Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’கோமாளி கிங்ஸ்’

Featured Replies

’கோமாளி கிங்ஸ்’
 

image_4f1e767e40.jpgபலதசாப்த இடைவெளிக்குப் பின்னர், முழுக்க முழுக்க இலங்கைக் கலைஞர்களின் தயாரிப்பில் வெளிவரும் 'கோமாளிகிங்ஸ்' முழுநீளத் தமிழ்த் திரைப்படம், இன்று (23) முதல், நாடெங்கும் திரையிடப்பட்டு உள்ளது. வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தலைநகர் கொழும்பு உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில், இத்திரைப்படம் காண்ப்பிக்கப்பட உள்ளது.

இலங்கை உட்பட உலகெங்கும் பரந்து வாழும் சகல தமிழ் சினிமா ரசிகர்களுக்காக, சகலரும் குடும்பத்துடன் சென்றுப் பார்த்து இரசித்து மகிழக்கூடிய ஒரு பொழுதுபோக்கு சித்திரமாக 'கோமாளி கிங்ஸ்'தயாரிக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை, காதல், அதிரடி, த்ரில், சஸ்பென்ஸ் என, படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, பார்வையாளர்களை கதையோடும் காட்சிகளோடும் ஒன்றிக்க வைக்கும் வகையில், இத்திரைப்படத்தின் கதைக்கரு வடிவமைக்கப்பட்டுள்ளது.

'கோமாளிகிங்ஸ்'இன் வரவு, இலங்கைத் தமிழ்த் திரைப்படத் துறையின் புனர்ஜென்மம் என்றுகூட அழைக்கப்படலாம்.

'கோமாளி கிங்ஸ்' திரைப்படத்திலுள்ள இன்னுமொரு சிறப்பம்சம் யாதெனில், இலங்கையில் பயன்படுத்தப்படும் பல்வேறு தமிழ் மொழி வழக்குகளை, இத்திரைப்படத்தின் பாத்திரங்கள் பேசி நடிக்கின்றனர். இலங்கையின் தனித்துவமான தமிழ் மொழிப் பாவனைக்கு, திரைப்படம் முக்கிய இடத்தை வழங்கியுள்ளது.

இதனால், இலங்கையின் சகல தமிழ் பேசும் பார்வையாளர்களும் மெய்மறந்து, இரசித்து, இத்திரைப்படத்தோடு ஒன்றிப் போவார்கள் என்பதில் ஐயம் ஏதுமில்லை.

தரமான கதைக்கரு, சிறந்த நடிப்புத்திறமை, ரசிகர்கள் மனதில் நிற்கும் பாடல் வரிகளும் இசையும் மற்றும் மிக நேர்த்தியான நெறியாள்கையும், தயாரிப்பும் கலந்து, இலங்கை கலைஞர்களும், உலகத் தரத்திலான சினிமாவை, படைக்க வல்லவர்கள் தான் என்பதை இத்திரைப்படம் நிரூபித்துள்ளது.

'கோமாளி கிங்ஸ்'திரைப்படத்தின், கதை, திரைக்கதை நெறியாள்கையை என்பவற்றை, கிங் இரட்ணம் கையாண்டிருக்கின்றார். மேலும், இலங்கையின் மூத்த கலைஞர்களான கலாபூசனம் ராஜா கணேசன் மற்றும் புகழ்பெற்ற நடிகர்களான தர்ஷன் தர்மராஜ், நிரஞ்சனி சண்முகராஜா, கஜன் கணேசன் ஆகியோருடன், இயக்குனர் கிங் இரட்ணமும் ஒரு பிரதான பாத்திரத்தை ஏற்று, இத்திரைப்படத்தின் கதையோட்டத்துக்கு உயிரேற்றியுள்ளனர்.

'கோமாளி கிங்ஸ்' பல தயாரிப்பாளர்களை உள்ளடக்கிய ஒரு குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை, “Picture This” தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து Arokya International> M-Entertainment  மற்றும் Wine Creative Networks தயாரித்து வழங்குகின்றது.

