அகதி! -7 - அகதிகளால் என்ன லாபம்?நான் அகதி - 8 - வெறுக்கத்தக்க அமைதிநான் அகதி - 9 - அகதிகளை உற்பத்தி செய்வது எப்படி?நான் அகதி! - 10 - ரத்தமும் அவமானமும்!நான் அகதி! - 11 - ஹிட்லரின் வதை முகாம்கள்நான் அகதி! - 12 - சபிக்கப்பட்ட பயணம் - 1939நான் அகதி! - 13நான் அகதி! - 14 - மனிதர்கள் படைத்த உலகம்!நான் அகதி! - 15 - நரகம் எப்படி இருக்கும்?நான் அகதி! - 16 - எங்கே என் வீடு?நான் அகதி! - 17 - மீண்டும் அகதி!நான் அகதி! - 18 - நாம் அகதிகள
 

 

‘`எங்கள் பேருந்துகளை மக்கள் சுற்றி வளைத்துக்கொண்டார்கள். அவர்கள் போட்ட கூச்சலை வைத்துப் p30b_1514704382.jpgபார்க்கும்போது அவர்கள் எங்களை வரவேற்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டோம். பலர் ஓடிவந்து எங்கள் கைககளில் சில பரிசுப்பொருள்களைத் திணித்தார்கள்.  சிலருக்குப் பேரீச்சம் பழங்கள் கிடைத்தன. சிலருக்குப் பாதாம் வகைகள். வறுத்தகடலையையும் உலர்ந்த திராட்சைகளையும் சிலர் கை முழுக்க அள்ளிக் கொண்டுவந்து அளித்தார்கள். திறந்திருந்த ஜன்னல் வழியாக, பெரிய மாதுளம்பழங்களும் எங்களை வந்தடைந்தன.’’

கிறிஸ்டினா ஸ்க்வார்கோவுக்கு அது மறக்கமுடியாத ஒரு தினம். தன்னுடைய இரு கரங்களில் இரு குழந்தைகளைப் பற்றிக்கொண்டு பேருந்திலிருந்து மிரட்சியுடன் இறங்கிய கிறிஸ்டினாவின் அச்சம் சில நிமிடங்களில் முற்றாக வடிந்துபோய்விட்டது. விரைவில் அவர் முகத்தில் புன்னகையொன்றும் அரும்பியது. கடைசியாக இப்படி உலகை மறந்து மனம் முழுக்க நிம்மதி படர்ந்தது எப்போது? நினைவிலில்லை. அந்தத் தருணத்தை அவர் நிரந்தரமாகத் தன்னுடன் நினைவுகளில் தேக்கிவைத்துக்கொள்ள விரும்பினார்.

p30a_1514704373.jpg

``என்னை இந்தப் புண்ணிய மண்ணில் இறக்கிவிட்ட இந்தப் பேருந்தை நான் என்றென்றும் மறக்கமாட்டேன். `நீ யார், இங்கே ஏன் வந்தாய்?’ என்று முறைக்காமல், என்னை வரவேற்ற இந்த மக்களை நான் மறக்கமாட்டேன். வரவேற்றதோடு நில்லாமல், நீண்டகாலம் பழகிய நண்பர்களைப் போல், ரத்தசொந்தங்களைப் போல் என்னென்னவோ அள்ளித்தரும் இவர்களுடைய வெளுத்த கரங்களை நான் என்றென்றும் நன்றியுடன் முத்தமிட விரும்புகிறேன். இவர்களுடைய ஆரவாரமான கூச்சல்கள் என் காதுகளில் எப்போதும் நிறைந்திருக்கவேண்டும். என் மனத்தின் இருளைப் போக்கடிக்கும் சக்தி இவர்களுடைய பிரதிபலன் பாராத பாசத்துக்கு மட்டுமே இருக்கிறது. என் வலிகளை, இழப்புகளை, அச்சங்களைப் போக்கும் வெளிச்சம் இவர்களுடைய புன்னகையிலிருந்து உதிப்பதைப் பார்க்கிறேன். இந்த இடத்தின் பெயர்கூட எனக்குத் தெரியாது. இவர்களுடைய மொழி எனக்கு அந்நியமானது. இவர்களுடைய கலாசாரமும் பண்பாடும் என்னுடையதைவிட மிகவும் வேறுபட்டவை. என் வாழ்நாளில் இவர்களுடைய பெயர்களைச் சரியாக நான் உச்சரிப்பேனா என்று தெரியாது. நான் ஓர் அகதி என்று இவர்களுக்குத் தெரியும். இருந்தும்  என் நடுங்கும் கரங்களில் செழிப்பான மாதுளம்பழங்களை வைத்து இவர்கள் அழுத்துகிறார்கள். இவர்களுக்கு என்னால் என்ன கைம்மாறு செய்துவிடமுடியும்?’’

1939-ம் ஆண்டு போலந்தின்மீது தாக்குதல் தொடுத்து இரண்டாம் உலகப் போரை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்தது ஹிட்லர். ஜெர்மனியின் நீண்ட கொடுங்கரங்களிலிருந்து தப்பிப்பிழைக்க போலந்து மக்கள் நாலாபுறமும் சிதறியோடினர். அவர்களில் ஒரு பகுதியினர் சோவியத் யூனியனுக்குச் சென்றனர். பலர் அங்கிருந்தும் கிளம்பி மேற்கு ஆசியாவை நோக்கி விரைந்தனர். போலந்து மக்கள் மட்டுமல்ல, கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பலரும் போரின் பிடியிலிருந்து தப்ப மேற்கு ஆசிய நாடுகளையே தேர்ந்தெடுத்தனர். குறிப்பாக, எகிப்து, பாலஸ்தீன், சிரியா, இரான் ஆகிய நாடுகளே இவர்களுடைய முதன்மையான தேர்வுகளாக இருந்தன. காரணம் ஒன்றுதான். இந்த நாடுகள் மட்டும்தான் முகஞ்சுளிக்காமல் அகதிகளுக்காகக் கதவுகளைத் திறந்துவிட்டன.  கிறிஸ்டினா ஸ்க்வார்கோ ஒரு போலந்து அகதி. அவர் வந்திறங்கியது இரானில். பாவம், எப்போது சாப்பிட்டார்களோ என்று நினைத்து அவர் கரங்களிலும் அவருடன் வந்த மற்ற அகதிகளின் கரங்களிலும் உணவுப்பொருள்களைத் திணித்தவர்கள் பெர்ஷியர்கள்.

சாமானிய இரானிய பெர்ஷியர்கள். அவர்களுக்குப் போலந்து பற்றி என்ன தெரிந்திருக்கும்? யூதர்கள் குறித்தோ ஹிட்லரின் இனத் தூய்மைக் கோட்பாடு குறித்தோ அவருடைய அகண்ட ஜெர்மானியக் கனவு குறித்தோ அவர்கள் யோசித்திருக்கிறார்களா? நடைபெற்றுக்கொண்டிருப்பது ஒரு சாதாரண மோதலல்ல, மாபெரும் போர் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்களா? பேருந்து பேருந்தாக வந்து இறங்கும் அந்நியர்களைக் கண்டு அவர்கள் அச்சப்படவில்லையா? நீங்களெல்லாம் ஏன் எங்கள் நாட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள் என்று ஏன் அவர்கள் வினாத் தொடுக்கவில்லை? எங்களுக்கு ஏற்கெனவே இருக்கும் பிரச்னைகள் போதாதென்று நீ வேறா என்று அவர்கள் சிடுசிடுக்கவில்லை. ஒருவேளை இங்கேயே நிரந்தரமாகத் தங்கி என் வளங்களை அனுபவிக்கத் தொடங்கிவிடுவாயோ என்று அஞ்சவில்லை. உன்னைப் போன்றவர்கள் பெருகி என் வேலை வாய்ப்புகளைப் பறித்துவிட்டால் என்ன செய்வேன் என்று தயங்கவில்லை. நீ பயங்கரவாதியாக இருந்தால் என்ன செய்வது என்று கவலைப்படவில்லை. 

p30c_1514704400.jpg

கிறிஸ்டினாவையும் அவரைப் போலவே பேருந்திலிருந்து நடுங்கியபடி இறங்கிய மற்ற அகதிகளையும் இரானிய பெர்ஷியர்கள் அகதிகளாகப் பார்க்கவில்லை. அந்தப் பெருங்கூட்டத்தை ஒரு சிறிய சொல்லுக்குள் அடக்கிவிடமுடியும் என்று அவர்களுக்குத் தோன்றவில்லை. ``கிறிஸ்டினா அகதியா? அவரை நிமிர்ந்து பார்த்தபடி வெறித்த கண்களுடன் நிற்கும்  அவரின் குழந்தைகளும் அகதிகளா? அடர்ந்த தாடி மீசையுடன் நிற்கும் ஆடவர்கள் அனைவரும் அகதிகளா? ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று அஞ்சி, கூட்டத்தோடு கூட்டமாகத் தங்களை மறைத்துக்கொள்ளும் இந்தப் பெண்களை அகதிகள் என்றா அழைப்பது? அது ஓர் அரசியல் சொல் அல்லவா? அவர்கள் நகமும் சதையுமான மக்கள். அவர்கள் மனிதர்கள். சக மனிதர்களாக நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். அவர்களுக்கு நாம் அடைக்கலம் தந்தாகவேண்டும். பசித்திருக்கும் இந்த மனிதக்கூட்டத்துக்கு உணவு தேவைப்படுகிறது. சில பழங்களைப் பகிர்ந்துகொடுத்தால் குறைந்துபோய்விடுமா என்ன?’’

மக்கள் மட்டுமல்ல இரானிய அரசுமேகூட அகதிகளுக்கு முடிந்த உதவிகளைச் செய்துகொடுத்தது. அகதிகளுக்கான முகாம்கள் துரித கதியில் உருவாக்கப்பட்டன. உபயோகமற்ற, சிதிலமடைந்த கட்டடங்களில் மேஜை நாற்காலிகளை இழுத்துப் போட்டு மருத்துவர்களையும் செவிலியர்களையும் அமர வைத்தார்கள். அகதிகளுக்குத் நோய்த் தொற்று இருக்கிறதா என்பது ஆராயப்பட்டது. கிறிஸ்டினாவைப் போலன்றி பல போலந்து அகதிகள் உள்ளே நுழையும்போதே நடைப்பிணமாக வந்திருந்ததால் மக்களின் அன்பையும் மீறி அவர்கள் சரிந்து விழுந்தனர். பலர் நிற்கவும் திராணியற்று மெலிந்து கிடந்தனர். எலும்பும் தோலுமாகப் பலர் சுருங்கிப்போயிருந்தனர்.

`‘மர வேலைகள் செய்யும் அனுபவம் மிக்க நண்பர் ஒருவர் எனக்கு இருந்தார். அகதிகள் வந்துசேர்ந்த பிறகு இப்போது அவருக்கு வேறொரு வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது அவர் காலை முதல் இரவு வரை சவப்பெட்டிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். சவப்பெட்டிக்கான தேவை குறைவதாகவே இல்லை. அவர் எத்தனை பெட்டிகளை உருவாக்கினாலும் போதவில்லை. ஒரு நாளைக்குக் குறைந்தது ஐம்பது புதிய பெட்டிகள் தேவைப்பட்டன’’  என்கிறார் கோலம் அப்துல் ராஹிமி.

நீ எத்தனை செலவு வைக்கிறாய் பார் என்று ஒருவரும் அகதிகளிடம் எரிந்துவிழுந்ததாகத் தெரியவில்லை. பெருகும் செலவுகளுக்கு என்ன செய்யலாம் என்று மட்டுமே யோசித்தார்கள். அதற்கொரு வழி கிடைத்தது. ``அகதிகளை ஏன் சுமைகளாக மட்டும் கருதவேண்டும்? நோயற்றவர்களும் திராணியற்றவர்களும்போக, பலர் திடகாத்திரமாகவும் இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் இதற்குமுன்பு உழைத்துதானே பிழைத்துவந்தார்கள்? அதே வாய்ப்புகளை இங்கும் வழங்கினால் என்ன? அவர்களிடமிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே அவர்களைப் பராமரிப்பது சாத்தியம் இல்லையா? தவிரவும், அவர்களும் வெறுமனே கூட்டுக்குள் அடைந்து கிடக்க வேண்டியிருக்காது அல்லவா?’’

p30d_1514704415.jpg

இரானின் தலைநகரம் தெஹ்ரானிலும் அதற்கு வெளியிலும் உருவாக்கப்பட்டிருந்த முகாம்கள் தற்காலிகத் தொழிற்கூடங்களாக மாறின.  போலந்து அகதிகள் தங்களுக்குத் தெரிந்ததைச் செய்ய ஆரம்பித்தனர். ஒவ்வொரு அகதிக்கும் எதில் அனுபவம் இருக்கிறது என்பதைக் கேட்டறிந்து அதற்கேற்பப் பணிகளை வழங்கினார்கள். சிலர் இயந்திரங்களைப் பழுது பார்த்தார்கள். சிலர் சமையலில் இறங்கினார்கள். சிலர் காலணிகளை உருவாக்கினார்கள். சிலருக்குக் கட்டுமானப் பணிகள் ஒதுக்கப்பட்டன. விறகு வெட்டுதல், சுத்தப்படுத்துதல் என்று தொடங்கி ஒவ்வொருவருக்கும் செய்வதற்கு ஏதேனும் ஒன்றிருந்தது.

