Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மோன் - அகரமுதல்வன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மோன் (சிறுகதை )

அகரமுதல்வன்


கிளிநொச்சி பாண்டியனுக்கு முன்னால இருந்த பாலைமரத்தில தான் ஜெயத்தானை கட்டி வைச்சு இயக்கம் சுட்டதடா என்று சொல்லிய அம்மாவின் சுவாசம் பெருமூச்சாகத் தான் வெளியேறியது. அந்தப் பெருமூச்சில் இழப்பின் பெயரிடாத சொல்லொன்றுமிருந்தது. இயக்கம் ஏன் மாமாவைச் சுட்டது என்று நான் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். ஆரம்ப காலங்களில் இயக்கத்தின் சூடுகள் அவசரமாகவும்,தவறாகவும் சிலரைக் கொன்றிருக்கிறது என்று பெரிய ஆக்கள் கதைப்பதைக் கேட்டிருக்கிறேன். தேங்காய் திருவிக்கொண்டிருந்த அம்மாவிடம் ஏன் சுட்டார்கள் என்று கேள்வியாய்க் கேட்டுவிட்டேன்.”அது நீளமான கதையடா ஆறுதலாய்ச் சொல்லுறன்” என்று சொல்லமறுத்துவிட்டாள். அம்மாவின் மூன்று தம்பிகளில் இப்ப உயிரோட இருக்கிறது ஒருத்தர் தான். சுட்டுக்கொல்லப்பட்ட ஜெயத்தானை விட இன்னொரு தம்பி இயக்கத்துக்கும் இந்திய ஆர்மிக்ககாரருக்கும் இடையில் நடந்த சண்டையில் மாட்டுப்பட்டு சுன்னாக சந்தையில ஷெல் விழுந்து செத்துப்போயிட்டாராம். அம்மம்மாவுக்கு ஜெயத்தான் மாமாவோட சாவில இயக்கம் மேல கடுமையான கோபம் இருந்தது தான் என்றாலும் மனிசி இயக்கத்தை யாரிட்டையும் விட்டுக்குடுக்காது. பிரபாகரனையே பேர் சொல்லாமல் “வேலுப்பிள்ளையற்ற மோன்” என்று தான் கூப்பிடுவா.

இந்திய ஆர்மியை இயக்கம் கடுமையாய் தாக்கிக்கொண்டிருந்த காலப்பகுதி நிறையச் சனமும் இந்திய ஆர்மியால சுட்டுக்கொல்லப்பட்டது அம்மா சொல்லித்தான் எனக்கு சின்னனில தெரியும்.  சின்னப் பிள்ளையளில பாட்டி வடை சுட்ட கதையெல்லாம் எனக்கு அம்மா சொல்லவேயில்லை. எங்கட வீட்டில இருந்த வெதுப்பகத்தில வந்து படுத்திட்டு  சாமத்தில எழும்பி, போய்ட்டு வாறம் என்று சொல்லிக்கொண்டு தாக்குதலுக்கு போவினமாம். இப்பிடி இயக்கத்தோட சரியான ஒட்டாய் இருந்தவர்களை இயக்கம் தவறாய் சுடாது என்று எனக்குத் தெரிஞ்சாலும் என்ன தான் நடந்தது என்று கேட்டு அறிய ஆவலாய் இருந்தது. விசயத்தை அறிய வேலி தாண்டி போனேன்.

இயக்கம் ஏன் உங்கட பெடியனைச் சுட்டது?

அம்மம்மாவின் கண்களில் கண்ணீர் இல்லை. அவ்வளவு நிதானம். முகத்தில்  நம்பவே முடியாத இறுக்கம். அவருக்குக் கொள்ளியிட்ட இரண்டு கைகளையும் விரித்துக்காட்டியபடி சமுத்திரத்தின் இரும்புத்துண்டைப் போல ஆறாத ரணத்துள் புதைந்ததாள். நிர்க்கதியான ஒளியைப் போல நினைவுகளின் நெடுந்தூரம் பின்னோக்கி அலைந்து பாலைவனத்தின் குரலைப் போலாகி முதல் வார்த்தை சொன்னாள். ஜெயத்தானுக்கு எச்சரிக்கை குடுத்த மாதிரி மன்னிப்புக் குடுத்திருக்கலாம், பெடியள் சொன்ன மாதிரி அவனும் நடந்திருக்கவேணும், எச்சிலை விழுங்கி தொடர்ந்தாள். என்றாலும் பெடியள் அவசரப்பட்டுட்டினம். 