இத்தயாரிப்புக் குழுவுக்கு, ஈஸ்வரன் பிரதர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கணேஷ் தெய்வநாயகமும் சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவரும் வழக்கறிஞருமான செல்வஸ்கந்தனும் தலைமை தாங்குகின்றனர்.

மற்றும் திருமதி. தாரணி ராஜசிங்கமும் இத்திரைப்படத்தின் ஒரு பிரதான தயாரிப்பாளராவார். இலங்கையின் புகழ்பெற்ற, சிரேஷ்ட அறிவிப்பாளராகிய பி.எச்.அப்துல் ஹமீட், இத்திரைப்படத் தயாரிப்புக்கான கௌரவ வழிநடத்துனராக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

image_0033d55dea.jpgimage_3118c16766.jpg

http://www.tamilmirror.lk/cinema/கோமாளி-கிங்ஸ்-இன்று-வெளியீடு/54-211928

  • தொடங்கியவர்

கோமாளி கிங்ஸ் 'எங்கடவன்ட ‍செட்டாவி ஈக்கிற நம்பர் வன் பிளான் இது'

 

எஸ்.ஜே.பிரசாத்

பெரியதொரு வடிகான் நடுவில் ஓட இருபுறமும் சிறு சிறு வீடு­க­ளாக வரிசை கட்டி நிற்க அந்த இடத்தில் பல்மேல் நாக்கைப் போட்டு சிரித்­துக்­கொண்டே கையை அசைக்­கிறார் ஒருவர். அவர் கையில் பிங்கோ விளை­யாட்டு அட்­டையும் இருக்­கி­றது. 

பக்­கத்தில் பார்க்­கவே மிரட்டும் அள­வுக்கு உடல்­மொ­ழியில் பய­மு­றுத்தும் ஓரு­வரும் அவ­ருடன் நிற்க ஆரம்­பிக்­கி­றது கோமாளி கிங்ஸ்.

இது­வரை தமிழ் சினிமாவில் படுபயங்­க­ர­மாக காட்­டப்­பட்ட ஆள் கடத்­தலை நகைச்­சு­வைக்­ கச்­சே­ரி­யாக படைத்து மனதைக் கௌ­வி­யி­ருக்­கி­றது கோமாளி கிங்ஸ்.

அத்தோடு நாம் அன்றாடம் கடந்து செல்லும் பாதை, பார்க்கும் காட்சி, தெரிந்த இடங்கள் என்று திரையில் காட்டும்போது இனம்புரியாத ஒரு ஈர்ப்பு நமக்குள் வந்துவிடுகிறது.

அதுவும் புறக்கோட்டை பிரதான வீதியிலும் குறுக்கு சந்துகளிலும் சனநெரிசல் மிக்க இடங்களிலும் படமாக்கப்பட்டிருக்கும் சேஸிங் காட்சிகள் மிக மிக அற்புதம்.

இந்தக் காட்சிகளுக்காகவே கோமாளி கிங்ஸை மீண்டும் மீண்டும் பார்க்கலாம். யாழ்ப்பாணம் நல்லூரின் ஏரியல் வியூ, மட்டக்களப்பின் அந்தப் பாலம், கடற்கரை என்று காட்சிப்படுத்தல் மிகப்பெரிய பிளஸ். 

படம் தொடங்­கும்­போதே வரும் 'புகைபி­டித்தல் உடல்நலத்­திற்கு கேடு' என்று திரைப்­ப­டத்தின் இயக்­குநர் அல்­லது கதா­நா­யகன் வாசிக்கும் படத்தின் அந்த ஆரம்பப் புள்­ளி­யி­லேயே நக்­கலை சேர்த்து பார்­வை­யா­ளர்­களை தன் கட்­டுக்குள் கொண்டு வந்­து­வி­டு­கிறார் இயக்­குநர்.

இயக்­குநர் மட்­டு­மல்ல, திரைப்­ப­டத்தின் கிங்கே அவர்தான். வொய்ஸ் ஓவ­ரி­லேயே 'அந்த போன ஓவ் பண்ணு டா' என்று கை­தட்ைட அள்­ளு­கிறார் இயக்­குநர். அந்த நக்கல், நையாண்டியை படம் முழுக்க தூவியும் இருப்­பது ஆகச்­சி­றப்பு .