எல்லோரும் முகாம்களில் தங்கவைக்கப்படவில்லை. பலருக்குக் காத்திரமான கட்டடங்கள் ஒதுக்கப்பட்டன. பழுதடைந்த கட்டடங்களைச் சீர்செய்து அவற்றில் அகதிகளைக் குடியமர்த்தினார்கள். இங்கு வசித்த போலந்துக் குடும்பங்களுக்கு தாம் ஓர் அந்நிய நாட்டில் இருக்கிறோம் என்னும் உணர்வே ஏற்படவில்லை. வேலைக்குப்  போவது, கடை வீதிகளுக்குச் செல்வது, பிடித்ததைச் செய்வது என்று இயல்பான ஒரு வாழ்க்கை முறைக்கு அவர்கள் மாறினர். போர் முடிவடையும்வரை காத்திருக்கவேண்டியதில்லை என்பதால் போலந்துக் குழந்தைகள் சேர்ந்து படிக்க, பள்ளிக்கூடங்கள் உருவாக்கப்பட்டன. குடும்பத்திலுள்ள பெண்கள், ஆண்கள் இருவரும் பணிபுரிந்ததால் ஓரளவுக்கு வசதியாகவே அவர்களால் வாழமுடிந்தது. எந்த  அளவுக்கு என்றால் சிலர் சொந்தமாகத் தொழில் முயற்சிகளில் இறங்கி வெற்றிபெறவும் ஆரம்பித்துவிட்டனர்.

அப்போதும்கூட இரானிய மக்களிடமிருந்து எந்தவித எதிர்ப்பும் கிளம்பிவரவில்லை என்பதைக் கவனிக்கவேண்டியிருக்கிறது. ஆசியர்கள் எங்கள் வேலைகளைத் திருடிக்கொள்கிறார்கள், அந்நியர்கள் இங்கே தொழில் தொடங்கிச் செல்வத்தில் கொழிக்கிறார்கள், இஸ்லாமியர்கள் இங்கே வந்து அமெரிக்காவின் கலாசாரத்தை அழிக்கிறார்கள் என்று அமெரிக்கர்கள் இன்று கூச்சலிடுவதைப் போல் இரானியர்கள் ஒருவரும் அன்று பதறவில்லை. ``இதனால்தான் அகதிகளைச் சேர்க்கவேண்டாம் என்று சொன்னோம்’’ என்று ஒருவரும் கொடி பிடிக்கவில்லை. நம்முடைய புனித இஸ்லாமியப் பண்பாடு அகதிகளால் சீரழிந்துவிட்டது என்று மதவாதிகள் யாரும் வெறுப்பு அரசியல் வளர்க்கவில்லை. அரசை நம்பிப் பலனில்லை, வாருங்கள் நம் மண்ணில் பரவியிருக்கும் நச்சு வேர்களை நாமே அகற்றுவோம் என்று எந்தக் குழுவும் தடியைத் தூக்கவில்லை. அவர்கள் உழைப்பு, அவர்கள் சம்பாத்தியம், இதில் நாம் தலையிடுவதற்கு என்ன இருக்கிறது என்று அவர்கள் அமைதியாக ஒதுங்கி நின்றார்கள். போலந்து அகதிகளில் கணிசமானவர்கள் யூதர்கள் என்பதையும் யூத வெறுப்பு என்பது ஜெர்மனிக்கு மட்டுமே சொந்தமானதல்ல அது உலகம் தழுவியது என்பதையும் நாம் மறக்கக்கூடாது. ஆனால், இரானிய பெர்ஷியர்களை இந்த வெறுப்பும் தீண்டவில்லை.

இரானுக்கு வந்து சேர்ந்த போலந்து அகதிகளின் தோராய எண்ணிக்கை 1,16,000. நான் இருநூறு பேரை மட்டுமே எடுத்துக்கொள்வேன், இல்லை இல்லை நீ பெரிய நாடு, குறைந்தது இரண்டாயிரம் பேரை ஏற்கவேண்டும் என்றெல்லாம் வளர்ந்த நாடுகள் பல இன்று பேரம் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரை ஏற்று அரவணைத்த இரானும், இரானியர்களும் உலகின் இன்றைய பார்வையில் பல மடங்கு உயர்ந்து நிற்கிறார்கள்.

p30e_1514704430.jpg

போலந்து அகதிகளுக்கு அரசாங்கத்திடமிருந்தும் ரெட் கிராஸ் போன்ற அமைப்புகளிடமிருந்தும் நன்கொடைகள் திரண்டு வந்துகொண்டிருந்தன. அவர்களோடு போட்டிபோட்டுக்கொண்டு சாமானிய மக்களும்கூட கம்பளி ஆடை, ரொட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள் என்று வீட்டிலிருந்து கொண்டுவந்து கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். இதனால் போலந்து அகதிகளால் இரானிய மக்களோடு எந்தவித சங்கடமும் இன்றி இயல்பாக ஒன்று கலந்து உறவாடமுடிந்தது. பெர்ஷியர்களின் பரிசுத்தமான நேசம் போலந்து அகதிகளை ஈர்த்தது என்றால், போலந்து அகதிகளின் உழைப்பும் அக்கறையும் பெர்ஷியர்களைக் கவர்ந்தன.

அகதிகள் தங்கள் இருப்பிடங்களைச் சுத்தமாக வைத்திருந்தது பெர்ஷியர்களைக் கவர்ந்தது. முகாமை வீடு போல் கருதி அகதிகள் அதை அழகுபடுத்தியிருந்ததையும் சுற்றிலும் பூச்செடிகளை நட்டுப் பராமரித்து வந்ததையும் கண்டு பெர்ஷியர்கள் மகிழ்ந்தனர்.  வீட்டுப் பணிகளுக்குப் போலந்துப் பெண்களை நியமிக்க பெர்ஷியக் குடும்பங்கள் ஆர்வம் செலுத்தின. அவர்களிடம் நேர்மையும் நேர்த்தியும் நிறைந்திருந்தன என்பது மட்டுமல்ல காரணம். போலந்துப் பழக்கவழக்கங்கள் குறித்து அந்தப் பெண்களிடம் பல கதைகள் கேட்டு அறிந்துகொள்ளலாம் அல்லவா? வேலை கிடக்கட்டும் வா என்று இழுத்து உட்கார வைத்து சைகையிலும் உடைந்த சொற்களிலும் பல கேள்விகளை பெர்ஷியப் பெண்கள் எழுப்பினார்கள். ``உன் நாட்டில் பெண்கள் எப்படித் தங்களை அலங்கரித்துக்கொள்வார்கள்? என்ன மாதிரியான ஆடைகளை அணிந்துகொள்வீர்கள்? மணி மாலைகள் அணியும் வழக்கமிருக்கிறதா? அழகு சாதனப் பொருள்கள் நிறைய பயன்படுத்துவீர்களோ? எனில் எப்படிப்பட்ட பொருள்கள்? நீங்கள் துணி தைப்பதில் வல்லவர்கள் என்கிறார்கள், எப்படிப்பட்ட ஆடைகளைத் தைப்பீர்கள்? தயவு செய்து எனக்குக் கற்றுக்கொடுக்கமுடியுமா?’’

மேற்கத்திய நாகரிகம் என்றால் என்ன என்பதை பெர்ஷியப் பெண்கள் போலந்துப் பெண்களிடமிருந்து விரிவாகக் கற்றுக்கொண்டனர். பெரும்பாலான சமயங்களில் பெர்ஷிய எஜமானிகளைக் காட்டிலும் பணியாற்றும் போலந்துப் பெண்கள் அதிகம் படித்தவர்களாக இருந்தனர். ஆனால், இது அவர்களுக்கிடையிலான உறவை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. மாறாக, வலுப்படுத்தவே செய்தது. இன்று உன்னிடமிருந்து ``நான் ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொண்டேன், நன்றி. நான் உனக்கொன்றைக் காட்டுகிறேன் வா’’ என்று இழுத்துச் சென்று கற்றுக்கொடுத்தார்கள்.

இந்தப் பரிமாற்றம் முக்கியமான மனமாற்றத்தை இரு தரப்பிலும் ஏற்படுத்தியது.  யூத வெறுப்பு போலவே  இஸ்லாமிய வெறுப்பும் உலகம் தழுவியதுதான். போலந்து அகதிகளில் பலருமேகூட இந்த வெறுப்புக்கு இரையாகியிருந்தனர். இரானில் வந்து மாட்டிக்கொண்டோமே, இந்த இஸ்லாமியர்கள் நம்மை எப்படி நடத்துவார்களோ என்று அஞ்சியிருந்த போலந்து அகதிகள் அங்கே கிடைத்த அரவணைப்பைக் கண்டு வெட்கமடைந்தனர். இவர்களைத் தவறாக நாம் நினைத்துவிட்டோமோ என்று மனம் வருந்தினர். பெயரளவிலேயே, யூத வெறுப்புடன் இருந்த இரானியர்கள் போலந்து அகதிகளை நெருக்கத்தில் கண்டதும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர்.  மொழி, மதம், கலாசாரம், பழக்க வழக்கம் எதுவொன்றும் அவர்களைப் பிரித்துவைக்கவில்லை. நம்மிடம் பல வேறுபாடுகள் இருப்பது உண்மை. ஆனால், அருகருகே அமர்ந்து ஆளுக்கொரு கோப்பை தேநீர் அருந்தியபடி உரையாடும்போது இந்த வேறுபாடுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக முறிந்து விழுந்துவிடுகின்றன என்பதை அவர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்தனர். இரு வேறு மக்கள் குழுவுக்கு இடையில் உரையாடல் மட்டுமல்ல, ஆரோக்கியமான நட்புறவும் சாத்தியம் என்பதை அவர்கள் கண்டுகொண்டனர்.

போர் முடிவடைந்த பிறகும், முகாம்கள் மறைந்துபோன பிறகும் போலந்து அகதிகள் பலர் இரானை விட்டு வெளியேறவில்லை. போலந்துப் பெண்கள் சிலர் பெர்ஷிய ஆண்களைத் தீவிரமாகக் காதலித்துக்கொண்டிருந்தனர். பெர்ஷியப் பெண்கள் முகாமில் வசிக்கும் போலந்து ஆண்களைத் திருமணம் செய்துகொண்டு தெஹ்ரானில் ஒரு புதிய வாழ்வைத் தொடங்கியிருந்தார்கள். போலந்து அம்மாவுக்கும் பெர்ஷிய அப்பாவுக்கும் பிறந்த குழந்தைகளும், போலந்து அப்பாவுக்கும் பெர்ஷிய அம்மாவுக்கும் பிறந்த குழந்தைகளும் இரானிய மண்ணில் தவழ்ந்துசெல்ல ஆரம்பித்தன. மாறுபட்ட இரு உலகங்கள் ஒன்றிணைந்து ஒரு புதிய உலகைப் படைக்கமுடியும் என்பதற்கான அத்தாட்சி இந்தக் குழந்தைகள். அப்பாவிடமிருந்து ஒரு மொழியையும் அம்மாவிடமிருந்து இன்னொன்றையும் இந்தக் குழந்தைகள் கற்றுக்கொள்ளும். ஆனால், இருவருமே அகதி என்னும் சொல்லையும் அதன் பொருளையும் அந்தக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கமாட்டார்கள்.

- சொந்தங்கள் வருவார்கள்

https://www.vikatan.com

Posted

நான் அகதி! - 15 - நரகம் எப்படி இருக்கும்?

 

 

மருதன்

 

ரு தவளையைப்போல் கைகளையும் கால்களையும் பரப்பிக்கொண்டு கிடந்தது அந்த உடல். அந்த p90b_1515568706.jpgஅடர்ந்த காட்டுப் பகுதிக்கு அருகில் மனிதர்கள் வசிக்கக்கூடிய ஒரே இடம் அகதி முகாம் மட்டும்தான் என்பதால் அந்த உடலுக்குச் சொந்தக்காரர் ஓர் அகதியாகத்தான் இருக்கவேண்டும் என்று யூகித்தார்கள். காவல் துறையினர் வந்து சேர்ந்தனர். உடலைச் சுற்றி சாக்பீஸ் கோடுகள் வரைந்து, படம் எடுத்துக் கொண்டார்கள். அது ஓர் ஆணின் உடல் என்பதை மட்டும்தான் உத்தரவாதமாகச் சொல்லமுடிந்தது. பத்திரிகையாளர்கள் பல கேள்விகளை வீசினார்கள். அவர் அகதியா? அவர் கொல்லப்பட்டிருக்கிறாரா? யார் கொன்றது? சீருடை அணிந்த அதிகாரிகள் எதற்கும் பதிலளிக்கவில்லை. உடலை அள்ளியெடுத்துக்கொண்டு கிளம்பி விட்டார்கள்.