கருவறையில் பச்சையாகக் கிடக்கும் காயத்தின் மேல் ஆசிட் ஊத்தியவனாய் அம்மம்மாவின் முன் நின்றிருந்தேன். காற்றில் திறந்த படலை போல “ஆரடா மோனே உனக்கு இந்தக் கதையச் சொன்னது” என்று கேட்டாள். அம்மா தான் சொன்னவா ஆனால் ஏன் சுட்டது என்று சொல்லையில்லை. அது தான் கேட்டானான். நீங்கள் பேரனுக்குச் சொல்லுவியள் என்று நம்பினன் என்று மெல்லியதாய் சிரித்தேன். சாணகம் மெழுகிய தரையிலிருந்த அம்மம்மாவின் கையில் கிடந்த பாக்குவெட்டி பாக்கையும் துவக்குச் சூட்டையும் சேர்த்தே துண்டுபோட்டது. தூர்ந்து போகப் போக தொய்வின்றி எழுகிற மண்ணைப் போல அம்மம்மாவிலிருந்து கலைந்து படரத்தொடங்கியது எனக்குத் தெரியாத இறந்தகாலம்.

ஒவ்வொரு நாளும் ஹொப்பக்கடுவாவோட ஆர்மிக் காம்புக்கு பாண் குடுத்துக்கொண்டு வந்த ஜெயத்தான் மாமாவிட்ட போய் இனிமேல் நீங்கள் ஆர்மிக்காரர்களுக்கு பாண் குடுக்கக்கூடாது என்று இயக்கத்தின் பொறுப்பாளர் ஒருவர் முதன் முறையாக சொன்ன பொழுதே மாமா ஏலாது என்று தான் சொல்லியிருக்கிறார். தான் இவ்வளவு நாளும் குடுத்திட்டு திடீரென நிப்பாட்டினால் தன்னில சந்தேகமும் கோபமும் ஆர்மிக்காரர்களுக்கு வந்திடுமென்று எடுத்துச் சொல்லியிருக்கிறார். மாமா கிளிநொச்சியில வெதுப்பகத்தை வைச்சிருக்க வேணுமெண்டால் ஆர்மிக்காரர்களை பகைக்க முடியாது என்கிற முடிவில இந்தப் பதிலை தெளிவாய் சொல்லியிருக்கிறார். வந்திருந்த பொறுப்பாளர் இல்லை நீங்கள் இதை உடனடியாய் கைவிடவேணும் இல்லாட்டி முடிவுகள் வேறமாதிரித் தான் எடுக்கப்படும் என்று கடுமையாய் சொன்னார். மாமாவுக்கு அது பெரிய தர்மசங்கடமான நிலை. அந்த நிலை அவருக்கு மட்டுமல்ல அந்தக் காம்புக்கு இறைச்சி குடுக்கிற பாக்கியம் என்கிற பெம்பிளைக்கும் நேர்ந்திருக்கு. மாமாவுக்கு இந்தப் பிரச்சனையை எப்படி கையாளவேண்டும் என்பதில் மிஞ்சிய குழப்பத்தோடு அவர் தொடர்ந்தும் ஆர்மிக்காம்புக்கு பாண் குடுத்தபடி தான் இருந்திருக்கிறார். ஒரு நாள் இரவு வெதுப்பகத்தில மாக்குழைச்சிட்டு இருக்கிற போதே போராளிகள் இருவர் வந்து மாமாவைத் தனியக் கூப்பிட்டு கதைச்சிட்டு போயிருக்கிறார்கள். இந்தச் சந்திப்பிலும் உடனடியாக நிறுத்தினால் அவர்கள் தன்னை தொழில் செய்ய விடமாட்டார்கள் என மாமா போராளிகளுக்கு விளக்கிச் சொல்லியிருக்கிறார்.