வெளிநாட்­டி­லி­ருந்து ஒரு திரு­ம­ணத்­துக்காக இலங்கை வரும் ஒரு குடும்பம். அந்தக் குடும்பத் தலைவனான 'பட்' என்­கின்ற பத்­ப­நா­பனை கடத்­து­கி­றது ஒரு கும்பல்.

கடத்­திய கும்­ப­லுக்கும் இவ­ருக்கும் தொடர்­பில்லை என்று நீள்­கி­றது கதை. ஆனால் கதை, திருப்­பு­முனை, கிளைமாக்ஸ் என்று தொகுத்து விளக்க அவ­சியமில்­லாத திரைக்­கதை. 

கோமாவில் கிடந்த இலங்கை சினிமாத்துறைக்கு புத்துயிர் கொடுத்­தி­ருக்­கி­றது இந்த கோமாளி கிங்ஸ் திரைப்­படம். படத்தின் கதைக் களம், அதைக் கையாண்ட விதம், தேர்ந்­தெ­டுக்கப்பட்ட மொழி­யாடல், காட்­சிப்­ப­டுத்­தப்­பட்ட இடங்கள், நடித்­தி­ருக்கும் நடிகர், நடி­கைகள் என அனைத்­திலும் ஒரு நேர்த்­தியை காண­மு­டி­கின்­றது.

இவ்­வ­ளவு பெரிய நடிகர் பட்­டா­ளத்­துடன் படத்தை இயக்­கிக்­கொண்டே தானும் நடிப்­பது என்­பது அவ்­வ­ளவு இல­கு­வான காரி­ய­மல்ல. ஆனால் அதை இயக்­குநர் கிங் ரத்னம் சிறப்­பாக செய்­தி­ருக்­கிறார்.

அதற்­காக அவ­ருக்கு தனிப் பாராட்டு.

வெளி­நாட்­டி­லி­ருந்து வரும் அந்த கதா­பாத்­தி­ரத்தை தன்னால் மட்­டுமே உணர்ந்து செய்ய முடியும் என்று அவர் எண்­ணி­யி­ருக்­கலாம். ஆனால் படத்தைப் பார்த்­த ­பி­ற­குதான் நமக்கு புரி­கி­றது 'பட்' என்­கின்ற அந்தப் பாத்­தி­ரத்தைப் படைத்த அவரால் மட்­டுமே அந்த பாத்­தி­ரத்தின் குண இயல்­பு­களை கதைக்கேற்ப வெளிப்­ப­டுத்­தலாம் என்று.

வெளிநாடு­க­ளி­லி­ருந்து வரும் ஒரு குடும்­பத்தின் மனைவி எப்­படி நடந்­து­கொள்வாரோ அதை அப்படியே வாழ்ந்து காட்டியிருக்கிறார் சத்தியப்பிரியா. அவர்­களின் பிள்­ளைகள் எப்­படி நடந்­து­கொள்ளும். அந்தக் குடும்பத் தலைவன் அனைத்­தையும் அனு­ச­ரித்து எது கிடைத்­தாலும் சரிதான் என்ற மன­நி­லை­யோடு வலம்­வரும் அந்த யதார்த்தத்தை அப்­ப­டியே திரையில் கொண்டு வந்­து­விடுகிறார் கிங் ரத்னம்.

அந்தக் குடும்பம் வந்து தங்கும் வீட்டின் அந்தக் கணவனும் மனைவியும் மிச்சிறப்பான தெரிவு.

மனைவியைக் கண்டு சுனாமி வருகிறது என்று கத்திக்கொண்டு ஓடும்போது திரையரங்கம் அதகளப்படுகிறது.

நகைச்­சுவை, காதல், குடும்ப யதார்த்தம், சஸ்பென்ஸ் என படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பார்­வை­யா­ளர்­களை கதை­யோடும் கட்­டிப்­போட்­டு­வி­டு­கி­றது திரைக்­கதை ஓட்டம்.