அருகிலுள்ளவர்களிடம் பேச்சு கொடுத்தபோது சில தகவல்கள் கிடைத்தன. ஆம், அவர் அகதிதான். எந்த நாட்டிலிருந்து வந்தவர் என்பது தெரியவில்லை. ஆனால், உள்ளூர் மக்கள் அவரைப் பார்த்திருக் கிறார்கள். நினைவிலும் வைத்திருக்கிறார்கள். காரணம், அவர் மனவளர்ச்சி குன்றியவர். அவரை யாரேனும் தாக்கியிருக்கலாம். அல்லது ஒரு கும்பல் அடித்துக் கொன்றிருக்கலாம். எதற்காக என்று தெரியவில்லை. ஆனால், உடலில் உள்ள காயங்களைப் பார்க்கும்போது நடந்திருப்பது கொலை என்பது உறுதியாகிறது. இது நடந்தது மானுஸ் தீவு என்னுமிடத்தில். உலகின் பார்வையிலிருந்து மிகத் தொலைவில் ஒளிந்துகிடக்கும் இந்தத் தீவு மர்ம மரணங்களுக்குப் பிரசித்தி பெற்றது. சில சமயம் உடல் கிடைக்கும், பல சமயங்களில் அதுகூடக் கிடைக்காது.

p90a_1515568694.jpg

பெஹ்ரூஸ் பூச்சானி தற்சமயம் அடைபட்டுக்கிடப்பது இந்தத் தீவில்தான். ‘`இங்கே என்ன நடக்கிறது என்று கேட்கிறீர்கள். நான் எப்படி இருக்கிறேன் என்றும், நான் வசிக்கும் இடம் எப்படியிருக்கிறது என்றும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள். நான் நலம், இங்கு அனைவரும் நலம் என்று சம்பிரதாயமாக ஒரு வரி பதில் எழுதிப்போடும் நிலையில் நான் இல்லை. சாப்பிட்டு இரண்டு நாள்கள் ஆகின்றன. உறங்கியும் இரண்டு நாள்கள் ஆகின்றன. இதற்குமேல் மோசமடைய முடியாது என்னும் அளவுக்கு நிலைமை தீவிரமடைந்துவிட்டது. நான் சிறிது சிறிதாகச் சிதறிக் கொண்டிருக்கிறேன். நான் இருப்பது நரகத்தில். இந்த இடத்தை அப்படி மட்டும்தான் அழைக்கமுடியும். இந்த நரகம் என்னை ஒவ்வொரு நாளும் திடுக்கிடச் செய்கிறது.’’

பப்புவா நியூ கினியில் உள்ள மானுஸ் தீவில் இருந்து பெஹ்ரூஸ் பூச்சானி இந்தக் குறிப்பை எழுதியிருக்கிறார். நீண்டு நீண்டு செல்லும் அடர்ந்த கானகப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதி மானுஸ் தீவு. இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் இங்கே தனது ராணுவத் தளத்தை அமைத்துக்கொண்டது. போர் முடிந்தபிறகு, ஜப்பானியப் போர்க் கைதிகள்மீதான குற்ற விசாரணையை ஆஸ்திரேலியா இதே தீவில் மேற்கொண்டது. அன்று தொடங்கி இன்றுவரை ஆஸ்திரேலியாவின் செல்வாக்குக்கு உட்பட்ட ஒரு பிரதேசமாகவே மானுஸ் தீவு இருந்துவருகிறது. இந்தத் தீவை ஆஸ்திரேலியா எதற்குப் பயன்படுத்திக்கொள்கிறது தெரியுமா? தூக்கிப் போட முடியாத, அதே சமயம் பயன்படுத்தவும் முடியாத தட்டுமுட்டுச் சாமான்களைப் பாழடைந்த சரக்கு அறையில் கழித்துக் கட்டியிருப்போம் அல்லவா? தேவைப்படாத அந்நிய மனிதர்களை அப்படித்தான் மானுஸ் தீவில் வீசிக் கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா. 

எங்களை மனிதர்கள் என்று ஆஸ்திரேலியா இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என்கிறார் பெஹ்ரூஸ் பூச்சானி. நாங்கள் மனிதர்கள் என்பதை ஏற்றுக்கொண்டால் பிறகு எங்களை அவ்வாறு நடத்தியாக வேண்டும்.   அது சாத்தியமில்லை என்பதால் எங்களை மனிதர் களுக்கும் விலங்குகளுக்கும் இடைப்பட்ட ஓரிடத்தில் ஆஸ்திரேலியா வைத்திருக்கிறது என்கிறார் அவர்.  ஆஸ்திரேலியா ஒரு முன்னேறிய நாடு. கலைகளை வளர்க்க அவர்கள் அதிகம் மெனக்கெடுகிறார்கள், நிறைய செலவு செய்கிறார்கள். அறிவார்ந்த விவாதங்களை வளர்த்தெடுக்கிறார்கள். தனித்துவமான கலாசாரத்தைக் கொண்டிருக்கிறார்கள். வெளியில் சென்று கேட்டுப் பாருங்கள், ஆஸ்திரேலியா ஓர் அழகான, பண்பட்ட, அமைதியான நாடு என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். ஆனால், ஆஸ்திரேலியா தனது இன்னொரு முகத்தை எங்களுக்கு மட்டுமே காட்டுகிறது என்கிறார் பூச்சானி. ``எது நிஜமான ஆஸ்திரேலியா? நீங்கள் காண்பதா அல்லது எனக்குத் தென்படுவதா?’’

பூச்சானி இரானைச் சேர்ந்த ஒரு குர்து. மேற்கு இரானில் உள்ள குர்து இன மக்களுக்கும் இரானிய அரசுக்கும் இடையில் நீண்டகாலமாகவே மோதல்கள் நீடித்துவருகின்றன.  குர்துகள் இரானை உடைத்து குர்திஸ்தான் என்னும் தனிநாட்டை உருவாக்கிவிடுவார்களோ என்பது இரானிய அரசின் அச்சம். எனவே போராளிகள், பொதுமக்கள் என்றெல்லாம் பிரித்துப் பார்க்காமல் குர்து மக்கள் அனைவர்மீதும் அறிவிக்கப்படாத போரொன்றை நடத்திவருகிறது இரான் அரசு. பூச்சானியின் நண்பர்கள் அனைவரும் இப்படித்தான் விரட்டிப்பிடித்து வேட்டையாடப்பட்டார்கள்.

p90c_1515568728.jpg

அடிப்படையில் அவர் ஒரு பத்திரிகையாளர். கவிதைகளும் எழுதப் பிடிக்கும். ஆவணப்படம் எடுத்திருக்கிறார். இரான் தேசத்தைவிடவும் தேசியவாதப் போராட்டத்தைவிடவும் மனிதர்களின் உயிர் முக்கியம் என்று நினைப்பவர். மேற்கு ஆசிய அரசியல் குறித்து உள்ளூர்ச் செய்தித்தாள்களில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். குறிப்பாக இரானில் நடைபெறும் வன்முறை நிகழ்வுகளை அச்சமின்றிப் பதிவு செய்திருக்கிறார். இரானிய அரசின் கண்மூடித்தனமான போர் குர்து மக்களை மட்டுமன்றி அவர்களுடைய கலாசாரத்தையும் சேர்த்தே அழித்துவிடும். சிறுபான்மையினரான குர்துகளின் உரிமைகள் காக்கப்படவேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறார். குர்து என்றாலே துப்பாக்கியை உருவிவிடும் இரான், குர்துகளுக்காக எழுதும், போராடும், கவிதை தீட்டும் மற்றொரு குர்துவான பூச்சானியை விட்டுவைக்குமா? பூச்சானி கட்டம் கட்டப்பட்டார். சிறிது காலம் தலைமறைவாகி மறைந்துகிடந்தார். ஆனால் படைப்பூக்கமும் அதைவிட முக்கியமாகப் போராடும் குணமும் கொண்டிருந்த பூச்சானியால் ஒரு வாயில்லாப் பூச்சியாக ஒரு மூலையில் சுருண்டுகிடக்க முடியவில்லை. அதே சமயம் இரானில் இருப்பது ஆபத்தானது என்பதும் தெரிந்தது. எனவே இரானை விட்டு வெளியேற முடிவுசெய்தார்.

தென்கிழக்கு ஆசியாவைச் சுற்றிவந்த பூச்சானி இந்தோனேஷியாவுக்கு அருகிலுள்ள கிறிஸ்துமஸ் தீவு என்னும் பகுதிக்குப் படகில் சென்றார். இது ஆஸ்திரேலியாவுக்கு உட்பட்ட பிரதேசம். அமைதியான கங்காரு தேசம் தன்னை ஏற்றுக் கொள்ளும் என்று அவர் நம்பியது தவறாகிப்போனது. அவரால் ஆஸ்திரேலியாவில் கால் பதிக்க முடியவில்லை. ஆகஸ்ட் 2014-ல் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து அப்படியே அள்ளியெடுத்துவந்து மானுஸ் தீவில் கொண்டுவந்து போட்டார்கள். ஒரு மலைப்பாம்புபோல் அந்தத் தீவு அவர் உடலை இறுகப்பற்றி, சிறிது சிறிதாக விழுங்கத் தொடங்கியது. அதை முழு விழிப்புடன் அவர் உணர்ந்து கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில்தான் `தி கார்டியன்’ இதழிலிருந்து ஒரு தொடர்பு கிடைத்தது. ``நீங்கள் தங்கியிருக்கும் தீவு குறித்து எழுதமுடியுமா?’’ பூச்சானி உடனே ஒப்புக்கொண்டார். மானுஸ் தீவு குறித்த முதல் நேரடிப் பதிவு அவர்மூலமாக இந்த ஆண்டு நமக்குக் கிடைக்க ஆரம்பித்தது.

p90d_1515568746.jpg

அக்டோபர் 28.  பூச்சானி எழுதுகிறார். ``கொடூரமான கனவுகள் என்னை உலுக்கி எழுப்பிவிட்டன. இந்தத் தீவுக்கு வந்தது முதல் இத்தகைய கனவுகளே எனக்கு வந்து கொண்டிருக்கின்றன. இரவும் பகலும் கலந்திருக்கும் இந்த நேரத்தில் இப்படி திடீரென்று விழித்தெழுவது கொடுமையானது. காரணம், எழுந்தவுடன் பசி வந்து ஒட்டிக்கொள்கிறது. இப்போது போனால்தான் காலை உணவு கிடைக்கும். உடனே எழுந்துகொள் என்று பசி எனக்குக் கட்டளையிடுகிறது. ஆனால், உடல் அசையக்கூட மறுக்கிறது. இன்னும் தூங்க வேண்டும். அப்போதுதான் உடல் பிழைத்திருக்கும். பசியா, உறக்கமா? இந்த இரண்டில் ஒன்றை நான் தேர்ந்தெடுக்கவேண்டும்.

என்னுடைய படுக்கைக்கு அருகில் ஓர் இராக்கிய அகதி படுத்துக்கிடக்கிறார். நடுத்தர வயது. அவர் ஏதோ முனகிக்கொண்டிருக்கிறார். அந்த முனகல் ஒலி சிறிது நேரத்தில் அலறலாக மாறுகிறது. இவ்வளவு பெரிய மனிதர் ஒருவர் வீறிட்டுக் கத்துவதைப் பார்க்க என்னவோ போலிருக்கிறது. அவருக்குப் பல ஆண்டுகளாகக் கண் வலி. கவனிப்பாரற்று அவர் அலறிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம், சூடானிலிருந்து வந்திருக்கும்  ஓர் அகதியைக் காண்கிறேன். அவர் உற்சாகத்துடன் என்னை அருகில் வரும்படி அழைக்கிறார். நான் எழுந்து அவரிடம் சென்றேன். அவர் தன்னுடைய பாக்கெட்டிலிருந்து ஒரு படத்தை எடுத்து எனக்குக் காட்டினார். அவரின் மகள்கள் அதில் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

அவரை யாரோ மீண்டும் மானுஸ் தீவுக்கு இழுத்து வந்துவிட்டார்கள்  போலிருக்கிறது. அவரின் மனைவி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்டுவிட்டார். மகள்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. திடீரென்று அவர் ஒரு சிறிய புன்னகையுடன் என் கண்களைப் பார்த்துக் கேட்டார். ‘நமக்கு எப்போது விடுதலை கிடைக்கும்?’

அக்டோபர் 29. வேலியை ஒட்டியிருக்கும் பகுதியில் இலக்கின்றி நடந்துகொண்டிருக்கிறேன். மற்ற அகதிகளும் என்னைப்போலவே சுற்றிச் சுற்றி நடந்துகொண்டிருக்கிறார்கள். சில சமயம் இரவு முழுக்க இப்படி நடந்துகொண்டிருப்பேன். முகாமுக்கு வெளியில் காவல்துறை வீரர்களும் கப்பல் படை வீரர்களும் ரோந்து போய் க்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் முகாமுக்குள் நடந்துகொண்டிருக்கிறோம். அவர்கள் முகாமுக்கு வெளியில் எங்களைக் கண்காணிப்பதற்காக நடந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்.

நவம்பர் 1. நேற்றிரவுமுதல் அகதிகள் அனைவரும் துவண்டுபோய்க் கிடக்கிறார்கள். பசி, சோர்வு, தாகம். காலை ஏழு மணிக்கு ஜெனரேட்டர்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டார்கள். வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. ஏற்கெனவே பசியால் இருக்கும் அகதிகள் பொறுமையிழந்துவிட்டார்கள். பலருக்குக் கடும்கோபம். தள்ளுமுள்ளு, சண்டை, மோதல். ஓர் அகதி தன் மணிக்கட்டை அறுத்துக்கொண்டுவிட்டார். ரத்தம் வழிந்தோடுகிறது. அவர் தன் நெஞ்சிலும் காயம் ஏற்படுத்திக்கொண்டுவிட்டதைப் பார்க்கிறேன். நிறைய பேர் ஒன்றுசேர்ந்து கத்துகிறார்கள். நிறைய கூச்சல். நிறைய குழப்பம். சூடு அதிகரிக்கிறது.