வந்திருந்த போராளிகளுக்கு கோழியொன்று அடித்துக் குழம்பு வைத்து பாணுக்கு குழைத்த மாவில் ரொட்டி சுட்டு சாப்பாடு குடுத்து கவனமாக போகும்படி தான் சொல்லியனுப்பினார். குடும்பத்தோடு இயக்கத்தின் பொறுப்பாளர்கள் எல்லோரும் பழக்கமானவர்கள் என்பதால் அம்மாவுக்கு இந்தச் செய்தி எப்படியோ தெரியவந்து மாமா வீட்டுக்கு வந்திருந்த பொழுது அம்மாவும் இயக்கம் சொல்வதைக் கேட்குமாறு சொன்னாள்.

நீயும் என்ன விசரி மாதிரி கதைக்கிறாய்? நான் இயக்கம் சொல்லித் தான் பாண் குடுக்கிறதை நிப்பாட்டினான் என்று அறிஞ்சால் ஆர்மிக்காரன் சும்மா இருப்பானோ. இவங்கள் ஒன்றும் யோசியாமல் அடியாப் பிடியான்னு செய்யச் சொன்னால் நான் என்ன செய்யிறது என்று மாமா கேட்டது அம்மாவுக்கு சரியென்றுபட்டாலும் அம்மா தனது நிலையில் இருந்து இயக்கத்தைப் போல கீழே வரவேயில்லை.

ஜெயம்,கொஞ்ச நாளைக்கு பேக்கரியை நடத்த காசில்லை என்று சொல்லிட்டு பூட்டு என்று அம்மா சொன்னாள். மாமா அதைக் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தனது முடிவை மாற்றியமைக்கமுடியாத முடிவில் இருந்தார். அம்மாவுக்கு நான்காவது பிள்ளையாக அண்ணா பிறந்து அப்போது தான் மூன்று மாதகாலம் ஆகியிருந்தது. அண்ணாவின் பிறப்பு தாய்மாமனுக்கு கூடாது என்று குறிப்பு எழுதிய சாத்திரி அம்மம்மாவிடம் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அண்ணாவின் சாயல்  அப்படியே உரிச்சுப் படைச்சு மாமனைப் போலவே இருக்கிறது என வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் எல்லாம் சொல்லுகிற பொழுது மாமா பற்றிய பயமே அம்மாவிடம் பரந்திருந்தது. எப்படியேனும் அவரை இந்தச் சுழியில் இருந்து மேலே தூக்கிவிடவேண்டும் என்பதற்காக வீட்டுக்கு வருகிற போதெல்லாம் அம்மாவும், அம்மம்மாவும் மாமாவிடம் இயக்கம் சொல்வதைக் கேள் என்று கெஞ்சிக்கேட்பதையே தொடர்ந்து செய்துவந்தார்கள்.

மாமாவோடு எச்சரிக்கப்பட்ட பாக்கியம் இறைச்சி குடுப்பதை நிறுத்திவிட்டேன் என்று சொல்லி வேறொருவரின் மூலம் அதனைத் தொடர்ந்து செய்துகொண்டேயிருந்திருக்கிறா. இயக்கத்தை ஏமாத்தி விட்டதாக நம்பிய பாக்கியம் மிதப்பான சிரிப்போடும் வெற்றியோடும் தான் நித்திரைக்குப் போகவும் செய்தா. சிலவேளைகளில் இயக்கத்தால் தான் கண்காணிக்கப்படலாம் என விழித்த பாக்கியம் அடுத்த நாள் காலையிலயே பாண் குடுத்துவிட்டு வந்துகொண்டிருந்த மாமாவை வீதியில் மறித்து பாண் குடுக்கிறதை நிப்பாட்டும் படி புத்திமதி சொன்னதன் பின்னணியை விளங்கி மாமா சிரித்தார். இயக்கத்தை ஏமாத்திவிட முடியாது என்கிற பேருண்மையை உணர்ந்த மாமா பாக்கியத்தை நினைத்துப் பாவப்பட்டார்.           

மக்களைக் கொல்கிற ஆர்மிக்காரனுக்கு சாப்பாட்டைக் காசுக்கும் விற்கக் கூடாது. இயக்கம் சொல்வதைக் கேளுங்கள், இல்லையேல் அடுத்து சுடப்படுவீர்கள் அன்றிரவு மாமாவைச் சந்தித்த பொறுப்பாளர் இந்த வார்த்தையைச் சொல்லிவிட்டு போய்விட்டார். “சுடப்படுவீர்கள்” என்கிற வார்த்தையை இயக்கம் தன்னை நோக்கிச் சொல்லும் என்று தான்  நினைக்கவேயில்லை என்று வீட்டுக்கு வந்து கவலையோடு சொல்லியிருக்கிறார். அம்மம்மாவின் மடியில் கிடந்த அண்ணாவைத் தூக்கி டேய் “கறுத்தான்” என்று சொல்லிக் கொஞ்சி அவனைக் காற்றைப் போல அரவணைத்திருக்கிறார்.