இத் திரைப்­படம் பேசப்­ப­டு­வதற்கு மிக முக்­கி­ய­மான காரணம் கையா­ளப்­பட்­டி­ருக்கும் வட்­டார வழக்கு மொழி­கள்தான். அதேபோல் கதையில் வரும் நடி­கர்­களின் பாத்­திரப் படைப்­பும்தான். கடத்தல் கும்­பலின் தலை­வ­னாக வரும் பாபத் பாபா. அவனின் மூளை­யாக செயற்­படும் ரொஷான். ரொஷா­னுக்கு உத­வி­யாக ஊத்த ஒசேன் மற்றும் குட்டி. இவர்கள் பய­ணிக்கும் வாக­னத்தின் நடத்­து­ந­ராக வரும் சிங்­கள மொழி நடிகர் என இந்த கடத்தல் கும்பல் திரைப்­ப­டத்தை அடுத்த கட்­டத்­திற்கு நகர்த்­து­கி­றது.

இதில் முக்­கி­ய­மாக பாபத் பாபா சீரி­ய­ஸாக கோபப்­பட்டு பேசும் காட்­சி­களில் திரை­ய­ரங்கில் கை­தட்­டல்­களை அள்­ளு­கிறார். காரணம் அது நமக்கு நகைச்­சு­வை­யாக இருக்­கி­றது.

அத்­தோடு ரொஷான் என்று அவர் இழு­வையில் கூப்­பி­டு­வது கூட அடுத்து ஏதோ நடக்­கப்­போ­கி­றது என்­பதை நமக்கு உணர்த்­து­கி­றது. ரொஷா­னாக வரு­பவர் பேசும் மொழி அனை­வ­ரையும் கவர்­கி­றது. இவர் திரையில் தோன்றும் காட்­சி­களில் எல்லாம் கைதட்­டலை அள்ளுகிறார்.

ஒரு 'கரம் போர்டை' சுற்றி கடத்தல் கும்பல் அமர்ந்து கடத்­த­லுக்கு திட்டம் தீட்டும் அந்தக் காட்சியை படம்­பி­டித்­தி­ருக்கும் விதம் அபாரம். அவர்­க­ளுடன் வரும் அந்த சிங்­கள மொழி நடிகர் ஓரிரு காட்­சி­களில் மட்­டுமே தோன்­றினாலும் சிறப்பாக நடித்­தி­ருக்­கிறார்.

படத்தில் ஹீரோ என்று யாரைச் சொல்­வது? கடத்­தல்­கா­ர­னாக வரும் பாபத் பாபா, அவனின் மூளை­யாக வரும் ரொஷான், கடத்­தப்­படும் 'பட்' என்­கின்ற பத்­ம­நாபன், இது எல்­லாவற்றையும் விட அத்­தனை குழப்­பத்­துக்கும் கார­ண­மாகும் சிவா அங்கிள், கடத்தல்காரரை பிடிக்க ஓடும் ஜேம்ஸ் பொண்ட், ஒளிப்­ப­தி­வாளர் மஹிந்த அபே­சிங்க, பின்­னணி இசையில் அசத்­தி­யி­ருக்கும் ஸ்ரீராம் சச்சி, படத்­தொ­குப்­பா­ள­ரான அஞ்­சலோ ஜோன்ஸ் என எல்­லா­ருமே அவ­ரவர் வேலை­களில் செம பிட்.

இலங்­கையின் தனித்­து­வ­மான தமிழ் மொழிப் பாவ­னைக்கு திரைப்­படம் முக்­கிய இடத்தை வழங்­கி­யுள்­ளது. இதனால் இலங்­கையின் சகல தமிழ்பேசும் பார்­வை­யா­ளர்­களும் மெய்­ம­றந்து, ரசித்து இத்­தி­ரைப்­ப­டத்­தோடு ஒன்றிப் போவார்கள் என்­பதில் ஐயமில்லை.

‘கோமாளி கிங்ஸ்’ திரைப்­ப­டத்தின் கதை, திரைக்­கதை என முழு திரைப்­ப­டத்தையும் கட்டி சுமக்­கிறார் கிங் ரத்னம். கூடவே முக்­கிய வேடத்தில் நடித்தும் இருக்­கிறார்.