அறைகளும் கூடாரங்களும் மனிதர்களால் நிரம்பி வழிகின்றன. பூச்சிகள்  என்மீது  ஏறுவதை உணர்கிறேன். அவை என்னைக் கடித்துத் தின்ன ஆரம்பிக்கின்றன. மின்சாரம் இல்லாததால் தண்ணீரும் நின்றுவிட்டது. கழிப்பறைகள் மேலும் அசுத்தமடைகின்றன. துர்நாற்றம் அறை முழுக்கப் பரவுகிறது. கைதிகளைச் சித்ரவதை செய்வதற்குச் சிறந்த கருவி இப்படிப்பட்ட கழிப்பறைதான். இந்த வாடை என்னைக் கொல்ல ஆரம்பிக்கிறது. அது என் தன்னம்பிக்கையைக்  குலைத்து என் தன்மானத்தை இழிவுபடுத்துகிறது. இந்த வாரம் நான் மிகவும் தளர்ந்துவிட்டேன். உறக்கமும் உணவும் இல்லை. நான் விழித்துக் கொண்டிருக்கிறேனா உறங்கிவிட்டேனா என்பதே தெரியவில்லை. எது நிஜம், எது கனவு என்பதைப் பிரித்தறியும் திறனை வேகமாக இழந்துகொண்டிருக்கிறேன்.’’

p90e_1515568761.jpg

p90f_1515568774.jpg

பெஹ்ரூஸ் பூச்சானியின் குறிப்புகளை வாசிக்கும்போது அவர் பலமுறை மனநோயின் விளிம்புவரை சென்று மீண்டிருப்பதை உணரமுடிகிறது. மானுஸ் தீவு அவர் உடலைவிட உள்ளத்தையே அதிகம் வதைத்திருக்கிறது. இந்த விநாடிவரை வதைத்துக்கொண்டிருக்கிறது. பூச்சானி மட்டுமல்ல, தனிமையில் அமர்ந்து புகைப்படத்தைப் பார்த்துப் பார்த்துச் சிரிக்கும் சூடான்  அகதியும், வலியால் அலறிக் கொண்டிருக்கும் இராக்கிய அகதியும்கூட அடிக்கடி மனநோயின் பிடியில் சிக்கி மீண்டுகொண்டிருக்கிறார்கள்.

இவர்கள்  அனைவரும் ஒரே சமயத்தில் இருவேறு உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த இரு உலகங்களும்  பிரிக்கமுடியாதபடிக்கு ஒன்றோடு ஒன்று கலந்துவிட்டன. பூச்சானியைப்போலவே அவர்கள் கனவுக்கும் நிஜத்துக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறார்கள். படுத்தால் இவர்கள் அனைவரும் ஒரே கொடுங்கனவைத்தான் தினமும் காண்கிறார்கள். அந்தக் கனவிலிருந்து அலறியபடி விழித்தால் இன்னொரு கனவு அவர்களை அணைத்துக்கொள்கிறது. அந்தக் கனவு முந்தையதைக் காட்டிலும் கொடூரமானதாக இருக்கிறது.

p90g_1515568799.jpg

பூச்சானி உயிருடன் இருப்பதற்குக் காரணம் எழுத்து மட்டும்தான். ``எனக்கும் மற்றவர்களுக்கும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நான் மட்டும்தான் சொல்லமுடியும். எனவே நான் எழுதுகிறேன். நான் சொல்வதை யாரேனும் காது கொடுத்துக் கேட்கக்கூடும். குறைந்தபட்சம் வரலாற்றின் செவிகளையாவது என் வார்த்தைகள் சென்றடையும் என்று நம்புகிறேன்.’’
 
- சொந்தங்கள் வருவார்கள்

https://www.vikatan.com

Posted

நான் அகதி! - 16 - எங்கே என் வீடு?

 

 

ன்றைய வேலை முடிந்து ஹஷீம் களைப்புடன் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது யாரோ p42b_1516183866.jpgபின்தொடர்வது போலிருந்தது. திரும்பிப் பார்த்தார் ஹஷீம். திக்கென்றது. அதிகாரி ஒருவர் அருகில் வந்து நின்றார். நீங்கள் தவறே செய்யாவிட்டாலும் சீருடை அணிந்தவர்களைக் கண்டு உங்கள் உடலும் உள்ளமும் தன்னிச்சையாகப் பதறினால், நீங்களும் அகதியே.

‘`எங்கே உன் ஐடி?’’

ஹஷீம் தயங்கினார். ‘`என்னிடம் எதுவும் இல்லை. நான் ஒரு சிரியன்.’’

சொல்லிமுடித்ததுமே உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை அச்சம் பரவுவதை உணர்ந்தார் ஹஷீம். ஸ்டேட் செக்யூரிட்டி இன்வெஸ்டிகேஷன்ஸ் சர்வீஸ் என்று அழைக்கப்படும் உளவு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளைக் கண்டு அகதிகள் மட்டுமல்ல எகிப்தியர்களே அஞ்சுவது வழக்கம். தேசப் பாதுகாப்பு என்னும் பெயரில் இவர்கள் இழைக்கும் மனித உரிமை மீறல்கள் பிரசித்தி பெற்றவை. இவர்கள் எவரையும் எதையும் செய்யலாம். எந்த விதிமுறைகளும் இவர்களுக்குப் பொருந்தாது. எவரும், எதுவும் இவர்களைக் கட்டுப்படுத்துவதில்லை. சீருடை அணிந்து மிடுக்குடன் நடைபோடும் இவர்கள் அரசாங்கத்தின் அறிவிக்கப்படாத அடியாள்கள் என்பது ஊருக்கே தெரியும்.

எகிப்தியர்களுக்கே கேட்க நாதியில்லை என்னும்போது பூஞ்சையான ஓர் அகதியால் என்ன செய்துவிட முடியும்? தன்னைச் சுற்றி வந்து தோளின்மீது கைபோட்ட அந்த அதிகாரியை வெறித்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தார் ஹஷீம். சில நிமிடங்களில் ஒரு கார் அருகில் வந்து நின்றது. காரின் கதவு எப்போது திறந்தது, தான் எப்போது உள்ளே திணிக்கப்பட்டோம் என்பதை ஹஷீமால் உணரமுடியவில்லை.

p42a_1516183883.jpg

ஹஷீம் தன் மனைவி, குழந்தைகளுடன் எகிப்தில் நுழைந்தது ஜூன் 2013 இறுதியில். சிரியா, ஜோர்டான், செங்கடல் மூன்றையும் கடந்து நுவீய்பா என்னும் துறைமுகத்துக்குள் அவர்கள் காலடி எடுத்துவைத்தனர். அப்போது ஹஷீமிடம் நூறு அமெரிக்க டாலர் எஞ்சியிருந்தது. கொண்டுவந்திருந்த எல்லாப் பணமும் பயணச் செலவுக்கே போய்விட்டது. இறங்கியதும் முதல் வேலையாக டாலரைக் கொடுத்து எகிப்தியப் பணமாக மாற்றிக்கொண்டார். நூறு டாலர் 650 எகிப்திய பவுண்டாக மாறியிருந்தது. இனி துறைமுகத்திலிருந்து நண்பர்கள் கொடுத்த முகவரிக்குச் சென்று சேரவேண்டும். சீட்டை எடுத்துப் பார்த்தார். 10 ரமதான் என்று மட்டுமே எழுதியிருந்தது. இது தெருவின் பெயரா, ஊரின் பெயரா அல்லது வீட்டு எண்ணா? அப்பா முடிவுசெய்து வந்து எழுப்பட்டும் என்று குழந்தைகள் தரையில் படுத்து உறங்கிவிட்டிருந்தனர்.

வட்டமிட்டுக்கொண்டிருந்த வண்டிகளை அணுகி, 10 ரமதான் வரமுடியுமா என்று கேட்டார் ஹஷீம். ஓட்டுநர்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டு போனார்கள் அல்லது பதிலே சொல்லாமல் அடுத்த பயணியை நோக்கி நகர்ந்தார்கள் அல்லது ஏதோ ஏசினார்கள். அந்த இடம் அருகிலில்லை, நூற்றுக் கணக்கான மைல்களைக் கடந்து தலைநகரம் கெய்ரோவுக்குக் கிழக்கே செல்லவேண்டும் என்று பிறகுதான் புரிந்தது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஒருவர் சூயஸ் வரை அழைத்துச் செல்வதற்கு ஒப்புக்கொண்டார். அங்கிருந்து 10 ரமதான் செல்ல ஒரு மணி நேரம் மட்டுமே ஆகும் என்று சொன்னார். 10 ரமதானுக்கு மற்றவர்கள் 1500 பவுண்டுகள் கேட்டபோது இவர் சூயஸ் வரை செல்வதற்கு 400 பவுண்டு மட்டுமே கேட்டதால் உடனே ஒப்புக்கொண்டார் ஹஷீம். உன் குடும்பம் மட்டுமல்ல, போகும் வழியில் எத்தனை பேரை வேண்டுமானாலும் ஏற்றிக்கொள்வேன், முரண்டு பிடிக்கக்கூடாது என்றொரு நிபந்தனையையும் அந்த ஓட்டுநர் விதித்திருந்தார். மறுக்கும் நிலையில் இல்லை ஹஷீம். மேலும் ஒரு காரில் எத்தனை பேரை ஏற்றிக்கொள்ள முடியும்? ஆனால் அந்தத் திறமைவாய்ந்த ஓட்டுநர், கார் பிதுங்கி வழியும் அளவுக்குப் பலரை அடைத்துக்கொண்டபிறகுதான் வண்டியை எடுத்தார்.

p42c_1516183903.jpg

சூயஸிலிருந்து இன்னொரு கார். கையிலிருந்த எல்லாவற்றையும் துடைத்துக் கொடுத்தபிறகே வண்டி நகர்ந்தது. நீ கொடுத்ததற்கு இதுவரைதான் வண்டி வரும் என்று சொல்லி ஓரிடத்தில் இறக்கிவிட்டுவிட்டு வண்டி அகன்றது. பசி, களைப்பு. கையில் காசில்லை. எங்கே தங்குவது என்று தெரியவில்லை. 10 ரமதான் என்பது என்ன என்று நடந்தபடி தேடத் தொடங்கினார்  ஹஷீம். 1973 தொடக்கத்தில் இஸ்ரேலுடன் எகிப்து போரிட்டு வென்றது. அந்தத் தினத்தின் அடையாளமாக 10 ரமதான் என்னும் தேதியை ஓரிடத்துக்குப் பெயராக அளித்துவிட்டார்கள். நண்பர்களின் உதவியோடு அந்த இடத்தில் தங்குவதற்கு இலவசமாக ஓரிடம் கிடைத்தது. தையல் தொழில் நடத்திவந்த ஒருவரின் கடையின் ஒரு பகுதி ஹஷீமின் குடும்பத்துக்காக ஒதுக்கப்பட்டது. அது அந்தக் கடையின் சரக்கு அறை. காலைவேளைகளில் இரைச்சலுடன் தையல் வேலை நடந்துகொண்டிருக்கும். இரவு அமைதியாகிவிடும்.

ஹஷீமின் மனைவி ஹயாம் சிரியாவில் ஒரு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். ஆனால் 10 ரமதானில் அவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை.  அருகிலுள்ள வேறொரு பகுதிக்குச் சென்றார்கள். இங்கேயும் சிறிய பொந்துதான் கிடைத்தது. இங்கும் ஆசிரியர் பணி எதுவும் காலியாக இல்லை. ஆனால் ஹஷீமுக்கு பக்கத்தில் உள்ள நகரத்தில் ஒரு கடையில் வேலை கிடைத்தது. காய்கறிகளைப் பெட்டிக்குள் போட்டு அடைப்பதுதான் வேலை. அதைச் சிறிது காலம் முயன்று பார்த்தபிறகு வேறொரு வேலைக்குத் தாவினார். நிலக்கரியைச் சீர்படுத்தி விற்பனை செய்யும் ஒரு சிறிய தொழிற்சாலை அது. மாதம் நூறு டாலர் வரை சம்பளம் கிடைத்தது.

வீட்டுக்குப் போனதும் கணவனும் மனைவியும் ஒன்றாக அமர்ந்து கதை பேசுவார்கள். திரும்பத் திரும்ப பேச்சு கடந்தகாலத்தையே சுற்றிவரும். கண்கள் விரியப் பேசிக்கொண்டே இருப்பார் ஹயாம். இதே சிரியாவாக இருந்திருந்தால் நான் இந்நேரம் பள்ளிக்கூடப் பணிகளை வீட்டுக்கு எடுத்து வந்து செய்துகொண்டிருப்பேன். காலை எழுந்ததும் கிளம்பி ஓடவேண்டியிருக்கும். பள்ளிக்குழந்தைகள் எனக்காகக் காத்திருப்பார்கள். நாளை என்ன வகுப்பெடுக்கவேண்டும் என்பது குறித்து இன்றே முடிவு செய்துவிடுவேன்.  பள்ளியில் குழந்தைகள் என் காலைச் சுற்றிச் சுற்றி எந்நேரமும் ஓடிக்கொண்டிருப்பார்கள். அவர்களை அதட்டுவேன், உருட்டுவேன், அன்போடு அணைத்துக்கொள்வேன். மீண்டும் அதெல்லாம் சாத்தியமா ஹஷீம்?