கொம்பனி சுடப்போகினம் எண்டு சொன்னதுக்கு பிறகும் நீ அப்பிடிச் செய்யாத, பெடியள் ஆர்மிக்காரனுக்குத் தானே குடுக்கவேண்டாம் என்று சொல்லுகிறாங்கள்,நீ ஏன் குடுக்கிறாய். மாவைக் குறைச்சு போடுறம் என்று ஆர்மிகாரங்களுக்கு சொல்லி அவங்களோட தொடர்பை அறுத்துவிடு என்று அம்மா சொன்ன வார்த்தைகளை காது குடுத்துக் கூட கேட்காத மாமா, வீட்டிலிருந்து வெளிக்கிடும் பொழுது அம்மா மீண்டும் காலில் விழாத குறையாக மாமாவிடம் ஆர்மிக்கு பாண் கொடுப்பதை நிப்பாட்டு என்று சொல்லியிருக்கிறாள். அம்மம்மாவும் அப்படியே தான் சொல்லியிருக்கிறாள். இருவர் சொன்னதையும் அலட்சியமாக கேட்டுக் கொண்டு விடைபெற்ற மாமா அடுத்த நாளும் வீட்டுக்கு வந்திருந்தார். அதுவும் மதியத்திற்கு முன்பாகவே வீட்டின் முன்னே படுத்திருந்தார். அம்மாவும் அம்மம்மாவும் தன் முன்னே கதறி அழுதுகொண்டிருப்பதை இப்போதும் கூட காதுகுடுத்துக் கேட்காமல் கிடக்கும் மாமாவை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு பாடை கட்டிக்கொண்டிருந்தார்கள். 

மாமா இயக்கம் அறிவித்ததைப் போல துரோகியாகவே மரத்தில் சுடப்பட்டு, விறகால் எரிக்கப்பட்ட அன்றைக்கு இரவும் எங்கள் வீட்டில் போராளிகளுக்கான உணவை அம்மா சமைத்து கொடுத்தாள் என்று சொல்லி முடித்த அம்மம்மா காலத்தைப் போல வெத்திலையை சப்பிக்கொண்டிருந்தாள். நான் சுடப்பட்ட மாமாவை பற்றி சொல்லுகிற போது அம்மம்மா அழுவாள் என்று எண்ணியிருந்த போதும் அவள் கண்களில் எந்தவொரு துளியும் எட்டிப்பார்க்காதது ஆச்சரியமாக இருந்தது. சாவை சந்தித்து இருபது வருடங்களுக்கு பிறகும் அதை நினைத்து கண்ணீரிடுகிற பலவீனமான துயரப் பண்பு அம்மம்மாவின் தலைமுறையிலிருந்து தான் எங்கள் மண்ணில் இல்லாமல் போயிருக்கும். நான் அம்மம்மாவின் வெத்திலைப் பெட்டியில் கிடந்த வெறும் சீவலை வாயில் போட்டபடி வீட்டின் வெளியே வந்து வேலியில் கிடக்கும் பொட்டைக்கடந்து எங்கட வீட்டுக்குப் போனேன். அம்மம்மாவின் முகத்தைப் போல வானம் இறுகிக்கிடந்ததை புறாக்கள் பறந்ததை நிமிர்ந்து பார்த்த போது கண்டேன்.