மேலும் இலங்­கையின் மூத்த கலை­ஞர்­க­ளான கலா­பூ­ஷணம் ராஜா கணேசன், மற்றும் புகழ்பெற்ற நடி­கர்­க­ளான தர்ஷன் தர்­மராஜ், நிரஞ்­சனி சண்­மு­க­ராஜா, கஜன் கணேசன் ஆகியோர் இத் திரைப்­ப­டத்தின் பலம்.

இத் திரைப்­ப­டத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர்க ளையும் நாம் பாராட்டியாக வேண் டும். அவர்கள் இல்லையேல் நிச்சயம் இலங்கை சினிமாவுக்கு இப்படியொரு திரைப்படம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. இந்த முயற்சியை தொடர்ந்து இன்னும் பல இலங்கைத் திரைப்படங்கள் வெளிவர அவர்கள் சேவையாற்றவேண்டும். 

பூஜ்யமாக இருந்த இலங்கை சினிமாவுக்கு புதுவரவாக வந்திருக்கும் கோமாளி கிங்ஸுக்கு எமது பார்வையில் பூஜ்யத்துக்கு நூறு புள்ளிகளை வழங்கலாம்.

வெளியுலகை மறக்கடித்து, இரண்டு மணி நேரம் சிரித்துக் கொண்டே இருக்க முடியுமென்றால், இப்படியான கோமாளி கிங்ஸுக்கு நிச்சயம் விரிக்கலாம் சிவப்புக் கம்பளம்! உங்களுக்குக்கும் நிச்சயம் கோமாளி  கிங்ஸ் சிரிப்பு விருந்து படைக்கும் என்  பது உறுதி. கிங் ரத்னம் மற்றும் திரைப்படத்  தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்க ளுக்கும் எமது சபாஷ். கோமாளி கிங்ஸ்.இலங்கைத் திரைப்படத்துறையின் புதிய கிங். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-02-24#page-6

 

  • தொடங்கியவர்

"கோமாளி கிங்ஸ்": இலங்கையில் மீண்டும் உயிர்த்தெழுந்த தமிழ் சினிமா

கிங் ரத்தினம் என்ற இளைஞரின் இயக்கத்தில் "கோமாளி கிங்ஸ்' என்ற பெயரில் ஒரு தமிழ் திரைப்படம் இலங்கையில் தயாராகி கடந்த வெள்ளிக்கிழமை அங்குள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கோமாளி கிங்க்ஸ்படத்தின் காப்புரிமைKOMAALI KINGS

திரையரங்குகளின் தகவல்படி படம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது என்று தெரியவருகின்றது. குறிப்பாக இலங்கையின் தலைநகர் கொழும்பு, வடக்கு கிழக்கு நகரங்கள், மலையகம் என தமிழர்கள் வாழும் பகுதிகளில் பல திரையரங்குகளில் இது ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது.

 

இலங்கை தமிழ் சினிமா

இலங்கையில் தமிழ் திரைப்படத் தயாரிப்புத்துறையை பொறுத்தவரை இங்கு ஆரம்பத்தில் ஓரளவுக்கு தயாரிப்புகள் வெளிவந்தாலும், இந்திய தமிழ் சினிமாவின் பிரபல்யமும், இடையில் வந்த உள்நாட்டுப் போரும் இலங்கை தமிழ் திரையுலகை சோபிக்கவிடவில்லை என்கிறார் இங்குள்ள தமிழ் சினிமா ஆய்வாளரான தம்பியையா தேவதாஸ்.

கடந்தகால இலங்கை படங்களுடன் ஒப்பிடும் போது கோமாளி கிங்ஸ், நல்ல தொழில்நுட்ப விசயங்களில் முன்னேறி இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

கோமாளி கிங்க்ஸ்படத்தின் காப்புரிமைYOUTUBE/KOMAALI KINGS

இலங்கைப்பணம் மூன்று கோடி ரூபாய்கள் ( இந்தியப் பணம் ஒன்றரைக்கோடி ரூபாய்கள்) செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் சுமார் 50 திரைகளில் இலங்கையெங்கும் திரையிடப்பட்டதாக கூறுகிறார் படத்தின் இயக்குனரான கிங் ரட்ணம்.