ஹஷீமிடம் பதில் இருக்காது. சிரியாவில் ஒரு அலுவலகத்தில் சட்டை மடிப்பு கலையாமல் கம்ப்யூட்டரை இயக்கியபடி பணியாற்றிவந்தவர் ஹஷீம். வியர்வை பொங்குவதற்கு வாய்ப்பே இல்லாத குளிரூட்டப்பட்ட அலுவலகம். சென்று வந்தது காரில். லெபனானைச் சேர்ந்த பிரபல இசைப் பாடகியான ஃபைரூஸின் பாடல்களில் தோய்ந்து தன்னை மறந்தபடி கார் ஓட்டிச் செல்வது அவர் வழக்கம். அலுவலகத்திலும்கூட அவ்வப்போது ஃபைரூஸின் பாடல்களை ஒலிக்கவிட்டு மெய்மறந்து கிடப்பது வழக்கம். கரி படிந்திருக்கும் தன் சட்டையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டார் ஹஷீம். அந்த வாழ்க்கை திரும்பக் கிடைக்குமா? மீண்டும் அப்படியொரு அலுவலகத்தில் பணியாற்றும் வாய்ப்பு இருக்குமா? இசையை ரசிக்கும் நுண்ணுணர்வு இன்னமும் என்னிடம் எஞ்சியிருக்கிறதா? அதை எப்படிப் பரிசோதித்துப் பார்ப்பது?

விடுமுறை தினங்களில் ஹஷீமும் ஹயாமும் சுற்றுலா சென்றுவிடுவார்கள். அதற்கெனவே சிறிய பகட்டான தரை விரிப்புகளை வைத்திருந்தார்கள். நண்பர்களோடு இணைந்து அத்தி மர நிழலில் கதை பேசியபடி தேநீர் அருந்துவார்கள். பாடல் கேட்பார்கள். அல்லது இரவு உணவு உண்பார்கள். சிரிப்பும் கும்மாளமுமாகப் பொழுது கரைவதே தெரியாது. எகிப்தில் நண்பர்கள் இல்லை, தரை விரிப்பு இல்லை. சுற்றுலா செல்வதற்குக் காசில்லை. காசு கிடைத்தாலும் அந்த மனநிலை இங்கே வாய்க்காது.  தவிரவும், எகிப்தில் அத்தி மரங்களும் இல்லை.

p42d_1516183919.jpg

வந்த புதிதில் ஒவ்வொரு வாரமும் தன் அப்பாவைத் தொலைபேசியில் அழைப்பதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தார் ஹஷீம். சிரியாவுடன்  ஹஷீமுக்கு இருந்த ஒரே தொடர்பு இதுதான். தன் உறவினர்கள் அனைவரையும் பற்றி விசாரிப்பார். பிறகு நண்பர்கள். இப்ராஹிமும் சமீரும் மொகமதுவும் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியுமா அப்பா? மஹெரிடமிருந்து ஏதாவது செய்தி வந்ததா? அப்தெல் சதாரைத் தொடர்புகொள்ள முடிந்ததா? அவன் வீட்டுக்கு யாராவது போய்ப் பார்த்தீர்களா? மார்வானும் ஹோஸ்னியும் இப்போது என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்று யூகிக்க முடிகிறதா? சிரியா எப்படி இருக்கிறது அப்பா? வெளியில் சென்றவர்கள் யாராவது திரும்பியிருக்கி றார்களா? உங்களுக்கும் அம்மாவுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லையே? நலமாக இருக்கிறீர்கள் தானே? இந்தக் கேள்விகளையெல்லாம் ஹஷீம் கிட்டத்தட்ட ஒவ்வொருமுறையும் கேட்பது வழக்கம். எந்தப் புதிய செய்தியும் கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்தும் எல்லோருடைய பெயர்களையும் தனித்தனியே குறிப்பிட்டுக் கேட்டுக்கொண்டிருப்பார்.

எடுத்தவுடனே ஹஷீம் அப்பாவிடம் பேச ஆரம்பித்துவிடுவதில்லை. அழைப்பார். அப்பா எடுத்துக் காதில் வைத்து ஹலோ சொன்னதும் ஹஷீம் அழ ஆரம்பித்துவிடுவார். ஒரு வார்த்தைகூட வாயிலிருந்து வராது. அப்பா அமைதியாகக் காத்திருப்பார். முடியாதபோது அவரும் ஹஷீமுடன் சேர்ந்து அழ ஆரம்பித்துவிடுவார். ஒரே ஒரு சொல்கூட உதிர்க்காமல் சில நிமிடங்கள் சேர்ந்தாற்போல் அழுதுவிட்டு போனை வைத்துவிட்டு ஹஷீம் வீடு திரும்பிவிடுவதும் நடந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் போன் செய்வதற்கும் அவசியமில்லாமல் போய்விட்டது. 2013-ம் ஆண்டு அப்பா இறந்துபோனார்.

சிரியாவை ஆண்டுகொண்டிருந்த பஷார் அல் ஆசாத்தை என்ன செய்யலாம் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த சமயம் அது. சிரியா சிதைந்துகொண்டிருந்தது என்பதை இந்த இரு நாடுகளும் அறிந்திருந்தன. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான போர் என்னும் பெயரில் சிவிலியன்கள்மீதும் அவர்களுடைய வசிப்பிடங்கள் மீதும் குண்டுகளை எறிந்துகொண்டிருந்தார் ஆசாத். ஆசாத் மீதான போர் என்னும் பெயரில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பும் பதிலுக்கு சிரிய மக்களைத்தான் வெடித்துச் சிதறடித்துக் கொண்டிருந்தது. எங்கிருந்து குண்டு வருகிறது என்று தெரியாமல் மக்கள் வீறிட்டு அலறியபடி செத்து விழுந்துகொண்டிருந்தார்கள். உயரமான கட்டடங்களிலிருந்து ஏவுகணைகள் பாய்ந்து கொண்டிருந்தன. சந்தைக்குச் செல்லும் வழியில் இயந்திரத் துப்பாக்கிகள் படபடவென்று வெடிக்க ஆரம்பிக்கும். ஆயிரம் பொத்தல்களுடன் உள்ள வீடுகளை ஒவ்வொரு வீதியிலும் காணமுடிந்தது.

ஆசாத் மட்டுமல்ல அமெரிக்காவும் பிரிட்டனும் சேர்த்தேதான் சிரியாவை இப்படிச் சீரழித்திருக்கின்றன என்பது ஹஷீமின் நம்பிக்கை. தேவையில்லாமல் தலையிட்டு இராக்கை அழித்தார்கள் என்றால், தலையிடாமலேயே இருந்து சிரியாவை அழித்துவிட்டார்கள் என்று புலம்பினார் ஹஷீம். அவர் வசித்துவந்த வீடு நூறு துண்டுகளாக விழுந்துகிடந்தது. இன்னொரு குண்டு அவருடைய குழந்தைகளின் கால்களுக்கு மிக அருகில் விழுந்து வெடிக்காமல் இருந்துவிட்டது.  ஆனால், ஹஷீமை உலுக்கியெடுக்க அது போதுமானதாக இருந்தது. குடும்பத்தோடு எகிப்துக்குக் குடிபெயர்ந்தார். அகதி என்னும் பெயர் அப்போது ஓர் உறுத்தலாக அவருக்கு இருக்கவில்லை. நீங்கள் எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும், அடியாழத்தில் நான் இன்னமும் ஹஷீமாகத்தான் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டார்.

பலரும் குறிப்பிட்டதைப் போல், சிரியா எகிப்தியர்களின் இரண்டாவது தாய்வீடாகத்தான் தொடக்கத்தில் இருந்தது. இந்த நிலை எப்போது, எதனால் மாறியது என்பது ஹஷீமுக்குத் தெரியும். ஆனால் இப்போதைக்கு யோசிப்பதற்கு அவகாசமில்லை. தடித்த இரு அதிகாரிகளுக்கு மத்தியில் சிக்குண்டு கிடந்த ஹஷீம் அடுத்து என்ன யோசித்துக்கொண்டிருந்தார். இவர்கள் என்னை என்ன செய்வார்கள்? ஹஷீமின் ஆடைகளைச் சோதனை போட்டபடி ஒருவர் பேசினார். ‘`ஒரு கொள்ளை நடந்திருக்கிறது. கொள்ளையடித்தபிறகு அவனைக் கொன்றும்போட்டுவிட்டான் அந்தக் கொலையாளி. அவனைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம். கொள்ளையடித்ததை எங்கே வைத்திருக்கிறாய்?’’

‘`நான் யாரிடமிருந்தும் எதையும் கொள்ளையடிக்கவில்லை. என் வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். நான் ஓர் அகதி. என்னிடம் பணம் எதுவுமில்லை’’ என்று பலவீனமான குரலில் முனகினார் ஹஷீம். உண்மைதான், இவனிடம் ஒன்றுமில்லை என்றார் முதல் அதிகாரி. இரண்டாவது அதிகாரி சிரித்தார். ‘`அதனாலென்ன? நமக்கு ஒரு கொலைக்காரன் தேவைப்படும் சமயத்தில் வசமாக ஓர் அகதி சிக்கியிருக்கிறான். என்ன சொல்கிறாய்? கேஸை முடித்துவிடலாமா?’’ இருவரும் கை குலுக்கிக் கொண்டதைப் பார்த்தபடி ஹஷீம் அமைதியாக அமர்ந்திருந்தார். பிறகு வண்டி ஓரிடத்தில் நின்றது. `இனி என்ன நடக்கும்? என்னை இங்கே வைத்து சுட்டுக்கொன்றுவிடுவார்களா? சிரியாவில் தொடங்கிய என் வாழ்க்கை எகிப்தில் முடிவடைந்து விடுமா? எத்தனை மணி நேரமாக நான் காரில் சென்றுகொண்டிருக்கிறேன்? இது எந்த இடம்?’

 ``கீழே இறங்கு’’ என்று அதட்டினார் முதல் அதிகாரி. ஹஷீம் தள்ளாடியபடி கீழே இறங்கினார். அடுத்த சில விநாடிகளில் கார் விர்ரென்று பறந்துசென்றுவிட்டது. ஹஷீம் தள்ளாடியபடியே நடக்கத் தொடங்கினார். எகிப்தில் முதல் முறை வந்து இறங்கியபோது இருந்த அதே சோர்வு மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டதைப் போலிருந்தது.  எகிப்து இன்னொரு சிரியாவாக மாறிவிட்டதை ஹஷீமால் தெளிவாக உணரமுடிந்தது. என்னை அவர்கள் ஏன் கொல்லவில்லை? தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. இனி எகிப்தில் இருப்பது சாத்தியமில்லை. இன்னொரு பயணத்துக்கு நான் தயாராகவேண்டும். ஹஷீம் நடக்கத் தொடங்கினார். பாவம், ஹயாம். ஏன் இன்று இவ்வளவு தாமதாக வந்தாய், நான் தனியாக இருப்பது தெரியாதா உனக்கு என்று சீறுவாள். அவளுக்கு இன்று ஒரு நீண்ட கதை சொல்லியாக வேண்டும். கையிலிருந்த பத்துப் பவுண்டு தாளையும் அந்த அதிகாரிகள் எடுத்துக்கொண்டுவிட்டனர் என்பதால் வேகமாக நடக்கத் தொடங்கினார் ஹஷீம். எந்தப் பாதை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் என்று தெரியவில்லை. இருள் அடர்த்தியாகப் படர்ந்துகிடந்தது!

- சொந்தங்கள் வருவார்கள்

https://www.vikatan.com

Posted

நான் அகதி! - 17 - மீண்டும் அகதி!

 

 

ஷீம் அமைதியாக அமர்ந்துகொண்டிருந்தார். மத்தியதரைக்கடல் பகுதியின் மையத்தில் அவருடைய p28aa_1516696475.jpgகப்பல் மேலும் கீழுமாக அசைந்தபடி மெள்ள மெள்ள நகர்ந்துகொண்டிருந்தது. அல்லது ஒரே இடத்தில் நிலைகொண்டிருக்கவும் கூடும். வேறுபாட்டைக் கண்டறியும் அளவுக்குப் புலன்கள் கூர்மையாக இல்லை. கண்ணுக்கு எட்டியதொலைவுவரை எந்த வெளிச்சமும் தென்படவில்லை. கரை எந்தப் பக்கம் என்று தெரியவில்லை. முடிவற்று நீண்டுகொண்டே செல்லும் இந்தப் பயணம் எப்போது முடிவுக்கு வரும் என்பதை ஒருவராலும் சொல்ல முடியவில்லை. அருகிலிருப்பவர்களிடம் பேசுவதற்கும் அச்சமாக இருந்தது. பெரும்பாலானோர் இறுகிய முகத்துடன் கடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களுடைய உதடுகள் வெடித்திருந்தன. சொற்களை உற்பத்தி செய்யும் திறனை அவை இழந்துவிட்டதுபோல் இருந்தது ஹஷீமுக்கு.