அண்ணா விடுப்பில் வீட்டிற்கு அப்போது தான் வந்திருந்தான். அவன் வீட்டிற்கு வந்தால் அவனைக் கட்டி அணைத்து முத்தமிட்டு ஜெயத்தானைப் போலவே இருக்கிறாய் மோனே என்று அம்மம்மா ஒவ்வொரு முறையும் சொல்லுவாள்.           தனது கைத்துப்பாக்கியை பட்டியோடு கழற்றி ஸ்டூலில் வைத்துவிட்டு கதிரையில் சாய்ந்திருந்த அண்ணாவிடம் உனக்குத் தெரியுமாடா, எங்கட மாமா ஓராள் இயக்கத்தால சுடப்பட்டிருக்கிறார் என்று கேட்டதற்கு அவன் தலையாட்டி தெரியும் என்றான். அம்மம்மாவை தம்பி வந்துநிக்கிறான் வாங்கோ என்று வேலியில் நின்று கூப்பிட்ட அம்மாவின் சத்தம் ஊர் முழுக்க தாய்மையின் பேருவகையாய் பயணித்தது. முத்தமிட்ட அம்மம்மா எப்போதும் சொல்வதைப் போல ஜெயத்தானைப் போலவே இருக்கிறாய் தம்பி என்று சொன்னாள். தனது கதையின் மூலமும் “மோனே” என்று கூப்பிடும் பொழுதும் தனது வெத்திலை வாயால் அவள் எத்தனையோ பேரப்பிள்ளைகளுக்கு தராத ஏதோவொரு புதையல் நிறைந்த பிரியத்தை அண்ணாவிற்கு வழங்கிக்கொண்டேயிருப்பாள்.

இரண்டு வருடங்கள் போக அண்ணா வீரச்சாவடைந்து வீட்டிற்கு வித்துடலாய் வந்திருந்த போது இடம்பெயர்ந்து வேறொரு இடத்தில் இருந்த அம்மம்மாவை கூட்டிக்கொண்டு வரப் போயிருந்தேன். வீரச்சாவு செய்தியை மறைத்து “உங்களை அம்மா கூட்டிக் கொண்டு வரச்சொன்னவா என்று சொன்னேன். அவள் எனது கைகளைப் பிடித்து என்ன நடந்தது என்று சொல்லு மோனே என்று கெஞ்சிக் கேட்டாள். நான் உங்களைக் கூட்டிக் கொண்டுவரத் தான் சொன்னவா வேறு ஒன்றும் சொல்லிவிடவில்லை என்று இராணுவத் தன்மையோடு பதில் சொன்ன பிறகு அம்மம்மா எதுவும் கதைக்கவில்லை. விறைத்த வயோதிபப் பிணம் அழுதபடி வண்டியில் ஏறி அம்மம்மாவைப் போல என்னோடு வந்தது. எங்கள் வீட்டுக்கு முன்னால் வண்டியை நிறுத்திய போது நெஞ்சாங்கட்டை வைக்காத பிணம் தீயிலிருந்து மேலே நிமிர்வதாய் அத்தனை விறைப்பிலிருந்தும் உடைபட்டு அம்மம்மாவாகிய பிணம் அண்ணாவின் வித்துடலை முத்தமிட்டு கதறியழுதது. இறந்து போன வீடுகளில் அழுகிற பெண்கள் இறந்துபோய் தனக்கு முன்னால் கிடப்பவருக்காக மட்டும் அழுவது கிடையாது. அண்ணாவின் கைகளை தன் முகத்தில் ஒத்தி ஒத்தி அம்மா அழுதாள். அழுவதால் இனியென்ன பயன் என்று அழுவதற்கு விதிக்கப்பட்டவர்களால் நினைத்துவிடமுடியாது. அம்மம்மா அழுதாள். 

வீதி நெடுக மக்கள் வீடுகளின் முன் வந்து அண்ணாவைச் சுமந்து செல்லும் மாவீரர் ஊர்திக்கு பூ வைத்து வணங்கிக் கொள்ள வண்டி மெதுவாக கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லம் நோக்கி நகர்கிறது. மரணத்தின் பின்னும் தாம் நேசித்த ஒன்றில் இளைப்பாறும் வாய்ப்பை பெற்றுக்கொண்ட அண்ணா பேழையில் மூடப்பட்டு வீதியால் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறான். அப்படியான கம்பீரங்கள் கிடைக்கப்பெறுவது அந்த மண்ணில் அந்தக் காலத்தில் மட்டும் தான் வாய்த்தது.