மூன்று நாட்களை கடந்து ஓடும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் இங்கு நல்ல வரவேற்பிருப்பதாகவும், ஒரு சாதாரண இந்திய தமிழ் சினிமாவுக்கு இங்கு திரையரங்குகளில் இருக்கும் ஆரம்ப ஆதரவுக்கு இணையாக இதற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்திருப்பதாகவும் கிங் ரட்ணம் கூறுகிறார்.

 

இலங்கையில் பல பகுதிகளிலும் இருக்கும் தமிழ் மொழி வட்டார வழக்குகளும் சிங்கள மொழியும் இந்தப் படத்தில் பேசப்படுவதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

கோமாளி கிங்க்ஸ்படத்தின் காப்புரிமைYOUTUBE/KOMAALI KINGS

உண்மையில் கடந்த காலங்களில் இலங்கையில் வந்த பன்மொழி பேசும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாக தம்பியையா தேவதாஸும் கூறுகிறார்.

கோமாளி கிங்ஸ் ஒரு நகைச்சுவை படம். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னதாக இங்கு தயாரிக்கப்பட்ட "கோமாளிகள்" என்ற திரைப்படத்தினை இது நினைவூட்டுவதாக பலரும் பேசுகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இதனை அவர்கள் பார்க்கிறார்கள். ஆனால், இரண்டும் நகைச்சுவைப் படங்கள் என்பதைவிட இதற்கும் அதற்கும் தொடர்பில்லை என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இலங்கையை பொறுத்தவரை இங்கு தயாரிக்கப்பட்ட நகைச்சுவைப் படங்கள் பெரிதும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.

புதிய வடிவிலான சினிமா தேவை

இளைஞர்களால் இந்தப்படம் மிகவும் நன்றாக ரசிக்கப்படுவதாக கூறும் குறுந்திரைப்பட இயக்குனரும், சினிமா ஆர்வலருமான ஞானதாஸ் காசிநாதர், வீழ்ந்துபோயிருக்கும் இலங்கை சினிமாவை கட்டியெழுப்புவதற்கான ஒரு சிறு முயற்சியாக இதனைப் பார்க்கிறார். வர்த்தக ரீதியில் இதற்கு ஒரு எழுச்சியும், ரசிகர்கள் மத்தியில் ஒரு குதூகலமும் காணப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

கோமாளி கிங்க்ஸ்படத்தின் காப்புரிமைYOUTUBE/KOMAALI KINGS

இந்திய தமிழ் சினிமாவுடன் போட்டி போட்டு எழுந்து நிற்பது என்பது, இலங்கை தமிழ் சினிமாவுக்கு பெரும் சிரமமாகவே இன்னும் இருக்கிறது. ஆகவே இலங்கையில் எடுக்கப்படும் தமிழ் சினிமாக்கள் இன்னுமொரு தமிழக சினிமாவாக இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட வடிவத்தில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஞானதாஸ் காசிநாதர் கூறுகிறார். உண்மையில் அதற்கான முயற்சியை சிங்கள சினிமா துறையில் ஜேம்ஸ் பீரிஸ் போன்றோர் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டதாகவும், அது பின்தொடரப் பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

கோமாளி கிங்க்ஸ்படத்தின் காப்புரிமைYOUTUBE/KOMAALI KINGS

ஒருபுறம் நகைச்சுவை சினிமா என்பதாலும், பலவிதமான இலங்கை தமிழ் வட்டார வழக்குகள் பயன்படுத்தப்படுவதாலும், தமது ஊர் சினிமாவும் மிளிர வேண்டும் என்ற இலங்கை இளைஞர்களின் உந்துதலாலும் கோமாளி கிங்ஸ் ஓரளவு வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனால், தமிழ் சினிமா தயாரிப்புத்துறை இலங்கையில் வளர இன்னும் நிறைய செய்யப்பட வேண்டியுள்ளது.

http://www.bbc.com/tamil/sri-lanka-43201397

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.