எகிப்தை விட்டு இத்தனை சீக்கிரம் வெளியேற வேண்டியிருக்கும் என்று ஹஷீம் நினைக்கவேயில்லை. 10 ரமலான் எங்கேயிருக்கிறது என்று இப்போதுதான் தேடியதுபோல் இருக்கிறது. சிரமங்கள் சில இருந்தன என்றபோதும் எகிப்து பாதுகாப்பான ஒரு தேசமாகவே இருந்தது. நீ யார்? உன்னைப் பார்த்தால் எகிப்தியரைப் போலவே இல்லையே? உன் ஆவணம் எங்கே? அகதி என்றால் முகாமில்தானே இருக்கவேண்டும், நகரத்தில் உனக்கென்ன வேலை? இப்படி ஒருவரும் ஹஷீமைக் கேட்கவில்லை.

``இதுதான் இங்கே இயல்பா?’’ என்று பயம் கலந்த மகிழ்ச்சியுடன், தெரிந்தவர்களை விசாரித்தார். அவர்கள் ஹஷீமின் முதுகில் ஒரு போடு போட்டார்கள். ``நண்பா, நீ அகதி என்பதை மறந்துவிடு. பாலோடு நீர் சேர்வதுபோல் எகிப்தியர்களோடு சிரியர்களால் சுலபமாக ஒன்றுகலந்துவிட முடியும்’’ என்றே அனைவரும் சொன்னார்கள். ``நான் வந்து பல மாதங்களாகிவிட்டன. எகிப்தியர்களுக்குக் கிடைத்த எல்லாமே எனக்கும் கிடைக்கிறது’’ என்றார் ஒருவர். ``நான் வேலைக்குப் போகிறேன், என் குழந்தையை அருகிலுள்ள பள்ளியில் சேர்த்திருக்கிறேன், இது சிரியாவா எகிப்தா என்றுகூட எனக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது என்றால் பாரேன்’’ என்றார் இன்னொருவர்.

p28a_1516696448.jpg

மேல்தோற்றத்துக்கு எகிப்து இப்படி இருந்தது உண்மைதான். ஆனால், உள்ளுக்குள் அது வேறொரு விலங்காக இருந்தது. ஹஷீம் காலடி எடுத்து வைத்த சில தினங்களுக்குள் அந்நாட்டின் அதிபர் முகமது மோர்சியின் பதவி பறிக்கப்பட்டு விட்டது. இது நடந்தது 3 ஜூலை 2013 அன்று. முதல்முறையாக ஒரு பொதுத்தேர்தலை நடத்தி சுதந்திரமாக மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த ஓர் அதிபர் மோர்சி.  `அப்பாடா, எகிப்து ஒரு வழியாக ஜனநாயகத்தைத் தழுவிக்கொண்டு விட்டது’ என்று  பெருமைப்படுவதற்குள் மோர்சியைத் தேர்ந்தெடுத்த அதே மக்கள் அவருக்கு எதிராகப் போராடத் தொடங்கி விட்டனர். அதுவும் ஒரே ஆண்டுக்குள்.

மோர்சிக்கு முன்பு  முப்பதாண்டுகளாக எகிப்தை ஆண்டுவந்த ஹோஸ்னி முபாரக்கை மக்கள் இதே போல் வீதியில் திரண்டு குரல் கொடுத்துப் பதவி விலக வைத்தார்கள். துனிஷியாவில் தொடங்கி அரபு வசந்தம் எகிப்தைச் சென்றடைந்ததன் தொடர்ச்சியே இந்தப் போராட்டம். சர்வாதிகாரிகளின் இருப்புக்குக் காரணம் ராணுவ பலமல்ல, மக்களின் செயலற்ற தன்மையே அவர்களை மேலும் மேலும் வலுவடையச் செய்கிறது. மக்கள் ஒன்றுசேர்ந்தால் எத்தனை பெரிய சர்வாதிகாரியையும் வீழ்த்தமுடியும் என்னும் செய்தியை அரபு வசந்தத்திலிருந்து கற்றுக் கொண்ட நாடுகளில் எகிப்து முதன்மையானது. முபாரக்குக்கு எதிராக ஒன்றுதிரண்ட எகிப்தியர்களைக் கண்ணீர்ப்புகை, லத்தி, பீரங்கி என்று எதைக்கொண்டும் அடக்கமுடியவில்லை. முபாரக் வேறு வழியின்றி 2011-ல் பதவியை விட்டு விலகினார். ஜனவரி 25 புரட்சி என்று இந்தத் தினம் நினைவுகூரப்படுகிறது. இந்த அலையில் மிதந்துவந்து பதவியேற்றவர்தான் முகமது மோர்சி. தன்னை எதிர்த்தும் இதே போன்ற ஓர் அலை கிளம்பும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

இவையெல்லாம் எகிப்தின் உள்நாட்டு விவகாரம் என்று ஹஷீமுக்குத் தெரியும். அவருக்கு முபாரக்கும் தெரியாது, மோர்சியும் தெரியாது. சரி இவர் போனால் இன்னொருவர் வருவார், நமக்கென்ன என்று அமைதியாக இருந்து விட்டார். மோர்சிமீது மக்களுக்குப் பல வருத்தங்கள் இருந்தன. ஒரு சர்வாதிகாரியை அகற்றிவிட்டு அவரிடத்தில் இவரை அமர வைத்த மக்களின் ஒரே குறைந்தபட்ச எதிர்பார்ப்பு அவர் இன்னொரு முபாரக்காக இருக்கக்கூடாது என்பதுதான். ஆனால், நாற்காலியில் உட்காரும் போதே இதை விட்டு இனி எழுந்திருக்கக்கூடாது என்று முடிவு செய்துவிட்டார் மோர்சி. அதை மக்கள் உணர்ந்துகொண்டபோது அவர்களும் ஒரு முடிவுக்கு வந்து சேர்ந்திருந்தார்கள். ஆம் சர்வாதிகாரிதான். அடிப்படைவாதிதான். அவருடைய அரசியல் என்பது பிளவு வாதமாகவே இருந்தது என்பதும் உண்மைதான். அவர் எடுத்த பல முடிவுகள் மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரானவையாக இருந்ததும் உண்மைதான். அதே சமயம் ஹஷீமால் மோர்சியை மறக்க இயலாது என்பதும் உண்மை.

p28b_1516696492.jpg

காரணம் அவர் ஆட்சியில் சிரியர்கள், எகிப்தியர்கள் சுதந்திரமானவர்களாக இருந்தனர் என்பதுதான். அவர் ஆட்சியில்தான் ஹஷீமையும் அவர் குடும்பத்தினரையும் எகிப்து வரவேற்று ஏற்றுக்கொண்டது. அவர் ஆட்சியில்தான் வேலையும் தலைக்கு மேலே ஒரு கூரையும் கிடைத்தன. இது எகிப்தா சிரியாவா என்றே தெரியவில்லை என்று நண்பர்கள் மகிழ்ந்தது அவர் ஆட்சியில்தான். மோர்சி பதவியில் இருந்தவரை சிரிய அகதிகளை அரசும் காவல் துறையும் சீண்டியதில்லை. அகதிகள் பதிவு செய்துகொள்ளாமலேயே எகிப்தைச் சுற்றி வந்தனர். கிடைத்த இடத்தில் ஒண்டிக் கொண்டனர். கிடைத்த வேலைகளைச் செய்துவந்தனர். சுதந்திரமாகத் தங்கள் வாழ்வை அவர்களால் கட்டமைத்துக்கொள்ள முடிந்தது. ``எங்களை நினைத்துக் கவலைப்படாதீர்கள், நாங்கள் இங்கே நிம்மதியாக இருக்கிறோம்’’ என்று சிரியாவில் உள்ள உறவினர்களை அவர்களால் அமைதிப்படுத்த முடிந்தது.

மோர்சியோடு எல்லாமே முடிவுக்கு வந்து விட்டது. கிட்டத்தட்ட ஒரே இரவில் எகிப்து தலைகீழாக மாறிவிட்டது. சாலைகளின் முக்கியச் சந்திப்புகளில் சோதனைச் சாவடிகள் முளைத்திருப்பதை ஹஷீம் கண்டார். காவல் துறையினரையும் உளவு அதிகாரிகளையும் அவ்வப்போது வீதிகளில் சந்திக்க நேர்ந்தது. சிரியர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப் பட்டனர். ``எங்கே உன் ஆவணம்? எங்கே தங்கியிருக்கிறாய்? உனக்கு யார் வேலை கொடுத்தது? சட்டைப் பையில் உள்ள பணம் யாருடையது? உன்னுடன் இருக்கும் இந்தப் பெண் யார்?’’

பதிலளிக்க இயலாதவர்கள் கைது செய்யப் பட்டனர். திடீரென்று சிரிய அகதிகள் தவறான காரணங்களுக்காகத்  தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்க ஆரம்பித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகத்துக்குரிய சிரிய அகதிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்துகொண்டே போனது. திடீரென்று சிரியர்கள் சந்தேகத்துக்குரிய அகதிகளாக மாறவேண்டியது ஏன் என்று ஹஷீமுக்குப் புரியவில்லை. தொலைக்காட்சி விவாதங்கள் சிரிய அகதிகளை மையப்படுத்தி வெளிவரத் தொடங்கியதையும் ஹஷீம் கவனித்தார். ஒவ்வொருமுறை அகதி என்னும் சொல் உச்சரிக்கப்படும்போதும் நெருப்புத் துளிகள் தெறித்து மேலே விழுந்தது போலிருந்தது. ``சிரியாவில் உங்கள் வீடுகள் இடிந்துபோனால் இங்கே ஏன் வந்து நிற்கவேண்டும்?’’ என்று வெளிப்படையாகவே அரசு அதிகாரிகள் பேசத் தொடங்கினர். ``இங்கு என்ன பணம் மரத்திலா காய்க்கிறது? உங்கள் பிள்ளைகுட்டிகள் படிக்க எங்கள் பள்ளிக்கூடமா கிடைத்தது? இப்படி எல்லாப் பள்ளிகளிலும் அகதிகளே நிறைந்து விட்டால் எகிப்துக் குழந்தைகள் பாவம் எங்கே போவார்கள்? எகிப்திய  இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிக்கொண்டிருப்பதற்கும் சிரிய அகதிகள் கொழுகொழுவென்று வளர்ச்சியடைவதற்கும் தொடர்பே இல்லை என்றா நினைக்கிறீர்கள்? இன்னும் எவ்வளவு காலம் நம் மண்ணைப் பறிகொடுத்துவிட்டு வாய்மூடிக் கிடக்கப் போகிறோம்?’’

p28c_1516696509.jpg

ஹஷீமை அதிர்ச்சியடைய வைத்த மற்றொரு குற்றச்சாட்டை அரசு அதிகாரிகளும் அவர்களுடைய ஊதுகுழல்களும் அடுத்தபடியாக அவிழ்த்துவிட்டனர். அகதிகள் என்னும் பெயரில் நம் நாட்டில் ஊடுருவியிருக்கும் சிரியர்கள் உண்மையில் ஜிகாதிகள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் ரகசிய ஆதரவாளர்கள். சிரியாவைப்போலவே எகிப்தையும் ஆக்கிரமித்து இஸ்லாமிய அரசை நிறுவச் செய்வதே அவர்கள் லட்சியம். அவர்களை இனியும் அனுமதித்தால் சிரியா போல் எகிப்தும் குட்டிச்சுவராகிவிடும். சகோதரர்களே பொறுத்தது போதும், பொங்கியெழுங்கள். யூசுஃப் ஹுஸைனி என்னும் பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒரு நாள் திடீரென்று நரம்பு புடைக்கத் தொலைக்காட்சியில் கத்தினார். ‘`சிரிய அகதிகளே, இனியும் எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டால், எகிப்தியக் காலணிகள் உங்களைப் பதம் பார்க்க ஆரம்பிக்கும், ஜாக்கிரதை!’’ 

``எந்த அகதி ஜிகாதி, எந்த அகதி அப்பாவி என்பதை எப்படிக் கண்டறிவது?’’ இந்தக் கேள்வியைச் சில தாராளவாத எகிப்தியர்கள் எழுப்பியபோது சீறிக் கிளம்பி வந்தது பதில். ``சந்தேகமே வேண்டாம், சிரிய அகதிகள் எல்லோருமே பயங்கரவாதிகள்தாம் அல்லது பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள்தாம். எல்லோரையும் உள்ளே தள்ளுங்கள்.’’

``இல்லை, சிரியர்கள் பயங்கரவாத ஆதரவாளர்கள் இல்லை. அவர்கள் முகமது மோர்சியின் ஆதரவாளர்கள்’’ என்றார்கள் வேறு சிலர். ``மோர்சியின் ஆட்சியில்தான் இந்த அகதிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர் ஆட்சியில் இருந்தவரை அகதிகள் எகிப்தைச் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்துகொண்டிருந்தார்கள். நாம் மோர்சியைப் பதவியிலிருந்து தூக்கி விட்டோம். மோர்சியின் ஆதரவாளர்களான அந்நியர்களை அதேபோல் தூக்கி வீசவேண்டாமா?’’