அண்ணாவின் வித்துடல் ஊர்தி ஜெயத்தான் மாமா சுட்டுக்கொல்லப்பட்ட மரத்தின் முன் நகரும் போது அம்மம்மா ஒரு காட்டைப் போல மூசியழுது என்ர அய்யோ ! மோனே ஜெயத்தான். . . நீயாய் இருந்தவனையும் இழந்திட்டம். உன்னைத் தாண்டித் தானே போறம். பாரடா... என்று தணிந்தாள். அந்தமரத்தின் இலைகள் சிலவற்றிலிருந்து காற்று உதிர்ந்து கீழே விழுந்ததைப் போல எனக்குப் பிரமை.. ஊழியின் ஊற்று நீர் அம்மாவின் கண்களில் இருந்து வந்து கொண்டேயிருந்தது. அம்மா அழுவது எல்லாவற்றுக்கும் மேலாய் மிதந்தது. அம்மாவின் அழுகையை அந்த மரம் காது குடுத்துக் கேட்கவேயில்லை. ஜெயத்தான் மாமா தான் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முதல் நாள் வரையிருந்த அத்தனை இறுக்கத்தோடும் பிடிவாதத்தோடும் அந்த மரம் அசையாமல் இருந்தது. ஒரு மரணத்திலிருந்து நம்பிக்கையாகிய அந்த மரத்தின் நிழற்பரப்பில் எனக்குச் சொந்தமான ஒரு முகம் படிந்திருப்பதை துவக்கோடு நின்று பார்த்த போது தான் கண்டேன். 

நன்றி - அந்திமழை -ஜனவரி 2016       

http://akaramuthalvan.blogspot.co.uk/2017/05/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு வெறும் கற்பனை கதை ....
இவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவேயில்லை.

கிளிநொச்சி தெரியாதவனுக்குத்தான் இந்த கதை உண்மை மாதிரி இருக்கும்.
பல கொலைகள் தேவை அற்று வீண் சந்தேகத்தின் பேரிலேயே நடந்து இருக்கிறது.
புலிகள் இயக்கம் பெரும்பாலும் மிக நேர்த்தியாகவே இருந்தார்கள் 

இந்த போஸ்டில் கட்டி சுடுவது என்பதை 
கால் போன போக்கிலே செய்து வந்தது டெலோ இயக்கம் ஒன்றுதான் 
(இதை இந்த கதையை இங்கு பதிந்தவரே அறிவார்) 
டெலோ இயக்கம் தடை செய்யப்பட்ட பிறகு இதுவும் நின்றுபோனது.

பின்பு இந்திய இராணுவ பிரச்சனை நேரம் புலிகள் இயக்கம் 
மிகவும் தொடர்புகள் அற்று சுடலைகள் கோவில்கள் என்றுதான் 
கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பெற தொடங்கினார்கள் .... இந்த சூழலில் 
சில தவறான தகவல்கள் .... சந்தேகம் என்று சிலர் சுடப்பட்டார்கள்.
அதுவும் 1988இல் யாரும் யாரையும் சுட முடியாது எனும் கட்டளை 
முல்லைத்தீவு காட்டில் இருந்து எல்லோருக்கும் அனுப்ப பட்டது 
மரண தண்டனை எனும் முடிவு பின்பு மேல் இடத்தில் இருந்தே எடுக்க பட்டது 

மடக்கிளப்பு அம்பாறை பகுதியில் அதன் பிறகும் பிரதேச 
பொறுப்பாளர்களின் முடிவுடன் அது தொடர்ந்ததாக கேள்வி பட்டு இருக்கிறேன். 

கதை எழுதுவது உங்கள் உரிமை 
ஏன் இல்லாத பொய்களை நாட்டுக்காக உயிரை கொடுத்த 
போராளிகளின் மேல் விபச்சாரம் செய்து விக்கிறீர்கள் என்பதுதான் 
புரியவில்லை??

1986 வரையில் கிளிநொச்சி ஆமி ரவுனுக்கு வந்து தனக்கு 
தேவையானதை வாங்கி கொண்டு போகும் படிதான் இருந்தது 
1985 கால பகுதியில் வேறு இயக்கங்கள் சில தாக்குதல்களை செய்து 
பகிடியான தோல்விகளாக முடிந்தது.
பின்புதான் புலிகள் கிளிநொச்சி ஆமியை ஆனையிறவு போக விடாது 
ஒரு தடுப்பரணை பரந்தனுக்கு இடையில் நெல் களஞ்சியம் முன்பு 
போட்டார்கள் அதுவும் பெரிதாக வெற்றி கொடுக்கவில்லை.
போக்குவரத்தை  கண்டி வீதியை மூடிவிட்டு பின்னால் ஒரு செம்பாட்டு 
வீதியால் செய்து வந்தால் அதிலும் ஆமி இருந்தது ஆமியை தாண்டியே 
போக்குவரத்து நடந்து கொண்டு இருந்தது 
பின்பு லிபேரேசன் ஒபேரேஷன் தொடங்கி விட்டது.
அதன் பின்பு .......இந்திய இராணுவம்.