ஹஷீம் திகைத்து நின்றுவிட்டார். என்னையும் என் குடும்பத்தையும் என் மக்களையும் வேட்டையாடும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை நான் ஏன் ஆதரிக்கப்போகிறேன்? அவர்களுக்கு பயந்து அல்லவா நான் இங்கே ஓடிவந்திருக்கிறேன்? மோர்சி எகிப்தின் பிரச்னை. அவரைத் தேர்ந்தெடுத்தவர்கள் எகிப்தியர்கள். நிராகரித்தவர்களும் அவர்களேதாம். இதில் சிரிய அகதிகள் எங்கே வருகிறார்கள்? ஏன் இப்படி அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை எங்கள்மீது எகிப்தியர்கள் சுமத்திக்கொண்டிருக்கிறார்கள்? எகிப்து இன்னொரு சிரியாவாக ஏற்கெனவே மாறிவிட்டதா? எனில், நான் இரண்டாவது முறை அகதியாக மாறவேண்டியிருக்குமா?

நடந்தது அதுதான். 2014-ம் ஆண்டு இன்னொருமுறை அகதியாக மாறினார் ஹஷீம். மொத்தம் ஐந்து பேரைக் கொண்ட அவர் குடும்பத்தை ஐரோப்பாவுக்குக் கப்பலில் கடத்திச் செல்ல 7,000 அமெரிக்க டாலர் கொடுத்தால் போதும் என்று சொல்லப்பட்டது. `இது ஆபத்தான பயணம், எப்போதும் எதுவும் நிகழலாம் தயாராக இருங்கள்’ என்றும் முன்கூட்டியே சொல்லிவிட்டார்கள்.  இதை விட்டால் வேறு மார்க்கமில்லை என்பதை ஹஷீம் உணர்ந்திருந்தார். மூட்டை முடிச்சுகளைக் கட்ட ஆரம்பித்தார். எகிப்துக்கு விடை கொடுத்துவிட்டுக் கப்பலில் கால் பதித்தார்.

அந்தக் கப்பல் இப்போது நடுக்கடலில் திணறிக்கொண்டிருந்தது. உறக்கமும் மயக்கமும் பொங்க ஹஷீம் பார்த்துக்கொண்டிருந்தார். அந்தக் கப்பலில் உயிரோடு இருந்த ஒரே கருவி சாட்டிலைட் போன் மட்டுமே. அதை ஒருவர் நீண்ட நேரமாக முயன்றுகொண்டிருந்தார். திடீரென்று இணைப்பு கிடைத்தது. அவர் கத்த ஆரம்பித்தார். ‘`நாங்கள் மத்தியதரைக்கடலின் மையத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறோம். எங்கள் கப்பலில் 600 பேர் இருக்கிறார்கள். அவர்களில் 200 பேர் பெண்கள், 100 பேர் குழந்தைகள். எங்களைக் காப்பாற்றுங்கள். தயவுசெய்து யாராவது வாருங்கள். மூன்று நாள்களாகத் தண்ணீர்கூட இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம்.’’

p28d_1516696523.jpg

மறுமுனையில் பதில் கிடைத்ததும் அவர் மீண்டும் தொடர்ந்தார். ‘`எங்களுக்குக் கிடைத்த ஒரே இணைப்பு உங்களுடையதுதான். நான் கப்பலில் வந்த பயணி. எங்கள் கப்பலின் கேப்டன்  முன்பே  இங்கிருந்து   தப்பியோடிவிட்டார். எங்கள் யாருக்கும் கப்பலைச் செலுத்தக்கூடத் தெரியாது. நீங்கள் உதவாவிட்டால் இங்குள்ள 600 பேரும் இங்கேயே புதைந்துவிடுவோம். தயவுசெய்து காப்பாற்றுங்கள்.’’

p28e_1516696535.jpg

ஹஷீம் மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டார். ஆம், அந்தக் கப்பலில் குழந்தைகளையும் பெண்களையும் கொண்ட 600 பேர் இருந்தது நிஜம். கப்பல் சிக்கிக்கொண்டது நிஜம். உணவில்லாமல் நீரில்லாமல் தவித்துக்கொண்டிருப்பது நிஜம். ஆனால், கேப்டன் எங்களைப் பரிதவிக்கச் செய்துவிட்டுத் தப்பிவிட்டார் என்பது மட்டும் பொய். ஒரு சிறிய பொய். இந்தச் சூழ்நிலையில் அத்தியாவசியமானது என்பதால் அது ஓர் அழகிய பொய்யும்கூட. எங்களை மீட்க ஆள்கள் வரும்போது கேப்டனும் இதே கப்பலில் இருப்பது தெரியவந்தால் அவர் நிச்சயம் கைது செய்யப்படுவார். மேலும், கேப்டன்தான் இருக்கிறாரே, கப்பலைத் திருப்பிக் கொண்டு ஊர் போய்ச் சேருங்கள் என்றும் அவர்கள் சொல்லக்கூடும்.

p28f_1516696548.jpg

ஹஷீமுக்கு இதெல்லாம் புதிது. அவர் இதற்கு முன்பு கடத்தல்காரர்களிடம் பேசியதில்லை. அவர்கள் எப்படியிருப்பார்கள் என்றுகூட  அவருக்குத் தெரியாது. பணம், நகை, போதைப் பொருள்கள் ஆகியவற்றைத் திருடி விற்கும் கொடியவர்களின் கூட்டம் என்றுதான் நினைத்திருந்தார். அவர்களுடைய உதவியை நாமே நாடிச் செல்லவேண்டியிருக்கும் என்றோ, அவர்களுடன் கை குலுக்குவோம் என்றோ பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுவோம் என்றோ அவர் கனவுகூடக் கண்டதில்லை. இப்போதும் கடத்தல்காரர்கள் தவறுதான் இழைக்கிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கேப்டன் ஓடிவிட்டார் என்று சற்றுமுன் என் காதுபட உதிர்க்கப்பட்ட பொய்யும் தவறானதுதான். ஆனால், இந்தத் தவறுகள் அகதிகளுக்குத் தேவைப்படுகின்றன.

கேப்டன் வந்து அறிவித்தார். நண்பர்களே, இத்தாலிய அரசிடம் பேசிவிட்டேன். அவர்கள் நம்மை இன்னும் சற்று நேரத்தில் மீட்டெடுப் பார்கள். இத்தாலியிலாவது உங்களுக்கு நல்ல வாழ்வு அமையவேண்டும். ஹஷீம் இரு கண்களையும் மூடிக்கொண்டார்.  அவருடைய உலர்ந்த உதடுகளிலிருந்து வருத்தமும் நம்பிக்கையும் கொஞ்சம் குற்றவுணர்ச்சியும் கலந்த புன்னகையொன்று சட்டென்று பிறந்தது.

- சொந்தங்கள் வருவார்கள்

https://www.vikatan.com

  • 1 month later...
Posted

நான் அகதி! - 18 - நாம் அகதிகள்

 

மருதன்

 

து என் நாடு என்பதை எல்லைக்கோடுகள் நிர்ணயிக்கின்றன. யார் என் மக்கள் என்பதைக் கோடுகளே p28b_1517315688.jpgவரையறை செய்கின்றன. நானும் என் மக்களும் கோடுகளுக்கு உள்ளே அடங்கிக்கிடக்கிறோம். எல்லைக்கோடு என் இருப்பை உறுதி செய்கிறது. என் அடையாளத்தை வழங்குகிறது. என் நாட்டுக்கு ஒரு பெயரை அளிப்பது அதுதான். என் மக்கள் இந்தக் கோட்டின் பெயரால் அழைக்கப்படுகிறார்கள். இந்த உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டையும் கோடுகளே ஆட்சிசெய்கின்றன என்பதை நானறிவேன். கோடுகள் இல்லையென்றால் உலகம் இல்லை. நாடு இல்லை. ராணுவம் இல்லை. அரசு இல்லை. ஆட்சியில்லை. நான் ஒரு சிவிலியன். என் தேசம், என் மக்கள், என் அரசு, என் வாழ்க்கை, என் இருப்பு அனைத்தையும் கோடுகள் நிர்ணயிக்கின்றன. எனது அண்டை நாடு எது என்பதையும், என் நட்பு நாடு எது என்பதையும், என் எதிரி நாடு எது என்பதையும் என் நாட்டின் கோடுகள் முடிவுசெய்கின்றன. எனது புவியியலே என்னுடைய அரசியலாகவும் வரலாறாகவும் இருக்கிறது.

கோடுகள் வரையப்படுவதற்கு முன்பும் மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் கட்டுப்பாடற்றவர்களாக இருந்தனர். அவர்களுடைய  கால்கள் கட்டப்படாமல் இருந்தன. கோடு குறித்த அச்சமின்றி வனம், மலை, கடல், பாலைவனம் என்று அவர்கள் சுற்றித் திரிந்தனர். உணவும் உறைவிடமும் தேடி அவர்கள் தொடர்ச்சியாக ஓரிடத்திலிருந்து இன்னொன்றுக்கு இடப்பெயர்ச்சி செய்துகொண்டிருந்தனர். உணவுப் பற்றாக்குறை, பஞ்சம், புயல், வெள்ளம், வறட்சி, குழு மோதல் உள்ளிட்டவை இடப்பெயர்ச்சிக்கான காரணங்களாக இருந்தன. பழங்குடி மக்களும் நாடோடி மக்களும் ஏதேனும் ஓரிடத்தில் நிலைகொண்டு நிரந்தரமாகத் தங்கும் வழக்கம் இல்லாதவர்களாக இருந்தனர். மற்றொரு பக்கம், புதிய இடங்களைக் காணவேண்டும், புதிய அனுபவங்களைப் பெறவேண்டும், புதிது புதிதாகக் கற்கவேண்டும் என்னும் ஆர்வம் கொண்டவர்கள் கடல் கடந்து பல பயணங்களை மேற்கொண்டனர். வர்த்தக ஆர்வம் கொண்டவர்களும் நீண்ட, நெடிய பயணங்களை முன்னெடுத்தனர். அறிவியல் ஆய்வாளர்கள் இந்தப் பயணங்களால் பெரும் பலன் அடைந்தனர்.  இபின் பதூதா, மார்க்கோ போலோ, வாஸ்கோ ட காமா, சார்லஸ் டார்வின் போன்றவர்கள் தங்களுடைய எல்லையற்ற பயணங்கள் வாயிலாக நம் அறிவின் எல்லைகளை விசாலப்படுத்தினர்.

p28a_1517315708.jpg

நவீன உலகம் முதலில் தடை செய்தது இந்தக் கட்டற்ற சுதந்திரத்தைத்தான். கூண்டுக்குள் விலங்குகளை அடைப்பதுபோல் கோடுகளுக்குள் மனிதர்களைப் பிரித்துத் தொகுத்து  அடைத்துவைக்கும் வழக்கம் ஆரம்பமானது. நீ பிறப்பால் சிரியன். எனவே சிரியாவின் எல்லையைக் கடந்து நீ அனுமதியின்றி வெளியில் செல்லக்கூடாது. அதேபோல் இன்னொருவன் உன் எல்லைக்குள் வருவதை நீ அனுமதிக்காதே. இந்தக் கோடுகளைப் பாதுகாப்பதற்கென்றே அரசாங்கம் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. கோடுகளைப் பராமரிப்பதே அரசாங்கத்தின் முதன்மைப் பணியாக மாறியது.

அதுவே அரசாங்கத்தின் முதன்மைப் பிரச்னையாகவும் மாறிப்போனது. குடிமக்களின் கல்விக்கோ மருத்துவத்துக்கோ அல்ல, உலகின் பல நாடுகள் எல்லையைப் பாதுகாப்பதற்கே அதிக பணம் செலவிடுகின்றன. காரணம் விதிவிலக்கில்லாமல் எல்லா எல்லைக் கோடுகளும் விரோதத்தையே முதலில் சம்பாதித்துக்கொள்வதுதான். எல்லையின் பெயரால் நாடுகள் தங்களுக்குள் போரிட்டுக்கொள்கின்றன. எல்லையின் பெயரால் கணக்கற்ற மக்கள் தினம் தினம் மடிகிறார்கள். இந்தப் படுகொலைகள் அரசால் அரங்கேற்றப்படுபவை அல்லது அரசைப் பாதுகாக்க அரங்கேற்றப்படுபவை என்பதால் அவை பெருமிதத்துக்குரிய செயல்களாக உருமாற்றப்படுகின்றன. எல்லைக்கோடுகள், அவை உருவான காலம் முதலே வன்முறையோடு தொடர்புகொண்டவையாக இருக்கின்றன. இந்த வன்முறையை மற்றவர்களைவிட அதிகம் சந்திப்பவர்கள் நாடற்றவர்களான அகதிகள்தாம்.

p28c_1517315722.jpg

உலகமே ஒரு கிராமம், உலகம் நம் உள்ளங்கையில், உலகம் முழுக்க ஒரே சந்தை போன்ற அட்டகாசமான முழக்கங்கள் உலகமயமாக்கலுக்கு ஆதரவாக எழுப்பப்பட்டாலும் நிஜத்தில் உலக நாடுகள் நத்தை போல் மேலும் மேலும் சுருங்கிக்கொண்டே போவதைத்தான் நாம் பார்க்கிறோம். ஐரோப்பிய ஒன்றியம் பலமிழந்துவிட்டது. குடியேறிகளின் நாடு என்று புகழப்பட்ட அமெரிக்கா தன் கதவுகளை இழுத்து மூடிக்கொண்டுவிட்டது. வளமுள்ள நாடுகள் அனைத்தும் போ, போ என்று அகதிகளை விரட்டியடிக்கின்றன.  அதே சமயம் பண்டப் பரிமாற்றம் தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  வர்த்தகத்துக்குக் கோடுகள் ஒரு தடையாக இல்லை. உலகின் எந்த மூலையிலிருந்தும் எந்த மூலைக்கும் ஒரு பொருளை இன்று வெகு சுலபமாகக் கொண்டு செல்லமுடியும். உலக வர்த்தக மையம் போன்ற அமைப்புகளும் நாடுகளுக்கு இடையிலான பல்வேறு வர்த்தக உடன்படிக்கைகளும் தங்குதடையற்ற வர்த்தக உறவைச் சாத்தியமாக்கியுள்ளன.

ஜெட் விமானம் ஒன்றில் ஏறி, குறட்டைவிட்டு உறங்கியபடியே ஒரு கண்டத்தை விட்டு இன்னொன்றுக்கு நீங்கள் சுலபமாகச் சென்றுவிட முடியும். எல்லைக்கோடுகள் அனைத்தும் உதிர்ந்து உடைந்து உங்கள் விமானத்துக்காக வழிவிடுகின்றன. மென் புன்னகையுடன் விமானப் பணிப்பெண்கள் உங்களை ஒரு புதிய நாட்டுக்கு வரவேற்று அழைத்துச் செல்வார்கள். இதே நீங்கள் உயிர் தப்பியோடிவரும் அகதி என்றால் எல்லைக்கோடுகள் உங்களை உந்திக் கீழே தள்ளும். உன் உடல் என் தேசத்துக்குத் தேவைப்படாது என்று அவை உங்களை விரட்டியடிக்கும். உங்களை ஏற்க மறுத்தால் உங்களுக்கு என்ன நேரும் என்பது உங்கள் பிரச்னை மட்டுமே. இப்படித்தான் மூன்று வயதுக் குழந்தை ஆலன் குர்தியின் உடல், 2 செப்டம்பர் 2015  அன்று மத்தியதரைக்கடலில் மூழ்கித் தலைகுப்புறக் கரை ஒதுங்கியது. இப்படி எண்ணற்ற உயிர்கள் கோடுகளால் அச்சுறுத்தப்பட்டு, கோடுகளால் விரட்டப்பட்டு, கோடுகளாலேயே தினம் தினம் கொல்லப்படுகின்றன.

டொனால்ட் டிரம்ப் அகதிகளுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார். அந்நியர்களிடமிருந்தும் அவர்களுடைய ஆக்கிரமிப்புகளிடமிருந்தும் உங்களை மீட்டெடுப்பேன் என்பதுதான்  அவருடைய பிரதான தேர்தல் வாக்குறுதியாகவும் பிரசாரமாகவும் இருந்தது. அகதிகள் உள்ளே நுழையாதவாறு அமெரிக்காவைப் பலப்படுத்துவேன். அமெரிக்கா என்பது வெள்ளையர்களின் நாடாக மட்டுமே இருக்கும். அதில் அயல்நாட்டு அகதிகளுக்கு இடமில்லை. அகதிகளை மட்டுமன்று, ஆசிய, தென்னமெரிக்கக் குடியேற்றங்களையும் இனி அனுமதிப்பதற்கில்லை என்று முழங்கினார் டிரம்ப். அமெரிக்கா மட்டுமன்று, பல நாடுகளின் நிலைப்பாடு இன்று இதுவே. நவம்பர் 2013 முதல் பிப்ரவரி 2014 வரை சவுதி அரேபியா 1,60,000 எத்தியோப்பியர்களை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது. மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து மூன்றும் தொடக்கத்தில் ரோஹிங்கியாக்களின் படகுகளைத் தங்கள் எல்லைக்குள் அனுமதிக்காமல் விரட்டியடிப்பதிலேயே கவனமாக இருந்தன.

2015-ம் ஆண்டுக் கணக்கின்படி உலகம் முழுக்க 65 மில்லியன் பேர் அகதிகளாக மாறியிருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து நாடிழந்த அகதிகளின் எண்ணிக்கை 11.5 மில்லியன் என்பதை அருகில் வைத்துப் பார்க்கும்போது அகதிகளின் இன்றைய நிலை கவலையளிக்கக்கூடியதாக இருக்கிறது. வரலாற்றில் இவ்வளவு பெரிய அளவிலான மக்கள் திரள் நாடற்றவர்களாக ஒரே சமயத்தில் இருந்ததில்லை. அந்த வகையில் இந்த நூற்றாண்டின் முதன்மையான பிரச்னை இதுதான். அகதிகளை உருவாக்கியதில் அமெரிக்கா வகித்த பாத்திரத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். பொய்யான காரணங்களாலும் அரசியல் கணக்கீடுகள் காரணமாகவும் ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தி அந்நாட்டு மக்களை நாலாபுறமும் சிதறடித்த பெருமை அமெரிக்காவுக்கு உரியது. செப்டம்பர் 11 தாக்குதலுக்கு முன்பே இத்தகைய அநீதியான ஆக்கிரமிப்புகளை அமெரிக்கா செய்திருக்கிறது, பிறகும் அதைத் தொடர்ந்திருக்கிறது. அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பது பெருமளவில் அகதிகளுக்கு எதிரான போராகவே இருப்பதையும் நாம் பார்க்கிறோம். டிரம்பின் நிர்வாகம் நிலைமையை மேலும் மோசமாக்கிக்கொண்டிருக்கிறது.

அகதிகளை ஏற்பதில்லை என்பது முதல் பிரச்னை என்றால், ஏற்றுக்கொண்டுள்ள நாடுகளில் அவர்கள் எப்படி வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது அடுத்த பிரச்னையாக இருக்கிறது. கொடுமையாக, சிறைக்கூடங்களை விடவும் கொடுமையாக அமைந்துள்ளன பெரும்பாலான அகதி முகாம்கள். அகதிகளை விலங்குகளைப் போல் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என்றே அரசாங்கங்கள் நினைக்கின்றன. இந்தக் குறுகிய சிந்தனையோட்டத்திலிருந்து அவர்களால் வெளிவரவே முடியாமலிருக்கிறது. அகதிகளைப் பொருளாதாரச் சுமைகளாகவும் கருதவேண்டியதில்லை. அகதிகள் தாங்கள் புகலிடம் புகுந்த நாட்டின் பொருளாதாரத்தைத்  தங்களால் இயன்ற அளவுக்கு வளப்படுத்திவருகிறார்கள் என்பதை ஆய்வுகளைக் கொண்டு பலமுறை பலரும் நிரூபித்த பிறகும் அரசாங்கங்களின் காதுகளில் அவை நுழைவதில்லை.

p28d_1517315738.jpg

அகதிகளைச் சுமைகளாக மட்டுமன்றி பயங்கரவாதிகளாகவும் பார்க்கும் போக்கு இருக்கிறது. பெருங்கூட்டம் ஒன்றை உள்ளே அனுமதிக்குமாறு அவர்களில் சிலர் தவறிழைத்தவர்களாகவோ தவறிழைக்கும் எண்ணம் கொண்டவர்களாகவோ இருப்பதற்கு வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இது எல்லாக் குழுக்களுக்கும் பொருந்தக்கூடியதுதான் இல்லையா? அமெரிக்கா இதுவரை சந்தித்துள்ள தாக்குதல்கள் அனைத்துமே அந்நிய பயங்கரவாதிகளால் ஏற்பட்டவைதானா? அகதிகளும் பயங்கரவாதிகளும் அயல்நாட்டினரும்தான் அமெரிக்காவில் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனரா? இஸ்லாமியர்களும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் லத்தீன் அமெரிக்கர்களும்தான் பள்ளிகளில் துப்பாக்கிச்சூடுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்களா? அவர்களையெல்லாம் என்ன செய்யப்போகிறது அமெரிக்கா? டிரம்ப் விரும்பியதுபோல் வெள்ளையர்கள் மட்டுமே வாழும் தேசமாக அமெரிக்கா மாற்றப்பட்டால் அகிம்சையின் மறு உருவாக அந்நாடு இரவோடு இரவாக மாறிவிடுமா? ஆக, அகதிகள் பொருளாதாரச் சுமைகள் என்பதைப்போல் அகதிகள் பயங்கரவாதிகள் என்பதும் அவர்களை நிராகரிக்கச் சொல்லப்படும் ஒரு சாக்குப்போக்குதான், இல்லையா?

அரசாங்கங்கள் மட்டுமல்ல, நாமும்கூட அகதிகள் குறித்துப் பல தவறான அபிப்பிராயங்களை வளர்த்து வைத்திருக்கிறோம். இந்தத் தொடரின் நோக்கம் அகதிகளின் தரப்பை முன்வைப்பதன்மூலம் அந்த அபிப்பிராயங்களின் வேரைச் சற்று அசைத்துப் பார்ப்பதுதான். அகதிகள் உலகம் முழுக்க நிறைந்திருக்கிறார்கள் என்றபோதும் அவர்கள் தனியோர் உலகில்தான் வாழ்கிறார்கள். அந்த உலகத்தைச் சேர்ந்த சிலருடைய வாழ்க்கையிலிருந்து ஒரு சில அத்தியாயங்கள் மட்டுமே இதில் இடம்பெற்றிருக்கின்றன. கடல்போல் விரிந்திருக்கிறது அவர்களுடைய பெருஞ்சோகம். அதை முழுக்கப் பதிவு செய்வதென்பது இயலாதது.

p28e_1517315767.jpg

அகதிகள் பிரச்னையைத் தீர்க்க என்னென்ன செய்ய வேண்டும்? இந்தத் துறையில் ஆய்வு மேற்கொண்டுவருபவர்கள் கூறும் சில முக்கிய ஆலோசனைகள் இவை; அடைக்கலம் தேடி வரும் அகதிகளுக்குப் பாதுகாப்பான வழித்தடத்தை உறுதி செய்ய வேண்டும். உடனடித் தேவைகள் உணவு, இருப்பிடம், மருத்துவ வசதிகள் போன்றவை. நீண்டகாலத் தேவை, சுதந்திரமான, இடையூறு அற்ற வாழ்க்கை. அகதிகளுக்கும் குடும்பங்கள் உண்டு. எனவே ஓர் அகதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு விசா வழங்கி அவர்கள் ஒன்றிணைய அனுமதிக்க வேண்டும். புகலிடம் அளித்த நாட்டில் தங்கியிருப்பதா, மீண்டும் தன் சொந்த நாட்டுக்குத் திரும்புவதா அல்லது மூன்றாவதாக வேறொரு நாட்டுக்குச் செல்வதா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் ஓர் அகதிக்கு இருக்கிறது. எந்த முடிவையும் அவர்மீது மற்றவர்கள் திணிக்கக் கூடாது. குழந்தைகளுக்குக் கல்வி வசதி அளிக்க வேண்டும்.

அகதிகள் குற்றவாளிகளல்லர். எல்லையைக் கடக்கும் முயற்சியில் ஈடுபடும் எந்த அகதியும் இறக்கக் கூடாது, கைது செய்யப்படக் கூடாது. போர் அல்லது உள்நாட்டுக் கலவரத்திலிருந்து தப்பிவரும் அகதிகளைப் புரிந்துணர்வுடன் அரவணைத்துக்கொள்ள வேண்டும். உள்நாட்டு மக்களால் அகதிகளுக்கு எந்தச் சிக்கலும் நேராத வண்ணம் தடுக்க வேண்டும்.  இனம், நிறம், மதம், மொழி உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு அகதிகளைப் பாகுபடுத்தவோ வதைக்கவோ ஒருவரையும் அனுமதிக்கக் கூடாது. அவர்கள்மீது ஏவப்படும் வெறுப்பு அரசியலைத் தடுத்துநிறுத்த வேண்டும். புதிய நாட்டில் அகதிகள் பொருளாதார ரீதியிலும் பாலியல் ரீதியிலும் இன்ன பிற வழிகளிலும் சுரண்டப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அகதிகள் உருவாவதற்குக் காரணமான சூழலைக் கண்டறிந்து  சீர் செய்வதற்கு உதவி புரியவேண்டும். அகதிகளைப் பாதுகாப்பதும் அவர்களுக்கு வாழ்வளிப்பதும் நம் கடமை என்பதை, பொறுப்புமிக்க ஒவ்வொரு அரசாங்கமும் உணரவேண்டும். என் அரசு இவற்றையெல்லாம் சரியாகச் செய்கிறதா என்பதைக் கண்காணிப்பது அந்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் கடமை.

ஊர், பேர் தெரியாத மக்களுக்காக நாம் எதற்காக இவ்வளவு மெனக்கெட வேண்டும்? சக மனிதர்களைக் காப்பதும் அவர்களுக்காகக் குரல் கொடுப்பதும் நம் கடமை. மேலும், மக்களில் ஒரு பிரிவினர் அகதிகளாக இருக்கும்போது இன்னொரு பிரிவினரால் சுதந்திரமாக இருந்துவிட முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக, இன்று அகதிகளுக்கு நேரும் எதுவும் நாளை நமக்கும் நேரக்கூடும். நாம் அகதிகளாக மாறுவதற்கான அத்தனை காரணங்களும் வெளியில் உயிர்ப்புடன் இருக்கின்றன. அந்த வகையில் இது நம் எல்லோருடைய போராட்டமும்கூட.

- சொந்தங்களை அரவணைப்போம்!

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.