ஜெயத்தானின் பேக்கரியின் பெயரை சொன்னால் 
நாங்களும் போகிற போது ஒரு பாண் துண்டை வாங்கி சாப்பிடலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை புனைவாக இருக்கலாம். உண்மையான சம்பவத்தின் பின்னணியாகவும் இருக்கலாம். எனினும் இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்காலத்தில் அவர்களோடு தொடர்பு வைத்திருந்தவர்களை வீதிகளில் சுட்டுப்போட்டவர்கள்தான். 

அதில் ஒரு சிலர் வெறும் மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தவர்கள். நமது ஊரினூடாக ஊடறுத்துச் சென்ற பிரதான வீதியினருகே நின்ற வாகை மரத்தடியிலும் இப்படி ஒரு சிலரை சுட்டுப்போட்டிருந்தனர். 

அகரமுதல்வனின் கதைகள் பற்றிய குறிப்பு ஒன்றிலிருந்து....

“யுத்த பூமி அவருக்கு அளித்திருக்கும் அனுபவங்களையும், காட்சிகளையும், மாந்தர்களையும் கற்பனையின் சாயலின்றி அதே நேரத்தில் புனைவுக்கு உண்டான வசீகரத்தோடு அவர் படைக்கிறார்.“

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

கதை புனைவாக இருக்கலாம். உண்மையான சம்பவத்தின் பின்னணியாகவும் இருக்கலாம். எனினும் இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்காலத்தில் அவர்களோடு தொடர்பு வைத்திருந்தவர்களை வீதிகளில் சுட்டுப்போட்டவர்கள்தான். 

அதில் ஒரு சிலர் வெறும் மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தவர்கள். நமது ஊரினூடாக ஊடறுத்துச் சென்ற பிரதான வீதியினருகே நின்ற வாகை மரத்தடியிலும் இப்படி ஒரு சிலரை சுட்டுப்போட்டிருந்தனர். 

அகரமுதல்வனின் கதைகள் பற்றிய குறிப்பு ஒன்றிலிருந்து....

“யுத்த பூமி அவருக்கு அளித்திருக்கும் அனுபவங்களையும், காட்சிகளையும், மாந்தர்களையும் கற்பனையின் சாயலின்றி அதே நேரத்தில் புனைவுக்கு உண்டான வசீகரத்தோடு அவர் படைக்கிறார்.“

 

புனைவதுக்கும் 
வரும் காசில் இவர்கள் புணர்வதுக்கும் 
போராளிகள்தான் கிடைத்தார்களா ? 

 

(இன்னமும் பேய் பிசாசு கதைபோல புலி சுட்ட கதை எமது ஊரிலும் நிறைய உண்டு.
நானே இந்திய இராணுவ காலத்தில் இது நடந்துதான் என்று எழுதி இருக்கிறேன். எனக்கு 
தெரிய சாதிய அடிப்படையை வைத்து ஈ பி வந்து எமது ஊரில் சுட்டுவிட்டு போனார்கள் 
எனக்கு சுடடவர்களையும் தெரியும் .... அவர்கள் எனக்கு சொல்லியும் இருக்கிறார்கள்.
இருந்தும் புலி பொறுப்பாளர் சுட்டுவிட்டு போனதை கண்ணால் கண்ட (புலி பொறுப்பாளர் அப்போ 
சுண்டிக்குளம் முகாமில் இருந்தார்) சாடசிகளையும் நான் சந்தித்த்து இருக்கிறேன்) 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை மருதர் அகரமுதல்வன் எழுதிய கதைகள் எல்லாவற்றையும் வாசிக்கவில்லை. தடுப்பில் இருந்து விடுதலையான பின்னர் மரணித்த முன்னாள் போராளி ஒருவரை வைத்து எழுதிய கதையால் பெரிய பிரளயமே வந்திருந்தது. அந்தக் கதையும் இணையவெளியிலும் இல்லை.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.